அதிகாரம் 01
1 ஆண்டவர் சாட்சியக் கூடாரத்தினின்று மோயீசனைக் கூப்பிட்டு,
2 அவரை நோக்கி: நீ இஸ்ராயேல் மக்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது: உங்களுள் ஒருவன் மாட்டையேனும், ஆட்டையேனும் ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுக்க வரும் போது, அவன் கீழ்க்காணும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
3 மாட்டு மந்தையிலிருந்து எடுத்துத் தகனப்பலி செலுத்த வேண்டியதாயின், அவன் மறுவற்ற ஒரு காளையைத் தெரிந்தெடுத்து, ஆண்டவர் தன் மீது அருள் கூரும் பொருட்டு அதைச் சாட்சியக் கூடார வாயிலுக்குக் கொண்டு வந்து,
4 பலிமிருகத்துத் தலையின் மேல் தன் கையை வைக்கக்கடவான். அதனால் அவன் காணிக்கை பாவப் பரிகாரத்திற்கென்று ஏற்றுக்கொள்ளப்படும்.
5 பிறகு அவன் கன்றுக்குட்டியை ஆண்டவர் திருமுன் பலியிட, ஆரோனின் புதல்வராகிய குருக்கள் கூடார வாயிலின் முன் இருக்கும் பீடத்தின் மேல் சுற்றிலும் அதன் இரத்தத்தை வார்த்து ஒப்புக்கொடுப்பார்.
6 பலி மிருகத்தின் தோலை உரித்து விட்டு, உறுப்புக்களைத் துண்டு துண்டாக வெட்டக்கடவார்கள்.
7 பிறகு பீடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விறகிலே அவர்கள் நெருப்புப் பற்ற வைத்து,
8 துண்டித்தெடுத்த உறுப்புக்களாகிய தலையையும், ஈரலோடு சேர்ந்த எல்லாவற்றையும் அதன்மீது முறையாக வைத்து,
9 அதன் குடல்களையும் கால்களையும் தண்ணீரால் கழுவி ஆண்டவருக்குத் தகனப்பலியாகவும் நறுமணப் பொருளாகவும் குரு பீடத்தின் மீது சுட்டெரிப்பார்.
10 ஆனால், செம்மறி ஆட்டையோ, வெள்ளாட்டையோ தகனப்பலியாகச் செலுத்த வேண்டுமாயின், அவன் மறுவற்ற கிடாயைக் கொண்டு வந்து,
11 ஆண்டவர் திருமுன் வடதிசையை நோக்கிய பலிப்பீடத்தின் பக்கத்திலே அதைக் கொல்லக்கடவான். ஆரோனின் புதல்வர்களோ அதன் இரத்தத்தைப் பீடத்தின் மீது சுற்றிலும் வார்த்து,
12 அதன் உறுப்புக்களையும் தலையையும் ஈரலோடு சேர்ந்த எல்லாவற்றையும் வெவ்வேறாகப் பிரித்து விறகின் மேல் வைத்து அதன் கீழே நெருப்புப் பற்ற வைப்பார்கள்.
13 குடல்களையும் கால்களையும் தண்ணீரில் கழுவுவார்கள். பிறகு குரு பீடத்தின் மீது ஆண்டவருக்குத் தகனப் பலியாகவும் நறுமணமாகவும் ஆகும் பொருட்டு அவற்றைச் சுட்டெரிக்கக்கடவார்.
14 ஆனால், பறவைகளை அதாவது புறாக்களையோ மாடப்புறாக் குஞ்சுகளையோ, ஆண்டவருக்குத் தகனப் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமாயின்,
15 அதைக் குருபீடத்திலே ஒப்புக்கொடுத்து, அதன் தலையைக் கழுத்தின் பின்புறமாகத் திருப்பி, அறுப்பட்ட காயத்தின் வழியாக இரத்தத்தைப் பீடத்தின் ஒரமாய்ச் சிந்த விடுவார்.
16 அதன் இரைப்பையையும் இறகுகளையும் பீடத்தருகில் கீழ்ப்புறத்திலே சாம்பலைச் சேர்த்து வைக்கும் இடத்தில் எறிந்து விட்டு,
17 அதன் இறக்கைகளைக் கத்தியால் வெட்டாமல் பிளக்கக் கடவார். ( பின் ) பீடத்தின் மீதுள்ள விறகுக் கட்டைகளில் நெருப்பைப் பற்ற வைத்து அதைச் சுட்டெரிப்பார். இது தகனப் பலியும் ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள காணிக்கையுமாகும்.
அதிகாரம் 02
1 ஒரு மனிதன் ஆண்டவருக்குப் பலியாகக் காணிக்கையை ஒப்புக்கொடுக்கிற போது, அவனது காணிக்கை மிருதுவான மாவாயிருந்தால், அவன் அதன்மேல் எண்ணெய் வார்த்துத் தூபவகைகளையும் இட்டு, ஆரோனின் புதல்வர்களாகிய குருக்களிடம் கொண்டு போவான்.
2 அவர்களில் ஒருவன் மிருதுவான மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடியும் தூபவகை முழுவதையும் எடுத்துக் கொண்டு, பீடத்தின் மீது நினைவுச் சின்னமாகவும் ஆண்டவருக்கு நறுமணமாகவும் வைப்பானாக.
3 பலிப்பொருளில் எஞ்சி இருப்பது ஆரோனையும் அவன் புதல்வர்களையும் சேரும். ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைப் பாகமாகையால் அது மிகப் புனிதமானது.
4 நீ படைப்பது அடுப்பில் ஏற்றிச் சமைத்த போசனப் பலியானால், அது எண்ணெய் தெளிக்கப்பட்ட புளியாத அப்பங்களாகவும், எண்ணெய் பூசப்பட்ட புளியாத பணியாரங்களாகவும் இருக்க வேண்டும்.
5 நீ படைப்பது தட்டையான சட்டியில் பொரிக்கப்பட்ட போசனப் பலியானால், அது எண்ணெயில் பிசைந்த புளியாத மிருதுவான மாவாய் இருக்க வேண்டும்.
6 அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதன்மேல் எண்ணெயை வார்ப்பாய்.
7 ஆனால், நீ படைப்பது பொரிக்கும் சட்டியில் செய்யப்பட்ட போசனப் பலியானால், அதுவும் எண்ணெயில் பிசைந்ததாய் இருக்க வேண்டும்.
8 அதை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வரும் போது குருவின் கையில் அதைக் கொடுத்து விடுவாய்.
9 அவர் அதை ஒப்புக்கொடுத்த பின், பலியிலிருந்து ஒரு பங்கைத் தமக்கு எடுத்துக் கொண்டு, பலிப்பீடத்தின் மீது ஆண்டவருக்கு நறுமணமாய் ( அதை ) எரிப்பார்.
10 மீதியானதெல்லாம் ஆரோனுக்கும் அவன் புதல்வர்க்கும் சொந்தமாகிவிடும். அது ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கையாகையால் அது மிகவும் புனிதமானது.
11 ஆண்டவருக்குப் படைக்கப்படுவதெல்லாம் புளியாத மாவினால் தயாரிக்கப்படுவதுமன்றி, புளித்த மாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் ஆண்டவருக்குத் தகனப் பலியாக எரிக்கக் கூடாது.
12 நீங்கள் அத்தகைய பொருட்களை முதற் பலன்களாகவும் சந்திப்புக்களாகவும் ஒப்புக் கொடுக்கலாம். ஆனால், அவற்றைப் பீடத்தின் மேல் நறுமணமாக வைக்கலாகாது
13 நீ ஒப்புக்கொடுக்கும் எந்தப் போசனப் பலியையும் உப்பினாலே சுவைப்படுத்தக் கடவாய். உன் கடவுளுடைய உடன்படிக்கையின் உப்பை உன் பலியினின்று நீக்காதே. நீ படைக்கும் எல்லாவற்றோடும் உப்பையும் படைக்கக்கடவாய்.
14 நீ உன் முதற் பலன்களில் இன்னும் பச்சையான கதிர்களைப் போசனப் பலியாக ஆண்டவருக்குச் செலுத்த வந்தாலோ, அவைகளை நெருப்பிலே வாட்டி வறுத்த பின் மாவாக அரைத்தே ஆண்டவருக்குச் செலுத்தக் கடவாய்.
15 அவை ஆண்டவருக்கான காணிக்கையாதலால், அவற்றின்மேல் எண்ணெயையும் வார்த்துத் தூப வகைகளையும் இடுவாய்.
16 குருவோ அதினின்று, அரைக்கப்பட்ட கோதுமையிலும் எண்ணெயிலும் ஒரு பாகத்தையும் தூபவகை எல்லாவற்றையும் நினைவுச் சின்னமாகச் சுட்டெரிப்பார்.
அதிகாரம் 03
1 ஒருவன் சமாதானப் பலியைப் படைக்கக் கருதி, மாட்டு மந்தையில் ஒன்றை எடுத்துச் செலுத்த வந்தால் அது காளையாயிருந்தாலும் சரி, பசுவாயிருந்தாலும் சரி, மறுவற்றிருப்பதையே ஆண்டவர் முன்னிலையில் செலுத்தக் கடவான்.
2 அவன் தன் பலிமிருகத்தின் தலைமீது கையை வைத்தபின் சாட்சியக் கூடாரத்துக்கு முன்பாக அதனை வெட்டக் கடவான். பின்பு ஆரோனின் புதல்வர்களாகிய குருக்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் வார்க்கக்கடவார்கள்.
3 சமாதானப் பலியிலே குடல்களைச் சுற்றியிருக்கிற கொழுப்பையும், குடல்களின் உள்ளிருக்கிற கொழுப்பு முழுவதையும் ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார்கள்.
4 இரண்டு சிறு நீரகங்களையும் விலாப்புறத்திலிருக்கிற கொழுப்பையும், சிறு நீரகங்களையும், கல்லீரலையும் சேர்ந்த சவ்வையும் ( எடுத்து விடுவார்கள் ).
5 அவைகளைப் பீடத்தின் மேலுள்ள விறகுக் கட்டைகளில் நெருப்புப் பற்ற வைத்து எரித்து ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள காணிக்கையாகச் செலுத்தக் கடவார்கள்.
6 அவன் ஆட்டைச் சமாதானப் பலியாகச் செலுத்த வரும் போதும் அது, ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, மறுவற்றதாய் இருக்க வேண்டும்.
7 அவன் ஆட்டுக்குட்டியை ஆண்டவர் முன்னிலையில் ஒப்புக் கொடுத்தால்,
8 அவன் தன் பலிப்பொருளின் தலைமீது கையை வைத்து, அதைச் சாட்சியக் கூடாரத்து மண்டபத்தில் வெட்டிக் கொல்லக் கடவான். பிறகு ஆரோனின் புதல்வர்கள் பீடத்தின் மேல் சுற்றிலும் அதன் இரத்தத்தை வார்த்து,
9 சமாதானப் பலியிலே கொழுப்பையும் முழுவாலையும் ஆண்டவருக்குப் பலியிட்டுக் காணிக்கையாய் ஒப்புக் கொடுப்பார்கள்.
10 அன்றியும், குரு, சிறு நீரகங்களையும், வயிறு முதலிய எல்லா உயிருறுப்புக்களையும் மூடியுள்ள கொழுப்பையும், விலாவை மூடியுள்ள கொழுப்பையும், இரு சிறு நீரகங்களையும் கல்லீரலையும் சேர்ந்த சவ்வையும் (எடுத்து)
11 அவைகளைப் பீடத்தின் மேலுள்ள நெருப்பிலே போட்டு, நெருப்புக்கும், ஆண்டவருக்கு இடும் காணிக்கைக்கும் உணவாகச் சுட்டெரிப்பார்.
12 அவன் வெள்ளாட்டை ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தாலோ,
13 அவன் பலிமிருகத்துத் தலையின்மீது தன் கையை வைத்து அதைச் சாட்சியக் கூடாரவாயிலில் கொல்லக்கடவான். ஆரோனின் புதல்வர் பீடத்தின் மேல் சுற்றிலும் அதன் இரத்தத்தை வார்த்து,
14 அதிலே ஆண்டவருடைய நெருப்புக்கு இரையாக வயிறு முதலிய உறுப்புக்களையும் மூடுகிற கொழுப்பையும்,
15 இரண்டு சிறு நீரகங்களையும் அவற்றின் மேலிருக்கும் விலாவை அடுத்த சவ்வையும், சிறு நீரகங்களோடிருக்கும் ஈரலின் கொழுப்பையும் எடுத்து,
16 நறுமணப்பலியாக இவைகளைக் குரு பீடத்தின் மீதுள்ள நெருப்பில் சுட்டெரிக்கக்கடவார்.
17 கொழுப்பானதெல்லாம் ஆண்டவருக்கு உரியது. இது உங்கள் தலைமுறைதோறும், நீங்கள் வாழும் இடம் தோறும் மாறாத சட்டமாய் இருக்கும். அன்றியும், இரத்தத்தையாவது கொழுப்பையாவது நீங்கள் உண்ணலாகாது என்றருளினார்.
அதிகாரம் 04
1 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்லவேண்டியதாவது: செய்ய வேண்டாமென்று ஆண்டவர் கட்டளை இட்டவைகளில் ஒன்றைத் தெரியாமல் மீறி ஒருவன் பாவம் செய்யும் போது,
3 அல்லது அபிசேகம் செய்யப் பெற்ற ஒரு குரு பாவம் செய்து அதனால் மக்களையும் பாவத்திற்கு உட்படுத்தும் போது, அவன் தன் பாவத்திற்கு பரிகாரமாக மறுவற்ற ஒரு இளங்காளையை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பானாக.
4 ( எவ்வாறெனில் ) சாட்சியக் கூடாரவாயிலிலே ஆண்டவர் திருமுன் அதைக் கொணர்ந்து அதன் தலையின்மீது கையை வைத்து, அதைக் கொன்று ஆண்டவருக்குப் பலியிடுவான்.
5 பிறகு அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துச் சாட்சியக் கூடாரத்தினுள் கொண்டு வந்து,
6 அவ்விரத்தத்தில் விரலைத் தோய்த்து, அதைக் கொண்டு ஏழுமுறை ஆண்டவர் திருமுன் பரிசுத்த இடத்தின் திரைக்கெதிரே தெளிப்பான்.
7 மேலும், அவன் அதில் கொஞ்சம் எடுத்துச் சாட்சியக் கூடாரத்தின் உள்ளேயிருக்கும் ஆண்டவருக்கு மிக விருப்பமானதாகவும் நறுமணமுள்ளதாகவும் இருக்கும்படி பீடக் கொம்புகளின் மேல் பூசுவான். மீதியை எல்லாம் கூடார வாயிலிலுள்ள தகனப்பலி பீடத்தின் அடியில் ஊற்றிவிடக்கடவான்.
8 பிறகு அவன் பாவத்திற்குப் பரிகாரமாகச் செலுத்தப்படும் பலிப் பொருளின் கொழுப்பு முழுவதையும், குடல்களை மூடியிருக்கும் கொழுப்பையும், உள்ளே இருக்கிற எல்லாவற்றையும் எடுத்து,
9 இரண்டு சிறு நீரகங்களையும், அவற்றின் மேலிருக்கும் விலாவை அடுத்த சவ்வையும், சிறுநீரகங்களோடு இருக்கும் ஈரலின் கொழுப்பையும் எடுத்து,
10 சமாதானப்பலிக்குரிய காளைக்குச் செய்கிற வழக்கப்படி, அவற்றையெல்லாம் தகனப் பலிபீடத்தின் மேல் சுட்டெரிக்கக் கடவான்.
11 ஆனால், தோலையும், இறைச்சி முழுவதையும்,
12 தலை, கால், குடல், சாணம், முதலிய மற்ற உடலுறுப்புக்களையும் பாளையத்திற்கு வெளியே சாம்பல் கொட்டுவதற்குக் குறிக்கப்பட்ட சுத்தமான இடத்திற்குக் கொண்டு போய், அவ்விடத்திலே விறகுக் கட்டைகளின் மேல் இட்டுச் சுட்டெரிக்கக் கடவான்.
13 இஸ்ராயேலின் மக்கள் எல்லாரும் அறியாமையினால் தவறி ஆண்டவருடைய கட்டளைக்கு விரோதமானதைச் செய்து,
14 பிறகு, தாங்கள் செய்தது பாவமென்று கண்டுபிடித்தால், அவர்கள் தங்கள் பாவப் பரிகாரமாக ஒரு இளங்காளையை ஒப்புக் கொடுக்க வேண்டும். அதற்காகக் கூடார வாயிலுக்கு அதைக் கொண்டு வரவேண்டும்.
15 அப்போது மக்களில் மூப்பர்கள் ஆண்டவர் திருமுன் அதன் தலை மீது கையை வைப்பார்கள். அந்த இளங்காளை ஆண்டவர் திருமுன் பலியிடப்பட்ட பின்,
16 அபிசேகம் செய்யப் பெற்ற குரு அதன் இரத்தத்தில் சிறிது எடுத்துச் சாட்சியக் கூடாரத்தினுள் கொண்டு வந்து,
17 அதிலே தன் விரலைத் தோய்த்து ஏழுமுறை திரைக்கு முன் தெளிப்பார்.
18 பிறகு சாட்சியக் கூடாரத்திலே ஆண்டவர் திருமுன் அமைந்திருக்கும் பீடத்தின் கொம்புகளிலும் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, எஞ்சிய இரத்தத்தைச் சாட்சியக் கூடார வாயிலிலுள்ள தகனப் பீடத்தின் அடியில் ஊற்றி விடுவார்.
19 மேலும் அதனுடைய கொழுப்பெல்லாவற்றையும் பீடத்தின்மீது சுட்டெரிப்பார்.
20 முன்பு செய்தது போலவே இந்தக் காளைக்கும் செய்து குரு அவர்களுக்காக வேண்டவே, ஆண்டவர், அவர்கள் மீது இரக்கம் கொள்வார்.
21 முன்பு செய்தது போலவே இக்காளையையும் பாளையத்திற்கு வெளியே கொண்டுபோய்ச் சுட்டெரிக்கக்கடவார். இவ்வாறு மக்களின் பாவத்திற்குப் பரிகாரம் செய்யப்படும்.
22 அரசன் ஆண்டவருடைய சட்டத்தால் விலக்கப்பட்டவற்றில் ஒன்றைத் தெரியாமல் செய்து பாவத்திற்கு ஆளாகி,
23 பின் தனது பாவத்தை அறிய வந்தால், மறுவற்ற வெள்ளாட்டுக்கிடாய் ஒன்றை ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுத்து,
24 தனது கையை அதன் தலை மீது வைத்து அது பாவ விமோசனப் பலியாய் இருப்பதனால், ஆண்டவர் திருமுன் தகனப்பலியிடுவதற்குக் குறித்திருக்கும் இடத்திலே அதைப் பலியிடுவான்.
25 பின்னர் குரு பாவத்துக்கான பலிப்பொருளின் இரத்தத்திலே விரலைத் தோய்த்துத் தகனப் பலிபீடத்தின் கொம்புகளில் தடவி, எஞ்சிய இரத்தத்தை அதன் பாதத்திலே ஊற்றி விடுவார்.
26 கொழுப்பையோ, சமாதானப் பலிகளில் செய்யப்படுகிற வழக்கப்படி, (பீடத்தின்மீது ) சுட்டெரித்த பிறகு, குரு அவனுக்காகவும் அவன் பாவத்துக்காகவும் மன்றாடவே அவன் மன்னிப்படைவான்.
27 நாட்டு மக்களில் யாரேனும் அறியாமையினால் ஆண்டவருடைய கட்டளைகளால் விலக்கப்பட்டவைகளில் யாதொன்றையும் மீறிப் பாவம் செய்தால்,
28 அவன் தன் பாவத்தைக் கண்டுணர்ந்த பின் மறுவற்ற ஒரு வெள்ளாட்டை ஒப்புக்கொடுத்து,
29 பாவப்பொறுத்தலுக்கான அந்தப் பலிமிருகத்தின் தலைமீது கையை வைத்து, அதைத் தகனப் பலியிடும் இடத்திலே வெட்டிக் கொல்லக்கடவான்.
30 குருவும் தம் விரலில் இரத்தத்தை எடுத்துத் தகனப் பலிபீடத்தின் கொம்புகளில் தடவி, எஞ்சிய இரத்தத்தை அதன் அடியிலே ஊற்றிவிடுவார்.
31 சமாதானப் பலிகளில் செய்யப்படுவதுபோல்,( குரு ) கொழுப்பெல்லாம் எடுத்துக்கொண்டு போய்ப் பீடத்தின் மீது ஆண்டவருக்கு நறுமணமாய்ச் சுட்டெரித்து, அவனுக்காக மன்றாடுவார். அப்போது அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.
32 ஆனால், அவன் மந்தையினின்று மறுவற்ற ஒரு பெண் ஆட்டைப் பாவ விமோசனப் பலியாக ஒப்புக்கொடுப்பானாயின்,
33 அவன் அதன் தலைமீது தன் கையை வைத்துத் தகனப்பலி மிருகங்கள் கொல்லப்படும் இடத்திலே அதைக் கொல்லக்கடவான்.
34 குருவோ தம் விரலில் அதன் இரத்தத்தை எடுத்துத் தகனப் பலி பீடத்தின் கொம்புகளில் தடவி, எஞ்சிய இரத்தத்தை அதன் அடியில் ஊற்றி விடுவார்.
35 பிறகு, சமாதானப் பலியாக வெட்டப்படும் செம்மறிக் கிடாயிக்குச் செய்கிற வழக்கப்படி, அதனுடைய கொழுப்பெல்லாம் எடுத்துப் பீடத்தின் மீது ஆண்டவருக்கு உரித்தான தூபவகைகளாகச் சுட்டெரித்து, அவனுக்காகவும் அவன் பாவத்துக்காகவும் மன்றாடுவாராக. அதனால் அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.
அதிகாரம் 05
1 ஆணையிடுகிறவனுடைய குரலைக் கேட்டுச் சாட்சி சொல்ல வந்தவன் தான் கண்டதையும் நிச்சயமாய் அறிந்ததையும் தெரிவிக்காமல் போவானாயின், அவன் குற்றவாளியாகிறான். தன் அக்கிரமத்தைத் தன்மேல் சுமந்து கொள்வான்.
2 காட்டு மிருகத்தால் கொல்லப்பட்ட உடலையோ, தானாகச் செத்ததையோ, ஊர்வனவற்றையோ வேறெந்த அசுத்தமான பொருளையோ தொட்டவன் தான் தீட்டுப்பட்டவன் என்பதை மறந்திருந்தாலும், தீட்டும் குற்றமும் உள்ளவனாய் இருக்கிறான்.
3 அல்லது, மனிதர் எவ்வித அசுத்தத்தினால் வழக்கமாய்த் தீட்டுப்படுவார்களோ அவ்விதமாய்த் தீட்டுப்பட்ட மனிதரில் யாரேனும் ஒருவனைத் தொட்டவன் முதலில் மறந்து பிறகு அதனை அறிய வந்தால் அவன் குற்றத்திற்கு உட்படுவான்.
4 நன்மையோ தீமையோ தான் செய்வதாக ஆணையிட்டும் வாயினால் சொல்லியும் சத்தியம் செய்தவன் முதலிலே மறந்தும் பிறகு தான் செய்தது பாவமென்று அறிக்கையிட்டால்,
5 தான் செய்த குற்றத்துக்காகத் தவம் செய்யவும்,
6 மந்தையினின்று ஒரு பெண் செம்மறியாட்டுக் குட்டியையோ, பெண் வெள்ளாட்டுக் குட்டியையோ ஒப்புக்கொடுக்கவும் கடவான். அப்போது குரு அவனுக்காகவும் அவன் குற்றத்துக்காகவும் வேண்டிக்கொள்வார்.
7 ஆனால், அவன் மிருகத்தை ஒப்புக்கொடுக்க வசதியில்லாதவனாயிருப்பின் அவன் இரண்டு புறக்களையோ இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ எடுத்துக் குற்றத்திற்காக ஒன்றையும், தகனப் பலிக்காகப் பிறிதொன்றையும் ஆண்டவர் திருமுன் கொண்டுவரக்கடவான்.
8 பின் அவைகளைக் குருவிடம் கொடுப்பான். இவர் பாவ நிவாரணப் பலிக்கு உரியதை முதலில் செலுத்தி, அதன் தலையை அதன் கழுத்தின்பால் வளைத்து அதை முழுவதும் ஒடிக்காமலும் இரண்டாக்காமலும் கொன்று,
9 அவன் இரத்தத்தைப் பலிப்பீடத்தின் புறத்தே தெளிப்பார். பிறகு, அது குற்றத்திற்குரிய பலியாகையால், மிஞ்சும் இரத்தமெல்லாவற்றையும் அதன் அடியில் ஒழுக விடுவார்.
10 மற்றதையோ வழக்கப்படி தகனப் பலியாகச் சுட்டெரிப்பார். பின் அவனுக்காகவும் அவன் குற்றத்திற்காகவும் அவர் வேண்ட அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.
11 மேற்சொன்ன இரண்டு புறாக்களையோ, இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ கொண்டு வரக் கூடாதவனாயிருப்பின், தனது குற்றத்திற்காக எப்பி ( என்ற அளவில்) பத்தில் ஒரு பங்கு மிருதுவான மாவை ஒப்புக்கொடுப்பான். அது பாவநிவாரணப் ( பலி ) யாகையால், அதன்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூப வகைகள் இடாமலும்,
12 அதைக் குருவிடத்தில் கொண்டு வருவான். இவர் அதினின்று ஒரு கைப்பிடி எடுத்து, ஒப்புக்கொடுத்தவனுடைய நினைவாகப் பீடத்தின் மீது சுட்டெரித்து, அவனுக்காக மன்றாடிப் பரிகாரம் செய்வார்.
13 எஞ்சியதோ நன் கொடையாகக் குருவைச் சேரும் என்றருளினார்.
14 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
15 ஒருவன் அறியாமையால் ஆண்டவருக்கு அர்ச்சித்து ஒதுக்கப்பட்டவற்றின் காரியத்திலே மறைச் சடங்குகளைச் சரியாய் அனுசரியாததின் மூலம் பாவத்திற்கு ஆளானால், அவன் தன் குற்றத்திற்காகப் பரிசுத்த இடத்து நிறையின்படி இரண்டு சீக்கல் விலை பெறுமான ஒரு மறுவற்ற ஆட்டுக்கிடாயை மந்தையினின்று கொண்டுவந்து ஒப்புக் கொடுப்பான்.
16 தன்னால் உண்டான இழப்பிற்கு ஈடு செய்யக்கடவான். அதனோடு ஜந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் குருவின் கையில் கொடுக்கக்கடவான். குருவோ, ஆட்டுக்கிடாயை ஒப்புக்கொடுத்து அவனுக்காக மன்றாட, அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.
17 ஒருவன் ஆண்டவருடைய சட்டத்தால் விலக்கப்பட்டவைகளில் எதையேனும் தெரியாமல் செய்து பாவத்திற்கு ஆளானால், அவன் தன் அக்கிரமத்தைக் கண்டறிந்தவுடனே,
18 தன் பாவத்தின் கனத்துக்கும் அளவுக்கும் தக்கபடி மந்தையினின்று தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு மறுவற்ற ஆட்டுக்கிடாயைக் குருவிடம் கொண்டு வருவான். இவரோ, அறியாமல் செய்தான் என்று அவனுக்காக வேண்டவே, அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.
19 ஏனென்றால் அவன் அறியாமையாலேயே ஆண்டவருக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தான் என்றருளினார்.
