"மனுமகன் சேதமாய்ப் போவதை இரட்சிக்க வந்தார்'' (மத்.18:11).
"நான்தான், பயப்படாதேயுங்கள்'' (லூக்.24:36). இவ்வார்த் தைகள் மிகுந்த ஆறுதலுக்குரியவை. நம்பிக்கையாயிருங்கள், ""நான் தான்,'' உங்கள் தந்தை அல்லது நண்பன். பயப்படாதீர்கள்... ஆனால், நீசனான நான் பயப்படாமலிருப்பது எப்படி? ""ஏனெனில், நான் தான்.'' நான் ஓர் சம்மனசாகவோ, தீர்க்கதரிசியாகவோ, அல்லது ஓர் அர்ச்சியசிஷ்டவராகவோ இருந்தால், நீ பயப்படக் கூடும். ஏனெனில் மகா பரிசுத்தமான சிருஷ்டிகள் கூட, என்னைப் போல் உங்களை அறிந்து, நிதானித்து, நேசிக்க முடியாது, பயப்படாதீர்கள், நான் சேசுநாதர்!
"ஆதலால் என் சமாதானத்தை உங்களுக்குத் தருகிறேன்'' (அரு.14:27) என்று சொன்னார். அவரது சமாதானத்தை - ஏமாற்றங் களுக்குரிய நமது சமாதானத்தையல்ல, அவருடைய சமாதானத்தை - ஆபத்துக்குரிய உலக சமாதானப் போலியையல்ல. அவரது இரக்கத் தின் வழியாய் நாம் சமாதானத்தை அடையலாம். நாம் பரிசுத்த வான்கள் அல்லது வரப்பிரசாதத்தில் உறுதிப்பட்டவர்கள் என்று எண்ணிக்கொள்வதால் அல்ல, நமது தவறுதல்களுக்குப் பரிகாரமும், மருந்துமான அவரது நேசத்தில் நமக்குத் தளராத விசுவாசம் இருப்பதால் நாம் சமாதானத்தை அடையலாம்.
சேசுநாதரிடம் நம்பிக்கை கொள்வதால் நமக்குக் கிடைக்கிற சுபாவத்துக்கு மேலான, தெய்வீக தைரியம் இல்லாவிடில், நாம் என்னதான் செய்யக் கூடும்? உண்மையாகவே பரிசுத்ததனத்தின் உச்சிக்குப் போய்ச் சேர்வதற்கு தேவ நம்பிக்கை என்ற பாதையன்றி வேறு கிடையாது. ஏனெனில் நிர்ப்பாக்கியமும், பாவங்களும் நிறைந்த பாதாளமாகிய நாம் - தேவ நம்பிக்கை என்ற இறக்கைகள் இன்றி பறக்கத் துவக்கினால், பரிகாரமற்ற கடைசி அதைரியம் என்ற வேறொரு பாதாளத்தில்தான் உருண்டு விழுவோம். ஆனால் நம்பிக் கையின் இறக்கைகளைக் கொண்டு, அர்ச்சியசிஷ்டவர்களாகவும், தவறிப்போன நம் சுபாவத்தின் பாதாளத்திலிருந்து, நமது அக்கிரமங் களின் அடியாழத்திலிருந்து, உன்னதங்களுக்கு உயர்ந்து போகலாம்.
இது மதிமயக்கம் அல்லது மாயை என்று சொல்ல வேண்டாம். என் சொந்த பலத்தால் பரிசுத்ததனத்தின் உச்சிக்குப் போய்ச் சேர முடியும் என்று நினைப்பது பெரும் தவறும், அகந்தையுமாகும் என்று எனக்கு நன்றாய்த் தெரியும். ஆனால் சேசுவின் கரங்களாலான ஏற்றத்தில், அவரது இருதயத்தில் சாய்ந்து கொண்டு ஏறிச் செல்வேன் என்பது நிச்சயம்; ஒரு சிற்றெறும்பை விடச் சிறிதாய் நான் இருப்பதால்தான் இந்த நிச்சயம் ஏற்படுகிறது. சிற்றெறும்புகள் அவரை நம்பினால், அவர் அவைகளை இராஜப் பறவைகளாக்க விரும்புகிறார். மன்னிப்பையும், வரப்பிரசாதத்தையும் கொடுக்கிற தேவன், தயாள இரக்கத்தின் தேவன், நம்மை இரட்சிக்கும்படி மாம்சமான வார்த்தையானவர், சிலுவையில் அறையுண்டவர், திவ்ய நற்கருணையில் மறைந்திருக்கிற தேவன் எனக்கு வரம்பில்லாத நம்பிக்கையை உண்டுபண்ணாவிடில், யார்தான் எனக்கு நம்பிக் கையை எழுப்பக்கூடும்?
