அதிகாரம் 01
1 பென்யமீன் நாட்டில் அநாத்தோத்து என்னும் ஊரில் இருந்த அர்ச்சகர்களுள் ஒருவராகிய எல்சியாஸ் என்பவரின் மகனான எரெமியாசின் வார்த்தைகள்.
2 யூதாவின் அரசனும் அமோனின் மகனுமான யோசியாசின் நாட்களில், அவனது அரசாட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில் ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது;
3 யூதாவின் அரசனும், யோசியாசின் மகனுமாகிய யோவாக்கீன் நாட்களிலும் அது அருளப்பட்டது, யூதாவின் அரசனும் யோசியாசின் மகனுமான செதேயாசின் பதினோராம் ஆட்சியாண்டின் முடிவுரையிலும் யெருசலேம் நகரத்தார் அடிமைகளாகக் சொண்டு போகப்பட்ட ஐந்தாம் மாதம் வரையில் ஆண்டவருடைய வாக்கு அவருக்கு அருளப்பட்டது.
4 ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது.
5 உன் தாய் வயிற்றில் உன்னை உருவாக்கு முன்பே நாம் உன்னை அறிந்திருந்தோம்; கருப்பையினின்று நீ வெளிப்படு முன்பே உன்னை நாம் அர்ச்சித்திருக்கிறோம்; மக்களினங்களுக்கு இறைவாக்கினாராக ஏற்படுத்தினோம்."
6 நான்: "ஐயோ, ஆண்டவராகிய இறைவா, எனக்குப் பேசத் தெரியாது; நான் சிறுபிள்ளை!" என்றேன்.
7 ஆனால் ஆண்டவர் சொன்னார்: "நான் சிறுபிள்ளை' என்று சொல்லாதே. ஏனெனில் நாம் யாரிடம் உன்னை அனுப்புகிறோமோ அவர்களிடம் நீ செல்வாய்; நாம் எதைச் சொல்லக் கற்பிக்கிறோமோ அதை நீ அறிவிப்பாய்;
8 நீ அவர்கள் முன் அஞ்சாதே; நாம் உன்னோடு இருக்கிறோம்; உன்னை அவர்களிடமிருந்து விடுவிப்போம் என்கிறார் ஆண்டவர்."
9 ஆண்டவர் தமது கையை நீட்டி என் வாயைத் தொட்டு, "இதோ நம் வார்த்தைகளை உனது வாயில் ஊட்டினோம்;
10 பிடுங்கிப் பறிக்கவும், இடித்துத் தகர்க்கவும், அழித்து ஒழிக்கவும், கவிழ்த்து வீழ்த்தவும், கட்டி உயர்த்தவும், நட்டு வைக்கவும் மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் இதோ உன்னை ஏற்படுத்தியிருக்கிறோம்" என்றார்.
11 ஆண்டவருடைய வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: "எரெமியா, என்ன காண்கிறாய்?" என, நான், "விழிப்பாயிருக்கும் மரக்கிளையைக் காண்கிறேன்" என்றேன்.
12 அதற்கு ஆண்டவர்: "நீ கண்டது சரியே; அவ்வாறே நமது வார்த்தை நிறைவேறும்படி நாமும் விழிப்பாயிருப்போம்" என்று சொன்னார்.
13 ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை எனக்கு அருளப்பட்டது: "நீ காண்பது என்ன?" என்று கேட்டார். "பொங்கிக் கொதிவரும் பானை; அது வடக்கிலிருந்து வருகிறது" என்று சொன்னேன். அதற்கு ஆண்டவர் சொன்னார்:
14 வடக்கிலிருந்தே இந்நாட்டு மக்கள் அனைவர் மேலும் தீங்கு பொங்கிப் பாயும்.
15 இதோ வடக்கிலுள்ள எல்லா அரசுகளின் மக்களையும் அழைத்து வரப்போகிறோம், என்கிறார் ஆண்டவர்; அந்த அரசர்கள் அனைவரும் வந்து ஒவ்வொருவனும் யெருசலேம் நகர வாயில்களின் முன்பும், அதன் மதிற் சுவர்களைச் சுற்றிலும், யூதாவின் நகரங்கள் அனைத்தின் எதிரிலும், தத்தம் அரியணையை அமைத்துக் கொள்வார்கள்.
16 அப்பொழுது, நம்மை விட்டகன்று அந்நிய தெய்வங்களுக்குத் தூபங் காட்டி தங்கள் கைவேலைப்பாடான சிலைகளை வழிப்பட்டவர்களுக்கு எதிராக, அவர்களுடைய அக்கிரமங்களுக்கெல்லாம் தீர்ப்புக் கூறப் போகிறோம்.
17 நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள்; எழுந்து போய் நாம் உனக்காகக் கட்டளையிடும் எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவி. அவர்கள் முன்னால் அச்சம் கொள்ளாதே, நாமும் உன்னை அஞ்ச விடோம்;
18 இதோ இன்று நாடெங்கணும் உன்னை, யூதாவின் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் நாட்டின் மக்களுக்கும், அரணுள்ள நகராகவும் இருப்புத் தூணாகவும்,வெண்கல மதிற் சுவராகவும் ஏற்படுத்தினோம்.
19 அவர்கள் உனக்கெதிராய்ப் போராடுவார்கள்; ஆயினும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்; ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம், உன்னை மீட்டுக் கொள்வோம், என்கிறார் ஆண்டவர்".
அதிகாரம் 02
1 ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 யெருசலேம் நகரத்தார் அனைவருக்கும் கேட்கும்படி நீ போய் அறிவி: ஆண்டவர் கூறுகிறார்: உன் இளமையின் அன்பை நினைவு கூர்கிறோம், பத்தினிக்குரிய உன் அன்பை அறிவோம், விதைக்கப்படாத இடமாகிய பாலைநிலத்தில் நம்மை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நாம் நினைவு கூர்கிறோம்.
3 இஸ்ராயேல் இனம் ஆண்டவருக்கென அர்ச்சிக்கப்பட்டதாகவும், அவருடைய அறுவடையின் முதற்கனியாகவும் இருந்தது; அதை உண்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள்; தீங்கு அவர்களைச் சூழ்ந்து கொண்டது, என்கிறார் ஆண்டவர்
4 யாக்கோபின் வீட்டாரே, இஸ்ராயேல் வீட்டாரின் எல்லாக் குடும்பங்களே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்:
5 ஆண்டவர் கூறுகிறார்: உங்கள் தந்தையர் நம்மிடம் என்ன குறை கண்டார்கள்? வீணான சிலைகளை வழிபட்டு வீண் ஆனார்கள்?
6 நம்மை எகிப்து நாட்டினின்று விடுவித்து, பாலை நிலத்தின் வழியாகவும், கரடு முரடானதும் வறண்டதுமான நாட்டிலும், நீரற்றதும் இருள் சூழ்ந்ததுமான வழியிலும், மனிதன் வாழாததும் நடமாடாததுமான நாட்டிலும் நம்மை நடத்தி வந்த ஆண்டவர் எங்கே?' என்று உங்கள் தந்தையர் கேட்டார்களில்லையே!
7 செழிப்பான நாட்டுக்கு உங்களைக் கூட்டி வந்தோம்; நீங்கள் உண்டு இன்பமுறக் கூட்டி வந்தோம். ஆனால், நீங்கள் அங்கே போய்ச் சேர்ந்ததும் நமது நாட்டைத் தீட்டுப்படுத்தினீர்கள்; நமது உரிமைச் சொத்தை அருவருப்பாக்கினீர்கள்.
8 அர்ச்சகர்கள்கூட, 'ஆண்டவர் எங்கே?' என்று கேட்கவில்லையே! நம் திருச்சட்டத்தைக் கற்றவர்களும் நம்மை அறிந்தார்கள் அல்லர்; மேய்ப்பர்கள் நம்மை எதிர்த்தார்கள்; இறைவாக்கினர்கள் பாகால் பேரால் பேசினார்கள்; பயனற்ற பொருட்களைப் பின்பற்றிச் சென்றார்கள்.
9 ஆதலால் இன்னும் உங்களோடு வழக்காடுவோம். உங்கள் பிள்ளைகளின் பின்னைகளோடும் வழக்காடுவோம்;
10 சேத்தீம் தீவுக்களுக்குப் போய்ப் பாருங்கள், சேதாருக்கு ஆளனுப்பிப் கேளுங்கள், இத்தகைய செயல் அங்குண்டோ, பாருங்கள்.
11 அந்த மக்கள் வழிபடுவது உண்மையில் கடவுளர் அல்லர்; இருப்பினும், அவர்கள் தங்கள் தெய்வங்களை மாற்றிக் கொண்டாடாகளோ? ஆனால், நம் மக்கள் தங்கள் மகிமையை, பயனற்ற ஒன்றுக்காக மாற்றி விட்டனர்.
12 வானங்களே, இதைக் கண்டு வியப்புடையுங்கள்; மிகவும் அஞ்சித் திடுக்கிடுங்கள், என்கிறார் ஆண்டவர்.
13 நம் மக்கள் இரண்டு தீமைகள் செய்தார்கள்: உயிருள்ள நீர் சுரக்கும் ஊற்றாகிய எம்மைக் கைவிட்டனர், நீரை வைத்திராத ஓட்டைத் தொட்டிகளைத் தங்களுக்கெனக் கட்டிக் கொண்டனர்.
14 இஸ்ராயேல் ஓர் அடிமையோ? வீட்டில் பிறந்த ஓர் ஊழியனோ? பின்னர் ஏன் மற்றவர்களுக்கு இரையாக வேண்டும்?
15 அவனுக்கு எதிராய்ச் சிங்கங்கள் சீறுகின்றன, பயங்கரமாய் சீறுகின்றன; அவன் நாட்டைப் பாழாக்கி விட்டன; அவன் நகரங்கள் சுட்டெரிக்கப்பட்டன; அங்கே குடியிருப்பார் யாருமில்லை.
16 மெம்பீஸ், தப்னேஸ் நகரத்தார் உன்னை அடி முதல் முடி வரையில் நொறுக்கினார்கள்.
17 உன்னை வழி நடத்திச் செல்லும் போதே உன் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிட்டதால் அன்றோ இது நேர்ந்தது?
18 இப்பொழுது நைல் நதி நீரைக் குடிக்க நீ எகிப்துக்குப் போவதால் பயனென்ன? யூப்ரட்டீஸ் நதி நீரைக் குடிக்க நீ அசீரியாவுக்குப் போவதால் பயனென்ன?
19 உன் தீய செயலே உன்னைக் குற்றம் சாட்டும், எம்மை நீ விட்டகன்ற குற்றமே உன்னைக் கண்டிக்கும்; உன் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிடல் எத்துணைத் தீயது, எத்துணைக் கசப்பானது என்பதை நீ கண்டுணர்ந்து கொள். எம்மைப்பற்றிய அச்சம் உன்னிடம் இல்லையே, என்கிறவர் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர்.
20 நெடுநாளுக்கு முன்பே உனது நுகத்தடியை ஒடித்தாய், உனது அன்புக் கயிற்றை அறுத்தாய், 'நான் ஊழியஞ் செய்வேன்' என்று சொன்னாய், ஆம், உயர்ந்த குன்றுகள் தோறும், தழைத்த மரங்களின் நிழல்களிலெல்லாம், விலைமாதைப் போல விபசாரம் செய்து வந்தாயே.
21 நல்ல விதையினின்று முளைத்த திராட்சைக் கொடியாய், உன்னைத் தேர்ந்தெடுத்து நட்டு வைத்தோம்; பின்னர் எவ்வாறு நீ கெட்டுப் போனாய்? எவ்வாறு நீ காட்டுத் திராட்சையானாய்?
22 நீ உன்னை வெள்ளை உப்பினால் கழுவினாலும், சவுக்காரப் புல்லினால் தேய்த்து முழுகினாலும் உன் அக்கிரமத்தின் கறை நம் கண் முன்பாக மறைவதில்லை, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
23 நான் தீட்டுப்படவில்லை, நான் பாகாலைத் தொழவில்லை' என்று நீ சொல்வதெப்படி? இதோ, கணவாயில் உன் கால் சுவடுகளைப் பார்; நீ செய்ததென்ன என எண்ணிப்பார்; இங்கு மங்கும் குதித்தோடும் பெண்ணொட்டகம் நீ;
24 பாலைநிலத்திலே பழகினதும், தன் இச்சையின் மத வெறியில் காம வாடை பிடிக்கிறதுமான காட்டுக் கழுதை நீ! அதன் காமத்தைக் கட்டுப்படுத்துபவன் யார்? அதனை யாரும் தேடி வருந்த வேண்டியதில்லை; அதன் அசுத்த நிலைமையில் எளிதில் காண்பார்கள்.
25 நாம்: 'செருப்புத் தேய ஓடாதே, உன் தொண்டை வறள அலையாதே' என்றோம். நீயோ: 'நம்பிக்கையெல்லாம் அற்றுப் போயிற்று, உமது வார்த்தையை ஒரு போதும் கேளேன், அந்நியர் மேல் ஆசை கொண்டேன், அவர்கள் பின்னே ஓடுவேன்' என்றாய்.
26 திருடன் அகப்படுகிற போது எவ்வாறு மானபங்கமடைவானோ, அவ்வாறே இஸ்ராயேல் மக்களும், அவர்களுடைய அரசர்களும் தலைவர்களும், அர்ச்சர்களும் இறைவாக்கினர்களும் மானபங்கமடைவர்.
27 ஒரு மரத்தை நோக்கி: 'நீ என் தந்தை' ஒரு கல்லை நோக்கி: "நீ என்னைப் பெற்றவள் என்று சொல்லி, அவற்றுக்கு முகத்தைத் திருப்பி நமக்கு முதுகையே காட்டுகின்றனர்; ஆனால் தங்கள் துன்ப வேளையில்: 'ஆண்டவரே எழுந்திரும், எங்களை விடுவியும்' என்கிறார்கள்.
28 நீ உண்டாக்கிக் கொண்ட தெய்வங்கள் எங்கே? உன் இடையூறு காலத்தில், முடிந்தால் அவர்கள் எழுந்து உன்னை மீட்கட்டுமே; யூதா நாடே, உன் பட்டணங்கள் எத்தனையோ, உனக்கு அத்தனை தெய்வங்கள் இருக்கிறார்கள்
29 நமக்கெதிராய் நீங்கள் முறையிடுவானேன்? நீங்கள் அனைவரும் நம்மைக் கைவிட்டீர்கள், என்கிறார் ஆண்டவர்.
30 நாம் உங்கள் மக்களைத் தண்டித்தும் பயனில்லை; அவர்கள் தண்டனையால் திருந்தினார்கள் அல்லர்; சீறியெழும் சிங்கம் போன்றது உங்கள் இனம், உங்கள் வாளே உங்கள் இறைவாக்கினர்களை ஒழித்தது.
31 மக்களே, ஆண்டவருடைய வாக்கியத்தைக் கேளுங்கள்: நாம் இஸ்ராயேலுக்குப் பாலை நிலமா? அல்லது இருள் அடைந்த பூமியா? நம் மக்கள்: 'உம்மை விட்டு அகன்றோம், இனி என்றும் உம்மிடம் திரும்பி வரமாட்டோம்' என்று சொல்லுவானேன்?
32 ஒரு கன்னிப்பெண் தன் ஆபரணங்களை மறப்பாளா? மணப்பெண் தன் போர்வையை மறப்பதுண்டா? ஆயினும், நம் மக்கள் நம்மை நெடுநாளாய் மறந்து விட்டனர்.
33 காதலர்களைத் தேடுவதில் உனக்கு எவ்வளவு திறமை! உன் வழிகளைக் கெட்ட பெண்களுக்கும் கற்றுக்கொடுத்தாயே!
34 மாசற்ற ஏழைகளின் இரத்தக் கறை உன் முன்றானையில் படிந்திருக்கின்றது. அது கன்னமிட்டவனைக் கொன்ற இரத்தமன்று.
35 நீயோ, 'நான் குற்றமற்றவன், என்னிடம் மாசுமில்லை; ஆதலால் உம் கடுஞ்சினம் என்னை விட்டகன்று விட்டது' என்கிறாய். 'நான் குற்றவாளியல்ல' என்று நீ சொன்னதால் இதோ, நாம் உன்னை தீர்ப்புக்குக் கொண்டு வருவோம்.
36 எவ்வளவு எளிதாக நீ உன் நெறிகளை மாற்றிக்கொள்கிறாய்! அசீரியாவால் நீ அவமானம் பட்டது போல், எகிப்தாலும் அவமானப்படுவாய்.
37 உன் கைகளைத் தலை மேல் வைத்துக் கொண்டு தான் அந்நாட்டை விட்டும் திரும்பி வருவாய்; உனது நம்பிக்கைக்கு ஆதாரமானவர்களை ஆண்டவர் நொறுக்கி விட்டதால் உனக்குப் பயன் ஒன்றுமிராது."
அதிகாரம் 03
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: "பெண் ஒருத்தி தன் கணவனால் தள்ளுண்டு அவனை விட்டகன்று வேறு ஒருவனை மணம் புரிவாளாகில், முந்தினவன் அவளிடம் திரும்பி வருவானோ? அந்தப் பூமி கெட்டுத் தீட்டுப்பட்டுப் போகவில்லையா? பல காதலர்களோடு நீ விபசாரம் செய்தாய், ஆயினும் நம்மிடம் திரும்பி வரமாட்டாயா? என்கிறார் ஆண்டவர்.
2 உன் கண்களை ஏறெடுத்துப்பார்; நீ விபசாரம் பண்ணாத இடமெது? வழி ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் அரேபியனைப் போல் உன் காதலர்களை எதிர்பார்த்துக் கொண்டு வழிகளில் உட்கார்ந்து காத்திருந்தாய்; உன் விபசாரங்களாலும் தீச்செயல்களாலும் பூமியைத் தீட்டுப்படுத்தினாய் அன்றோ?
3 ஆகையால் நாட்டில் மழை பெய்யாமல் போயிற்று, வசந்த கால மழை வரவில்லை. உன் முகம் இன்னும் விலைமாதின் முகம் போல் இருக்கிறது; நாணம் என்பதே உனக்கில்லை.
4 இப்போது தான் நீ நம்மை நோக்கி, 'நீரே என் தந்தை, நீரே என் கன்னிமையின் கணவர்,
5 நீர் என்றென்றைக்கும் கோபமாயிருப்பீரா? கடைசி வரையில் சினம் நீடிக்குமா?' என்கிறாய். இதோ, நீயே இவ்வாறு சொன்னாய்; ஆனால் உன்னால் இயன்ற வரையில் தீமைகளையே செய்தாய்."
6 யோசியாஸ் அரசன் நாட்களில் ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "பிரமாணிக்கமற்ற இஸ்ராயேல் என்னும் மங்கை என்ன செய்தாள், பார்த்தாயா? தன் விருப்பம் போல் உயர்ந்த மலை தோறும், தழைத்த மரத்தின் அடியிலெல்லாம் வேசித்தனம் பண்ணினாள்.
7 இவை யாவும் அவள் செய்த பிறகு, நம்மிடம் திரும்பி வருவாள் என்று நாம் எண்ணினோம்; ஆயினும் அவள் திரும்பி வரவில்லை; இதை அவளுடைய உண்மை தவறிய சகோதரி யூதா கண்டாள்:
8 அந்தப் பிரமாணிக்கமற்ற இஸ்ராயேல் செய்த எல்லா விபசாரங்களுக்காகவும், நாம் அவளை வெறுத்துத் தள்ளி அவளுக்கு மணமுறிவுச் சீட்டைக் கொடுத்தனுப்பினோம்; அதையும் அவள் பார்த்திருந்தாள்; பார்த்திருந்தும் அவளுடைய உண்மை தவறிய சகோதரி யூதா அஞ்சவில்லை; அதற்கு மாறாக, அவளும் விபசாரம் செய்தாள்.
9 விபசாரம் அவளுக்குத் தண்ணீர் பட்ட பாடாக இருந்ததால், கல்லோடும் மரத்தோடும் விபசாரம் செய்து நாட்டைத் தீட்டுப்படுத்தினாள்.
10 இவையெல்லாம் செய்த பிறகும் இஸ்ராயேலின் உண்மை தவறிய சகோதரியான யூதா முழு உள்ளத்தோடு நம்மிடம் திரும்பி வரவில்லை. திரும்பி வந்து விட்டதாக வெளிக்கு நடித்தாள், என்கிறார் ஆண்டவர்."
11 அப்பொழுது ஆண்டவர் எனக்குச் சொன்னார்: இருவரையும் ஒத்திட்டுப் பார்த்தால், பிராமணிக்கமற்ற இஸ்ராயேல் உண்மை தவறிய யூதாவைப் போல் அவ்வளவு குற்றமுள்ளவள் அல்லள்.
12 ஆதலால் நீ வடக்கு முகமாய்த் திரும்பி உரத்த குரலில் இந்த வார்த்தைகளை அறிவி: "ஆண்டவர் கூறுகிறார்: பிரமாணிக்கமற்ற இஸ்ராயேலே, திரும்பி வா; நீ வந்தால் நாம் முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டோம்; ஏனெனில் நாம் இரக்கமுள்ளவர், எப்போதும் கோபமாயிரோம், என்கிறார் ஆண்டவர்.
13 நீ செய்த துரோகத்தை ஒத்துக்கொள், போதும்: உன் கடவுளாகிய ஆண்டவருக்குத் துரோகம் செய்தாய், பச்சை மரத்தடிதோறும் ஓடி அந்நிய தெய்வங்களோடு விபசாரம் செய்தாய், நம் சொல்லைக் கேட்கவில்லை.
14 "பிரமாணிக்கமற்ற பிள்ளைகளே, திரும்பி வாருங்கள்;ஏனெனில் நாமே உங்கள் தலைவர்: உங்களில் ஒருவன் ஒரு பட்டணத்தினின்றும், இருவர் ஒரு குடும்பத்திலிருந்தும் வந்த போதிலும், நாம் உங்களைச் சீயோனில் கொண்டு போய்ச் சேர்ப்போம்.
15 நமது இதயத்திற்கேற்ற ஆயர்களை உங்களுக்குக் கொடுப்போம்; அவர்கள் உங்களுக்கு அறிவையும் ஞானத்தையும் ஊட்டுவார்கள்.
16 நீங்கள் பூமியில் பெருகிப் பலுகிய பின்னர், 'இதோ ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழை' என்று சொல்லமாட்டார்கள்; அது அவர்கள் நினைவில் இராது, ஞாபகத்திற்கும் வராது; அதைக் குறித்து விசாரித்தாலும் இல்லை; இனி ஒரு முறை அது நிகழவும் மாட்டாது, என்கிறார் ஆண்டவர்.
17 அக்காலத்தில் யெருசலேமை ஆண்டவருடைய அரியணை என்பார்கள், ஆண்டவர் பேரால் எல்லா இனத்தாரும் யெருசலேமில் வந்து கூடுவார்கள்; அதற்குப் பிறகு தங்கள் தீய இதயத்தின் கெட்ட நாட்டத்தைப் பின்பற்ற மாட்டார்கள்.
18 அந்நாட்களில் யூதாவின் வீட்டார், இஸ்ராயேல் வீட்டாரோடு சேர்ந்துகொள்வர்; இரு வீட்டாரும் வடநாட்டை விட்டு, நாம் அவர்கள் தந்தையர்க்குக் கொடுத்த நாட்டுக்கு வருவர்.
19 மனந்திரும்புங்கள்: "உன்னை எவ்வாறு நம் புதல்வர்களோடு சேர்க்கலாம், இன்ப நாட்டை மக்களினங்களின் உரிமைச் சொத்துகளை விட மிக அழகான நாட்டை உனக்கு எவ்வாறு தரலாம் என்றெல்லாம் நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்; 'என் தந்தை' என என்னைக் கூப்பிடுவாய் என்றும், இனி ஒருநாளும் நம்மைப் பின்பற்றத் தவறமாட்டாய் என்றும் நாம் எதிர்பார்த்தோம்.
20 ஆனால், பிரமாணிக்கமற்ற மனைவி கணவனைக் கைவிடுவது போல், இஸ்ராயேல் வீடே, நீ நமக்குப் பிரமாணிக்கந் தவறினாய், என்கிறாய் ஆண்டவர்."
21 இஸ்ராயேல் மக்களின் அழுகைக் குரலும், வேண்டலும் வழிகளிலெல்லாம் கேட்கிறது; ஏனெனில் அவர்கள் கெட்ட வழியில் நடந்து, தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தார்கள்.
22 பிரமாணிக்கம் தவறிய மக்களே, மனந்திரும்பி வாருங்கள்; நாம் உங்கள் பிரமாணிக்கமின்மையைக் குணமாக்குவோம்." "இதோ, நாங்கள் உம்மிடம் திரும்பி வருகிறோம், ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் நீரே.
23 நாங்கள் குன்றுகள் மேலும் மலைகள் மேலும் வணங்கியவை யாவும் பொய்த் தெய்வங்கள்; எங்கள் கடவுளாகிய ஆண்டவரிடத்தில் தான் இஸ்ராயேலின் மீட்பு இருக்கிறது; இது உண்மையிலும் உண்மை.
24 எங்கள் இளமை முதல் பார்த்து வருகிறோம்; வெட்கத்துக்குரிய சிலை வழிபாடு தான், எங்கள் தந்தையார் உழைத்துச் சேர்த்தவற்றையும், அவர்களுடைய ஆடுகளையும் மாடுகளையும், அவர்களின் புதல்வர்களையும் புதல்வியரையும், விழுங்கி விட்டது.
25 வெட்கமே எங்கள் படுக்கை; அவமானமே எங்கள் போர்வை; ஏனெனில் இளமை முதல் இன்று வரை நாங்களும் எங்கள் முன்னோர்களும், எங்கள் கடவுளாகிய ஆண்டவரின் முன்னிலையில் தீங்கு செய்தோம்; எங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வாக்கை நாங்கள் கேளாமற் போனோம்" என்பார்கள்,
அதிகாரம் 04
1 ஆண்டவர் கூறுகிறார்: "இஸ்ராயேலே, நீ திரும்பி வர விரும்பினால் நம்மிடமே திரும்பி வர வேண்டும். நமது முன்னிலையிலிருந்து அருவருப்பானவற்றை எடுத்து விடு; அப்போது நீ தயங்கமாட்டாய்.
2 நீ 'உயிருள்ள ஆண்டவர் மேல் ஆணை' என்று உண்மையாயும், நீதியோடும் நேர்மையோடும் ஆணையிடு; அப்போது வேற்றினத்தார் அவரில் தங்களுக்கு ஆசி பெறுவார்; அவரிலேயே அவர்கள் பெருமை பாராட்டுவர்".
3 ஏனெனில் யூதாவின் மக்களுக்கும் யெருசலேமில் வாழ்கிறவர்களுக்கும் ஆண்டவர் கூறுகிறார்: "உங்கள் நிலத்தைப் புதுப்பியுங்கள்; முட்செடிகள் மீது விதைக்க வேண்டாம்;
4 யூதாவின் மக்களே, யெருசலேமின் குடிகளே, ஆண்டவருக்காக உங்களை விருத்தசேதனம் செய்யுங்கள்; உங்கள் இதயத்தின் நுனித்தோலை அகற்றி விடுங்கள்; இல்லையேல் உங்கள் தீய எண்ணங்களின் காரணமாய், நமது கடுங்கோபம் நெருப்புப் போலக் கிளம்பும்; அப்போது அதனை அவிக்க எவராலும் முடியாது."
5 "ஒன்று சேருங்கள்; கோட்டைகள் அமைந்த பட்டணங்களில் நுழைந்து கொள்வோம்' என்று யூதாவுக்கும், யெருசலேமுக்கும் அறிவியுங்கள்; உரக்கக் கூவியும், எக்காளத்தின் முழக்கத்தாலும் நாடெங்கும் அதைத் தெரியப்படுத்துங்கள்.
6 சீயோனில் கொடியேற்றுங்கள், தப்பியோடுங்கள், நிற்கவேண்டாம்; ஏனேனில் வடக்கிலிருந்து தீமையையும் பெரும் அழிவையும் கொண்டு வருகிறோம்.
7 சிங்கம் தன் குகையை விட்டுப் புறப்படுகிறது; மக்களைக் கொள்ளையடிக்கக் கொடியவன் கிளம்பி விட்டான்; உன் நாட்டைக் காடாக்க தன்னிடத்திலிருந்து வெளிப்பட்டுவிட்டான்; உன் நகரங்கள் வாழ்வாரற்றுப் பாழாகும்.
8 ஆதலால் கோணி ஆடை உடுத்திக்கொள்ளுங்கள், அழுது புலம்புங்கள், அலறிக் கதறுங்கள்; ஏனெனில், ஆண்டவரின் கோபாக்கினி நம்மை விட்டு இன்னும் விலகவில்லை.
9 அந்நாளில் அரசன் அறிவு மயங்கும், தலைவர்களின் மனம் மருளும், அர்ச்சகர்கள் திகைத்து நிற்பார்கள், இறைவாக்கினர்கள் மருண்டு போவார்கள், என்கிறார் ஆண்டவர்."
10 அப்பொழுது நான்: "ஆண்டவராகிய இறைவனே, மெய்யாகவே இந்த மக்களையும் யெருசலேமையும் நீர் முற்றிலும் ஏமாற்றிவிட்டீர்; 'நீங்கள் நலமாயிருப்பீர்கள்' என்று சொன்னீர்; இதோ அவர்களுடைய உயிரைக் குடிக்க வாள் வந்து விட்டதே!" என்றேன்.
11 அக்காலத்தில் இந்த மக்களும் யெருசலேமும் கேள்விப்படுவார்: "நம் மக்கள் என்னும் மகளை நோக்கிப் பாலைநிலத்தின் மொட்டை மேடுகளிலிருந்து அக்கினிக் காற்று வீசும்; அது தூற்றவும், தூய்மைப்படுத்தவும் பயன்பட வருங் காற்றன்று;
12 நமது கட்டளையால் வரும் அச்சுறுத்தும் காற்று. இப்பொழுது நாமே பேசுகிறோம்; அவர்கள் மேல் தீர்ப்புக் கூறுகிறோம்."
13 இதோ அவன் கார் மேகங்களைப்போல வருகிறான், அவனுடைய தேர்கள் புயல் மேகங்களைப் போலப் புறப்பட்டு வருகின்றன; அவனுடைய குதிரைகள் கழுகினும் விரைவாய்ப் பறந்து வருகின்றன; ஐயோ, நமக்குக் கேடு! நாமெல்லாம் அழிந்தோம்!
14 யெருசலெமே, நீ தப்பிக்கொள்ள வேண்டுமானால், உன் உள்ளத்தில் படிந்த பாவக் கறையைக் கழுவு; இன்னும் எத்துணைக் காலத்திற்கு, உன் தீய எண்ணங்கள் உன்னிடம் குடி கொண்டிருக்கும்?
15 ஏனெனில், தாண் நகரிலிருந்து ஒரு குரல் அறிவிக்கிறது; எப்பிராயீம் மலைமேலிருந்து தீமையை முன்னறிவிக்கிறது.
16 அவன் வருகிறான் என்று வேற்று நாட்டாருக்கு எச்சரியுங்கள்; யெருசலேமுக்குச் சொல்லுங்கள்: "தூர நாட்டிலிருந்து போர் வீரர்கள் புறப்பட்டு வருகிறார்கள், யூதாவின் நகரங்களுக்கு எதிராகக் கத்துகிறார்கள்,
17 அவர்கள் கழனிக் காவலாளரைப் போல யெருசலேமை வளைத்துக் கொண்டார்கள்; ஏனெனில் அதன் குடிகள் நம் கோபத்தை மூட்டிவிட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
18 உன் செயல்களும் சிந்தனைகளுமே உன்மேல் இவற்றை வருவித்தன, இதுவே உன் அழிவு, இது மிகவும் கசப்பானது, உன் இதயத்தை ஊடுருவிப் பாய்ந்துவிட்டது."
19 என் குலை நடுங்குகிறது, என் நெஞ்சம் பதைக்கிறது, என் இதயம் என்னில் துடிக்கின்றது; என்னால் வாளாவிருக்க முடியவில்லையே! எக்காளம் ஊதுவது என் காதில் விழுகிறது, போர் இரைச்சலும் கேட்கிறது.
20 துன்பத்தின் மேல் துன்பம் வருகிறது; நாடெல்லாம் காடாகப் பாழானது; என் கூடாரங்களும் இருப்பிடங்களும் திடீரெனத் தகர்ந்து போயின.
21 எதுவரையில் மாற்றான் கொடியைப் பார்த்திருப்பேன்? எதுவரையில் எக்காளச் சத்தத்தைக் கேட்டிருப்பேன்?
22 நம் மக்கள் அறிவிலிகள், நம்மை அறிகிறதில்லை; அவர்கள் ஞானமும் புத்தியும் இல்லாத பிள்ளைகள்; தீமை செய்வதில் வல்லவர்கள், நன்மை செய்யவோ அறியாதவர்கள்."
23 நான் பூமியைப் பார்த்தேன், அது பாழாகி வெறுமையாகிவிட்டது; வானத்தை அண்ணாந்து பார்த்தேன், அங்கு ஒளியே இல்லை;
24 மலைகளைப் பார்த்தேன், இதோ பெரும் அதிர்ச்சி; குன்றுகள் யாவும் நடுங்குகின்றன;
25 உற்று நோக்கினேன், மனிதன் ஒருவனையும் காணோம்; பறவையினம் என்பதோ பறந்தோடிப் போயிற்று.
26 இன்னும் பார்த்தேன், செழிப்பான நாடு சுடுகாடாயிற்று; ஆண்டவரின் முன்னிலையில், அவரது கோபத் தீயால் அதன் பட்டணங்கள் யாவும் பாழாயின.
27 ஏனெனில், ஆண்டவர் கூறுகிறார்: "நாடு முழுவதும் பாழாகும்; ஆயினும் அதனை முற்றிலும் பாழாக்கி விடமாட்டோம்;
28 இதற்காகப் பூமி ஓலமிட்டழும், வானம் துயரப்படும்; நாம் சொல்லி விட்டோம்; நாம் தீர்மானித்து விட்டோம்; அதற்காக நாம் வருந்த மாட்டோம்; தீர்மானத்தை மாற்றவும் மாட்டோம்."
29 குதிரை வீரர் வரும் சத்தத்தைக் கேட்டும், வில்லெறியும் வீரர்கள் வருவதைக் கண்டும், பட்டணத்தார் அனைவரும் ஓட்டமெடுத்தார்கள்; முட்புதர்களுக்குள் ஓடி மறைந்தார்கள்; பாறைகள் மீது ஏறினார்கள்; பட்டணமெல்லாம் வெறுமையாயிற்று, அவற்றில் குடியிருப்போர் யாருமில்லை.
30 நீயோ, பாழடைந்தபின் என்ன செய்வாய்? நீ பட்டாடைகளை உடுத்திப் பொன்னாபரணங்களைப் பூட்டி, கண்களுக்கு மை தீட்டி அணி செய்வதால் பயனென்ன? நீ உன்னை அழகுபடுத்துவது வீண்; உன் ஆசைக் காதலர்கள் உன்னைப் புறக்கணித்தனர்; உன் உயிரைப் பறிக்கத் தேடுகின்றனர்.
31 பிரசவ வேதனைப்படும் பெண்ணின் கூக்குரலைப் போலும், முதற் பிள்ளை பெறும் பெண்ணின் வேதனைக் குரலைப் போலும், சீயோன் மகளின் ஓலத்தைக் கேட்டேன்; மூச்சு விடத் திணறிக் கொண்டு, கையிரண்டும் விரித்து, "எனக்கு ஐயோ கேடு! சூழ்ந்திருக்கும் கொலைஞர் முன்னால் நான் சோர்ந்து போகிறேனே" என்றலறுகிறாள்.
அதிகாரம் 05
1 யெருசலேமின் தெருக்களில் இங்குமங்கும் ஓடிச் சுற்றித் தேடி உற்றுப் பாருங்கள்; அதன் பொதுவிடங்களில் தேடி, நீதியைக் கடைப்பிடித்து உண்மையைத் தேடுபவன் எவனாவது உண்டோ என்று பாருங்கள்: அவனை முன்னிட்டுப் பட்டணத்துக்கு மன்னிப்பு அளிப்போம்.
2 உயிருள்ள ஆண்டவர்மேல் ஆணை!" என்று சொல்லி, அவர்கள் ஆணையிடலாம்; ஆனால் அது பொய்யாணை.
3 ஆண்டவரே, உம் கண்கள் நேர்மையையன்றோ தேடுகின்றன? நீர் அவர்களைத் தண்டித்தீர்; ஆயினும் அவர்கள் மனம் வருந்தவில்லை; நீர் அவர்களை நசுக்கினீர்; அவர்களோ திருத்தத்தை ஏற்க மறுத்து விட்டனர்; தங்கள் முகத்தைக் கல்லினும் கடியதாக்கிக் கொண்டனர்; மனம் வருந்த மறுத்து விட்டார்கள்.
4 அப்போது நான் சொன்னேன்: "இவர்கள் எளியவர்கள், அறிவில்லாதவர்கள்; இவர்கள் ஆண்டவரின் வழிகளை அறியாதவர்கள்; தங்கள் கடவுளின் சட்டத்தைக் கற்காதவர்கள்;
5 ஆதலால் நான் பெரியோர்களிடம் போய்ப் பேசுவேன்; ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழியை அறிந்தவர்கள்; தங்கள் கடவுளின் சட்டத்தைக் கற்றவர்கள்." ஆயினும் அவர்கள் கூட நுகத்தை முறித்தார்கள்; கட்டுகளை அறுத்தெறிந்தார்கள்.
6 ஆதலால், காட்டுச் சிங்கம் அவர்களைக் கொன்றுவிடும்; பாலை நிலத்து ஓனாய் அவர்களை நாசமாக்கும்; வேங்கை அவர்கள் பட்டணங்கள் மீது கண்ணோக்குகிறது; அங்கிருந்து வெளியேறும் எவனையும் அது கிழித்தெறியும். ஏனெனில் அவர்களின் துரோகங்கள் மிகப் பல; அவர்கள் பல முறை ஆண்டவரை விட்டகன்றனர்.
7 நாம் உங்களை மன்னிப்பது எப்படி? உங்கள் மக்கள் நம்மைக் கைவிட்டார்கள்; கடவுளல்லாதவர்கள் பேரால் ஆணையிட்டார்கள்; நாம் அவர்களை வயிராற உண்பித்தோம்; அவர்கள் விபசாரம் பண்ணினார்கள்; விலைமாதர் வீடுகளுக்குக் கூட்டங் கூட்டமாய்ப் போனார்கள்.
8 குறையின்றித் தீனி தின்னும் அடங்காக் குதிரைகள் போல் ஒவ்வொருவனும் தன் இனத்தான் மனைவியின் பின்னே கனைக்கிறான்.
9 இந்த அக்கிரமங்களுக்காக அவர்களைத் தண்டிக்க மாட்டோமா? இத்தகைய மக்கள் மேல் பழிதீர்த்துக் கொள்ளாமல் விடுவோமா? என்கிறார் ஆண்டவர்.
10 சுவர்கள் மேல் ஏறுங்கள்; அவற்றையெல்லாம் அழியுங்கள்; ஆனால் முற்றிலும் அழித்து விடாதீர்கள்; அவளுடைய கிளைகள் ஆண்டவருடையவை அல்ல; ஆதலால் அவற்றைப் பிய்த்தெறியுங்கள்.
11 ஏனெனில் இஸ்ராயேல் வீடும் யூதா வீடும் எனக்குக் கொஞ்சம் கூடப் பிரமாணிக்கமாய் இல்லை, என்கிறார் ஆண்டவர்.
12 அவர்கள் தங்கள் ஆண்டவரை மறுதலித்தனர்; 'அவர் ஒன்றுமில்லை, நமக்கு யாதோர் இடையூறும் வராது, வாளையும் பஞ்சத்தையும் நாம் பார்க்கப் போகிறதில்லை;
13 இறைவாக்கினர்கள் பேசுவது வீண், இறைவனின் வாக்கு இவர்களுக்குத் தரப்படவில்லை, இவர்கள் சொல்வது இவர்களுக்கே நேரிடட்டும்!" என்று சொன்னார்கள்.
14 ஆகையால், சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "அவர்கள் அவ்வாறு பேசினமையால், இதோ அக்கினி மயமான நம் வார்த்தைகளை உன் வாயில் ஊட்டுவோம்; அவை கட்டைகளாகிய இம்மக்களைச் சுட்டெரிக்கும்;
15 இஸ்ராயேல் வீடே, உனக்கு விரோதமாகத் தொலைவிலிருந்து ஓர் இனத்தை அழைத்து வருவோம்; அது வல்லமை பொருந்திய இனம்; நெடுங்காலத்திலிருந்து நிலைத்திருக்கும் இனம்; அதன் மொழி உனக்குத் தெரியாது. அவர்கள் பேசுவதும் உனக்குப் புரியாது, என்கிறார் ஆண்டவர்.
16 அதன் அம்பறாத் தூணியோ கல்லறை போன்றது; அவர்கள் அனைவரும் போர்த் திறமை வாய்ந்தவர்கள்;
17 அவர்கள் நீ வைத்திருக்கும் தானியங்களையும், சாப்பிட வைத்திருக்கும் அப்பத்தையும் உண்டு தீர்ப்பார்கள்; உன் புதல்வர், புதல்வியரை விழுங்குவார்கள்; ஆட்டுக் கிடைகளையும், மாட்டு மந்தையையும் கொன்றொழிப்பார்கள்; திராட்சைக் கொடியையும், அத்திமரங்களையும் தீர்த்து விடுவார்கள்; நீ நம்பிக்கை வைத்திருந்த அரண் சூழ்ந்த உன் பட்டணங்களையும் வாளால் அழிப்பார்கள்.
18 ஆயினும் அந்நாட்களில் உங்களை முற்றிலும் நாம் அழித்து விட மாட்டோம், என்கிறார் ஆண்டவர்.
19 அவர்கள்: 'எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு இவற்றையெல்லாம் ஏன் செய்தார்?' என்று கேட்பார்களாகில், நீ அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி சொல்: ' நீங்கள் நம்மைக் கைவிட்டு விட்டு உங்கள் சொந்த நாட்டில் அந்நிய தெய்வங்களை வணங்கியது போல, நாம் உங்களை அந்நிய நாட்டில் அந்நியர்க்கு ஊழியஞ் செய்ய வைப்போம்."
20 யாக்கோபு வீட்டார்க்கு இதைச் சொல்லுங்கள்; யூதா நாட்டில் இதனை அறியப் படுத்துங்கள்:
21 அறிவற்ற மக்களே, உணர்வற்றவர்களே, கேளுங்கள்: உங்களுக்குக் கண்ணிருந்தும் நீங்கள் பார்க்கிறதில்லை, காதிருந்தும் நீங்கள் கேட்கிறதில்லை.
22 ஆண்டவர் கேட்கிறார்: நீங்கள் நமக்கு அஞ்சுவதில்லையோ? நம் முன்னிலையில் நீங்கள் நடுங்குவதில்லையா? கடலுக்கு வரம்பாக நாம் மணலை வைத்தோம், அந்த வரம்பை என்றென்றைக்கும் அது கடக்க முடியாது; அலைகள் அடித்தாலும் அதை மேற்கொள்வதில்லை; சீறி எழுந்தாலும் அதை மீறி வருவதில்லை.
23 ஆனால் இம் மக்களோ, கடின உள்ளமும் அடங்காத இதயமும் கொண்டவர்கள்; நம் சொல்லுக்கடங்காமல் நம்மை விட்டகன்றார்கள்.
24 தக்க பருவகாலத்தில் முன் மாரி பின் மாரி மழையை நமக்கு அனுப்பி ஆண்டு தோறும் மிகுந்த விளைவு தரும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடப்போம்' என்று இம் மக்கள் நினைக்கவே இல்லை.
25 அத்தகைய நல்லெண்ணங்களை விலக்கி, உங்களுக்கு நன்மை வராமல் தடுத்தவை நீங்கள் செய்த பாவ அக்கிரமங்களே.
26 ஏனெனில் குருவி பிடிக்கிற வேடர்கள் கண்ணி வைப்பது போல, சில அக்கிரமிகள் நம் மக்கள் நடுவில் தோன்றி, படுகுழி வெட்டி மனிதரை வீழ்த்துகிறார்கள்.
27 பறவைகளால் நிறைந்த வலை போல் அவர்கள் வீடு சூழ்ச்சிகளால் நிறைந்துள்ளது; இவ்வாறு அவர்கள் பெரியவர்களாகவும் செல்வர்களாகவும் ஆனார்கள்.
28 அவர்கள் கொழுத்துப் பருத்தார்கள்; அவர்கள் செய்த தீய செயல்களுக்குக் கணக்கில்லை: வழக்குகளை நீதியுடன் விசாரிப்பதில்லை, பெற்றோரை இழந்தவர்களுக்கு வாழ வழி செய்வதில்லை, ஏழைகளின் உரிமைகளைக் காப்பதுமில்லை.
29 இவற்றுக்காக அவர்களைத் தண்டியாமல் விடுவோமோ? இத்தகைய மக்களைப் பழிதீர்க்காமல் இருப்போமோ? என்று கேட்கிறார் ஆண்டவர்."
30 திகைத்துத் திடுக்கிடும் நிகழ்ச்சி நாட்டிலே நடக்கிறது:
31 தீர்க்கதரிசிகள் பொய் வாக்குரைக்கின்றனர்; அர்ச்சகர்கள் அவர்கள் சொற்படி ஆளுகிறார்கள்; மக்களும் அதைக் கண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் முடிவு வரும் போது என்ன செய்வீர்கள்?
அதிகாரம் 06
1 பென்யமீன் மக்களே, யெருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்; தேக்குவாவில் எக்காளம் ஊதுங்கள்; பெத்தகாரமில் கொடியேற்றுங்கள்; ஏனெனில் வடக்கிலிருந்து பெருந் தீமையும் அழிவும் எழும்பி வருகின்றன.
2 அழகியும் செல்வமாய் வளர்ந்தவளுமான சீயோன் மகளை அழிக்கப் போகிறோம்.
3 ஆயர்கள் தங்கள் ஆடுகளோடு அவளுக்கு எதிராய் வருவார்கள்; அவளைச் சுற்றிலும் தங்கள் கூடாரங்களை அடிப்பார்கள்; தத்தம் இடத்தில் ஆடுகளை மேய்ப்பார்கள்.
4 அவளுக்கு எதிராய்ப் போருக்குத் தயாராகுங்கள்; எழுந்திருங்கள், பட்டப் பகலிலேயே தாக்குவோம்!" "நமக்கு ஐயோ கேடு! பொழுது சாய்ந்தது, மாலை நேரத்து நிழல் நீண்டு வளர்கின்றதே!"
5 எழுந்திருங்கள், இரவில் மதில்களில் ஏறுவோம், அவளுடைய அரண்மனைகளை அழித்திடுவோம்!"
6 ஏனெனில் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "அதன் மரங்களை வெட்டுங்கள்; யெருசலேமைச் சுற்றிக் கொத்தளம் எழுப்புங்கள்; அது தண்டிக்கப்பட வேண்டிய பட்டணம்; அதனுள் காணப்படுவது கொடுமை தவிர வேறில்லை.
7 மணற்கேணி தண்ணீரைச் சுரந்து கொண்டிருப்பது போல், அந்நகரம் தன்னிடம் தீமையைச் சுரந்து கொண்டிருக்கின்றது; அதில் அக்கிரமும் அழிவும் நிரம்ப உள்ளன; நோயும் காயங்களும் எப்பொழுதும் என் கண்முன் உள்ளன.
8 யெருசலேமே, எச்சரிக்கையாய் நடந்துகொள்; இல்லையேல், நாம் உன்னை விட்டு அகன்று போவோம்; உன்னைப் பாழாக்கி மனிதர் வாழா இடமாக்குவோம்."
9 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "திராட்சைக் கொடியில் தப்புப் பழம் தேடிப் பறிப்பதைப் போல், இஸ்ராயேலில் எஞ்சியிருப்பதைக் கூட்டிச் சேர்."
10 ஆதலால் நான் யாரிடம் பேசுவேன்? எனக்கு காது கொடுக்கும்படி யாருக்கு எச்சரிக்கை தருவேன்? இதோ, அவர்கள் செவிகள் பரிசுத்தமாக்கப் படவில்லை; அவர்களோ செவிடர்களாய் இருக்கிறார்கள். இதோ, ஆண்டவரின் வாக்கியத்தை நிந்தித்தார்கள்; அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
11 ஆகையால் ஆண்டவரின் கோபத்தால் நான் நிறைந்துள்ளேன், அதை அடக்கி அடக்கிச் சோர்ந்து போனேன். "தெருவில் இருக்கும் சிறுவர்கள் மேலும், இளைஞர்கள் கூடியுள்ள கூட்டங்கள் மேலும், அந்தக் கோபத்தைக் கொட்டு; கணவனும் மனைவியும் பிடிபடுவார்கள்; முதியோரும் வயது சென்றவர்களும் அகப்படுவார்கள்.
12 அவர்களுடைய வீடுகளும் நிலங்களும் மனைவியரும் அந்நியர்கள் கைப்பற்ற விடப்படுவர்; ஏனெனில், நாட்டு மக்கள் மேல் நம் கையை நீட்டப் போகிறோம்." என்கிறார் ஆண்டவர்.
13 சிறுவன் முதல் பெரியவன் வரை எல்லாரும் அநியாயமாய்ச் செல்வம் சேர்க்க அலைகிறார்கள்; தீர்க்கதரிசி முதல் அர்ச்சகர் வரையில் அனைவரும் மோசஞ் செய்வதே அலுவலாய் இருக்கிறார்கள். சமாதானம் என்பதே இல்லாத போது,
14 சமாதானம், சமாதானம்' என்று சொல்லி நம் மக்களின் காயத்தை மேலோட்டமாய் நலமாக்கி விட்டனர்.
15 அருவருப்பானதைச் செய்யும் போது அவர்கள் வெட்கி நாணினார்களா இல்லவே இல்லை; அவர்கள் வெட்கி நாணவில்லை. வெட்கம் என்பதே அவர்களுக்கு என்னவென்று தெரியாது, ஆகையால் மடிகிறவர்களோடு விழுந்து மடிவார்கள், அவர்களை நாம் தண்டிக்கும் காலத்தில் அவர்கள் வீழ்த்தப்படுவர்" என்கிறார் ஆண்டவர்.
16 ஆண்டவர் கூறுகிறார்: "வழிகளில் நின்று பாருங்கள், உங்கள் பழைய நெறிகள் எவை, எது நல்ல வழி என்று கேட்டு, அதில் செல்லுங்கள். அப்போது உங்கள் உள்ளத்திற்கு ஓய்வு கிடைக்கும். அவர்களோ, ' அவ்வழியே செல்ல மாட்டோம் ' என்கிறார்கள்.
17 நாம் உங்களுக்குக் காவலாளரை ஏற்படுத்தியிருக்கிறோம்; 'எக்காளம் ஊதுவதைக் கேட்கத் தயாராயிருங்கள் ' என்று சொல்ல, அவர்கள், 'நாங்கள் கேட்கமாட்டோம்' என்றார்கள்.
18 ஆகையால் மக்களே, மக்கள் கூட்டமே, அவர்களுக்கு என்ன நேரப் போகிறதெனப் பாருங்கள்.
19 பூமியே, நீயும் கவனி; இம்மக்கள் மேல் அவர்களுடைய தீய எண்ணங்களின் பயனான தீமைகளை இதோ பொழியப் போகிறோம்; ஏனெனில் அவர்கள் நம் வார்த்தைகளைப் பொருட்படுத்த வில்லை. நமது சட்டத்தைப் புறக்கணித்துத் தள்ளி விட்டார்கள்.
20 நீங்கள் சாபா நாட்டுத் தூபத்தையும், நறுமண நாணலையும் நமக்கு அர்ப்பணம் செய்வானேன்? உங்கள் தகனப் பலிகள் நமக்கேற்கவில்லை, உங்கள் மிருகப் பலிகளும் நமக்கு உகந்தவையல்ல.
21 ஆகவே ஆண்டவர் கூறுகிறார்: 'இதோ இம்மக்கள் முன் இடறு கற்களை வைத்து இடறச் செய்வோம், அவற்றின் நடுவில் பெற்றோரும் பின்ளைகளும், அயலானும் நண்பனும் ஒருமிக்க மடிவார்கள்."
22 ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: இதோ, வடக்கிலிருந்து ஒரு மக்களினம் வரும், பூமியின் கடைசி எல்லையிலிருந்து ஒரு மக்கட் கூட்டம் எழும்பி வரும்.
23 அம்பும் கேடயமும் அவர்களுக்குப் படைக்கலங்கள், அவர்கள் இரக்கமற்ற கொடிய மக்கள்; அவர்களின் இரைச்சல் கடலின் இரைச்சலைப் போன்றது. சீயோன் மகளே, அவர்கள் குதிரைகள் மேல் ஏறி உனக்கெதிராய்ப் போருக்கு வருகின்றார்கள்.
24 அவர்கள் வரும் செய்தியை நாம் அறிந்த அளவில் நம் கைகள் விலவிலத்துப் போயின. துயரமும் கர்ப்பவதியின் வேதனையும் நம்மைச் சூழ்ந்து கொண்டன.
25 நீங்கள் கழனிகளைப் பார்க்கப் போக வேண்டாம், வழிகளிலும் செல்லாதீர்கள். ஏனெனில் எப்பக்கத்திலும் எதிரியின் வாள் தயாராயிருக்கிறது; சுற்றிலும் திகில் உலாவுகின்றது.
26 என் மக்களே, மயிராடையை அணிந்து கொள்ளுங்கள்; சாம்பலில் புரண்டு வருந்துங்கள்; இறந்த ஒரே மகனுக்காக அழுவது போலப் புலம்பி அழுங்கள். ஏனெனில் கொலைஞன் திடீரென வந்து நம்மைச் சூழ்ந்து கொள்வான்.
27 (எரெமியாசே), நாம் உன்னை நம் மக்களில் பலசாலியாகவும் பரிசோதிப்பவனாகவும் ஏற்படுத்தியிருக்கின்றோம்; நீ அஞ்சாது நன்றாகப் பார்த்து அறிவாய், அவர்களுடைய நெறியை ஆராயக்கடவாய்.
28 தலைவர்கள் எல்லாரும் முரட்டுத்தனமுள்ள கலகக்காரர்கள்; அவர்களுடைய மனம் செம்பையும் இரும்பையும் போன்றது. அவர்கள் எல்லாரும் கெட்ட வழியில் நடக்கிறார்கள்.
29 துருத்திகள் இடைவிடாது ஊதுகின்றனர்; காரீயம் நெருப்பினால் முற்றிலும் உருகிற்று. தூய்மைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடப்பது வீண். ஏனெனில் தீயவர்கள் இன்னும் நீக்கப்படவில்லை.
30 தள்ளுபடியான வெள்ளி என்று அவர்களைச் சொல்லுங்கள்; ஏனெனில் ஆண்டவர் அவர்களைப் புறக்கணித்தார்."
அதிகாரம் 07
1 ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
2 நீ ஆண்டவருடைய வீட்டின் வாயிலில் நின்று கொண்டு அறிவிக்க வேண்டியது இதுவே: இவ்வாயில் வழியாய் ஆண்டவரை வழிபட உள்ளே போகும் யூதாவின் மக்களே, ஆண்டவருடைய வாக்கியத்தைக் கேளுங்கள்:
3 இஸ்ராயேலின் கடவுளும் சேனைகளின் ஆண்டவருமானவர் கூறுகிறார்: உங்கள் வழிகளையும் செயல்களையும் செவ்வைப்படுத்திக் கொள்ளுங்கள்; அப்போது இவ்விடத்தில் உங்களோடு குடியிருப்போம்.