அதிகாரம் 06
1 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 யாரேனும் ஒருவன் பாவியாகி ஆண்டவரைப் பழித்து, அயலான் தன்னை நம்பித் தன் பொறுப்பில் ஒப்புவித்த பொருளைத் தான் வாங்கவில்லை என்று மறுத்தோ, ஏதேனும் பொருளை வலக்காரமாய்ப் பறித்தோ தன் அயலானுக்கு ஆள் மாறாட்டம் செய்தோ,
3 காணாமற்போன பொருளைக் கண்டடைந்தும், 'இல்லை' என மறுத்து அதைக் குறித்துப் பொய்யுரைத்தோ அல்லது மனிதர் வழக்கமாய்ச் செய்யும் பற்பல பாவங்களில் யாதொன்றையோ செய்திருப்பானாயின்,
4 அவன் குற்றவாளியென்று நிரூபிக்கப்பட்ட பின்,
5 அவன் வஞ்சகமாய்க் கைக்கொள்ளத் தேடியவற்றையெல்லாம் முழுதுமே திருப்பிக் கொடுக்க வேண்டியது. அன்றியும், அதனோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகக் கூட்டி, நட்டம் அடைந்த உரிமையாளனுக்கும் கொடுத்து ஈடு செய்யக்கடவான்.
6 மேலும் தனது பாவ மன்னிப்புக்காகச் செய்த குற்றத்தின் கனத்துக்கும் அளவுக்கும் தக்கபடி மந்தையினின்று மறுவற்ற ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்து, அதைக் குருவிடம் ஒப்புக் கொடுப்பான்.
7 இவர் ஆண்டவர் திருமுன் அவனுக்காக மன்றாட, அவன் குற்றமெல்லாம் மன்னிக்கப்படும் என்றார்.
8 ஆண்டவர் மேலும் மோயீசனை நோக்கி:
9 நீ ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கட்டளையிட வேண்டியதாவது: தகனபலிக்கடுத்த ஒழுங்கு ஏனென்றால்: தகனப்பலி இரவு முழுவதும் விடியற்காலை வரையிலும் பீடத்தின் மேல் எரிய வேண்டியதுமன்றி, அதன் நெருப்பு அதே பீடத்தின் நெருப்பாய் இருக்கவும் வேண்டும்.
10 குரு, மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்ட அங்கியையும் சல்லடத்தையும் அணிந்தவராய் நெருப்பில் எரிந்த தகனப் பலியின் சாம்பலை எடுத்துப் பீடத்தண்டையில் கொட்டக்கடவார்.
11 பின், முந்தின உடைகளைக் கழற்றி வேறு ( உடைகளை ) அணிந்து கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளையத்துக்கு வெளியே கொண்டு போய், மிகத் தூய்மையான இடத்திலே ( கொட்டி ), அது புழுதியாய் மாறிப்போக விடுவார்.
12 நெருப்போ எப்பொழுதும் பீடத்தில் எரிந்து கொண்டிருக்கும். குரு நாள் தோறும் காலையில் விறகுகளை இட்டு, அதன் மீது தகனப் பலியையும் சமாதானப் பலிகளின் கொழுப்பையும் வைத்து எரிக்கக்கடவார்.
13 அந்நெருப்போ, ஒருபொழுதும் அணைந்து போகாமல், எப்பொழுதும் பீடத்தின் மேல் இருக்க வேண்டியதாம்.
14 ஆரோனின் புதல்வர்கள் ஆண்டவருக்கு முன்னும் பலி பீடத்திற்கு முன்னும் படைக்க வேண்டிய பலிக்கும், பானபோசனப் பலிகளுக்குமடுத்த சட்டமாவது:
15 குரு, எண்ணெய் தெளிக்கப்பட்ட மிருதுவான மாவில் ஒரு கைப்பிடி எடுத்து, அதையும், மாவின் மேல் வைக்கப்பட்டிருக்கும் தூப வகைகள் யாவையும் பீடத்தின் மேல் ஆண்டவருக்கு மிக்க நறுமணத்தின் அடையாளமாக எரிக்கக்கடவான்.
16 மாவில் மீதியானதையோ ஆரோனும் அவன் புதல்வர்களும் புளிப்பில்லாமல் உண்பார்கள். கூடார மண்டபமாகிய பரிசுத்த இடத்திலே அதை உண்பார்கள்.
17 அது புளிப்பில்லாதிருக்க வேண்டியது. அதில் ஒரு பாகம் ஆண்டவருக்குத் தகனப்பலியாகப் படைக்கப்படுகின்றதினாலே, அது பாவ நிவாரணப் பலியைப் போலும், குற்ற நிவாரணப் பலியைப் போலும், மிகப் புனிதமானது.
18 ஆரோன் குலத்தைச் சேர்ந்த ஆடவர் மட்டுமே அதை உண்பார்கள். ஆண்டவருக்குப் பலி செலுத்தும்போது நீங்கள் என்றும் தலைமுறை தலைமுறையாய் அனுசரிக்க வேண்டிய விதி இதுவாம். அதைத் தொடுகிற எவனும் புனிதமடைவான் என்றருளினார்.
19 மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
20 ஆரோனும் அவன் புதல்வர்களும் தங்கள் அபிசேக நாளில் ஆண்டவருக்குப் படைக்க வேண்டிய காணிக்கை என்னவென்றால், ஏப்பி அளவில் பத்தில் ஒரு பங்கு மிருதுவான மாவைக் காலையில் பாதியாகவும் மாலையில் பாதியாகவும் தொடர்ந்த பலியாய்ச் செலுத்தக் கடவார்கள்.
21 அது எண்ணெய் தெளிக்கப்பட்டுச் சட்டியிலே பொரிக்கப்படும். அதை ஆண்டவருக்கு மிக்க நறுமணமாகப் படைக்க வேண்டியவன்,
22 தன் தகப்பனின் இடத்திலே உரிமையோடு அபிசேகம் செய்யப் பட்ட குருவேயாம். மேற்சொன்ன காணிக்கையோ பீடத்தின்மேல் முழுவதும் எரிக்கப்படக்கடவது.
23 ஏனென்றால் குருக்களின் பலியெல்லாம் நெருப்பிலே எரிபடுமே தவிர, அவை எவனாலும் உண்ணப்பட மாட்டாது என்றருளினார்.
24 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
25 நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்ல வேண்டியதாவது: பாவநிவாரணப் பலியின் ஒழுங்கு முறையாவது; தகனப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் இடத்திலேயே பாவநிவாரணப் பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.
26 இது மிகவும் பரிசுத்தமானது, ஒப்புக்கொடுக்கிற குரு கூடார மண்டபத்தில் பரிசுத்த இடத்தில் இதை உண்பார்.
27 இதன் இறைச்சியைத் தொடுவன எல்லாம் பரிசுத்தமுள்ளதாகும். இதன் இரத்தத்தில் சிறிது ஒர் ஆடையில் தெறித்ததாயின் அந்த ஆடை ஒரு பரிசுத்தமான இடத்தில் கழுவப்பட வேண்டும்.
28 இது சமைக்கப்பட்ட மட்பாண்டம் உடைக்கப்பட வேண்டும். வெண்கலப் பாத்திரத்தில் சமைக்கப்பட்டதாயின் அது விளக்கப்பட்டுத் தண்ணீரால் கழுவப்பட வேண்டும்.
29 குருகுலத்தைச் சேர்ந்த ஆடவர் யாவரும் இதன் இறைச்சியை உண்பார்கள். ஏனென்றால், இது மிகவும் பரிசுத்தமானது.
30 ஆனால் பாவ நிவாரணப் பலியின் இரத்தத்திலே சிறிது, பாவப் பரிகாரத்தின் பொருட்டுப் பரிசுத்த இடத்தினுள் சாட்சியக் கூடாரத்தில் கொண்டு வரப்படும். அந்தப் பலிப்பொருள் உண்ணப்படலாகாது; மாறாக நெருப்பிலே எரிக்கப்பட வேண்டும்
அதிகாரம் 07
1 குற்ற நிவர்த்தியாக ஒப்புக்கொடுக்கப்படும் பலியின் ஒழுங்கு முறையாவது: அது மிகவும் பரிசுத்தமானது.
2 ஆகையால் தகனப் பலி மிருகம் கொல்லப்படும் இடத்திலேயே குற்ற நிவர்த்திப் பலிமிருகமும் வெட்டப்படும். அதன் இரத்தம் பீடத்தைச் சுற்றிலும் ஊற்றப்படும்.
3 அதன் வாலும், குடல்களை மூடிய கொழுப்பும்,
4 இரண்டு சிறுநீரகங்களும், விலாவை அடுத்த கொழுப்பும், ஈரலின் மேலும் சிறுநீரகங்களின் மேலும் இருக்கிற சவ்வும் படைக்கப்படும்.
5 குரு அவற்றைப் பலிபீடத்தின் மேல் எரிக்கக் கடவார். அது குற்ற நிவர்த்தியின் பொருட்டு ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்படும் நறுமணமுள்ள தகனப் பலியாம்.
6 இது மிகவும் பரிசுத்தமானதால் இதன் இறைச்சியைக் குரு குலத்தைச் சேர்ந்த ஆடவர் மட்டும், பரிசுத்த இடத்தில் வைத்து உண்பார்கள்.
7 பாவ நிவாரணப் பலி போன்றே குற்ற நிவர்த்திப்பலியும். அவ்விரண்டிற்கும் ஒழுங்கு முறை ஒன்றே. அவற்றைப் படைக்கும் குருவுக்கே அவை சொந்தம்.
8 தகனப் பலிமிருகத்தை ஒப்புக்கொடுக்கிற குரு அதன் தோலைத் தமக்காக வைத்துக் கொள்வார்.
9 அடுப்பிலே ஏற்றிச் சமைக்கப் படும் மிருதுவான மாவின் பலியும், இரும்புத் தட்டின் மேலும் சட்டியிலும் சமைக்கப் பட்டவை எல்லாமும் அததைச் செலுத்துகிற குருவுக்குச் சொந்தமாகும்.
10 எண்ணெயில் பிசைந்ததும் சமைக்கப் படாததுமானவை ஆரோனின் புதல்வரெல்லாருக்கும் சரிபாகமாகப் பங்கிடப்படும்.
11 ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்படுகிற சமாதானப் பலியைச் சார்ந்த ஒழுங்கு முறையாவது:
12 ஒருவன் நன்றிக் கடனிற்காகப் பலி ஒப்புக் கொடுப்பதாயிருந்தால், அவன் எண்ணெய் தெளிக்கப்பட்ட புளியாத அப்பங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளியாத பணியாரங்களையும், சமைக்கப்பட்ட மிருதுவான மாவையும், எண்ணெய் கலந்த பலகாரங்களையும் ஒப்புக்கொடுப்பானாக.
13 நன்றியறிதலாகச் செலுத்தப்படும் சமாதானப் பலியின் போது அவன் புளித்த மாவினால் செய்யப்பட்ட அப்பங்களையும் சேர்த்து ஒப்புக்கொடுக்கட்டும்.
14 இந்தப் படைப்புக்களில் ஒவ்வொன்று முதற் பலனாக ஆண்டவருக்குச் செலுத்தப்படும். அது பலியின் இரத்தத்தைத் தெளிக்கிற குருவைச் சேரும்.
15 அதன் இறைச்சியோ அதே நாளில் உண்ணப்பட வேண்டும். அதில் யாதொன்றையும் விடியற்காலை வரை வைத்திருக்கக் கூடாது.
16 ஒருவன் நேர்ச்சியின் பொருட்டோ, தன் சொந்த விருப்பத்தினால் உந்தப்பட்டோ பலி செலுத்தினால், அதுவும் அதே நாளில் உண்ணப்படும். மீதி ஏதேனும் இருக்குமாயின் மறுநாள் உண்ணலாம்.
17 ஆனால், மூன்றாம் நாள் அதில் ஏதாவது மீதியிருக்குமானால், அதுவெல்லாம் சுட்டெரிக்கப்படவேண்டும்.
18 ஒருவன் சமாதானப் பலியின் இறைச்சியில் மீதியானதை மூன்றாம் நாள் உண்பானாயின், அந்தக் காணிக்கை வீணாகி, அதைச் செலுத்தினவனுக்குப் பலனின்றிப் போய்விடும். அதனோடு இத்தகைய இறைச்சியால் தன்னையே தீட்டுப்படுத்தும் எவனும் குற்றவாளியாவான்.
19 தீட்டான எந்தப் பொருளிலேனும் பட்ட இறைச்சி உண்ணப்படாமல் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக் கடவது. மற்ற இறைச்சியை, தூய்மையாயிருக்கிறவன் உண்ணலாம்.
20 தீட்டுள்ளவனாய் இருக்கிறவன் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட சமாதானப் பலியின் இறைச்சியை உண்டால், அவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான்.
21 அப்படியே மனிதனுடைய தீட்டையோ மிருகத்தினுடைய தீட்டையோ, அல்லது தீட்டுப்படுத்தக் கூடிய வேறெந்தப் பொருளின் தீட்டையோ, தொட்டபின் (மேற்சொன்ன) இறைச்சியை உண்பவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான் என்றருளினார்.
22 மேலும் ஆண்டவர் மேயீசனை நோக்கி:
23 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது:ஆடு, மாடு, வெள்ளாடு இவற்றின் கொழுப்பை நீங்கள் உண்ணலாகாது.
24 தானாய்ச் செத்த மிருகத்தினுடைய கொழுப்பையும் கொடிய மிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தினுடைய கெழுப்பையும் நீங்கள் பலவிதமாய்ப் பயன்படுத்தலாம்.
25 ஆண்டவருக்குத் தகனப் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டிய கொழுப்பை உண்டவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான்.
26 பறவையானாலும் சரி, மிருகமானாலும் சரி. நீங்கள் யாதொரு உயிரினத்தின் இரத்தத்தையும் உண்ணலாகாது.
27 எவனேனும் இரத்தத்தை உண்டிருந்தால், அவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான் என்றருளினார்.
28 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
29 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: ஆண்டவருக்குச் சமாதானப்பலி செலுத்துபவன் அதனுடன் சொந்தப் பலியாகிய பானபோசனப் பலியையும் செலுத்தக்கடவான்.
30 அவன் பலிமிருகத்தினுடைய கொழுப்பையும் மார்பையும் கைகளில் ஏந்திக்கொண்டு, அவ்விரண்டையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த பின் குருவிடம் ஒப்புவித்து விடுவான்.
31 இவர் கொழுப்பைப் பலிப் பீடத்தின் மேல் எரிப்பார். மார்போ ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் உரியதாகும்.
32 சமாதானப்பலி மிருகங்களுடைய வலது முன்னந் தொடை புதுப்பலனாகக் குருவுக்குச் சொந்தமாகும்.
33 ஆரோனின் புதல்வரில் இரத்தத்தையும் கொழுப்பையும் ஒப்புக் கொடுப்பவனுக்கு வலது முன்னந்தொடை சொந்தமாகும்.
34 ஏனென்றால் இஸ்ராயேல் மக்களுடைய சமாதானப் பலிகளில், எழுச்சியாகிய மார்பையும், பிரித்தலாகிய முன்னந் தொடையையும் நாமே எடுத்து, ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுத்துள்ளோம். இது இஸ்ராயேல் குடிகள் அனைவராலும் மாறாத கட்டளையாய் அனுசரிக்கப்பட வேண்டியது என்றருளினார்.
35 மேயீசன் ஆரோனையும் அவர் புதல்வர்களையும் குருத்துவ அலுவலுக்கென அபிசேகம் செய்த நாளில், அவர்களுக்குத் திருமறைச் சடங்குகளிலே ஏற்பட்ட பலனும் அதுவே.
36 இஸ்ராயேல் மக்கள் மாறாத கட்டளையாய்த் தலைமுறை தோறும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று ஆண்டவரால் கட்டளையிடப் பட்டதும் அதுவே.
37 பாவப் பரிகாரமாகவும் குற்ற நிவர்த்திக்காகவும் ஒப்புக்கொடுக்கப்படும் பலி, அபிசேகப் பலி, சமாதானப் பலி ஆகிய பலிகளுக்கடுத்த ஒழுங்கு முறையும் அதுவே.
38 சீனாய்ப் பாலைநிலத்திலிருந்த இஸ்ராயேல் மக்கள் தங்கள் காணிக்கைகளை ஆண்டவருக்குச் செலுத்த வேண்டுமென்று ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்ட போதே அதைச் சீனாய் மலையில் திட்டப்படுத்தி அருளினார்.
அதிகாரம் 08
1 மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 நீ ஆரோனையும் அவன் புதல்வர்களையும் வரவழைத்து, அவர்களுடைய ஆடைகளையும், அபிசேகத் தைலத்தையும், பாவ நிவாரணப் பலிக்கு ஓர் இளங்காளையையும் இரண்டு ஆட்டுக் கிடாய்களையும், ஒரு கூடையில் புளியாத அப்பங்களையும் கொண்டு வந்து,
3 சபை முழுவதையும் கூடார வாயிலிலே ஒன்று கூட்டுவாய் என்றார்.
4 மோயீசன் ஆண்டவர் கட்டளையின்படியே செய்தார். கூடார வாயிலின் முன் சபையார் எல்லாரும் கூடியிருக்கையில்,
5 அவர் கூட்டத்தை நோக்கி, ஆண்டவர் கட்டளையிட்டது இன்னதென்று சொன்னார்.
6 பின்னர் ஆரோனையும் அவர் புதல்வர்களையும் மக்களுக்குக் காண்பித்து, அவர்களைக் குளிப்பாட்டிய பின்பு,
7 தலைமைக் குருவுக்கு மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்ட உள்ளங்கியை அணிவித்து, இடைக்கச்சை கட்டி நீல மேலங்கியை அவர்மேல் இட்டு, அதன்மேல் ஏப்போத்தைத் தரித்து,
8 அதனோடு மார்புப்பதக்கத்தைச் சரிப்படுத்திக் கச்சையால் கட்டின பின்பு, நெஞ்சாபரணத்தையும் அணிவித்தார். இதிலே கோட்பாடு, உண்மை எனும் இரு வார்த்தைகள் எழுதப் பட்டிருந்தன.
9 அன்றியும், அவன் தலையின் மேல் முடியை அணிவித்த பின், ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டிருந்தபடி, அபிசேகத் தைலத்தினால் அருச்சனை செய்யப்பட்ட பொன் தகட்டையும் அவன் நெற்றிக்கு நேரே கட்டினார்.
10 பிறகு ( மோயீசன் ) அபிசேகத் தைலத்தை எடுத்து, உறைவிடத்திலும் அதிலுள்ள எல்லாத் தட்டுமுட்டுக்களிலும் பூசினார்.
11 ஏழுமுறை தெளித்துப் பலிபீடத்தை அருச்சனை செய்த பின், அதையும், அதைச் சார்ந்த எல்லாப் பாத்திரங்களையும் தொட்டியையும், அதன் பாதத்தையும் அபிசேகத் தைலம் ஊற்றித் தடவி அருச்சித்தார்.
12 அதில் சிறிது ஆரோனுடைய தலை மீது வார்த்துப் பூசி அவரை அபிசேகம் செய்தார்.
13 மேலும், ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, அவர் புதல்வர்களையும் வரவழைத்து அவர்களுக்கு மெல்லிய சணல் நூலால் செய்த அங்கிகளை அணிவித்து, கச்சைகளைக் கட்டி முடிகளையும் அணிவித்தார்.
14 அதன்பின் பாவப் பரிகாரத்துக்கான இளங்காளையை ஒப்புக்கொடுத்தார். ஆரோனும் அவர் புதல்வர்களும் அதன் தலை மீது தங்கள் கைகளை வைத்த பின்,
15 மோயீசன் அதை வெட்டி இரத்தத்தை எடுத்து, அதில் தோய்த்த விரலால் பீடக் கொம்புகளைச் சுற்றிலும் தடவிப் பரிகாரம் செய்து அருச்சித்து, மீதியான இரத்தத்தை அதன் அடியில் ஊற்றினார்.
16 பின் குடல்களின் மேலிருந்த கொழுப்பையும், கல்லீரலின் சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றிலுள்ள கொழுப்புக்களையும் பீடத்தின் மேல் எரித்தார்.
17 இளங்காளையைத் தோலோடும் இறைச்சியோடும் சாணியோடும், ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, பாளையத்திற்கு வெளியே சுட்டெரித்தார்.
18 மேலும் ஒர் ஆட்டுக்கிடாயையும் தகனப்பலியாகச் செலுத்தினார். அதன் தலையின்மேல் ஆரோனும் அவர் புதல்வர்களும் தங்கள் கைகளை வைத்தபின் அவர் அதை வெட்டி,
19 அதன் இரத்தத்தைப் பலிப்பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார்.
20 பிறகு அந்த ஆட்டுக் கிடாயையும் துண்டு துண்டாய் வெட்டி, அதன் தலையையும் உறுப்புக்களையும் கொழுப்பையும் நெருப்பில் சுட்டெரித்தார்.
21 அதன்பின் குடல்களையும் கால்களையும் தண்ணீரால் கழுவியெடுத்து, ஆட்டுக்கிடாய் முழுவதையும் மோயீசன் பீடத்தின்மேல் சுட்டெரித்தார். ஏனென்றால், அது ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள தகனப்பலியாம். இவையெல்லாம் ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டிருந்தபடி மோயீசன் செய்து முடித்தார்.
22 பின்னர் குருக்களின் அபிசேகத்திற்காக மற்றொரு ஆட்டுக் கிடாயையும் ஒப்புக்கொடுத்தார். ஆரோனும் அவர் புதல்வர்களும் அதன் தலை மேல் தங்கள் கைகளை வைத்தனர்.
23 மோயீசன் அதை வெட்டி, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆரோனின் வலக்காதின் மடலிலும் வலக் கை கால்களின் பெருவிரலிலும் தடவினார்.
24 பிறகு ஆரோனின் புதல்வரையும் அழைத்து, அவர்களுடைய வலக்காதின் மடலிலும் வலக் கை கால்களின் பெருவிரலிலும் பலியிடப்பட்ட ஆட்டுக்கிடாயின் இரத்தத்தைப் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார்.
25 ஆனால் கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய கொழுப்பு முழுவதையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறு நீரகங்களையும், அவற்றின் கொழுப்பையும், வலது முன்னந் தொடையையும் பிரித்தெடுத்தார்.
26 அப்போது ஆண்டவர் திருமுன் இருந்த கூடையினின்று புளியாத ஓர் அப்பத்தையும், எண்ணெய் தெளிக்கப்பட்ட ஒரு பலகாரத்தையும், ஒரு பணியாரத்தையும் எடுத்து அவற்றைக் கொழுப்புக்களின் மேலும் வலது முன்னந் தொடையின் மேலும் வைத்து,
27 அவற்றையெல்லாம் ஒன்றாய் ஆரோனுடைய கையிலும் அவர் புதல்வர் கையிலும் வைத்தார். அவர்கள் அவைகளை ஆண்டவர் திருமுன் உயர்த்தின பின்,
28 மோயீசன் அவர்கள் கையிலிருந்து அவைகளை மீண்டும் வாங்கித் தகனப் பலிப்பீடத்தின் மேல் சுட்டெரித்தார். ஏனென்றால், அவை அபிசேகத்துக்கடுத்த காணிக்கையும் ஆண்டவருக்கு நறுமணமுள்ள நேர்ச்சைப் பலிகள்.
29 ஆட்டுக்கிடாயின் மார்க்கண்டத்தை எடுத்து ஆண்டவர் திருமுன் உயர்த்தின பின், ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி அதனை அபிசேகம் செய்யப்பட்ட கிடாயில் தனக்குரிய பங்காக எடுத்துக் கொண்டார்.
30 அன்றியும், அபிசேகத் தைலத்திலும் பலிப் பீடத்தின் மேலிருந்த இரத்தத்திலும் சிறிது எடுத்து, ஆரோன் மேலும், அவர் உடைகள் மீதும், அவர் புதல்வர்கள் மேலும், அவர்களுடைய உடைகள் மீதும் தெளித்தார்.
31 அவர்களை உடைகள் மூலமாய்ப் பரிசுத்தமாக்கின பின், அவர்களை நோக்கி: நீங்கள் அந்த இறைச்சியைக் கூடார வாயில் முன் சமைத்து, அங்கேயே அவற்றை உண்ணுங்கள்; கூடையில் வைக்கப்பட்டுள்ள அபிசேக அப்பங்களையும் உண்ணுங்கள். இப்படியே ஆண்டவர் என்னை நோக்கி: ஆரோனும் அவர் புதல்வர்களும் அவற்றை உண்ணட்டும்;
32 ஆனால், இறைச்சியிலும் அப்பங்களிலும் மீதியாய் இருப்பனவெல்லாம் நெருப்பிலே எரிக்கப்படும் என்று சொன்னார்.
33 அபிசேக நாட்கள் நிறைவு பெறுமட்டும், ஏழு நாட்களும் நீங்கள் கூடார வாயிலை விட்டு வெளியேறாதீர்கள். அபிசேகம் ஏழு நாளில் நிறைவு பெறும் (என்றார்).
34 பலியின் மறைச் சடங்கு நிறைவுறும் பொருட்டு அன்று அவ்விதமே செய்யப்பட்டது.
35 மீண்டும்: நீங்கள் சாகாத படிக்கு இரவு பகலாய் ஆசாரக் கூடாரத்தில் தங்கியிருந்து ஆண்டவருக்குக் காவல் காக்கக் கடவீர்கள். ஏனென்றால், எனக்கு இவ்வாறு கட்டளையிடப்பட்டது ( என்றார் ).
36 ஆண்டவர் மோயீசன் மூலமாய்க் கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவர் புதல்வர்களும் நிறைவேற்றினர்.
அதிகாரம் 09
1 எட்டாம் நாளில் மோயீசன் ஆரோனையும், அவர் புதல்வரையும், இஸ்ராயேலரில் மூப்பரையும் வரவழைத்து, ஆரோனை நோக்கி:
2 நீ பாவ நிவர்த்திப்பலியாக ஓர் இளங்காளையையும் தகனப் பலியாக மறுவற்ற ஓர் ஆட்டுக் கிடாயையும் மந்தையினின்று தெரிந்தெடுத்து ஆண்டவருக்கு முன் கொண்டுவரக் கடவாய் என்றார்.
3 மேலும் இஸ்ராயேல் மக்களை நோக்கி: நீங்கள் பாவ நிவாரணப் பலிக்கென்று ஓர் ஆட்டுக் கிடாயையும், தகனப் பலிக்கென்று ஒரு இளங்காளையையும், ஒரு வயதான மறுவற்ற ஓர் ஆட்டுக்குட்டியையும்,
4 சமாதானப் பலிக்கென்று ஒரு மாடும், ஒரு ஆட்டுக் கிடாயும் கொண்டு வந்து, அவற்றை ஆண்டவர் திருமுன் வெட்டிப் பலியிடுங்கள். ஒவ்வொன்றைப் பலியிட்டு வருகையில் அதனோடுகூட எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவையும் ஒப்புக்கொடுப்பீர்கள். ஏனென்றால், இன்று ஆண்டவர் உங்களுக்குக் காட்சியளிப்பார் என்றார்.
5 அவர்கள் அவ்விதமே மோயீசன் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் கூடார வாயிலண்டை கொண்டு வந்தார்கள். சபையார் எல்லாரும் அவ்விடத்தில் சேர்ந்து நின்று கொண்டிருக்கையில்,
6 மோயீசன் அவர்களை நோக்கி: ஆண்டவர் திருவுளம் பற்றின வாக்காவது: நீங்கள் (இவ்வாறு) செய்யுங்கள்; அவருடைய மாட்சியை நீங்கள் காண்பீர்கள் என்று சொன்னார்.