அவர் பூமியில் இறங்கி வந்தது, தமது நீதியின் வாளையும், தேவ கோபாக்கினியையும், நமக்கு நியாயமாய் வரவேண்டிய நித்திய மரணத் தீர்ப்பையும் கொண்டு வருவதற்காக அல்ல. இல்லை யில்லை. சுவிசேஷத்தை எந்தப் பக்கத்திலும் திறந்து பார்; அவர் கோபங்கொள்ளும்போதும், சபிக்கும்போதும் கூட, சேசுவின் திரு இருதயம் இரக்கம் நிறைந்து நம்மை வசப்படுத்தும் தன்மையாயிருக்கும். அவர் மன்னிப்பளிக்கவும், இரட்சிக்கவும், சமாதானத்தைக் கொடுக்கவும், தமக்குச் சிலுவை மரத்தை ஆயத்தப்படுத்தினவர்களுக்கு முதலாய் மோட்சத்தைக் கொடுக்கவும் வந்தார். ""பிதாவே, இவர்களுக்கு மன்னித்தருளும், ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்'' என்றார் (லூக்.23:34). நம்மை இரட்சிக் கும்படி ""தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத் தார்'' (பிலிப். 2:7). நமது பாவ ஆடையை அவர் தரித்துக் கொண் டார்; இதன் நிமித்தம் பிதாவானவர் அவருக்கு மரணத் தீர்ப்பிட் டார். ""அவரே நமது ஆயாசத்தை எடுத்துக்கொண்டு, நமது வேதனை களைத் தாமே சுமந்துகொண்டார்'' (இசை.53:4) என்று எழுதியிருக் கிறபடி, அவர் நமது பாவங்களைத் தம்மேல் போட்டுக் கொண்டார். ""அவர் துன்புற்ற மனிதனாகவும், பலவீனம் உடையவராகவும், கண்டோர் கண்மறைத்து அருவருக்கும் இகழ்ச்சிக்குரியவராகவும்'' இருந்தார் (இசை.53:3). ""பாதாளம் பாதாளத்தை இழுக்கின்றது'' (சங்.41:6) என்று வேதாகமத்தில் எழுதியிருக்கிறது. இவ்வார்த்தை களை அவரைக் குறித்து உருவகமாய்ச் சொல்லலாம். நமது அக்கிரமப் பாவங்களின் பாதாளம் அவரது இரக்கப் பெருக்கத்தின் பாதாளத்தை இழுக்கிறது என்று சொல்லக் கூடும்.
பெத்லகேம் மாட்டுக்கொட்டில் தரித்திரமுள்ளதாயினும், அது அவரை நற்கருணையில் உட்கொள்கிறவனின் இருதயமாகிற உயிருள்ள எளிய கொட்டிலின் உருவம் என்று முதலாய்ச் சொல்வது சரிப்படாது. ஆயினும் இதை அறிந்திருக்கிற சேசுநாதரே நாம் அவரை உட்கொள்ள வேண்டுமென்று கட்டளையிடுகிறார். நாம் பச்சாத்தாபத்தோடும், தாழ்ச்சியோடும், திவ்ய நற்கருணைப் பந்தி யில் அமரும்போது, சேசுநாதர் இந்த ஏழைத் தொட்டிலில் திரை யைப் போட்டு மூடி விடுகிறார். இந்தப் பீடத்தில் தங்கியிருப்பது அவருக்கு ஆனந்தம்.
அவர் மறுரூபமானதில் எது என்னைப் பரவசப்படுத்துகிற தென்று தெரியுமா? அவர் என் மட்டிலுள்ள சிநேகத்தின் நிமித்தம் களைந்து வைத்திருந்த அவரது மகத்துவ ஜோதிப் பிரகாசப் போர்வையை ஒரு நிமிடம் மீண்டும் தரித்துக்கொண்டு, தாபோர் மலையில் தோன்றினதல்ல. பெத்லகேமில், என் சுபாவத்துக்கேற்ற துணிகளால் எனது சிருஷ்டிகர் சுற்றப்பட்டிருப்பதைப் பார்ப்பதும், நாசரேத்தூரில், எனது நீதிபரர் மறைவான அந்தரங்க வாழ்வு வாழ் வதைக் கண்ணோக்குவதும், கல்வாரி மலையில், இரத்தக் கறை படிந்த பரிவட்டச் சீலையின்கீழ் சுயஞ்சீவியரானவரை ஆராதிப் பதுமே என்னைப் பரவசப்படுத்தி, ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தக் கூடியவை. இந்த மூவகை மறுரூபத்தில் அவர் எனது சொந்தமாகி, எனது சொந்த சகோதரனாகி, என்னைப் போல் ஆவதால், நான் அவரை எவ்வளவாக நேசிக்க வேண்டுமென்றும், அவரது இருதயத்தை எத்துணை மட்டற்ற நம்பிக்கையோடு அண்டிப் போக வேண்டுமென்றும், தாபோர் மலை மகிமை மகத்துவத்தில் அறிவதை விட அதிகமாய் அறிந்துகொள்கிறேன். தாபோர் மலையில் ஒரு நிமிடத்துக்கு அவர் தம்மை நமக்குக் காண்பிப்பதன் தன்மைக்கும், அவர் பெத்லகேமிலும், நாசரேத்திலும், கல்வாரியிலும் இருப்பதன் தன்மைக்கும் உள்ள அளவற்ற எதிர் வேற்றுமைதான், அவரது சிநேக பைத்தியத்தையும், ""அக்கிரமியுடைய மரணத்தை நாம் தேடுகிற தில்லை. அவன் தன் துர்வழியை விட்டு மனந்திரும்பிப் பிழைக்க வேண்டும் என்பதையே விரும்புகிறோம்'' (எசேக்.33:11) என்ற வாக்கியத்தின் பொருளையும், ""சிதறிப் போனதைத் தேடி இரட்சிக் கும்படியாகவே மனுமகனும் வந்திருக்கிறார்'' (லூக். 19:10) என்ற வசனத்தின் கருத்தையும் எனக்குத் தெளிவாய் எடுத்துரைக்கின்றது.
