குறிப்பு: (திருமணி ஆராதனையில், வாசிப்பவர்', பொருள் உணர்ந்து, அழகாக, தெளிவாக, உருக்கமாக, பக்தியாக, நிறுத்தி வாசிக்கவும்.)
தியானத்திலும் செபத்திலும் கெத்சமணி தோட்டத்தில் தனிமையில் வேதனையடைந்த திவ்விய இயேசுவுடன் ஒன்றித்து, ஒரு மணி நேரம் செபிக்கும் அனுபவ செயல்தான் திருமணி ஆராதனை'. இயேசுவின் பாடுகளை அடித்தளமாகக் கொண்டு ஆராதனை, நன்றி. பரிகாரம், மன்றாட்டு ஆகிய அனுபவங்களோடு ஆராதிப்பதே சிறந்த முறை . புனித மார்கரீத் மரியாளிடம் "மக்கள் தன் வேதனைகளைக் குறித்து அதிகமதிகம் தியானிக்க வேண்டும்" என்ற விருப்பத்தை தெரிவிக்கிறார் கிறிஸ்து. அடிக்கடி திருமணி ஆராதனை செய்யும் இறை மக்கள் அருள் வாழ்வில் முன்னேறுவர்.
முதல் கால் மணி.
"உங்கள் நடுவே நான் உலவுவேன். நானே உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள்!" (லேவி. 26:12)
இதோ, நம் கண் முன்னே இறைவன் நம்மை மீட்ட இறைவன் இங்கு இருக்கின்றார். பெத்லகேம் மாட்டுத் தொழுவத்திலே பிறந்த குழந்தை; கலிலேயா கடலோரத்திலே சீடர்களோடு உரையாடி நன்மை பல புரிந்து வந்த இறைவனின் திருமகன் ; காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிட்ட வல்லவர்; சீமோனின் வீட்டிலே லேவியின் இல்லத்திலே சக்கேயுவின் மாளிகையிலே விருந்துண்ட போதகர்; பாலை நிலத்தில் 5000 பேருக்கு புதுமையாக உணவளித்தவர் : (மத். 14 : 20) மதலேனாவை மன்னித்த அதே மாபரன் (லூக். 7 : 48). இதோ, இங்கே அப்பக் குணங்களாம் உடையணிந்து நம்முன் எழுந்தருளியிருக்கின்றார்.
கார் மேகமாய், அக்கினித் தூணாய், எரியும் முட்செடியாய், இடியிலும் மின்னலிலும் வல்லவராய்த் தோன்றிய தேவன், இதோ இங்கே இருக்கின்றார். வாருங்கள் அவரை ஆராதியுங்கள்.
"வாருங்கள்; தாள் பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்; அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணி காக்கும் ஆடுகள்". (தி.பா. 95:6-7).
"மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; .... அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து ; படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது" என்று உரத்தக் குரலில் கூறிக் கொண்டிருந்தார். (எசா 6:1-3) என்ற மாபெரும் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை இங்கு நினைவுபடுத்தி, நம் ஆலயத்திலே இப்போது எழுந்தருளியிருக்கும் இறைவனைப் புடைசூழ்ந்து, ஆராதனைக் கீதம் பாடும் வானவரை மனக் கண்முன் கண்டு, அவர்களுடன் சேர்ந்து அவரை ஆராதிப்போம்.
"உன்னதத்திலே இறைவனுக்கு மகிமை" (லூக். 2:13) என அவரது பிறப்பிலே வானகம் நிறைய இசை முழக்கிய ஆயிரமாயிரம் வானவரைப் போன்று, மகிழ்ச்சி உணர்ச்சியோடு இசைபாடி ஆர்ப்பரித்து அவரை ஆராதிப்போம்.
இறைவன் குழந்தையாய் அவதரித்தார்' என்ற மகிழ்வூட்டும் அதிசயச் செய்தியைக் கேட்ட ஆட்டிடையர் விரைந்து வந்து அவரை ஆராதித்தது போல், அப்பத்தின் வெளித்தோற்றங்களினுள் மறைந்து நம்முன் காட்சிதரும் அதே இறைவனைத் தாழ்மையுணர்ச்சியோடு தலை தாழ்த்தி ஆராதிப்போம். உடனிருந்த தேவதாயும். ஜோசேப்பும் மெளன ஆராதனையில் ஆழ்ந்திருந்தது போல், நாம் அவரது அளவற்ற வல்லமையை உணர்ந்து வியந்து அவரை ஆராதிப்போம்.
"யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" (மத். 2:2) என்று கூறி தேடிவந்த கீழ்த்திசை பேரறிஞர் மூவரும் அங்கே நின்ற விண்மீனைக் கண்டு பெரு மகிழ்ச்சியடைந்து, வீட்டிற்குள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு கால்களில் விழுந்து குழந்தையை வணங்கி ஆராதித்தது (மத். 2: 10-11) போல் இங்கேயும் நாம் அவரை ஆராதிப்போம்.
இயேசு, சென்று கொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற பரிசேயன் ஒருவரைக் கண்டார். இயேசு, "நான் உலகில் இருக்கும் வரை நானே உலகின் ஒளி" என்று கூறி, தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றை பார்வையற்றவரின் கண்களில் பூசி, "நீர் சிலோவாம் குளத்திற்குப் போய் கண்களைக் கழுவும்" என்றார். அவரும் போய் கழுவி பார்வை பெற்று திரும்பி வந்தார். அவர், இயேசுவால் பார்வை பெற்றதை யாரும் நம்பவில்லை . ஆனால், பிறவிக் குருடர் 'தனக்கு ஒருவர் பார்வையளித்தார்' எனத் திரும்பத் திரும்ப சொன்னார். அதனால் யூதர்கள் அவரை வெளியே தள்ளினர்.
இதைக் கேள்விப்பட்ட இயேசு, பார்வை பெற்றவரைக் கண்டபோது "மானிட மகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?" என்று கேட்டார். அவர் மறுமொழியாக, "ஐயா, அவர் யார்? சொல்லும்; அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்" என்றார். இயேசு அவரிடம், "நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக் கொண்டிருப்பவரே அவர்" என்றார். பார்வை பெற்றவர், "ஆண்டவரே நம்பிக்கை கொள்கிறேன்" என்று கூறி அவரை வணங்கினார் (யோ. 9:1, 5-7, 25, 35-38).
பார்வை பெற்ற இப் பிறவிக் குருடர், எவ்வாறு கிறிஸ்துவைக் கண் முன் கண்டு ஆராதித்தாரோ, அதுபோல வெண் அப்ப வடிவில் நம் முன் எழுந்தருளி யிருக்கும் ஆண்டவரை ஆராதிப்போம். வாழ்வின் ஒளியாய், துன்பத்தில் துணையாய், தியாகத்தின் சுடராய், உயிர் ஓவியமாய், அன்பின் ஊற்றாய் விளங்கும் பேரன்பு வடிவத்தை ஆராதிப்போம்.
தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் இறந்த தன் மகள் உயிர்பெற நம்பிக்கையோடு வந்து இயேசுவை வணங்கி ஆராதித்தது (மத். 9: 18) போல், மறு ரூபமான மலைமேல் அற்புத ஜோதிச் சுடர் வீசும் மகிமைத் தேவனைக் கண்ட மூன்று சீடர்கள், (பேதுரு, யாக்கோபு, யோவான்) மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்து ஆராதித்தது (மத். 17 : 6) போல், தொழு நோயாளி ஒருவன் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து ஆராதித்து தன் நோயை நீக்க மன்றாடியது (லூக். 8 : 12)போல், அற்புத மீன் பிடிப்பைப் பார்த்த சீமோன் பேதுரு, தனது ஒன்றுமில்லாமையை உணர்ந்து இயேசுவின் கால்களில் விழுந்து "ஆண்டவரே, நான் பாவி" என்று கூறி ஆராதித்தது (லூக். 5 : 8) போல், 12 ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் இயேசுவின் ஆடையை நம்பிக்கையோடு தொட்டு குணம் பெற்று, நடுங்கி வந்து அவர் முன் விழுந்து ஆராதித்தது (மாற். 5 : 33) போல், நம் முன் எழுந்தருளி இருக்கும் அதே கிறிஸ்துநாதரை ஆராதிப்போம்.
"உயிர்த்த ஆண்டவரைக் கண்டோம்" என சீடர்கள் கூறியதை நம்பாதத் திருத்தூதர் தோமாவிடம், உயிர்த்த இயேசு "இதோ என் கைகள், இங்கே உன் விரலை இடு, உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்" என்று கூறிய இயேசுவைப் பார்த்து திருத்தூதர் தோமா, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோ. 20 : 25, 27, 28) என்று கூறி அவரை தாழ்பணிந்து உருக்கமாக ஆராதித்தது போல் நாமும் அவரை ஆராதிப்போமாக!
கல்லறைக்குள் அடக்கம் செய்த இயேசுவைக் காணாததால் கல்லறைக்கு வெளியே அழுது கொண்டிருந்த மகதலா மரியா, தன் கண் முன்னே 'மரியா' என அழைத்து நிற்பது, உயிர்த்த இயேசுதான் என்பதை அறிந்து கொண்டதும், அவரைப் 'போதகரே' (ரபூனி) என அழைத்து அவரது பாதத்திலே விழுந்து ஆராதித்தது போல (யோ. 20 : 16) நாமும் அவரது பாதத்திலே விழுந்து ஆராதிப்போம்.
"எல்லா மன்னர்களும் அடிபணிந்து அவருக்குப் பணிவிடை செய்வார்கள்" எனத் திருப்பாடல் ஆசிரியரால் பாடி புகழப்பட்டவர் இவரே. "கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி, வல்லமையும், செல்வமும், ஞானமும், ஆற்றலும், மாண்பும், பெருமையும் பெறத் தகுதி பெற்றது" என்று உரத்தக் குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள் (தி.வெ. 5: 12) என திருவெளிப்பாட்டில் யோவான் கூறும் ஆட்டுக்குட்டி இவரே.
"இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்” (பிலிப். 2: 10-11) என புனித பவுல் போற்றும் ஆராதனைக்குரியவர் இவரே, "அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்கெல்லாம் ஆண்டவர்" (தி.வெ. 19 : 16) என யோவான் கூறும் ஆராதனைக்குரியவர் இவரே.
"சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள். இஸ்ராயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்" (எசா. 12 : 6) என்ற எசாயாவின் வார்த்தைகள் இங்கே கூடியிருக்கும் அனைவரிடமும் கூறப்படுவதுபோல் தோன்ற வேண்டும். எனவே, திருப் பீடத்திலே மாட்சிமையுடன் வீற்றிருக்கும் நமது ஆண்டவரை இந்த முதல் கால் மணி நேரத்தில் நம் முழு இதய உணர்ச்சிகளோடு ஆராதித்துப் புகழ்வோமாக!
செபம்.
(முழந்தாழிடவும்) (எல்லோரும் சேர்ந்து சொல்லவும்)
திருப்பீடத்தில் நற்கருணைப் பேழையில் சிறந்து விளங்கும் ஆராதனைக்குரிய மீட்பராகிய இயேசுவே! இங்கு உமது பரிசுத்த சந்நிதியில் உம்மை ஆராதிக்கவும், மகிமைப் படுத்தவும், விழித்திருந்து செபிப்பதில் இத்திருமணியைச் செலவிடவும் கூடியிருக்கும் உமது விசுவாசிகளாகிய மக்களை உமது மகிமை நிறைந்த விண்ணக வீட்டினின்று இரக்கமாய்க் கண்ணோக்கியருளும். அன்பும் வணக்கமும் நிறைந்தொழுகும் உள்ளங்களோடு உமது தூய அரியணைக்கு முன் வந்து பணிவுடன் உம்மை ஆராதிக்கிறோம். "மனிதனோடு இருப்பதே எனது ஆனந்தம்; என மொழிந்த திவ்விய இயேசுவே, உம்மை சந்திக்க வரும் எங்களனைவரையும் எதிர்கொண்டழைத்து வரவேற்று உறவாட மனம் கொண்டுள்ளீர். இயேசுவே, எம் தேவனே, அன்பின் நற்கருணையில் வீற்றிருக்கும் உம்மை எம் முழு மனதோடு எமது ஒன்றுமில்லாமையை உணர்ந்து எமது ஏக கதி நீரே என உம்மை மிகுந்த வணக்கத்துடன் ஆராதிக்கிறோம். நீரே பரிசுத்தர், நீரே உன்னதர், நீரே ஆண்டவர்" என உம்மை நாங்கள் ஆராதிக்கிறோம். இத்திரு ஆலயத்திலும் திருப்பீடத்திலும் வந்து குழுமியிருக்கும் வான கணங்களே. நீங்கள் இசைக்கும் இன்ப வணக்க கீதங்களோடு சேர்ந்து நாங்களும் உங்கள் ஆண்டவரை ஆராதிக்க உதவி செய்வீர்களாக. எங்களது வறுமையினுடையவும் வெறுமையினுடையவும் ஆழத்தின் அடித்தட்டினின்று எழும்பும் எளிய குரலால் உமது சந்நிதியில் விழுந்து ஆராதித்து உம்மை வாழ்த்துகிறோம்.
தேவ தாயே, புனித சூசையப்பரே இந்த ஆலயத்தின் பாதுகாவலரான புனித (. . . . . . . . . . . . ) நீங்கள் எவ்வாறு அவரை ஆராதித்தீர்களோ அவ்வாறே அவரை ஆராதிக்க எங்களுக்கு உதவுவீர்களாக!
ஆண்டவராகிய இயேசுவே, "எங்கே இருவர் அல்லது மூவர் உமது திரு நாமத்தில் கூடுவார்களோ அங்கே அவர்கள் மத்தியில் இருப்பேன்" என மொழிந்த ஆண்டவரே, எங்களது எளிய இதய ஒற்றுமையோடு உமது நேச சங்கிலியால் இணைக்கப்பட்டு உமது திரு இருதயத்திற்கு ஏற்ற ஆராதனை செலுத்த உமது முன் கூடியிருக்கும் அடியார்களை இரக்கமாய்ப் பார்த்தருளும்.
