அதிகாரம் 01
1 யோசுவா இறந்தபின் இஸ்ராயேல் மக்கள் ஆண்டவனிடம் வேண்டி, "கானானையரை எதிர்த்து எமக்கு முன் சென்று போரை நடத்துபவர் யார்?" என்று கேட்டனர்.
2 அப்போது ஆண்டவர், "யூதா போகட்டும். இதோ, நாட்டை அவன் கைவயப்படுத்தினோம்" என்றார்.
3 யூதா தன் சகோதரன் சிமியோனிடம், "நீ என் பக்கம் இருந்து என்னுடன் கானானையரை எதிர்த்துப் போர் புரிய வா. நானும் உன் பக்கம் இருந்து உன் எதிரிகளை எதிர்ப்பேன்" என்றார். அப்படியே சிமியோனும் அவனோடு சென்றான்.
4 யூதா படையுடன் செல்லவே, கானானையரையும் பெரேனசயரையும் கடவுள் அவனுக்குக் கையளித்தார். அவர்கள் பெசேக் நகரில் பதினாயிரம் பேரைக் கொன்றனர்.
5 பெசேக்கில் அதொனிபெசேக்கையும் கண்டு அவனையும் எதிர்த்துக் கானானையரையும் பெரேசையரையும் முறியடித்தனர்.
6 அதொனிபெசேக் ஓடிப்போக, அவனை விரட்டிப் பிடித்து அவன் கைகால் விரல் நுனிகளைத் துண்டித்தனர்.
7 அதொனிபெசேக், "எழுபது அரசர்கள் கைகால் விரல் நுனிகள் துண்டிக்கப்பட்டு என் மேசையிலிருந்து சிந்தினவற்றை உண்டனர். நான் பிறருக்குச் செய்துள்ளபடியே இறைவனும் எனக்குச் செய்துள்ளார்" என்றான். அவர்கள் அவனை யெருசலேமுக்குக் கொணர்ந்தனர். அவன் அங்கே இறந்தான்.
8 யூதாவின் மக்கள் யெருசலேம் நகரைத் தாக்கி அதைப் பிடித்தனர். மக்களை வாளால் வெட்டி நகர் முழுவதையும் தீக்கு இரையாக்கினர்.
9 அதன்பின் அவர்கள் போய், மலைப்பகுதிகளிலும் தெற்குப்புற ஊர்களிலும், சமவெளிகளிலும் வாழ்ந்து வந்த கானானையரோடு போர்தொடுத்தனர்.
10 பிறகு பழைய காரியாத் அர்பே என்ற எபிரோனில் வாழ்ந்து வந்த கானானையரை எதிர்த்துச் சென்று செசாயி, அயிமான், தோல்மாயி என்பவர்களை யூதா வென்றான்.
11 அங்கிருந்து புறப்பட்டு, காரியத்சேபேர், அதாவது கல்விமாநகர் என்ற பழம் பெயர் கொண்ட தாபிரின் குடிகளைத் தாக்கினான்.
12 அப்போது காலேப், "காரியாத்சேபேர் நகரைப் பிடித்து அழிப்பவனுக்கு அக்சாம் என்ற என் மகளை மணமுடித்துக் கொடுப்பேன்" என்றான்.
13 காலேபின் தம்பி செனேசின் மகன் ஒத்தேனியேல் அந்நகரை பிடிக்கவே, அக்சாம் என்ற தன் மகளைக் காலேப் அவனுக்கு மணமுடித்து வைத்தான்.
14 அவள் பயணம் போகையில் அவள் கணவன் அவளை நோக்கி, அவள் தந்தையிடம் ஒரு வயல் கேட்கும்படி தூண்டினான். அவள் கழுதை மேலமர்ந்து பெரு மூச்சுவிட்ட போது காலேப் அவளிடம், "என்னவேண்டும்?" என்று கேட்டான்.
15 அவளோ, "எனக்கு உமது நல்லாசி வேண்டும், வறண்ட நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்வளமான ஒரு நிலத்தையும் தாரும்" என்றாள். காலேப் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலுமிருந்து நீர் வளமுள்ள நிலத்தை அவளுக்குக் கொடுத்தான்.
16 மோயீசனின் உறவினனான சீனோயியின் மக்கள் யூதாவின் மக்களுடன் பனைமர ஊரிலிருந்து புறப்பட்டு அவனது பங்குக்குக் கிடைத்த ஆராத் ஊருக்குத் தெற்கேயுள்ள பாலைநிலத்திற்கு வந்து அங்குக் குடியேறினர்.
17 யூதா தன் சகோதரன் சிமியோனோடு சென்று, இருவரும் சேர்ந்து சேபாத் ஊரில் வாழ்ந்த கானானையர் மேல் பாய்ந்து அவர்களைக் கொன்றனர். அவ்வூருக்கு ஓர்மா அல்லது சாபம் என்ற பெயர் உண்டாயிற்று.
18 அதன் பிறகு, யூதா காஜாவையும் அதன் சுற்றுப்புறங்களையும், அஸ்காலோனையும், அக்காரோனையும் அதன் சுற்றெல்லைகளையும் கைப்பற்றினான்.
19 ஆண்டவர் தன் பக்கம் இருந்ததால் யூதா மலைநாடுகளைத் தனதாக்கிக் கொண்டான். ஆனால் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வந்தோரை அவன் அழிக்க முடியவில்லை. ஏனெனில் நீண்ட வாள் பொருத்தப்பட்ட தேர்கள் பல அவர்களுக்கு இருந்தன.
20 மோயீசன் கட்டளையிட்டபடி காலேபுக்கு எபிரோனைக் கொடுக்க, அவன் அதில் வாழ்ந்த ஏனாக்கின் மூன்று புதல்வரையும் அழித்தான்.
21 பெஞ்சமின் மக்கள் யெருசலேமில் வாழ்ந்த ஜெபுசேயரை அழிக்கவில்லை. ஜெபுசேயர் பெஞ்சமின் மக்களோடு யெருசலேமில் இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள்.
22 சூசையின் குடும்பமும் பேத்தல் ஊருக்குச் சென்றது. ஆண்டவரும் அவர்களோடிருந்தார்.
23 எப்படியென்றால் லூசா என்று முன்பு கூறப்பட்ட நகரை அவர்கள் முற்றுகையிட்ட போது,
24 அந்நகரினின்று வெளியேறின ஒரு மனிதனைக் கண்டு, அவனை நோக்கி, "நகருக்குள் நுழைய வழி காட்டினால், உன்னைக் காப்பாற்றுவோம்" என்றனர்.
25 அவன் வழி காண்பித்தான்; அவர்கள் நகரை வாள்முனைக்குப் பலியிட்டனர். ஆனால் அவனையும் அவன் உறவினரையும் ஒன்றும் செய்யவில்லை.
26 அவனோ தப்பியோடி ஏத்திம் நாடு சென்று அங்கு ஒரு நகரைக் கட்டி எழுப்பி அதற்கு லூசா என்று பெயரும் இட்டான். அது இன்று வரை அப்படியே அழைக்கப்பட்டு வருகிறது.
27 மானோசேயும் பெத்சான், தானாக் நகர்களையும் சிற்றூர்களையும், தோர், ஜேபிளாம் மகேதோ நகர்க்குடிகளையும் சிற்றூர்களையும் அழிக்கவில்லை., கானானையரும் அவர்களோடு குடியிருக்கத் தொடங்கினர்.
28 இஸ்ராயேலரும் வலிமை பெற்ற பின்னர் அவர்களைத் தங்களுக்குக் கப்பம் கட்டச் செய்தனர்; ஆனால் அவர்களை அழிக்கவில்லை.
29 எபிராயீமும் காசேரில் வாழ்ந்த கானானையரை அழிக்காது அவர்களுடன் வாழ்ந்தான்.
30 சபுலோன், கேத்திரோன், குடிகளையும் நாலோப் நகரையும் அழிக்கவில்லை; ஆனால் கானானையர் அவனோடு வாழ்ந்து அவனுக்குக் கப்பங்கட்டி வந்தனர்.
31 ஆசேரும், ஆக்கோ, சீதோன், அலாப், அக்காசிப், எல்பா, ஆபெக், ரோகோப் நகரத்தாரைக் கொல்லாது,
32 அந்நாடுகளில் வாழ்ந்து வந்த கானானையர் மத்தியில் வாழ்ந்தான், அவன் அவர்களைக் கொல்லவில்லை.
33 நெப்தலியும், பெத்சாமெஸ், பெத்தானாத் ஊராரையும் அழிக்கவில்லை. அங்கு வாழ்ந்த கானானையருடன் அவனும் வாழ்ந்து வந்தான்; பெத்சாமித்தாரும் பெத்தானித்தாரும் அவனுக்குக் கப்பங்கட்டி வந்தனர்.
34 அமோறையரோ தான் மக்களைச் சமவெளியில் இறங்க விடாது தடுத்து மலைகளிலேயே நெருக்கினர்.
35 அயலோன், சாலேபிமிலுள்ள ஆரோஸ் அதாவது களிமண் என்ற மலையில் வாழ்ந்து வந்தான். சூசை குடும்பத்தார் மிக்க வலிமையுற்ற போது அமோறையரைத் தங்களுக்குக் கப்பம் கட்டும்படி செய்தனர்.
36 அமோறையர் நாட்டின் எல்லைகளாவன: விருச்சிக மலையும் பேத்ரா மலைத்தொடரும் மேட்டு நிலமுமாகும்.
அதிகாரம் 02
1 கல்கலாவினின்று ஆண்டவருடைய தூதர் அழுகிறவர்களின் இடத்திற்குப் போய், "எகிப்து நாட்டினின்று உங்களை மீட்டு, உங்கள் முன்னோர்க்கு நான் வாக்களித்த நாட்டில் சேர்த்தேன். மேலும், உங்களோடு செய்த உடன்படிக்கையை ஒருபோதும் மீறேன் என்றும் வாக்களித்தேன்,
2 ஆனால், அதனை முன்னிட்டு நீங்கள் இந்நாட்டாரோடு யாதொரு உடன்படிக்கையும் செய்யக் கூடாது என்றும், அவர்களின் பலிபீடங்களைத் தகர்த்துடைக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தேன். இப்படி நான் கட்டளையிட்டிருந்த போதிலும் நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. ஏன் இப்படிச் செய்தீர்கள்?
3 எனவே உங்களுக்கு முன்பாக நான் அவர்களை அழிக்கமாட்டேன். அவர்களே உங்கள் எதிரிகளாயும், அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கேடுமாய் இருப்பார்கள்" என்றார்.
4 ஆண்டவருடைய தூதர் இஸ்ராயேலர் எல்லாரும் கேட்க இச் சொற்களைக் கூறின போது அவர்கள் கூக்குரலிட்டு அழுதார்கள்.
5 அவ்விடத்திற்கு அழுகிறவர்கள் இடம் அல்லது கண்ணீரின் இடம் என்று பெயர் வழங்கிற்று. அவர்கள் அவ்விடத்திலேயே ஆண்டவருக்குப் பலி செலுத்தினர்.
6 யோசுவா மக்களை அனுப்பிவிட்டார். இஸ்ராயேல் மக்களும் தத்தம் பாகத்தை உரிமையாக்கிக் கொள்ளப்போனார்கள்.
7 அவரது வாழ்நாள் முழுவதும், அவருக்குப்பின் நெடுநாள் வந்தவர்களும் ஆண்டவர் இஸ்ராயேலருக்குச் செய்து வந்த அனைத்தையும் அறிந்திருந்தவர்களுமான மூப்பர்களின் வாழ்நாள் முழுவதும் இஸ்ராயேலர் ஆண்டவரை வழிபட்டு வந்தனர்.
8 ஆண்டவரின் அடியானும் நூனின் மகனுமான யோசுவா தம் நூற்றிப் பத்தாம் வயதில் இறந்தார்.
9 காவாஸ் மலைக்கு வடபுறத்து எபிராயீம் மலைமேல் அவரது சொந்தப் பங்கான தாம்னாத்சேரேயின் எல்லையில் அவரைப் புதைத்தனர்.
10 அந்தத் தலைமுறையார் எல்லாரும் தங்கள் முன்னோர் பதம் சேர்ந்தனர். பின்னர், ஆண்டவரையும் அவர் இஸ்ராயேலுக்குச் செய்திருந்த நன்மைகளையும் அறியாதிருந்த வேறு மக்கள் தோன்றினர்.
11 அப்போது இஸ்ராயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் புரிந்து பாவாலிமைத் தொழுதனர்.
12 எகிப்து நாட்டிலிருந்து தம் முன்னோரை மீட்டவரும், தம் தந்தையரின் ஆண்டவருமான கடவுளை விட்டுவிட்டு அன்னிய தேவர்களையும், தம்மைச் சுற்றிலும் இருந்த மக்களின் தெய்வங்களையும் பின்பற்றி வழிபட்டனர். இதனால் ஆண்டவருக்குக் கோபமூட்டினர்.
13 அவரை இகழ்ந்து, பாவாலையும் அஸ்தரோத்தையும் தொழுதனர்.
14 எனவே ஆண்டவர் இஸ்ராயேலர் மேல் கோபம் கொண்டு கொள்ளைக்காரர் கைகளில் அவர்களை ஒப்படைக்க, இவர்களும் அவர்களைப் பிடித்துத் தங்களைச் சுற்றிலுமிருந்த எதிரிகளுக்கு விற்று விட்டனர். பகைவர்களை எதிர்க்க அவர்களால் முடியவில்லை.
15 ஆனால், அவர்கள் எங்குப் போன போதிலும், ஆண்டவர் வாக்களித்திருந்தபடி அவர் கைகள் அவர்கள் மேல் இருந்ததால் அவர்கள் மிகவும் துன்புற்றனர்.
16 அவர்களைத் துன்புறுத்தினவர்களின் கைகளிலிருந்து அவர்களை மீட்க ஆண்டவர் நீதிபதிகளை எழுப்பினார். ஆனால் இவர்களுக்குச் செவிமடுக்கக் கூட அவர்கள் விரும்பவில்லை.
17 அன்னிய தெய்வங்களுடன் விபசாரம் செய்து அவற்றை வழிப்பட்டனர். வெகு விரைவில் அவர்கள் தங்கள் முன்னோரின் வழிகளை விட்டு விட்டு, ஆண்டவரின் கற்பனைகளைக் கேட்டிருந்தும் அவற்றிற்கு முற்றிலும் மாறாய் நடந்தனர்.
18 ஆண்டவர் நீதிபதிகளை எழுப்பி, அவர்களின் காலத்திலே இரக்கத்தால் மனம் உருகி, துன்புறுவோரின் பெருமூச்சுக்களுக்குச் செவிமடுத்து, அவர்களைத் துன்புறுத்திக் கொன்றவர்களிடமிருந்து மீட்டு வந்தார்.
19 நீதிபதி இறந்த போதோ இஸ்ராயேலர் திரும்பவும் தீயோராகித் தம் முன்னோர் செய்த கேடுகளை விட இழிவான காரியங்களைச் செய்து, அன்னிய தெய்வங்களைப் பின்பற்றி வழிபட்டு வந்தனர். அவர்கள் மேன்மேலும் பாவம் செய்து கொண்டேயிருந்தனர். தங்கள் முன்னோரின் முரட்டு வழியையும் விட்டுவிடவில்லை.
20 தமது கோபம் இஸ்ராயேல் மக்கள் மேல் எழ, ஆண்டவர், "இம்மக்களின் முன்னோருடன் நாம் செய்திருந்த உடன்படிக்கையை மீறினதாலும், நம் சொற்களை இவர்கள் அவமதித்துப் பின்பற்றாத படியாலும்,
21 யோசுவா சாகும்போது அழிக்காது விட்டு விட்ட இம்மக்களை நாமும் அழிக்கமாட்டோம்.
22 இப்படிச் செய்து, இஸ்ராயேர் தங்கள் முன்னோர் பின்பற்றினது போலவே ஆண்டவரின் வழியைத் தாங்களும் பின்பற்றி அவ்வழியில் நடக்கிறார்கள் என்று சோதித்துப் பார்ப்போம்" என்றார்.
23 எனவே, அந்த நாடுகளை ஆண்டவர் உடனே அழிக்க மனமின்றி அவற்றை யோசுவா கையில் ஒப்படைக்காமலே விட்டுவிட்டார்.
அதிகாரம் 03
1 இஸ்ராயேலரையும் கானானையரின் போரை அறியாதவர்களையும் சோதிப்பதற்கும்,
2 அவர்களுடைய பிள்ளைகள் எதிரிகளை எதிர்க்கக் கற்றுக்கொண்டு போர் செய்யும் வழக்கத்தைப் பயில்வதற்கும் ஆண்டவர் விட்டு வைத்த இனங்களாவன:
3 பிலிஸ்தியருடைய ஐந்து ஆளுநர்களும், கானானையர் அனைவரும், பால்- ஏர்மோன் மலை முதல் ஏமாத் வரைக்கும் லீபான் மலைவாழ் சிதோனியர்களும், ஏவையர்களுமே.
4 இஸ்ராயேலர் மோயீசன் வழியாகத் தம் முன்னோருக்குச் செவிமடுக்கிறார்களா என்று சோதிக்க ஆண்டவர் மேற்சொன்னவர்களை விட்டு வைத்தார்.
5 ஆகையால் கானானையர், ஏத்தையர், அமோறையர், பெரேசையர், ஏவையர், ஜெபுசேயர் மத்தியிலே இஸ்ராயேல் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
6 எனவே, இவர்கள் அவர்களின் பெண்களைத் தமக்கு மனைவிகளாக்கியும் தம் பெண்களை அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்தும் அவர்களின் தெய்வங்களை வழிபட்டும் வந்தனர்.
7 ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து தங்கள் கடவுளை மறந்து போய்ப் பாவாலீமையும் அஸ்த்தரோத்தையும் வழிபட்டனர்.
8 ஆண்டவர் இஸ்ராயேலர் மேல் கோபம் கொண்டு மெசெப்பொத்தேமியாவின் அரசனான குசான்ரசாத்தாயிம் என்பவனுக்கு அவர்களைக் கையளிக்கவே, இஸ்ராயேல் மக்கள் எட்டு ஆண்டுகள் அவனுக்கு அடிமைகளாய் இருந்தனர்.
9 மேலும் அவர்கள் ஆண்டவரை மன்றாட, அவர் அவர்களை மீட்கக் காலேபின் தம்பி செனேசின் மகன் ஒத்தோனியலைத் தேர்ந்துகொண்டார்.
10 ஆண்டவரின் ஆவி அவருடன் இருந்தது. அவர் இஸ்ராயேலருக்கு நீதி வழங்கி வந்தார். அவர் போருக்குப் புறப்பட்டபோது, சீரிய அரசனான குசான்ராசாத்தாயீமை ஆண்டவர் அவனிடம் கையளிக்கவே, அவனை முறியடித்தார்.
11 நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவியது, அப்போது செனேசின் மகன் ஒத்தோனியேல் இறந்தான்.
12 ஆண்டவருக்கு எதிராக இஸ்ராயேல் மக்கள் மீண்டும் பாவம் செய்தனர். அப்பொழுது அவர் மோவாப் அரசன் ஏக்லோனை அவர்களுக்கு எதிராக ஏவிவிட்டார்,. ஏனென்றால் அவர் முன்னிலையில் அவர்கள் தீயன புரிந்திருந்தனர்.
13 அவர் அம்மோன் மக்களையும் அமேக் புதல்வரையும் அவனோடு சேர்த்து விட்டார். அவன் அவர்களோடு சென்று பனைமரத்து ஊரை உரிமையாக்கிக் கொண்டான்.
14 இஸ்ராயேல் மக்களோ மோவாப் அரசன் ஏக்லோனுக்குப் பதினெட்டு ஆண்டுகள் அடிமைகளாய் இருந்தனர்.
15 பின்பு அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடவே அவர் அவர்களை மீட்பதற்கு ஜெமினி மகன் ஜேராவின் மகனும்., வலக்கையைப் போல் இடக்கையைப் பயன்படுத்து பவனுமான ஆவோத்தைத் தேர்ந்துகொண்டார். இஸ்ராயேல் மக்கள் அவர் வழியாக மோவாபின் அரசன் ஏக்லோனுக்குக் காணிக்கைகளை அனுப்பினார்.
16 அவர் ஒரு முழ நீளமும் இரு புறமும் கூர்மையுள்ளதுமான கத்தி ஒன்றும் செய்து தம் போர்வையின் வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டார்.
17 அவர் மோவாப் அரசன் ஏக்லோனுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார். ஏக்லோன் மிகத் தடித்திருந்தான்.
18 அவனுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தபின், ஆவோத் தம்மோடு வந்தவர்களுடன் திரும்பினார்.
19 பிறகு அவர் சிலைகள் இருந்த கல்கலாவிலிருந்து மீண்டும் அரசனிடம் வந்து, "வேந்தே, நான் உம்மிடம் தனித்துப் பேச வேண்டும்" என்றார். அரசனும் மௌனம் கட்டளையிட்டான். சுற்றிலுமிருந்த அனைவரும் வெளியேறினர்.
20 அப்போது ஆவோத் வேனிற்கால அறையில் அமர்ந்திருந்த அரசனை நெருங்கி, "இறைவனின் வார்த்தையை உம்மிடம் சொல்ல வந்துள்ளேன்" என்றார். அரசன் அரியணையை விட்டு உடனே எழுந்தான்.
21 அப்போது ஆவோத் இடக்கையை நீட்டி வலப்புறத்திலிருந்த கத்தியை எடுத்து அவனை வயிற்றில் குத்தினார்.
22 அவர் குத்தின வலுவினால் பிடியும் கத்தியோடு காயத்துக்குள் சென்று கொழுத்த தசையினால் இறுக்கப்பட்டது. ஆவோத் கத்தியை வெளியே எடுக்கவில்லை. கத்தினபடியே உடலில் விட்டு விட்டார். உடனே குதம் வழியாக மல சலம் வெளிப்பட்டன.
23 ஆவோத் வெகு கவனத்தோடு அறையின் கதவுகளைப் பூட்டிவிட்டார்.
24 பின்புறக் கதவு வழியே வெளியேறினார். அரசனின் ஊழியர் உட்புகுந்து அறையின் கதவு மூடியிருப்பதைக் கண்டு அரசர் வெளிக்குப் போயிருப்பார் என்று தமக்குள் சொல்லிக்கொண்டனர்.
25 அவர்கள் வெகுநேரம் காத்திருந்து சலித்துப் போய், ஒருவரும் திறந்து விடாததைக் கண்டு தாமே சாவியைக் கொணர்ந்து திறந்தனர், வேந்தர் தரையில் செத்துக் கிடக்கக் கண்டனர்.
26 அவர்கள் மனம் குழம்பியிருக்கையில் ஆவோத் தப்பியோடி, முன்பு எங்கிருந்து திரும்பி வந்தாரோ அந்தச் சிலைகளின் இடத்தைக் கடந்து செய்ராத்துக்கு வந்து சேர்ந்தார்.
27 உடனே எபிராயீம் மலையில் எக்காளம் ஊதினார் இஸ்ராயேல் மக்கள் அவரோடு கிளம்பி வந்தனர். அவரோ அவர்களை முன் நடத்திச் சென்றார்.
28 அவர் அவர்களை நோக்கி, "என் பின் வாருங்கள்; நம் எதிரிகளான மோவாபியரை ஆண்டவர் நமக்குக் கையளித்துள்ளார்" என்றார். அவர்கள் அவரைத் தொடர்ந்து போய் மோவாப் நாடு சேரும் வழியாகிய யோர்தான் நதித்துறை எல்லாம் வளைத்துப் பிடித்து மோவாபியரில் ஒருவனும் வெளியில் வராதபடி தடுத்தனர்.
