அதிகாரம் 01
1 இறைமக்களாகும் படி அழைக்கப்பட்டு, கடவுளின் அன்பைப் பெற்றிருக்கிற உரோமைக் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும்,
2 கிறிஸ்து இயேசுவின் ஊழியனும், அப்போஸ்தலனாக அழைக்கப் பெற்றவனுமாகிய சின்னப்பன் யான் எழுதுவது:
3 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக.
4 அப்போஸ்தலனாக அழைக்கப்பட்ட நான், கடவுளின் நற்செய்தியை அறிவிக்கக் குறிக்கப்பட்டிருக்கிறேன்.
5 இந்நற்செய்தியை இறைவன் தம் வாக்குரைப்போர் வழியாய், பரிசுத்த நூல்களில் ஏற்கனவே வாக்களித்திருந்தார்.
6 இந்நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதன் என்ற முறையில் தாவீதின் வழிவந்தவர். பரிசுத்த ஆவியைப் பெற்ற நிலையில் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்ததனால், கடவுளின் வல்லமை விளங்கும் இறைமகனாக ஏற்படுத்தப்பட்டார். இவரே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
7 புறவினத்தார் அனைவரும் கீழ்ப்படிந்து விசுவசிக்குமாறு, அப்போஸ்தலப் பணிபுரியும் திரு அருளை இவருடைய பெயரின் மகிமைக்காக இவர் வழியாகவே பெற்றுக்கொண்டோம். அந்தப் புறவினத்தாரைச் சார்ந்த நீங்களும் இறைவனின் அழைப்புப்பெற்று, இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்கிறீர்கள்.
8 முதலில் உங்கள் அனைவருக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில், நீங்கள் விசுவாசத்தை ஏற்றுக்கொண்ட செய்தி உலக முழுவதிலும் பரவியிருக்கிறது.
9 இடைவிடாது நான் உங்களை என் செபங்களில் எப்போதும் குறிப்பிட்டு வேண்டுகிறேன்.
10 கடவுளின் திருவுளத்தால், உங்களிடம் வர இறுதியாய் இப்பொழுதாவது எனக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென மன்றாடுகிறேன். அவருடைய மகனைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் பணியால் நான் ஆன்மீக முறையில் வழிபடும் கடவுளே, அவ்வாறு மன்றாடுகிறேன் என்பதற்குச் சாட்சி.
11 நான் உங்களைக் காண ஏங்குகிறேன். அங்கே வந்து உங்களை உறுதிப்படுத்துவதற்கு ஆவிக்குரிய கொடை ஏதேனும் உங்களுக்கு வழங்கலாமென விழைகிறேன்.
12 அதாவது, நான் உங்களிடையே தங்கி, உங்கள் விசுவாசத்தால் நானும், என் விசுவாசத்தால் நீங்களும் ஒருமிக்க ஊக்கமடைய வேண்டுமென்று விழைகிறேன்.
13 மற்றப் புறவினத்தாரிடையில் நான் அடைந்த பலனை உங்களிடையிலும் அடைய விரும்பி உங்களிடம் வர நான் அடிக்கடி திட்டமிட்டதுண்டு. ஆயினும் இன்றுவரை இயலாமற்போயிற்று; சகோதரர்களே, இதை நீங்கள் அறியவேண்டுமென விரும்புகிறேன்.
14 கிரேக்கருக்கும் கிரேக்கல்லாதாருக்கும், அறிவுள்ளவர்களுக்கும் அறிவில்லாதவர்களுக்கும் நான் கடமைப்பட்டவன்.
15 ஆதலால்தான் உரோமையில் இருக்கிற உங்களுக்கும் நற்செய்தி அறிவிக்க என் உள்ளம் ஆவல் கொண்டுள்ளது.
16 நற்செய்தியைப் பற்றி நான் நாணமடைய மாட்டேன்; ஏனெனில், அது மீட்பளிப்பதற்குக் கடவுளின் வல்லமையாய் உள்ளது. முதலில் யூதனுக்கும், அடுத்து கிரேக்கனுக்கும் விசுவாசிக்கும் ஒவ்வொருவனுக்குமே அது அங்ஙனம் உள்ளது.
17 ஏனெனில், 'விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப் பட்டவனே வாழ்வு பெறுவான்'. என எழுதியுள்ளதன்றோ? இவ்வாறு ஏற்புடையவர்களாக்கும் இறையருட் செயல் முறை அந்த நற்செய்தியிலேயே வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை அது விசுவாசத்தினாலேயே ஆகும்.
18 இறைப்பற்று இல்லாத மனிதர்களின் ஒழுக்கக்கேட்டின் மீதெல்லாம் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது; ஏனெனில், இவர்கள் தங்கள் ஒழுக்கக் கேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றனர்.
19 கடவுளைப்பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாய் விளங்கிற்று. அதைக் கடவுளே அவர்களுக்குக் காட்டித் தெளிவுறுத்தினார்.
20 ஏனெனில், கட்புலனாகாத அவருடைய பண்புகளும், அவருடைய முடிவில்லா வல்லமையும், கடவுள் தன்மையும் உலகம் உண்டானது. முதல் அவருடைய படைப்புக்களிலேயே அறிவுக்குப் புலனாகின்றன. ஆகவே அவர்கள் சாக்குச் சொல்வதற்கு வழியில்லை.
21 ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும், கடவுளுக்கு உரிய மகிமையை அவருக்கு அளிக்கவுமில்லை; நன்றி செலுத்தவுமில்லை. மாறாக, தங்கள் வீணான சிந்தனைகளில் அறிவிழந்தனர்.
22 அவர்களுடைய உணர்வில்லா உள்ளம் இருண்டு போயிற்று. தங்களை ஞானிகள் எனப் பிதற்றும் அவர்கள் வெறும் மடையர் ஆயினர்.
23 அழிவில்லாக் கடவுளின் மாட்சிமையை விடுத்து, அதற்குப் பதிலாக அழிந்து போகும் மனிதர், பறவைகள், விலங்குகள், ஊர்வன, ஆகியவற்றின் சாயலான உருவங்களை ஏற்று வழிபட்டனர்.
24 ஆகவே, அவர்களுடைய உள்ளத்து இச்சைகளின்படி அவர்களைக் கடவுள் அசுத்தத்திற்குக் கையளித்து அவர்கள் ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்த விட்டு விட்டார்.
25 ஏனெனில், அவர்கள் கடவுளின் உண்மையைப் பொய்யாக மாற்றினர்; படைப்புப் பொருட்களுக்கு வழிபாடும் ஊழியமும் செய்தனர். படைத்தவரை மறந்தனர்; அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.
26 ஆதலால், கடவுள் அவர்களை வெட்கக் கேடான இச்சைகளுக்குக் கையளித்துவிட்டார்,. பெண்கள் இயல்பான மறையைவிட்டு, இயல்புக்கு மாறாக நடந்து கொண்டனர்.
27 அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேரும் இயல்பான முறையை விட்டு, ஒருவர் மீது ஒருவர் வேட்கை கொண்டு, காமத்தீயால் பற்றி எரிந்தனர்; ஆண்கள் ஆண்களுடன் இழிவான செயல்களைச் செய்து தங்கள் ஒழுக்கக் கேட்டுக்கு ஏற்ற கூலியைத் தங்களிலேயே பெறுபவர் ஆயினர்.
28 கடவுளை அறிந்து ஏற்பதன் தகைமையை அவர்கள் மறுத்தால் தகாதவற்றைச் செய்யும்படி அவர்களைக் கடவுள் அவர்களின் சீர்கெட்ட சிந்தைக்குக் கையளித்து விட்டார்.
29 அவர்களோ, எல்லாவகையான அநியாயம், கெடுமதி, பேராசை, தீய மனம், நிறைந்தவர்கள் ஆயினர்; அவர்கள் பொறாமை, கொலை, சண்டை, கபடம், வஞ்சகம் மிக்கவர்கள்;
30 புறங்கூறுபவர்கள்; அவதூறு பேசுபவர்கள், கடவுளை வெறுப்பவர்கள், மூர்க்கர்கள், இறுமாப்புடையவர்கள், வீண் பெருமை பாராட்டுபவர்கள், தீமை சூழ்வதில் திறமை வாய்ந்தவர்கள், பெற்றோருக்கு அடங்காதவர்கள், வாக்குத்தவறுபவர்கள்.
31 அவர்களுக்கு அறிவு இல்லை, அன்புணர்ச்சி இல்லை. இரக்கம் இல்லை;
32 இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள் என்னும் கடவுளுடைய நியமத்தை அறிந்திருந்தும் இவ்வாறு நடக்கின்றனர்; தாங்கள் நடப்பது மட்டுமன்று, அப்படி நடப்பவர்களுக்குப் பாராட்டும் அளிக்கின்றனர்.
அதிகாரம் 02
1 ஆகையால், பிறருக்குத் திர்ப்பிடும் மனிதா, நீ யாராயினும் சரி, சாக்குச் சொல்லுவதற்கு வழியில்லை. ஏனெனில், பிறருக்குத் தீர்ப்பிடுவதால் நீ உனக்கு எதிராகவே தீர்ப்புக் கூறுகிறாய்; தீர்ப்புக்கூறும் நீயே அவற்றைச் செய்கிறாயே!
2 இத்தகைய செயல்களைச் செய்வோருக்குக் கடவுள் இடும் தீர்ப்பு நீதி வழுவாதது என்று நமக்குத் தெரியும்.
3 இவற்றைச் செய்பவர்களின் மேல் தீர்ப்புக் கூறும் நீயும் இவற்றையே செய்து வருகிறாய். நீ மட்டும் கடவுளின் தீர்ப்புக்குத் தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறாயா?
4 அல்லது, அவரது அளவற்ற பரிவையும் சகிப்பையும் பொறுமையையும் புறக்கணிக்கின்றாயா ? கடவுள் பரிவு காட்டுவது உன்னை மனந்திரும்பத் தூண்டுவதற்கே என்பதை அறியாயோ?
5 உன் முரட்டுத் தனம் உன்னை மனந்திரும்ப விடவில்லை; ஆகையால், கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில் உன்மேல் விழப் போகும் தண்டனையை நீ சேர்த்து வைக்கின்றாய்.
6 அவரோ ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயல்களுக்கேற்பக் கைம்மாறு தருவார்.
7 நற்செயல் செய்வதில் உறுதி தளராமல், மகிமையும், மாண்பும் அழியாமையும் தேடுவோர்க்கு முடிவில்லாத வாழ்வை வழங்குவார்.
8 ஆனால், கட்சி மனப்பான்மை உள்ளவர்களாய், உண்மைக்குப் பணியாமல், அநியாயத்திற்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் வெகுளியும் வந்து விழும்.
9 முதலில் யூதனுக்கும், அடுத்துக் கிரேக்கனுக்கும், தீமை செய்யும் எந்த மனிதனுக்குமே, வேதனையும் நெருக்கடியும் உண்டாகும்.
10 அவ்வாறே, முதலில் யூதனுக்கும், அடுத்துக் கிரேக்கனுக்கும், நன்மை செய்யும் அனைவருக்குமே, மகிமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும்.
11 ஏனெனில், ஆளுக்கொரு நீதி என்பது கடவுளிடம் இல்லை.
12 திருச்சட்டத்தை அறியாமல் பாவஞ் செய்தவன் எவனும் திருச்சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவான்; திருச்சட்டத்திற்கு உட்பட்டுப் பாவம் செய்தவன் எவனும் திருச்சட்டத்தினால் தீர்ப்பிடப்படுவான்.
13 ஏனெனில், திருச்சட்டத்தைக் கேட்பதால் மட்டும் யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
14 திருச்சட்டத்தைப் பெற்றிராத புறவினத்தார் அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகேவே நிறைவேற்றும்போது, அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாத போதிலும் அவர்கள் உள்ளமே சட்டமாய் அமைகிறது.
15 திருச்சட்டம் கற்பிக்கும் செயல்முறை தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் எண்பிக்கிறார்கள்; ஏனெனில், அவர்களுடைய மனச்சான்று அதற்குச் சாட்சியாய் நிற்கிறது. பிறர் செய்வது குற்றமா, குற்றமில்லையா என அவர்கள் தங்கள் மனத்திற்குள் தீர்ப்பிடுவதும் அதற்குச் சாட்சி.
16 நான் அறிவிக்கும் நற்செய்தியில் உள்ளதுபோல, இயேசுகிறிஸ்துவின் வாயிலாய்க் கடவுள் மனிதர் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றைத் தீர்ப்பிடும் நாளில் மேற்சொன்னவையெல்லாம் வெளியாகும்.
17 ஆனால் யூதன் என்னும் பெயர் தாங்கியுள்ள நீ திருச்சட்டத்தில் ஊன்றி நிற்கிறாய்;
18 கடவுளைப்பற்றிப் பெருமைப் படுகிறாய்; அவருடைய திருவுளத்தை அறிந்திருக்கிறாய்; திருச்சட்டத்தைக் கற்றறிந்தவனாதலால் நன்மையானதைத் தேர்ந்து தெளிகிறாய்.
19 அறிவும் உண்மையுமே உருவான திருச்சட்டம் உனக்கு உண்டென்கிற துணிவில்,
20 குருடர்களுக்கு வழிகாட்டியாகவும், இருளில், இருப்போருக்கு ஒளியாகவும் அறிவீனர்களுக்கு ஆசானாகவும், குழந்தைகளுக்குப் போதகனாகவும் இருக்க முற்படுகிறாய்.
21 இவ்வாறு பிறனுக்குப் போதிக்கும் நீ, உனக்கே போதித்துக்கொள்ள வில்லையே! திருடாதே எனக் கற்பிக்கும் நீ, திருடுகிறாய்!
