யூதர்களின் விருப்பப்படி, சேசுநாதர் சிலுவையில் அவமான மரணமடைய வேண்டுமானால் வழியில் அவர் இறந்துவிடக்கூடாது. ஆதலால் யூதர்கள் சேசுவை வேகமாகக் கொலைக்களம் நடத்திச் செல்கிறார்கள்.
நமது அன்புள்ள இரட்சகரும், அந்த பாரமான சிலுவையை அணைத்து முத்தமிடுகிறார். மனிதர்களைப் பரம பிதாவோடு ஒன்றிப்பதும், பரலோகத்தை மகிமைப்படுத்துவதும், சாவுக்கும் நரகத்திற்கும் பாத்திரமாயிருந்த அற்ப மனிதர்களை அர்ச்சிப்பதும், மூடருக்கு ஞானம் கொடுப்பதும், பலவீனருக்குத் தைரியம் கொடுப்பதும், துன்ப துயரத்தில் ஆறுதலும், இன்ப சந்தோஷத்தில் எச்சரிக்கையும் கொடுப்பதும், பசாசுக்களை நடுநடுங்கச் செய்வதும், பரம பிதாவின் நீதியின் அடையாளமும், கடைசியாக, நம்முடையவும், சகல மனிதர்களுடையவும் ஆத்துமங்களின் கிரயத்தை நமது அன்பருக்கு ஞாபகமூட்டுவதும் திருச்சிலுவையே.
ஆகையால் ஆண்டவரின் கனிவுள்ள நெஞ்சம் அதைக் கண்டவுடன் தன்னோடு அணைத்துக்கொள்கிறது. சேசு சிலுவையை அணைத்து முத்த மிடும்போது, நம்மையும் சகல மனிதர்களையும் தமது இருதயத்தோடு அணைத்துக் கொள்கிறார்.
எபிரேய முறைப்படி ஆறாம் மணி வேளை; அதாவது உச்சிப் பொழுது. நமதாண்டவர் தம் உடைகளை அணிந்துகொண்டு தம் கடைசிப் பயணத்தைத் தொடங்குகிறார். அவரது கழுத்தில் அவர் பெயரும் மரண தண்டனைக்கான காரணமும் எழுதப்பட்ட பலகை தொங்குகிறது. சேசு சிலுவையைத் தோளில் சுமந்துகொண்டு நடக்கிறார். ஏற்கெனவே அனுபவித்த வாதைகளால் ஏற்பட்ட பலவீன மும், களைப்பும், அவரை சிரமப்பட்டு நடக்கச் செய்கின்றன. யூதர்கள் அவர் வேகமாய் நடக்கத் தூண்டுகின்றனர். இதனால் சேசுநாதர் தடுமாறிக் கீழே விழுகிறார். ஆ! அப்படி விழுந்தது சிலுவையின் பாரத் தால் மட்டுமல்ல; நமது கணக்கற்ற பாவங்களும், சிலுவைப் பளுவோடு சேர்த்து நம் இரட்சகரைத் தரை மட்டும் அழுத்தின.
அதோ, சேசுவைப் பெற்ற அன்புள்ள தாயாரான பரிசுத்த கன்னி மாமரி நிற்கிறார்கள். தனது செல்வ மகனின் திருப்பாடுகளைக் கண்டு, மாசற்ற இருதயம் வியாகுல வாளால் ஊடுருவப்பட்டவர்களாய், அவரை எதிர்நோக்கிச் செல் கிறார்கள். தாயும் மகனும் சந்திக்கும் அந்நேரம், எதிரிகளின் மனதையும் உருக்க வல்லது. மாதா மனுக்குலத்திற்கு மகிமையும் பெருமையும் தரப் பிறந்தவர்கள். சிருஷ்டிகளில் அதிபிரமாணிக்க முள்ள சிருஷ்டி. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மகனோ மனுக்குலத்திற்குப் புண்ணிய வழிகாட்டும்படி அவதாரமான தேவசுதன். அன்பின் வடிவமும், அன்பின் கண்ணாடியும் சந்திக் கின்றன. கருணையின் ஊற்றும், கருணையின் வாய்க்காலும் சேர்ந்து செயல்படுகின்றன. இத்தகைய இரு இருதயங்களும் கரைகாணாத துக்கத்தால் நிரம்பி நம் மீட்புக்காகப் பரிகாரம் செய்திருக்கும் போது, இவர்களைப் பிரித்து வைக்கலாமா? மாதா தேவையில்லை, மகன் இருந்தால் போதும் என்று வாய் கூசாமல் பேசலாமா? அன்று கபிரியேல் உரைத்த மங்கள வார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்தவுடன், ''ஆகக்கடவது'' எனக் கன்னிகையாய் இருந்த இவர்கள் தன் கன்னிமைக்குப் பழுதின்றி, மாதா ஆக சம்மதித்தார்கள். இன்று தன் கன்னி உதரத்தில் கருவான திருமகனின் இரத்தம் எல்லாம் கழுமரமாகிய சிலுவையையும், ஜெருசலேம் வீதிகளிலுள்ள கல்லையும், மண் ணையும் நனைப்பது கண்டு, "ஆகக்கடவது" எனப் பிதாவின் சித்தத்திற்குச் சம்மதிக்கிறார்கள். அன்று, "உம் இருதயத்தையும் ஒரு வாள் ஊடுருவும்" என்று சிமியோன் சொன்னதைக் கேட்டு வேதனைப்பட்டார்கள்; இன்று அந்த வாள் தன் மாசற்ற இருதயத்தை ஊடுருவுவது கண்டு, அமைதியுடன் "ஆகக்கடவது" என்று பணிகிறார்கள். ஆதலால் ஒருநாளும் இந்த மாதாவையும் மகனையும் பிரிக்கக் கனவிலும் நினையாதீர்கள். மாதாவைப் பின்பற்றி மகனிடம் செல்ல முயற்சிப்பதுதான் ஈடேற்றத்தின் வழியும் நியதியுமாய் இருக்கிறது.
இவ்விதமாய் சேசுநாதர் நமது இரட்சணியப் பாதையைச் சிலுவைப் பாதையாய் ஆக்கத் திருவுளமானார். மரணத்தின் கருவியாயிருந்த இந்தச் சிலுவை இப்போது வாழ்வின் வெற்றிக் கொடியாக மாறி விட்டது. சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சிக்கத் திருவுளமான தேவன், சிலுவையின் மூலமாகவே நம்மை ஈடேற்றப் போகிறார்.