பாத்திமா காட்சி பெற்ற மூவருள் பிரான்சிஸும், ஜஸிந்தாவும் விரைவில் இறந்து மோட்சம் செல்வார்கள் என்றும், லூஸியா உலகில் வாழ்ந்து மரியாயின் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்த வேண்டு மென்றும் தேவதாய் கூறியபடியே, முந்திய இருவரும் இரண்டு ஆண்டுகளுக்குள் இறந்தனர்.
லூஸியா அதன்பின் பல ஆண்டுகள் உயிர்வாழ்ந்தாள். 1946 வரை லூஸியா தன்னால் இயன்ற மட்டும் அன்னையின் இருதய பக்தியையும், ஜெப தவத்தையும் பரப்ப முயன்றும், அவளால் அதிகமாக எதுவும் செய்ய முடியவில்லை.
எனவே அவள், தான் வாழ்ந்த கன்னியர் மடத்தை விட்டு வெளியேறி, உலகெங்கும் வேண்டுமானாலும் சென்று தன் மீது சுமத்தப்பட்ட அக்கடமையை நிறைவேற்ற ஆயத்தமானாள். அதற்கான உத்தரவுகள் பெறப்பட்டன. செயல்திட்டங்களும் தயாரிக்கப்பட்டன.
ஆனால் அதே ஆண்டில் (1946) சங். கோல்கன் என்ற குரு நோயுற்றிருந்தார். அசையாமல் படுக்கையில் இருந்தால் ஆறு மாதம் உயிர் நீடிக்கக் கூடும் என்று டாக்டர்களால் கைவிடப்பட்ட அவர், தாம் குணமடைந்தால், அன்னையின் பணிக்குத் தம்மை முழுவதும் அர்ப்பணம் செய்வதாக நேர்ந்து கொண்டார்.
மாமரி அன்னை அதை ஏற்றுக் கொண்டார்கள். கோல்கன் சுவாமி முழுக் குணமடைந்தார். தன் வாக்குறுதிப்படி உழைத்தார். மரியாயின் மாசற்ற இருதயத்தின் மீது அன்பு, ஜெபம், தவம் ஆகிய மூன்றையும் ஆயுதமாகக் கொண்டு பொங்கி வரும் கம்யூனிஸ சிவப்பு அணியைத் தடுத்து மனந்திருப்ப பாத்திமா நீல அணியை அமைத்தார்.
நாஸ்திகம், இனப் பகை என்ற தப்பறைகளை அடிப்படையாகக் கொண்டு போர்க்கருவிகள், அடக்குமுறை, சிறை, சித்திரவதை, இவற்றை ஆயுதமாக உபயோகித்து உலகைக் கவ்விப் பிடித்து வருகிறது கம்யூனிஸம்.
இதற்கு நேர்மாறாக, மரியாயின் மாசற்ற இருதயத்திற்குத் தன்னை அர்ப்பணித்தல், ஜெபம் (ஜெபமாலை), பரித்தியாகம் ஆகிய ஞான ஆயுதங்களைக் கொண்டு கம்யூனிஸத்திற்கு அணையிட்டு, ரஷ்யாவை மனந்திருப்பி, மாமரி வாக்களித்துள்ள சமாதானத்தை உலகில் கொண்டு வர உழைத்தது நீல அணி. ஒரு கிறீஸ்தவன் செய்ய வேண்டிய சாதாரணக் கடமைகளையே நன்றாய்ச் செய்யும்படி நீல அணி தூண்டியது.
1950-ம் ஆண்டு மே மாதம் சங். கோல்கன், பாப்பரசர் 12ம் பத்திநாதரைப் பேட்டி கண்டார். பாப்பரசர் அவரை அன்போடு வரவேற்று, அவரையும், நீல அணி உறுப்பினர் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
கர்தினால் திஸ்ஸரான் என்பவர், “பாத்திமாவில் அன்னை மாமரி விடுத்த கோரிக்கைகளை நீல அணி நிறைவேற்றுகிறது” என்று புகழ்ந்துரைத்தார். அவர் மேலும் சொன்னார்: “இன்று எல்லாரும் சமாதானத்தை விரும்புகிறார்கள். ஆனால் உண்மையான சமாதானம் வேண்டுமானால், பக்தியற்றவர்கள் மனந்திரும்ப வேண்டும். அதற்கு முன் நம் ஒவ்வொருவரின் உள்ளமும் திருந்த வேண்டும்.
பாப்பரசர் உலகத்தையும், குறிப்பாக சோவியத் சோலிஸ்ட் நாடுகளையும் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்த அர்ப்பணத்தை ஒவ்வொருவரும் வாழச் செய்வதில் நீல அணியானது திருச்சபையின் கருத்தோடு செயல்பட்டது. ஒவ்வொரு கிறீஸ்தவனும் தன் போதகரின் மாதிரிகைப்படி தினமும் தன் சிலுவையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இந்த அர்ப்பணித்தல் வற்புறுத்து கிறது.”
பாப்பரசர் ஆறாம் சின்னப்பர் நீல அணியின் ஒழுங்குகளை அங்கீகரித்து, அங்கத்தினர் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
நீல அணியின் எளிய நிபந்தனைகள்
நீல அணியில் கட்டணம், கட்டாயம் எதுவுமில்லை. அதன் நிபந்தனைகளோ மிகவும் எளியவையாக இருந்தன. அவை:
1. மரியாயின் மாசற்ற இருதயத்திற்குத் தன்னை முழுவதும் தினமும் அன்புடன் அர்ப்பணித்தல்: அதன் அடையாளமாக உத்தரியம் அல்லது உத்தரிய சுரூபம் அணிந்திருத்தல்.
2. ஒவ்வொரு நாளும் ஜெபித்தல். குறிப்பாக தினமும் ஒரு 53 மணி ஜெபமாலை, தேவ இரகசியங்களைத் தியானித்து சொல்லுதல்.
3. பரித்தியாகம் செய்தல்: கிறீஸ்தவ வாழ்க்கையின் கடமைகளை நன்றாகச் செய்வதில் ஏற்படும் கஷ்டங்களைத் தவ முயற்சியாக, பாவப் பரிகார நோக்கத்துடன் ஏற்றுக்கொள்ளுதல்.