சேசுநாதருக்கு உன் மட்டிலுள்ள சிநேகம் உத்தம பரிசுத்த அமலோற்பவியான தமது திருத்தாயாரின் மட்டிலுள்ள சிநேகமல்ல என்பது உங்களுக்கு ஆறுதலாயிருக்க வேண்டும். தமது தாயாரின் மட்டில் அவருக்குள்ள சிநேகம் இணையற்றது. பரிசுத்தமும் பிரமாணிக்கமுமுள்ள சம்மனசுக்கள் மட்டில் அவருக்குள்ள சிநேக மும் உன் மீதுள்ள சிநேகம் ஆகாது. தவறிப் போன ஒரு சிறு ஆட்டுக் குட்டியைத் தேடுவதற்காக, மேய்ப்பன் மற்றத் தொண்ணூVற் றொன்பது பிரமாணிக்கமுள்ளவர்களையும் விட்டுப் போனான் என்பதை மறந்து போகாதீர்கள். உங்களில் ஒவ்வொருவரையும் இது குறிப்பிடுகிறது. அவருக்கு உங்கள் மேலுள்ள சிநேகம், வெண்பனி போல் தூய்மையும், உருக்கப்பற்றுதலும் உள்ள அருமையான ஆத்துமங்களின் மட்டில் அவருக்குள்ள சிநேகமுமல்ல என்று சொல் வேன். இந்த ஆத்துமங்கள் தங்கள் வீரியத்தாலும், தவறாத பிரமாணிக்கத்தாலும் அவருக்குப் பிரியமுள்ளவர்களாகி, அவரது இருதயத்திற்கு எப்போதும் பசுமையாயிருக்கிறார்கள், இருப்பார்கள். மற்ற எவரும் பாடக்கூடாத கீதத்தை எப்போதும் பாடிக் கொண் டிருப்பவர்கள் (காட்சி. 14:3). அவர்கள் அன்பின் அரசரின் அரவணைப்புக்குத் தகுதி பெற்றவர்கள். ஆனால் நிர்ப்பாக்கிய நன்றி கெட்ட பாவிகளில் பெரும்பான்மையோர் மட்டில் அவர் காட்டுகிற அன்பு இரக்கமுள்ள அன்பு, சரியாய்ச் சொல்ல வேண்டுமானால், மட்டற்ற தயை தாட்சணியம் அது. வார்த்தையானவர், இரட்சகரான தேவன், ஒரு சிறு ""சேற்றை'' நட்சத்திரமாக மாற்றும்படி, சதுப்பு நிலத் தில் இறங்கி வருகிறார்; அந்தச் சேறு, தாழ்ச்சியுடன் ஆண்டவரது இரக்கத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே நட்சத்திரமாகும்.