"ஆவியிலும் உண்மையிலும் பரம் தந்தையைத் தொழுவார்கள்" (யோவா. 4: 23) என சமாரியப் பெண்ணிடம் கூறிய இயேசுவே! உண்மையானதை ஆராதிக்கும் காலம் இதோ, இப்போது வந்திருக்கிறது. "அறியாததை ஆராதித்த காலம் மாறி, நாங்கள் அறிந்திருக்கும் உம்மை ஆராதிக்க" (யோ. 4 : 22) இங்கே கூடியிருக்கிறோம். "தம் முன்பாக விழுந்து வணங்கினால் உலகப் பொருட்கள் யாவும் உனக்குத் தருவேன்", என்ற பேயின் குரலைக் கேட்டு இதுவரை உலகத்தையே சேவித்து வந்தோம். ஆனால், "உன் தேவனாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே ஊழியஞ் செய்" (லூக். 4:7-8) எனக் கூறிய, உமது திருமொழிக்கு செவி மடுத்து உம்மையே ஆராதிக்கிறோம்.
ஓ! இயேசுவின் திரு இருதயமே, எங்கள் இருதயங்களை உமது ஆசிகளாலும் அன்பினாலும் நிரப்புவீராக! உமது திரு இருதயத்தின் புனித உணர்வுகளால் எம்மை அணிவித்தருளும். உமது சாயலாகப் படைத்த எமது ஆன்மாக்களில் உமது அருளையும் அன்பையும் பொழிந்து எமது இருதயங்களில் உமது இருதயச் சாயலைப் பதிப்பித்தருளும். எமது அன்பு கலந்த பணிவு, சங்கை, வணக்கம், ஆராதனை யாவையும் ஏற்றுக் கொள்ளும்.
அன்பு மிக்க ஆண்டவரே, "எங்கள் விசுவாசத்தை அதிகமாக்கும்," என திருத்தூதர்கள் உம்மிடம் மன்றாடியது போல் நாங்களும் உம்மைப் பார்த்து மன்றாடுகிறோம். ஓ! மறைந்த தெய்வீகமே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். எரியும் முட்புதரின் நடுவிலிருந்து தன்னை அழைத்த கடவுளை நேரில் உற்று நோக்க அஞ்சியதால் மோசே தன் முகத்தை மூடிக் கொண்டார். (வி.ப. 3:6) அதுபோல் நாங்கள் உமது சந்நிதியில் அச்சமடையாது வந்து ஆராதிக்கத் தயை புரியும். ஆண்டவரே, எங்கள் ஆராதனையையும் புகழ்ச்சியையும் அன்பாய் ஏற்றருளும்.
திருப்பாடலாசிரியர் உம்மை வாழ்த்திப் புகழ்ந்தவைகளை ஒரு முறை கூறி உம்மைப் புகழ்கிறோம். "வானங்கள் கடவுளின் மாட்சிமையை சாற்றும்; வான மண்டலம் அவரது கைத்திறனை எடுத்துரைக்கும்" (தி.பா. 19 : 1).
"மானிலத்தோரே, நீங்களனைவரும் ஆண்டவர் திருமுன் ஆர்ப்பரியுங்கள். அவருடைய பெயரின் மாட்சிமையைப் புகழ்ந்து பாடுங்கள்! அவரது புகழ் எங்கும் விளங்கச் செய்யுங்கள். மாநிலமனைத்தும் உம்மை வணங்கி உமக்குப் புகழ் பாடுவதாக என்று சொல்லுங்கள்" (திபா. 66 :1, 2, 4)
"புவியில் நின்று ஆண்டவரைப் புகழுங்கள். கடல் மீன்களும் நெருப்பும், கல்மழையும் வெண்பனியும் மூடுபனியும் புயல் காற்றும், மலைகளும் எல்லா குன்றுகளும் பழந்தரும் மரங்களும் ... உலகத்து மக்களனைவரும் தலைவர்கள் நீதிபதிகள் அனைவரும் ... முதியோர், இளைஞர், சிறுவர் படைப்பு எல்லாம் ஆண்டவரை புகழட்டும். ஏனெனில் அவருடைய மகத்துவம் வானம் பூமியனைத்தையும் கடந்தது" (திபா 148:7-13)
"ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள் ... மாண்பு மிக்க வாழ்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள். எக்காளத் தொனி முழங்க வீணையுடன், யாழ் இசைத்து, முரசொலித்து, நடனம் செய்து, நரம்பிசைத்து, குழலூதி, நாதமிகு தாளத்துடன் ! கைத்தாள ஒலி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்" (தி.பா. 150).
ஆமென்.
அனனியா, அசாரியா, மிசாயேல் ஆகிய மூன்று இளைஞர்கள் தீச்சூளையில் எறியப்பட்டபோது, அவர்கள் ஆண்டவரை வாழ்த்தியது போல நாம் அவரை வாழ்த்துவோமாக. (தானி 1 : 29-61) ஆண்டவரே, நீர் புகழப்படக்கடவீர். என்றென்றும் நீர் துதிக்கப்படவும் வாழ்த்தப்படவும் தக்கவராயிருக்கிறீர்.
மகிமையுள்ள பரிசுத்த தேவாலயத்திலே புகழப்படும் ஆண்டவர் அவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக.
பாதாளங்களைக் கண்டுபிடித்து கெரூபிமுக்கு மேலாக வீற்றிருக்கும் ஆண்டவர். அவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக.
ஆண்டவருடைய எல்லாக் கிரியைகளே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். அவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக.
வானங்களே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள் அவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக.
வானங்களின் மேலிருக்கும் தண்ணீர்களே, ஆண்டவருடைய ஆற்றல்களே ஆண்டவரைப் புகழுங்கள். அவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக.
சூரிய சந்திரரே, வானத்தின் சகல விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். அவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக.
மழையே, பனியே, காற்றுகளே, நெருப்பும் வெப்பமுமே, ஆண்டவரைப் புகழுங்கள். அவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக.
உறைபனியே, குளிரே, பனிக்கட்டிக்ளே, இரவுகளே பகல்களே, வெளிச்சமே, இருளே ஆண்டவரைப் புகழுங்கள். அவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக.
ஆண்டவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக. அவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக.
மின்னல்களே, மேகங்களே, பூமியே, மலைகளே, குன்றுகளே ஆண்டவரைப் புகழுங்கள். அவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக.
தரையில் தளிர்விடும் பூண்டுகளே, நீரூற்றுகளே, கடல்களே, ஆறுகளே, ஆண்டவரைப் புகழுங்கள். அவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக.
வானத்தின் பறவைகளே, விலங்குகளே, ஆடுமாடு மந்தைகளே, இறை மக்களே, ஆண்டவரைப் புகழுங்கள். அவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக.