22 விபசாரம் செய்யாதே எனச் சொல்லும் நீ, விபசாரம் செய்கிறாய்! தெய்வங்களின் சிலைகளை அருவருக்கும் நீ, கோயில்களைக் கொள்ளையிடுகிறாய்!
23 திருச்சட்டத்தைப் பற்றிப் பெருமைப் படும் நீ, அச்சட்டத்தை மீறிக் கடவுளை இழிவு படுத்துகிறாய்!
24 ஆம், மறை நூலில் உள்ளவாறு 'உங்களால் கடவுளின் பெயர் புறவினத்தாரிடையே பழிப்புக்குள்ளாகிறது'.
25 திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால் விருத்தசேதனத்தால் பயனுண்டு, மெய்தான்; ஆனால் திருச்சட்டத்தை மீறுபவனாய் இருந்தால், நீ விருத்தசேதனம் பெற்றிருந்தும் பெறாதவனாகிவிட்டாய்.
26 ஆகையால், விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஒருவன் திருச்சட்டத்தின் முறைமைகளைக் கடைபிடித்தால், விருத்தசேதனம் இல்லாத நிலை, விருத்தசேதனம் உள்ள நிலைபோல் கருதப்படும் அன்றோ?
27 உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாமல் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவன் எழுதிய சட்டத்தையும் விருத்த சேதனத்தையும் பெற்றிருந்தும், திருச் சட்டத்தை மீறுகின்ற உனக்குத் தீர்ப்பிடுவான்.
28 ஏனெனில், புறத்திலே மட்டும் யூதனாய் இருப்பவன் யூதனல்லன்; அவ்வாறே புறத்தில், அதாவது, உடலில் மட்டும் செய்யப்படும் விருத்தசேதனமும், விருத்தசேதனமன்று.
29 ஆனால், உள்?ர யூதனாய் இருப்பவனே யூதன்; எழுதிய சட்டத்தின்படியல்லாமல், ஆவியானவர் அருளியபடி உள்ளத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே, விருத்தசேதனம். அத்தகையவன் மனிதரிடமிருந்து அன்று, கடவுளிடமிருந்தே பாராட்டுப் பெறுவான்.
அதிகாரம் 03
1 'அப்படியானால், மற்றவர்களைவிட யூதனுக்குக் கிடைத்த நன்மை என்ன'? விருத்தசேதனத்தால் பயன் என்ன? எவ்வகையிலும் பெரிதே.
2 முதலாவது கடவுளின் திருமொழி அவர்களிடம் தான் ஒப்படைக்கப்பட்டது.
3 சரி, ஆனால், சிலர் அத்திருமொழியில் பற்றுறுதி கொள்ளவில்லையே; அவ்வுறுதியின்மையால் கடவுளுடைய சொல்லுறுதி வெறுமையாகிவிடுமோ?
4 ஒருக்காலுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர், கடவுளோ, உண்மை உள்ளவர் என்பது வெளியாகவேண்டும். ஏனெனில், 'உமது சொல்லில் நீர் குற்றமற்றவராய் விளங்குவீர், நீர் தீர்ப்பிடப்படும்போது வெற்றி பெறுவீர்'. என எழுதியுள்ளதன்றோ?
5 நம்முடைய அநீதி கடவுளுடைய நேர்மையை விளங்கச் செய்யுமாயின், நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தொழுந்து தண்டித்தால், அவர் அநீதர் என்போமோ ? - இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன் - ஒருகாலுமில்லை.
6 கடவுள் அநீதர் என்போமாயீன் எப்படி அவர் உலகத்திற்குத் தீர்ப்பிடக்கூடும்?
7 என்னுடைய பொய்ம்மை கடவுளின் உண்மையைத் துலங்கச் செய்து, அவரது மகிமையை அதிகரிக்கிறதென்றால் ஏன் நான் இன்னும் பாவி எனத் தண்டனைத் தீர்ப்புப் பெறவேண்டும்?
8 அப்படியானால், 'நன்மை விளையுமாறு தீமையைச் செய்வோம்' என்று சொல்லாலாமே. நான் அவ்வாறு கூறுவதாகச் சிலர் என்மீது வீண் பழி சுமத்துகின்றனர். இவர்கள் தண்டனைத் தீர்ப்புப் பெறுவது நீதியே.
9 அப்படியானால் மற்றவர்களைவிட யூதர்கள் தாம் மேலானவர்களா? இல்லவே இல்லை. ஏனெனில் யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்தின் பிடியிலுள்ளதாக ஏற்கெனவே எண்பித்தாயிற்று.
10 அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: 'இறைவனுக்கு ஏற்புடையவனே இல்லை, ஒருவன் கூட இல்லை:
11 உணர்வுள்ளவன் ஒருவனுமில்லை, கடவுளைத் தேடுபவன் எவனுமில்லை.
12 எல்லாரும் நெறி பிறழ்ந்தனர். ஒருங்கே கெட்டுப்போயினர்; நன்மை செய்பவன் எவனுமில்லை, ஒருவன் கூட இல்லை.
13 அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி, அவர்களது நாக்கு வஞ்சனையே பேசிற்று. அவர்கள் உதட்டில் பாம்பின் நஞ்சுள்ளது.
14 வாயில் சாபமும் கசப்பும் நிரம்பியுள்ளது,
15 இரத்தம் சிந்துவதென்றால் அவர்கள் கால்கள் விரைகின்றன;
16 அவர்கள் கால்கள் படும் இடத்தில் அழிவும் துயருமே உண்டு,
17 அமைதியின் நெறியோ அவர்களுக்குத் தெரியவில்லை,
18 அவர்கள் மனத்தில் கடவுள் அச்சம் என்பதில்லை '.
19 திருச்சட்டம் சொல்வதெல்லாம், அதற்கு உட்பட்டவர்களுக்கே பொருந்தும் என்று நமக்குத் தெரியும். சாக்குச் சொல்லாமல் அனைவருடைய வாயையும் அடைக்கவும், உலகம் முழுவதையும் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்கவுமே திருச்சட்டம் இருக்கிறது.
20 ஏனெனில், திருச்சட்டம் விதித்திருப்பதைச் செய்வதால் மட்டும், எம்மனிதனும் இறைவன் முன்னிலையில் ஏற்புடையவன் ஆவதில்லை. ஏனெனில் சட்டத்தின் வழியாக உண்டாவது பாவத்தை உணர்த்தும் அறிவே.
21 இப்பொழுதோ கடவுளின் திருவருட் செயல்முறை திருச்சட்டத்தின் சார்பின்றியே வெளியாக்கப்பட்டுள்ளது; அச்செயல்முறையையே திருச்சட்டமும் இறைவாக்கினரும் முன்னறிவித்தனர்.
22 இத்திருவருட் செயல்முறை இயேசு கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தின் வழியாய்ச் செயலாற்றுவதாகும்., விசுவசிக்கும் அனைவருக்காகவுமே இது செயலாற்றுகிறது. இதில் இன வேறுபாடே இல்லை. ஏனெனில், எல்லாருமே பாவம் செய்தனர்.
23 எல்லாருமே கடவுளது மாட்சிமையின் சாயலின்றி உள்ளனர்.
24 ஆனால் இறைவன் அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகிறார்கள்; கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய விடுதலைச் செயலின் வாயிலாய் அங்ஙனம் ஆக்கப்படுகிறார்கள்.
25 விசுவாசத்தின் வழியாய்ச் செயல்படும் பரிகாரச்சாதனமாக அவரைக் கடவுள் இரத்தப் பலியாக்கினார். கடந்த காலத்தில் தம்முடைய திருவருட் செயல்முறையைக் காட்ட விரும்பிய கடவுள் பொறுமையாய் இருந்து, மனிதர் செய்த பாவங்களைத் தண்டிக்காமல் விட்டார்.
26 இக்காலத்திலோ, அத்திருவருட் செயல்முறையைக் காட்ட விரும்பி, அவர் அருள் மிக்கவராகவும், இயேசுவில் விசுவாசம் கொள்பவன் தமக்கு ஏற்புடையவன் ஆகும்படி அருள் அளிப்பவராகவும் விளங்குகிறார்.,
27 அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா ? இல்லை; விசுவாசத்தின் அடிப்படையில் என்க.
28 ஏனெனில், திருச்சட்டம் விதித்திருக்கும் செயல்களின்றியே மனிதன் விசுவாசத்தினாலே இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப்படுகின்றான் என்பது என் கருத்து.
29 கடவுள் யூதர்களுக்கு மட்டுமே கடவுளா? புறவினத்தாருக்கும் கடவுள் அல்லரா? ஆம், புறவினத்தாருக்கும் அவர் கடவுளே,
30 ஏனெனில், விருத்தசேதனம் பெற்றவர்களை விசுவாசித்தினாலும், விருத்த சேதனம் பெறாதவர்களை விசுவாசத்தின் வழியாகவும், தமக்கு ஏற்புடையவர்களாக்கும் கடவுள் ஒருவரே.
31 அப்படியானால், விசுவாசத்தின் வழியாய்த் திருச்சட்டத்தை வெறுமை ஆக்குகிறோமோ? ஒருகாலும் இல்லை. அதற்கு மாறாக, திருச்சட்டத்தை நிலைநாட்டுகிறோம்.
அதிகாரம் 04
1 அப்படியானால், நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமைப் பற்றி என்ன சொல்வோம்?
2 ஆபிரகாம், செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவராயிருந்தால், பெருமை பாராட்ட இடமுண்டு; ஆனால் கடவுளின் முன் பெருமை பாராட்ட இடமில்லை.
3 ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? 'ஆபிரகாம் கடவுளை விசுவசித்தார்; அதனால் கடவுள் அவரைத் தமக்கு ஏற்புடையவரென மதித்தார்.'
4 வேலை செய்தவன் வாங்கும் கூலி நன்கொடை என்று மதிக்கப்படுவதில்லை, உரிமை என்றே மதிக்கப்படும்.
5 உரிமை பாராட்டுதற்குரிய செயல் புரியாத ஒருவன், பாவியைத் தமக்கு ஏற்புடையவன் ஆக்குபவர் மீது விசுவாசம் வைத்தால், அவ்விசுவாசத்தை முன்னிட்டு இறைவன் அவனை ஏற்புடையவன் என மதிக்கிறார்.
6 அவ்வாறே, செயல்கள் இன்றியே, தமக்கு ஏற்புடையவன் எனக் கடவுள் மதிக்கும் மனிதன் பேறுபெற்றவன் என்று தாவீது கூறுகிறார். அவர் சொல்லுவது:
7 'யாருடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டனவோ யாருடைய பாவங்கள் அகற்றப்பட்டனவோ அவர்கள் பேறு பெற்றோர்.
8 யாருடைய பாவத்தை ஆண்டவர் கணிப்பதில்லையோ அவன் பேறு பெற்றோன்'.
9 இனி, பேறு பெற்றவன் என்னும் அந்த ஆசிமொழி விருத்தசேதனம் உள்ளவனுக்கு மட்டுமா? இல்லாதவனுக்கும் கூடவா? 'ஆபிரகாமின் விசுவாசத்தை முன்னிட்டு இறைவன் அவரைத் தமக்கு ஏற்புடையவரென மதித்தார்' என்கிறோமே, அவர் எந்த நிலையில் இருக்கும்போது இறைவன் அவ்வாறு மதித்தார்?
10 விருத்தசேதனம் செய்து கொண்ட நிலையிலா? செய்துகொள்ளாத நிலையிலா?
11 விருத்தசேதனம் செய்துகொண்ட நிலையிலன்று; செய்து கொள்ளாத நிலையில் தான் விருத்தசேதனம் இல்லாத நிலையிலேயே அவர் விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவரானார்; அதற்கு முத்திரையாகவே விருத்தசேதனத்தை அடையாளமாகப் பெற்றார். இவ்வாறு விருத்தசேதனம் இல்லாதிருந்தும், இறைவனுக்கு ஏற்புடையவராக மதிக்கப்படும் முறையில் விசுவசிக்கிற யாவருக்கும் அவர் தந்தையானார்.
12 விருத்தசேதனம் இருந்தும், அதுவே, போதுமென்றிராமல் விசுவாசம் கொள்கிறவர்களுக்கும் தந்தையானார்; ஏனெனில், நம் தந்தையாம் ஆபிரகாம் விருத்தசேதனம் பெறுமுன்பே விசுவசித்தது போல அவர்களும் விசுவசித்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்றனர்.
13 உலகமே அவருக்கு உரிமையாகும் என்ற வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவர் வழி வந்தவர்களுக்கோ திருச்சட்டத்தின் வழியாய்க் கிடைக்கவில்லை; விசுவாசத்தினால் அவர் இறைவனுக்கு ஏற்புடையவரானதால்தான், அவ்வாக்குறுதி கிடைத்தது,
14 ஏனெனில், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குத்தான் அந்த அந்த உரிமை எனின், விசுவாசம் பொருளற்றுப்போயிற்று; வாக்குறுதியும் வெறுமையாகி விட்டது.
15 ஏனெனில், திருச் சட்டம் இறைவனின் சினத்திற்கு வழியாகிறது; எங்கே சட்டம் இல்லையோ அங்கே மீறுதல் இல்லை.
16 ஆகவே, யாவும் அருளின்,, செயலாய் விளங்கும்படி, விசுவாசம் அனைத்திற்கும் அடிப்படையாயிற்று; இவ்வாறு ஆபிரகாமின் வழி வந்தவர்கள் எல்லாருக்கும் வாக்குறுதி செல்லக் கூடியதாயிற்று. ஆபிரகாமின் வழி வந்தவர்கள் எனக்குறிக்கப்படுகிறவர்கள் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்கள் மட்டும் அல்லர். அவரைப்போல் விசுவாசம் கொண்டவர்களும் ஆவர்.
