பாத்திமா காட்சிகள் - அன்னையின் முதல் காட்சி - தொடர்ச்சி...

ஜஸிந்தா வீட்டில் இவ்வளவு நடந்திருப்பது லூஸியாவுக்கு ஒன்றும் தெரியாது. காட்சி கண்ட விஷயம் இரகசியமாகவே உள்ளது என்ற நினைப்பில் நிம்மதியாகக் கண்விழித்தாள் அவள். எந்நேரமும் ஒளி நிரம்பிய தேவ அன்னையின் அன்பு முகம்தான் அவள் கண்முன் நின்றது. 

மிகவும் மகிழ்ச்சியோடு அவள் இருந்தாள். ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போகும் நேரம் வரை வீட்டருகில் உள்ள அத்தி மரத்தடியில் விளையாடலாம் என்று வந்தவளை அவள் அக்காள் மரியா ஒரு கேள்வி கேட்டுத் திடுக்கிட வைத்தாள்.

"லூஸியா! நீ கோவா தா ஈரியாவில் மாதாவைக் கண்டாயாமே?''

லூஸியாவால் பதிலே சொல்ல முடியவில்லை! வேதனை கலந்த ஆச்சரியத்துடன் வெறிச்சென்று பார்த்தாள்.

மரியா விடவில்லை. "உண்மையாகத்தானா?'' என்று மீண்டும் கேள்வியை நெருக்கிக் கேட்டாள்.

"யார் சொன்னது?" என்றாள் லூஸியா திகைப்போடு. 

"ஒலிம்பியா அத்தையிடம் ஜஸிந்தா சொன்னாளாம்.''

லூஸியாவுக்கு அழுகை வந்தது. ''யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவளிடம் கூறியிருந்தேனே" என்றாள்.

"ஏன் சொல்லக் கூடாது?''

"அது மாதா தானா என்று எனக்குத் தெரியாது. ஒரு மிக அழகான பெண்.''

''அந்தப் பெண் உன்னிடம் என்ன சொன்னாள்?''

"தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் அங்கு செல்ல வேண்டு மாம். அதன்பின் தான் யாரென்றும், தான் என்ன விரும்புகிறார்கள் என்றும் கூறுவார்களாம்.''

'' அவள் யாரென்று நீ கேட்கவில்லையா?'' 

''அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்டேன்.

“மோட்சத்திலிருந்து வருகிறேன்” என்றார்கள். அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை .''

மேற்கண்ட உரையாடல் மரியாவே கூறியது. அவள் லூஸியாவைப் பகைக்கவில்லை. இப்படி ஒரு காட்சி கண்டதாக லூஸியா கூறுவதை அவள் தாய் மரிய ரோஸா நம்பாதது போல் மரியாவும் நம்பவில்லை. எனவே லூஸியா கூறிய யாவற்றையும் உடனே வீட்டில் பெற்றோரிடம் சென்று அறிவித்தாள்.

லூஸியா உடனே வீட்டிற்கு அழைக்கப்பட்டாள். அவள் தந்தை அந்தோனி சாந்தோஸ் ஒரே வார்த்தையில் "பெண்கள் கதை'' என்று கூறி அலட்சியமாய் ஒதுக்கி விட்டார். ஆனால் மரியாரோஸா மிகவும் வேதனைப்பட்டாள். அவளுக்கு ஒரே கோபம். லூஸியாவை நன்றாகத் திட்டினாள்.

''என் வயோதிப காலத்துக்கு இது வேண்டிய பரிசுதான். என் பிள்ளைகள் எப்போதும் உண்மையே பேசும்படி வளர்த்ததாக நான் நினைத்தேன். ஆனால் இப்போ இப்படி ஒரு கட்டுக்கதை'' என்று துயரத்தோடு கூறினாள்.