7 பிறகு ஆரோனை நோக்கி: நீ பலிப்பீடத்தண்டை வந்து, உன் பாவத்திற்குப் பரிகாரமாகப் பலியிட்டு நெருப்பையும் ஒப்புக்கொடுத்து, உனக்காகவும் குடிகளுக்காகவும் மன்றாடு. பிறகு குடிகளின் பலிமிருகத்தை வெட்டி ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் கட்டளையிட்டபடியே, மக்களுக்காக மன்றாடு என்று சொன்னார்.
8 அப்பொழுது ஆரோன் பலிப்பீடத்தண்டை வந்து, தம் பாவத்திற்குப் பரிகாரமாக இளங்காளையை வெட்டினார்.
9 அவர் புதல்வர் அதன் இரத்தத்தை அவருக்குச் சமர்ப்பிக்க, அவர் அதில் விரலைத் தோய்த்துப் பீடத் கொம்புகளில் தடவி, மீதியானதைப் பீடத்தின் அடியில் ஊற்றினார்.
10 பாவ நிவாரணப் பலியின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும் ஈரலின் சவ்வையும், ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி, பீடத்தின் மேல் சுட்டெரித்தார்.
11 அதன் இறைச்சியையும் தோலையும் பாளையத்திற்கு வெளியே சுட்டெரித்தார்.
12 பிறகு தகனப் பலியையும் செலுத்தினார். அவர் புதல்வர்கள் அதன் இரத்தத்தை அவருக்கு வழங்க, அவர் அதைப் பலிப்பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார்.
13 அவர்கள் பலிப்பொருளை துண்டாக வெட்டி, அதைத் தலையோடும் எல்லா உறுப்புக்களோடும் அவருக்குச் சமர்ப்பித்தனர். அவர் எல்லாவற்றையும் பலிப்பீடத்தின் மேல் நெருப்பில் சுட்டெரித்தார்.
14 முன்னரே குடல்களும் கால்களும் தண்ணீரில் கழுவப்பட்டிருந்தன.
15 மேலும், அவர் குடிகளின் பாவ நிவாரணத்திற்குரிய பலியாகிய ஆட்டுக் கிடாயை ஒப்புக் கொடுத்து, கொன்று, பீடத்தைச் சுத்திகரித்த பின்னர்,
16 அதைத் தகனப் பலியாக ஒப்புக் கொடுத்ததுமன்றி,
17 காலையில் செலுத்தும் தகனப் பலியைப் பற்றிய சடங்குகளை நிறைவேற்றி மேற்சொன்ன பலியுடன் பான போசனப் பலியையும் சேர்த்து பீடத்தின் மேல் எரித்தார்.
18 அன்றியும் குடிகளின் சமாதானப் பலியாகிய மாட்டையும் ஆட்டுக்கிடாயையும் பலியிட்டார். அவர் புதல்வர் அவருக்கு இரத்தத்தைக் கொடுக்க, அவர் அதைப் பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார்.
19 ஆனால் அவர்கள் மாட்டின் கொழுப்பையும், செம்மறிக் கிடாயின் வாலையும், சிறுநீரகங்களுக்கு அடுத்த கொழுப்பையும்,
20 கல்லீரலைச் சேர்ந்த சவ்வையும், மார்க் கண்டத்தின்மீது போட்டு வைத்தார்கள். கொழுப்புக்கள் பீடத்தின் மேல் சுட்டெரிக்கப்பட்ட பின்,
21 மோயீசன் கட்டளையிட்டிருந்தபடி ஆரோன் சமாதானப் பலிப்பொருளின் மார்க்கண்டங்களையும், வலது முன்னந் தொடைகளையும் பிரித்தெடுத்து, ஆண்டவர் திருமுன் உயர்த்தினார்.
22 இறுதியில் மக்களுக்கு முன் கைகளை விரித்து அவர்களை ஆசீர்வதித்தார். இவ்வாறு அவர் பாவநிவாரணப் பலிகளையும் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் நிறைவேற்றின பின்னர், இறங்கி வந்தார்.
23 மோயீசனும் ஆரோனும் சாட்சியக் கூடாரத்துக்குள் புகுந்து சிறிது நேரத்திற்குப் பின்னர் வெளியே வந்து மக்களை ஆசீர்வதித்தனர். அந்நேரத்தில் ஆண்டவருடைய மாட்சி எல்லா மக்களுக்கும் தோன்றியது.
24 அதாவது ஆண்டவர் முன்னிலையிலிருந்து நெருப்பு புறப்பட்டு, பீடத்தின் மேலிருந்த தகனப் பலியையும் அதன் கொழுப்புக்களையும் சுட்டெரித்தது. மக்கள் எல்லாரும் அதைக் கண்டபோது முகம் குப்புறவிழுந்து ஆண்டவரைப் போற்றினார்கள்.
அதிகாரம் 10
1 ஆரோனின் புதல்வர்களான நாதாப், அபியூ என்பவர்கள் தூபக் கலசங்களை எடுத்து அவற்றுள் நெருப்பையும் அதன் மேல் தூபத்தையும் போட்டு, தங்களுக்குக் கட்டளையிட்டிருந்ததை மீறி ஆண்டவர் திருமுன் அந்நிய நெருப்பைச் சமர்ப்பித்தனர்.
2 உடனே ஆண்டவரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு அவர்களை எரித்தது. அவர்கள் ஆண்டவர் முன்னிலையிலே இறந்தனர்.
3 அப்போது மோயீசன் ஆரோனை நோக்கி: ஆண்டவர் சொல்கிறதாவது: நம்மை அணுகிவருவோர் மூலம் நம் பரிசுத்ததனத்தை வெளிப்படுத்துவோம்; எல்லா மக்களுக்கும் முன் நம் மாட்சி துலங்கப் பண்ணுவோம் என்கிறார் என்றார். இதைக் கேட்டு, ஆரோன் மௌனமாய் இருந்தார்.
4 பின்னர் மோயீசன் ஆரோனின் சிற்றப்பனாகிய ஓஸியேலுடைய மக்களான மிசாயேலையும் எலிஸ்பானையும் அழைத்து: நீங்கள் போய் உங்கள் சகோதரர்களின் சடலங்களைப் பரிசுத்த இடத்தினின்று எடுத்துப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போங்கள் என்றான்.
5 அவர்கள் உடனே போய், தங்களுக்குக் கட்டளையிட்டபடி, அவர்களைக் கிடந்த படியே, அதாவது: அவர்கள் அணிந்திருந்த மெல்லிய சணற்சட்டைகளோடு எடுத்து வெளியே கொண்டு போனார்கள்.
6 மோயீசன் ஆரோனையும், எலேயசார், இத்தமார் என்னும் அவர் மக்களையும் நோக்கி: நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்து விடவும், உங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளவும் வேண்டாம். இன்றேல் நீங்களும் சாவீர்கள். எல்லா மக்கள் மேலும் இறைவனின் கோபமும் உண்டாகும், உங்கள் சகோதரர்களும், இஸ்ராயேல் குடும்பத்தார் யாவரும் ஆண்டவர் மூட்டி எழுப்பிய நெருப்பைப் பற்றிப் புலம்புவார்களாக.
7 நீங்களோ சாட்சியக் கூடார வாயிலுக்கு வெளியே போகாதீர்கள். போனால், சாவீர்கள். ஏனென்றால், திரு அபிசேகத் தைலம் உங்கள் மேல் இருக்கிறது என்றார். அவர்கள் மோயீசன் கட்டளைப்படியே எல்லாம் செய்தார்கள்.
8 பின்னர் ஆண்டவர் ஆரோனை நோக்கி:
9 நீயும் உன் புதல்வர்களும் சாகாதபடிக்கு, சாட்சியக் கூடாரத்தில் நீங்கள் புகும் போது திராட்சை இரசத்தையோ வேறு மதுவையோ குடிக்காமலிருக்க வேண்டும். அது உங்கள் தலைமுறை தோறும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கட்டளையாம்.
10 ஏனென்றால், நீங்கள் பரிசுத்தமானதையும் பரிசுத்தமில்லாததையும், தீட்டுள்ளதையும் தீட்டில்லாததையும் பகுத்தறியும் அறிவைக் கொண்டிருக்க வேண்டும்.
11 அதோடு ஆண்டவர் மோயீசன் மூலமாய் இஸ்ராயேல் மக்களுக்குத் திருவுளம் பற்றின நம் எல்லாச் சட்டங்களையும் நீங்கள் அவர்களுக்கு அறிவிக்கவும் வேண்டும் என்று திருவுளம் பற்றினார்.
12 பின்னர் மோயீசன் ஆரோனையும் அவருடைய மற்றப் புதல்வராகிய எலேயசார், இத்தமார் இவ்விருவரையும் நோக்கி: நீங்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட பலியிலே மீதியான போசனப் பலியை எடுத்து, அதைப் புளிப்பில்லாமல் பலிப்பீடத்தண்டை உண்ணுங்கள். ஏனென்றால், அது மிகவும் பரிசுத்தமானது.
13 ஆண்டவருக்குப் படைக்கப்பட்ட பலிகளில் உனக்கும் உன் புதல்வர்களுக்கும் நியமிக்கப்பட்டதை நீங்கள் பரிசுத்த இடத்தில் உண்ணக்கடவீர்கள். எனக்கு விடுக்கப்பட்ட கட்டளை இதுவே.
14 அன்றியும், ஒப்புக் கொடுக்கப்பட்ட சிறு மார்க்கண்டத்தையும், பிரிக்கப்பட்ட முன்னந்தொடையையும், நீயும் உன்னோடு கூட உன் புதல்வர் புதல்வியரும் மிகவும் பரிசுத்த இடத்திலே உண்பீர்கள். ஏனென்றால், அவை இஸ்ராயேல் மக்களுடைய திருப்பலிகளிலே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி நியமிக்கப்பட்டிருக்கின்றன.
15 உண்மையில் அவர்கள் தகனப் பலிகளின் சமயத்தில் முன்னந்தொடையையும், மார்புக்கண்டத்தையும், பலிபீடத்தில் எரிக்கப்பட்ட கொழுப்பையும் ஆண்டவர் முன்னிலையில் உயர்த்திக் காட்டினார்கள். எனவே, அவை உனக்கும் உன் மக்களுக்கும் நித்திய கட்டளையின்படி சொந்தமாய் இருக்குமென்று ஆண்டவர் கட்டளையிட்டிருக்கிறார் என்றார்.
16 இதற்கிடையில் பாவப்பரிகாரமாகப் படைக்கப்படவிருந்த வெள்ளாட்டுக் கிடாயை மோயீசன் தேடியபோது, அது ஏற்கெனவே எரிக்கப்பட்டிருந்ததைக் கண்டார். அங்கிருந்த ஆரோனின் புதல்வர்களாகிய எலேயசார், இத்தமார் மீது கோபம் கொண்டார்.
17 நீங்கள் பாவ நிவாரணப்பலியைப் பரிசுத்த இடத்தில் உண்ணாமல் போனதென்ன? அது மிகவும் பரிசுத்தமானதல்லவா? மக்களின் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டு நீங்கள் ஆண்டவர் திருமுன் அவர்களுக்காக மன்றாடும் பொருட்டுத்தானே அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டது?
18 குறிப்பாக, அதன் இரத்தம் பரிசுத்த இடத்துக்குள்ளே கொண்டு வரப்படவில்லையே! நான் கட்டளை பெற்றுள்ள படி, நீங்கள் அதைப் பரிசுத்த இடத்திலே உண்டிருக்க வேண்டும் என மொழிந்தார்.
19 அதற்கு ஆரோன்: ஆண்டவர் திருமுன் பாவநிவாரணப் பலியும் தகனப்பலியும் செலுத்தப்பட்டது இன்றுதான். ஆனால், எனக்கு நேரிட்ட துன்பம் உமக்குத் தெரியுமே? மிகுந்த துக்கத்தில் அமிழ்ந்திருக்கும் நான் எப்படி அதை உண்ணக்கூடும் அல்லது, ஆண்டவர் விருப்பப்படி எப்படித் திருச்சடங்குகளைச் செய்யக்கூடும் என்றார்.
20 மோயீசன் அதைக் கேட்டு, அவர் சொன்ன காரணத்தைச் சரியென்று ஒப்புக்கொண்டார்.
அதிகாரம் 11
1 மேலும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
2 நீங்கள் இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: பூமியிலிருக்கிற எல்லா மிருகங்களிலும் நீங்கள் உண்ணத்தகும் உயிரினங்களாவன:
3 மிருகங்களின் விரிகுளம்பு உள்ளவற்றையும், அசைபோடுகின்றவற்றையும் நீங்கள் உண்ணலாம்.
4 ஆனால், ஒட்டகம் முதலிய உயிர்களைப் போல், அசைபோட்டும் குளம்பைக் கொண்டிருந்தும், விரிகுளம்பு கொண்டிராதவற்றையெல்லாம் நீங்கள் உண்ணாமல், அசுத்தமுள்ளவைகளாகக் கருதுவீர்கள்.
5 (இவ்வாறு) அசைபோடுகிற குழி முயல் விரிகுளம்பு உள்ளதன்று: ஆதலால், அது அசுத்தமானது.
6 முயலும் அப்படியே. ஏனென்றால் அது அசை போட்டாலும், அதற்கு விரிகுளம்பு இல்லை.
7 பன்றியும் அசுத்தமானது. அது விரிகுளம்பு உடையதாயினும், அசைபோடாது.
8 அவைகள் உங்களுக்கு அசுத்தமானவைகளாதலால், அவற்றின் இறைச்சிகளை உண்ணவும், அவற்றின் பிணங்களைத் தொடவும் வேண்டாம்.
9 நீர்வாழ் உயிர்களுள் உண்ணத் தக்கவைகளாவன: கடல், ஆறு, குளம் ஆகியவற்றில் வாழும் சிறகுகளையும் செதில்களையும் உடைய உயிர்களையெல்லாம் உண்ணலாம்.
10 ஆனால் நீர் நிலைகளில் ஓடி வாழ்கிற உயிர்களில் சிறகுகளும் செதில்களும் இல்லாதனவெல்லாம் உங்களுக்கு வெறுப்புக்குரியனவாயிருக்கக் கடவன.
11 எவ்வளவு வெறுப்புக்குரியனவென்றால் அவற்றின் இறைச்சியையும் நீங்கள் உண்ணலாகாது; அவற்றின் பிணத்தையும் தொடக்கூடாது.
12 சிறகுகளும் செதில்களும் இல்லாத நீர்வாழ் உயிர்கள் எல்லாம் தீட்டுள்ளனவாம்.
13 பறவைகளில் நீங்கள் உண்ணாமல் விலக்க வேண்டியவைகளாவன: கழுகு, கருடன், கடலுராய்ஞ்சி, பருந்து,
14 எல்லாவித இராசாளி, தீக்கோழி, காக்கை,
15 நாரை வல்லூறு
16 இவ்வகையைச் சேர்ந்தவைகள்.
17 கோட்டான், மீன்கொத்தி, இபிஸ் நாரை,
18 அன்னம், கூழைநாரை, சிவந்த காலும் மூக்குள்ள குருகு, கொக்கு,
19 எல்லாவிதக் காதிரியான், புழுக் கொத்தி, வெளவால் முதலியன.
20 பறவைகளுக்குள் நான்கு காலால் நடமாடுவன எல்லாம் உங்களுக்கு வெறுப்புக்குரியனவாய் இருப்பனவாக.
21 ஆயினும், நான்கு காலால் நடமாடியும், தரையிலே தத்திப் பாயும்படி மிக நெடிய பின்னங்காலை உடையனவற்றை, உண்ணலாம்.
22 உதாரணமாக, பிருக்குஸ், அதாக்குஸ், ஒப்பியமாக்குஸ், வெட்டுக்கிளி முதலிய இனத்தைச் சார்ந்தவற்றையெல்லாம் நீங்கள் உண்ணலாம்.
23 பறவைகளில் நான்கு காலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுடைய வெறுப்புக்குரியனவாய் இருக்கும்.
24 அப்படிப்பட்டவைகளின் பிணத்தைத் தொட்டவுடன் தீட்டுப்பட்டு, மாலை வரை தீட்டுள்ளவனாய் இருப்பான்.
25 அவற்றின் பிணத்தை எவனாவது ஒருவன் தேவையின் பொருட்டுச் சுமந்திருந்தாலும் அவன் தன் ஆடைகளைத் தோய்த்துக் கழுவக்கடவான். அவன் மாலை வரை தீட்டுப்பட்டிருப்பான்.
26 நகம் உள்ளனவாய் இருந்தாலும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற உயிர்கள் யாவும் அசுத்தமாய் இருக்கும்.
27 நான்கு கால்களையுடைய உயிர்களுக்குள்ளும் உள்ளங்காலை ஊன்றி நடப்பன எல்லாம் அசுத்தமானவை. அவற்றின் பிணத்தைத் தொட்டவன் மாலை வரை தீட்டுப்பட்டவனாய் இருப்பான்.
28 அவைகளின் பிணத்தைச் சுமந்தவன் தன் ஆடைகளைத் தோய்க்கக் கடவான். அவன் மாலை வரை தீட்டுள்ளவனாய் இருப்பான். இவையெல்லாம் உங்களுக்குத் தீட்டாய் இருக்கக்கடவன.
29 மேலும், பூமியில் நடமாடும் உயிரினங்களுள் உங்களுக்கு அசுத்தமென்று எண்ண வேண்டியவையாவன: பெருச்சாளி, எலி முதலிய இவற்றின் இனத்தைச் சார்ந்தன,
30 உடும்பு, பச்சோந்தி, அரணை, ஓணான், அகழெலி ஆகிய இவையெல்லாம் அசுத்தமானவை.
31 இவற்றின் பிணத்தைத் தொட்டவன் மாலை வரை தீட்டுப்பட்டவனாய் இருப்பான்.
32 அவற்றின் பிணம் எதன் மேல் விழுந்ததோ அதுவும் தீட்டுப்பட்டதாகும். ஆதலால், மரப்பாத்திரம், ஆடை, தோல், கம்பளி, எந்த வேலையும் செய்வதற்கேற்ற ஆயுதங்கள் இவையெல்லாம் தண்ணீரில் கழுவப்பட வேண்டும். அவை மாலை வரை தீட்டாய் இருக்கும். (தண்ணீரில் போட்ட பிறகு ) அவை சுத்தமாகும்.
33 அவற்றுள் ஏதேனும் ஒன்று ஏதாவது ஒரு மண் பாத்திரத்தினுள் விழுந்திருந்தால், அந்த மண் பாத்திரம் தீட்டுப்பட்டதாதலால், அதை உடைத்து விட வேண்டும்.
34 உண்ணத்தக்க பொருளின் மேல் (மேற் சொன்ன பாத்திரத் ) தண்ணீர் பட்டால், அது அசுத்தமாகிறது. குடிக்கத் தக்க எவ்விதப் பாத்திரத்தின் எந்தப் பானமும் அசுத்தமாகும்.
35 அவற்றின் பிணங்களின் யாதொரு பாகமும் எதன் மேல் விழுந்ததோ அதுவும் அசுத்தமாகும். அடுப்பானாலும் தொட்டியானாலும் அசுத்தமானதால், அவை உடைக்கப்படுவனவாக.
36 ஆனால் நீரூற்றுக்களும், கிணறுகளும், ஏரி முதலியவைகளும் தீட்டுப்படா. அவற்றிலுள்ள பிணத்தைத் தொட்டவனோ தீட்டுப்பட்டவன் ஆவான்.
37 அது விதைக்கும் தானியத்தின் மேல் விழுந்தாலும் அது தீட்டுப்படாது.
38 ஆனால், தண்ணீர் வார்க்கப்பட்ட விதையின் மேல் பிணத்தின் யாதொரு பாகம் விழுந்தாலும், அது அப்போதே தீட்டாகி விடும்.
39 நீங்கள் உண்ணத்தக்க ஏதாவதொரு பிராணி செத்தால், அதன் பிணத்தைத் தொட்டவன் மாலை வரை தீட்டுப்பட்டவனாய் இருப்பான்.
40 அதன் இறைச்சியே உண்டவன், அல்லது அதைச் சுமந்தவன் தன் ஆடைகளைத் தோய்த்துக் கழுவக்கடவான். மாலை வரை அவன் தீட்டுப்பட்டிருப்பான்.
41 பூமியின் மேல் ஊர்கிற உயிர்களெல்லாம் உங்களுக்கு வெறுக்கத் தக்கனவாய் இருக்கக் கடவன.
42 அவற்றை உண்ணலாகாது. அவை நான்கு காலால் நடந்தாலும் சரி, வயிற்றால் நகர்ந்தாலும் சரி, கால்கள் உடையனவாயினும் சரி அல்லது தரையில் ஊர்ந்தாலும் சரி, அவ்வித உயிர்களை நீங்கள் உண்ணவேண்டாம். ஏனென்றால் அவை வெறுக்கத்தக்கனவாய் இருக்கின்றன.
43 உங்கள் ஆன்மாக்களை அசுத்தப்படுத்தாதீர்கள். நீங்கள் அசுத்தராய்ப் போகாதபடிக்கு அவைகளில் யாதொன்றையும் தொடாதீர்கள்.
44 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே. நாம் பரிசுத்தராகையால் நீங்களும் பரிசுத்தர்களாய் இருங்கள். தரையின் மேல் ஊர்கிற எவ்விதப் பிராணிகளாலும் உங்கள் ஆன்மாக்களைத் தீட்டுப்படுத்தாதீர்கள்.
45 ஏனென்றால், உங்களுக்கு நாம் கடவுளாய் இருக்கும்படி, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டு வந்த ஆண்டவர் நாமே. நாம் பரிசுத்தராகையால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.
46 மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நீரில் அசைந்துலாவும் எல்லா உயிரினங்களுக்குமடுத்த சட்டம் இதுவே.
47 சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், உண்ணத்தக்க பிராணிகளுக்கும் உண்ணத்தகாத பிராணிகளுக்கும் உள்ள வேறுபாட்டை இதனாலேயே நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்றார்.
அதிகாரம் 12
1 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது. ஒரு பெண் கருத்தாங்கி ஆண் பிள்ளையைப் பெற்றால், அவள் மாதவிடாயுள்ள பெண் விலக்கமாகியிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாள் அசுத்தமுள்ளவளாய் இருப்பாள்.
3 எட்டாம் நாளிலே குழந்தை விருத்தசேதனம் செய்யப்படும்.
4 அவளோ முப்பத்து மூன்று நாள் வரை தன் இரத்தச் சுத்திகரிப்பு நிலையில் இருந்து, சுத்திகர நாட்கள் நிறைவு பெறும்வரை யாதொரு பொருளைத் தொடாமலும், பரிசுத்த இடத்துக்குள் புகாமலும் இருக்கக்கடவாள்.
5 பெண்பிள்ளையைப் பெற்றாளாயின், மாதவிடாய் முறைமைப்படி இரண்டு வாரம் அசுத்தமுள்ளவளாய் இருந்து, தன் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே அறுபத்தாறு நாள் வரை இருக்கக்கடவாள்.
6 அவள் ஆண்பிள்ளையை அல்லது பெண்பிள்ளையைப் பெற்றிருந்தாலும், தன்னுடைய சுத்திகர நாட்கள் முடிவு பெற்ற பின் அவள் ஒருவயதான ஆட்டுக்குட்டியைத் தகனப் பலியாகவும், ஒரு புறாக்குஞ்சையோ காட்டுப்புறாவையோ பாவ நிவாரணப் பலியாகவும் சாட்சியக் கூடார வாயிலுக்குக் கொணர்ந்து குருவிடம் ஒப்புவிப்பாள்.
7 அவர் அவற்றை ஆண்டவர் திருமுன் ஒப்புக்கொடுத்து அவளுக்காக மன்றாட, அவள் தன் இரத்தப்பெருக்கின் தீட்டு நீங்கிச் சுத்தமடைவாள். ஆண் பிள்ளையை அல்லது பெண் பிள்ளையைப் பெற்றவளைக் குறித்த சட்டம் இதுவே.
8 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்கு வசதி இல்லாதிருந்தால் இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ கொண்டுவந்து ஒன்றைத் தகனப் பலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணப் பலியாகவும் ஒப்புக்கொடுப்பாள். குரு அவளுக்காக மன்றாட அவள் அவ்வாறே சுத்தமாவாள் என்று திருவுளம்பற்றினார்.
அதிகாரம் 13
1 மேலும், ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
2 ஒரு மனிதனுடைய தோலிலோ சதையிலோ வித்தியாசமான நிறமாவது கொப்புளமாவது ஒருவிதத் துலக்கமான வெண்படலமாவது உண்டானால், அது தொழுநோயென்று அறிந்து, அவனைக் குருவான ஆரோனிடமோ, அவர் புதல்வருள் எவனிடமோ கொண்டுவர வேண்டும்.
3 குரு அவனுடைய தோலிலே தொழுநோய் இருப்பதையும் மயிர்கள் வெண்ணிறமாய் மாறியிருப்பதையும் அந்தத் தொழுநோயின் தோற்றம் மற்றத்தோலையும் சதையையும் விடச் சற்றுப் பள்ளமாய் இருப்பதையும் கண்டால், அது தொழுநோய் என்று கூறுவார். அப்பொழுது அவருடைய தீர்ப்புக்கேற்றபடி அந்த நோயாளி தனியாய் வைக்கப்படுவான்.
4 அந்தத் துலக்கமான வெண்படலம் தோலில் இருந்தும், அவ்விடம் அவனுடைய தோலையும் சதையையும் விடப்பள்ளமாய் இராமலும் அதன் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், குரு அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,
5 ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவார். அப்பொழுது நோய் அதிகப்படாமலும், முன்னைவிட அதிகமாய்த் தோலில் படராமலும் இருக்கக்கண்டால், குரு மீண்டும் அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,
6 ஏழாம் நாளில் அவனைக் கவனித்துப் பார்க்கக்கடவார். அப்போது அது சற்றுக் கருமையாகித் தோலில் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், அது சிரங்காகையால், அவனைச் சுத்தமானவன் என்று அனுப்பி விடுவார். அம்மனிதனோ தன் ஆடைகளைக் கழுவிச் சுத்தமாய் இருப்பான்.
7 ஆயினும், நோயாளி குருவினால் பரிசோதிக்கப்பட்டுச் சுத்தனென்று அனுப்பிவிடப்பட்ட பின், மறுபடியும் ( அவன் உடலிலே ) தொழுநோய் அதிகப்பட்டால், குருவிடம் அவன் மீண்டும் கொண்டுவரப்படுவான்.
8 அப்போது தீட்டுள்ளவனென்று தீர்ப்பிடப்படுவான்.
9 தொழுநோய் ஒரு மனிதனிடம் காணப்பட்டால், அவன் குருவிடம் கொண்டுவரப்படுவான்.
10 குரு அவனைப் பார்ப்பார். அப்பொழுது அவன் தோலிலே வெண்படலங்களும் இருந்து, மயிர் நிறமும் மாறி, சதையும் புண்ணுமாகத் தோன்றுமேயாயின்,
11 அது வெகு நாட்பட்ட நோயென்றும், சதையினுள் பழுத்துள்ளதென்றும் தீர்மானிக்கப்படும். குரு அவனைத் ( தீட்டுள்ளவனென்று ) தீர்ப்புச் சொல்வார். இருப்பினும், அவனுடைய தீட்டு வெளிப்படையானபடியால், அவனை அடைத்து வைக்கமாட்டார்.
12 ஆனால், தலைமுதல் பாதம்வரை உடல் முழுவதும் பூத்தது போல் தோன்றித் தோலிலே படர்ந்து உடல் முழுவதையும் மூடிய நோயானால்,
13 குரு அவனைப் பரிசோதித்த பின்னர் மகவும் சுத்தமான நோய் என்று தீர்க்கக்கடவார். உண்மையில் எங்கும் தோல் வெளுத்துப் போனபடியால் அவன் சுத்தமுள்ளவனே!