4 இது ஆண்டவருடைய கோயில்! ஆண்டவருடைய கோயில்!! ஆண்டவருடைய கோயில்!!!' என்று சொல்லும் வஞ்சக வார்த்தைகளை நீங்கள் நம்ப வேண்டாம்.
5 உங்களுடைய வழிகளையும் செயல்களையும் நீங்கள் உண்மையாகவே திருத்திக் கொண்டால், ஒருவனுக்கும் மற்றொருவனுக்கும் உண்டாகும் வழக்கில் உண்மையாகவே நீதி வழங்கினால்,
6 அந்நியரையும் அநாதைகளையும் கைம்பெண்களையும் நீங்கள் ஒடுக்காதிருந்தால், மாசற்ற இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதிருந்தால், உங்களுக்கே தீமையாக வேற்றுத் தெய்வங்களைப் பின்தொடராதிருந்தால்,
7 உங்கள் தந்தையர்க்கு முற்காலத்தில் நாம் கொடுத்த இந்த நாட்டில் உங்களோடு என்றென்றும் குடியிருப்போம்.
8 ஆனால், இதோ உங்களுக்குப் பயன் தராத பொய் வார்த்தைகளை நம்புகின்றீர்கள்.
9 களவு, கொலை, விபசாரம், பொய்யாணை, பாகாலுக்கு வழிபாடு, நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களைத் தொழுதல் இவற்றையெல்லாம் செய்து விட்டு,
10 நீங்கள் இங்கு வந்து நம் பெயரால் வழங்கப்படும் இவ் வீட்டில் நம் முன்னிலையில் நின்றுகொண்டு,' நாங்கள் விடுதலை பெற்றோம்' என்று சொல்லுகிறீர்கள்; சொல்லிக் கொண்டு தொடர்ந்து அதே அருவருப்பான செயல்களைச் செய்கிறீர்கள்.
11 என் பெயரால் குறிக்கப்படும் இந்த வீடு உங்கள் கண்களுக்குக் கள்ளர் குகையாய்த் தோன்றுகிறதோ? இதோ நாமே நேரில் பார்த்தோம், என்கிறார் ஆண்டவர்.
12 நாம் முன்னாளில் சீலோவில் குடியிருந்த இடத்துக்குப் போய், நம் மக்களாகிய இஸ்ராயேல் செய்த தீமைக்காக நாம் அதற்குச் செய்தவற்றைக் கவனியுங்கள்.
13 ஆண்டவர் கூறுகிறார்: 'நீங்கள் இச் செயல்களையெல்லாம் செய்ததாலும், முதலிலிருந்தே நாம் உங்களுக்கு வற்புறுத்திச் சொல்லியும் நீங்கள் நமக்குச் செவி சாய்க்காததாலும், நாம் உங்களை அழைத்தும் நீங்கள் பதில் தராததாலும்,
14 நம் திருப்பெயரால் குறிக்கப்படுவதும் நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறதுமான இந்தக் கோயிலுக்கும், உங்கள் தந்தையர்க்கும் உங்களுக்கும் நாம் கொடுத்த இந்த நாட்டிற்கும் சீலோவுக்குச் செய்தது போலவே நாம் செய்யப் போகிறோம்.
15 உன் இனத்தார் அனைவரையும், எப்பிராயீம் மக்கள் எல்லாரையும் முற்றிலும் தள்ளி விட்டது போல், உங்களையும் நாம் நம் முன்னிலையிலிருந்து தள்ளிப் போடுவோம்.
16 "(எரெமியாசே), நீ இந்த மக்களுக்காக மன்றாட வேண்டாம். இவர்களுக்காக அழுகையோ வேண்டுதலோ செய்ய வேண்டாம்; பரிந்து பேசவும் வேண்டாம்; ஏனெனில் உன் மன்றாட்டை நாம் கேட்க மாட்டோம்.
17 யூதாவின் பட்டணங்களிலும், யெருசலேமின் தெருக்களிலும் இவர்கள் செய்வதை நீ பார்க்கவில்லையா?
18 பிள்ளைகள் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றார்கள்; பெண்கள் மாவில் எண்ணெய் விட்டுப் பிசைந்து அப்பம் சுட்டு விண்ணரசிக்கும் வேற்றுத் தெய்வங்களுக்கும் படைக்கிறார்கள்; பானப்பலிகளையும் இடுகிறார்கள்.
19 நமக்கோ சினத்தை மூட்டுகிறார்கள். எனக்கு மட்டுமா கோபத்தை மூட்டுகிறார்கள்? தங்களுக்கே அல்லவா வெட்கத்தை வருவித்துக் கொள்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
20 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நம் சினமும் ஆத்திரமும் இந்த இடத்தின் மேலும், மக்கள் மேலும் மிருகங்கள் மேலும் நாட்டின் மரங்கள் மேலும் பூமியின் பலன்கள் மேலும் காட்டப்படும். அவற்றை அழித்தே தீரும்; அவிக்க முடியாது."
21 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "உங்கள் தகனப்பலிகளை மற்றப் பலிகளோடு சேர்த்து அவற்றின் இறைச்சியை நீங்களே புசியுங்கள்.
22 உங்கள் முன்னோரை எகிப்து நாட்டிலிருந்து விடுவித்த போது நமக்குத் தகனப் பலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்த வேண்டுமென்று அவர்களுக்கு நாம் சொல்லவுமில்லை, கற்பிக்கவுமில்லை.
23 ஆனால் நாம் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: 'நம் வாக்குக்குச் செவிசாயுங்கள்; அப்போது நாம் உங்களுக்குக் கடவுளாய் இருப்போம்; நீங்கள் நமக்கு மக்களாய் இருப்பீர்கள்; நீங்கள் நலமாய் இருக்கும்படி உங்களுக்கு நாம் கட்டளையிடும் நெறியில் ஒழுகுங்கள்.'
24 ஆனால் அவர்கள் கீழ்ப்படியவுமில்லை, செவிசாய்க்கவுமில்லை; அதற்கு மாறாகத் தங்கள் சொந்தச் சிந்தனைகளின்படியும் தீய உள்ளத்தின் பிடிவாதப் போக்கிலும் நடந்தார்கள்; முன்னேறிச் செல்லாமல் பின்னிட்டுப் போனார்கள்.
25 உங்கள் தந்தையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்று வரை நம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை நாளுக்கு நாள் அவர்களிடம் இடைவிடாமல் அனுப்பிக் கொண்டிருந்தோம்.
26 ஆயினும் நமக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை; நாம் சொன்னதையும் கேட்கவில்லை; அதற்கு மாறாக வளையாத கழுத்தினராய், தங்கள் தந்தையர்களிலும் கெட்டவர்களாய் நடந்தார்கள்.
27 நீ போய் இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்வாய்: ஆயினும் அவர்கள் உன் சொற்களைக் கேட்க மாட்டார்கள்; நீ அவர்களைக் கூப்பிடுவாய்; அவர்கள் உனக்குப் பதில் கொடுக்க மாட்டார்கள்.
28 நீ அவர்களைப் பார்த்து, ' தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சொல்லைக் கேட்காமலும், அவரால் திருத்தப்பட விரும்பாமலும் இருந்து வரும் மக்களினம் இதுவே; உண்மை அழிந்து போயிற்று; அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போயிற்று என்று சொல்.
29 "உன் தலைமயிரை மழித்து எறிந்து விடு: மொட்டைக் குன்றுகளில் நின்று புலம்பியழு; ஏனெனில் தம் சினத்துக்காளான தலைமுறையை ஆண்டவர் புறக்கணித்துத் தள்ளிவிட்டார்.'
30 யூதாவின் மக்கள் நம் கண்முன் தீங்கு புரிந்தார்கள், என்கிறார் ஆண்டவர். நம் பெயரால் குறிக்கப்படும் இந்த வீட்டைத் தீட்டுப்படுத்த அவர்கள் அருவருப்பானவற்றை இதிலே நிலைநாட்டினார்கள்.
31 என்னோன் மகனின் பள்ளத்தாக்கில் இருக்கும் தொப்பேத்து குன்றுகளில் தங்கள் புதல்வர், புதல்வியரை நெருப்பினால் சுட்டெரிக்கும்படி பீடங்களைக் கட்டினார்கள். இவற்றை நாம் கற்பிக்கவுமில்லை, நினைக்கவுமில்லை.
32 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாட்கள் வருகின்றன. அப்போது இந்தப் பள்ளத்தாக்கு தொப்பேத்து என்றோ, என்னோன் மகனின் பள்ளத்தாக்கு என்றோ சொல்லப்படாது; படுகொலையின் பள்ளத்தாக்கு என்றே சொல்லப்படும். ஏனெனில் பிணங்களைப் புதைக்க இடமில்லாது தொப்பேத்திலேயே புதைப்பார்கள்.
33 இம்மக்களின் உடல்கள் வானத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும். அவற்றை விரட்ட யாருமிருக்கமாட்டார்.
34 அந்நாளிலே யூதாவின் பட்டணங்களிலும் யெருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் முழக்கத்தையும், அக்களிப்பின் ஆரவாரத்தையும், மணவாளனின் குரலையும், மணவாட்டியின் குரலையும் ஓயப் பண்ணுவோம்; ஏனெனில் நாடெல்லாம் காடாகும்.
அதிகாரம் 08
1 ஆண்டவர் கூறுகிறார்: அக்காலத்தில் யூதாவின் மன்னர்களுடைய எலும்புகளும், அர்ச்சகர்களுடைய எலும்புகளும், இறைவாக்கினர்களின் எலும்புகளும், யெருசலேமில் வசித்தவர்களின் எலும்புகளும் கல்லறைகளினின்று வெளியே எறியப்படும்;
2 தாங்கள் நேசித்து, சேவித்துப் பின்பற்றி, அறிவுரை தேடி வணங்கிய சூரிய, சந்திர, நட்சத்திரங்களின் முன்னிலையில் அவர்களுடைய எலும்புகள் எறியப்பட்டு உலரும்; யாரும் அவற்றைச் சேர்த்துத் திரும்பப் புதைக்க மாட்டார்கள்; அவை தரையில் குப்பை போலக் கிடக்கும்.
3 மிகவும் தீயதான இந்தத் தலைமுறையில் எஞ்சியிருப்பவர்கள், மனிதர் நடமாட்டமில்லாத ஒதுக்கிடங்களில் நம்மால் தள்ளப்பட்டுக் கிடக்கும் போது, வாழ்வை விடச் சாவே மேல் என்று நினைப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.
4 "நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவர் கூறுகிறார்: இடறி விழுந்தவன் திரும்ப எழுந்திருக்கிறதில்லையா? வழி தப்பினவன் திரும்ப ஊர் வந்து சேர்வதில்லையா?
5 ஏன் இந்த யெருசலேம் மக்கள் மட்டும் இவ்வாறு அருவருப்போடு நம்மை விட்டு அகன்று நிற்கின்றனர்? பொய்யைக் கடைபிடித்தார்கள்; ஆதலால், நம்மிடம் திரும்பி வர அவர்களுக்கு விருப்பமில்லை.
6 நான் உற்று நோக்கினேன், கவனித்துக் கேட்டேன்; நன்றாய்ப் பேசுபவர் ஒருவருமில்லை; 'நான் என்ன செய்தேன்?' என்று சொல்லுகிறார்களேயன்றி, தன் குற்றத்திற்காக மனம் வருந்துபவர் யாருமில்லை; போர்க்களத்தில் தலைதெறிக்க ஓடும் குதிரையைப் போலத் தங்கள் பாவ நெறியையே பின்பற்றுகிறார்கள்.
7 வானத்தில் உள்ள கொக்கு தன் நேரத்தை அறிகிறது; புறாவும் தகைவிலானும் நாரையும் தங்கள் வருகையின் காலத்தை அறிந்துள்ளன; ஆனால் நம் மக்கள் ஆண்டவரின் நீதியை உணரவில்லையே!
8 "நாங்கள் ஞானிகள்; ஆண்டவரின் திருச்சட்டம் எங்களோடு இருக்கிறது என்று நீங்கள் எவ்வாறு சொல்லத் துணிகிறீர்கள்? மறை நூல் அறிஞர்களின் போலி எழுத்தாணி பொய்களை அல்லவா எழுதிற்று?
9 ஞானிகள் வெட்கி வெருண்டு போவார்கள்; திகைப்புக்குள்ளாகி அகப்படுவார்கள்; ஏனெனில் ஆண்டவரின் வாக்கைப் புறக்கணித்தார்கள்; அவர்களுக்கு ஞானமென்பது கொஞ்சமுமில்லை.
10 "ஆதலால் நாம் அவர்களுடைய மனைவியரை அந்நியர்க்குக் கையளிப்போம்; அவர்களுடைய கழனிகளை வேற்றினத்தார்க்கு உரிமையாகக் கொடுப்போம்; ஏனெனில், சிறுவன் முதல் பெரியவன் வரை எல்லாரும் அநியாயமாய்ச் செல்வம் சேர்க்க அலைகிறார்கள்; தீர்க்கதரிசி முதல் அர்ச்சகர் வரை அனைவரும் மோசஞ் செய்வதே அலுவலாய் இருக்கிறார்கள்.
11 சமாதானம் என்பதே இல்லாத போது, சமாதானம், சமாதானம் என்று சொல்லி, நம் மக்களின் காயத்தை மேலோட்டமாய் நலமாக்கி விட்டனர்.
12 அருவருப்பானதைச் செய்யும் போது அவர்கள் வெட்கி நாணினார்களா? இல்லவே இல்லை; அவர்கள் வெட்கி நாணவில்லை; வெட்கம் என்பதே அவர்களுக்கு என்னவென்று தெரியாது; ஆகையால் மடிகிறவர்களோடு விழுந்து மடிவார்கள்; அவர்களை நாம் தண்டிக்கும் காலத்தில் அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.
13 "ஆண்டவர் கூறுகிறார்: நாம் அவர்களை ஒருமிக்கச் சேர்க்கும் போது, திராட்சைக் கொடிகளில் பழங்கள் இருக்கமாட்டா; அத்தி மரங்களில் கனிகள் கிடைக்கமாட்டா; இலைகள் உதிர்ந்து போம்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவை, அவர்கள் கையிலிருந்து நழுவிப் போய்விடும்."
14 அவர்கள்: "நாம் இங்கு உட்கார்ந்திருப்பானேன்? வாருங்கள், கோட்டைகள் அமைந்த நகருக்குப் போவோம்; அங்கு நாம் அழிந்து போவோம்; ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை அழியும்படி விட்டார், நஞ்சு கலந்த நீரைக் குடிக்கத் தந்தார்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக நாம் பாவம் செய்தோம்.
15 நாம் சமாதானத்தை எதிர்பார்த்திருந்தோம்; அதனால் நன்மையொன்றும் விளையவில்லை; நலம் வரும் என்று காத்திருந்தோம்; பதிலுக்குக் திகிலே வந்து நேருகின்றது" என்கிறார்கள்.
16 அதற்கு ஆண்டவர் கூறுகிறார்: "தாண் நகர்ப் பக்கத்திலிருந்து குதிரைகளின் கனைப்பு கேட்கின்றது; போர்க் குதிரைகளின் பேரொலியால் நாடெல்லாம் நடுங்குகின்றது; அவர்கள் வந்து, நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும், நகரத்தையும் அதன் குடிகளையும் விழுங்குவார்கள்.
17 இதோ, உங்களுக்கு எதிராய்ப் பாம்புகளையும் நாகங்களையும் அனுப்புவோம்; அவை எவ்வகை மந்திரத்துக்கும் தந்திரத்துக்கும் மயங்கா; உங்களைக் கண்டிப்பாய்க் கடிக்கும்."
18 உன் துயரத்திற்கு மேற்பட்ட துயரமுண்டோ? என் மனம் மெலிந்து வாடுகின்றதே.
19 எனது இனத்தாரின் அழுகையும் கூக்குரலும் நாட்டின் ஒரு முனை முதல் மறு முனை வரை கேட்கின்றதே! "சீயோனில் ஆண்டவர் இல்லையோ? அங்கே அதன் அரசன் இல்லையோ?" "செதுக்கிய படிமங்களாலும் அந்நிய சிலைகளாலும் நமக்கு அவர்கள் கோபமூட்டியது ஏன்?"
20 அறுவடைக் காலம் முடிந்தது; முதுவேனிற் காலமும் கடந்தது; நாம் இன்னும் விடுதலையடையவில்லை."
21 என் இனத்தாரின் காயத்துக்காக என் இதயம் காயப்பட்டது; நானோ அழுகிறேன்; திகிலுக்கு ஆளாகிறேன்.
22 கலாயாத் நாட்டில் அதற்குத் தைலம் இல்லையோ? அங்கே மருத்துவன் இல்லையோ? பின்னர், என் இனத்தார்க்கு உடல் நலம் ஏன் தரப்படவில்லை?
அதிகாரம் 09
1 என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமாய் இருக்கக்கூடாதா! அப்பொழுது என் இனத்தாரில் கொலையுண்ட மக்களுக்காக அல்லும் பகலும் புலம்பி அழுவேனே!
2 வழிப்போக்கர் தங்குமிடத்தைப் போலப் பாலை நிலத்தில் எனக்கோர் இடம் இருக்கக் கூடாதா! அப்பொழுது அவர்களை விட்டகன்று அங்கே போய் விடுவேனே! ஏனெனில் அவர்கள் அனைவரும் விபசாரிகள், துரோகிகளின் கூட்டம்;
3 அவர்களுடைய நாக்கு வில்லைப் போல வளைகிறது, அதில் உண்மை கொஞ்சமும் இல்லை, பொய்யே மலிந்துள்ளது; அவர்கள் ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்கு முன்னேறுகிறார்கள். நம்மை அவர்கள் அறிந்தார்களல்லர்.
4 ஒவ்வொருவனும் தன் அயலான் மட்டில் எச்சரிக்கையாய் இருக்கட்டும், எவனும் தன் சகோதரனை நம்பக் கூடாது; ஏனெனில் ஒவ்வொரு சகோதரனும் மற்றவனுடைய இடத்தைத் தந்திரமாய்க் கவர்ந்து கொள்கிறான்; ஒவ்வொரு நண்பனும் புறணி பேசுகிறான்.
5 ஒவ்வொருவனும் தன் சகோதரனை ஏமாற்றுகிறான்; எவனும் உண்மை பேசுவது இல்லை; பொய் சொல்வதில் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள்; அக்கிரமம் செய்கின்றனர்; மனம் வருந்தவே மாட்டார்கள்;
6 கொடுமைக்கு மேல் கொடுமையும், வஞ்சனைக்கு மேல் வஞ்சனையும் செய்கிறார்கள்; என்னை அறிந்து கொள்ள மறுக்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
7 ஆகையால், சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ நாம் அவர்களை உருக்கிப் புடமிட்டுச் சோதிப்போம்; நம் மக்களுக்கு நாம் என்னதான் செய்ய முடியும்?
8 அவர்களுடைய நாக்கு காயப்படுத்தும் அம்பு; அது பேசுவதெல்லாம் கபடு; வாயால் அயலானுடன் சமாதான மொழிகளைப் பேசுவர்; உள்ளத்திலோ அவனுக்குப் படுகுழி வெட்டுகிறார்கள்.
9 இவற்றுக்கெல்லாம் நாம் அவர்களைத் தண்டியாமல் விடுவோமோ? இத்தகைய மக்கள் மேல் பழிதீர்த்துக் கொள்ளாமல் இருப்போமோ?
10 "மலைகளைக் குறித்து ஒப்பாரி வைத்து அழுவோம்; பாலை நிலத்தில் இருக்கும் செழித்த இடங்களுக்காகப் புலம்புவோம்; ஏனெனில் அவையெல்லாம் பாழாக்கப்பட்டன; இனி அங்கே போகிறவன் எவனுமில்லை; ஆடுமாடுகளின் குரலொலி கேட்கவில்லை; வானத்துப் பறவைகளும், வயல்வெளி மிருகங்களும், எல்லாம் அங்கிருந்து ஓடிப்போயின.
11 யெருசலேமை நாம் மண் மேடாக்குவோம், குள்ள நரிகள் வாழும் குகையாக்கி விடுவோம்; யூதாவின் பட்டணங்களையெல்லாம் குடியிருப்பார் யாருமின்றிப் பாழாக்குவோம்."
12 இதனைக் கண்டுணரத் தக்க ஞானமுள்ளவன் யார்? இதனை அறிவிக்கும்படி யாருக்கு ஆண்டவரின் வாய் பேசியிருக்கிறது? மனிதர் கடக்க முடியாதபடி நாடு பாழாகிப் பாலையானது ஏன்? மீண்டும் ஆண்டவர் கூறுகிறார்:
13 நாம் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தை வெறுத்து ஒதுக்கினார்கள்; நமது வாக்கியத்தைக் கேட்டு அதற்கேற்ப நடக்கவில்லை;
14 தங்கள் தீய உள்ளத்தைப் பிடிவாதமாய்ப் பின்பற்றினார்கள். முன்னோர்கள் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தபடி பாகாலைப் பின்தொடர்ந்தார்கள்;
15 ஆகையால் இஸ்ராயலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் இம்மக்களுக்குப் புசிக்கக் கசப்பான புல்லையும், குடிக்க நஞ்சு கலந்த தண்ணீரையும் கொடுப்போம்;
16 அவர்களும் அவர்களுடைய முன்னோர்களும் அறியாத புறவினத்தார்களுக்குள் அவர்களைச் சிதறடிப்போம்; அவர்களை முற்றிலும் அழிக்கவேண்டி அவர்களுக்குப் பின்னாலேயே வாளையும் அனுப்புவோம்."
17 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "ஒப்பாரி வைக்கும் பெண்களைத் தேடிப் பார்த்து கூப்பிடுங்கள்; அவர்களுள் திறமை வாய்ந்தவர்களை அழையுங்கள்;
18 அவர்கள் விரைந்து வந்து நம்மைப் பற்றிப் புலம்பட்டும்; நம் கண்கள் கண்ணீரைச் சொரியட்டும்; நம் இமைகளினின்று தண்ணீர் வெள்ளமாய் ஓடட்டும்.
19 ஏனெனில் ஏற்கெனவே சீயோனிலிருந்து புலம்பல் கேட்கிறது: ' ஐயோ, நாம் எக்கதியானோம்! எங்கள் மானமெல்லாம் போயிற்றே! நாங்கள் நாட்டை விட்டு அகன்றோம், எங்கள் வீடுகள் தகர்க்கப்பட்டன' என்கிறார்கள்."
20 பெண்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; அவரது வாய்மொழி உங்கள் காதுகளில் நன்றாய் ஏறட்டும்; உங்கள் புதல்வியர்க்கு ஒப்பாரி கற்றுக் கொடுங்கள்; ஒவ்வொருத்தியும் தன் தோழிக்குப் புலம்பல் கற்பிக்கட்டும்.
21 ஏனெனில் சாவு நம் பலகணிகள் வழியாய் ஏறி வந்தது; நம்முடைய அரண்மனைகளுக்குள் நுழைந்து விட்டது; தெருக்களில் உள்ள சிறுவர்களையும் பொது இடங்களில் உள்ள இளைஞர்களையும் வீழ்த்தி விட்டது;
22 (எரெமியாசே), பேசு: "ஆண்டவர் கூறுகிறார்: 'மனிதரின் பிணங்கள் நாடெல்லாம் குப்பை போலக் குவியும், அறுப்புக்காரர் விட்டுச் சென்று எடுப்பாரின்றிக் கிடக்கும் நெற்கதிர்கள் போலக் கிடக்கும்."
23 ஆண்டவர் கூறுகிறார்: "ஞானி தன் ஞானத்தைப் பாராட்ட வேண்டாம்; வல்லவன் தன் வலிமையில் பெருமை கொள்ள வேண்டாம்; செல்வன் தன் செல்வங்களால் செருக்கு அடைய வேண்டாம்.
24 பெருமையடைய விரும்புகிறவன் நம்மையறியும் ஞானத்திலேயே பெருமையடையட்டும்; நிலையான அன்பும் நீதியும் நியாயமும் காட்டுகிற ஆண்டவர் நாமே என்பதில் அவன் பெருமிதம் கொள்ளட்டும்; ஏனெனில், இவற்றில் நாம் இன்பம் காண்கிறோம், என்கிறார் ஆண்டவர்."
25 விருத்தசேதனம்: நிலையற்ற உத்தரவாதம்: "இதோ நாட்கள் வருகின்றன; அப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டும் செய்யப் படாதவர்களாய் இருப்பவர் எல்லாரையும் தண்டிப்போம்;
26 எகிப்து, யூதேயா, இதுமேயா முதலிய நாடுகளையும், அம்மோன், மோவாபு மக்களையும், தங்கள் தலைமயிரை வட்டமாய் வெட்டிக் கொள்கிறவர்களும், பாலை நிலத்தில் வாழ்கிறவர்களுமான எல்லாரையும் தண்டிப்போம்; ஏனெனில் இந்த இனத்தவரெல்லாரும் உடலில் விருத்தசேதனம் செய்யப்படவில்லை; ஆனால் இஸ்ராயேல் வீட்டார் அனைவரும் உள்ளத்திலே விருத்தசேதனம் இல்லாதவர்கள்."
அதிகாரம் 10
1 இஸ்ராயேல் வீட்டாரே, ஆண்டவர் உங்களுக்குச் சொல்லும் வார்த்தையைக் கேளுங்கள்:
2 ஆண்டவர் கூறுகிறார்: "புறவினத்தாரின் நெறிகளை நீங்கள் கற்றுக் கொள்ளாதீர்கள்; அவர்கள் கண்டு அஞ்சும் வானக் குறிகளுக்கு அஞ்சவேண்டாம்.
3 ஏனெனில் புறவினத்தாரின் வழிமுறைகள் யாவும் வீண்; காட்டில் தச்சன் கோடாரியால் ஒரு மரத்துண்டை வெட்டி, வேலை செய்கிறான்;
4 மனிதர் அதனை வெள்ளியாலும் பொன்னாலும் அணி செய்கின்றனர்; கலகலத்து வெவ்வேறாய் விழாதபடி ஆணிகளைத் தைத்து, சுத்தியால் இணைக்கிறார்கள்;
5 அப்படிச் செய்த சிலைகள் வெள்ளரித் தோட்டத்தில் பறவையோட்ட வைக்கும் பூச்சாண்டிப் பொம்மைகள்; அவை பேச ஆற்றலற்றவை அவற்றால் நடக்க முடியாது; ஆதலால் மனிதர் அவற்றைத் தூக்கிச் செல்கின்றனர்; அவற்றுக்கு அஞ்ச வேண்டாம்; அவை உங்களுக்கு நன்மையும் செய்யா; தீமையும் செய்யா."
6 ஆண்டவரே, உமக்குச் சமமானவன் எவனுமில்லை, நீர் பெரியவர்; உம் பெயர் வல்லமையில் பெரியது;
7 மக்களின் மன்னரே, உமக்குப் பயப்படாதவன் யார்? ஏனெனில் அது உமது உரிமை; ஏனெனில் மக்களின் ஞானிகள் அனைவருள்ளும், அவர்களுடைய அரசுகள் அனைத்திலும் உமக்கு நிகரானவன் எவனுமே இல்லை.
8 அவர்கள் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்; அவர்களுடைய போதனை வீணானதாய் இருப்பதற்குச் சான்று அவர்கள் வழிபடும் மரச்சிலைகளே!
9 தார்சீசினின்று சுத்த வெள்ளியும், ஒப்பாசினின்று பொன்னும் கொண்டுவரப் படுகின்றன; அவை சிற்பியின் வேலைப்பாடுகள்; தட்டானின் கைவேலைகள்; அவற்றை அவர்களே சிலைகளாகச் செய்தனர்; அவற்றின் உடை ஊதாவாலும் செம்பருத்தியாலும் ஆனது; அவை யாவும் தொழிலாளிகளின் வேலையேயன்றி வேறில்லை.
10 ஆண்டவரே உண்மையான கடவுள்; அவரே உயிருள்ள கடவுள், முடிவில்லா மாமன்னர்; அவர் சினங் கொண்டால், நிலவுலகம் நடுங்கும் அவருடைய கோபத்தை மக்கள் தாங்க முடியாது.
11 ஆதலால் நீ அவர்களுக்குச் சொல்: "வானத்தையும் பூமியையும் படைக்காத அந்தத் தெய்வங்கள் பூமியினின்றும் வானத்தின் கீழிருந்தும் அழிந்து போவர்கள்."
12 தம் வல்லமையால் மண்ணுலகைப் படைத்தவர் அவரே; தம் ஞானத்தால் உலகை நிலைநாட்டியவர் அவரே; தம் அறிவினால் வானத்தை விரித்தவர் அவரே.
13 அவர் குரலொலி வானத்தில் வெள்ளப் பெருக்கின் இரைச்சல் போலக் கேட்கிறது; அவரே பூமியின் எல்லைகளினின்று மேகங்களை எழுப்புகின்றார்; மின்னல்களை மழைக்காக மின்னச் செய்கின்றார். தம் கிடங்குகளிலிருந்து காற்றைக் கொண்டு வருகிறார்.
14 மனிதர் யாவரும் மூடர்கள், அறிவில்லாதவர்கள்; தட்டான் ஒவ்வொருவனும் தன் சிலைகளால் மானமிழந்தான்; ஏனெனில் அவன் செய்த படிமங்கள் பொய்; அவற்றில் உயிர் இல்லை.
15 அவை பயனற்றவை; நகைப்புக்குரிய வேலைகள்; தண்டனைக் காலத்தில் அவை பாழாய்ப் போகும்.
16 யாக்கோபின் பங்காயிருப்பவர் அப்படிப்பட்டவர் அல்லவர்; ஏனெனில் அவரே யாவற்றையும் படைத்தவர்; இஸ்ராயேல் கோத்திரம் அவருடைய உரிமைச் சொத்து; சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்.
17 நாட்டில் எங்கும் திகில்: முற்றுகையிடப்பட்ட (நகரே), உன் பொருட்களைத் தரையிலிருந்து சேர்த்துக் கொள்.
18 ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, இந்த முறை இந்நாட்டுக் குடிகளை வெகு தொலைவில் வீசியெறிவோம்; அவர்கள் என்னைக் கண்டுணர்கிறார்களா என அறிய அவர்களைத் துன்பப்படுத்துவோம்."
19 எனக்கு ஐயோ கேடு! நான் நொறுங்கிப் போனேன்; என் காயம் கொடிதாயிற்று; ஆயினும், "மெய்யாகவே இந்த வேதனையை நான் அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொன்னேன்.
20 என் கூடாரம் தகர்க்கப்பட்டது; என் கயிறுகளெல்லாம் அறுந்துபோயின; என் மக்கள் என்னை விட்டகன்றார்கள்; மாண்டு போனார்கள்; என் கூடாரத்தை எடுத்து உயர்த்துவார் இல்லை; என் திரைச் சீலைகளை மறுபடியும் பொருத்துவார் இல்லை.
21 ஆயர்கள் அறிவில்லாதவர்கள்; அவர்கள் ஆண்டவரைத் தேடி விசாரிக்கவில்லை; ஆதலால் அவர்களுக்கும் வள வாழ்வில்லை; அவர்களுடைய மந்தை முற்றிலும் சிதறிப் போயிற்று.
22 கேளுங்கள், இதோ பேரொலி கேட்கிறது! வட நாட்டிலிருந்து மக்களின் ஆர்ப்பரிப்பு கேட்கிறது! யூதாவின் பட்டணங்களைப் பாழாக்கவும், குள்ள நரிகளின் குகையாக்கவும் வருகிறார்கள்.
23 ஆண்டவரே, மனிதன் தனக்குத் தானே தன் வழியை ஏற்படுத்துதல் இயலாது என்றறிவேன்; நடக்கிறவன் தன் காலடிகளை நடத்திக் கொள்வதுமில்லை.
24 ஆண்டவரே, என்னைத் திருத்தியருளும்; உமது நீதிக்கேற்பத் தண்டியும்; உமது கடுங்கோபத்தோடே தண்டித்து விடாதேயும்; ஏனெனில் ஒரு வேளை நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.
25 உம்மை அறியாத இனத்தார் மேலும் உம் திருப்பெயரை வேண்டிக் கொள்ளாத மக்கள் மேலும் உமது கடுஞ்சினத்தைக் காட்டியருளும்; ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கி விட்டார்கள், விழுங்கி முற்றிலும் அழித்தார்கள்; அவன் குடியிருப்பையும் பாழாக்கினார்கள்.
அதிகாரம் 11
1 ஆண்டவர் எரெமியாசுக்கு அருளிய வாக்கு:
2 இவ்வுடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேட்டு, யூதாவின் மக்களுக்கும், யெருசலேமின் குடிகளுக்கும் அறிவி:
3 நீ அவர்களுக்குச் சொல்: இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாதவன் சபிக்கப்படுக!
4 நாம் உங்கள் தந்தையரை இருப்புக் காளவாயாகிய எகிப்து நாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டு வந்த போது அவர்களைப் பார்த்து: 'நான் சொல்வதைக் கேளுங்கள்; நாம் உங்களுக்குக் கட்டளையிடுபவற்றை எல்லாம் செய்யுங்கள்; அப்போது நீங்கள் நம் மக்களாய் இருப்பீர்கள்; நாம் உங்கள் கடவுளாய் இருப்போம்.
5 பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை உங்களுக்குக் கொடுப்போம் என்று நாம் உங்கள் தந்தையர்க்கு இட்ட ஆணையை உறுதிப்படுத்துவோம்' என்கிறோம்; இன்று அது அப்படியே ஆயிற்று" என்று சொன்னார். அதற்கு நான், "ஆம் ஆண்டவரே!" என்று மறுமொழி சொன்னேன்.
6 ஆண்டவர் மீண்டும் எனக்குச் சொன்னார்: "நான் சொல்லும் வார்த்தைகளையெல்லாம் யூதாவின் நகரங்களிலும், யெருசலேமின் தெருக்களிலும் நீ உரத்த குரலில் அறிவி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி ஒழுகுங்கள்.
7 நாம் உங்கள் தந்தையரை எகிப்து நாட்டினின்று விடுவித்த நாள் முதற் கொண்டு இந்நாள் வரையில் அவர்களுக்கு, வற்புறுத்தி எம் சொல்லுக்கு கீழ்ப்படியுங்கள் என்று எச்சரிக்கை செய்தோம்.
8 ஆயினும் அவர்கள் கீழ்ப்படியவுமில்லை, செவிசாய்க்கவுமில்லை; அதற்கு மாறாக அவரவர் தத்தம் பொல்லாத இதயத்தின் பிடிவாதப் போக்கிலேயே நடந்தார்கள். ஆகையால் நாம் அவர்களைச் செய்யும்படி கட்டளையிட்டும், அவர்கள் கடைபிடிக்காத இவ்வுடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக் கெதிராய்க் கொண்டு வந்தோம்."
9 மீண்டும் ஆண்டவர் எனக்குக் கூறினார்: "யூதாவின் மக்களும், யெருசலேமின் குடிகளும் நமக்கு எதிராகப் புரட்சி செய்கிறார்கள்.
10 வேண்டுமென்றே நம் வார்த்தைகளைக் கேளாமல் இருந்த அவர்களுடைய முன்னோர்கள் செய்து வந்த பழைய அக்கிரமங்களில் அவர்களும் விழுந்து விட்டார்கள்; அந்நிய தெய்வங்களுக்கு ஊழியம் செய்ய உடன்பட்டு விட்டார்கள். அவர்களுடைய தந்தையரோடு நாம் செய்த உடன்படிக்கையை இஸ்ராயேல் வீடும், யூதாவின் வீடும் முறித்து விட்டன.
11 ஆகையால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, அவர்களால் தவிர்க்க முடியாத தீமைகளை அவர்கள் மீது பொழிவோம்; அவர்கள் நம்மை நோக்கிக் கூக்குரலிடுவார்கள்; ஆனால் நாம் செவிசாய்க்க மாட்டோம்.
12 அப்போது யூதாவின் நகரங்களும் யெருசலேமின் குடிமக்களும் ஓடி தாங்கள் தூபம் போட்டு வணங்கும் தெய்வங்களை நோக்கிக் கூக்குரலிடுவார்கள். ஆயினும் துன்ப காலத்தில் அவர்களைக் காப்பாற்ற அவைகளால் இயலாது.
13 யூதா நாடே, உன் பட்டணங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் இருக்கிறது; யெருசலேமின் வீதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பாகாலுக்கு வழிபாடு செய்யும் பீடங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து விட்டமை உனக்கு வெட்கக் கேடு.
14 ஆகையால் நீ இந்த மக்களுக்காக மன்றாட வேண்டாம். இவர்களுக்காக அழுகையோ வேண்டுதலோ செய்ய வேண்டாம். ஏனெனில் இவர்களுடைய இக்கட்டு வேளையில் நம்மைப் பார்த்துக் கூக்குரலிட்டாலும், நாம் கேட்க மாட்டோம்.
15 "பொல்லாத அக்கிரமங்களைச் செய்கிற என் காதலிக்கு என் வீட்டிற்குள் வருவதற்கு உரிமை ஏது? நேர்ச்சைகளும், பரிசுத்த பலியின் இறைச்சியும் உனக்கு வரும் தீமையைத் தவிர்க்குமோ? இன்னும் நீ அக்களிப்பாயோ?
16 செழித்துச் சிறந்து கனிகளால் நிறைந்த அழகிய ஒலிவ மரம் என்பது ஆண்டவர் உனக்கிட்ட பெயர்; ஆனால் புயற் காற்றின் பேரிரைச்சலின் போது அதில் பெரும் நெருப்பு விழும், அதன் கிளைகளெல்லாம் தீய்ந்து போகும்.
17 உன்னை நட்டு வளர்த்த சேனைகளின் ஆண்டவர் உனக்கு எதிராகத் தீங்கு வருமென்று தீர்ப்பிட்டார்; ஏனெனில் இஸ்ராயேல் வீடும், யூதாவின் வீடும் பாகாலுக்குத் தூபம் காட்டி நமக்குக் கோபமூட்டித் தீமை செய்தார்கள்."
18 ஆண்டவரே, நீர் எனக்கு அறிவித்தீர்; நான் அறிந்து கொண்டேன்; அவர்களுடைய தீய செயல்களையும் எனக்குக் காட்டிவிட்டீர்;
19 அடிக்கக் கொண்டு போகப்படும் சாந்தமான செம்மறிக்கு நான் நிகரானேன். "மரத்தை அதன் கனிகளோடு அழிப்போம், வாழ்வோரின் நாட்டினின்று அவனை ஒழிப்போம்; அவன் பெயரே இல்லாமற் போகும்படி செய்வோம்" என்று எனக்கு எதிராகச் சதித் திட்டங்கள் தீட்டினார்கள்; நானோ அதை அறியாதிருந்தேன்.
20 சேனைகளின் ஆண்டவரே, நீரோ நீதியோடு நடுத்தீர்க்கிறவர், மனத்தின் மறை பொருள்களையும் இதயத்தின் சிந்தனைகளையும் சோதிக்கிறவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் பார்க்கவேண்டும்; ஏனெனில் உம்மிடமே என் வழக்கைக் கூறினேன்.
21 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: ''ஆண்டவர் திருப்பெயரால் இறைவாக்குரைக்காதே; மீறி உரைத்தால் எங்கள் கைகளினாலேயே சாவாய்' என்று சொல்லி உன் உயிரைப் பறிக்கத் தேடும் அநாத்தோத்து மனிதர்களைப் பற்றிய நமது தீர்மானம் இதுவே.
22 இதோ நாமே அவர்களைத் தண்டிப்போம்; இளைஞர்கள் வாளால் சாவார்கள்; அவர்களின் புதல்வரும் புதல்வியரும் பஞ்சத்தால் மடிவார்கள்.
23 அவர்களுள் யாரும் மீதியாய் விடப்பட மாட்டார்கள்: நாம் அநாத்தோத்து மனிதர்களைத் தண்டிக்கும் ஆண்டில் அவர்கள் மேல் தீங்கை வரச் செய்வோம்" என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
அதிகாரம் 12
1 ஆண்டவரே, உம்மோடு நான் வழக்காடினால், நீரே நீதியுள்ளவர் என்று விளங்கும்; இருப்பினும் நான் உம்மிடம் சில முறையீடுகளைச் செய்து கொள்கிறேன்: தீயவர்கள் வாழ்க்கையில் வளமுடன் இருப்பது ஏன்? அநியாமும் அக்கிரமும் செய்கிறவர்கள் நலமாய் வாழ்வதேன்?
2 நீர் அவர்களை நாட்டினீர்; அவர்கள் வேர்விட்டுப் பெருகி, வளர்ந்து கனி கொடுக்கிறார்கள்; அவர்கள் தங்கள் வாயால் உம்மைப் புகழ்கிறார்கள்; ஆனால், அவர்கள் உள்ளமோ எவ்வளவோ தொலைவிலுள்ளது.
3 ஆண்டவரே, நீர் என்னை அறிவீர், என்னைப் பார்த்தீர்; என் உள்ளத்தைப் பரிசோதிக்கிறீர்; அது உம்மோடு உள்ளது. அடிக்கப்படுவதற்கென இருக்கும் ஆடுகளைப் போல் அவர்களையும் ஒன்று சேர்த்துக் கொலை நாளுக்காக அவர்களைத் தயாராய் வைத்தருளும்.
4 எத்தனை நாட்களுக்கு நாடு அழுகையில் மூழ்கியிருக்கும்? எந்நாள் வரையில் பூமியின் புற்களெல்லாம் உலரும்? நாட்டுக் குடிகள் செய்த கொடுமையின் காரணமாய் மிருகங்களும் பறவைகளும் அழிக்கப்பட்டன; ஏனெனில் மனிதர்கள், "நமது இறுதி முடிவை அவர் காணமாட்டார்" என்று சொன்னார்கள்.
5 கால் நடையாய்ச் செல்பவர்களோடு ஓடும் போதே நீ களைத்துப் போவாயாகில், குதிரைகளோடு எவ்வாறு நீ போட்டியிடுவாய்? அமைதியான நாட்டிலேயே நீ அஞ்சி நடுங்குவாயாகில், யோர்தானுக்கடுத்த காடுகளில் நீ என்ன செய்வாய்?
6 உன் சகோதரரும் உன் தந்தையின் வீட்டாரும் கூட உன்னிடத்தில் வஞ்சமாய் நடந்துகொண்டார்கள்; உனக்குப் பின்னால் சத்தமிட்டு ஆரவாரம் செய்தார்கள்; அவர்கள் உன்னிடம் இனிய வார்த்தைகளைப் பேசினாலும் நீ அவர்களை நம்பாதே."
7 "நாம் நமது வீட்டைக் கைவிட்டு விட்டோம்; நம் உரிமைச் சொத்தைப் புறக்கணித்து விட்டோம்; நம் உயிருக்குயிரானவளை அவளுடைய பகைவர்களின் கையில் ஒப்படைத்து விட்டோம்;
8 நம் உரிமைச் சொத்து நமக்குக் காட்டுச் சிங்கமாயிற்று; நமக்கு எதிராய்க் கர்ச்சனை செய்கிறது; ஆகவே நாம் அதனைப் பகைக்கிறோம்.
9 நம் உரிமைச் சொத்து பல வண்ணப் பறவையாயிற்றோ? அதைச் சூழ்ந்து பட்சிக்கும் பறவைகள் கூடினவோ? காட்டிலுள்ள எல்லாக் கொடிய மிருகங்களையும் கூட்டுங்கள்; அதனை விழுங்க விரைந்து வரச் செய்யுங்கள்.
10 ஆயர்கள் பலர் நம் திராட்சைத் தோட்டத்தை அழித்தார்கள்; நமது பாகத்தை மிதித்துத் தள்ளினார்கள்; நம் இன்பப் பானத்தைப் பாழான பாலை நிலமாக்கி விட்டனர்.
11 அவர்கள் அதைப் பாழ்வெளியாக்கினர்; பாழாயின பின் அது நம்மை நோக்கி ஓலமிடுகிறது; நாடெல்லாம் காடாகி விட்டது; ஏனெனில் அதை ஆழ்ந்து சிந்திப்பவர் யாருமில்லை.
12 பாலை நிலத்தில் உள்ள மொட்டை மேடுகளின் மேல் எங்கும் பாழாக்குவோர் வந்துள்ளனர்; ஏனெனில் ஆண்டவரின் வாள், நாட்டின் ஒரு கோடி முதல் மறு கோடி வரை எல்லாவற்றையும் அழிக்கும்; யாரும் அமைதியாய் இருக்க முடியாது.
13 கோதுமை விதைத்தார்கள்; ஆனால் முட்களை அறுத்தார்கள்; உடல் வருத்தி உழைத்தார்கள்; ஆனால் பலனேதும் பெறவில்லை; தங்கள் அறுவடையைப் பார்த்து வெட்கி நாணுவார்கள்; ஆண்டவரின் கடுஞ் சினமே அதற்குக் காரணம்."
14 நம் மக்களாகிய இஸ்ராயேலுக்கு நாம் பகிர்ந்து கொடுத்த சொத்தைப் பிடுங்கும் கொடிய மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: "இதோ நாம் அவர்களைத் தங்கள் நாட்டிலிருந்து வேரோடு களைவோம்; யூதாவின் வீட்டையும் அவர்கள் நடுவிலிருந்து களைவோம்;
15 இவ்வாறு அவர்களை நாம் களைந்த பின்னர், மீண்டும் அவர்கள் மேல் நாம் இரங்குவோம்; அவர்களுள் ஒவ்வொருவரையும் தத்தம் உரிமைச் சொத்துக்கும், சொந்த நாட்டுக்கும் திரும்பக் கூட்டிவருவோம்;
16 அவர்களும் நம் மக்களின் நன்னெறிகளை அக்கறையாய்க் கற்றுக் கொண்டு முன்னொருகால் பாகால் பெயரால் ஆணையிடும்படி நம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தது போல், இப்போது 'உயிருள்ள ஆண்டவர் மேல் ஆணை' என்று நம் பெயரால் ஆணையிடுவார்களாகில், அவர்களும் நம் மக்கள் நடுவில் நலமாக வாழ்வார்கள்;
17 ஆனால், எந்த மக்களினமாவது நம் சொற்களைக் கேளாமல் போனால், அந்த இனம் முழுவதையும் வேரோடு களைந்து அழிப்போம், என்கிறார் ஆண்டவர்,"
அதிகாரம் 13
1 ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "நீ போய் உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி உன் இடையில் கட்டிக்கொள்; அதனைத் தண்ணீரில் துவைக்காதே."
2 ஆண்டவரின் வார்த்தைக்கேற்ப ஒரு கச்சை வாங்கி என் இடையில் கட்டிக் கொண்டேன்.
3 ஆண்டவரின் வாக்கு எனக்கு இரண்டாம் முறையாக அருளப்பட்டது:
4 நீ வாங்கி, இடையில் கட்டியிருக்கும் கச்சையை அவிழ்த்து எடுத்துக் கொண்டு, எழுந்து எப்பிராத்து நதிக்குப் போய் அங்கே கல் இடுக்கில் மறைத்து வை" என்றார்.
5 ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டவாறே நான் போய் அதனை எப்பிராத்து நதியின் ஓரத்திலே மறைத்து வைத்தேன். நாட்கள் பல கடந்த பின்னர் ஆண்டவர் ஒருநாள் என்னிடம்,
6 நீ எழுந்து எப்பிராத்துக்குப் போய் அங்கே நாம் மறைத்து வைக்கும்படி உனக்குச் சொன்ன அந்தக் கச்சையை அங்கிருந்து எடுத்துக் கொள்" என்றார்.
7 நான் அவ்வாறே எப்பிராத்துக்குப் போய், அந்தக் கச்சையைப் புதைத்த இடத்தைத் தோண்டி அதனை எடுத்தேன்; இதோ அந்தக் கச்சை ஒன்றுக்கும் பயன்படாதபடி நைந்து போயிருந்தது.
8 பின்னர், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
9 ஆண்டவர் கூறுகிறார்: இவ்வாறு யூதாவின் செருக்கையும் யெருசலேமின் மிஞ்சின இறுமாப்பையும் நையச் செய்வோம்.
10 நம் சொற்களைக் கேளாமல் தங்கள் இதயத்தின் பிடிவாதப் போக்கில் நடந்து, அந்நிய தெய்வங்களைப் பின்சென்று, சேவித்து, வழிபட்டு வருகிற இந்தக் கொடிய மக்கள் ஒன்றுக்கும் உதவாத இக்கச்சையைப் போல் ஆவார்கள்.
11 கச்சை மனிதனின் இடையில் ஒட்டிச் சேர்ந்திருப்பது போல், இஸ்ராயேல் வீடு முழுவதையும், யூதாவின் வீடு முழுவதையும், நம்மோடு ஒன்றித்திருக்கச் செய்தோம்; அவர்கள் நமக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மகிமையாகவும் இருக்கும்படி செய்திருந்தோம்; ஆயினும் அவர்கள் நமக்குச் செவிசாய்க்கவில்லை", என்கிறார் ஆண்டவர்.
12 "நீ அவர்களுக்கு இவ்வார்த்தையைச் சொல்: 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "சித்தைகள் யாவும் திராட்சை இரசத்தால் நிரப்பப்படும்." அவர்கள்: 'சித்தைகள் யாவும் திராட்சை இரசத்தால் நிரப்பப்படும் என்று எங்களுக்குத் தெரியாதா?' என்பார்கள்.
13 அப்போது நீ அவர்களுக்குச் சொல்: 'ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்கள், அர்ச்சகர்கள், இறைவாக்கினர்கள், யெருசலேமில் வாழும் எல்லாக் குடிகளும் உட்பட, இந்நாட்டு மக்களனைவரையும் நாம் போதையால் நிரப்புவோம்.
14 ஒருவனோடு ஒருவன் மோதி நொறுங்கச் செய்வோம்; பிள்ளைகள் தங்கள் தந்தையோடு முட்டிக் கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர். அவர்கள் மேல் நாம் இரக்கம் காட்டவோ, அவர்களைக் காப்பாற்றவோ, அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டோம்; அவர்களை அழிக்காமல் விடோம்."
15 கேளுங்கள்; காது கொடுத்துக் கேளுங்கள்; செருக்கடையாதீர்கள்; ஏனெனில் ஆண்டவர் பேசுகிறார்:
16 உங்களை இருள் மூடிக்கொள்வதற்கு முன்னும், உங்கள் கால்கள் மலைகளின் இருளில் இடறு முன்னரும், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மகிமைப் படுத்துங்கள்; நீங்கள் ஒளியைத் தேடிப் பார்ப்பீர்கள்; அவரோ அதனை உங்களுக்கு மந்தாரமாகவும் காரிருளாகவும் மாற்றி விடுவார்.
17 ஆனால் நீங்கள் இதனைக் கேளாவிடில், உங்கள் இறுமாப்புக்காக என் உள்ளம் மறைவில் அழும்; என் கண்கள் கலங்கிக் கண்ணீர் விடும்; ஏனெனில் ஆண்டவரின் மந்தை அடிமையாய்ப் பிடிபட்டது.
18 அரசனுக்கும் அரசிக்கும் சொல்: "தாழ்ந்த இருக்கையில் உட்காருங்கள்; ஏனெனில் உங்கள் மகிமையான மணிமுடி உங்கள் தலையிலிருந்து விழுந்து போயிற்று."
19 தென்னாட்டுப் பட்டணங்களெல்லாம் அடைக்கப்பட்டன; அவற்றைத் திறப்பவர் யாருமில்லை; யூதேயா முழுவதும் நாடுகடத்தப்பட்டது;
20 "உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கிலிருந்து வருகிறவர்களைப் பாருங்கள். உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட மந்தை, அந்தச் சிறந்த மந்தை எங்கே?
21 உன் நண்பர்களாக உன்னிடம் வரும்படி நீ பழக்கினவர்களை உன் மேல். அதிகாரம் உள்ளவர்களாக ஏற்படுத்தும் போது நீ என்ன சொல்லுவாய்? பிரசவிக்கும் பெண்ணின் வேதனைக்கு ஒப்பான வேதனைகள் உன்னைப் பீடிக்காமல் இருக்குமோ?
22 இவை யாவும் எனக்கு ஏன் நேர்ந்தன?' என்று உன் உள்ளத்தில் கேட்பாயாகில் உன் மிகுதியான அக்கிரமத்தாலேயே உன் மானம் பறந்து போனது; உன் கால்கள் அவமானத்துக்கு உள்ளாயின.
23 எத்தியோப்பியன் தன் தோல் நிறத்தை மாற்ற இயலுமா? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்ற முடியுமா? அப்படி முடியுமானால், தீமையே செய்யப் பழகிக் கொண்ட நீங்களும் நன்மை செய்யக் கூடும்.
24 பாலை நிலக் காற்றில் பறந்தோடும் துரும்பைப் போல, நாம் உங்களை எங்கணும் சிதறடிப்போம்.
25 இதுவே உன் கதி; தீமைக்கேற்ப நாம் அளந்து கொடுத்த பலன்; ஏனெனில் நீ நம்மை அறவே மறந்து விட்டாய்; பொய்களை நம்பினாய், என்கிறார் ஆண்டவர்.
26 நாமே உன் ஆடைகளை உன் முகத்துக்கு மேல் தூக்குவோம்; அப்போது உன் மானம் காணப்படும்;
27 உன் அருவருப்பான செயல்களும் விபசாரங்களும், உன் காமக் கனைப்புகளும், பரந்த வெளியில் குன்றுகளின் மேல் நீ செய்த வெறிகொண்ட வேசித்தனங்களும் நம் பார்வைக்குத் தப்பவில்லை. யெருசலெமே, உனக்கு ஐயோ கேடு! நீ சுத்தமாக்கப்படாமல் இன்னும் எத்துணைக் காலம் இருப்பாய்?"
அதிகாரம் 14
1 மழையில்லா வறட்சியைப் பற்றி எரெமியாசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:
2 யூதா கதறியழுகிறது; அதன் வாயில்கள் சோர்ந்து போயின; அதன் மக்கள் தரையில் உட்கார்ந்து புலம்புகிறார்கள்; யெருசலேமின் கூக்கூரல் எழும்புகிறது.
3 அதன் பெருங்குடி மக்கள் தங்கள் ஊழியரைத் தண்ணீருக்கனுப்புகிறார்கள்; அவர்கள் கேணிக்குச் செல்கிறார்கள்; தண்ணீரைக் காணாமல் வெறும் குடத்தோடு திரும்புகிறார்கள்; வெட்கி நாணித் தங்கள் தலையை மூடிக் கொள்கிறார்கள்.
4 பூமியில் மழையில்லாமையால், கழனியெல்லாம் வெடித்திருக்கிறது; உழவர்கள் நாணித் தலையில் முக்காடிட்டுக் கொள்கிறார்கள்.
5 கன்று போடும் பெண் மானும் காட்டிலே புல்லில்லாமையால் தன் கன்றைக் கைவிட்டு ஓடிப் போகும்.
6 காட்டுக் கழுதைகள் மொட்டைக் குன்றுகள் மேல் நின்று, குள்ள நரிகளைப் போலக் காற்றுக்காக மூச்சுத் திணறுகின்றன; பச்சையே காணாததால் கண் பூத்து விழுகின்றன.
7 ஆண்டவரே, எங்கள் பாவங்களுக்கு எண்ணிக்கையில்லை; உமக்கு விரோதமாய் நாங்கள் துரோகம் செய்தோம்; எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு எதிராய்ச் சான்று சொன்னாலும், உமது பெயரை முன்னிட்டு இரங்கியருளும்.
8 இஸ்ராயேலின் நம்பிக்கையே, துன்ப வேளையில் அதன் மீட்பரே, உமது நாட்டில் நீர் அந்நியனைப் போல் இருப்பதேன்? இராத்தங்க நின்ற வழிப்போக்கனைப் போல் இருப்பதேன்?
