அர்ச். அருளப்பர் எழுதிய மூன்றாம் நிருபம்

அப்போஸ்தலரான அர்ச். அருளப்பர் எழுதிய
மூன்றாம் நிருபம்




அர்ச். அருளப்பர் எழுதிய மூன்றாம் நிருபம் - அதிகாரம் 01

அர்ச். அருளப்பர் காயு என்பவனிடத்திலுள்ள பிறர்சிநேகத்தைப் புகழ்ந்து, தியோத் திரப்பன் என்பவனுடைய கெட்ட நடக்கையைக் கண்டித்து, தெமேத்திரியு என்பவனைப் பற்றி நற்சாட்சி சொல்லுகிறார்.

1. மூத்தோனாகிய நான் மெய்யாகவே சிநேகிக்கிற மிகவும் பிரியமான காயு என்பவனுக்கு எழுதுவது:

2. எனக்கு மிகவும் பிரியமுள்ளவனே, உன் ஆத்துமம் நன்றாய் வாழ்ந்திருப்பதுபோல், நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படிக்குப் பிரார்த்திக்கிறேன்.

3. சகோதரர் வந்து, நீ சத்தியத்தில் நடக்கிறாயென்று உன்னுடைய உண்மையைக் குறித்துச் சாட்சி கொடுத்ததினால், மிகவும் சந்தோஷப்பட்டேன்.

4. என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப் படுகிறதைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு வேறே இல்லை.

5. எனக்கு மிகவும் அன்பனே, நீ சகோதரர்களுக்கும் விசேஷமாய் அந் நியர்களுக்கும் செய்கிற யாவற்றையும் பிரமாணிக்கமாய்ச் செய்கிறாய்.

6. அவர்கள் உன்னுடைய சிநேகத்தைக் குறித்துச் சபைக்கு முன்பாகச் சாட்சி சொன்னார்கள். நீயும் அவர்க ளைத் தேவசமுகத்துக்கு ஏற்கையான படி வழிவிட்டு அனுப்புவது நலமா யிருக்கும்.

7. ஏனெனில், அவர்கள் புறஜாதியார்களிடத்தில் ஒன்றும் வாங்காமல், அவருடைய நாமத்தினிமித்தம் பயணப்பட்டார்கள்.

* 7. இப்பேர்ப்பட்டவர்கள் பணத்துக்காக வேலை செய்கிறார்களென்று தோன்றாதபடி, அவர்களை விசாரிக்க வேண்டுமென்று அப்போஸ்தலர் சொல்லுகிறார்.

8. ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாய்இருக்கும்படி அப்படிப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ளுவது நமது கடமை.

9. நான் ஒருவேளை சபைக்கு எழுதியிருப்பேன். ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரப்பன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

10. ஆகையால் நான் வந்தால், துர்ச்சன வார்த்தைகளால் அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பிதற்றி, செய்துவருகிற கிரியைகளைப்பற்றிக் கண்டிப்பேன். அவன் அப்படிச் செய் வதும் போதாதென்றாற்போல், தானே சகோதரர்களை ஏற்றுக்கொள்ளாம லிருப்பதுமன்றி, ஏற்றுக்கொள்ளுகிற வர்களையும் தடுத்து, அவர்களைச் சபைக்குப் புறம்பாக்குகிறான்.

11. எனக்கு மிக அன்பனே, நீ தின்மையைப் பின்பற்றாமல், நன்மையைப் பின்பற்று. நன்மையைச் செய்கிறவன் சர்வேசுரனிடத்திலிருந்து வருகிறான். தின்மையைச் செய்கிறவன் சர்வேசுரனைக் காணாதவன்.

12. தெமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சியம் பெற்றிருக்கிறதுமன்றி, சத்தியத்தாலும் நற்சாட்சியம் பெற்றிருக்கிறான். நாங்களும் சாட்சியம் கொடுக்கிறோம். எங்கள் சாட்சியம் உண்மை என்பது உனக்குத் தெரியும்.

13. நான் உனக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு. ஆனால், மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனமில்லை.

14. சீக்கிரத்தில் உன்னைக் காண்பேன் என்று நம்புகிறேன். அப்பொழுது முகமுகமாய்ப் பேசிக்கொள்வோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு மங்களம் சொல்லுகிறார்கள். நீயும் சிநேகிதர்களுக்குப் பெயர்பெயராக மங்களம் சொல்லுவாயாக.


அருளப்பர் 3-ம் நிருபம் முற்றிற்று.