ஆண்டவருடைய குருக்களே, ஊழியர்களே, நீதிமான்களே, புனிதர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். அவருக்குப் புகழும் ஆராதனையும் எக்காலங்களிலும் உண்டாவதாக.
(தானி (இ) 1 : 29-61)
செபிப்போமாக.
நிகரில்லாத அன்பினால் நற்கருணையில் எழுந்தருளத் தயை புரிந்த இனிய இயேசுவே, நீர் ஆண்டவரென்றும், அனைத்திற்கும் அதிபதியான எங்களது இறைவனென்றும் விசுவசித்து மிக்க தாழ்மை வணக்கத்துடனே உம்மை ஆராதிப்பதோடு, அன்று மூன்று சிறுவர்களைத் தீச்சூளையினின்று காத்தது போல், உமது அடியாராகிய எங்களைப் பாவத்தீ சுட்டெரிக்காவண்ணம் இரக்கமாய் கண்ணோக்க கெஞ்சி மன்றாடுகிறோம்.
ஆமென்.
இரண்டாம் கால்மணி
"ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்" (தி.பா. 116 : 12).
"என் உயிரே, ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உள்ளமே அவரது திருப் பெயரை ஏத்திடு; அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே" (தி.பா. 103:1,2)
கெத்சமனியில் இயேசு அடைந்த துயரனைத்தும் எதற்காக, யாருக்காக அனுபவித்தார்? நமக்காக - நம் அன்புக்காக - நம் மீட்புக்காக அவரது பாடுகளினால் அவர் நமக்கு அடைந்து தந்த வற்றாத அருள் பெருக்கிற்காக எத்துணை நன்றி செலுத்திடினும், அது தகுதியற்றதேயாகும். அன்று நம் அனைவருக்காகவும் செபித்தார். நம் அனைவரின் பாவங்களுக்காகப் பரிகாரம் புரிந்தார். நாம் இளமையில், வாலிபத்தில், முதுமையில் புரிந்த பாவமனைத்தும் அவர் முன் நின்றன; அவர் நம் மேல் கருணை காட்டினார்.
"இறைமக்களுடன் இருப்பதே எனது ஆனந்தம்" என வசனித்தவர், நற்கருணைப் பேழையில் நம்முடன் இருந்து வருகிறார். மாந்தர் பலர் தோன்றினர்; மறைந்தானர். ஆனால் அவர் நிலையாகவே இங்கு வசிக்கின்றார். எனக்கு உதவிய உத்தமர் இதோ, என் கண்முன்னே இருக்கின்றார். இன்று எனக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்தக் கால்மணி நேரத்தில், உளம் நிறைந்த நமது நன்றியை அவருக்குத் தெரிவிக்க வேண்டும். உயர்விலும் தாழ்விலும், வாழ்விலும் சாவிலும், துன்பத்திலும் இன்பத்திலும், வறுமையிலும் நிறைவிலும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.
நகரை விட்டு நாட்டிலே நடந்து கொண்டிருந்தார் கிறிஸ்து. கல்லறைக் கூட்டங்களின் மத்தியினின்று எழும்பிற்று பல குரல் சேர்ந்த ஓர் ஒலி. "ஐயா! இயேசுவே எங்களுக்கு இரங்கும்” (லூக் 17:13) சதை சிறிது சிறிதாக அழுகி விழுந்து கொண்டிருந்த அலங்கோல அழுக்குருவங்கள், உடல் மூடும் கிழிந்த ஆடை, சூழ்ந்து வரும் துர்வாடை பத்து தொழு நோயாளர் குணமடைய மன்றாடினார்; அவர் அவர்களிடம் "நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்"
என இயேசு பணித்தார் (லூக்: 17 : 14) குணம் பெற்ற தொழு நோயாளர் தாங்கள் விட்டு வந்த சமூக வாழ்வில் மீண்டும் சேர, உடல் நிலை சான்றிதழ் பெறவும் நன்றிப் பலிகள் செலுத்தவும் தங்களைக் குருக்களிடம் காட்ட வேண்டும்' என்ற மோசேயின் சட்டம் ஒன்று இருந்தது. ஆண்டவரின் ஆணைப்படி அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. புழுவும் பழுப்பும் புரண்டு குழைந்த சதை வழவழப்படைந்தது; புதுக் குருதி நரம்புகளில் ஒடியது; காயங்கள் நீங்கின ; வாடை அகன்றது; பாடுகள் மறைந்தன. பத்து பேரும் பூரணக் குணமடைந்தனர்.
அவர்களுள் சமாரியரான ஒருவர் மட்டும் மகிழ்வுடன் உரத்த குரலில் கடவுளைப் போற்றி புகழ்ந்து கொண்டே இயேசுவிடம் வந்து அவரது காலில் முகம் குப்புற விழுந்து நன்றி செலுத்தினார். இயேசு அவரைப் பார்த்து, "நோய் நீங்கிய மற்ற ஒன்பது பேரும் எங்கே?" (லூக் 17:17) என்றார். வேதனையின் குரல்; அடைந்த பேற்றினை சற்றேனும் மறந்திடாது இறைவனுக்கு நன்றி சொல்ல முந்த வேண்டும் என்ற படிப்பினையை இப்புதுமை மூலம் போதித்த நமது ஆண்டவர் இயேசு, இதோ நம்முன் இருக்கின்றார்.
தகனப் பலிகள் வழியாக 'மெல்க்கி செதெக்' என்னும் குரு, கடவுளுக்கு நன்றி செலுத்தினார் எனவும், 'ஆபிரகாம், நோவே, லோத் போன்ற முதுபெரும் தந்தையரும், ஆலயமெழுப்பிய சாலமோன் மன்னனும் மற்றும் இஸ்ராயேல் மக்களும் தாங்கள் பெற்ற தெய்வீகக் கொடைகளுக்கு நன்றி செலுத்தினர், எனவும் பழைய ஏற்பாடு சான்று தருகின்றது.
தெபோராவும் அபினோவாமின் மகன் பாராக்கும் நன்றி கீதம் பாடியது போல நீத. த : 1), "ஆண்டவர் என் கற்பாறை என் கோட்டை , என் மீட்பர், என் கடவுள், புகலிடம், என் கேடயம் வல்லமை, என் தஞ்சம், கொடுமையினின்று விடுவிப்பவரும் அவரே" என போருக்குப் பின் மன மகிழ்ந்து 'தாவீதரசன்' பண் இசைத்து நன்றி கீதம் பாடியது போல், (2 சாமு 22:1-3) தோபித்தை குணப்படுத்தியமைக்கும், அவரது மகனின் மனைவி சாராளைப் பேயின் பிடியினின்று விடுதலையாக்கியமைக்கும், அவர்களுக்கு ஆறுதலாக வானதூதர் ரப்பேலை ஆண்டவர் அனுப்பியமைக்கும், வானதூதர் போனபின் தோபித்து குடும்பத்தினர் மூன்று மணி நேரம் முகங்குப்புற விழுந்து கிடந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்தியது போல், தோபி12:12, 14, 16) ஒலோப்பெரின் என்ற கொடியவனைக் கொன்று யூதர்களைக் காப்பாற்றிய யூதித்து, மக்களோடு சேர்ந்து ஆண்டவருக்கு நன்றி பாக்கள் பாடி நன்றி செலுத்தியது போல, (யூதி : 16) துன்பத்திலேயும் இறைவனின் வல்லமையைப் போற்றி நன்றி கூறிய நீதிமான் யோவைப் போல நாம் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட அனைத்து உபகாரங்களுக்காகவும் நன்றி செலுத்துவோமாக.
"தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என் மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்" (யோ. 10:32) என்று தன்னை எறிய மீண்டும் கற்களை எடுத்த யூதரிடம் வினவினார் இயேசு. "உடல், உயிர், உணவு, உணர்வு, புத்தி, நினைவு, நேரம், செல்வம் யாவும் அவரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட நன்மைகள். நாம் உலக நண்பர்கள் புரியும் சிறு உதவிகளுக்கும் நன்றியோடு கைம்மாறு செய்கின்றோம். ஆனால், அனைத்தையும் இலவசமாக நமக்களித்த இறைவனுக்கு ... இயேசுநாதர் புனித மார்கரீத் மரியாவிடம் தன் இருதயத்தைக் காண்பித்து, "மனிதரின் நன்றி கேட்டைத் தவிர வேறெதுவும் என் இதயத்துக்கு வேதனை தருவதில்லை " என வருந்திக் கூறினார். ஆகவே, இந்தக் கால் மணி நேரத்தில் நன்றி உணர்ச்சி பொங்கி வழியும் உள்ளத்தோடு அவரை ஆராதிப்போமாக!
செபம்.
(முழந்தாழிடவும்)
ஆண்டவரே! நீர் எங்களுக்குப் பொதுவாகவும் தனியாகவும் செய்து வந்த உதவிகளை மகா வணக்கத்தோடு நினைத்து உமக்கு நன்றி செலுத்தத் தகுதியற்றிருப்பினும், எம் முழு இதயத்தோடு உமக்கு நன்றி செலுத்துகிறோம். எமது ஆன்ம உடல் நலன்களுக்காகவும், இயல்பாகவும் இயற்கைக்கு மேலான முறையிலும், கொடைகளாகப் பெற்றுக்கொண்ட எல்லா உபகாரங்களுக்காகவும் மிகுந்த தாழ்மையோடு, எமது எளிய நன்றியை உம்முன் தெரிவிக்கின்றோம். பெற்றுக் கொண்டவைகளுக்காக நாங்கள் பெருமை கொள்ளாது மேலும் எம் ஈடேற்றத்திற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் எமக்கு அளித்தருள உம்மை மன்றாடுகிறோம். உத்தம உபகாரியான எம் இறைவா! காற்று, ஒளி, நீர், நிலம் போன்ற இயற்கைப் பொருட்களுக்காகவும், புத்தி, மனம், அறிவு போன்ற ஆன்மீக வலிமைகளுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆமென்.
உமது திருப்பாடுகளின் போது எங்களுக்காகத் துயரங்கள் அனுபவித்து எங்கள் பாவங்களைத் தாங்கிய இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
ஒரு : எமது சோதனைத் துன்பத்திலும், உமது திருச்சன்னிதானம் எமக்களித்த ஆறுதலுக்காக. உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
காலத்தின் நிறைவிலே எங்களை மீட்க நித்திய பிதாவிடமிருந்து வந்த வார்த்தையான இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
மனுவுருவெடுத்து எங்கள் மனித இயல்பை இறைவனோடு இணைத்தருளிய இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
அடிமை உருவெடுத்துப் பாவத்தின் அடிமைத்தனத் தினின்று எங்களுக்கு விடுதலையளித்த இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
எல்லாக் குணங்களின் இருப்பிடமும் சர்வ வல்லபருமாக இருந்தும், எங்களுக்காக வறியவராகவும் பலவீனராகவும் எண்ணப்பட்டு அடிமைகளுக்காக தன்னுயிரையே தந்த அரசராகிய இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
எங்கள் மீட்புக்காக கோதிலா வேதத்தைப் போதித்து நற்செய்தி வடிவிலே எங்களுக்குத் தந்தருளிய இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
கல்வாரியில் கடின மரணம் அனுபவித்து எங்களைப் பாவத்தினின்று மீட்டு, பாவப் பொறுத்தலுக்கென பாவ மன்னிப்பு என்னும் தேவ அருள் அடையாளத்தையும் நிறுவிய இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
பாவம் நிறைந்த இடத்திலே இறையருள் நிறைந்து தேங்கச் செய்தருளிய இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
இறைவனின் சாபத்துக்குள்ளாயிருந்த எங்களை அருள் வரங்களால் நிரப்பி கடவுளின் பிள்ளையாரும் மகிமைக்கு உயர்த்திய இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
தலையாயிருக்கும் நீர் உமது மறை உடலாம் திருச்சபைக்கு எங்களை உறுப்புக்களாக்கிய இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
உலகமெங்குமுள்ள பலி பீடங்களில் நடைபெறும் திருப்பலிகள் வழியாக உமது திருச்சிலுவைப் பலியைப் புதுப்பித்து வரங்களை மாரியாய்ப் பொழிந்து வரும் இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
உமது திரு உடலாலும் திரு இரத்தத்தாலும் எங்கள் ஆத்துமங்களைப் பேணிக் காத்து வரும் இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
திவ்விய நற்கருணையிலே இரவு பகலாய் எழுந்தருளி யிருந்து வருந்தி சுமை சுமப்போருக்கு ஆறுதலும் இளைப்பாற்றியும் அளிக்க அன்புடன் அழைக்கும் நண்பரான இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
எங்கள் மகிமையான உத்தானமும் முடிவில்லா வாழ்வும் விண்ணுலகப் பேரின்பமுமாகிய இயேசுவே, உமக்கு நன்றியும் மகிமையும் செலுத்துகிறோம் சுவாமி
செபிப்போமாக.
எல்லா நன்மைகளின் ஊற்றும் முடிவற்ற நன்றியறிதலுக்குத் தகுதியுடையவருமான இயேசுவே, நீர் எங்களுக்காக மனிதனாகி, கடின சிலுவை மரணத்தினால் எங்களை ஈடேற்றியும், நற்கருணையை நிறுவி உமது அன்பின் செல்வங்களை எங்கள் மேல் பொழிந்தும் உமது அணையா அன்பைக் காண்பித்தருளினீரே. நீர் புரிந்த பேருதவிகளை நாங்கள் உணர்ந்து இப்போது செலுத்திய அற்ப நன்றியறிதலை தயவாய்க் கையேற்றருளும்.
ஆமென்.