9 மதி மயங்கிய மனிதனைப் போல நீர் ஆவானேன்? காப்பாற்றும் திறனற்ற வீரனுக்கு ஒப்பாவானேன்? ஆயினும் ஆண்டவரே, நீர் எங்கள் நடுவில் இருக்கின்றீர்; நாங்கள் உம் பெயரைப் பூண்டிருக்கிறோம்; ஆதலால் எங்களைக் கைவிட வேண்டாம்."
10 இந்த மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுகிறார்: "அவர்கள் இவ்வாறு அலைந்து திரிய விரும்பினார்கள்; தங்கள் கால்களைக் கட்டுப்படுத்தவில்லை; ஆகையால் ஆண்டவர் அவர்களை ஏற்றுக் கொள்கிறதில்லை; இப்பொழுது அவர்களுடைய அக்கிரமத்தை நினைவு கூர்ந்து அவர்களைத் தண்டிப்பார்."
11 ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "இந்த மக்களின் நன்மையைக் கோரி நீ மன்றாட வேண்டாம்;
12 அவர்கள் உண்ணா நோன்பு இருந்தாலும், அவர்கள் கூக்குரலை நாம் கேட்கமாட்டோம்; அவர்கள் நமக்குத் தகனப் பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் சமர்ப்பித்தாலும், அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; அவர்களை வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மாய்த்து விடப் போகிறோம்."
13 அப்போது நான்: "ஐயோ ஆண்டவராகிய இறைவனே, இதோ, 'வாளும் பஞ்சமும் உங்களுக்கு வாரா. ஆனால், இந்த இடத்தில் உங்களுக்கு நீடித்த சமாதானத்தைத் தருவோம்' என்று அவர்களுக்குத் தீர்க்கதரிசிகள் கூறுகிறார்களே" என்றேன்.
14 அதற்கு ஆண்டவர் என்னை நோக்கி, "அந்தத் தீர்க்கதரிசிகள் நமது திருப்பெயரால் பொய்களைத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்; நாம் அவர்களை அனுப்பவில்லை; அவர்களுக்குக் கற்பிக்கவுமில்லை; அவர்களோடு பேசவுமில்லை; அவர்கள் உங்களுக்குத் தீர்க்க தரிசனமாய்ச் சொல்பவை வெறும் பொய்க் காட்சிகள், பயனற்ற குறிகள், தங்கள் சொந்த மனத்தின் வஞ்சகங்கள்.
15 ஆதலால் ஆண்டவர் இந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றிக் கூறுகிறார்: நாம் அனுப்பாமலே இந்தத் தீர்க்கதரிசிகள், 'வாளும் பஞ்சமும் இந்நாட்டின் மேல் வாரா' என்று நமது திருப்பெயரால் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். ஆயினும் இந்தத் தீர்க்கதரிசிகளே வாளாலும் பஞ்சத்தாலும் மாய்வார்கள்.
16 மேலும் அவர்கள் தீர்க்கதரிசனத்தைக் கேட்கும் மக்களும் பஞ்சத்துக்கும் வாளுக்கும் இரையாகி, யெருசலேமின் தெருக்களில் தள்ளுண்டு கிடப்பார்கள். இவர்களையும், அவர்களின் மனைவியரையும், புதல்வர், புதல்வியரையும் புதைக்க யாருமில்லை; ஏனெனில் அவர்கள் தீமையை அவர்கள் மேலேயே பொழிவோம்.
17 நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: 'என் கண்கள் இடைவிடாது இரவும் பகலும் கண்ணீர் சொரியட்டும்; ஏனெனில் என் இனமாகிய கன்னிப்பெண் நொறுக்குண்டு நைந்து படுகாயமுற்றாள்;
18 நான் வெளியே போனால், இதோ, இங்கே வாளால் மடிந்தவர்கள்! நான் பட்டணத்துக்குள் நுழைந்தால், இதோ, அங்கே பட்டினியால் மாய்ந்தவர்கள்! தீர்க்கதரிசியும் அர்ச்சகரும் நாடெல்லாம் அலைந்து திரிகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு அறிவு இல்லை."
19 ஆண்டவரே, யூதாவை முற்றிலும் வெறுத்து விட்டீரா? சீயோன் உமது மனத்துக்கு அருவருப்பாகி விட்டதோ? நாங்கள் நலமாக முடியாத வகையில் ஏன் எங்களைக் காயப்படுத்தினீர்? நாங்கள் சமாதானத்தைத் தேடினோம்; ஆனால் ஒரு நன்மையும் விளையவில்லை; நலமாக்கப்படும் காலத்தை எதிர்ப்பார்த்தோம்; இதோ திகில் தான் ஆட்கொண்டது.
20 ஆண்டவரே, எங்கள் கெடு மதியையும் எங்கள் தந்தையரின் அக்கிரமத்தையும் ஒப்புக்கொள்கிறோம்; ஏனெனில் உமக்கெதிராய் நாங்கள் பாவம் செய்தோம்.
21 உமது திருப்பெயரை முன்னிட்டு, எங்களை வெறுத்துத் தள்ளாதிரும்; உமது மகிமை மிகு அரியணையை அவமதிக்காதேயும்; எங்களோடு நீர் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்து விடாதேயும்.
22 புறவினத்தாரின் பொய்த் தெய்வங்களுள் மழை பெய்விக்கக் கூடியவர் உண்டோ? அல்லது வானந்தான் தானாகவே மழை பெய்யுமா? எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, நீரல்லவோ அப்படிப்பட்டவர்? உம் மீது தான் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம்; ஏனெனில் இவற்றையெல்லாம் செய்பவர் நீரே.
அதிகாரம் 15
1 அப்பொழுது ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "மோயீசனும் சாமுவேலும் நம் முன்னிலையில் வந்து நின்று மன்றாடினாலும் நம் உள்ளம் இந்த மக்கள் பக்கம் திரும்பாது; நமது முன்னிலையிலிருந்து அவர்களை விரட்டு; தூரமாய் அவர்கள் தொலைந்து போகட்டும்!
2 'நாங்கள் எங்கே போவோம்? 'என்று அவர்கள் கேட்பார்களாகில், நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது இதுவே: ஆண்டவர் கூறுகிறார்: எவன் சாவுக்குரியவனோ அவன் சாவுக்கும், எவன் வாளுக்குரியவனோ அவன் வாளுக்கும், எவன் பஞ்சத்துக்குரியவனோ அவன் பஞ்சத்துக்கும், எவன் அடிமைத்தனத்திற்கு உரியவனோ அவன் அடிமைத்தனத்திற்கும் போகட்டும்!"
3 நால்வகை நாசக்காரரை அவர்களுக்கு எதிராய் நாம் ஏற்படுத்துவோம்: அவர்களை வதைக்க வாளையும், கிழிக்க நாய்களையும், அடித்துக் கடித்து விழுங்க வானத்துப் பறவைகளையும், பூமியின் மிருகங்களையும் அனுப்புவோம்.
4 யூதாவின் அரசனாகிய எசேக்கியாசின் மகனான மனாசே என்பவன் யெருசலேமில் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும் அவர்களை உலகிலுள்ள அரசுகளுக்கெல்லாம் கொடூரக் காட்சியின் அடையாளமாக்குவோம்.
5 "யெருசலேமே, உன்மேல் இரக்கம் காட்டுகிறவன் யார்? உனக்காக வருத்தப்படுகிறவன் யார்? உன்னிடம் திரும்பி உன் நலத்தை விசாரிக்கிறவன் யார்?
6 நீ நம்மைக் கைவிட்டாய்; பின்னடைந்து போனாய்; ஆதலால் நம் கரத்தை உனக்கெதிராய் நீட்டி உன்னை வதைத்தோம். உனக்கு இரக்கம் காட்டி நாம் சலித்துப் போனோம், என்கிறார் ஆண்டவர்.
7 பூமியின் நாற்புறங்களிலும் அவர்களை நாம் தூற்றுக் கூடையால் தூற்றியிறைத்தோம். அவர்களை வதைத்தோம்; நம் மக்களைச் சிதறடித்தோம். ஆயினும் அவர்கள் தீ நெறிகளினின்று திரும்பி வரவில்லை.
8 கடற்கரை மணலை விட அவர்களுள் கைம்பெண்களை மிகப் பலராக்கினோம்; வாலிபர்களின் தாய்மார்களுக்கு எதிராகப் பட்டப் பகலில் கொலைகாரனைக் கூட்டி வந்தோம்; கவலையும் திகிலும் அவர்களைத் திடீரெனத் தாக்கச் செய்தோம்.
9 ஏழு பேரைப் பெற்றவள் சோர்வுற்றாள்; அவள் மயங்கி விழுந்தாள்; வெளிச்சம் இருக்கும் போதே அவள் வாழ்வின் மாலை நேரம் வந்து விட்டது, வெட்கமும் நாணமுமே அவளுக்குரியன. அவளுடைய மீதிப் பிள்ளைகளைப் பகைவர் முன்னிலையில் வாளுக்கு இரையாக்குவோம், என்கிறார் ஆண்டவர்."
10 "என் தாயே, எனக்கு ஐயோ கேடு! நாடெங்கும் வழக்குக்கும் விவாதத்துக்கும் காரணமாய் இருக்கும்படி என்னை நீ பெற்றாயே! நான் வட்டிக்குப் பணம் கொடுக்கவுமில்லை; அல்லது வட்டிக்குக் கடன் வாங்கியதுமில்லை; இருப்பினும் என்னை எல்லாரும் சபிக்கிறார்கள்."
11 அதற்கு ஆண்டவர் கூறினார்: "நீ இறுதிக் காலத்தில் நலமடைவாய்; உன் துன்ப நாட்களிலும் இடையூறு காலத்திலும் உன் பகைவர்க்கு எதிராய் நாம் உனக்கு உதவி செய்வோம் என்று ஆணையிடுகிறோம்.
12 வட நாட்டிலிருந்து வந்த இரும்பையும் வெண்கலத்தையும் உடைக்க வல்லர் யார்?
13 உங்கள் எல்லைப் புறங்களின் எல்லா இடங்களிலும், உங்கள் பாவங்கள் அனைத்திற்கும் தண்டனையாக உங்கள் செல்வங்கள், கருவூலங்கள் முதலியவற்றை இலவசக் கொள்ளைப் பொருளாய்க் கொடுப்போம்.
14 நீங்கள் அறியாத நாட்டில் உங்கள் பகைவர்க்கு உங்களை ஊழியம் செய்ய வைப்போம்: ஏனெனில் நமது கோபத் தீ மூண்டுவிட்டது; அது என்றென்றைக்கும் எரிந்துகொண்டிருக்கும்."
15 ஆண்டவரே, நீர் என்னை அறிவீர்; என்னை நினைவு கூர்ந்து, என்னைக் காத்தருளும்; என்னைத் துன்புறுத்துகிறவர்களை எனக்காகப் பழிவாங்கும்; என்னை ஆதரிக்கக் காலந்தாழ்த்தாதேயும்; நான் உமக்காகத் துன்புறுகிறேன் என்பதை நினைத்தருளும்.
16 உம் வார்த்தைகளைக் கண்டடைந்தேன்; அவற்றை உண்டேன்; உம் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியாயின; என் உள்ளத்திற்கு இன்பந் தந்தன. சேனைகளின் கடவுளாகிய ஆண்டவரே, உமது திருப் பெயரன்றோ எனக்கு வழங்குகிறது?
17 களிப்பவர் கூட்டத்தில் நான் அமர்ந்து மகிழ்ந்ததில்லை, நான் தனியனாய் அமர்ந்திருந்தேன்; ஏனெனில் உம் கரம் என் மேல் இருந்தது, நீர் என்னைச் சினத்தால் நிரப்பியிருந்தீர்.
18 ஏன் என் துன்பம் நீடித்திருக்கின்றது? என் காயம் ஆறாத கொடிய புண்ணாயிருப்பதேன்? நீர் எனக்கு வஞ்சகக் கானல் நீராயும், பயனற்று வற்றிப் போகும் நீரோடையாயும் இருப்பீரோ?"
19 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: "நீ திரும்பி வந்தால், நாம் உன்னைப் பழைய நிலையில் வைப்போம், நீ நம் முன்னிலையில் நிற்பாய்; உயர்வானதை உரைத்துப் பயனற்றதை விலக்கினால் நீ நமது வாயாக இருப்பாய்; அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்; நீ அவர்களிடம் திரும்ப மாட்டாய்.
20 இந்த மக்களின் முன்னிலையில் நாம் உன்னை அசைக்க முடியாத வெண்கலச் சுவர் போலாக்குவோம்; அவர்கள் உனக்கெதிராய்ப் போரிடுவார்கள்; ஆனால் உன்னை மேற்கொள்ள அவர்களால் இயலாது; ஏனெனில் உன்னை மீட்கவும் விடுவிக்கவும் நாம் உன்னோடிருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்.
21 கொடியவர்களின் கையினின்று நாம் உன்னை விடுவிப்போம்; முரடர்கள் பிடியினின்று உன்னை மீட்போம்."
அதிகாரம் 16
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;
2 நீ பெண் தேடி மணஞ்செய்து கொள்ளாதே; இந்த இடத்தில் புதல்வரோ புதல்வியரோ உனக்கு இருக்க வேண்டாம்;
3 ஏனெனில் இவ்விடத்தில் பிறக்கும் புதல்வர், புதல்வியரையும், அவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்கள், தந்தைமார்களையும் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே:
4 அவர்கள் கொடிய நோய்களால் மடிவார்கள்; அவர்களுக்காக அழுது புலம்புவார் யாருமிரார்; அவர்களை யாரும் அடக்கம் செய்யமாட்டார்கள்; சாணக் குவியல் போலப் பூமியின் மேல் கிடப்பார்கள்; வாளாலும் பஞ்சத்தாலும் சாவார்கள். அவர்களுடைய உயிரற்ற உடல் வானத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
5 ஆண்டவர் கூறுகிறார்: நீ துக்கம் கொண்டாடும் வீட்டுக்குள் போகாதே; இழவுக்குப் போகவேண்டாம்; அவர்களைத் தேற்றவும் வேண்டாம்; ஏனெனில் நம்முடைய சமாதானத்தையும் இரக்கத்தையும் நிலையான அன்பையும் இந்த மக்களிடமிருந்து எடுத்து விட்டோம்;
6 இந்நாட்டில் பெரியோரும் சிறியோரும் மடிவார்கள்; அவர்கள் அடக்கம் செய்யப்பட மாட்டார்கள்; அவர்களுக்காக இழவு கொண்டாட மாட்டார்கள்; அவர்களுக்காக யாரும் தங்களைக் காயப்படுத்திக் கொள்ளவோ தலையை மொட்டையடித்துக் கொள்ளவோ மாட்டார்கள்.
7 செத்தவனுக்காக அழுகிறவனைத் தேற்ற ஓர் அப்பத்துண்டு கொடுப்பவர் அவர்களுக்குள் இல்லை; இறந்த தாய், தந்தையர்க்காகத் துயரப்படுகிறவனுக்கு ஆறுதலாக ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பார் யாருமில்லை.
8 விருந்து நடக்கும் எவ்வீட்டுக்கும் போகாதே; அவர்களோடு பந்தியமராதே; உண்ணாதே; குடியாதே.
9 ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ இந்த நாட்டில், உங்கள் நாட்களில், உங்கள் கண் முன்பாகவே அக்களிப்பின் ஆரவாரத்தையும், அகமகிழ்ச்சியின் சந்தடியையும், மணவாளன், மணவாட்டி ஆகியோரின் குரல்களையும் ஒழித்து விடுவோம்.
10 நீ இந்த மக்களுக்கு இவ்வார்த்தைகளை எல்லாம் அறிவிக்கும் போது, அவர்கள் உன்னை நோக்கி, 'ஆண்டவர் ஏன் எங்களுக்கு எதிராக இம்மாபெரும் தீங்கை அறிவித்தார்? நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? எங்கள் ஆண்டவருக்கு எதிராக நாங்கள் செய்த பாவம் என்ன?' என்று கேட்பார்கள்.
11 அப்போது நீ இவ்வாறு சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: உங்கள் முன்னோர்கள் நம்மைக் கைவிட்டு அந்நிய தெய்வங்களைப் பின் சென்று, அவர்களைச் சேவித்து, அவர்களை வழிபட்டு, நம்மைப் புறக்கணித்து, நமது சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை.
12 ஆனால், நீங்கள் உங்கள் தந்தையரை விடப் பெருந்தீமை செய்தீர்கள்; இதோ ஒவ்வொருவனும் நமக்குக் காதுகொடாமல் தன் தீய இதயத்தின் கெட்ட இச்சைப்படி நடக்கின்றான்;
13 ஆகையால், உங்களை இந் நாட்டினின்று நீங்களோ உங்கள் தந்தையரோ அறியாத நாட்டுக்குத் துரத்துவோம்; அங்கே அந்நிய தெய்வங்களுக்கு இரவும் பகலும் தொண்டு புரிவீர்கள்; நாமோ உங்களுக்கு இரக்கம் காட்ட மாட்டோம்.'
14 "ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாட்கள் வருகின்றன; அப்போது: 'எகிப்து நாட்டினின்று இஸ்ராயேல் மக்களை மீட்டு வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்று சொல்லப்படாது;
15 ஆனால், 'வட நாட்டினின்றும், அவர்கள் துரத்தப்பட்டிருந்த எல்லா நாடுகளினின்றும் இஸ்ராயேல் மக்களைக் கூட்டி வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்றே சொல்லப்படும். ஏனெனில் அவர்களுடைய முன்னோர்களுக்கு நாம் கொடுத்த அவர்களின் சொந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்ப அழைத்து வருவோம்.
16 "ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாம் செம்படவர் பலரை அனுப்புவோம்; இவர்கள் அவர்களை வலைபோட்டுப் பிடிப்பார்கள்; அதன் பின்பு வேடர் பலரை அனுப்புவோம்; இவர்கள் அவர்களை ஒவ்வொரு மலையிலும் குன்றிலும் மலையிடுக்குகளிலும் வேட்டையாடுவார்கள்;
17 ஏனெனில் நம்முடைய கண்கள் அவர்களின் செயல்களையெல்லாம் நோக்குகின்றன; அவை நம் முன்னிலையில் மறைந்தவை அல்ல; அவர்களுடைய அக்கிரமம் நம் கண்களுக்குப் புலப்படாமல் போவதில்லை.
18 முதற்கண், அவர்களின் அக்கிரமத்துக்கும் பாவத்திற்கும் இரட்டிப்பான தண்டனை தருவோம்; ஏனெனில், அருவருப்பான சிலைகளின் உயிரற்ற உருவங்களால்; நமது நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள்; தங்கள் அருவருப்பான செயல்களால் நாம் அவர்களுக்கு உரிமைச் சொத்தாய் அளித்த நாட்டை நிரப்பினார்கள்."
19 ஆண்டவரே, என் வல்லமையே, என் அரணே, இடையூறு காலத்தில் என் புகலிடமே, புறக்குலத்தார் பூமியின் கடை கோடிகளினின்று வந்து, "எங்கள் தந்தையார் பொய்களையும் மாயையும், ஒன்றுக்கும் பயன்படாதவற்றையுமே உரிமைச் சொத்தாய்ப் பெற்றுக் கொண்டார்கள்;
20 தனக்கென மனிதன் தெய்வங்களைப் படைக்க முடியுமோ? அத்தகைய படைப்புகள் தெய்வங்கள் அல்லவே" என்று உம்மிடம் சொல்வார்கள்.
21 ஆதலால், இதோ, இந்தத் தடவை அவர்களுக்குக் காட்டுவோம்: அவர்களுக்கு நமது கரத்தையும், அதன் வல்லமையையும் காட்டுவோம்; அப்போது அவர்கள் நமது திருப்பெயர் ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வார்கள்."
அதிகாரம் 17
1 "யூதாவின் அக்கிரமம் இரும்பெழுத்தாணியால், வைரத்துண்டின் முனையால் வரையப்பட்டிருக்கின்றது; அது அவர்களின் இதயப் பலகையிலும், பீடங்களின் மூலைகளிலும் எழுதப்பட்டிருக்கிறது.
2 அவர்களுடைய பிள்ளைகள், அவர்களின் பீடங்களும் புனித கோலங்களும், தழை செறிந்த மரங்களின் கீழும் உயர்ந்த குன்றுகளிலும், மலைகளிலும் திறந்த வெளிகளிலும் இருப்பதை நினைத்துக் கொண்டனர்.
3 ஆகையால், நீ கட்டிக் கொண்ட பாவத்திற்காக உன் நாடெங்குமுள்ள செல்வங்களையும் கருவூலங்களையும் நாம் சூறையாடுவோம்.
4 நாம் உனக்குக் கொடுத்த உரிமைச் சொத்து, உன்னிடத்தினின்று பறிமுதல் செய்யப்படும்; நீ அறியாத நாட்டில் உன் பகைவர்களுக்கு உன்னை நாம் அடிமையாக்குவோம்; ஏனெனில் நமது கோபத் தீயை மூட்டினாய்; அது என்றென்றும் மூண்டெரியும்."
5 ஆண்டவர் கூறுகிறார்: 'மனிதனை நம்புகிறவன் சபிக்கப்பட்டவன்; மனித பலவீனத்தையே அவன் தன் வலிமையாய்க் கொள்கிறான்; தன் இதயத்தை ஆண்டவரிடமிருந்து அகற்றுகிறான்.
6 அவன் பாலைநிலத்துப் பூண்டுக்குச் சமம்; நன்மை வந்தாலும் அதில் பலனைக் காண மாட்டான்; வறட்சி மிக்க பாலை நிலத்திலும் வாழ முடியாத உவர் நிலத்திலுமே அவன் குடியிருப்பு
7 ஆண்டவரை நம்புகிறவனோ ஆசி பெற்றவன்; ஆண்டவரே அவனுடைய நம்பிக்கை;
8 அவன் நீரருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பானவன்; அது ஈரத்தில் வேரூன்றி இருக்கும்; கோடைக்காலத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையோடிருக்கும்; வறட்சிக் காலத்தில் அதற்குக் கவலையில்லை; அது ஒருகாலும் கனி கெடாதிருக்காது."
9 இதயம் அனைத்தையும் விட வஞ்சனையுள்ளது; மிகவும் கெட்டுப் போனது; அதனை அறிகிறவன் எவன்?
10 ஆண்டவராகிய நாம் உள்ளத்தை ஆராய்கிறோம், இதயத்தைப் பரிசோதிக்கிறோம்; ஒவ்வொருவனுடைய நடத்தைக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு பலனளிக்கிறோம்."
11 அநியாயமாய்ச் செல்வம் திரட்டுகிறவன், தானிடாத முட்டைகளை அடைகாக்கும் கவுதாரிக்கு ஒப்பாவான்; பாதி நாட்களிலேயே இவற்றை இழந்து, கடைசி நாளில் பைத்தியனென்று சொல்லப்படுவான்.
12 ஆதி முதல் மகிமைக்குரிய உயர்ந்த அரியணை நமக்குண்டு; நமது பரிசுத்ததனத்தின் இடம் அதுவே;
13 ஆண்டவரே, இஸ்ராயேலின் நம்பிக்கையே, உம்மைக் கைவிட்டவர்கள் வெட்கி நாணுவார்கள்; உம்மை விட்டு விலகினவர்கள் மண்ணில் வரையப்பட்டவர்கள்; ஏனெனில் உயிருள்ள நீரின் ஊற்றாகிய ஆண்டவரைக் கைவிட்டு விட்டார்கள்.
14 ஆண்டவரே, என்னைக் குணப்படுத்தும், நான் குணமாவேன்; என்னை மீட்டருளும், நான் மீட்படைவேன்; ஏனெனில் நீரே என் பெருமை.
15 இதோ, அவர்கள்: "ஆண்டவரின் வாக்கெங்கே? அது நிறைவேறட்டும்" என்று என்னிடம் சொல்லுகிறார்கள்.
16 நானோ தீமையை அனுப்பும்படி உம்மை வற்புறுத்தவில்லை; அழிவின் நாளையும் நான் ஆசிக்கவில்லை; இதெல்லாம் உமக்குத் தெரியுமே! என் உதடுகளினின்று புறப்பட்டது உம் முகத்தின் முன்னால் இருக்கின்றதே!
17 நீர் எனக்குத் திகிலாய் இராதீர்; தீமையின் நாளில் என் புகலிடம் நீரே.
18 என்னைத் துன்புறுத்துகிறவர்கள் நாணக் கடவார்கள்; ஆனால், நான் நாணமுறாதிருக்கச் செய்யும்; அவர்கள் நடுங்கித் திகில் அடையட்டும்; நான் நடுங்காதிருப்பேனாக! துன்ப நாளை அவர்கள் மீது கொண்டு வாரும், இரட்டிப்பான அழிவினால் அவர்களை நசுக்கும்!
19 ஆண்டவர் என்னிடம் சொன்னார்: "நீ போய், யூதாவின் மன்னர்கள் உள்ளே போவதற்கும் வெளியே வருவதற்கும் பயன்படும் பொதுமக்கள் வாயிலிலும், யெருசலேமின் ஒவ்வொரு வாயிலிலும் நின்று கொண்டு,
20 அவர்களுக்கு அறிவி: "இந்த வாயில்கள் வழியாய் உள்ளே போகின்ற யூதாவின் மன்னர்களே, யூதா நாட்டு மக்களே, யெருசலேமின் குடிகளே, ஆண்டவருடைய வாக்கியத்தைக் கேளுங்கள்:
21 ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் உயிரைக் காத்துக்கொள்ளுங்கள்; ஓய்வு நாளில் சுமை தூக்க வேண்டாம்; அல்லது அதை யெருசலேமின் வாயில்கள் வழியாய் உள்ளே கொண்டு வரவும் வேண்டாம்.
22 ஓய்வு நாளில் உங்கள் வீடுகளினின்று சுமைகள் எடுக்க வேண்டாம். எந்த வேலையும் செய்யாதீர்கள்; உங்கள் முன்னோருக்கு நாம் கற்பித்தவாறு ஓய்வு நாளைப் பரிசுத்தப்படுத்துங்கள்.
23 ஆயினும் அதனை அவர்கள் கேட்டவர்களுமல்லர்; அதற்குக் காது கொடுத்தவர்களுமல்லர்; கேட்டுக் கற்றுக் கொள்ளாதபடி வணங்காக் கழுத்தாயினர்.
24 ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: நீங்கள் நம் சொல்லுக்கமைந்து, ஓய்வு நாளில் இப்பட்டணத்தின் வாயில்கள் வழியாய்ச் சுமைகள் கொண்டு வராமலும், எந்த வேலையும் செய்யாமலும், ஓய்வு நாளைப் பரிசுத்தமாய்க் காப்பீர்களாகில்,
25 அரசர்களும் தலைவர்களும், தேர்களிலும் குதிரைகளிலும் ஏறி இப்பட்டணத்தின் வாயில் வழியாய் உள்ளே வந்து, தாவீதின் அரியணையில் அமர்வார்கள்; அவர்களுடன் அவர்களின் தலைவர்களும், யூதாவின் மனிதர்களும், யெருசலேமின் குடிகளும் உள்ளே போவார்கள்; இப்பட்டணம் என்றென்றும் மனிதர்களின் குடியிருப்பாய் விளங்கும்.
26 அப்போது, யூதாவின் பட்டணங்கள், யெருசலேமின் சுற்றுப்புறங்கள், பென்யமீன் நாடு, சிற்றூர்கள், மலைநாடு, தென்னாடு முதலிய இடங்களிலிருந்து மக்கள் தகனப் பலிகளையும் மற்றப் பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் தூபத்தையும் நன்றிப் பலிகளையும் கொண்டு வந்து, ஆண்டவரின் கோயிலில் அர்ப்பணம் செய்வார்கள்.
27 ஆனால் நமது சொல்லுக்கமைந்து ஓய்வு நாளைப் பரிசுத்தப்படுத்தாமலும், ஓய்வு நாளில் யெருசலேமின் வாயில் வழியாய்ச் சுமை தூக்கிக் கொண்டு உள்ளே வருவதை நிறுத்தாமலும் இருந்தீர்களாகில், அதன் வாயில்களில் தீ வைப்போம்; யெருசலேமின் அரண்மனைகள் அதற்கு இரையாகும்; தீயும் அவியாது மூண்டெரியும்"
அதிகாரம் 18
1 ஆண்டவர் எரெமியாசுக்கு அருளிய வாக்கு:
2 "நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ; அங்கு நம்முடைய வாக்கியங்களைக் கேட்பாய்."
3 அவ்வாறே நான் குயவன் வீட்டுக்குப் போனேன்; அவன் தன் சக்கரத்தினால் வேலை செய்து கொண்டிருந்தான்.
4 அவன் மண்ணால் வனையும் பாண்டம் சரியாக அமையாத போதெல்லாம், அவன் திரும்பவும் செய்ய முற்பட்டுத் தனக்குச் சரியெனத் தோன்றியவாறு அதனை வேறொரு கலமாகச் செய்தான்.
5 அப்பொழுது ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
6 இஸ்ராயேல் வீடே, இந்தக் குயவன் செய்ததைப் போல நாம் உனக்குச் செய்ய முடியாதா, என்கிறார் ஆண்டவர். இஸ்ராயேல் வீடே, இதோ, குயவன் கையில் இம்மண் எப்படியோ, அப்படியே நம் கையில் நீங்கள் இருக்கிறீர்கள்.
7 நாம் ஒரு நாட்டையோ ஓர் அரசையோ வேரோடு பிடுங்கி, தகர்த்து அழிக்கப் போவதாக அறிவித்திருக்கலாம்.
8 ஆனால் நாம் குறிப்பிட்ட அந்த நாடு தன் தீமையை விட்டுத் திரும்புமாயின், அதற்கு நாம் தீமை செய்ய நினைத்ததற்காக மனம் வருந்துவோம்.
9 அவ்வாறே நாம் ஒரு நாட்டையோ ஓர் அரசையோ கட்டி நிலைநாட்டப் போவதாக அறிவித்திருக்கலாம்.
10 ஆனால், அது நம் சொல்லைக் கேளாமல், நம் முன்னிலையில் தீமை செய்யுமானால் அதற்கு நன்மை செய்ய நினைத்ததற்காக நாம் மனம் வருந்துவோம்.
11 ஆகையால் இப்பொழுது நீ யூதாவின் மக்களையும் யெருசலேமின் குடிகளையும் நோக்கிச் சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் உங்களுக்கு ஒரு தீங்குச் செய்யக் கருதுகின்றோம்; உங்களுக்கு எதிராய் ஒரு திட்டம் தீட்டுகின்றோம். ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீய நெறியினின்று திரும்புங்கள்; உங்கள் நடத்தையையும் செயல்களையும் செவ்வைப்படுத்துங்கள்.'
12 ஆனால் அவர்கள், "சொல்லிப் பயனில்லை; நாங்கள் எங்களுடைய யோசனைகளையே பின்பற்றுவோம்; எங்களில் ஒவ்வொருவரும் அவரவருடைய தீய இதயத்தின் பிடிவாதப் போக்கிலேயே நடப்போம்' என்று சொல்லுகிறார்கள்.
13 "ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இத்தகைய காரியத்தைப் பற்றி யாரேனும் கேள்விப்பட்டதுண்டா என, புறவினத்தார்களிடையே கேட்டுப் பாருங்கள்; இஸ்ராயேலாகிய கன்னிகை மிகவும் அருவருப்பான காரியத்தைச் செய்தாள்.
14 லீபான் மலையிலுள்ள உறைநீர் பாறையை விட்.டு அற்றுப் போவதுண்டோ? மிக்க வேகமாய்ப் பாய்ந்திடும் குளிர்ந்த தண்ணீர் நிறுத்தப்படுவதுண்டோ?
15 நம் மக்களோ நம்மை மறந்துவிட்டார்கள்; பொய்த் தெய்வங்களுக்குத் தூபம் காட்டுகிறார்கள்; தங்கள் வழிகளிலும் பழைய சாலைகளிலும் தடுமாறினார்கள்; நெடுஞ்சாலையை விட்டுக் காட்டு வழிகளிலே சென்றார்கள்;
16 இவ்வாறு நடந்து, தங்கள் நாடு திகிலுக்குரியதாகவும், என்றென்றும் பழிக்கத் தக்கதாகவும் ஆக்கினர்; அவ்வழியாய்க் கடந்து செல்லும் ஒவ்வொருவனும் திகைத்துத் தனது தலையை அசைக்கிறான்.
17 கீழைக் காற்றைப் போல நாம் அவர்களை அவர்களின் பகைவர் முன் சிதறடிப்போம்; அவர்களுடைய துன்ப காலத்தில் அவர்களுக்கு நம் முகத்தைக் காட்டாமல் முதுகையே காட்டுவோம்."
18 அப்போது அவர்கள், "வாருங்கள், எரெமியாசுக்கு எதிராய்ச் சூழ்ச்சிகள் செய்வோம்; அர்ச்சகரிடமிருந்து சட்டம் அழியாது; ஞானியிடமிருந்து அறிவுரை போகாது; இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கு ஒழியாது. ஆதலால் வாருங்கள், நாவினால் அவனைத் தாக்குவோம்; அவன் வார்த்தைகளை நாம் பொருட்படுத்தலாகாது" என்று சொன்னார்கள்.
19 ஆண்டவரே, எனக்குக் காதுகொடும்; என் பகைவர்கள் சொல்வதைக் கேளும்;
20 நன்மைக்குத் தீமை செய்யலாமா? என் உயிருக்குக் குழி வெட்டியிருக்கிறார்களே! நான் அவர்களுக்கு நன்மையைக் கோரிடவும், உம் கோபத்தை அவர்களிடமிருந்து தடுத்து நீக்கவும் உம் முன்னிலையில் வந்து நின்றதை நினைத்தருளும்.
21 ஆதலால், அவர்களுடைய மக்களைப் பஞ்சத்திற்குக் கையளியும்; அவர்களை வாளுக்கு இரையாக்கும்; அவர்களின் மனைவிமார் பிள்ளையில்லாதவர்களாகவும், கைம்பெண்களாகவும் ஆகட்டும்; அவர்களின் கணவர்மார் கொள்ளை நோயால் சாகட்டும்; அவர்களுடைய வாலிபர்கள் போரில் வாளால் மடியட்டும்.
22 நீர் திடீரென அவர்கள்மேல் கொள்ளைக் கூட்டத்தைக் கொண்டு வந்து விடும் போது, அவர்களின் வீடுகளிலிருந்து கூக்குரல் கேட்கப்படுவதாக! ஏனெனில், அவர்கள் என்னைப் பிடிக்கப் படுகுழி வெட்டினார்கள்; என் கால்களுக்குக் கண்ணி வைத்தார்கள்.
23 ஆயினும், ஆண்டவரே, என்னைக் கொல்ல அவர்கள் செய்யும் சூழ்ச்சியை நீர் அறிவீர். அவர்களுடைய அக்கிரமத்தை மன்னியாதேயும்; அவர்கள் குற்றத்தை உம் பார்வையிலிருந்து போக்காதேயும்; அவர்கள் உம் முன்னிலையில் வீழ்ச்சியடைக! உமது கோபத்தின் காலத்தில் அவர்களைக் கொடுமையாய் நடத்தும்.
அதிகாரம் 19
1 ஆண்டவர் எனக்குச் சொன்ன வாக்கு: "நீ போய்க் குயவனிடம் மட்கலம் ஒன்றை வாங்கிக் கொண்டு, மக்களின் மூப்பர்களுள் சிலரையும், அர்ச்சகர்களுள் முதியோர் சிலரையும் உன்னுடன் கூட்டிக் கொண்டு,
2 இன்னோம் மகனின் பள்ளத்தாக்குக்குச் சென்று, 'பானை ஓட்டு வாயில்' அருகே நின்று, நாம் உனக்குச் சொல்லும் வார்த்தைகளை அறிவி:
3 நீ சொல்ல வேண்டியது: 'யூதாவின் மன்னர்களே, யெருசலேமின் குடிகளே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: கேட்பவன் எவனும் தன் காதைப் பொத்திக் கொள்ளும் அளவுக்கு மாபெரும் தீங்கை இந்த இடத்தின் மேல் கொண்டு வருவோம்;
4 ஏனெனில், அவர்கள் நம்மைக் கைவிட்டு, இந்த இடத்தை அசுத்த இடமாக்கி, தாங்களும் தங்கள் முன்னோரும், யூதாவின் அரசர்களும் அறியாத அந்நிய தெய்வங்களுக்கு இவ்விடத்தில் தூபங்காட்டினார்கள்; மேலும் இந்த இடத்தை மாசற்றவர்களின் இரத்தத்தால் நிரப்பினார்கள்;
5 பாகாலுக்குத் தகனப் பலிகளாகத் தங்கள் பிள்ளைகளைச் சுட்டெரிக்க, பாகாலுக்கெனப் பீடங்களைக் கட்டினார்கள்; அவற்றை நாம் அவர்களுக்குக் கற்பிக்கவுமில்லை; சொல்லித் தரவுமில்லை; நமது மனத்தில் கருதவுமில்லை.
6 ஆதலால், இதோ நாட்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்; அப்போது இவ்விடம் இனி தோப்பேத்து என்றோ, இன்னோம் மகனின் பள்ளத்தாக்கு என்றோ சொல்லப்படாது; ஆனால் படுகொலையின் பள்ளத்தாக்கு என்றே சொல்லப்படும்.
7 இவ்விடத்தில் யூதாவின் திட்டங்களையும், யெருசலேமின் எண்ணங்களையும் அழிப்போம்; அவர்களின் பகைவர் முன்னிலையில் அவர்களை வாளால் வீழ்த்துவோம்; அவர்கள் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்களின் கையில் அவர்களை ஒப்புவிப்போம்; அவர்களுடைய உடல்களை வானத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகப் போடுவோம்.
8 இப்பட்டணத்தைத் திகைப்புக்கும் நகைப்புக்கும் இலக்காகச் செய்வோம்; அதன் வழியாய்ப் போகிறவன் எவனும் அதன் ஆக்கினைகளையெல்லாம் கண்டு,
9 திகைத்து நிந்தை கூறுவான். தங்களுடைய சொந்தப் புதல்வர், புதல்வியரின் சதையையே அவர்கள் தின்னும்படி செய்வேன்; அவர்களுடைய பகைவர்கள் முற்றுகையிட்டு, வளைத்துக் கொண்டு, நெருக்கி, அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுகையில், ஒவ்வொருவனும் தன் அயலானின் சதையைப் பிடுங்கித் தின்பான்.'
10 அப்போது உன்னுடன் வந்த அந்த மனிதர்களின் முன்னிலையில் மட்கலத்தை உடைத்துப் போட்டு, அவர்களுக்குச் சொல்:
11 'சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: திரும்பச் செப்பனிட முடியாத விதமாய் உடைந்து போன குயவனின் மட்கலத்தைப் போல். இந்த மக்களையும், இந்தப் பட்டணத்தையும் உடைப்போம்; அவர்களைப் புதைக்க வேறிடமில்லாமையால் தோப்பேத்திலேயே புதைப்பார்கள்;
12 இந்த இடத்தின் மட்டிலும், இதன் குடிகள் மட்டிலும் இவ்வாறே நடந்து கொள்வோம்; இப்பட்டணத்தைத் தோப்பேத்தைப் போலாக்குவோம், என்கிறார் ஆண்டவர்.
13 யெருசலேமின் வீடுகளும், யூதா மன்னர்களின் வீடுகளும்- எந்த வீடுகளின் கூரைகளில் வான் படைகளுக்குத் தூபம் காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானப் பலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளனைத்தும், தோப்பேத்து என்னும் இடத்தைப் போலத் தீட்டுப்படுத்தப்படும்."
14 ஆண்டவர் இறைவாக்குரைக்கும்படி அனுப்பின தோப்பேத்து என்னும் இடத்திலிருந்து எரெமியாஸ் திரும்பி வந்து, ஆண்டவரின் கோயில் தலைவாயிலில் நின்று கொண்டு, மக்கள் அனைவருக்கும் அறிவித்தார்:
15 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் இந்தப் பட்டணத்திற்கு விரோதமாய் அறிவித்த எல்லாத் தீமைகளையும், இப்பட்டணத்தின் மீதும், இதைச் சுற்றியுள்ள நகரங்கள் மீதும், கொண்டு வருவோம்; ஏனெனில் அவர்கள் நம்முடைய வார்த்தைகளைக் கேளாமல் வணங்காக் கழுத்தினராயினர்."
அதிகாரம் 20
1 ஆண்டவரின் கோயிலில் தலைவராக ஏற்படுத்தப்பட்டிருந்த எம்மோர் என்பவரின் மகனும் அர்ச்சகருமான பாசூர் என்பவன் எரெமியாஸ் இவ்வார்த்தைகளை இறைவாக்காகச் சொல்லக் கேட்டான்;
2 கேட்டதும் பாசூர் எரெமியாஸ் இறைவாக்கினரை அடித்து, ஆண்டவரின் கோயிலில் பென்யமீன் வாயிலருகில் இருந்த சிறைக்கூடத்தில் அவரை அடைத்தான்;
3 மறுநாள் விடிந்த பின்னர், பாசூர் எரெமியாசைச் சிறையினின்று விடுவித்தான்; அப்போது எரெமியாஸ் அவனைப் பார்த்துச் சொன்னார்: "ஆண்டவர் உன் பெயரை இனிப் பாசூர் என்று சொல்லாமல், 'எப்பக்கமும் திகில்' என்று அழைக்கிறார்.
4 ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாம் உனக்கும் உன் நண்பர்களுக்கும் திகில் உண்டாக்குவோம்; அவர்கள் தங்கள் பகைவர்களின் வாளால் மடிவார்கள்; உன் கண்கள் அதையெல்லாம் பார்க்கும்; நாம் யூதாவை முற்றிலும் பபிலோனிய அரசன் கையில் விட்டு விடுவோம்; அவன் அவர்களைப் பபிலோனுக்கு அழைத்துக் கொண்டு போய் வாளுக்கு இரையாக்குவான்;
5 மேலும் இப்பட்டணத்தின் எல்லாச் செல்வங்களையும், ஈட்டிய எல்லாப் பொருட்களையும், விலையுயர்ந்த பொருட்களையும், யூதா மன்னர்களின் கருவூலங்கள் அனைத்தையும் அவர்களின் பகைவர்கள் கைவசம் விட்டு விடுவோம்; அவர்கள் அவற்றைப் பறிமுதல் செய்து பபிலோனுக்கு வாரிக் கொண்டு போவார்கள்.
6 பாசூர், நீயும் உன் வீட்டில் வாழ்வோர் அனைவரும் அடிமைகளாய்ப் போவீர்கள்; நீ பபிலோனுக்குப் போய், அங்கேயே செத்து, நீயும், உன் கள்ளத் தீர்க்கதரிசனங்களைக் கேட்ட என் நண்பர்கள் யாவரும் அங்குப் புதைக்கப்படுவார்கள்."
7 ஆண்டவரே, நீர் என்னை மயக்கிவிட்டீர், நானும் மயங்கிப் போனேன்; நீர் என்னை விட வல்லமை மிக்கவர், ஆகவே நீர் என்னை மேற்கொண்டு விட்டீர்; நாள் முழுவதும் நான் நகைப்புக்குள்ளானேன்; என்னை எல்லாரும் ஏளனம் செய்கிறார்கள்.
8 ஏனெனில் நான் பேசும் போதெல்லாம், உரக்கக் கத்துகிறேன்; "கொடுமை! அழிவு!" என்று தான் கூவி அறிவிக்கிறேன்; ஆண்டவருடைய வார்த்தை நாள் முழுவதும் எனக்கே நிந்தையாகவும் நகைப்பாகவும் ஆயிற்று.
9 அவரைப் பற்றிக் குறிப்பிட மாட்டேன், அவர் பேரால் இனிப் பேசவும் மாட்டேன்" என்பேனாகில், என் எலும்புகள் எரியும் நெருப்பால் பற்றி எரிவது போல் இருக்கிறது. அதனை அடக்கி வைத்து, அடக்கி வைத்துச் சோர்ந்து போனேன், என்னால் அதை அடக்கி வைக்க முடியவில்லை.
10 என்னைப் பலரும் பழித்துரைப்பதைக் கேட்கிறேன்; "எப்பக்கமும் திகில் இருக்கிறது!" "அவன் மேல் பழி சுமத்துங்கள், வாருங்கள் அவன் மேல் பழிசுமத்துவோம்" என்கிறார்கள். என்னோடு நெருங்கிப் பழகிய என் நண்பர்கள் கூட, என் வீழ்ச்சியை எதிர்ப்பார்க்கிறார்கள்: "ஒருவேளை அவன் ஏமாந்து போவான், அப்பொழுது நாம் அவனை மேற்கொள்வோம், அவன்மேல் பழித்தீர்த்துக் கொள்வோம்" என்கிறார்கள்.
11 ஆனால் ஆண்டவர் வலிமை மிகுந்த போர் வீரனைப் போல் என்னோடு இருக்கின்றார்; ஆதலால் என்னைத் துன்புறுத்துகிறவர்கள் இடறி விழுவார்கள்; என்னை அவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள். அவர்கள் மிகவும் வெட்கி நாணுவார்கள்; ஏனெனில் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்; அவர்கள் அடைந்த இழிவு என்றென்றும் நீடிக்கும்; ஒருகாலும் அது மறக்கப்படாது.
12 சேனைகளின் ஆண்டவரே, நீதிமானைச் சோதிக்கிறவரே, உள்ளத்தையும் இதயத்தையும் பார்க்கிறவரே, நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் பார்க்க வேண்டும்; ஏனெனில் உம்மிடந்தான் என் வழக்கைச் சொன்னேன்.
13 ஆண்டவரைப் பாடிப் புகழுங்கள்; ஆண்டவரை வாழ்த்திப் போற்றுங்கள்; ஏனெனில் ஏழையின் உயிரைத் தீயோர் கையினின்று விடுவித்தார்.
14 நான் பிறந்த அந்த நாள் சபிக்கப்படுக! என் அன்னை என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப் படாதிருக்க!
15 உனக்கோர் ஆண் குழந்தை பிறந்துள்ளது" என்று என் தந்தைக்குச் செய்தி கொணர்ந்து, அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த அந்த மனிதன் சபிக்கப்படுக!
16 ஆண்டவர் இரக்கமின்றி வீழ்த்திய நகரங்களைப் போல் அந்த மனிதன் ஆகுக! காலையில் கூக்குரலையும், நண்பகலில் போர் ஆரவாரத்தையும், அந்த மனிதன் கேட்பானாக!
17 தாய் வயிற்றிலேயே, நான் கொல்லப்பட்டிருக்கலாகாதா! என்னை வயிற்றிலேயே, சுமந்திருந்த நேரத்திலேயே அப்போது என் தாயே எனக்குக் கல்லறையாய் இருந்திருப்பாள்.
18 தாய் வயிற்றை விட்டு ஏன் தான் நான் வெளிப்பட்டேனோ! உழைப்பையும் துயரத்தையும் அனுபவிக்கவும், என் நாட்களை வெட்கத்தில் கழிக்கவுந்தான் பிறத்தேனோ!
அதிகாரம் 21
1 செதேசியாஸ் மன்னன் மெல்கியாசின் மகனான பாசூரையும், மகாசியாசின் மகனான சொப்போனியாஸ் என்கிற அர்ச்சகரையும் எரெமியாசிடம் தூதனுப்பிய போது, ஆண்டவரிடமிருந்து அவருக்கு அருளப்பட்ட வாக்கு இதுவே:
2 அத்தூதுவர் வந்து அவரிடம், "நபுக்கோதனசார் அரசன் நமக்கு எதிராகப் படையெடுத்து வந்துள்ளான்; ஆண்டவர் ஒருகால் தம் வியத்தகு செயல்களுக்கேற்றவாறு நமக்கு உதவி செய்து, அவன் நம்மிடமிருந்து பின்வாங்கிப் போகச் செய்வார்; இதுபற்றி ஆண்டவரைக் கேட்டுச் சொல்" என்று சொன்னார்கள்.
3 அப்போது எரெமியாஸ் அவர்களுக்குக் கூறிய மறுமொழி:
4 நீங்கள் போய்ச் செதேசியாஸ் மன்னனுக்குப் பின்வருமாறு சொல்லுங்கள்: 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: மதில்களைச் சூழ்ந்து முற்றுகையிட்டு உங்களை வளைத்து நிற்கும் பபிலோனிய அரசனோடும், கல்தேயரோடும் நீங்கள் போராடுவதற்குப் பயன்படுத்தும் போர்க் கருவிகளை உங்களுக்கு விரோதமாகவே திருப்புவோம்; அவற்றை இந்நகரத்துக்குள் வரச் செய்வோம்.
5 நமது கரத்தை நீட்டி, நம் வல்லமையைக் காட்டிச் சினத்தோடும் ஆத்திரத்தோடும் பெருங் கோபத்தோடும் நாமே உங்களுக்கு விரோதமாய்ப் போராடுவோம்;
6 இப்பட்டணத்தின் குடிகளை நையப் புடைப்போம்; மனிதர்களும் மிருகங்களும் கொள்ளை நோயால் மடிவார்கள்;
7 அதன் பின், யூதாவின் அரசனான செதேசியாசையும், அவனுடைய ஊழியரையும், மக்களையும், இன்னும் இப்பட்டணத்தில் கொள்ளை நோய், வாள், பஞ்சம் இவற்றுக்குத் தப்பினவர்களையும், பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் கையிலும், அவர்களுடைய பகைவர்களின் கையிலும், அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும் நாம் ஒப்புவிப்போம்; அவன் அவர்களை வாளுக்கு இரையாக்குவான்; அவர்கள் மேல் மனம் இளக மாட்டான்: அவர்களை மன்னிக்கவும் மாட்டான்; அவர்களுக்கு இரக்கம் காட்டவும் மாட்டான், என்கிறார் ஆண்டவர்.'
8 மேலும் அந்த மக்களுக்கு இவ்வாறு அறிவி: 'ஆண்டவர் கூறுகிறார்: இதோ உங்களுக்கு முன் இரண்டு வழிகளைக் காட்டுகிறோம்: ஒன்று, வாழ்வின் வழி; மற்றது, சாவின் வழி.
9 இப்பட்டணத்தில் தங்கி விடுபவன் வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவான்; ஆனால் வெளியேறி உங்களை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டிருக்கும் கல்தேயரிடம் சரணடைபவன் உயிர் வாழ்வான்; அவன் உயிர் அவனுக்குப் போரில் கிடைத்த கொள்ளைப் பொருளாகும்.
10 இப்பட்டணத்தின் மீது நன்மையை அல்ல, தீமையையே வரச் செய்யத் தீர்மானிக்கிறோம்; அது பபிலோனிய அரசன் கையில் ஒப்புவிக்கப்படும்; அதனை அவன் நெருப்பினால் சுட்டெரிப்பான், என்கிறார் ஆண்டவர்.'
11 "யூதாவின் அரச குடும்பத்திற்கும் சொல்: 'ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்:
12 தாவீதின் வீடே, ஆண்டவர் கூறுகிறார்: காலை நேரத்திலேயே நீதி செலுத்துங்கள், கொள்ளையடிக்கப் பட்டவனை ஒடுக்குபவன் கையினின்று விடுதலை செய்யுங்கள்; இல்லையேல், நமது கோபம் நெருப்புப் போல மூண்டெழும்பும்; உங்கள் தீய செயல்களின் காரணமாய் இது பற்றியெரியும்; அதை அணைக்க யாராலும் இயலாது.'
13 பள்ளத்தாக்கில் இருக்கும் பட்டணமே, சமவெளியில் அமைந்திருக்கும் கற்பாறையே, 'நமக்கெதிராய் வருபவன் யார்? நம் வீடுகளில் நுழைபவன் யார்?' என்கிறாயே, இதோ, நாமே உனக்கு எதிராய் வருகிறோம், என்கிறார் ஆண்டவர்;
14 உங்கள் செயல்களின் பலனுக்கேற்றவாறு உங்களைத் தண்டிப்போம்; யெருசலேமின் காட்டில் நெருப்பை மூட்டுவோம், அதைச் சுற்றியுள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும், என்கிறார் ஆண்டவர்."
அதிகாரம் 22
1 ஆண்டவர் கூறுகிறார்: "நீ யூதாவின் அரசன் வீட்டுக்குச் சென்று அங்குச் சொல்ல வேண்டிய வாக்கு இதுவே:
2 தாவீதின் அரியணையில் உட்கார்ந்திருக்கிற யூதாவின் அரசே, ஆண்டவருடைய வாக்கைக் கேளும்; நீரும், உம் ஊழியர்களும், இந்த வாயில்களுக்குள் நுழையும் உம் மக்களும் ஆண்டவர் சொல்வதற்குச் செவி கொடுங்கள்.
3 ஆண்டவர் கூறுகிறார்: நீதியையும் நேர்மையையும் கடைப்பிடியுங்கள்; ஒடுக்குகிறவன் கையினின்று இடுக்கண்படுகிறவனை விடுதலை செய்யுங்கள்; அந்நியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் மனநோகப் பண்ணவேண்டாம்; அவர்களைக் கொடுமை செய்யாதீர்கள்; இந்த இடத்தில் மாசற்ற இரத்தத்தைச் சிந்தவேண்டாம்;
4 இவ்வார்த்தையை நுணுக்கமாய் நிறைவேற்றுவீர்களாகில், தாவீதின் குலத்தில் தோன்றிய அரசர்கள் அவரது அரியணையில் அமர்வார்கள்; தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிக் கொண்டு அவர்களும், அவர்களின் ஊழியர்களும், மக்களும் இவ்வீட்டின் வாயில்கள் வழியாய் உள்ளே நுழைவார்கள்.
5 இவ்வார்த்தைகளை நீங்கள் கேளாவிடில்,- நமதுபேரில் ஆணை!- இவ்வீடு காடாகும், என்கிறார் ஆண்டவர்.
6 மீண்டும் யூதாவின் அரச குலத்துக்கு விரோதமாய் ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே: ' நீ நமக்கு கலஹாத்தைப் போலவும், லீபான் மலையின் கொடுமுடி போலவும் இருக்கிறாய்; இருப்பினும், உன்னைப் பாலை நிலமாக்குவோம், குடிகளற்ற நகரமாக்குவோம்.
7 உனக்கு மாறாய் எழும்பும் கொலைஞர்களையும், அவர்களின் ஆயுதங்களையும் நாம் தயாராக்குவோம்; உன்னுடைய சிறந்த கேதுரு மரங்களை வெட்டி நெருப்பில் போடுவார்கள்.
8 பல்வேறு மக்கள் இப்பட்டணத்தின் வீதிகளில் சுற்றித் திரிந்து, ஒவ்வொருவனும் தன் அயலானை நோக்கி," இப்பெரிய பட்டணத்திற்கு ஆண்டவர் ஏன் இவ்வாறு செய்தார்?" என்பான்.
9 அதற்கு அவர்கள், "தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையை அவர்கள் புறக்கணித்து, அந்நிய தெய்வங்களை ஆராதித்துத் தொண்டு புரிந்தமையாலே" என்று பதில் கூறுவார்கள்."
10 இறந்தவனைப் பற்றி அழவேண்டாம்; அவனுக்காகத் துக்கம் கொண்டாட வேண்டாம்: புறப்படுகிறவனைப் பற்றியே அழுங்கள்; ஏனெனில் அவன் ஒருகாலும் திரும்பி வர மாட்டான், தன் பிறந்த நாட்டையும் மறுபடி பாரான்.
11 தன் தந்தை யோசியாசுக்குப் பதிலாய் அரசாண்டு வந்த யோசியாசின் மகனும், யூதாவின் அரசனுமாகிய செல்லோமைக் குறித்து ஆண்டவர் கூறிய வாக்கு இதுவே: "இந்த இடத்திலிருந்து புறப்பட்டுப் போன அவன் இனி ஒருபோதும் மீண்டுவரான்.