17 ஏனெனில், பல இனத்தார்க்குத் தந்தையாக உன்னை எற்படுத்தினேன்' என்று எழுதியுள்ளவாறு ஆபிரகாம் நம்மனைவர்க்கும் தந்தையானார், ஆம், இறந்தவர்களை வாழ்வளிக்கிறவரும், இல்லாததைத் தம் சொல்லால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மேல் விசுவாசம் வைத்து, அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். அந்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்டார்.
18 'உன் வழி வருவோர் இத்துணை மிகுதியாய் இருப்பர்' எனச் சொல்லப்பட்டது. அது நிறைவேறும் என்ற நம்பிக்கைக்கு இடம் இல்லாதததுபோல் தோன்றினும், அவர் நம்பிக்கை கொண்டார்; விசுவசித்தார்; ஆகவே அந்த வாக்குறுதிக்கேற்பப் பல இனத்தார்க்குத் தந்தையானார்.
19 தமக்கு ஏறத்தாழ நூறு வயது ஆனதால் தம் உடல் ஆற்றலற்றுப் போனதையும், சாராளுடைய சூலகத்தின் ஆற்றலின்மையையும் எண்ணிப் பார்த்தபோதும். அவர் விசுவாசத்தில் உறுதி தளரவில்லை. அவிசுவாசம் கொள்ளவில்லை;
20 கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவுமில்லை; விசுவாசத்தில் அவர் மேலும் வலிமை பெற்றார், கடவுளை மகிமைப்படுத்தினார்.
21 ஏனெனில், தாம் வாக்களித்ததை இறைவன் செய்ய வல்லவர் என்பதை உறுதியாய் அறிந்திருந்தார்.
22 ஆகவே, 'இறைவனுக்கு ஏற்புடையவரென மதிக்கப்பட்டார் '.
23 ஏற்புடையவரென மதிக்கப்பட்டார் என்பது அவரை மட்டும் குறிக்கவில்லை;. நம்மையும் குறிக்கின்றது;
24 நம் ஆண்டவராகிய இயேசுவை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தவர் மீது விசுவாசம் வைத்திருக்கும் நாமும் அவ்வாறு ஏற்புடையவரென மதிக்கப்படுவோம்.
25 இவர் நம் குற்றங்களுக்காகக் கையளிக்கப்பட்டார். நாம் இறைவனுக்கு ஏற்புடையவராகும்படி உயிர்ப்பிக்கப்பெற்றார்.
அதிகாரம் 05
1 ஆகையால், விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவர்களான நாம், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுடன் சமாதானம் கொண்டிருக்கிறோம்.
2 நாம் இப்போது இருக்கும் அருள் நிலையை அடையும் பேறு, விசுவாசத்தினால் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்துள்ளது; அவர் வழியாகவே கடவுளின் மாட்சிமையைப் பெறுவோம் என்கிற நம்பிக்கையில் பெருமைக்கொள்கிறோம்.
3 அதுமட்டுமன்று, வேதனைகளிலும், பெருமை கொள்கிறோம். ஏனெனில், வேதனையால் பொறுமையும்.
4 பொறுமையால் மனத்திண்மையும் மனத்திண்மையால் நம்பிக்கையும் விளையும் என்று அறிந்திருக்கிறோம்.
5 நம்பிக்கையோ பொய்க்காது; ஏனெனில், நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பும் நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
6 ஏனெனில், நாம் பாவத்தால் வலுவற்றிருந்தபோதே, குறித்த காலத்தில் கிறிஸ்து பாவிகளுக்காக இறந்தார்;
7 நீதிமானுக்காக ஒருவன் தன் உயிரைக்கொடுத்தல் அரிது- ஒருவேளை நல்லவன் ஒருவனுக்காக யாரேனும் தன் உயிரைக் கொடுக்கலாம் - ஆனால் .
8 நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்; இதனால் கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பை எண்பிக்கிறார்.
9 ஆகையால் நாம் இப்பொழுது கிறிஸ்துவின் இரத்தத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவர்களாகி அவர் வழியாய் இறுதித் தண்டனைக்குத் தப்பி மீட்புப்பெறுவோம். என மிக உறுதியாய் நம்பலாமன்றோ?
10 கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகனது மரணத்தின் வழியாய் நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப் பட்ட நாம் அவருடைய உயிரால் மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாமன்றோ
11 அதுமட்டுமன்று; இப்பொழுது நம்மை ஒப்புரவாக்கிய நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளில் பெருமை கொள்கிறோம்.
12 ஒரே மனிதனால், பாவமும், பாவத்தால் சாவும் இந்த உலகத்தில் நுழைந்தது போலவும், இவ்வாறு எல்லாரும் பாவஞ் செய்தமையால் எல்லா மனிதர்க்குள்ளும் சாவு பரவியது போலவும்.
13 ஏனெனில், திருச்சட்டம் வருமுன்னும், உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது, குற்றச்சாட்டுக்கு இடமில்லை.
14 ஆயினும், ஆதாம் முதல் மோயீசன் வரை இருந்தவர்கள், ஆதாம் கட்டளையை மீறிச் செய்த பாவத்தைப் போன்ற பாவம் செய்யாவிடினும், அவர்கள் மேலும் சாவு ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாமோ வரவிருப்பவர்க்கு முன்னடையாளம்.
15 ஆனால் குற்றத்தின் தன்மை வேறு, அருட்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவன் செய்த குற்றத்தால் அனைவரும் இறந்தார்கள் அல்லவா? ஆனால் கடவுளின் அருளும், இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதரின் அருளால் கிடைக்கும் கொடையும் அனைவருக்கும் எவ்வளவோ மிகுதியாய்ப் பெருகியுள்ளன.
16 இந்த அருட்கொடையின் பயன் வேறு, அந்த ஒரு மனிதன் செய்த பாவத்தின் விளைவு வேறு. ஏனெனில், ஒருவன் செய்த குற்றத்தால் விளைந்த தீர்ப்பு, தண்டனைத் தீர்ப்பு, அனைவருடைய குற்றங்களுக்கும் கிடைத்த தீர்ப்போ அருட்கொடையாக வந்த விடுதலைத் தீர்ப்பு
17 ஏனெனில், ஒரே ஒருவன் செய்த குற்றத்தாலே அந்த ஒருவன் வழியாகச் சாவு ஆட்சி செதுத்தினதென்றால், அருட்பெருக்கையும், இறைவனுக்கு ஏற்புடையவராகும் வரத்தையும் அடைந்து கொண்டவர்கள், இயேசு கிறிஸ்து என்னும் ஒரே ஒருவர் வழியாக வாழ்வுபெற்று ஆட்சி செலுத்துவார்கள் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?
18 ஆகவே ஒரே ஒருவனின் குற்றம் எல்லா மனிதர்க்கும் தண்டனைத் தீர்ப்பாய் முடிந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதர்க்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் மலர்ந்தது.
19 ஏனெனில், ஒரு மனிதனின் கீழ்ப்படியாமையால் அனைவரும் பாவிகளானது போல், ஒருவரின் கீழ்ப்படிதலால் அனைவரும் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
20 குற்றம் செய்ய வாய்ப்புப் பெருகும்படி சட்டம் இடையில் நுழைந்தது; ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் அணை கடந்து பெருக்கெடுத்தது.
21 இவ்வாறு சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியது போல், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய், முடிவில்லா வாழ்வுக்காக இறையருள் மனிதரை இறைவனுக்கு ஏற்புடையராக்கி, ஆட்சி செய்கிறது.
அதிகாரம் 06
1 அப்படியானால் என்ன சொல்வோம்? அருள் பெருகும்படி பாவத்தில் நிலைத்திருப்போம் என்போமா? ஒருகாலும் இல்லை.
2 பாவத்திற்கு இறந்துவிட்ட நாம் எவ்வாறு இன்னும் அதிலேயே வாழ்ந்துகொண்டிருக்க முடியும்?
3 கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்திற்குள் ஞானஸ்நானம் பெற்றோம் என்பதை அறியீர்களா?
4 ஆகவே, இறந்தோரிடமிருந்து கிறிஸ்து பரம தந்தையின் மாட்சிமையால் எழுதப்பட்டதுபோல நாமும் புத்துயிர் பெற்றவர்களாய் வாழும்படி ஞானஸ்நானத்தின் வழியாய் அவரோடு இறந்து புடைக்கப்பட்டோம்.
5 ஏனெனில், அவருடைய மரணத்தின் சாயலைத் தாங்கி, அவரோடு பொருத்தி இணைக்கப்பட்டால், உயிர்த்தெழுதலின் சாயலையும் தாங்கி, அவரோடு இணைக்கப்படுவோம்.
6 நாம் இனிப் பாவத்துக்கு அடிமையாய் இராதபடி பாவத்துக்கு உட்பட்ட உடல் அழிந்து போகுமாறு நம்முடைய பழைய இயல்பு அவரோடு சிலுவையில் அறையுண்டது என்பது நமக்குத் தெரியும்.
7 செத்தவன் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டான் அன்றோ?
8 கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நம் விசுவாசம்;
9 இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார். இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்லர் என்று நாம் அறிந்திருக்கிறோம்.
10 அவர் சாவுக்குள்ளானார்; அந்தச் சாவு பாவத்தின் ஆளுகைக்கு உட்பட்ட வாழ்க்கையை ஒரே முறையில் எக்காலத்திற்கும் ஒழித்துவிட்ட சாவு அவர் வாழ்கிறார்; அந்த வாழ்வு கடவுளுக்காக வாழும் வாழ்வு
11 அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொருத்தமட்டில் செத்தவர்கள்; கிறிஸ்து இயேசுவுக்குள் கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என எண்ணிக்கொள்ளுங்கள்.
12 ஆகவே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம், சாவுக்குரிய உங்கள் உடலில் ஆட்சி செலுத்தாதிருப்பதாக.
13 நீங்களோ உங்கள் உறுப்புக்களைத் தீமைசெய்யும் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்படைக்காதீர்கள்; மாறாக, இறந்தோர்களிடமிருந்து உயிர்த்து வாழ்கிறவர்களாய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகள் இருக்கட்டும்.
14 பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்துதல் ஆகாது; நீங்கள் சட்டத்தின் அதிகாரத்தில் இல்லை; இறையருளின் அதிகாரத்திலே இருக்கிறீர்கள்.
15 ஆகவே, என்ன சொல்வோம்? சட்டத்தின் அதிகாரத்தில் இல்லாமல், இறையருளின் அதிகாரத்தில் இருப்பதால் நாம் பாவம் செய்யலாம் என்போமா? ஒருகாலும் இல்லை.
16 எவனுக்குக் கீழ்ப்படிந்து அடிமைகளாக உங்களைக் கையளிக்கிறீர்களோ, அவனுக்கு நீங்கள் அடிமை என்பது உங்களுக்குத் தெரியாதா ? சாவுக்கு உட்படுத்தும் பாவத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்கள் பாவத்துக்கு அடிமைகள். இறைவனுக்கு ஏற்புடையவராக்கும் கீழ்ப்படிதலுக்கு உட்பட்டால், நீங்கள் அதற்கு அடிமைகள்.
17 ஆனால், முன்னே பாவத்தின் அடிமைகளாய் இருந்த நீங்கள் உங்களிடம் கையளிக்கப்பட்ட படிப்பினையின் ஒழுங்குக்கு முழு மனத்துடன் கீழ்ப்படிந்தீர்கள்; இதற்காகக் கடவுளுக்கு நன்றி.
18 பாவத்தினின்று நீங்கள் விடுதலை பெற்று, இறைவனுக்கு ஏற்புடைய நிலைக்கு உங்களை அடிமைகள் ஆக்கிக் கொண்டீர்கள்.
19 நீங்கள் வலுவற்ற மனிதத் தன்மையுள்ளவர்கள் என்பதை மனத்திற்கொண்டு, மனிதர் பேசும் முறையில் பேசுகிறேன்; அக்கிரமத்தில் ஆழ்த்தும் அசுத்தத்திற்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை முன்பு நீங்கள் அடிமைகள் ஆக்கியிருந்தீர்கள்; அதுபோல இப்பொழுது பரிசுத்தத்தில் மலரும் ஏற்புடைய வாழ்வுக்கு உங்கள் உறுப்புகளை உட்படுத்திக்கொள்ளுங்கள்.
20 நீங்கள் பாவத்தின் அடிமைகளாய் இருந்தபோது இறைவனுக்கு ஏற்புடைய நிலைக்கு அடிமைகள் ஆகாதிருந்தீர்கள்.
21 இப்பொழுது உங்களை நாணச் செய்யும் செயல்களையே நீங்கள் அப்போது செய்துவந்தீர்கள்; அவற்றால் நீங்கள் கண்ட பலன் யாது? அவற்றின் முடிவு சாவே
22 ஆனால், 'இப்பொழுது பாவத்தினின்று விடுதலைபெற்றுக் கடவுளின் அடிமைகள் ஆனீர்கள்; இதனால் உங்களுக்குக் கிடைத்துள்ள பலன் நீங்கள் பரிசுத்தர்கள் ஆவதே; அதன் முடிவு முடிவில்லா வாழ்வு.
23 ஏனெனில், பாவம் கொடுக்கும் கூலி சாவு, கடவுள் அளிக்கும் அருட்கொடையோ நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் முடிவில்லா வாழ்வு
அதிகாரம் 07
1 சகோதரர்களே, உயிரோடு இருக்கும் வரையில்தான் ஒருவன்மேல் சட்டத்திற்கு அதிகாரம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாதா? சட்டம் தெரிந்தவர்களைக் கேட்கிறேன்.