லூஸியாவின் நிலை மிகவும் பரிதாபமாயிருந்தது. எவ்வளவு துரிதத்தில் இந்த உலகம் அவளுக்கு சகிக்க முடியாத கசப்பாக மாறி விட்டது! பட்டியிலிருந்து ஆடுகளைத் திறந்து விட்டுக்கொண் டிருக்கும் போது பிரான்சிஸ் அங்கு வந்தான். அவன் கண்கள் நீரால் நிறைந்திருந்தன.

"அழாதே பிரான்சிஸ். அந்த அம்மா சொன்னதை யாரிடமும் நாம் சொல்லக் கூடாது' என்றாள் லூஸியா

"நான் சொல்லி விட்டேனே'' என்று பழியை ஜஸிந்தா மேல் போடாமல் தன் மேலேயே போட்டுக் கொண்டான் பிரான்சிஸ்.

''என்ன சொன்னாய்?"

"அந்த அம்மா நம்மை மோட்சத்திற்குக் கொண்டு போவதாகச் சொன்னேன். அதைப் பற்றி அவர்கள் என்னிடம் கேட்ட போது, என்னால் பொய் சொல்லக் கூடவில்லை. மன்னித்துக் கொள் லூஸியா. இனி யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டேன்.''

தங்கள் இரகசியம் இவ்வாறு வெளியாகி விட்டது பற்றி மூன்று குழந்தைகளுமே மிகவும் துயரமடைந்திருந்தார்கள். அதிகமாக அவர்களால் பேசவும் முடியவில்லை. ஜஸிந்தா வெகு நேரம் அப்படியே அழுகிறாப்போல் ஒரு கல்லில் போய் உட்கார்ந்து விட்டாள்.

இதைப் பார்த்த லூஸியா, இறுதியில், 'ஜஸிந்தா, நீ போய் விளையாடு" என்றாள். ''இன்றைக்கு விளையாட எனக்கு மனமில்லை." ''ஏன்?''

''பாவிகளுக்காகப் பரித்தியாகம் செய்து ஜெபமாலை சொல்ல வேண்டும் என்று அந்த அம்மா சொன்னார்கள்தானே? அதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இனிமேல் நாம் ஜெபமாலை சொல்லும் போது மந்திரங்களை முழுவதும் சொல்ல வேண்டும்.''

''நீ எப்படி பரித்தியாகங்கள் செய்யப் போகிறாய்?" இதைக் கேட்டுக்கொண்டிருந்த பிரான்சிஸ்,

"நம் பகல் சாப்பாட்டை நம் ஆடுகளுக்குக் கொடுத்து விடுவோம். நாம் சாப்பிடாமலிருந்து பரித்தியாகம் செய்வோம்" என்றான்.

அன்றிலிருந்து பிரான்சிஸ் ஆடுகள் தண்ணீர் குடித்த ஒரு குட்டையிலுள்ள தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தான். அதிலே பெண்களும் துணி துவைப்பார்கள். ஏறக்குறைய அரை மைல் தொலைவிலிருந்து அல்யுஸ்திரலுக்குப் பிச்சையெடுக்க வந்த சில பிள்ளைகளுக்குத் தங்கள் மதிய உணவைக் கொடுத்தார்கள். இது ஜஸிந்தாவின் ஏற்பாடு. "நம் பகல் சாப்பாட்டை இந்தப் பிள்ளைகளுக்கு பாவிகள் மனந்திரும்பும்படியாகக் கொடுப்போம்" என்றாள் அவள்.

மதியம் திரும்பியதும் குழந்தைகளுக்குக் கடுமையாகப் பசிக்க ஆரம்பித்து விடும். பிரான்சிஸ் அங்குள்ள அஸின் ஹேரா மரக் காய்களைத் தின்ன ஆரம்பித்தான். அவை சற்று ருசியாயிருந்தன. ருசியுள்ள காயைத் தின்பது பரித்தியாகமாகாது என்று ஜஸிந்தா வேறு ஒரு வகை மரக் காய்களைத் தின்றாள். அது கசப்பாயிருக்கும்!

