சுவிசேஷ சம்பவம் ஒன்றை நினைப்பூட்டிக் கொள்வோம். அது நான் விவரிப்பதுபோல் சுவிசேஷத்தில் இல்லை என்பது உண்மை தான். இருதய சிநேகத்துடன் வாசிப்பீர்களாகில், நான் அதைச் சற்று மிகைப்படுத்தி, அலங்கரித்துச் சொல்கிறேன் என்றாலும், அதில் காண்கிற காட்சி உண்மை என்று ஒப்புக்கொள்வீர்கள். சேசுநாதர் பெத்தானியாவுக்கு நான்கு தடவை போய் வந்த சம்பவம் என்று இதை அழைப்போம். நான் சொல்வதை விடவும், இன்னும் அதிக உருக்கமான காட்சி பெத்தானியாவில் நடைபெற்றிருக்க வேண்டும் என்று கூறலாம்.
சேசுநாதர் முதல் தடவை பெத்தானியாவுக்கு வந்தபொழுது, மரிய மதலேன் வீட்டில் இல்லை. அவள் இன்னும் ஊதாரிப் பிள்ளை போலவும் சிதறிப் போன ஆடுபோலவும் வாழ்ந்து கொண்டிருந் தாள். லாசரும் மார்த்தாளும் அவரை வரவேற்றார்கள்; அவர்களது முகங்களில் ஒருவிதக் கூச்சமும், விநோதமும் தோன்றின. அவர்கள் அருகில் இருந்தவர் யார்? அற்புதம் செய்கிறவர் என்று எங்கும் புகழ் பெற்றிருந்த நாசரேத்தூர் சேசு. அவர்கள் அவர் கையை முத்தம் செய்து, அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் யார், யூத அறிஞரா, தீர்க்கதரிசியா? தங்களுக்கு அவரது வருகை கெளரவத்துக்குரியது என்று லாசரும் மார்த்தாளும் உணர்ந்தார்கள் என்பது நிச்சயம்; இந்த மகான் யாரென்று அறிய அவர்களுக்குப் பெரிய ஆவல் உண்டாயிற்று. வர்ணனைக்கு அடங்காத ஏதோ ஒன்று அவரிடமிருந்து அவர்கள் உள்ளத்தை ஊடுருவிப் பாய்ந்தது; தங்களை அறியாமலே தங்கள் உள்ளம் அவரை நோக்கித் தாவுவதை உணர்ந் தார்கள். ஆதலால், அவர்கள் அவருக்குத் தங்கள் வீட்டு வாசற் படியில் விடைகொடுத்தபோது, இது வரைக்கும் இல்லாத உருக்கம் அவர்களை ஆட்கொண்டது. ""குருவே, பெத்தானியாவுக்குத் திரும்ப வும் வாருங்கள், எங்களை மறந்து விட வேண்டாம்'' என்று சொன் னார்கள். சேசுநாதரோ பரலோகக் கதிர் வீசும் புன்முறுவலுடன், ""திரும்பி வருகிறேன்'' என்று வாக்களித்தார்.