2 எடுத்துக்காட்டாக, மணமான பெண் ஒருத்தி, கணவன் உயிரோடு இருக்கும் வரையில் தான் திருமணச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கிறாள். கணவன் இறந்துவிட்டால் அந்தச் சட்டத்திலிருந்து விடுதலை பெறுகிறாள்.
3 ஆகையால், கணவன் உயிரோடிருக்கும்போதே அவள் வேறொருவனோடு வாழ்ந்தால், அவளுக்கு விபசாரி என்ற பெயர் கிடைக்கும்; ஆனால், கணவன் இறந்து போனால், அவள் திருமணச் சட்டத்தினின்று விடுதலைபெற்றவள் ஆகிறாள், ஆகவே அவள் வேறொருவனுக்கு மனைவியானால், விபசாரி அல்லள்.
4 அவ்வாறே, என் சகோதரர்களே, நீங்களே கிறிஸ்துவின் உடலோடு ஒன்றித்திருப்பதால் சட்டத்தைப் பொருத்தமட்டில் இறந்தவர்கள் ஆனீர்கள்; அதன் விளைவாக, வேறொருவரோடு பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தவர். நாம் கடவுளுக்கேற்ற பயன்தர வேண்டுமென்றே அவர் உயிர்த்தெழுந்தார்.
5 நாம் ஊனியல்பின்படி வாழ்ந்தபோது, பாவ இச்சைகள் சட்டத்தின் வழியாய்க் கிளர்ந்து எழும்பி, நம்முடைய உறுப்புகளில் சாவுக்கேற்ற பயன் தரும்படியாகச் செயலாற்றின.
6 இப்பொழுதோ நாம் கட்டுண்டிருந்த சட்டத்தைப் பொருத்தமட்டில் இறந்து, அதனின்று விடுதலை பெற்றோம். ஆகையால், எழுதிய சட்டத்திற்குரிய பழைய நெறியில் இனி ஊழியம் செய்வதை விட்டு ஆவியானவருக்குரிய புதிய நெறியில் ஊழியம் செய்ய முடிந்தது.
7 அப்படியானால், நாம் என்ன சொல்வது? சட்டமும் பாவமும் ஒன்றுதானா? ஒருகாலும் இல்லை. ஆயினும், சட்டம் இல்லாதிருந்தால் நான் பாவத்தை அறிந்திருக்க மாட்டேன். ஏனெனில், 'இச்சியாதே' எனச் சட்டம் சொல்லாமற்போயிருந்தால், இச்சை என்பது என்ன என்றே நான் அறிந்திருக்கமாட்டேன்.
8 ஆனால், கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பாவம் என்னில் எல்லாவகை இச்சைகளையும் தூண்டிற்று. ஏனெனில், சட்டம் இல்லாவிடிலும் பாவம் செத்துக்கிடக்கிறது.
9 ஒரு காலத்தில் சட்டம் இல்லாதபோது நான் உயிர் உள்ளவனாயிருந்தேன். கட்டளை வந்தபோது பாவம் உயிர்பெற்றது; நானோ உயிரிழந்தேன்.
10 வாழ்வுக்கு வழியாய் இருக்க வேண்டிய கட்டளை, சாவுக்கு வழியாயிற்று எனக் கண்டேன்.
11 ஏனெனில், கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பாவம் என்னை வஞ்சித்து அந்தக் கட்டளை வழியாக என்னைக் கொன்றது.
12 சட்டம் தன்னிலேயே பரிசுத்தமானது தான்; அவ்வாறே கட்டளையும் பரிசுத்தமானது, நீதியானது, நன்மை மிக்கது.
13 அவ்வாறாயின், நன்மை மிக்கதான ஒன்று, எனக்குச் சாவாக மாறிற்றா? ஒருகாலும் இல்லை. எல்லாம் பாவத்தின் வேலைதான்; பாவம் தன் இயல்பைக் காட்டுவதற்காக நல்லதாகிய ஒன்றைக்கொண்டு எனக்குச் சாவை விளைவித்தது; இவ்வாறு, பாவம் கட்டளையின் வழியாகத் தன் கொடிய இயல்பை அளவு கடந்த முறையில் காட்டுவதாயிற்று.
14 சட்டம் ஆவிக்குரியது என்பது நமக்குத் தெரிந்ததே; நானோ பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன்: சீரழிந்த இயல்புள்ளவன்.
15 ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ, அதையே செய்கிறேன்.
16 எனக்கு விருப்பம் இல்லாததையே நான் செய்தால், சட்டம் நல்லது என ஏற்றுக் கொள்கிறேன்.
17 ஆனால், அவ்வாறெல்லாம் செயல்புரிபவன் நானல்லேன்; என்னுள் குடிகொண்டிருக்கும் பாவம்தான் செயல்புரிகிறது.
18 ஏனெனில், என்னுள், அதாவது வலுவற்ற என் இயல்பில், நன்மை எதுவும் குடி கொண்டில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை. அதைச் செய்யத்தான் முடியவில்லை.
19 நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன்.
20 அப்படி நான் எதை விரும்பவில்லையோ அதையே செய்கிறேன் என்றால், அதைச் செய்பவன் நானல்லேன். என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே அதைச் செய்கிறது என்பது தெளிவு
21 ஆகவே, நான் நன்மை செய்ய விரும்பும்போதெல்லாம், என் கைக்கு எட்டுவது தீமைதான்; இத்தகையதொரு செயல் முறையை என்னுள் காண்கிறேன்.
22 ஏனெனில், என் உள்மனத்தில் நான் கடவுளின் சட்டத்திற்கு மனமுவந்து உட்படுகிறேன்.
23 ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது. என் உறுப்புகளில் இருக்கும் பாவச் சட்டத்திற்கு என்னைச் சிறைப்படுத்துகிறது.
24 ஆழ் துயரில் மூழ்கியுள்ள மனிதன் நான்! சாவின் பிடியிலுள்ள இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?
25 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு நன்றி. சுருங்கச் செல்லின், என் மனத்தால் கடவுளின் சட்டத்திற்கு உட்பட்டிருக்கும் நானே வலுவற்ற என் இயல்பினால் பாவத்தின் சட்டத்திற்கும் உட்பட்டிருக்கிறேன்.
அதிகாரம் 08
1 ஆகவே, கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறவர்களுக்கு இனித் தண்டனைத் தீர்ப்பு என்பதில்லை.
2 ஏனெனில், கிறிஸ்து இயேசுவுக்குள் உயிர் தரும் ஆவியானவரின் சட்டம் என்னைப் பாவம், சாவு என்பவற்றின் சட்டத்தினின்றும் விடுதலை செய்துவிட்டது.
3 ஊனியல்பினால் வலுவற்றதாக்கப்பட்ட பழைய சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். எவ்வாறெனில், பாவப் பிடியிலுள்ள நம் இயல்பு போன்ற இயல்பில் தம் சொந்த மகனை அனுப்பி, அவரைப் பாவத்திற்குப் பரிகாரப் பலியாக்கி, அந்த இயல்பைக் கொண்டே பாவத்திற்குத் தண்டனைத் தீர்ப்புக் கொடுத்தார்:
4 ஊனியல்புக்கு ஏற்ப நடவாமல், ஆவியானவரின் ஏவுதலுக்கேற்ப நடக்கும் நம்மில் சட்டம் கட்டளையிட்டது நிறைவுறும்படி அவ்வாறு செய்தார்.
5 ஏனெனில், ஊனியல்பினரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின் மீதே இருக்கும்; ஆவியானவரால் தூண்டப்படுவோரின் நாட்டமோ, ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும்.
6 ஊனியல்பின் நாட்டத்தால் விளைவது சாவே; ஆவியால் தூண்டப்படும் இயல்பின் நாட்டத்தால் வருவது வாழ்வும் அமைதியுமே.
7 ஏனெனில், ஊனியல்பின் நாட்டம் கடவுளுக்குப் பகையானது; அது கடவுளின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருப்பதில்லை, இருக்கவும் முடியாது.
8 ஊனியல்பினர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது.
9 நீங்களோ ஊனியல்புக்கு உட்பட்டவர்கள் அல்ல; ஆவியானவரின் செயலுக்கு உட்பட்டவர்கள். ஆனால், கடவுளின் ஆவி உங்களுள் குடியிருத்தல் வேண்டும். கிறிஸ்துவின் ஆவியை ஒருவன் கொண்டிராவிடில், அவன் கிறிஸ்தவன் அல்லன்.
10 பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும் கிறிஸ்து உங்களுள் இருந்தால், இறைவனுக்கு ஏற்புடையவர்களாக்கப்பட்ட உங்களுக்கு ஆவியானவர் உள்ளுயிராய் இருப்பார்.
11 இறந்தோரிடமிருந்து இயேசுவை உயிர்ப்பித்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், இறந்தோரிடமிருந்து கிறிஸ்துவை உயிர்ப்பித்தவர் உங்களுள் குடிகொண்டுள்ள தமது ஆவியாலேயே சாவுக்குரிய உங்கள் உடல்களை உயிர்பெறச் செய்வார்.
12 இதனால் சகோதரர்களே! நாம் கடமைப்பட்டிருப்பது, ஊனியல்புக்கு அன்று; அதன் படி நாம் வாழ வேண்டுமென்பதில்லை.
13 ஏனெனில், நீங்கள் அந்த இயல்புக்கு ஏற்றபடி வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், ஆவியானவரின் செயலால், உடலின் செயல்களைச் சாகடித்தால், வாழ்வீர்கள்.
14 ஏனெனில் கடவுளின் ஆவியால் யார் இயக்கப்படுகிறார்களோ, அவர்களே கடவுளின் மக்கள்.
15 நீங்கள் பெற்றுக்கொண்டது, திரும்பவும் அச்சத்திற்குள்ளாக்கும் அடிமையுள்ளம் அன்று; பிள்ளைகளாக்கும் தேவ ஆவியையே பெற்றுக்கொண்டீர்கள். அந்த ஆவியினால் நாம், "அப்பா, தந்தாய்" எனக் கூப்பிடுகிறோம்.
16 நாம் இவ்வாறு கூப்பிடும்போது நம் உள்ளத்தோடு தேவ ஆவியானவரே நாம் கடவுளின் பிள்ளைகள் என்று சான்று பகர்கிறார்.
17 நாம் பிள்ளைகளாயின், உரிமையாளர்களுமாய் இருக்கிறோம். ஆம், கடவுளின் செல்வத்திற்கு உரிமையாளர்கள்; கிறிஸ்துவோடு உடன் உரிமையாளர்கள்; ஆனால், அவருடைய பாடுகளில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மகிமையிலும் பங்குபெறுவோம்.
18 இம்மைக் காலத்தில் நாம் படும் துன்பங்கள் நம்மிடம் வெளிப்படப்போகிற மகிமையோடு ஒப்பிடவும் தகுதியற்றவை என எண்ணுகிறேன்.
19 இம்மகிமையுடன் கடவுளுடைய மக்கள் வெளிப்பட வேண்டுமென்று படைப் பனைத்துமே ஏக்கத்தோடு எதிர்நோக்கியிருக்கிறது.
20 ஏனெனில், படைப்பு முழுவதும் பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பி அப்படி உட்படவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அப்படி உள்ளது. எனினும் அது நம்பிக்கையற்ற நிலையில் இல்லை.
21 படைப்பனைத்துமே அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய மகிமையும் விடுதலையும் பெற்றுக் கொள்ளும் நம்பிக்கை கொண்டுள்ளது.
22 இந்நாள்வரை படைப்புப் பொருள் அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்.
23 படைப்பு மட்டுமன்று; முதற்கனியாகத் தேவ ஆவியைக் கொண்டுள்ள நாமும் இறை மக்களாக்கப் படும் நாளை எதிர்நோக்கி, அதாவது நம் உடல் விடுதலையாக்கப்படும் நாளை எதிர்நோக்கித் தவித்துக்கொண்டிருக்கிறோம். மீட்பு நமக்குக் கிடைத்தவிட்டது.
24 எனினும் மீட்பு இனி வரும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம். நேருக்கு நேராய்க் காண்பதை நம்புவது நம்பிக்கையன்று. கண்ணால் காண்கிறதை எவனாவது எதிர்நோக்குவானா?
25 நாம் காணாததை எதிர்நோக்கி நம்பிக்கைகொண்டிருந்தால், அப்படி எதிர்நோக்குவதில் நம் மனவுறுதியைக் காட்டுகிறோம்.
26 அவ்வாறே நம் வலுவற்ற நிலையில் நமக்கு ஆவியானவர் துணைநிற்கிறார்; ஏனெனில், செபிக்க வேண்டிய முறையில் செபிப்பதெப்படி என நாம் அறியோம்; ஆவியானவர் தாமே சொல்லொண்ணாப் பெருமூச்சுகளோடு பரிந்து பேசிச் செபிக்கிறார்.
27 உள்ளங்களை ஊடுருவிக் காண்கிற இறைவன் ஆவியானவரின் கருத்தை அறிவார்; ஆவியானவர் இறை மக்களுக்காகக் கடவுளுக்கேற்பப் பரிந்து பேசுகிறார் என்பதை இறைவன் அறிவார்.
28 கடவுளிடம் அன்புக்கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு ஆவியானவர் அவர்கள் நன்மைக்காக அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.
29 ஏனெனில், கடவுள் யாரை முன்பே தேர்ந்துகொண்டாரோ, அவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்ற உருவைத் தாங்கும்படி முன் குறித்திருக்கிறார்; சகோதரர் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்கவேண்டுமென்றே இப்படிக் குறித்தார்.