தினமும் இப்படிக் கசந்த காய்களைக் கடித்துத் தின்று வந்தாள் ஜஸிந்தா. "இதைத் தின்னாதே ஜஸிந்தா . இந்தக் காய் ரொம்பக் கசப்பாயிருக்கிறது'' என்றாள் லூஸியா.

"கசப்புக்காகத்தான் நான் இதைத் தின்கிறேன். பாவிகள் மனந்திரும்ப " என்றாள் ஜஸிந்தா .

இம் மூவரும் ஆடு மேய்க்க வரும் பாதையில் ஏழைப் பிள்ளைகள் காத்து நிற்க ஆரம்பித்தார்கள். இவர்களும் மகிழ்ச்சியோடு தங்கள் உணவை அவர்களிடம் கொடுத்து விட்டு, காட்டில் அகப்பட்தைக் கடித்துப் பசியாற்றிக் கொள்வார்கள். சில காய்கள், சில வேர்கள், காளான், சில வகைப் பூக்கள் இப்படி எதையாவது, பெயர் தெரியாத பொருள்களைக் கூட தின்று வந்ததாக லூஸியா கூறுகிறாள்.

பாவிகள் மனந்திரும்புமாறு கடின தவம் செய்ய வேண்டும் என்ற ஆவல் மூன்று குழந்தைகளையும் கௌவிக் கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும். அவ்வருடம் கோடை காலத்தில் ஒரு நாள், லூஸியாவின் பெற்றோர் குத்தகைக்கு எடுத்திருந்த ஒரு வயலை நோக்கி மூவரும் சென்றார்கள். வழியில் தங்கள் மதிய உணவுப் பொட்டலங்களை வழக்கம்போல் ஏழைச் சிறுவர்க்குக் கொடுத்து விட்டு நடந்தார்கள். 

வயலை அடைந்த போது, வெயிலாலும், நடையாலும் மிகவும் களைத்து விட்டார்கள். கடும்பசி ஒரு பக்கம், குடிப்பதற்கு அங்கு தண்ணீர் கூட அகப்படவில்லை. தண்ணீர் இல்லா விட்டால் பரவாயில்லை. நல்லதுதான். நம் தாகத்தைப் பாவிகளுக்காக ஒப்புக்கொடுப்போம் என்று மூவரும் பேசிக் கொண்டனர். ஆனால் நடுப்பகல் தாண்டவும், வெப்பம் தாங்க முடியாமலும், தாகம் சகிக்க முடியாமலும் இருந்தது. 

கொஞ்சம் தொலைவில் தெரிந்த ஒரு வீட்டுக்குச் சென்று தாகத்தையாவது தணிக்கலாம் என்று லூஸியா ஆலோசனை கூற மூவரும் புறப்பட்டார்கள். அந்த வீட்டுப் பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்கள். அவள் இரக்கப்பட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீரும், கொஞ்சம் ரொட்டியும் கொடுத்தாள். ரொட்டியை ஆளுக்குக் கொஞ்சமாகப் பகிர்ந்து கொண்டு தண்ணீரை அந்த வயலுக்குக் கொண்டு வந்தார்கள். இவ்வளவு தாகமாயிருந்தும் யாரும் தண்ணீரை இன்னும் குடிக்க வில்லை.

வயலுக்கு வந்து சேர்ந்ததும் லூஸியா தண்ணீரை பிரான்சிஸிடம் கொடுத்து, "குடி" என்றாள்.

''எனக்கு வேண்டாம்" என்றான் பிரான்சிஸ். 

"ஏன்?" 

''பாவிகள் மனந்திரும்புவதற்காக கஷ்டப்பட விரும்புகிறேன்.'' 

"நீ குடி ஜஸிந்தா .'' 

