1920, பெப்ருவரி மாதம் 2-ம் நாள் தேவதாயின் சுத்திகரத் திருநாளன்று ஜஸிந்தாவை சகோதரி கோடினோ லிஸ்பனிலுள்ள டோனா ஸ்தெபானியோ மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்கள். அந்த ஆஸ்பத்திரி இருண்டதாயும், துயர தோற்றமாயும் இருந்தது.
குழந்தைகள் பிரிவில் 38-ம் எண் படுக்கையில் ஜஸிந்தா அனுமதிக்கப்பட்டாள். அங்கு மறைந்த சேசு வசிக்க கோவிலும் இல்லை. நற்கருணைப் பேழையுமில்லை. இதுவே அவள் அடைந்த முதல் வேதனை. தலைமை டாக்டர் அவளைப் பரிசோதித்து விட்டு, ஆப்பரேஷன் செய்வது அவசியம் என்றும், அதைத் தாங்கிக் கொள்ள ஓரளவேனும் அவள் உடல் நிலை தேற வேண்டுமென்றும் முடிவு செய்தார்.
இதைப் பற்றி ஜஸிந்தா அறிய வந்தபோது, “இதனால் எந்த நன்மையும் வராது. நான் சீக்கிரம் இறந்து விடுவேன் என்று நம் அன்னை என்னிடம் கூறினார்கள்” என்றாள்.
ஜஸிந்தா ஆஸ்பத்திரியிலிருக்கையில், அவள் தந்தை மார்ட்டோ அவளைப் பார்க்க வந்தார். வந்தவர் ஒரு சில மணி நேரத்தில் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. அவர் வழியாக அவள் லூஸியாவுக்குச் செய்தி அனுப்பினாள். தேவ அன்னை மீண்டும் அவளுக்குத் தோன்றி, அவள் சாகும் நாள், நேரம் இவற்றை முன்னறிவித்ததாக லூஸியாவுக்குத் தெரிவித்தாள்.
பெப்ருவரி மாதம் 10-ம் நாள் ஜஸிந்தா ஆப்பரேன் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். அவள் பலவீனமாக இருந்ததால், குளோரபாம் கொடுத்து அவளை மயக்காமல், ஊசிமருந்தால் ஆப்பரேஷன் செய்யப்பட வேண்டிய பாகத்தை மட்டும் உணர்ச்சியறச் செய்தார்கள். அச்சிறுமி உடுப்பெல்லாம் அகற்றப்பட்டு ஆண்களின் கையில் தான் விடப்பட்டதைக் கண்டு விம்மி அழுதாள்.
டாக்டர் அவளது இடது விலா எலும்புகளில் இரண்டை வெட்டி எடுத்தார். பொறுக்க முடியாத வேதனைப்பட்டாள் ஜஸிந்தா. ஊசி மருந்தெல்லாம் ஒரு அளவுக்குத்தான். போர்த்துக்கல் சாதாரண மக்கள் வாயில், “எங்கள் கன்னிகையே” என்றுதான் எந்த சந்தர்ப்பத்திலும் வரும். அதன்படியே பொறுக்க முடியாத அவ்வேதனை மத்தியிலே “எங்கள் கன்னிகையே,” “எங்கள் கன்னிகையே” என்றே சொல்லித் தன் வேதனைகளை மாமரியின் வழியாக சேசுவுக்கு ஒப்புக்கொடுத்தாள் ஜஸிந்தா.
(போர்த்துக்கல் மொழியில் “எங்கள் கன்னிகையே” என்று சொல்வது வாய்க்கு மிக எளிதானதாக இருக்கும்). “சேசுவே, உமது அன்பிற்காக... சேசுவே நீங்கள் அநேக பாவிகளை மனந்திருப்பலாம்... நான் மிக அதிகம் வேதனைப்படுகிறேன்” என்றும் கூறுவாள்.
