துர்நாற்றம்

மனித சரீரத்தின் அழுகல் ஏற்கெனவே பெருந்துர்நாற்றம் வீச, பசாசுக்களின் பிரசன்னம் அந்த துர்நாற்றத்தை எல்லையற்ற விதமாக அதிகரிக்கும். 

அர்ச். மார்ட்டினுக்கு ஒரு பசாசு ஒருமுறை மனித ரூபத்தில் தோன்றியது. அந்தப் பொய்களின் அரூபி அவர் முன் அரச மகிமையோடும், தன் தலையில் கிரீடத்தோடும் தோன்றி, தான்தான் கடவுளின் திருச்சுதனான மகிமையின் அரசராகிய கிறீஸ்து என்றது. ஆனால் அதன் வஞ்சக எண்ணத்தைப் புரிந்து கொண்ட புனிதர் அதை அவமானப்படுத்தி விரட்டியடித்தார். 

ஆயினும் அது வெளியேறிய போது அந்த அறையை நிரப்பிய அருவருப்பான துர்நாற்றம் எவ்வளவு அதிகமாயிருந்த தென்றால், அர்ச். மார்ட்டின் இப்படிச் சொல்லிக் கொண்டார்: "ஒரேயொரு பசாசு இவ்வளவு துர்நாற்றத்தை எழுப்புமானால், கோடிக்கணக்கான பசாசுக்கள் உள்ள நரகத்தின் துர்நாற்றம் எப்படி இருக்கும்?!" நரகத்தின் துயரங்களை இந்தத் துர்நாற்றம் அளவற்ற விதமாய் அதிகரிக்கிறது.

நரகத்திலிருந்து ஒரே ஒரு உடல் வெளியே எடுக்கப்பட்டு, பூமியின்மீது கொண்டு வரப்படுமானால், அதே கணத்தில் பூமியின் மீது வாழும் அத்தனை உயிர்களும் நோய் வாய்ப்பட்டு இறந்து போகும். நரகத்திலுள்ள ஒரே ஒரு உடல் வெளியிடும் மரண நாற்றம் அவ்வளவு கொடுமையானது. அப்படியிருக்க, நரகத்தில் கோடிக்கணக்கான உடல்களிலிருந்து எழும் துர்நாற்றம் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும்?” என்று அர்ச். பொனவெந்தூர் கேட்கிறார்.

அர்ச். இஞ்ஞாசியார் காலத்தில் சேசு சபையினர் பரிசுத்த லொரேற்றோ மாதா ஆலயத்திற்கு அருகில் ஓர் இல்லத்தை அமைத்தனர். அவர்கள் செய்து வந்த ஞான நன்மைகளைக் கண்டு பொறாமைப்பட்ட பசாசு, அவர்கள் மீது போர் தொடுத்தது. 

காணக்கூடிய விதங்களில் பசாசு அவர்களுக்குத் தோன்றவும், பிரச்சினைகள் தரவும் கடவுள் அதை அனுமதித்தார். அந்த வீடு முழுவதும் கொடிய அரூபிகளால் நிறைந்தது. சில வேளைகளில் அவை துறவிகளைப் பயமுறுத்தின. சில சமயங்களில் அவர்களைத் தவறாகப் பயன்படுத்தின. 

மீண்டும் உலக இன்பங்களை அனுபவித்து மகிழுமாறு அவர்களைத் தூண்டுவதற்காக, அருவருப்பான கற்பனைத் தோற்றங்களை அவர்களுக்குக் காட்டின. இந்தச் சோதனையின்போது, அரூபிகளில் ஒன்று, புனிதரான ஒரு துறவியால் விரட்டப்பட்டு, அவரது அறையை விட்டு வெளியேற வேண்டியிருந்தபோது, அது அவரிடம், “என் ஆலோசனைகள் உமக்குப் பிரியமாயில்லை. எனவே என் மூச்சாவது உமக்கு ஒத்துப் போகின்றதா என்று பாரும்” என்று கூறியபடி, தன் வாயைப் பயங்கரமாய்த் திறந்து, மிக அருவருப்பான தனது மூச்சுக் காற்றை அவர் முகத்தின்மீது ஊதவே, அவர் மூச்சுத் திணறி, தாம் சாகப் போவதாகவே எண்ணி பயந்து போனார். 

நரக சுவாசத்தால் கெட்டுப் போன அந்த அறை, பல நாட்களாக, மனிதர் வாழவே தகுதியற்றதாகக் கைவிடப்பட்டிருந்தது. நரகத்திலோ இதுபோன்ற கோடிக்கணக்கான பசாசுக்கள் இருக்கின்றன! பொதுத் தீர்வைக்குப் பிறகு, கோடிக்கணக்கான அழுகிய சரீரங்களும் அங்கே இருக்கும்!


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...