"நானும் பாவிகளுக்காக பரித்தியாகம் செய்ய விரும்புகிறேன்."

இதன்பின் நடந்ததை லூஸியா கூறுகிறபடி கேட்போம்: 

''நான் அந்தத் தண்ணீரை ஆடுகளுக்காக ஒரு பாறைக் குழியில் ஊற்றினேன். பின்னர் பாத்திரத்தை அந்தப் பெண்ணிடம் திருப்பிக் கொடுக்கச் சென்றோம். ஒவ்வொரு விநாடியும் உஷ்ணம் ஏறிக்கொண்டேயிருந்தது. பக்கத்தில் இருந்த ஒரு குட்டையிலுள்ள தவளைகளும், துள்ளுத் தட்டான்களும், வெட்டுக்கிளிகளும் மிகச் சத்தமாக சகிக்க முடியாதபடி இரைச்சலிட்டுக் கத்திக் கொண்டிருந்தன. 

பசியாலும் தாகத்தாலும் வாடிச் சோர்ந்திருந்த ஜஸிந்தா தன் இயல்பான குணத்துடன், "இந்த வெட்டுக்கிளிகளையும், தவளைகளையும் பேசாமலிருக்கச் சொல்லுங்கள். எனக்குப் பெரிய தலை வேதனையாக இருக்கிறது" என்றாள்.

உடனே பிரான்சிஸ், "நீ இதைப் பாவிகளுக்காக சகித்துக் கொள்ள விரும்பவில்லையா?" என்றான்.

ஜஸிந்தா தன் தலையைத் தன் இரு கரங்களாலும் அமுக்கிப் பிடித்தபடி, ''விரும்புகிறேன். அவைகள் பாடட்டும்” என்றாள்.''

நம் அன்னையின் முதல் விண்ணப்பத்தை இக்குழந்தைகள் எவ்வளவு தூரம் ஏற்றுக் கடைப்பிடித்தார்கள் என்று இதிலிருந்து நாம் உணர முடியும். பாவிகள் மனந்திரும்பும்படி பரிகாரம் செய்வது மிகவும் அவசியம் என்பதை அம்முதற் காட்சியே இவ்வளவு ஆழமாக அவர்களுக்கு உணர்த்தியிருந்தது.

* * * * * * *

லூஸியாவின் தாய் மரிய ரோஸாவின் கவலை அதிகரித்தது. அயலகத்தாரின் புறணிப் பேச்சுக்கள் அவளைத் தலைகுனிய வைத்தன. ''இந்தப் பிள்ளை மட்டும் என் மகளாயிருந்தால், நான் என்ன செய்திருப்பேன் தெரியுமா?'' என்று ஊர்ப் பெண்கள் பேசப் பேச, மரிய ரோஸா தன் குடும்ப கெளரவம் தரைமட்டமாவதாக உணர்ந்தாள். 

லூஸியா காட்சி கண்டதாகச் சொல்லக் கூடாது; இது வரை அவள் கூறியதெல்லாம் அவள் எடுத்துக் கட்டிக் கூறிய பொய் என்று அவள் வாயாலேயே ஒப்புக்கொள்ள வைத்து விட வேண்டும் என்ற முயற்சியில் மரிய ரோஸா ஈடுபட்டாள். தன் மகளைத் திட்டி எச்சரித்துப் பார்த்தாள். "இதெல்லாம் பொய் என்று நீ விட்டு விடாதிருந்தால், உன்னை இருட்டு அறைக்குள் அடைத்துப் போட்டு விடுவேன். உன்னை வெளியே விடவே மாட்டேன்" என்று பயமுறுத்தினாள். 

சில வேளைகளில் அன்பு காட்டி, அவளை வசப்படுத்தலாமென்று லூஸியாவுடன் இனிமையாகப் பேசி அரவணைத்துச் சொல்லிப் பார்த்தாள். அது பயனில்லை என்று கண்டு அவள் மேல் சீறி விழுந்தாள். அவளை துடைப்பத்தால் அடித்தாள். லூஸியா தான் கண்டது உண்மையே என்று தன் இயல்புப்படியே கூறி வந்தாள். 