ஆப்பரேஷன் படுக்கை அவளுக்குத் தாங்க முடியாத சிலுவை வேதனையாக இருந்தது. அதில் ஒரு துளி வேதனையைக் கூட வீணாக்காமல் மாமரியின் மாசற்ற இருதயத்தின் வழியாக சேசுவுக்கு அன்புடன் கொடுத்து பாவிகள் மனந்திரும்பும்படியாக வேண்டினாள்.
ஆப்பரேஷன் வெற்றிதான் என்று டாக்டர் திருப்திப்பட்டுக் கொண்டார். அவளை இந்தத் தடவை 60-ம் எண் படுக்கையில் சேர்த்தனர். அன்று முதல் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக ஜஸிந்தா அகோர வேதனைப்பட்டாள்.
பெப்ருவரி மாதம் 16-ம் நாளன்று அவள் சகோதரி கோடினோவிடம்: “தேவ அன்னை வெகு சீக்கிரம் என்னை அழைத்துப் போக வருவதாகவும், என் வேதனைகளை எடுத்து விடுவதாகவும் கூறினார்கள்” என்றாள். அதிலிருந்து ஜஸிந்தாவின் வேதனையெல்லாம் முழுதுமாக நின்று போயின.
தான் செல்லும் நேரம் மிகவும் நெருங்கி வருவதை ஜஸிந்தா உணர்ந்து கொண்டாள். பெப்ருவரி 29ம் நாள்! அன்று மாலை அவள் தன்னைக் கவனித்து வந்த தாதியிடம் தான் விரைவில் இறக்கப் போவதாகக் கூறி தனக்குக் கடைசித் தேவத்திரவிய அனுமானங்கள் தர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டாள்.
இரண்டு மணி நேரத்துக்குள் தேவ தூதர்களின் ஆலய பங்குக் குரு சங். பெரேய்ரா ரேயிஸ் அங்கு வந்து அவளுடைய பாவசங்கீர்த்தனத்தைக் கேட்டார். அப்பொழுது இரவு மணி 8. தனக்கு உடனே சேசு தர வேண்டுமென்று ஜஸிந்தா எவ்வளவோ கேட்டும், அவள் தோற்றத்தைப் பார்த்த குரு, அவ்வளவு தேவையில்லை என்றும், மறுநாள் காலையில் நற்கருணை சேசுவைக் கொண்டு வருவதாகவும் கூறிச் சென்று விட்டார்.
மறுநாள் ஜஸிந்தா உயிருடன் இல்லை! முந்திய இரவு 10.30 மணிக்கு அவள் தாதி சற்று வெளியில் சென்றிருந்த இடை நேரத்தில் ஜஸிந்தா தனியே இறந்தாள். அவள் கடைசி மூச்சு விடவும், தாதி உள்ளே நுழைந்தாள். ஜஸிந்தாவின் ஒட்டிய கன்னங்கள் ரோஜா பூத்து, அவள் உதடுகள் புன்னகையில் அழகுடன் மலர்ந்திருந்தன.
ஜஸிந்தா இறந்த செய்தி லிஸ்பன் நகரில் வேகமாகப் பரவியது. பாத்திமா காட்சிகளை விசுவசித்தவர்கள் அடக்கச் செலவுக்குரிய பொருளைச் சேகரித்தனர்.
போர்த்துக்கலில் ஒரு ஆள் இறந்து 24 மணி நேரத்திற்குப் பிறகே அடக்கம் செய்யப்பட வேண்டும். எல்லா வசதிகளையும் பார்த்து, 22-ம் தேதி லிஸ்பன் கல்லறை ஒன்றில் ஜஸிந்தாவின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அவளைப் புதுநன்மை உடையில் அலங்கரித்து, தோளைச் சுற்றி ஒரு நீல வட்ட வடிவமான கேப்பும் இட்டிருந் தார்கள். மாதாவின் நிறங்களான நீல வெண்மையில் அழகுறக் காட்சியளித்த சிறுமியை வெண்மையாய்த் தோற்றமளித்த பெட்டியில் வைத்து, தேவதூதர்களின் ஆலய சக்றீஸ்தியில் இரு பெஞ்ச்களின் மீது ஜனங்களின் பார்வைக்கு வைத்தார்கள்.