இரண்டாவது தடவை அவர் வந்ததைப் பார்ப்போம். மண்டபத்தில் மலர்கள் இருந்தன: ஒரு திருநாளுக்காகக் காத்துக் கொண்டிருந்த பாவனை அங்கே தோன்றிற்று. லாசராலும், மார்த்தா வாலும் தங்கள் ஆனந்தத்தை அடக்க முடியவில்லை. நாசரேத்தூர் மகான் வரப் போகிறார்; அன்பின் ஆவலை அடக்க முடியாமல், அவரது வருகையைக் காணும்படி அவர்கள் வெளியே போனார்கள். இப்போது அவர்களுக்கிருந்த சங்கை, முதல் தடவை இருந்ததை விட அதிகமாயிருந்தது; ஏனெனில் அவர்களுடைய இருதயங்களில் அன்பு சுடர் விட ஆரம்பித்தது. இந்த முறை அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பதில் மட்டும் அவர்கள் திருப்தியடையவில்லை. அவரிடம் கேள்வி கேட்கவும் துணிந்தார்கள். ஆதலால் அவர்கள் பழகின நண்பர்களைப் போல் உரையாடலாயினர். ""நமது குரு கபடற்ற இருதயமும் நன்மைத்தனமும் உள்ளவர். அவரது மகத்துவம் எவ்வளவு இனிமையும் உறுத்தலும் பொருந்தியது! அவரது குளிர்ந்த பார்வை புத்திக்குத் தெளிவைக் கொடுக்கிறது. அவர் சொல்லும் மொழிகள் நம்மை ஆட்கொள்கின்றன, அவரது இருதயம் நம்மைப் பரவசமாக்குகிறது'' என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள். இந்தத் தடவை அவர் போகப் புறப்பட்டபோது, லாசரும் மார்த் தாளும் கண் கலங்கித் தாழ்மை நேர்மையுடன், ""இதுமுதல், இனி நீர் இல்லாமல் நாங்கள் வாழ்வது சிரமமாயிருக்கும்; ஆண்டவரே, எங்களிடம் திரும்பி வாரும்; இந்த இல்லம் உமக்குச் சொந்தம். எங்களை உமது சிநேகிதராக ஏற்றுக்கொள்ளும்'' என்று மன்றாடி னார்கள். சேசுநாதர் மனமிளகி, ""நான் உங்கள் சிநேகிதனாயிருக்கச் சந்தோஷமாய் ஒப்புக்கொள்கிறேன்; நீங்கள் என்னை சிநேகிப்பதால் பெத்தானி என் இருதயத்திற்கு மிகப் பிரியமான நிலமாயிருக்கும்'' என்று அவர்களுக்குச் சொன்னார்.
மூன்றாவது தடவை சேசுநாதர் வந்தபொழுது, அங்கிருந்த ஆனந்தப் பூரிப்பிற்கும், அன்பின் அகமகிழ்ச்சிக்கும் அளவில்லை. அது அரசாட்சி ஸ்தாபகத்தின் அன்புக்குரிய வரவேற்பு என்று சொல்லலாம். அவர் எப்போது வருவாரென்று மார்த்தாளும், லாசரும் மணிக் கணக்கை எண்ணிக் காத்துக் கொண்டிருந்தார்கள். ""நான் உங்கள் சிநேகிதனாகத் திரும்பி வருவேன்'' என்று சேசுநாதர் சொன்ன நாளி லிருந்து, அவர்கள் தனித்து வாழ்வது சங்கடம் நிறைந்ததாகி, அவரது வருகையைப் பற்றி ஏக்கம் கொண்டிருக்கலானார்கள். அவர்களது கவலையை சாந்தப்படுத்த வழியில்லை. அவர்கள் முகமலர்ச்சி கொள்ள முடியவில்லை. அவரே அவர்களது நினைவும் கனவும். சேசுநாதர் அவர்களது உள்ளங்களைத் தம் வசமாக்கிக் கொண்டார். ஆகக் கடைசியாக, அவர்களது ஏக்கத்திற்குக் காரணமாயிருந்தவர் சமீபித்து வருவதைக் கண்டார்கள். அவரை எதிர்கொண்டழைக்க ஓடி னார்கள்; அவரது பாதத்தில் விழுந்து, அவரது திருக்கரங்களை முத்த மிட்டார்கள். மன உருக்கமும், அன்பும் சொரிந்த ஆனந்த அக்களிப்பில், ""நண்பரே!'' என்று அவரை அழைக்கவும் துணிவு கொண்டார்கள். அறிமுகமும், அன்பும், ஆதரவும் தங்களுக்குண்டு என்று உணர்ந்து, சீடர்கள் எவ்வளவு அன்னியோன்னியமாய்ப் பேசுவார்களோ, அவ்விதமே அவரிடம் பேசினார்கள்.
