"என் சிநேகத்தில் நிலைத்திருங்கள்'' (.15:9).
இவ்வார்த்தைகள் சுவிசேஷ, வேத கற்பனைகளின் பூரண நிறைவேற்றம். நான் உங்களை நேசித்ததன் காரணமாக, குகையில் பிறக்கவும், சிலுவையில் மரிக்கவும், நற்கருணையில் மறைந்திருக் கவும் சித்தமானேன். நீங்கள் என் சிநேகத்தைப் பெறுவதற்காக ஒன்றும் செய்யாதிருந்தும், இன்னும் ஆயிரந்தடவை என் சிநேகத் திற்குத் தகுதியற்றவர்களாய் நடந்திருந்தும், நான் உங்களை நேசித்திருக்கிறேன். உங்கள் அக்கிரமங்களைப் பொருட்படுத்தாமல் மாத்திரமல்ல, அவைகளின் நிமித்தமே உங்களது இரட்சகராக நான் உங்களை நேசித்திருக்கிறேன்.
உங்கள் மட்டில் விசேஷ அன்பு கொண்டு, உங்களை நேசித் திருக்கிறேன். என் பிதாவையும், மோட்சத்தையும், எனது சம்மனசுக் களையும் உங்களுக்காக விட்டுவிட்டு வரவில்லையா? தவறிப்போன என் பிள்ளைகளாகிய உங்களுக்காக உலக செல்வங்களை அவமதித்துத் தள்ளி, மாட்டுக் கொட்டிலில் மனுமகனாய்ப் பிறந்தேன். என் சொந்த உயிரை விட அதிகமாய் உங்களை நேசித்திருக்கிறேன். எப்படி யெனில் என் உயிரை உங்களுக்காக மனதாரக் கையளித்தேன்; உங்களுக்கு நித்திய ஜீவியத்தைத் தரும்படி, நான் மரணத்துக்கு உள்ளானேன். ஒருவன் தன் உயிரைக் கொடுக்கும்போது சகலத் தையும் கொடுத்து விடுகிறான். சிநேகத்தின் உத்தம அத்தாட்சி இதுவே. மட்டற்ற நீதியின் தண்டனைக்கு ஆளாகியிருந்தீர்கள். அப்போது நான், குற்றவாளிகளான உங்களுக்கும், என் பிதாவுக்கும் இடையே குறுக்கிட்டு, உங்கள் மீதுள்ள அன்பின் நிமித்தம் என் உயிரைக் கொடுத்தேன்.
என் மகத்துவத்தை விட அதிகமாய் உங்களை நேசித்திருக் கிறேன். இதோ என்னைப் பாருங்கள்: தேவனாகிய நான் அவமானம் நிறைந்து, பைத்தியக்காரனின் ஆடைபூண்டு நிந்தைக்கும், பரிகாசத் துக்கும் ஆளாகி புழுப்போல் காலால் மிதிக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள். என் மகிமையை விட உங்களை அதிகமாய் நேசித்திருக் கிறேன். என் மகிமை கல்வாரி மரணத்தால் மறைபட்டு, நற்கருணை யில் அதுமுதல் இருபது நூற்றாண்டுகளாக மறைந்திருக்கிறது. ஒரு கிராமக் கோவிலிலுள்ள, தூசி நிறைந்த எளிய பேழையினுள், பரலோகங்களிலே அடங்காத உன்னத தேவன் வீற்றிருக்கிறார் என்று யார் ஊகிக்கக் கூடும்?
நான் உங்களை மட்டற்ற மகத்தான அன்புகொண்டு நேசித் திருக்கிறேன், நேசிக்கிறேன், எனது சிறிய பிள்ளைகளே, நீங்கள் என்னைப் பதிலுக்குப் பதில் நேசிக்கிறீர்களா? எப்படியாயினும், சிநேகத்தில் நீங்கள் முந்தினவர்களல்ல. ஏனெனில் நான் உங்களை நித்திய காலமாய் நேசித்திருக்கிறேன்; என் இருதயத்தை உங்களுக்குக் கையளித்தேன். ""நித்திய நேசங்கொண்டு உங்களை நேசித்தேன்'' (எரேமி.21:3). உங்கள் இருதயங்களில் முதல் இடம் எனக்கு இருக் கிறதா? சிருஷ்டிகள், இன்பம், சவுகரியம் இவற்றின் மட்டிலுள்ள பற்றுதல்களுக்கு மேலாக என் மட்டில் உங்களுக்குப் பற்றுதல் உண்டா?