இந்த வித்தியாசங்களை எடுத்துக் காண்பிப்பது அவசியம். சேசுநாதரின் ""இரக்கப் பெருக்கத்தின் சிநேகம்'' என்று குழந்தை தெரேசம்மாள் பெயரிட்டுச் சொல்வதைத் தெளிவாய் விளக்கு வதற்கும், நீங்கள் அதை உங்களால் இயன்றமட்டும் மதிப்பதற்கும் இது அவசியம். பரிசுத்த ஆத்துமங்களை அலங்கரித்து அர்ச்சிக்கிற சிநேகம் வேறு, விலைமதிக்கப்படாத இரத்தத்தால் பாவிகளின் ஆத்துமங்களைப் பரிசுத்தப்படுத்தி உயிர்ப்பிக்கிற சிநேகம் வேறு. இந்த இரக்கமுள்ள சிநேகத்தின் தயவுக்கு நாம் ஒருக்காலும் தகுதியுள்ளவர்களாக ஆக முடியாது. நாம் பாவிகள், நமது அக்கிரமங் களின் பாரத்தை அவர்மேல் சுமத்தியிருக்கிறோம். ஜீவியத்தின் ஆண்டவரைச் சிலுவையில் அறைந்து கொன்று, அவரது மரணத் தீர்ப்பை நிறைவேற்றினவர்களை விடப் பெரிய குற்றவாளிகளா யிருக்கிறோம். நாம் எல்லோருமே அவரை அடித்து, நமது கரங்களை அவரது இரத்தத்தால் கறைப்படுத்தியிருக்கிறோம். அவரோ, நமக்கு மன்னிப்பளித்து, தமது இருதயத்தையும், சிநேகத்தையும் நமக்குக் கொடுக்கத் தமது கரங்களை நீட்டுகிறார். நம்மீது சர்வேசுரனுக்குள்ள சிநேகத்தின் உக்கிரம் இது. ஆதலால், பயம் அல்லது அவநம்பிக்கை என்னும் பாவத்துக்குக் காரணம் கூற முடியாது. அது மன்னிக்கக் கூடாத குற்றம் என்று சொல்லலாம். இரு பாதாளங்கள் ஒன்றை மற்றொன்று இழுத்துக் கொண்டிருக்க, அவரது இருதயம் நமது இருதயத்தை ஆவலாய் நாடி வருகையில், நமது அக்கிரமக் குழியிலிருந்துகொண்டு, நமது நம்பிக்கைக் குறைவின் நிமித்தம், மன்னிப்பும், உயிருமான அவரது இருதய பாதாளத்தால் நமது மரண பாதாளத்தை மூடிவிடத் தேடி வருகிறவருக்கு, இடம் கொடுக்க மாட்டோம் என்று சொல்லவும் கூடுமா?
அவரது விண்ணப்பங்களுக்குச் செவிசாய்க்காமல் எதிர்த்து நிற்பதற்கு தங்களது தகுதியின்மையையும், சங்கையையும் சிலர் காரணமாகக் கூறுவார்கள். அவர் தமது உருக்கத்தின் திரவியங் களையெல்லாம் தமது இஷ்டம்போல் கைம்மாறின்றிக் கொடுக்க முடியாதது போலவும், அல்லது அவர் நீதிமான்களுக்கே சொந்தம் என்பது போலவும், அல்லது அவரது வரங்களை அடையத் தகுதி யுள்ளவர்கள் என்று எண்ணிக்கொள்பவர்களின் சுதந்தரம் என்பது போலவும், இவர்கள் சொல்கிற நியாயம் இருக்கிறது. சர்வேசுரன் தமது முடிவில்லாத வாழ்வை நமது வாழ்வோடு இணைக்கத் தேடுவது மிதமிஞ்சின தன்மையைக் காட்டும் தப்பிதம் போலவும், இந்தத் தப்பிதத்தை இந்தக் கிறீஸ்தவர்கள் சரிப்படுத்தப் பார்க் கிறார்கள் என்றுமல்லவா சொல்ல வேண்டும்? இதன் நிமித்தமே, அவர் முன்னேறி வரும்போது, இவர்கள் பின்னிடுகிறார்கள். ""வருந்திச் சுமை சுமக்கிறவர்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள்'' என்று அவர் சொல்லும்போது, இவர்கள் சுவிசேஷத்தில் கூறியிருக்கிற பேய்பிடித்தவர்களைப்போல, ""சேசுவே, சர்வேசுரனுடைய குமாரனே, உமக்கும், எங்களுக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வதைப்பதற்கு இங்கே வந்தீரோ?'' என்று இரைச்சலிட்டுக் கூவுவது போல் தோன்றுகிறது. அந்த நிர்ப்பாக்கிய ஆத்துமங்கள் அவரை விட்டு ஓடிப் போகிறார்கள். நடுத்தீர்ப்பதற்காக வீற்றிருக்கிற பிதாவுக்கும், குற்றவாளிகளாகிய நமக்கும் இடையில் இரக்கமுள்ள