அதிகாரம் 01
1 தேகுவே ஊரைச் சார்ந்த இடையர்களுள் ஒருவரான ஆமோஸ் என்பவர், யூதாவின் அரசனாகிய ஓசியா காலத்திலும், இஸ்ராயேலின் அரசனாகிய யோவாசின் மகன் யெரோபோவாமின் காலத்திலும், நில நடுக்கம் உண்டாவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் இஸ்ராயேலைக் குறித்துக் கண்ட காட்சியின் வார்த்தைகளாவன.
2 அவர் கூறினார்: "சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கிறார், யெருசலேமிலிருந்து தம் குரலை எழுப்புகிறார்; இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள் புலம்புகின்றன, கர்மேலின் கொடுமுடி உலர்கின்றது. "
3 ஆண்டவர் கூறுவது இதுவே: "தமஸ்கு நகரம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; அவர்கள் கலகாத்தை இருப்புருளையில் வைத்து ஆட்டினார்கள்.
4 ஆதலால் அசாயேல் வீட்டின் மேல் தீயனுப்புவோம், அது பெனாதாத்தின் அரண்மனைகளை அழித்து விடும்.
5 தமஸ்கின் தாழ்ப்பாளை முறித்திடுவோம்; பிக்காத்- ஆவேனில் அரியணை வீற்றிருப்பவனையும், பேத்தேதேனில் செங்கோல் தாங்கியிருப்பவனையும் ஒழிப்போம்; சீரியா நாட்டினர் கீருக்கு நாடுகடத்தப் படுவர்" என்கிறார் ஆண்டவர்.
6 ஆண்டவர் கூறுவது இதுவே: "காசா பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்பை மாற்ற மாட்டோம்; அவர்கள் மக்களினம் முழுவதையுமே ஏதோமுக்கு அடிமைகளாகக் கூட்டிப் போனார்கள்.
7 ஆதலால் காசாவின் கோட்டை மதில் மேல் தீயனுப்புவோம், அது அதனுடைய அரண்மனைகளை அழித்து விடும்;
8 ஆசோத்தில் வாழும் குடிமக்களையும், அஸ்கலோனில் செங்கோல் தாங்கியிருப்பவனையும் ஒழிப்போம்; அக்காரோன் மீது நம் கரத்தைத் திருப்புவோம், பிலிஸ்தியருள் எஞ்சினோரும் அழிந்திடுவர்" என்கிறார் ஆண்டவர்.
9 ஆண்டவர் கூறுவது இதுவே: "தீர் நகரம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்பை மாற்றமாட்டோம்; அவர்கள் மக்களினம் முழுவதையுமே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள், சகோதர உடன்படிக்கையை அவர்கள் நினைக்கவே இல்லை.
10 ஆதலால் தீரின் கோட்டை மதில் மேல் தீயனுப்புவோம்; அது அதனுடைய அரண்மனைகளை அழித்துவிடும்."
11 ஆண்டவர் கூறுவது இதுவே: "ஏதோம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்றமாட்டோம்; இரக்கம் கொஞ்சமும் காட்டாமல் தன் சகோதரனையே வாளால் துன்புறுத்தினான்; தன் ஆத்திரத்தை அவன் அடக்கி வையாமல் என்றென்றும் தன் கோபத்தைக் காட்டி வந்தான்.
12 ஆதலால் தேமான் மேல் நாம் தீயனுப்புவோம், அது போஸ்ராவின் அரண்மனைகளை அழித்துவிடும்."
13 ஆண்டவர் கூறுவது இதுவே: "அம்மோன் மக்கள் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதற்காக, கலகாத்தின் கர்ப்பவதிகள் வயிற்றைப் பீறிக் கிழித்தனர்;
14 ஆதலால் ராபாவின் கோட்டை மதிலில் தீ மூட்டுவோம், அது அதனுடைய அரண்மனைகளை அழித்து விடும்; போர் தொடுக்கும் நாளிலே பேரிரைச்சலும், சூறாவளி நாளிலே கடும்புயலும் இருக்கும்!
15 அவர்களுடைய அரசன் அடிமையாய்க் கொண்டு போகப்படுவான், தலைவர்களும் அவனோடு கொண்டு போகப்படுவர்" என்கிறார் ஆண்டவர்.
அதிகாரம் 02
1 ஆண்டவர் கூறுவது இதுவே: "மோவாபு பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; ஏதோம் அரசனின் எலும்புகளைச் சுட்டுச் சாம்பலாய் ஆக்கி விட்டான்.
2 ஆதலால் மோவாபின் மேல் நாம் தீயனுப்புவோம், அது கரியோத்தின் அரண்மனைகளை அழித்து விடும்; இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம் இவற்றிடையில் மோவாப் மடிந்திடுவான்.
3 அதை ஆள்பவனை அதனடுவினின்று சிதைத்திடுவோம், அவனோடு அதன் தலைவரையெல்லாம் மாய்த்திடுவோம்" என்கிறார் ஆண்டவர்.
4 ஆண்டவர் கூறுவது இதுவே: "யூதா பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; ஆண்டவரின் திருச்சட்டத்தை அவர்கள் புறக்கணித்தனர், அவருடைய கட்டளைகளை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை; அவர்களுடைய தந்தையர்கள் பின்பற்றிய பொய் தெய்வங்கள் அவர்களையும் மோசம் போக்கின.