14 ஆனாலும், புண்ணுள்ள சதை அவனிடம் காணப்பட்டபோது,
15 குரு அவனைத் தீட்டுள்ளவனென்று எண்ணுவதனால், அவன் தீட்டுள்ளவனென்றே கருதப்படுவான். ஏனென்றால் தொழுநோய் பிடித்த புண்ணுள்ள சதை தீட்டாகும்.
16 புண்ணுள்ள சதை பிறகு மாறி வெள்ளையாகி உடல் முழுவதும் மூடினால்,
17 குரு அவனைப் பரிசோதித்துப் பார்த்த பின்பு, அவனைச் சுத்தனென்று தீர்க்கக்கடவார்.
18 ( ஒருவனுடைய ) உடலின் மேல் தோலிலும் சதையிலும் புண் இருந்து ஆறிப்போய்,
19 அவ்விடத்திலே வெள்ளைத் தழும்பு அல்லது சிவப்பும் வெள்ளையும் கலந்த தழும்பு காணப்பட்டால், அம்மனிதனைக் குருவிடம் கொண்டு வரவேண்டும்.
20 தொழுநோய் உள்ள அவ்விடம் மற்ற சதையை விடப் பள்ளமாய் இருக்கிறதென்றும், மயிர்கள் வெள்ளையாகிவிட்டன என்றும் ( குரு ) கண்டாராயின், அவனைத் தீட்டுள்ளவன் என்பார். ஏனென்றால் அது புண்ணில் உண்டான தொழுநோய்.
21 ஆனால், மயிர் தன் இயற்கை நிறத்தை உடையதும் தழும்பு மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் சற்றுக் கருமையுள்ளதாகக் கண்டால், அவனை ஏழு நாள் அடைத்து வைப்பார்.
22 வெண்படலாம் அதிகப்பட்டிருந்தால், அது தொழுநோயே என்று முடிவாகச் சொல்வார்.
23 அது அதிகப்படாமல் அவ்வளவில் நின்றிருக்கக் கண்டாலோ, அது புண்ணின் தழும்பாம் என்று சொல்லி, குரு அவனைச் சுத்தமுள்ளவன் என்பார்.
24 (ஒருவனுடைய) உடலின்மேல் நெருப்புப் பட்டதனாலே புண்ணுண்டாகி அது ஆறிப்போய் அவ்விடத்திலே வெள்ளை அல்லது சிவப்பான தழும்பு உண்டாயிருந்தால், அதைக் குரு கவனித்து வரக்கடவார்.
25 அந்தப் புண் வெள்ளையாக மாறிப் போயிற்றென்றும், மற்றத் தோலைக் காட்டிலும் அவ்விடம் பள்ளமாயிருத்கிற தென்றும் கண்டால், குரு அவனைத் தீட்டுள்ளவன் என்று முடிவு செய்வார். ஏனென்றால், அது தழும்பிலே உண்டான தொழுநோய் ஆகும்.
26 ஆனால், மயிர் நிறம் மாறாமலும் புண் இருக்கும் இடம் மற்றச் சதையைவிடக் குழிந்திராமலும், தழும்பு சிறிது கருமையாயுமிருக்குமாயின், குரு அவனை ஏழு நாள் அடைத்து வைத்து,
27 ஏழாம் நாளிலே அவனைக் கவனித்துப் பார்க்கக்கடவார். தொழுநோய் தோலிலே படர்ந்திருந்ததாயின் அவனைத் தீட்டுள்ளவன் என்று முடிவாகச் சொல்வார்.
28 அவ்வாறின்றி, வெளுவெளுப்பான நிறம் முன் இருந்த அளவிலே நின்றதாயின், அது வேக்காடேயன்றி வேறொன்றுமில்லை. அதனால், குரு அது சூட்டினால் உண்டான தழும்பென்று, அந்த மனிதனைச் சுத்தமானவன் எனத் தீர்ப்புக் கூறுவார்.
29 ஓர் ஆடவனுக்கோ பெண்ணுக்கோ தலையிலேயாவது நாடியிலேயாவது தொழுநோய் காணப்பட்டால், குரு அதைப் பரிசோதிக்க வேண்டும்.
30 பார்க்கும்போது அவ்விடம் மற்றத் தோலை விடக் குழிந்திருக்கிறதென்றும், மயிர் பொன்னிறமாயும் மிருதுவாயும் இருக்கிறதென்றும் கண்டால் அப்படிப்பட்டவர்களைத் தீட்டுள்ளவரென முடிவாய்ச் சொல்வார். உண்மையில் அது தலையின் அல்லது நாடியின் தொழு நோயே.
31 ஆனால், வெண்படலத்தின் தோல் மற்றத் தோலின் மட்டத்தில் இருக்கிறதென்றும், மயிரின் இயற்கை நிறமே அதுதான் என்றும் கண்டால், ஏழு நாள் அவனை அடைத்து வைத்து,
32 ஏழாம் நாளிலே அவனைப் பார்க்கக்கடவார். இப்படிப் பார்த்து, வெண்படலம் (மேலும்) பரவவில்லை, மயிர் சுய நிறமுள்ளது, அவ்விடத்துத் தோலும் மற்றத் தோலும் ஒரே மட்டத்தில் இருக்கின்றன என்று குரு கண்டால்,
33 அந்தப்படலம் இருக்கும் இடம் நீங்கலாக மற்ற மயிரைச் சவரம் செய்வித்து, அவனை வேறு ஏழு நாள் அடைத்து வைத்து,
34 ஏழாம் நாளிலே அதைப் பரிசோதிக்க அப்படலம் முன்னிருந்த அளவிலேயே நின்றதென்றும், அவ்விடம் மற்றத் தோலை விடப் பள்ளமாய் இல்லையென்றும் கண்டால், குரு அவனைச் சுத்தமானவன் என்று கூறுவார். அவன் தன் ஆடைகளைத் தோய்த்த பின் சுத்தமாகவே இருப்பான்.
35 அவ்வாறின்றி, அவன் சுத்தனென்று தீர்க்கப்பட்ட பின் அப்படலம் தோலில் மேலும் படர்ந்ததாயின்,
36 அவன் சந்தேகமின்றித் தீட்டுள்ளவனாதலால், மயிர் பொன்னிறமானதோ அன்றோ என்று குரு விசாரிக்க வேண்டியதில்லை.
37 ஆனால், படலம் அதிகப்படவில்லை, மயிரோ கருப்பு என்று கண்டால், அந்த மனிதன் குணமடைந்துள்ளான் என்றறிந்து, குரு அவனைச் சுத்தமானவனென்று அச்சமின்றித் தீர்க்கக் கடவார்.
38 ஓர் ஆடவன் அல்லது ஒரு பெண்ணின் தோலில் வெள்ளைப் புள்ளிகள் காணப்பட்டால்,
39 குரு அவர்களைப் பரிசோதித்துப் பார்க்கக்கடவார். இப்படிப் பார்க்கையில், அவர்களுடைய தோலிலே ஏதோ மங்கின வெள்ளை போல் மினுக்கும் புள்ளிகள் தேன்றினவென்று கண்டால், அது வெள்ளைத்தோலே தவிரத் தொழுநோய் அன்று என்றும், அவர்கள் சுத்தமானவர்கள் என்றும் கண்டுபிடிக்கக்கடவார்.
40 ஒருவனுடைய தலை மயிர் உதிர்ந்து அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாய் இருக்கிறான்.
41 அப்படியே ஒருவனுடைய முன்னந்தலை மயிர்கள் உதிர்ந்து அவன் அரை மொட்டையனானாலும், அவன் சுத்தமானவன்.
42 ஆனால், முன்னந்தலையிலேனும், பின்னந்தலையிலேனும் அவனுடைய மொட்டையான பகுதியிலே வெள்ளை அல்லது செம்பட்டைப் படலம் உண்டானால்,
43 குரு அதைக் கண்டவுடன், அது சந்தேகமற மொட்டைத் தலையிலுண்டான தொழுநோயே என்று தீர்ப்புச் சொல்வார்.
44 ஆகையால், தொழுநோயாளியென்று குருக்களின் தீர்மானப்படி விலக்கப்பட்டிருக்கிறவன் தையல் பிரிக்கப்பட்ட ஆடை அணிந்து,
45 தன் தலையை மூடாமலும், ( யாரைக் கண்டாலும் ): தீட்டு, தீட்டு என ஓலமிடக்கடவான்.
46 அவனுக்குத் தொழுநோய் இருக்குமட்டும் அவன் அசுத்தனானதால், அவன் பாளையத்திற்கு வெளியே தனித்து வாழக்கடவான்.
47 கம்பளி ஆடையின் அல்லது மெல்லிய சணல் நூல் துணியின்,
48 பாவிலேனும் ஊடையிலேனும் தொழுநோய் தோன்றினால், குறிப்பாக, தோலிலும் தோலினால் செய்யப்பட்ட எவ்வகை உடையிலும் மேற்சொன்ன தீட்டு காணப்பட்டால்,
49 அப்படிப்பட்டவைகளில் வெள்ளை அல்லது செம்பட்டை நிறமுள்ள கறை தோன்றினால், அது தொழுநோயென்று கருதப்படவேண்டும். ஆதலால், அதனைக் குருவிடம் காண்பிக்க வேண்டும்.
50 இவர் அதைப் பரிசோதித்துப் பார்க்கக் கடவார். பின் அதை ஏழுநாள் அடைத்து வைப்பார்.
51 ஏழாம் நாள் திரும்பவும் அதைச் சோதித்துப் பார்க்கையில், கறை, மேலும் படர்ந்திருக்கக் கண்டால் அது தீராத்தொழுநோய் என்று கண்டு மேற்சொன்ன ஆடையும், முன்சொன்ன கறையுள்ள பொருளும் தீட்டுள்ளவை என்று குரு முடிவாய்ச் சொல்வார்.
52 இதன் பொருட்டு,
53 தீட்டுப்பட்ட அந்தப் பொருள் நெருப்பில் சுட்டெரிக்கப்படும்.
54 அப்படி இல்லாமல், கறை அதிகப்படவில்லை என்று குரு கண்டால், தொழுநோய் காணப்பட்ட ஆடையைக் கழுவச் சொல்லி, இரண்டாம் முறையும் ஏழு நாட்கள் அடைத்து வைப்பார்.
55 அப்பொழுது அதற்கு இயற்கையான நிறம் திரும்பிவராதிருந்த போதிலும், தொழுநோய் மேலும் பரவவில்லையென்று காண்பாராயின், மேற்சொன்ன பொருள் தீட்டாயிருக்கிறதென்று தீர்மானித்து, அதை நெருப்பில் சுட்டெரித்து விடுவார். ஏனென்றால், தொழுநோய் ஆடையின் வெளிப்புறத்திலேனும், உட்புறத்திலும் வெளிப்புறத்திலுமேனும் பரவியிருக்கிறது.
56 ஆனால், கழுவப்பட்ட பின் ஆடையிலுள்ள கறை சிறிது இருண்டதாகக் குரு கண்டால், தீட்டுப்பட்ட இடத்தை ஆடையில் இராதபடிக்குக் கத்தரித்தெடுத்து விடுவார்.
57 ஆனால், முன் சுத்தமாய் இருந்த இடங்களில் மீண்டும் இங்குமங்கும் நிலையற்ற ஒருவிதத் தொழுநோய் காணப்படுமாயின், ஆடை முழுவதுமே நெருப்புக்கு இரையாக்கப்படும்.
58 அந்தத் தீட்டு அதை விட்டுப் போய்விட்டால், சுத்தமான இடங்களை இரண்டாம் முறை கழுவுவார். அப்பொழுது அவை தீட்டில்லாமலே போய்விடும்.
59 ஆட்டுமயிர்களால் அல்லது மெல்லிய சணல் நூல்களால் நெய்யப்பட்ட அவ்வகைப் பொருட்களிலும் தொழுநோய் காணப்பட்டால், அது எப்படி சுத்தமாகும் அல்லது தீட்டுள்ளதாகும் என்பதற்கு இதுவே சட்டமாம் என்று ( ஆண்டவர் ) திருவுளம் பற்றினார்.
அதிகாரம் 14
1 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி,
2 தொழு நோயாளியினுடைய சுத்திகரிப்பு நாளில் அவனுக்கடுத்த சட்டமாவது: அவனைக் குருவிடம் கொண்டு வருவார்கள்.
3 அவன் பாளையத்திற்கு வெளியே போய், தொழுநோய் குணமாயிற்றென்று கண்டால்,
4 சுத்திகரிக்கப் படவேண்டியவனுக்காக இரண்டு அடைக்கலான் குருவிகளையும், கேதுருக் கட்டையையும், இரத்தநிறநூலையும், ஈசோப்பையும் கொண்டு வந்து ஒப்புக்கொடுக்கக் குரு கட்டைளையிடுவார்.
5 பிறகு அடைக்கலான் குருவிகளில் ஒன்றை மண்பாத்திரத்திலுள்ள ஊற்று நீர் மேல் பலியிடச் செய்து,
6 உயிருள்ள மற்றக் குருவியையும் கேதுருக் கட்டையையும் இரத்தநிற நூலையும் எடுத்து, பலியிடப்பட்ட அடைக்கலான் குருவியின் குருதியில் தோய்த்து,
7 சுத்திகரிக்கப்பட வேண்டியவன் மேலே ஏழு தடவை தெளிப்பார். அதனால் அவன் சட்டப்படி சுத்தமுள்ளவனாவானேயன்றி வேறல்ல. பின் குரு உயிரோடிருக்கும் குருவியை வெளியிலே பறந்தோட விட்டு விடுவார்.
8 பிறகு அம்மனிதன் தன் ஆடைகளைத் தோய்த்துக் கழுவி, உடம்பிலுள்ள மயிரெல்லாம் சிரைத்த பின் தண்ணீரில் குளிப்பான். இவ்வாறு அவன் சுத்திகரம் அடைந்து பாளையத்தில் புகுவான். ஆயினும், ஏழுநாள்வரை தனது கூடாரத்துக்கு வெளியே தங்கக்கடவான்.
9 ஏழாம் நாளிலோ அவன் தலைமயிரையும் தாடியையும் புருவங்களையும் உடம்பு முழுவதிலுமுள்ள மயிர்களையும் சிரைத்து ஆடைகளைத் தோய்த்துக் குளித்து,
10 எட்டாம் நாளிலே மறுவற்ற இரண்டு ஆட்டுக் குட்டிகளையும், ஒருவயதுள்ள மறுவற்ற ஒரு பெண்ணாட்டையும் போசனப்பலிக்காக ஒரு மரக்காலின் பத்தில் மூன்று பங்கு மிருதுவான எண்ணெயில் பிசைந்த மாவையும், இவற்றுடன் ஆழாக்கு எண்ணெயையும் கொண்டு வருவான்.
11 அப்பொழுது, அம்மனிதனைச் சுத்திகரிக்கிற குரு அவனையும் அந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் சாட்சியக் கூடார வாயிலிலே ஆண்டவர் திருமுன் வைத்து,
12 ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் ஆழாக்கு எண்ணெயையும் பாவப் பரிகாரமாக ஒப்புக்கொடுப்பார். எல்லாவற்றையும் ஆண்டவர் திருமுன் ஒப்புக்கொடுத்த பின்பு, பாவ நிவாரணப் பலியும் தகனப் பலியும் பலியிடப்படும்.
13 பரிசுத்த இடத்திலேயே ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவார். ஏனென்றால், பாவ நிவாரணப் பலியைப் போலவே குற்றப் பரிகாரப் பலியும் குருவுக்கு உரியது.
14 அது மிகவும் பரிசுத்தமே. பின் குரு குற்றப் பரிகாரமாய்ப் பலியிடப்பட்ட மிருகத்தின் குருதியில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப் படுகிறவனுடைய வலக்காதின் மடலிலும், வலக் கைகால்களின் பெரு விரலிலும் தடவுவார்.
15 ஆழாக்கு எண்ணெயிலும் தன் இடக்கையிலே (சிறிது)வார்த்து,
16 அதில் வலக்கையின் விரலைத் தோய்த்து ஆண்டவர் திருமுன் ஏழு முறை தெளிப்பார்.
17 இடக் கையிலே எஞ்சியிருக்கிற எண்ணேயையோ சுத்திகரிக்கப் படுகிறவனுடைய வலக்காதின் மடலிலும், வலக் கைகால்களின் பெருவிரலிலும், குற்ற நிவாரணத்திற்காகச் சிந்தப்பட்ட குருதியின் மேலும்,
18 அவனுடைய தலையின் மீதும் வார்பார்.
19 பின்னர் ஆண்டவர் திருமுன் அவனுக்காக வேண்டிப் பாவ நிவாரணப் பலியைச் செலுத்தி, தகனப் பலி மிருகத்தைக் கொன்று,
20 அதையும் அதைச் சேர்ந்த பான போசனப் பலியையும் பீடத்தின் மீது வைத்துக் கொள்வார். அவ்விதமாய் அம் மனிதன் சட்டப்படி சுத்தமுள்ளவனாவான்.
21 ஆனால், அவன் ஏழையாய் இருந்து (மேற்) சொன்னவற்றைச் சேகரிக்கச் சக்தியற்றவனானால், குரு அவனுக்காக மன்றாடும் பொருட்டுக் குற்றப் பரிகாரத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டிய ஓர் ஆட்டுக்குட்டியையும், போசனப் பலிக்காக எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மிருதுவான மாவிலே பத்திலொரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும்
22 இரண்டு காட்டுப்புறாக்களையேனும் இரண்டு மாடப்புறாக்களையேனும் கொண்டு வருவான். அவற்றில் ஒன்றைப் பாவ நிவாரணப் பலிக்காகவும், மற்றென்றைத் தகனப் பலிக்காகவும்
23 தனது சுத்திகரத்தின் எட்டாம் நாளில் சாட்சியக் கூடார வாயிலிலே ஆண்டவருக்கு முன்பாகக் குருவிடம் ஒப்புவித்து விடுவான்.
24 இவர் குற்றப்பரிகாரப் பலியாக ஆட்டுக்குட்டியையும் ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி அவற்றைச் சேர்த்து உயர்த்துவார்.
25 ஆட்டுக்குட்டியைக் கொன்று, அதன் குருதியில் சிறிது எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலக்காதின் மடலிலும் வலக்கை கால்களின் பெருவிரலிலும், தடவிய பின்னர்,
26 அந்த எண்ணெயிலே சிறிது தன் இடக்கையில் வார்த்து,
27 அதிலே வலக்கையின் விரலைத் தோய்த்து ஏழு முறை ஆண்டவர் திருமுன் தெளித்து,
28 சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலக்காதின் மடலிலும் வலக் கை கால்களின் பெருவிரலிலும் குற்றப்பரிகாரமாக இரத்தத்தைப் ( பூசிய ) இடத்தின் மேல் தொடுவார்.
29 பின் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக ஆண்டவரைச் சமாதானப்படுத்த, இடக்கையிலிருக்கிற எஞ்சிய எண்ணெயை அவனுடைய தலை மீது வார்த்துத் தடவுவார்.
30 அன்றியும், இரண்டு காட்டுப் புறாக்களையாவது மாடப்புறாக்களையாவது கொண்டு வருவான்.
31 ஒன்றைக் குற்றப்பரிகாரப் பலிக்கும் மற்றொன்றைத் தகனப்பலிக்குமாக அவற்றைச் சேர்ந்த பானபோசனப் பலியோடுகூட ஒப்புக்கொடுப்பான்.
32 தனது சுத்திகரிப்பிற்கு வேண்டியவைகளைச் சேகரிக்க வசதியில்லாத தொழுநோயாளியைப் பற்றிய சட்டம் இதுவே என்றார்.
33 மேலும், ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
34 நாம் உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்க விருக்கிற நாட்டிலே நீங்கள் போய்ச் சேர்ந்த பின் யாதொரு வீட்டில் தொழுநோய் காணப்பட்டால் அவ்வீட்டுத்தலைவன் குருவிடம் போய்:
35 என் வீட்டிலே தொழுநோய் இருப்பது போல் தோன்றுகிறது என்று அறிவிப்பான்.
36 அப்பொழுது குரு அந்த வீடு தொழுநோயுள்ளதோ என்று போய்ப் பரிசோதிக்கு முன்பே, வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாத படிக்கு அவற்றை வீட்டினின்று வெளியேற்றும்படி கட்டளையிட்டு, அதன் பிறகே அவ்வீட்டிலுள்ள நோயைப் பார்க்கப் போவார்.
37 அப்போது அவன் வீட்டுச் சுவர்களிலே பார்க்க அலங்கோலமான வெள்ளை அல்லது சிவப்புக் கறைகள் உண்டென்றும், அவைகள் மற்றச் சுவரை விடப் பள்ளமாய்க் குழிந்திருக்கின்றனவென்றும் கண்டால்,
38 வீட்டின் வாயிலுக்கு வெளியே வந்து, உடனே கதவைப் பூட்டி வீட்டை ஏழுநாள் அடைத்து வைப்பார்.
39 ஏழாம் நாளில் திரும்பிப்போய்ப் பார்த்துத் தொழுநோய் அதிகப்பட்டிருக்கக் கண்டால்,
40 தொழுநோய் இருக்கிற கற்களைப் பெயர்த்து நகருக்கு வெளியே அசுத்தமான ஓர் இடத்தில் போடவும்,
41 அவ்வீட்டின் உட்புறத்தைச் சுற்றிலும் செதுக்கச் சொல்லி, செதுக்கப்பட்ட மண்ணை நகருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் கொட்டவும்,
42 வேறு கற்களை எடுத்து வந்து, பெயர்க்கப்பட்ட கற்களுக்குப் பதிலாக வைத்துக் கட்டி, வேறு மண்ணைக் கொண்டு பூசவும் கட்டளையிடக் கடவார்.
43 ஆனால், கற்களையும் பெயர்த்து மண்ணையும் செதுக்கி,
44 வேறு பூச்சும் செய்த பின், குரு உள்ளே போய், தொழுநோய் திரும்பவும் வீட்டில் வந்துள்ளதென்றும், சுவர்கள் கறைகறையாய் இருக்கின்றனவென்றும் கண்டால் அது தீராத் தொழுநோயாதலால் வீடு தீட்டாய் இருக்கும்.
45 அந்த வீடு முழுவதையும் இடித்து, அதன் கற்களையும், மரங்களையும், சாந்து, மண் முதலிய இடிசல்களையும் ( கொண்டுபோய் ) நகருக்கு வெளியே அசுத்தமான ஓர் இடத்தில் போடவேண்டும்.
46 வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாளில் அதனுள் சென்றவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
47 அந்த வீட்டிலே படுத்திருந்தவன் அல்லது சாப்பிட்டவன் தன் ஆடைகளைத் தோய்க்கக்கடவான்.
48 குரு மீண்டும் வந்து, வீடு மறுபடி பூட்டப்பட்டபின் தொழுநோய் படரவில்லையென்று கண்டால், தீட்டு அகன்று போயிற்றென்று அதைச் சுத்திகரிப்பான்.
49 அதைச் சுத்திகரிப்பதற்காக இரண்டு அடைக்கலான் குருவிகளையும் கேதுருக்கட்டையையும், இரத்தநிற நூலையும்,
50 ஈசோப்பையும் எடுத்து, ஓர் அடைக்கலான் குருவியை மண்பாத்திரத்திலுள்ள காற்று நீரின்மேல் கொன்று,
51 கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், இரத்தநிற நூலையும். உயிருள்ள அடைக்கலான் குருவியையும் எடுத்துக்கொண்டு, பலியிடப் பட்ட அடைக்கலான் குருவியின் குருதியிலும் ஊற்றுநீரிலும் இவற்றை நனைத்து, ஏழுமுறை வீட்டின்மேல் தெளித்து,
52 அதை அடைக்கலான் குருவியின் குருதியினாலும், ஊற்று நீராலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டை, ஈசோப், இரத்தநிற நூற்களாலும் சுத்திகரிப்பார்.
53 உயிருள்ள குருவியை வெளியிலே பறந்தோடவிட்டபின், குரு வீட்டிற்காக வேண்டிக்கொள்ளவார். அவ்விதமாய் அது சட்டப்படி சுத்திகரிக்கப்படும்.
54 இது எல்லாவிதத் தொழுநோய்க்கும் அடித்தழும்புக்கும்,
55 ஆடைத் தொழுநோய்க்கும், வீட்டுத் தொழுநோய்க்கும், ஊறு புண்ணுக்கும் பற்பல விதமாய் நிறம் மாறும் படலங்களுக்கும் அடுத்த சட்டம்.
56 எது சுத்தம் எது அசுத்தம் என்று தெரிவிப்பதற்குக் (கட்டளையிடப்பட்ட சட்டம் இதுவேயாம்) என்றருளினார்.
அதிகாரம் 15
1 மேலும், ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
2 நீங்கள் இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: மேகவெட்டை உள்ளவன் தீட்டுள்ளவனாவான்.
3 அவனுடைய உடலிலுள்ள மேக வெட்டை இடைவிடாது ஊறிக்கொண்டிருந்தாலும் அடைபட்டிருந்தாலும் அது அவனுக்குத் தீட்டாம்.
4 மேக வெட்டை உள்ளவன் படுக்கிற படுக்கையும், உட்காரும் இடமும் தீட்டுப்பட்டதாகும்.
5 அவனது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தண்ணீரில் குளிக்கக்கடவான் அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
6 அவன் உட்கார்ந்திருந்த இடத்திலே உட்கார்ந்தவனோ தன் ஆடைகளைத் தோய்த்துத் தண்ணீரில் குளிக்கக்கடவான். அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
7 அவனது உடலைத் தொட்டிருப்பவனும் தன் ஆடைகளைத் தோய்த்துக் குளிப்பான். அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
8 மேகவெட்டையுள்ள மனிதன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால் அவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தண்ணீரில் குளிப்பான். அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
9 அவன் உட்கார்ந்த சேணமும் தீட்டாயிருக்கும்.
10 மேகவெட்டை உள்ளவனுக்குக் கீழ் இருந்தது எல்லாம் மாலைவரை தீட்டாயிருக்கும். அதில் எதையும் சுமந்தவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
11 அப்படிப்பட்ட நோயுள்ளவன் தன் கைகளைத் தண்ணீரில் கழுவுவதற்கு முன் மற்றொருவனைத் தொட்டிருப்பானாயின், அவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
12 மேகவெட்டை உள்ளவன் தொட்ட மட்பாண்டம் உடைக்கப்பட வேண்டும். மரத்தினால் அமைந்த பாண்டமாயின் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.
13 அவ்வித நோயுடையவன் நலமடைந்தானாயின், தான் சுத்தமானபின் ஏழு நாட்களை எண்ணிவருவான். பின் ஊற்று நீரில் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் குளித்த பின் சுத்தமுள்ளவனாவான்.
14 எட்டாம் நாளிலோ அவன் இரண்டு காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக்குஞ்சுகளை எடுத்துக் கொண்டு, ஆண்டவர் திருமுன் சாட்சியக் கூடார வாயிலில் வந்து, அவற்றைக் குருவிடம் கொடுப்பான்.
15 குரு பாவப் பரிகாரத்திற்கு ஒன்றையும் தகனப்பலிக்கு ஒன்றையும் ஒப்புக்கொடுத்த பின் அந்த மேகவெட்டையுள்ளவன் அதினின்று சுத்தமடையும்படி ஆண்டவர் திருமுன் வேண்டக்கடவார்.
16 ஒருவனிடமிருந்து இந்திரியம் கழிந்ததாயின், அவன் நீராடி மாலைவரை தீட்டுள்ளவனாய் இருப்பான்.