30 யாரை முன் குறித்தாரோ அவர்களை அழைத்திருக்கிறார்; யாரை அழைத்தாரோ அவர்களைத் தமக்கு ஏற்புடையவர்களாக்கினார்; யாரைத் தமக்கு ஏற்புடையவர்களாக்கினாரோ, அவர்களுக்குத் தம் மாட்சிமையில் பங்கு தந்தார்.
31 இதற்குமேல் நாம் என்ன சொல்வது? கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நம்மை எதிர்த்து நிற்பவர் யார்?
32 தம் சொந்த மகனென்றும் பாராமல், நம் அனைவருக்காகவும் அவரைக் கையளித்த அவர், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?
33 கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களுக்கு எதிராய் எவன் குற்றம் சாட்டக் கூடும்? அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கடவுளே சொல்லும் போது, தண்டனைத் தீர்ப்புக் கூறுபவர் யார்?
34 கிறிஸ்து இயேசு நமக்காக உயிர் நீத்தார், ஏன், உயிர்ப்பிக்கவும் பெற்றார். இந்தக் கிறிஸ்துவே கடவுளின் வலப்பக்கத்தில் இருந்து நமக்காகப் பரிந்து பேசுகிறார்.
35 கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிப்பவன் எவன்? வேதனையோ? நெருக்கடியோ? கலாபனையோ? பசியோ? ஆடையின்மையோ? இடர்களோ? வாளோ? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும்?
36 ' உம்மை முன்னிட்டு நாள் முழுவதும் சாவுக்களாகிறோம்; கொல்லப்படக் காத்திருக்கும் ஆடுகளாய்க் கருதப்பட்டோம் ' என எழுதியுள்ளதன்றோ?
37 ஆனால் நம்மேல் அன்பு வைத்தவரின் செயலால் நாம் இவை அனைத்திலும் மாண்புமிக்க வெற்றி அடைகிறோம்.
38 ஏனெனில், சாவோ வாழ்வோ, வானதூதரோ தலைமை ஏற்பவரோ, நிகழ்வனவோ வருவனவோ, வலிமை மிக்கவரோ,
39 வானத்தில் உள்ளவையோ ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்புப் பொருளோ, நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவில் வெளிப்பட்ட இறை அன்பிலிருந்த நம்மைப் பிரிக்க முடியாது என்பது என் துணிபு.
அதிகாரம் 09
1 பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள என் மனச் சான்று எனக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன், கிறிஸ்துவுக்குள் உண்மையேசொல்லுகிறேன், பொய்சொல்லவில்லை.
2 உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும், இடைவிடாத வேதனையும் உண்டு;
3 இரத்த உறவினரான என் சகோதரர்களுக்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகவும் தயங்கேன். அவர்கள் இஸ்ராயேல் மக்கள் அல்லரா?
4 அவர்களே கடவுளின் மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள், அவர்களிடையில் தான் இறைவன் தம் மாட்சிமையை விளங்கச் செய்தார், உடன்படிக்கைகளும் திருச்சட்டமும், இறை வழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடம்தான் ஒப்படைக்கப்பட்டன.
5 குலத் தந்தையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள்; மனிதன் என்ற முறையில் கிறிஸ்துவும் அவர்களினின்றே தோன்றினார். இவரோ எல்லாவற்றிற்கும் மேலான கடவுள், என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.
6 கடவுளின் வார்த்தை பொய்த்தது என்பது கருத்தன்று. ஏனெனில், இஸ்ராயேல் மரபில் தோன்றிய அனைவருமே இஸ்ராயேலர் அல்லர்.
7 ஆபிரகாமின் வழிவந்தவர்கள் அனைவருமே அவருடைய பிள்ளைகள் அல்லர்; மறை நூலில், 'உன் பெயரைத் தாங்க உன் வழிவந்தோர் ஈசாக்கின் வழியாய்த்தான் பிறப்பர்' என்று உள்ளதன்றோ?
8 அதாவது இயல்பு முறைப்படி பிறந்த பிள்ளைகள் கடவுளின் பிள்ளைகள் அல்லர்; வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகளே ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.
9 'குறிப்பிட்ட காலத்தில் திரும்பவும் வருவேன்; அப்பொழுது சாராள் ஒரு மகனுக்குத் தாயாய் இருப்பாள்' என்பதே அந்த வாக்குறுதி.
10 அது மட்டுமன்று, நம் தந்தையாகிய ஈசாக்கு என்னும் ஒருவரிடமிருந்தே ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைக் கருத்தாங்கிய போதிலும்,
11 குழந்தைகள் பிறக்குமுன்பே, நன்மையோ தீமையோ செய்யுமுன்பே,
12 ' மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ் செய்வான் ' என்று அவளுக்குச் சொல்லப்பட்டது.
13 அவ்வாறே, ' யாக்கோபின் மேல் அன்பு கூர்ந்தேன். ஏசாவை வெறுத்தேன் ' என்று எழுதியுள்ளது. தாமே விரும்பித் தேர்ந்தெடுப்பதே கடவுளுடைய திட்டத்துக்கு அடிப்படை; மனிதர் செய்யும் செயல்களின்படி அன்று, அழைக்கும் இறைவனின் செயலின்படியே அத்திட்டம் நிறைவேறுமாறு அங்ஙனம் நிகழ்ந்தது.
14 இப்படியிருக்க நாம் என்ன சொல்வது? கடவுளிடம் அநீதியுண்டோ? ஒரு காலும் இல்லை.
15 ஏனெனில் அவரே மோயீசனிடம், ' எவனுக்கு இரக்கம் காட்டவிரும்புகிறேனோ, அவனுக்கு இரக்கம் காட்டுவேன்; எவனுக்குக் கருணைபுரிய விரும்புகிறேனோ, அவனுக்கு கருணை புரிவேன் ' என்கிறார்.
16 ஆகவே விரும்புகிறவனாலும் அன்று, உழைக்கிறவனாலும் அன்று, இரக்கம் வைக்கும் கடவுளாலேயே எதுவும் ஆகும்.
17 ஏனெனில், பார்வோனுக்கு மறைநூல் கூறுவது: ' உன் வழியாய் என் வல்லமையைக் காட்டவும், என் பெயர் மண்ணுலகெங்கும் விளங்கவுமே நான் உன்னைத் தோற்றுவித்தேன் '.
18 ஆகவே தாம் விரும்புவதுபோல் ஒருவன் மேல் இரக்கம் வைக்கிறார், இன்னோருவனை அடங்காமனத்தினன் ஆக்குகிறார்.
19 ' அப்படியானால், அவர் ஒருவன் மீது எவ்வாறு குற்றம் சாட்ட முடியும்? அவருடைய விருப்பத்தை யார் எதிர்க்கக் கூடும்?' என்று நீ கேள்வி கேட்கலாம்.
20 அற்ப மனிதா! கடவுளுக்கு எதிர் வினா விடுக்க நீ யார்? பாத்திரம் தன்னை உருவாக்கியவனிடம், ஏன் என்னை இவ்வாறு செய்தாய் என்று சொல்லுமோ?
21 ஒரே களிமண் மொத்தையிலிருந்து மதிப்புயர்ந்த கலனையோ மதிப்பற்ற கலனையோ வனையக் குயவனுக்கு அம்மண்மீது உரிமையில்லையோ?
22 கடவுளின் செயலும் இத்தகையதே. தமது சினத்தைக் காட்டவும், தமது வல்லமையைத் தெரியப்படுத்தவும் அவர் விரும்பியபோதிலும், அழிவுக்கும் அவருடைய சினத்துக்கும் இலக்கான கலன்கள் மட்டில் கடவுள் மிக்க பொறுமையாய் இருந்தாராயின், யார் என்ன சொல்ல முடியும்?
23 அதன் மூலம் தம் மாட்சிமையையும் இரக்கத்தையும் பெறுமாறு அவர் தயாரித்திருந்த கலன்கள் மட்டில் தமது மாட்சிமையின் வளத்தைத் தெரியப்படுத்த விரும்பினார்.
24 அந்தக் கலன்கள் யூதர்களிடையிலிருந்து மட்டுமன்று, புறவினத்தாரிடையிலிருந்தும் அவரால் அழைக்கப்பட்ட நம்மையே குறிக்கின்றன.
25 அவ்வாறே ஓசே எழுதிய நூலில் இறைவன்: ' என் மக்கள் அல்லாதவரை என் மக்கள் என அழைப்பேன். அன்பு செய்யப்படாதவளை அன்பு செய்யப்பட்டவள் என அழைப்பேன்.
26 " நீங்கள் என் மக்கள் அல்ல" என்று அவர்களுக்குச் சொல்லியிருந்த இடத்திலேயே, அவர்கள் உயிருள்ள கடவுளின் மக்கள் எனப்படுவர் '. என்கிறார்.
27 இஸ்ராயேலைக் குறித்து இசையாஸ் அறிக்கையிட்டது: ' இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கை கடற்கரை மணலைப் போன்றிருந்தாலும், எஞ்சியிருப்பவர்களே மீட்கப்படுவர்.
28 இஸ்ராயேல் நாட்டில் ஆண்டவர் காலந்தாழ்த்தாமல் தமது வார்த்தையை முற்றிலும் நிறைவேற்றுவார்'.
29 மேலும் இசையாஸ் முன்னுரைத்ததுபோல்: ' வான் படைகளின் ஆண்டவர் நமக்கு வேராகிலும் விட்டு வைத்திராவிடில், சோதோமைப் போல் ஆகியிருப்போம், கொமோராவுக்கு ஒப்பாகியிருப்போம். '
30 அப்படியானால், இதன் முடிவென்ன? புறவினத்தார் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக முயற்சி செய்யாத போதிலும் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டார்கள். அப்படி ஏற்புடையவர்கள் ஆனதோ விசுவாசத்தினாலே.
31 ஆனால், இறைவனுக்கு ஏற்புடையவர்களாக்கும் சட்டத்தை இஸ்ராயேல் மக்கள் பின்பற்ற முயன்றபோதிலும் அதன் உட்பொருளைக் கண்டடையவில்லை. ஏன்?
32 ஏனெனில், விசுவாசத்தின் மீது அன்று, செயல்களின் மீது நம்பிக்கை வைத்தனர்.
33 ' இதோ தடுக்கி விழச் செய்யும் கல்லையும் இடறலான பாறையையும் சீயோனில் வைக்கிறேன். அதிலே விசுவாசம் வைப்பவன் ஏமாற்றம் அடையான் ' என்று எழுதியுள்ளவாறு, தடுக்கி விழச் செய்யும் கல்லின் மேல் தடுக்கி விழுந்தனர்.
அதிகாரம் 10
1 சகோதரர்களே, அவர்கள் மீட்படைய வேண்டுமென்றே, என் உள்ளம் தவிக்கிறது. அதற்காகவே நான் கடவுளிடம் மன்றாடுகிறேன்.
2 கடவுள்மேல் அவர்களுக்கு அன்பார்வம் உண்டு என்பதற்கு நான் சாட்சி சொல்லமுடியும்; ஆனால் அந்த ஆர்வம் உண்மையான அறிவுக்கு ஏற்றதாயில்லை.
3 கடவுளின் திரு அருட் செயல்முறையை அவர்கள் அறிந்து கொள்ளாமல், அருள் பெறுவதற்குத் தங்கள் முறையையே நிலைநாட்டத் தேடினார்கள்; ஆகவே கடவுளுடைய அருட் செயல்முறைக்குத் தங்களை உட்படுத்தவில்லை.
4 ஏனெனில், கிறிஸ்துவே திருச்சட்டத்தின் முடிவும் நிறைவும்; ஆகவே விசுவசிக்கும் எவனும் இனி இறைவனுக்கு ஏற்புடையவனாவான்.
5 திருச்சட்டத்தால் ஒருவன் இறைவனுக்கு ஏற்புடையவன் ஆதல் பற்றி மோயீசன் எழுதும்போது, "திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவனே அவருக்கு ஏற்புடையவனாக வாழ்வான்" என்றார்.
6 ஆனால் விசுவாசத்தால் இறைவனுக்கு ஏற்புடையவனாதல் பற்றி மறைநூலில் உள்ள சான்று பின்வருமாறு: ' வானகத்திற்கு ஏறுபவன் யார் என்று நீ மனத்தில் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை.' - அதாவது, கிறிஸ்துவைக் கீழே கொண்டுவருவதற்கு என்க - அல்லது
7 கீழ் உலகுக்கு இறங்குபவன் யார் என்று நீ நினைக்கவேண்டியதில்லை' - அதாவது கிறிஸ்துவை இறந்தோரிடமிருந்து கொண்டு வருவதற்கு என்க- மாறாக, சொல்லியிருப்பது என்ன?
8 'உன்னருகிலேயே உள்ளது வார்த்தை உன் வாயில் உள்ளது உன் உள்ளத்திலேயே உள்ளது'.
9 அந்த வார்த்தை நாங்கள் அறிவிக்கிற விசுவாச அறிக்கையே. ஏனெனில், 'இயேசு ஆண்டவர்' என உன் வாயினால் அறிக்கையிட்டு, கடவுள் அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார் என உன் உள்ளத்தில் விசுவசித்தால், நீ மீட்புப் பெறுவாய்.
10 ஆம், உள்ளத்தால் விசுவாசிப்பவன் இறைவனுக்கு ஏற்புடையவனாவான்; வாயினால் அறிக்கையிடுகிறவன், மீட்புப் பெறுவான்.
11 ஏனெனில், 'அவர்மேல் விசுவாசம் வைக்கிற எவனும் ஏமாற்றம் அடையான் ' என்பது மறைநூல் வாக்கு.
