ஜென்மப் பாவத்திற்குரிய ஒரு தண்டனையாகத்தான் நாம் நம் வாழ்நாள் முழுவதும் அசுத்ததனத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. இந்தப் போராட்டத்தில் புலன்களையும், சிந்தனைகள், ஆசைகள் மற்றும் பேச்சு ஆகியவற்றையும் அடக்கியாள்வது அவசியமாயிருக்கிறது. அடக்கமான உடை உடுத்துவது, செயல்களில் கட்டுப்பாடு, நம் பொழுதுபோக்கு அம்சங்களை மிகக் கவனத்தோடு தேர்ந்தெடுப்பது ஆகியவை, நம்மிலும், பிறரிலும் பரிசுத்ததனத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவசியமானவை. ஒறுத்தல் மற்றும் சுய பரித்தியாக உணர்வு, அடிக்கடி தேவத்திரவிய அனுமானங்களிடம் தஞ்சமடைதல், இஸ்பிரீத்து சாந்துவானவருக்குக் கீழ்ப்படிதல் மற்றும் ஜெபம் ஆகியவை, இந்தப் போராட்டத்தில் போர்க் கருவிகளாகப் பயன்படுத்தப்பட வேண்டிய வழிகளாகும். நெருப்போடு விளையாடி நாம் நம்மைச் சுட்டுக் கொள்ளக் கூடாது. அசுத்ததனத்தின் பாவ சந்தர்ப்பங்களில் இருந்து கொண்டே, பாவம் செய்யாமலிருக்க நம்மால் முடியாது. தாழ்ச்சியோடும், நம் சொந்த பலத்தில் நம்பிக்கை வையாமலும் நாம் பாவ சந்தர்ப்பங்களிலிருந்து பறந்தோடிப் போக வேண்டும். ஏனெனில் பரிசுத்த வேதாகமம் கூறுவது போல, “ஆபத்தை நேசிக்கிறவன் அதிலேயே மடிவான்” (சர்வப் பிரசங்கி 3:27).
தன்னிச்சையான கெட்ட சிந்தனைகள், அவை எவ்வளவுதான் அசுத்தமானவையாகவும், அருவருக்கத் தக்கவையாகவும் இருந்தாலும், அவை பாவங்கள் அல்ல. அவற்றிற்கு சம்மதிப்பதால் மட்டுமே நாம் பாவம் கட்டிக் கொள்கிறோம். சேசுநாதருடையவும், மாமரியினுடையவும் திருப் பெயர்களைக் கூவியழைத்துக் கொண்டிருக்கும் வரையிலும் நாம் ஒருபோதும் தோற்றுப்போக மாட்டோம். பாவ சோதனைகளின் தாக்குதல்களின் போது, “சர்வேசுரனை நோகச் செய்வதை விட சாவதே மேல்” என்னும் நம்முடைய பிரதிக்கினையைப் புதுப்பித்துக் கொள்வது உத்தமப் பலன் தரும் காரியம். அடிக்கடி, பரிசுத்த தீர்த்தத்தால் நம்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்வதும் ஒரு நல்ல வழக்கம். நம் பாவ சோதனைகளை நம் ஆன்ம குருவிடம் வெளிப்படுத்துவது நமக்கு மிக உதவியாக இருக்கும். ஆயினும், இவை எல்லாவற்றையும் விட ஜெபமே மிகச் சிறந்த தீர்வாக இருக்கிறது. சேசு, மரியாயிடம் உதவி கேட்டுக் கூவியழைப்பதும் இந்த ஜெபங்களோடு எப்போதும் சேர்ந்திருக்க வேண்டும்.