17 மேலும், அவன் அணிந்திருந்த ஆடையையும் தோலாடையையும் தண்ணீரில் தோய்ப்பான். அவையும் மாலைவரை தீட்டுள்ளனவாய் இருக்கும்.
18 அவனோடு படுத்த பெண்ணும் தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டுள்ளவளாயிருப்பாள்.
19 மாதவிடாயுள்ள பெண் தன் இரத்த ஊறலின் பொருட்டு ஏழுநாள் விலக்கமாய் இருக்கக்கடவாள்.
20 அவளைத் தொட்டவன் யாராயினும் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
21 அன்றியும், விலக்கமாய் இருக்கிற நாட்களில் அவள் எதன்மீது துங்குவாளோ அல்லது உட்காருவாளோ அவை தீட்டுப்பட்டவை.
22 அவளுடைய படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் தோய்த்து, தானும் நீராடி, மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
23 அவள் உட்கார்ந்த ( மணைமுதலிய ) எப்பொருளையும் தொடுபவன் தன் ஆடைகளைத் தோய்த்து, தானும் நீராடி, மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
24 மாதவிடாய்க் காலத்தில் அவளோடு படுத்த ஆடவன் எழுநாள் தீட்டுள்ளவனாய் இருப்பதுமன்றி, அவன் படுக்கும் எவ்விதப் படுக்கையும் தீட்டுப்படும்.
25 ஒரு பெண் விலக்கமாய் இருக்கவேண்டிய காலமல்லாமல் அவளுடைய இரத்தம் பலநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது காலத்திற்கு மிஞ்சி இரத்தம் வற்றிப் போகாமல் இருந்தால், அது கண்டிருக்கும் நாளெல்லாம் அந்தப் பெண் மாதவிடாய் விலக்கம் போல் விலகியிருக்கக்கடவாள்.
26 அவள் படுக்கும் படுக்கையும், அவள் உட்காரும் அனைத்தும் தீட்டுண்டவை.
27 இவைகளைத் தொட்டவன் தன் ஆடைகளைத் தோய்த்து, தானும் நீரில் குளித்து மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
28 இரத்த ஊறல் நின்ற நின்ற பின், அவள் தன் சுத்திகரத்திற்காக ஏழுநாள் எண்ணிக்கொண்டு,
29 எட்டாம் நாளிலே தனக்காக இரண்டு காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைச் சாட்சியக் கூடார வாயிலிலே குருவிடம் கொண்டு வரக் கடவாள்.
30 அவர் பாவப் பரிகாரத்திற்கு ஒன்றையும் தகனப்பலிக்கு மற்றொன்றையும் ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் திருமுன் அவளுக்காகவும் அவளுடைய அசுத்த இரத்த ஊறலுக்காகவும் மன்றாடக் கடவார்.
31 ஆகையால், இஸ்ராயேல் மக்கள் அசுத்தத்திற்கு அஞ்சி, தங்கள் நடுவேயிருக்கும் நமது உறைவிடத்தை அசுத்தப்படுத்தியபின் தங்கள் அசுத்தங்களிலே சாகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டுமென்று அவர்களுக்கு அறிவுரை கூறக்கடவீர்கள்.
32 மேகவெட்டை உள்ளவனுக்கும், இந்திரியக் கழிவினாலே தீட்டானவனுக்கும்,
33 மாதவிடாயின் பொருட்டு விலக்காய் இருக்கிறவளுக்கும், அல்லது மித மிஞ்சின இரத்த ஊறல் உள்ளவளுக்கும், இப்படிப்பட்டவளோடு படுத்த ஆடவனுக்கும் ஏற்பட்ட சட்டம் இதுவே என்றார்
அதிகாரம் 16
1 சாதாரணத் தீக்கங்கை உபயோகித்த ஆரோனின் புதல்வர்கள் இறந்த பின் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 உன் சகோதரனான ஆரோன் சாகாத படிக்குத் திருவிடத்திலே அதாவது: பெட்டகத்தை மூடுகின்ற இரக்கத்தின் அரியணைக்கு முன் இருக்கிற திரைக்கு உட்புறத்திலே எல்லா வேளையிலும் வர வேண்டாமென்று அவனுக்குச் சொல். (உண்மையிலே இரக்கத்தின் அரியணைக்கு மேல் ஒரு மேகத்தில் நாம் காணப்படுவோம். )
3 (அதனுள் நுழைவதற்கு முன்) அவன் செய்ய வேண்டியது ஏதென்றால்: பாவ நிவாரணப் பலியாக ஓர் இளங்காளையையும், தகனப்பலியாக ஓர் ஆட்டுக்கிடாயையும் செலுத்தக் கடவான்.
4 அவன் மெல்லிய சணல் நூற்சட்டையையும் அணிந்து இடையில் சணல் நூற் சல்லடத்தையும், சணல்நூல் இடைக் கச்சையையும், தலையிலே சணல் நூற் பாகையையும் அணிந்து கொள்ள வேண்டும். அவை பரிசுத்த ஆடைகளாகையால், குளித்தபின்னரே அவற்றையெல்லாம் அணிந்து கொள்வான்.
5 அப்போது இஸ்ராயேல் மக்களாகிய சபையாரிடத்திலே பாவப்பரிகாரத்திற்கு இரண்டு வெள்ளாட்டுக் கிடாய்களையும், தகனப்பலிக்கு ஓர் ஆட்டுக் கிடாயையும் வாங்கிக்கொண்டு,
6 காளையை ஒப்புக் கொடுத்துத் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் மன்றாடிய பின்
7 சாட்சியக் கூடாரவாயிலில் ஆண்டவர் திருமுன் அவ்விரண்டு வெள்ளாட்டுக் கிடாய்களை நிறுத்தி
8 அவ்விரு கிடாய்களைக் குறித்து, ஆண்டவருக்கென்று ஒரு சீட்டும்,
9 பரிகாரக்கிடாய்க்கென்று ஒரு சீட்டும் போட்டு ஆண்டவருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கிடாயைப் பாவ நிவாரணப் பலியாகச் செலுத்திய பின்,
10 பரிகாரக் கிடாய்க்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கிடாயை ஆண்டவர் முன்னிலையில் உயிரோடு நிறுத்தி, அதன் மேல் மன்றாட்டைப் பொழிந்து, அதைப் பாலைநிலத்திற்கு ஓட்டி விடுவான்.
11 இவற்றை வேண்டிய சிறப்போடும் முறைமைப்படியும் நிறைவேற்றிய பின், அவன் இளங்காளையை ஒப்புக்கொடுத்துத் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் வேண்டிக்கொண்டு அதைப் பலியிடுவான்.
12 அவன் பீடத்திலுள்ள தணல்களால் தூபக் கலசத்தை நிரப்பி எடுத்துக்கொண்டும், துபத்திற்காகத் தயாரிக்கப்பட்ட வாசனைப் பொருட்களைப் கையில் வாரிக் கொண்டும் திரைக்கு உட்புறத்திலுள்ள மூலத்தானத்திற்குள் சென்று,
13 தான் சாகாதபடிக்கு, நெருப்பின் மேல் வாசனைப் பொருட்களைப் போட்டு, அவற்றின் புகையும் மணமும் இரக்கத்தின் அரியணையை மூடும்படி செய்வானாக.
14 மேலும், அவன் இளங்காளையின் இரத்தத்தில் சிறிது எடுத்து, ஏழு முறை இரக்கத்தின் அரியணைமீது கீழ்த்திசை நோக்கித் தெளிப்பான்.
15 மேலும், மக்களின் பாவநிவாரணப் பலியாகிய வெள்ளாட்டுக் கிடாயைப் பலியிட்ட பின்பு, அதன் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாய்க் கொண்டு வந்து, இளங்காளையின் இரத்தத்தைக் குறித்துக் கட்டளையிட்டபடி, இரக்கத்தின் அரியணைப் பக்கமாய்த் தெளிக்கக் கடவான்.
16 இஸ்ராயேல் மக்களுடைய அசுத்தங்களினாலும், அவர்களுடைய மீறுதல் முதலிய எல்லாப் பாவங்களினாலும், பரிசுத்த இடத்திற்கு உண்டான அவமரியாதையாலும் பரிசுத்த இடம் ( மேற்சொன்னபடி சுத்திகரிக்கப்படும் ). இறுதியில் குரு அவர்களுடைய வீடுகளின் அசுத்தங்களுக்கிடையே நிறுவப்பட்டுள்ள சாட்சியக் கூடாரத்தையும் அவ்விதமாகவே சுத்திகரிக்கக் கடவார்.
17 தலைமக் குரு தனக்காகவும், தன் வீட்டாருக்காகவும், இஸ்ராயேலின் சபையார் அனைவருக்காகவும் மன்றாடும்படி மூலத்தானத்துக்குள் புகுந்தது முதல் வெளியே வரும் வரை சாட்சியக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.
18 ஆனால், அவன் வெளிப்பட்டு ஆண்டவர் திருமுன்னுள்ள பலிபீடத்தண்டை வந்தபோது, அவன் தனக்காக மன்றாடிக் கொண்டு, இளங்காளையின் இரத்தத்திலும் ஆட்டுக்கிடாயின் இரத்தத்திலும் சிறிது எடுத்துப் பலிபீடத்தின் கொம்புகளின் மேல் சுற்றிலும் வார்த்து,
19 தன் விரலினால் அதை ஏழுமுறை தெளித்து, இஸ்ராயேல் மக்களின் அசுத்தங்கள் நீங்கும்படி சுத்திகரித்துப் புனிதப்படுத்தக் கடவார்.
20 இப்படி மூலத்தானத்தையும், சாட்சியக் கூடாரத்தையும், பீடத்தையும் தூய்மைப் படுத்திய பின், உயிருள்ள வெள்ளாட்டுக்கிடாயை ஒப்புக் கொடுப்பார்.
21 அப்பொழுது அதன் தலை மேல் தம் இரு கைகைளையும் விரித்து, இஸ்ராயேல் மக்களின் முறைகேடு, குற்றம், பாவம் ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்தி, அவற்றை ஆட்டுக்கிடாயின் தலைமேல் சுமத்தி, அதை அதற்கென்று நியமிக்கப்பட்ட ஓர் ஆள் வழியாய்ப் பாலை நிலத்திற்கு அனுப்பக் கடவார்.
22 இவ்வாறு வெள்ளாட்டுக்கிடாய் அவர்களுடைய கொடுமைகளையெல்லாம் தன்மேல் சுமந்து ஆள் நடமாட்டமில்லாத இடமான பாலை நிலத்திற்குப் போக விடப்பட்ட பின்,
23 ஆரோன் சாட்சியக் கூடாரத்தினுள் திரும்பி வந்து, முன்பு தான் மூலத்தானத்தினுள் புகுவதற்கென்று அணிந்திருந்த மெல்லிய சணல் நூல் ஆடைகளைக் களைந்து அங்கே போட்டு விட்டு,
24 பரிசுத்தமான ஓர் இடத்திலே தண்ணீரில் குளித்துத் தன் ஆடைகளை உடுத்திக்கொண்டு வெளியே வந்து, தன் தகனப்பலியையும், மக்களுடைய தகனப்பலியையும் செலுத்திய பின், தனக்காகவும் மக்களுக்காகவும் மன்றாடக் கடவான்.
25 அப்பொழுது அவன் பாவநிவாரணப்பலியின் கொழுப்பைப் பீடத்தின் மீது எரிப்பானாக.
26 சபிக்கப்பட்ட ஆட்டுக் கிடாயைக் கொண்டு பாய்விட்ட ஆளோ தன் ஆடைகளைத் தோய்த்துக் குளித்த பின் பாளையத்திற்குள் வருவான்.
27 பாவப்பரிகாரத்திற்கென்று பலியிடப்பட்டு மூலத்தானத்திற்குள் இரத்தம் கொண்டு வரப்பட்ட பாவநிவாரணப் பலியாகிய காளையையும் ஆட்டுக்கிடாயையும் பாளையத்துக்கு வெளியே கொண்டு போய், அவற்றின் தோலையும் இறைச்சியையும், சாணியையும் நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவார்கள்.
28 மேலும், அவற்றைச் சுட்டெரித்தவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் குளித்தபின் பாளையத்துக்குள் புகுவான்.
29 இது உங்களுக்கு நித்திய சட்டமாய் இருக்கும். ( அதாவது ) ஏழாம் மாதம் பத்தாம் நாளிலே உங்கள் உடலை ஒறுத்து நோன் பிருக்கக் கடவீர்கள். நீங்களும், குடிமகனும், உங்களிடையே வாழ்ந்து வரும் அந்நியனும் ஒரு வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும்.
30 அதுவே உங்கள் பரிகார நாளும், உங்கள் பாவமெல்லாம் நீங்கத்தக்க நாளுமாம். அன்று ஆண்டவர் முன்னிலையில் பரிசுத்தமாவீர்கள். அது உங்கள் சுத்திகரிப்பின் நாள்.
31 அது உங்களுக்குச் சிறப்பான ஒற்வு நாள். அந்நாளிலே உங்கள் உடலை ஒறுத்து நோன் பிருக்கக் கடவீர்கள். இது நித்திய கட்டளை.
32 தன் தந்தைக்குப் பதிலாய்க் குருத்துவப்பணி புரியும்படி குருப்பட்டம் பெற்று தன் கைகளில் பூச்சுப் பெற்று புனிதப் படுத்தப் பட்டவனே இப்படிப்பட்ட பரிகாரம் செய்பவன். அவன் மெல்லிய சணல் நூல் அங்கியையும் பரிசுத்த ஆடைகளையும் அணிந்து கொள்வான்.
33 மூலத்தானமும், சாட்சியக்கூடாரமும், பலிபீடமும், எல்லாக் குருக்களும் மக்களும் அவனாலேயே சத்திகரிக்கப்படுவார்.
34 இப்படி ஆண்டில் ஒரு முறை நீங்கள் இஸ்ராயேல் மக்களுக்காகவும், அவர்களுடைய பாவக் கொடுமைகளனைத்திற்காகவும் மன்றாடக் கடவீர்கள். அது உங்களுக்கு சட்டமாக இருக்கும் என்று ( திருவுளம் பற்றினார் ). இவையெல்லாம் மோயீசன் கேட்டு, ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்.
அதிகாரம் 17
1 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும் நீ ஆண்டவருடைய கட்டளைப்படி சொல்ல வேண்டியதாவது:
3 இஸ்ராயேல் குடும்பத்தாரில் எவனேனும், பாளையத்திற்குள்ளாவது பாளையத்திற்கு வெளியேயாவது, மாட்டையோ, செம்மறியாட்டையோ, வெள்ளாட்டையோ கொன்று,
4 அவற்றைச் காட்சியக் கூடார வாயிலுக்கு முன்பாக ஆண்டவருக்குச் செலுத்தும்படி கொண்டு வராதிருந்தால், அது அவனுக்கு இரத்தப் பலியாக இருக்கும். அந்த மனிதன் இரத்தம் சிந்திக் கொலை செய்தவனைப் போலத்தன் இனத்தினின்று விலக்குண்டு போகக் கடவான்.
5 ஆகையால், இஸ்ராயேல் மக்கள் எந்தப் பலி மிருகத்தையும் வெளியே அடித்திருப்பார்களாயின், அவற்றைக் கூடாரவாயிலின் முன் ஆண்டவருக்கு அளிக்கும் பொருட்டும், சமாதானப் பலிகளாகச் செலுத்தும் படிக்கும் அதைக் குருவிடம் ஒப்புவிக்கக்கடவார்கள்.
6 குரு சாட்சியக் கூடார வாயிலிலிருக்கிற ஆண்டவருடைய பலிபீடத்தின் மேல் இரத்தத்தை ஊற்றி, கொழுப்பை ஆண்டவருக்கு நறுமணமாக எரிக்கக்கடவார்.
7 ஆகையால், அவர்கள் எந்தப் பேய்களோடு கள்ளமாய்த் திரிந்தார்களோ அவைகளுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக. இது அவர்களுக்கும் அவர்கள் வழித்தோன்றல்களுக்கும் நித்திய கட்டளையாயிருக்கும்.
8 மேலும், நீ அவர்களை நோக்கி: இஸ்ராயேல் சபையாரிலும் உங்கள் நடுவே வாழ்கிற அந்நியருள்ளும், தகனப்பலி முதலியவைகளை இட்டு,
9 அவற்றைச் சாட்சியக் கூடார வாயிலண்டை கொண்டுவராதிருப்பவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான்.
10 இஸ்ராயேல் குடும்பத்தாரிலும் அவர்களிடையே வாழ்கிற அந்நியர்களிலும் எவனேனும் இரத்தத்தைக் குடித்திருந்தால், அவன் ஆன்மாவிற்கு எதிராக நாம் நமது முகத்தை நிலைப்படுத்தி, அவனைத் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகச் செய்வோம்.
11 ஏனென்றால், உடலின் உயிர் இரத்தத்தில் அமைந்துள்ளது. இதை நாம் பலிபீடத்தின் மேல் உங்கள் ஆன்மாக்களுக்காகப் பாவப்பரிகாரம் செய்யும்படிக்கும், உங்கள் ஆன்மாவின் சுத்திகரத்திற்கு உதவும் படிக்கும் அல்லவோ உங்களுக்குத் தந்தருளினோம் ?
12 அதனால், நாம் இஸ்ராயேல் மக்களை நோக்கி: உங்களுள்ளும் உங்களிடையே வாழ்கிற அந்நியர்களுள்ளும் ஒருவனும் இரத்தத்தைக் குடிக்க வேண்டாமென்று திருவுளம் பற்றினோம்.
13 இஸ்ராயேல் மக்களிலும் உங்களிடையே வாழ்கிற அந்நியரிலும் எவனேனும் வேட்டையாடி அல்லது கண்ணிவைத்து, உண்ணத்தக்க ஒரு மிருகத்தையாவது பறவையையாவது பிடித்தால், அவன் அதன் இரத்தத்தைச் சிந்தி மண்ணைக்கொண்டு அதை மூடக்கடவான்.
14 ஏனென்றால், உடலின் உயிர் இரத்தத்தில் உள்ளது. ஆதலால், நாம் இஸ்ராயேல் மக்களை நோக்கி: உடலின் உயிர் இரத்தத்தினுள் அமைந்திருக்கின்றது. எனவே, நீங்கள் எந்த உடலிலுமுள்ள இரத்தத்தைக் குடிக்க வேண்டாம்; அதைக் குடிப்பவன் கொலை செய்யப்படுவான் என்று சொன்னோம்.
15 குடிமக்களாயினும் அந்நியர்களாயினும் தானாய்ச் செத்ததையாவது கொடிய மிருகத்தால் கொல்லப்பட்டதையாவது உண்பவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரிலே குளித்து மாலைவரை தீட்டுப்பட்டவனாய் இருப்பான். இதை அவன் பின்பற்றினால் சுத்தமாவான்.
16 ஆனால், அவன் குளிக்காமலும் தன் ஆடைகளைத் தோய்க்காமலும் இருப்பானாயின், தன் அக்கிரமத்தைச் சுமந்துகொள்வான் என்று சொல்வாய் என்றார்.
அதிகாரம் 18
1 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
3 நீங்கள் முன் குடியிருந்த எகிப்து நாட்டின் வழக்கப்படி ஒழுகவும் வேண்டாம்; நாம் உங்களை அழைத்துப் போகிற கானான் நாட்டாரின் நடத்தைக்கு ஒத்த வண்ணம் நடக்கவும் வேண்டாம். அவர்களுடைய முறைமைகளைக் கைக்கொள்ளவும் வேண்டாம்.
4 நமது நீதி முறைகளின்படி நடந்து, நம்முடைய கட்டளைகளை நிறைவேற்றி, நம்முடைய சட்ட நெறியின்படி ஒழுகக் கடவீர்களாக. ஆண்டவராகிய நாமே உங்கள் கடவுள்.
5 நமது கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைக்கொள்ளக்கடவீர்கள். அவைகளின்படி நடப்பவன் அவைகளால் வாழ்வு பெறுவான்.
6 எந்த மனிதனாயினும் தனக்கு நெருங்கின உறவுள்ள பெண்ணைச் சார்ந்து, அவளுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.
7 நாம் ஆண்டவர். உன் தந்தையின் நிருவாணத்தையும் உன் தாயின் நிருவாணத்தையும் நீ வெளிப்படுத்த வேண்டாம். அவள் உன் தாயென்று (மதித்து), அவளுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.
8 உன் தந்தையினுடைய மனைவியின் நிருவாணத்தையும் வெளிப்படுத்தலாகாது. அவளுடைய நிருவாணம் உன் தந்தையின் நிருவாணமே.
9 உன் தந்தைக்கோ தாய்க்கோ வீட்டிலேயாவது வெளியிலேயாவது பிறந்த புதல்வியாகிய உன் சகோதரியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.
10 உன் புதல்வனுடைய மகளின் நிருவாணத்தையோ, உன் புதல்வியின் மகளுடைய நிருவாணத்தையோ வெளிப்படுத்தலாகாது. அவளுடைய நிருவாணம் உன்னுடைய நிருவாணமே.
11 உன் தந்தையினுடைய மனைவியின் வயிற்றில் அவனுக்குப் பிறந்த புதல்வி அவள் உனக்குச் சகோதரியே.
12 உன் தந்தையின் சகோதரியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், அவளுடைய மாமிசமும் உன் தந்தையின் மாமிசமும் ஒன்றுதான்.
13 உன் தாயின் சகோதரியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், அவளுடைய மாமிசமும் உன் தாயின் மாமிசமும் ஒன்றுதான்.
14 உன் தந்தையின் சகோதரியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. அவன் மனைவியோடு சேரலும் ஆகாது. ஏனென்றால், அவளுக்கும் உனக்கும் உறவு உண்டு.
15 உன் மருமகளுடைய நிருவாணத்தையும் வெட்கத்தையும் வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், அவள் உன் மகனின் மனைவி.
16 உன் சகோதரனுடைய மனைவியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், அவளுடைய நிருவாணம் உன் சகோதரனுடைய நிருவாணமே.
17 உன் மனைவியினுடைய நிருவாணத்தை ஒருவருக்கும் காட்டலாகாது. அவள் புதல்வியின் நிருவாணத்தையும் வெளிப்படுத்தலாகாது. அவளுடைய புதல்வனின் மகளின் நிருவாணத்தையும் வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், இவர்கள் அவளுக்கு நெருங்கிய உறவு .
18 அது முறை கேடு. உன் மனைவி இருக்கையில், அவளோடு கூட அவளுடைய சகோதரியையும் மனைவியாகக் கொண்டு அவளுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.
19 மாத விடாயுள்ள பெண்ணோடு சேர்ந்து, அவள் அசுத்தத்தை வெளிப்படுத்தலாகாது.
20 பிறனுடைய மனைவியோடு படுத்தலாகாது. அவளோடு சேர்ந்து, இரத்தக் கலப்பினால் உன்னைத் தீட்டுப் படுத்தலாகாது.
21 உன் பிள்ளைகளில் எவனையும் மொலோக் விக்கிரகத்திற்கு நேர்ந்து கொள்ளும்படி கொடுக்கவும் கூடாது; உன் கடவுளுடைய திருப்பெயரை இழிவு படுத்தவும் கூடாது.
22 நாமே ஆண்டவர். பெண்ணோடு சேர்க்கை கொள்வது போல் ஆணோடு சேர்க்கை கொள்ளாதே. அது வெறுப்புக்குரிய தீச் செயல்.
23 எந்த மிருகத்தோடும் நீ புணர்ச்சி செய்து, அதனால் உன்னைத் தீட்டுப் படுத்தலாகாது. மிருகத்தோடு புணரும்படி எந்தப் பெண்ணும் அதற்குத் தன் மடியை வெளிப்படுத்தலாகாது. அது பெரும் தீச்செயல் அல்லவா ?
24 நாம் உங்கள் முன்னின்று துரத்தப் போகிற எல்லா இனத்தாரும் இப்படிப்பட்டவைகளால் தங்களை மாசுபடுத்தியிருக்கிறார்கள். நீங்கள் அவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப் படுத்தாதிருங்கள்.
25 அப்படிப்பட்ட தீச்செயல்களால் அவர்களுடைய நாடும் தீட்டுப்படுத்தப் பட்டது. ஆதலால், அதன் பாவங்களை நாம் விசாரிப்போம். இந்நாடும் தன் குடிகளைக் கக்கிப்போடும்படி செய்வோம்.
26 நீங்களோ நமது கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைக்கொண்டு, வெறுப்புக்குரிய அத்தீச் செயல்களில் ஒன்றையும் செய்யாதீர்கள். குடிமகனும் அந்நியனும் அவற்றை விலக்கக் கடவார்கள்.
27 உங்களுக்கு முன்னிருந்த இந்நாட்டுக் குடிகள் வெறுக்கத்தக்க மேற்சொன்ன தீச்செயல்களையெல்லாம் செய்து தங்கள் நாட்டைத் தீட்டுப் படுத்தினார்கள்.
28 ஆகையால், நீங்கள் அப்படிப் பட்டவைகளைச் செய்தால், நாடு முன்பே தன் குடிகளைக் கக்கினது போல் உங்களையும் கக்கிப் போடுமென்று எச்சரிக்கையாய் இருங்கள்.
29 மேற் சொன்ன வெறுப்புக் குரிய தீச் செயல்களில் எவற்றையேனும் செய்பவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக் கடவான்.
30 நமது கட்டளைகளைக் கைக் கொள்ளுங்கள். உங்களுக்கு முன் இருந்தவர்கள் செய்த தீச்செயல்களை நீங்களும் செய்து, அவற்றாலே தீட்டுப்படாத படிக்கு எச்சரிக்கையாய் இருங்கள். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றார்.
அதிகாரம் 19
1 ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 இஸ்ராயேல் மக்கள் எல்லாச் சபையாருக்கும் நீ சொல்ல வேண்டியதாவது: நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்; நாம் பரிசுத்தராய் இருப்பதால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.
3 உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் தந்தைக்கும் தாய்க்கும் அஞ்சக்கடவான். நமது ஓய்வு நாட்களை அனுசரித்து வாருங்கள். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
4 விக்கிரகங்களை நாடவும் வேண்டாம். வார்ப்பினால் செய்யப்பட்ட தெய்வங்களை உங்களுக்கெனச் செய்து கொள்ளவும் வேண்டாம். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
5 ஆண்டவர் ( உங்கள் மீது ) இரக்கம் கொள்ளும்படி நீங்கள் சமாதானப் பலியை அவருக்குச் செலுத்தினால்,
6 அது பலியிடப்பட்ட அந்நாளிலேயே அல்லது அடுத்த நாளிலே அதை உண்பீர்கள். மூன்றாம் நாளில் எஞ்சியிருப்பதை நெருப்பில் எரிக்கக் கடவீர்கள்.
7 இரண்டு நாளுக்குப் பின் அதை உண்பவன் அவமரியாதையுள்ளவனும், தெய்வ துரோகியுமாவான்.
8 ஆண்டவருக்குப் பரிசுத்தமானதை மாசு படுத்தினானாகையால் அவன் தன் தீச் செயலைச் சுமந்து, தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான்.
9 உன் நிலத்திலுள்ள பயிரை அறுக்கும் போது நீ பூமி மட்டத்தோடே அறுக்க வேண்டாம்; சிதறிக் கிடக்கிற கதிர்களையும் பொறுக்க வேண்டாம்.
10 அவ்வண்ணமே உன் திராட்சைத் தோட்டத்தில் விழுந்து கிடக்கிற பழக்குலைகளையோ பழங்களையோ பொறுக்கவேண்டாம். அவற்றை எளியவர்களுக்கும் அந்நியருக்கும் விட்டுவிடு. நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
11 களவு செய்யாதீர்கள். பொய் சொல்லாதீர்கள் எவனும் தன் பிறனை வஞ்சிக்கலாகாது.