சுதன் வந்து, குற்றமுள்ள நாம் மன்னிப்படைந்து நமது தேவனாகிய பிதாவிடம் நெருங்கிப் போவதற்கு நம்பிக்கையின் பாலமாகத் தம்மையே நிறுவி வைத்திருக்கிறார் என்பதை இவர்கள் மறந்து போகிறார்கள். ""என் சிறிய பிள்ளைகளே, இந்தப் பாலத்தின் வழி யாய்க் கடந்து போங்கள். ஏனெனில் நானே சிலுவையில் அறையுண் டவர்; பயப்படாதீர்கள், அதன் வழியாய்ப் போங்கள்'' நானே பாதை. நீங்கள் ஏன் நடுங்குகிறீர்கள்? என் சிலுவையையும், கல்வாரியையும், எனது நற்கருணையையும் தியானித்துக்கொண்டு அதன் வழியாய்க் கடந்து போங்கள். சமாதானமாய், முழு நம்பிக்கையோடு முன்னேறிப் போங்கள். எனது உருக்கத்தின் பாதாளத்தைக் கொண்டு உங்கள் பயத்தின் பாதாளத்தை நிரப்ப விரும்புகிறேன்; ஆனால், நான் எனது மனித அவதாரத்தாலும், நற்கருணையாலும் அடக்கி வைத்த, "தனக்கென்று வைத்துக் கொள்ளுதல்' எனும் பாதாளத்தை மீண்டும் திறக்காதீர்கள்'' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அற்ப விசுவாசமுள்ள ஆத்துமங்களே, உங்களுடைய மிகப் பெரிய குற்றம், மற்ற அநேக குற்றங்களுக்கு ஊற்றாயிருப்பது, எனக்கு மிகுந்த நிந்தையை உண்டுபண்ணுவது, உங்களது நம்பிக்கையின்மை என்று உணர்கிறீர்களா? நடுங்கிக் கொண்டிருக்கிற ஆத்துமங்களே, உங்கள் பாவசங்கீர்த்தனங்களைப் பற்றி திருப்தி அடையாமல், ஏற்கெனவே வெளிப்படுத்தின பாவங்களின் மன்னிப்பைப் பற்றிச் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறவர்களே, இப்போது சொல்லப் போகிற சரித்திரத்தைக் கேளுங்கள்.
சேசுநாதர் ஒரு கொடுங்கோலன் என்று நினைக்கிற அநேக ஆத்துமங்களில் ஒன்று, நூறாவது தடவையாகப் பொதுப் பாவசங்கீர்த் தனத்துக்கு ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தது. ஞான ஒடுக்கத்தின் நாட்கள் முழுவதும் அவள் தனது வாழ்நாளின் பாவங்களை எழுதித் தீர்ப்பதில் செலவழித்தாள். ஜெபிக்கவுமில்லை, தியானம் செய்யவு மில்லை. ஆத்தும சோதனை செய்வதிலேயே அமிழ்ந்து கிடந்தாள். கடைசியாய்ப் பாவசங்கீர்த்தனத் தொட்டியருகில் போய், தனது பாவங்களின் பட்டியலை வாசித்து, சொன்னதையே திருப்பிச் சொல்லிக்கொண்டும், மீண்டும் மீண்டும் பயத்தோடும், நடுக்கத் தோடும் விபரமாய் விளக்கிக் கொண்டுமிருந்தாள். இறுதியில், சகலமும் முடிந்ததென்று நினைத்தபொழுது, ""மிகவும் முக்கியமான ஒரு காரியத்தை மறந்து விட்டாயே'' என்று சாந்தமாயும், துயர மாயும் சொன்ன ஒரு குரல் சத்தம் கேட்கப்பட்டது. அவள் உடனே, ""அப்படித்தான் நானும் நினைத்தேன்'' என்று பயத்துடன் பதில் கூறி அவசரம் அவசரமாய்ச் சகலத்தையும் இன்னுமொரு தடவை வாசிக்கத் துவக்கினாள். ""உன் பாவம் உன் குறிப்புகளில் இல்லை. அது நீ சொன்னதெல்லாவற்றையும் விட எனக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கிறது. உனக்கு நம்பிக்கை கிடையாது என்று சொல்'' என்று அதே குரல் சப்தித்தது.
இந்தக் குரற்சத்தம் அவளது உள்ளத்தை ஊடுருவிப் பாய்ந்தது. இவ்விதம் பேசியது தனது ஆத்தும குருவானவர்தானா என்று நிச்சயித்துக் கொள்ளும்படி, தொட்டியினுள்ளே உற்றுப் பார்த்தாள். அங்கே ஒருவரையும் காணோம்! சேசுநாதர் அவளுக்கு உத்தம படிப்பினையொன்று கற்பிக்கும்படி வந்து போய்விட்டார்.