மூன்றாம் கால்மணி
"பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது; நான் மிகவும் வருந்துகின்றேன்; ஆறுதல் அளிப்போருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகத் தேடி நின்றேன்; யாரையும் காணவில்லை " (தி.பா. 69 : 20)
"எனது ஜனமே, உனக்கு நான் என்ன செய்தேன்? எதில் நான் உன்னைத் துன்பப் படுத்தினேன்? சொல் ..... உனக்கு நான் செய்ய வேண்டிய எதைச் செய்யாமல் விட்டு விட்டேன்? உன்னை நான் தெரிந்தெடுத்து அழகு மிக்க திராட்சைச் செடியாக நட்டு வைத்தேன். நீயோ எனக்கு ..... மிகவும் கசப்பானாய். என் தாகத்திற்கோ புளித்தக் காடியை குடிக்கத் தந்தாய். உன் மீட்பரின் விலாவை ஈட்டியால் குத்தித் திறந்தாய் ...... உன் மீட்பருக்குச் சிலுவையை நீ ஆயத்தம் செய்தாய்".
நமது பாவங்களை நினைத்து வருந்தி அழுது அவைகளுக்கான பரிகார அனுபவங்களை ஆண்டவராகிய இயேசுவுக்கு சமர்ப்பிக்க வந்திருக்கின்றோம். 'திரு இருதயப் பக்தியின் முக்கிய நோக்கம் அவ்விருதயத்தைப் புண்படுத்திய பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதே" என்று திருத்தந்தை 13 - ஆம் சிங்கராயர் கூறினார். "நன்றி கெட்ட மனிதரின் அக்கிரமங்களினாலே இடைவிடாது காயமடைந்து வரும் திரு இருதயத்திற்கு நாம் ஆறுதல் அளிக்கக் கூடியவர்களும், ஆறுதல் அளிக்க வேண்டியவர்களுமாய் இருக்கிறோம்" என திருத்தந்தை 11 - ஆம் பத்திநாதர் பாப்பு கூறியிருக்கிறார். புனித மார்கரீத் மரியாளுக்குக் காட்சி தந்த திரு இருதய நாதர், தமது துயரத்திற்குக் காரணம் நன்றி கெட்ட பாவங்களே என வெளிப்படுத்தித் தமக்கு ஆறுதல் அளிக்கும்படி உருக்கமாகக் கேட்டதுமன்றி தமது இருதயத்திற்கு நிந்தைப் பரிகாரம் செலுத்துகிற எல்லோரும் வானுலக வரங்களை வரம்பின்றிப் பெற்று மகிழ்வர் எனவும் தெரிவித்துள்ளார்.
நமது பாவங்களுக்குப் பரிகாரம் புரிய, நமது மீட்பர் அவைகளைத் தன் மேல் சுமந்து கொள்ள வேண்டியிருந்தது. "தந்தையே என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்" (மத் 26 : 39). பாவச் சுமை அவரைத் தரை மட்டம் தாழ்த்தி, இரத்த வியர்வைக்கு ஆளாக்கியது. நமது ஆங்காரத்தை, நமது நினைவிலும் சொல்லிலும் செயலிலும் உடையிலும் காட்டும் வீண் பெருமையை, நமது இருதயம் நிறைந்த பொறாமையை, சுய நலத்தை, சுக போகத்தை, இரக்கமின்மையை, சிற்றின்ப ஆசையை, கல் நெஞ்சைக் காண்கின்றார் இயேசு.
நமது தீய நாட்டங்கள், அடக்கமற்ற நடை, உடை, குடிவெறி, சோம்பல், குளிர்ந்த மனம் யாவும் அவரது இருதயத்தை ஈட்டிகளாகக் குத்துகின்றன.
பெருங்கருணையும் பேரன்பும் மிக்க ஆண்டவரே! உமது அன்பு ஆசனத்தினின்று எங்கள் அனைவரையும் தயவாய்க் கண்ணோக்கியருளும். உம்மோடு சிலுவையில் தொங்கிய நல்ல கள்ளன் தீஸ்மாவைப் பார்த்து, "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்" எனக் கூறி மன்னித்தது போல் (லூக் 23 : 43) மறைநூல் அறிஞராலும் பரிசேயராலும் விபசாரத்தில் பிடிக்கப்பட்டு உம்மிடம் கொண்டு வந்த பெண்ணிடம், 'நானும் தீர்ப்பளிக்கவில்லை; நீர் போகலாம், இனி பாவம் செய்யாதீர்" எனக் கூறி மன்னித்து விடுவித்தது போல், (யோ 8: 11) தன் பாவங்களுக்காக வருந்தி அழுது, உம் காலடிகளைத் தன் கண்ணீரால் நனைத்து தன் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு, நறுமண தைலம் பூசி அழுது நின்ற பாவியான மரிய மதலேனாளைப் பார்த்து, "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" எனக் கூறி மன்னித்தது போல லூ 7:38, 48) இப்பங்கில் பாவத்தில் நிலைத்திருக்கும் உம் மக்களையும் தயவாய்ப் பார்த்து மன்னித்தருளும்.
'என்னை அன்பு செய்தவர்களின் வீட்டில் நான் காயப்பட்டேன்" ஆண்டவரின் வேதனை மிக்க குரல் இது. அவர் தமது சொந்த ஜனங்களால், தமது வீட்டாரால், தமது நண்பர்களால் நேரிடும் நிந்தைகளைக் குறித்துப் பேசுகையில், "இதுதான் எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது" என்று புனித மார்கரீத் மரியாளிடம் சொன்னார். "என் எதிரி என்னை நிந்தித்திருந்தால் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பேன், என்னைப் பகைத்தவன் எனக்கு எதிராய்க் கிளர்ந்து எழுந்தால் அவனிடமிருந்து தப்பியோடி மறைந்து கொள்வேன். ஆனால் என் தோழனாகிய நீயே , என் நண்பனும் என்னோடு நெருங்கிப் பழகினவனுமாகிய நீதான் என்னை எதிர்த்தாய். நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்; கடவுளின் இல்லத்தில் பெருங்கூட்டத்தினிடையே நடமாடினோம்......" (தி.பா. 55:12-14) என்று திருப்பாடல் ஆசிரியர் வழியாக இறைவன் தனக்குத் துரோகம் செய்த நண்பர்களைக் குறித்து வருந்தி உரைக்கின்றார்.
நமது ஆண்டவருக்கு விரோதமாய்ச் செய்த நிந்தைகளுக்கு மாறாக அவரோடு அனுதாபப்பட்டு மனமுருகி தவம் செய்து உத்தரிக்க வேண்டுமென்ற பேராவல்தான் பரிகாரம். நண்பரின் கவனிப்பும் கவலையுமற்ற பற்றுதலின்மையே, அவரின் விலாவைக் குத்தித் திறந்த ஈட்டியின் முனையை விடக் கொடியதாகும். நண்பரின் கரம் அவரைத் தாக்குகின்றது. துரோகிகளின் எண்ணற்றப் பாவங்களை விட இதுவே அவருக்கு அதிக வேதனையை அளிக்கின்றது. அவரிடமிருந்து வரங்கள் பெற்றவர்களே அவரை எறியக் கல்லெடுப்பது - அவரை மறுபடியும் சிலுவையில் அறைவது எத்துணைக் கசப்பானது என்பதை சிந்திப்போம். தகாதப் பிரசுரங்கள், நாத்திக இயக்கங்கள், கேளிக்கை விடுதிகள், அலங்கோல நடனங்கள் மூலமாக மக்கள் கட்டிக் கொள்ளும் கொடிய பாவங்கள், கொலை, வஞ்சகம், சூழ்ச்சி, பொறாமை, மோகம், கோள், புறணி, அவிசுவாசம், பேய் ஊழியம் ஆகிய அக்கிரமத் தீயச் செயல்கள் அத்தனைக்கும் நாம் பரிகாரம் செய்ய வேண்டும். ஆகையால் அவரை அபரிமிதமாய் அன்பு செய்து, இத்திருக் கால் மணி நேரத்தில் பரிகார அனுபவங்களோடு அவரை ஆராதிப்போமாக!