12 யூதன் என்றோ, கிரேக்கன் என்றோ, வேறுபாடில்லை; அனைவர்க்கும் ஆண்டவர் ஒருவரே அவரை நோக்கி மன்றாடுவோர் யாவர்க்கும் வள்ளன்மையுடையவர்.
13 ' ஆண்டவருடைய பெயரைச் சொல்லி மன்றாடுபவன் எவனாயினும் அவன் மீட்புப்பெறுவான் ' என்று எழுதியுள்ளதன்றோ?
14 ஆனால் தாங்கள் விசுவசியாத ஒருவரை நோக்கி எவ்வாறு மன்றாடுவர்? தாங்கள் கேள்வியுறாத ஒருவரை எவ்வாறு விசுவசிப்பர்? அறிவிப்பவன் இல்லையெனில், எவ்வாறு கேள்வியுறுவர்?
15 அனுப்பப்படாமல் எவ்வாறு அறிவிப்பர்? இதைப்பற்றியே ' நற்செய்தி அறிவிப்பவர்களின் மலரடிகள் எத்துணை அழகானவை!' என எழுதியுள்ளது.
16 ஆயினும் எல்லாருமே நற்செய்திக்குக் கீழ்ப்படியவில்லை. ஏனெனில், இசையாஸ், " ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததைக் கேட்டு எவன் விசுவசித்தான்?" என்று முறையிடுகிறார்.
17 அப்படியானால், அறிவிப்பதைக் கேட்பதால் தான் விசுவாசம் உண்டாகிறது என்பது தெளிவு; நாங்கள் அறிவிப்பதற்கோ கிறிஸ்துவின் வார்த்தையே ஊற்று.
18 ஆனால் ஒருவேளை அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்லமுடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், ' அவர்கள் குரலொலி மண்ணுலகெங்கும் பரவிற்று, அவர்கள் வார்த்தை உலகின் எல்லைகள் வரை எட்டிற்று.
19 ஆனால், இஸ்ராயேல் கண்டுபிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. முதற்கண், ' இனம் அல்லாத இனத்தின் மேல் நீங்கள் பொறாமைப்படச் செய்வேன், அறிவில்லாத மக்களைப் பார்த்து நீங்கள் எரிச்சல் கொள்ளச் செய்வேன் ' என்று மோயீசன் சொல்லுகிறார்.
20 அடுத்து, 'தேடாதவர்கள் என்னைக் கண்டடைந்தார்கள். என் விருப்பத்தை அறிய என்னை நாடாதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன் ' என்று இசையால் கூறத் துணிகிறார்.
21 ஆனால் இஸ்ராயேலரிடம், எனக்குக் கீழ்ப்படியாமல் எதிர்த்து நிற்க மக்கள் பால் நான் நாள் முழுவதும் என் கைகளை நீட்டி அழைத்தேன் என்று சொல்லுகிறார்.
அதிகாரம் 11
1 அப்படியானால் கடவுள் தம் மக்களைத் தள்ளிவிட்டார் எனலாமா? ஒருகாலும் இல்லை. நானும் ஓர் இஸ்ராயேலன் தானே. நானும் ஆபிரகாமின் வழிவந்தவன்., பென்யமீனின் குலத்தைச் சார்ந்தவன்.
2 முன்பு தேர்ந்தெடுத்த தம் மக்களைக் கடவுள் தள்ளிவிடவில்லை. எலியாசைப் பற்றிய மறைநூல் பகுதி என்ன சொல்கிறது என்பதை அறியீர்களா ? அவர் இஸ்ராயேலுக்கு எதிராக,
3 ஆண்டவரே உம்முடைய வாக்குரைப்போரைக் கொன்று போட்டனர்; உம் பீடங்களைத் தகர்த்தெறிந்தனர்; எஞ்சியிருப்பவன் நான் ஒருவனே என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர் ' என்று கடவுளிடம் மன்றாடினார்.
4 ஆனால், அவருக்குக் கிடைத்த இறைமொழி என்ன? 'பொய்த் தேவன் பாகாலின் முன் முழந்தாளிட்டுப் பணியாத ஏழாயிரம்பேர் எனக்கென்று எஞ்சியிருக்கச் செய்துள்ளேன் ' என்பதாம்.
5 இக்காலத்தில் நிகழ்ந்துள்ளதும் இதுவே. இன்றும் அருளால் தேர்ந்தெடுக்கப் பட்டவராய் எஞ்சினோர் சிலர் உள்ளனர்.
6 அருளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராயின், செயல்களை முன்னிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்பது பொருள்; செயல்களை முன்னிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அருள் அருளாகாது.
7 அப்படியானால் முடிவென்ன? தாங்கள் தேடுகிறதை இஸ்ராயேல் மக்கள் இன்னும் அடையவில்லை; அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் அடைந்தனர்; மற்றவர்களுடைய மனமோ மழுங்கிப் போயிற்று.
8 அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: ' மரத்துப்போன மனத்தைக் கடவுள் அவர்களுக்குத் தந்தார். காணாத கண்களையும் கேளாத செவிகளையும் தந்தார், இந்த நாள்வரை அவ்வாறே உள்ளனர். '
9 தாவீதும் இதைக் குறிப்பிடுகிறார்: ' அவர்கள் உண்ணும் விருந்தே அவர்களுக்குக் கண்ணியாகவும், வலைப்பொறியாகவும் ஆகட்டும், இடறலாகவும் தண்டனையாகவும் ஆகட்டும்.
10 காணமுடியாதபடி அவர்கள் கண்கள் இருளக்கடவன, என்றைக்கும் இறைவா அவர்கள் முதுகை வளைத்து விடும்.'
11 அப்படியானால், அவர்கள் கால் இடறியது விழுந்து ஒழிவதற்கா? இல்லவே இல்லை. அவர்கள் தவறியதால் புறவினத்தாருக்கு மீட்புக் கிடைத்தது; அவர்களுள் போட்டி மனப்பான்மையைத் தூண்டவே இங்ஙனம் ஆயிற்று.
12 அவர்கள் தவறியதால் உலகம் வளமுற்றதென்றால், அவர்கள் வீழ்ச்சியுற்றதால் புறவினத்தார் வளம்பெற்றனர் என்றால் யூதர்கள் முழுத் தொகையும் மனந்திரும்பும் போது அவ்வளம் இன்னும் எத்துணையோ மிகுதியாகும்.
13 புறவினத்தாராகிய உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் புறவினத்தாரின் அப்போஸ்தலன்தான்;
14 ஆனால் என் இனத்தாருள் போட்டி மனப்பான்மையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரை மீட்கக் கூடும் என்று நம்பியே அந்த அப்போஸ்தலத் திருப்பணியை மேலானதாக மதிக்கிறேன்.
15 யூதர்கள் தள்ளுண்டதால் உலகம் இறைவனோடு ஒப்புரவாயிற்று என்றால், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது பற்றி என்னென்போம்? இறந்தோர் உயிர் பெறுவதாகும்.
16 முதலில் ஒரு பிடி மாவை இறைவனுக்கு அர்ப்பணித்துப் பரிசுத்தமாக்கினால், கலவை முழுவதும் பரிசுத்தம் ஆகிறது; அவ்வாறே வேர் பரிசுத்தமாயிருந்தால் கிளைகளும் பரிசுத்தமானவையே.
17 ஒலிவ மரத்தின் கிளைகள் சில தறிக்கப்பட்டபின், காட்டொலிவ மரக்கிளையாகிய நீ அந்த ஒலிவ மரத்தில் ஒட்டப்பட்டு, அதன் வளமார்ந்த வேரோடு பங்கு பெற்றாய் எனின். அக்கிளைகளை விட உன்னை உயர்வாக எண்ணிக்கொள்ளாதே.
18 அப்படியே எண்ணிக் கொண்டாலும், நீ வேரைத் தாங்கவில்லை, வேர்தான் உன்னைத் தாங்குகிறது, என்பதை மறவாதே.
19 ' நான் ஒட்டப்படுவதற்கே கிளைகள் தறிக்கப்பட்டன' என நீ சொல்லக்கூடும்.
20 சரிதான்; அவர்கள் விசுவசியாததால் தறிக்கப்பட்டார்கள், நீயோ விசுவாசிப்பதால் நிலைத்து நிற்கிறாய்; அதனால் நீ உன்னை உயர்வாக எண்ணிக்கொள்ள இடமில்லை; அச்சந்தான் உனக்கு இருக்க வேண்டும்.
21 ஏனெனில், இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் அழிக்காமல் விடவில்லை என்றால், உன்னையும் தண்டிக்காமல் விட மாட்டார்.
22 ஆகவே கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பார். தவறி வீழ்ந்தவர்கள் மேல் ஊன்றி நிற்க வேண்டும். இல்லையேல் நீயும் தறிக்கப்படுவாய்.
23 அவர்களைப் பொருத்தமட்டில், அவர்கள் அவிசுவாசத்தை விட்டுவிட்டால், அவர்களும் ஒட்டப்படுவர். அவர்களைத் திரும்பவும் ஒட்டுவதற்குக் கடவுள் வல்லவர்.
24 ஏனெனில் காட்டொலிவ மரத்தில் இயற்கையாய் வளர்ந்த நீ வெட்டப்பட்டு, இயற்கைக்கு மாறாக நல்ல ஒலிவ மரத்தில் ஒட்டப்பட்டாயானால், இயற்கைக் கிளைகளான அவர்களைத் தாய் மரத்தில் ஒட்டுவது எவ்வளவு எளிது!
25 சகோதரர்களே, உங்கள் விவேகத்தைப் பற்றி நீங்கள் பெருமிதம் கொள்ளாதவாறு, மறைபொருள் ஒன்றை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது புறவினத்தாரின் முழுத்தொகையும் வந்தடையும் வரையில் தான் இஸ்ராயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர்.
26 இந்தத் திட்டம் நிறைவேறிய பின்னரே இஸ்ராயேல் இனம் மீட்கப்படும்; அதற்கொப்பவே மறை நூலிலும்: 'விடுதலை அளிப்பவர் சீயோனிலிருந்து வருவார், யாக்கோபின் குலத்திலிருந்து இறைப்பற்றின்மை அனைத்தையும் போக்கிவிடுவார்;
27 நான் அவர்களுடைய பாவங்களை எடுத்து விடுவேன். நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கை இதுவே ' என்று எழுதியுள்ளது.
28 நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அவர்கள் இறைவனின் வெறுப்புக்கு உரியவர்களே; அதுவும் உங்கள் நன்மைக்கே, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களுடைய முன்னோரை முன்னிட்டு, அவர்கள் இறைவனின் அன்புக்கு உரியவர்களே.
29 ஏனெனில், கடவுள் தாம் கொடுத்த வரங்களையும், விடுத்த அழைப்பையும் திருப்பி வாங்கிக் கொள்வதில்லை.
30 ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினால் நீங்கள் இரக்கம் பெற்றுக்கொண்டீர்கள்.
31 அதுபோல நீங்கள் இரக்கம் பெற்றுக்கொண்டதால் அவர்கள் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; அவர்கள் இப்படிக் கீழ்ப்படியாமல் இருப்பது, அவர்கள் இரக்கம் பெற்றுக்கொள்வதற்கே.
32 ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகக் கடவுள் அனைவரும் கீழ்ப்படியாமையின் கொடுமையால் கட்டுண்டு கிடக்கச் செய்தார்.
33 கடவுளின் அருட்செல்வம் எத்துணை மிகுதியானது! அவரின் ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய திட்டங்கள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.
34 ' ஏனெனில், ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர் யார்?
35 கைம்மாறாக ஏதாவது பெற்றுக்கொள்ள முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?
36 ஏனெனில், யாவும் அவரிடமிருந்தே வந்தன, அவராலேயே உண்டாயின, அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாகுக! ஆமென்.
அதிகாரம் 12
1 சகோதரர்களே! கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: உங்கள் உடலைக் கடவுளுக்கு உகந்த பரிசுத்த பலியாகவும், உயிருள்ள பலியாகவும் ஒப்புக் கொடுங்கள்.
2 இதுவே நீங்கள் செலுத்தவேண்டிய ஆன்மீக வழிபாடு. இவ்வுலகம் காட்டும் மாதிரியைப் பின்பற்றாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று, முற்றிலும் மாற்றம் அடைவதாக. இவ்விதம் கடவுளின் திருவுளம் எது என உய்த்துணர்வீர்கள். அப்போது எது நல்லது, எது உகந்தது, எது தலை சிறந்தது என உங்களுக்கு விளங்கும்.
3 எனக்கு அளிக்கப்பட்ட அருளை முன்னிட்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்வது: உங்களில் எவனும் தன்னைக் குறித்து, மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது; அறிவுக் கொவ்வாத முறையில் தன்னை மதியாமல், அவனவனுக்குக் கடவுள் வரையறுத்துக் கொடுத்த விசுவாசத்தின் அளவுக்கேற்றபடி தன்னை மதித்துக் கொள்ளட்டும்.
4 ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள; அந்த உறுப்புகளெல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை.
5 அதுபோலவே பலராயிருக்கிற நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உறுப்புகளாய் இருக்கிறோம்.
6 ஆயினும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு வரங்களைப் பெற்றுள்ளோம்: நாம் பெற்றது இறைவாக்கு வரமாயின், விசுவாசத்திற்கு இசைந்தவாறு அதைப் பயன்படுத்த வேண்டும்.
7 திருப்பணி வரமாயின், பணிபுரிய வேண்டும்;
8 போதிப்பவன் போதிப்பதிலும், ஊக்கமூட்டுபவன் ஊக்கந் தருவதிலும் ஈடுபடுக. தனக்குள்ளதைக் கொடுப்பவன் வள்ளன்மையும், தலைமையாய் உள்ளவன் அக்கறையும், இரக்கச் செயல்களில் ஈடுபடுபவன் முகமலர்ச்சியும் காட்டுக.