5 ஆதலால் யூதாவின் மேல் நாம் தீயனுப்புவோம், அது யெருசலேமின் அரண்மனைகளை அழித்துவிடும்."
6 ஆண்டவர் கூறுவது இதுவே: "இஸ்ராயேல் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு சோடி செருப்புக்கும் விற்கிறார்கள்.
7 ஏழைகளின் தலைகளை மண்ணில் பட மிதிக்கிறார்கள், தாழ்த்தப்பட்டோரின் நெறியைக் கெடுக்கிறார்கள், மகனும் தகப்பனும் ஒரே தேவடியாளைக் கூடி, நம் திருப்பெயரைப் பங்கப்படுத்துகிறார்கள்.
8 தங்களிடம் அடகு வைத்த பிறராடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பீடங்களின் முன்பும் உட்கார்ந்து கொண்டு, அபராதம் விதித்துத் திரட்டிய பணத்திற்கு மது வாங்கித் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கிறார்கள்.
9 நாமோ, உயரத்தில் கேதுரு மரங்களைப் போலும், வலிமையில் கருவாலி மரங்களைப் போலும் இருந்த அமோரியர்களை அவர்கள் முன்பாக அழித்துப் போட்டோம்; உயரத்தில் இருந்த அவனுடைய கனிகளையும், ஆழத்திலிருந்த வேர்களையும் நாம் நாசமாக்கினோம்.
10 மேலும், எகிப்து நாட்டினின்று உங்களைப் புறப்படச் செய்து, நாற்பதாண்டுகள் பாலை நிலத்தில் உங்களை வழி நடத்தி வந்து, அமோரியர் நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளச் செய்தோம்.
11 உங்கள் புதல்வர்களுள் சிலரை நாம் இறைவாக்கினராய் உயர்த்தினோம்; உங்கள் இளைஞர்களுள் சிலரை நாசரேயராய்த் தேர்ந்துகொண்டோம்; இஸ்ராயேல் மக்களே, இது உண்மையன்றோ?" எனக் கேட்கிறார் ஆண்டவர்.
12 ஆனால், நீங்கள் நாசரேயருக்கு மதுவைக் கொடுத்தீர்கள், ' இறைவாக்கு உரைக்கக் கூடாது' என இறைவாக்கினருக்குக் கட்டளையிட்டீர்கள்.
13 இதோ, வைக்கோல் பொதியேற்றிய வண்டியின் அச்சு கிறீச்சிடுவது போல், உங்களையும் உங்களிடத்திலேயே அழுத்தி நீங்களும் கிறீச்சிடச் செய்வோம்.
14 விரைந்தோடுகிறவனுக்கும் வேகமிராது, வலிமையுள்ளவனுக்கும் வலுவிருக்காது; வீரனும் தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியாது.
15 வில் வீரன் நிற்கவுமாட்டான், விரைந்தோடுபவனும் தப்பமாட்டான்; குதிரை வீரனும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது.
16 அந்நாளில் வீரர்களுள் மிக்க வீரம் படைத்தவன் கூட எல்லாப் படைக்கலங்களையும் எறிந்துவிட்டுத் தப்பியோடுவான்" என்கிறார் ஆண்டவர்.
அதிகாரம் 03
1 இஸ்ராயேல் மக்களே, உங்களுக்கு எதிராக- எகிப்து நாட்டினின்று நாம் கூட்டிவந்த முழுக்குடும்பமாகிய உங்களுக்கு எதிராக- ஆண்டவர் உரைத்த இந்த வாக்கைக் கேளுங்கள்:
2 உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத் தான் நாம் அறிந்து கொண்டோம்; ஆதலால் உங்கள் அக்கிரமங்கள் அனைத்திற்காகவும் நாம் உங்களைத் தண்டிப்போம்.
3 தங்களுக்குள் ஏற்கெனவே உடன்படாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களோ?
4 இரை அகப்படாமல் இருக்கும் போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? தான் ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையில், குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழக்கம் செய்யுமோ?
5 வேடன் தரையில் வலை விரிக்காதிருக்கும் போதே பறவை கண்ணியில் சிக்கிக் கொள்வதுண்டோ? ஒன்றுமே கண்ணியில் படாதிருக்கும் போது வலை தரையை விட்டு மேலெழும்புமோ?
6 நகரத்தில் எக்காளம் ஊதப்படுமானால், மக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ? ஆண்டவர் அனுப்பாமல், நகரத்துக்குத் தீமை தானாக வருமோ?
7 தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்கும் தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல், ஆண்டவராகிய இறைவன் ஏதும் செய்வதில்லை.
8 சிங்கம் கர்ச்சனை செய்கிறது, அஞ்சி நடுங்காதவன் எவன்? கடவுளாகிய ஆண்டவர் பேசுகிறார், இறைவாக்கு உரைக்காதவன் எவன்?"
9 அசீரியாவின் அரண்மனைகள் மேலும் எகிப்து நாட்டின் அரண்மனைகள் மேலும் நின்று கொண்டு இதை விளம்பரப்படுத்து: "சமாரியாவின் மலைகள் மேல் ஒன்று கூடுங்கள், அதனுள் நடக்கும் பெருங் குழப்பங்களையும் அதில் செய்யப்படும் கொடுமைகளையும் பாருங்கள்."
10 நேர்மையானதைச் செய்ய அவர்களுக்குத் தெரிவதில்லை" என்கிறார் ஆண்டவர். "அவர்கள் தங்கள் அரண்மனைகளில் வன்முறைகளையும் கொள்ளையையும் குவிக்கிறார்கள்."