பேச்சும், வார்த்தையும் உருக்கம் மிகுந்ததாயிருந்த சமயத்தில் திடீரெனப் பேச்சு அடங்கிற்று; லாசர் குருவின் அருகில் நெருங்கி வந்து, தமது தெய்வீக நண்பரின் பாதத்தில் விழுந்து விம்மி விம்மி அழுதார். சேசுநாதர் அவரை நோக்கி, ""ஏன் அழுகிறாய்?'' என்றார். ""உமக்கு எல்லாம் தெரியுமே'' என்றார் லாசர். ""ஆம், எல்லாம் தெரியும்; ஆனால் நாம் மெய்யான சிநேகிதர் என்ற முறையில், உனது உள்ளத்தில் மறைந்து கிடப்பதையெல்லாம் நமக்கு வெளிப்படை யாகச் சொல்'' என்று சேசுநாதர் பதில் சொன்னார். வெட்கத்தால் சிவந்து போயிருந்த தன் முகத்தை மார்த்தாள் தனது கைகளால் மறைத்து, மவுனமாய் அழுது கொண்டிருக்க, லாசர் சொன்ன விபரமாவது: ""குருவே, நாங்கள் இரண்டு பேர் இருக்கிறோம்; ஆனால் இந்த வீட்டில் மூன்று பேர் இருந்தோம். எங்கள் சகோதரி மரியம் மாளின் காரியம் வெட்கமும், கஸ்தியும் பொருந்தியது. அவளை மதலேன் என்று அழைக்கிறார்கள். நாங்கள் அவளை வெகுவாய் நேசிக்கிறோம்; அவள் இப்போது பெத்தானியாவுக்குப் பெரும் அவமானமாயிருக்கிறாள். சேசுவே, நீர் எங்கள் சிநேகிதர் என்றீரே. அவளைக் குணப்படுத்தி இரட்சித்துச் சுத்தப்படுத்தி, எங்களருகில் சேர்த்தருளும்.'' சேசுநாதர் அவர்களோடு தாமும் சேர்ந்து கண்ணீர் சொரிந்து, ""உங்கள் சகோதரி திரும்பி வருவாள், அவள் வாழ்வு பெறு வாள், பெத்தானி பாக்கியம் அடையும்'' என்று மறுமொழி சொன் னார். அன்று சாயந்திரம், அவர் அவர்களது வீட்டு வாசலில் விடை பெற்றுப் போகும்போது, தமது இரு சிநேகிதரையும் ஆசீர்வதித்துச் சொன்னதாவது: ""எனது பிதாவின் மகிமைக்காகவும், என் மகிமைக் காகவும் மரியம்மாள் மந்தையில் வந்து சேர்வாள்.''
மற்ற விவரங்கள், அதாவது: மதலேன் மனந்திரும்பின வரலாறு, இரட்சகரின் பாதத்தில் பரிமளப் புட்டியை உடைத்து, அவரது சிரசையும், பாதங்களையும் தைலத்தால் பூசியது, யாவும் சுவிசேஷத்தில் கூறப்பட்டிருக்கின்றன. சேசுநாதர் நான்காம் தடவை தமது சிநேகிதரின் வீட்டுக்கு வந்த போது, அவரை எதிர்கொண்டு, ஆர்ப்பரிப்புடன் வரவேற்றது யார் என்று எண்ணுகிறீர்கள்? மரிய மதலேன்தான்! அது முதல், மூவரும் சமாதான தேவனும், அன்பின் அரசருமானவரால் புத்துயிர் பெற்ற இல்லத்தில் முன்பு போல் ஒன்று கூடி அநேக வருடங்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் சேசுவின் இருதயம் இப்போது சகோதரனுக்கும் சகோதரிகளுக்கும் உள்ள உறவைப் பலப்படுத்தியிருந்தது.
இந்த இல்லம் ஆழ்ந்த துயரத்தில் அமிழ்ந்திருந்தது ஆண்டவ ருக்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. ஆயினும் அதைச் சரிசெய்வதற்கு, புண்பட்டுப் போயிருந்த மனதோடு சகோதரனும், சகோதரியும் தமது இருதயத்திடம் வந்து நொந்தழுது, தங்கள் துயரத்தைத் தம்மிடம் தெரிவிக்கும் வரை, அவர் காத்துக் கொண்டிருந்தார்; அதற்குப் பிறகு மட்டுமே அவர்களது அன்பு, பாசம், நம்பிக்கைக்குச் சன்மானமாக, அற்புதச் செயலைச் செய்தார்.
