அற்புத தெய்வீகக் குழந்தை இயேசு!


"குழந்தை இயேசுவின் பிறப்பால் அனைவரும் புதுவாழ்வு பெறுவர்” என்ற தளராத விசுவாசம், அவரை ஏற்றுக் கொண்டவர் அனைவருக்கும் இருந்தது (1கொரிந்தியர் 15:23) ஆகவே, இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் மூலம் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வெளிப்படுத்த விரும்பிய மறையுண்மைகள் பற்றி ஆராய்வது எமது இவ்வுலக வாழ்வின் முக்கிய நோக்கமாக வேண்டும் என்பது பணிவான அபிப்பிராயமாகப் பதிவு செய்கிறேன். 

காலங்களை மட்டுமல்ல அகில உலகின் வரலாற்றைக் கிறிஸ்துவுக்கு முன் மற்றும் கிறிஸ்து வுக்குப் பின் என மற்றியமைத்த குழந்தை இயேசு வரலாற்று நாயகராக இவ்வுலகில் பிறந்தார் என்பதனை, அழியா வார்த்தை களின் நற்செய்தி ஏடுகளைப் புரட்டுவோமாயின், முக்கியமாக மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தி நூல்களில் நாம் தெளிவாகக் காண்கிறோம். 

அழியா வார்த்தைகளின் நான்கு நற்செய்தியாளர்களில் குழந்தை இயேசுவின் பிறப்பை விளக்கமாக அளித்தவர்கள் மத்தேயுவும், லூக்காவும் மட்டுமே ஆயினும், புதிய ஏற்பாட்டு நூல்களில், புனித பவுல் அடிகளின் திருமுகத்தில் குழந்தை இயேசுவின் பிறப்பின் குறிப்பை "காலம் நிறைவேறியபோது, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும், திருச் சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்” (கலாத்தியர்4: 4). எனக் காண்கிறோம்.

"நானே உலகின் ஒளி” என்ற குழந்தை இயேசு (யோவான் 8:12) மனுக்குல மீட்பின் ஒரே நம்பிக்கையாக (கொலோசேயர் 2:28) இருக்கிறார் என்பது கத்தோலிக்க நற்செய்தி ஆய்வாளர்கள் மற்றும் கத்தோலிக்க இறையியலாளர் பலரது கருத்தாகும்.

நள்ளிரவில் மந்தைகளைப் பாதுகாக்க ஏழை இடையர் விழித்திருக்க, வரலாற்றை கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என இருகூறாகப் பிரித்த இறைமகன் குழந்தை இயேசு வழிகாட்டும் விடிவெள்ளியாகப் பிறந்தார். ஆயினும், சொந்த உறவுகளையே பிரித்தாளும் மனிதனின் கொடூர உள்ளத்தில் இரக்கம், கருணை, பரிவு, பாசம் எனப்படும் “மனித நேய விடிவெள்ளி“ பிறந்துள்ளதா?

குழந்தை இயேசுவின் பிறப்புக்காக பெத்லகேமில், மார்கழிக் கடுங்குளிரில், பிரசவ வலியில் மரி அன்னை துடித்தும், சத்திரத்திலும் இடம் கொடாது கதவை மூடிய மனிதர்களாக நாம் இன்றும் “அவர் அது, இவர் இது“ என வேறுபாடு பார்த்துப் பிரித்து ஒதுக்கி வைத்து வாழவில்லையா? 

கொடிய கோரோனோ ஆதிக்கத்தின் நடுவில் கொட்டும் மழையிலும், கொதிக்கும் வெய்யிலிலும், பனியின் குளிரிலும், பசியின் கொடுமையிலும், இயற்கையின் கோரத்தாண்டவத்திலும், திடீர் விபத்துக்களிலும் அபயம் தேடும் ஏழை அப்பாவிகளின் உருவில் வரும் மரி அன்னைகளுக்காகத் தமது இதயக் கதவைத் திறப்போர் எம்மில் எத்தனை பேர்?

“உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” (லூக்கா 2:14) எனப்படுவது தனி மனித அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் என்பதாகும். அமைதியை உருவாக்குவதே குழந்தை இயேசுவின் பிறப்பின் நற்செய்தி என்பதை நாம் உணர்ந்திருந்தால், குழு சேர்த்துக் குழிபறித்தல், தள்ளி வைத்து விலக்கி விடுதல், மற்றும் முதுகில் குத்தும் நிகழ்வுகள் போன்ற ஏரோதியச் செயல்கள் எம்மிடையே எதற்காக அரங்கேறுகின்றன?

குழந்தை இயேசு பிறந்ததை அறிந்த கீழ்த்திசை ஞானிகளுக்கு விண்மீன் வழிகாட்டிய செய்தியைக் கேட்டு ஏரோதும், எருசலேமும் கலங்கினாலும் (மத்தேயு 2:1-12) ஞானிகள் மூவரது காணிக்கைகள் குழந்தை இயேசுவின் தெய்வீகத் தன்மைகளை விளக்குவதாக தூபம், கடவுள் என்பதையும், பொன், அரசர் என்பதையும், வெள்ளைப்போளம் துன்புற்று மரிப்பவர் என்பதையும் வெளிப்படுத்துவதாக இறையியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

குழந்தை இயேசு பிறந்த பின்னர் தீவனத் தொட்டியில் வளர்த்தப்பட இடையரும், ஞானிகளும் தெண்டனிட்டு வணங்கினர். எனினும், “இது எனது உடல் வாங்கி உண்ணுங்கள்“ என்று தரப்படும் தீவனத் தொட்டியின் ஆன்மீக உணவில் நாம் தகுதியோடு பங்கெடுக் கிறோமா? அந்தத் திரு உடலை ஈரைந்து மாதம் சுமந்த “அருள் நிறைந்த பேழை“க்கு மதிப்பளிக்கிறோமா?, அல்லது, நற்கருனைப் பேழையில் வீற்றிருப்பவரை பக்தியோடு பணிந்து, வணங்குகிறோமா?

மூன்று ஞானிகள் மற்றும் ஏரோதுவின் சந்திப்பில் யூதர்களின் மனநிலையை நற்செய்தியாளர் (மத்தேயு 2:3) அழகாகப் படம் பிடித்துக் காட்டி, குழந்தை இயேசு எல்லாருக்கும் உரியவர் என்ற இறையியல் கருத்தை மட்டுமல்ல, குழந்தை இயேசு சந்திக்கும் வரவேற் பையும் - எதிர்ப்பையும் தெளிவுபடுத்தி அவ்வாறே பிற்காலத்தில் குழந்தை இயேசுவின் அடியார்களுக்கும் நடக்கும் என்பதனை வேறுவிதமாக அறிவிக்கிறார் எனவும் நாம் பொருள்கொள்ள இடமுன்டு.

குழந்தை இயேசு, “உலகமெங்கும் சென்று என்னுடைய திருவிழாவைக் கொண்டாடுங்கள்” என்று கூறவில்லை. மாறாக, தெருவோரப் பிச்சைக்காரரிலும், தனிமையில் வாடும் முதியவரிலும், கவனிப்பாரற்ற நோயாளியிலும், துன்பங்களோடும், வேதனைகளோடும் சிறைகளில் சித்திர வதைப்படுவோரின் குடும்பங்களில் வாழும் ஏழை அப்பாவிக் குழந்தைகளின் உருவில் இன்றும் வாழுவதாகப் போதித்ததனை நாம் எப்போதாவது உணருகிறோமா?

எனவே, இவ்வுலகில் ஒவ்வொரு குழந்தையும் ஏதோ ஒருவித இறை அழைப்போடேயே பிறப்பதாக மூத்தோரும், இறையியல் வல்லுனர்களும் தெரிவிப் பதற்கமைவாக, இற்றைக்கு 2020 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேமில் மிக எளிமையாகப் பிறந்த குழந்தை இயேசு, இன்று உலகம் முழுவதும் இணைந்து கொண்டாடும் பெருவிழா நாயகனாக மாற்றம் பெற்றாலும், அந்த அதிசயம் மிக்க அற்புதக் குழந்தையின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமா? அல்லது, மறந்து வாழ்கிறோமா?.