12 அவன் அடிமையாய்க் கொண்டு போகப்பட்ட இடத்திலேயே சாவான்; இனி ஒருபோதும் இந்நாட்டைப் பாரான்."
13 "அநியாயமாய்த் தன் வீட்டையும், அக்கிரமமாய்த் தன் அறைகளையும் கட்டுகிறவனுக்கு ஐயோ கேடு! அவன் தன் அயலானைக் கூலியின்றி உழைக்கச் செய்கிறான்; அவனுக்குக் கூலி கொடுக்கிறதில்லை.
14 அவன், 'பெரிய வீட்டையும் அகலமான மேலறைகளையும் எனக்குக் கட்டிக் கொள்வேன்' என்கிறான்; அவன் தனக்குப் பலகணிகளை அமைத்துக் கொள்கிறான்; கேதுரு பலகையால் சுவரை மூடிச் சிவப்பு வண்ணம் பூசி அழகுபடுத்துகிறான்.
15 கேதுரு மர வேலைப்பாட்டில் உன் வீடு பிறர் வீட்டினும் மேம்பட்டிருப்பதாலேயே நீ அரசனாய் இருக்கிறாயோ? உன் தந்தை உண்டு குடித்து இன்பமாய் வாழ்ந்த போதும், நீதியாயும் நேர்மையாயும் நடக்கவில்லையா?
16 ஏழையின் வழக்கையும் எளியவனின் வழக்கையும் தீர்த்து, அதனால் தனக்கு நன்மை தேடிக் கொண்டான்; இதெல்லாம் செய்வதே நம்மை அறிதல் அன்றோ? என்கிறார் ஆண்டவர்.
17 ஆனால் உன் கண்களும் உன் இதயமும், அநியாயமாய்ச் செல்வம் சேர்ப்பதிலும், மாசற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும், பிறரை ஒடுக்கித் துன்புறுத்துவதிலுமே நோக்கம் கொண்டவை."
18 ஆதலால் யூதாவின் அரசனும் யோசியாசின் மகனுமான யோவாக்கீமுக்கு ஆண்டவர் கூறும் வாக்கு இதுவே: 'ஐயோ, சகோதரனே! ஐயோ, சகோதரியே!" என்று அவனைக் குறித்து அழமாட்டார்கள்; 'ஐயோ, ஆண்டவனே! ஐயோ, மாட்சியுள்ளோனே!' என்று சொல்லிப் புலம்ப மாட்டார்கள்;
19 ஒரு கழுதையைப் போல் அவன் புதைக்கப்படுவான்; புழுத்து யெருசலேமின் வாயில்களுக்கப்பால் எறியப்படுவான்."
20 "லீபான் மலை மேலேறிக் கூவு; பாசானில் உனது குரலையுயர்த்தி, உன் அன்பரெல்லாரும் இதோ நசுக்கப்பட்டார்கள் என்று அவரிடம் மலை மேலிருந்து கூவு.
21 நல்ல காலத்திலேயே உனக்குச் சொன்னோம்; நீயோ 'நான் கேட்க மாட்டேன்' என்றாய்; நம்முடைய வாக்கைக் கேளாத வழக்கம் உனக்கு இளமையிலிருந்தே இருக்கிறது.
22 உன்னுடைய மேய்ப்பர்களைக் கடுங்காற்றே மேய்த்து நடத்தும்; உன் அன்பர்கள் உன்னோடு அடிமைத் தனத்திற்குச் செல்வார்கள்; அப்போது நீ உன் கெடு மதியை எண்ணி வெட்கி நாணுவாய்.
23 லீபானில் விற்றிருக்கும் நீ, கேதுரு மரத்தில் கூடு கட்டியிருக்கும் நீ, பிரசவிக்கும் பெண்ணின் துன்பங்களைப் போன்ற துன்பங்கள் உனக்கு நேரும் போது நீ எவ்வாறு விம்முவாயோ!"
24 ஆண்டவர் கூறுகிறார்: நம் உயிர் மேல் ஆணை! யூதாவின் அரசனாகிய யோவாக்கீமுடைய மகன் எக்கோனியாஸ் நமது வலக்கை விரலின் மோதிரம் போலிருப்பினும், அதிலிருந்து உன்னைக் கழற்றி விடுவோம்;
25 உன் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும், நீ எவருடைய முகத்தைப் பார்க்க அஞ்சுகிறாயோ, அவர்கள் கையிலும், பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் கையிலும், கல்தேயர் கையிலுமே உன்னை ஒப்புவிப்போம்.
26 உன்னையும் உன்னைப் பெற்ற தாயையும் நீங்கள் பிறவாத அந்நிய நாட்டுக்குத் துரத்துவோம். நீங்கள் அங்கேயே சாவீர்கள்.
27 திரும்பி வருவதற்கு மிக விரும்பும் இந்நாட்டிற்கோ அவர்கள் மீண்டும் வரவே மாட்டார்கள்."
28 எக்கோனியாஸ் என்கிற அந்த மனிதன் உடைந்த மட்கலந்தானோ? ஒருவரும் விரும்பாத பானையோ? ஏன் அவனும் அவன் பிள்ளைகளும் தள்ளப்பட்டார்கள்? அறியாத நாட்டுக்குத் துரத்தப்பட்டார்கள்?
29 நாடே! நாடே! நாடே! ஆண்டவருடைய வார்த்தையைக் கேள்:
30 ஆண்டவர் கூறுகிறார்: "இந்த மனிதன் மக்கட் பேறற்றவன், தன் வாழ்நாளில் வெற்றி காணாதவன் என்று எழுது; ஏனெனில் தாவீதின் அரியணையில் உட்காரவும், இனி யூதாவில் அரசு செலுத்தவும், இவனது சந்ததியில் யாருமிரார்."
அதிகாரம் 23
1 "நமது மேய்ச்சலின் ஆடுகளைச் சிதறடித்துப் பாழாக்கும் ஆயர்களுக்கு ஐயோ கேடு!" என்கிறார் ஆண்டவர்.
2 நம் மக்களாகிய மந்தையை நடத்தும் ஆயர்களுக்கு இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைக்கும் வாக்கு இதுவே: "நீங்கள் நமது மந்தையைச் சிதறடித்தீர்கள்; அவர்களைத் துரத்தினீர்கள்; அவர்களுக்குப் பணிவிடை புரியவில்லை. ஆதலால் உங்கள் செயல்களின் கெடுதிக்கேற்ற தண்டனையை உங்கள் மேல் வருவிப்போம், என்கிறார் ஆண்டவர்.
3 பின்னர், நாம் நமது மந்தையில் மீதியாயிருக்கும் ஆடுகளை, அவை சிதறியுள்ள நாடுகள் அனைத்தினின்றும் சேர்த்து, அவற்றின் கழனிகளுக்குத் திரும்ப அழைத்து வருவோம்; அங்கு அவை பெருகிப் பலுகும்.
4 அவற்றைக் கண்கானிக்கப் புதிய ஆயர்களை ஏற்படுத்துவோம்; இவர்கள் அவற்றை மேய்ப்பார்கள்; அவை இனிப் பயப்படுவதுமில்லை; திகிலடைவதுமில்லை; காணாமற்போவதுமில்லை, என்கிறார் ஆண்டவர்.
5 நாட்கள் வருகின்றன- ஆண்டவர் கூறுகிறார்- நீதியுள்ள 'தளிரை' தாவீதுக்குப் பிறப்பிப்போம்; அரசராக இருந்து அவர் ஆட்சி செய்வார்; அவர் ஞானமுள்ளவராய் இருப்பார்; நாட்டில் நியாயத்தையும் நீதியையும் செலுத்துவார்.
6 அந்நாட்களில் யூதா மீட்புப் பெறும்; இஸ்ராயேல் நம்பிக்கையோடு வாழும்; 'ஆண்டவர் நமது நீதி' என்பதே அவருக்குப் பெயராய் வழங்கும்.
7 ஆதலால், இதோ நாட்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்; அந்நாட்களில், 'எகிப்து நாட்டினின்று இஸ்ராயேல் மக்களை மீட்டு வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்று இனி சொல்ல மாட்டார்கள்;
8 வட நாட்டினின்றும், அவர்கள் துரத்தப்பட்டிருந்த எல்லா நாடுகளினின்றும், இஸ்ராயேல் வீட்டாரின் சந்ததியை மீட்டுத் திரும்ப அழைத்து வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்றே இனிச் சொல்வார்கள்; அப்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் வாழ்வார்கள்."
9 தீர்க்கதரிசிகளைப் பற்றிய இறைவாக்கு: என் இதயம் எனக்குள்ளே நைந்து போகின்றது; என் எலும்புகள் கலகலத்துப் போகின்றன; ஆண்டவரை முன்னிட்டும், அவருடைய பரிசுத்த வாக்கியங்களை முன்னிட்டும் நான் போதையடைந்த குடியன் போலவும், மதுவினால் மயங்கிய மனிதன் போலவுமானேன்.
10 ஏனெனில் நாடு விபசாரிகளால் நிறைந்திருக்கிறது; சாபச் சொற்களை முன்னிட்டு அழுகிறது; புல் வெளிகள் உலர்ந்த காடாயின; அவர்கள் தீமை செய்துகொண்டே வருகின்றார்கள்; அவர்கள் தீமையில் வலிமை வாய்ந்தவர்கள்.
11 தீர்க்கதரிசியும் அர்ச்சகரும் கடவுட்பற்று அற்றவர்கள்; நம் கோயிலில் அவர்கள் செய்யும் தீமையைக் கண்டோம், என்கிறார் ஆண்டவர்.
12 ஆகையால் அவர்களுடைய வழி இருளில் இருக்கும், வழுக்கு வழி போல் ஆகும்; அங்குத் தள்ளுண்டு விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் ஆண்டில் அவர்கள் மேல் தீமைகளைப் பொழிவோம், என்கிறார் ஆண்டவர்.
13 சமாரியாவின் தீர்க்கதரிசிகளிடம் மூடத் தனத்தைக் கண்டோம்; அவர்கள் பாகால் பெயரால் தீர்க்கதரிசனம் உரைத்து, நம் இஸ்ராயேல் மக்களை வஞ்சித்தார்கள்.
14 யெருசலேமின் தீர்க்கதரிசிகளிடமும் வெறுப்புக்குரியதைக் கண்டோம்; அவர்கள் விபசாரம் செய்கின்றனர்; பொய்யில் நடக்கிறார்கள்; தீயோருடைய மனத்திற்கு ஊக்கம் தருகிறார்கள்; அதனால் எவனும் தன் தீநெறியை விட்டுத் திரும்புவதில்லை. அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப் போல் ஆனார்கள்; அதன் குடிகள் கொமோராவைப் போல் ஆனார்கள்."
15 ஆகவே சேனைகளின் ஆண்டவர் தீர்க்கதரிசிகளைக் குறித்துக் கூறுவது இதுவே: "இதோ, அவர்களுக்கு உண்ண எட்டியையும், குடிக்க நஞ்சு கலந்த நீரையும் கொடுப்போம்; யெருசலேமின் தீர்க்கதரிசிகளிடம் இருந்தே கடவுட்பற்றின்மை நாடெங்கும் பரவிற்று."
16 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லி வீண் நம்பிக்கைகளை உங்களுக்குத் தந்து, உங்களை மயக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்குக் காது கொடாதீர்கள்; அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று; அவர்களுடைய சொந்த மனக்காட்சியே ஆகும்.
17 நம்மைப் பழித்துரைப்பவர்களைப் பார்த்து அவர்கள், 'உங்களுக்குச் சமாதானம்' என்கிறார் ஆண்டவர் என்று சொல்லி வருகிறார்கள்; தன் தீயமனம் போலப் பிடிவாதமாய் நடக்கிற எவனுக்கும், ' உங்களுக்குத் தீமை நேராது' என்கிறார்கள்,"
18 ஆனால் ஆண்டவரின் ஆலோசனைக் குழுவில் இருந்தவன் யார்? அவருடைய வார்த்தையைப் பார்த்தவன் யார்? கேட்டவன் யார்? அவருடைய வாக்கியத்தைக் கவனித்துக் கேட்டவன் யார்?
19 இதோ, ஆண்டவருடைய கோபத்தின் சூறாவளி எழும்பும், அக்கிரமிகள் தலை மேல் கொடிய புயலடிக்கும்;
20 ஆண்டவருடைய கடுஞ்சினம் அவர்தம் இதய எண்ணங்களைச் செயல்படுத்தி முடிக்கும் வரை தணியாது; இதை நீங்கள் கடைசி நாட்களில் அறிவீர்கள்.
21 நாம் தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை; அவர்களாகவே ஓடினார்கள்; நாம் அவர்களிடத்தில் பேசினதுமில்லை; அவர்களாகவே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
22 அவர்கள் நமது ஆலோசனைக் குழுவிலே இருந்திருந்தால், நம் வாக்கியங்களை நம் மக்களுக்கு அறிவித்து, மெய்யாகவே அவர்களை அவர்களுடைய தீய வழியினின்றும், தீய எண்ணங்களினின்றும் விலக்கியிருப்பார்கள்.
23 தாம் அருகில் இருக்கும் போது தான் கடவுளா? தொலைவில் இருக்கும் போதும் கடவுள் அல்லவா? என்கிறார் ஆண்டவர்.
24 நம் கண்களுக்குப் புலப்படாதபடி மனிதன் மறைவிடங்களில் ஒளிந்துகொள்ள முடியுமா? என்கிறார் ஆண்டவர். நாம் வானத்தையும் பூமியையும் நிரப்பிக் கொண்டுள்ளோமன்றோ? என்கிறார் ஆண்டவர்.
25 நமது திருப்பெயரால் பொய்களைச் சொல்லி, 'கனவு கண்டேன், கனவு கண்டேன்' என்று தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைக் கேட்டோம்.
26 பொய் உரைத்துத் தங்கள் இதய வஞ்சனையைத் தீர்க்க தரிசனமாய்ச் சொல்லும் தீர்க்கதரிசிகளின் மனத்தில் இந்தப் பொய் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்?
27 அவர்களுடைய முன்னோர்கள் பாகாலை முன்னிட்டு நமது பெயரை மறந்தது போல், ஒவ்வொருவனும் தன் அயலானுக்குத் தன்னுடைய கனவுகளைச் சொல்லி, நம் மக்கள் நமது பெயரை மறக்கும்படி செய்ய நினைக்கிறானே!
28 கனவு கண்ட தீர்க்கதரிசி தன் கனவைச் சொல்லட்டும்; நமது வாக்கியத்தைக் கேட்கிறவன் நம் வாக்கியத்தை நேர்மையோடு பேசட்டும். "கோதுமைக்கும் வைக்கோலுக்கும் ஒப்புமை என்ன? என்கிறார் ஆண்டவர்.
29 நம்முடைய வார்த்தை நெருப்பைப் போன்றதன்றோ? கற்பாறை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றதன்றோ? என்கிறார் ஆண்டவர்.
30 ஆகையால் இதோ, ஒருவனிடமிருந்து ஒருவர் நம் வார்த்தைகளைத் திருடுகிற தீர்க்க தரிசிகளுக்கு விரோதமாய் நாம் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்.
31 இதோ, தங்கள் நாவைப் பயன்படுத்தி, 'ஆண்டவர் கூறுகிறார்' என்று பேசுகிற தீர்க்கதரிசிகளுக்கு நாம் எதிராய் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்.
32 இதோ, பொய்க் கனவுகளைத் தீர்க்கதரிசனமாய் உரைத்துத் தங்கள் பொய்களாலும் நடிப்புகளாலும் நம் மக்களை மயக்குகின்ற தீர்க்கதரிசிகளுக்கு நாம் விரோதமாய் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் நாம் அவர்களை அனுப்பவுமில்லை; அவர்களுக்கு ஆணை தந்ததுமில்லை; அவர்களால் இந்த மக்களுக்கு ஒரு பயனுமில்லை, என்கிறார் ஆண்டவர்.
33 இந்த மக்களாவது, ஒரு தீர்க்கதரிசியாவது, ஓர் அர்ச்சகராவது, 'ஆண்டவருடைய சுமை என்ன?' என்று உன்னிடம் கேட்டால், ' நீங்களே அவருடைய சுமை, உங்களை எறிந்து விடுவோம் என்கிறார் ஆண்டவர்' என்று நீ அவர்களுக்குச் சொல்:
34 ஆண்டவருடைய சுமை' என்று தீர்க்கதரிசியோ, அர்ச்சகரோ, மக்களுள் ஒருவனோ சொன்னால், நாம் அவனையும் அவன் வீட்டையும் தண்டிப்போம்.
35 உங்களுள் ஒவ்வொருவனும் தன் தன் அயலானிடம் அல்லது சகோதரனிடம், 'ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?' அல்லது, 'ஆண்டவர் என்ன சொன்னார்?' என்று தான் கேட்க வேண்டும்.
36 ஆனால் 'ஆண்டவருடைய சுமை' என்று எவனும் குறிப்பிடலாகாது; ஏனெனில், அப்படிக் குறிப்பிடுவதோ அவனுக்குச் சுமையாகலாம்; நீங்களோ நம் கடவுளும் சேனைகளின் ஆண்டவருமான உயிருள்ள கடவுளின் வார்த்தைகளைத் திரித்து விடுகிறீர்கள்.
37 தீர்க்கதரிசியிடம், 'ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?' அல்லது, 'ஆண்டவர் என்ன சொன்னார்?' என்று தான் கேட்க வேண்டும்;
38 ஆனால் நீங்கள், 'ஆண்டவருடைய சுமை' என்று குறிப்பிடுவீர்களாகில், அதற்கு ஆண்டவரின் வாக்கு இதுவே: 'நீங்கள், "ஆண்டவருடைய சுமை" என்று சொல்லாதீர்கள்' என்று உங்களை அனுப்பிய போது நாம் உங்களிடம் சொல்லியிருந்தும் நீங்கள், 'ஆண்டவருடைய சுமை' என்று சொன்னபடியால்,
39 இதோ, உங்களையும், நாம் உங்கள் தந்தையர்க்கும் உங்களுக்கும் கொடுத்திருக்கும் நகரத்தையும் நம் முன்னிலையிலிருந்து தூக்கித் தொலைவில் எறிவோம்;
40 மேலும் முடிவில்லாத இழிச்சொல்லையும், நீடித்த வெட்கத்தையும் உங்கள் மேல் வரச் செய்வோம்; அவை என்றும் மறக்கப்படமாட்டா."
அதிகாரம் 24
1 பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் யூதாவின் அரசனும், யோவாக்கீமுடைய மகனுமான எக்கோனியாசையும், யூதாவின் தலைவர்களையும் தச்சர்களையும் கொல்லர்களையும் யெருசலேமிலிருந்து பபிலோனுக்குச் சிறை பிடித்துக் கொண்டு போன பிறகு, ஆண்டவர் எனக்கு ஒரு காட்சி அருளினார்: இதோ, ஆண்டவருடைய கோயிலுக்கு முன்னால் அத்திப் பழங்கள் நிறைந்த கூடைகள் இரண்டு வைக்கப்பட்டிருந்தன;
2 ஒன்றில் மிக நல்ல பழங்கள் இருந்தன; தக்க பருவத்தில் பழுத்த முதற் கனிகள் போல் இருந்தன. மற்றதில் இருந்த அத்திப்பழங்கள் மிக்க கெட்ட பழங்களாயிருந்தன; யாரும் தின்ன முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தன.
3 அப்போது ஆண்டவர் என்னை நோக்கி, "எரேமியாசே, நீ என்ன காண்கிறாய்?" என்று கேட்டார். "அத்திப் பழங்களைக் காண்கிறேன்; அவற்றுள் நல்ல பழங்கள் மிக்க நல்ல பழங்களாகவும், கெட்ட பழங்கள் தின்ன முடியாத அளவுக்கு மிக்க கெட்ட பழங்களாகவும் இருக்கின்றன" என்றேன்.
4 அப்போது ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
5 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: யூதாவிருந்து கல்தேயர்களின் நாட்டுக்கு நாம் அனுப்பியிருப்பவர்களை இந்த நல்ல அத்திப் பழங்களைப் போலக் கருதி நன்றாய் நடத்துவோம்.
6 அவர்களை நாம் இரக்கத்தோடு பார்ப்போம்; திரும்ப இந்த நாட்டிற்கே அவர்களைக் கொண்டு வந்து நிலை நாட்டுவோம்; அவர்களைக் கட்டியெழுப்புவோம்; தகர்த்துத் தரைமட்டமாக்க மாட்டோம்; அவர்களை நட்டு வளர்ப்போம்; பிடுங்கி எறிய மாட்டோம்.
7 நாமே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்ளக் கூடிய உள்ளத்தை அவர்களுக்குக் கொடுப்போம்; அப்போது, அவர்கள் நமக்கு மக்களாகவும், நாம் அவர்களுக்குக் கடவுளாகவும் இருப்போம்; ஏனெனில், தங்கள் முழு இதயத்தோடு நம்மிடம் திரும்பி வருவார்கள்.
8 இன்னும் ஆண்டவர் தொடர்ந்து கூறினார்: தின்ன முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருக்கும் அந்தக் கெட்ட அத்திப் பழங்களைப் போலக் கருதி, யூதாவின் அரசனான செதேசியாசையும், அவனுடனிருக்கும் தலைவர்களையும், யெருசலேமில் எஞ்சியிருந்து இந்நாட்டில் தங்கி விட்டவர்களையும், எகிப்து நாட்டில் இருப்பவர்களையும் நாம் நடத்துவோம்.
9 உலகத்தின் அரசுகளுக்கெல்லாம் அவர்களைத் திகிலின் அடையாளமாக்குவோம்; நாம் அவர்களை விரட்டியுள்ள இடங்களிலெல்லாம் அவர்களை அவமானமாகவும் பழமொழியாகவும் பழிப்புக்கு உரியவர்களாகவும் சாபமாகவும் இருப்பார்கள்.
10 அவர்கள்மேல் வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றை அனுப்பி, அவர்களுக்கும் அவர்களுடைய தந்தையர்க்கும் நாம் தந்த நாட்டினின்று அவர்கள் அழியும் வரை அவர்களை வதைப்போம்."
அதிகாரம் 25
1 யூதாவின் அரசனும் யோசியாசின் மகனுமாகிய யோவாக்கீமின் நான்காம் ஆண்டில்- அதாவது பபிலோனிய மன்னன் நபுக்கோதனசாரின் முதல் ஆண்டில்- யூதாவின் மக்கள் அனைவரையும் குறித்து எரெமியாசுக்கு அருளப்பட்ட வாக்கு இதுவே:
2 அதை இறைவாக்கினரான எரெமியாஸ் யூதாவின் எல்லா மக்களுக்கும், யெருசலேமின் குடிகள் அனைவருக்கும் அறிவித்தார்.
3 அவர் அறிவித்தது: "அம்மோனின் மகனும் யூதாவின் அரசனுமாகிய யோசியாசின் பதின்மூன்றாம் ஆண்டு முதல் இன்று வரைக்கும் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது: நான் உங்களுக்கு ஒன்றும் விடாது அதைச் சொன்னேன்; நீங்களோ கேட்கவில்லை.
4 ஆண்டவர் தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் திரும்பத் திரும்ப அனுப்பினார்; ஆனால் நீங்கள் கேட்கவுமில்லை, கேட்பதற்குக் காதுகளைச் சாய்க்கவுமில்லை.
5 ஆண்டவர் அவர்கள் வாயிலாய், ' உங்களுள் ஒவ்வொருவனும் தன் தீநெறியையும் தீய செயல்களையும் விட்டுத் திரும்பட்டும்; அப்போது ஆண்டவர் முன்னாளில் உங்கள் தந்தையர்க்கும் உங்களுக்கும் கொடுத்த நாட்டில் என்றென்றும் வாழ்வீர்கள்.
6 அந்நிய தெய்வங்களைச் சேவித்து வழிபாடு செய்ய அவர்களைத் தேடி ஓடாமலும், உங்கள் கைவேலைப்பாடுகளான சிலைகளால் நமக்குக் கோபமூட்டாமலும் இருப்பீர்களாகில், நாம் உங்களைத் துன்புறுத்தமாட்டோம்' என்று உங்களுக்குச் சொல்லி வந்தார்;
7 இருப்பினும், நீங்கள் நமக்குச் செவிசாய்க்காமல், உங்கள் கைவேலைப்பாடுகளான சிலைகளால் நமக்குக் கோபமூட்டி உங்கள் மேல் தீமையை வருவித்துக் கொண்டீர்கள், என்கிறார் ஆண்டவர்.
8 ஆதலால் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் நம்முடைய வார்த்தைகளைக் கேளாததால்,
9 இதோ, வடநாட்டின் எல்லாக் குலத்தினரையும், பபிலோனிய அரசனும் நம் ஊழியனுமாகிய நபுக்கோதனசாரையும் சேர்த்து, இந்த நாட்டுக்கும், இதன் குடிகளுக்கும், சுற்றுப்புற நாடுகள் எல்லாவற்றுக்கும் எதிராக அவர்களைக் கொண்டு வருவோம்; கொண்டு வந்து இவர்களை எல்லாம் முற்றிலும் அழித்து, நகைப்புக்கும் திகைப்புக்கும் உள்ளாக்கி, அவர்களுடைய நாடு என்றென்றும் காடாகக் கிடக்கச் செய்வோம், என்கிறார் ஆண்டவர்.
10 மேலும் அவர்களிடமிருந்து மகிழ்ச்சியின் சந்தடியையும், அக்களிப்பின் ஆரவாரத்தையும், மணவாளன், மணவாட்டியின் குரலொலிகளையும், இயந்திரங்களின் ஓசையையும், விளக்குகளின் ஒளியையும் ஒழியச் செய்வோம்.
11 இந்நாடு முழுவதும் பாழாகி, பார்ப்பவர்களுக்குத் திகைப்பை விளைவிக்கும்; இம்மக்கள் எல்லாரும், பபிலோனிய மன்னனுக்கு எழுபது ஆண்டுகள் அடிமை வேலை செய்வார்கள்.
12 அவ்வாறு எழுபது ஆண்டுகள் கடந்த பின்னர், பபிலோனிய மன்னனையும், அந்த நாட்டினரையும், கல்தேயர் நாட்டையும் அவர்களுடைய அக்கிரமத்துக்காகத் தண்டிப்போம்; அதனை என்றென்றைக்கும் பாலை நிலமாய் ஆக்கிவிடுவோம், என்கிறார் ஆண்டவர்.
13 இந்நாட்டுக்கு விரோதமாய் நாம் சொன்ன வாக்குகளும், இந்த நூலில் எழுதப்பட்டவை அனைத்தும், எரெமியாஸ் எல்லா இனத்தார்களுக்கும் விரோதமாய்ச் சொன்ன யாவும் நாம் இந்த நாட்டின் மேல் பலிக்கச் செய்வோம்."
14 எரெமியாஸ் வேற்றினத்தாரைப் பற்றிக் கூறியவை: ஏனெனில் அவர்களையும் கூட வேறு பல நாட்டினரும், மாமன்னர்களும் அடிமைகளாக்குவார்கள்; அவர்களுடைய செயல்களுக்கும், கை வேலைகளுக்கும் ஏற்றவாறு அவர்களுக்குக் கைம்மாறு தருவோம்.
15 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் எனக்குக் கூறிய வாக்கு இதுவே: "இந்தக் கோபத்தின் கிண்ணத்தை நம் கையினின்று எடுத்து, நாம் உன்னை அனுப்பும் மக்கள் எல்லாருக்கும் அதனின்று குடிக்கக் கொடு.
16 அவர்கள் அதனைக் குடித்து மயங்கி, நாம் அவர்கள் நடுவில் அனுப்பும் வாளைக் கண்டு வெறி கொள்ளுவார்கள்."
17 அவ்வாறே நானும் ஆண்டவரின் கையிலிருந்து அந்தக் கிண்ணத்தை வாங்கி, ஆண்டவர் என்னை அனுப்பிய மக்கள் அனைவருக்கும் அதனைக் குடிக்கக் கொடுத்தேன்.
18 யெருசலேமுக்கும், யூதாவின் பட்டணங்களுக்கும், அதன் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் குடிக்கக் கொடுத்தேன்; இன்றிருப்பது போல் அவை காடாகித் திகிலுக்கும் நகைப்புக்கும் சாபனைக்கும் உள்ளாகும்படி கொடுத்தேன்.
19 எகிப்து நாட்டு மன்னனாகிய பார்வோனுக்கும், அவனுடைய ஊழியர்கள், தலைவர்கள்,
20 குடிமக்கள் அனைவருக்கும், அவர்கள் நடுவில் வாழ்ந்த வேற்று நாட்டவர்களுக்கும், ஓசித்து நாட்டு மன்னர்கள், பிலிஸ்தேய நாட்டு மன்னர்கள், ஆஸ்காலோன், காஜா, அக்காரோன், ஆஜோத்து முதலிய நாட்டு மன்னர்கள் எல்லாருக்கும்;
21 இதுமேயா, மோவாபு, அம்மோன் மக்களுக்கும்;
22 தீரின் அரசர்கள், சீதோனின் மன்னர்கள், கடற்கரை நாடுகளின் மன்னர்கள் யாவருக்கும்;
23 தேதான், தேமா, பூஸ் முதலிய இனத்தவர்க்கும், தலைமயிரை வட்டமாய் வெட்டிக் கொள்ளும் அனைவருக்கும்;
24 அராபிய அரசர்கள் அனைவருக்கும், பாலைவெளியில் வாழ்ந்த கலப்பு இனத்தவர்களின் அரசர்கள் எல்லாருக்கும்;
25 ஜாம்பிரின் மன்னர்கள், ஏலாமின் அரசர்கள், மேதியரின் மன்னர்கள் ஆகிய எல்லா அரசர்களுக்கும்;
26 அருகிலும் தொலைவிலுமிருக்கிற வடநாட்டு மன்னர்கள் யாவருக்கும், பூமியில் உள்ள நாடுகளின் அரசர்கள் எல்லாருக்கும் அந்தக் கிண்ணத்தினின்று குடிக்கக் கொடுத்தேன்; இவர்கள் அனைவருக்கும் பிறகு, சேசாக்கின் அரசன் கடைசியில் குடிப்பான்.
27 மீண்டும் நீ அவர்களுக்குச் சொல்: 'இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: குடியுங்கள், (குடித்து) மயங்குங்கள், கக்குங்கள், விழுங்கள்; நாம் உங்கள் நடுவில் அனுப்புகின்ற வாள் முகத்தினின்று எழவே மாட்டீர்கள்.'
28 அவர்கள் குடிப்பதற்கு உன் கையிலிருந்து கிண்ணத்தை வாங்க மறுப்பார்களாயின், அவர்களுக்கு நீ இவ்வாறு சொல்: 'சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் குடிக்கத் தான் வேண்டும்;
29 ஏனெனில், இதோ, நமது திருப்பெயரைத் தாங்கியுள்ள இந்த நகரத்திலேயே முதலில் துன்புறுத்தப் போகிறோம்; நீங்கள் மாசில்லாதவர்களைப் போலத் தண்டனை பெறாமல் போவீர்களோ? நீங்கள் தண்டனைக்குத் தப்பவே மாட்டீர்கள்; ஏனெனில் பூமியில் வாழும் மனிதர்கள் அனைவர் மேலுமே வாளை வரச் சொன்னோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.'
30 ஆகையால் நீ அவர்களுக்கு விரோதமாய் இந்த வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு அறிவி: 'ஆண்டவர் வானத்தினின்று கர்ச்சிப்பார்; தம் பரிசுத்த இருப்பிடத்திலிருந்து தம் குரலெழுப்புவார்; தம் மந்தைக்கு விரோதமாய்க் கர்ச்சிப்பார்; திராட்சைக் கனிகளை மிதிப்போரின் ஆர்ப்பரிப்புக்கொத்த கூக்குரலைப் பூமியின் மக்கள் யாவர்க்கும் எதிராய் எழுப்புவார்.
31 அந்த முழக்கம் பூமியின் கடை கோடி வரை முழங்கும்; ஏனெனில் மக்களினத்தோடு ஆண்டவர் வழக்காடுவார்; எல்லா மனிதர்களையும் தீர்ப்பிடத் தொடங்குகிறார்; கொடியவர்களை வாளுக்கு இரையாக்குவார், என்கிறார் ஆண்டவர்.'
32 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, துன்பம் ஓரினத்தாரிடமிருந்து இன்னுமோர் இனத்தாருக்குச் செல்லும்; பெரும் புயல் பூமியின் கோடிகளினின்று புறப்பட்டு வரும்!
33 அந்நாளில் ஆண்டவரால் கொல்லப்பட்டவர்கள் பூமியின் ஒரு கோடி முதல் மறு கோடி வரையில் (நிரம்பிக்) கிடப்பார்கள்; அழுவாரற்று, எடுப்பாரற்று, புதைப்பாரற்றுக் குப்பை போல் அவர்கள் பூமியில் கிடப்பார்கள்.
34 ஆயர்களே, அழுது புலம்புங்கள், கதறுங்கள்; மந்தையின் தலைவர்களே, சாம்பலில் புரளுங்கள்; ஏனெனில் நீங்கள் கொலையுண்டு சிதறிப் போகும் நாட்கள் வந்துவிட்டன; விலையுயர்ந்த பாத்திரத்தைப் போல நம் கையினின்று விழுந்து போவீர்கள்.
35 ஆயர்களுக்கு புகலிடம் இராது, மந்தையின் தலைவர்களும் தப்பித்துக் கொள்ள வகையிராது.
36 ஆயர்களின் அழுகுரலும், மந்தையின் தலைவர்களுடைய கூக்குரலும் கேட்கிறது. ஏனெனில் ஆண்டவர் அவர்களுடைய மேய்ச்சல் நிலத்தைப் பாழாக்கி விட்டார்.
37 ஆண்டவருடைய கோபத்தின் காரணமாய் அமைதியாயிருந்த கிடைகள் பாழாயின.
38 குகையினின்று வெளியேறும் சிங்கத்தைப் போல், இந்த நாட்டை விட்டு அவர் வெளியேறினார்; கொலைஞனின் வாளாலும், அவருடைய கோபத் தீயாலும், அவர்களின் நாடு பாழாயிற்று."
அதிகாரம் 26
1 யோசியாசின் மகனான யோவாக்கீம் என்கிற யூதா அரசனுடைய ஆட்சியின் துவக்கத்தில் ஆண்டவர் எரெமியாசுக்கு அருளிய வாக்கு இதுவே:
2 ஆண்டவர் கூறுகிறார்: நீ ஆண்டவருடைய கோயிலின் முற்றத்தில் நின்று கொண்டு, ஆண்டவருடைய கோயிலில் ஆராதனை செலுத்த வரும் யூதாவின் எல்லா நகரங்களின் மக்களுக்கும், நாம் சொல்லக் கட்டளையிட்ட வார்த்தைகள் எல்லாவற்றையும் அறிவி; ஒரு வார்த்தையும் விடாமல் அனைத்தையும் அறிவி.
3 ஒரு வேளை உன் சொற்களுக்கு அவர்கள் செவிசாய்த்துத் தத்தம் தீய வழிகளை விட்டுத் திரும்பலாம்; அப்பொழுது அவர்களுடைய தீய செயல்களுக்கு நாம் தண்டனை தர எண்ணியதற்காக மனம் வருந்துவோம்;
4 நீ அவர்களுக்குச் சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் நாம் சொல்வதைக் கேளாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் சட்டத்தைக் கடைபிடிக்காமலும்,
5 நாம் உங்களிடம் திரும்பத் திரும்ப அனுப்பியும் நீங்கள் செவிமடுக்காமற் போன நம்முடைய ஊழியர்களான இறைவாக்கினர்களின் வார்த்தைகளைக் கேட்காமலும் போவீர்களாகில்,
6 இந்தக் கோயிலைச் சீலோவைப்போல் ஆக்கிவிடுவோம்; இந்த நகரத்தை உலகத்தின் எல்லா மக்களினத்தார் முன்னிலையிலும் ஒரு சாபமாக்குவோம்."
7 அர்ச்சகர்களும் தீர்க்கதரிசிகளும் மக்கள் எல்லாரும், எரெமியாஸ் ஆண்டவரின் கோயிலில் அறிவித்த இவ்வார்த்தைகளைக் கேட்டார்கள்.
8 மக்கள் அனைவருக்கும் சொல்லும்படியாக ஆண்டவர் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் எரெமியாஸ் சொல்லி முடித்தவுடன், அர்ச்சகர்களும் தீர்க்கதரிசிகளும் மக்கட் கூட்டம் முழுவதும் அவரைப் பிடித்து, "நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்;
9 இந்தக் கோயில் சீலோவைப் போலாகும், இந்நகரம் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்' என்று ஆண்டவர் திருப்பெயரால் நீ ஏன் இறைவாக்குரைத்தாய்?" என்று சொல்லி, ஆண்டவரின் கோயிலிலேயே மக்கள் எல்லாரும் எரெமியாசைச் சூழ்ந்து கொண்டார்கள்.
10 யூதாவின் தலைவர்கள் இதெல்லாம் கேள்விப்பட்டு, அரசன் அரண்மனையிலிருந்து ஆண்டவரின் கோயிலுக்கு வந்து, அங்கே ஆண்டவரின் கோயிலில் 'புதிய வாயில்' என்னும் வாயிலில் உட்கார்ந்தனர்.
11 அர்ச்சகர்களும் தீர்க்கதரிசிகளும், தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, "இந்த மனிதன் சாவுக்குத் தீர்ப்பிடப் படவேண்டும்; ஏனெனில் இந்தப் பட்டணத்திற்கு விரோதமாய் இவன் இறைவாக்கு உரைத்தான்; நீங்களோ உங்கள் காதால் கேட்டீர்கள்" என்றார்கள்.
12 அப்போது எரெமியாஸ் தலைவர்கள் அனைவரையும் மக்கட் கூட்டம் முழுவதையும் நோக்கி: "இந்தக் கோயிலுக்கும் இந்நகரத்திற்கும் எதிராக நீங்கள் கேட்ட வார்த்தைகளையெல்லாம் அறிவித்து இறைவாக்கு உரைக்கும்படி ஆண்டவர் தாம் என்னை அனுப்பினார்.
13 ஆதலால், இப்பொழுது உங்கள் நெறிகளையும் செயல்களையும் செவ்வைப்படுத்திக் கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சொல்லுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவ்வாறு செய்தால், ஆண்டவர் உங்களுக்கு விரோதமாய்த் தீமை செய்வதாக அறிவித்ததற்கு மனம் வருந்துவார்.
14 இதோ, நான் உங்கள் கைகளில் இருக்கிறேன்; நல்லதென்றும் நீதியென்றும் உங்களுக்குத் தோன்றுவதை எனக்குச் செய்யுங்கள்.
15 ஆனால், ஒன்றை மட்டும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்: என்னை நீங்கள் கொல்லுவீர்களாகில், மாசற்றவனின் இரத்தப் பழியை உங்கள் மேலும் இப்பட்டணத்தின் மேலும் இதன் குடிகள் மேலும் விழச் செய்வீர்கள்; ஏனெனில் உண்மையில் ஆண்டவர் தாம் என்னை உங்களிடம் அனுப்பி இவ்வார்த்தைகளை எல்லாம் நீங்கள் கேட்கும்படி சொல்லச் சொன்னார்" என்றார்.
16 தலைவர்களும் மக்கட் கூட்டமும், அர்ச்சகர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி, "இந்த மனிதன் சாவுக்குத் தீர்ப்பிடப்படக் கூடாது; ஏனெனில் அவன் நம் கடவுளாகிய ஆண்டவர் திருப்பெயராலேயே நம்மிடம் பேசினான்" என்றார்கள்.
17 அப்போது நாட்டின் மூப்பர்களுள் சிலர் எழுந்து அங்கே கூடியிருந்த மக்களனைவரையும் பார்த்து,
18 யூதாவின் அரசனாயிருந்த எசேக்கியாசின் நாட்களில் மோராஸ்தி ஊரினரான மிக்கேயாஸ் இறைவாக்கினராய் இருந்தார்; அவர் யூதாவின் மக்களனைவரையும் நோக்கி, 'சேனைகளின் ஆண்டவர் கூறும் வாக்கு: சீயோன் கழனி போல் உழப்படும், யெருசலேம் கற்குவியலாகும், கோயிலிருக்கும் இம்மலையோ பெருங் காடாகும்' என்று சொன்னர்.
19 இதற்காக யூதாவின் அரசனான எசெக்கியாசும், யூதா நாடு முழுவதும் அவரைச் சாவுக்குத் தீர்ப்பிட்டு விட்டார்களா? (அதற்கு மாறாக) அவர்கள் ஆண்டவருக்கு அஞ்சி, ஆண்டவருடைய அருளை இறைஞ்சி மன்றாடினார்கள் அல்லவா? ஆண்டவரும் அவர்களுக்கு விரோதமாய் அறிவித்திருந்த தீமையைச் செய்யாமல், மனத்தை மாற்றிக் கொள்ளவில்லையா? ஆனால் நாமே நம்மேல் பெருந் தீமையை வருவித்துக் கொள்ளப் போகிறோம்" என்று சொன்னார்கள்.
20 ஆண்டவர் திருப்பெயரால் இறைவாக்கு உரைத்த இன்னொருவரும் இருந்தார்; அவர் காரியாத்தியாரிம் என்னும் ஊரில் வாழ்ந்த செமியின் மகனான ஊரியாஸ் என்பவர்; அவரும் எரெமியாஸ் சொன்ன வார்த்தைகளைப் போலவே சொல்லி, இப்பட்டணத்திற்கும் இந்நாட்டுக்கும் விரோதமாய் இறைவாக்கு உரைத்தார்.
21 யோவாக்கீம் அரசனும் தலைவர்களும் போர் வீரர்கள் அனைவரும், அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டார்கள்; அரசன் அவரைக் கொல்லத் தேடினான்; ஆனால் ஊரியாஸ் அதைக் கேட்டு அஞ்சி, எகிப்துக்குத் தப்பியோடினார்;
22 யோவாக்கீம் அரசன் அக்கோபோர் என்பவனின் மகன் எல்நாத்தானையும், அவனோடு வேறு சிலரையும் எகிப்துக்கு அனுப்பினான்;
23 அவர்கள் எகிப்திலிருந்து ஊரியாசைப் பிடித்து வந்து யோவாக்கீம் அரசன் முன் விட்டார்கள்; அவன் அவரை வாளால் கொன்று உடலைப் பொது மக்கள் புதைக்கப்படும் இடத்திலே எறிந்து விட்டான்.
24 மக்கள் கையில் விடப்பட்டுச் சாகாதபடி சாப்பானின் மகன் ஆயிகாம் எரெமியாசுக்குத் துணையாய் இருந்தான்.
அதிகாரம் 27
1 யூதாவின் அரசனும் யோசியாசின் மகனுமாகிய செதேசியாஸ் ஆட்சியின் துவக்கத்தில் இவ்வாக்கியம் எரெமியாசுக்கு ஆண்டவரிடமிருந்து அருளப்பட்டது.
2 ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "கயிறுகளையும் நுகத்தடியையும் செய்து அவற்றை உன் கழுத்தில் பூட்டிக் கொள்.
3 யெருசலேமுக்குச் செதேசியாசிடம் வந்துள்ள தூதர்கள் வழியாய் ஏதோம் அரசனுக்கும், மோவாப் அரசனுக்கும், அம்மோனியரின் அரசனுக்கும், தீர் அரசனுக்கும், சீதோன் அரசனுக்கும் செய்தி சொல்லி அனுப்பு:
4 அவர்களுடைய தலைவர்களுக்குச் சொல்லும்படி நீ அவர்களுக்குக் கட்டளையிடு; அவர்கள் சொல்ல வேண்டியது: 'இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் உங்கள் தலைவர்களிடம் போய்ச் சொல்லுங்கள்:
5 நமது மிகுந்த வல்லமையாலும் கைவன்மையாலும் பூமியையும் அதிலிருக்கும் மனிதரையும் மிருகங்களையும் நாமே படைத்தோம்; நமக்கு விருப்பமானவரிடம் அவற்றைக் கொடுக்கிறோம்.
6 இப்பொழுது நம் ஊழியனும் பபிலோனிய மன்னனுமான நபுக்கோதனசாருடைய கைகளில் இந்த நாடுகளையெல்லாம் ஒப்புவித்திருக்கிறோம்; பூமியின் மிருகங்கள் அனைத்தையும் அவனுக்குச் சேவை செய்யுமாறு கொடுத்திருக்கிறோம்.
7 மக்களினம் எல்லாம் அவனுக்கும், அவன் மகனுக்கும், மகனுடைய மகனுக்கும் ஊழியம் செய்து வருவார்கள்; அவனுடைய நாட்டுக்குக் காலம் வரும் வரையில் ஊழியம் செய்து வருவார்கள்; அதன் பின் பல்வேறு இனத்தாரும் மாமன்னர்களும் அவனை அடிமையாக்கி ஆளுவார்கள்.
8 ஆனால் (இப்பொழுது) பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசாருக்கு ஊழியம் செய்யாமல், ஏதேனும் மக்களினமோ அரசோ இருக்குமாயின்-பபிலோனிய அரசனின் நுகத்தைக் கழுத்தில் தாங்க மறுக்குமாயின், அதை அவன் கையால் முற்றிலும் அழிக்கும் வரை அந்த மக்களினத்தை வாள், பஞ்சம், கொள்ளை நோய் இவற்றால் தண்டிப்போம், என்கிறார் ஆண்டவர்.
9 ஆதலால், 'பபிலோனிய அரசனுக்குத் தொண்டு புரிய மாட்டீர்கள்' என்று உங்களுக்குச் சொல்லும் உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் நிமித்திகர்களுக்கும் கனவு காரார்களுக்கும் குறி சொல்வோர்க்கும் சூனியக் காரருக்கும் செவிமடுக்காதீர்கள்.
10 நீங்கள் தாய் நாட்டை விட்டுத் தொலை நாட்டுக்குத் துரத்தப்பட்டுப் போய் அங்கே மடியும்படி உங்களுக்கு அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
11 பபிலோனிய அரசனின் ஆளுகைக்கு உட்பட்டு, அவனுக்குச் சேவை புரியும் மக்களை அவர்களுடைய சொந்த நாட்டிலேயே விட்டு வைப்போம்; அவர்கள் அதனைப் பயிரிட்டு அங்கேயே வாழ்ந்திருப்பார்கள்."
12 இவ்வார்த்தைகளையே செதேசியாஸ் மன்னனிடமும் சொன்னேன்; "பபிலோனிய அரசனுக்குக் கீழ்ப்பட்டு அவனுக்கும் அவன் நாட்டினருக்கும் ஊழியம் செய்யுங்கள்; நீங்கள் பிழைப்பீர்கள்.
13 பபிலோனிய மன்னனுக்கு ஊழியஞ் செய்ய மனமில்லாத மக்களுக்கு அனுப்புவதாக ஆண்டவர் சொன்ன வாள், பஞ்சம், கொள்ளை நோய் இவற்றுக்கு நீரும் உம் நாட்டு மக்களும் ஏன் இரையாகிச் சாகவேண்டும்?
14 'பபிலோனிய அரசனுக்கு ஊழியஞ் செய்ய மாட்டீர்கள்' என்று சொல்லும் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளை நம்பாதீர்கள்; ஏனெனில் அவர்கள் உங்களுக்குச் சொல்வது பொய்;
15 நாம் அவர்களை அனுப்பவில்லை; உங்கள் நாட்டினின்று உங்களை நாம் தொலை நாட்டிற்குத் துரத்தவும், அங்கே நீங்களும், உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன அந்தத் தீர்க்கதரிசிகளும் மடியவுமே, அவர்கள் இவ்வாறு நமது பெயரால் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள், என்கிறார் ஆண்டவர்" என்று சொன்னேன்.
16 பின்னர் நான் அர்ச்சகர்களையும், இந்த மக்கள் அனைவரையும் நோக்கி, "ஆண்டவர் கூறுகிறார்: 'இன்னும் கொஞ்ச நாட்களுக்குள் ஆண்டவருக்குரிய பாத்திரங்களைப் பபிலோனிலிருந்து திரும்பக் கொண்டு வரப் போகிறார்கள்' என்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் உரைக்கும் தீர்க்கதரிசிகளின் சொற்களைக் கேட்காதீர்கள்; ஏனெனில் அவர்கள் உங்களுக்குப் பொய்யைத் தான் சொல்லுகிறார்கள்;
17 ஆதலால் அவர்களுக்குக் காது கொடாதீர்கள்; நீங்கள் வாழ விரும்பினால் பபிலோனிய மன்னனுக்கு ஊழியம் பண்ணுங்கள்; இப்பட்டணம் ஏன் பாழாக வேண்டும்?
18 அவர்கள் உண்மையாகவே தீர்க்கதரிசிகளாய் இருந்தால், ஆண்டவருடைய வார்த்தை அவர்களோடு இருப்பது உண்மையானால், ஆண்டவரின் கோயிலிலும், அரசனது அரண்மனையிலும், யெருசலேமிலும் மீதியாய் விடப்பட்டிருக்கும் பாத்திரங்களாவது பபிலோனுக்குப் போகாதபடி, அவர்கள் சேனைகளின் ஆண்டவர் முன்னிலையில் போய் மன்றாடட்டுமே!
19 பபிலோன் அரசனாகிய நபுக்கோதனசார் யூதாவின் அரசனும் யோவாக்கீமினுடைய மகனுமான எக்கோனியாசையும், யூதாவிலும் யெருசலேமிலிருந்த பெருங்குடி மக்களையும் யெருசலேமிலிருந்து பபிலோனுக்குக் கொண்டு போகையில்,
20 தன்னோடு கொண்டு போகாமல் விட்டுச்சென்ற தூண்கள், கடல், ஆதாரங்கள், இந்த நகரத்தில் மீதியாயுள்ள பாத்திரங்கள் ஆகியவற்றைக் குறித்துச் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்:
21 ஆண்டவரின் கோயிலிலும் யூதாவின் அரசனுடைய அரண்மனையிலும் யெருசலேமிலும் மீதியாய் விடப்பட்ட பாத்திரங்களைப் பற்றி இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்:
22 அவை யாவும் பபிலோனுக்குக் கொண்டு போகப்படும்; நாம் அவற்றைக் கொண்டுவரும் நாள் வரைக்கும் அவை அங்கேயே இருக்கும்; பின்பு அவற்றைக் கொண்டு வந்து, இந்த இடத்தில் திரும்பவும் வைக்கச் செய்வோம், என்கிறார் ஆண்டவர்."
அதிகாரம் 28
1 அதே ஆண்டில், யூதாவின் அரசனாகிய செதேசியாஸ் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் நான்காம் ஆண்டின் ஐந்தாம் மாதத்தில் இது நடந்தது: ஆஜீர் மகனும் கபாவோன் ஊரானுமாகிய அனானியாஸ் என்னும் தீர்க்கதரிசி ஆண்டவரின் கோயிலில் அர்ச்சகர்கள் முன்னிலையிலும், மக்கள் அனைவர் முன்னிலையிலும் என்னிடம் சொன்னான்:
2 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: பபிலோனிய மன்னனின் நுகத்தை நாம் முறித்து விட்டோம்;
3 பபிலோனிய மன்னன் இந்த இடத்திலிருந்து பபிலோனுக்குத் தூக்கிப்போன ஆண்டவரின் கோயில் பாத்திரங்கள் அனைத்தையும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் திரும்ப இவ்விடத்திற்குக் கொண்டு வருவோம்.
4 யூதாவின் அரசனும் யோவாக்கீமுடைய மகனுமான எக்கோனியாசையும், யூதாவினின்று பபிலோனுக்குச் சென்ற எல்லாரையும் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டு வருவோம்; ஏனெனில் பபிலோனிய மன்னனின் நுகத்தை முறித்து விடுவோம், என்கிறார் ஆண்டவர்" என்றான்.
5 பின்பு, இறைவாக்கினரான எரெமியாஸ் அர்ச்சகர்களின் முன்னிலையிலும், ஆண்டவரின் கோயிலில் நின்று கொண்டிருந்த எல்லா மக்களின் முன்னிலையிலும் அனானியாஸ் தீர்க்கதரிசியிடம் பேசினார்:
6 இறைவாக்கினரான எரெமியாஸ் அவனை நோக்கி, "ஆமென்! அவ்வாறே ஆண்டவர் செய்வாராக! நீ உரைத்த வார்த்தைகளை ஆண்டவர் நிறைவேற்றுவாராக! பாத்திரங்கள் ஆண்டவரின் கோயிலுக்குத் திரும்பக் கொண்டு வரப்படுக! பபிலோனுக்குப் போனவர்கள் இவ்விடத்திற்குத் திரும்பி வருக!
7 ஆயினும் நீயும் இங்குள்ளவர்களும் கேட்க நான் சொல்லும் இவ்வார்த்தையைக் கேள்:
8 ஆதி முதல் உனக்கும் எனக்கும் முன் வாழ்ந்த தீர்க்கதரிசிகள் பல நாடுகளைப் பற்றியும், வல்லரசுகள், போர், துன்பம், பஞ்சம் ஆகியவற்றைக் குறித்தும் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்கள்;
9 சமாதானத்தை முன்னறிவிக்கும் தீர்க்கதரிசி ஒருவன் இருந்தால், அவன் சொன்ன சொல் நிறைவேறினால் தான், அவனை உண்மையாகவே ஆண்டவர் அனுப்பினார் என்பது தெளிவாகும்" என்று மறுமொழி கூறினார்.
10 அதைக் கேட்டு, அனானியாஸ் தீர்க்கதரிசி எரெமியாஸ் இறைவாக்கினரின் கழுத்திலிருந்த நுகத்தை முறித்து எறிந்துவிட்டான்.
11 பின்னும் அனானியாஸ் மக்கள் அனைவர் முன்னிலையிலும் வாய் திறந்து, "ஆண்டவர் கூறுகிறார்: இவ்வாறே பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசாரின் நுகத்தை எல்லா மக்களினத்தாரின் கழுத்தினின்றும் இன்னும் இரண்டே ஆண்டுகளில் முறித்து விடுவோம்" என்றான். அதன் பின் எரெமியாஸ் இறைவாக்கினர் அவ்விடம் விட்டகன்றார்.
12 அனானியாஸ் தீர்க்கதரிசி எரெமியாஸ் இறைவாக்கினரின் கழுத்தினின்று நுகத்தடியை முறித்தெறிந்த சில நாட்களுக்குப் பின், ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அறிவிக்கப்பட்டது.
13 நீ போய் அனானியாசுக்குச் சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: நீ மர நுகத்தை முறித்தாய்; ஆனால் அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தைச் செய்வோம்.
14 ஏனெனில் பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாருக்கு அடங்கிச் சேவை செய்யுமாறு இந்த மக்கள் எல்லாருடைய கழுத்திலும் இரும்பு நுகத்தை வைத்தோம்; அவர்கள் அவனுக்குத் தொண்டு புரிவார்கள்; பூமியின் மிருகங்களையும் அவனுக்கு அளித்திருக்கிறோம், என்கிறார் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர்."
15 அப்பொழுது எரெமியாஸ் இறைவாக்கினர் அனானியாஸ் தீர்க்கதரிசியை நோக்கி, "அனானியாசே, கூர்ந்து கேள்; ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை; இந்த மக்கள் உன் பொய்யை நம்பும்படி செய்து விட்டாய்; ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்:
16 இதோ நாம் உன்னை இவ்வுலகத்திலிருந்தே அகற்றி விடுவோம்; இந்த ஆண்டிலேயே நீ சாவாய்; ஏனெனில், நீ ஆண்டவருக்கு விரோதமாய்ப் பேசினாய்" என்று சொன்னார்.
