(20 முதல் 26-ம் நாள் முடிய)
நோக்கம்: மாதாவை அறிதல்.
நாம் மாமரித் தாயின் அன்பை உணர்ந்து கொள்வதுதான் அவர்களை அறிவதாகும்.
மரியாயின் ஈடு இணையற்ற புண்ணியங்களை நாமும் கண்டு பாவித்தால் அவர்களை அறிந்தவர்களாவோம்.
மாதா நித்தியத்திலே கடவுளால் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள். ஜென்மப் பாவமில்லாமல் முழுவதும் பரிசுத்த அமலோற்பவமாய் இருப்பவர்கள். சர்வேசுரனுடைய சகல வரப்பிரசாதங்களும் வந்து குவியும் பாத்திரமாயிருப்பவர்கள். எல்லாம் வல்ல கடவுளைப் பெற்றெடுத்த பாக்கியவதி அவர்களே. பிதாவின் குமாரத்தியும் சுதனின் கன்னிமை குன்றாத அன்னையும் பரிசுத்த ஆவியின் பத்தினியுமாக இருந்து சகலருக்கும் உற்ற தாயாக இருக்கின்றார்கள். சேசு கிறிஸ்துவுடன் இணைந்து பாடுபட்டு உலகத்தின் இணைமீட்பராக மாதா இருக்கிறார்கள். சகல வரப்பிரசாதங்களுக்கும் மத்யஸ்தியாய் சேசு கிறிஸ்துவுக்கும் மனுக்குலத்துக்கும் நடுவில் பாலமாக விளங்குகிறார்கள். ஆத்தும சரீரத்தோடு மோட்சத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இன்று அங்கே வாழ்கிறார்கள். பரலோக பூலோக அரசியாக பரிசுத்த தமதிரித்துவத்தினால் முடி சூட்டப்பட்டு சர்வ வல்லமையுள்ள இராக்கினியாக உலகைப் பரிபாலனம் செய்து வருகிறார்கள்.
இவ்வளவு சிறப்புப் பெற்ற மாமரி நம் அன்புத் தாயாக இருக்கிறார்களே! அவர்களை உள்ளபடி அறிய நம்மால் கூடுமா? சம்மனசுக்களே இவ்வன்னையைப் பற்றி அறிந்துள்ளதைவிட அறியாத மகிமைகள் அதிகம் என்று அர்ச். லூயிஸ் மோன்போர்ட் கூறியுள்ளார். அப்படியானால் நம்மால் இத்தாயை முழுவதும் அறிந்து கொள்ள இயலுமா? ஆயினும் அறிவு அறியாததை அன்பு புரிந்து கொள்ளும். பிள்ளைக்குரிய அன்போடு நாம் நம் தாயைப் பற்றிப் புரிந்து கொள்ள இவ்வேழு நாட்களிலும் முயற்சி செய்வோம்.