1917, நவம்பர் மாதம் 7-ம் தேதி மாஸ்கோ நகரில் கம்யூனிச சிவப்புக் கொடி உயர்த்தப்பட்டது. அன்றுதான் கம்யூனிஸ முதல் இரத்தப் புரட்சி நடந்தது.
மூன்றாவது உரோமாபுரி என்று அழைக்கப்பட்ட மாஸ்கோ நகரம், கம்யூனிஸக் கோட்டையாக மாற்றப் பட்டது. பழைய ஜார் ஆட்சி வீழ்த்தப்பட்டது. பயங்கர கம்யூனிஸ்ட் ஆட்சி ரஷ்யா முழுவதையும் மூடிக்கொண்டது.
எங்கெல்லாம் செங்கொடி பறந்ததோ, அங்கெல்லாம் மரணமும், அழிவும் தொடர்ந்தன. தன் மக்களின் இரத்தத்தாலேயே ரஷ்ய நாடு சிவந்து போயிற்று. கிரெம்ளின் மாளிகை வாசலிலிருந்த மாமரி அன்னையின் சேத்திரம் அழிக்கப்பட்டதை ரஷ்ய மக்கள் கண்ணீருடன் பார்த்தனர்.
அந்த இடத்தில் ஒரு பெரிய விளம்பரம்: “மதம் மக்களை மயக்கும் மது” என்று எழுதி வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் ஆலயங்கள் மூடப்பட்டன. மேற்றிராணிமாரும், குருக்களும், சந்நியாசிகளும், கன்னியர்களும் கொல்லப்பட்டனர்.
எங்கும் அச்சம் நிறைந்தது. சுதந்திரம் அடியோடு பிடுங்கப்பட்டது. மக்கள் செய்வதறியாது திகைத்தனர். ரஷ்யாவிலிருந்து கம்யூனிஸம் பரவி மற்ற நாடுகளையும் அடிமை கொண்டது.
சீனா வீழ்ந்தது. அநேக கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், தூரக்கிழக்கு நாடுகளும் பலியாயின. எங்கும் இருள் பரவியது. மறைவிலும், இரகசியமாகவும் ரஷ்ய மக்கள் மாதாவின் திருச்சாயலைச் சுற்றி ஜெபித்தனர். விடுதலைக்காக மன்றாடினர்.
கம்யூனிசத்திற்கு மாற்று, மாமரியின் மாசற்ற இருதயம்
ரஷ்ய மக்களின் இம்மன்றாட்டை முன்கூட்டியே கேட்ட மாமரி, அவர்கள் விடுதலையடையும் வழியையும் முன்கூட்டியே கூறி ஆறுதலளித்துள்ளார்கள். கம்யூனிஸம் மாஸ்கோவில் இரத்தப் புரட்சியை ஏற்படுத்துவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அவ்வாறு செய்துள்ளார்கள். மக்களின் மிதமிஞ்சிய பாவத்தின் விளைவாக கம்யூனிஸம் வரும் என்றும், அது உலகில் பரவுமென்றும், அதிலிருந்து விடுபட தன் மாசற்ற இருதயத்தின் வழியாக ஜெப தவம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
1917, ஜூலை 13-ம் நாள் கன்னிமாமரி அளித்த பாத்திமா மூன்றாம் காட்சியில் மூன்று சிறுவர்களுக்கும் நரகத்தைத் திறந்து காட்டியபின் இவ்வாறு கூறினார்கள்:
“பரிதாபத்துக்குரிய பாவிகளின் ஆன்மாக்கள் செல்லும் நரகத்தை நீங்கள் கண்டீர்கள். அவர்களைக் காப்பாற்ற என் மாசற்ற இருதயத்தின் மீது பக்தியை உலகில் ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார். நான் உங்களுக்குக் கூறுவதை நீங்கள் செய்தால், அநேக ஆன்மாக்கள் காப்பாற்றப்படுவார்கள்.
சமாதானம் நிலவும். இந்த யுத்தம் (முதல் உலகப் போர்) முடிவடையும். ஆனால் மனிதர்கள் கடவுளை நோகச் செய்வதை நிறுத்தாவிட்டால், இன்னொரு இதைவிடக் கொடிய யுத்தம் வரும். இனந்தெரியாத ஒரு ஒளியால் ஓர் இரவு வெளிச்சம் பெறுவதை நீங்கள் காணும்போது, உலகத்தின் பழிபாவங்களுக்காக அதை யுத்தத்தாலும், பசியாலும் திருச்சபைக்கும், பாப்பரசருக்கும் எதிரான கலாபனையாலும் சர்வேசுரன் தண்டிக்கப் போகிறார் என்பதற்கு அவர் கொடுக்கும் அடையாளம் அதுவே என அறிந்து கொள்ளுங்கள்.
இதைத் தடுத்து நிறுத்த ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்றும், முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்க வேண்டும் என்றும் கேட்க வருவேன். என் விருப்பங்கள் நிறைவேற்றப் பட்டால், ரஷ்யா மனந்திரும்பும், சமாதானம் நிலவும்.
இல்லாவிட்டால் ரஷ்யா தன் தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும். யுத்தங்களையும், திருச்சபைக் கலாபனைகளையும் எழுப்பி விடும். நல்லவர்கள் கொல்லப்படுவார்கள். பாப்பரசர் அதிக துன்பங்களை அனுபவிக்க நேரிடும். பல நாடுகள் இல்லாது அழிக்கப்படும். ஆனால் இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும். பாப்பரசர் ரஷ்யாவை எனக்கு ஒப்புக்கொடுப்பார். அது மனந்திரும்பும். உலகிற்கு ஒரு சமாதான காலம் கொடுக்கப்படும்.”
மேலே கண்ட நம் தாயின் செய்தியே பாத்திமாவின் முக்கியச் செய்தி. அதிலேயே நீல அணியின் அவசியமும், அதன் வெற்றியும் அடங்கியிருந்தன. நீல அணி எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ, அந்த அளவு நம் தாயின் விருப்பங்கள் நிறைவேறும், அந்த அளவுக்கே ரஷ்யா தன் தப்பறைகளை உலகெங்கும் பரப்புவதும், யுத்தங்களும், திருச்சபைக் கலாபனைகளும் தடுக்கப்படும், ரஷ்யா மனந்திரும்பி சமாதானம் வரும் என்ற நிலை இருந்தது.
நீல அணியை நாம் எந்த அளவுக்கு ஏற்று அன்னையின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறோமோ, அந்த அளவுக்கு இனந்தெரியாத ஒளியாகிய அப்பயங்கர அடையாளம் தோன்றாமல் நிறுத்தப்படும், அதையொட்டிய தண்டனைகளும் தவிர்க்கப்படும் நிலையும் இருந்தது.