29 பிறகு, அவர்களில் ஆற்றலும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட பதினாயிரம் பேரையும் கொன்றனர். அவர்களில் ஒருவன் கூடத் தப்ப முடியவில்லை.
30 அந்நாளில் மோவாபியர் இஸ்ராயேலர் கையால் தாழ்வுற்றனர். நாடு எண்பது ஆண்டுகள் அமைதியாய் இருந்தது.
31 ஆவோத்துக்குப் பிறகு ஆனாத்து மகன் சாம்கார் தோன்றிப் பிலிஸ்தியரில் அறுநூறு பேர்களைக் கலப்பைக் கொழுவால் கொன்றார். அவரும் இஸ்ராயேலரைப் பாதுகாத்து வந்தார்.
அதிகாரம் 04
1 ஆவோத் இறந்தபின் இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் மீண்டும் பாவங்களைச் செய்தனர்.
2 எனவே, ஆசோர் நகரை ஆண்டு கொண்டிருந்த கானான் நாட்டு அரசன் ஜாபீனுக்குக் கடவுள் அவர்களைக் கையளித்தார். அவன் படைத்தலைவன் சிசாரா புறவினத்தாரின் நகரான அரோசெத்தில் வாழ்ந்து வந்தான்.
3 இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்பினர்; ஏனெனில் அவனிடம் வாள் பொருத்தப்பட்ட தொள்ளாயிரம் தேர்கள் இருந்தன, மேலும் இருபது ஆண்டுகளாய் அவன் அவர்களை மிகவும் வதைத்து வந்தான்.
4 இலாப்பிதோத்தின் மனைவி தெபோரா என்ற இறைவாக்கினள் ஒருத்தி இருந்தாள். அவளே அக்காலத்தில் மக்களுக்கு நீதி வழங்கி வந்தாள்.
5 எபிராயீம் மலையில் ராமா, பேத்தல் என்ற ஊர்களுக்கு நடுவில் தன் பெயரையுடைய பனைமரத்தரடியில் அவள் அமர்ந்திருப்பாள். இஸ்ராயேல் மக்கள் தம் எல்லா வழக்குகளையும் தீர்த்துக்கொள்ள அவளிடம் செல்வர்.
6 அவள் அங்கிருந்துகொண்டு நெப்தலியைச் சேர்ந்த கேதஸ் ஊரானாகிய அபினோயனின் மகன் பாராக்கை வரவழைத்து, "இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் உனக்குக் கூறுவதாவது: 'நீ போய் உன் படையைத் தாபோர் மலைக்கு நடத்திச் செல். நெப்தலி புதல்வரும் சாபுலோன் புதல்வருமாகிய பதினாயிரம் போர் வீரரை உன்னுடன் கூட்டிப்போ.
7 நாம் ஜாபீனின் படைத்தலைவன் சிசாராவையும் அவன் தேர்களையும் படைகள் அனைத்தையும் சிசோன் ஆற்றங்கரை ஓரத்தில் கொணர்ந்து அவற்றை உன் கைவயப்படுத்துவோம்' என்கிறார்" என்று கூறினாள்.
8 அப்போது பாராக், " நீயும் என்னோடு வந்தால் போகிறேன்; இல்லையேல் நான் போகமாட்டேன்" என்றான்.
9 அவளோ அவனிடம், "நான் உன்னோடு வரத் தடையில்லை; நான் வந்தால் வெற்றியின் மேன்மை உன்னைச் சாராது. ஏனெனில், சிசாரா பெண் ஒருத்தியால் காட்டிக் கொடுக்கப்படுவான்" என்றாள். எனவே, தெபோரா எழுந்து பாராக்கோடு கேதஸ் ஊருக்குச் சென்றாள்.
10 அவனோ சாபுலோனையும் நெப்தலியையும் வரவழைத்து, தேபோராவின் துணையுடன் பதினாயிரம் வீரரோடு புறப்பட்டுச் சென்றான்.
11 சினேயனான ஆபேர், வெகு காலத்துக்கு முன்பே மோயீசனின் உறவினன் ஓபாபின் புதல்வரான மற்றச் சினேயரைப் பிரிந்து, சென்னிம் பள்ளத்தாக்கு வரை கூடாரங்களை அடித்துக் கேதஸ் ஊருக்கு அருகில் வாழ்ந்து வந்தான்.
12 அபினோயனின் மகன் பாராக் தபோர் மலையில் ஏறினான் என்று சிசாராவுக்கு அறிவிக்கப்பட்ட போது,
13 அவன் வாள் பொருத்தப்பட்ட தொள்ளாயிரம் தேர்களையும் புறவினத்தாருடைய அரோசெத் நகரின் எல்லாப் படைகளையும் திரட்டிக் கொண்டு சிசோன் ஆற்றின் அருகே வந்தான்.
14 அப்போது தெபோரா பாராக்கை நோக்கி, "எழுந்திரு, இன்றே சிசாராவை ஆண்டவர் உன் கையில் ஒப்படைத்தார். இதோ! அவரே உன் வழிகாட்டி" என்றாள். எனவே, பாராக்கும் அவனோடு இருந்த பதினாயிரம் வீரரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்.
15 ஆண்டவர் சிசாராவையும் அவனது தேர், சேனைகள் அனைத்தையும் பாராக் முன்னிலையில் வாள் முனையில் அச்சுறுத்தினார். இதைக் கண்ட சிசாரா தேரிலிருந்து குதித்து ஓட்டம் பிடித்தான்.
16 பாராக் தப்பியோடும் தேர்களையும் சேனைகளையும் அரோசெத் வரை துரத்திச் செல்ல, எதிரிகளின் சேனைகள் எல்லாம் அழிந்தன.
17 சிசாராவோ சினேயனான ஆபேரின் மனைவி சாகேலின் கூடாரத்திற்கு ஓடி வந்தான். ஏனெனில் ஆசோர் அரசன் ஜாபினும் சினேயனான ஆபேரும் அப்போது தங்களுக்குள் சமாதானமாய் இருந்தனர்.
18 எனவே, சாகேல் வெளியே வந்து சிசாராவை நோக்கி, "என் மன்னரே வாரும், என் கூடாரத்தினுள் வாரும், அஞ்சாதீர்" என்றாள். அவன் கூடாரத்திற்குள் நுழைந்தான்; அவளும் போர்வையால் அவனை மூடினாள்.
19 அவன் அவளை நோக்கி, "எனக்கு மிகவும் தாகமாயுள்ளது; தயவு செய்து கொஞ்சம் தண்ணீர் கொடு" என்றான். அவள் பால் அடங்கிய தோல் பையைத் திறந்து அவனுக்குக் குடிக்கக் கொடுத்து மீண்டும் அவனை மூடினாள்.
20 சிசாரா அவளை நோக்கி, "நீ கூடாரவாயிலில் நின்று கொண்டு, இங்கு எவனாவது இருக்கிறானா என்று யாராவது கேட்டால், எவனும் இல்லை என்று பதிலுரை" என்றான்.
21 ஆபேரின் மனைவி சாகேல் கூடாரத்தின் ஆணி ஒன்றையும் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு ஓசை படாது நுழைந்து சிசாராவின் கன்னப் பொட்டில் ஆணியை வைத்துச் சுத்தியால் அடித்தாள். அது அவன் மூளையைத் துளைத்துக்கொண்டு தரை வரை சென்றது. அவனது தூக்கம் சாவுத் தூக்கமாக முடிந்தது.
22 சிசாராவைத் துரத்தின பாராக் அப்போது அங்கு வர, சாகேல் அவனை எதிர்கொண்டழைத்து, "வாரும், நீர் தேடும் ஆளை உமக்குக் காண்பிக்கிறேன்" என்றாள். அவன் நுழைந்து இறந்துபட்ட சிசாராவையும், கன்னப் பொட்டில் அறையப்பட்டிருந்த ஆணியையும் கண்டான்.
23 இவ்வாறு கடவுள் அந்நாளில் இஸ்ராயேல் மக்கள் முன்பாகக் கானான் அரசன் ஜாபினைத் தாழ்த்தினார்.
24 அவர்கள் நாளுக்கு நாள் வலிமையுற்று கானான் அரசன் ஜாபினை அழித்துத் தீரும் வரை அவனை அடக்கி ஆண்டனர்.
அதிகாரம் 05
1 அந்நாளில் தெபோராவும் அபினேயன் மகன் பாராக்கும் பாடின பாடலாவது:
2 இஸ்ராயேல் மக்களுக்காக உங்கள் உயிரையே முழுமனத்தோடு கையளித்தவர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்.
3 மன்னர்களே, கேளுங்கள்; மக்கட்தலைவர்களே, செவி கொடுங்கள்: நானே ஆண்டவரைப் புகழ்வேன்; இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளைப் போற்றுவேன்.
4 ஆண்டவரே, நீர் செயீரினின்று புறப்பட்டு, ஏதோம் நாட்டைக் கடந்த போது நிலம் அதிர்ந்தது; விண்ணும் மேகங்களும் நீரைச் சொரிந்தன.
5 ஆண்டவர் முன்னிலையில் மலைகள் இளகின. இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளைக் கண்டு சீனாய் கூட இளகிற்று.
6 ஆனாத் புதல்வன் சாம்காரின் காலத்திலும் சாகேல் காலத்திலும் பாதைகள் ஆள் நடமாற்றமின்றிக் கிடந்தன. அதில் வழி நடந்தவரோ வேறு வழிகளில் சென்றனர்.
7 இஸ்ராயேலுக்குத் தாயாகத் தெபோரா எழும் வரை, இருந்த சிலரும் வாளா இருந்தனர்.
8 புதுப் போர்களை ஆண்டவர் தேர்ந்துகொண்டார், எதிரிகளின் கோட்டை வாயில்களைத் தகர்த்தெறிந்தார். ஆனால் இஸ்ராயேலின் நாற்பதினாயிரம் படைவீரரிடம் கேடயமோ ஈட்டியோ காணப்படவில்லை.
9 என் இதயமோ இஸ்ராயேலின் தலைவர்களுக்கே அன்பு செய்கின்றது. உங்களையே ஆபத்துக்கு விரும்பிக் கையளித்தோரே ஆண்டவரைப் புகழுங்கள்.
10 கொழுத்த கழுதைகள் மேல் சவாரி செய்வோரே, நீதி மன்றத்தில் அமர்வோரே, வழிப் பயணிகளே அவரைப் போற்றுவீர்.
11 தேர்கள் மோதியுடைந்து எதிரியின் படைகள் நசுக்கப்பட்ட இடங்களில், ஆண்டவருடைய நீதியும் இஸ்ராயேல் வீரர் மேல் அவருக்குள்ள கருணையும் பறைசாற்றப்படும். அப்போது ஆண்டவரின் மக்கள் வாயில்களுக்குச் சென்று அரசைக் கைப்பற்றினர்.
12 எழுந்திரு, தெபோரா, எழுந்திரு; எழுந்து பாமாலை பாடு. பாராக், எழுந்திரு; அபினோயனின் மகனே, கைதிகளை நீயே கொண்டு போ.
13 எஞ்சிய மக்கள் காப்பாற்றப்பட்டனர். ஆண்டவரே வலியோர் பக்கம் நின்று போர் புரிந்தார்.
14 எபிராயிமின் வழிவந்தோரைக் கொண்டு அவர் அமலேக்கை முறியடித்தார். பிறகு பெஞ்சமினரைக் கொண்டு ஓ அமலேக்கே, உன் மக்களை வென்றார். மாக்கீர், சாபுலேனிலிருந்து தலைவர்கள் புறப்பட்டுப் படையைப் போர்க்களம் நடத்திச் சென்றனர்.
15 இசாக்காரின் படைத்தலைவர்கள் தெபோராவோடிருந்தனர்; படுகுழியில் விழுவது போல் ஆபத்தைத் தேடின பாராக்கைப் பின் தொடர்ந்தனர். ஆனால் ரூபனின் பிரிவினையால் பெருமக்களிடையே பிளவு உண்டானது.
16 மந்தைகளின் அலறலைக் கேட்பதற்காகவா ஈரெல்லைகள் நடுவில் வாழ்கின்றாய்? ரூபனின் பிரிவினையால் பெருமக்களிடையே பிளவு உண்டானது.
17 காலாத் யோர்தான் நதிக்கப்பால் வீணாய்க் காலம் கழித்தான். தான் கப்பல்களில் தன் நேரத்தைச் செலவழித்தான். ஆசேரோ கடற்கரை ஓரங்களில் வாழ்ந்து துறைமுகங்களில் தங்கியிருந்தான்.
18 சாபுலோனும் நெப்தலியும் மெரோமே நாட்டில் தம்மைச் சாவுக்குக் கையளித்தனர்.
19 அரசர்கள் வந்து போரிட்டனர்,. கானானைய அரசர்கள் மாகெதோ நீர்த்துறை அருகே தானாக்கில் போரிட்டனர். ஆனால் அவர்கள் எதையும் கொள்ளையடிக்கவில்லை.
20 ஏனெனில் வானத்தினின்று அவர்களுக்கு எதிராய்ப் போர் செய்யப்பட்டது, விண்மீன்கள் தத்தம் வரிசையிலும் ஓட்டத்திலும் நின்று சிசாராவை எதிர்த்தன.
21 சிசோன் நதி அவர்களுடைய சவங்களை அடித்துச் சென்றது; கதுமிம் நதியும் சிசோன் நதியும் அவ்வாறே செய்தன. என் ஆன்மாவே, வலியோரை மிதித்துத் தள்ளு.
22 அப்பொழுது எதிரிகளில் வலுவுள்ளவர்கள் ஓடிய வேகத்தினாலும், பள்ளங்களில் பாய்ந்த விரைவாலும், அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் பிளந்து போயின.
23 ஆண்டவரின் தூதர், 'மேரோஸ் நாட்டைச் சபியுங்கள், அந்நாட்டுக் குடிகளைச் சபியுங்கள்; ஏனெனில், அவர்கள் ஆண்டவருடைய மக்களுக்கு உதவிசெய்யவும் அவர் வீரருக்கு துணைபுரியவும் வரவில்லை' என்றார்.
24 பெண்களில் சினேயனான ஆபேரின் மனைவி சாகேல் பேறு பெற்றவள். அவள் தன் கூடாரத்தில் ஆசீர்வதிக்கப்படுவாளாக.
25 அவள் தண்ணீர் கேட்டவனுக்குப் பாலைக் கொடுத்தாள்; மக்கட் தலைவர்கள் உண்ணும் கோப்பையில் தயிர் கொணர்ந்தாள்.
26 இடக்கையில் ஆணியைத் தாங்கி, வலக்கையால் தொழிலாளியின் சுத்தியலை ஓங்கிச் சிசாராவின் தலையில் ஆணியிறங்குமிடம் அறிந்து கன்னப் பொட்டில் அடித்தாள்.
27 அவன் அவளது காலடியில் வீழ்ந்தான், வலுவிழந்தான், இறந்தான். அவளுடைய கால்கள் முன்பாக உருண்டு புரண்டு உயிரிழந்து இரங்கத்தக்க நிலையில் கிடந்தான்.
28 அவன் தாய் அறைக்குள் நின்று சன்னல் வழியே பார்த்துக் கொண்டு, 'அவனது தேர் இன்னும் திரும்ப வராதது ஏன்? அவன் குதிரைகள் இன்னும் வராதது ஏன்? என்று ஓலமிட்டாள்.
29 அப்போது அவன் மனைவியருள் எல்லாம், அறிவில் சிறந்தவள் தன் மாமியை நோக்கி,
30 கொள்ளையடித்த பொருட்களை ஒரு வேளை இப்போது பங்கிட்டுக் கொண்டிருப்பார்; தமக்கெனப் பேரழகி ஒருத்தியைத் தேடிக் கொண்டிருக்கக் கூடும், பல வண்ண ஆடைகள் சிசாராவுக்குக் கொடுக்கப்படலாம். தன்னை அழகு செய்யப் பலவித அணிகலன்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கலாம்' என்று பதில் உரைத்தாள்.
31 ஆண்டவரே உம் எதிரிகள் யாவரும் இப்படி அழியட்டும். உமக்கு அன்பு செய்வோரோ இளஞாயிறு போல் ஒளி வீசட்டும்."
32 பிறகு நாற்பது ஆண்டுகள் நாடு அமைதியுற்றிருந்தது.
அதிகாரம் 06
1 இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தனர். அவரும் அவர்களை மதியானியர் கையில் ஏழாண்டுகள் விட்டு விட்டார்.
2 அவர்கள் இவர்களால் வெகு துன்பம் அடைந்தனர். எனவே இவர்களை எதிர்க்க மலைகளில் குகைகளைச் செய்து பாதுகாப்புள்ள இடங்களைத் தேடிக் கொண்டனர்.
3 இஸ்ராயேலர் விதைத்த பின் மதியானியரும் அமலேசித்தரும் கீழ்த்திசையின் மற்ற இனத்தாரும் அங்கு வந்து குடியேறினர்.
4 அங்கேயே தம் கூடாரங்களையடித்து காஜா வரை பயிரையெல்லாம் அழித்தனர். இஸ்ராயேலரின் வாழ்வுக்கு வேண்டிய ஆடு மாடுகள், கழுதைகள் ஆகியவற்றில் எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
5 ஏனெனில் அவர்கள் தம் கூடாரங்களோடும் மிருகங்களோடும் வந்தார்கள். அப்போது கணக்கற்ற மனிதரும் ஒட்டகங்களும் வந்திறங்கி வெட்டுக்கிளிகளைப் போல நிறைந்து தம் கைப்பட்டதெல்லாம் அழித்தனர்.
6 மதியானியருக்கு முன்பாக இஸ்ராயேலர் மிகவும் தாழ்வடைந்தனர்.
7 ஆகையால் அவர்கள் மதியானியரை எதிர்க்க ஆண்டவரை உதவி கேட்டு மன்றாடினர்.
8 அவரோ அவர்களிடம் இறைவாக்கினர் ஒருவரை அனுப்பி, "இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் கூறுவதாவது: 'நாம் உங்களை எகிப்திலிருந்து வரச்செய்து அடிமை நாட்டிலிருந்து மீட்டோம்.
9 எகிப்தியர், இன்னும் உங்களை வதைத்த எல்லா எதிரிகளின் கையினின்றும் உங்களை விடுவித்தோம். நீங்கள் வந்தவுடன் அவர்களைத் துரத்தி அவர்கள் நாடுகளை உங்களுக்குக் கையளித்தோம்.
10 நாமே உங்கள் ஆண்டவராகிய கடவுள். நீங்கள் வாழும் நாட்டாரான அமோறையரின் தெய்வங்களுக்கு அஞ்ச வேண்டாம் என்று கூறியிருந்தோம். ஆயினும், நமது பேச்சை நீங்கள் கேட்கவில்லை" என்று அறிவித்தார்.
11 பிறகு ஆண்டவரின் தூதர் வந்து, எஸ்ரி குடும்பத் தலைவனான யோவாசுக்குச் சொந்தமான எபிராவிலிருந்த கருவாலி மரத்தடியில் உட்கார்ந்தார். யோவாசின் மகன் கெதெயோன் மதியானியருக்குத் தப்பியோடக் கோதுமையை அடித்துச் சேர்க்கையில்,
12 ஆண்டவரின் தூதர் அவனுக்குத் தோன்றி, "மனிதருள் மாவீரனே, ஆண்டவர் உன்னோடு இருப்பாராக" என்றார்.
13 கெதெயோன் அவரை நோக்கி, "ஐயனே, ஆண்டவர் எங்களோடு இருப்பாராகில் இவையெல்லாம் எங்களுக்கு நிகழ்வானேன்? ஆண்டவர் எம்மை எகிப்தினின்று மீட்டார் என்று எம் தந்தையர் கூறினதும் சொன்னதுமான மற்ற அதிசயங்கள் எங்கே? இப்போதோ ஆண்டவர் எங்களைக் கைவிட்டு விட்டார்; மதியானியருக்கு எங்களைக் கையளித்தார்" என்றான்.
14 ஆண்டவர் அவனை நோக்கி, "இதோ உறுதியுடன் நீ சென்று மதியானியர் கைகளினின்று இஸ்ராயேலை மீட்பாய்; நாமே உன்னை அனுப்பினோம் என்று அறிந்து கொள்" என்றார்.
15 ஆனால், அவன், "ஆண்டவரே நான் இஸ்ராயேலை எப்படி மீட்பேன்? மனாசே வமிசத்தில் என் குடும்பமே வலுக்குறைந்தது. நானோ என் தந்தை வீட்டில் மிகச் சிறியவன்" என்றான்.
16 அதற்கு ஆண்டவர், "நாம் உன்னோடு இருப்போம்; மதியானியார் எல்லாரையும் ஒரு மனிதனைப் போல் முறியடிப்பாய்" என்றார்.
17 அவனோ, "உமது இரக்கம் எனக்கு உண்டானால் என்னிடம் பேசுபவர் நீரே என்பதற்கு அடையாளம் காண்பியும்.
18 நான் போய், பலி கொணர்ந்து ஒப்புக்கொடுக்கும் வரை இவ்விடத்தை விட்டு அகலாதேயும்" என்றான். அவரும் மறுமொழியாக, "உன் வருகைக்காகக் காத்திருப்போம்" என்றார்.
19 கெதெயோன் போய் ஆட்டுக் குட்டியைச் சமைத்து ஒரு படிக் கோதுமை மாவில் புளியாத அப்பங்கள் செய்து, கறியை ஒரு கூடையிலும், கறிக்குழம்பை ஒரு பானையிலும் வைத்து அனைத்தையும் கருவாலி மரத்தடிக்குக் கொணர்ந்து ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தான்.
20 ஆண்டவரின் தூதர் அவனை நோக்கி, "நீ கறியையும் அப்பங்களையும் அக்கல்லின் மேல் வைத்துக் குழம்பை அவற்றின் மேல் ஊற்று" என்றார். அவன் அப்படியே செய்தான்.
21 ஆண்டவனின் தூதர் தம் கைக்கோலை நீட்டிக் கறியையும் அப்பங்களையும் தொடவே, கல்லினின்று தீ எழும்பிக் கறியையும் அப்பங்களையும் சுட்டெரித்தது. ஆண்டவரின் தூதரோ அவன் கண்களினின்று மறைந்தார்.
22 கெதெயோன், அவர் ஆண்டவரின் தூதர் தான் எனக்கொண்டு, "ஐயோ! என் ஆண்டவராகிய கடவுளே! ஆண்டவரின் தூதரை நான் நேரில் கண்டேன்" என்றான்.
23 ஆண்டவர் அவனை நோக்கி, "உனக்குச் சமாதானம் உண்டாகட்டும். அஞ்சாதே, சாகமாட்டாய்" என்றார்.
24 எனவே, கெதெயோன் அவ்விடத்திலேயே பலிபீடத்தைக் கட்டி, அதை 'ஆண்டவரின் சமாதானம்' என்று அழைத்தான். அது இன்று வரை அப்படியே வழங்கி வருகிறது.
25 அவன் எஸ்ரி வம்சத்துக்கு உரிய எபிராவில் இருக்கும் போதே, அன்றிரவு ஆண்டவர் அவனை நோக்கி, "உன் தந்தையின் எருதையும் ஏழு வயதுள்ள மற்றொரு எருதையும் பிடித்துக் கொண்டு உன் தந்தைக்குரிய பாவால் பீடத்தை உடைத்து, அதைச் சுழ்ந்துள்ள மரத்தையும் வெட்டிவிடு.