12 நமது பெயரைச் சொல்லிப் பொய்யாணையிடாதே; உன் கடவுளின் பெயரை அவமரியாதை செய்யாதே நாம் ஆண்டவர்.
13 உன் பிறன் மீது அபாண்டம் சொல்லாமலும், அவனை வலுவந்தத்தால் வருத்தாமலும் இருப்பாயாக. உன் கூலியாளின் வேலைக்குக் கொடுக்க வேண்டிய கூலியை வியற்காலைவரை உன்னிடம் வைத்திராதே.
14 செவிடனைத் திட்டாமலும், குருடன் முன் இடறுகள் வைக்காமலும், உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவாயாக. ஏனென்றால், நாமே ஆண்டவர்.
15 அநீதி செய்யாதே. வழக்கிலே நீதிக்கு மாறாய்த் தீர்ப்பிடாதே. ஒருவன் ஏழையென்று கண்டு, அவனை அற்பமாய் எண்ணாதே. ஒருவன் பணக்காரனென்று பார்த்து முகத்தாட்சனியம் காட்டாதே. முறையோடு உன் பிறனுக்கு நீதி வழங்கு.
16 நீ மக்களுக்குள்ளே குற்றம் சாட்டிக் கோள் சொல்லித் திரியாதே. உன் பிறனுடைய இரத்தப் பழிக்கு உள்ளாகாதே நாம் ஆண்டவர்.
17 உன் சகோதரனை உன் இதயத்தில் பகைக்காதே. ஆனால், அவனுடைய பாவத்திற்கு நீ உடந்தையாகாதபடிக்கு வெளிப்படையாய் அவனுக்கு அறிவுரை சொல்.
18 பழிக்குப் பழி வாங்கத் தேடாதே. உன் மக்கள் உனக்கு அநீதி செய்தாலும், மனத்தில் பொறாமை கொள்ளாதே. உனக்கு அன்பு செய்வது போல் உன் அயலானுக்கும் அன்பு செய். நாம் ஆண்டவர்.
19 நமது சட்டங்களைக் கைக்கொள். உன் மிருகங்களை வேற்றின மிருகத்தோடு பொலிய விடாதே. உன் வயலில் வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே. இரு விதமான நூல்களால் நெய்யப்பட்ட ஆடையை அணியாதே.
20 அடிமைப் பெண் ஒருத்தி, ஒருவனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து மீட்கப்படாமலும், விடுதலை அடையாமலும் இருக்கையிலே, அவளோடு ஒருவன் படுத்தானென்றால் அவர்கள் இருவரும் கொலை செய்யப்படாமல் அடிக்கப்படவேண்டும். ஏனென்றால், அந்தப் பெண் விடுதலை பெற்றவள் அல்ல.
21 ஆனால், அவன் தன் குற்றத்துக்காகச் சாட்சியக் கூடார வாயிலிலே ஆண்டவருக்கு ஓர் ஆட்டுக்கிடாயைக் கொண்டு வருவான்.
22 குரு அவனுக்காகவும் அவன் பாவத்திற்காகவும் இறைவன் திருமுன் வேண்டுவார். அப்பொழுது ஆண்டவர் அவன் மேல் இரக்கம் கொள்வார்.
23 அவன் பாவமும் மன்னிக்கப்படும். நீங்கள் உங்கள் நாட்டில் புகுந்து, கனி தரும் மரங்களை நட்ட பின், அவைகளின் மிஞ்சின கிளைகளைக் கழிக்க வேண்டியதிருக்கும். அம் மரங்களின் கனிகள் உங்களுக்குத் தீட்டுள்ளவைகளாதலால், அவற்றை உண்ண வேண்டாம்.
24 நான்காம் ஆண்டில் அவற்றின் கனிகளெல்லாம் ஆண்டவருக்குக் காணிக்கையாக அருச்சிக்கப்பட்டு ஒதுக்கப்படும்,
25 பிறகு ஐந்தாம் ஆண்டில் நீங்கள் அவற்றின் கனிகளைப் பறித்து உண்ணலாம். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
26 யாதொன்றையும் இரத்தத்தோடு உண்ண வேண்டாம். சகுனம் பார்க்கவும் வேண்டாம்; கனவுகளுக்குப் பொருள் தேடவும் வேண்டாம்.
27 உங்கள் தலைமயிரை வட்டமாய் வெட்டவும் தாடியைச் சிரைக்கவும் வேண்டாம்.
28 இழவை முன்னிட்டு உங்கள் சதையை வெட்டாமலும், உடலிலே எவ்விதமான சித்திரத்தையேனும் அடையாளத்தையேனும் குத்திக் கொள்ளாமலும் இருப்பீர்களாக. நாம் ஆண்டவர்.
29 நாடு அசுத்தமாகாதபடிக்கும், பாவக் கொடுமையால் நிறைந்து போகாதபடிக்கும் நீ உன் புதல்வியை வேசித்தனத்திற்கு உட்படுத்தாதே.
30 நமது ஓய்வு நாட்களை அனுசரித்து வாருங்கள். கடவுளின் மூலத்தானத்தைக் குறித்துப் பயபக்தியாய் இருக்க வேண்டும். நாம் ஆண்டவர்.
31 நீங்கள் தீட்டுப்படாதபடிக்கும் பில்லிசூனியக்காரரை நாடவும் குறி சொல்லும் சகுனக்காரரிடம் யாதொன்றைக் கேட்கவும் வேண்டாம்.
32 நரை கொண்டவன் வரக்கண்டால் நீ எழுந்திரு. முதிர் வயதுள்ளவனை மதித்து நட. உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சியிரு. நாம் ஆண்டவர்.
33 யாரேனும் ஓர் அந்நியன் உங்கள் ஊரில் உங்களோடு குடியிருந்தால், நீங்கள் அவனைப் பழிக்க வேண்டாம்.
34 அப்படிப்பட்டவனைக் குடிமகன்போல் எண்ணி, நீங்கள் உங்களுக்கு அன்பு செய்வது போல் அவனுக்கும் அன்பு செய்ய வேண்டும். நீங்களும் எகிப்து நாட்டில் அந்நியராய் இருந்தீர்களன்றோ ? நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
35 நீதித் தீர்ப்பிலும், நிறுத்தலிலும், அளத்தலிலும் அநியாயம் செய்யாதீர்கள்.
36 முத்திரைத் துலாக்கோலும், முத்திரை எடைக்கல்லும், முத்திரை மரக்காலும், முத்திரைப் படியும் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்ட உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே.
37 நம்முடைய எல்லாக் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைக் கொண்டு, அவற்றின்படி நடவுங்கள். நாம் ஆண்டவர் ( என்றார் ).
அதிகாரம் 20
1 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 இஸ்ராயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியதாவது: இஸ்ராயேல் மக்களிலேனும் இஸ்ராயேலரோடு குடியிருக்கிற அந்நியர்களிலேனும் எவனாயினும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மொலோக் விக்கிரகத்துக்கு நேர்ந்து கொடுத்தால், அவன் சாகவே சாவான். நாட்டு மக்கள் அவனைக் கல்லாலெறிந்து கொல்வார்கள்.
3 அப்படிப்பட்டவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மொலோக் விக்கிரகத்துக்கு நேர்ந்து கொடுத்து நம்முடைய மூலத்தானத்தைத் தீட்டுப்படுத்தி நம் திருப் பெயரை இழிவு படுத்தினதற்காக, நாம் அவனுக்கு விரோதமாய் எதிர்த்து நின்று, அவனைத் தன் இனத்தினின்று விலக்குண்டு போகச் செய்வோம்.
4 அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மெலோக்குக்கு நேர்ந்து கொடுத்தானென்று அறிந்திருந்தும் நாட்டு மக்கள் அதனைப் பொருட்படுத்தாமல், கடவுளின் கட்டளையை அற்பமாய் எண்ணி, அவனைக் கொல்லாமல் கண்ணோட்டமாய் விட்டு விட்டாலோ,
5 நாம் அந்த மனிதனுக்கும் அவன் உறவினருக்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும் அவன் மொலோக்குடன் விபசாரம் செய்வதற்கு உடந்தையாயிருக்கும் யாவரையும் தங்கள் இனத்திலிருந்து விலக்குண்டு போகச் செய்வோம்.
6 பில்லி சூனியக்காரரையும் குறி சொல்கிறவர்களையும் நாடி அவர்களோடு விபசாரம் செய்கிறவனுக்கு நாம் எதிர்த்து நின்று, தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகச் செய்வோம்.
7 நாம் உங்கள் ஆண்டவராகையால், நீங்கள் உங்களைப் புனிதப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்.
8 நமது கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றின்படி நடங்கள். நாம் உங்களைப் பரிசுத்தராக்குகிற ஆண்டவர்.
9 தன் தந்தையையோ தாயையோ சபித்தவன் சாகவே சாவான். அவன் தன்னைப் பெற்ற தாய் தந்தையரையுமல்லவா சபிக்கத் துணிந்தான் ? ஆகையால், அவன் இரத்தப் பழி அவன் மேல் இருப்பதாக.
10 ஒருவன் மற்றொருவனுடைய மனைவியோடு விபசாரம் செய்து அவளைக் கற்பழித்தால், விபசாரம் செய்த அவனும் அவளும் ஆக இருவருமே கொலை செய்யப்படக்கடவார்கள்.
11 தன் தந்தையின் மனைவியோடு படுத்துத் தன் தந்தையின் நிருவாணத்தை வெளிப்படுத்தினவனும் அவளும் கொலை செய்யப்படக்கடவார்கள். அவர்களின் இரத்தப்பழி அவர்கள் மேல் இருப்பதாக.
12 ஒருவன் தன் மருமகளோடு படுத்து இருவரும் வெறுப்புக் குரிய தீச்செயலைச் செய்தால் அவர்கள் இருவருமே அதன் பொருட்டுச் சாகக்கடவார்கள். அவர்களின் இரத்தப் பழி அவர்கள் மேல் இருப்பதாக.
13 ஒருவன் பெண்ணோடு மோகங் கொள்வது போல ஆண்மகனோடு கூடினால், வெறுப்புக் குரிய செயல் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவார்கள். அவர்களின் இரத்தப் பழி அவர்கள் மேல் இருப்பதாக.
14 மகளை மனைவியாக்கிக் கொண்டவன் பிறகு அவள் தாயையும் கொண்டானாயின், அவன் பாதகன் ஆனான். இப்படிப்பட்ட கொடுமை உங்களுக்குள் நிலைத்திராதபடிக்கு அவனையும் அவர்களிருவரையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
15 மாட்டோடாவது ஆட்டோடாவது புணர்பவன் கொலை செய்யப்படுவான். அந்த விலங்கையும் கொல்லக்கடவீர்கள்.
16 ஒரு பெண் யாதொரு மிருகத்தோடு சேர்ந்தால், அவளும் அந்த மிருகமும் கொலை செய்யப்படவேண்டும். அந்த இரத்தப் பழி அவர்கள் மேலும் அவற்றின் மேலும் இருப்பதாக.
17 தன் தந்தைக்கோ தாய்க்கோ பிறந்த மகளாகிய தன் சகோதரியோடு சேர்ந்து, அவன் அவளுடைய நிருவானத்தையும் அவள் அவனுடைய நிருவாணத்தையும் பார்த்திருந்தால், அவர்கள் அடாத பாதகத்தைக் கட்டிக்கொண்டவர்கள் ஆவார்கள். அவ்விருவரும் ஒருவர் மற்றொருவர்க்குத் தம் நிருவாணத்தைக் காட்டினமையால் தங்கள் மக்களின் கண்களுக்கு முன்பாகக் கொலை செய்யப்படுவார்கள். தங்கள் கொடுமையைத் தாங்களே சுமப்பார்கள்.
18 ஒருவன் மாதவிடாயுள்ள பெண்ணோடு கூடி, அவன் அவளை நிருவானமாக்கினதாலும், அவள் தன் வெட்கக் கேட்டை அவனுக்குக் காட்டினதாலும், இருவருமே தங்கள் இனத்திலிருந்து விலக்கண்டு போகக்கடவார்கள்.
19 உன் பெரியம்மா அல்லது சித்தியினுடைய மறைவிடத்தைத் திறக்காதே. இப்படிச் செய்பவன் தன் நிருவாணத்தின் அவலட்சணத்தைக் காட்டுகிறான். இருவரும் தங்கள் கொடுமையைச் சுமப்பார்கள்.
20 தனது தாய் அல்லது தந்தையின் சகோதரனுடைய மனைவியோடு கூடினவன் தன் இனத்தாளுடைய அவமானத்தைத் திறந்து காட்டினான். அவர்கள் இருவரும் தங்கள் கொடுமையைச் சுமப்பார்கள்; பிள்ளைப்பேறு இன்றி இறப்பார்கள்.
21 தன் சகோதரனுடைய மனைவியை மணந்து கொண்டவன் தகாத காரியம் செய்திருக்கிறான். அவன் தன் சகோதரனுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தினான். அவர்கள் இருவரும் பிள்ளை இல்லாதிருப்பார்கள்.
22 நீங்கள் நம்முடைய கட்டளைகளையும் நீதிநெறிகளையும் கைக்கொண்டு, அவற்றின் படி நடவுங்கள். இல்லாவிடில், நீங்கள் குடியிருப்பதற்காக நாம் உங்களைக் கொண்டு போகிற நாடு உங்களைக் கக்கிப்போடும்.
23 நாம் உங்கள் முன்னிலையிலிருந்து துரத்தி விடப்போகிற மக்களுடைய பழக்க வழக்கங்களின்படி நீங்கள் நடக்கவேண்டாம். அவர்கள் மேற்சொல்லப்பட்ட கொடுமைகளையெல்லாம் செய்தபடியால், நாம் அவர்களை வெறுத்து விட்டோம்.
24 நாம் உங்களுக்கு உடைமையாகக் கொடுக்கப் போகிற அவர்களுடைய நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளுங்களென்று நாம் உங்களுக்குச் சொல்கிறோம். அந்நாடு பாலும் தேனும் பொழியும் நாடு. உங்கள் கடவுளாகிய நாம் உங்களை மற்ற மக்களினின்று பிரித்தெடுத்தோம்.
25 ஆதலால், நீங்களும் அசுத்தமான விலங்குக்கும் சுத்தமான விலங்குக்கும், அசுத்தமான பறவைக்கும் சுத்தமான பறவைக்கும் வேறுபாடு காணக் ( கற்றுக் கொள்ளுங்கள் ). நாம் உங்களுக்குத் தீட்டாக எண்ணச் சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் மண்ணில் நடமாடுகிற எவ்வகை மிருகங்களாலும் உங்கள் ஆன்மாவை அசுத்தப்படுத்தாதீர்கள்.
26 ஆண்டவராகிய நாம் பரிசுத்தராகையால், நீங்கள் நமக்கேற்ற பரிசுத்தவான்களாய் இருக்க வேண்டும். நீங்கள் நமது சொந்த மக்களாய் இருக்கும்படியே உங்களை மற்ற மக்களிடமிருந்து பிரித்தெடுத்தோம்.
27 பில்லி சூனியம் பார்க்கிறதற்கும் குறி சொல்லுகிறதற்கும் ஏதுவான பேய்ப்புத்தி ஓர் ஆடவனுக்கோ ஒரு பெண்ணுக்கோ இருந்தால், அப்படிப் பட்டவர் சாகவே சாவர். அவர்களைக் கல்லால் எறிந்து கொல்லுங்கள். அவர்களுடைய இரத்தப் பழி அவர்கள் மேல் இருக்கக் கடவதாக என்றார்.
அதிகாரம் 21
1 மேலும் ஆண்டவர் மேயீசனை நோக்கி: நீ ஆரோனுடைய புதல்வர்களாகிய குருக்களிடம் சொல்லவேண்டியதாவது: குரு தன் ஊராரில் யாரேனும் இறந்தால் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.
2 ஆனால், அவனுடைய உறவின் முறையாரும் இனத்தாருமாகிய தந்தை, தாய், மகன், மகள் சகோதரன்,
3 வாழ்க்கைப்படாது தம்முடனிருக்கும் கன்னிப் பெண்ணாகிய சகோதரி முதலியோர் ( இறந்தால் அவர்களுக்கு இழவு கெண்டாட அவனுக்குத் தடையில்லை ).
4 தன் மக்களுள் பெரிய மனிதனுடைய சாவுக்காக அவன் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.
5 அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியைச் சிரைக்காமலும், தங்கள் உடலைக் கீறிக் கொள்ளாமலும்,
6 தங்கள் கடவுளுக்கு முன் தூய்மையாயிருந்து, அவருடைய பெயருக்கு இழுக்கு வருவிக்காதிருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் ஆண்டவருடைய தகனப்பலிகளையும் செலுத்துகிறவர்களாகையால், தூயோராய் இருக்கக்கடவார்கள்.
7 அவர்கள் கற்பழிக்கப்பட்ட பெண்ணையோ, விலைமகளையோ, கணவனால் தள்ளப்பட்டவளையோ மணந்து கொள்ளாதிருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் தங்கள் கடவுளுக்கு அபிசேகமானவர்களாயும், காணிக்கை அப்பங்களைச் செலுத்துகிறவர்களாயும், இருக்கிறார்கள்.
8 ஆகையால், அவர்களைப் பரிசுத்தப் படுத்துகிற ஆண்டவராகிய நாம் பரிசுத்தராயிருக்கிறது போல், அவர்களும் பரிசுத்தராய் இருக்கக் கடவார்கள்.
9 குருவுடைய புதல்வி வேசித்தனம் புரியும் போதே அகப்பட்டுக் கொண்டு தன் தந்தையின் பெயருக்கு இழுக்கு வருவித்தால், அவள் சாம்பலாய்ச் சுட்டெரிக்கப்படக் கடவாள்.
10 தலைமைக்குரு, அதாவது: தன் சகோதரருக்குள்ளே தலையிலும் கைகளிலும் குருத்துவ அபிசேகம் பெற்று, அதற்குரிய உடைகளை அணிகின்றவர், தம் தலைப்பாகையை எடுத்து விடவும் தம் உடைகளைக் கிழித்துப் போடவும் கூடாது.
11 பிணம் கிடக்கும் இடத்திற்கு அவர் கண்டிப்பாய்ப் போகலாகாது. தம் தந்தைக்காகவும் தாய்க்காகவும் அவர் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது.
12 அபிசேகத் தைலம் அவர் மேல் வார்க்கப்பட்டதனால் அவர் ஆண்டவருடைய இடத்தைத் தீட்டுப்படுத்தாதபடிக்குப் பரிசுத்த இடங்களிலிருந்து வெளியே போகாமல் இருக்கக் கடவார். நாம் ஆண்டவர்.
13 அவர் கன்னிப்பெண்ணை மனைவியாகக் கொள்ளலாமேயன்றி,
14 விதவையையோ, தள்ளப்பட்டவளையோ, கற்புக் குலைந்தவளையோ, விலைமகளையோ, மணக்கலாகாது. அன்றியும், அவர் தம் இனத்துப் பெண்ணையே மணந்து கொள்ளக் கடவார்.
15 அவர் தம் இனத்தின் இரத்தத்தை இஸ்ராயேலரில் சாதாரண மக்களுடைய இரத்தத்தோடு கலக்க வேண்டாம். ஏனென்றால் நாம் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர் என்றருளினார்.
16 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
17 நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியதாவது: உன் குடும்பத்துச் சந்ததியாருக்குள்ளே அங்கவீனம் உள்ளவன் தன் கடவுளுக்கு அப்பங்களைச் செலுத்தலாகாது.
18 அவன் குருடனானாலும், சப்பாணியானாலும், மிகச்சிறிய அல்லது மிகப் பெரிய அல்லது கோணலான மூக்கை உடையவனானாலும்,
19 கால் ஒடிந்தவனானாலும், கை முறிந்தவனானாலும்,
20 கூனனானாலும் பீளைக் கண்ணனானாலும், பூ விழுந்த கண்ணனானாலும், தீராச் சிரங்குள்ளவனானாலும், எச்சில் தழுப்புள்ளவனானாலும், விதை வீக்கமுள்ளவனானாலும் குருவுக்கடுத்த ஊழியங்களை நடத்தலாகாது.
21 குருவாகிய ஆரோனுடைய சந்ததியாரில் அங்கவீனமுள்ளவன் ஆண்டவருக்குப் பலிகளையும் தன் கடவுளுக்கு அப்பங்களையும் செலுத்த வரலாகாது.
22 ஆயினும், பரிசுத்த இடத்திலே செலுத்தப்படும் அப்பங்களை அவன் உண்ணலாம்.
23 உண்ணலாமென்றாலும், அவன் அங்கவீனமுள்ளவனாதலால், நமது பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தாதபடி அவன் திரைக்கு உட்புறத்தில் புகவும் பலிப்பீடத்தண்டை செல்லவும் கூடாது. உங்களைப் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர் நாமே என்று திருவுளம்பற்றினார்.
24 ஆகையால், மோயீசன் தமக்குக் கட்டளையிடப்பட்டிருந்த எல்லாவற்றையும் ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் இஸ்ராயேலர் அனைவருக்கும் சொன்னார்.
அதிகாரம் 22
1 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 நீ ஆரோனோடும் அவன் புதல்வரோடும் பேசி, இஸ்ராயேல் மக்களால் நமக்கு நேர்ந்து விடப்பட்ட காணிக்கைகளை அவர்கள் தொடவேண்டாமென்றும், அவர்களே நமக்குச் செலுத்திவருகிற பரிசுத்த மாக்கப்பட்டவைகளின் பெயரை இழிவுபடுத்த வேண்டாமென்றும் சொல். நாம் ஆண்டவர்.
3 நீ அவர்களையும் அவர்களின் சந்ததியாரையும் நோக்கி: உங்கள் வம்ச சந்ததியாரில் எவனேனும் தீட்டுப்பட்டவனாயிருந்து, இஸ்ராயேல் மக்களால் ஆண்டவருக்குக் காணிக்கையாக, ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளின் அண்டையில் சென்றானாயின், அவன் ஆண்டவர் முன்னிலையில் கொலை செய்யப்படுவான்.
4 நாம் ஆண்டவர். ஆரோனின் சந்ததியாரில் தொழுநோய் அல்லது மேகவெட்டை உள்ளவன் தான் குணமடையும் வரை நமக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட காணிக்கைகளில் ஒன்றையும் உண்ணலாகாது. பிணத்தைத் தொட்டதினால் தீட்டுள்ளவனையும், இந்திரியக் கழிவு உள்ளவனையும்,
5 தீட்டுப்படுத்தும் ஊர், விலங்கு மற்றமுள்ள தொடத்தகாத பொருள் முதலியவற்றைத் தொட்டவன்,
6 மாலைவரை அசுத்தனாய் இருந்து, ஆண்டவருக்கு அருச்சித்து ஒதுக்கப்பட்டவைகளை உண்ணலாகாது. ஆனால் அவன் தன் உடலைத் தண்ணீரால் கழுவி,
7 சூரியன் மறைந்த பின் சுத்திகரம் அடைவானாயின், அப்பொழுது, தனக்குச் சொந்த உணவாகிய காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டவைகளை உண்ணலாம்.
8 குருக்கள், தானாய்ச் செத்ததையோ கொடிய விலங்கால் கொல்லப்பட்டதையோ உண்ணாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பார்களாக. நாம் ஆண்டவர்.
9 அவர்கள் பாவத்துக்கு உட்படாதபடிக்கும், பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தின பின் அவர்கள் அதிலே சாகாதபடிக்கும் நம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளக் கடவார்கள். நாம் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர்.
10 அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவற்றை உண்ணலாகாது. குருவின் வீட்டில் குடியிருக்கிறவனும், கூலி வேலை செய்கிறவனும் அவற்றை உண்ணலாகாது.
11 ஆயினும், குருவினால் பணத்துக்கு வாங்கப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்திருப்பவனும் அவற்றை உண்ணலாம்.
12 குருவின் புதல்வி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்த மானவற்றையும் படைக்கப்பட்ட புதுப் பலன்களையும் உண்ணலாகாது.
13 ஆனால், அவள் விதவையாகி அல்லது பிள்ளையில்லாது, தள்ளுபடி யானவளாகித் தந்தை வீட்டிற்குத் திரும்பி வந்தவளானால், அவள் சிறு பெண்ணாயிருந்த நாளிலே உண்டு வந்ததுபோல் இப்பொழுதும் தந்தையின் உணவை உண்ணலாம். அந்நியரில் ஒருவனும் அதை உண்ணலாகாது.
14 அறியாமல் பரிசுத்தமானதை உண்டவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடு கூட ஆலயத்திற்காகக் குருவிடம் கொடுத்து விடக் கடவான்.
15 இஸ்ராயேல் மக்களால் ஆண்டவருக்குப் படைக்கப்பட்டவற்றை அவர்கள் பரிசுத்தக் குறைச்சல் செய்யாதிருப்பார்களாக.
16 அவர்கள் பரிசுத்தமானவற்றை உண்டால் தங்கள் குற்றத்திற்காகப் பெறவிருக்கும் தண்டனைக்கு அஞ்சக்கடவார்கள். அவர்களைப் பரிசுத்தமாக்குகின்ற ஆண்டவர் நாமே, என்று திருவுளம் பற்றினார்.
17 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
18 நீ ஆரோனையும் அவன் புதல்வரையும் இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் நோக்கி: அவர்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: இஸ்ராயேலரிலும் உங்களிடையே தங்குகிற அந்நியரிலும் யாரேனும் தன் நேர்ச்சியின்படியோ தன் உற்சாகத்தின்படியோ தன் காணிக்கையை ஒப்புக்கொடுக்க வரும்போது, ஆண்டவருக்குத் தகனப்பலிக்கென்று அவன் கொண்டு வரும் காணிக்கை எவ்வகையானதாயிருந்த போதிலும்,
19 அதைப் படைக்க வேண்டுமென்று உங்களைக் கேட்டால், அது மாடுகளிலாவது செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது மறுவற்ற ஆணாய் இருக்கவேண்டும்.
20 அது மறுவுள்ளதாயின், ( அதைச் ) செலுத்தாதிருப்பீர்கள்.
21 அதை ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதன்று. ஒருவன் நேர்ச்சியாகவோ, உற்சாகமாகவோ மாடுகளிலும் சரி ஆடுகளிலும் சரி, ஆண்டவருக்குச் சமாதானப் பலியைச் செலுத்துவதாயின், அது ஏற்றுக் கொள்ளப்படும்படி ஒரு மறுவுமின்றி உத்தமமாய் இருக்கவேண்டும்.
22 அது குருடு, நெரிசல், தழும்பு, கொப்புளம், சொறி, சிரங்கு முதலிய பழுது உள்ளதாயின், அதை ஆண்டவருச் செலுத்தவும் கூடாது; ஆண்டவருடைய பலிபீடத்தில் தகனப் பலியிடவும் கூடாது.
23 நீ உற்சாகத்தை முன்னிட்டு ஆட்டையோ, மாட்டையோ படைக்க மனமுள்ளவனாய் இருந்தால், அறுத்த காதும் முறித்த வாலுமுள்ள விலங்கைப் பலியிட்டாலும் இடலாம். ஆனால், நேர்ச்சைக்காக அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
24 விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் கத்தியால் அறுத்து விதை எடுக்கப்பட்டதையும் ஆண்டவருக்குப் படைத்தலாகாது. உங்கள் நாட்டில் அதைக் கண்டிப்பாய்ச் செய்யலாகாது.