இந்த விபரங்கள் சுவிசேஷத்தில் எழுதப்பட்டவை அல்ல என்று மீண்டும் சொல்கிறேன். ஆனால் தேவ உதவியைப் பெற்ற அந்த இல்லத்தில், மேலே சொன்னதுபோல, அல்லது இன்னும் அதிக நேர்த்தியாய்க் காரியங்கள் நடந்திருக்க வேண்டுமென்று முழு நியாயத்துடன் கூறலாமல்லவா? திரு இருதய அரசாட்சி ஸ்தாபகத் தின் மேன்மையை இப்போது அதிக நன்றாய்க் கண்டுபிடிக்கிறாய் அல்லவா? எப்போதுமே இரக்க உருக்கமுள்ளவராகிய பெத்தானி யாவின் அரசர், அவரது திரு இருதய நண்பர்களின் நம்பிக்கையைப் பற்றி இப்போது நாம் உறுதியாய்ச் சொன்னதைத் தமது அற்புதச் செயல்களால் அநுதினமும் எண்பித்து வருவதில் வியப்புக்குரியது ஏதாவது உண்டா? அவரை வரவேற்கும்போது, ""எங்களோடு தங்கி யிரும்'' என்று சொல்கிற இல்லம் பாக்கியமானது! சேசுநாதரை உள்ளே வைத்துக் கதவைச் சாத்தும்போது, அவர் தாம் இனி எப்போ தைக்கும் சிநேக உறவால் அந்த இல்லத்துடன் இணைக்கப் பட்டிருப்பதைக் காண்பார் என்று ஒருவாறு சொல்லலாம்.
ஆதலால், இக்காலத்திற்கு மிகவும் அவசியமானது, நாசரேத் தைப் புதுப்பிப்பது, அல்லது பெத்தானியாவின் பரிசுத்த குடும்ப வாழ்வை வாழ்வதாகும். நாசரேத் வாழ்வு நிகரற்ற வாழ்வாகவே சகல யுகங்களுக்கும் இருக்கும்; இதனிமித்தம் பெத்தானியா வாழ்வை எடுத்துச் சொல்கிறேன். பெத்தானியாவில் நம்மைப்போல் மண்ணால் உருவான மனிதர்கள் இருக்கிறார்கள்; ஆதலால், இந்த இல்லத்தை முற்றிலும் பின்பற்றி நடப்பது நமக்குச் சுலபம். நாசரேத்தூர் இல்லத்தில், மதலேனைப் போன்ற ஆத்துமங்கள் இருக்கக் கூடும் என்று கருதவும் கூடாது. ஆனால் பெத்தானியாவில் இருந்தபடி, மதலேனைப் போலவும், ஊதாரிப் பிள்ளையைப் போலவும் உள்ள ஆத்துமங்கள் எத்தனையோ வீடுகளில் இருக்கின்றன. நமது திவ்ய எஜமானரை வரவழைத்து, அவர் சொல்வதைக் கவனமாய்க் கேட்டு, அவரை உனது உற்ற நண்பனாக நடத்து வாயாகில், லாசர் கண்ட அதிசயங்களை விட மேலான அதிசயங்களைக் காண்பாய். மதலேனம்மாள் மனந்திரும்பினதை விட அதிக சிறந்ததும், உருக்கப் பற்றுதல் நிறைந்ததுமான சம்பவங்களைக் காண்பாய்.
கிறீஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் வீடுகளில் முதலாய் சேசுநாதருக்கு எத்தனையோ சமயங்களில் இடமில்லாமல் போகிறது! இராஜாதிராஜன் அன்பையும் ஆதரவையும் நாடித் தங்கு வதற்கு இடம் தேடி, தமது பிரசன்னம் அவசியம் என்று அறிந்த வீட்டு வாசற்படியில் நின்றுகொண்டிருப்பதைக் காண்கிறோம். சில வீடு களில் எப்போதாவது அவரை வரவேற்றாலும், அவரை ஆசாரத்தின் பொருட்டு ஏற்றுக்கொள்கிறார்களே தவிர, சிநேகத்தின் பொருட்டல்ல. அவரை உற்ற நண்பராக நடத்தாமல், கடந்து போகும் விருந்தாளி யாக எண்ணி, ஓர் அந்நியனுக்குச் செய்யக் கடமைப்பட்ட உபசாரம் மட்டும் செய்கிறார்கள். அத்தகைய வீடுகள் அநேகம் உண்டு. அவை களில் சேசுநாதர், மட்டற்ற அன்பின் சுவாலை விட்டெரிகிற தமது இருதயத்திற்கு வெறும் உபசாரமும், போலியான சிநேகமுமே பெறுகிறார்.
சர்வேசுரனுக்காகக் கோவிலில் நாம் செலவழிக்கக்கூடிய நேரம் மிகக் குறைவு; ஏனெனில் நமது கடமைகளின் நிமித்தம் நமது அநுதின வாழ்வு வீட்டில்தான் நடைபெற வேண்டியிருக்கிறது. கோவிலில் செலவழிக்கிற கொஞ்ச நேரம் மட்டும் வேத அனுசரிப் பிற்குப் போதும் என்பது போல் எண்ணி நடக்கிறோம். கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்தால், நம் வாழ்வின் மையமும், நம் இல்லங் களின் ஆண்டவரும், நண்பருமாயிருக்க வேண்டியவருக்கு, அங்கே இடமில்லை. இது மகா மோசமான தப்பறை; ஏனெனில் நாம் வாழ்வதும், உழைப்பதும், பாடுபடுவதும், மரிப்பதும் கோவிலில் அல்ல. நமது வீடுகளில்தான் வாழ்கிறோம், உழைக்கிறோம், பாடுபடு கிறோம்; நமக்குத் தெரிந்தவரைக்கும், சாவதும் அங்கேதான். ஆதலால் நம் சிலுவையைச் சுமப்பதில் நமக்குத் துணைபுரிபவரும் இந்தப் பரதேசத்தில் நமது தோழருமான சேசுநாதரோடு நெருங்கிய உறவோடு வாழ வேண்டியது நமது வீட்டிலல்லவா? இவ்விதம் வாழ்வதால், கடைசி நாளில், அவர் நமக்கு நடுவராயிராமல், அன்பின் அரசரும், உற்ற நண்பருமாயிருக்க வழிதேடிக் கொள்வோம். இத்தகைய அவசியத்தை ஒருவாறு உணர்ந்ததால்தான், அஞ்ஞானி களும், ""குல தெய்வம்'' என்று அழைக்கப்படும் ஒரு விக்கிரகத்தை வீட்டில் ஆராதனை செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. பக்தியுள்ள கிறீஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் திவ்ய நற்கருணை வைத்திருக்கத் திருச்சபை ஆரம்பத்தில் அனுமதி அளித்திருந்தது இந்தக் காரணத்திற் காகவே. நமது ஆண்டவரின் ஆறுதலுக்குரிய பிரசன்னத்தை நம்மால் இயன்ற அளவு புதுப்பித்து, அதன் பலனை அடையுமாறு, இப்போது இந்த அரசாட்சி ஸ்தாபகத்தை ஆரம்பித்திருக்கிறோம். அவர் மெய்யாகவே உள்ளபடி நற்கருணையில் இருப்பதற்கும், அவர் மட்டிலுள்ள சிநேகத்தின் அடையாளமாக, அவரது படத்தை வைத் திருப்பதற்கும் மிகப் பெரும் வித்தியாசம் உண்டு என்று நாம் அறிந் திருக்கிறோம். ஆயினும், அரசாட்சி ஸ்தாபகத்தின் வழியாய், சேசுநாதர் வீட்டில் பிரவேசித்துக் குடும்ப வாழ்வில் பங்கு பெற்று, அதை முழுவதும் நடத்துகிறார்; அவரது சிநேகம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உயிர்; அவரது இருதயம் அவர்களுக்கு இருப்பிடம் ஆகிறது.