17 அந்த ஆண்டிலேயே ஏழாம் மாதத்தில் அனானியாஸ் தீர்க்கதரிசி இறந்து போனான்.
அதிகாரம் 29
1 நபுக்கோதனசார் யெருசலேமினின்று பபிலோனுக்குக் கொண்டு போனவர்களுள் மீதியான மூப்பர்கள், அர்ச்சகர்கள், தீர்க்கதரிசிகள், இன்னும் மக்கள் எல்லாருக்கும் எரெமியாஸ் இறைவாக்கினர் எழுதியனுப்பிய திருமுகத்தின் வாக்கியங்கள்.
2 எக்கோனியாஸ் அரசனும் அரசியும், அவனுடைய அண்ணகரும், யூதா, யெருசலேமின் தலைவர்களும், தச்சர்களும் கொல்லர்களும் யெருசலேமை விட்டுப் போன பின்னர்,
3 யூதாவின் அரசனான செதேசியாஸ் பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரிடம் பபிலோனுக்கு அனுப்பிய சப்பானின் மகன் எலாசா வழியாகவும், எல்சியாசின் மகன் காமாரியாஸ் வழியாகவும் எரெமியாஸ் அந்தத் திருமுகத்தை அனுப்பினார்.
4 அதில் எழுதியிருந்தது: "யெருசலேமிலிருந்து பபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்ட அனைவருக்கும் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் சொல்லுகிறார்:
5 வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழுங்கள்; தோட்டம் துரவுகளை வைத்து அவற்றின் விளைவைச் சாப்பிடுங்கள்.
6 பெண் தேடி மணமுடித்துக் கொண்டு, புதல்வர் புதல்வியரைப் பெற்று வாழுங்கள்; உங்கள் புதல்வியருக்கு மாப்பிள்ளைகளைத் தேடுங்கள்; உங்கள் புதல்வர்களுக்குப் பெண் பார்த்து மண முடியுங்கள்; அவர்களும் புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுக்கட்டும்; அங்கேயே பெருகிப் பலுகுங்கள்; எண்ணிக்கையில் குறைந்து விடாதீர்கள்.
7 நாடு கடத்தப்பட்டு நீங்கள் குடியிருக்கும்படி நாம் செய்த அந்தப் பட்டணத்திற்குச் சமாதானத்தைத் தேடுங்கள்; அந் நகருக்காக ஆண்டவரை மன்றாடுங்கள்; ஏனெனில் அதன் சமாதானத்தில் தான் உங்கள் சமாதானமும் அடங்கியிருக்கிறது.
8 ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் நிமித்திகரும் உங்களை மயக்காதிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்; அவர்கள் காணும் கனவுகளையும் பொருட்படுத்தாதீர்கள்; ஏனெனில், அவர்கள் நமது பெயரால் உங்களுக்குப் பொய்யைச் சொல்லுகிறார்கள்;
9 நாம் அவர்களை அனுப்பவில்லை, என்கிறார் ஆண்டவர். இதோ, ஆண்டவர் கூறுகிறார்:
10 பபிலோனில் எழுபது ஆண்டுகள் கடந்த பின்னர், நாம் உங்களை வந்து சந்திப்போம்; உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்போம் என்று உங்களுக்கு நாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவோம்.
11 ஏனெனில் நாம் உங்களைப் பற்றிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் நமக்குத் தெரியும்; அவை உங்களுக்கு வளமான பிற்காலத்தையும் நம்பிக்கைகையும் தரும்படி நாம் கொண்ட சமாதானத்தின் எண்ணங்களே தவிர, துன்பத்தின் எண்ணங்கள் அல்ல.
12 நீங்கள் நம்மை மன்றாடித் திரும்ப வருவீர்கள்; நீங்கள் நம்மை வேண்டுவீர்கள்; நாம் உங்கள் மன்றாட்டைக் கேட்டருளுவோம்.
13 நீங்கள் நம்மைத் தேடுவீர்கள்; முழு இதயத்தோடு தேடி நம்மைக் கண்டடைவீர்கள்;
14 ஆம், மெய்யாகவே நம்மைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர்; உங்களை அடிமைத்தனத்தினின்று மீட்டுக்கொண்டு வருவோம்; நாம் உங்களை விரட்டின எல்லா இடத்தினின்றும், எல்லா மக்களிடமிருந்தும் உங்களை ஒருமிக்கச் சேர்ப்போம், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்திலிருந்து நாம் உங்களை அனுப்பினோமோ, அந்த இடத்திற்கே திரும்பி வரச் செய்வோம்.
15 ஆண்டவர் பபிலோனில் எங்களுக்கு இறைவாக்கினர்களைத் தோற்றுவித்துள்ளார்' என்கிறீர்கள்.
16 ஆதலால், தாவீதின் அரியணையில் வீற்றிருக்கும் அரசனைப் பற்றியும், இப்பட்டணத்தில், வசிக்கும் எல்லா மக்களைக் குறித்தும், உங்களோடு கூடச் சிறையிருப்புக்குக் கொண்டு போகப்படாத உங்கள் சகோதரரைப் பற்றியும் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்.
17 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் அவர்களுக்குப் பஞ்சம், வாள், கொள்ளை நோய்களையும் அனுப்புவோம்; தின்ன முடியாத அளவுக்குக் கெட்டுப் போன காட்டத்திப் பழங்களுக்கு அவர்களைச் சமமாக்குவோம்.
18 அன்றியும் நாம் அவர்களைப் பஞ்சம், வாள், கொள்ளைநோய் இவற்றால் துன்புறுத்துவோம்; உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் திகிலாய் இருக்கச் செய்வோம்; நாம் அவர்களைச் சிதறடித்த எல்லா இனத்தார் நடுவிலும் அவர்களைச் சாபனைக்கும் திகைப்புக்கும் நகைப்புக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்குவோம்.
19 ஏனெனில், நாம் தொடக்க முதல் நம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினர்கள் வழியாய்த் திரும்பத் திரும்பத் தெரிவித்த வாக்கியங்களை அவர்கள் கேட்கவில்லை; நீங்களும் கேட்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.'
20 ஆதலால் யெருசலேமிலிருந்து பபிலோனுக்கு நாம் நாடு கடத்திய நீங்கள் அனைவரும் ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்:
21 நமது பெயரால் உங்களுக்குப் பொய்யைப் பிதற்றும் கோலியாஸ் மகன் ஆக்காபைக் குறித்தும், மாவாசியாஸ் மகன் செதேசியாசைப் பற்றியும் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நாம் அவர்களைப் பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாருக்குக் கையளிப்போம்; அவன் அவர்களை உங்கள் கண் முன்பாகக் கொலை செய்வான்,
22 யூதாவிலிருந்து பபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட அனைவரும் இனி மேல் அவர்களை உதாரணமாக வைத்து, யாதொருவனைச் சபிக்கும் போது, "பபிலோனிய அரசன் நெருப்பினால் சுட்டெரித்த செதேசியாசைப் போலவும், ஆக்காபைப் போலவும் ஆண்டவர் உன்னை நடத்துவாராக!" என்பார்கள்.
23 ஏனெனில், அவர்கள் இஸ்ராயேலுக்கு மதிகேடானதைச் செய்தார்கள்; தங்கள் அயலாருடைய மனைவியரோடு விபசாரம் செய்தார்கள்; நாம் கட்டளையிடாதிருக்கும்போதே, நமது திருப்பெயரால் பொய்த் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்; அதெல்லாம் நமக்கு நன்றாய்த் தெரியும்; நாமே அதற்குச் சாட்சி, என்கிறார் ஆண்டவர்."
24 எரெமியாசின் திருமுகத்திற்கு மறுப்பு: மறுபடியும் ஆண்டவர் என்னை நோக்கி: நீ நெக்கோலமித்தனான செமேயியாசைப் பார்த்துச் சொல்:
25 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீ யெருசலேமில் இருக்கும் எல்லா மக்களுக்கும், மாவாசியாசின் மகனும் அர்ச்சகர்களுமாகிய செப்போனியாசுக்கும், மற்ற அர்ச்சகர்களுக்கும் உன் பெயரால் திருமுகங்களை எழுதியனுப்பினாய்;
26 அவற்றில்: வெறி பிடித்துத் தீர்க்கதரிசனம் உரைக்கும் எம்மனிதனையும் நீர் விசாரித்துத் தொழுவிலும் சிறையிலும் போடுமாறு, ஆண்டவருடைய கோயிலில் நீர் தலைவராயிருக்கும்படி, ஆண்டவர் உம்மை யோயாதாவுக்குப் பதிலாய் அர்ச்சகராக ஏற்படுத்தினாரே!
27 அப்படியிருக்க, உங்களுக்குத் தீர்க்க தரிசனம் சொல்லும் அநாத்தோத்து ஊரானாகிய எரெமியாசை நீர் ஏன் கண்டிக்கவில்லை?
28 ஏனெனில் பபிலோனிலுள்ள எங்களுக்கு அவன், "உங்கள் அடிமை வாழ்வு நெடுங்காலம் நீடிக்கும்; வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழுங்கள்; தோட்டம் துரவுகளை அமைத்து அவற்றின் பலனைச் சாப்பிடுங்கள்" என்று எழுதியிருக்கிறான்' என்று சொல்லியிருக்கிறாய்?"
29 அர்ச்சகராகிய சொப்போனியாஸ் அடிக்கடி தந்தை இறைவக்கினரான எரெமியாசுக்குப் படித்துக் காட்டினார்;
30 அப்பொழுது ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
31 நாடுகடத்தப்பட்டவர்கள் எல்லாருக்கும் நீ இவ்வாறு எழுதியனுப்பு: 'நெக்கேலாம் ஊரானாகிய செமேயியாசைக் குறித்து ஆண்டவர் கூறுகின்றார்: நாம் அனுப்பாமலே செமேயியாஸ் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தான்; உங்களுக்குப் பொய் சொல்லி அதை நம்ப வைத்தான்;
32 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நெக்கேலாம் ஊரானாகிய செமேயியாசையும் அவன் சந்ததியாரையும் நாம் தண்டிப்போம்; நம் மக்களுக்கு நாம் செய்யும் நன்மைகளைச் காண அவன் சந்ததியில் ஒருவனும் இரான்; ஏனெனில் அவன் ஆண்டவருக்கு எதிராய்ப் பேசினான், என்கிறார் ஆண்டவர்."
அதிகாரம் 30
1 மீண்டும் ஆண்டவரின் வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
2 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: நாம் உனக்குச் சொன்ன வாக்கியங்களை எல்லாம் ஒரு புத்தகத்தில் எழுது;
3 ஏனெனில் இதோ, நாட்கள் வரும்; நம் மக்களாகிய இஸ்ராயேலுக்கும் யூதாவுக்கும் மீண்டும் முன்பு போல வளவாழ்வு தருவோம், என்கிறார் ஆண்டவர்; அவர்களுடைய முன்னோர்க்கு நாம் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்ப அழைத்து வருவோம்; அவர்கள் அதனை உடைமையாக்கிக் கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்."
4 இஸ்ராயேலையும் யூதாவையும் குறித்து ஆண்டவர் சொன்ன வார்த்தைகள் இவையே:
5 ஆண்டவர் கூறுகிறார்: அச்சத்தின் ஒலியைக் கேட்டோம்; பீதியின் ஒலி தான்! சமாதானத்தின் குரலன்று.
6 ஆண் மகன் எவனாவது பிள்ளை பெறுவதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; இல்லையெனில், ஆண்கள் யாவரும் பிரசவிக்கும் பெண்களைப் போல, தங்கள் இடையில் கை வைத்திருப்பானேன்? எல்லா முகமும் வெளுத்துப் போயிருப்பதேன்?
7 ஐயோ! அந்த நாள் மிகப்பெரிய நாள்! அதற்குச் சமமான நாளில்லை; யாக்கோபுக்கு அது துன்பத்தின் காலம்; ஆயினும் அதிலிருந்து மீளுவான்.
8 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாளில் அவன் கழுத்தில் இருக்கும் நுகத்தடியை அவன் கழுத்தினின்று எடுத்து முறிப்போம்; அவனுடைய விலங்குகளைத் தறிப்போம்; இனி அந்நியர் அவனை ஆளமாட்டார்கள்.
9 அப்போது அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கும், நாம் அவர்களுக்கு அளிக்கும் தாவீது அரசனுக்கும் ஊழியம் செய்வார்கள்.
10 ஆதலால், நம் ஊழியனாகிய யாக்கோபே, அஞ்சாதே; இஸ்ராயேலே, பயப்படாதே, என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் இதோ, நம் தொலைநாட்டினின்று உன்னை மீட்போம்; உன் சந்ததியையும் அடிமைத் தனத்தினின்று விடுவிப்போம்; அப்போது யாக்கோபு திரும்பி வந்து இளைப்பாறுவான்; அவனை அச்சுறுத்துபவனோ ஒருவனுமிரான்.
11 ஏனெனில் உன்னை மீட்க நாம் உன்னோடு இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்: எந்த மக்கள் நடுவில் நீ சிதறடிக்கப்பட்டு வாழ்ந்தாயோ, அந்த மக்கள் அனைவரையும் நாம் முற்றிலும் அழிப்போம்; ஆனால் உன்னை நாம் முற்றிலும் அழிக்கமாட்டோம்; நீதியான அளவில் உன்னைத் தண்டிப்போம், முற்றிலுமே உன்னை தண்டிக்காமல் விட மாட்டோம்.
12 ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: உன் காயம் ஆறாது, உன் புண் மிகவும் கொடியது;
13 உன் காயத்தைக் கட்டுவார் ஒருவருமில்லை, உன் காயங்களை ஆற்றுவதற்கு மருந்தே இல்லை.
14 உன் காதலர்கள் அனைவரும் உன்னை மறந்து விட்டார்கள்; அவர்கள் உன்னைத் தேடுகிறதே இல்லை; நாமோ மாற்றானைத் தாக்குவது போல் உன்னைத் தாக்கினோம்; இரக்கமற்ற பகைவனைப் போலத் தண்டித்தோம்; ஏனெனில் உன் அக்கிரமம் மிகப்பெரியது; உன் பாவங்கள் மிக மோசமானவை.
15 நீ நசிந்து போனதாய் ஏன் கூவுகிறாய்? உன் நோய் தீருவது இயலாத ஒன்று; ஏனெனில் உன் அக்கிரமம் மிகப்பெரியது; உன் பாவங்கள் மிக மோசமானவை. எனவே தான் இவற்றையெல்லாம் செய்தோம்.
16 ஆதலால் உன்னை விழுங்குகிறவர்கள் விழுங்கப்படுவார்கள்; உன் பகைவர் அனைவரும் அடிமைகளாய் அழைத்துப் போகப் படுவார்கள்; உன்னை அழிக்கிறவர்கள் அழிக்கப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையடிப்பவர்களை நாம் கொள்ளைப் பொருளாக்குவோம்.
17 அவர்கள், 'சீயோன் தள்ளுண்டவள்; அவளுக்காக யாரும் கவலைப்படவில்லை' என்கிறார்கள்; நாமே உனக்கு நலத்தைத் திருப்பிக் கொடுப்போம்; உன் காயங்களை நாமே ஆற்றுவோம், என்கிறார் ஆண்டவர்.
18 மீண்டும் ஆண்டவர் கூறுகிறார்: நாம் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்ப நிலை நாட்டுவோம்; அவன் வீடுகளின் மீது இரக்கம் காட்டுவோம்; நகரம் தன் மலையின் மேல் மீண்டும் கட்டப்படும்; அரண்மனையும் முன்னிருந்த இடத்தில் அமைக்கப்படும்;
19 அவர்களிடமிருந்து நன்றிக் கீதங்கள் எழும்பி வரும்; மகிழ்ச்சி கொண்டாடுவோரின் குரல்கள் கேட்கும்; நாம் அவர்களைப் பலுகச் செய்வோம்; அவர்கள் எண்ணிக்கையில் குறையமாட்டார்கள்; நாம் அவர்களை மகிமைப்படுத்துவோம்; இனி அவர்கள் சிறுமையடைய மாட்டார்கள்.
20 அவர்களுடைய பிள்ளைகள் முன்னாளில் இருந்தது போலவே இருப்பார்கள்; அவர்களுடைய சபை நம் முன்னிலையில் நிலைநாட்டப்படும்; அவர்களைத் துன்புறுத்துவோர் அனைவரையும் தண்டிப்போம்.
21 அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்; அவர்களை ஆளுபவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்; அவன் நம்மை அணுகும்படி செய்வோம்; அவனும் நம்மை அணுகி வருவான்; ஏனெனில் தானாகவே நம்மை அணுகி வரத் துணிபவன் எவன்? என்கிறான் ஆண்டவர்.
22 நீங்கள் நம் மக்களாய் இருப்பீர்கள்; நாம் உங்கள் கடவுளாய் இருப்போம்.
23 இதோ, ஆண்டவருடைய கடும் புயல்! சூறாவளிக் காற்றுப் போல் அவர் கோபம் எழும்பியுள்ளது; அது தீயவர்களின் தலை மேல் கடுமையாய் மோதும்.
24 ஆண்டவரின் கடுங்கோபம், அவர் மனதில் நினைத்திருக்கும் எண்ணங்களையெல்லாம் செய்து முடித்து நிறைவேற்றாத வரையில், திரும்பாது; கடைசி நாளில் இதைக் கண்டுணர்வீர்கள்.
அதிகாரம் 31
1 ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: அக்காலத்தில், இஸ்ராயேலின் எல்லாக் குடும்பங்களுக்கும் நாமே கடவுளாய் இருப்போம்; அவர்கள் நம் மக்களாய் இருப்பார்."
2 ஆண்டவர் கூறுகிறார்: "வாளுக்குத் தப்பிப் பிழைத்த ஒரு மக்களினம், பாலைநிலத்தில் நம் அருளைக் கண்டடைந்தது; இஸ்ராயேல் இளைப்பாற்றியைத் தேடிய போது,
3 ஆண்டவர் அவனுக்குத் தொலைவில் தோன்றினார்; முடிவில்லாத அன்பினால் உன்மேல் அன்பு வைத்தோம், ஆதலால் உனக்குத் தொடர்ந்து அன்பு செய்கிறோம்.
4 இஸ்ராயேலாகிய கன்னிப் பெண்ணே, உன்னை நாம் மீண்டும் கட்டுவோம், நீ கட்டப்படுவாய்; மீண்டும் நீ மேளத்தோடு மகிழ்ச்சி கொண்டாடுவாரோடு ஆடிப்பாடி வெளிப்படுவாய்.
5 சமாரியா நாட்டு மலைகளின் மேல் மீண்டும் நீ திராட்சைக் கொடிகளை நடுவாய்; நடுகிறவர்கள் நடுவார்கள், அதன் கனிகளை உண்டு களிப்பார்கள்;
6 நாள் வரும்; அப்போது எப்பிராயீம் மலையில் காவலர், 'எழுந்து வாருங்கள், சீயோனுக்கு நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்' என்று கூவுவார்கள்."
7 ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: "யாக்கோபைக் குறித்து மகிழ்ச்சியினால் அக்களியுங்கள்; மக்களின் தலைவர்களைக் குறித்து ஆர்ப்பரியுங்கள் குரலையுயர்த்தி அறிவியுங்கள், புகழ் பாடுங்கள்: 'ஆண்டவர் தம் மக்களை மீட்டார், இஸ்ராயேலில் எஞ்சினவர்களை மீட்டார்' என்று சொல்லுங்கள்.
8 இதோ, வட நாட்டினின்று நாம் அவர்களை அழைத்து வருவோம்; பூமியின் கடைகோடிகளினின்று அவர்களை ஒருமிக்கச் சேர்ப்போம்; அவர்களுள் குருடரும் முடவரும் கர்ப்பவதிகளும் பிரசவப் பெண்களும் இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் சேர்ந்து பெருங் கூட்டமாய்த் திரும்பி வருவார்கள்.
9 அவர்கள் அழுகையோடு திரும்பி வருவார்கள்; நாமோ இரக்கத்தோடு அவர்களை அழைத்து வருவோம்; நீரோடைகளின் அருகிலேயே அவர்களை நடக்கச் செய்வோம்; இடறாத செம்மையான நேர் வழியில் நடத்தி வருவோம்; ஏனெனில் இஸ்ராயேலுக்கு நாமே தந்தை; எப்பிராயீமோ நமக்குத் தலைப்பேறான பிள்ளை.
10 புறவினத்தாரே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்: கேட்டுத் தொலைவிலுள்ள தீவுகளுக்கு அறிவியுங்கள்: 'இஸ்ராயேலைச் சிதறடித்தவர் அவர்களைச் சேர்ப்பார், ஆயன் மந்தையைக் காப்பது போல் அவர்களைக் காப்பார்' என்று சொல்லுங்கள்.
11 ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டார்; வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.
12 அவர்கள் வந்து, சீயோனின் உச்சியில் பாடிப் போற்றுவார்கள், ஆண்டவர் அவர்களுக்கு அளிக்கும் நன்மைகளாகிய கோதுமை, திராட்சை ரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், மாட்டு மந்தைகள் ஆகியவற்றை நாடிக் கூட்டமாய் ஓடி வருவார்கள்; அவர்களுடைய வாழ்க்கை நீர்வளம் மிக்க நிலம் போலிருக்கும்; இனி அவர்கள் வருந்த மாட்டார்கள்.
13 அப்போது கன்னிப் பெண்கள் நாட்டிய மாடிக் களிப்பார்கள்; இளைஞரும் முதியோரும் அவ்வாறே மகிழ்வார்கள்; அவர்களுடைய அழுகையை அக்களிப்பாக மாற்றுவோம்; அவர்களைத் தேற்றித் துயரத்தைப் போக்கி, அவர்களை மகிழச் செய்வோம்.
14 அர்ச்சகர்களின் உள்ளத்தைச் செழுமையானவற்றால் பூரிக்கச் செய்வோம்; நம் மக்கள் நம்முடைய நன்மைத்தனத்தால் நிரப்பப்படுவார்கள், என்கிறார் ஆண்டவர்."
15 ஆண்டவர் கூறுகிறார்: "ராமாவிலே கூக்குரல் கேட்டது; பேரழுகையும் ஒப்பாரியுமாக இருந்தது; இராக்கேல் தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டு, அவை இல்லாமையால் ஆறுதல் பெற விரும்பவில்லை."
16 ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: "நீ வீறிட்டழாதே, கண்ணீர் வடிக்காதே; உன் வேலைக்குத் தக்க கைம்மாறு கிடைக்கும், பகைவனின் நாட்டிலிருந்து அவர்கள் வருவார்கள்,
17 எதிர்காலத்திற்கு உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் திரும்பத் தங்கள் சொந்த நாட்டிற்கே வந்து சேருவார்கள், என்கிறார் ஆண்டவர்.
18 எப்பிராயீம் அழுது புலம்பியதை நாம் கேட்டோம்: 'நான் அடங்காத காளை போல் இருந்தேன், நீர் என்னைத் தண்டித்தீர், நான் தண்டனை பெற்றேன்; நீர் என்னைத் திரும்பக் கொண்டு வாரும், நானும் திரும்புவேன்; ஏனெனில் என் கடவுளாகிய ஆண்டவர் நீரே.
19 நான் உம்மை விட்டு விலகிய பின் மனம் வருந்தினேன்; எனக்கு நீர் அறிவுறுத்திய பின் நான் மார்பில் அறைந்து கொண்டேன்; என் வாலிப வயதின் அவமானத்தைக் கண்டு நான் வெட்கி நாணி மயங்கினேன்' என்றழுதான்.
20 எப்பிராயீம் நம் அருமையான மகனல்லனோ? அவன் நம்முடைய அன்புக் குழந்தையன்றோ? நாம் அவனை அச்சுறுத்தும் போதெல்லாம் அவனை நினைத்துக் கொள்ளுகிறோம். அவனை நினைத்து நம் உள்ளம் உருகுகின்றது; அவனுக்கு நாம் திண்ணமாய் இரக்கம் காட்டுவோம், என்கிறார் ஆண்டவர்.
21 உனக்கு வழியடையாளங்களை நிறுத்திக்கொள்; கைகாட்டிகளை உனக்கென நாட்டிக்கொள்; நீ நடத்துபோன வழியாகிய நெடுஞ்சாலையைக் கவனித்துப்பார்; இஸ்ராயேல் என்னும் கன்னிப் பெண்ணே, திரும்பிவா; உன் நகரங்களாகிய இவற்றுக்குத் திரும்பிவா.
22 பிரமாணிக்கமில்லாத மகளே, இன்னும் எத்துணைக் காலம் நீ இவ்வாறு தத்தளிப்பாய்? ஏனெனில் பூமியில் ஆண்டவர் புதுமையான ஒன்றைப் படைக்கிறார்: மனைவி தன் கணவனைத் தேடிச் செல்கிறாள்."
23 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறும் வாக்கு இதுவே: "நாம் அவர்கள் முன்னைய நன்னிலைக்குத் திரும்பக் கொண்டு வரும்போது, யூதாவின் நாட்டிலும் அதன் நகரங்களிலும், 'நீதியின் இருப்பிடமே, பரிசுத்த மலையே, ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக' என்று இன்னும் மக்கள் சொல்வார்கள்.
24 உழவர்களும், மந்தைகளை மேய்க்கும் இடையர்களும், யூதா நாட்டிலும், அதன் பட்டணங்களிலும் ஒருமித்துக் குடியிருப்பார்கள்.
25 சோர்ந்த உள்ளத்தை நாம் ஊக்குவோம்; பசித்தவன் எவனையும் திருப்தியாக்குவோம்."
26 அப்போது நான் விழித்தெழுந்து பார்த்தேன்; என் உறக்கம் எனக்கு இன்பமாயிருந்தது.
27 "இதோ, நாட்கள் வருகின்றன; அப்போது இஸ்ராயேலின் வீட்டிலும் யூதாவின் வீட்டிலும் மனிதரையும் மிருகங்களையும் விதைகளைப் போல விதைப்போம், என்கிறார் ஆண்டவர்.
28 பிடுங்கவும் தகர்க்கவும் சிதறடிக்கவும் அழிக்கவும் துன்பப்படுத்தவும் அவர்களை எப்படிக் கவனித்துக் கெண்டிருந்தோமோ, அப்படியே அவர்களைக் கட்டி நிலைநாட்டவும் கவனித்துக் கொண்டிருப்போம், என்கிறார் ஆண்டவர்.
29 தன் செயலுக்குத் தானே பொறுப்பாளி: "அந்நாட்களில் அவர்கள், 'தந்தையர் திராட்சைக் காய் தின்ன, பிள்ளைகளுக்குப் பல் கூசிற்றாம்' என்று இனிச் சொல்ல மாட்டார்கள்.
30 ஆனால் ஒவ்வொருவனும் அவனவன் பாவத்திற்காகச் சாவான்; திராட்சைக் காயைத் தின்னும் மனிதனுக்குத் தான் பற்கள் கூசும்.
31 "இதோ, நாட்கள் வருகின்றன; அப்போது நாம் இஸ்ராயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை செய்வோம், என்கிறார் ஆண்டவர்;
32 இது, நாம் எகிப்து நாட்டினின்று விடுவித்து, இவர்களுடைய தந்தையரைக் கைபிடித்து நடத்தி வந்த போது நாம் அவர்களோடு செய்த உடன் படிக்கையைப் போன்றிராது; நாம் அவர்களின் தலைவராய் இருந்தும் நம் உடன்படிக்கையை அவர்கள் முறித்துப் போட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
33 அந்நாள் வரும் போது நாம் இஸ்ராயேல் வீட்டாரோடு செய்யப்போகும் உடன்படிக்கை இதுவே: நமது திருச்சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்போம்; அவர்களுடைய இதயங்களின் மேல் அதை எழுதுவோம்; நாம் அவர்களின் கடவுளாய் இருப்போம்; அவர்கள் நம் மக்களாய் இருப்பர், என்கிறார் ஆண்டவர்.
34 இனி ஒவ்வொருவனும் தன் அயலானையோ, தன் சகோதரனையோ பார்த்து, 'ஆண்டவரை அறிந்து கொள்' என்று சொல்லிக் கற்பிக்க மாட்டான்; ஏனெனில், அவர்களுள் சிறியவன் முதல் பெரியவன் வரை அனைவரும் என்னை அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் அவர்களுடைய அக்கிரமத்தை நாம் மன்னித்து விடுவோம், அவர்களுடைய பாவத்தை இனி மேல் நினைவுகூரவே மாட்டோம்."
35 இஸ்ராயேல் நிலைத்திருக்கும்: ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்; அவர் பகலில் ஒளி வீசக் கதிரவனையும், இரவில் ஒளி கொடுக்க நிலவின் குறிப்பிட்ட முறைமையையும் விண்மீன்களையும் தருகிறவர்; அவர் கடலைக் கொந்தளிக்கச் செய்து அலைகளை ஒலிக்கச் செய்கிறவர்- சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்: அவர் சொல்வது:
36 மேற்படி ஒழுங்கு முறைமை நம் முன்னிலையிலிருந்து நீங்கிப் போகுமாயின், இஸ்ராயேலின் சந்ததியும் நம் முன்னிலையில் ஒரு தனி இனமாய் என்றென்றும் இல்லாமற் போகும். என்கிறார் ஆண்டவர்."
37 ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: "மேலே வான்வெளி அளக்கப்படுமாயின் கீழே பூமியின் அடிப்படைகள் சோதிக்கப்படக் கூடுமாயின், நமக்கு விரோதமாய் இஸ்ராயேல் மக்கள் செய்தவற்றை முன்னிட்டு அதன் சந்ததியார் அனைவரையும் நாம் (முற்றிலும்) கைவிடுவோம், என்கிறார் ஆண்டவர்.
38 இதோ, நாட்கள் வருகின்றன; ஆண்டவருக்காக இப்பட்டணம் அனானியேல் கோபுரம் முதல் மூலை வாயில் வரையில் கட்டப்படும், என்கிறார் ஆண்டவர்.
39 அதனை அளக்கும் நூல் நேராகக் காரேபு குன்று வரையில் போய்க் கோவா அருகில் திரும்பும்.
40 பிணங்களும் சாம்பலும் நிறைந்த பள்ளத்தாக்கு முழுவதும், கேதிரோன் அருவி வரையில் உள்ள நிலப்பரப்பும், கிழக்கே உள்ள குதிரை வாயிலின் மூலை வரையிலும் அதனுள் அடங்கும். ஆண்டவருக்காக அர்ச்சிக்கப்பட்ட இந்த இடம் இனி என்றும் அழியாது, இடிபடாது."
அதிகாரம் 32
1 யூதாவின் அரசனான செதேசியாசினுடைய ஆளுகையின் பத்தாம் ஆண்டில், நபுக்கோதனசார் ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் ஆண்டவர் எரெமியாசுக்கு அருளிய வாக்கு.
2 அப்போது பபிலோனிய அரசனது படை யெருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது; எரெமியாஸ் இறைவாக்கினரோ யூதாவின் அரசனது மாளிகையிலிருந்த சிறைக்கூடத்தின் முற்றத்தில் அடைக்கப் பட்டிருந்தார்;
3 செதேசியாஸ் மன்னன் தான் எரெமியாசைச் சிறையில் அடைத்தவன்; அவன் அவரிடம் இவ்வாறு சொன்னான்: "நீ இறைவாக்குரைத்து, 'ஆண்டவர் கூறுகிறார்: இதோ, இப்பட்டணத்தைப் பபிலோனிய மன்னனுக்குக் கையளிப்போம்; அவன் அதைப் பிடித்துக் கொள்வான்;
4 யூதாவின் மன்னனாகிய செதேசியாஸ் கல்தேயருடைய கைகளிலிருந்து தப்பமாட்டான்; அவன் பபிலோனிய அரசனுக்குக் கையளிக்கப்படுவான்; இருவரும் ஒருவரையொருவர் பார்த்து நேருக்கு நேராய்ப் பேசிக் கொள்வார்கள்;
5 அவன் செதேசியாசைப் பபிலோனுக்கு அழைத்துக்கொண்டு போவான்; நாம் அவனைச் சந்திக்கும் வரையில் அவன் அங்கேயே இருப்பான்; நீங்கள் கல்தேயருக்கு எதிராய்ப் போராடினாலும் பயனொன்றுமில்லை, என்கிறார் ஆண்டவர்' என்று எங்களுக்குச் சொல்லுவானேன்?"
6 அதற்கு எரெமியாஸ் சொன்ன மறுமொழி இதுவே: "ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
7 இதோ உன் உறவினனாகிய செல்லும் என்பவனின் மகன் அனாமேயேல் உன்னிடம் வந்து, 'அநாத்தோத்திலிருக்கும் என் நிலத்தை நீ வாங்கிக் கொள்; அதனை வாங்கிக் கொள்ள உனக்கே உரிமையுண்டு' என்று சொல்வான்.
8 ஆண்டவர் சொன்னது போலவே என் பெரியப்பனின் மகன் அனாமேயேல் சிறைக்கூடத்திற்கு வந்து தாழ்வாரத்தில் என்னைச் சந்தித்து, 'பென்யமீன் நாட்டில் அநாத்தோத்திலிருக்கும் என் நிலத்தை நீ வாங்கிக் கொள்; ஏனெனில் சொத்துரிமையும் மீட்கும் உரிமையும் உன்னுடையவை; நீயே அதை வாங்கிக் கொள்' என்றான். அது ஆண்டவருடைய வாக்கு என அப்போது நான் அறிந்தேன்.
9 அவ்வாறே அநாத்தோத்திலிருக்கும் என் பெரியப்பனின் மகன் அனாமேயேலிடமிருந்து அந்நிலத்தை வாங்கிக் கொண்டு, அதற்கு விலையாகப் பதினேழு வெள்ளிச் செக்கல்களை நிறுத்துக் கொடுத்தேன்.
10 ஒப்பந்தம் எழுதி என் கையொப்பமிட்டுச் சாட்சிகள் முன்னால் பணத்தைத் தராசில் வைத்தேன்.
11 கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் அடங்கிய ஒப்பந்த விலைப் பத்திரத்தில் முத்திரையும் கையொப்பமும் இட்டு, அதனையும், அதன் வெளிப்படை நகல் ஒன்றையும் பெற்றுக் கொண்டேன்.
12 ஒப்பந்த விலைப்பத்திரத்தை மகாசியாஸ் மகனான நேரியின் மகன் பாரூக்கிடம் கொடுத்தேன்; என் பெரியப்பனின் மகன் அனாமேயேலும், ஒப்பந்த விலைப்பத்திரத்தில் கையொப்பமிட்ட சாட்சிகளும், சிறைக் கூட வாயிலில் உடகர்ர்ந்திருந்த யூதரனைவரும் நான் கொடுத்ததைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
13 அவர்கள் முன்னிலையில் பாரூக்கை நோக்கி, 'இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்:
14 கையொப்பமிட்ட இந்த ஒப்பந்த விலைப்பத்திரத்தையும், இந்த வெளிப்படைப் பத்திரத்தையும்- இரண்டையும் பெற்றுக் கொள்; அவற்றை எடுத்து நெடுநாளிருக்கும்படி ஒரு மட்பானையில் வை.
15 ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இந்த நாட்டில் வீடுகளும் கழனிகளும் திராட்சைத் தோட்டங்களும் மறுபடியும் விலைக்கு வாங்கப் படும்' என்று சொன்னேன்.
16 ஒப்பந்த விலைப்பத்திரத்தை நேரி மகன் பாரூக்கிடம் கொடுத்த பின்னர், நான் ஆண்டவரை நோக்கி வேண்டிக் கொண்டேன்:
17 ஆண்டவராகிய இறைவனே, உம்முடைய மிகுந்த வல்லமையாலும், நீட்டிய கரத்தாலும் வானத்தையும் பூமியையும் படைத்தவர் நீரே;
18 உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை; நீரே ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கம் காட்டுகிறவர்; தந்தையரின் அக்கிரமத்திற்காகப் பிள்ளைகளிடம் பழிவாங்குகிறவர்; பெருமையும் வல்லமையும் கொண்ட கடவுளே, சேனைகளின் ஆண்டவர் என்பதே உமது திருப்பெயர்.
19 நீர் ஆலோசனையில் பெரியவர், செயலாற்றுவதில் வல்லவர், ஒவ்வொருவனுடைய நெறிகளுக்கும், செயல்களின் வினைவுக்கும் ஏற்றவாறு கைம்மாறு அளிக்க, ஆதாமின் மக்களுடைய போக்குகளை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்.
20 எகிப்து நாட்டிலும், இன்று வரையில் இஸ்ராயேலிலும் மற்ற மக்கள் நடுவிலும் புதுமைகளையும் அற்புதங்களையும் செய்தீர்; இன்று போலவே அன்றும் உமது திருப்பெயருக்குப் புகழைத் தேடிக் கொண்டீர்.
21 புதுமைகள், அற்புதங்கள் முதலியவற்றால் நீட்டிய கரத்தாலும், வல்லமை மிக்க கையாலும், அச்சத்தாலும் உம் மக்களை எகிப்து நாட்டிலிருந்து விடுவித்தீர்.
22 பாலும் தேனும் பொழியும் நாட்டை அவர்களுடைய முன்னோர்க்கு ஆணையிட்டுச் சொன்னவாறே அவர்களுக்குக் கொடுத்தீர்.
23 அவர்கள் புறப்பட்டு வந்து அதனை உடைமையாக்கிக் கொண்டார்கள்; ஆனால் அவர்கள் உமது வாக்குக்கு அமைந்து, உமது சட்டத்திற்கேற்றவாறு நடந்தார்கள் அல்லர்; செய்யும்படி அவர்களுக்கு நீர் சொன்னவற்றில் எதையுமே அவர்கள் செய்யவில்லை; ஆதலால் தான் இத்தீமைகளெல்லாம் அவர்களுக்கு நேர்ந்தன.
24 இதோ பட்டணத்தைப் பிடிக்க அதனருகில் கொத்தளங்கள் எழுப்பப்படுகின்றன; வாள், பஞ்சம், கொள்ளை நோய் இவற்றால் இப்பட்டணம் தனக்கு எதிராய்ப் போராடும் கல்தேயர்களுக்குக் கையளிக்கப்படும்; நீர் சொன்னவை யாவும் வந்துற்றன. நீரும் அதைப்பார்க்கிறீர்.
25 ஆண்டவராகிய இறைவனே, பட்டணம் கல்தேயர் கையில் பிடிப்பட்டிருக்கிறது; நீரோ என்னை நோக்கி, "நிலத்தை விலை கொடுத்து வாங்கி, அதற்குச் சாட்சிகளையும் ஏற்படுத்து" என்கிறீரே!
26 அந்நேரத்தில் ஆண்டவரின் வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
27 இதோ, நாமே ஆண்டவர், உயிருள்ளவை யாவற்றுக்கும் நாமே கடவுள்; அப்படியிருக்க, நம்மால் ஆகாதது ஏதேனும் உண்டோ?
28 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ இந்நகரத்தைக் கல்தேயருக்கும் பபிலோனிய மன்னன் நபுக்கோதனசாருக்கும் கையளிப்போம்; அவர்கள் அதனைப் பிடிப்பார்கள்.
29 கல்தேயர் இந்நகரத்தைத் தாக்க வருவார்கள். அதனையும் அதன் வீடுகளையும் நெருப்புக்கு இரையாக்குவார்கள்; ஏனெனில் வீடுகளின் மேல் தளங்களில் பாகாலுக்குத் தூபம் காட்டியும், அந்நிய தெய்வங்களுக்கு அர்ச்சனைகளை அர்ப்பணம் செய்தும் நமக்குக் கோபமூட்டினார்கள்.
30 இஸ்ராயேலின் மக்களும், யூதாவின் மக்களும் தங்கள் இளமை முதல் நம் முன்னிலையில் எந்நாளும் தீமையைத் தவிர வேறெதும் செய்யவில்லை. இஸ்ராயேலின் மக்கள் இன்று வரையில் தங்கள் கைவேலைப்பாடுகளான சிலைகளால் நமது கோபத்தை மூட்டியதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை, என்கிறார் ஆண்டவர்.
31 ஆதலால் இந்நகரம் கட்டப்பட்ட நாள் முதல் நமது முன்னிலையிலிருந்து எடுபடும் நாள் வரையில் அது நமது சினத்திற்கும் ஆத்திரத்திற்கும் இலக்காகி விட்டது.
32 ஏனெனில் நமக்குக் கோபத்தை மூட்டும்படி, இஸ்ராயேலின் மக்களும் யூதாவின் மக்களும் இவர்களுடைய அரசர்களும் தலைவர்களும் அர்ச்சகர்களும் தீர்க்கதரிசிகளும் யூதாவின் மனிதரும் யெருசலேமின் குடிகளும் தீமை செய்தார்கள்.
33 நாம் அக்கறையோடு அவர்களுக்குத் திரும்பத் திரும்பக் கற்பித்திருந்தும், அவர்கள் நமக்கு முதுகைத் திருப்பினார்களேயன்றி முகத்தைக் காட்டவில்லை; நமது தண்டனையையும் படிப்பினையையும் ஏற்றுக் கொள்ள உடன்படவுமில்லை.
34 நமது பெயரைத் தாங்கிய கோயிலை அசுத்தப்படுத்துமாறு அதில் அருவருப்பானவற்றை வைத்தார்கள்.
35 மெலோக்குக்குத் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பலியிடுவதற்காக என்னோன் மகனின் பள்ளத்தாக்கில் பாகாலுக்குப் பீடங்களைக் கட்டினார்கள் அப்படிச் செய்யும்படி நாம் அவர்களுக்குக் கற்பிக்கவில்லை; அவர்கள் இத்தகைய அருவருப்பைச் செய்து யூதாவையும் அப்பாவத்தில் வீழ்த்துவார்கள் என்று நாம் கனவிலும் கருதவில்லை.
36 ஆதலால் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர், 'வாள், பஞ்சம், கொள்ளைநோய் இவற்றின் மூலம் பபிலோனிய மன்னனுக்குக் கையளிக்கப்படும்' என்று நீங்கள் குறிப்பிடும் இந்த நகரத்தைப் பற்றிக் கூறுகிறார்:
37 இதோ, நமது சினத்திலும் ஆத்திரத்திலும் கடுங்கோபத்திலும் நாம் அவர்களைத் துரத்தின எல்லா நாடுகளின்றும் அவர்களை ஒருமிக்கக் கூட்டிச் சேர்ப்போம்; அவர்களை இந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு வந்து அச்சமின்றி வாழச் செய்வோம்;
38 அவர்கள் நமக்கு மக்களாயிருப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கடவுளாய் இருப்போம்.
39 அவர்களுக்கு ஒரே உள்ளத்தையும் ஒரே நெறியையும் அருளுவோம்; அப்போது அவர்கள் தங்கள் நன்மைக்காகவும், தங்களுக்குப் பின் தங்கள் பிள்ளைகளின் நன்மைக்காகவும் என்றென்றும் நமக்கு அஞ்சி நடப்பார்கள்.
40 அவர்களோடு நாம் முடிவில்லா உடன்படிக்கை செய்வோம்; அவர்களுக்கு நன்மை செய்யத் தவற மாட்டோம்; அவர்கள் நம்மை விட்டு விலாகாதபடி நம்மைப் பற்றிய பயத்தை அவர்கள் உள்ளத்தில் பதியச் செய்வோம்.
41 நாம் அவர்களுக்கு நன்மை செய்து மனங்களிப்போம்; உண்மையாகவே, முழு மனத்தோடும் முழு இதயத்தோடும் அவர்களை இந்நாட்டில் நிலைநாட்டுவோம்;
42 ஆண்டவர் இன்னும் கூறுகிறார்: இத்தகைய பெருந்தீமைகளையெல்லாம் அந்த மக்களுக்குக் கொண்டு வந்தது போலவே, நாம் அவர்களுக்கு அறிவிக்கும் நன்மைகளையெல்லாம் அவர்கள் மேல் பொழிவோம்.
43 கல்தேயர்களுக்குக் கையளிக்கப்பட்டு, மனிதரும் மிருகமுங் கூட அற்றுப்போய்க் காடாகி விட்டதென்று நீங்கள் சொல்லும் இந்த நாட்டில் இன்னும் கழனிகளை வைத்திருப்பார்கள்.
44 பென்யமீன் நாட்டிலும், யெருசலேமைச் சுற்றிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைநாட்டிலிருக்கும் நகரங்களிலும், சமவெளிப் பட்டணங்களிலும் தென்னாட்டு நகரங்களிலும் நிலங்கள் விலைக்கு வாங்கப்படும்; ஒப்பந்த விலைப்பத்திரங்கள் எழுதப்படும்; முத்திரை இடப்படும்; சாட்சிகள் கையொப்பமிடுவர்; ஏனெனில், நாம் அவர்களை முந்திய நன்னிலைக்கு மீட்டு வருவோம், என்கிறார் ஆண்டவர்."
அதிகாரம் 33
1 சிறைக்கூடத்தின் முற்றத்தில் இன்னும் எரெமியாஸ் அடைப்பட்டிருக்கையில், இரண்டாம் முறையாக ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது:
2 உலகத்தை உண்டாக்கி, அதை உருவாக்கி, நிலைநாட்டிய ஆண்டவர்- ஆண்டவர் என்பது அசரது பெயர்- அந்த ஆண்டவர் கூறுகிறார்:
3 நம்மை நோக்கிக் கூப்பிடு; நாம் உனக்குச் செவிசாய்ப்போம்; நீ அறியாத பெரியனவும் மறைந்தனவுமான சிலவற்றை உனக்கு அறிவிப்போம்.
4 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் முற்றுகைக்கும் வாளுக்கும் எதிராகப் போராடுவதற்காக இடித்துத் தள்ளப்பட்ட இந்த நகரத்தின் வீடுகளைக் குறித்தும், யூதாவின் அரசர்களுடைய அரண்மனைகளைக் குறித்தும் கூறுகிறார்:
5 போரிட்டுத் தாக்கவும் நமது கோபத்திலும் ஆத்திரத்திலும் வீழ்த்தி மடித்த மனிதர்களின் உயிரற்ற உடல்களால் நிரப்பவும் இந்த நகரத்துக்குள் கல்தேயர் வருகிறார்கள்; ஏனெனில் அவர்களுடைய தீய செயல்களை முன்னிட்டு நம் முகத்தை இந்நகரத்தினின்று திருப்பிக் கொண்டோம்.
6 இதோ, நாம் சிகிச்சை செய்து அவர்களுடைய காயங்களை ஆற்றி, அவர்களை நலமாக்குவோம்; அவர்களுக்குச் சமாதானத்தையும் உண்மையையும் மிகுதியாக அளிப்போம்;
7 யூதாவின் துன்ப நிலைமையையும், யெருசலேமின் துன்ப நிலைமையையும் மாற்றி, அவர்களை முன்னைய நிலைமையில் உறுதியாய் நாட்டுவோம்;
8 அவர்கள் நமக்கு விரோதமாய்ச் செய்த எல்லா அக்கிரமங்களினின்றும் அவர்களைத் தூய்மைப் படுத்தி, அவர்கள் நம்மை நிந்தித்துப் பிரிந்து சென்று, நமக்கெதிராய்க் கட்டிக் கொண்ட பாவங்களனைத்தையும் மன்னித்து விடுவோம்.
9 நாம் இவர்களுக்குச் செய்யப்போகும் நன்மைகளையெல்லாம் கேள்விப்படும் உலக மக்கள் அனைவர் முன்னிலையிலும் நமக்குப் பேரும் மகிமையும் மகிழ்ச்சியும் புகழுமிருக்கும்; நாம் அவர்களுக்கு அருளும் எல்லா வித சமாதானத்தையும் நன்மைகளையும் கண்டு மற்ற மக்களினத்தாரெல்லாம் கலங்கி அஞ்சுவார்கள்.
10 ஆண்டவர் கூறுகிறார்: மனிதனோ, மிருகமோ இல்லாத பாழ்நிலம் என்று நீங்கள் சொல்லும் இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும், மனிதனின்றிக் குடியற்று, மந்தையற்றுப் பாழாய்க் கிடக்கும் யெருசலேமின் தெருக்களிலும்,
11 அக்களிப்பின் ஆரவாரமும், மகிழ்ச்சிச் சந்தடியும், மணவாளன் மணவாட்டியின் குரலொலியும், 'ஆண்டவர் நல்லவர், எல்லையில்லா இரக்கமுள்ளவர்; ஆதலால் அவரைப் போற்றுங்கள்' என்று சொல்லிப் பாடிக் கொண்டே ஆண்டவரின் கோயிலுக்குக் காணிக்கைகள் கொண்டு போகிறவர்களின் சந்தடியும் திரும்பவும் கேட்கும்; ஏனெனில் இந்நாட்டினை பண்டைக் காலத்தில் இருந்தவாறு மீண்டும் நிலைநாட்டுவோம், என்கிறார் ஆண்டவர்.
12 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மனிதனற்று, மிருகமற்றுக் காடகிக் கிடக்கும் இவ்விடத்திலும், இதன் எல்லாப் பட்டணங்களிலும், தங்கள் மந்தைகளை மடக்கும் இடையர்களின் குடியிருப்புகள் இன்னும் இருக்கும்.
13 மலைநாட்டு நகரங்களிலும், கீழ்நாட்டு, தென்னாட்டுப் பட்டணங்களிலும், பென்யமீன் நாட்டிலும், யெருசலேமின் சுற்றுப்புறத்திலும், யூதாவின் பட்டணங்களிலும், தன் ஆடுகளை எண்ணிப் பார்க்கும் இடையனது கையின் கீழாய் ஆடுகள் கிடைக்குள் செல்லும், என்கிறார் ஆண்டவர்.
14 "இதோ நாட்கள் வருகின்றன; இஸ்ராயேலின் வீட்டாருக்கும், யூதாவின் வீட்டாருக்கும் நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம், என்கிறார் ஆண்டவர்:
15 அந்நாட்களில்- அக்காலத்தில் தாவீதுக்கு நீதியின் தளிர் ஒன்றை முளைப்பிப்போம்; அவர் நாட்டில் நீதியையும் நியாயத்தையும் செலுத்துவார்.
16 அந்நாட்களில் யூதா மீட்கப்படும், யெருசலேம் அச்சமின்றிக் குடியிருக்கும்; 'ஆண்டவரே நமது நீதி' என்பதே அதற்கு இனிப் பெயராய் வழங்கும்.
17 ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டின் அரியணையில் வீற்றிருக்கத் தக்க மனிதன் தாவீதுக்கு இல்லாமற் போகமாட்டான்.
18 நமது முன்னிலையில் தகனப்பலிகளை ஒப்புக் கொடுக்கவும், தானியக் காணிக்கைகளை எரிக்கவும், என்றென்றும் பலிகளைத் தரவும் தக்க மனிதன் லேவியினுடைய குலத்து அர்ச்சகர்களுள் இல்லாமற் போகான்."
19 ஆண்டவரின் வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
20 ஆண்டவர் கூறுகிறார்: இரவோடும் பகலோடும் நாம் செய்திருக்கும் நமது உடன்படிக்கையை முறித்து இரவும் பகலும் தங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் வராதபடி நீங்கள் செய்யக் கூடுமானால்,
21 நம்முடைய ஊழியனாகிய தாவீதோடு நாம் செய்திருக்கும் உடன்படிக்கையை முறித்துத் தாவீதின் அரியணையில் வீற்றிருக்கத் தக்க வழித் தோன்றலும், நமக்குப் பணிபுரியக் கூடிய லேவியின் குலத்தைச் சேர்ந்த அர்ச்சகரும் அற்றுப் போகும்படி செய்ய உங்களால் ஒரு வேளை இயலும்.
22 வானத்தின் விண்மீன்களை எண்ணுவதும், கடற்கரை மணலை அளப்பதும் இயலாத ஒன்று; அவ்வாறே நம்முடைய ஊழியனாகிய தாவீதின் வழித்தோன்றல்களையும், நம்முடைய அர்ச்சகர்களாகிய லேவித்தரையும் பலுகச் செய்வோம்."
23 ஆண்டவரின் வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
24 ஆண்டவர் தேர்ந்து கொண்ட இரண்டு குடும்பங்களும் தள்ளுண்டு போயின' என்று இம்மக்கள் சொன்னதை நீ கவனிக்கவில்லையா? இவ்வாறு, தங்கள் கண்ணில் நம் மக்கள் ஓர் இனம் என்று கூறப்படாத அளவுக்கு அவர்கள் நம் மக்களை அவமதித்தார்கள்.
25 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இரவோடும் பகலோடும், வானம் பூமி இவற்றின் ஒழுங்கு முறைகளோடும் நாம் உடன்படிக்கை செய்யவில்லை என்பது மெய்யாயிருக்கக் கூடுமாகில்,
26 யாக்கோபின் சந்ததியையும், நம் ஊழியனாகிய தாவீதின் சந்ததியையும் புறக்கணித்து, அவர்களினின்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களின் வழி வந்தவர்களை ஆளும்படி யாரையும் தேர்ந்தெடுக்க மாட்டோம் என்றாகும். ஆனால் நாம் அவர்களுக்கு மீண்டும் நல் வாழ்வளித்து அவர்கள் மீது இரக்கம் காட்டுவோம்."
அதிகாரம் 34
1 யெருசலேமுக்கும், அதன் நகரங்கள் அனைத்திற்கும் விரோதமாய்ப் பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரும், அவனுடைய எல்லாப் படைகளும், அவன் அரசுக்குட்பட்ட உலக அரசுகள் யாவும், எல்லா மக்களும் போர் புரிந்து கொண்டிருந்த நாளில், ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
2 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: நீ போய் யூதாவின் அரசனாகிய செதேசியாசிடம் பேசு; அவனுக்குச் சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாம் இப்பட்டணத்தைப் பபிலோனிய மன்னனின் கையில் கொடுத்து விடுவோம்; அவன் அதனை நெருப்பால் எரிப்பான்.
3 நீ அவன் கைக்குத் தப்பமாட்டாய்; திண்ணமாய்ப் பிடிபடுவாய்; அவன் கையில் அளிக்கப்படுவாய்; நீயும் பபிலோனிய மன்னனும் ஒருவரையொருவர் நேருக்கு நேராய் பார்த்துப் பேசுவீர்கள்; நீ பபிலோனுக்குப் போவாய்.'
4 யூதாவின் அரசனான செதேசியாசே, ஆண்டவருடைய வாக்கை இன்னும் கேள்: உன்னைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: ' நீ வாளால் மடிய மாட்டாய்;
5 நீ அமைதியாகவே சாவாய்; உனக்கு முன்னிருந்த பண்டைய மன்னர்களான உன் முன்னோர்களுக்காக நறுமணப் பொருட்களைப் புகைத்தவாறே, உனக்காகவும் நறுமணப் பொருட்களை எரித்து, "ஐயோ, ஆண்டவனே!" என்று சொல்லி உன்னைக் குறித்துப் புலம்புவார்கள்;' ஏனெனில் நாமே இதைச் சொல்லியிருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்."
6 எரெமியாஸ் இறைவாக்கினர் யெருசலேமில் இவ்வார்த்தைகளையெல்லாம் யூதாவின் அரசனான செதேசியாசுக்கு அறிவித்தார்.
7 அப்போது பபிலோனிய அரசனது படை யெருசலேமுக்கு எதிராயும், எஞ்சியிருந்த யூதாவின் பட்டணங்களாகிய இலக்கீசு, அஜக்கா என்பவற்றிற்கு எதிராயும் போர் செய்து கொண்டிருந்தது. ஏனெனில், இவ்விரண்டு பட்டணங்களுந் தான் யூதாவின் கோட்டை சூழ்ந்த நகரங்களில் பிடிபடாமல் மீதியாய் நின்றவை.