11 ஆகையால் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "நாட்டைப் பகைவன் வந்து சூழ்ந்து கொள்வான், உன் அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான், உன் மாளிகைகள் கொள்ளையிடப்படும்."
12 ஆண்டவர் கூறுவது இதுவே: "சிங்கத்தின் வாயிலிருந்து இடையன் தன் ஆட்டின் இரண்டு கால்களையோ, காதின் ஒரு பகுதியையோ விடுவிப்பது போலவே, சமாரியாவில் பஞ்சணை மீதும் மெல்லிய படுக்கையின் மேலும் அமர்ந்திருக்கும் இஸ்ராயேல் மக்கள் விடுவிக்கப்படுவார்கள்."
13 இதைக் கேளுங்கள், கேட்டு யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச் சாட்சியம் சொல்லுங்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன், சேனைகளின் கடவுள்.
14 அதாவது: இஸ்ராயேலை அதன் மீறுதல்களுக்காகத் தண்டிக்கும் நாளில், பேத்தேலில் உள்ள பீடங்களையும் நாம் தண்டிப்போம்; பலி பீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டுத் தரையிலே வீழும்.
15 குளிர்கால மாளிகை, வேனிற்கால அரண்மனைகளை இடித்திடுவோம், தந்தத்தால் இழைத்த வீடுகள் அழிந்துபோகும், எண்ணிறந்த வீடுகள் பாழாய்ப்போகும்" என்கிறார் ஆண்டவர்.
அதிகாரம் 04
1 சமாரியாவின் மலை மேல் வாழ்கின்ற பாஷான் பசுக்களே, இந்த வாக்கைக் கேளுங்கள்; உங்கள் கணவனைப் பார்த்து, 'கொண்டு வா, குடிப்போம்' என்று சொல்லுகிறீர்களே, ஏழைகளை ஒடுக்கி, எளியவர்களை நசுக்குகிற உங்களுக்கு,
2 இறைவனாகிய ஆண்டவர் தம் பரிசுத்தத்தின் மேல் ஆணையிட்டுக் கூறுவது இதுவே: இதோ, உங்களுக்கு நாட்கள் வருகின்றன; அப்போது நீங்கள் கொக்கிகளாலும், உங்களில் எஞ்சியிருப்பவர்கள் தூண்டில்களாலும் இழுத்துச் செல்லப்படுவீர்கள்.
3 உங்களுள் ஒவ்வொருத்தியும் தன் அருகிலுள்ள சுவர் பிளப்பின் வழியாய் வெளிப்படுவாள்; அர்மோன் நாட்டில் கொண்டு போய்த் தள்ளப்படுவீர்கள்" என்கிறார் ஆண்டவர்.
4 பேத்தேலுக்கு வாருங்கள், வந்து கட்டளையை மீறுங்கள்; கலாகாத்துக்கு வந்து பாவத்தின் மேல் பாவம் செய்யுங்கள். நாடோறும் காலையில் உங்கள் பலிகளையும், மூன்று நாளைக்கொரு முறை பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள்.
5 புளித்த மாவின் அப்பத்தைக் கொணர்ந்து நன்றியறிதல் பலியாய்க் கொடுங்கள், நேர்ச்சைக் காணிக்கைகளை வையுங்கள், அவற்றை விளம்பரப்படுத்துங்கள்; இஸ்ராயேல் மக்களே, இப்படிச் செய்வது உங்கள் விருப்பம்" என்கிறார் ஆண்டவர்.
6 உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பற்களுக்கு வேலையில்லாமல் செய்தோம்; நீங்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் உணவுப் பற்றாக்குறையை உண்டாக்கினோம்; இருப்பினும் நீங்கள் நம்மிடம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
7 அறுவடைக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கும் போதே உங்களுக்கு மழையையும் நிறுத்தி விட்டோம்; ஓர் ஊரில் மழை பெய்யச் செய்து இன்னொரு ஊர் காயச் செய்தோம், ஒரு வயலில் மழைப் பெய்யச் செய்தோம், மழை பெய்யாத வயல் காய்ந்து போயிற்று.
8 இரண்டு மூன்று ஊர்களின் மக்கள் தண்ணீர் தேடித் தள்ளாடி வேறொரு ஊருக்கு போயும் தாகம் தணியவில்லை; இப்படியெல்லாம் செய்தும் நீங்கள் நம்மிடம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
9 வெப்பக் காற்றாலும் பயிர் நோவாலும் உங்களை வதைத்தோம், உங்கள் சோலைகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அழித்தோம்; அத்திமரங்களையும் ஒலிவமரங்களையும் வெட்டுக்கிளி தின்றது; இருப்பினும் நீங்கள் நம்மிடம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
10 எகிப்துக்கு அனுப்பிய கொள்ளை நோய் போன்ற கொள்ளை நோயை உங்கள் மேலும் அனுப்பினோம், உங்கள் இளைஞர்களை வாளால் வெட்டி வீழ்த்தினோம்; உங்கள் குதிரைகளும் கொள்ளைபோயின; உங்கள் பாளையங்களில் செத்தவர்களின் பிண நாற்றம் உங்களுடைய மூக்கினுள் ஏறும்படி செய்தோம்; இருப்பினும் நீங்கள் நம்மிடம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
11 சோதோம், கொமோராவைக் கடவுள் இடித்தது போல் உங்கள் நடுவிலும் நாம் ஊர்களை இடித்தோம். நீங்களோ, நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட கொள்ளியைப் போல் ஆனீர்கள்; இருப்பினும் நீங்கள் நம்மிடம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
12 ஆகவே, இஸ்ராயேலே, இவ்வாறெல்லாம் உனக்குச் செய்வோம், இஸ்ராயேலே, இப்படி நாம் உனக்குச் செய்யப் போவதால், உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!"