26 முன் நீ பலியிட்ட இக்கல்லின் உச்சியில் உன் ஆண்டவராகிய கடவுளுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, இரண்டாவது எருதைக் கொணர்ந்து, தோப்பில் நீ வெட்டும் விறகுகளை அடுக்கி, அதன் மேல் தகனப்பலியிடு" என்றார்.
27 ஆகவே, கெதெயோன் தன் ஊழியரில் பத்துப்பேரை அழைத்து, ஆண்டவர் தனக்குச் சொன்னபடி செய்தான்; ஆனால் தன் தந்தை வீட்டாருக்கும் அந்நகர மனிதருக்கும் அஞ்சிப் பகலில் ஒன்றும் செய்யாது இரவில் அதைச் செய்து முடித்தான்.
28 மறுநாள் காலையில் அந்நகர மனிதர் எழுந்த போது பாவால் பீடம் அழிந்து மரம் வெட்டப்பட்டிருக்கக் கண்டனர். அப்பொழுது கட்டப்பட்டிருந்த பீடத்தின் மேல் மற்றொரு எருது வைக்கப்பட்டிருந்தையும் கண்டனர்.
29 அப்போது, அவர்கள் ஒருவர் ஒருவரிடம், "இப்படிச் செய்தவன் யார்?" என்றார்கள். இச்செயலைச் செய்தவன் யாரென்று கேட்ட போது, யோவாசின் மகனான கெதெயோன் தான் இவற்றையெல்லாம் செய்தான் என்று சொல்லப்பட்டது.
30 அப்போது அவர்கள் யோவாசை நோக்கி, "உன் மகனை இவ்விடம் கொண்டு வா, அவன் சாகவேண்டும்; ஏனெனில் அவன் பாவால் பீடத்தை அழித்து விட்டான்; தோப்பு மரங்களையும் வெட்டிவிட்டான்" என்றனர்.
31 அதற்கு அவன், "பாவாலுக்காகச் சண்டையிட்டு அவன் பழிதீர்ப்பவர் நீங்களோ? அவனுக்கு எதிரியாய் இருப்பவன் நாளை விடியுமுன் சாகட்டும். பாவால் ஒரு தெய்வமானால், அவனே பீடத்தை அழித்தவனைப் பழி வாங்கட்டும்" என்றான்.
32 பாவாலே தன் பீடத்தை அழித்தவனைப் பழிவாங்கட்டும் என்று யோவாசு கூறினதால், அன்று முதல் கெதெயோன் ஜேரோபாவால் என்று அழைக்கப்பட்டான்.
33 ஆகவே, மதியானியரும் அமலேசித்தரும் கீழை நாட்டார் அனைவரும் ஒன்று கூடினார்கள். யோர்தான் நதியைக் கடந்து ஜெஸ்ராயேல் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர்.
34 அப்போது கெதெயோன் ஆண்டவரால் ஏவப்பட்டு எக்காளம் ஊதி, அபியேசர் குடும்பம் தன்னைப் பின்பற்றிவர அழைத்தான்.
35 மனாசே வம்சத்தார் எல்லாருக்கும் தூதர்களை அனுப்ப, அவர்களும் அவனைப் பின் பற்றினார். வேறு தூதர் ஆசேர், சாபுலோன், நெப்தலியிடம் செல்லவே, அவர்களும் வந்து சேர்ந்தனர்.
36 அப்போது கெதெயோன் கடவுளை நோக்கி, "நீர் சொன்னபடி என்னைக் கொண்டு இஸ்ராயேலரை மீட்பாரானால்,
37 நான் இந்த ஆட்டு மயிரைக் களத்தில் போடுவேன்; பனி மயிரிலே மட்டும் பெய்து, பூமியெல்லாம் ஈரம் இல்லாதிருக்குமானால், நீர் சொன்னபடி இஸ்ராயேலை என் கையால், மீட்பேன் என்று அறிந்து கொள்வேன்" என்றான்.
38 அவ்வாறே நடந்தது. அவன் இரவில் எழுந்திருந்து மயிரைப் பிழிந்து ஒரு சட்டி நிறையப் பனியை நிரப்பினான்.
39 மறுபடி கெதெயோன் கடவுளை நோக்கி, "ஆட்டு மயிரைக் கொண்டு இன்னும் ஓர் அடையாளம் கேட்கத் துணிவேனேயானால், ஆண்டவரே, நீர் என்மேல் கோபம் கொள்ளாதீர்; மயிர்மட்டும் காய்ந்திருக்கவும், பூமி எங்கும் பனியால் நனைந்திருக்கவும் மன்றாடுகிறேன்" என்றான்.
40 அன்றிரவு அவன் கேட்டபடியே கடவுள் செய்தார்; ஆட்டுமயிர் காய்ந்திருக்கத் தரையில் மட்டும் பனி விழுந்திருந்தது.
அதிகாரம் 07
1 ஆகவே கெதெயோன் என்ற ஜெரோபாவால் இரவில் எழுந்து தன்னோடிருந்த எல்லா மக்களோடும் ஆராத் நீரூற்றோரம் வந்தான். மதியானியரோ ஓர் உயர்ந்த குன்றின் வடபக்கப் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கியிருந்தனர்.
2 அப்போது ஆண்டவர் கெதெயோனை நோக்கி, "உன்னோடு இருப்பவர் பலர். அவர்கள் கையில் மதியானியரைக் கையளிக்கமாட்டோம். கையளித்தால், 'எங்கள் வலிமையால் மீட்கப்பட்டோம்' என்று இஸ்ராயேலர் வீண் பெருமை கொள்வர்.
3 நீ உன் மக்களையும் உன்னைப் பின்தொடர்ந்த அனைவரையும் நோக்கி, உங்களுக்குள் அஞ்சும் கோழைகள் திரும்பிப்போகட்டும் என்று பத்துப்பேர் கேட்கச் சொல்" என்றார். அப்போது மக்களில் இருபத்திரண்டாயிரம் பேர் காலாத் மலையினின்று திரும்பிப் போனார்கள்; பதினாயிரம் பேர் மட்டும் நின்றனர்.
4 அப்போது ஆண்டவர் கெதெயோனை நோக்கி, "மக்கள் இன்னும் அதிகமே. அவர்களைத் தண்ணீர் ஓரமாய்க் கொண்டு போ; அவர்களைச் சோதித்துப் பார்ப்போம். உன்னோடு போக நான் குறிப்பவர்கள் போகட்டும்; வேண்டாமென்று நான் குறிப்போர் திரும்பி விடட்டும்" என்றார்.
5 அப்படியே மக்கள் தண்ணீர் ஓரம் செல்ல, ஆண்டவர் கெதெயோனை நோக்கி," நாயைப்போல் நீரை நக்கிக் குடிப்போரை ஒரு பக்கமும், முழங்காலை வளைத்துக் குனிந்து குடிப்போரை மறுபக்கமும் நிறுத்து" என்றார்.
6 அவ்வாறு தண்ணீரைக் கையால் அள்ளி நக்கிக் குடித்தவர் முந்நூறு பேர். மீதிப்பேர் முழங்காலை வளைத்துக் குனிந்து குடித்தனர்.
7 ஆண்டவர் கெதெயோனிடம், "நீரை அள்ளி நக்கிக் குடித்த முந்நூறு பேரைக் கொண்டு உங்களை மீட்டு மதியானியரை உன் கையவயப்படுத்துவோம். மற்ற அனைவரும் தத்தம் இடம் போய்ச் சேரட்டும்" என்றார்.
8 மீதிப் பேர் தத்தம் பாளையத்திற்குத் திரும்பிப் போகக் கட்டளையிட்டான். பின் கெதெயோன் வேண்டிய உணவுப் பொருட்களையும் எக்காளங்களையும் எடுத்துக் கொண்டு, முந்நூறு பேரோடு போருக்குப் புறப்பட்டான். மதியானியர் பாளையம் அவனுக்குக் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது.
9 அன்றிரவே ஆண்டவர் அவனை நோக்கி, "நீ எழுந்து அவர்களுடைய பாளையத்திற்குப் போ. ஏனெனில் அவர்களை உன் கைவயமாக்கியுள்ளோம்.
10 தனியே போக அஞ்சினால், உன் ஊழியன் பாராவும் உன்னோடு வரட்டும்.
11 அவர்கள் பேசிக் கொள்வதை நீ கேட்டால் உனக்கு ஊக்கம் உண்டாகி, அஞ்சாது அவர்கள் பாளையத்தில் நுழைவாய்" என்றார். ஆகவே அவனும் அவன் ஊழியன் பாராவும் இராக் காவலர் இருந்த பக்கமாய் இறங்கினார்.
12 மதியானியரும் அமலேசித்தரும் கீழை நாட்டினர் அனைவரும் வெட்டுக்கிளிக் கூட்டம் போல் பள்ளத்தாக்கில் படுத்திருந்தனர். எண்ணற்ற ஒட்டகங்களும் கடலோரத்து மணற் குவியல் போலக் கிடந்தன.
13 கெதெயோன் நெருங்கி வரவே, அவர்களில் ஒருவன் தான் கண்ட கனவைப் பற்றி இன்னொருவனிடம், "ஒரு கனவு கண்டேன். சுடப்பட்ட ஒரு வாற்கோதுமை அப்பம் மதியானியர் பாளையத்துக்கு உருண்டு வந்தது. அது கூடாரம் வரை வந்து அதை விழச்செய்து, சமவெளிக்கு உருட்டித் தள்ளி விட்டது" என்றான்.
14 அதற்கு மற்றவன், "இது இஸ்ராயேலன் யோவாசின் மகன் கெதெயோனின் வாள் அன்றி வேறன்று. மதியானியரையும் அவரது பாளையம் முழுவதையும் ஆண்டவர் அவன் கைவயமளித்தார்" என்றான்.
15 கனவையும் அதன் விளக்கத்தையும் கேட்ட கெதெயோன் ஆண்டவரை வாழ்த்தினான். பின் இஸ்ராயேல் பாளையத்திற்குத் திரும்பி வந்து, "எழுந்திருங்கள், மதியானியரின் பாளையத்தை ஆண்டவர் நம் கைவயமளித்தார்" என்றான்.
16 முந்நூறு பேரையும் மூன்றாய்ப் பிரித்துக் கையில் எக்காளங்களையும் வெறும் பானைகளையும், அப்பானைகளுக்குள் விளக்குகளையும் கொடுத்து,
17 அவர்களை நோக்கி, "நான் செய்வது போலவே நீங்களும் செய்யுங்கள்; நான் பாளையத்தின் ஒரு புறத்தில் நுழைவேன்; நீங்கள் நான் செய்வதையெல்லாம் செய்யுங்கள்.
18 நான் என் கையிலிருக்கும் எக்காளத்தை ஊத நீங்களும் பாளையத்தைச் சுற்றி ஊதி 'ஆண்டவருக்காகவும் கெதெயோனுக்காகவும்' என்று ஆர்ப்பரியுங்கள்" என்றான்.
19 நடுநிசிக் காவலர் தம் வேலையைச் செய்யத் தொடங்கின போது கெதெயோனும் அவனோடு இருந்த முந்நூறு பேரும் பாளையத்தின் ஒரு புறத்தில் நுழைந்தனர். காவலர்களை எழுப்பி எக்காளங்களை ஊதிப் பானைகளை ஒன்றோடு ஒன்று மோதி உடைத்தார்கள்.
20 முப்பிரிவாரும் பாளையத்தின் முப்புறங்களில் நின்றுகொண்டு பானைகளை உடைத்து இடக்கையில் தீவெட்டி ஏந்தி, வலக்கையிலிருந்த எக்காளங்களை ஊதி, "இதோ ஆண்டவருடைய வாள், இதோ கெதெயோனின் வாள்!" என்று கூவினார்கள்.
21 பாளையத்தைச் சுற்றிலும் அவர்கள் தத்தம் இடங்களிலே நின்றனர். கூடாரங்கள் முழுவதும் ஒரே குழப்பமாய் இருந்தது. அப்போது பாளையத்தில் இருந்த அனைவரும் ஓலமிட்டு அலறிக்கொண்டு சிதறி ஓடிப்போனார்கள்.
22 முந்நூறு பேரும் எக்காளங்களை ஊதிக் கொண்டே நின்றனர். ஆண்டவரின் செயலால் எதிரிகள் தமக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மாய்த்துக் கொண்டனர்.
23 பெத்செத்தா வரையிலும், தேபாத்திலுள்ள அபெல்மெயுலா கரை வரைக்கும் ஓடினார்கள். நெப்தலி, ஆசேர், மனாசே வம்சத்தாரான எல்லா இஸ்ராயேலரும் கத்திக் கொண்டே மதியானியரைத் துரத்திச் சென்றனர்.
24 கெதெயோன் எபிராயீம் மலைநாடு எங்கும் தூதர்களை அனுப்பி, "மதியானியருக்கு எதிராய் இறங்கிப் பெத்பெராவின் நீர்த்துறைகளையும் யோர்தானின் நீர்த்துறைகளையும் கைப்பற்றிக் கொள்ளுங்கள்" என்றான். அப்படியே எபிராயிமியர் எல்லாருமாக அக்களித்துக் கூவிப் பெத்பெராவை யோர்தானின் நீர்த் துறைகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.
25 பிறகு அவர்கள் மதியானியரான ஒரேப், சேப் என்ற இருவரைப் பிடித்து, ஒரேபை ஒரேப் பாறையிலும், சேப்பைச் சேப் என்ற ஆலையிலும் கொன்று மதியானியரைத் துரத்திக் கொண்டே, ஒரேப், சேப் என்பவர்களின் தலைகளை யோர்தான் நதிக்கு அப்புறமிருந்த கெதெயோனிடம் கொண்டு வந்தனர்.
அதிகாரம் 08
1 அப்போது எபிராயிமியர் அவனை நோக்கி, "மதியானியரை எதிர்த்துப் போர் புரியச் சென்ற பொழுது நீர் எம்மை அழைக்காமல் போனதன் காரணம் யாது?" என்று வன்மையுடன் முறையிட்டுக் கடுமையாகக் கடிந்து கொண்டனர்.
2 அதற்கு அவன், "நீங்கள் செய்ததற்கு முன் நான் செய்தது எம்மட்டோ? அபிசேயிரின் திராட்சை இரசத்தை விட எபிராயிமின் திராட்சை இரசம் மேலானது அன்றோ?
3 ஆண்டவர் உங்கள் கையில் மதியானியத் தலைவரான ஒரேபையும் சேபையும் ஒப்படைத்தார். நீங்கள் செய்ததற்கு முன் நான் செய்தது எம்மட்டோ?" என்றான். அதை அவன் சொன்ன போது அவன் மேல் அவர்கள் கொண்டிருந்த ஆத்திரம் அடங்கிற்று.
4 பிறகு கெதெயோனும் அவனோடு இருந்த முந்நூறு பேரும் யோர்தானுக்கு வந்து அதைக் கடந்தனர். ஆனால் அவர்கள் களைப்பாய் இருந்ததால் ஓடிவனர்களைத் துரத்த முடியாது போயிற்று.
5 அப்போது கெதெயோன் சொக்கோத்தூதரை நோக்கி, "என்னோடு இருப்போர் களைப்பாய் இருப்பதால் அவர்களுக்கு நீங்கள் அப்பம் கொடுங்கள். அப்படியானால் நாங்கள் மதியானிய அரசர்களான செபேயையும் சால்மனாவையும் தொடர முடியும்" என்றான்.
6 அதற்குச் சொக்கோத்தின் தலைவர்கள், "உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்க, சேபே, சால்மனா என்போரின் கைகள் ஏற்கனவே உன் கைவயமாயிற்றே இதைப் பற்றியோ உன் படைக்கு அப்பம் தரவேண்டுமென்று கேட்கிறாய்?" என்றார்கள்.
7 அதற்கு அவன், "சேபேயையும் சால்மனாவையும் ஆண்டவர் என் கையில் அளிக்கும்போது உங்கள் உடலைப் பாலைவனத்தின் முட்களாலும் நெரிஞ்சிகளாலும் கிழித்து விடுவேன்" என்றான்.
8 அவன் அங்கிருந்து பானவேலுக்கு வந்து அவ்வூராரிடமும் அவ்வாறே கேட்டான். அவர்களும் செக்கோத்தார் கூறியபடியே பதிலளித்தனர்.
9 எனவே அவன் அவர்களையும் நேக்கி, "வெற்றி வீரனாய் நான் சமாதானத்துடன் திரும்பி வருகையில் இக்கோபுரத்தை இடித்துப் போடுவேன்" என்றான்.
10 சேபேயும் சால்மனாவும் தம் சேனைகளோடு இளைப்பாறினார்கள். கிழக்குப்புறத்தில் கூடியிருந்த எல்லா மக்கட் திரளிலும் ஓர் இலட்சத்திருபதினாயிரம் வீரர் மடிய, பதினையாயிரம் பேர் மட்டும் மீதியிருந்தனர்.
11 கெதெயோன், கூடாரங்களில் வாழ்வோர் இருந்த இடம்வழியாக நோபே, சேக்பாவுக்குக் கிழக்கே சென்று, பாதுகாப்புடன் இருப்பதாகவும், யாதொரு தீங்கும் நேரிடாது என்றும் எண்ணியிருந்த எதிரிகளின் பாளையத்தை முறியடித்தான்.
12 சேபேயும் சால்மனாவும் ஓடிப்போயினர். கெதெயோன் பின்தொடர்ந்து அவர்களைப் பிடித்து அவர்கள் சேனைகளைக் கலங்கடித்தான்.
13 சூரியன் உதிக்குமுன் போர்க்களத்திலிருந்து திரும்பி வரும்போது,
14 கெதெயோன் செக்கோத்தாரின் இளைஞன் ஒருவனைப் பிடித்து மக்கட் தலைவர்கள், மூப்பர்களின் பெயர்களைக் கேட்டு, அவர்களில் எழுபத்தேழு பேர்ளைக் குறித்துக் கொண்டான்.
15 கெதெயோன் செக்கோத் ஊராரிடம் வந்து, "இதோ! 'களைப்புற்ற உன் மனிதருக்கு நாங்கள் அப்பம் கொடுப்பதற்குச் சேபே, சால்மனாவின் கைகள் உன் கைவயமாயிற்றோ?' என்று என்னைக் கேலி செய்தீர்களே: இதோ! சேபேயும் சால்மனாவும்" என்றான்.
16 பிறகு அவன் நகர் மூப்பரைப் பிடித்துப் பாலைவன முட்களையும் நெரிஞ்சிகளையும் கொணர்ந்து செக்கோத்தின் மனிதரை அவற்றால் குத்திக் கிழித்தான்.
17 பின்பு அவன் பானுவேலின் கோபுரத்தையும் இடித்து அந்நகர் மக்களையும் கொன்றான்.
18 பிறகு அவன் சேபேயையும் சால்மனாவையும் நோக்கி, "தாபோரில் நீங்கள் கொன்ற மனிதர் எப்படிப் பட்டவர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "உன்னைப் போன்றவர்களே; அவர்களில் ஒருவன் இளவரசன்" என்றனர்.
19 அதற்கு அவன் "அவர்கள் என் சகோதரர், என் தாயின் மக்கள். உண்மையாகவே, நீங்கள் அவர்களைக் கொன்றிராவிட்டால், நானும் உங்களைக் கொல்லாது விட்டுவைப்பேன்" என்று கூறினான்.
20 தன் மூத்த மகன் ஜேத்தேரை நோக்கி, "நீ எழுந்து அவர்களைக் கொல்" என்றான். அவனோ வாளை உருவவில்லை; சிறு பிள்ளையாய் இருந்ததால் அஞ்சினான்.
21 அப்போது சேபேயும் சால்மனாவும், "நீயே எழுந்து எம்மேல் விழுந்து கொல்; மனிதனுக்கு, வயதுக்கு ஏற்ப வலிமை சேபேயையும் சால்மனாவையும் வெட்டி, அரச ஒட்டகங்களின் கழுத்தில் அணியப்பட்டிருந்த குளிசங்களையும் சுரப்பளிகளையும் எடுத்துக் கொண்டான்.
22 அப்போது இஸ்ராயேலர் எல்லாரும் கெதெயோனை நோக்கி, "நீரே எங்கள் தலைவர். நீரும் உம் மகனும், உம் மகனின் மகனும் எம்மை ஆளுங்கள். ஏனெனில், மதியானியர் கைகளினின்று நீரே எம்மை மீட்டீர்" என்றனர்.
23 அதற்கு அவன், "நான் உங்களை ஆள மாட்டேன்; ஆனால் ஆண்டவரே உங்களை ஆளட்டும்" என்றான்.
24 மேலும், அவர்களை நோக்கி, "உங்களை ஒன்று கேட்டுக் கொள்கிறேன்; நீங்கள் கொள்ளையிட்ட கடுக்கன்களை எனக்குக் கொடுங்கள்" என்றான். ஏனெனில் இஸ்ராயேலரிடம் பொற்கடுக்கன் அணிந்து கொள்ளும் பழக்கம் இருந்து வந்தது.
25 அப்போது அவர்கள், "மகிழ்வுடன் கொடுப்போம்" என்று சொல்லி, தரையின் மேல் துணியை விரித்துக் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டனர்.
26 சாந்துக் காறைகள், ஆரங்கள், மதியானிய அரசர் பயன்படுத்திய பொன்னாடைகள், ஒட்டகங்களின் சரப்பளிகளும், இன்னும் கெதெயோன் கேட்டு வாங்கின ஆயிரத்து எழுநூறு பொன் சீக்கல் எடையுள்ள பொற் கடுக்கன்களும் இருந்தன.
27 அவற்றைக் கொண்டு கெதெயோன் ஓர் எபோத்தைச் செய்து தன் ஊரான எபிராவில் அதை வைத்தான். அதனாலேயே இஸ்ராயேலர் சிலை வழிப்பாட்டுக்காரரானார்கள். கெதெயோனுக்கும் அவன் குடும்பத்திற்கும் அதுவே கேடாயிற்று.
28 மதியானியர் இஸ்ராயேலர் மக்கள் முன்பாகத் திரும்ப தலையெடுக்காதபடி தாழ்த்தப் பட்டனர். கெதெயோன் ஆண்டபோது நாடு நாற்பது ஆண்டு அமைதியுற்றிருந்து.
29 யோவாசின் மகன் ஜெரோபாவால் தன் வீடு சென்று அங்கே வாழ்ந்து வந்தான்.
30 அவனுக்குப் பல மனைவியர் இருந்ததால், அவனுக்குப் பிறந்தோர் எழுபதுபேர்.
31 சிக்கேமிலிருந்த அவன் வைப்பாட்டியும் அவனுக்கு அபிலெமேக் என்ற மகனைப் பெற்றாள்.
32 யோவாசின் மகன் கெதெயோன் முதிர்ந்த வயதில் இறந்து எஸ்ரி வம்சத்து எபிராவிலே தன் தந்தை யோவாசு கல்லறையில் புதைக்கப்பட்டான்.
33 கெதெயோன் இறந்தபின் இஸ்ராயேல் மக்கள் மீண்டும் தவறிப் பாவாலை வழிபட்டனர். பாவாலே தம் கடவுள் என்று அவர்கள் அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
34 தங்களைச் சூழ்ந்திருந்த எல்லா எதிரிகளின் கையினின்றும் தங்களை மீட்ட ஆண்டவரை அவர்கள் மறந்தார்கள்.