பொதுப் பாவசங்கீர்த்தனம் உதவாதென்று நாம் சொல்ல வரவில்லை. குறிப்பிட்ட வேளைகளில் அது மிகுந்த பயனுள்ளது. ஆனால் நம்பிக்கையற்றுப் பயம் கொண்டு மிதமிஞ்சின கலக்கத் துக்கு இடங்கொடுப்பது, நமது திவ்விய இரட்சகரது இரக்கத்துக்குப் பங்கம் வருவிப்பதால், தண்டனைக்குரியதாகிறது. அவரால் குண மடைந்த குருடர், குஷ்டரோகிகள், திமிர்வாதக்காரர் இவ்வித தர்க் கத்துக்கு இடங்கொடுத்து, தங்கள் தகுதியின்மையால் தங்களுக்குக் கிடைத்த உடல் நலத்தைப் பற்றி சந்தேகித்திருப்பார்களாகில், தங்கள் நன்றிகெட்டதனத்துக்கும், அவநம்பிக்கைக்கும் எப்போதும் ஆணிவேராயிருக்கிற அகந்தைக்கும் தண்டனையாக பழையபடி வியாதிப்படவும், இன்னும் அதிக வேதனைப்படவும் தகுதி யுள்ளவர்களாயிருந்திருப்பார்கள். யூதாஸ் கட்டிக்கொண்ட கனமான குற்றம், அவன் செய்த சதியையும், புரிந்த தற்கொலையையும் விடக் கனமான குற்றம், சேசுநாதர் இராப்போசன வேளையில் முழங் காலில் நின்று அவனுடைய பாதங்களைக் கழுவிய போது, அவனுக்குக் காட்டின இரக்கத்தின் மட்டில் நம்பிக்கை கொள்ள மறுத்ததேயாகும்.
சுவிசேஷத்தை நாம் மாற்றலாகாது. அவ்விதம் செய்ய எவருக்கும் உரிமையில்லை. ஆண்டவர், ""நீதிமான்களுக்காக அல்ல, பாவிகளுக் காக, செளக்கியமுள்ளவர்களுக்காக அல்ல, வியாதியஸ்தர்களுக் காகவே'' வந்தார் (மாற்கு. 2:17). இத்தகைய தயவிரக்கத்துக்கு ஈடாக அவர் கேட்பது, எதார்த்தமும் தாழ்ச்சியும் உள்ள பச்சாத்தாபத்துக்கு அடையாளமான, நம்பிக்கை நிறைந்த சிநேகமேயாகும். இதைக் கண்டுணராதவன், சேசுவின் திரு இருதயத்தில் மகா அருமையும் அழகும் வாய்ந்ததைக் கண்டுணர்வதில்லை.
காயப்பட்ட அவரது திருவிலாவை அண்டிப் போக உனக்கு எந்தத் தடங்கலும் இருக்கக் கூடாது. உன் பாவங்கள் உனக்குத் தடை என்பாயோ? அவர் அவைகளைத் தமது இரத்தத்தால் சுத்திகரித்து விட்டார். உனது தகுதியின்மை என்பாயோ? அது உன்னை விட அவருக்கு ஆயிரம் மடங்கு அதிக நன்றாய்த் தெரியும். நீ தாழ்ச்சி யோடும், உறுதியோடும் அவரது சிநேகத்தை நம்ப வேண்டும் என்று மாத்திரம் அவர் கேட்கிறார்.
கடைசியாய், ""சங்கை'' என்ற வார்த்தையைத் தவறாகப் பயன் படுத்தாதே. இந்த வார்த்தைக்குள் மிக அருவருப்புக்குரிய "ஜான்சனியம்' என்னும் பதிதம் மறைந்து கிடந்திருக்கிறது. உனது தந்தையும், தாயும் இரட்சகருமான அவர் மட்டில் நம்பிக்கையாயிரு. நம்பிக்கையாயிருப்பது, ஒருக்காலும் சங்கைக் குறைவாகாது. அவர் தமது திரு இருதயத்தை நமக்குக் கொடுக்க வரும்போது, அவரது அழைத்தலுக்குக் கீழ்ப்படிவது வணக்கக் குறைவு ஆகாது. நீ இன்னும் சரியாய் சுத்தமாகவில்லை என்றாவது, அல்லது தகுதியாகவில்லை என்றாவது சாக்குச் சொல்லி, அந்த அழைத்தலை எதிர்த்து நிற்பது, நுட்பமான அகந்தையாகும். இதுவே உன் நிலைமை என்றிருக்குமானால், உன்னிடம் ஏராளமாயிருப்பது சுயபட்சம், குறைவாயிருப்பது சேசுவின் சிநேகம் என்று தெளிவாய் ஒப்புக் கொள். நீ சிநேகித்தால் வேறு விதமாய் நினைப்பாய். ஏனெனில் நம்பிக்கைக்கு உடன்பிறந்த சகோதரியாகிய தாழ்ச்சி அத்தகைய நிலை கொள்ள முடியாது. ""சிநேகித்துக் கொண்டு, உன் இஷ்டம் போல் செய்'' என்று அர்ச். அகுஸ்தீனார் காரணமில்லாமல் சொல்லவில்லை. ஆம், உன் இஷ்டம் போலச் செய்யலாம்; ஏனெனில் மெய்யான சிநேகம் உனக்கு ஆலோசனை சொல்வதாயிருக்கையில், உன் சிநேகத்துக் குரியவருக்கு வருத்தம் உண்டாகுமோ என்று பயப்பட வேண்டிய தில்லை. இஸ்பிரீத்துசாந்துவின் வருகைக்கு முன், ""ஆண்டவரே, நான் பாவியான மனுஷன்; என்னை விட்டு அகலும்'' (லூக்.5:8) என்று அர்ச். இராயப்பர் சொன்னது வெகு நேர்த்தியானதுதான். ஆயினும் அவர் தவறிப் போனார்! ஆனால் இஸ்பிரீத்துசாந்துவின் மகத்தான பிரகாசத்தால் மட்டற்ற தேவ தயாளத்தையும் தமது பலவீனத்தையும் கண்டுணர்ந்தபின், ""ஆண்டவரே, என்னை விட்டு அகலாதேயும். என்னருகில் வாரும், என் கிட்ட வந்தருளும், ஏனெனில் நான் பெரும்பாவி'' என்று அடிக்கடி சொல்லியிருந்திருக்க வேண்டும்.