''நீங்கள் அதிகம் துன்பப்படுவீர்கள்'' என்ற அன்னையின் வாக்கு அவள் நினைவில் பதிந்திருந்தது. அவள் தாய் மட்டுமல்ல, அவளுடைய சகோதரிகளும் அவளை மிக ஏளனமாகப் பேசி ஒதுக்கி வந்தனர். ஊரிலுள்ள பெண்களும் அவள் வயதுச் சிறுவரும் கூட, ''லூஸியா, மாதா கூரை மேல் நடந்து வரப் போகிறார்களா?" என்று கேலி செய்ய ஆரம்பித்தனர்.

ஊர் முழுவதும் காட்சி பற்றிய பேச்சாயிருந்ததால், பாத்திமா பங்குக் குரு மரிய ரோஸாவுக்கு ஆளனுப்பினார். லூஸியாவையும் கூட்டி வரும்படி கூறினார். பங்குக் குருவிடமாவது லூஸியா ஒப்புக் கொண்டு விட மாட்டாளா காட்சி எதுவும் தான் காணவில்லை என்று, என விரும்பிய மரிய ரோஸா மகளை அழைத்துக் கொண்டு பங்குத் தந்தையிடம் சென்றாள்.

பங்குக் குரு லூஸியாவிடம் பல கேள்விகள் கேட்டார். கேட்ட கேள்விகளுக்கு லூஸியா சுருக்கமாக விடையளித்தாள். மொத்தத்தில் அவளைப் பற்றி பங்குக் குருவுக்கு அவ்வளவு நல்ல எண்ணம் ஏற்படவில்லை. முடிவில் கோவா தா ஈரியாவுக்கு காட்சியில் கேட்டுக்கொள்ளப்பட்டபடி லூஸியாவை அனுப்பும் படியும், மீண்டும் காட்சி தோன்றினால் அவளைத் தம்மிடம் அழைத்துக் கொண்டு வரும்படியும் மரிய ரோஸாவிடம் கூறி அனுப்பி விட்டார் பங்குக் குரு.

ஒருநாள் வெளியிலிருந்து இரண்டு குருக்கள் லூஸியாவுடன் அன்பாகப் பேசினார்கள். அவள் பரிசுத்த பாப்புவுக்காக வேண்டிக் கொள்ளும்படிக் கூறினார்கள். "பாப்பு என்றால் யார்?' என்று கேட்டாள் லூஸியா. அந்தக் குருக்கள் விளக்கிக் கூறினார்கள். 

அன்று முதல் இக்குழந்தைகள் தங்கள் ஜெபமாலை முடிந்தவுடன் பாப்புவுக்காக மூன்று அருள்நிறை மந்திரங்களைச் சேர்த்துச் சொல்லி வந்தார்கள். எங்கோ தொலைவிலிருக்கும் திருச்சபைத் தலைவரான பாப்பானவருக்காக வேண்டிக்கொள்வதில் அவர்கள் மகிழ்ச்சியும், ஒருவித பெருமையும் அடைந்தனர்.

பிரான்சிஸ் துன்பத்தைச் சகித்துக் கொள்வது மட்டுமல்ல, அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளவும் பழகி விட்டான். "நாம் அதிகம் துன்பப்பட நேரிடும் என்று நம் அம்மா சொன்னார்கள் தானே? பரவாயில்லை. அவர்கள் எவ்வளவு விரும்புவார்களோ, அவ்வளவுக்கு நான் துன்பப்படுவேன்'' என்று சொல்லி துன்பங்களை நிறைவுடன் ஏற்று வந்தான்.