35 ஜெரோபாவால் என்ற கெதேயோன் இஸ்ராயேலுக்குச் செய்து வந்த நன்மைகளுக்குத் தக்கபடி அவனுடைய வீட்டாருக்கு அவர்கள் கருணை காட்டவில்லை.
அதிகாரம் 09
1 அப்போது ஜெரோபாவாலின் மகன் அபிமெலேக் சிக்கேமிலிருந்த தன் தாயின் உறவினரிடம் சென்று அவர்களையும், தன் தாய் தந்தையரின் குடும்பத்தாரையும் நோக்கி,
2 நீங்கள் சிக்கேம் நகரத்தார் அனைவரையும் அழைத்து, 'ஜெரோபாவாலின் புதல்வர் எழுபது பேரும் ஆள்வது நலமா, அல்லது ஒருவன் மட்டும் ஆள்வது நலமா?' என்று அவர்களைக் கேளுங்கள். நான் உங்களின் எலும்பும் தசையுமானவன் என்பதை நினைத்துக் கொள்வீர்" என்றான்.
3 அப்படியே அவன் தாயின் உறவினர் சிக்கேமிலிருந்த எல்லா மனிதருக்கும் அது பற்றி எடுத்துரைக்க, அவர்கள் எல்லாரும், "அவன் நம் சகோதரன்" என்று கூறி அபிமெலேக்கைப் பின்பற்ற அவர்கள் இதயம் நாடி நின்றது.
4 எனவே, அவர்கள் பாவால் பெரித்கோயிலிருந்து எழுபது வெள்ளிக் காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தனர். அதைக் கொண்டு அபிமெலேக் ஏழைகளையும் நாடோடிகளையும் வேலைக்கு அமர்த்தினான். அவர்களும் அவனைப் பின்பற்றினர்.
5 எபிராவிலுள்ள தன் தந்தை வீட்டுக்கு அவன் போய்த் தன் சகோதரரான, ஜெரோபாவாலின் மக்கள் எழுபது பேரையும் ஒரே பாறையின் மேல் கொன்றான். அனைவரிலும் இளையவனான, ஜெரோபாவாலின் மகன் யோவாத்தாம் மட்டும் தப்பி ஒளிந்து கொண்டான்.
6 சிக்கேமிலிருந்த எல்லா மனிதரும் மெக்லோ நகரின் எல்லாக் குடும்பங்களும் சிக்கேமிலிருந்த கருவாலி மரத்தடியில் ஒன்று கூடி அபிமெலேக்கைத் தம் அரசனாக்கினர்.
7 யோவாத்தாமுக்கு இச்செய்தி எட்டவே அவன் கரிசிம் மலையுச்சிக்குப் போய் தனது குரலை உயர்த்திக் கூக்குரலிட்டு, "சிக்கேம் மனிதரே, கடவுள் உங்களுக்குச் செவிமடுக்கிறது போல, நீங்களும் எனக்குச் செவிகொடுங்கள்.
8 மரங்கள் தமக்குள் ஓர் அரசனைத் தேர்ந்தெடுக்க விரும்பி, ஒலிவ மரத்திடம், ' எமக்கு அரசனாயிரு' என்றன.
9 அதற்கு ஒலிவ மரம், 'தேவர்களும் மனிதரும் பயன்படுத்தும் செழுமையை உதறிவிட்டு, மரங்களுக்கு அரசனாவதா?' என்றது.
10 அப்போது மரங்கள் சீமை அத்திமரத்திடம், 'நீ வந்து எங்கள் அரசனாக இரு' என்க, அத்திமரம்,
11 'நான் என் இனிமையையும் நற்கனிகளையும் உதறிவிட்டு, மரங்களுக்குத் தலைவனாகவா?' என்றது.
12 பின்னர் மரங்கள் திராட்சையிடம், 'நீ வந்து எம்மை அரசாள்' என்றன.
13 அதற்குத் திராட்சை, 'தேவர்களையும் மனிதரையும் மகிழ்விக்கும் என் இரசத்தை விட்டு விட்டு, மரங்களை அரசாள நினைப்பேனோ?' என்றது.
14 அப்போது மரங்கள் எல்லாம் முட்செடியிடம், 'நீ வந்து எம்மை அரசாள்' என்றன.
15 அதற்கு முட்செடி, 'உண்மையாகவே நீங்கள் என்னை அரசனாக்கினால், எல்லாரும் என் நிழலில் வந்து இளைப்பாறுங்கள். இளைப்பாற மனமில்லையானால், முட்செடியினின்று தீ கிளம்பி லீபானின் கேதுரு மரங்களைச் சுட்டெரிக்கட்டும்' என்றது.
16 எனவே, உங்களுக்காகப் போரிட்டு உங்களை மதியானியர் கையிலிருந்து மீட்க
17 ஆபத்திலும் தன்னுயிரைப் பொருட்படுத்தாத ஜெரோபாவாலுக்கும் அவர் வீட்டாருக்கும் செய்நன்றியறியும் வகையில் குற்றமற்ற நேர்மையுள்ளத்தோடு அபிமெலேக்கை உங்கள் அரசனாக்கியிருந்தால் சரி;
18 நீங்களோ இன்று என் தந்தை வீட்டிற்கு எதிராய் எழும்பி அவர் எழுபது புதல்வரையும் ஒரே கல்லின்மேல் கொன்ற அவருடைய வேலைக்காரியின் மகனும் உங்கள் சகோதரனுமான அபிமெலேக்கைச் சிக்கேம் குடிகளுக்கு அரசனாக்கியிருக்கிறீர்களே!
19 எனவே, ஜெரோபாவாலுக்கும் அவர் வீட்டாருக்கும் குற்றமற்ற வகையில் நேர்மையோடு நீங்கள் நடந்திருந்தால், அபிமெலேக்கைப் பற்றி மகிழுங்கள்; அவனும் உங்களைப் பற்றி மகிழட்டும்.
20 நேர்மையற்று அதை நீங்கள் செய்திருந்தால், அவனிடமிருந்து தீ கிளம்பிச் சிக்கேம் குடிகளையும் மெல்லோ நகரையும் சுட்டெரிக்கட்டும். சிக்கேம் ஊராரிடமும் மெல்லோ நகரத்தாரிடமுமிருந்து தீ கிளம்பி அபிமேலேக்கைச் சுட்டெரிக்கட்டும்" என்றான்.
21 இவற்றைச் சொன்னபிறகு தன் சகோதரன் அபிமெலேக்குக்கு அஞ்சிப் பேராவுக்கு ஓடிப்போய் அங்கு வாழ்ந்தான்.
22 எனவே அபிமெலேக் இஸ்ராயேலை மூன்று ஆண்டுகள் ஆண்டான்.
23 பிறகு ஆண்டவர் அபிமெலேக்குக்கும் சிக்கேம் ஊராருக்கும் இடையே கொடும் பகையை மூட்டினார்.
24 அவனை அவர்கள் பகைத்தனர். அவர்கள் ஜெரோபாவாலின் எழுபது புதல்வரைக் கொன்று சிந்தின இரத்தப் பழியைத் தம் சகோதரன் அபிமெலக்கின் மேலும், அவனுக்கு உதவிய மற்றச் சிக்கேம் தலைவர்கள் மேலும் சாட்டினர்.
25 அவனுக்கு எதிராக மலை உச்சியில் கண்ணி வைத்து, அவன் வருமுன்னே அவ்வழியே சென்ற வரை எல்லாம் கொள்ளையடித்தனர். இது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.
26 அதற்குள் ஒபேத் மகன் காவால் தன் சகோதரரோடு சிக்கேமுக்கு வந்தான். அவனது வருகையால் உரம் பெற்ற சிக்கேம் ஊரார்,
27 வெளிக்கிளம்பித் திராட்சைத் தோட்டங்களைப் பாழாக்கிப் பழங்களை மிதித்து ஆடிப்பாடித் தம் கடவுளின் கோயிலினுள் புகுந்து, உண்டு குடித்து அபிமெலேக்கைச் சபித்தனர்.
28 அப்போது ஒபேத் மகன் காவால், "அபிமெலேக் யார்? சிக்கேம் எங்கே? நாங்கள் ஏன் அவனுக்கு ஊழியம் செய்யவேண்டும்? அவன் ஜெரோபாவாலின் மகன் தானே? அவன் தன் ஊழியன் சேபூலைச் சிக்கேமின் தந்தை ஏமோரின் மனிதருக்குத் தலைவனாக்கவில்லையோ? நாங்கள் ஏன் அவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும்?
29 ஆ! இம்மக்கள் மட்டும் என் கைக்குள் இருந்தால் நான் அபிமெலேக்கைக் கொன்று போடுவேன்!" என்றான். அப்போது யாரோ அபிமெலேக்கிடம், "உன் படைகளைத் திரட்டி நீ புறப்பட்டு வா" என்றான்.
30 ஏனெனில் நகரின் தலைவன் சேபூல் ஒபேதின் மகன் காவாலின் சொற்களைக் கேட்டு மிகவும் கோபமுற்றான்.
31 எனவே அபிமெலேக்குக்கு மறைவில் ஆள் அனுப்பி, "ஒபேதின் மகன் காவால் தன் சகோதரரோடு சிக்கேமுக்கு வந்து உனக்கு எதிராய் நகரைப் பிடிக்கப் பார்க்கிறான்.
32 எனவே, நீ இரவில் எழுந்து உன்னோடுள்ள மக்களோடு வயலிலே பதுங்கியிரு;
33 காலையில் சூரியன் தோன்றும் வேளையில் நகரின் மேல் பாய்ந்திடு; அவன் தன் ஆட்களோடு உனக்கு எதிராகப் புறப்படும் போது அவனுக்கு உன்னால் கூடியதைச் செய்" என்று சொன்னான்.
34 அவ்வாறே அபிமெலேக் தன் எல்லாச் சேனைகளோடும் இரவில் எழுந்து சிக்கேமைச் சுற்றி நான்கு இடங்களில் பதுங்கியிருந்தான்.
35 ஒபேதின் மகன் காவால் புறப்பட்டு நகரின் வாயிலில் நின்றான். அப்போது அபிமெலேக்கும் அவன் சேனைகளும் பதுங்கியிருந்த இடங்களிலிருந்து எழுந்தனர்.
36 காவால் அம்மக்களைப் பார்த்த போது சேபூலை நோக்கி, "இதோ மலைகளினின்று திரளான மக்கள் இறங்கி வருகின்றனர்" என்றான். அதற்கு அவன், "நீ மலைகளின் நிழலைக் கண்டு அவற்றை மனிதர் என்று எண்ணி ஏமாந்திருக்கிறாய்; இது உன் கண் மயக்கமே" என்றான்.
37 மறுபடியும் காவால், "நாட்டின் மேட்டிலிருந்து மக்கள் புறப்பட்டு இறங்கி வருகின்றனர். இதோ ஒரு படை கருவாலி மரத்தை நோக்கி வருகிறது" என்றான்.
38 அதற்குச் சேபூல், "நாங்கள் அபிமெலேக்குக்கு ஊழியம் செய்ய வேண்டிய தேவை என்ன என்று அன்று கூறிய உன் வாய் எங்கே? நீ வெறுத்த மக்கள் அல்லரோ அவர்கள்? இப்போது நீ வெளியேறி அவர்களோடு போர்தொடு" என்றான்.
39 சிக்கேம் மக்களின் கண் முன் காவால் போய் அபிமெலேக்கை எதிர்த்துப் போரிட்டான்.
40 அபிமெலேக் அவனைத் துரத்தி நகருக்குள் விரட்டினான். அவன் ஆட்களில் பலர் நகரின் வாயில் வரை விழுந்து மடிந்து கிடந்தனர்.
41 அபிமெலேக் ரூமாவில் தங்கினான். செபூலோ, நாவாலையும் அவனைச் சார்ந்தோரையும் நகரிலிருந்து துரத்தினான். அவர்கள் அங்குத் தங்குவதை அவன் விரும்பவில்லை.
42 மறுநாள் மக்கள் வெளியே வயலுக்கு வரக் கிளம்பினர். இச்செய்தி அபிமெலேக்குக்குத் தெரிவிக்கப்பட்டது.
43 அவன் தன் படையை நடத்திச் சென்று, அதை மூன்றாகப் பிரித்து வயல்களில் பதுங்கியிருந்தான். மக்கள் நகருக்கு வெளியே வந்த போது அபிமெலேக் எழுந்து அவர்கள் மேல் பாய்ந்தான்.
44 தன் படையைக் கொண்டு நகரைத் தாக்கி முற்றுகையிட்டான். வேறிரு படைகளும் அங்குமிங்கும் ஓடின. எதிரிகளைத் துரத்திச் சென்றன.
45 அபிமெலேக்கோ அன்று முழுவதும் நகரோடு போரிட்டு அதைப் பிடித்து மக்களைக் கொன்று போட்ட பின், அழிவுற்ற நகரில் உப்பை விதைத்தான்.
46 சிக்கேம் கோட்டையில் வாழ்ந்தோர் இதை கேள்வியுற்ற போது பெரித் எனும் தம் தெய்வத்தின் கோவினுள் நுழைந்து உடன்படிக்கை செய்து கொண்டனர். அதனால் அவ்விடத்திற்கு அப்பெயர் வந்தது. அது நன்கு காவல் செய்யப்பட்டிருந்தது.
47 சிக்கேம் கோபுரத்தில் மனிதர் எல்லாரும் கூடியிருக்கிறார்கள் என்று அபிமெலேக் கேள்வியுற்று, தன் சேனைகளுடன் செல்மோன் மலையின் மேல் ஏறினான்.
48 தன் கையில் ஒரு கோடாரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கிளையை வெட்டித் தன் தோளின் மேல் வைத்துக்கொண்டு, தன் தோழரை நோக்கி, "நான் செய்வதைப் போன்றே நீங்களும் உடனே செய்யுங்கள்" என்றான்.
49 அப்படியே அவர்கள் ஒவ்வொரு வரும் மரக்கிளைகளை வெட்டித் தம் தலைவனைப் பின் சென்று, கோட்டையைச் சுற்றிலும் மரங்களை அடுக்கித் தீயிட்டனர். தீயாலும் புகையாலும் கோட்டையில் இருந்த ஆணும் பெண்ணுமாக ஆயிரம் பேர் மாண்டனர்.
50 பிறகு அபிமெலேக் அங்கிருத்து புறப்பட்டுத் தெபேசுக்குப் போய்த் தன் சேனைகளோடு நகரை வளைத்து முற்றுகையிட்டான்.
51 நகரின் நடுவே உயர்ந்த கோபுரம் இருந்தது. ஆண்களும் பெண்களும் மக்கட் தலைவர்களும் அதற்குள் ஓடிப்போய்க் கதவுகளை இறுக்கி அடைத்து விட்டு, கோபுரத்தின் மேல் ஏறி அதன் உச்சிக்குச் சென்றனர்.
52 அபிமெலேக் கோபுரத்தின் அருகில் வந்து கொடும் போர் புரிந்தான். கதவை நெருங்கி அதைச் சுட்டெரிக்க முயன்றான்.
53 அந்நேரத்தில் ஒரு பெண் ஓர் எந்திரக் கல்லின் துண்டை அபிமெலேக்கின் மேல் போட்டு அவன் மண்டையை உடைத்தாள்.
54 அவன் உடனே தன் பரிசையனைக் கூப்பிட்டு, "ஒரு பெண்ணால் கொலையுண்டேன் என்று மக்கள் கூறாதபடிக்கு, நீ உன்வாளை உருவி என்னை வெட்டிவிடு" என்றான். அவனும் தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றும் வகையில் அவனைக் கொன்றான்.
55 அபிமெலேக் இறந்தபின் அவனுடன் இருந்த எல்லா இஸ்ராயேலரும் தத்தம் இடங்களுக்குத் திரும்பினர்.
56 அபிமெலேக் தன் எழுபது சகோதரரைக் கொன்று தன் தந்தைக்குச் செய்த பழிக்குக் கடவுள் அவனைப் பழிவாங்கினார்.
57 சிக்கேம் ஊரார் செய்த எல்லாத் தீமைகளையும் கடவுள் அவர்கள் தலை மேலேயே சுமத்தினார். ஜெரோபாவாலின் மகனான யோவாத்தாம் இட்ட சாபம் அவர்கள் மேல் விழுந்தது.
அதிகாரம் 10
1 அபிமெலேக்குக்குப்பின், எபிராயிம் மலைநாட்டுச் சாமிர் ஊரில் வாழ்ந்த இசாக்கார் கோத்திரத்தானான அபிமெலேக்கின் சிற்றப்பன் பூவாவின் மகன் தோலா இஸ்ராயேலை ஆண்டுவந்தான்.
2 அவன் இருபத்திமூன்று ஆண்டுகள் இஸ்ராயேலுக்கு நீதி வழங்கின பிறகு இறந்து சாமிரில் புதைக்கப்பட்டான்.
3 இவனுக்குப் பின் காலாதியனான யாயிர் தோன்றி இருபத்திரண்டு ஆண்டுகள் இஸ்ராயேலுக்கு நீதிபதியாய் இருந்தார்.
4 அவருக்கு முப்பது புதல்வர் இருந்தனர். இவர்கள் முப்பது கழுதைக் குட்டிகளின்மேல் அமர்ந்து முப்பது நகர்களுக்குத் தலைமை வகித்து வந்தனர். எனவே, அந்நகரங்கள் காலாதில் இது வரை யாயிர் நகர்கள் என்று பொருள் படும் ஆவோத்-யாயிர் என்று அழைக்கப்படுகின்றன.
5 யாயிர் இறக்கவே காமோன் என்ற இடத்தில் புதைக்கப்பட்டார்.
6 இஸ்ராயேல் மக்களோ, பழைய பாவங்களுடன் புதிதாய்ப் பாவங்களைச் செய்து ஆண்டவர் திருமுன் பழிகாரராகி, பாவால், அஸ்தரோத்தின் சிலைகளையும், சீரியா, சீதோன், மோவாப் நாட்டுத் தேவர்கள், அம்மோன் புதல்வரின் தேவர்கள், இன்னும் பிலிஸ்தியரின் தேவர்களையும் வழிபட்டனர். ஆண்டவரை அவர்கள் வழிபடாமல் கைவிட்டனர்.
7 ஆண்டவர் அவர்கள் மேல் கோபமுற்று அவர்களைப் பிலிஸ்தியருக்கும், அம்மோன் புதல்வருக்கும் கையளித்தார்.
8 யோர்தானுக்கு அப்புறத்துக் காலாதிலுள்ள அமோறையர் நாட்டில் இருந்தோர் எல்லாரும் பதினெட்டு ஆண்டுகள் மிகவும் ஒடுக்கித் துன்புறுத்தப்பட்டனர்.
9 எனெனில், அம்மோன் புதல்வர் யோர்தானைக் கடந்து, யூதா, பெஞ்சமின், எபிராயிம் கோத்திரங்களோடு போரிட்டு அவர்கள் நாட்டைப் பாழாக்கினர். எனவே, இஸ்ராயேலர் மிகவும் துன்புற்றனர்.
10 ஆகையால், ஆண்டவரை நோக்கி, "எங்கள் ஆண்டவராகிய கடவுளை நாங்கள் கைவிட்டுப் பாவாலை வழிபட்டதால் பாவிகளானோம்" என்று கதறி அழுதனர்.
11 ஆண்டவர் அவர்களை நோக்கி, "எகிப்தியரும் அமோறையரும் அம்மோன் புதல்வரும் பிலிஸ்தியரும், சீதோனியரும் அமலேக்கியரும் கானானையரும்
12 உங்களைத் துன்புறுத்த, நீங்கள் நம்மை நோக்கி முறையிட்ட போது, நாம் உங்களை அவர்கள் கையிலிருந்து மீட்கவில்லையா?
13 அப்படி மீட்டும், நீங்கள் நம்மைக் கைவிட்டு அன்னிய தேவர்களை வழிபட்டீர்கள். எனவே, இனிமேல் உங்களை மீட்கமாட்டோம்.
14 நீங்களே தேர்ந்துகொண்ட தேவர்களிடம் போய் மன்றாடுங்கள். இக்கட்டு வேளையில் அவர்களே உங்களை மீட்கட்டும்" என்றார்.
15 இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கி, "பாவிகளானோம்; உமது திருவுளப்படியே எம்மைத் தண்டியும்; இந்த ஒரு முறை மட்டும் எம்மை மீட்டருளும்" என்று மன்றாடினர்.
16 அன்னிய தேவர்களின் எல்லாச் சிலைகளையும் தங்கள் எல்லைக்கு அப்பால் எறிந்து விட்டுத் தங்கள் ஆண்டவராகிய கடவுளை வழிபட்டனர். அப்போது அவர் இஸ்ராயேலின் இழிநிலை கண்டு இரங்கினார்.
17 பின்னர் அம்மோன் புதல்வர் அர்ப்பரித்துக் காலாத் நாட்டில் கூடாரங்களை அடித்தனர். அவர்களுக்கு எதிராக இஸ்ராயேல் மக்கள் ஒன்றாய்க் கூடி மாஸ்பாவிலே பாளையமிறங்கினர்.
18 அப்போது காலாத்தின் மக்கட் தலைவர்கள், "அம்மோன் புதல்வரை நமக்குள் முதன் முதல் எதிர்க்கத் தொடங்குபவனே காலாத் மக்களின் தலைவன் ஆகட்டும்" என்று ஒருவர் ஒருவரிடம் கூறினர்.
அதிகாரம் 11
1 அக்காலத்தில் காலாத்தியனான ஜெப்தே வன்மை மிக்க போர்வீரனாய் இருந்தான். அவன் காலாத்துக்கு ஒரு விலைமாதின் வயிற்றில் பிறந்தவன்.
2 காலாத்துக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மூலம் அவனுக்குப் புதல்வர் இருந்தனர். இவர்கள் வளர்ந்த பின் ஜெப்தேயை நோக்கி, "நீ வேறொரு தாய்க்குப் பிறந்தவன்; தந்தை வீட்டில் உனக்கு உரிமை இல்லை" என்று கூறி அவனைத் துரத்தி விட்டனர்.
3 அப்போது ஜெப்தே அவர்களைப் பிரிந்து, ஓடிப்போய்த் தோப் நாட்டில் வாழ்ந்தான். திக்கற்றவரும் கொள்ளையடிப்போருமான பலர் அவனோடு சேர்ந்து அவனைத் தம் தலைவனாகக் கொண்டு பின் சென்றனர்.
4 அக்காலத்தில் அம்மோன் புதல்வர் இஸ்ராயேலரோடு போர் தொடுத்தனர்.
5 அவர்கள் இவர்களைக் கொடுமைப் படுத்தினதால் காலாத் நாட்டுப் பெரியோர் தமக்குத் துணையாக தோப் நாட்டு ஜெப்தேயை அழைக்கச் சென்றனர்.
6 அங்கே அவனை நோக்கி, "நீ எம் தலைவனாக வந்திருந்து அம்மோன் புதல்வரோடு போர்தொடு" என்றனர்.
7 அதற்கு அவன், "என்னைப் பகைத்து என் தந்தை வீட்டினின்று என்னைத் துரத்தினது நீங்கள் அல்லவா? இப்போது தேவையை முன்னிட்டுத் தானே என்னிடம் வந்துள்ளீர்கள்?" என்றான்.
8 காலாத் நாட்டுப் பெருமக்கள் ஜெப்தேயை நோக்கி, "நீ எம்மோடு புறப்பட்டு அம்மோன் புதல்வரை எதிர்த்து, காலாத்திலிருக்கும் அனைவருக்கும் தலைவனாய் இருக்கவேண்டும் என்பதற்காக உன்னைத் தேடி வந்தோம்" என்றனர்.
