தண்டிக்காமல் உலகத்தைத் திருத்த முடியாதா என்றால் இவ்வுலக மனிதர்கள் அப்படி ஓர் அன்பின் திருத்தத்தை ஏற்றுக் கொள்வதாக எந்த அடையாளமும் காணப்பட வில்லை.
கடவுளே உலகிற்கு வந்து, சிலுவையில் அளவில்லாமல் வேதனைப்பட்டு மானிடர்களை இரட்சிப்பதற்காகத் தன் உயிரைக் கொடுத்ததைக் கூட உலகம் மதிக்க வில்லையே!
மனிதரின் நல்வாழ்விற்காகக் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு மனச்சாட்சியிலும் எழுதப்பட்டுள்ள பத்துக் கற்பனைகளை யார் ஏற்று அனுசரிக்கிறார்கள்?
நாம் எல்லோரும் நம் தந்தையாகிய ஆண்டவரை நிந்தித்துப் பழிக்கும் பாவிகளாயில்லையா? தலைவர்கள் பலர் சாத்தானைப் பின்செல்கிறார்கள்.
இரட்சண்யப் பேழையாகிய சத்தியத் திருச்சபை முதலாய் இன்று சாத்தானின் மாய்கைக்குட்பட்டு, பாவ உலகத்தைத் திருத்துவதற்குப் பதிலாக உலகத்தோடு ஒத்துப் போகிறதே!
ஆகவே மனிதன் திருந்தும் வழியைக் காணோம். உலகைக் கடவுள் இப்படியே விட்டால், மனிதனின் பாவம் மேலும் பெருகி, அவன் அதிகப் பாவியாகி, அவனுடைய நித்திய நரக தண்டனையின் கொடூரம்தான் அதிகரிக்கும்.
மேலும் ஆண்டவர் இனி தலையிடாவிட்டால் காப்பாற்றப்படக் கூடிய ஆன்மாக்களும் கெட்டுப் போவார்கள்.
வேறு மார்க்கம் இல்லாதபோதுதான் கடவுள் தண்டித்தாவது திருத்தும்படி சுத்திகரத் தண்டனையை அனுப்புவார்.