13 ஏனெனில், அவரே மலைகளை உருவாக்குகிறவர், காற்றை உண்டாக்குகிறவர், தம்முடைய எண்ணத்தை மனிதனுக்கு வெளியிடுகிறவர்; அவரே காலையிருளைப் படைக்கிறவர், மாநிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுகிறவர்; சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பது அவர் பெயராம்.
அதிகாரம் 05
1 இஸ்ராயேல் வீட்டாரே, இந்த வாக்கைக் கேளுங்கள், உங்களைக் குறித்து பாடிய புலம்பல் இது:
2 இஸ்ராயேல் என்னும் கன்னிப் பெண், வீழ்ச்சியுற்றாள், இனி எழ மாட்டாள்; தரையில் தனியளாய்க் கிடக்கின்றாள், அவளைத் தூக்கி விடுவார் யாருமில்லை."
3 ஏனெனில், ஆண்டவராகிய இறைவன் இவ்வாறு கூறுகிறார்: "ஆயிரம் பேரை அனுப்பிய நகரத்தில் நூறு பேரே எஞ்சியிருப்பர், நூறு பேரை அனுப்பிய பட்டணத்தில், பத்தே பேர் எஞ்சியிருப்பர்; இஸ்ராயேல் வீட்டார் கதி இதுவே."
4 இஸ்ராயேல் வீட்டாருக்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "நம்மைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்;
5 ஆனால் பேத்தேலைத் தேடாதீர்கள், கல்கலாவில் நுழையாதீர்கள்; பெயேர்ஷுபாவுக்குக் கடந்துபோக வேண்டா, ஏனெனில் கல்கலா சிறைகொண்டு போகப்படும், பேத்தேல் வெறுமையாக்கப்படும்."
6 ஆண்டவரைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள், இன்றேல், தீயைப்போல் அவர் யோசப் வீட்டின் மேல் இறங்குவார்; அந்நெருப்பு சுட்டெரித்து விடும், பேத்தேலில் அதை அணைக்கக் கூடியவர் எவருமிரார்.
7 நீங்கள் நீதியை எட்டிக்கசப்பாய் மாற்றுகிறீர்கள், நேர்மையைத் தரையில் வீழ்த்துகிறீர்கள்.
8 அவரே கார்த்திகை, மிருகசீரிடம் ஆகிய விண்மீன் குழுக்களை உண்டாக்கியவர்; அவரே காரிருளைக் காலைப் பொழுதாய் மாற்றுகிறவர், பகற்பொழுதை இரவு வேளையாய் ஆக்குகிறவர்; கடல்களின் நீரை முகந்தெடுத்து மாநிலத்தின் மேல் பொழிகிறவர் அவரே; ஆண்டவர் என்பது அவரது பெயராம்.
9 திடீரெனக் கோட்டை மேல் அழிவை அனுப்புகிறார், அழிவும் அரண் மேல் வருகிறது.
10 பொதுவிடத்தில் நின்று கண்டிப்பவனைப் பகைக்கிறார்கள், உண்மை பேசுபவனை வெறுத்து ஒதுக்குகிறார்கள்;
11 ஆதலால், நீங்கள் ஏழைகளை நசுக்கி அவர்களிடம் தானிய வரி வாங்கி, அதைக் கொண்டு செதுக்கிய கற்களால் வீடுகள் கட்டினீர்கள், அந்த வீடுகளில் நீங்கள் வாழப்போவதில்லை; அருமையான திராட்சைத் தோட்டங்களை நாட்டினீர்கள், அவற்றின் இரசத்தை நீங்கள் குடிக்கப்போவதில்லை.
12 உங்கள் பழிச்செயல்கள் பலவென்றும், உங்கள் பாவங்கள் கொடியவை என்றும் நாம் அறிவோம்; நீதிமான்களைத் துன்புறுத்துகிறீர்கள், கையூட்டு வாங்குகிறீர்கள், ஊர்ச்சபையில் ஏழையின் வழக்கை ஏற்க மறுக்கிறீர்கள்.
13 ஆகையால், விவேகமுள்ளவன் அப்போதெல்லாம் மவுனமாயிருப்பான், ஏனெனில் காலம் கெட்டுப் போயிற்று.
14 தீமையைத் தேடாதீர்கள்; நன்மையையே நாடுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வது போலவே, சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடிருப்பார்.
15 தீமையைப் பகையுங்கள், நன்மையை விரும்புங்கள், ஊர்ச்சபையில் நீதியை நிலைநாட்டுங்கள்; அப்போது ஒருவேளை சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் யோசப் வீட்டாரில் எஞ்சினோர்க்கு இரக்கம் காட்டுவார்.
16 ஆதலால் ஆண்டவர் - சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: " பொதுவிடங்களில் எல்லாம் அழுகுரல் கேட்கும், தெருக்களில் எங்கும், 'ஐயோ! ஐயோ! 'என்று புலம்பல் கேட்கும், உழவுத் தொழில் செய்வாரை அழுவதற்குக் கூப்பிடுவர், ஒப்பாரி தெரிந்தவர்களை ஓலமிட்டுப் புலம்ப அழைப்பார்கள்.