9 மீண்டும் ஜெப்தே, "அம்மோன் புதல்வரோடு போர் புரிய நீங்கள் என்னை நேர்மையோடு அழைப்பீர்களானால், ஆண்டவர் அவர்களை என்னிடம் கையளிப்பாரானால், நான் உங்கள் தலைவனாய் இருப்பேனா?" என்று கேட்டான்.
10 அதற்கு அவர்கள், " நாங்கள் சொன்னதை நிறைவேற்றுவோம் என்ற எமது கூற்றைக் கேட்ட ஆண்டவரே இதற்கு நடுவரும் சாட்சியுமாய் இருக்கிறார்" என்றனர்.
11 ஆகையால், ஜெப்தே காலாத்தின் பெரியோரோடு சென்றான். எல்லா மக்களும் அவனைத் தம் தலைவனாக்கினர். ஜெப்தே மாஸ்பாவில் ஆண்டவர் திருமுன் தன் நிபந்தனைகளை எல்லாம் திரும்பவும் கூறினான்.
12 அப்பொழுது அவன், "நீ எனக்கு எதிராக எழுந்து என் நாட்டைக் கொள்ளையடித்துப் பாழாக்க உனக்கும் எனக்கும் வழக்கு என்ன?" என்று நேரில் கேட்கும்படி அம்மோன் புதல்வரின் அரசனுக்குத் தூதரை அனுப்பினான்.
13 அதற்கு அவன், "இஸ்ராயேலர் எகிப்தினின்று வருகையில் ஆர்னோன் முதல் ஜாபோக், இன்னும் யோர்தான் வரையுள்ள என் நாட்டை எடுத்துக்கொண்ட அந்த வழக்குத்தான். இப்போது நீ அதைச் சமாதானமாய் எனக்குத் திரும்பக் கொடுத்து விடு" என்றான்.
14 ஜெப்தே மீண்டும் தூதரை அனுப்பி, அம்மோன் அரசனுக்கு இவ்வாறு அறிவிக்கும்படி கட்டளையிட்டான்:
15 'ஜெப்தே சொல்லுவதாவது: இஸ்ராயேலர் மோவாப் நாட்டையும் அம்மோன் புதல்வர் நாட்டையும் பிடித்துக் கொள்ளவில்லை.
16 அவர்கள் எகிப்தினின்று வெளியேறிய போது பாலை நிலத்தின் வழியாகச் செங்கடல் வரை நடந்து காதேசுக்கு வந்தார்கள்.
17 அப்போது அவர்கள் ஏதோம் அரசனுக்குத் தூதரை அனுப்பி: 'நாங்கள் உன் நாட்டின் வழியாகப் போக அனுமதி அளி' என்றனர். அவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. மோவாப் அரசனுக்குத் தூதரை அனுப்பிக் கேட்க, அவனும் அவர்களுக்கு வழிவிடவில்லை.
18 எனவே, அவர்கள் காதேசில் தங்கிப் பிறகு, ஏதோம் நாட்டையும் மோவாப் நாட்டையும் சுற்றி, மோவாப் நாட்டின் கிழக்குப் பக்கமாக வந்து ஆர்னோனுக்கு அப்புறத்தில் பாளையம் இறங்கினார்கள். மோவாப் நாட்டின் எல்லைக்குள் அவர்கள் நுழையவில்லை. உண்மையில் ஆர்னோன் மோவாப் நாட்டின் எல்லையாகும்.
19 மீண்டும் எசேபோனில் வாழ்ந்து வந்த அமோறையரின் அரசன் செகோனுக்கு இஸ்ராயேல் மக்கள் தூதரை அனுப்பி, 'உன் நாட்டின் வழியாக நதிவரை போக எமக்கு அனுமதி அளி' என்றனர்.
20 அவனும் இஸ்ராயேலரின் வேண்டுகோளைப் புறிக்கணித்துத் தன் எல்லைகளைக் கடக்க அனுமதியாது, பெரும் சேனைகளைத் திரட்டி ஜாசாவில் அவர்களோடு வன்மையுடன் போரிட்டான்.
21 ஆண்டவர் அவனையும் அவன் சேனைகளையும் இஸ்ராயேலருக்குக் கையளிக்கவே, இவர்கள் அவனை முறியடித்து அப்பகுதியில் வாழ்ந்து வந்த அமோறையரின் நாட்டையெல்லாம் தம் உரிமையாக்கினர்.
22 அப்படியே இஸ்ராயேலர் ஆர்னோன் முதல் ஜாபோக்வரையிலும், பாலை நிலம் முதல் யோர்தான் வரையிலுமுள்ள நாட்டையும் தம் உரிமையாக்கினர்.
23 இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் தம் மக்களாம் இஸ்ராயேலர் மூலம் அமோறையரை முறியடித்திருக்க, நீ அந்நாட்டை உரிமையாக்கிக் கொள்வது முறையா?
24 உன் தேவன் காமோசுக்குச் சொந்தமான எதுவும் உனக்கும் சொந்தம்தானே? எம் ஆண்டவராகிய கடவுள் வெற்றியின் மூலம் சொந்தமாக்கின நாடு எமக்கும் சொந்தம் அன்றோ?
25 மோவாப் அரசன் சேபோர் மகன் பாலாக்கைவிட நீ வலிமை மிக்கவனோ? அவன் உன்னைப் போல் இஸ்ராயேலின் மேல் முறையிட்டான் என்றும், இதற்காகப் போரிட்டான் என்றும் உன்னால் எண்பிக்க முடியுமா?
26 இஸ்ராயேலரோ எசேபோனிலும் அதன் ஊர்களிலும், அரோயேரிலும் அதன் சிற்றூர்களிலும், யோர்தானை அடுத்த எல்லா நகர்களிலும் முந்நூறு ஆண்டுகளாய் வாழ்கின்றனரே, இத்தனை காலமாய் உன் உரிமையை அடைய நீ ஏன் முயலவில்லை? எனவே, நான் உனக்கு அநீதி இழைக்கவில்லை.
27 நீயே எனக்குக் கெடுதி செய்து அநியாயமாகப் போரிட வந்துள்ளாய். நடுவராகிய ஆண்டவரே இன்று இஸ்ராயேலுக்கும் அம்மோன் புதல்வருக்கும் நடுநின்று தீர்ப்பிடுவாராக" என்றான்.
28 ஆயினும் அம்மோன் புதல்வரின் அரசன் தூதர் மூலம் ஜெர்தே சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
29 அப்போது ஆண்டவரின் ஆவி, ஜெப்தேயின், மேல் வந்தது. அவன் காலாத், மனாசே, மாஸ்பா நாடெங்கும் சுற்றிவந்து, அங்கிருந்து அம்மோன் புதல்வரிடம் சென்று,
30 ஆண்டவருக்கு அளித்த வாக்குறுதியாவது: "நீர் அம்மோன் மக்களை என் கைவயமாக்குவீராகில்,
31 நான் அம்மோன் புதல்வரிடமிருந்து சமாதானமாய்த் திரும்பி வரும்போது என்னை எதிர்கொள்ள என் வீட்டு வாயிலில் எவர் வருவாரோ அவரை நான் ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பேன்" என்பதாம்.
32 பிறகு ஜெப்தே அம்மோன் புதல்வரோடு போரிட அவர்களது நாட்டுக்குப் போனான். ஆண்டவரும் அவர்களை அவன் கைவயமளித்தார்.
33 ஆரோயர் முதல் மென்னித் எல்லை வரை, திராட்சைத் தோட்டங்கள் செழித்துள்ள ஆபேல் வரை ஜெப்தே இருபது நகர்களைப் பிடித்து அழித்தொழித்தான். எனவே, அம்மோன் புதல்வர் இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டனர்.
34 பிறகு ஜெப்தே மாஸ்பாவிலிருந்த தன் வீட்டுக்குத் திரும்பி வரும் போது, இதோ! அவனுடைய ஒரே மகள் தம்புரு அடித்து நடனமாடும் பலரோடு அவனை எதிர் கொண்டு வந்தாள். அவளையன்றி அவனுக்கு வேறு பிள்ளை இல்லை.
35 அவன் அவளைக் கண்டவுடனே தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, "ஐயோ, என் மகளே, என்னையும் ஏமாற்றி, நீயும் ஏமாந்து போனாய்! நான் ஆண்டவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேனே! அந்த வாக்குறுதியை என்னால் மீறமுடியாதே!" என்றான்.
36 அதற்கு அவள், "தந்தாய், நீர் ஆண்டவருக்கு வாக்களித்திருக்கிறீர். உம் எதிரிகளைப் பழி வாங்கவும், அவர்களை வெல்லவும் அவர் உமக்குச் செய்தருளினாரே. நீர் அளித்துள்ள வாக்குறுதிபடியே எனக்கும் செய்யும்" என்று கூறினாள்.
37 மீண்டும் தன் தந்தையை நோக்கி, "என் ஒரு விண்ணப்பத்தை மட்டும் நீர் கேட்டருள வேண்டும். அதாவது, நான் இரு மாதங்கள் மலைகளின் மேல் சுற்றித் திரிந்து, நானும் என் தோழியரும் என் கன்னிமையை முன்னிட்டுக் கதறியழ அனுமதியும்" என்றாள்.
38 அதற்கு அவன், "போய்வா" என்று அவளை இரு மாதங்களுக்கு அனுப்பிவிட்டான். அவளும் தன் தோழியருடன் போய்த் தன் கன்னிமையின் பொருட்டு மலைகளின் மேல் துக்கம் கொண்டாடி,
39 இரு மாதங்களுக்குப்பிறகு தன் தந்தையிடம் திரும்பி வந்தாள். அப்போது அவன் தான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி அவளுக்குச் செய்தான். அவள் மனிதனை அறியாதிருந்தாள். அது முதல் இஸ்ராயேலில் வழக்கம் ஒன்று தோன்றி அனுசரிக்கப்பட்டு வந்தது.
40 அதாவது, ஆண்டுதோறும் இஸ்ராயேல் பெண்டீர் ஒன்று சேர்ந்து காலாதித்தனான ஜெப்தேயின் மகளைக் குறித்து நான்கு நாள் துக்கம் கொண்டாடுவார்கள்.
அதிகாரம் 12
1 அப்பொழுது எபிராயிம் வம்சத்தில் கலகம் உண்டானது. அவர்கள் வடக்கே சென்று ஜெப்தேயை நோக்கி, "அம்மோன் புதல்வருக்கு எதிராய் நீ போருக்குப் போகையில் நாங்களும் உன்னுடன் வர எங்களை ஏன் அழைக்கவில்லை? அதன் பொருட்டு உன் வீட்டைச் சுட்டெரித்துப் போடுவோம்" என்றனர்.
2 அதற்கு அவள், "என் மக்களுக்கும் எனக்கும் அம்மோன் புதல்வரோடு பெரும் பூசல் இருந்து வந்தது. எனக்கு உதவியாக நான் உங்களை அழைத்தேன். நீங்கள் அதற்கு இசையவில்லை;
3 அதைக் கண்டபோது நான் என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அம்மோன் புதல்வர் நாட்டுக்குப் போய் அவர்களை எதிர்த்தேன். ஆண்டவரும் அவர்களை என் கையில் ஒப்படைத்தார். நீங்கள் எனக்கு எதிராய் எழுந்து வர நான் என்ன குற்றம் செய்தேன்?" என்று சொல்லி,
4 காலாதிலிருந்த அனைவரையும் சேர்த்துக் கொண்டு எபிராயிமரோடு போரிட்டு அவர்களை முறியடித்தான். அதற்குக் காரணம், எபிராயிமர் காலாதைக் குறித்து, "காலாத் எபிராயிமை விட்டு ஓடிப் போனவன்; அவன் எபிராயீமுக்கும் மனாசேயுக்கும் நடுவே வாழ்கிறான்" என்று இகழ்ந்து கூறியிருந்தனர்.
5 எபிராயிமர் திரும்ப வேண்டிய வழியாகிய யோர்தானின் துறைகளைக் காலாதித்தர் பிடித்திருந்தனர். ஓடிப்போன எபிராயிமரில் யாராவது அங்கு வந்து, "நான் அக்கரை போக அனுமதியுங்கள்" என்ற போது காலாதித்தர் அவனை நோக்கி, "நீ எபிராயிமனோ?" என்பார்கள். அதற்கு அவன் "இல்லை" என்றால், அவர்கள், "ஷிபோலெத் என்று சொல்" என்பார்கள் அதற்கு 'கதிர்' என்று பொருள்.
6 அவன் ' ஷிபோலெத் ' என்று சரியாய் உச்சரிக்க முடியாமல் 'சிபோலெத்' என்று சொன்னால், அவர்கள் அவனை உடனே பிடித்து யோர்தானின் துறையிலேயே கொன்று போடுவர். அக்காலத்தில் எபிராயிமரில் நாற்பத்திரண்டாயிரம் பேர் மாண்டனர்.
7 காலாதித்தனான ஜெப்தே இஸ்ராயேலை ஆறு அண்டுகள் ஆண்ட பின் இறந்து, காலாத் நகரில் புதைக்கப்பட்டான்.
8 அதன் பிறகு பெத்லகேம் ஊரானான அபேசான் இஸ்ராயேலுக்கு நீதி வழங்கி வந்தார்.
9 அவருக்கு முப்பது புதல்வரும் முப்பது புதல்வியரும் இருந்தனர். அவர் தம் புதல்வியரை வெளி இடங்களில் மணம் முடித்துக் கொடுத்தார்; அதே போன்று வெளியிடத்துப் பெண்களைத் தம் புதல்வர்க்கு மணம் முடித்து வைத்தார். அவர் இஸ்ராயேலுக்கு ஏழு ஆண்டுகள் நீதி வழங்கி வந்தார்.
10 பின்பு அவர் இறக்கவே, பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டார்.
11 அவருக்குப் பிறகு, ஜாபுலோனித்தனான ஆயியாலோன் தோன்றி இஸ்ராயேலுக்குப் பத்து ஆண்டுகள் நீதி வழங்கி வந்தார்.
12 அவரும் இறந்து ஜாபுலோனில் புதைக்கப்பட்டார்.
13 அவருக்குப் பிறகு பாராத்தோனித்தனான இலேமின் மகன் அப்தோன் இஸ்ராயேலுக்கு நீதி வழங்கி வந்தார்.
14 அவருக்கு நாற்பது புதல்வரும், அவர்கள் மூலம் முப்பது பேரப் பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்கள் கழுதைக் குட்டிகளின் மேல் ஏறி வந்தனர். அவர் இஸ்ராயேலுக்கு எட்டு ஆண்டுகள் நீதி வழங்கி வந்தார்.
15 அவரும் இறந்து அமெலேக் மலையில் எபிராயிமைச் சேர்ந்த நாட்டிலுள்ள பாராத்தோனில் புதைக்கப்பட்டார்.
அதிகாரம் 13
1 மீண்டும் இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் பழிபாவம் புரிய, அவர் அவர்களை நாற்பது ஆண்டுகள் பிலிஸ்தியர் கையில் ஒப்புவித்தார்.
2 சாராவில் தான் கோத்திரத்தானான மனுவே என்ற ஒருவன் இருந்தான். அவன் மனைவி மலடியாய் இருந்தாள்.
3 அவளுக்கு ஆண்டவரின் தூதர் தோன்றி அவளை நோக்கி, "பிள்ளைகள் இல்லாத மலடி நீ; ஆனால் கருத்தாங்கி ஒரு மகனைப் பெறுவாய்.
4 எனவே, நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாமலும், அசுத்த உணவுகளை உண்ணாமலும் எச்சரிக்கையாய் இரு.
5 ஏனெனில் நீ கருத்தாங்கி ஒரு மகனைப் பெறுவாய். அவன் தலை மேல் கத்தி படலாகாது. அவன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட நாசேரேயனாய் இருப்பான். அவனே இஸ்ராயேலரைப் பிலிஸ்தியர் கைகளினின்று மீட்பான்" என்றார்.
6 அப்பொழுது அவள் தன் கணவனிடம் வந்து அவனை நோக்கி, "வானவனின் முகத்தையுடைய அச்சம் தரும் கடவுளின் மனிதர் ஒருவர் என்னிடம் வந்தார். அவர் யார் என்றும் எங்கிருந்து வந்தவர் என்றும் பெயர் என்ன என்றும் நான் கேட்டேன். அவர் எனக்குப் பதில் ஒன்றும் கூறாது, என்னை நோக்கி,
7 நீ கருத்தாங்கி ஒரு மகனைப் பெறுவாய்; நீ திராட்சை இரசமோ, மது பானமோ அருந்தாமலும் அசுத்த உணவுகளை உண்ணாமலும் எச்சரிக்கையாய் இரு. ஏனெனில் அவன் பிறந்தது முதல் சாகும் வரை தன் வாழ்நாள் முழுவதும் கடவுளின் நாசரேயனாய் இருப்பான் என்றார்" என்று கூறினாள்.
8 ஆகையால், மனுவே ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே, நீர் அனுப்பின கடவுளின் ஆள் மீண்டும் எம்மிடம் வந்து, பிறக்கப் போகிற பிள்ளைக்கு நாங்கள் செய்ய வேண்டியவற்றை எமக்கு எடுத்துச் சொல்ல வேண்டுகிறேன்" என்றான்.
9 மனுவேயின் மன்றாட்டை ஆண்டவர் கேட்டார். வயல் வெளியில் உட்கார்ந்திருந்த அவன் மனைவிக்கு இறைவனின் தூதர் மீண்டும் தோன்றினார். அவளுடைய கணவன் மனுவே அவளோடு இல்லை. அவள் வானவனைக் கண்டதும்,
10 விரைவில் எழுந்து தன் கணவனிடம் ஓடி, "இதோ நான் முன்பு கண்ட மனிதர் தோன்றியுள்ளார்" என்று அறிவித்தாள்.
11 அவன் எழுந்து, தன் மனைவியைப் பின் தொடர்ந்து அம் மனிதரிடம் வந்து, அவரை நோக்கி, "இப் பெண்ணுடன் பேசியவர் நீர்தானா?" என்று கேட்டான். அதற்கு அவர், "நான்தான்" என்றார்.
12 அப்போது, மனுவே, நீர் கூறினது நிறைவேறின பின் பிள்ளை செய்ய வேண்டியது என்ன? விலக்க வேண்டியவை என்ன?" என்றான்.
13 ஆண்டவரின் தூதர் மனுவேயைப் பார்த்து, "உன் மனைவி நான் கூறினபடி நடக்கட்டும்;
14 திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையும் அவள் சாப்பிடக்கூடாது. திராட்சை இரசத்தையும் மதுபானத்தையும் குடியாது, அசுத்த உணவுகளை உண்ணாது இருக்க வேண்டும்; நான் கூறினவற்றை எல்லாம் அவள் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
15 அப்போது மனுவே ஆண்டவரின் தூதரை நோக்கி, "என் மன்றாட்டைக் கேட்டருளும். நாங்கள் ஒரு வெள்ளாட்டுக் குட்டியை உமக்காகச் சமைப்போம்" என்று வேண்டினான்.
16 அதற்கு வானவர், " நீ என்னைக் கட்டாயப்படுத்தினும் உன் உணவை உண்ணேன். நீ தகனப் பலியிட விரும்பினால் அதை ஆண்டவருக்குச் செலுத்து" என்றார். அவர் ஆண்டவரின் தூதர் என்று மனுவேய்க்குத் தெரியாது.
17 அப்போது அவன் மீண்டும் அவரை நோக்கி, "நீர் கூறின வாக்கு நிறைவேறும் போது நாங்கள் உம்மை வாழ்த்தும் படிக்கு உமது பெயர் என்ன?" என்று கேட்டான்.
18 அதற்கு அவர், "வியப்புக்குரிய என் பெயரை நீ ஏன் கேட்கிறாய்?" என்றார்.
19 எனவே, மனுவே போய் வெள்ளாட்டுக் குட்டியையும் பானப்பலிகளையும் கொணர்ந்து, கல்லின் மேல் வைத்து, வியப்புக்குரியன புரியும் ஆண்டவருக்கு அவற்றை ஒப்புக்கொடுத்தான். அவனும் அவன் மனைவியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
20 பலிபீடத்திலிருந்து தீப்பிழம்பு வானத்திற்கு எழும்புகையில் அப்பிழம்பில் ஆண்டவரின் தூதரும் எழுப்பினார். மனுவேயும் அவன் மனைவியும் அதைக் கண்ட போது, தரையில் குப்புற விழுந்தார்கள்.
21 பிறகு ஆண்டவரின் தூதர் அவர்கள் கண்ணுக்குப் படவேயில்லை. எனவே, அவர் ஆண்டவரின் தூதர் என்று மனுவே அறிந்து,
22 தன் மனைவியை நோக்கி, "நாம் ஆண்டவரைக் கண்டதால் கட்டாயம் சாவோம்" என்றான்.
23 அதற்கு அவன் மனைவி, "ஆண்டவருக்கு நம்மைக் கொல்ல மனமிருந்தால், நாம் ஒப்புக் கொடுத்த தகனப் பலியையும் பானப் பலிகளையும் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார்; நமக்கு இவற்றையெல்லாம் காண்பித்திருக்கவுமாட்டார்; வரும் காரியங்களை நமக்கு அறிவித்திருக்கவும் மாட்டார்" என்றாள்.
24 பிறகு அவள் ஒரு மகளைப் பெற்று அவனுக்குச் சாம்சன் என்று பெயரிட்டாள். பிள்ளை வளர்ந்து ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டான்.
25 பிறகு அவன் சாராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தானின் பாளையத்திலிருக்கும் போது ஆண்டவரின் ஆவி அவன் மேல் இருக்கத் தொடங்கிற்று.
அதிகாரம் 14
1 சாம்சன் தம்னாத்தாவுக்குப் போய் அங்குப் பிலிஸ்தியர் புதல்வியருள் ஒருத்தியைக் கண்டு,
2 திரும்பிப் போய்த் தன் தாய் தந்தையரிடம், "தம்னாத்தாவில் பிலிஸ்தியர் புதல்வியருள் ஒருத்தியைக் கண்டேன். நீங்கள் தயவு செய்து அவளை எனக்கு மணமுடித்துத் தரவேண்டும்" என்றான்.
3 அதற்கு அவன் தாயும், தந்தையும், "உன் சகோதரர் புதல்வியரிலும் நம் உறவினத்திலும் பெண் இல்லையா? விருத்தசேதனம் செய்யப்படாத பிலிஸ்தியருள் ஒருத்தியை நீ ஏன் மனைவியாகத் தேர்ந்துகொள்ள வேண்டும்?" என்றனர். அதற்குச் சாம்சன் தந்தையை நோக்கி, "அவளையே எனக்கு முடிக்க வேண்டும். ஏனெனில் அவளை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்றான்.
4 அவன் பெற்றோர், இது ஆண்டவர் செயல் என்றும், அவன் பிலிஸ்தியரை அழிக்க நேரம் தேடுகிறார் என்றும் அறியாதிருந்தனர். ஏனெனில் அக்காலத்தில் பிலிஸ்தியர் இஸ்ராயேலை ஆண்டு கொண்டிருந்தார்கள்.
5 எனவே சாம்சன் தன் தாய் தந்தையரோடு தம்னாத்துக்குச் சென்றான். ஊரின் அருகே இருந்த திராட்சைத் தோட்டங்களை அவர்கள் நெருங்கின போது கொடிய சிங்கக்குட்டி ஒன்று முழங்கிக் கொண்டு அவனுக்கு எதிரில் வந்தது.