"வாசலில் நின்று தட்டுகிறேன்'' (காட்சி.3:20). பாருங்கள், பொறுமையாகக் காத்துக் கொண்டு நிற்கிறேன். மீண்டும் மீண்டும் கூப்பிடுகிறேன். ""ஆண்டவரே, சற்றுப் பொறும்; என் பிற்காலத்தைப் பற்றி, பண விஷயமாய், என் அலுவல் விஷயமாய் இப்போது மிகக் கவலையாயிருக்கிறேன். சற்றுப் பொறும்'' என்ற பதில்தான் பெரும் பாலும் கிடைக்கிறது. காலம் கடந்து போகிறது. அநுகூலமும், பிரதி அனுகூலமும் சுழன்று வருகின்றன; முட்களும், பூக்களும் தவணைப் படி வருகின்றன. நான் திரும்பவும் வந்து, ""என்னை உள்ளே விடு, சிநேகமும் சமாதானமுமானவன் நான்'' என்று சொல்லிக் கெஞ்சிக் கேட்கிறேன். ""ஆம் ஆண்டவரே, இப்போது அல்ல, எனது உலக நன்மைகளைப் பற்றி நான் எவ்வளவு கவலை கொண்டிருக்கிறேன், பாரும். எனது எண்ணங்கள் நிறைவேறும் தருணம் சமீபித்திருக் கிறது. ஒரு நிமிடம் கூட வீணாக்க முடியாது. ஒவ்வொரு வினாடியும் விலையேறப்பெற்றது. வேறொரு நாள் திரும்பி வாரும்'' என்ற பதில் கிடைக்கிறது. அன்பினால் பசித்து வந்தேன். ஏழைப் பிச்சைக்கார னைப் போல், இரத்தக் கறைபட்ட என் கையை நீட்டுகிறேன். எனது வேண்டுகோள் வீணாய்ப் போகிறது.
"திடீரென அந்த ஆத்துமத்தில் கவலை, அங்கலாய்ப்பு, மனிதப் பேராசை, மனதின் கற்பனைகள் ஆகியவை புகுந்து, கஸ்தியும், அமைதியின்மையும் உண்டாகின்றன. அப்போது, நான்தான் சமாதானம், பாக்கியம், சிநேகமென்று ஒருவேளை இந்தக் கசப்பான பாத்திரம் அவர்களுக்குக் காட்டியிருக்குமென்று சொல்லிக் கொண்டு, இன்னுமொரு தடவை கதவைத் தட்டுகிறேன். பதில் இல்லை. மீண்டும் தட்டி, ""கதவைத் திற, நான்தான், பயப்படாதே. நான் ஆறுதல் கொண்டு வருகிறேன், நான் சேசுநாதர், இருளடர்ந்த நாட்களில் இனிய நண்பன், தன்னை அலட்சியம் செய்பவர்களை ஒருக்காலும் மறந்து தள்ளிவிடாத நண்பன் நான். எனக்குக் கதவைத் திற. நான் தயாளமாயிருக்கிறேன்'' என்கிறேன்.
"கதவு அரைகுறையாகத் திறக்கப்படுகிறது. ஆயிரம் சாக்குப் போக்குகள் வெளிவருகின்றன... ""மீண்டும் திரும்பி வருவீரா? ஏனெனில் பல நாள் இராத் தூக்கமின்றிக் கஷ்டப்பட்டு, இப்போது தான் அசதியாய்ச் சற்று தூங்கப் போகிறேன்.'' (ஐயோ! ஒருவேளை, இது மரணத் தூக்கமோ!) வேறொரு சமயம் பார்த்துக்கொள்ளலாம், இச்சமயம் சரிப்படாது என்ற மரியாதைதான் எனக்குக் கிடைக்கிறது. ஆனால் ஐயோ பரிதாபம்! நான் திரும்பி வந்து, அவர்கள் கதவைத் திறக்கும்போது, பெரும்பாலும் மரணம் எனக்கு முன் உள்ளே பிரவேசித்திருக்கிறது.''