17 திராட்சைத் தோட்டங்கள் எங்கணும் ஒரே அழுகையாய் இருக்கும், ஏனெனில் உங்கள் நடுவே நாம் கடந்து போவோம்" என்கிறார் ஆண்டவர்.
18 ஆண்டவரின் நாளைப் பார்க்க விரும்புகிறவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! ஆண்டவரின் நாளுக்காக நீங்கள் ஏங்குவதேன்? அது ஒளி மிக்க நாளன்று, இருள் சூழ்ந்த நாள் தான்.
19 அந்த நாள், சிங்கத்தினிடம் தப்பி ஓடிய ஒருவனைக் கரடியொன்று சந்தித்தாற் போலும், தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து சுவரில் கை வைத்துச் சாயும் போது பாம்பொன்று கடித்தாற் போலும் இருக்கும்!
20 ஆண்டவரின் நாள் இருள் கவிந்தது அல்லவா? அது ஒளியின் நாளில்லையே! வெளிச்சமில்லாத காரிருள் அல்லவோ?
21 உங்கள் திருவிழாக்களை அருவருக்கிறோம், வெறுக்கிறோம்; உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் நமக்கு விருப்பமே இல்லை.
22 தகனப்பலிகளும் உணவுப்பலிகளும் நமக்கு நீங்கள் கொடுத்தாலும் நாம் ஏற்கமாட்டோம்; சமாதானப் பலிகளான உங்கள் கொழுத்த மிருகங்களையும் நாம் ஏறெடுத்துக்கூடப் பார்க்கமாட்டோம்.
23 உங்கள் பாடல்களின் பண்ணை நம்மிடமிருந்து அகற்றுங்கள், உங்கள் வீணைகளின் இசையை நாம் கேட்க மாட்டோம்.
24 அதற்கு மாறாக, நீதி தண்ணீரைப் போல வழிந்தோடட்டும், நேர்மை நீரோடை போலப் பாயட்டும்.
25 இஸ்ராயேல் வீட்டாரே, பாலைநிலத்தில் இருந்த அந்த நாற்பதாண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் நமக்குக் கொடுத்தீர்களோ?
26 உங்கள் அரசனாகிய சக்கூத்தையும், உங்கள் விண்மீன் தெய்வமான காய்வானையும், உங்களுக்கென நீங்கள் செய்துகொண்ட அந்தச் சிலைகளைத் தூக்கிக் கொண்டு போவீர்கள்.
27 ஆகையால், தமஸ்குவுக்கும் அப்பால் உங்களை நாம் நாடு கடத்துவோம்" என்கிறார் ஆண்டவர்; சேனைகளின் கடவுள் என்பது அவரது பெயர்.
அதிகாரம் 06
1 சீயோனில் சிற்றின்ப வாழ்வில் திளைத்திருக்கிறவர்களே, சமாரியா மலை மேல் கவலையற்றிருக்கிறவர்களே, மக்களினங்களுள் சிறந்த இவ்வினத்தின் பெருங்குடி மக்களே, இஸ்ராயேல் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு!
2 காலானே என்னுமிடத்திற்குப் போய்ப் பாருங்கள், அங்கிருந்து சிறந்த நகரமாகிய ஏமாத்துக்குப் போங்கள், பிறகு பிலிஸ்தியரின் நகரான காத்துக்குச் செல்லுங்கள். அந்த அரசுகளை விட நீங்கள் சிறந்தவர்களோ? உங்கள் நாட்டை விடப் பரப்பளவில் அவர்களுடைய நாடு பெரியதோ?
3 தீய நாளை இன்னும் தள்ளி வைப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் வன்முறையின் அரியணையை அருகில் கொண்டு வருகிறீர்கள்.
4 தந்தத்தால் இழைத்த கட்டிலில் படுத்துப் பஞ்சணையில் சாய்ந்து கிடக்கிறார்கள்; கிடையிலிருந்து ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து கொழுத்த கன்றுகளையும் சாப்பிடுகிறார்கள்;
5 வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கிறார்கள், தாவீதைப் போலப் புதிய இசைக் கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள்.
6 கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கிறார்கள், உயர்ந்த நறுமண எண்ணெய் தடவிக் கொள்ளுகிறார்கள், ஆனால் யோசேப்பின் வீட்டாரழிவைக் குறித்துக் கலங்குகிறதில்லை!
7 ஆகையால் அவர்கள் தான் முதற் கண் நாடு கடத்தப்படுவர், சிற்றின்பம் தேடுகிறவர் கூட்டம் அற்றுப்போகும்."
8 இறைவனாகிய ஆண்டவர் தம் மேல் ஆணையிட்டுக் கூறுகிறார், சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: "யாக்கோபின் செருக்கை நாம் அருவருக்கிறோம், அவனுடைய மாளிகைகளை வெறுக்கிறோம்; நகரத்தையும் அதிலுள்ளவை அனைத்தையும் நாம் கைவிட்டு விடுவோம்."
9 ஒரு வீட்டில் பத்துப் பேர்களே இருந்தால், அவர்களும் மாண்டு போவார்கள்.
