தேவ நற்கருணை
கடும் பாவ சோதனைகள் உன்னைக் கலக்குகிறதா? நித்தியத்தைப் பற்றிய அச்சத்தால் நீ உன் ஆத்துமத்தின் சமாதானத்தை இழந்து போகிறாயா? நம் இரட்சகர் ஏக்கத்தோடு உனக்காகக் காத்திருக்கிற திருப்பந்திக்கு விரைந்து வந்து அவரைப் பெற்றுக்கொள்.
திவ்விய நற்கருணை உட்கொள்ளும் ஒரு வாய்ப்பைக் கூட இழந்து போகாதபடி கவனமாயிரு. அப்போது அவரே உன் பலமாயிருப்பார். நீ அவரால் பொதியப்பட்டு பத்திரமாயிருப்பாய்.
அவரே உன் சத்துருவோடு உன் சார்பாகப் போராடி வெல்லுவார். இதுவே அவருடைய மகிழ்ச்சியாயிருக்கிறது, ஏனெனில் உன் ஆத்தும இரட்சணியத்திற்காகவே அவர் மனிதனாய் அவதரித்தார்.
அதற்காகவே அவமானச் சிலுவை மரணத்திற்குத் தம்மைக் கையளித்ததோடு, அளவற்ற கொடிய வியாகுலத்திற்குத் தம் மகா பரிசுத்த திருமாதாவையும் உட்படுத்தினார். நம் இரட்சணியமே அவருடைய உன்னத சந்தோஷம்.
திவ்விய பலி பூசை
இது தேவசிநேகத்தின் உந்நதமான அற்புதம்; கடவுளின் மாபெரும் சாதனை. இதிலே நம் பேரில் தாம் கொண்டுள்ள சிநேகம் முழுவதையும் அவர் நம் பார்வைக்கு வைக்கிறார் (அர்ச். பொனவெந்தூர்).
உத்தமமான விதத்தில் திவ்விய பலி பூசையில் பங்கடைகிறவன் சேசுவோடு தானும் பாவப் பரிகாரப் பலியாகிறான், அவருடைய மரணத்துக்கு ஒத்த சாயலாகிறான் (பிலிப். 3:10).
இவ்வுலகத்தை விட்டு நாம் புறப்பட்டதும், நம் ஆன்மாக்களுக்காக திவ்விய பலிபூசை நிறைவேற்றப் படுவதை விட அதிகமாக நாம் வேறொன்றையும் ஆசிக்க மாட்டோம்.
பீடத்தின் திவ்விய பலியே அனைத்திலும் அதிக வல்லமையுள்ள மத்தியஸ்த ஜெபமாக இருக்கிறது. ஏனெனில் அது ஒவ்வொரு ஜெபத்திற்கும், ஒவ்வொரு தவ முயற்சிக்கும், ஒவ்வொரு நற்செயலுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது.
பூசை என்பது சிலுவையில் நமதாண்டவர் ஒப்புக்கொடுத்த அதே பலிதான் என்பதையும், இப்போது அப்பலியை அவர் அதன் அளவற்ற பரிகார மதிப்புடன் ஒப்புக்கொடுக்கிறார் என்பதையும் நாம் நினைவுகூர்வோம் என்றால், மேற்கூறிய காரியத்தைப் புரிந்து கொள்வது நமக்குக் கடினமாயிராது.
பலியிடப்பட்ட சேசுநாதர் “நம் பாவங்களுக்குரிய பரிகாரப் பலியாக” இருக்கிறார் (1அரு. 2:2). அவருடைய திவ்விய இரத்தம் “பாவ மன்னிப்புக்காக” சிந்தப்படுகிறது (மத்.26:28).
இந்தப் பயன்மிக்க திவ்விய பலியில் நாள்தோறும் அன்போடும், தாழ்ச்சியோடும், அர்ப்பண உணர்வோடும் பங்குபெற நாம் உண்மையாகவே முன்வருவோம் என்றால், நரகத்தை மட்டுமல்ல, மாறாக உத்தரிக்கிற ஸ்தலத்தின் சுத்திகரிக்கிற நெருப்பையும் கூட தவிர்த்து விடுவோம் என்பதில் நாம் உறுதியாயிருக்கலாம்.
நம் அனுதின வாழ்வில், திவ்விய பலி பூசையை மற்ற எந்த நன்மைக்கும் மேலான நன்மையாக நாம் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அர்ச். பெர்னார்ட் கூறுவது போல, ஒருவன் தன் உடமையெல்லாம் ஏழைகளுக்கு வாரி வழங்கி, உலக முழுவதும் திருயாத்திரை சென்று சம்பாதிக்கக்கூடிய ஒட்டுமொத்த பேறுபலனைவிட, ஒரேயொரு பூசையில் பக்தியோடு பங்கு பெறுவதன் மூலம் அதிக பேறுபலன்களை சம்பாதிக்கிறான். இது வேறு எப்படியும் இருக்கமுடியாது.
ஏனெனில் உலகில் பூசையின் அளவற்ற மதிப்பை வேறு எதுவும் கொண்டிருக்க முடியாது.
மனிதன் உன்னதமான முறையில் கடவுளை மகிமைப்படுத்தவும், சந்தேகத்திற்கு இடமின்றி தன் ஆத்துமத்தைக் காத்துக் கொள்ளவும் திவ்விய பலி பூசையை விட அதிக உத்தமமான சாதனம் வேறெதுவுமில்லை.