இது மிகவும் கஸ்திக்குரிய கதை, இருதயத்தைப் பிளக்கும் கதை, ஆனால் மிக உண்மையானது. மெய்யான தேவனும், மெய் யான மனிதனுமான சேசுநாதரிடம் எவ்வளவு பொறுமை, எவ்வளவு அன்பு! அவர் எனக்காக அன்புடன் விழித்துக் காத்துக்கொண்டிருக் கிறார்! நானோ, ஒன்றுமில்லாமையினின்று அவரால் சிருஷ்டிக்கப் பட்ட ஓர் அணு, ஓர் எளிய, நன்றிகெட்ட, தவறிப் போன சிருஷ்டி, தயாளம் அபரிமிதமாய்ப் பெற்ற சிருஷ்டி. சேசுநாதர், மட்டற்ற அன்புள்ள இருதயம் என்று சொல்வது எவ்வளவு உண்மையானது!
ஆனால் அவர் தமக்கு விரோதமாய்ச் சாத்தப்பட்டிருக்கிற கதவைப் பரிசுத்த கோபத்துடன் வலுவந்தமாய்த் திறக்காமல் இருப்பதேன்? அவர் ஆண்டவரும் எஜமானரும் அல்லவா? ஆம், அவர் அதை உடைத்துத் திறக்கக் கூடும், திறக்கவும் அவருக்கு உரிமை உண்டென்பது நிச்சயம். ஆனால் அவர் தேடுவது சிநேகம். கதவு திறந்து கிடப்பதையல்ல, அதைத் திறப்பவனின் சிநேகத்தையே அவர் விரும்புகிறார். முற்றிலும் சிநேகம், உருக்கம், தயை இரக்கம் பொருந்திய சர்வேசுரனாகிய அவர், இவ்வாறு தள்ளுண்டு போவது நம்பக் கூடாத விஷயமாகிறது.
அர்ச். பிரான்சிஸ் அசிசியாரும், அர்ச். தெரேசம்மாளும் சொன்னபடி, ""சிநேகம் சிநேகிக்கப்படுவதில்லை'' என்று நானும் கஸ்தி யுடன் சொல்ல வேண்டியிருக்கிறது. சேசுநாதரின் திரு இருதயத்தை அறிவாரில்லை. அவரது சிநேகிதர்கள் என்று சொல்லிக் கொள் பவர்கள் கூட அதை அறிவதில்லை. அவர் சிநேகிக்கப் படுவதில்லை.
நமது உள்ளத்தில் அச்சம் உண்டாகாதபடி, அவர் மனித னாய்ப் பிறந்து, சிலுவையிலே மரித்து, நற்கருணைப் பேழைக்குள் தம்மைக் கைதியாக்கிக் கொள்ளவில்லையா? அவர் மின்னலைத் தமது சவுக்காக உபயோகித்துத் தமது இராச்சியத்தை அச்சத்தின் மேல் கட்டியிருந் திருக்கலாம்; அதற்குத்தான் நாம் தகுதியுள்ளவர்கள். ஆனால், அவர் அடிமைகளை ஆளுவதற்கல்ல, மகன்கள் மீதும், பிள்ளைகள் மீதும் அரசு புரிய வந்தார். இரட்சகருடைய சுவீகாரப் பிள்ளைகளை ஆளும்படி வந்தார். அந்தப் பெயருக்கு அணுவளவும் நாம் தகுதியுடையவர்கள் அல்ல என்பது மெய்.
"தெய்வபயமே ஞானத்திற்கு ஆரம்பம்'' (சர்வப்பிர.1:16-17) என்று சொல்லக்கூடும். ஆம், ஆரம்பம்தான், தேவனிடம் ஏறிச் செல்வதற்கு உதவுகிற ஏணியின் முதற்படி அது. அநேகர் அந்த முதற்படியிலேயே நின்று விடுகிறார்கள்; இது சரியல்ல, இரண் டாவது, மூன்றாவது, நூறாவது படியிலும் இன்னும் உச்சிப் படிக்கும் ஏறிச் செல்ல வேண்டும். ""சிநேகம் வேத கற்பனைகளின் பூரண நிறைவேற்றம்'' என்று அர்ச். சின்னப்பர் சொல்கிறார் (உரோ. 13:10).
திரு இருதய அப்போஸ்தலர்களே! மனந்திரும்புதலுக்கு அஸ்திவாரம் தெய்வபயம் என்ற பாறை என்பதை ஒருக்காலும் மறக்க வேண்டாம். அதை அப்புறப்படுத்த முயலாமல், அதன் மேல் ஏறிச் செல்லுங்கள்; உத்தமதனத்தின் சிகரத்திற்குத் தாழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் ஏறிப் போங்கள், அந்தச் சிகரம் சிநேகம் ஒன்றே.