6 ஆண்டவரின் ஆவி சாம்சன் மேல் இறஙகினதால் அவன் கையில் ஒன்றுமில்லாதிருந்தும் ஆட்டுக் குட்டியைக் கிழித்துப் போடுவது போல் அச்சிங்கத்தைக் கிழித்துத் துண்டித்தான். ஆயினும், தான் செய்ததைத் தன் தாய் தந்தையருக்கு அவன் அறிவிக்கவில்லை.
7 பிறகு அவன் போய்த் தனக்குப் பிடித்திருந்த அப்பெண்ணுடன் பேசினான்.
8 சிலநாள் சென்று அவளை மணம் செய்து கொள்ளத் திரும்பவும் வரும்போது, முன்பு தான் கொன்ற சிங்கத்தின் உடலைக் காண வழியை விட்டுப் போய்ப் பார்த்தான். அதன் வாயில் தேனீக்கள் கூட்டமும் தேனும் இருந்தன.
9 அவன் அதைத் தன் கைகளில் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே வழி நடந்து தன் தாய் தந்தையரிடம் வந்து அவர்களுக்குத் தேனைக் கொடுத்தான். அவர்களும் அதை அருந்தினர். ஆனால் அது சிங்கத்தின் உடலினின்று எடுக்கப்பட்டது என்று அவர்களுக்கு அவன் அறிவிக்கவில்லை.
10 அவன் தந்தை அப்பெண் இருந்த இடம் சென்று தன் மகன் சாம்சனுக்கு விருந்து வைத்தான். வாலிபருக்கு அப்படிச் செய்வது வழக்கமாயிருந்தது.
11 நகர் வாழ்வோர் அவனைக் கண்டபோது அவனுடன் இருக்க முப்பது தோழரை அழைத்து வந்தனர்.
12 சாம்சன் அவர்களை நோக்கி, "நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்லுகிறேன். விருந்து நடக்கும் ஏழு நாளுக்குள் நீங்கள் அதை விடுவித்தால் நான் உங்களுக்கு முப்பது மென் துகில்களையும் முப்பது மேலாடைகளையும் கொடுப்பேன்.
13 உங்களால் அதை விடுவிக்க முடியவில்லை என்றால் முப்பது மென் துகில்களையும் முப்பது மேலாடைகளையும் நீங்கள் எனக்குத் தர வேண்டும்" என்றான். அதற்கு அவர்கள் "நாங்கள் கேட்கும்படி விடுகதையைச் சொல்" என்றார்கள்.
14 அப்போது சாம்சன் அவர்களைப் பார்த்து, "உண்போனிடமிருந்து உணவும், வலியோனிடமிருந்து இனிமையும் வெளிப்பட்டன" என்றான். முன்று நாட்களாக அதை அவர்கள் விடுவிக்க முடியவில்லை.
15 ஏழாம் நாள் வந்தபோது அவர்கள் சாம்சன் மனைவியை பார்த்து, "நீ உன் கணவனிடம் நயமாய்ப் பேசி அவ்விடுகதையின் பொருளை உனக்குக் கூற இணங்கச் செய்; அப்படிச் செய்யாவிட்டால், உன்னையும் உன் தந்தை வீட்டையும் தீக்கு இரையாக்குவோம். எங்களைக் கொள்ளையடிக்கவா உனது திருமணத்திற்கு அழைத்தாய்?" என்றனர்.
16 அவளோ சாம்சனிடம் கண்ணீர் விட்டு, " நீர் எனக்கு அன்பு செய்யாது என்னைப் பகைக்கிறீர்; எனவே தான் என் ஊராரின் புதல்வருக்கு நீர் கூறின விடுகதையை எனக்கு விளக்கிக் காட்டவில்லை" என்று முறையிட்டாள். அதற்கு அவன், "என் தாய் தந்தையருக்குக் கூட நான் அதைச் சொல்லவில்லையே; உனக்கு எப்படிச் சொல்ல கூடும்?" என்றான்.
17 விருந்து நடந்த ஏழு நாளும் அவள் அவன் முன்பாக அழுது கெண்டேயிருந்தாள். ஏழாம் நாளும் அவள் அவனைப் பாடாய்ப் படுத்தவே, சாம்சன் அவளுக்கு அதை விளக்கினான். உடனே அவள் அதைத் தன் ஊராருக்கு அறிவித்தாள்.
18 இவர்கள் ஏழாம் நாள் சூரியன் மறையுமுன் அவனை நோக்கி: "தேனை விட இனிமையானது எது? சிங்கத்தை விட வலிமையானது எது?" என்றனர். அதற்கு அவன், "நீங்கள் என் கிடாரியுடன் உழுதிராவிட்டால் என் விடுகதையை நீங்கள் கண்டு பிடித்திருக்க மாட்டீர்கள்" என்றான்.
19 ஆண்டவரின் ஆவி சாம்சன் மேல் இறங்கவே, அவன் அஸ்கலோனுக்குப் போய் முப்பது பேரைக் கொன்று அவர்களின் ஆடைகளை எடுத்து வந்து, கதையை விடுவித்தவர்களுக்குக் கொடுத்தான். பின்னர் மிகுந்த கோபம் அடைந்து தன் தந்தை வீட்டிற்குப் போனான்.
20 அவனுடைய மனைவியோ, அவனோடு திருமணத்திற்கு வந்திருந்த அவன் தோழர்களில் ஒருவனைத் தன் கணவனாகத் தேர்ந்து கொண்டாள்.
அதிகாரம் 15
1 சில நாட்கள் சென்ற பின்னர் கோதுமை அறுவடை காலம் வந்தது. அப்போது சாம்சன் தன் மனைவியைப் பார்க்க விரும்பி ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் கொண்டு வந்தான். வழக்கப்படி அவளுடைய அறையில் அவன் நுழைகையில் அவள் தந்தை அவனை உள்ளே போகவிடாது,
2 நீ அவளைப் பகைத்தாய் என்று நான் எண்ணி, உன் தோழனுக்கு அவளைக் கொடுத்து விட்டேன். ஆனால் அவளுடைய தங்கை இருக்கிறாள் அவளை விட அழகானவள். அவளுக்குப் பதிலாக இவள் உன் மனைவியாய் இருக்கட்டும்" என்றான்.
3 அதற்குச் சாம்சன், "இன்று முதல் நான் பிலிஸ்தியருக்குத் தீங்கு செய்தாலும் என் மேல் குற்றம் இராது" என்று சொன்னான்.
4 பிறகு அவன் புறப்பட்டுப் போய் முந்நூறு குள்ள நரிகளைப் பிடித்து, அவற்றின் வால்களை ஒன்றோடு ஒன்று இணைத்து, இரு வால்களுக்கிடையே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டினான்.
5 பிறகு பந்தங்களைக் கொளுத்தி அங்கும் இங்கும் ஓடும் படி துரத்தி விட்டான். நரிகள் பிலிஸ்தியரின் பயிர்களிடையே சென்று ஏற்கனவே கட்டை வைத்திருந்த அரிக்கட்டுக்களையும் நின்ற பயிர்களையும் சுட்டெரித்தன. திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புக்களையும் கூடச் சாம்பலாக்கின.
6 இதைக் கண்ட பிலிஸ்தியர், "இப்படிச் செய்தவன் யார்?" என்று கேட்டனர். அதற்கு, "தம்னாத்தேயனின் மருமகன் சாம்சன் தான். இவன் மனைவியை மாமன் மற்றொருவனுக்குக் கொடுத்து விட்டபடியால் இப்படிச் செய்தான்" என்றனர். எனவே பிலிஸ்தியர் வந்து அப்பெண்ணையும் அவள் தந்தையையும் சுட்டெரித்தனர்.
7 அதற்குச் சாம்சன், "நீங்கள் இப்படிச் செய்தும் கூட நான் மேலும் உங்களைப் பழிவாங்கியே அமைதியடைவேன்" என்றான்.
8 உண்மையில் சாம்சன் அவர்களைக் கொடுமையாய் வதைக்கத் தொடங்கினான். எனவே, அவர்கள் தொடை மேல் காலை வைத்துக்கொண்டு கதிகலங்கி நின்றனர். பின்பு சாம்சன் எத்தாமுக்கு அடுத்த பாறைக் குகைக்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான்.
9 அப்போது பிலிஸ்தியர் யூதா நாடு சென்று அங்கே பாளையமிறங்கினர். அவ்விடந்தில் அவர்கள் தோற்றத்தால் அவ்விடம் 'லேக்கி', அதாவது தாடை என்று அழைக்கப்பட்டது.
10 யூதா கோத்திரத்தார் அவர்களை நோக்கி, "நீங்கள் எமக்கு எதிராய்ப் படையெடுத்து வந்தது ஏன்?" என்றார்கள். அதற்கு அவர்கள், "சாம்சன் எமக்குச் செய்தது போல் நாங்களும் அவனுக்குச் செய்யவும், அவனைப் பிடித்துக் கட்டவுமே வந்தோம்" என்றனர்.
11 அப்போது யூதாவில் மூவாயிரம் பேர் எத்தாமின் பாறைக் குகைக்கு வந்து சாம்சனை நோக்கி, பிலிஸ்தியர் நம்மை ஆண்டு வருவதை நீ அறியாயோ? ஏன் இப்படிச் செய்தாய்?" என்றனர். அதற்கு அவன், "எனக்கு அவர்கள் செய்த படி நானும் அவர்களுக்குச் செய்தேன்" என்றான்.
12 அவர்கள் அவனைப் பார்த்து, "உன்னைக் கட்டிப் பிலிஸ்தியர் கையில் ஒப்படைக்க வந்துள்ளோம்" என்றனர். அதற்கு சாம்சன், "நீங்கள் என்னைக் கொல்லமாட்டீர்கள் என்று ஆணையிட்டு எனக்கு வாக்குறுதி கொடுங்கள்" என்றான்.
13 அவர்கள், "நாங்கள் உன்னை இறுகக் கட்டி அவர்கள் கையில் ஒப்படைப்போமேயன்றி உன்னைக் கொல்லமாட்டோம்" என்று சொல்லி, இரு புதுக் கயிறுகளால் அவனைக் கட்டி எத்தாம் பாறையிலிருந்து அவனைக் கொண்டு போயினர்.
14 தாடை என்ற இடத்தை அடைந்த போது பிலிஸ்தியர் அவனுக்கு எதிராய்க் கூச்சலிட்டு வந்தனர். அப்போழுது ஆண்டவரின் ஆவி அவன் மேல் இறங்கினது; அப்போது சாம்சனைக் கட்டியிருந்த கட்டுகள் தீப்பட்ட நூல் போல் அவன் கைகளை விட்டு அறுந்து போயின.
15 உடனே அவன் தரையில் கிடந்த ஒரு கழுதையின் கீழ்த் தாடையைக் கையிலெடுத்து, அதைக் கொண்டு, ஆயிரம் பேரைக் கொன்றான்.
16 பிறகு, அவன், "கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு, கழுதைக் குட்டியின் கீழ்த் தாடையைக் கொண்டு நான் அவர்களை வென்றேன். ஆயிரம் பேரைக் கொன்றேன்" என்றான்.
17 இச்சொற்களை அவன் பாடி முடித்த பின், தாடையைத் தன் கையினின்று விட்டெறிந்து, அவ்விடத்திற்குத் தாடை மேடு எனும் பொருள்பட 'ராமாத்லேக்கி' என்று பெயரிட்டான்.
18 மேலும், அவன் மிகுந்த தாகத்தினால் வருந்தி ஆண்டவரை நோக்கி, "உம் ஊழியன் கையால் இம்மாபெரும் மீட்பையும் வெற்றியையும் நீரே அளித்தீர். இதோ தாகத்தினால் சாகிறேன். விருத்தசேதனம் செய்யப்படாத இவர்கள் கையில் அகப்படப் போகிறேன்." என்றான்.
19 எனவே, கழுதைத் தாடையின் கடைப்பல் ஒன்றை ஆண்டவர் திறக்கவே அதனின்று தண்ணீர் வெளி வந்தது; அதை அவன் குடித்துப் புத்துயிர் பெற்றான்; வலிமையுற்றான். எனவே, இன்று வரை அவ்விடம் 'மன்றாடுகிறவனின் தாடை நீரூற்று' என அழைக்கப்படுகிறது.
20 பிலிஸ்தியர் காலத்தில் சாம்சன் இஸ்ராயேலருக்கு இருபது ஆண்டுகள் நீதி வழங்கி வந்தான்.
அதிகாரம் 16
1 பின்பு சாம்சன் காஜாம் நகருக்குப் போய் அங்கு ஒரு விலைமகளைக் கண்டு அவள் வீட்டிற்குள் நுழைந்தான்.
2 சாம்சன் நகருக்குள் நுழைந்தான் என்ற செய்தி உடனே பரவினது. பிலிஸ்தியர் அதைக் கேள்வியுற்று, அவனை வளைத்துப் பிடிக்க நகர் வாயில்களில் காவலரை நிறுத்தினர். இரவு முழுவதும் சத்தம் செய்யாது, பொழுது விடியும் நேரத்தில் சாம்சன் வெளியே வரும் போது, அவனைக் கொல்லக் காத்திருந்தனர்.
3 நடுநிசிவரை சாம்சன் தூங்கினான். பிறகு எழுந்து நகர வாயிலின் இரு கதவுகளையும் அவற்றின் நிலைகளையும் தாழ்ப்பாழ்களையும் பிடுங்கித் தன் தோள்மேல் வைத்துக் கொண்டு எபிரோனுக்கு எதிரேயுள்ள மலையுச்சிக்கு அவற்றைத் தூக்கிச் சென்றான்.
4 அதன் பிறகு அவன் சோரெக் பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த தாலிலா என்ற ஒருத்தியைக் காதலித்தான்.
5 பிலிஸ்தியர்களின் தலைவர்கள் அவளிடம் வந்து, அவளைப் பார்த்து, "நீ அவனிடம் நயந்து பேசி, இத்துணை வலிமை அவனுக்கு எங்கிருந்து வருகிறது என்றும், நாங்கள் எவ்விதமாய் அவனை மேற்கொண்டு கட்டித் துன்புறுத்தலாம் என்றும் அறிந்துகொள்; நீ இப்படிச் செய்தால் நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு ஆயிரத்தி நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுப்போம்" என்றனர்.
6 அவ்வாறே தாலிலா சாம்சனைப் பார்த்து, "உனக்கு இத்துணை பெரிய வலிமை எங்கிருந்து வருகிறது என்றும், கட்டை அறுக்க உன்னை வலுவற்றவன் ஆக்கக் கூடியது என்ன என்றும் எனக்குக் கூற உன்னை மன்றாடுகிறேன்" என்றாள்.
7 அதற்குச் சாம்சன், "உலராத பச்சையான ஏழு அகணி நார்க் கயிறுகளால் என்னைக் கட்டினால் பிற மனிதரைப்போல் வலிமையற்றவன் ஆவேன்" என்றான்.
8 அவன் சொன்னபடி பிலிஸ்தியத் தலைவர்கள் ஏழு கயிறுகளை அவளிடம் கொடுத்தனர். தாலிலா அவற்றால் அவனை கட்டினாள்.
9 பக்கத்து அறையில் பிலிஸ்தியர் ஒளிந்திருந்தனர். தாலிலா சாம்சனை நோக்கி, "சாம்சன், இதோ பிலிஸ்தியர் உன்மேல் பாய இருக்கின்றனர்" என்றாள். அப்போது பழுதான சணல் நூலிலே நெருப்புப் பட்டால் இற்றுப் போவது போல், அவன் தன் கயிறுகளை அறுத்துப் போட்டான். அவனது வலிமை எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.
10 தாலிலா அவனை நோக்கி, "நீ என்னைக் கேலி செய்து பொய் சொன்னாய்; உன்னை எதனால் கட்டலாம் என்று எனக்குக் கூறு" என்றாள்.
11 அதற்கு அவன், "ஒரு வேலைக்கும் பயன்படுத்தப்படாத புதுக் கயிறுகளால் என்னைக் கட்டினால் நான் வலிமையற்றுப் பிற மனிதரைப்போல் ஆவேன்" என்றான்.
12 மீண்டும் தாலிலா அவ்வாறே அவனைக் கட்டி, "சாம்சன், பிலிஸ்தியர் அறைக்குள் ஒளிந்திருந்து, இதோ உன்னைப் பிடிக்க வருகின்றனர்" என்று கூவினாள். அவனோ புடவை நூலை அறுப்பது போல் அக்கயிறுகளை அறுத்துப் போட்டான்.
13 மீண்டும் தாலிலா அவனை நோக்கி, "எதுவரை என்னை நீ ஏமாற்றிப் பொய் சொல்வாய்? உன்னை எதனால் கட்டலாம் என்று சொல்" என்றாள். அதற்கு அவன், "என் தலை மயிர்களில் ஏழு சடைகளை எடுத்து நூலோடு பின்னி ஆணியால் தரையில் அடித்தால் நான் வலிமையற்றுப் போவேன்" என்றான்.
14 தாலிலா அவ்வாறே செய்து, "சாம்சன், இதோ, பிலிஸ்தியர் உன் மேல் பாய இருக்கின்றனர்" என்றாள். அவனோ தூக்கத்தினின்று எழுந்து மயிரோடும் நூலோடும் ஆணியைப் பிடுங்கி விட்டான்.
15 ஆகையால் தாலிலா அவனை நோக்கி, "என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லாத போது நீ எனக்கு அன்பு செய்வதாகக் கூறுவது எப்படி? மும்முறை பொய் சொல்லி, மாபெரும் உன் வலிமை எங்கிருந்து வருகிறது என்று நீ கூறவேயில்லை" என்றாள்.
16 இப்படித் தாலிலா அவனைப் பல நாட்களாக அமைதியாய் இருக்க விடாது நச்சரித்து வந்ததால், அவன் மனம் தளர்வுற்று இறப்பு வரை சோர்வுற்றான்.
17 அப்போது அவன் அவளை நோக்கி, "சவரக்கத்தி இது வரை என் தலை மேல் பட்டதே இல்லை. ஏனெனில் நான் ஒரு நாசரேயன். அதாவது என் தாயின் வயிற்றில் தோன்றியது முதல் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டேன்; என் தலை சிரைக்கப்பட்டால், என் வலிமை எல்லாம் போய் ஆற்றல் இழந்து பிற மனிதரைப் போல் ஆவேன்" என்று சொல்லி உண்மையை வெளிப்படுத்தினான்.
18 அவன் தன் உள்ளத்தைத் திறந்து வெளிப்படுத்தினதைத் தாலிலா கண்டு, பிலிஸ்தியரின் தலைவர்களுக்கு ஆள், அனுப்பி, "இப்போது அவன் எனக்குத் தன் உள்ளத்தைத் திறந்து கூறின படியால், நீங்கள் இன்னொரு முறை வாருங்கள்" என்று சொன்னாள். அவர்கள் தாம் கொடுப்பதாகக் கூறின பணத்தைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அவளிடம் வந்தனர்.
19 அப்போது தாலிலா சாம்சனின் தலை அவளது மார்பிலே சாய்ந்திருக்க அவனைத் தன் மடியிலே தூங்க வைத்தாள். அவள் அழைத்திருந்த ஓர் அம்பட்டன் வந்து அவனது தலைமயிரின் ஏழு சடைகளையும் சிரைத்தான். சிரைத்ததும் வலுவிழந்த சாம்சனைத் தன்னை விட்டு நீங்குமாறு தாலிலா அவனைத் தள்ளத் தொடங்கினாள்.
20 அவனைத் தட்டி எழுப்பி, "சாம்சன், இதோ, பிலிஸ்தியர் வருகின்றனர்" என்றாள். அவன் விழித்தெழுந்து ஆண்டவர் தன்னை விட்டு அகன்று விட்டதை அறியாதவனாய், "நான் முன்பு செய்தது போல் வெளியேறித் தப்பித்துக் கொள்வேன்" என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
21 ஆனால் பிலிஸ்தியர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, சங்கலிகளால் அவனைக் கட்டி, காஜாமுக்குக் கொண்டு போய்ச் சிறையில் அடைத்துச் செக்கிழுக்கச் செய்தனர்.
22 இதற்குள் அவனது தலைமயிர் முளைக்கத் தொடங்கினது.
23 பிலிஸ்தியரின் மக்கட் தலைவர்களோ, "நம் எதிரி சாம்சனை நம் தெய்வம் நம் கைகளில் ஒப்படைத்தார்" என்று கூறிக் கொண்டு தம் தெய்வமான தாக்கோனுக்கு மாபலிகளைச் செலுத்தவும், விருந்துண்டு களிக்கவும் ஒன்று கூடினர்.
24 இதைக் கண்ட மக்களும், "நம் நாட்டை அழித்து நம்மில் பலரைக் கொன்ற நம் எதிரியை நம் தெய்வம் நம் கைகளில் ஒப்படைத்தார்" என்று அத்தெய்வத்தை வாழ்த்திப் போற்றினர்.
25 இப்படி அவர்கள் மாவிருந்துண்டு களித்திருக்கையில், அவர்கள் முன்னிலையில் சாம்சன் வேடிக்கை காட்டும்படி அவனைக் கொண்டு வரக் கட்டளையிட்டனர். அவ்வாறே சாம்சன் சிறையிலிருந்து கொண்டு வரப்பட்டான். அவனும் அவர்கள் முன்பாக வேடிக்கை காட்டினான். பிறகு அவனை இரு தூண்களுக்கு நடுவே நிறுத்தினர்.
26 அப்போது சாம்சன் தனக்கு வழிகாட்டி வந்த சிறுவனை நோக்கி, "வீட்டைத் தாங்குகிற தூண்களின் மேல் நான் சாய்ந்து சற்று இளைப்பாறும்படி நான் அவற்றைத் தொட வை" என்றான்.
27 அவ்வீடு ஆண் பெண்களால் நிறைந்திருந்தது; பிலிஸ்தியர்களின் மக்கட் தலைவர்கள் அனைவரும் அங்கு இருந்தார்கள். அத்துடன் மெத்தையிலிருந்து சாம்சன் ஆடுவதைப் பார்க்க ஆணும் பெண்ணுமாக ஏறக்குறைய மூவாயிரம் பேர் அங்கு இருந்தனர்.
28 அவனோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி, "என் ஆண்டவராகிய கடவுளே, என்னை நினைவுகூரும். இதோ என் இரு கண்களைப் பிடுங்கினவர்களையும், என் எதிரிகளையும் பழிங்கினவர்களையும், என் எதிரிகளையும் பழிவாங்கும்படி இந்த ஒரு முறை மட்டும் முன்பிருந்த வலிமையை எனக்குத் தாரும்" என்று வேண்டினான்.
29 பின், அவ்வீட்டைத் தாங்கின இரு தூண்களை வலக்கையாலும் இடக்கையாலும் பிடித்துக்கொண்டு,
30 பிலிஸ்தியரோடு நானும் சாகக்கடவேன்" என்று கூறித் தூண்களை வன்மையுடன் அசைக்கவே, வீடு இடிந்து மக்கட் தலைவர்கள் மேலும், அங்கு இருந்த மற்றவர்மேலும் விழுந்தது. இவ்வாறு சாம்சன் வாழ்ந்த காலத்தில் அவனால் கொல்லப்பட்டவரை விட, அவன் சாகும் போது கொல்லப்பட்டவரே அதிகம்.