25 நீங்கள் அந்நியன் கையிலே அப்பங்களையோ, வேறு யாதொன்றையோ வாங்கி, அவன் பெயரால் ஆண்டவருக்குச் செலுத்தாதீர்கள். உண்மையில் அவையெல்லாம் தீட்டும் பழுதும் உள்ளவை. அவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்றருளினார்.
26 மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
27 கன்றுக்குட்டியோ, செம்மறியாட்டுக்குட்டியோ, வெள்ளாட்டுக் குட்டியோ பிறந்தால். அது ஏழு நாள் தன் தாயின் முலைப்பாலைக் குடிக்கும். ஆனால், எட்டாம் நாளில் அல்லது அதற்குப் பின் வரும் நாளில் அது ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்படலாம்.
28 ( படைக்கலாமென்றாலும், ) பசுவையும் ஆட்டையும் தன் தன் குட்டியுடன் ஒரே நாளில் பலியிடலாகாது.
29 உங்கள் மீது ஆண்டவர் தயவுள்ளவராய் இருக்கும்படி அவருக்கு நன்றியறிதலாக ஒரு பலியைச் செலுத்துவீர்களாயின்,
30 அதை அதே நாளிலே உண்பீர்கள். அதில் யாதொன்றும் மறுநாள் சூரியன் உதிக்கும் வரை எஞ்சியிருக்கக் கூடாது.
31 நாம் ஆண்டவர். நமது கட்டளைகளைக் கைக்கொண்டு, அவ்வாறே நடவுங்கள்.
32 நாம் ஆண்டவர். நாம் இஸ்ராயேல் மக்கள் நடுவே பரிசுத்தரென்று மதிக்கப் பெறும்படியாய், நமது பெயரை இழிவு படுத்தாதீர்கள். உங்களைப் பரிசுத்தமாக்குகிறவர் நாமே.
33 உங்களுக்குக் கடவுளாய் இருக்கும்படி ( உங்களை ) எகிப்து நாட்டிலிருந்து விடுவித்தோம். நாமே ஆண்டவர், நாமே.
அதிகாரம் 23
1 ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: நீங்கள் பரிசுத்த நாட்களாக அனுசரிக்க வேண்டிய ஆண்டவருடைய திருநாட்களாவன:
3 ஆறு நாள் வேலை செய்வீர்கள்; ஏழாம் நாள் சாபத் என்னும் ஓய்வு நாளாகையால் பரிசுத்தமுள்ளதென்று சொல்லப்படும். அதிலே ஒரு வேலையும் செய்ய வேண்டாம். அது உங்கள் உறைவிடங்களிலெல்லாம் ஆண்டவருடைய ஓய்வு நாளாய் இருக்கும்.
4 மேலும், குறித்த காலத்திலே நீங்கள் பரிசுத்தமாய் அனுசரிக்க வேண்டிய ஆண்டவருடைய ஓய்வு நாட்களாவன:
5 முதல் மாதத்தின் பதினான்காம் நாள் மாலை ஆண்டவருடைய பாஸ்கு (எனப்படும் பாஸ்காத் திருவிழாவும்),
6 அம்மாதத்தின் பதினைந்தாம் நாளில் ஆண்டவருடைய புளியாத ( அப்பத் ) திருவிழாவாம். ( அப்போது, ஏழுநாள் புளியாத ( அப்பங்களை ) உண்பீர்கள்.
7 முதல் நாள் உங்களுக்கு மிகச் சிறப்பானதும் பரிசுத்தமானதுமாய் இருக்கும். அதிலே எவ்வித சாதாரண வேளையும் செய்யாமல்.
8 அவ்வேழு நாளும் ஆண்டவருக்குத் தகனப் பலிகளை இடக்கடவீர்கள். ஏழாம் நாளோ மிகச் சிறப்பானதும் பரிசுத்தமானதுமாய் இருக்கும். அன்றும் சாதாரண வேலை ஒன்றும் செய்யலாகாது என்று திருவுளம்பற்றினார்.
9 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
10 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: நாம் உங்களுக்கு அளிக்கவிருக்கும் நாட்டை அடைந்து, அதில் விளைச்சலை அறுக்கும்போது, உங்கள் அறுவடையின் முதற் பலனாகிய கதிர்க் கட்டுகளைக் குருவிடம் கொண்டு வரக்கடவீர்கள்.
11 உங்களுக்காக அது ஏற்றுக்கொள்ளப்படும் பொருட்டு அவர் ஓய்வு நாளுக்கு அடுத்த நாளன்று ஆண்டவர் திருமுன் அந்தக் கதிர்க்கட்டுகளை உயர்த்திப் பரிசுத்தமாக்குவார்.
12 அந்தக் கதிர்க்கட்டு பரிசுத்தமாக்கப் படும் அதே நாளில் நீங்கள் மறுவற்ற ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டியை ஆண்டவருக்குத் தகனப் பலியிட்டு,
13 அதோடுகூட எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவில் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கு ஆண்டவருக்கு நறுமணத்தூப வாசனையாகவும், திராட்சை ரசத்தில் கின் என்னும் அளவிலே நாலில் ஒரு பங்கு பானப் பலியாகவும் படைக்கக்கடவீர்கள்.
14 உங்கள் கடவுளுக்கு மேற்சொன்ன புதுப்பலனை நீங்கள் ஒப்புக்கொடுக்கும் நாள்வரை அப்பத்தையோ வறுத்த தானியத்தையோ, அவற்றின் கூழையோ உண்ணாதீர்கள். இது உங்கள் உறைவிடங்களிலெல்லாம் உங்கள் தலைமுறை தோறும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நித்திய கட்டளை.
15 ஆகையால், நீங்கள் புதுப்பலன்களின் கதிர்க் கட்டை ஒப்புக்கொடுத்த ஓய்வு நாளுக்கு அடுத்த நாளிலிருந்து ஏழு நிறைவாரங்களை எண்ணத் தொடங்கி,
16 ஏழாம் வாரம் நிறைவெய்திய மறுநாள், அதாவது: ஐம்பதாம் நாளன்று, ஆண்டவருக்குப் புதிதான பலியைச் செலுத்த வேண்டும்:
17 எப்படியென்றால்: நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கு அளவான புளித்த மிருதுவான மாவினாலே இரண்டு அப்பங்களைச் சுட்டு, உங்கள் உறைவிடங்கள் எல்லாவற்றிலுமிருந்து ஆண்டவருக்குப் புதுப் பலனுக்குரிய காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
18 அந்த அப்பங்களோடு கூடமறுவற்ற ஒரு வயதுள்ள ஏழு ஆட்டுக்குட்டிகளையும், மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஓர் இளங்காளையையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் இவைகளுக்கடுத்த பானபோசனப் பலிப்பொருட்களையும் கொண்டு வந்து, ஆண்டவருக்கு விருப்பமான நறுமணமுள்ள பலியாய்ப் படைக்கக்கடவீர்கள்.
19 மேலும் பாவத்திற்குப் பரிகாரமாக ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும், சமாதானப் பலிக்காக ஒரு வயதுள்ள இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் பலியிடுவீர்கள்.
20 அவைகளைக் குரு ஆண்டவர் திருமுன் புதுப்பலனின் அப்பங்களோடு உயர்த்திய பின், அவைகள் அவருடையவைகளாகும்.
21 நீங்கள் அந்நாளை மிகச் சிறந்ததும் பரிசுத்தமானதுமென்று கொள்ளவேண்டும். அதிலே சாதாரண வேலைகூடச் செய்யாதிருப்பீர்கள். இது உங்கள் உறைவிடங்களிலெல்லாம் தலைமுறை தோறும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நித்திய கட்டளை.
22 அன்றியும், நீங்கள் நிலத்திலுள்ள விளைச்சலை அறுக்கும்போது அதைத் தரைமட்டாக அறுக்காமலும், தரையில் சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், அவற்றை ஏழைகளுக்கும் அந்நியருக்கும் விட்டுவிடவேண்டும். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே (என்றருளினார்).
23 மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
24 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: ஏழாம் மாதத்தின் முதல் நாளை ஓய்வு நாளாகக் கொண்டாடுங்கள். அது பரிசுத்த நாளென்று காட்ட எக்காள ஒலி எழுப்புங்கள்.
25 அதிலே சாதாரண வேலை கூடச் செய்யாமல் ஆண்டவருக்குத் தகனப் பலியைச் செலுத்துங்கள் என்றார்.
26 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
27 அவ்வேழாம் மாதத்தின் பத்தாம் நாள் பரிகாரத் திருநாள். அது மிகவும் சிறந்த நாள், பரிசுத்த நாளென்று கூறப்படும்; அந்த நாளிலே உடலை ஒறுத்து ஆண்டவருக்குத் தகனப் பலி செலுத்துவீர்கள்.
28 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு உதவியாய் இருக்கும்படி அது இரக்கத்தின் நாளாய் இருப்பதினால், அதில் யாதொரு சாதாரண வேலையும் செய்யவேண்டாம்.
29 அந்நாளிலே தன்னை ஒறுத்தல் செய்யாதவன் தன் இனத்தினின்று விலக்குண்டு போவான்.
30 அந்நாளில் வேலை செய்பவனைத் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகும்படி நாம் அழிப்போம்.
31 ஆகையால், நீங்கள் அன்று எந்த வேலையும் செய்யாதிருப்பீர்கள். இது உங்கள் தலைமுறை தோறும் உங்கள் உறைவிடங்களிலெல்லாம் உங்களுக்கு நித்திய கட்டளையாம்.
32 அது உங்களுக்குப் பெரும் ஓய்வு நாள்; அதில் உங்களை ஒறுக்க வேண்டும். அம்மாதத்தின் ஒன்பதாம் நாள் மாலை முதல் மறுநாள் மாலைவரை ஓய்வு நாள் அனுசரிக்கப்படும் என்றார்.
33 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
34 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: இந்த ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் நாள் முதல் ஏழு நாள்வரை ஆண்டவருக்குப் புகழ்ச்சியாகக் கூடாரங்களில் திருவிழா கொண்டாடக்கடவீர்கள்.
35 முதல் நாள் மிகவும் முக்கியமும் பரிசுத்தமுமாக எண்ணப்படும். அன்று எந்தச் சாதாரண வேலையும் செய்யாதிருப்பீர்கள்.
36 அன்றியும் ஏழு நாளும் ஆண்டவருக்குத் தகனப் பலிகளை ஒப்புக்கொடுப்பீர்கள். எட்டாம் நாளும் மிகமுக்கியமும் பரிசுத்தமுமாகையால், ஆண்டவருக்குத் தகனப்பலியை ஒப்புக் கொடுப்பீர்கள். ஏனென்றால், அன்று மக்கள் அனைவரும் ஒன்றாய்க் கூட வேண்டும். அன்று யாதொரு சாதாரண வேலையும் செய்யலாகாது.
37 இவைகளே ஆண்டவருடைய திருநாட்கள். அவற்றை நீங்கள் மிகவும் சிறந்தனவென்றும், பரிசுத்தமானவை யென்றும் கொண்டு அவற்றின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய முறைப்படி ஆண்டவருக்குக் காணிக்கை, தகனப்பலி, பான போசனப்பலி முதலியவற்றைச் செலுத்தக் கடவீர்கள்.
38 மேலும், ஆண்டவருடைய சாதாரண ஓய்வு நாட்களில் நீங்கள் வழக்கப்படி செலுத்தி வருகிற மற்ற காணிக்கை, நேர்ச்சை, உற்சாகப் பலிகளையும் வழக்கப்படி (நடத்தி வருவீர்கள்).
39 ஆகையால், நிலத்தின் எல்லாப் பலன்களையும் நீங்கள் சேர்த்து வைத்த பின், ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள்முதல் ஆண்டவருடைய திருநாட்களை ஏழு நாளும் முறைப்படி கொண்டாடக் கடவீர்கள். அந்தத் திருவிழாவின் முதல் நாளும் எட்டாம் நாளும் உங்களுக்கு முதல் நாளும் எட்டாம் நாளும் உங்களுக்கு ஓய்வு நாளாகும்.
40 முதல் நாளில் மிக அலங்காரமான மரங்களின் கனிகளையும், பேரீச்சங் குருத்துக்களையும், தழைத்திருக்கிற மரங்களின் கிளைகளையும், நீரோடையருகிலுள்ள சாலிஸ் என்னும் மரங்களின் தழைகளையும் கொண்டு வந்து நாட்டி, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் மகிழ்வீர்கள்.
41 ஆண்டுதோறும் ஏழுநாள் அந்தத் திருவிழாவை முறையாய்க் கொண்டாடக் கடவீர்கள். இது உங்கள் தலைமுறைதோறும் அனுசரிக்கப்பட வேண்டிய நித்திய கட்டளை. ஏழாம் மாதத்திலே அந்தத் திருநாட்களைக் கொண்டாட வேண்டும்.
42 ஏழு நாள் தழைப் பந்தல்களில் குடியிருப்பீர்கள். இஸ்ராயேல் இனத்தைச் சார்ந்த எல்லாரும் கூடாரங்களிலேயே தங்கியிருக்க வேண்டும்.
43 இவ்விதம் உங்கள் சந்ததியார், ( ஆண்டவராகிய ) நாம் இஸ்ராயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டபோது அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கச் செய்தோமென்று அறிந்து கொள்வார்கள். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றருளினார்.
44 அப்படியே மோயீசன் ஆண்டவருடைய திருநாட்களைக் குறித்து இஸ்ராயேல் மக்களுக்கு அறிவித்தார்.
அதிகாரம் 24
1 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 விளக்குகள் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும்படி மிகச் சுத்தமும் தெளிவுமுள்ள ஒலிவ எண்ணெயை உங்களிடம் கொண்டு வர வேண்டுமென்று இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிடு.
3 உடன்படிக்கைக் கூடாரத்தில் சாட்சியத் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அவற்றை எப்பொழுதும் மாலை முதல் காலைவரை எரியும்படி ஆண்டவர் திருமுன் ஏற்றக் கடவான். இது உங்கள் தலைமுறை தோறும் செய்யவேண்டிய நித்திய சட்டமாம்.
4 அவை ஆண்டவர் முன்னிலையில் எரியும்படி மிகத்தூய்மையான கிளை விளக்கின் மேல் எப்பொழுதும் வைக்கப்படும்.
5 மேலும், மிருதுவான மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக. ஒவ்வொரு அப்பமும் ( மரக்காலிலே ) பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
6 அவற்றை நீ ஆண்டவர் திருமுன் தூய்மையான மேசையின் மீது பக்கத்திற்கு ஆறாக இருபக்கமும் அடுக்கிவைப்பாய்.
7 அவ்வப்பங்கள் ஆண்டவருக்குச் செய்யப்பட்ட காணிக்கையின் நினைவுச் சின்னமாய் இருக்கத் தக்கனவாய் அவற்றின் மீது மிகவும் சத்தமான தூபவகைகளைப் போடக் கடவாய்.
8 நித்திய உடன்படிக்கையாக இஸ்ராயேல் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட அந்த அப்பங்களை ஓய்வு நாள் தோறும் ஆண்டவர் முன்னிலையில் மாற்றக்கடவாய்.
9 அவை ஆரோனையும் அவன் புதல்வரையும் சேரும். அவர்கள் அவற்றைப் பரிசுத்த இடத்தில் உண்ணக்கடவார்கள். ஏனென்றால், ஆண்டவருக்குச் செலுத்தப்படும் பலிகளிலே மிகவும் பரிசுத்தமான அது நித்திய உரிமையாக அவர்களுடையதாய் இருக்கும் என்றார்.
10 அக்காலத்தில் இஸ்ராயேல் இனத்தைச் சார்ந்த ஒரு பெண்ணுக்கும் இஸ்ராயேலரோடு குடியிருந்த எகிப்திய ஆடவன் ஒருவனுக்கும் பிறந்தவன் வெளியே வந்து, பாளையத்திலே ஓர் இஸ்ராயேலனோடு சண்டையிட்டு,
11 ஆண்டவருடைய ( திருப் ) பெயரையும் ஆண்டவரையும் பழித்துப் பேசினான். அவனை மோயீசனிடம் கொண்டுவந்தார்கள். ( அவனுடைய தாயின் பெயர் சலுமித், அவள்தான் கோத்திரத்தானான தாபிரியின் புதல்வி.
12 ஆண்டவருடைய திருவுளத்தை அறியும்வரை அவனைக் காவலில் வைத்தார்கள்.
13 அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி:
14 இந்தத் தெய்வ நிந்தனையாளனைப் பாளையத்துக்கு வெளியே கொண்டு போங்கள். அவன் பழித்துப் பேசின வார்த்தையைக் கேட்டவர்கள் அனைவரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்கள். பிறகு சபையார் யாவரும் அவனைக் கல்லாலெறிந்து சாகடிக்கக் கடவார்கள்.
15 மேலும் நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: தன் கடவுளைப் பழிப்பவன் தன் பாவத்தைச் சுமந்து கொள்வான்.
16 ஆண்டவருடைய பெயரைப் பழிப்பவன் கொலை செய்யப்படுவான். அவன் குடிமகனாயினும் சரி, அந்நியனாயினும் சரி சபையார் எல்லாரும் அவனைக் கல்லால் எறியவேண்டும். ஆண்டவருடைய பெயரைப் பழித்தவன் கொலை செய்யப்படுவான்.
17 ஒரு மனிதனைக் கொலை செய்தவன் கொலை செய்யப்படுவான்.
18 ஒரு விலங்கைக் கொன்றவன் பதிலுக்குக் வேறொன்றைக் கொடுக்கக்கடவான். அதாவது: விலங்குக்கு விலங்கு கொடுத்து ஈடுசெய்யக்கடவான்.
19 தன் ஊராரில் ஒருவனுக்கு எவன் தீங்கிழைத்தானே, அவன் செய்தபடியே அவனுக்குச் செய்யப்படும்.
20 முறிவுக்கு முறிவு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல்: ஒருவன் தன் அயலானுக்கு எவ்விதத் தீமையைச் செய்தானோ அவ்விதத் தீமையே அவனுக்கும் செய்யப்படும்.
21 விலங்கைக் கொன்றவன் வேறொன்றைக் கொடுப்பான். மனிதனைக் கொன்றவனோ கொலை செய்யப்படுவான்.
22 உங்களிலே அந்நியனுக்கும் குடிமகனுக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும். ஏனென்றால், நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்று திருவுளம்பற்றினார்.
23 அவ்விதமே மோயீசன் இஸ்ராயேல் மக்களோடு பேசின பின், ஆண்டவரைப் பழித்தவனைப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போய்க் கல்லாலெறிந்து கொன்றனர். ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே இஸ்ராயேல் மக்கள் செய்தனர்.
அதிகாரம் 25
1 மீண்டும் ஆண்டவர் சீனாய் மலையில் மோயீசனை நோக்கி:
2 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: நாம் உங்களுக்கு அளிக்கவிருக்கிற நாட்டில் நீங்கள் புகுந்த பின்னர் ஆண்டவருக்குப் புகழ்ச்சியாக ஓய்வு ( நாளைக் ) கொண்டாடக் கடவீர்கள்.
3 ஆறு ஆண்டு உன் வயலை விதைத்து, உன் திராட்சைக் கொடிகளின் கிளைகளைக் கழித்து, அவற்றின் பலனைச் சேர்ப்பாய்.
4 ஏழாம் ஆண்டோ நிலத்திற்கு ஓய்வு. இது ஆண்டவர் எடுத்த ஓய்வுக்கு ஏற்றபடி ( அனுசரிக்ப்படும் ). அந்த ஆண்டில் உன் வயலை விதைக்கவும், உன் திராட்சைத் தோட்டத்துச் செடிகளின் கிளைகளைக் கழிக்கவும் வேண்டாம்.
5 நிலங்களில் தானாய் விளைந்ததை நீ விளைச்சல் என்று அறுத்துச் சேர்க்கவும் வேண்டாம். உன் புதுப்பலனின் திராட்சைப் பழங்களை நீ சாதாரணப் பலனைப் போல் அறுத்துச் சேர்க்கவும் வேண்டாம். ஏனென்றால், நிலத்துக்கு அது ஓய்வு ஆண்டு.
6 ஆனால், அவை உங்களுக்கு உணவாய் இருப்பனவாக. உனக்கு உன் வேலைக்காரனுக்கும், உன் கூலிக்காரனுக்கும்,
7 உன்னிடத்தில் தங்கியிருக்கிற அந்நியனுக்கும், உன் ஆடு மாடுகளுக்கும், தானாய் விளைந்திருப்பதெல்லாம் உணவாய் இருக்கும்.
8 மேலும், ஏழு ஆண்டு வாரங்களை--அதாவது; ஏழு தடவை ஏழாக, நாற்பத் தொன்பது ஆண்டுகளை--எண்ணுவாய்.
9 நாடெங்கும் பரிகார காலமாகிய ஏழாம் மாதத்தின் பத்தாம் நாளில் எக்காளம் முழங்கச் செய்யவேண்டும்.
10 ஐம்பதாம் ஆண்டைப் பரிசுத்தமாக்கி, உன் நாட்டின் எல்லாக் குடிகளுக்கும் மன்னிப்பென்று கூறுவாய். ஏனென்றால், அது ( மகிழ்ச்சி எனப்படும் ) ஜுபிலி ஆண்டு. அதிலே உங்களில் ஒவ்வொரு மனிதனும் தன் தன் சொத்துக்களைத் திரும்ப அடைவான்; தன் தன் முந்தின குடும்பத்திற்குத் திரும்பிப் போவான்.
11 ஏனென்றால், அது ஜுபிலி ஆண்டும், ஐம்பதாம் ஆண்டுமாம். அப்போது நீங்கள் விதைப்பதுமில்லை; வாயில் தானாய் விளைந்திருப்பதை அறுத்துச் சேர்ப்பதுமில்லை; . திராட்சைகளின் புதுப்பலனாகிய பழங்களை அறுத்துச் சேர்ப்பதுமில்லை.
12 அதற்குக் காரணம், ஜுபிலி ஆண்டின் பரிசுத்தத் தன்மையே. (அந்த ஆண்டில் ) வயல் வெளிகளில் அகப்படுவதை நீங்கள் உண்ண வேண்டும்.
13 ஜுபிலி ஆண்டிலே யாவரும் தங்கள் சொத்துக்களைத் திரும்ப அடைவார்கள்.
14 உன் ஊரானுக்கு நீ எதையேனும் விற்றாலும், அல்லது அவனிடமிருந்து பெற்றாலும், உன் சகோதரனைத் துன்பப்படுத்தாமல், ஜுபிலி ஆண்டுக்குப் பின் வரும் ஆண்டுகளின் தொகைக்கு ஏற்றபடியே நீ அவனிடமிருந்து வாங்குவாய்.
15 அவனும் பலனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைப் படியே உனக்கு விற்பான்.
16 ஜுபிலி ஆண்டிற்குப் பின்வரும் ஆண்டுகளின் தொகை எவ்வளவு ஏறுமோ அவ்வளவு விலையும் ஏறும். ஆண்டுகளின் தொகை எவ்வளவு குறையுமோ வாங்குகிற விலையும் அவ்வளவு குறையும். எனென்றால், பலனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பார்த்தே அவன் உனக்கு விற்பான்.
17 உங்கள் இனத்தாரை நீங்கள் துன்பப்படுத்தாதீர்கள். உங்கள் கடவுளுக்குப் பயப்பட வேண்டும். ஏனென்றால், நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
18 நீங்கள் நமது கட்டளைகளின்படி செய்து, நமது நீதி நெறிகளைக் கைக்கொண்டு, அவைகளை நிறைவேற்றக் கடவீர்கள். இப்படிச் செய்வீர்களாயின், நீங்கள் ஓர் அச்சமுமின்றி நாட்டில் குடியிருப்பதற்கும்,
19 பூமி ஏராளமாய் உங்களுக்குத் தன் பலனைத் தருவதற்கும், ஒருவனுடைய கொடுமைக்கு அஞ்சாமல் நீங்கள் நிறைவாய் உண்டு நலமாயிருப்பதற்கும் தடையில்லை.
20 ஏழாம் ஆண்டில் எதை உண்போம் ? நாங்கள் விதை விதைக்காமலும் விளைந்ததைச் சேர்க்காமலும் சும்மாவிருக்க வேண்டுமே என்று நீங்கள் சொல்வீர்களாயின்,
21 நாம் ஆறாம் ஆண்டிலே உங்களுக்கு நமது ஆசீரை அருள்வோம். அது உங்களுக்கு மூன்றாண்டுகளின் பலனைத் தரும்.
22 நீங்கள் எட்டாம் ஆண்டில் விதைத்து, ஒன்பதாம் ஆண்டு வரை பழைய பலனையே உண்பீர்கள். புதுப்பலன் விளையுமட்டும் பழைய பலனையே உண்பீர்கள்.
23 மேலும், நாடு நம்முடையதாகையாலும், நீங்களோ அந்நியர்களும் இரவற் குடிகளுமாகையாலும், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்க வேண்டாம்.
24 ஆதலால், உங்கள் உடைமையான நாடெங்கும்: பிறகு மீட்டுக்கொண்டாலும் கொள்வோம் என்று ஒப்பந்தம் செய்து நிலங்களை விற்கலாமே தவிர மற்றப்படியல்ல.
25 உன் சகோதரன் வறுமையால் நெருக்கப்பட்டுத் தன் குறைந்த சொத்தை விற்றானாயின், பின் அவன் இனத்தாரில் ஒருவன் வந்து அது தனக்கு வேண்டுமென்றால், தன் சகோதரன் விற்றதை அவன் மீட்கலாம்.
26 அதை மீட்கத் தன் இனத்தாரில் ஒருவனும் இல்லாமல், தானே மீட்கத் தக்கவனாயினால்,
27 அதை விற்றபின் கடந்த ஆண்டுகளின் தொகையைத் தள்ளி, வாங்கினவனுக்கு மீதித் தொகையைக் கொடுத்துத் தன் சொத்தைத் திருப்புவான்.
28 ஆனால், விலையைக் கொடுக்கத் திறனற்றவனாகில், அவன் விற்றது வாங்கினவன் கையிலே ஜுபிலி ஆண்டு வரை இருக்கும். ஜுபிலி ஆண்டிலேயோ, விற்கப்பட்டதெல்லாம் முன்பு அவற்றிற்கு உரிமையாயிருந்தவனுக்கே திரும்பவும் போகும்.
29 நகர மதில்களுக்கு உள்ளிருக்கிற தன் வீட்டை விற்றிருப்பவன் விற்ற ஓராண்டிற்குள்ளே அதை மீட்டுக் கொள்ளலாம்.
30 ஓராண்டிற்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தாலோ, அந்த வீடு ஜுபிலி ஆண்டிலே முதலாய் மீட்கப்பட முடியாது. அதை வாங்கினவனுக்கும் அவன் சந்ததியாருக்குமே அது தலைமுறைதோறும் உரியதாகும்.
31 மதில் சூழப்படாத கிராமத்திலுள்ள வீடோ நாட்டு நிலங்களுக்கடுத்த சட்டப்படி விற்கப்படும். முன்பு மீட்கப்பட வில்லையாயின், ஜுபிலி ஆண்டில் ( முந்தின ) உரிமையாளனுக்குத் திரும்பும்.
32 லேவியர்களின் (உடைமையாகிய ) நகரங்களிலுள்ள வீடுகளோ என்றும் மீட்கப்படப் கூடும்.
33 இஸ்ராயேல் மக்களுக்குள்ளே லேவியர்களுக்கு இருக்கிற வீடுகள் அவர்களுடைய சொத்துக்களைப் போலாகையால், அவை மீட்கப்படவில்லையாயின், ஜுபிலி ஆண்டிலே அவை உரிமையாளருக்குத் திரும்பவும் வந்து சேரும்.