10 வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள், ஒருவன், வீட்டின் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம், "உன்னுடன் வேறு யாரேனும் உளரோ?" என்று கேட்க,
11 அவன், "இல்லை" என்று விடையளித்து, "உஸ்ஸ், ஆண்டவர் பெயரைச் சொல்லக் கூடாது" என்பான்.
12 இதோ, ஆண்டவர் தாமே ஆணை கொடுக்கிறார், பெரிய மாளிகைகளைத் தரைமட்டமாய்த் தகர்ப்பார்; சிறிய வீடுகளைத் தவிடுபொடியாக்குவார்.
13 கற்பாறைகள் மேல் குதிரைகள் ஓடுமோ? எருதுகளைக் கட்டி யாரேனும் கடலை உழுவாரோ? நீங்களோ நீதியை நஞ்சாக மாற்றினீர்கள், நேர்மையின் கனியை எட்டிக்கசப்பாய் ஆக்கினீர்கள்.
14 லோ-தபார் ஊரைப் பிடித்தது குறித்துப் பூரிப்பு அடைகிறீர்கள், "நம் சொந்த வலிமையால் கார்னாயீமைப் பிடிக்கவில்லையா?" என்கிறீர்கள்.
15 இதோ, இஸ்ராயேல் வீட்டாரே, உங்களுக்கு எதிராக ஒரு மக்களினத்தைக் கிளப்பி விடுவோம், அவர்கள் ஏமாத்து வாயில் முதல் அராபா நீரோடை வரையில் உங்களை ஒடுக்கித் துன்புறுத்துவார்கள்" என்கிறார் சேனைகளின் இறைவனாகிய ஆண்டவர்.
அதிகாரம் 07
1 இறைவனாகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: அரசனுக்கென முதல் புல்லறுப்பு செய்தான பின், இரண்டாம் பருவத்தில் புற்கள் தளிர்க்கத் தொடங்கும் போது இதோ, வெட்டுக்கிளிக் கூட்டங்களை அவர் உருவாக்கிக் கொண்டிருந்தார்.
2 நாட்டிலிருந்த புல்லையெல்லாம் அவை தின்று தீர்த்த பின்," இறைவனாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்; யாக்கோபு எப்படிப் பிழைக்கக் கூடும்? அவன் மிகச் சிறியவனாயிற்றே!" என்றேன்.
3 ஆண்டவர் அதைக் குறித்து மனம் மாறினார்; "அது நிகழாது" என்றார் ஆண்டவர்.
4 இறைவனாகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: இதோ, இறைவனாகிய கடவுள் தாமே பழிவாங்குவதற்காக நெருப்பைத் தருவித்தார்; அது ஆழ்ந்த கடலை வற்றச் செய்து விட்டு, நிலத்தையும் இரையாக்கிக் கொண்டிருந்தது.
5 நான்: "இறைவனாகிய ஆண்டவரே, நிறுத்தும், உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்; யாக்கோபு எப்படிப் பிழைக்கக் கூடும்? அவன் மிகச் சிறியவனாயிற்றே!" என்றேன்.
6 ஆண்டவர் அதைக் குறித்து மனம் மாறினார்; "இதுவும் நிகழாது" என்றார் இறைவனாகிய ஆண்டவர்.
7 இறைவனாகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: இதோ, தூக்கு நூற்குண்டைக் கையில் பிடித்தவராய் ஒரு மதிலருகில் ஆண்டவர் நின்று கொண்டிருந்தார்.
8 ஆமோசே, நீ காண்பதென்ன?" என்று ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார். நான், "அது தூக்கு நூற்குண்டு" என்றேன்; ஆண்டவர் தொடர்ந்து சொன்னார்: "இதோ, தூக்கு நூற்குண்டு நம் மக்களாகிய இஸ்ராயேலின் நடுவில் தொங்க விட்டுப் பரிசோதிக்கப் போகிறோம்; இனி அவர்களை ஒரு போதும் மன்னியோம்;
9 ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் பாழாக்கப்படும், இஸ்ராயேலின் பரிசுத்த இடங்கள் பாலை வெளியாக்கப்படும், யெரோபோவாம் வீட்டார்க்கு எதிராய் நாம் வாளுடன் வருவோம்."
10 அப்போது, பேத்தேலின் அர்ச்சகனாகிய அமாசியாஸ் என்பவன் இஸ்ராயேல் அரசனாகிய யெரோபோவாமுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினான்: "இஸ்ராயேல் வீட்டார்களின் நடுவில் ஆமோஸ் உமக்கு எதிராகக் கலகம் விளைவிக்கிறான்; நாடு அவன் சொற்களைப் பொறுக்க இயலாது.
11 ஏனெனில், ஆமோஸ், 'யெரோபோவாம் வாளால் மடிவான்; அவனது நாட்டை விட்டு இஸ்ராயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும் ' என்று சொல்லுகிறான்."
12 பின்பு அமாசியாஸ் ஆமோசைப் பார்த்து, "காட்சி காண்பவனே, போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடி விடு; அங்கே போய் இறைவாக்குச் சொல், பிழைப்புத் தேடிக்கொள்.
13 இனிப் பேத்தேலில் மறுபடியும் இறைவாக்குச் சொல்லாதே; ஏனெனில் இது அரசரின் பரிசுத்த இடம், அரசுக்குரிய கோயில்" என்று சொன்னான்.
14 ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமாசியாசைப் பார்த்துக் கூறினார்: "நான் இறைவாக்கினனுமல்லேன், இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனுமல்லேன்; நான் ஆடுமாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரங்களைக் கண்காணிப்பவன்.