8 விடுதலை பெற்ற அடிமைகள்: செதேசியாஸ் மன்னன் யெருசலேமில் யூத மக்கள் யாவருடனும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர் ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
9 அவன் செய்த ஒப்பந்தம் பின்வருமாறு: ஒவ்வொருவனும் தன்னுடைய எபிரேய அடிமைகளை- ஆண், பெண் இருபாலாரையும்- உரிமைக் குடிமக்களாய் விடுதலை செய்வான்; இனித் தன் சகோதரனாகிய யூதனை வேறொரு யூதன் அடிமையாய் வைத்திருக்கக் கூடாது என்று ஒப்புக் கொண்டார்கள்.
10 அரசன் சொன்னதைக் கேட்டுத் தலைவர்களும் பொதுமக்களும் ஒத்துக் கொண்டு அவனவன் தன் தன் அடிமையை- ஆண், பெண் இருபாலாரையும்- விடுதலை செய்யவும், இனி அவர்களை அடிமைகளாய்க் கருதி நடத்தாதிருக்கவும் உடன்பட்டார்கள்; பின்னர் அந்தக் கட்டளையின்படியே தங்கள் அடிமைகளை விடுதலை செய்தார்கள்.
11 ஆனால் நாளடைவில் அவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு, ஏற்கனவே விடுதலை செய்த ஆண், பெண் இருபாலரான அடிமைகளை மறுபடியும் பிடித்து அடிமைகளாக்கிக் கொண்டார்கள்.
12 அப்போது ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது.
13 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: நாம் உங்கள் தந்தையரை அடிமைத் தன வீடாகிய எகிப்து நாட்டினின்று மீட்டு வந்த நாளில் அவர்களோடு ஓர் உடன்படிக்கை செய்தோம்.
14 அதன்படி அவனவன் தனக்கு அடிமையாய் விற்கப்பட்ட எபிரேய சகோதரனை ஏழாம் ஆண்டில் விடுதலை செய்ய வேண்டும். அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் பணிபுரிவான்; அதன் பின் நீ அவனை விடுதலை செய்து அனுப்பி விட வேண்டும்; ஆனால் நம் சொல்லுக்கு உங்கள் முன்னோர் செவிசாய்க்கவுமில்லை, கீழ்ப்படியவுமில்லை.
15 இன்று நீங்கள் நம்மை அணுகி வந்து, ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு விடுதலை அளித்தோம் என்று வெளிப்படையாய்ச் சொல்லி, நம் முன்னிலையில் செம்மையான செயலைச் செய்தீர்கள்; அன்றியும் இவ்வொப்பந்தத்தை நமது பெயரால் வழங்கப்படும் இந்தக் கோயிலில் நம் முன்னிலையில் செய்தீர்கள்.
16 ஆனால், பின்பு நீங்கள் சொன்ன சொல்லை மீறி, நமது திருப்பெயரைப் பங்கப்படுத்தினீர்கள்; அவனவன் தன் தன் விருப்பப்படி விடுதலை செய்தனுப்பிய ஆண், பெண் அடிமைகளைத் திரும்பவும் உங்களுக்கு அடிமைகளாகச் செய்து கொண்டீர்கள்.
17 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: நமக்குக் கீழ்ப்படிய மறுத்து, உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும் அயலானையும் அடிமைத்தனத்தினின்று போக விடை தராததால், வாள், பஞ்சம், கொள்ளை நோய் இவை உங்கள் மேல் வரும்படி நாம் விடை தருகிறோம். நாம் உங்களை உலகத்தின் எல்லா அரசுகளுக்கும் திகில் தரும் காட்சியாக்குவோம்.
18 இரண்டாய்ப் பிளந்து, அந்த இரு துண்டங்களின் இடையில் கடந்து போவதற்காகத் தாங்கள் பயன்படுத்திய கன்றுக்குட்டியின் நிலையையே, நம் முன்னிலையில் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல் அவ்வுடன்படிக்கையை மீறினவர்களும் அடையச் செய்வோம்.
19 யூதாவின் தலைவர்களும் யெருசலேமின் தலைவர்களும் அண்ணகரும் அர்ச்சகர்களும், நாட்டின் மக்களனைவரும் கன்றின் இரு துண்டங்களின் இடையில் கடந்து போனார்கள்;
20 அவர்களை அவர்களுடைய பகைவர் கைகளிலும், அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்களின் கைகளிலும் விட்டு விடுவோம்; அவர்களுடைய உடல்கள் வானத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
21 யூதாவின் அரசனாகிய செதேசியாசையும், அவனுடைய தலைவர்களையும் அவர்களின் பகைவர் கையிலும், அவர்கள் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும், உங்களை விட்டகன்றிருக்கும் பபிலோனிய அரசன் படைகளின் கைகளிலும் விட்டுவிடுவோம்;
22 இதோ, நாமே ஆணை தருவோம்; நாமே அவர்களை இந்தப் பட்டணத்திற்குத் திரும்பக் கூட்டி வருவோம்; அவர்கள் இதற்கு விரோதமாய்ப் போரிட்டு இதனைப் பிடித்துத் தீவைத்துக் கொளுத்துவார்கள்; யூதாவின் பட்டணங்களையோ குடியற்றுப் போன காடாக்குவோம், என்கிறார் ஆண்டவர்,"
அதிகாரம் 35
1 யூதாவின் அரசனாகிய யோசியாசின் மகன் யோவாக்கீமுடைய நாட்களில் ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
2 நீ இரெக்காபித்தருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடு பேசி, அவர்களை ஆண்டவரின் கோயிலுக்கு, அதிலுள்ள கருவூல அறைகளுள் ஒன்றுக்கு அழைத்துக் கொண்டு போ; அங்கே அவர்களுக்கு குடிக்க இரசம் கொடு" என்றார்.
3 அவ்வாறே நான் ஹப்சானியாசின் மைந்தன் எரெமியாசின் மகன் யேஜோனியாசையும், அவன் சகோதரர் எல்லாரையும், அவன் பிள்ளைகள் அனைவரையும், இரெக்காபித்தர் வீட்டார் யாவரையும் அழைத்துக் கொண்டு,
4 கடவுளுக்கு உகந்த யேஜேதேலியாசின் மகனான ஹானான் என்பவனின் மக்களிருக்கும் கருவூல அறைக்கு ஆண்டவரின் கோயிலுள் அவர்களைக் கூட்டிக் கொண்டு போனேன்; அது தலைவர்களின் கருவூல அறைக்கு அருகில் இருந்தது; அது வாயிற் காவலான செல்லோம் என்பவனின் மகனான மவாசியாசின் கருவூல அறைக்கு மேலே இருந்தது.
5 இரெக்காபித்தர் வீட்டின் மக்கள் முன்னிலையில் இரசம் நிறைந்த குடங்களையும் பாத்திரங்களையும் வைத்து, அவர்களை நோக்கி, ",இரசம் குடியுங்கள்" என்றேன்.
6 அவர்கள், "நாங்கள் இரசம் குடிக்க மாட்டோம்; ஏனெனில், இரெக்காபின் மகனும் எங்கள் தந்மையுமான யோனதாபு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்: 'நீங்களும் உங்கள் மக்களும் என்றென்றும் இரசம் பருகாதீர்கள்;
7 நீங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்ள வேண்டாம்; விதை விதைக்க வேண்டாம்; திராட்சைக் கொடிகள் நட வேண்டாம். திராட்சைத் தோட்டங்கள் வைக்க வேண்டாம்; ஆனால் நீங்கள் வழிப் போக்கராய் இருக்கும் இந்தப் பூமியில் நெடுங்காலம் வாழும்படிக்கு உங்கள் வாழ்நாளெல்லாம் கூடாரங்களில் குடியிருங்கள்' என்றார்.
8 நாங்களோ எல்லாவற்றிலும் இரெக்காபின் மகனான எங்கள் தந்தை யோனதாவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, நாங்களும் எங்கள் மனைவியரும் எங்கள் புதல்வர், புதல்வியரும் எங்கள் வாழ்நாளெல்லாம் இரசம் பருகவில்லை;
9 நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டிக்கொள்ளவில்லை; திராட்சைத் தோட்டமோ கழனியோ விதையோ எங்களுக்கில்லை;
10 ஆனால் நாங்கள் கூடாரங்களில் குடியிருக்கிறோம்; எங்கள் தந்தை யோனதாவு எங்களுக்குக் கற்பித்த எல்லாவற்றுக்கும் அமைந்து நடந்து வருகிறோம்.
11 ஆனால், பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் எங்கள் நாட்டின் மேல் படையெடுத்த போது, நாங்கள், 'கல்தேயர் படையும் சீரியர் படையும் வருகின்றன; வாருங்கள், நாம் யெருசலேமுக்கு ஓடிவிடுவோம்' என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு, யெருசலேமுக்கு வந்தோம், இங்கேயே வாழ்கிறோம்" என்று சொன்னார்கள்.
12 அன்றியும் ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
13 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீ போய் யூதாவின் மனிதரையும், யெருசலேமின் குடிகளையும் பார்த்து, 'நீங்கள் திருந்தி நமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியமாட்டீர்களோ?' என்று சொல், என்கிறார் ஆண்டவர்.
14 இரெக்காபு மகன் யோனதாபு இரசம் குடிக்க வேண்டாமெனத் தன் மக்களுக்குச் சொன்ன வார்த்தைகளை அவர்கள் கடைப்பிடித்தார்கள். அவர்கள் இந்நாள் வரையில் இரசம் பருகவில்லை; ஏனெனில் தங்கள் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள்; நாமோவெனில் தொடக்கத்திலிருந்து திரும்பத் திரும்ப உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை;
15 திரும்பத் திரும்ப நாம் நம் ஊழியர்களான இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பி, 'நீங்கள் அனைவரும் உங்கள் தீய நெறியை விட்டுத் திரும்பி, உங்கள் செயல்களைச் செவ்வைப்படுத்துங்கள்; அந்நிய தெய்வங்களைப் பின் செல்லாதீர்கள்; அவர்களை வணங்காதீர்கள்; நம் சொற்படி நடந்தால் உங்களுக்கும் உங்கள் தந்தையர்க்கும் நாம் கொடுத்த இந்நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள்' என்று சொன்னோம்; நீங்களோ நமக்குச் செவி சாய்க்கவுமில்லை, கேட்கவுமில்லை;
16 இரெக்காபுடைய மகன் யோனதாபின் மக்கள் தங்கள் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடித்தார்கள்; இம்மக்களோ நமக்குக் கீழ்ப்படியவில்லை.
17 ஆதலால் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் யூதாவின் மேலும், யெருசலேமின் குடிகள் அனைவர் மேலும், யெருசலேமின் குடிகள் அனைவர் மேலும், ஏற்கெனவே நாம் அவர்களுக்கு விரோதமாய் அறிவித்திருந்த எல்லாவகையான துன்பங்களையும் கொண்டுவருவோம்; ஏனெனில் அவர்களுக்குச் சொன்னோம், அவர்கள் கேட்கவில்லை; அவர்களை அழைத்தோம், அவர்கள் மறுமொழி தரவில்லை."
18 எரெமியாஸ் இரெக்காபித்தரின் வீட்டாருக்கு, "இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் உங்கள் தந்தையாகிய யோனதாபின் கட்டனைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கட்டளைகளையெல்லாம் கடைபிடித்து, அவன் விதித்ததையெல்லாம் நிறைவேற்றி வந்தீர்கள்;
19 ஆதலால் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நம் திருமுன் நிற்பதற்கேற்றவன் இரெக்காபின் மகன் யோனதாபின் சந்ததியில் எப்போதுமே இருப்பான்" என்று அறிவித்தார்.
அதிகாரம் 36
1 யூதாவின் அரசனாகிய யோசியாசின் மகன் யோவாக்கீமுடைய நான்காம் ஆண்டில், ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
2 நீ ஓலைச்சுருள் ஒன்றையெடுத்து நாம் உன்னோடு உரையாடத் தொடங்கிய நாளான யோசியாசின் நாள் முதல் இந்நாள் வரையில் இஸ்ராயேலுக்கும் யூதாவுக்கும், மற்ற மக்களினத்தார் அனைவருக்கும் விரோதமாக நாம் உனக்கு அறிவித்த எல்லா வார்த்தைகளையும் அதில் எழுது:
3 ஒருவேளை நாம் அவர்களுக்குச் செய்ய நினைத்திருக்கும் தீமைகள் அனைத்தையும் யூதாவின் வீட்டார் கேள்விப்படும் போது, அவர்களில் ஒவ்வொருவனும் தன் தீய நெறியை விட்டுவிடக்கூடும்; அப்போது நாம் அவர்களுடைய அக்கிரமத்தையும் பாவத்தையும் மன்னிப்போம்" என்றார்.
4 அப்பொழுது எரெமியாஸ் நேரியாஸ் மகன் பாரூக் என்பவரை அழைப்பித்தார்; பாரூக் வந்து எரெமியாஸ் சொல்லச் சொல்ல ஆண்டவர் அவருக்கு அறிவித்த வார்த்தைகளையெல்லாம் ஓர் ஓலைச்சுருளில் எழுதினார்.
5 எரெமியாஸ் பாரூக்கை நோக்கி, "நான் அடைப்பட்டிருக்கிறேன்; ஆண்டவரின் கோயிலுக்கு நான் போக முடியாது;
6 ஆதலால் நீ அங்கே போய் நோன்பு நாளன்று, ஆண்டவரின் கோயிலில் இருக்கும் மக்களும், தங்கள் பட்டணங்களிலிருந்து வருகிற யூதாவின் வீட்டார் அனைவரும் கேட்கும்படி, நீ என் வாய்மொழியாய்க் கேட்டெழுதிய ஓலைச்சுருளிலிருந்து ஆண்டவருடைய வார்த்தைகளைப் படித்துக் காட்டு.
7 ஒருவேளை அவர்கள் ஆண்டவரின் திருமுன் விழுந்து மன்றாடி அவரவர் தத்தம் தீய நெறியை விட்டுத் திரும்பக்கூடும்; ஏனெனில் ஆண்டவர் இம்மக்களுக்கு விரோதமாகப் பெருங் கோபத்தோடும் ஆத்திரத்தேடும் பேசியிருக்கிறார்" என்றார்.
8 எரெமியாஸ் இறைவாக்கினர் கற்பித்தவாறே நேரியாஸ் மகனான பாரூக் எல்லாவற்றையும் நிறைவேற்றி ஆண்டவரின் கோயிலில் தம் ஓலைச் சுருளிலிருந்து ஆண்டவருடைய வார்த்தைகளை வாசித்தார்.
9 யூதாவின் அரசனாகிய யோசியாசின் மகன் யோவாக்கீமுடைய ஐந்தாம் ஆண்டின் ஒன்பதாம் மாதத்தில் யெருசலேம் குடிகள் யாவரும், யூதாவின் நகரங்களிலிருந்து யெருசலேமுக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் ஆண்டவரின் முன்னிலையில் நோன்பு ஒன்று அறிவித்தார்கள்.
10 அப்போது பாரூக் ஆண்டவரின் கோயிலுக்குச் சென்று, செயலாளனாகிய சாப்பானின் மகன் காமாரியாஸ் இருந்த மேல் முற்றத்துக் கருவூல அறையில், ஆண்டவருடைய கோயிலின் 'புதிய வாயில்' என்னுமிடத்தில் மக்களனைவரும் கேட்கும்படி எரெமியாசின் வார்த்தைகளை ஓலைச்சுருளிலிருந்து வாசித்தார்.
11 சாப்பான் மகனான காமாரியாசின் மகன் மிக்கயோஸ் ஓலைச்சுருளிலிருந்து வாசிக்கப்பட்ட ஆண்டவருடைய வார்த்தைகளையெல்லாம் கேட்டு,
12 அரசனது அரண்மனைக்குப் போய், அங்கே செயலாளனின் அறைக்குச் சென்றான்; ஆங்கே, இதோ தலைவர்கள் அனைவரும் உட்கார்ந்திருந்தார்கள்; செயலாளனாகிய எலிசாமாவும், செமேயியாஸ் மகன் தலாயியாசும், ஆக்கோர் மகன் எல்நாத்தானும், சாப்பான் மகன் காமாரியாசும், அனானியாஸ் மகன் செதேசியாசும், தலைவர்கள் அனைவரும் அங்கிருந்தார்கள்;
13 மக்களெல்லாரும் கேட்கும்படி பாரூக் ஓலைச்சுருளிலிருந்து வாசித்த வார்த்தைகளையெல்லாம் மிக்கேயாஸ் என்பவன் அவர்களுக்கு அறிவித்தான்.
14 ஆதலால், தலைவர்கள் எல்லாரும், கூசி என்பவனின் மகன் செலேமியாசின் மகனான நத்தானியாஸ் மகன் யூதி என்பவனைப் பாரூக்கிடம் அனுப்பி, "நீ மக்கள் கேட்கும்படி வாசித்துக் காட்டிய ஓலைச் சுருளைக் கையில் எடுத்துக்கொண்டு வா" என்று சொல்லச் சொன்னார்கள்; நேரியாஸ் மகனாகிய பாரூக் ஓலைச் சுருளைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்களிடம் வந்தார்;
15 அப்போது அவர்கள், "இங்கே உட்கார்ந்து, நாங்கள் கேட்கும்படி இவற்றை வாசி" என்றார்கள்; பாரூக் அவர்களுக்கு வாசித்துக் காட்டினார்.
16 இவர்கள் அவ்வார்த்தைகளையெல்லாம் கேட்டு, ஒருவன் ஒருவனை மருண்டு நோக்கினார்கள்; பின் பாரூக்கைப் பார்த்து, "இவ்வார்த்தைகளை எல்லாம் நாங்கள் போய் அரசனுக்கு அறிவிக்க வேண்டும்" என்றார்கள்.
17 பின்னும் அவர்கள் பாரூக்கிடம், "இவ்வார்த்தைகளை எல்லாம் நீ எவ்வாறு எழுதினாய்? அவன் சொல்லச் சொல்ல நீ எழுதினாயா?" என்று கேட்டார்கள்.
18 பாரூக் அவர்களை நோக்கி, "அவர் எனக்கு இவ்வார்த்தைகளை எல்லாம் வாய்மொழியாய்ச் சொல்லிக் கொண்டே வந்தார்; அவர் சொல்லச் சொல்ல நான் மையால் இவ்வோலைச்சுருளில் எழுதிக்கொண்டேன்" என்றார்.
19 அப்போது தலைவர்கள் பாரூக்கைப் பார்த்து, "நீயும் எரெமியாசும் போய் ஒளிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இருக்குமிடம் யாருக்கும் தெரியலாகாது" என்றார்கள்.
20 செயலாளனாகிய எலிசாமாவின் அறையிலேயே ஓலைச் சுருளை வைத்து விட்டு அவர்கள் முற்றத்துக்குள் சென்று அரசனைக் கண்டு நடந்தவற்றை எல்லாம் தெரிவித்தார்கள்.
21 அரசன் அந்த ஓலைச் சுருளைக் கொண்டு வருமாறு யூதியை அனுப்பினான்; அவன் செயலாளனாகிய எலிசாமாவின் அறைக்குப் போய், அந்த ஓலைச் சுருளை வாங்கிக் கொண்டு வந்து, அரசனும் அரசனைச் சூழ்ந்திருந்த தலைவர்களும் கேட்க அதனை வாசித்தான்.
22 அது ஆண்டின் ஒன்பதாம் மாதம்; அரசன் தனது குளிர்கால மாளிகையில் இருந்தான்; அவன் முன்பாக எரி கரி நிறைந்த சட்டியொன்று வைக்கப்பட்டிருந்தது.
23 யூதி ஓலைச்சுருளில் மூன்று அல்லது நான்கு பத்திகளை வாசிக்க வாசிக்க, அரசன் தன் சூரிக் கத்தியால் அதை அறுத்து அறுத்துக் கணப்பு நெருப்பில் போட்டுக் கொண்டே வந்தான்; ஓலைச்சுருள் முழுவதும் எரிந்து சாம்பலாகும் வரை இவ்வாறு செய்தான்.
24 ஆனால் அரசனோ, அவ்வார்த்தைகளை எல்லாம் கேட்ட அவனுடைய ஊழியர்களோ அஞ்சவுமில்லை; தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளவுமில்லை.
25 ஆயினும் எல்நாத்தானும் தலாயியாசும் காமாரியாசும் ஓலைச் சுருளை நெருப்பில் போடாதபடி அரசனைத் தடுத்துப் பார்த்தார்கள்; ஆனால் அரசன் கேட்கவில்லை.
26 அரசனோ இறைவாக்கினரான எரெமியாசையும் அவருடைய செயலாளராகிய பாரூக்கையும் பிடித்து வரும்படி அமலேக்கு மகன் யேரேமியேலுக்கும், எஜிரியேல் மகன் சராயியாசுக்கும், அப்தேயேல் மகன் செலேமியாசுக்கும் கட்டளையிட்டான்; ஆனால் ஆண்டவர் அவர்களை மறைத்து விட்டார்.
27 எரெமியாஸ் வாய்மொழியாய்ச் சொல்லிப் பாரூக் எழுதிய வார்த்தைகள் அடங்கிய ஓலைச் சுருளை அரசன் நெருப்பில் போட்ட பின்னர், ஆண்டவருடைய வாக்கு எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளப்பட்டது:
28 நீ இன்னொரு ஓலைச் சுருளை எடுத்து, யூதாவின் அரசனாகிய யோவாக்கீம் கொளுத்தி விட்ட முன்னைய ஓலைச் சுருளில் அடங்கியிருந்த வார்த்தைகளை எல்லாம் அதில் எழுது.
29 பிறகு நீ யூதாவின் அரசனாகிய யோவாக்கீமை நோக்கி: 'ஆண்டவர் கூறுகிறார்: "பபிலோனிய மன்னன் விரைவில் வந்து இந்நாட்டை அழித்து, அதிலுள்ள மனிதனையும் மிருகத்தையும் வெட்டி வீழ்த்துவான் என்று ஏன் அதில் எழுதினாய்?" என்று எரெமியாசுக்குச் சொல்லியன்றோ நீ அந்த ஓலைச் சுருளைக் கொளுத்தி விட்டாய்;
30 ஆதலால் யூதாவின் அரசனாகிய யோவாக்கீமைக் குறித்து ஆண்டவர் கூறுகிறார்: இனித் தாவீதின் அரியணையில் வீற்றிருக்க யோவாக்கீமுக்குச் சந்ததி இராது; அன்றியும் அவனுடைய உடல் வெளியில் எறியப்பட்டு பகலின் வெப்பத்திற்கும் இருளின் குளிருக்கும் விடப்பட்டுக் கிடக்கும்;
31 நாம் அவனையும் அவன் சந்ததியையும் அவனுடைய ஊழியரையும் அவர்களுடைய அக்கிரமங்களுக்காகத் தண்டிப்போம்; அவர்களின் மேலும், யெருசலேமின் குடிகள் மேலும், யூதாவின் மனிதர் மேலும் அவர்களுக்கு நாம் சொல்லியும் அவர்கள் பொருட்படுத்தாத தீமைகளை எல்லாம் வரச் செய்வோம்' என்கிறார் ஆண்டவர்."
32 எரெமியாஸ் இன்னொரு ஓலைக்சுருளை எடுத்து அதனை நேரியாசின் மகனும் தம் செயலாளருமாகிய பாரூக்கிடம் கொடுத்தார்; அவர் அதில் யூதாவின் அரசனாகிய யோவாக்கீம் எரித்து விட்ட ஓலைச்சுருளில் எரெமியாஸ் சொல்லச் சொல்லத் தாம் முன்பு எழுதியிருந்த வார்த்தைகளை எல்லாம் எழுதினார்; இன்னும் அவற்றைப் போன்ற வேறு வார்த்தைகளையும் சேர்த்து எழுதினார்:
அதிகாரம் 37
1 பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் யூதா நாட்டின் அரசனாக ஏற்படுத்தியிருந்த யோசியாசின் மகன் செதேசியாஸ், யோவாக்கீமுடைய மகன் யேக்கோனியாசுக்குப் பதிலாய் அரசாளத் தொடங்கினான்.
2 ஆண்டவர் எரெமியாஸ் இறைவாக்கினரின் வாயிலாக அறிவித்த வார்த்தைகளை அவனோ அவனுடைய ஊழியர்களோ நாட்டு மக்களோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
3 செதேசியாஸ் அரசன் செலேமியாஸ் மகன் யூக்காலையும், மவாசியாஸ் மகன் சோப்போனியாஸ் என்னும் அர்ச்சகரையும் எரெமியாஸ் இறைவாக்கினரிடம் அனுப்பி, "நம் கடவுளாகிய ஆண்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்" என்று கேட்டுக் கொண்டான்.
4 அந்நாட்களில் எரெமியாஸ் உரிமையாய் மக்கள் நடுவில் நடமாடிக் கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை; அப்போது பார்வோரின் படை எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தது; யெருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த கல்தேயர் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு யெருசலேமை விட்டகன்றார்கள்.
5 அப்பொழுது ஆண்டவருடைய வாக்கு எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளப்பட்டது:
6 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: என்னிடம் ஆலோசனை கேட்க உங்களை அனுப்பின யூதாவின் அரசனிடம் போய் இவ்வாறு சொல்லுங்கள்: 'இதோ உங்களுக்கு உதவியாக வந்த பார்வோனின் படை தன் சொந்த நாடாகிய எகிப்துக்குத் திரும்பிப் போகும்;
7 கல்தேயர் திரும்பி வந்து இப்பட்டணத்திற்கு விரோதமாய்ப் போர் புரிந்து, அதனைக் கைப்பற்றி நெருப்பினால் எரிப்பார்கள்.
8 ஆண்டவர் இன்னும் கூறுகிறார்: "கல்தேயர் திண்ணமாய் நம்மை விட்டகலுவார்கள்" என்று சொல்லி உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்; அவர்கள் போகமாட்டார்கள்.
9 உங்களுக்கு எதிராய்ப் போர்புரியும் கல்தேயரின் படையை முற்றிலும் நீங்கள் தோற்கடித்தாலும், அவர்களுள் காயம்பட்டவர்கள் சிலேரேனும் இருப்பார்களாகில், அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் கூடாரத்தை விட்டு வெளியேறி இப்பட்டணத்தை நெருப்பினால் சுட்டெரிப்பான்."
10 அப்படியிருக்கும் போது, பார்வோன் படை நெருங்கி வந்த செய்தியைக் கேட்டுக் கல்தேயர் படைகள் யெருசலேமை விட்டகன்ற பின்னர்,
11 எரெமியாஸ் பென்யமீன் நாட்டுக்குப் போய், அங்கிருந்த தமது சொத்தைக் குடிமக்கள் முன்னிலையில் பாகம் பிரிக்கக் கருதி யெருசலேமை விட்டுப் புறப்பட்டார்.
12 அவர் பென்யமீன் வாயிலை அணுகி வந்தார்; அங்கே தன் முறைப்படி காவல் காத்துக் கொண்டிருந்த அனானியாஸ் மகனான செலேமியாசின் மகன் யேரியாஸ் என்பவன் எரெமியாசைக் கண்டு, "நீ கல்தேயர் பக்கம் சேரப்போகிறாய்" என்று சொல்லி அவரைப் பிடித்துக் கொண்டான்.
13 அதற்கு எரெமியாஸ், "இது பொய்; நான் கல்தேயர் பக்கம் சேர்வதற்காகப் போகவில்லை" என்றார்; ஆனால் யேரியாஸ் அதைப் பொருட்படுத்தாமல், ஏரெமியாசைப் பிடித்துத் தலைவர்களிடம் கொண்டு வந்தான்.
14 தலைவர்கள் சினங்கொண்டு, எரெமியாசை அடித்து, யோனத்தான் என்னும் செயலாளனின் வீட்டில் அடைத்தார்கள். இவ்வீடு ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருந்தது.
15 எரெமியாஸ் அடிமைகள் போடப்படும் நிலவறைச் சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டார்; எரெமியாஸ் நெடுநாள் அங்கிருந்தார்.
16 ஒரு நாள் செதேசியாஸ் அரசன் அவரைத் தன்னிடம் கூட்டிவரச் சொல்லி, தன் வீட்டில் தனிமையில், "ஆண்டவர் கூறிய வாக்கு ஏதெனும் உண்டோ?" என்று அவரை வினவினான்; எரெமியாஸ், "ஆம், உண்டு" என்றார். தொடர்ந்து, "நீர் பபிலோனிய அரசனுக்குக் கையளிக்கப்படுவீர்" என்று சொன்னார்.
17 மீண்டும் எரெமியாஸ் அரசனை நோக்கி, "உமக்கோ, உம் ஊழியருக்கோ, இந்த மக்களுக்கோ நான் செய்த தீமை என்ன? ஏன் என்னைச் சிறையிலடைத்தீர்?
18 உங்களுக்கும் இந்த நாட்டுக்கும் விரோதமாய்ப் பபிலோனிய அரசன் படையெடுத்து வரமாட்டான்' என்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய அந்தத் தீர்க்கதரிசிகள் எங்கே?
19 ஆகையால் என் ஆண்டவனே, அரசே உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்; என் மன்றாட்டு உம்முன் ஏற்கப்படுவதாக! செயலாளனாகிய யோனத்தானின் வீட்டிலிருக்கும் சிறைக்கூடத்திற்குத் திரும்ப என்னை அனுப்பாதீர்; அனுப்பினால் அங்கேயே நான் மடிந்தாலும் மடியலாம்" என்றார்.
20 ஆகையால் எரெமியாசைச் சிறைக்கூடத்தின் முற்றத்தில் வைத்திருக்குமாறும், பட்டணத்திலுள்ள உரொட்டிகளெல்லாம் தீரும் வரையில் நாடோறும் அவருக்கு இறைச்சியின்றி வட்ட உரொட்டி மட்டும் ஒன்று கொடுக்குமாறும் செதேசியாஸ் அரசன் கட்டளையிட்டான்; அவ்வாறே எரெமியாஸ் சிறைக்கூடத்தின் முற்றத்தில் இருந்தார்.
அதிகாரம் 38
1 அப்படியிருக்க மாத்தான் மகன் சாப்பாத்தியாசும், பாசூர் மகன் கெதேலியாசும், செலேமியாஸ் மகன் யூக்காலும், மெல்கியாஸ் மகன் பாசூரும் எரெமியாஸ் மக்கள் எல்லாருக்கும் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகளைக் கேள்வியுற்றார்கள்:
2 ஆண்டவர் கூறுகிறார்: இப் பட்டணத்திலேயே இருப்பவன் வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவான்; ஆனால் (பட்டணத்தை விட்டு வெளியேறிக்) கல்தேயரிடம் ஓடிவிடுபவன் உயிர் பிழைப்பான்; அவன் உயிரே அவனுக்குக் கிடைத்த கொள்ளைப் பொருளாய் இருக்கும்; அவன் உயிர் வாழ்வான்.
3 ஆண்டவர் கூறுகிறார்: இப்பட்டணம் பபிலோனிய அரசனுடைய படையின் கையில் விடப்படும் என்பது திண்ணம்; அவர்கள் அதைப் பிடிப்பார்கள்."
4 அப்போது தலைவர்கள் அரசனை நோக்கி, "இம்மனிதனைக் கொன்று போடுங்கள்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இப்பட்டணத்திலிருக்கிற போர் வீரர்களின் ஊக்கத்தையும் மக்கள் எல்லோருடைய ஊக்கத்தையும் வேண்டுமென்றே தளரச்செய்கிறான்; ஆதலால் இவன் மக்களுக்குத் தீமையைத் தேடுகிறானேயன்றி நன்மையைத் தேடுவதில்லை" என்றார்கள்.
5 அதற்குச் செதேசியாஸ் அரசன், 'இதோ, அவனை உங்களுக்கே கையளிக்கிறேன்; நீங்கள் கேட்கும் எதையும் அரசன் மறுக்க இயலாது" என்றான்.
6 அவர்களோ எரெமியாசைக் கொண்டு போய் அமெலேக்கின் மகனான மெல்கியாசுடைய சிறைக்கூடத்து முற்றத்திலிருந்த பாழ்கிணற்றில் கயிற்றால் இறக்கி விட்டார்கள்; அந்தக் கிணற்றில் நீரினின்று வெறும் சேறு மட்டுமே இருந்தது; இவ்வாறு எரெமியாஸ் அச் சேற்றில் இறங்கினார்.
7 அரசனுடைய மாளிகையிலிருந்த அப்தேமேலேக்கு என்றும் எத்தியோப்பிய அண்ணகன் ஒருவன் எரெமியாசைக் குழியில் தள்ளினார்கள் என்று கேள்விப்பட்டான்; அப்போது அரசன் பென்யமீன் வாயிலில் கொலு வீற்றிருந்தான்;
8 அப்தேமேலேக்கு அரசன் மாளிகையை விட்டுப் புறப்பட்டு அரசனிடம் சென்று,
9 என் ஆண்டவனே, அரசே, இறைவாக்கினரான எரெமியாசுக்கு அந்த மனிதர்கள் செய்ததெல்லாம் அநியாயம்; பட்டணத்தில் உணவு நெருக்கடி இருக்கும் இக்காலத்தில் அவரைக் குழியில் தள்ளிப் போட்டால், அவர் பட்டினியால் செத்துப் போவாரே!" என்றான்.
10 அதைக்கேட்ட அரசன் எத்தியோப்பியனான அப்தேமேலேக்கை நோக்கி, "உன்னோடு இங்கிருந்து முப்பது பேரைக் கூட்டிக் கொண்டு போய், இறைவாக்கினராகிய எரெமியாஸ் சாவதற்குள் அவரைக் குழியிலிருந்து தூக்கி விடு" என்று கட்டளையிட்டான்.
11 அவ்வாறே அப்தேமேலேக்கு அந்த மனிதர்களைத் தன்னோடு கூட்டிக் கொண்டு, அரசனுடைய மாளிகையில் துணியறைக்குப் போய்க் கிழிந்த துணிகளையும், பழங்கந்தல்களையும் எடுத்துக் கயிற்றில் கட்டிக் குழியில் எரெமியாசுக்கு விட்டான்:
12 விட்டு எத்தியோப்பியனான அப்தேமேலேக்கு எரெமியாசை நோக்கி, "இந்தக் கிழிந்த துணிகளையும், நைந்த பழங்கந்தல்களையும் உமது அக்குளில் போட்டுக் கயிற்றிலும் சுற்றிக் கொள்ளும்" என்றான்; எரெமியாஸ் அவ்வாறே செய்தார்.
13 அப்போது அவர்கள் எரெமியாசை கயிற்றின் வழியாய் இழுத்துக் குழியை விட்டு மேலே தூக்கினார்கள்; அதன் பின் எரெமியாஸ் சிறைக்கூடத்தின் முற்றத்தில் இருந்தார்.
14 செதேசியாஸ் அரசன் ஆளனுப்பி எரெமியாஸ் இறைவாக்கினரை வரவழைத்து, ஆண்டவருடைய திருக்கோயிலின் மூன்றாம் வாயிலில் அவரைச் சந்தித்து, அவரை நோக்கி, "நான் உம்மை ஒன்று கேட்கிறேன்; நீர் எதையும் என்னிடம் மறைக்கக் கூடாது" என்றான்.
15 எரெமியாஸ் செதேசியாசை நோக்கி, "நான் உமக்கு உண்மையைச் சொன்னால், நீர் என்னை கொல்ல மாட்டீரோ? நான் உமக்கு ஆலோசனை கொடுத்தாலும் நீர் கேட்க மாட்டீரே? என்றார்.
16 அப்போது செதேசியாஸ் இரகசியமாய் எரெமியாசிடம் ஆணையிட்டு, "உமக்கும் எனக்கும் இவ்வுயிரைக் கொடுத்த ஆண்டவர் பேரில் ஆணை! நான் உம்மைக் கொல்ல மாட்டேன்; உம் உயிரைப் பறிக்கத் தேடும் இந்த மனிதர்களுக்கு உம்மைக் கையளிக்கவும் மாட்டேன்" என்று வாக்குக் கொடுத்தான்.
17 அப்போது எரெமியாஸ் செதேசியாசைப் பார்த்து, "இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீர் வெளியேறிப் பபிலோனிய அரசனுடைய தலைவர்களிடம் சரணடைந்தால், உம் உயிர் தப்பும்; இப்பட்டணம் நெருப்புக்கு இரையாகாது; உம் வீட்டாரும் நீரும் உயிர் பிழைப்பீர்கள்.
18 நீர் பபிலோனிய அரசனின் தலைவர்களிடம் சரணடையாவிடில், இப்பட்டணம் கல்தேயருக்குக் கையளிக்கப்படும்; அவர்கள் அதனை நெருப்பினால் எரிப்பார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பமாட்டீர்" என்றார்.
19 அதற்குச் செதேசியாஸ் எரெமியாசை நோக்கி, "கல்தேயரிடம் ஓடிப்போன யூதர்களைக் குறித்து எனக்கு அச்சமாயிருக்கிறது; ஒருகால் கல்தேயர் என்னை அந்த யூதர்களிடம் கையளித்தால், அவர்கள் என்னை ஏளனம் செய்வார்களோ என்னவோ!" என்றான்.
20 அதற்கு எரெமியாஸ், "இல்லை; அவர்களிடம் உம்மைக் கையளிக்க மாட்டார்கள்; நான் உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்: நான் உமக்கு அறிவித்த ஆண்டவருடைய வாக்கைக் கேளும்; நீரும் நலமாயிருப்பீர்; உம் உயிரும் பிழைத்திருக்கும்.
21 ஆனால் நீர் வெளியேறிச் சரணடைய மறுப்பீராகில், ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே:
22 இதோ யூதாவின் அரசனுடைய மாளிகையில் எஞ்சியிருந்த பெண்கள் எல்லாரும் பபிலோனிய அரசனின் தலைவர்களிடம் அழைத்துச் செல்லப்படுவார்கள்; அப்போது அவர்கள், ' நீர் நம்பியிருந்த நண்பர்கள் உம்மை வஞ்சித்தார்கள்; உம்மை மேற்கொண்டு விட்டார்கள்; உம் கால்கள் சேற்றில் அமிழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்கள் உம்மை விட்டு அகன்று போயினர்' என்று சொல்லிக் கொண்டு போவார்கள்.
23 உம்முடைய மனைவியர் அனைவரும் உம் மக்களும் கல்தேயரிடம் கொண்டு போகப்படுவார்கள்; நீரும் அவர்களுடைய கைகளுக்குத் தப்பமாட்டீர்; பபிலோனிய அரசன் கையில் பிடிபடுவீர்; அவன் இந்நகரத்தைத் தீக்கிரையாக்குவான்" என்றார்.
24 செதேசியாஸ் எரெமியாசை நோக்கி, "இவ்வார்த்தைகளை யாருக்கும் சொல்லாதீர்; அப்போது உம்மைக் கொல்லமாட்டேன்;
25 ஆனால் தலைவர்கள் நான் உம்மோடு உரையாடியதாகக் கேள்விப்பட்டு, உம்மிடம் வந்து, 'அரசனோடு நீ என்ன பேசினாய்? மறைக்காமல் சொல், நாங்கள் உன்னைக் கொல்லமாட்டோம்; அரசன் உன்னிடம் என்ன சொன்னான்?' என்றுகேட்டால்,
26 நீ அவர்களுக்கு விடையாக, நான் அரசனை நோக்கி, ' யோனத்தான் வீட்டில் என்னைச் சிறை வைக்க வேண்டாம்; நான் அங்கேயே செத்துப் போவேன் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டேன்' என்று சொல்லிவிடும்" என யோசனை கொடுத்தான்.
27 அவ்வாறே, தலைவர்கள் அனைவரும் எரெமியாசிடம் வந்து, அவரை வினவினார்கள்; அவர் அரசன் சொல்லிக் கொடுத்தபடியே எல்லாவற்றுக்கும் விடைகொடுத்தார்; அவர்கள் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டார்கள். ஏனெனில் அவர் அரசனுடன் பேசியதை எவரும் மறைந்திருந்து கேட்கவில்லை.
28 யெருசலேம் பிடிபட்ட நாள் வரையில் எரெமியாஸ் சிறைக்கூடத்தின் முற்றத்திலேயே இருந்தார்.
அதிகாரம் 39
1 யூதாவின் அரசனாகிய செதேசியாசின் ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரும், அவனுடைய எல்லாப் படைகளும் யெருசலேமுக்கு வந்து அதை முற்றுகையிட்டார்கள்;
2 செதேசியாசின் பதினோராம் ஆண்டின் நான்காம் மாதத்தில் ஐந்தாம் நாள் பட்டணத்தின் கோட்டைக் கதவு உடைப்பட்டது;
3 பபிலோனிய அரசனின் தலைவர்கள் அனைவரும் உள்ளே நுழைந்து, நடுவாயிலின் அருகில் உட்கார்ந்தார்கள்; நெரேகல், செரேசெர், கெமேகார்னாயு, சார்சக்கீம், இரப்சாரேஸ், நெரேகேல், செரேசெர், இரெப்மாகு என்பவர்களும், இன்னும் பபிலோனிய அரசனின் படைத்தலைவர்கள் எல்லாரும் அங்கே உட்கார்ந்தார்கள்.
4 யூதாவின் அரசனான செதேசியாசும், அவனுடைய போர்வீரர் அனைவரும் அவர்களைக் கண்டு ஓட்டம் பிடித்தார்கள்; அவர்கள் அரசனுடைய தோட்டத்திற்குப் போகும் வழியாய் இரண்டு சுவர்களுக்கு இடையிலிருக்கும் கதவைத் திறந்து கொண்டு இரவோடு இரவாய்ப் பட்டணத்தை விட்டு வெளியேறிப் பாலை நிலத்தை நோக்கி ஓடினார்கள்.
5 கல்தேயருடைய படை அவர்களைப் பின் தொடர்ந்து போய் யெரிக்கோ சமவெளியில் செதேசியாசைப் பிடித்தார்கள்; எமாத்து நாட்டின் இரபிளாத்தா என்னும் ஊரில் பாளையமிறங்கியிருந்த பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரிடம் அவனைக் கொண்டு வந்தார்கள்: அரசன் அவனுக்கு விரோதமாய்த் தீர்ப்புச் சொன்னான்.
6 பபிலோனிய மன்னன் செதேசியாசின் இரண்டு பிள்ளைகளையும் இராபிளாத்தாவுக்குக் கொண்டு வந்து அவர்களுடைய தந்தையின் முன்னால் அவர்களைக் கொலை செய்தான்; மேலும் பபிலோனிய அரசன் யூதாவின் பெருங்குடிமக்கள் அனைவரையும் கொன்றான்.
7 பிறகு செதேசியாசின் கண்களைப் பிடுங்கி, அவனுக்கு விலங்குகளை மாட்டி அவனைப் பபிலோனுக்கு அனுப்பினான்.
8 அரசனுடைய அரண்மனையையும் குடிமக்களின் வீடுகளையும் கல்தேயர் தீ வைத்துக் கொளுத்தி, யெருசலேமின் மதில்களைத் தகர்த்து விட்டார்கள்.
9 சேனைத் தலைவனாகிய நபுஜார்தான் இன்னும் பட்டணத்தில் எஞ்சியிருந்த மக்களையும், தன்னிடம் சரணடைந்தவர்களையும், மீதியாயிருந்த பொதுமக்களையும் பபிலோனுக்குக் கொண்டு போனான்.
10 ஆனால் சேனைத் தலைவனான நபுஜார்தான் என்பவன் ஏதுமற்ற ஏழை மக்கள் சிலரை யூதா நாட்டிலேயே விட்டு வைத்து, அவர்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்துச் சென்றான்.
11 பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசார் எரெமியாசை குறித்துச் சேனைத் தலைவன் நபுஜார்தானுக்குக் கொடுத்த கட்டளை இதுவே:
12 நீ அவனை வருவித்துக் கண்காணித்துக் கொள். அவனுக்குத் தீங்கொன்றும் நீ செய்யக்கூடாது; ஆனால் அவன் விரும்பவுது போலவே அவனை நடத்து" என்றான்.
13 சேனைத் தலைவன் நபுஜார்தான் அவ்வாறே செய்தான்; அவனும் அவனோடிருந்த நபுஜேஸ்பான் என்னும் உயர் அதிகாரியும், நெரேகஸ்- செரேசெர் என்னும் முக்கிய அதிகாரியும், இன்னும் பபிலோனிய அரசனின் மற்ற தலைவர்கள் யாவரும் ஆளனுப்பி,
14 எரெமியாசைச் சிறைக் கூடத்தின் முற்றத்திலிருந்து விடுதலை செய்து, வீட்டுக்குக் கொண்டு போகும்படி சாவான் மகனாகிய அயிக்காமின் மகன் கொதோலியாசின் பொறுப்பில் அவரை அனுப்பினார்கள்; அவரும் மக்கள் நடுவில் வாழ்ந்து வந்தார்.
15 இனி எரெமியாஸ் சிறைக்கூடத்தின் முற்றத்தில் இருக்கும் போதே, ஆண்டவருடைய வாக்கு அவருக்கு அருளப்பட்டிருந்தது:
16 நீ போய் எத்தியோப்பியனான அப்தேமேலேக்கை நோக்கி, ' இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, இந்த நகரத்திற்கு விரோதமாக நம் வார்த்தைகளை நிறைவேற்றுவோம்; நன்மையை அல்ல, தீமையையே நிறைவேற்றுவோம்; அந்நாளில் நீ இவற்றைக் காண்பாய்.
17 ஆனால் அந்நாளில் நாம் உன்னை மீட்போம்; நீ அஞ்சும் அந்த மனிதர்கள் கையில் உன்னை விட்டுவிட மாட்டோம், என்கிறார் ஆண்டவர்;
18 ஏனெனில் நாம் உன்னைத் திண்ணமாய்க் காப்பாற்றுவோம்; நீ வாளால் மடியமாட்டாய்; உன் உயிர் நலமாய் இருக்கும்; ஏனெனில் நம்மில் நம்பிக்கை வைத்திருந்தாய், என்கிறார் ஆண்டவர்' என்று அவனுக்குச் சொல்."
அதிகாரம் 40
1 சேனைத் தலைவனாகிய நபுஜார்தான், யெருசலேமினின்றும் பபிலோனுக்கு அடிமைகளாய்க் கூட்டிக் கொண்டு போனவர்களின் கூட்டத்திலிருந்து எரெமியாசைக் கூப்பிட்டு அவருக்குப் பூட்டுப்பட்டிருந்த சங்கிலிகளை அறுத்து அவரை ராமா என்னுமிடத்தில் விடுதலை செய்த பின்னர், ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது.
2 சேனைத் தலைவன் எரெமியாசைத் தனியாக அழைத்துச் சென்று அவரிடம், "உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இந்த இடத்துக்கு விரோதமாய்ப் பேசினார்;
3 பேசினவாறே செய்து முடித்து விட்டார்; ஏனெனில் ஆண்டவருடைய வார்த்தைகளைக் கேட்காமல் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தீர்கள்; ஆகவே உங்களுக்கு இந்தத் துன்பங்கள் நேர்ந்தன.
4 இப்போது நான் உன் கைவிலங்குகளைத் தறித்து விடுகிறேன்; என்னோடு பபிலோனுக்கு வர விரும்பினால் வா, நான் உன்னைக் கண்காணித்துக் காப்பாற்றுவேன்; என்னோடு பபிலோனுக்கு வர விருப்பமில்லையாயின், இங்கேயே இருந்துகொள்; இதோ, நாடெல்லாம் உன்முன் பரந்து கிடக்கிறது; உனக்கு விருப்பமானதைத் தேர்ந்துகொள்; போக விருப்பமுள்ள இடத்திற்கு நீ போகலாம்.
5 நீ என்னோடு வரவில்லையெனில், பபிலோனிய அரசன் யூதாவின் பட்டணங்களுக்குத் தலைவனாய் ஏற்படுத்தியுள்ள சாவான் என்பவனின் மகனான அயிக்காமின் மகன் கொதோலியாசுடன் போய், மற்ற மக்கள் நடுவில் நீ வாழலாம்; அல்லது உனக்கு எங்கே போக விருப்பமோ அங்கே போகலாம்" என்று சொல்லி, சாப்பாட்டுக்குத் தேவையானவற்றையும், ஓர் அன்பளிப்பையும் அவருக்குக் கொடுத்தனுப்பினான்.
6 எரெமியாஸ் மஸ்பாத்துக்குப் போய், அங்கே அயிக்காமின் மகன் கொதோலியாசுடன் நாட்டில் விடப்பட்டிருந்த மற்ற மக்கள் நடுவில் வாழ்ந்து வந்தார்.
7 நாடெங்கும் சிதறிக் கிடந்த யூத படைத் தலைவர் அனைவரும், அவர்களுடைய கூட்டாளிகளும், பபிலோனிய அரசன் அயிக்காமுடைய மகன் கொதோலியாசை ஆளுநனாக ஏற்படுத்தியிருக்கிறான் என்றும், ஆண்களையும் பெண்களையும் பிள்ளைகளையும், பபிலோனுக்கு நாடு கடத்தப்படாத ஏழை மக்களையும் அவன் கண்காணிப்பில் விட்டுச் சென்றிருக்கிறான் என்று கேள்விப்பட்டு, மஸ்பாத்துக்குக் கொதோலியாசிடம் வந்தார்கள்;
8 அவர்களுள் நத்தானியாஸ் மகன் இஸ்மாயேலும், காரை மக்கள் யோகனானும் யோனத்தானும், தனவுமேத்து மகன் சாரேயாசும், ரெத்தோபாத்து ஊரானாகிய ஒப்பீ என்பவனின் மக்களும், மகாகாத்தி மகன் யோசோனியாசும், இன்னும் பலரும் இருந்தார்கள்.
9 அவர்களைக் கண்ட சாப்பான் மகனாகிய அயிக்காமின் மகன் கொதோலியாஸ் அவர்களுக்கும் அவர்களுடைய துணைவர்களுக்கும் ஆணையிட்டு, "கல்தேயருக்கு ஊழியம் செய்ய அஞ்சாதீர்கள். இந்த நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு, பபிலோனிய அரசனுக்கு ஊழியஞ் செய்யுங்கள்; அப்போது நீங்கள் நலமாய் வாழலாம்.
10 நானோ நம்மிடம் வரப்போகும் கல்தேயர்களுக்குப் பொறுப்பாளியாய் இருக்கும் படி இங்கே மஸ்பாத்திலேயே இருப்பேன்; ஆனால் நீங்கள் போய்த் திராட்சைக் கனிகளைக் கொய்து, நிலத்தின் மற்றுமுள்ள விளைச்சல்களை அறுத்து, எண்ணெய் முதலியவற்றையும் களஞ்சியங்களில் சேர்த்துக் கொண்டு, நீங்கள் பிடித்திருக்கும் பட்டணங்களில் வாழுங்கள்" என்று சொன்னான்.
11 மோவாபு நாட்டிலும், அம்மோன் மக்கள் நடுவிலும், இதுமேயாவிலும், இன்னும் பல நாடுகளிலும் இருந்த யூதர் அனைவரும், பபிலோனிய அரசன் யூதேயாவில் இன்னும் சிலரை விட்டுப் போயிருக்கிறான் என்றும், சாப்பான் மகனான அயிக்காமின் மகன் கொதோலியாசை அவர்களுக்குத் தலைவனாக ஏற்படுத்தியிருக்கிறான் என்றும் கேள்விப்பட்டார்கள்.
12 அவர்கள் தாங்கள் ஓடிப்போயிருந்த எல்லா இடங்களினின்றும் திரும்பி வந்து யூதா நாட்டில் மஸ்பாத்துக்குக் கொதோலியாசிடம் போய் ஏராளமான கனிகளும் திராட்சை இரசமும் சேர்த்து வைத்தார்கள்.
13 ஆனால் காரை மகன் யோகானானும், நாடெங்கும் சிதறியிருந்த படைத்தலைவர் அனைவரும் மஸ்பாத்துக்குக் கொதோலியாசிடம் வந்து, அவனை நோக்கி,
14 அம்மோன் மக்களின் அரசனாகிய பாகாலிஸ் உன்னைக் கொல்லுவதற்காக நத்தானியாஸ் மகன் இஸ்மாயேலை அனுப்பியிருக்கிறேனே, அது உனக்கு தெரியுமா?" என்றார்கள். ஆனால் அயிக்காம் மகன் கொதோலியாஸ் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.
15 பிறகு காரை மகன் யோகனான் மஸ்பாத்திலிருநத் கொதோலியாசிடம் தனியாய்ச் சென்று, நான் போய் நத்தானியாஸ் மகன் இஸ்மாயேலை இரகசியமாய்க் கொல்லுவேன்; ஏனெனில், அவன் உன்னை கொலை செய்தால் உன் கண்காணிப்பில் சேர்ந்து வாழும் யூதர் அனைவரும் சிதறடிக்கப்படுவார்கள்; யூதாவில் எஞ்சியிருக்கும் மக்களும் அழிந்து போவார்களே" என்றான்.
16 அயிக்காம் மகன் கொதோலியாஸ் காரை மகன் யோகானானைப் பார்த்து, "வேண்டாம், நீ அந்தச் செயலைச் செய்யாதே; இஸ்மாயேலைப் பற்றி நீ சொன்னது முற்றிலும் பொய்" என்றான்.
அதிகாரம் 41
1 ஏழாம் மாதத்தில், அரச குலத்தானாகிய எலிசாமாவின் மகனான நத்தானியாசின் மகன் இஸ்மாயேலும், அரசனின் தலைவர்கள் சிலரும் தங்களோடு இன்னும் பத்து பேரைக் கூட்டிக் கொண்டு, மஸ்பாத்திலிருந்த அயிக்காமின் மகன் கொதோலியாசிடம் வந்தார்கள்;
2 அவர்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், நத்தானியாஸ் மகன் இஸ்மாயேலும், அவனோடிருந்த பத்து பேரும் எழுந்து, சாப்பான் மகன் அயிக்காமின் மகன் கொதோலியாசை- பபிலோனிய அரசன் ஆளுநனாக ஏற்படுத்தியிருந்த கொதோவியாசை- வாளால் கொலை செய்தார்கள்.
3 அன்றியும் மஸ்பாத்தில் கொதோலியாசுடன் இருந்த யூதர் அனைவரையும், அங்கிருந்த கல்தேயரையும், போர் வீரர்களையும் இஸ்மாயேல் வெட்டி வீழ்த்தினான்.
4 கொதோலியாஸ் கொலையுண்ட நாளுக்கு மறுநாள் இன்னும் அதனை யாரும் அறியாதிருக்கும் போதே,
5 சிக்கேம், சீலோ, சமாரியா முதலிய இடங்களிலிருந்து எண்பது பேர் தாடியை மழித்துக் கொண்டு, கிழிந்த துணிகளை உடுத்திக் கொண்டு, புண்பட்ட உடலுடன் வந்தார்கள். ஆண்டவரின் திருக்கோயிலில் அர்ச்சனை செய்ய, அவர்கள் கையில் காணிக்கைகளும் தூபமும் இருந்தன.
6 நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் மஸ்பாத்தினின்று புறப்பட்டு அழுது கொண்டு அவர்களை எதிர் கொண்டு சென்றான்; அவர்கள் அருகில் சென்றவுடன், "அயிக்காம் மகன் கொதோலியாசை வந்து பாருங்கள்" என்றான்.
7 அவர்கள் பட்டணத்தின் நடுவில் வந்ததும், நத்தானியாஸ் மகன் இஸ்மாயேலும், அவனோடிருந்தவர்களும் அவர்களைக் கொன்று குழியில் போட்டார்கள்.
8 அவர்களுள் பத்துப் பேர் இஸ்மாயேலை நோக்கி, "எங்களைக் கொல்லாதே; ஏனெனில் வயலில் கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், தேன் முதலியவற்றைச் சேர்த்து வைத்திருக்கிறோம்" என்றார்கள். அவனும் அவர்களையும், அவர்களுடைய சகோதரர்களையும் கொல்லாமல் விட்டுவிட்டான்.