34 மேலும், நகரங்களுக்கடுத்த அவர்களுடைய வெளிவயல் முதலியன விற்கப்படலாகாது. அவை அவர்களுக்கு நித்திய சொத்து.
35 வறுமையால் நலிந்து, வலுவிழந்த உன் சகோதரனை அந்நியனென்றேனும் அகதியென்றேனும் நீ ஏற்றுக்கொண்டு, அவன் உன்னோடு கூடத் தங்குவானாயின்,
36 அவனிடமிருந்து, வட்டியாவது அல்லது அவனுக்கு நீ கொடுத்ததற்கு அதிகமாவது வாங்காதே. உன் சகோதரன் உன்னை அண்டிப் பிழைக்கும்படி உன் கடவுளுக்கு அஞ்சிநட.
37 அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தாணியத்தை இலாபத்திற்கும் கொடாதிருப்பாயாக.
38 உங்களுக்குக் கானான் நாட்டை அளிக்கும்படிக்கும், உங்கள் கடவுளாய் இருக்கும்படிக்கும் உங்களை எகிப்து நாட்டினின்று விடுதலை செய்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே.
39 உன் சகோதரன் வறுமையால் வருந்தி உனக்கு விலைப்பட்டானாயின், அவனை அடிமை போல் நடத்தாதே.
40 அவன் கூலிக்காரனைப் போலவும் தங்க வந்தவனைப் போலவும் உன்னோடு இருந்து, ஜுபிலி ஆண்டுவரை உன்னிடம் வேலை செய்வான்.
41 பின் அவன் தன் பிள்ளைகளோடு கூட உன்னை விட்டு நீங்கித் தன் குடும்பத்தாரிடத்திற்கும் தன் முன்னோர்களின் உடைமைக்கும் திரும்பிப் போவான்.
42 உண்மையில் அவர்கள் நமக்கே அடிமைகளாய் இருக்கிறார்கள். நாம் எகிப்து நாட்டிலிருந்து அவர்களை விடுதலையாக்கினோம். ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.
43 நீ அவனைக் கொடுமையாய் நடத்தவேண்டாம்.
44 உன் கடவுளுக்குப் பயந்து நட. சுற்றிலுமிருக்கிற புறவினத்தாரைச் சேர்ந்த ஆணும் பெண்ணுமே உங்களுக்கு அடிமைகளாய் இருப்பார்கள்.
45 உங்கள் நடுவே அந்நியராய்க் குடியிருக்கிறவர்களிலும், உங்கள் மத்தியில் அவர்கள் வயிற்றிலே பிறந்தவர்களிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக் கொள்வீர்கள்.
46 அவர்களை நீங்கள் எப்போதும் உங்கள் பொறுப்பில் வைத்துக் காப்பதுமன்றிச் சுதந்தர உரிமையாக அவர்களை உங்கள் வழி வருவோர்க்கும் கையளிக்கக் கூடும். ஆனால், உங்கள் சகோதரராகிய இஸ்ராயேலரைக் கொடுமையாய் நடத்தக் கூடாது.
47 உங்களிடத்தில் இருக்கிற அந்நியனும் அகதியும் செல்வனானபின் வறியவனான உன் சகோதரன் அவனுக்கோ அவன் குடும்பத்தாரில் எவனுக்கோ விலைப்பட்டுப் போனானாயின்,
48 விலைப் பட்டுப் போனபின் அவன் திரும்பவும் மீட்கப் படக்கூடும். அவன் சகோதரரில் எவனும்,
49 அவன் தந்தையோடு பிறந்தவனேனும் இவனுடைய மகனேனும் அவன் குடும்பத்திலுள்ள உறவினரில் ஒருவனேனும் அவனை மீட்கலாம்.
50 அவன் தான் விற்கப்பட்ட நாள் முதல் ஜுபிலி ஆண்டு வலை சென்ற ஆண்டுத் தொகை எத்தனையென்று கணத்கிட வேண்டும். அவனுடைய விலைத் தொகையோ கூலிக்காரனுடைய காலக் கணக்குப் படியும், அவன் வேலை செய்த ஆண்டுக் கணக்குப் படியும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
51 ஜுபிலி ஆண்டு வரை இன்னும் பல ஆண்டுகள் இருக்குமாயின், அவன் அவற்றிற்குத் தக்கபடி விலைத் தொகை கொடுத்து ஈடு செய்யப் கடவான்.
52 ஜுபிலி ஆண்டுவரை மீதியாய் இருக்கிற ஆண்டுகள் கொஞ்சமாயின், அவன் தன் தலைவனோடு கணக்குப்பார்த்து, வேறுபடும் ஆண்டுகளுக்குத் தக்கபடி அவனுக்குப் பணத்தைக் கொடுத்து ஈடு செய்யக் கடவான்.
53 ஆனால், தான் அதற்குள்ளே வேலை செய்து வந்துள்ளமையால் தனக்கு வந்து சேர வேண்டிய கூலிப் பணத்தைக் கழித்துக் கொள்வான். அவன் இவனை உன் முன்னிலையில் கொடுமையாய் நடத்த வேண்டாம்.
54 இப்படி இவன் மீட்கப்படக் கூடாதாயின், இவனும் இவனோடு இவன் பிள்ளைகளும் ஜுபிலி ஆண்டிலே விடுதலை அடைவார்கள்.
55 ஏனென்றால், இஸ்ராயேல் மக்கள் நமக்கே ஊழியக்காரராம். நாமல்லவோ எகிப்து நாட்டிலிருந்து அவர்களை மீட்டு வந்தோம்.
அதிகாரம் 26
1 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே. உங்களுக்கு விக்கிரகங்களையும் கொத்துவேலை உருவங்களையும் செய்துகொள்ளாமலும், நினைவுத்தூண் முதலியன நாட்டாமலும், உங்கள் நாட்டில் தொழுவதற்கான சிறப்புள்ள கல்லை நிறுத்தாமலும் இருப்பீர்களாக. ஏனென்றால் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே.
2 நமது ஓய்வு நாட்களை அனுசரியுங்கள். நமது பரிசுத்த இடத்தின் மீது பயபக்தியாய் இருங்கள்.
3 நாமே ஆண்டவர். நீங்கள் நமது கட்டளைப்படி நடந்து, நமது சட்டங்களையும் காத்து வருவீர்களாயின், உங்களுக்குப் பருவகாலங்களிலே மழை பொழியச் செய்வோம். நிலமும் தன் பலனை விளைவிக்கும்.
4 மரங்களும் கனி கொடுக்கும்.
5 விளைச்சலைப் போரடித்து முடியுமுன்பே திராட்சைப்பழம் பறிக்கும் காலம் வரும். திராட்சைப்பழம் பறிக்கும் காலம் முடியுமுன்பே விதைப்புக் காலம்வரும். நீங்கள் நிறைவோடு உண்டு, ஓர் அச்சமுமின்றி நாட்டில் குடியிருப்பீர்கள்.
6 நாம் உங்கள் எல்லைகளில் சமாதானத்தைத் தந்தருள்வோம். உங்களை அச்சுறுத்தி உங்கள் தூக்கத்தைக் குலைத்து விடுவோர் இரார். கொடிய விலங்குகளையும் நீக்கி விடுவோம். வாளும் உங்கள் எல்லைகளை அணுகுவதில்லை.
7 உங்கள் பகைவர்களைத் துரத்துவீர்கள். அவர்கள் உங்கள் முன் விழுவார்கள்.
8 உங்களில் ஐவர் நூறு அந்நியரையும், உங்களில் நூறுபேர் அவர்களுள் பத்தாயிரம் பேரையும் துரத்துவார்கள். உங்கள் பகைவர்கள் உங்கள் முன்னிலையில் வாளால் வெட்டுண்டு விழுவார்கள்.
9 நாம் உங்கள் மேல் கருத்தாயிருந்து உங்களைப் பலுகிப் பெருகச் செய்வோம். நீங்கள் விருத்தியடைவீர்கள். நமது உடன்படிக்கையையும் உங்களுடன் உறுதிப்படுத்துவோம்.
10 பழைய தானியங்களை உண்டு, புதிய தானியங்களுக்கு இடம் உண்டாகும்படி பழையதை விலக்குவீர்கள்.
11 உங்கள் நடுவில் நமது உறைவிடமாகிய கூடாரத்தை நிறுவுவோம். நாம் உங்களை வெறுப்பதில்லை.
12 உங்கள் கடவுளாகிய நாம் உங்கள் நடுவில் எப்போதும் இருப்போம். நீங்கள் நமது குடிகளாக இருப்பீர்கள்.
13 நீங்கள் எகிப்தியருக்கு அடிமையாயிராதபடி, அவர்கள் நாட்டிலிருந்து உங்களை விடுதலையாக்கி, உங்கள் கழுத்து விலங்குகளை முறித்தெறிந்து, உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்த உங்கள் கடவுளாகிய் ஆண்டவரே நாம்.
14 ஆனால், நீங்கள் நமக்குச் செவிகொடாமலும், நமது கட்டளையெல்லாம் அனுசரியாமலும்,
15 நமது சட்டங்களைப் பொருட்படுத்தாது நமது நீதிமுறைகளையும் புறக்கணித்து நம்மாலே கட்டளையிடப்பட்டவைகளை நிறைவேற்றாமலும் நமது உடன்படித்தையை வீணாக்குவீர்களாயின்,
16 நாம் உங்களுக்குச் செய்வது என்னவென்றால்: உடனே வறுமையால் உங்களை வாட்டி வருத்தி, உங்கள் கண்களை எரித்து, உயிரை அழித்துவிடும் காய்ச்சலால் தண்டிப்போம்; நீங்கள் விதைக்கும் விதை வீணாய்ப்போகும்; உங்கள் பகைவர்கள் அதன் வலனை உண்பார்கள்.
17 உங்களுக்கு விரோதமாய் நம்முடைய முகத்தைத் திருப்புவோமாகையால் உங்கள் பகைவர் முன் விழுவீர்கள்; உங்கள் பகைவரோ உங்களை அடிமைப்படுத்தி ஆள்வார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் நீங்கள் ஓடிப்போவீர்கள்.
18 இவையெல்லாம் நாம் செய்தும் இன்னும் நீங்கள் நமக்குக் கீழ்ப்படியாவிட்டால், உங்கள் பாவங்களின் பொருட்டு உங்களை நாம் ஏழு மடங்கு அதிகமாகத் தண்டித்து,
19 உங்கள் கல்நெஞ்சத்தின் ஆணவத்தை அடக்குவோம். உங்கள் வானத்தை இரும்பைப் போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப் போலவும் ஆக்குவோம்.
20 வீணிலே வேலை செய்வீர்கள். பூமி பலன் தராது. மரங்களும் கொடா.
21 நீங்கள் நமக்குச் செவி கொடுக்க மனமில்லாமல் நம்மை எதிர்த்து நடப்பீர்களேயாகில், நாம் உங்கள் பாவங்களின் பொருட்டு உங்களுக்கு ஏழு மடங்கு துன்பம் உங்கள் மேல் வரச் செய்வோம்.
22 உங்களுக்கு எதிராய் கொடிய மிருகங்களை ஏவிவிடுவோம். அவை உங்களையும் உங்கள் மந்தைகளையும் தின்று, உங்கள் மிருகங்களையும் குறைந்து போகச் செய்யும். உங்கள் வழிகளும் பாழாய்ப் போகும்.
23 அப்படி நாம் செய்யும் தண்டனையினாலும் நீங்கள் குணமாகாமல் நம்மை எதிர்த்து நடப்பீர்களாயின்,
24 நாமே உங்களை எதிர்த்து, உங்கள் பாவங்களின் பொருட்டு உங்களை ஏழுமடங்கு அதிகமாய்த் தண்டிப்போம்.
25 ( எங்ஙனமென்னால் ) நமது உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் வாளை உங்கள் மேல் வரச்செய்வோம். நீங்கள் நகர்களில் ஒதுங்கின பின்னும் கொள்ளை நோயை உங்கள் நடுவில் அனுப்புவோம். நீங்கள் உங்கள் பகைவர் கைவசமாவீர்கள்.
26 அதற்கு முன்பே உங்கள் அப்பம் என்னும் ஊன்று கோலை நாம் முறித்துப் போட்டிருப்போமாதலால், பத்துப் பெண்கள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பங்களைச் சுட்டு, உங்களுக்கு அவற்றை நிறுத்துக் கொடுப்பார்கள். நீங்கள் உண்டும் நிறைவு கொள்ள மாட்டீர்கள்.
27 இன்னும் நீங்கள் இவைகளாலும் குணப்படாமல் நம் பேச்சை உதறித் தள்ளி நமக்கு விரோதமாக நடப்பீர்களாயின்,
28 நாம் கடும் கோபத்துடன் உங்களுக்கு விரோதியாகி, உங்கள் பாவங்களின் பொருட்டு ஏழுவகைத் துன்பங்களால் உங்களைத் தண்டிப்போம்.
29 அப்போது நீங்கள் உங்கள் புதல்வர் புதல்வியருடைய மாமிசத்தை உண்பீர்கள்.
30 மேடை குன்றுகளின் மேல் நீங்கள் கட்டிய கோயில்களையும் அழிப்போம். அவற்றில் இருக்கும் விக்கிரகங்களையும் தவிடுபொடியாக்குவோம்.
31 அதனால் நாம் உங்கள் நகர்களைக் காடாக்கி உங்கள் ஆலயங்களைப் பாழாக்கி, உங்கள் மிக்க நறுமணத்தூப வகைகளின் வாசனையையும் இனி முகராதிருப்போம்.
32 உங்கள் நாட்டைப் பாழாக்குவோம். உங்கள் பகைவர்கள் அதில் குடியேறின பின் இதுபற்றி வியப்புறுவர்.
33 உங்களையோ நாம் புறவினத்தாரிடையே சிதறடித்து, உங்கள் பிறகாலே வாளை உருவி, உங்கள் நாட்டைக் காடாக்கி, உங்கள் நகர்களை நாசமாக்குவோம்.
34 ( நீங்கள் பகைவருடைய நாட்டிற்குக் கொண்டு போகப்பட்டபோது ) ஆள் நடமாட்டமில்லாத உங்கள் நாடு பாழாய்க் கிடக்கிற நாளெல்லாம் ஓய்வு கொண்டாடிக் களிகூரும்.
35 நீங்கள் அதில் வாழ்ந்து வந்த போது அது உங்கள் ஓய்வு நாட்களிலே இளைப்பாறவில்லையே; இப்போது அது சும்மா இருந்து ஓய்வு கொண்டாடும்.
36 உங்களில் உயிரோடு தப்பியிருப்பவர்கள் பகைவர்களின் நாட்டிலே குடியிருக்கும் போது திகிலடையும்படியாய் அவர்கள் மனத்திலே அச்சம் ஆட்கொள்ளச் செய்வோம். பறக்கும் இலையின் சத்தம் கேட்டு அவர்கள் அஞ்சி, வாளோ ( என்னவோ ) என்று வெருண்டு மிரண்டோடி, துரத்துவார் இல்லாமலே தரையில் விழுவார்கள்.
37 வாளுக்கு முன் அஞ்சி ஓடுவதுபோல் அவர்கள் ஓடி, தங்கள் சகோதரர்மேல் தாக்கி மோதி விழுவார்கள். உங்கள் பகைவர்களை எதிர்த்து நிற்க உங்களுக்குத் துணிவு இராது.
38 புறவினத் தாரிடையே நீங்கள் பிழைக்க மாட்டீர்கள். உங்கள் பகைவர்களின் நாடு உங்களை விழுங்கி விடும்.
39 இவர்களில் சிலர் உயிர் தப்பினால், அவர்கள் பகைவர்களின் நாட்டில் தங்கள் தீச் செய்ல்கள் என்னும் தீயில் வாடி வதங்கி, தங்கள் சொந்தப் பாவங்களின் பொருட்டும் முன்னோர் செய்த பாவங்களின் பொருட்டும் துன்பப்படுவார்கள்.
40 அவர்கள் நமக்கு விரோதமாய்த் துரோகம் செய்து கட்டிக் கொண்ட தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் முன்னோரின் அக்கிரமத்தையும் அறிக்கையிடும் வரை வருந்துவார்கள்.
41 ஆகையால், தங்களுடைய விருத்தசேதன மில்லாத மனதைப்பற்றி அவர்கள் நாணிவெட்கம் அடையும் வரை நாம் அவர்களுக்கு எதிரியாகி, அவர்களைப் பகைவர்களின் நாட்டிற்குக் கொண்டு போவோம். அப்போது தங்கள் அக்கிரமங்களின் பொருட்டு அவர்கள் செபம் செய்வார்கள்.
42 அந்நேரத்தில் நாம் யாக்கோபு, ஈசாக், அபிராகம் ஆகியோருடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் அவர்கள் விட்டுச் சென்றுள்ள நாட்டையும் நினைவு கூர்வோம்.
43 அவர்களாலே விடப்பட்ட பின் நாடு அவர்களின் பொருட்டுப் பாழடைந்த தன் நிலையக் குறித்துத் துக்கப்பட்டாலும், அது தன் ஓய்வு நாளைக் கொண்டாடும். அவர்களோ நம்முடைய கட்டளைகளை மீறி நமது சட்டங்களை அலட்சியப்படுத்திச் செய்த பாவங்களைப்பற்றி மன்றாடுவார்கள்.
44 அவர்கள் தங்கள் பகைவர் நாட்டில் இருக்கும்போது கூட நாம் அவர்களை முற்றிலும் வெறுக்கவுமில்லை; அவர்கள் முழுதும் அழிந்துபோகும் படிக்கும், நாம் அவர்களோடு செய்த உடன்படிக்கை வீணாய்ப் போகும்படிக்கும் நாம் அவர்களைக் கைவிடவுமில்லை. ஏனென்றால், நாம் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவரல்லவா ?
45 அவர்களுடைய கடவுளாக இருக்கும் பொருட்டுப் புறவினத்தார் பார்த்து (வியப்படைய) அவர்களை நாம் எகிப்து நாட்டிலிருந்து புறப்படச் செய்தபோது, அவர்கள் முன்னோருடன் நாம் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்வோம். நாம் ஆண்டவர் (என்றார்). ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் (உடன்படிக்கை செய்து) மோயீசன் வழியாய் விதித்தருளிய நீதிகளும் கட்டளைகளும் சட்டதிட்டங்களும் இவைகளேயாம்.
அதிகாரம் 27
1 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: ஒரு மனிதன் ஒரு சிறப்பு நேர்ச்சை செய்து தன் உயிரைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருந்தால், அவன் பின்வரும் ( மதிப்பின்படி ) விலை செலுத்தக்கடவான்.
3 அதாவது, இருபது வயது முதல் அறுபது வயதுக்கு உட்பட்ட ஆடவனாயின், அவன் பரிசுத்த சீக்கல் கணக்கின்படி ஐம்பது சீக்கல் வெள்ளி கொடுக்கக்கடவான்.
4 பெண்ணானால் முப்பது கொடுப்பாள்.
5 ஐந்து வயது முதல் இருபது வயது வரையிலுமோவென்றால், ஆடவன் இருபது சீக்கலும் பெண் பத்து சீக்கலும் செலுத்துவார்கள்.
6 ஒரு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள ஆண்பிள்ளைக்காக ஐந்து சீக்கல்களையும் பெண்பிள்ளைக்காக மூன்று சீக்கல்களையும் கொடுப்பார்கள்.
7 அறுபதும் அதற்கு மேற்பட்ட ஆடவன் பதினைந்து சீக்கல்களையும், பெண் பத்துச் சீக்கல்களையும் செலுத்தக்கடவார்கள்.
8 மதிப்புக்கேற்றபடி செலுத்த இயலாத வறியவனாயின், அவன் குருவுக்கு முன் வந்து நிற்கக்கடவான். குரு மதிப்பிட்டு, அவன் எவ்வளவு கொடுக்கத் திறனுள்ளவனென்று தீர்ப்புச் சொல்வாரோ அவ்வளவு அவன் கொடுக்கக்கடவான்.
9 ஒருவன் ஆண்டவருக்குப் பலியிடப்படத்தக்க மிருகத்தைக் கொடுப்பதாக நேர்ச்சை செய்திருந்தால் அது பரிசுத்தமானது;
10 அதை இனி மாற்றவே கூடாது. அதாவது நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதையும், கெட்டதிற்குப் பதிலாக நல்லதையும் கொடுக்கக் கூடாது. ஒருவன் ஒன்றுக்குப் பதிலாக வேறொன்றை மாற்றிக் கொடுக்கும்பொழுது மாற்றப்பட்டதும் எதற்குப் பதிலாக மாற்றப்பட்டதோ அதுவும், ஆக இரண்டுமே ஆண்டவருக்குச் சொந்தம்.
11 ஒருவன் ஆண்டவருக்குப் பலியிடத் தகாத, சுத்தமில்லாத யாதொரு மிருகத்தை நேர்ச்சை செய்திருந்தால், அதைக் குருவுக்கு முன் நிறுத்தக்கடவான்.
12 குரு அதை நல்லதென்றோ கெட்டதென்றோ முடிவு செய்து விலையைத் திட்டம் செய்வார்.
13 நேர்ச்சை செய்தவன் விலையைச் செலுத்த இசைவானாயின், மதிப்புக்குமேல் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கக்கடவான்.
14 ஒரு மனிதன் நேர்ச்சை செய்து தன் வீட்டை ஆண்டவருக்கு நேர்ந்திருந்தானாயின், குரு அது நலமானதா என்று பார்த்து எவ்வளவுக்கு மதிப்புச் சொல்வாரோ அவ்வளவுக்கு விற்கப்படும்.
15 ஆனால், நேர்ந்து கொண்டவனே அதை மீட்டுக்கொள்ள மனம் கொண்டிருந்தால், மதிப்புக்கு மேல் ஐந்தில் ஒரு பங்கையும் அவன் சேர்த்துக் கொடுத்தால் வீடு அவனுடையதாகும்.
16 ஒருவன் தனக்குச் சொந்தமான வயலை ஆண்டவருக்கு நேர்ந்திருந்தால் அதன் விதைப்புக்கு ஏற்றபடி விலை இருக்க வேண்டும். ஒரு நிலம் விதைக்க முப்பது கலம் வாற்கோதுமை செல்லுமென்றால், அந்த நிலம் ஜம்பது சீக்கல் வெள்ளி பெறும்.
17 அவன் ஜுபிலி ஆண்டுத் தொடக்க முதல் தன் வயலை நேர்ந்து கொடுத்திருந்தால் அதன் பெறுமதிக்கேற்ப அது மதிக்கப்படும்.
18 ஜுபிலி ஆண்டுக்குப் பின் அது நேர்ச்சையானதென்றால், அடுத்த ஜுபிலி ஆண்டுவரை எத்தனை ஆண்டு செல்லுமென்று பார்த்தே குரு மதிப்புச் சொல்ல வேண்டும். அவற்றிற்கு ஏற்ப விலையைக் குறைக்கக் கடவார்.
19 தன் வயலை நேர்ந்து கொண்டவனே அதை மீட்டுக் கொள்ள மனம் கொண்டிருந்தால், மதிக்கப்பட்ட விலைக்கு மேல் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுத்தால் வயல் அவனுடையதாகும்.
20 நேர்ந்து கொண்டவனே தன் வயலை மீட்டுக் கொள்ள மனமில்லாமல் வேறொருவனுக்கு விற்றிருப்பானாயின், அவன் இனிமேல் அதனை மீட்கயியலாது.
21 ஏனென்றால், ஜுபிலி ஆண்டு வரும்போது அந்த வயல் ஆண்டவருக்கு நேர்ச்சை ஆகிவிடும். இப்படிப்பட்ட சொத்து குருக்களின் உடைமையாகி விடும்.
22 ஆயினும், அது தனக்குச் சொந்தமான வயலாய் இராமல், அதைத்தானே விலைக்கு வாங்கி ஒருவன் ஆண்டவருக்கு நேர்ச்சி செய்திருந்தானாயின்,
23 குரு ஜுபிலி ஆண்டு வரையுள்ள ஆண்டுகளைக் கணித்து, அந்தக் கணக்கிற்கு ஏற்றபடி அதன் விலையைக் குறிக்கக் கடவார். அப்போது அதை நேர்ந்தவன் (விலையை) ஆண்டவருக்குச் செலுத்துவான்.
24 ஜுபிலி ஆண்டு வரும்போதோ, எவன் அந்த வயலை முதலிலே தன் சொந்தமென்று அனுபவித்துப் பிறகு விற்றிருந்தானோ அந்த முந்திய உரிமையாளனையே அது சேரும்.
25 எல்லா மதிப்பிலும் பரிசுத்த இடத்துச் சீக்கலே உபயோகிக்கப்படும். ஒரு சீக்கல் என்பது இருபது ஒபோல்.
26 தலையீற்றானவை ஆண்டவருடையவை. ஆகையால், ஒருவரும் தலையீற்றாகிய உயிர்களை நேர்ந்து ( ஆண்டவருக்கு ) அருச்சித்து ஒதுக்கக் கூடாது. மாடெனினும் ஆடெனினும் அவை ஆண்டவருடையவைகளாம்.
27 அசுத்தப் பிராணியின் தலையீற்றை அருச்சித்து ஒதுக்கினவன் அதன் மதிப்புக்கு மேலே ஐந்தில் ஒரு பங்கைக் கூடச் சேர்த்துக் கொடுத்து அதை மீட்டுக் கொள்வான். இப்படி மீட்டுக்கொள்ள அவன் இசையாதிருந்தால், அதன் மதிப்புக்கு ஏற்றபடி வேறொருவனிடம் விற்கப்படும்.
28 ஆண்டவருக்கென்று அருச்சிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட எதுவும் -- மனிதனும் சரி, மிருகமும் சரி, வயலும் சரி -- அது விற்கப்படவும், மீட்கப்படவும் கூடாது. அவ்விதமாக ஆண்டவருக்கு நேர்ச்சை செய்யப்பட்ட பொருட்களெல்லாம் மிகவும் பரிசுத்தமானவை. எனவே, அவை ஆண்டவருக்குச் சொந்தம்.
29 மனிதர்களிடமிருந்து அழிக்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட எந்த மனிதனும் மீட்கப்படக் கூடாது; கொல்லப்படவே வேண்டும்.
30 நிலங்களின் பலனிலும் மரங்களின் பழங்களிலும் பத்தில் ஒரு பங்கு ஆண்டவருக்கு உரியது. அது அவருக்குப் பரிசுத்தமானது.
31 ஆயினும், ஒருவன் தன்னுடைய பத்திலொரு பாகமானவற்றை மீட்டுக்கொள்ள மனமுள்ளவனாயின், அவற்றின் விலையையும் விலையின் ஐந்தில் ஒரு பாகத்தையும் சேர்த்துக் கொடுக்கக் கடவான்.
32 மேய்ப்பனுடைய கோலுக்குக் கீழ்ப்பட்ட ஆடு, மாடு, வெள்ளாடு முதலியவற்றில் பத்தில் ஒன்றாய் இருப்பனவெல்லாம் ஆண்டவருக்குப் பரிசுத்தமாகும்.
33 அவற்றினிடையே நல்லது, கெட்டது பற்றி அவன் ஆராயவும் வேண்டாம்; மாற்றவும் வேண்டாம். மாற்றினால், அதுவும் பதிலுக்குக் கொடுக்கப்பட்டதும் ஆகிய இரண்டுமே ஆண்டவருக்குப் பரிசுத்தம். அது மீட்கப்படலாகாது என்றருளினார்.
34 ஆண்டவர் சீனாய் மலையில் இஸ்ராயேல் மக்களுக்காக மோயீசனுக்குக் கொடுத்த கட்டளைகள் இவைகளேயாம்.