15 ஆடுகளை ஓட்டிக் கொண்டு போன என்னை ஆண்டவர் தெரிந்தெடுத்து, ' நம் மக்களாகிய இஸ்ராயேலிடம் போய், இறைவாக்குக் கூறு' என்று அனுப்பினார்.
16 இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: 'இஸ்ராயேலுக்கு எதிராக இறைவாக்குச் சொல்லாதே, ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப் பேசாதே' என்று நீ சொல்லுகிறாயே!
17 ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'உன் மனைவி நகரத்தில் விலைமகளாய் இருப்பாள், உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவார்கள், உன் நிலபுலம் பங்குபோட்டுக் கொள்ளப்படும், நீயோ தீட்டுள்ள நாட்டிலே மாண்டு போவாய்; இஸ்ராயேல் தன் நாட்டை விட்டுத் தொலை நாட்டுக்கு அடிமையாய்க் கூட்டிப் போகப்படும்."
அதிகாரம் 08
1 இறைவனாகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: இதோ, கனிந்த பழங்களுள்ள கூடையொன்று கண்டேன்.
2 அவர், "ஆமோசே, என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்; நான், "கனிந்த பழங்களுள்ள கூடை" என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்: "நம் மக்களாகிய இஸ்ராயேல் மீது முடிவு வந்து விட்டது, இனி அவர்களை ஒருபோதும் மன்னியோம்.
3 அந்நாளில் கோயில் பாடல்கள் புலம்பல்களாய் மாறும், திரளான மக்கள் மாண்டு கிடப்பார்கள், கண்ட கண்ட இடங்களில் அவை எறியப்படும், எங்கும் மயான அமைதி! " என்கிறார் இறைவனாகிய ஆண்டவர்.
4 எளியவர்களை நசுக்கி, நாட்டில் உள்ள ஏழைகளை ஒழிக்கத் தேடுகிறவர்களே, இதைக் கேளுங்கள்:
5 நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? முடிந்தால், கோதுமையை நல்ல விலைக்கு விற்கலாம், படியைச் சிறிதாக்கி, ஷூக்கெல் நிறையை உயர்த்தி கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்;
6 பணத்துக்கு ஏழைகளையும், ஒரு சோடி செருப்புக்கு எளியவர்களையும் வாங்கலாம், கோதுமைப் பதர்களையும் விற்கலாம்" என்றெல்லாம் நீங்கள் ஏங்குகிறீர்கள்.
7 ஆண்டவர் யாக்கோபின் பெருமை மீது ஆணையிட்டுக் கூறுகிறார்: "அவர்களுடைய இந்தச் செயல்களில் ஒன்றையேனும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
8 இதனாலன்றோ நிலம் நடுங்குகிறது? இதில் வாழ்பவர் யாவரும் புலம்புகின்றனர்? நிலம் முழுவதும் நைல் நதியின் வெள்ளம் போலப் பொங்கி, எகிப்து நாட்டு நைல் நதி போல் அலை மோதி அடங்குகிறது?
9 இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: "அந்நாளில், நண்பகலில் கதிரவனை மறையச் செய்து பட்டப் பகலிலே நாம் பூமியை இருள் சூழச் செய்வோம்.
10 உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களையெல்லாம் புலம்பல்களாகவும் மாற்றுவோம்; ஒவ்வொருவனையும் இடையில் கோணியுடுத்தவும், ஒவ்வொரு தலையும் மழிக்கப்படவும் செய்வோம். ஒரே பிள்ளையைப் பறிகொடுத்துப் புலம்புவது போலப் புலம்பச் செய்வோம்; அதன் முடிவு கசப்பு மிக்க நாளாய் இருக்கும்.
11 இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ நாட்கள் வருகின்றன; அப்போது நாட்டில் பஞ்சம் அனுப்புவோம்; அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று, ஆண்டவரின் வார்த்தையைக் கேட்காதிருக்கும் பஞ்சமே அது.
12 ஒரு கடல் முதல் இன்னொரு கடல் வரைக்கும் வடதிசை முதல் கீழ்த்திசை வரை தேடியலைந்து அங்குமிங்கும் தள்ளாடி ஆண்டவரின் வார்த்தையைத் தேடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைக் கண்டடைய மாட்டார்கள்.
13 அந்நாளில் அழகிய கன்னிப் பெண்களும் இளைஞர்களும் நீர் வேட்கையால் சோர்ந்து வீழ்வார்கள்.
14 சமாரியா நாட்டு அஷீமா தெய்வத்தின் பேரால் ஆணையிட்டு, ' தாண் நாடே, உன் கடவுளின் உயிர் மேல் ஆணை!' என்றும், 'பெயேர்ஷூபாவே, உன் அன்பரின் உயிர் மேல் ஆணை!' என்றும் சொல்லுகிறவர்கள் (மாண்டு) வீழ்வார்கள், வீழ்ந்தவர்கள் எழவே மாட்டார்கள்."
அதிகாரம் 09
1 ஆண்டவர் பீடத்தருகில் நிற்பதைக் கண்டேன். அவர் சொன்னார்: "தூணின் முகட்டை இடித்துப் போடு, மேல் தளம் ஆட்டங் கொடுக்கட்டும்; மக்கள் அனைவருடைய தலைமேலும் உடைத்துத் தள்ளு, அவர்களுள் எஞ்சியிருப்பவர்களை நாம் வாளால் மாய்ப்போம்; அவர்களில் ஒருவனும் ஓடிப்போகான், ஒருவன் கூடத் தப்பிப்பிழைக்க மாட்டான்.