31 பிறகு அவன் சகோதரரும் உறவினரும் வந்து அவன் உடலை எடுத்துச் சென்று சாரவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவழியிலே அவன் தந்தை மனுவேயின் கல்லறையில் அவனைப் புதைத்தார்கள். அவன் இஸ்ராயேலுக்கு இருபது ஆண்டுகள் நீதி வழங்கினான்.
அதிகாரம் 17
1 அக்காலத்தில் எபிராயிம் மலையினின்று வந்த மிக்காசு என்ற ஒருவன் இருந்தான்.
2 அவன் தன் தாயிடம், "நீர் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகளை உமக்கு ஒதுக்கிவைத்து என் காதில் விழும்படி அவற்றின்மேல் ஆணையிட்டீரே; இதோ! அவற்றை நானே வைத்திருக்கின்றேன். அவை என் கையில் இருக்கின்றன" என்றான். அதற்கு அவள், "கடவுள் என் மகனை ஆசீர்வதிப்பாராக!" என்றாள்.
3 அவன் அவற்றைத் தன் தாயிடம் திரும்பக் கொடுக்க, அவள் அவனை நோக்கி. "என் மகன் இப்பணத்தை என் கைகளினின்று பெற்றுக்கொண்டு, செதுக்கப்பெற்ற ஒரு சிலையையும், அச்சில் வார்க்கப்பட்ட ஒரு சிலையையும் செய்யும்படி நான் அதை ஆண்டவருக்கு என்று ஒதுக்கி வைத்தேன். இப்பொழுது அதை உன்னிடம் கொடுத்து விடுகிறேன்" என்று சொல்லியிருந்தாள்.
4 எனவே, அவற்றை அவன் தன் தாயிடம் திரும்பிக் கொடுத்தான். அப்போது அவள் அதிலிருந்து இருநூறு வெள்ளிக் காசுகளை எடுத்துத் தட்டானிடம் கொடுத்து, மிக்காசின் வீட்டிற்கெனச் செதுக்கப் பெற்ற சிலை ஒன்றையும், அச்சில் வார்க்கப்பட்ட சிலை ஒன்றையும் செய்யச் சொன்னாள்.
5 மிக்காசு தன் வீட்டில் அத்தேவதைக்கு ஒரு சிறு கோவில் அமைத்தான். ஒரு 'எபோதையும்' 'தெரரீம்களையும்', அதாவது குருவுக்குரிய உடைகளையும் சிலைகளையும் செய்தான். பிறகு தன் புதல்வரில் ஒருவன் கையில் எண்ணெய் ஊற்றி அவனைக் குருவாக்கினான்.
6 அக்காலத்தில் இஸ்ராயேலை ஆள அரசன் இல்லாததால், தனக்குச் சரி என்று பட்டதை ஒவ்வொருவனும் செய்து வந்தான்.
7 யூதாவின் கோத்திரத்தைச் சார்ந்த மற்றொரு இளைஞன் யூதா நாட்டுப் பெத்லகேமில் இருந்தான். அவன் ஒரு லேவியன்; அவன் அங்கு வாழ்ந்து வந்தான்.
8 அவன் தனக்கு வசதிப்படும் இடங்களுக்கு எல்லாம் போய்ப் பிழைக்கலாம் என்று பெத்லேகேமை விட்டுப் புறப்பட்டான். அவன் எபிராயிம் மலைக்கு வந்து பாதையை விட்டு விலகி மிக்காசின் வீட்டை அடைந்தான்.
9 அவன் எங்கிருந்து வந்தான் என்று அவனைக் கேட்க, அவன், "நான் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வருகிறேன்; நான் ஒரு லேவியன். எவ்விடத்தில் தங்குவது எனக்கு வசதியாயும் பயனுள்ளதாயும் இருக்குமோ, அவ்விடத்திற்குப் போவேன்" என்றான்.
10 அப்போது மிக்காசு, "நீ என்னுடன் இரு. எனக்குத் தந்தையும் குருவுமாய் இரு. ஆண்டு ஒன்றுக்குப் பத்து வெள்ளிக்காசுகளையும், இரண்டு ஆடைகளையும், உணவிற்கு வேண்டியவற்றையும் உனக்குக் கொடுப்பேன்" என்றான்.
11 அவன் அம் மனிதனுடன் தங்கியிருக்கச் சம்மதித்து அவன் புதல்வரில் ஒருவனைப் போல் தங்கியிருந்தான்.
12 மிக்காசும் அந்த இளைஞனைத் தன் குருவாகக் கொண்டு தன்னுடன் வாழச் செய்தான்.
13 லேவிய இனத்தான் எனக்குக் குருவாய் இருக்கிறபடியால், ஆண்டவர் எனக்கு நன்மை செய்வார் என்று அறிவேன்" என்று அவன் தனக்குள் கூறிக்கொள்வதுண்டு.
அதிகாரம் 18
1 அந்நாட்களில் இஸ்ராயேலில் அரசன் இல்லை. தான் கோத்திரத்தார் தாம் வாழ ஓர் இடம் தேடிக் கொண்டிருந்தார். ஏனெனில் மற்ற கோத்திரங்களைப்போல் அவர்களுக்குச் சொந்த நிலம் கிடைக்கவில்லை.
2 எனவே, நாட்டை உளவு பார்த்து வரும்படி தான் புதல்வர் தம் கோத்திரத்திலும் சொந்த வம்சத்திலும் வலிமையுள்ள ஐவரைச் சாராவிலும் எஸ்தாவோலிலும் இருந்து அனுப்பி, "நீங்கள் போய் நாட்டை உளவு பார்த்து வாருங்கள்" என்றனர். அவர்கள் புறப்பட்டுப்போய் எபிராயிம் மலையை அடைந்து, மிக்காசு வீட்டில் நுழைந்து அங்கு இரவைக் கழித்தனர்.
3 அவர்கள் அவ்வீட்டில் இருக்கையில், லேவியனான இளைஞனை அவனது குரலால் அறிந்து கொண்டனர்,. அவனை நோக்கி, "உன்னை இங்குக் கொணர்ந்தவர் யார்? நீ இங்கு என்ன செய்கிறாய்? நீ இங்கு வரக் காரணம் என்ன?" என்று கேட்டனர்.
4 அதற்கு அவன், "மிக்காசு எனக்கு இவற்றையெல்லாம் செய்துள்ளான்; நான் அவனுக்குக் குருவாயிருக்கும் படி அவன் எனக்கு ஊதியமும் கொடுக்கிறான்" என்றான்.
5 அப்போது அவர்கள் அவனை நோக்கி, "எங்கள் பயணம் வெற்றியாய் முடியுமா? நாங்கள் நினைத்தது கைகூடுமா என்று அறிய விரும்புகிறோம். நீ ஆண்டவரிடம் கேள்" என்றனர்.
6 அதற்கு அவன், "நீங்கள் அமைதியோடு போங்கள்; ஆண்டவர் உங்கள் வழியையும் பயணத்தையும் கருணைக் கண்கொண்டு நோக்குகிறார்" என்றான்.
7 எனவே, அவர்கள் ஐவரும் புறப்பட்டு லாயீசுக்குப் போய் அவ்விடத்து மக்கள் சீதோனியரின் வழக்கப்படி, யாதொரு அச்சமுமின்றிப் பாதுகாப்புடனும் அமைதியாயும் இருப்பதையும், தங்களை எதிர்ப்பவன் எவனுமின்றி நிறைந்த செல்வத்துடன் வாழ்ந்து வருவதையும், அவர்கள் சீதோனினின்றும் பிற மனிதரிடத்தினின்றும் பிரிந்திருப்பதையும் கண்டனர்.
8 சாராவிலும், எஸ்தாவோலிலும் இருந்த தம் சகோதரரிடம் அவர்கள் திரும்பி வந்த போது, "நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்று கேட்டவர்களுக்கு, "எழுந்திருங்கள், அவர்களிடம் போவோம்.
9 செல்வம் கொழிக்கும் நாட்டைக் கண்டோம்; கை நெகிழவிடாதீர்; போய் அதைக் கைப்பற்றுவோம்; ஒரு சிரமமும் வேண்டாம்.
10 பாதுகாப்புடன் இருக்கும் மக்களிடம் போவோம்; பரந்த நாட்டில் நுழைவோம். பூமியில் விளையும் அனைத்திலும் அது வளமான நாடு. ஆண்டவர் அந்நாட்டை நம்கையில் ஒப்படைத்தார்" என்றனர்.
11 அப்போது சாராவிலும் எஸ்தாவோலிலுமிருந்த தான் வம்சத்தாரில் அறுநூறு பேர் ஆயுதம் தாங்கி அங்கிருந்து புறப்பட்டு,
12 யூதாவிலுள்ள காரியாத்யாரிமில் தங்கினர். அன்று முதல் அவ்விடம் தானின் பாசறை என்று அழைக்கப் பட்டு வருகிறது. அது காரியாத்யாரிமுக்குப் பின்புறத்தில் இருக்கிறது.
13 அவர்கள் அங்கிருந்து எபிராயீம் மலைக்குச் சென்றனர். மிக்காசின் வீட்டுக்கு வந்தபோது,
14 லாயீசு நாட்டை உளவு பார்க்க முன்பே அனுப்பப்பட்டிருந்த ஐவர் தம் மற்ற சகோதரரை நோக்கி, "அவ்வீட்டிலே எப்போதும் தெரபீம்களும் செதுக்கப்பட்ட சிலையும் வார்க்கப்பட்ட சிலையும் இருப்பது உங்களுக்குத் தெரியுமே; உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள்" என்றனர்.
15 பிறகு அவர்கள் வழியை விட்டுச் சிறிது விலகி மிக்காசின் வீட்டிலிருந்த லேவிய இளைஞனின் அறைக்குள் சென்றனர். நல்லாசி கூறி அவனை வாழ்த்தினர்.
16 ஆயுதம் தாங்கிய அறுநூறு பேரும் வாயில் முன் நின்று கெண்டிருந்தனர்.
17 இனைஞனின் அறைக்குள் நுழைந்தவரோ செதுக்கப்பட்ட சிலையையும் எப்போதையும், தெரபீம்களையும் வார்க்கப்பட்ட சிலையையும் எடுக்க முயன்றனர். குரு வாயில்முன் நின்று கொண்டிருந்தான். ஆற்றல் படைத்த அறுநூறு பேரும் சற்று தூரத்தில் காத்து நின்றார்கள்.
18 உள் நுழைந்தவர்கள் செதுக்கப்பட்ட சிலையையும் எபோதையும் தெரபீம்களையும் வார்க்கப்பட்ட சிலையையும் எடுத்தனர். குரு அவர்களை நோக்கி, "என்ன செய்கிறீர்கள்?" என்றான்.
19 அதற்கு அவர்கள், "பேசாது வாயைமூடு; நீ எமக்குத் தந்தையும் குருவுமாய் இருக்க நீ எம்மோடு வா; ஒருவன் வீட்டில் குருவாய் இருப்பதை விட, இஸ்ராயேலின் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் குருவாய் இருப்பது மேலானதன்றோ?" என்றனர்.
20 அவர்கள் கூறினதைக் கேட்டு, அவன் அதற்கு இணங்கி, எபோதையும் சிலைகளையும் செதுக்கப்பட்ட சிலையையும் எடுத்துக்கொண்டு அவர்களோடு புறப்பட்டான்.
21 அவர்கள் சிறுவர்களையும் ஆடு மாடுகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் முன்னால் எடுத்துப் போகும்படி செய்து, தாங்களும் புறப்பட்டனர்.
22 மிக்காசின் வீட்டிலிருந்து வெகுதூரம் சென்ற போது, மிக்காசோடு வாழ்ந்த மனிதர் கூக்குரலிட்டுக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
23 அவர்களுக்குப் பின் புறமாகச் சென்று கத்த ஆரம்பித்தனர். அவர்களோ திரும்பிப் பார்த்து மிக்காசை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்? ஏன் கதறுகிறாய்?" என்றனர்.
24 அதற்கு அவன், "எனக்கென்று நான் செய்து வைத்திருந்த என் தேவர்களையும் என் குருவையும் எனக்குள்ள அனைத்தையும் நீங்கள் வாரிக்கொண்டதோடு, எனக்கு என்ன நேர்ந்தது? என்று நீங்கள் கேட்கின்றீர்களே!" என்றான்.
25 தான் புதல்வர் அவனை நோக்கி, "எம்மிடம் அதிகம் பேசாதே, எச்சரிக்கை! சினமுள்ள மனிதர் உன்மேல் விழுந்தால், நீயும் உன் குடும்பமும் அழிந்து போவீர்கள்" என்றனர்.
26 இப்படிக் கூறிவிட்டு அவர்கள் தம் வழியே சென்றனர். மிக்காசோ, அவர்கள் தன்னிலும் வலியவர் என்று கண்டு வீடு திரும்பினான்.
27 அந்த அறுநூறு பேரும், குருவோடும் மேற்கூறின பொருட்களோடும் லாயீசு ஊரை அடைந்து அச்சமின்றி அமைதியில் வாழ்ந்த மக்களை வாளுக்கு இரையாக்கித் தீயால் நகரைச் சுட்டெரித்தனர்.
28 அது சீதோனுக்கு வெகு தூரமாய் இருந்ததாலும், ஊராருக்கு வேறு மனிதரோடு தொடர்பும் வியாபாரமும் இல்லாததாலும் இவர்களைக் காப்பாற்றுவார் எவரும் இல்லை. லாயீசு நகர் ரொகோப் பள்ளத்தாக்கில் இருந்தது, அவர்கள் அதைப் புதிதாய்க் கட்டி அதில் குடியேறியிருந்தனர்.
29 முதலில் லாயீசு என்று அழைக்கப்பட்ட இந்நகருக்கு இஸ்ராயேலின் மகனான தானின் புதல்வர் தம் கோத்திரத்தின் தந்தை பெயரால், 'தான் நகர்' என்று புதிதாகப் பெயர் இட்டனர்.
30 அப்போது அவர்கள் செதுக்கப்பட்ட சிலையைத் தமக்குத் (தெய்வமாக) வைத்துக்கொண்டு, மோயீசனுக்குப் பிறந்த கேர்சாமின் மகன் யோனாத்தானையும் அவன் புதல்வர்களையும் தான் கோத்திரத்தாருக்குக் குருக்களாக்கினர். தான் புதல்வர் சிறைப்பட்ட நாள் வரை அவ்வாறே நடந்தது.
31 கடவுளின் ஆலயம் சீலோவிலிருந்த காலம் முழுவதும் அவர்கள் மிக்சாசின் சிலையை வைத்திருந்தனர். அந்நாட்களில் இஸ்ராயேலை ஆள ஓர் அரசன் இல்லை.
அதிகாரம் 19
1 லேவியன் ஒருவன் எபிராயிம் மலை ஓரத்தில் குடியிருந்தான். அவன் யூதா நாட்டுப் பெத்லேகம் ஊரினளான ஒருத்தியை மணந்திருந்தான்.
2 அவளோ அவனை விட்டுப் பெத்லகேமில் இருந்த தன் தந்தை வீட்டுக்குத் திரும்பி வந்து அவனுடன், நான்கு மாதம் தங்கியிருந்தாள்.
3 அவளைச் சமாதானப்படுத்தி அன்பு காட்டித் தன்னோடு அழைத்து வரும்படி கணவன் ஓர் ஊழியனோடும் இரு கழுதைகளோடும் அவளிடம் போனான். அவள் அவனை வரவேற்றுத் தன் தந்தை வீட்டுக்கு அழைத்துப் போனாள். அதைக் கேள்வியுற்ற அவன் மாமனார் மகிழ்ச்சியுற்று, அவனைக் கண்டு சந்தித்து, அவனைக் கட்டி அணைத்தார்.
4 மருமகன் மாமனார் வீட்டில் மூன்று நாள் தங்கி அவனோடு உண்டு குடித்து மகிழ்வாய் இருந்தான்.
5 நான்காம் நாள் அதிகாலையில் எழுந்து புறப்படவிருக்கையில் மாமனார் அவனை நிறுத்தி, "முதலில் நீ கொஞ்சம் ரொட்டி உண்டு பசியாறு; பின் புறப்படலாம்" என்றான்.
6 இருவரும் அமர்ந்து உண்டு குடித்தனர். அப்போது பெண்ணின் தந்தை மருமகனை நோக்கி, "நீ தயவு செய்து இன்னும் சில காலம் இங்கே தங்கியிரு; நாம் இருவரும் மகிழ்வாய் இருப்போம்" என்றார்.
7 அவனோ எழுந்து புறப்பட விருக்கையில் மாமனார் அவனை வலுக்கட்டாயமாய்த் தம்மோடு தங்கச் செய்தார்.
8 பொழுது விடிந்த பின் லேவியன் புறப்படவிருந்தான். திரும்பவும் மாமனார், "கொஞ்சம் சாப்பிட்டுத் திடம் கொள்; சற்றுப் பொழுது சென்ற பின் நீ புறப்படலாம்" என்று வேண்டினான்.
9 அதன்படி இருவரும் உண்டனர். இளைஞன் தன் மனைவியோடும் ஊழியனோடும் புறப்பட எழுந்தான். அப்போது மாமனார், "பார், பொழுது சாய்ந்து விட்டது; மாலையும் வந்து விட்டது. இன்றும் என்னுடன் இருந்து மகிழ்வாய் நாளைக் கழி. நாளை உன் வீட்டுக்குப் புறப்படலாம்" என்றான்.
10 மருமகன் அதற்கு இணங்காது, உடனே இரு கழுதைகளின் மேல் சுமையை வைத்துத் தானும் தன் மனைவியுடன் புறப்பட்டு யெருசலேம் எனும் மறு பெயர் கொண்டிருந்த எபுசை நோக்கிப் பயணமானான்.
11 அவர்கள் எபுசுக்கு அருகில் வரும் போது இரவானது. எனவே, ஊழியன் தன் தலைவனை நோக்கி, "எபுசேயர் நகருக்குப் போய் அங்கு இரவைக் கழிக்கலாம்; தயவு செய்து வாரும்" என்றான்.
12 அதற்குத் தலைவன், "இஸ்ராயேல் மக்கள் அல்லாத புறவினத்தார் நகரில் நுழைய மாட்டேன்; ஆனால் காபாவுக்குப் போவேன்.
13 அதை அடைந்தபின், அங்காவது ராமா நகரிலாவது தங்கலாம்" என்றான்.
14 அவ்வாறே எபுசைக் கடந்து வழி நடந்து பெஞ்சமின் கோத்திரத்தைச் சார்ந்த காபா அருகே வருகையில் சூரியன் மறைந்தது.
15 எனவே, இரவைக் கழிக்க அங்குப் போய்ச் சேர்ந்தனர். நகருக்குள் நுழைந்த போது அவர்களைத் தங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ள ஒருவனும் விரும்பாததால் அவர்கள் நகர் வீதியிலே உட்கார்ந்தனர்.
16 இதோ! வயலில் வேலை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் அங்கு வந்தார். அவரும் எபிராயிம் மலை நாட்டார் தான். காபாவில் அன்னியனாக வாழ்ந்து வந்தவர். அந்நாட்டவரே ஜெமினியின் புதல்வர்கள்.
17 அந்த முதியவர் தம் கண்களை உயர்த்தி நகர் வீதியில் உட்கார்ந்திருந்த லேவியைக் கண்டு, "எங்கிருந்து வருகிறாய்? எங்குப் போகிறாய்?" என்று கேட்டார்.
18 அதற்கு அவன், "நாங்கள் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வருகிறோம், எபிராயிம் மலை ஓரமாயிருக்கும் எங்கள் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். அங்கிருந்து தான் பெத்லகேமுக்குப் போயிருந்தோம். இப்போது கடவுளின் ஆலயம் இருக்குமிடம் போகிறோம். இவ்வூரில் எம்மைத் தம் வீட்டில் ஏற்றுக்கொள்பவர் ஒருவரும் இல்லை.
19 கழுதைகளுக்கு வைக்கோலும் புல்லும் உண்டு; எனக்கும் உம் அடியாளுக்கும் என்னுடன் இருக்கும் என் ஊழியனுக்கும் ரொட்டியும் திராட்சை இரசமும் உண்டு; தங்கமட்டும் இடம் வேண்டும்" என்றான்.
20 அதற்கு அந்த முதியவர், "உனக்குச் சமாதானம் உண்டாவதாக. வேண்டியவற்றை எல்லாம் நானே கொடுக்கிறேன்; வெளியில் மட்டும் இரவைக் கழிக்க வேண்டாம்" என்று வேண்டினார்.
21 பின் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போய்க் கழுதைகளுக்கு இரை போட்டார். அவர்கள் தம் கால்களைக் கழுவிய பின் அவர் அவர்களுக்கு விருந்து அளித்தார்.
22 உணவாலும் குடியாலும் அவர்கள் பயணக்களைப்பைத் தீர்த்துக் கொண்டிருந்த போது, எவ்விதக் கட்டுப்பாட்டுக்கும் அடங்காத பெலியாலின் மக்களாகிய அவ்வூரார் வந்து, முதியவரின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு, கதவைப் பலமாய்த் தட்டிச் சத்தம் போட்டு வீட்டுத் தலைவனைக் கூப்பிட்டு, "உன் வீட்டில் நுழைந்த மனிதனை நாங்கள் பங்கப்படுத்தும் படி வெளியே கொண்டுவா" என்றனர்.
23 முதியவர் வெளியே வந்து அவர்களிடம், "சகோதரரே, வேண்டாம்; இப்படிப்பட்ட பழியைச் செய்யாதீர்; என் வீட்டிற்கு விருத்தினனாக வந்திருக்கும் அம்மனிதனுக்கு இம்மதிகேட்டைச் செய்யலாமா?
24 எனக்குக் கன்னிப் பெண்ணான மகள் ஒருத்தி உண்டு. அம்மனிதனுக்கு ஒரு வைப்பாட்டி இருக்கிறாள். அவர்களை வெளியே கொணர்ந்து உங்களிடம் விடுகிறேன். அவர்களைப் பங்கப்படுத்தி உங்கள் காம வெறியைத் திர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இம்மனிதனுடன் மனிதத் தன்மைக்கு மாறான பழியைச் செய்யாதபடி உங்களை வேண்டுகிறேன்." என்றார்.
25 அவரது பேச்சுக்கு அவர்கள் இணங்காததைக் கண்ட லேவியன் தன் வைப்பாட்டியை வெளியே கொண்டு போய் அவளை அவர்கள் பங்கப்படுத்தும்படி விட்டு விட்டான். இரவு முழுவதும் அவளை அவர்கள் பங்கப்படுத்தினபின், அதி காலையில் அவளை அனுப்பி விட்டனர்.
26 அப்பெண் பொழுது புலர்ந்ததும் தன் கணவன் இருந்த வீட்டின் கதவு அண்டையில் வந்து தரையில் விழுந்தாள்.
27 கீழ்த்திசை வெளுக்கக் கண்ட லேவியன் எழுந்து தன் வழியே போகக் கதவைத் திறந்தான். அப்பொழுது தன் வைப்பாட்டி வீட்டு வாயிலில் தன் இரு கைகளையும் நிலைப்படியில் வைத்த படி விழுந்து கிடக்கக் கண்டான்.
28 அவள் தூங்குகிறாள் என்று கருதி, அவன் அவளைத் தட்டி எழுப்பி, "எழுந்திரு, போவோம்" என்றான். அவள் மறுமொழி கூறாதிருக்கவே, உயிர் போய்விட்டது என அறிந்து, அவளது சவத்தை எடுத்துக் கழுதையின் மேல் வைத்துக் கொண்டு தன் வீடு சென்றான்.