9 கொதோலியாசை முன்னிட்டு இஸ்மாயேல் கொன்ற மனிதர்களின் பிணங்கள் தள்ளப்பட்ட அந்தப் பள்ளம், இஸ்ராயேலின் அரசனாகிய பாசான் என்பவனுக்குப் பயந்து ஆசாவேந்தன் தன் தற்காப்புக்காக வெட்டியது; நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் அதனைப் பிணங்களால் நிரப்பினான்.
10 மஸ்பாத்தில் எஞ்சியிருந்த மக்கள் அனைவரையும் இஸ்மாயேல் சிறைப்படுத்தினான்; அவர்களுள் அயிக்காம் மகன் கொதோலியாசின் பொறுப்பில் சேனைத் தலைவன் நபுஜார்தான் ஒப்படைத்துச் சென்று, மஸ்பாத்திலேயே தங்கி விட்ட அரசிளம் பெண்களும், மற்றும் சில மக்களும் இருந்தனர்; நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் அவர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு, அம்மோன் மக்களை நோக்கிப் போகப் புறப்பட்டான்.
11 ஆனால் காரை மகன் யோகானும், அவனோடு இருந்த போர் வீரர்களின் தலைவர்களும் நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் செய்த கொடுமைகளையெல்லாம் கேள்விப்பட்டார்கள்.
12 உடனே தங்கள் வீரர்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு, நத்தானியாஸ் மகன் இஸ்மாயேலுக்கு எதிராகப் போர்புரியப் புறப்பட்டார்கள்; கபாவோனிலிருக்கும் பெரிய நீர் நிலையினருகில் படையோடு அவனைச் சந்தித்தார்கள்.
13 இஸ்மாயேலோடு இருந்த மக்கள் எல்லாரும் காரை மகன் யோகானானையும், அவனோடு வந்த போர் வீரர்களின் தலைவர்கள் அனைவரையும் கண்டு அகமகிழ்ந்தார்கள்.
14 இஸ்மாயேல் மஸ்பாத்தில் சிறை பிடித்துக் கொண்டு போன மக்களெல்லாம் திரும்பி வந்து காரை மகன் யோகானானுடன் சேர்ந்து கொண்டார்கள்.
15 ஆனால் நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் யோகனானிடமிருந்து தப்பியோடி, இன்னும் எட்டு பேருடன் அம்மோன் மக்களிடம் போய்ச் சேர்ந்தான்.
16 காரை மகன் யோகானானும், அவனோடிருந்த போர்வீரர்களின் தலைவர்களும், நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல், அயிக்காம் மகன் கொதோலியாசைக் கொன்று விட்டு மஸ்பாத்திலிருந்து கூட்டிக் கொண்டு போன பொதுமக்களில் எஞ்சியிருந்த அனைவரையும், தாங்கள் கபாவோனினின்று மீட்டுவந்த போர் வீரர், பெண்கள், பிள்ளைகள், அண்ணகர்கள் அனைவரையும் மஸ்பாத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.
17 வழியில் பெத்லெகேம் ஊருக்கு அருகிலிருக்கும் காமாவாமில் தங்கி, எகிப்துக்குப் போகக் கருதினார்கள்.
18 ஏனெனில், பபிலோனிய அரசன் யூதா நாட்டுக்கு ஆளுநனாய் ஏற்படுத்திய அயிக்காம் மகன் கொதோலியாசை நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் கொன்று விட்டமையால், அவர்கள் கல்தேயருக்கு அஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
அதிகாரம் 42
1 போர் வீரரின் தலைவர்களும், காரை மகன் யோகானானும், யோசியாஸ் மகன் யேசோனியாசும், பெரியவன் முதல் சிறியவன் வரையுள்ள மற்ற பொதுமக்கள் யாவரும்,
2 எரெமியாஸ் இறைவாக்கினரிடம் வந்து, அவரைப் பார்த்து, "எங்கள் தாழ்மையான கோரிக்கையைக் கேளும்; எங்களுக்காகவும், எஞ்சியிருக்கும் இவர்கள் அனைவருக்காகவும் உம்முடைய கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும்; (ஏனெனில் இப்பொழுது நீரே காண்பது போல, மிகச் சிலரே எஞ்சியிருக்கிறோம்)
3 உம்முடைய கடவுளாகிய ஆண்டவர், நாங்கள் ஒழுக வேண்டிய நெறியையும், செய்யவேண்டிய செயல்களையும் எங்களுக்குக் காட்டும்படி கேளும்" என்றார்கள்.
4 இறைவாக்கினரான எரெமியாஸ் அவர்களை நோக்கி, "நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; நீங்கள் என்னைக் கேட்டுக் கொண்டவாறே, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடுவேன்; அவர் என்ன மறுமொழி சொல்லுகிறாரோ, அதை மறைக்காமல் உங்களுக்கு முற்றிலும் தெரிவிப்பேன்" என்றார்.
5 அப்போது அவர்கள் எரெமியாசைப் பார்த்து, "உம்முடைய கடவுளாகிய ஆண்டவர் பேரால் நீர் எங்களுக்குச் சொல்லும் எல்லா வார்த்தைகளுக்கும் ஏற்றபடி நடப்போம்; இதற்கு உண்மையும் பிரமாணிக்கமும் உள்ள சாட்சியாக ஆண்டவரே இருக்கட்டும்!
6 நன்மையோ தீமையோ எதுவாயினும், ஆண்டவராகிய நம் கடவுளுடைய வார்த்தைக்கு நாங்கள் கீழ்ப்படிவோம்; அவரிடமே நாங்கள் உம்மை அனுப்புகிறோம்; நாங்கள் ஆண்டவராகிய நம் கடவுளின் வார்த்தையைக் கேட்டு நலமாயிருப்பதே எங்கள் பேரவா" என்றார்கள்.
7 பத்து நாட்களுக்குப் பிறகு, ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது;
8 அவர் காரை மகன் யோகானானையும், அவனோடிருந்த எல்லாப் போர்வீரர்களுடைய தலைவர்களையும், சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லா மக்களையும் அழைத்து, அவர்களுக்கு அறிவித்த செய்தி இதுவே:
9 உங்கள் தாழ்மையான கோரிக்கையைத் தெரிவிக்குமாறு நீங்கள் என்னை அனுப்பிய இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்:
10 நீங்கள் இந்நாட்டிலேயே தங்குவீர்களாகில், உங்களை உறுதியாய்க் கட்டியெழுப்புவோம்; அழிக்கமாட்டோம்; உங்களை நிலைநாட்டுவோம்; பிடுங்கி ஏறிய மாட்டோம்; இந்நேரம் வரையில் உங்களுக்கு நாம் அனுப்பிய துன்பங்களை முன்னிட்டு நாம் மனம் வருந்துகிறோம்.
11 நீங்கள் பயந்து நடுங்கும் பபிலோனிய அரசனுக்கு இனி அஞ்ச வேண்டாம்; அவனுக்குப் பயப்பட வேண்டாம்; ஏனெனில் உங்களை மீட்கவும், அவன் கைகளிலிருந்து உங்களை விடுவிக்கவும் உங்களோடு நாம் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்.
12 நாம் உங்கள்மேல் நம் இரக்கத்தைப் பொழிவோம்; உங்கள்மேல் மனமிரங்கி, உங்களை உங்கள் நாட்டிலேயே குடியிருக்கச் செய்வோம்.
13 ஆனால் நீங்கள், 'இந்த நாட்டில் நாங்கள் தங்கியிருக்க மாட்டோம்' என்று சொல்லி, உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தையை மீறினால்,
14 முடியாது, நாங்கள் எகிப்து நாட்டுக்குப் போயே தீருவோம்; அங்கே போர் இருக்காது; போர் முரசு கேட்காது; உணவுப் பஞ்சம் இராது; அங்கேயே நாங்கள் தங்கி வாழ்வோம்' என்று சொல்வீர்களானால்,
15 யூதாவில் எஞ்சியிருப்பவர்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்: இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் எகிப்து நாட்டுக்குப் போய் அங்கே குடியிருக்க எண்ணுவீர்களானால்,
16 நீங்கள் இங்கு அஞ்சும் வாளே உங்களை எகிப்து நாட்டில் வந்து வளைத்துக் கொள்ளும்; உங்களுக்கு இங்கே அச்சமூட்டும் பஞ்சம் எகிப்து நாட்டுக்கும் உங்களை விடாமல் தொடர்ந்து வரும்; நீங்களோ அங்கேயே சாவீர்கள்.
17 எகிப்து நாட்டுக்குப் போய் அங்கேயே குடியிருக்கத் தீர்மானித்துப் புறப்படுகிறவர்கள் அனைவரும் அந்நாட்டிலேயே வாளாலும் பசியாலும் கொள்ளைநோயாலும் மடிவார்கள்; நாம் அவர்கள் மேல் கொண்டு வரப்போகும் தீமையினின்று தப்பியவனோ எஞ்சியவனோ அவர்களுள் காணப்படமாட்டான்.
18 ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: யெருசலேமின் குடிகள் மேல் நம்முடைய கோபமும் ஆத்திரமும் மூண்டெழுந்தது போல, நீங்கள் எகிப்து நாட்டுக்குள் நுழையும் போது உங்கள் மேலும் நம் ஆத்திரம் மூண்டெழும்; அங்கே நீங்கள் பகைமைக்கும் திகைப்புக்கும் சாபத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாவீர்கள்; மீண்டும் இந்நாட்டை நீங்கள் என்றென்றைக்கும் பார்க்கவே மாட்டீர்கள்.
19 யூதாவில் எஞ்சியிருப்பவர்களே, 'எகிப்துக்குப் போகவேண்டாம்' என்று ஆண்டவர் உங்களுக்குச் சொல்லி விட்டார்; நானும் உங்களுக்கு இன்று எச்சரிக்கை செய்தேன் என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்;
20 நீங்கள் எகிப்துக்குப் போனால் உங்கள் உயிருக்குத் தீங்கு தேடிக்கொள்வீர்கள்; ஏனெனில் நீங்களே என்னை உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அனுப்பி, 'நம் கடவுளாகிய ஆன்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்; நம் கடவுளாகிய ஆண்டவர் சொல்வதையெல்லாம் தெரியப்படுத்தும்; நாங்கள் அவ்வாறே நடப்போம்' என்று என்னிடம் சொன்னீர்கள்.
21 இன்று நான் அதை உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்; நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்னை உங்களிடம் அனுப்பிச் சொன்னவற்றில் எதையும் கேட்டு அதன்படி நடக்கவில்லை.
22 ஆதலால் இதைத் திண்ணமாய் அறிந்து கொள்ளுங்கள்: நீங்கள் குடியேறி வாழ நினைத்திருக்கும் அந்த இடத்திலேயே வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவீர்கள்."
அதிகாரம் 43
1 அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் அவர்களுக்குச் சொல்லுமாறு கற்பித்த வார்த்தைகளையெல்லாம் எரெமியாஸ் அவர்களுக்குச் சொல்லி முடித்த பின்னர்,
2 ஓசியாஸ் மகன் அசாரியாசும், காரை மகன் யோகானானும், இறுமாப்புக் கொண்ட பிறரும் எரெமியாசை நோக்கி, "நீ பொய் சொல்லுகிறாய்; எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களிடம், 'நீங்கள் எகிப்தில் குடியிருக்க எண்ணி, அங்கே போக வேண்டாம்' என்று சொல்லுவதற்காக உன்னை அவர் அனுப்பவில்லை;
3 ஆனால் எங்களைக் கல்தேயருக்குக் கையளிக்கவும், எங்களைக் கொல்லுவிக்கவும், எங்களைப் பபிலோனுக்கு நாடு கடத்தவும் வேண்டி, நேரியாஸ் மகன் பாரூக் உன்னை எங்களுக்கு விரோதமாய்த் தூண்டுகிறான்" என்றார்கள்.
4 காரை மகன் யோகானானும், மற்றப் போர்வீரர்களின் தலைவர்களும், மக்கள் அனைவரும் யூதா நாட்டிலேயே தங்கி வாழும்படி ஆண்டவர் சொன்ன வார்த்தையைக் கேட்கவில்லை.
5 ஆனால் வேற்றினத்தார் அனைவர் நடுவிலும் சிதறிக் கிடந்து, திரும்ப யூதா நாட்டில் வந்து வாழும்படி கொண்டு வரப்பட்ட மக்களனைவரையும்-
6 ஆண்கள், பெண்கள், சிறுவர், அரசிளம் பெண்கள் ஆகியோரையும்- சாப்பான் மகனான அயிக்காமின் மகன் கொதோலியாசின் பொறுப்பில் சேனைத் தலைவன் நபுஜார்தான் விட்டுச் சென்ற யாவரையும், எரெமியாஸ் இறைவாக்கினரையும், நேரியாஸ் மகன் பாரூக் என்பவனையும் காரை மகன் யோகானானும், மற்றப் படைத் தலைவர்களும் கூட்டிக் கொண்டு,
7 எகிப்து நாட்டுக்குப் போனார்கள்; ஏனெனில் அவர்கள் ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள்: எகிப்துக்கு வந்து தப்னீஸ் என்னுமிடத்தில் குடியேறினார்கள்.
8 தப்னீஸ் என்னுமிடத்தில் ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
9 பெருங்கற்கள் சிலவற்றை உன் கையில் எடுத்து, தப்னீசில் இருக்கும் பார்வோனின் அரண்மனை வாயில் தளத்தின் காரையில் யூதாவின் மக்கள் முன்பாக மறைத்து வை.
10 பிறகு அவர்களை நோக்கி, 'இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் நம்முடைய ஊழியனாகிய நபுக்கோதனசாருக்குச் சொல்லியனுப்பி வரச் செய்வோம்; நாம் மறைத்து வைத்த இந்தக் கற்கள் மேல் அவனுடைய அரியணையை அமைக்கச் செய்வோம்; அவன் தனது அரசகுடையை அவற்றின் மேல் விரிப்பான்.
11 அவன் வந்து எகிப்து நாட்டைத் தாக்கி அழிப்பான்; எவன் சாவுக்குரியவனோ அவன் சாவுக்கும், எவன் அடிமைத்தனத்திற்கு உரியவனோ அவன் அடிமைத்தனத்திற்கும், எவன் வாளுக்குரியவனோ அவன் வாளுக்கும் ஆளாக்கப்படுவான்.
12 மேலும் அவன் எகிப்து நாட்டின் தெய்வங்களுடைய கோயில்களைத் தீக்கிரையாக்கி, அவற்றில் இருக்கும் தெய்வங்களையும் சிறைபிடித்துக் கொண்டு போவான்; இடையன் தன் போர்வையை உதறுவது போல், எகிப்து நாட்டை உதறி விட்டு அமைதியாய்த் திரும்பிப் போவான்.
13 எகிப்து நாட்டிலிருக்கும் சூரிய பகவான் கோயிலின் தூண்களை உடைத்துப் போடுவான்; எகிப்து நாட்டுத் தெய்வங்களின் கோயில்களை நெருப்பினால் சுட்டெரிப்பான்' என்று சொல்" என்பதாம்.
அதிகாரம் 44
1 எகிப்து நாட்டைச் சேர்ந்த மக்தலா, தப்னீஸ், மேம்பீஸ் ஆகிய இடங்களிலும், பாத்துரேஸ் என்னும் இடத்திலும் வாழ்ந்த யூதர் அனைவருக்கும் எரெமியாஸ் வழியாய் அருளப்பட்ட வாக்கு இதுவே:
2 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: யெருசலேமின் மேலும், யூதாவின் மேலும் நாம் பொழிந்த எல்லாத் தீமைகளையும் பார்த்தீர்கள்; இதோ அவை காடாகிக் கிடக்கின்றன; அவற்றில் குடியிருப்பவன் எவனுமில்லை;
3 ஏனெனில் அவர்களோ நீங்களோ உங்கள் தந்தையர்களோ அறிந்திராத அந்நிய தெய்வங்களுக்கு அவர்கள் பலியிட்டுத் தூபம் காட்டி, அதனால் நமக்குக் கோபமூட்டி அக்கிரமம் கட்டிக் கொண்டார்கள்.
4 நாமோ திரும்பத் திரும்ப நம்முடைய ஊழியர்களான இறைவாக்கினர்கள் அனைவரையும் அனுப்பி, 'நாம் வெறுக்கும் இத்தகைய அருவருப்பான செயல்களைச் செய்யாதீர்கள்' என்று சொன்னோம்.
5 ஆயினும் அவர்கள் நமக்குச் செவிமடுக்கவுமில்லை; தங்கள் தீச் செயலை விட்டுத் திரும்பவுமில்லை; அந்நிய தெய்வங்களுக்குப் பலியிடுவதை நிறுத்தவுமில்லை.
6 ஆதலால் நம்முடைய கோபமும் ஆத்திரமும் யூதாவின் பட்டணங்கள் மேலும், யெருசலேமின் தெருக்கள் மேலும் மூண்டெழுந்து, இன்றிருப்பது போல் அவற்றைக் காடாகவும் பாலை நிலமாகவும் ஆக்கின.
7 இப்பொழுதோ இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உங்களுக்கு யூதாவில் ஆண், பெண், பிள்ளை, குழந்தை அனைவரும் அற்றுப் போய் உங்களுள் ஒருவன் கூட எஞ்சியிராதபடி, ஏன் உங்களுக்கே விரோதமாய் நீங்கள் இத்தகைய பெருந்தீமையைச் செய்கிறீர்கள்?
8 பிழைக்க வந்திருக்கும் இந்த எகிப்து நாட்டிலும் அழிவுற்று உலகத்தின் மக்களினத்தவர் அனைவரின் சாபனைக்கும் நிந்தனைக்கும் ஆளாகும்படி, ஏன் உங்கள் கைகளின் செயல்களால் நமக்குக் கோபமூட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பலியிடுகிறீர்கள்?
9 உங்கள் தந்தையின் தீச் செயல்களையும், யூதா நாட்டு அரசிகளின் பழி பாவங்களையும், அவர்களுடைய மனைவிமார் செய்த தீச் செயல்களையும், நீங்கள் செய்த அக்கிரமங்களையும், யூதா நாட்டிலும் யெருசலேமின் வீதியிலும் உங்கள் மனைவிமார் செய்த தீச்செயல்களையும் மறந்து விட்டீர்களா?
10 அன்று முதல் இன்று வரை அவர்கள் மனம் வருந்தவில்லை; ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை; திருச்சட்டத்திற்கும், உங்களுக்கும் உங்கள் தந்தையர்க்கும் நாம் கொடுத்த கற்பனைகளுக்கும் ஏற்றவாறு அவர்கள் நடக்கவுமில்லை.
11 ஆதலால் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, உங்களுக்கும் இனித் தீமை செய்யவும், யூதாவை முற்றிலும் அழிக்கவும் போகிறோம்.
12 எகிப்தில் குடியேறி வாழலாமென வந்த யூதாவில் எஞ்சியிருப்போரை நாம் தண்டிப்போம்; அவர்கள் எல்லாரும் எகிப்து நாட்டிலேயே மடிவார்கள்; வாளாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்; சிறியவன் முதல் பெரியவன் வரை எல்லாரும் வாளாலும் பஞ்சத்தாலும் மாய்வார்கள். பகைமைக்கும் திகைப்புக்கும் சாபனைக்கும், இழிவுக்கும் உள்ளாவார்கள்;
13 யெருசலேமைப் பஞ்சம், வாள், கொள்ளை நோய் இவற்றால் தண்டித்தது போலவே எகிப்து நாட்டில் வாழ்பவர்களையும் தண்டிப்போம்.
14 எகிப்து நாட்டில் அந்நியராய் வந்து பிழைப்பதற்காகத் தங்கியிருக்கிற எஞ்சியிருக்கும் யூதர்களுள் எவனும் தான் திரும்பிப் போய்க் குடியிருக்க விரும்பும் யூதா நாட்டுக்குத் தப்பிப் பிழைத்துத் திரும்ப மாட்டான்; இங்கிருந்து தப்பியோடும் ஒரு சிலர் தவிர, வேறெவரும் திரும்ப மாட்டார்கள்."
15 அப்போது, தங்கள் மனைவியர் அந்நிய தெய்வங்களுக்குப் பலியிட்டதாக அறிந்திருந்த எல்லா ஆண்களும், அங்கே பெருங்கூட்டமாய் நின்று கொண்டிருந்த பெண்கள் அனைவரும், எகிப்து நாட்டிலும், பாத்துரேசிலும் குடியிருந்த மக்கள் யாவரும் எரெமியாசுக்கு மறுமொழியாக,
16 நீ ஆண்டவர் பெயரால் எங்களுக்குச் சொல்லும் வார்த்தைகளை நாங்கள் கேட்க மாட்டோம்.
17 ஆனால் நாங்களும் எங்கள் தந்தையரும் எங்கள் அரசர்களும் எங்கள் தலைவர்களும் யூதாவின் பட்டணங்களிலும், யெருசலேமின் தெருக்களிலும் முன்பு நாங்கள் அனைவரும் செய்தது போல விண்ணரசிக்கு மிருகப் பலிகளும் பானப் பலிகளும் கொடுப்போம்; நாங்கள் செய்து கொண்ட நேர்ச்சைகளை நிறைவேற்றுவோம்; ஏனெனில் நாங்கள் அவ்வாறு செய்து வந்த காலத்தில் நல்லுணவு நிரம்பக் கிடத்தது; தீமையொன்றும் நேராமல் நலமாய் வாழ்ந்திருந்தோம்.
18 நாங்கள் விண்ணரசிக்குத் தூபம் காட்டாமலும், பானப் பலிகளை வார்க்காமலும் விட்ட போது, எங்களுக்கு எல்லாம் குறைத்து விட்டது; வாளாலும் பஞ்சத்தாலும் மடிந்து போனோம்" என்றார்கள்.
19 அப்பொழுது பெண்கள், "மேலும், நாங்கள் விண்ணரசிக்குத் தூபங்காட்டி அவளுக்குப் பானப் பலிகளைக் கொடுத்த போது, எங்கள் கணவன்மாரின் உத்தரவு இல்லாமலா அவளுடைய சாயலைத் தாங்கிய பணியாரங்களைச் சுட்டுப் படைத்துப் பானப்பலிகளை வார்த்தோம்?" என்றார்கள்.
20 அப்பொழுது எரெமியாஸ், இவ்வாறு மறுமொழி சொன்ன எல்லா மக்களையும், ஆண்கள், பெண்கள், மக்கட் கூட்டம் அனைவரையும் நோக்கி,
21 யூதாவின் பட்டணங்களிலும் யெருசலேமின் தெருக்களிலும் நீங்களும் உங்கள் தந்தையரும் உங்கள் அரசர்களும் உங்கள் தலைவர்களும் நாட்டின் எல்லா மக்களும் செலுத்திய பலிகளை ஆண்டவர் நினைவு கூர்ந்து தம் மனத்தில் வைத்துக் கொள்ளவில்லையா?
22 நீங்கள் செய்த பொல்லாத செயல்களையும், நீங்கள் கட்டிக் கொண்ட அருவருப்பான செயல்களையும் ஆண்டவரால் பொறுக்க முடியவில்லை; ஆதலால் உங்கள் நாட்டைப் பாழாக்கி, இப்பொழுது கிடப்பது போல, குடியற்ற பாலைவெளியாகச் செய்து, அதனைத் திகைப்புக்கும் சாபனைக்கும், உள்ளாக்கினார்.
23 நீங்கள் சிலைகளுக்குத் தூபங்காட்டி, ஆண்டவருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்து, ஆண்டவரின் குரலுக்குச் செவி சாய்க்காமலும், அவருடைய திருச்சட்டத்திற்கும் கட்டளைகளுக்கும் சாட்சியங்களுக்கும் ஏற்ப நடவாமலும் போனாதால் தான், நாம் இன்று பார்க்கும் இந்தத் தீமைகள் எல்லாம் உங்களுக்கு வந்து நேர்ந்தன" என்று சொன்னார்.
24 மீண்டும் எரெமியாஸ் எல்லா மக்களையும் பெண்கள் அனைவரையும் நோக்கிச் சொன்னார்: "எகிப்து நாட்டில் வாழும் யூத மக்களே, நீங்களனைவரும் ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்:
25 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்களும் உங்கள் மனைனவியரும், 'நாங்கள் செய்து கொண்ட நேர்ச்சைகளை நிறைவேற்றியே தீருவோம்: விண்ணரசிக்குத் தூபம் காட்டி, அவர்களுக்குப் பானப்பலிகளை வார்ப்போம்' என்று உங்கள் வாயாலேயே சொன்னீர்கள்; சொன்னபடி உங்கள் கைகளால் நிறைவேற்றியும் விட்டீர்கள். சரி, அவ்வாறே உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள், உங்கள் பொருத்தனைகளைச் செலுத்துங்கள்!
26 ஆதலால் எகிப்து நாட்டில் வாழும் யூத மக்களே, நீங்களனைவரும் ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நமது பெருமை வாய்ந்த பெயரால் ஆணை! இனி எகிப்து நாடெங்கணும், 'ஆண்டவராகிய இறைவனின் உயிர் மேல் ஆணை' என்று எந்த யூதனின் வாயினின்றும் நமது திருப்பெயர் ஒலிக்காது.
27 இதோ நாம் அவர்கள் மேல் கண்ணாயிருக்கிறோம்; நன்மை செய்யவன்று, தீமை செய்யவே எச்சரிக்கையாய் இருக்கிறோம். யூதாவிலிருந்து எகிப்து நாட்டில் வந்து வாழும் மனிதர் அனைவரும் வாளாலும் பஞ்சத்தாலும் மடிவார்கள்;
28 எகிப்து நாட்டிலிருந்து வாளுக்குத் தப்பி ஒரு சிலரே யூதா நாட்டுக்குத் திரும்புவார்கள்; அப்போது எகிப்து நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்களான எஞ்சியிருக்கும் யூதர்கள், நிலைத்து நிற்பது தங்கள் வாக்கா, நமது வாக்கா என்பதை அறிந்து கொள்வார்கள்;
29 இந்த இடத்திலேயே நாம் உங்களைத் தண்டிப்போம் என்பதற்கும், நமது வாக்கு உங்களுக்கு விரோதமாய் உன்மையாகும், நிறைவேறும் என்பதற்கும், இதோ இதுவே அறிகுறி, என்கிறார் ஆண்டவர்.
30 ஆண்டவர் கூறுகிறார்: இதோ, யூதாவின் அரசனாகிய செதேசியாசை அவனுடைய பகைவனும், அவன் உயிரைப் பறிக்கத் தேடினவனுமாகிய பபிலோனிய அரசன் நபுக்கோதனசாருக்கு நாம் கையளித்தது போலவே, எகிப்து நாட்டு மன்னனாகிய எப்பிரே என்கிற பார்வோனை அவனுடைய பகைவர்களுக்கும், அவன் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்களுக்கும் கையளிப்போம், என்கிறார் ஆண்டவர்" என்று அறிவித்தார்.
அதிகாரம் 45
1 யூதாவின் அரசனாகிய யோசியாசின் மகன் யோவாக்கீமுடைய நான்காம் ஆண்டில் எரெமியாஸ் இறைவாக்கினர் சொன்ன வார்த்தைகளை நேரியாஸ் மகனாகிய பாரூக் ஓலைச் சுருளில் எழுதிய பின்னர், அவருக்கு எரெமியாஸ் சொன்ன வாக்கு இதுவே:
2 பாரூக், இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கூறுகிறார்:
3 எனக்கு ஐயோ கேடு! ஆண்டவர் எனக்குத் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுப்புகிறார்; நான் பெரூமூச்செறிந்து களைத்தேன்; எனக்கு இளைப்பாற்றியே இல்லை' என்றாயே.
4 உனக்குச் சொல்லும்படி ஆண்டவர் அதை என்னிடம் கூறினார்: ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் கட்டினதையே இடிக்கிறோம்; நாம் நட்டதையே பிடுங்குகிறோம்; அதாவது, இந்த நாடு முழுவதையும் அழிக்கிறோம்.
5 நீ பெரிய காரியங்களை உனக்கெனத் தேடுகிறாயோ? தேடாதே; ஏனெனில், இதோ நாம் எல்லா மனிதர் மேலும் தீமை வரச் செய்வோம்; ஆனால் நீ எங்கே போனாலும், அவ்விடத்திலெல்லாம் உன் உயிரைக் காப்பாற்றுவோம், என்கிறார் ஆண்டவர்" என்றார்.
அதிகாரம் 46
1 புறவினத்து மக்களுக்கு விரோதமாய் ஆண்டவர் எரெமியாசுக்கு அருளிய வாக்கு:
2 யோசியாசின் மகனான யோவாக்கீம் என்னும் யூதா அரசனுடைய நான்காம் ஆண்டில் பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் எப்பிராத் நதியருகிலுள்ள கார்க்காமீசில் முறியடித்த எகிப்து மன்னன் நெக்கோவோ என்னும் பார்வோனின் சேனையையும் எகிப்தையும் பற்றிய வாக்கு:
3 வாள், கேடயங்களைத் தயார் செய்யுங்கள், போருக்குப் புறப்படுங்கள்;
4 குதிரைகள் மேல் சேணங்களைப் பூட்டுங்கள், வீரர்களே, குதிரை மேல் ஏறுங்கள். தலைச்சீராவை அணிந்து கொள்ளுங்கள், ஈட்டிகளைத் தீட்டுங்கள், மார்க் கவசங்களைப் பூணுங்கள்;
5 என்ன இது? அவர்கள் திகில் கொண்டு பின்னிடுகிறார்கள், புறமுதுகு காட்டி ஓடுகிறார்கள்; அவர்களுடைய வலிமை மிக்க வீரர்கள் முறியடிக்கப்பட்டனர், போர்க்களத்தை விட்டு ஓடுகிறார்கள்; திரும்பிப் பாராமல் ஓடுகிறார்கள், எப்பக்கமும் திகில், என்கிறார் ஆண்டவர்.
6 ஓட்டத்தில் வல்லவனும் ஓடித் தப்ப முடியாது, வலிமை மிக்கவனும் தப்பித்துக் கொள்ள முடியாது; வடக்கே எப்பிராத்து நதியோரத்தில், தோல்வியடைந்து சிதைந்து போனார்கள்.
7 நைல் நதிப் பெருக்கைப் போல் ஓங்கியெழுந்து அலை மோதும் நதி போல் எழுந்து வரும் இவன் யார்?
8 நைல் நதிப் பெருக்கைப் போல் ஓங்கியெழுந்து அலை மோதும் நதி போல் எழுந்து வருபவன் எகிப்தியனே! 'பொங்கியெழுவேன், பூமியை மூடிக்கொள்வேன், நகரங்களையும் குடிமக்களையும் அழிப்பேன்' என்கிறான்.
9 குதிரைகளே, முன்னேறித் தாக்குங்கள், தேர்ப்படைகளே, கொதித்தெழுங்கள்! போர் வீரர்கள் முன்னேறித் தாக்கட்டும்; எத்தியோப்பியரும் லிபியரும் கேடயம் பிடித்துப் போங்கள்; லீதியர் அம்புகளைத் தொடுத்து நாணேற்றுங்கள்.
10 அந்த நாளோ சேனைகளின் கடவுளாகிய ஆண்டவரின் நாள், தம்முடைய பகைவர்களைப் பழிவாங்கும் நாள்; அவர்கள் வாளுக்கு இரையாக்குவார்கள், வாளும் அவர்களின் இரத்தத்தை நிறையக் குடிக்கும்; குடித்துத் திருப்தியடைந்து வெறித்திருக்கும்; வடநாட்டில் எப்பிராத்து நதியருகில் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு வேள்வி உண்டு.
11 எகிப்து என்னும் கன்னிப் பெண்ணே! கலாயத்துக்கு ஏறிப்போய்க் களிம்பு மருந்து தடவு; பல்வகை மருந்துகளைப் பயன்படுத்துவது வீணே, உன் காயங்கள் ஆறவே ஆறா.
12 வேற்றினத்தார் உன் மானபங்கத்தைக் கேள்விப்பட்டார்கள், உனது கூக்குரல் உலகெங்கும் பரவிற்று; ஏனெனில் போர்வீரர் ஒருவர் இன்னொரு வீரரோடு மோதிக் கொண்டு, இருவரும் ஒருமிக்க இடறி விழுந்தார்கள்."
13 பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் எகிப்து நாட்டை அழிக்கப் படையெடுத்து வருவதைப் பற்றி ஆண்டவர் எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளிய வாக்கு:
14 எகிப்திலே அறிவியுங்கள், மிக்தோலிலே முரசொலியுங்கள், மேம்பீசிலும் தப்னீசிலும் பறைசாற்றுங்கள்: 'தயார் செய்யுங்கள், தயாராய் நில்லுங்கள்; ஏனெனில் உன்னைச் சுற்றிலும் உள்ளவை வாளுக்கு இரையாகும்' என்று கூறுங்கள்.
15 ஆப்பிஸ் விழக் காரணம் என்ன? உன் பலவான் விழுந்த காரணமென்ன? ஆண்டவர் அவனைத் தள்ளினதால் அன்றோ?
16 பல பேர் சோர்ந்து வீழ்ந்தனர், அவனவன் தனக்கடுத்தவனிடம், 'எழுந்திரு,கொடியவனின் வாளுக்குக் தப்பித்துக் கொள்ள, நம் இனத்தாரிடமும் பிறந்த நாட்டுக்கும் திரும்பிப் போவோம்' என்று சொல்வான்.
17 எகிப்து அரசன் பார்வோன் பெயரை, 'வெறும் ஆரவாரம், காலத்தை நழுவ விட்டான்' என்று சொல்லுங்கள்.
18 சேனைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மாமன்னர் கூறும் வாக்கு இதுவே: மலைகளுக்குள் தாபோர் மலை போலவும், கடலோரத்துக் கர்மேல் போலவும் வருவான்.
19 எகிப்து நாடென்னும் உரிமை மகளே, நாடு கடத்தப்பட்ட வாழ்க்கை நடத்தத் தேவையானவற்றை மூட்டை கட்டிக்கொள். ஏனெனில் மேம்பீஸ் காடாகும், பாழடைந்து குடியற்றுப் போகும்.
20 எகிப்து அழகும் சிறப்பும் வாய்ந்த ஓர் இளம் பசு, தாற்றுக் கோல் அதற்கு வடக்கிலிருந்து வருகிறது;
21 கொழுத்த காளைகள்போல் அதன் நடுவிலுள்ள கூலிப் படைகள் கூட எதிர்த்து நிற்க முடியாமல் ஒருமிக்க ஓட்டம் பிடித்தார்கள்; ஏனெனில் அவர்களுடைய அழிவின் நாள் அவர்கள் மேல் வந்துற்றது; அதுவே அவர்களுக்குத் தண்டனை நாள்.
22 நழுவிச் செல்லும் பாம்பைப் போல் எகிப்து சீறும், அதன் பகைவர்கள் அணி அணியாய் வருவார்கள், மரம் வெட்ட வருகிறவர்களைப் போலக் கோடாரிகளோடு வருவார்கள்;
23 அவர்கள் அதன் காட்டை வெட்டுவார்கள், அது ஆள் நுழைய முடியாத காடாயினும் வெட்டப்படும். வெட்டுகிளிகளைப் போல் எண்ணிக்கையில் அடங்காதவர்கள், அவர்களைக் கணக்கிட முடியாது, என்கிறார் ஆண்டவர்.
24 எகிப்து என்னும் மகள் அவமானத்துக்குள்ளாவாள், வடநாட்டு மக்கள் கையில் அகப்படுவாள்."
25 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, தீப்ஸ் நகரத்தின் அம்மோனையும் பார்வோனையும் எகிப்தையும் அதன் தெய்வங்களையும், அரசர்களையும் பார்வோனையும், அவன் மேல் நம்பிக்கை வைக்கிறவர்களையும் தண்டிக்கப் போகிறோம்.
26 அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும், பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசார் கையிலும், அவனுடைய ஊழியர் கையிலும், அவர்களை ஒப்புவிப்போம்; பிறகு பண்டை நாளில் இருந்தது போல், எகிப்து குடியேற்றப்படும், என்கிறார் ஆண்டவர்.
27 ஆனால் நம் ஊழியனாகிய யாக்கோபே, அஞ்சாதே; இஸ்ராயேலே, நீ கலங்காதே; ஏனெனில் உன்னைத் தொலை நாட்டினின்று மீட்போம், உன் சந்ததியை அடிமைத்தனத்தினின்று விடுவிப்போம்; யாக்கோபு திரும்பி வந்து அமைதியுடன் இளைப்பாறுவான், அவனை எவனும் அச்சுறுத்த மாட்டான்;
28 நம் ஊழியனாகிய யாக்கோபே, அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் நாம் உன்னோடு இருக்கிறோம்; நீ சிதறி வாழ்ந்த நாட்டு மக்கள் அனைவரையும் முற்றிலும் அழிப்போம்; ஆனால் உன்னை முற்றிலும் அழிக்க மாட்டோம்; உன்னை நீதியோடு தண்டிப்போம்; உன்னைத் தண்டியாமலும் விட மாட்டோம்."
அதிகாரம் 47
1 பாரவோன் காஜா நகரத்தைப் பிடிப்பதற்கு முன்னர், பிலிஸ்தியரைக் குறித்து ஆண்டவர் எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளிய வாக்கு.
2 ஆண்டவர் கூறுகிறார்: இதோ, வடதிசையினின்று பெருவெள்ளம் புறப்படுகிறது, கரை புரண்டோடும் காட்டாறு போல வருகிறது; நாட்டையும் நாட்டிலுள்ள யாவற்றையும் மூழ்கடிக்கும், நகரத்தையும் குடிகளையும் வளைத்துக் கொள்ளும்; மனிதர்கள் கூக்குரலிடுவார்கள், நாட்டின் குடிகளனைவரும் அலறியழுவார்கள்;
3 அவர்களுடைய போர்க் குதிரைகளின் குளம்பொலியையும், தேர்ப்படையின் கடகடப்பையும், உருளைகளின் இரைச்சலையும் கேட்டு அஞ்சுவார்கள்; தந்தையர் தங்கள் கைகள் சோர்ந்தமையால், தங்கள் குழந்தைகளையும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்;
4 ஏனெனில் அது பிலிஸ்தியர் அனைவரும் அழியும் நாள், தீரும் சீதோனும் அதன் துணைவர்களும் அழியும் நாள்; ஏனெனில் ஆண்டவர் பிலிஸ்தியரை அழிக்கிறார், காத்தோர் தீவில் எஞ்சியிருந்தோரையும் அழிக்கிறார்.
5 காஜா நகரம் மொட்டையடிக்கப்படும்; அஸ்காலோன் மௌனங் காக்கும் அனாக்கியரில் எஞ்சியிருப்பவர்களே, நீங்கள் எம்மட்டும் உங்களையே சீறிக் கொள்வீர்கள்?
6 ஆண்டவரின் வாளே, எது வரையில் நீ ஓயாதிருப்பாய்? உன் அறைக்குள் நுழைந்து ஓய்ந்திரு, பேசாதிரு;
7 அது எப்படி ஓய்ந்திருக்க முடியும்? அஸ்காலோனுக்கும், அதன் கடல்துறை நாடுகளுக்கும் விரோதமாக ஆண்டவர் அதற்குக் கட்டளை கொடுத்து, அது செய்ய வேண்டியதைச் சொல்லியனுப்பினாரே!"
அதிகாரம் 48
1 மோவாபைப் பற்றிய இறைவாக்கு. இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "நாபோவுக்கு ஐயோ கேடு! ஏனெனில், அது பாழாக்கப்பட்டு அவமானமடைந்தது; காரியத்தாயீம் பிடிபட்டது; அரண் சூழ்ந்த நகரம் மானபங்கப்பட்டு நடுங்கிற்று;
2 மோவாபுக்கு இனிப் புகழில்லை; எசேபோனில் அதற்கெதிராய்த் தீமை சூழ்ந்து, 'வாருங்கள், அதனை ஒரு நாடாய் இல்லாதவாறு சிதைப்போம்!' என்று திட்டமிட்டார்கள். மத்மேனே, நீயும் அழிக்கப்படுவாய், வாள் உன்னைத் தொடர்ந்து வரும்;
3 இதோ, ஓரோனாயீம் நகரினின்று கூக்குரல் கேட்கிறது; 'கொடுமை, பேரழிவு' என்று கேட்கிறது!
4 மோவாபு நசுக்கப் பட்டது; சோவார் வரையில் அவர்கள் அலறல் கேட்கிறது.
5 லுவித்துக்கு ஏறிப் போகும் வழியில் அழுது புலம்புகின்றார்கள்; ஓரோனாயீமுக்கு இறங்கிப் போகும் வழியில் அழிவின் புலம்பலைக் கேட்டார்கள்;
6 தப்பியோடுங்கள், உயிரைக் காத்துக்கொள்ளுங்கள்; பாலை நிலத்துக் காட்டுக் கழுதை போல் ஓடிப் போங்கள்.
7 உன் கோட்டைகளையும் கருவூலங்களையும் நம்பியிருந்தாய், ஆதலால் நீயும் கைப்பற்றப்படுவாய்; உன் தெய்வமான காமோசும், அதன் பூசாரிகளும், தலைவர்களும் அடிமைகளாய்க் கொண்டுப் போகப்படுவர்.
8 பாழாக்குவோன் ஒவ்வொரு பட்டணத்துக்கும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பாது; பள்ளத்தாக்குகள் பாழாகும், சமவெளிகள் அழிக்கப்படும்; ஆண்டவர் சொற்படியே நிறைவேறும்.
9 மோவாபுக்குக் கல்லறை கட்டுங்கள், அது அடியோடு பாழாய்ப் போகும்; அதனுடைய பட்டணங்கள் பாழ்வெளியாகும், குடியிருப்பார் அற்றுப் போகும்.
10 ஆண்டவருடைய அலுவலை அசட்டைத் தனத்துடன் செய்பவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாமல் தன் வாளை அடக்கி வைத்திருப்பவன் சபிக்கப்பட்டவன்.
11 மோவாபு தன் இளமை முதல் அமைதியாய் வாழ்ந்தது, தன் வண்டல்களில் இளைப்பாறிக் கொண்டிருந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்தில் வார்க்கப்படவில்லை; அடிமையாக நாடுகடத்தப் படவுமில்லை; ஆகவே அதன் சுவை அதைவிட்டுப் போகவில்லை, அதன் நறுமணமும் மாறவில்லை.
12 ஆதலால், ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாட்கள் வருகின்றன; கவிழ்க்கிறவர்களை அனுப்புவோம்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதன் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதன் சாடிகளை உடைத்துப் போடுவார்கள்.
13 அப்போது, இஸ்ராயேல் வீட்டார் தங்கள் நம்பிக்கையாய் இருந்த பேத்தேலைக் குறித்து வெட்கத்துக்கு உள்ளானது போல, மோவாபு காமோசைக் குறித்து வெட்கத்துக்குள்ளாகும்.
14 நாங்கள் வீரர்கள், போரில் வல்லவர்கள்' என்று நீங்கள் சொல்வதெப்படி?
15 மோவாபையும் அதன் நகரங்களையும் அழிப்பவன் வந்து விட்டான், அதன் மிக சிறந்த இளைஞர்கள் கொலைக் களத்தை நோக்கிப் போகிறார்கள்; சேனைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர் கூறும் வாக்கு இதுவே.
16 மோவாபின் அழிவு அண்மையில் இருக்கிறது, அதன் கேடு விரைந்து பறந்து வருகிறது.
17 அதனைச் சூழ்ந்திருப்பவர்களே, நீங்கள் அனைவரும் அதனைக் குறித்து அழுது புலம்புங்கள்; அதன் பெயரை அறிந்த அனைவரும் கூடியழுங்கள்; 'வலிமை மிக்க செங்கோல் முறிந்ததெவ்வாறு? மகிமையான கோல் உடைந்ததெப்படி?' என்று சொல்லுங்கள்.
18 தீபோன் என்னும் குடிமகளே! உன் மகிமையை விட்டுக் கீழிறங்கு, வறண்ட நிலத்தில் உட்கார்ந்து கொள். ஏனெனில் மோவாபை அழிப்பவன் உனக்கெதிராய் வந்து விட்டான், உன் அரண்களைத் தகர்த்து விட்டான்.
19 அரோவேர் என்னும் குடிமகளே! நீ வழியருகே நின்று பார்த்துக் கொண்டிரு: ஓட்டம் பிடிக்கிறவனையும் தப்பியோடுகிறவனையும் நோக்கி, 'என்ன நடந்தது?' என்று கேள்.
20 மோவாபு தோல்வியுற்றதால், மானமிழந்தது! அழுது புலம்புங்கள், கூக்குரலிடுங்கள்; அர்னோனில் நின்று, 'மோவாபு பாழானது!' என்று அறிவியுங்கள்.
21 ஆண்டவருடைய நீதிக்கேற்ற தண்டனை சமவெளி நாட்டின் மேலும் ஏலோனின் மேலும் யாசாவின் மேலும் மேப்பாத்தின் மேலும்,
22 தீபோனின் மேலும் நாபோவின் மேலும் தேபிளாத்தாயிம் மேலும்,
23 காரியத்தாயீம் மேலும் பெட்கமுலின் மேலும் பெத்துமாவேனின் மேலும்,
24 கரியோத்தின் மேலும் போஸ்ராவின் மேலும், தொலைவிலும் அருகிலுமுள்ள மோவாபு நாட்டின் பட்டணங்கள் எல்லாவற்றின் மேலும் வந்து விட்டது.
25 இவ்வாறு, மோவாபின் கொம்பு முறிந்தது, கையும் ஒடிந்தது, என்கிறார் ஆண்டவர்.
26 அவனைப் போதை ஏறி வெறி கொள்ளச் செய்யுங்கள்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகத் தன்னையே பெரியவனாக்கிக் கொண்டான்; தான் வாந்தி எடுத்ததில் மோவாபு புரளுவான்;
27 உன்னுடைய நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தலையை ஆட்டிப் பழித்தாயே, அவன் என்ன, திருடர்கள் கூட்டத்திலா இருந்தான்?
28 மோவாபின் குடிமக்களே, பட்டணங்களை விட்டு வெளியேறுங்கள், பாறைகளிலே போய்க் குடியேறுங்கள்; உயர்ந்த பாறைகளின் வெடிப்பு பொந்துகளில் கூடு கட்டி வாழும் புறாவைப் போல் இருங்கள்.
29 மோவாபின் செருக்கு எவ்வளவெனக் கேள்வியுற்றோம், பெரிதே அதன் இறுமாப்பு? தன் மேட்டிமை, செருக்கு, இறுமாப்பு, உள்ளத்தின் அகந்தை இவற்றைக் கேள்விப்பட்டோம்.
30 அதனுடைய தற்புகழ்ச்சிகள் யாவும் பொய், அதனுடைய செயல்கள் யாவும் பொய்.
31 ஆதலால் மோவாபை முன்னிட்டு அலறியழுவேன், மோவாபு நாடு முழுவதையும் குறித்துப் புலம்புவேன், கிர்கேரஸ் ஊராருக்காகப் பெருமூச்சு விடுவேன்.
32 சபாமாவின் திராட்சைக் கொடியே, யாஜேருக்காக அழுவதை விட மிகுதியாய் உனக்காக அழுகிறேன்; உன்னில் கிளைத்த கொடிகள் கடல் கடந்து படர்ந்தன; யாஜேர் கடல் மட்டும் போய் எட்டின. பாழாக்குவோன் உன் கோடைக்கால கனிகள் மேலும், திராட்சைப் பழ அறுவடை மேலும் பாய்ந்து விட்டான்.
33 மோவாபு நாட்டினின்று, அக்களிப்பும் அக மகிழ்ச்சியும் அற்றுப் போயின; திராட்சை ஆலைகளில் இரசம் வற்றிப் போயிற்று, பழமிதிப்பவன் எவனுமில்லை; மகிழ்ச்சியின் ஆரவாரமுமில்லை!
34 எசேபோன், எலேயாலே ஆகியவற்றின் கூக்குரல், யாஜா வரையிலும் கேட்டது; அவர்களுடைய கதறல் சேகோரிலிருந்து ஓரோனாயீம், எக்ளாத்- ஷூலீஷியா வரையில் கேட்கப்பட்டது. ஏனெனில், நேம்ரிமின் தண்ணீரும் கெட்டுப் போய் விட்டது.
35 மோவாபில் குன்றுகள் மேல் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுகிறவர்களை ஒழிப்போம், என்கிறார் ஆண்டவர்.
36 ஆதலால் மோவாபுக்காகத் துயரப்பட்டு என் இதயம் புல்லாங்குழலைப் போலத் துக்கமான பண்பாடும்; கிர்ரேஸ் ஊராருக்காக என் இதயம் புல்லாங்குழலைப் போலத் துயரத்தால் விம்மிப் பாடும்; அவர்கள் சேர்த்து வைத்த செல்வங்கள் அழிந்தன.
37 அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டிருக்கும்; தாடிகள் சிரைக்கப்பட்டிருக்கும்; கைகள் கட்டப்பட்டிருக்கும்; இடையில் சாக்குத் துணிகள் உடுத்தியிருப்பர்.
38 மோவாபின் எல்லா வீட்டு மாடிகளிலும், அதன் தெருக்களிலும் அழுகை மயமாய் இருக்கும்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போல மோவாபை உடைத்தெறிந்தோம், என்கிறார் ஆண்டவர்.
39 மோவாபு எவ்வாறு உடைந்து விட்டது? அவர்கள் கூக்குரலிடுகிறார்களா? மோவாபு நாணித் தலை கவிழ்ந்ததா? சுற்றிலும் இருக்கிற அனைவருடைய பழிப்புக்கும் நகைப்புக்கும் மோவாபு இலக்கானதா?"
40 ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, ஒருவன் கழுகைப் போல விரைவாய்ப் பறந்து வந்து, மோவாபின் மேல் தன் இறக்கைகளை விரிப்பான்;
41 நகரங்கள் பிடிப்பட்டன, கோட்டைகள் கைப்பற்றப்பட்டன; அந்நாளில் மோவாபு வீரர்களின் இதயம் பிரசவிக்கும் பெண்ணின் இதயத்திற்கொப்பாகும்;
42 மோவாபு அழிக்கப்படும், இனி ஒரு மக்களினமாய் இராது; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகத் தன்னையே உயர்த்தினான்.
43 மோவாபு நாட்டில் குடியிருப்பவனே, பீதியும் படுகுழியும் வலையுமே உன் முன் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.
44 பீதிக்குத் தப்புகிறவன் படுகுழியில் விழுவான், படுகுழி விட்டு மேடேறுபவன் வலையில் சிக்குவான்; ஏனெனில் அவர்களுடைய தண்டனைக் காலத்தில் இவற்றை மோவாபின் மேல் வரப்பண்ணுவோம், என்கிறார் ஆண்டவர்.
45 வலைக்குத் தப்பினவர்கள் எசெபோன் நிழலில் தங்கினார்கள், ஆயினும் எசெபோனிலிருந்தும் தீ புறப்பட்டது, சேகோனிலிருந்தும் நெருப்பு கிளம்பிற்று; மோவாபின் தலையை விழுங்கிற்று, அதன் கலகக்காரரின் மண்டையைப் பொசுக்கிற்று.
46 மோவாபே, உனக்கு ஐயோ கேடு! காமோசின் மக்களே, சிதைந்து போனீர்கள்; ஏனெனில் உன் புதல்வர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்; உன் புதல்வியர் அடிமைத்தனத்திற்குப் போனார்கள்.
47 ஆயினும், கடைசி நாட்களில் மோவாபை முன்னைய நிலைக்கு மீண்டும் கொண்டு வருவோம், என்கிறார் ஆண்டவர்." மோவாபின் மேல் வரும் நீதித் தீர்ப்பின் வாக்கு இத்துடன் முற்றிற்று.
அதிகாரம் 49
1 அம்மோன் மக்களைப் பற்றிய இறைவாக்கு: ஆண்டவர் கூறுகிறார்: "இஸ்ராயேலுக்குப் புதல்வர் இல்லையா? அவனுக்கு வாரிசு இல்லையா? இருந்தால், மெல்கோம், காது நாட்டைக் கைப்பற்றுவானேன்? அவன் மக்கள் அதன் நகரங்களில் குடியேறுவானேன்?
2 ஆதலால், இதோ நாட்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்; அப்போது அம்மோன் மக்களின் இராபாத்துக்கு எதிராகப் போர் முரசு ஒலிக்கச் செய்வோம். அது பாழடைந்து மண்மேடாகும், அதனுடைய ஊர்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்; அப்போது இஸ்ராயேலோ தன் நாட்டைக் கைப்பற்றியவர்களைக் கைப்பற்றிக் கொள்ளும், என்கிறார் ஆண்டவர்.
3 எசெபோனே, புலம்பியழு, ஏனெனில், ஆயி நகர் அழிவுற்றது, இராபாத்துப் பெண் மக்களே, ஓலமிடுங்கள், சாக்குத் துணிகளை உடுத்திக் கொள்ளுங்கள்; வேலிகளைச் சுற்றித் திரிந்து புலம்புங்கள்; ஏனெனில் மெல்கோமும் அவன் பூசாரிகளும் தலைவர்களும் ஒருமிக்க நாடு கடத்தப்படுவார்கள்.
4 பிரமாணிக்கமற்ற மகளே, உன் செல்வங்களில் நம்பிக்கையை வைத்து, 'எனக்கெதிராய் வருபவன் யார்?' என்று சொல்லிக் கொண்டு, உன் பள்ளத்தாக்குகளைப் பற்றித் தருக்கிக் கொள்வானேன்? உன் பள்ளத்தாக்கு பாழாயிற்றே.
5 சேனைகளின் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, உன்னைச் சுற்றியிருக்கும் அனைவரிடமிருந்தும் உனக்குத் திகில் உண்டாகச் செய்வோம். நீங்கள் ஒருவரையொருவர் காணாதபடி சிதறிப் போவீர்கள், பயந்தோடும் உங்களை ஒன்று சேர்ப்பவன் ஒருவனுமிரான்.
6 ஆனால் பிற்பாடு அம்மோன் மக்களை மீண்டும் நன்னிலைக்கு வரச் செய்வோம், என்கிறார் ஆண்டவர்."
7 இதுமேயாவைப் பற்றிச் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "தேமானிலே இனி ஞானமில்லையோ? அதன் மக்களிடத்தில் யோசனை ஒழிந்து போனதோ! அவர்களுடைய ஞானம் அழிந்து விட்டதோ?
8 கேதான் குடிமக்களே, ஓடுங்கள், திரும்புங்கள், குழிகளில் இறங்கிக் கொள்ளுங்கள்; ஏனெனில் ஏசாவின் அழிவை அவன் மேல் கொண்டு வருவோம்; இது அவனது தண்டனைக் காலத்தில் நிறைவேறும்.
9 திராட்சைப் பழம் பறிப்பவர்கள் உன் தோட்டத்திற்கு வந்தால், திராட்சைப் பழங்களில் கொஞ்சமாவது விடமாட்டார்களா? இரவில் திருடர்கள் வருவார்களாயின், போதிய அளவுக்கு மேல் திருடமாட்டார்கள் அன்றோ?
10 நாமோ ஏசாவை வெளியே கொண்டு வருவோம், அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்துவோம், மறைந்திருக்க அவனால் இனி முடியாது; அவன் சந்ததியும் சகோதரரும் அயலாரும் அறிவார்கள்; அவனும் இல்லாமற் போவான்.
11 திக்கற்ற உன் பிள்ளைகளை நம்மிடம் விட்டு விடு, நாம் அவர்களை வாழ வைப்போம்; உன் கைம்பெண்கள் நம்மில் நம்பிக்கை வைப்பார்கள்."