ஆமென்.
(பரிகாரத்தை விரும்பும் நம் அன்பு தேவனுக்கு, நமது அன்பு ஆறுதல் அனுதாபங்களைத் தெரிவிப்போமாக). (முழந்தாளிடவும்)
எங்கள் பாவங்களையும் நன்றி கேடுகளையும் நினைத்து வருந்திய இனிய இயேசுவே. எங்கள் அன்பு, ஆறுதல், அனுதாபம் அனைத்தும் உமக்கே ஆண்டவரே.
உம்மைத் திரும்பத் திரும்பச் சிலுவையில் அறையும் எங்கள் கனமான பாவங்களால் நொந்து வருந்திய இனிய இயேசுவே. எங்கள் அன்பு, ஆறுதல், அனுதாபம் அனைத்தும் உமக்கே ஆண்டவரே.
பெரும் பாவங்களால் அழுக்குண்ட ஆன்மாவோடு தேவத்துரோகமாய் உம்மை நற்கருணை வழியாய் உட்கொள்வோரைக் குறித்துக் கதறியழும் இனிய இயேசுவே. எங்கள் அன்பு, ஆறுதல், அனுதாபம் அனைத்தும் உமக்கே ஆண்டவரே.
இயன்ற போதெல்லாம் உம்மை சந்தித்து ஆராதித்து வாழ்த்தித் துதித்து மன்றாடக் கவனியாத எங்கள் குளிர்ந்த தன்மையைக் குறித்து வேதனைப்படும் இனிய இயேசுவே. எங்கள் அன்பு, ஆறுதல், அனுதாபம் அனைத்தும் உமக்கே ஆண்டவரே.
விசுவாசத்தையும் நல்லொழுக்கத்தையும் கெடுத்து, நித்திய கோட்டிற்கு ஆன்மாக்களை இட்டுச் செல்லும் பிரசுரங்கள், படங்கள், ஆடல் பாடல்கள், அவதூறு, துர்ப்பிரச்சாரங்களால் நொந்து நொறுங்கிய இனிய இயேசுவே. எங்கள் அன்பு, ஆறுதல், அனுதாபம் அனைத்தும் உமக்கே ஆண்டவரே.
ஆலயங்களை அழித்து ஆயர்கள், குருக்கள், துறவியர், கன்னியர், இறைமக்கள் ஆகியோரைச் சிறைப்படுத்திக் கொலை செய்யும் நாடுகளைக் கண்டு வருந்தும் இனிய இயேசுவே. எங்கள் அன்பு, ஆறுதல், அனுதாபம் அனைத்தும் உமக்கே ஆண்டவரே.
திருமணப் புனிதத்துவம் மறைந்து, குழந்தை பிறப்புக்கும், நல் வளர்ப்புக்கும் தடையான போதனைகளும் சாதனைகளும் குடும்பங்களில் சிறிது சிறிதாகப் பரவி வருவதைக் கண்டு மனமுருகும் இனிய இயேசுவே. எங்கள் அன்பு, ஆறுதல், அனுதாபம் அனைத்தும் உமக்கே ஆண்டவரே.
சாதி மத மொழி வெறியர்களாலும், தீவிரவாத கும்பல்களாலும், இயக்கங்களாலும், போரினாலும் பாதிக்கப்பட்டு சாகின்ற அப்பாவி மக்களைக் கண்டு மனமுருகி வருந்தும் இனிய இயேசுவே. எங்கள் அன்பு, ஆறுதல், அனுதாபம் அனைத்தும் உமக்கே ஆண்டவரே.
"என் துக்கத்துக்கு நிகரான துக்கம் உண்டோ என்று பாருங்கள்" எனக் கதறி துயரப்படும் உம்மோடு அனுதாபப்பட எவரையும் காணவில்லையே என வாய்விட்டு அழுத இனிய இயேசுவே. எங்கள் அன்பு, ஆறுதல், அனுதாபம் அனைத்தும் உமக்கே ஆண்டவரே.
செபிப்போமாக.
பரிகாரத்தால் நிறைவு பெறும் அன்பராகிய இயேசுவே! உமது திருப் பாதத்தை தனது கண்ணீரால் கழுவி துடைத்து ஆறுதல் தந்த மரிய மதலேனாள், பூங்காவனத்தில் உமக்கு ஆறுதல் தர வந்த வானவர், உமது திரு மார்பில் சாய்ந்தும் உமது சிலுவையடியில் நின்றும் ஆறுதல் அளித்த திருத்தூதர் யோவான் ஆகிய அனைவரோடும் சேர்ந்து, நாங்கள் இப்போது அளித்த பரிகார அனுபவங்களைத் தயவாய் ஏற்றுக்கொள்ள உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.
நான்காம் கால்மணி.
"நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன்" (எரே 29 : 12).
"ஒரு மணி நேரம் கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உடல் வலுவற்றது; எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ... இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். மூன்றாம் முறையாகவும் இறைவனிடம் வேண்டினார்" (மத் 26 : 41-43).
நற்கருணை அன்பரை ஆராதித்துப் புகழ்ந்தோம்; அவருக்கு நன்றி நவின்றோம்; பரிகாரம் புரிந்தோம்; இப்போது அவரிடம் மன்றாடுவோம்.
எழில் மிகு ஒலிவு மர நிழலிலே அழகு உருவம் ஒன்று தோன்றுகின்றது. உடலெல்லாம் உதிரம், மன்றாடும் தோற்றம், எழுந்து நண்பர்களிடம் செல்லுகின்றது, அவ்வுருவம். நண்பர்கள் தூங்குகின்றனர். விழித்திருந்து மன்றாட அவர்களைப் பணிந்து விட்டு மறுபடியும் மரச் சுவட்டிலே சென்று மண்டியிட்டு மன்றாடுகிறது அவ்வுருவம்.
இந்த உருவம் யார்? அன்புருவாம் அண்ணல் இயேசு. தனது இவ்வுலக வாழ்விலே போதனையாலும் சாதனையாலும் மன்றாடக் கற்பித்தவர்; பகலெல்லாம் போதித்த பின் இரவிலே மலை மேல் சென்று மன்றாடிய இயேசு.
"நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.... கேளுங்கள் பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும் " (யோ 16 : 23, 24) என்று உறுதி கூறிய இறைவன் இங்கு இருக்கின்றார். 'நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்" (மாற் 11:24) என்று நம்பிக்கையோடு செபிக்கக் கற்பித்தவர் இங்கு நம் வேண்டுதலை விரும்பிய வண்ணம் இருக்கின்றார். "கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும். கேட்போர் எல்லோரும் பெற்றுக் கொள்கின்றனர்" (லூக் 11 : 9).
"பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத்தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!" (லூக் 11:11-13) எனக் கூறி தேவையானதை இறைவனிடம் மன்றாடிக் கேட்கப் போதித்த அன்பு இயேசு, இதோ இங்கு நம்முடன் வீற்றிக்கிறார்.
"நீங்கள் இறைவனிடம் வேண்டும் போது நம்பிக்கையுடன் கேட்பதையெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்''. (மத் 21: 22) என்று கூறியவர், "உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருளுவார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்" (மத் 18 : 19-20) என்று மொழிந்தவர், இன்று இங்கே, தம்முன் கூடியிருக்கும் நமது மன்றாட்டைக் கேட்க காத்துக் கொண்டிருக்கிறார்.
நாம் நம்பிக்கையோடு, நிலமையோடு, கவனத்தோடு, தாழ்மையோடு செபிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆலயத்திலே செபிக்க வந்த ஆயக்காரன் தாழ்மையோடு தலை குனிந்து மார்பிலே தட்டி "ஆண்டவரே, பாவியாகிய என் மேல் இரக்கமாயிரும்" என மன்றாடியது போல, "ஆண்டவரே, நாங்கள் மடிகிறோம், எங்களைக் காப்பாற்றும்" எனப் புயல் விபத்தின் போது திருத்தூதர்கள் வேண்டிக் கொண்டது போல, "ஆண்டவரே, நாங்கள் பார்வையடைய வேண்டும்" என கண் பார்வையற்றவர்கள் மன்றாடியது போல, "எங்கள் விசுவாசத்தை அதிகமாக்கும்" என சீடர்கள் வேண்டிக் கொண்டது போல, "ஆண்டவரே, என் குழந்தையைக் குணப்படுத்தும்" என படைத்தலைவன் மன்றாடியது போல நாம் ஆண்டவரைப் பார்த்து மன்றாடுவோமாக.
நாம் தனிமையில் செபிக்க வேண்டுமெனவும் நம்மிடம் கேட்கிறார் இயேசு. "நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது, உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்" (மத். 6:6). இறைவனிடம் வேண்ட கற்றுக்கொடும் என்று கேட்ட திருத்தூதர்களிடம் "தந்தையே, உமது பெயர் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! ...... என்ற அழகிய செபத்தைக் கற்றுக் கொடுத்தார் (லூக். 11: 1-2).
இயேசு சிலுவையில் தொங்கியபோது "தந்தையே, இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை " (லூக். 23:34) என மன்றாடி நம் பகைவர்களுக்காகவும் நாம் செபிக்க வேண்டும் எனக் காட்டுகின்றார். 'நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத் தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்து விடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்" (மாற். 11 : 25) என்று கூறி மன்றாடுபவரின் மன நிலை பற்றி விளக்குகின்றார்.
தனது அருட் பணியாளர்களுக்காகவும் அவர் செபிக்க மறக்கவில்லை. "அறுவடை மிகுதி; வேலையாட்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாட்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" (மத். 937-38) என்றார். அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன் ..... உண்மையினால் அவர்களை அர்ப்பணமாக்கியருளும்" யோ. 1715, 17) என இறுதி உணவின் போது வேண்டிக் கொண்டார்.
மேலும் திருச்சபையின் ஒற்றுமைக்காகவும் வேண்டுகிறார். "அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!" (யோ. 17 : 20-21).
கெத்சமனித் தோட்டத்தில் எத்துணை அதிகம் வேதனை அடைந்தாரோ அத்துணை அதிகமாகச் செபித்தார். துன்பம் நேரிடும் போது அதிகமாக செபிக்க வேண்டும். "துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது நீங்கள் என்னை மேன்மைப் படுத்துவீர்கள்" (திபா: 50 : 15). "உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறை வேண்டல் செய்யட்டும்" (யாக் 5:13) என புனித யாக்கோபு தன் திருமுகத்தில் குறிப்பிடுகின்றார். "துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள்" (உரோ 12 : 12) என புனித பவுல் அடிகளார் கூறுவது போல் இறை வேண்டலில் நிலைத்திருப்போமாக.
இங்கு கூடியிருக்கும் அனைவருக்காகவும், இப் பங்கில் நம் மறைமாவட்டத்தில் வாழ்கின்ற இறை மக்களுக்காகவும், நமது வீடு, குடும்பங்கள், நாடு, நாட்டுத் தலைவர்கள், நாட்டு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுவோம். பெற்றோர் பிள்ளைகள் தங்கள் கடமைகளை உணரவும், இளைஞரிடம் அறிவு, ஒழுக்கம், உழைப்பு வளரவும், ஆசிரியர் மாணவர்களுக்காகவும், பாவிகளின் மன மாற்றத்திற்காகவும், எங்கும் அமைதி நிலவுவதற்காகவும் நற்கருணை நாதர் முன் மன்றாடுவோமாக, இந்த இறுதிக் கால் மணி நேரத்தில் நம் ஆண்டவரை, மன்றாட்டு முயற்சிகளோடு ஆராதிப்போமாக.
(நம் தனிப்பட்ட தேவைகளுக்காகச் சிறிது நேரம் மெளனமாக வேண்டுவோம்)
செபம். (முழந்தாளிடவும்).
எங்கள் அன்பரான இயேசுவே, நாங்கள் உம்மை நன்கு அறிந்து முழு உள்ளத்தோடு நேசிக்கவும், நற்கருணைப் பக்தியில் வளரவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். தன்னைப் போல் பிறரை நேசிக்கும் உத்தம பிறரன்புக்காக மன்றாடி ஆன்ம உடல் மன வேதனை அனுபவிக்கும் அனைவரையும் ஆசீர்வதிக்கவும் மன்றாடுகிறோம். மரணப் படுக்கையிலிருக்கும் யாவருக்காகவும் உத்தரிக்கிற இடத்திலே வேதனைப்படும் தூயவர்களுக்காகவும் பாவிகள் மனம் திரும்புவதற்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பிற மதத்தினருக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். குருக்களின் வேத போதக அலுவல்களை ஆசீர்வதித்து, திருச்சபை வளர்ந்து யாவரும் உம்மை அறிந்து அன்பு செய்ய தயை செய்தருளும் சுவாமி. எம் மரண வேளையில் எமதருகிலிருந்து ஆறுதல் தந்து தீர்வையின் போது எம்மை ஆசீர்வதித்துக் காப்பாற்ற உம்மை மன்றாடுகிறோம். கேளுங்கள் கொடுக்கப்படும் என அருளிய எம் அன்பு மீட்பரே, உமது திருத்தாயின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.