9 உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக. தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக் கொண்டிருங்கள்.
10 சகோதரர்க்குரிய முறையில் ஒருவர்க்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள்.
11 ஊக்கத்தளராதிருங்கள்; ஆர்வம் தணியாதிருங்கள்: நீங்கள் ஊழியஞ் செய்வது ஆண்டவருக்கே.
12 நம்பிக்கை கொண்டவர்களாய் மகிழ்ச்சியோடு இருங்கள்; வேதனையில் மன ஊறுதியோடு இருங்கள்; செபத்தில் நிலையாய் இருங்கள்.
13 வறுமையுற்ற இறை மக்களோடு உங்களுக்குள்ளதைப் பகிர்ந்துகொள்ளுங்கள். விருந்தோம்பலில் கருத்தாயிருங்கள்.
14 உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி, கூறுங்கள், சபிக்க வேண்டாம்.
15 மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள்.
16 உங்களுக்குள் ஒன்றுபட்டு வாழுங்கள். உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்ந்தவர்களோடு அன்பாய்ப் பழகுங்கள். உங்களை நீங்களே அறிவாளிகளாய்க் கருதாதீர்கள்.
17 பழிக்குப் பழி வாங்காதீர்கள். மனிதர் அனைவர் முன்னிலையிலும் நன்மதிப்பை இழக்காதபடி பார்த்துக்கொள்ளுளங்கள்.
18 கூடுமானால், உங்களால் இயன்ற அளவு எல்லாரோடும் நட்பமைதியுடன் வாழுங்கள்.
19 அன்புக்குரியவர்களே! நீங்களே பழி வாங்காதீர்கள், அதை இறைவனின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். ஏனெனில், ' பழிவாங்குவது என் உரிமை; நானே பதிலுக்குப் பதில் செய்வேன் என்கிறார் ஆண்டவர்' என்று எழுதியுள்ளது.
20 நீயோ ' உன் பகைவன் பசியாய் இருந்தால். அவன் பசியை ஆற்று; தாகமாய் இருந்தால் அவன் தாகத்தை தணி. ஏனெனில், இவ்வாறு செய்வதால், அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்.'
21 தீமை உன்னை வெல்ல விடாதே, நன்மையால் தீமையை வெல்க.
அதிகாரம் 13
1 ஆளும் அதிகாரம் கொண்டவர்களுக்கு எவனாயினும் அடங்கியிருப்பானாக. ஏனெனில் கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை; இப்பொழுதுள்ள ஆட்சி பீடங்களைக் கடவுளே நிறுவினார்.
2 ஆகையால் அதிகாரத்தை எதிர்த்து நிற்பவன் கடவுளின் நிறுவனத்தையே எதிர்த்து நிற்கிறான். அவ்வாறு எதிர்த்து நிற்பவர்கள், தங்கள் மீது தண்டனைத் தீர்ப்பைத் தாங்களே வருவித்துக் கொள்கிறார்கள்.
3 எனெனில் நற்செயல் செய்பவன் ஆள்வோருக்கு அஞ்சவேண்டியதில்லை. தீச்செயல் செய்பவனே அஞ்சவேண்டும். அதிகாரிகளுக்கு அச்சமின்றி வாழ விரும்பினால், நன்மை செய். அவர்களிடமிருந்து உனக்குப் பாராட்டும் கிடைக்கும்.
4 ஏனெனில் அவர்கள் உனக்கு நன்மை செய்வதற்கென்றே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பணியாளர்கள். ஆனால், நீ தீமை செய்தால், அஞ்சவேண்டியது தான். அவர்கள் கையில் தண்டிக்கும் அதிகாரம் வீணாக இல்லை; தீமை செய்பவளைப் பழிவாங்கக் கடவுளால் குறிக்கப்பட்ட ஏவலர்கள் அவர்கள்; அவரது தண்டனையை அவன்மேல் வரச்செய்பவர்கள்.
5 ஆகவே அந்தத் தண்டனையை நினைத்து மட்டுமன்று, மனச்சாட்சியின் பொருட்டும் அடங்கியிருத்தல் வேண்டும்,.
6 இதற்காகவே நீங்கள் வரிகள் செலுத்துகிறீர்கள். ஏனெனில் அரசினர் தங்கள் பணியில் ஈடுபடும்போது கடவுளுக்கே தொண்டு செய்கின்றனர்.
7 ஆகையால், அவரவர்க்குத் செலுத்த வேண்டியதை அவரவர்க்குச் செலுத்துங்கள். வரிப்பணம் வாங்குவோருக்கு வரிப்பணமும், தீர்வைக் கேட்போருக்குத் தீர்வையும் செலுத்துங்கள். அஞ்ச வேண்டியவர்களுக்கு அஞ்சுங்கள். மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள்.
8 யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்புசெய்வது நீங்கள் செலுத்தவேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்,. பிறரிடத்தில் அன்பகூர்பவன் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவன் ஆகிறான்.
9 ஏனெனில், 'விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, இச்சிக்காதே 'என்னும் கட்டளைகளும் வேறு எந்தக் கட்டளையும் 'உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான் மீது அன்பு காட்டுவாயாக' என்னும் ஒரே கட்டளையில் சுருக்கமாய் அடங்கியுள்ளன.
10 அன்பு பிறர்க்குத் தீமை செய்யாது. ஆகவே. திருச்சட்டத்தின் நிறைவு அன்பே.
11 இறுதிக்காலம் இதுவே என நீங்கள் அறிந்தவர்களாய் இப்படி நடந்து கொள்ளுங்கள்; விழித்தெழும் நேரம் ஏற்கனவே வந்து விட்டது. ஏனெனில் நாம் விசுவசிக்கத் தொடங்கிய போது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.
12 இரவு முடியப்போகிறது. பகல் அண்மையிலுள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக.
13 பகலில் ஒழுகுவதுபோல் கண்ணியமாக நடந்து கொள்வோமாக. களியாட்டம், குடிவெறி, காமம், ஒழுக்கக்கேடு, சண்டை, பொறாமை, இவற்றையெல்லாம் தவிர்த்து,
14 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள். வலுவற்ற உங்கள் இயல்பைப் பேணுபவர்களாய், தீய இச்சைகளுக்கு இடங்கொடாதீர்கள்.
அதிகாரம் 14
1 விசுவாசத்தில் எவனாவது வலுவற்றவனாய் இருந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவன் எழுப்பும் கேள்விகளைப்பற்றி வாதாடாதீர்கள்.
2 விசுவாசத்தில் உறுதியாய் உள்ள ஒருவன் எவ்வகை உணவையும் உண்ணலாம் எனக் கருதுகிறான். விசுவாசத்தில் வலுவில்லா வேறொருவனோ மரக்கறி உணவை மட்டும் உண்கிறான்.
3 புலால் உண்பவன், உண்ணாதவனை இழிவாக எண்ணலாகாது; புலால் உண்ணாதவன் உண்பவனைக் குறித்துத் தீர்ப்பிடலாகாது. ஏனெனில் கடவுள் அவனையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
4 வேறொருவருடைய வேலையாளைக் குறித்துத் தீர்ப்பிட நீ யார்? அவன் நிலையாய் நின்றாலும் தவறி விழுந்தாலும், அதைப்பற்றித் தீர்ப்பிடுவது அவனுடைய தலைவரே. ஆனால் அவன் நிலையாகத் தான் இருப்பான். ஏனெனில் ஆண்டவர் அவனை நிலைநிறுத்த வல்லவர்.
5 ஒருநாள் மற்றொரு நாளைவிடச் சிறந்ததென ஒருவன் கருதுகிறான்; ஒருவன் எல்லா நாளையும் ஒரு படியாகவே எண்ணுகிறான். ஒவ்வொருவனும் தன் மனத்தில் செய்துகொண்ட உறுதியான முடிவின்படி நடக்கட்டும்.
6 மேற்சொன்னவாறு நாளைக் கணிப்பவன் ஆண்டவருக்காகவே அப்படிச் செய்கிறான். புலால் உண்பவனும் ஆண்டவருக்காக உண்கிறான்; கடவுளுக்கு நன்றி கூறுகிறான் அன்றோ? புலால் உண்ணாதவனும் ஆண்டவருக்காகவே உண்ணாதிருக்கிறான்; அவனும் கடவுளுக்கு நன்றி கூறுகிறான்.
7 ஏனெனில், நம்முள் எவனும் தனக்கென்று வாழ்வதில்லை. தனக்கென்று சாவதில்லை.
8 வாழ்ந்தாலும் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம், செத்தாலும் ஆண்டவருக்கென்றே சாகிறோம். ஆகவே வாழ்ந்தாலும் செத்தாலும் நாம் ஆண்டவர்க்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
9 ஏனெனில் கிறிஸ்து இறந்ததும் உயிர்த்ததும் இறந்தோர் மீதும் வாழ்வோர் மீதும் ஆட்சி செலுத்தவே.
10 அப்படியிருக்க, நீ ஏன் உன் சகோதரனைக் குறித்துத் தீர்ப்பிடுகிறாய்? நீ உன் சகோதரனை ஏன் இழிவாகக் கருதுகிறாய்? நாம் அனைவரும் கடவுளின் நீதியிருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா?
11 ஏனெனில், ''ஆண்டவர் சொல்வது: என் உயிர்மேல் ஆணை, என் முன் எல்லாரும் மண்டியிடுவர், எல்லா நாவுமே கடவுளைப் புகழ்ந்தேத்தும்' என்று எழுதியுள்ளது.
12 ஆகவே., நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பான்.
13 ஆகையால், இனி ஒருவரைக் குறித்து ஒருவர் தீர்ப்பிடுவதை விட்டுவிடுவோமாக. மாறாக, சகோதரனுக்கு இடைஞ்சலாகவோ. இடறலாகவோ இருக்கமாட்டோம் எனத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.
14 தன்னிலேயே எப்பொருளும் மாசுபட்டதன்று; ஆண்டவர் இயேசுவுக்குள் வாழும் எனக்கு இதைப்பற்றி ஐயமே இல்லை. ஆனால் ஒரு பொருள் மாசுபட்டது என ஒருவன் கருதினால், அது அவனுக்கு மாசுபட்டதாகும்.
15 நீ உண்ணும் உணவு உன் சகோதரன் மனத்தைப் புண்படுத்தினால், நீ அன்பு நெறியில் நடப்பவன் அல்ல. அற்ப உணவை முன்னிட்டு அவனை அழிவுறச் செய்யாதே; அவனுக்காகக் கிறிஸ்து உயிர்துறக்க வில்லையா?
16 ஆகவே, உங்களுக்கு நன்மையாய் இருப்பது பிறருடைய பழிச் சொல்லுக்கு இடந்தராதிருப்பதாக!
17 ஏனெனில் கடவுளின் அரசு உணவிலும் பானத்திலும் அடங்கியில்லை; கடவுளின் அரசு என்பது நீதியும், அமைதியும், பரிசுத்த ஆவியில் துய்க்கும் மகிழ்ச்சியுமே.
18 இத்தகைய உள்ளத்தோடு கிறிஸ்துவுக்கு ஊழியஞ் செய்கிறவனே, கடவுளுக்கு உகந்தவன். மக்கள் மதிப்புக்கு உரியவன்.
19 ஆகையால், அமைதிக்கு வழியாய் இருப்பதை நாடுவோமாக; ஒருவர் ஒருவர்க்கு ஞானவளர்ச்சி தருவதைக் கடைப்பிடிப்போமாக.
20 உணவின் பொருட்டுக் கடவுளின் வேலையைத் தகர்க்கத் துணியாதே; யாவும் தூயவைதான்; ஆனால் இடைஞ்சலுக்கு இடந்தருமானால், உண்பவனுக்கு யாவும் தீயவையே.
21 உன் சகோதரனுக்கு யாவும் தீயவையே. உன் சகோதரனுக்கு இடைஞ்சலாயிருக்குமாயின், புலால் உண்பதையோ, மது குடிப்பதையோ அது போன்ற வேறெதையும் செய்வதையோ செய்யாமல் விடுவது நல்லது.
22 விசுவாசத்தால் வரும் உறுதியான மனநிலை உனக்கிருந்தால், அதை உன்னோடு வைத்துக் கொள்; அது கடவுளுக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும்., செய்வது நல்லதென முடிவு செய்த பின், அதைச் செய்யும் போது மனச்சாட்சியின் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவன் பேறு பெற்றவன்.
23 நல்லதோ கெட்டதோ என்ற தயக்கத்தோடு ஒருவன் உண்பானாகில் அவன் தண்டனைத் தீர்ப்புப் பெற்றுவிட்டான். ஏனெனில், அச்செயல் விசுவாசத்தால் வரும் உறுதியான மனநிலையோடு செய்யப்படாததெல்லாம் பாவமே.
அதிகாரம் 15
1 மன வலிமை உள்ளவர்களாகிய நாம் வலிமைபெற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும்.
2 நமக்கு உகந்ததையே தேடலாகாது. பிறர்க்கு ஞான வளர்ச்சி தரும் நன்மை உண்டாகும்படி. நம்முள் ஒவ்வொருவனும் அயலார்க்கு உகந்தவனாய் இருத்தல் வேண்டும்.
3 ஏனெனில், கிறிஸ்து தமக்கு உகந்ததையே தேடவில்லை. 'உம்மீது வசை கூறினவர்களின் வசைமொழிகள் என்மேல் விழுந்தன 'என்ற மறைநூல் வாக்கு அவரிடம் நிறைவேறிற்று.