2 பாதாளம் வரையில் அவர்கள் இறங்கினாலும், அங்கிருந்தும் நம் கை அவர்களைப் பிடித்து வரும்; வானமட்டும் அவர்கள் ஏறிப் போனாலும், அங்கிருந்தும் அவர்களை நாம் இழுத்து வருவோம்;
3 கர்மேல் மலையுச்சியில் ஓடி ஒளிந்து கொண்டாலும், அவர்களைத் தேடி அங்கிருந்தும் நாம் கொண்டு வருவோம்; நம் கண்களுக்குத் தப்பி ஆழ்கடலில் மறைந்தாலும், அங்கு அவர்களைக் கடிக்கும்படி பாம்புக்குக் கட்டளையிடுவோம்.
4 தங்கள் பகைவர்முன் அடிமைகளாய்க் கொண்டு போகப்பட்டாலும், அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்கு ஆணை தருவோம். அவர்கள் மேலேயே நாம் கண்ணாயிருப்போம், நன்மை செய்வதற்கன்று, அவர்களுக்குத் தீமை செய்வதற்கே."
5 சேனைகளின் இறைவனாகிய ஆண்டவர் அவரே; அவர் தொட்டால், மண்ணுலகம் பாகாய் உருகுகிறது, அதில் வாழ்பவர் அனைவரும் புலம்புகிறார்கள்; நிலம் முழுவதும் நைல் நதி போலப் பொங்கியெழுந்து எகிப்து நாட்டு நைல் நதி போல் அடங்குகிறது.
6 அவரே வானத்தில் தம் மேலறைகளைக் கட்டுகிறவர், வானவளைவை நிலத்தில் அடிப்படையிட்டு நாட்டுகிறவர்; கடல்களின் நீரை முகந்தெடுத்து நிலத்தின் மேலே பொழிகிறவர் அவரே; ஆண்டவர் என்பது அவரது பெயராம்.
7 இஸ்ராயேல் மக்களே, நீங்கள் நமக்கு எத்தியோப்பியரைப் போன்றவர்கள் தானே? இஸ்ராயேல் மக்களை எகிப்து நாட்டினின்றும், பிலிஸ்தியரைக் காதோரிலிருந்தும், சீரியர்களைக் கீரிலிருந்தும் நாம் கூட்டி வரவில்லையோ?" என்கிறார் ஆண்டவர்.
8 இதோ, இறைவனாகிய ஆண்டவரின் கண்கள் பாவஞ் செய்கிற அரசை உறுத்துப் பார்க்கின்றன; மண்ணுலகில் இராதபடி அதை நாம் அழித்துவிடுவோம்." ஆயினும் யாக்கோபின் வீட்டாரை நாம் முற்றிலும் அழித்துவிட மாட்டோம்" என்கிறார் ஆண்டவர்.
9 இதோ, நாம் ஆணை பிறப்பிப்போம், எல்லா மக்களினங்கள் நடுவிலும் இஸ்ராயேல் வீட்டாரைச் சல்லடையால் சலிப்பது போலச் சலிக்கப் போகிறோம்; ஆயினும் கோதுமை மணி ஒன்றும் தரையில் விழாது;
10 தீமை எங்களை அணுகாது, எங்கள்மேல் வாராது' என்று நம் மக்களுள் எந்தப் பாவிகள் கூறுகிறார்களோ, அந்தப் பாவிகள் அனைவரும் வாளால் மடிவார்கள்.
11 அந்நாளில், விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மறுபடியும் கட்டியெழுப்புவோம்; அதிலுள்ள திறப்புகளைப் பழுதுபார்த்துப் பழுதானவற்றைச் சீர்ப்படுத்திப் பண்டை நாளில் இருந்தது போலவே மறுபடி கட்டுவோம்;
12 அப்பொழுது, ஏதோமில் எஞ்சியிருப்போரையும், நமது திருப்பெயரைத் தாங்கியிருக்கும் புறவினத்தார் அனைவரையும் அவர்கள் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வார்கள்" என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.
13 இதோ, நாட்கள் வருகின்றன, அப்போது அறுவடை செய்பவனை ஏர் உழுகிறவனும், விதைப்பவனைத் திராட்சைப் பழம் பிழிபவனும் தொடர்ந்து சென்று பிடிப்பார்கள்; மலைகள் புதிய இரசத்தைப் பொழியும், குன்றுகளிலெல்லாம் அது வழிந்தோடும்" என்கிறார் ஆண்டவர்.
14 நம் மக்களாகிய இஸ்ராயேலை முன்போல நன்னிலைக்குக் கொணர்வோம் அவர்கள் பாழடைந்த நகரங்களைத் திரும்பக் கட்டி அவற்றில் குடியேறுவார்கள்; திராட்சைத் தோட்டங்களை நட்டுப் பயிர் செய்து அவற்றின் இரசத்தைக் குடிப்பார்கள்; பழத் தோட்டங்களைப் போடுவார்கள், அவற்றிலிருந்து கனிகளைப் புசிப்பார்கள்.
15 அவர்கள் நாட்டில் நாம் அவர்களைத் திரும்ப நாட்டுவோம், நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் நாட்டிலிருந்து இனி அவர்கள் மறுபடியும் அகற்றப்பட மாட்டார்கள்" என்கிறார் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.