12 ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, இந்தத் தண்டனைப் பாத்திரத்தில் குடிக்கத் தக்க குற்றம் செய்யாதவர்களும் அதனைக் குடித்திருக்க, நீ மட்டும் தண்டனைக்குத் தப்புவாயோ? நீ தண்டனைக்குத் தப்ப முடியாது; நீயும் குடித்தே தீருவாய்.
13 ஏனெனில், ஆண்டவர் கூறுகிறார்: நமது பேரில் ஆணை! போஸ்ரா காடாகி, பாலைநிலமாகி மான பங்கத்திற்கும் சாபணைக்கும் இலக்காகும்; அதனைக் கண்டு யாவரும் திகிலடைவர்; அதன் பட்டணங்கள் யாவும் என்றென்றைக்கும் பாலையாய்க் கிடக்கும்."
14 ஆண்டவரிடமிருந்து எனக்கொரு செய்தி வந்தது, புறவினத்தார் நடுவில் ஒரு தூதுவன் அனுப்பப்பட்டான்: "ஒருமிக்கச் சேருங்கள், அதற்கெதிராய் வாருங்கள், போருக்குப் புறப்படுங்கள்!" என்று சொன்னான்.
15 இதோ, உன்னை மக்களினங்களுள் சிறியவனாகச் செய்வோம், மனிதருக்குள் உன்னை நிந்தைக்கு உரியவனாக்குவோம்;
16 பாறையின் வெடிப்புகளில் வாழ்கிறவனே, குன்றின் உச்சியைப் பிடித்திருக்கிறவனே, நீ விளைத்த அச்சமும், உன் உள்ளத்தின் இறுமாப்பும் உன்னை மயக்கி விட்டன; கழுகைப் போல் உன் கூட்டை உயரத்தில் நீ கட்டினாலும், உன்னை அங்கிருந்து இழுத்துப் போடுவோம், என்கிறார் ஆண்டவர்.
17 இதுமேயா பாழாகும்; அதன் வழியாய்ப் போகிறவன் எவனும் திகைப்புறுவான்; அதற்குற்ற அழிவுகளைப் பற்றி நகைப்பான்.
18 சோதோம், கொமோரா, அதன் சுற்றுப்புற நகரங்கள் யாவும் அழிக்கப்பட்ட போது நிகழ்ந்தது போல், இதிலும் மனிதன் எவனும் குடியிருக்கமாட்டான்; அதில் குடியேறவும் மாட்டான், என்கிறார் ஆண்டவர்.
19 இதோ யோர்தான் ஆற்றையடுத்துள்ள அடர்ந்த காட்டிலிருந்து செழிப்பான மேய்ச்சல் நிலத்துக்குள் பாய்ந்து வரும் சிங்கம் துரத்துவது போல் அவர்களை நாம் நாட்டிலிருந்து துரத்துவோம்; நமக்கு விருப்பமானவனை அதற்குத் தலைவனாக்குவோம்; நமக்குச் சமமானவன் யார்? நம்மை அழைத்து வர ஆணையிடத் தக்கவன் யார்? நம் முன்னிலையில் எதிர்த்து நிற்கும் மேய்ப்பன் எவன்?
20 ஆதலால் ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் செய்திருக்கும் யோசனையையும், தேமான் குடிமக்களுக்கு விரோதமாக அவர் எண்ணியிருக்கும் எண்ணங்களையும் கேளுங்கள்: மந்தையில் மிகச் சிறியனவும் இழுத்துப் போகப்படும்; அவற்றின் கிடை அதைக் கண்டு திகைப்படையும்.
21 அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்; அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும்.
22 இதோ, கழுகைப் போல் ஒருவன் எழுந்து பறந்து வருவான், தன் இறக்கைகளைப் போஸ்ராவின் மேல் விரிப்பான்; அந்நாளில் இதுமேயாவின் வீரர்களுடைய மனம், பிரசவ வேதனையுறும் பெண்ணின் மனத்தைப் போலிருக்கும்."
23 தமஸ்குவைப் பற்றிய இறைவாக்கு: "ஏமாத்தும் ஆற்பாதும் கலங்குகின்றன; ஏனெனில் அவர்கள் தீய செய்தியைக் கேள்விப்பட்டனர்! அவர்களுடைய இதயம் கவலையால் நொறுங்குகிறது, அதற்கு அமைதி கிடையாது.
24 தமஸ்கு வலிமையிழந்து ஓட்டம் பிடிக்கிறது, அதனைக் கிலி பிடித்துக் கொண்டது; இடையூறும் துன்பங்களும் அதனைச் சுற்றிப் பிரசவப் பெண்ணை வளைப்பது போல வளைத்துக் கொண்டன;
25 புகழ் வாய்ந்த நகரம், மகிழ்ச்சி பொங்கும் பட்டணம், எப்படித்தான் கைவிடப்பட்டதோ!
26 ஆகையால் அதன் இளைஞர்கள் தெருக்களில் மாய்வார்கள், போர்வீரர் அனைவரும் அந்நாளில் செய்வதறியாது திகைப்பார்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
27 தமஸ்குவின் மதில்களில் நெருப்பை மூட்டுவோம், அது பெனாதாதின் அரண்களைச் சுட்டெரிக்கும்."
28 பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் அழித்த கேதார், ஆஜோர் அரசுகளைப் பற்றிய இறைவாக்கு: ஆண்டவர் கூறுகிறார்: "போருக்கு எழுங்கள், கேதாருக்கு எதிராய் முன்னேறுங்கள், கீழ்த்திசை மக்களை அழியுங்கள்;
29 அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் பிடிக்கப்படும், குடில்களும் பொருட்களும் கைப்பற்றப்படும், அவர்களுடைய ஒட்டகங்கள் பறிக்கப்படும், 'எப்பக்கமும் பேரச்சம்' என்று மனிதர் அலறுவார்கள்.
30 ஆஜோரின் குடிகளே, ஓடிப் போங்கள்; தொலைவாக ஓடிக் குழிகளில் ஒளிந்து கொள்ளுங்கள்; ஏனெனில் பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் உங்களுக்கு விரோதமாகத் திட்டம் தீட்டியுள்ளான், உங்களுக்கு எதிராக யோசனை செய்திருக்கிறான், என்கிறார் ஆண்டவர்.
31 போருக்கு எழுங்கள், அமரிக்கையாய் அச்சமின்றி வாழும் மக்களுக்கு எதிராக முன்னேறுங்கள்; அவர்கள் ஊருக்கு வாயில்களும் தாழ்ப்பாள்களும் இல்லை; அவர்கள் தனித்து வாழ்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
32 அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையடிக்கப்படும், அவர்களுடைய கணக்கற்ற மந்தைகள் பறிமுதலாகும்; வட்டமாய் மயிர் வெட்டியிருக்கும் அம்மக்களைக் காற்றில் பறக்கடிப்போம், எப்பக்கமுமிருந்து அவர்கள் மேல் தீமையை வரச்செய்வோம், என்கிறார் ஆண்டவர்.
33 ஆஜோர் குள்ளநரிகளின் உறைவிடமாகும், என்றென்றைக்கும் பாழடைந்து கிடக்கும்; மனிதர் யாரும் குடியிருக்க மாட்டார்கள், எவனும் அங்கே தங்கியிருக்க மாட்டான்."
34 யூதாவின் அரசனாகிய செதேசியாஸ் ஆளுகையின் தொடக்கத்தில், ஏலாமுக்கு எதிராக ஆண்டவர் எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளிய வாக்கு:
35 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, நாம் ஏலாமின் வில்லை முறிப்போம், அவர்கள் வலிமையின் மையத்தை அழிப்போம்;
36 ஏலாமின் மேல் வானத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் நான்கு வகைக் காற்றைக் கொண்டு வருவோம்; அவர்களை எல்லா வகைக் காற்றிலும் தூற்றுவோம், ஏலாமினின்று ஓடியவர்கள் செல்லாத நாடே இராது.
37 பகைவர் முன்னிலையிலும், உயிரைப் பறிக்கத் தேடுவார் முன்னும், ஏலாபித்தாரை நடுங்கச் செய்வோம்: அவர்கள் மேல் தீமையைக் கொண்டு வருவோம், நம் ஆத்திரத்தைப் பொழிவோம், என்கிறார் ஆண்டவர். அவர்கள் முற்றிலும் சிதைகிற வரையில் அவர்களை வாளுக்கிரையாகக் கொடுப்போம்.
38 ஏலாமில் நம் அரியணையை அமைப்போம், அவர்களின் அரசனையும் தலைவர்களையும் அழிப்போம், என்கிறார் ஆண்டவர்.
39 ஆயினும் கடைசி நாட்களில் ஏலாமின் துன்ப நிலையை மாற்றுவோம், என்கிறார் ஆண்டவர்."
அதிகாரம் 50
1 பபிலோனைப் பற்றியும் கல்தேயரின் நாட்டைப் பற்றியும் ஆண்டவர் இறைவாக்கினரான எரெமியாஸ் வாயிலாக அறிவித்த வாக்கு:
2 பபிலோனின் வீழ்ச்சி- இஸ்ராயேலின் மீட்சி: "புறவினத்தார் நடுவில் பறைசாற்றுங்கள், தெரியப்படுத்துங்கள்; கொடியேற்றுங்கள், அறிவியுங்கள், மறைக்கவேண்டாம்; 'பபிலோன் பிடிப்பட்டது, பேல் அவமானம் அடைந்தான்; மெரோதாக் தோற்றுப் போனான், அதன் படிமங்கள் அவமானமுற்றன, அதன் சிலைகள் கலங்கி நின்றன ' என்று சொல்லுங்கள்,
3 ஏனெனில் வடக்கிலிருந்து அதற்கெதிராய் ஓர் இனம் வரும், அதன் நாட்டைப் பாழாக்கும்; அதில் யாரும் குடியிருக்க மாட்டார்கள், மனிதனும் மிருகமும் அதை விட்டு ஓடிப் போவார்கள்.
4 அந்நாட்களில், அக்காலத்தில், இஸ்ராயேல் மக்களும் யூதா மக்களும் திரும்பி வருவார்கள்; வரும் போதே அவர்கள் அழுது கொண்டு வருவர், அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவரைத் தேடி வருவர், என்கிறார் ஆண்டவர்.
5 சீயோனுக்கு வழி கேட்பார்கள், அவர்கள் கண்ணெல்லாம் அதிலேயே இருக்கும்; 'வாருங்கள் என்றென்றைக்கும் மறக்க முடியாத உடன்படிக்கையால் ஆண்டவரோடு நாம் சேர்ந்துகொள்வோம்' என்பார்கள்.
6 நம் மக்கள் காணாமற் போன ஆடுகளாய் இருந்தார்கள்; அவர்களின் ஆயர்களே அவர்களை வழிதவறச் செய்தார்கள், மலைகளின் மேல் அலைய அடித்தார்கள், மலையிலிருந்து குன்றுக்கு இறங்கிப் போனார்கள், தங்களுடைய கிடையை முற்றிலும் மறந்து விட்டார்கள்.
7 கண்டவர்கள் அனைவரும் அவர்களை விழுங்கினார்கள் 'நாம் குற்றமற்றவர்கள்; ஏனெனில் அவர்கள் தான் ஆண்டவருக்கு எதிராய்ப் பாவஞ் செய்தார்கள், உண்மையான கிடையும், தங்கள் தந்தையரின் நம்பிக்கையுமான ஆண்டவருக்கு எதிராய் நடந்தனர்' என்று அவர்களின் பகைவர் சொல்லிக் கொள்வார்கள்.
8 பபிலோனிலிருந்து தப்பி ஓடிப்போங்கள், கல்தேயர் நாட்டிலிருந்து வெளியேறுங்கள், மந்தைக்கு முன் போகும் கடாக்களைப் போலிருங்கள்.
9 இதோ பபிலோனுக்கு எதிராக வட நாட்டிலிருந்து, மக்களினங்கள் பலவற்றைத் தூண்டிக் கொண்டு வருவோம், அவர்கள் அதற்கு எதிராய் அணிவகுத்து நிற்பார்கள், அதுவும் அவர்களால் கைப்பற்றப்படும்; அவர்களின் அம்பு வில் வீரரின் அம்பு போன்றது, வெற்றி பெற்றாலன்றித் திரும்பி வராது.
10 கல்தேயர் நாடு கொள்ளையடிக்கப்படும், அதனைக் கொள்ளையிடுவோர் அனைவரும் நிறைவு பெறுவார்கள், என்கிறார் ஆண்டவர்.
10 கல்தேயா நாடு கொள்ளையடிக்கப்படும், அதனைக் கொள்ளையிடுவோர் அனைவரும் நிறைவு பெறுவார்கள் என்கிறார் ஆண்டவர்,
11 "நம் உரிமைச் சொத்தைச் சூறையாடியவர்களே, நீங்கள் அக்காளித்தாலும், அகமகிழ்ந்தாலும், மேய்ச்சலுக்குப் போன காளை போலக் கும்மாளம் அடித்தாலும், வலிமை மிக்க வரிக்குதிரைகள் போலக் கனைத்தாலும்,
12 உங்கள் தாய் மிகுந்த அவமான மடைவாள், உங்களைப் பெற்றவள் வெட்கி நாணுவாள்; இதோ மக்களினத்துள் கடையளாய் இருப்பாள், பாழடைந்ததும் வறண்டதுமான பாலை நிலமாவாள்.
13 ஆண்டவருடைய கோபத்தின் காராணமாய் அது குடியிருப்பாரற்ற காடாகும், அதன் வழியாய்ப் போகிற எவனும் திகைப்பான், அதன் தண்டனைகளை எல்லாம் கண்டு நகைப்பான்.
14 அண்டை நாடுகளில் வாழும் வில் வீரர்களே, நீங்களனைவரும் பபிலோனுக்கு எதிராக அணிவகுங்கள்; அதனை அம்பால் தாக்குங்கள், அம்புமாரி பொழியுங்கள், ஏனெனில் ஆண்டவருக்கு எதிராய்ப் பாவஞ் செய்தது.
15 அதனைச் சுற்றி நாற்புறமும் வந்து ஆர்ப்பரியுங்கள், அது சரணடைந்தது; அதன் அடிப்படைகள் சரிந்தன, மதில்கள் தகர்க்கப்பட்டன; ஏனெனில், இது தான் ஆண்டவர் வழங்கும் பழி: நீங்களும் அதனைப் பழி வாங்குங்கள், அது செய்தது போல நீங்கள் அதற்குச் செய்யுங்கள்.
16 பபிலோனிலிருந்து விதைப்பவனைச் சிதறடியுங்கள், அறுவடைக் காலத்தில் எவனும் அரிவாள் பிடிக்க விடாதீர்கள்; கொடியவனின் வாளுக்கு அஞ்சி அவனவன் தன் தன் மக்களிடம் திரும்புவான், அவனவன் தன் தன் சொந்த நாட்டுக்கு ஓடிப்போவான்.
17 இஸ்ராயேல் சிதறிக் கிடக்கும் மந்தை, சிங்கங்கள் அதனை வெளியில் விரட்டின; முதற் கண் அசீரிய அரசன் அதனை விழுங்கினான், பின்னர் பபிலோன் மன்னன் நபுக்கோதனசார் அதன் எலும்புகளை முறித்தான்.
18 ஆதலால் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அசீரிய அரசனை நாம் தண்டித்தது போலவே, இதோ, பபிலோனிய மன்னனையும் அவன் நாட்டையும் தண்டிப்போம்.
19 இஸ்ராயேலையோ அதன் மேய்ச்சலுக்கு அழைத்து வருவோம், செழிப்பான கார்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீம் மலைகளிலும் கலாயாத் நாட்டிலும் அதன் விருப்பம் முற்றிலும் நிறைவுறும்.
20 அந்நாட்களில், அக்காலத்தில், இஸ்ராயேலின் அக்கிரமத்தைத் தேடிப் பார்ப்பார்கள், ஆனால் ஒன்றும் காணப்படாது; யூதாவில் பாவத்தைத் துருவித் தேடுவார்கள், ஆனால் அதிலே பாவம் இராது; ஏனெனில் நாம் யாரை எஞ்சியவர்களாய் விட்டோமே அவர்களை மன்னிப்போம், என்கிறார் ஆண்டவர்.
21 மெராத்தாயீம் நாட்டுக்கு எதிராகப் புறப்படு, பெக்கோது குடிகளுக்கு எதிராகப் போருக்கெழு; அவர்களை வெட்டி வீழ்த்து, முற்றிலும் அழித்துவிடு, நாம் உனக்குச் சொல்வதெல்லாம் செய், என்கிறார் ஆண்டவர்.
22 இதோ, நாட்டிலே அமர்க்களத்தின் ஆரவாரம்; பேரழிவின் கூக்குரல் கேட்கின்றது.
23 அனைத்துலகிற்கும் சம்மட்டியாய் இருந்தது நொறுங்கித் தூளானதெவ்வாறு? நாடுகளுக்குள் பபிலோன் பாலைவெளியானதெப்படி?
24 பபிலோனே, உனக்கு வலை வீசினோம், நீ விழுந்தாய்; உனக்குத் தெரியாமலே நீ பிடிபட்டாய்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக எழும்பினாய்.
25 ஆண்டவர் தமது படைக்கலக் கொட்டிலைத் திறந்து, கோபத்தின் படைக்கலங்களை வெளிக் கொணர்ந்தார்; ஏனெனில் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவற்றைக் கொண்டு, கல்தேயர் நாட்டில் செய்ய வேண்டிய அலுவலுண்டு.
26 எப்பக்கமுமிருந்து அதற்கெதிராய்ப் புறப்படுங்கள், அதன் களஞ்சியங்களைத் திறங்கள்; தானியக் குவியல் போலக் குவித்து அதை முற்றிலும் அழியுங்கள், ஒன்றையும் அதில் மீதியாக விட வேண்டாம்.
27 அதன் இளங்காளைகளையெல்லாம் வெட்டுங்கள், அவர்கள் கொலைக்களத்திற்குப் போகட்டும்! அவர்கள் அனைவர்க்கும் ஐயோ கேடு! அவர்கள் நாளும், தண்டனைக் காலமும் வந்து விட்டதே.
28 இதோ, பபிலோன் நாட்டிலிருந்து அவர்கள் தப்பிப் பிழைத்து ஓடுகிறார்கள்; திருக்கோயிலை முன்னிட்டு நம் கடவுளாகிய ஆண்டவர் வாங்கிய பழியைச் சியோனில் அறிவிக்க ஓடுகிறார்கள்.
29 பபிலோனின் அகந்தை: "பபிலோனுக்கு எதிராய் வர வேண்டுமென்று வில் வீரர் அனைவரையும் அழையுங்கள்; அதனைச் சுற்றிலும் வளைத்துக் கொள்ளுங்கள், எவனும் தப்பியோட விடாதீர்கள்; அதன் செயலுக்கேற்றவாறு செய்யுங்கள், அது செய்த யாவற்றின்படியும் நீங்கள் செய்யுங்கள்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக எழும்பி நின்றது, இஸ்ராயேலின் பரிசுத்தரை அவமதித்தது.
30 ஆதலால் அதன் இளைஞர்கள் பொதுவிடங்களில் மடிவார்கள், அதன் வீரர் அனைவரும் அந்நாளில் அழிவார்கள், என்கிறார் ஆண்டவர்.
31 அகங்காரியே, இதோ நாம் உனக்கெதிராய் வருகிறோம், ஏனெனில் உன்னுடைய நாள் வந்து விட்டது; உன்னைத் தண்டிக்க வேண்டிய காலம் நெருங்கிற்று, என்கிறார் சேனைகளின் ஆண்டவராகிய இறைவன்.
32 அகங்காரி இடறி விழுவான், அவனைத் தூக்கி விட எவனுமிரான்; அவனுடைய பட்டணங்களில் நெருப்பு வைப்போம், சுற்றிலுமுள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும்.
33 ஆண்டவர்: இஸ்ராயேலின் மீட்பர்: "சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இஸ்ராயேல் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள், யூதா மக்கள் அவர்களோடு துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்களை அடிமைப்படுத்தினவர் அனைவரும் அவர்களைத் தங்களோடு வைத்திருக்கிறார்கள், அவர்களை விட்டு விட மறுக்கிறார்கள்.
34 ஆனால் அவர்களுடைய மீட்பர் வல்லமை மிக்கவர், அவருடைய பெயர் சேனைகளின் ஆண்டவர் என்பதாம்; அவர்களுடைய வழக்கை அவரே நடத்துவார், அப்போது பூமிக்கு அமைதி தந்து பபிலோனின் அமைதியைக் குலைப்பார்.
35 கல்தேயர் மேலும், பபிலோனின் குடிமக்கள் மேலும், அதன் தலைவர்கள், ஞானிகள் மேலும் வாள் வரும், என்கிறார் ஆண்டவர்.
36 நிமித்திகர் மேல் வாள் வரும், அவர்கள் அறிவிலிகளாகி நிற்பார்கள்; போர் வீரர்கள் மேல் வரும், அவர்கள் அழிக்கப்படுவார்கள்!
37 குதிரைகள் மேலும், தேர்ப்படை மேலும், அதன் நடுவில் இருக்கும் கூலிப்படைகள் மேலும் வாள் வரும், அவர்கள் பேடிகள் ஆவார்கள்! அதன் எல்லாச் செல்வங்கள் மேலும் வாள் வரும், அவை கொள்ளையடிக்கப்படும்!
38 அதன் நீர் நிலைகள் மேல் வறட்சி வரும், அவை யாவும் வற்றிப் போகும்! ஏனெனில் அது படிமங்கள் மலிந்த நாடு, அவர்களோ சிலைகளைப் பற்றிப் பெருமையாய்ப் பேசுகின்றனர்.
39 ஆதலால் பபிலோனில் காட்டு மிருகங்களும், அவற்றோடு கழுதைப் புலிகளும் வாழும், அங்கே தீக் கோழிகள் குடியிருக்கும்; என்றென்றைக்கும் மக்கள் அங்கே குடியறேப் போவதில்லை, எல்லாத் தலைமுறைகளுக்கும் அது குடியற்றுக் கிடக்கும்.
40 சோதோம், கொமோரா, அவற்றின் சுற்றுப் புற நகரங்களைக் கடவுள் அழித்த போது நிகழ்ந்தவாறே, அங்கே மனிதன் எவனும் குடியிருக்க மாட்டான், எவனும் தங்கியிருக்க விரும்பான், என்கிறார் ஆண்டவர்.
41 "இதோ வடக்கிலிருந்து மக்களினம் ஒன்று வருகிறது, வலிமையான மக்களும், மன்னர்கள் பலரும் பூமியின் கோடியிலிருந்து எழும்பி வருகிறார்கள்.
42 அவர்கள் வில்லையும் ஈட்டியையும் பிடித்துள்ளார்கள், அவர்கள் கொடியர்கள், இரக்கமற்றவர்கள்; அவர்களுடைய ஆரவாரம் கடலோசை போல் இரையும்; பபிலோன் என்னும் மகளே, உனக்கெதிராய்ப் போருக்கு அணி வகுத்து குதிரைகள் மேல் ஏறிக் கொண்டு வருகிறார்கள்.
43 பபிலோனிய மன்னன், அவர்கள் வருகின்ற செய்தியைக் கேள்விப்பட்டான், அவனுடைய கைகள் விலவிலத்துப் போயின; நெருக்கடியும் வேதனையும் பிரசவப் பெண்ணைச் சூழ்வது போல் அவனை வளைத்துக் கொள்ளும்.
44 இதோ, சிங்கம் ஒன்று யோர்தான் ஆற்றையடுத்த அடர்ந்த காட்டிலிருந்து செழிப்பான மேய்ச்சல் நிலத்துக்குள் பாய்ந்து வந்து துரத்துவது போல், அவர்களை நாம் நாட்டிலிருந்து துரத்துவோம்; நமக்கு விருப்பமானவனை அதற்குத் தலைவனாக்குவோம். நமக்குச் சமமானவன் யார்? நம்மை அழைத்து வர ஆணையிடுபவன் யார்? நம் முன்னிலையில் எதிர்த்து நிற்கும் மேய்ப்பவன் எவன்?
45 ஆதலால் பபிலோனுக்கு எதிராக ஆண்டவர் செய்திருக்கும் யோசனையையும் கல்தேயர் நாட்டுக்கு விரோதமாக அவர் எண்ணியிருக்கும் எண்ணங்களையும் கேளுங்கள்: மந்தையில் மிகச் சிறியளவும் இழுத்துப் போகப்படும்; அவற்றின் கிடை அதைக் கண்டு திகைப்படையும்;
46 பபிலோன் பிடிப்பட்ட ஆரவாரத்தால் நிலம் நடுங்கும், அதன் கூக்குரல் மக்களினத்தார் நடுவில் கேட்கும்."
அதிகாரம் 51
1 ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, நாம் பபிலோனுக்கும் அதன் குடிகளுக்கும் எதிராக அழிவு விளைவிக்கும் காற்றை எழுப்பி விடுவோம்;
2 பபிலோனுக்கு எதிராகத் தூற்றுவரை அனுப்புவோம், அவர்கள் அதனைத் தூற்றிப் போடுவார்கள். அதன் நாட்டை வெறுமையாக்கி விடுவார்கள்; ஏனெனில் அதன் துன்ப காலத்தில் எப்பக்கத்தினின்றும் வந்து அதன் மேல் பாய்ந்து விழுவார்கள்.
3 வில் வீரன் வில்லை நாணேற்ற வேண்டாம், தன் கவசத்தை அணிந்து தயாராக நிற்க வேண்டாம்; அதன் இளைஞர்களை விடாதீர்கள், அதன் படையை முற்றிலும் கொல்லுங்கள்.
4 கொலையுண்டவர்கள் கல்தேயர் நாடெல்லாம் விழுவார்கள், காயமடைந்தவர்கள் அதன் மாநிலங்களில் கிடப்பார்கள்.
5 இஸ்ராயேலும் யூதா நாடும் இஸ்ராயேலின் பரிசுத்தருக்கு எதிராய் அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும், அவர்கள் தங்களுடைய கடவுளாகிய சேனைகளின் ஆண்டவரால் கைவிடப்படவில்லை.
6 பபிலோனின் நடுவிலிருந்து ஒடிப்போங்கள், ஒவ்வொருவனும் தன்னுயிரைக் காத்துக் கொள்ளட்டும்! அதன் அக்கிரமத்துக்காக, நீங்கள் அழிந்து போகாதீர்கள்; ஏனெனில் இது ஆண்டவர் பழிவாங்கும் காலம், அவரே அதற்குக் கைம்மாறு தருவார்.
7 பபிலோன் ஆண்டவர் கையில் பொற் கிண்ணம் போலிருந்தது, அது உலகமனைத்துக்கும் போதையூட்டிற்று; மக்களினங்கள் அதன் இரசத்தைப் பருகின, ஆதலால் மக்களினங்கள் வெறி கொண்டன.
8 திடீரெனப் பபிலோன் விழுந்து நொறுங்கிப் போயிற்று, அதற்காக அழுது புலம்புங்கள்; அதன் காயத்திற்குத் தைலம் பூசுங்கள்,ஒரு வேளை அது நலமடையலாம்.
9 பபிலோனுக்கு நாங்கள் நலந்தர முயன்றோம், ஆனால் அது நலமடையவில்லை; அதனைக் கைவிட்டு விட்டு வாருங்கள், ஒவ்வொருவரும் நம் சொந்த நாட்டுக்குப் போவோம்; ஏனெனில் அதன் தீர்ப்பு வானமட்டும் எட்டிற்று, அதன் கண்டனம் மேகம் வரை உயர்ந்து போனது.
10 ஆண்டவர் நமது நீதியை வெளிப்படுத்தினார்; நம் கடவுளாகிய ஆண்டவரின் செயலை, வாருங்கள், சீயோனில் அறிக்கையிடுவோம்.
11 அம்புகளைத் தீட்டுங்கள்! அம்பறாத்தூணிகளை நிரப்புங்கள்! ஆண்டவர் மேதியர் அரசனின் ஊக்கத்தைத் தூண்டினார்; அவருடைய தீர்மானம் பபிலோனை அழிக்க வேண்டுமென்பது; ஏனெனில் இதுவே ஆண்டவருடைய பழி, தம் திருக்கோயிலை முன்னிட்டுத் தீர்த்துக் கொள்ளும் பழி.
12 பபிலோனின் மதில்கள் மேல் கொடியேற்றுங்கள், காவலை மிகுதியாக்குங்கள்; காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்துங்கள், பதுங்கிப் பாய்வோரைத் தயார் படுத்துங்கள்; ஏனெனில் பபிலோன் குடிகளுக்கு எதிராய் ஆண்டவர் சொன்னதெல்லாம் திட்டமிட்டு நிறைவேற்றுவார்.
13 நீர் நிலைகளின் அருகில் செழித்திருந்து, செல்வங்களில் சிறந்திருக்கும் பபிலோனே, உன் முடிவு நாள் வந்து விட்டது, உன் முழு நாச காலம் நெருங்கி விட்டது.
14 'உன்னை எரிப்பூச்சிகள் போல மனிதர் சூழும்படி செய்வோம், உன்பேரில் பெற்ற வெற்றிக்காகப் பாட்டிசைப்பர்' என்று சேனைகளின் ஆண்டவர் தம் திருப்பெயரால் ஆணையிட்டுள்ளார்.
15 அவரே தம் வல்லமையால் மண்ணுலகைப் படைத்தார், தம் ஞானத்தால் உலகை நிலைநாட்டினார்; தம் அறிவினால் வான் வெளியை விரித்தார்.
16 அவர் குரலொலி வானத்தில் வெள்ளப் பெருக்கின் இரைச்சல்போலக் கேட்கின்றது; அவரே பூமியின் எல்லைகளினின்று மேகங்களை எழுப்புகின்றார், மின்னல்களையும் மழையையும் பொழிகின்றார், தம் கிடங்குகளிலிருந்து காற்றைக் கொண்டு வருகிறார்.
17 மனிதர் யாவரும் மூடர்கள், அறிவில்லாதவர்கள்; தட்டான் ஒவ்வொருவனும் தன் சிலைகளால் மானமிழந்தான்; ஏனெனில் அவன் செய்த படிமங்கள் பொய்; அவற்றில் உயிர் இல்லை.
18 அவை பயனற்றவை; நகைப்புக்குரிய வேலைகள்; தண்டனைக் காலத்தில் அவை பாழாய்ப் போகும்;
19 யாக்கோபின் பங்காயிருப்பவர் அப்படிப்பட்டவர் அல்லர், ஏனெனில் அவரே யாவற்றையும் படைத்தவர்; இஸ்ராயேல் கோத்திரம் அவருடைய உரிமைச் சொத்து, சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்.
20 "நீ நமக்குச் சம்மட்டியாயும் போர்க் கருவியாயும் உதவினாய்; உன்னைக் கொண்டு மக்களினங்களை நொறுக்கினோம், உன்னைக் கொண்டு அரசுகளை அழித்தோம்;
21 உன்னைக் கொண்டு குதிரையையும் குதிரை வீரனையும் நொறுக்கினோம்; உன்னைக் கொண்டு தேர்ப் படையையும் தேர்ப்படை வீரனையும் நொறுக்கினோம்;
22 உன்னைக் கொண்டு ஆணையும் பெண்ணையும் நொறுக்கினோம். உன்னைக் கொண்டு முதியோரையும் இளைஞர்களையும் நொறுக்கினோம். உன்னைக் கொண்டு வாலிபனையும் கன்னிப் பெண்ணையும் நொறுக்கினோம்;
23 உன்னைக் கொண்டு இடையனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்கினோம்; உன்னைக் கொண்டு உழவனையும் அவனுடைய எருதுகளையும் நொறுக்கினோம்; உன்னைக் கொண்டு ஆளுநர்களையும் படைத் தலைவர்களையும் நொறுக்கினோம்.
24 பபிலோனையும், கல்தேயாவின் குடிகள் அனைவரையும் சீயோனில் அவர்கள் செய்த தீமைகளுக்கெல்லாம் உங்கள் கண் முன்பாகவே பழிவாங்குவோம், என்கிறார் ஆண்டவர்.
25 நாசம் விளைவிக்கும் மலையே, இதோ, நாம் உனக்கு விரோதமாய் வருகின்றோம்; நீ உலக முழுவதையும் அழிக்கின்றாயே, உனக்கெதிராய் நாம் நம் கைகளை நீட்டுவோம்; உன்னைப் பாறைகளினின்று உருட்டி விடுவோம், உன்னை எரிந்து விட்ட மலையாக்குவோம், என்கிறார் ஆண்டவர்.
26 உன்னிடத்திலிருந்து மூலைக்கல்லுக்கென என்றோ, அடிப்படைக் கல்லென என்றோ கல்லெடுக்க மாட்டார்கள்; நீயோ என்றென்றைக்கும் பாழடைந்தே கிடப்பாய், என்கிறார் ஆண்டவர்.
27 "பூமியின் மேல் கொடியேற்றுங்கள், மக்களினங்கள் நடுவில் எக்காளம் ஊதுங்கள்; அதற்கெதிராய்ப் போர் புரிய மக்களினங்களைத் தயாரியுங்கள், அராரத்து, மென்னி, அஸ்கேனேஸ் என்னும் அரசுகளை அதற்கெதிராய்க் கூப்பிடுங்கள்; அதற்கெதிராய் ஒரு படைத் தலைவனை ஏற்படுத்துங்கள், மயிர் விரித்தோடும் எரிப்பூச்சிகள் போலக் குதிரைகளைக் கொணருங்கள்.
28 அதற்கெதிராய்ப் போர் புரிய மக்களினங்களைத் தயாரியுங்கள், மேதியரின் அரசர்களையும் ஆளுநர்களையும் அதிகாரிகளையும், அவர்கள் ஆட்சிக்குட்பட்ட நாடுகளையும் கூப்பிடுங்கள்;
29 கல்தேயர் நாடு நடுநடுங்கி வேதனையால் துடிதுடிக்கும். ஏனெனில் பபிலோனுக்குக் கெதிராய் ஆண்டவர் திட்டங்கள் தீட்டியிருக்கிறார்; பபிலோனைக் குடியற்ற காடாக்குவதே அவரது நோக்கம்.
30 பபிலோனின் போர்வீரர்கள் போரிடுவதைக் கைவிட்டனர், கோட்டைகளுக்குள்ளேயே தங்கிவிட்டார்கள்; அவர்களுடைய ஆண்மை நசிந்து விட்டது, அவர்கள் அனைவரும் பேடிகள் ஆனார்கள்; அவர்களுடைய உறைவிடங்கள் தீக்கிரையாயின, அதன் கோட்டைத் தாழ்ப்பாள்களெல்லாம் உடைக்கப்பட்டன.
31 அஞ்சற்காரன் பின் அஞ்சற்காரனும், தூதுவன் பின் தூதுவனுமாகப் பபிலோன் மன்னனிடம் ஓடி, 'பட்டணம் ஒரு முனை முதல் மறு முனை வரை பிடிபட்டது;
32 ஆற்றுத் துறைகள் பிடிக்கப்பட்டன, கோட்டைக் கொத்தளங்கள் தீக்கிரையாயின, போர் வீரர்கள் திகில் பிடித்து நிற்கின்றனர்' என்று அரசனுக்கு அறிவிப்பார்கள்.
33 ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: புணையடிக்கும் காலத்தின் களம் போலப் பபிலோன் என்னும் மகள் மிதிபடுவாள்; இன்னும் கொஞ்ச காலம், அதன் அறுவடைக் காலம் வரப்போகிறது.
34 "பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் என்னை விழுங்கிவிட்டான், என்னை நசுக்கி விட்டான்; என்னை வெறுமையான பாத்திரம் போல் ஆக்கி விட்டான், வேதாளம் போல் என்னை விழுங்கி விட்டான்; என் இனிய உணவுகளால் தன் வயிற்றை நிரப்பிக்கொண்டு என்னைக் கொப்புளித்து வெளியே துப்பி விட்டான்.
35 எனக்கும் என் பிள்ளைகளுக்கும் எதிராய்ப் பபிலோன் செய்த அக்கிரமம் பபிலோன் மேலேயே இருக்கட்டும்" என்கிறது சீயோன். "என் இரத்தப்பழி கல்தேய குடிகள் மேல் இருக்கட்டும்" என்கிறது யெருசலேம்.
36 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, நாமே உனக்காக வழக்காடுவோம், உனக்காகப் பழிவாங்குவோம்; அதன் கடல்களை வற்றச் செய்வோம், நீரூற்றுகளை நிறுத்தி விடுவோம்.
37 பபிலோன் பாழாகி மண்மேடாகும், குள்ளநரிகளின் குடியிருப்பாகும்; அங்கே குடியிருப்பார் யாருமிரார், அது திகைப்புக்கும் நகைப்புக்கும் இலக்காகும்.
38 அவர்கள் சிங்கங்களைப் போல் ஒருமிக்கக் கர்ச்சிப்பார்கள்; சிங்கக் குட்டிகள் போலப் பிடரியை உலுக்குவார்கள்.
39 அவர்கள் வெம்மையுற்றவர்களாய் இருக்கும் போது, அவர்களுக்கு நாம் பானம் தருவோம்; அவர்கள் மயங்கி விழும் வரை போதை ஏறும்படி அவர்களைக் குடிக்கச் செய்வோம்; அவர்களோ நீங்காத உறக்கத்தில் விழிக்காமல் உறங்கிடுவர், என்கிறார் ஆண்டவர்.
40 ஆட்டுக் குட்டிகளைப் போலவும் ஆட்டுக் கடாக்களைப் போலவும், வெள்ளாட்டுக் கடாக்களைப் போலவும் அவர்களைக் கொலைக்களத்திற்குக் கொண்டு போவோம்.
41 "பபிலோன் பிடிபட்டது எவ்வாறு? உலகில் மிக்கச் சிறந்த பட்டணம் அகப்பட்டதெவ்வாறு? மக்களினங்களுக்குள் பபிலோன் திகைப்புக்கு இலக்கானதெவ்வாறு?
42 பபிலோன் மீது கடல் கொந்தளித்தது, முழங்கி வரும் அலைகளால் அது மூடப்பட்டது;
43 அதன் பட்டணங்கள் திகைப்புக்கு இலக்காயின, நாடு குடிகளற்றுக் காடாயிற்று; அதில் குடியிருப்பார் யாருமில்லை, அதன் வழியாய்க் கடந்து செல்வார் யாருமில்லை.
44 "பபிலோனில் பேலைத் தண்டிப்போம், அவன் விழுங்கினதை வாயினின்று கக்கச் செய்வோம்; மக்களினங்கள் இனி அவனிடம் ஒருபோதும் போக மாட்டார்கள், பபிலோனின் மதில்கள் விழுந்து விட்டன.
45 எம் மக்களே, அதன் நடுவினின்று வெளியேறுங்கள், ஆண்டவரின் ஆத்திரத்திலிருந்து அவனவன் தன்னுயிரைக் காத்துக் கொள்ளட்டும்.
46 உங்கள் உள்ளம் தளராதிருக்கட்டும், நாட்டில் உலவும் வதந்தியைக் கேட்டு அஞ்சாதீர்கள்; ஓராண்டில் ஒரு வதந்தி உலவும், அடுத்த ஆண்டில் இன்னொரு வதந்தி உலவும்: நாட்டில் அக்கிரமம் மலிந்திருக்கும், ஓர் ஆளுநனுக்கு எதிராய் இன்னொரு ஆளுநன் வருவான்.
47 ஆதலால் இதோ, நாட்கள் வருகின்றன, பபிலோனின் படிமங்களைத் தண்டிக்கப் போகிறோம்; அந்த நாடு முழுவதும் அவமானமடையும், அதன் குடிகள் அனைவரும் கொலையுண்டு வீழ்வர்.
48 வானமும் பூமியும் அவற்றிலடங்கிய யாவும், பபிலோனின் வீழ்ச்சியைக் குறித்து மகிழ்ந்து பாடும்; ஏனெனில் வட நாட்டிலிருந்து அதற்கெதிராய்ப் பாழாக்குவோர் வருவர், என்கிறார் ஆண்டவர்.
49 பூமியெங்கணும் கொல்லப்பட்டவர்கள் பபிலோன் பொருட்டு விழுந்தது போல், இஸ்ராயேலில் கொல்லப்பட்டவர்கள் பொருட்டு பபிலோன் விழ வேண்டும்.
50 வாளுக்குத் தப்பியவர்களே, வாருங்கள், நில்லாதீர்கள்; தொலைவிலேயே ஆண்டவரை நினைவு கூருங்கள், உங்கள் இதயத்தில் யெருசலேம் இடம் பெறட்டும்.
51 எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது; ஏனெனில் நாங்கள் நிந்தையைக் கேட்டோம்; நாணம் எங்கள் முகத்தை மூடிற்று; ஏனெனில் ஆண்டவருடைய கோயிலின் பரிசுத்த இடங்களுக்கு, அந்நியர்கள் வந்து விட்டார்கள்' என்கிறீர்கள்.
52 ஆதலால், அதோ, நாட்கள் வருகின்றன, அந்நாட்டின் படிமங்கள் மேல் தீர்ப்புச் செலுத்துவோம்; அந்நாடெங்கணும் காயம் பட்டோர் கதறுவார்கள், என்கிறார் ஆண்டவர்.
53 வானம் வரையில் பபிலோன் தன்னை உயர்த்திக் கொண்டாலும், தன் வலியரணைப் பலப்படுத்தி உயர்த்தினாலும், பாழாக்குவோரை அதன் மேல் நாம் அனுப்புவோம், என்கிறார் ஆண்டவர்.
54 பபிலோனிலிருந்து கூக்குரல் கேட்கிறது, கல்தேயர் நாட்டில் பேரழிவின் கூக்குரல் உண்டாகிறது.
55 ஏனெனில் ஆண்டவர் பபிலோனை அழிக்கிறார், அதன் பெரும் ஆரவாரத்தை அடக்குகிறார், அவர்களின் அலைகள் பெரும் வெள்ளம் போல் இரையும், அவர்களுடைய கூக்குரல் பேரொலியாய்க் கேட்கும்.
56 ஏனெனில் பாழாக்குவோன் பபிலோன் மீது வந்து விட்டான், அதன் வீரர்கள் பிடிபட்டனர், விற்கள் முறிபட்டன; ஏனெனில் ஆண்டவர் கைம்மாறு கொடுக்கும் கடவுள், அவர் சரிக்குச் சரியாய்ப் பலனளிப்பார்.
57 அதன் தலைவர்களையும் ஞானிகளையும் ஆளுநர்களையும், படைத்தலைவர்களையும் போர் வீரர்களையும் போதையேறச் செய்வோம்; அவர்களோ நீங்காத உறக்கத்தில் விழிக்காமல் உறங்கிடுவர், என்கிறார் சேனைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய அரசர்.
58 "சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: பபிலோனின் மிகப் பரந்த கோட்டைச் சுவர் அடிப்படையிலிருந்தே தரைமட்டமாக்கப்படும்: அதன் உயர்ந்த கதவுகள் நெருப்புக்கு இரையாகும், மக்களின் முயற்சிகள் வீணாகும், மக்களினங்களின் உழைப்புகள் தீக்கிரையாகிப் பாழாகும்."
59 யூதாவின் அரசனான செதோசியாஸ் ஆளுகையின் நான்காம் ஆண்டில், மகாசியாவின் மகனான நேரியாசின் மகன் சராயியாஸ் செதோசியாசோடு பபிலோனுக்குப் போகும் போது, எரெமியாஸ் இறைவாக்கினர் சராயியாசுக்கு ஒரு கட்டளை கொடுத்தார்; இந்த சராயியாஸ் என்பவன் அரசனுடைய பயணத்தில் அவனுக்குத் தங்குவதற்கு இடவசதி செய்பவன்.
60 எரெமியாஸ் பபிலோனுக்கு நேர இருந்த தீமைகள் அனைத்தையும், பபிலோனுக்கு எதிரான இறைவாக்குகளையும் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார்.
61 எரெமியாஸ் சராயியாசை நோக்கி, "நீ பபிலோனுக்குப் போய்ச் சேர்ந்த பிறகு, இவ்வார்த்தைகளையெல்லாம் வாசி;
62 பின் ஆண்டவரை நோக்கி, 'ஆண்டவரே, இந்த இடத்திற்கு விரோதமாய் நீர் பேசினீர்; இதனைப் பாழாக்கப் போவதாகவும், மனிதனோ மிருகமோ வாழ முடியாத அளவுக்கு இதனை என்றென்றைக்கும் பாலை வெளியாய் ஆக்கப் போவதாகவும் நீர் சொல்லியிருக்கிறீர்' என்று சொல்.
63 இந்த நூலைப் படித்து முடித்த பின்னர், இதில் ஒரு கல்லைக் கட்டி இதனை எப்பிராத்தின் நடுவில் எறிந்து விட்டு:
64 'நான் வரச் செய்யப் போவதாகச் சொன்ன தீமையினின்று எழுந்து மீளாதபடி பபிலோனும் இவ்வாறே மூழ்கிப் போவதாக' என்று சொல்" என்றார். எரெமியாசின் வார்த்தை இத்துடன் முற்றிற்று.
அதிகாரம் 52
1 செதேசியாஸ் ஆளத் தொடங்கிய போது அவனுக்கு வயது இருபத்தொன்று; அவன் யெருசலேமில் பதினோராண்டுகள் ஆட்சி செய்தான்; அவன் தாயின் பெயர் அமிதாள்; இவள் இலப்னா ஊரானாகிய எரெமியாசின் மகள்.
2 யோவாக்கீம் செய்தவாறெல்லாம் அவனும் ஆண்டவர் முன்னிலையில் தீமை செய்தான்;
3 ஆண்டவர் அவர்களைத் தம் முன்னிலையிலிருந்து தள்ளி விடும் அளவுக்கு யெருசலேமின் மேலும் யூதாவின் மேலும் அவருக்குக் கோபம் மூண்டது; செதேசியாஸ் மன்னனோ பபிலோனிய அரசனுக்கு எதிராகக் கலகம் செய்தான்.
4 நபுக்கோதனசாருடைய ஆளுகையின் ஒன்பதாம் ஆண்டு, பத்தாம் மாதத்தில் பத்தாம் நாள், பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசார் தன் எல்லாப் படைகளோடும் யெருசலேமுக்கு எதிராய் வந்து அதனை முற்றுகையிட்டான்; அதற்கு விரோதமாய் அதனைச் சுற்றிலும் கொத்தளங்களைக் கட்டினான்.
5 செதேசியாசின் பதினோராமாண்டு வரையில் பட்டணம் முற்றுகையிடப்பட்டிருந்தது.
6 நான்காம் மாதத்தின் ஒன்பதாம் நாள் பட்டணத்தில் கடும் பஞ்சம் உண்டாயிற்று; நகர மக்களுக்கு உணவு இல்லாமற்போயிற்று.
7 பட்டணத்தின் கோட்டைச் சுவர் ஒருபுறத்தில் இடிக்கப்பட்டது; போர்வீரர்கள் அனைவரும் அரசனுடைய தோட்டத்திற்குப் போகும் வழியாய் இரண்டு சுவர்களுக்கும் இடையில் இருக்கும் கதவைத் திறந்து கொண்டு, இரவோடு இரவாய்ப் பட்டணத்தை விட்டு வெளியேறிப் பாலை நிலத்தை நோக்கி. ஓடினார்கள்; அப்பொழுது கல்தேயர் நகரைச் சுற்றி முற்றுகை யிட்டிருந்தனர்.
8 ஆனால் அதைக் கண்ட கல்தேயருடைய படை அரசனை விரட்டிக் கொண்டு ஓடிற்று; யெரிக்கோ சமவெளியில் செதேசியாசைப் பிடித்தார்கள்; அவனுடைய படைகளெல்லாம் அவனை விட்டு ஓடிப்போயின;
9 அவர்கள் அரசனைப் பிடித்து, ஏமாத்து நாட்டின் இரபிளாத்தா என்னும் ஊரில் பாளைய மிறங்கியிருந்த பபிலோனிய மன்னனிடம் அழைத்து வந்தார்கள்; அரசன் அவனுக்கு விரோதமாய்த் தீர்ப்புச் சொன்னான்.
10 பபிலோனிய அரசன் செதேசியாவின் புதல்வர்களை அவன் கண் முன்னாலேயே கொலை செய்தான்; இன்றும் யூதாவின் தலைவர்கள் அனைவரையும் இரபிளாத்தாவில் கொல்லுவித்தான்;
11 பபிலோனிய அரசன் செதேசியாசின் கண்களைப் பிடுங்கி, அவனை விலங்கிட்டு, அவனைப் பபிலோனுக்குக் கொண்டு போய் அங்கே அவன் சாகும் வரையில் சிறைக் கூடத்தில் அடைத்து வைத்தான்.
12 பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரின் பத்தொன்பதாம் ஆண்டின் ஐந்தாம் மாதத்தில் பத்தாம் நாள், பபிலோனிய அரசனான நபுக்கோதனசாரின் படைத்தலைவன் நபுஜார்தான் யெருசலேமுக்குள் நுழைந்தான்;
13 நுழைந்து ஆண்டவரின் கோயிலையும் அரசனது அரண்மனைனையும் யெருசலேமின் வீடுகள் அனைத்தையும் கொளுத்தி விட்டான்; பெரிய வீடுகளையெல்லாம் தீக்கிரையாக்கினான்.
14 படைத்தலைவனோடிருந்த கல்தேய வீரர்கள் அனைவரும் யெருசலேமைச் சுற்றிலுமிருந்த மதில்களை முற்றிலும் தகர்த்து விட்டனர்.
15 சேனைத் தலைவனாகிய நபுஜார்தான் மக்களுள் ஏழைகளாயிருந்த சிலரையும், பட்டணத்தில் இருந்த மற்றப் பொது மக்களையும், தப்பியோடிப் பபிலோனிய மன்னனிடம் சரணடைந்தவர்களையும், மீதியாயிருந்த தொழிலாளிகளையும் பபிலோனுக்குக் கொண்டு போனான்.
16 சேனைத் தலைவனாகிய நபுஜார்தான் நாட்டின் ஏழைகளுள் சிலரையும், திராட்சைப் பயிரிடுவோரையும் விவசாயிகளையும் யூதாவிலேயே விட்டுச் சென்றான்.
17 ஆண்டவரின் கோயிலில் இருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், ஆண்டவரின் கோயிலில் இருந்த வெண்கலக் கடல் தொட்டியையும் உடைத்து, அவற்றின் வெண்கலத்தையெல்லாம் பபிலோனுக்குக் கொண்டு போய்விட்டான்.
18 சட்டிகளையும் கரண்டிகளையும் திரிவெட்டிகளையும், குப்பிகளையும் உரல்களையும், திருப்பணிக்குப் பயன்பட்ட எல்லாப் பித்தளைப் பாத்திரங்களையும் கொண்டு போனார்கள்.
19 சேனைத்தலைவன் குடங்களையும் தூபக்கலசங்களையும் தட்டுக்களையும் சாடிகளையும் விளக்குத் தண்டுகளையும், குந்தாணிகளையும் தாம்பாளங்களையும், தங்கப் பாத்திரங்கள் எல்லாவற்றையும், வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் கொண்டுபோனான்.
20 சாலமோன் அரசன் ஆண்டவருடைய கோயிலுக்கென்று செய்திருந்த தூண்கள் இரண்டு, கடல் தொட்டி ஒன்று, ஆதாரங்களின் கீழ் நிற்க வைத்திருந்த வெண்கல எருதுகள் பன்னிரண்டு ஆகியவற்றையும் கொண்டு போனான். இவற்றின் வெண்கலத்துக்கு நிறை இவ்வளவு என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது.
21 தூண்களில் ஒவ்வொன்றும் பதினெட்டு முழம் உயரமுள்ளது; பன்னிரண்டு முழமுள்ள நூல் அதனைச் சுற்றிக் கொண்டிருந்தது; அதன் கனம் நான்கு விரற்கடை; உள்ளே குழாயாய் இருந்தது.
22 இரண்டு தூண்களின் உச்சியிலும் ஐந்து முழ உயரமான வெண்கலக் கும்பம் இருந்தது; அதனுச்சியைச் சுற்றிலும் வலை போலப் பின்னலும் மாதுளம் பழச் சித்திரங்களும் செதுக்கப் பட்டிருந்தன; எல்லாம் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. இரண்டாவது தூணிலும் அவ்வாறே மாதுளம்பழம் முதலியவை செதுக்கப்பட்டிருந்தன.
23 தொண்ணுற்றாறு மாதுளங்கனிகள் தொங்கின; பின்னலைப் போலச் செதுக்கியிருந்ததைச் சுற்றி மொத்தம் நூறு மாதுளங்கனிகள் இருந்தன.
24 சேனைத்தலைவன், முதல் அர்ச்சகராகிய சராயியாசையும், இரண்டாம் அர்ச்சகராகிய சொப்போனியாசையும், தலைவாயில் காவலர் மூவரையும் பிடித்துக் கொண்டான்.
25 பட்டணத்தில் போர்வீரருக்குத் தலைவனான ஓர் அண்ணகனையும், பட்டணத்திலிருந்து அரசன் முன்னிலையில் தொண்டு புரியும் ஏழு பேரையும், புதியவர்களைச் சேனையில் சேர்த்துப் பயிற்சி தரும் சேனைத்தலைவனின் செயலாளனையும், நாட்டின் மக்களுள் பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேர்களையும் பிடித்துக் கொண்டான்.
26 படைத்தலைவனாகிய நபுஜார்தான் அவர்களைப் பிடித்து, அரபிளாத்தாவிலிருந்த பபிலோனிய அரசனிடம் கூட்டிச் சென்றான்.
27 பபிலோனிய அரசன் ஏமாத்து நாட்டில் இரபிளாத்தா என்னும் ஊரில் அவர்களை வதைத்துக் கொல்லுவித்தான்.
28 நபுக்கோதனசார் தன் ஏழாம் ஆண்டில் சிறைபிடித்துச் சென்ற மக்கட் தொகை மூவாயிரத்து இருபத்து மூன்று;
29 நபுக்கோதனசார் தன் பதினெட்டாம் ஆண்டில் யெருசலேமிலிருந்து கொண்டு போன மக்களின் எண்ணிக்கை எண்ணுற்று முப்பத்திரண்டு.
30 நபுக்கோதனசாரின் இருபத்து மூன்றாம் ஆண்டில் சேனைத்தலைவன் நபுஜார்தான் கூட்டிப்போன மக்களின் எண்ணிக்கை எழுநூற்று நாற்பத்தைந்து; ஆக மொத்தம் நாலாயிரத்து அறுநூறு பேர் கொண்டு போகப்பட்டார்கள்.
31 யூதாவின் அரசனாகிய யோவாக்கீம் பிடிப்பட்டுக் கொண்டுபோகப்பட்ட முப்பத்தேழாம் ஆண்டில், பபிலோனிய அரசனான எவில்- மேரோதாக்கு தன் ஆளுகையின் முதல் ஆண்டிலேயே பன்னிரண்டாம் மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் யூதாவின் அரசனாகிய யோவாக்கீமை கண்ணியப்படுத்திச் சிறைக் கூடத்தினின்று விடுவித்தான்.
32 அவனோடு மிகுந்த அன்புடன் அளவளாவினான்; மேலும் பபிலோனில் தனக்குக் கீழ்ப்பட்ட அரசர்களின் அரியணைக்கு மேல் அவனுடைய அரியணையை உயர்த்தித் தனக்கடுத்த இடத்தைத் தந்தான்.
33 அவனுடைய சிறைக்கூடத்து ஆடைகளை மாற்றுவித்து, அவன் தன் வாழ்நாளெல்லாம் எப்போதும் தன்னோடு உண்ணும்படி செய்தான்.
34 அவனுடைய அன்றாடச் செலவுக்கு வேண்டியது, பபிலோனிய அரசனின் கட்டளைப்படி நாடோறும், அவனுடைய வாழ்நாள் முழுவதும், சாகுமட்டும் அவனுக்குக் கொடுக்கப்பட்டு வந்தது.