4 முற்காலத்தில் எழுதப்பட்ட மறைநூல் வாக்குகள் நமக்குப் போதனையாகவே எழுதப்பட்டன; மறைநூல்கள் தரும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நமக்கு நம்பிக்கை உண்டாகவேண்டும் என்பதே அவற்றின் நோக்கம்.
5 நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒரு வாய்ப்பட மகிமைப்படுத்துமாறு,
6 கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக் கேற்ப ஒரே உள்ளத்தினராய் இருக்கும்படி பொறுமைக்கும் ஆறுதலுக்கும் ஊற்றாகிய கடவுள் உங்களுக்கு அருள் புரிவாராக.
7 ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டதுபோல், நீங்களும் கடவுளின் மகிமைக்காக ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
8 முன்னோர்க்குச் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கடவுள் உண்மை உள்ளவர் எனக் காட்டவும், புறவினத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரை மகிமைப் படுத்தவுமே கிறிஸ்து விருத்தசேதனமுள்ளோருக்குப் பணியாளரானார்.
9 இதுவே என் துணிபு! இப்புறவினத்தாரைக் குறித்து மறை நூலிலும், ' ஆகையால் புறவினத்தார் நடுவில் உம்மைப் புகழ்வேன், உம்முடைய பெயருக்குப் பண்பாடுவேன்.' என எழுதியுள்ளது. இன்னும்,
10 ' புறவினத்தாரே, அவருடைய மக்களுடன் சேர்ந்து நீங்களும் அகமகிழுங்கள் ' என்றுள்ளது. மேலும்,
11 ' புறவினத்தாரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள் ' எல்லா இனத்தவரும் அவரைப் புகழ்ந்தேத்துவார்களாக ' என்று கூறுகிறது. இன்னும் இசையால் கூறுகிறார்:
12 ' ஈசாயின் குலக்கொழுந்து ஒருவர் வருவார், புறவினத்தார்க்குத் தலைவராய் அவர் எழுவார், புறவினத்தார் அவர் மீது நம்பிக்கை வைப்பர் '.
13 பரிசுத்த ஆவியின் வல்லமையால் உங்களில் நம்பிக்கை பெருகும்படி, நம்பிக்கை தரும் கடவுள், விசுவாசத்தால் உண்டாகும் எல்லா வகையான மகிழ்ச்சியாலும் அமைதியாலும் உங்களை நிரப்புவாராக.
14 என் சகோதரர்களே! நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும், ஒருவர்க்கு ஒருவர் அறிவு புகட்டக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.
15 ஆயினும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில் இக்கடிதத்தின் சில பகுதிகளில் மிகத் துணிவுடன் எழுதியுள்ளேன்; நான் கடவுளின் தனிப்பட்ட அருளைப் பெற்றவன் என்பதால் தான் அவ்வாறு எழுதினேன்.
16 அந்த அருள் தான் என்னைப் புறவினத்தாருக்காகக் கிறிஸ்து இயேசுவின் திருத்தொண்டனாக்கிற்று. புறவினத்தார் பரிசுத்த ஆவியால் அர்ச்சிக்கப் பட்டதும், இறைவனுக்கு உகந்ததுமான காணிக்கை ஆகும்படி கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே நான் செய்யும் திருத்தொண்டு; அதுவே என் குருத்துவப்பணி.
17 இதற்காகக் கிறிஸ்து இயேசுவுக்குள் நான் பெருமை பாராட்டிக் கொள்ள இடமுண்டு.
18 புறவினத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக் கிறிஸ்து என் வழியாய்ச் சொல்லாலும் செயலாலும், அருங்குறிகள் அற்புதங்களின் வல்லமையாலும், தேவ ஆவியின் வல்லமையாலும் செய்து முடித்தவற்றைத் தவிர,
19 வேறெதைப்பற்றியும் பேச நான் துணியேன். இவற்றின் விளைவாக, யெருசலேமில் தொடங்கி, அதனை மையமாகக் கொண்டு, இல்லிரிக்கம் நாடு வரை எங்கணும் சுற்றிக் கிறிஸ்துவின் நற் செய்தியை அறிவிக்கும் பணியை முடித்து விட்டேன்.
20 கிறிஸ்துவின் பெயர் கேள்விப் படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே பெருமையெனக் கருதினேன்; ஏனெனில், வேறொருவர் இட்ட அடிப்படை மீது கட்டிடம் எழுப்ப நான் விரும்ப வில்லை.
21 ஆனால் எழுதியுள்ளபடி: ' அவரைப்பற்றி அறிவிக்கப்படாதவர்கள் காண்பார்கள், அவரைப்பற்றிக் கேள்விப்படாதவர்கள் உணர்வார்கள். '
22 ஆகையால், நான் உங்களிடம் வரப் பல முறை நினைத்தும், அது தடைப்பட்டது.
23 இப்பொழுதோ இந்தப் பகுதிகளில் எனக்கு இனி வேலையில்லை. மேலும் ஸ்பெயின் நாட்டுக்குப் போகும் போது உங்களைக் காணலாம் என்கிற பேரவா கடந்த பல ஆண்டுகளாக எனக்கு இருந்து வருகிறது;
24 எனவே, போகும் வழியில் நான் உங்களைக் கண்டு, சில நாட்களேனும் உங்களோடு இருந்து, மனநிறைவு பெற்றபின், என்னை அங்கிருந்து நீங்கள் வழி அனுப்புவீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.
25 ஆனால் இறைமக்களுக்கென நான் மேற்கொண்ட பணியை முன்னிட்டு இப்போது யெருசலேமுக்குப் புறப்படுகிறேன்.
26 ஏனெனில், யெருசலேமில் இருக்கும் இறை மக்களிடை உள்ள ஏழைகளுக்காகச் சிறிது பொருளுதவி செய்ய மக்கெதோனியரும் அக்காயா நாட்டினரும் முன் வந்தனர்.
27 ஆம், தாங்களாகவே முன் வந்தனர்; யெருசலேமில் உள்ள இறைமக்களுக்கு உண்மையில் இவர்கள் கடன்பட்டவர்களே. ஏனெனில் ஆவியைச் சார்ந்த கொடைகளில் புறவினத்தார் அவர்களின் பங்காளிகள் ஆயினரெனில், உடலைச் சார்ந்த தேவைகளில் அவர்களுக்குத் தொண்டு செய்ய இவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லரோ?
28 தண்டல் செய்த தொகையை அவர்களிடம் நானே பொறுப்பாய் ஒப்படைத்து, என் வேலை முடிந்த பின்னர் உங்கள் நகர் வழியாக ஸ்பெயினுக்குப் போவேன்.
29 உங்களிடம் வரும் போது, கிறிஸ்துவின் நிறை அருளாசியோடு வருவேன் என்பது உறுதி.
30 சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும் ஆவியானவர் ஏவும் அன்பை முன்னிட்டும் நான் உங்களைக் கேட்டுக்கொள்வது: எனக்காகக் கடவுளிடம் செபித்து, என் போராட்டத்தில் எனக்குத் துணை செய்யுங்கள்.
31 யூதேயாவில் விசுவாசத்தை ஏற்காதவர்களிடமிருந்து இறைவன் என்னை விடுவிக்கும்படியும், நான் யெருசலேமில் செய்யப்போகும் திருப்பணி இறைமக்களுக்கு ஏற்றதாய் இருக்கும்படியும்,
32 இவ்வாறு கடவுளின் திருவுளத்தால் மகிழ்ச்சியுடன் நான் உங்களிடம் வரும்போது என் மனங்குளிரும்படியும் எனக்காக மன்றாடுங்கள். சமாதானத்திற்கு ஊற்றாகிய கடவுள் உங்கள் அனைவரோடும் இருப்பாராக! ஆமென்.
அதிகாரம் 16
1 நாம் சகோதரியாகிய பெபேயாளை அன்போடு ஏற்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்; இப்பெண்மணி கெங்கிரோயாவில் இருக்கும் சபைக்குத் திருப்பணி புரிகிறவர்.
2 இறை மக்களுக்கு ஏற்றவாறு ஆண்டவரின் பெயரால் அவரை வரவேற்று, அவருக்கு உங்கள் உதவி எதில் தேவைப்படுகிறதோ அதில் பலருக்குத் துணை செய்திருக்கிறார்; எனக்கும் உதவி செய்திருக்கிறார்.
3 கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடனுழைப்பாளிகளான பிரிஸ்காளுக்கும் ஆக்கிலாவுக்கும் என் வாழ்த்து.
4 இவர்கள் என் உயிரைக் காக்கத் தங்கள் தலையைக் கொடுக்கவும் முன் வந்தனர்; அவர்களுக்கு நான் நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்; நான் மட்டுமன்று, புறவினத்தார் நடுவில் உள்ள சபைகள் அனைத்தும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன.
5 அவர்கள் வீட்டிலிருக்கும் சபைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.
6 என் அன்புக்குரிய எப்பைனத்துக்கும் வாழ்த்துக் கூறுங்கள். இவரே ஆசியாவிலிருந்து கிடைத்த முதற்கனி. உங்களுக்காக மிக உழைத்த மரியாளுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.
7 என் உறவினரும் உடன் கைதிகளுமான அந்திரோனீக்கு, யூனியா ஆகியோருக்கும் என் வாழ்த்துகள்; அப்போஸ்தலர்களுள் இவர்கள் பேர்பெற்றவர்கள்; இவர்கள் எனக்கு முன் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.
8 ஆண்டவருக்குள் என் அன்பார்ந்த அம்பிலியாத்துக்கு என் வாழ்த்துகள்.
9 கிறிஸ்துவுக்குள் என் உடனுழைப்பாளியான உர்பானுக்கும், என் அன்புள்ள ஸ்தாக்கிக்கும் வாழ்த்து சொல்லுங்கள்.
10 அப்பெல்லேயுக்கும் என் வாழ்த்து; அவர் ஓர் உண்மையான கிறிஸ்தவர். அரிஸ்தோபூலு குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவியுங்கள்.
11 என் உறவினரான எரோதியோனுக்கு வாழ்த்து சொல்லுங்கள். நர்க்கீசு குடும்பத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு என் வாழ்த்து, ஆண்டவருக்குள் உழைக்கும் திரிபோனாளுக்கும், திரிபோசாளுக்கும் என் வாழ்த்து.
12 அன்புள்ள பெர்சியாளுக்கும் என் வாழ்த்துகள். அவர்கூட ஆண்டவருக்குள் மிக உழைத்தார்.
13 ஆண்டவருக்குள் தேர்ந்துகொள்ளப்பட்ட ரூபுக்கும், அவர் தாயாருக்கும் வாழ்த்து கூறுங்கள். அவருடைய அன்னை எனக்கும் அன்னை போன்றவர்.
14 அசிங்கிரீத்து, பிலெகோன்,. எர்மே, பத்திரொபா, எர்மா ஆகியோருக்கும் அவர்களோடு இருக்கும் சகோதரர்களுக்கும் வாழ்த்து தெரிவியுங்கள்.
15 பிலோலோகு, யூலியாள், ஒலிம்பா, நேரேயா, அவருடைய சகோதரி, இவர்களுக்கும் இவர்களோடு இருக்கும் இறைமக்கள் எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள். பரிசுத்த முத்தங் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்.
16 கிறிஸ்துவின் எல்லாச் சபைகளும் உங்களுக்கு வாழ்த்து கூறுகின்றன.
17 சகோதரர்களே, நான் உங்களை வேண்டுவது: நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறி, பிளவுகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர் மேல் கண்ணாயிருங்கள்.
18 அவர்களை விட்டு விலகுங்கள். ஏனெனில் இத்தகையோர் நம் ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கு அடிமைகள் அல்லர், தங்களுடைய வயிற்றுக்கே அடிமைகள். இவர்கள் தங்கள் இனிய சொற்களாலும், நயமான மொழிகளாலும் கபடமற்றவர்களின் உள்ளங்களை வஞ்சிக்கிறார்கள்.
19 உங்கள் கீழ்ப்படிதல் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. அது எனக்கு மகிழ்ச்சியே. நீங்கள் நன்மை செய்வதில் ஞானிகளாகவும், தீமை செய்வதில் பேதைகளாகவும் இருக்கவேண்டுமென விழைகிறேன்.
20 சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் சாத்தானை உங்கள் காலடிகளின் கீழ் விரைவில் நசுக்கிப் போடுவார். நம் ஆண்டவராகிய இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!
21 என் உடனுழைப்பாளியான தீமோத்தேயுவும், என் உறவினர்களான லூகியு. யாசோன்., சொசிபத்தரு ஆகியோரும் உங்களுக்கு வாழ்த்து கூறுகின்றனர்.
22 இந்தக் கடிதத்தை எழுதிக்கொடுத்த தெர்த்தியுவாகிய நான் ஆண்டவருக்குள் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன்.
23 நான் தங்கவும் சபையினர் கூடவும் தம் வீட்டில் இடமளிக்கும் காயு உங்களுக்கு வாழ்த்து சொல்கிறார்.
24 நகரத்தின் பொருளாளரான எரஸ்தும், சகோதரனாகிய குவர்த்துவும். உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.
25 ஊழி ஊழிக் காலமாக மறைவாயிருந்து இப்பொழுது வெளியாக்கப்பட்டு முடிவில்லாக் கடவுளின் திட்டத்திற்கொப்ப,
26 புறவினத்தார் அனைவரும் கீழ்ப்படிந்து விசுவசிக்குமாறு இறைவாக்குகளின் மூலமாய் அறிவிக்கப்பட்ட மறைபொருளை வெளிப்படுத்தும் என் நற்செய்தியின்படியும்,
27 இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தூதுரையின்படியும், உங்களை உறுதிப்படுத்த வல்லவரும் ஞானமே உருவும் ஆன கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மகிமை உண்டாவதாக! ஆமென்.