திரு இருதய வணக்கத்திற்கும், திவ்ய நற்கருணை பக்திக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. நமது போதகத்திலும், பீடம்-இல்லம், நற்கருணை-குடும்ப வாழ்வு என்ற இரு கூடாரங்களையும் இணைக் கிற உறவு நெருங்கிய சம்பந்தமுள்ளதாக இருக்க வேண்டும்; திரு இருதய அரசாட்சி ஸ்தாபகத்தின் கருத்தைச் சரியாய்க் கண்டுணர்ந் தால், அவை இரண்டிலும் அதே சேசுநாதர் நமது அரசரும் நண்பரு மானவர் இருக்கிறார் என்பதை உணர்வோம். உண்மையிலும், இந்த போதகத்தின் வழியாய், நற்கருணை பக்தியில் சிறந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்காய்ப் பெருக வேண்டும் என்பதே நமது நோக்கம். குடும்பங்களில் நற்கருணை பக்தி சிறந்து விளங்கினால், அவர் மெய்யாகவே நமது எஜமானரும், அரசருமாயிருப்பார்.
நாசரேத், பெத்தானியா போன்ற தமது சொந்த வீட்டில் சிநேக தேவன் செய்வதென்ன? அர்ச். அருளப்பர் சொல்லியிருக்கிற படி, நான் திரு இருதய இரக்கத்தின் செயல்களைப் பற்றிக் கண்டதையும், உணர்ந்ததையும் எல்லாம் எழுத வேண்டுமாகில், ""எழுத வேண்டிய புத்தகங்களை உலகமே கொள்ளாது'' என்று நானும் சொல்லலாம். நான் பிரசங்கம் செய்யும்போது மலைப்பை உண்டுபண்ணுவது, எதைச் சொல்வது என்பதல்ல, நான் சொல்லக் கூடிய மறுக்கப்படாத கணக்கற்ற அதிசயங்களுள் எதைத் தெரிந்து கொள்வது என்பதுதான். மலைகள் அசைவதைப் பார்த்திருக்கிறேன், பாறைகள் அபய சத்தமிடுவதைக் கேட்டிருக்கிறேன். அதாவது, தமாஸ்கஸ் நகருக்குப் போகும் பாதையில் பலர் தரையில் விழத் தாட்டப்பட்டதைப் பார்த்திருக்கிறேன் என்ற அதிசய சம்பவங்களே எனது பிரசங்கங்களின் செல்வாக்கு.
காலஞ்சென்ற பாப்பானவரான 15-ம் ஆசீர்வாதப்பரிடம், ""பரிசுத்த தந்தையே, அற்புதங்களின் மட்டில் எனது விசுவாசம் குறைந்து கொண்டே போகிறது; ஏனெனில் காணாத காரியங் களைத்தானே விசுவசிக்கிறோம் என்று சொல்ல வேண்டும்? நானோ அநுதினமும் அற்புதங்களைக் கண்டு உணர்கிறேன்'' என்று ஒரு நாள் நான் சொன்னதற்குக் காரணம் இதுவே. ஒரு தாய், மகள், அல்லது மனைவி, பக்தியுடன் அரசாட்சியை ஸ்தாபித்து அதன் கருத்துக் கிசைய நடந்ததன் பயனாக, இரக்கத்தின் அற்புதம் ஒன்றை ஆண்டவ ரிடம் அடைந்தாள் என்பது போன்ற சம்பவங்கள் வெகு சாதாரணம். அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஓர் ஆத்துமம் ஆச்சரியத் துக்குரிய விதமாய் மனந்திரும்பினதே இந்த அற்புதம். நமது பிரசார அலுவலக ஆவணங்களோடு தோல் பத்திரம் ஒன்று பத்திரமாகக் காப்பாற்றப்பட்டு வருகிறது. இரகசிய சபையில் உயர்பதவி வகித் தவனுடைய பத்திரம் அது. என் கையில் அது எப்படி வந்ததென்று சொல்லத் தேவையில்லை. அவனைப் போல், நமது போதக அலுவ லின் வலையில் அகப்பட்டவர்களின் தொகை கடவுளுக்குத்தான் தெரியும்.