வீட்டிலும் ஊரிலும் எங்கும் எல்லா இடத்திலிருந்தும் பெருகி வந்த துன்பத்தை நினைத்து லூஸியாவுக்குக் கண்ணீர் பெருகியது. பிரான்சிஸ் அவளைப் பார்த்து : ''பரவாயில்லை, லூஸியா . நாம் அதிகம் துன்பப்பட வேண்டும் என்று அம்மா சொல்லவில்லையா?" என்று கூறி அவளைத் திடப்படுத்தினான்.

இப்போதெல்லாம் பிரான்சிஸ் தனிமையையும் மவுனத்தையும் விரும்பினான். ஒருநாள் அவர்கள் மூவரும் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்ட பின், பிரான்சிஸ் மற்ற இருவரையும் விட்டு விட்டு ஒரு உயரமான பாறையின் உச்சியில் ஏறிப்போய் அங்கு நின்று கொண்டு கீழே பார்த்து,

"நீங்கள் இங்கே வர முடியாது. என்னை இங்கே தனியாக விட்டு விடுங்கள்'' என்று கூறினான்.

லூஸியாவும் ஜஸிந்தாவும் அவனை அதிகம் கவனிக்கவில்லை. அவர்கள் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்தி விளையாட ஆரம்பித்தனர். அப்படியே பிரான்சிஸை மறந்தும் விட்டனர். பசியெடுத்த பிறகுதான் அவனைப் பற்றிய நினைவு வந்தது. அவனைத் தேடினால், அவன் அந்தப் பாறையின் மீது அசையாமல் படுத்திருந்தான்!

"பிரான்சிஸ்! பிரான்சிஸ்! கீழே வந்து சாப்பிட விருப்ப மில்லையா?"

"இல்லை . நீங்கள் சாப்பிடுங்கள்.'' 

"ஜெபமாலை சொல்ல வரவில்லையா?" 

"ஜெபமாலை பிந்தி சொல்வோம்.'' 

மீண்டும் லூஸியா அவனைக் கீழே வரும்படி கூப்பிட்டாள். 

"நீங்கள் இங்கே வந்து ஜெபம் செய்யுங்கள்" என்றான் அவன்.

அவர்கள் எங்கே வரப் போகிறார்கள் என்று எண்ணி விளையாட்டாகத்தான் அப்படிச் சொன்னான்.

ஆனால் இரு சிறுமியரும் மிகவும் கஷ்டப்பட்டு, கை விரல்களும், முழங்கால்களும் பாறையில் உராய, மெதுவாக ஏறி, பாறை உச்சியை அடைந்து விட்டனர்.

"இங்கே இவ்வளவு நேரமாக என்ன செய்து கொண்டிருக் கிறாய்?'' என்று கேட்டனர்.

''நான் சர்வேசுரனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். எத்தனை பாவங்களால் அவர் எவ்வளவு மனம் நொந்து போயிருக்கிறார்! அவருக்கு என்னால் மகிழ்ச்சியூட்ட முடியுமானால் எவ்வளவு நல்லது!'' என்று அமைதியோடு அவன் பதில் கூறினான்.

சில நாட்களில் அவர்கள் குழந்தைகளுக்குரிய உற்சாகத்தால் தூண்டப்பட்டு, பழைய பாடல்களைப் பாடத் தொடங்கி விடுவார்கள். ஒரு நாள் ஒரு பாட்டு ரொம்பப் பிடித்திருந்ததால், அதை மீண்டும் பாடினார்கள். 

பாடி முடியவும் பிரான்சிஸ் ஏதோ ஞாபகப்படுத்திக் கொண்டவன் போல: "இந்தப் பாட்டை நாம் இனி பாட வேண்டாம். நாம் சம்மனசைப் பார்த்தோம். அம்மாவையும் பார்த்தோமல்லவா? அதனால் பாட்டுப் பாடுவது எனக்கு விருப்பமில்லை" என்று சொல்லி விட்டான்.

மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.