அர்ச். பிரான்சிஸ் அசிசியார், அர்ச். சிலுவை அருளப்பர், அர்ச். பிரான்சிஸ் சலேசியார், அர்ச். சின்னப்பர், இவர்கள் பரிசுத்த வாழ்வின் சிநேகத்தின் இரகசியத்தை எங்கு கண்டடைந்தார்கள் என்று கேள். சேசுநாதருக்கு வெளியே அல்ல, கபடின்மை மற்றும் நம்பிக்கை என்ற பாதையால் அவரோடு நெருங்கி ஒன்றித்திருக்க வேண்டுமென்ற ஆவலில்தான் அந்த இரகசியம் அடங்கியிருந்தது. குழந்தை தெரேசம்மாளின் தேவ சாஸ்திரம் ஆத்துமங்களில் புதிதான ஞானப் பிறப்பை உண்டுபண்ணுகிறது என்பது சிறந்த ஆசிரியர் களின் முடிவு. ஆண்டவரின் மடியில் அமர்ந்து, அவரது அரவணைப் பின் மட்டில் ஆவல் கொண்ட சிறு பிள்ளைகள், குழந்தை தெரேசம் மாளுக்கு வெகு காலத்துக்கு முந்தியே, சிநேகம் ஒற்றுமைக்கு வழியென்றும், அது மட்டற்ற நம்பிக்கையைக் காட்டுகிறதென்றும் அறிந்து கொண்ட தேவ சாஸ்திரமே குழந்தை தெரேசம்மாளின் அதிசயத்திற்குரிய சாஸ்திரம். இதை அவள் சுவிசேஷத்திலன்றி வேறெங்கே படித்தாள்? இது சுவிசேஷத்தின் பரிசுத்த பரம வாசனையல்லவா? யார் அதிகமாய் நேசித்தார்கள், சிறு பிள்ளைகளா, சேசுநாதரா? ஏதாவது மிதமிஞ்சியிருந்தால், அது சேசுநாதரின் உருக்கமும், தாட்சணியமுமே. பிள்ளைகளின் ஆத்துமங்கள் தங்கள் கபடின்மையால், சிநேகத்தின் உன்னதத்தையும், மாட்சியையும் எப்போதும் கண்டுணரும் சுதந்திரம் பெற்றிருந்திருக்கின்றன. அவரது மடியில் உட்கார்ந்து, தங்கள் சிநேகிதரின் இருதய அசைவு ஆட்டத்தை உற்றுக்கேட்க, ஒருவர் ஒருவரோடு போட்டி போட்ட சிறு பிள்ளைகள் பக்கம்தான் நான் சேர்வேனேயன்றி, அத்தகைய உறவாடலைக் கண்டித்து, அதைக் கண்டுணராமல் விலகி நின்ற அப்போஸ்தலர்கள் பக்கம் சேர எனக்குப் பிரியமில்லை. வாழ்விலும், மரணத்திலும் அந்தப் பிள்ளைகளின் கபடின்மை, நம்பிக்கை, அவர்களுக்குக் கிடைத்த இடம்தான் நான் ஆசிப்பது.