29 வீட்டை அடைந்தபின் அவன் ஒரு கத்தியை எடுத்துத் தன் மனைவியின் சவத்தை எலும்புகளுடன் வெட்டிப் பன்னிரு கூறுகளாக்கி, இஸ்ராயேலின் கோத்திரத்திற்கெல்லாம் ஒவ்வொரு கூறு அனுப்பினான். அதைக் கண்ட யாவரும், "நம் முன்னோர் எகிப்தினின்று புறப்பட்ட நாள் முதல் இதுவரை இப்படிப்பட்டது எதுவும் நடக்கவேயில்லை. எனவே கலந்து பேசி, செய்ய வேண்டியது என்ன என்று தெரிவி" என்றனர்.
அதிகாரம் 20
1 அப்போது தான்முதல் பேர்சாபே வரை உள்ள இஸ்ராயேல் மக்கள் அனைவரும் காலாத் நாட்டாருடன் சேர்ந்து மாஸ்பாவுக்குப் போய் ஆண்டவர் திருமுன் நின்றனர்.
2 மக்கட் தலைவர்களும் இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களும் இறைமக்களின் சபையாக ஒன்று கூடினர். அங்கு நான்கு இலட்சம் காலாட்படை வீரர் இருந்தனர்.
3 இஸ்ராயேல் மக்கள் மாஸ்பாவிற்கு வந்திருப்பது பெஞ்சமின் மக்களுக்கு எட்டியது, கொல்லப்பட்டவளின் கணவனான லேவியனிடம், "அப்பெரிய கொடுமை எவ்வாறு நடந்தது?" என்று கேட்டனர்.
4 அதற்கு அவன், "நானும் என் வைப்பாட்டியும் பெஞ்சமின் நாட்டுக் காபாவில் இரவிலே தங்கியிருந்தோம்.
5 அவ்வூர் மனிதரில் பலர் வந்து நான் தங்கியிருந்த வீட்டை வளைத்து என்னைக் கொல்லத் தேடினதோடு கட்டுக்கடங்காக் காமவெறி கொண்டு என் வைப்பாட்டியைப் பங்கப்படுத்தினர். அதனால் அவள் இறந்தாள்.
6 அப்போது நான் அவளை எடுத்துப் போய்த் துண்டு துண்டாக வெட்டி உங்கள் நாடுகள் எங்கும் அனுப்பினேன். ஏனெனில் இவ்விதக் கொடுமையும் இத்தகு மாபாவமும் இஸ்ராயேலில் ஒருபோதும் செய்யப்பட்டதில்லை.
7 இஸ்ராயேல் மக்களே, இதோ நீங்கள் அனைவரும் இங்கு இருக்கின்றீர்கள்; செய்ய வேண்டியது என்ன என்று முடிவு செய்யுங்கள்" என்றான்.
8 அப்போது மக்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து, "நம்மில் எவனும் தன் கூடாரத்திற்குப் போகவும், தன் வீட்டில் நுழையவும் கூடாது.
9 ஆனால், காபாவுக்கு எதிராய் நாம் செய்யப் போவதாவது:
10 பெஞ்சமின் கோத்திரத்தைச் சேர்ந்த காபா நகரத்தார் செய்த இழிசெயலுக்குத் தகுந்தபடி, நாம் அவர்கள் மேல் பாய்ந்து வேண்டிய அளவு போரிட்டுக் கண்டிப்போம். அவ்விதப் போருக்குச் சாதகமாக, படைக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வரும்படி இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரத்திலும் நூற்றுக்குப் பத்தும், ஆயிரத்துக்கு நூறும், பதினொரயிரத்துக்கு ஆயிரம் பேருமாகத் தேர்ந்து கொள்வோம்" என்றனர்.
11 அவ்வாறே இஸ்ராயேலர் அனைவரும் ஒன்று போல் ஒரே மனமும் சிந்தனையுமாய் அந்நகருக்கு எதிராய் எழுந்தனர்.
12 பிறகு அவர்கள் பெஞ்சமின் கோத்திரம் எங்கும் தூதரை அனுப்பி, "வெறுப்புக்குரிய இவ்வித இழிசெயல் உங்கள் நடுவில் நடந்தது ஏன்?
13 இக் கொடும் பழியைச் செய்த காபா மனிதரை நாங்கள் கொன்று இஸ்ராயேலினின்று இப்பழி நீங்கும்படி அவர்களை எங்கள் கையில் ஒப்படையுங்கள்" என்று சொல்லச் சொன்னார்கள். அவர்களோ தம் சகோதரர்களான இஸ்ராயேல் மக்களின் கட்டளையைக் கேட்க விரும்பவில்லை.
14 தங்கள் சொந்தப் பகுதியின் எல்லா நகர்களிலுமிருந்து அவர்களுக்கு உதவி செய்யவும் இஸ்ராயேல் மக்கள் அனைவரோடும் போரிடவும் அவர்கள் காபாவுக்கு வந்தனர்.
15 காபா நகர மக்களைத் தவிர பெஞ்சமின் கோத்திரத்தாரில் வாள் ஏந்தத் தெரிந்தவர் இருபத்தையாயிரம் பேர் இருந்தனர்.
16 காபா நகரத்தாரிலோ, வலக்கையாலும் இடக்கையாலும் போரிடக் கூடிய மாவீரர் எழுநூறு பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் கவண் கல் எறிதலில் எவ்வளவு திறமைச்சாலிகள் என்றால், குறி ஒற்றை மயிர் என்றாலும் கூட, அவர்கள் எறிந்த கல் தப்பாது அக்குறியில் படும்.
17 பெஞ்சமின் புதல்வர் நீங்கலாக இஸ்ராயேலில் வாளேந்திப் போரிடத் தயாராய் இருந்தவர் நான்கு இலட்சம் பேர்.
18 இவர்கள் அனைவரும் எழுந்து சிலோவிலிருந்த கோயிலுக்குப் போனார்கள். அவர்கள் கடவுளை நோக்கி, "பெஞ்சமின் புதல்வருடன் போர் தொடுக்க எம் படையை நடத்திச் செல்பவன் யார்?" என்று கேட்டனர். அதற்கு ஆண்டவர், "யூதா உங்கள் தலைவனாய் இருக்கட்டும்" என்றார்.
19 உடனே இஸ்ராயேல் மக்கள் அதிகாலையில் எழுந்து புறப்பட்டுக் காபாவுக்கு எதிராகப் பாளையமிறங்கினர்.
20 அவ்விடமிருந்து பெஞ்சமினரோடு போரிட முதலில் நகரை முற்றுகையிட்டனர்.
21 ஆனால் பெஞ்சமின் கோத்திரத்தார் காபாவினின்று வெளிப் போந்து இஸ்ராயேல் மக்களில் இருபத்திரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.
22 இஸ்ராயேல் மக்கள் தம் வலிமையையும் எண்ணிக்கையையும் நம்பித் திடம் கொண்டு முன்பு தாம் போரிட்ட இடத்திலேயே மீண்டும் போரிட அணிவகுத்து நின்றனர்.
23 ஆனால் அப்படிச் செய்வதற்கு முன் அவர்கள் ஆண்டவருக்கு முன்பாகப் போய் அவர் முன்னிலையில் இரவு வரை அழுது, "எம் சகோதரனான பெஞ்சமின் மக்களை நாங்கள் எதிர்த்துப் போராட வேண்டுமா, வேண்டாமா?" என்று கேட்டனர். அதற்கு ஆண்டவர், "நீங்கள் எழுந்து சென்று போரைத் தொடங்குங்கள்" என்று பணிந்தார்.
24 மறுநாள் இஸ்ராயேல் மக்கள் பெஞ்சமின் புதல்வரை எதிர்த்துப் போரிடத் தயாராயினர்.
25 அப்போது பெஞ்சமின் புதல்வர் காபாவிலிருந்து அவர்களுக்கு எதிராகக் கிளம்பி விரைந்து அவர்கள் மேல் பாய்ந்து பதினெட்டாயிரம் பேரைக் கொன்றனர்.
26 எனவே, இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் கடவுளின் ஆலயத்துக்குச் சென்று அமர்ந்து ஆண்டவர் முன்பாக அழுதனர். அன்று மாலை வரை உண்ணாது தனகப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.
27 பிறகு தமது நிலை குறித்து ஆண்டவரைக் கலந்தனர். ஏனெனில் அக்காலத்தில் ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டி அங்கு இருந்தது.
28 ஆரோனின் மகன் எலெயசாரின் புதல்வன் பினேயெசு கோவில் திருப்பணிகளில் தலைமை வகித்து வந்தான். எனவே ஆண்டவரைக் கலந்து அவரை நோக்கி, "எம் சகோதரரான பெஞ்சமின் புதல்வருக்கு எதிராய் இன்னும் போராட வேண்டுமா?" என்று கேட்டனர். அதற்கு ஆண்டவர், "போங்கள், நாளைக்கு அவர்களை உம் கைகளில் ஒப்படைப்போம்" என்றார்.
29 இஸ்ராயேல் மக்கள் காபா நகரைச் சுற்றிப் பதுங்கியிருந்தனர்.
30 முன்பு இருமுறை செய்ததுபோல் இம்முறையும் பெஞ்சமினருக்கு எதிராக அணிவகுத்து நின்றனர்.
31 பெஞ்சமின் மக்களோ துணிவுடன் நகரிலிருந்து வெளியேப் போந்து புறமுதுகு காட்டி ஓடின எதிரிகளை வெகுதூரம் துரத்தினர். முதல் நாளும் இரண்டாவது நாளும் செய்தது போல் சிலரைக் காயப்படுத்தி, பேத்தலுக்கும் காபாவுக்கும் போகிற இரு வழிகளிலும் ஓடின இஸ்ராயேலரை வெட்டி ஏறக்குறைய முப்பது பேரைக் கொன்றனர்.
32 வழக்கம்போல் நமக்கு முன்பாகச் சிதறி ஓடுகின்றனர்" என்று அவர்கள் எண்ணினர். ஆனால் இஸ்ராயேல் மக்கள் தோற்று ஓடுவது போல் பாசாங்கு செய்து பெஞ்சமின் மக்களை நகரிலிருந்து வெளியே கொண்டு வரும்படியாகவும், தப்பி ஓடுவது போல் மேற்கூறப்பட்ட இரு வழிகளிலும் வந்து சேரும்படியாகவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
33 அப்போது இஸ்ராயேல் மக்கள் அனைவரும் தாங்களிருந்த இடத்திலிருந்து எழுந்து பால்தமார் என்ற இடத்தில் தம் படைகளைப் போருக்கு அணிவகுத்து நின்றனர். நகரைச் சுற்றிலும் பதுங்கியிருந்தவர்கள் சிறிது சிறிதாக வெளியேறவும், நகருக்கு மேற்புறத்தினின்று புறப்படவும் தொடங்கினர்.
34 இஸ்ராயேல் மக்களில் மற்றும் பத்தாயிரம் பேர் நகர் மக்களைப் போரிடத் தூண்டினர். பெஞ்சமின் மக்களோடு கடும் போர் மூண்டது. நான்கு பக்கங்களிலிருந்தும் தமக்கு அழிவு வருகிறது என்று அவர்கள் உணரவில்லை.
35 கடவுள் இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாகப் பெஞ்சமின் புதல்வர்களை முறியடிக்க, அன்று அவர்களில் போர்வீரரும் வாளேந்துபவர்களுமான இருபத்தையாயிரத்து நூறு பேர்களைக் கொன்றனர்.
36 தாங்கள் தோல்வி அடைந்து விட்டதைக் கண்ட பெஞ்சமின் மக்கள் புறமுதுகு காட்டி ஓடத்தொடங்கினர். இஸ்ராயேல் மக்களோ அதைக் கண்டு நகர் அருகில் தாம் தயாரித்திருந்த பதிவிடை நோக்கி அவர்களைத் துரத்தினர்.
37 அப்போது பதுங்கியிருந்தோர் தம் மறைவிடங்களினின்று வெளிப்போந்து, பெஞ்சமினர் புறமுதுகு காட்டி ஓடக்கண்டு, நகரில் நுழைந்து அங்கு இருந்தவர்களை வாள் முனையால் வெட்டினர்.
38 இஸ்ராயேல் மக்கள் பதுங்கியிருந்தவருக்கு, "நீங்கள் நகரைப் பிடித்த பிறகு நாற்றிசையிலும் தீ மூட்டுங்கள். புகை உயர எழும்புவதைக் கண்டு நகர் பிடிபட்டதாக நாங்கள் அறிவோம்" என்று அடையாளம் சொல்லியிருந்தனர்.
39 பெஞ்சமினர் இஸ்ராயேலரில், முப்பது பேரைக் கொன்ற பிறகு, இஸ்ராயேலின் சேனை சிதறி ஓட்டம் பிடித்ததை எண்ணி அவர்களை விரைந்து துரத்தினது ஒரு புறமிருக்க, களத்தில் போரிட்ட இஸ்ராயேலர், புகை தூண்போல் உயரக் கிளம்பவுதைக் கண்டனர்.
40 பெஞ்சமினரோ தலையைத் திருப்பித் தீச்சுவாலையைக் கண்டு தம் நகர் பிடிபட்டது என்று அறிந்து கொண்டனர்.
41 அப்போது இஸ்ராயேலர் சேனையில் பாசாங்கு காட்டி ஓடிக்கொண்டிருந்தவர்கள் திரும்பி உறுதியோடு எதிரிகளின் மேல் பாய்ந்தனர். அதைக் கண்ட பெஞ்சமினர் புறமுதுகு காட்டி, பாலைவனத்தை நோக்கி ஓடத் தொடங்கினர்.
42 அப்போது ஒருபக்கத்தில் இஸ்ராயேல் சேனை தம்மை நெருக்கி வரவும் மறுபக்கத்தில் நகரைத் தீக்கு இரையாக்கியவர்கள் தமக்கு எதிராக ஓடிவருவதையும் கண்டு அவர்கள் திகைத்து நின்றனர்.
43 இவ்வாறு எதிரிகளின் இரு சேனைகளுக்கு இடையே அகப்பட்ட பெஞ்சமினர் இரு மருங்கிலும் வெட்டுண்டனர். வெட்டுவதைத் தடுக்க எவனும் இல்லை. எல்லாரும் காபா நகரின் கீழ்ப்புறத்தில் விழுந்து மடிந்தனர்.
44 அவ்விடத்தில் கொல்லப்பட்ட பெஞ்சமினர் பதினெட்டாயிரம் பேர். அவர்கள் அனைவரும் ஆற்றல் படைத்த வீரருங்கூட.
45 பெஞ்சமின் வம்சத்தில் எஞ்சியவர் இதைக் கண்டு பாலை வனத்துக்கு ஓடி ரெம்மோன் என்று அழைக்கப் பெற்ற பாறையை அடைந்தனர். இப்படி ஓடியதில் பலர் பற்பலவிடங்களில் சிதறுண்டு போனதால், ஐயாயிரம் பேர் இஸ்ராயேல் மக்களால் கொல்லப்பட்டனர். இன்னும் எஞ்சியோர் ஓடிப்போக முயலும் போது இஸ்ராயேலர் அவர்களைத் துரத்தி மேலும் இரண்டாயிரம் பேரை வெட்டி வீழ்த்தினர்.
46 எனவே, அன்று பெஞ்சமின் கோத்திரத்தில் மடிந்தவர் இருபத்தையாயிரம் பேர். அவர்கள் அனைவரும் போரில் திறமை மிக்க வீரர்கள்.
47 பெஞ்சமின் கோத்திரத்தில் தப்பிப் பாலைவனத்துக்கு ஓடிப்போனவர்கள் அறுநூறு பேர். இவர்கள் ரெம்மோன் பறையில் நான்கு மாதம் தங்கினர்.
48 இஸ்ராயேலர் திரும்பிவந்து நகரில் மனிதர் முதல் விலங்கு வரை கண்டதனைத்தையும் வாளால் வெட்டிப் பெஞ்சமினுடைய நகர்கள் ஊர்கள் அனைத்தையும் தீக்கி இரையாக்கினர்.
அதிகாரம் 21
1 மேலும் இஸ்ராயேல் மக்கள் மாஸ்பாவில், "நம்மில் எவனும் தன் மகளைப் பெஞ்சமின் புதல்வருக்குக் கொடுப்பதில்லை" என்று ஆணையிட்டுக் கூறினர்.
2 அனைவரும் சீலோவில் இருந்த கடவுளின் ஆலயத்துக்கு வந்து மாலை வரை அவர் திருமுன் அமர்ந்து உரத்த சத்தமாய் ஓலமிட்டு அழுதனர்.
3 இஸ்ராயேலிலிருந்து ஒரு கோத்திரம் இன்று எடுபட்டுவிட்டதே. அப்படிப்பட்ட தீய நிகழ்ச்சி உம் மக்களுக்கு நேரிட்டது ஏன்?" என்று முறையிட்டனர்.
4 மறுநாள் அதிகாலையில் எழுந்து பீடம் எழுப்பித் தகனப்பலிகளையும் சமாதானப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.
5 அப்போது அவர்கள், "இஸ்ராயேலின் கோத்திரத்தார் அனைவரிலும் ஆண்டவரின் படையோடு வராதவன் யார்?" என்றனர். ஏனெனில் அவ்வாறு வராதவர்களைக் கொல்வது என்று மாஸ்பாவில் ஆணையிட்டுக் கூறியிருந்தனர்.
6 பிறகு தம் சகோதரனாகிய பெஞ்சமினை நினைத்து மனம் கசிந்து, "இஸ்ராயேலின் ஒரு கோத்திரம் அறுபட்டுப் போயிற்றே" என்றும், "இனி அவர்களுக்கு மனைவியாகப் பெண்கள் எங்கே கிடைக்கும்?
7 நாம் ஒவ்வொருவரும் நம் புதல்விகளைக் கொடுப்பதில்லை என்று பொதுவில் சத்தியம் செய்து கொண்டோமே" என்றும் மனம் வருந்திக் கூறினார்.
8 மீண்டும் "இஸ்ராயேலின் கோத்திரத்தார் அனைவரிலும் மாஸ்பாவில் ஆண்டவர் திருமுன் வராதவர் யார்?" என்று கேட்ட பொழுது, காலாது நாட்டு ஜாபேஸ் நகரத்தார் படையில் சேரவில்லை என்று கண்டனர்.
9 சீலோவில் அவர்கள் இருந்த காலத்தில் அவர்களில் ஒருவரும் அவ்விடம் இருக்கவில்லை.
10 எனவே, வலிமை மிக்கவர்களில் பதினாயிரம் பேரை அனுப்பி, "நீங்கள் போய் காலாது நாட்டு ஜாபேஸ் நகரத்தாரையும் அவர்கள் மனைவி, மக்களையும் வாளால் வெட்டுங்கள்.
11 ஆனால் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியதாவது: எல்லா ஆண்களையும், மனிதனை அறிந்த எல்லாப் பெண்களையும் வெட்டிவிட்டுக் கன்னிப் பெண்களை மட்டும் காப்பாற்ற வேண்டும்" என்று அவர்களுக்குக் கூறினர்.
12 அவர்கள் காலாதிலுள்ள ஜாபேஸில் மனிதனை அறியாத நானூறு கன்னிப் பெண்களைக் கண்டு பிடித்து அவர்களைக் கானான் நாட்டுச் சிலோவிலிருந்த பாளையத்திற்குக் கொண்டு வந்தனர்.
13 பிறகு அவர்கள் ரெம்மோன் பாறையில் இருந்த பெஞ்சமின் மக்களுக்குத் தூதரை அனுப்பி, அவர்களுடன் சமாதானம் செய்து கொள்ளுமாறு பணித்தனர்.
14 எனவே பெஞ்சமினர் திரும்பி வந்தனர்; காலாதிலுள்ள ஜாபேஸிலிருந்து வந்திருந்த பெண்களைத் தங்கள் மனைவிகளாகக் கொண்டனர். இவ்வாறு அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேறு பெண்கள் கிடைக்கவேயில்லை.
15 இஸ்ராயேலர் அனைவரும் இஸ்ராயேலில் ஒரு கோத்திரம் இப்படி அழிக்கப்பட்டதே என்று மனம் வருந்தித் தவம் இருந்தனர்.
16 பிறகு மக்களின் மூப்பர், "பெஞ்சமின் பெண்டீர் அனைவரும் ஒரே நாளில் கொல்லப்பட்டனரே; பெண்கள் இல்லாத எஞ்சிய மனிதருக்கு நாம் என்ன செய்யலாம்?
17 இஸ்ராயேலில் ஒரு கோத்திரம் அழிந்து போகாதபடி நாம் மிகவும் முயன்று கருத்தாய்க் கவனிக்க வேண்டும்.
18 நம் சொந்தப் புதல்வியருள் எவரையும் பெஞ்சமினருக்கு மணமுடித்துக் கொடுக்கமுடியாது. ஏனெனில் அவர்களுக்குப் பெண் கொடுப்பவன் சபிக்கப்பட்டவன் என்று நாமே சபித்து ஆணையிட்டிருக்கிறோம்" என்று கூறினர்.
19 இறுதியில் அவர்கள் ஆலோசனை செய்து, "இதோ பேத்தல் நகருக்குத் தெற்கிலும் பேத்தலினின்று சிக்கேமுக்குப் போகிற வழிக்குக் கிழக்கிலும் லெபோனா நகருக்கு மேற்கிலும் இருக்கிற சீலோவிலே ஆண்டவரின் ஆண்டுவிழா கொண்டாடப் படுகிறது" என்று கூறினர்.
20 பெஞ்சமின் மக்களுக்கு, "நீங்கள் போய்த் திராட்சைத் தோட்டங்களில் பதுங்கியிருந்து,
21 சீலோவின் புதல்விகள் தம் வழக்கப்படி நடனமாட வருவதை நீங்கள் காணும் போது, திடீரென்று திராட்சைத் தோட்டங்களிலிருந்து பாய்ந்து, ஆளுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துப் பெஞ்சமின் நாட்டுக்குக் கொண்டு போங்கள்.
22 பிறகு அவர்கள் தந்தையரோ சகோதரரோ எம்மிடம் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி, "சண்டையிடுபவரைப் போலவும் வெற்றி அடைந்தவரைப் போலவும் அவர்கள் உங்கள் பெண்களைக் கொண்டு போகவில்லை. எனவே, நீங்கள் அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும். அவர்கள் உங்களிடம் பெண் கேட்டும் நீங்கள் கொடுக்க மறுத்தீர்கள்; அது நீங்கள் புரிந்த குற்றம் அன்றோ? என்று சொல்லுவோம்" என்று கூறினர்.
23 பெஞ்சமின் புதல்வர் அவ்வாறே செய்தனர், நடனமாட வந்த பெண்களில் ஆளுக்கு ஒரு பெண்ணைப் பிடித்து மனைவியாக்கிக் கொண்டு அவர்கள் தம் சொந்த நாட்டுக்குப் போய் நகர்களைப் புதிதாய்க் கட்டி எழுப்பி அவற்றில் வாழ்ந்து வந்தனர்.
24 இஸ்ராயேல் மக்களும் அவரவர் கோத்திரத்திற்கும் குடும்பத்திற்கும் தகுந்தபடி தம் கூடாரங்களுக்குத் திரும்பினர். அக்காலத்தில் இஸ்ராயேலில் அரசன் இல்லை; ஆனால் ஒவ்வொருவனும் தனக்கு நேர்மையாகத் தோன்றினபடி நடந்து வந்தான்.