ஏதோ ஒரு சிலர் வரக்கூடும் என்று பங்குக்குரு நினைத்தார். ஆனால் கட்டுக் கடங்காத கூட்டம் வர ஆரம்பித்ததும், அவர் அவ்வுடலை நற்கருணை சபையாரின் மேற்பார்வையில் சக்றீஸ்திக்கு அருகிலுள்ள இன்னொரு அறையில் வைத்துப் பூட்டி, சாவியை அடக்கத்துக்கு ஏற்பாடு செய்கிறவரிடம் கொடுத்து விட்டார்.
மக்கள் ஜெபமாலை சுரூபம் போன்ற பக்திப் பொருட்களை ஜஸிந்தாவின் உடலில் வைத்து எடுத்துச் செல்வது இவ்வாறு தடைப்பட்டதும் அவர்கள் சினந்து பேசினார்கள். இதற்கிடையில் அவ்ரம் பட்டணத்தில் ஒருவர் ஜஸிந்தாவின் உடலை அடக்கம் செய்ய தம் நிலத்தில் இடமளிப்பதாகக் கூறியதால், அதை அங்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
23-ம் தேதி ஜஸிந்தாவின் உடல் ஒரு ஈயப் பெட்டியுள் வைக்கப்பட்டது. அதை மூடுமுன் பலர் அவளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஜஸிந்தாவின் முகம் மிகவும் பொலிவுடன் விளங்கியதையும், அவளைச் சுற்றிலும் பல மலர்களின் இனிய வாசனை வீசியதையும் கண்டு ஆச்சரியமடைந்தார்கள்.
24-ம் தேதி காலையில் ஜஸிந்தாவின் உடல் லிஸ்பனிலிருந்து ரயில் மார்க்கமாக அவ்ரம் பட்டணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அல்யுஸ்திரலிலிருந்து மார்ட்டோவும் வேறு சிலரும் அடக்கத்திற்கு வந்திருந்தனர்.
ஜஸிந்தாவைக் கவனித்த டாக்டரும் அதில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். அன்று அவர் லிஸ்பனில் நடைபெற்ற அர்ச். வின்சென்ட் தெ பவுல் கூட்டம் ஒன்றிற்கு ஆஜராக வேண்டியிருந்தது. அது ஒரு மிகவும் முக்கியமான கூட்டம். வின்சென்ட் தெ பவுல் சபை பரிபாலகரான கர்தினால், பல குருக்கள், மற்றும் சமூகத்தில் உயர்நிலையிலுள்ள பலரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அந்த டாக்டர் அந்தக் கூட்டத்திற்குத் தாம் வர இயலவில்லை, ஜஸிந்தாவின் அடக்கத்திற்குப் போக வேண்டியுள்ளது என்று கடிதம் எழுதிக் கொடுத்திருந்தார். அந்தக் கடிதம் அக்கூட்டத்தில் படிக்கப்பட்டதும், கர்தினால் உட்பட எல்லோரும் சத்தமாகச் சிரித்தனர்.
பாத்திமா சம்பவங்கள் குருக்களால் புனையப்பட்டது என்ற குற்றச்சாட்டை இது மறுத்தது போலிருந்தது. வேத விரோதிகளோ, லூஸியா கூறும் கதைக்கு எதிர்ப்பு வந்து விடக் கூடாது என்பதற்காக பாத்திமா குழந்தைகளில் இருவரை குருக்கள் கொலை செய்து விட்டார்கள் என்று கதை கட்டி விட்டார்கள்!
ஜஸிந்தாவின் அடக்கத்திற்கு வந்திருந்த அவள் தந்தை மார்ட்டோ அவளைப் பார்த்து விட்டு, “நீ தனியாகவா இறந்தாய் மகளே?” என்று கூறி தேம்பித் தேம்பி அழுதார்.