உன் பாவங்களின் நினைவால் உன்னை ஆண்டவரிடமிருந்து பிரிக்கப் பார்க்கிற பசாசின் தந்திரம் எவ்வளவு வஞ்சகமுள்ளதென்று உனக்குத் தெரியாது. அதைரியத்துக்கும், அமிழ்ந்திப் போவதற்கும் இடையே ஒரு அடிதான் உண்டு. சமாரியா ஸ்திரீயிடம் சேசுநாதர் காட்டின அன்பைத் திவ்ய நற்கருணைக்கு முன்பாக சிறிது நேரம் சிந்தித்துப் பார். இந்தப் பெரும் பாவியோடு பேசமாட்டேன் என்றாரா? பரிசுத்தமே உருவான அவரை அண்டி நெருங்கியிருந் ததின் நிமித்தம் அவள் தன்னைப் பற்றி வெட்கப்பட்டுப் போகும் படியான விதத்தில் அல்லது தொனியில் பேசினாரா? அவ்விதம் நெருங்கியதால் உண்டான பயன் யாது? சமாரிய ஸ்திரீ நாணி ஓடிப் போனாளா, அல்லது நம்பிக்கை மிகுந்து, துக்கப்பட்டு மனந்திரும்பி னாளா? நம் சொந்த நன்மையையும், ஆத்துமங்களின் நன்மையையும் கருதி, இந்தப் பாடத்தை மனதில் ஆழமாய்ப் பதித்துக் கொள்வோ மாக! சகலவிதத் தீமையும் சேசுநாதரிடமிருந்து பிரிந்து போவதால் ஆரம்பித்து, முதிர்ச்சி அடைகிறது. சகல புண்ணியங்களுமோ விசேஷமாய் பச்சாத்தாபம், தாழ்ச்சி என்ற புண்ணியங்கள் இரட்சக ருடைய இருதயத்தருகில் நம்மைக் கொண்டு வந்து சேர்க்கின்றன.
இவ்வித நெருங்கின உறவை நாடுகையில், சில சமயங்களில் உனது குறைகள் திருந்தி வருவதாக உனக்குத் தோன்றவில்லை என்றால், சேசுநாதரை அண்டி நெருங்கினதால் இது நேர்ந்ததென்று எண்ணுவது தவறு. அதை எப்போதும் உணர முடியாது. சிநேக நம்பிக்கை வாழ்வில் வெகு காலம் சென்றபின், முன்னைவிட இப்போது உன் சுபாவக் குறைகள் உனக்கு அதிகத் தெளிவாய்த் தோன்றுவதாகவும் நேரிடக் கூடும். சேசுநாதரோடு நெருங்கி வாழ்ந்ததால் இது நேர்ந்ததென்று அர்த்தமா? அதற்கு முழுவதும் விரோதமாய், அவருடைய இருதயத்தினின்று கிளம்பும் தேவ ஒளி அதிகப் பிரகாசம் கொண்டு ஜொலிப்பதால், நீ முந்தின காலத்தில் மங்கலான வெளிச்சத்தில் கண்டுகொள்ள முடியாத அணுக்கள் எல்லாம் இப்போது உன் கண்களுக்குப் புலப்படுகின்றன. நீ குண மடைந்த பிறகும், உன் பாவத்தின் அயர்வை உணரும்படி அவர் விட்டுவிடுவதுண்டு. நீ உன் பாவத்துக்குப் பரிகாரம் செய்யவும், தாழ்ச்சியின் மூலமாக பூரண சுகம் உனக்குக் கிடைக்கும்படியும் இவ்விதம் செய்கிறார்.
ஏற்கெனவே உனக்குச் சொன்னபடி, உன்னையே அறிய வேண்டுமானால், சேசுநாதரின் கண்களாகிய முகக் கண்ணாடியில் பார். அவரது இருதய சூரியன் நீ யாராக இருக்கிறாய் என்று உனக்குக் காண்பித்து, அதன் இரக்கப் பெருக்கத்தின் தரிசனையால் உனக்கு ஆறுதல் அளிக்கும். நாம் சுவிசேஷத்தைக் கவனமாய் வாசித்தால், சேசுநாதர் பாவிகளின் ஆத்துமங்களை ஆவலுடன் தேடினார் என்று கண்டுகொள்வோம். நல்ல மேய்ப்பன், சமாரியன், மதலேனாள், விபச்சாரத்தில் அகப்பட்ட ஸ்திரீ, ஆயக்காரரோடு உணவருந்தியது, இவைகளைப் பற்றி எழுதியிருக்கிற விவரங்களை யோசித்துப் பார்ப் போமானால், சேசுவின் இரக்கமுள்ள திரு இருதயம் அவர்கள் மீது பரிதாபங்கொண்டு துடிப்பதாகவே காண்போம். அந்த ஆயக் காரர்கள் இப்போதும் இருக்கிறார்கள். நாமே அப்பேர்ப்பட்ட வர்கள்தான். நாம் ஆயக்காரராயிருப்பதாலேயே சேசுநாதர் நம்மை ஆவலோடு தேடி வருகிறார். ஆதலால் நமது தெய்வீக வைத்தியருக்கு நாம் செய்யக் கூடிய ஏக கைம்மாறு, நம்பிக்கையால் ததும்பி நிற்கும் இருதயத்தை அவருக்குக் கொடுப்பதுதான் என்று திட்டமாய் அறிந்து கொள்வோமாக. ""நம் நம்பிக்கை ஒருக்காலும் மிதமிஞ்ச முடியாது'' என்று சொல்வாள் குழந்தை தெரேசம்மாள்.