அதிகாரம் 01
1 யூதாவின் அரசர்களாகிய யோவாத்தான், ஆக்காஸ், எசேக்கியாஸ் ஆகியவர்களின் காலத்தில் மோரெஷூத் ஊராராகிய மிக்கேயாசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் யெருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே:
2 மக்களினங்களே, நீங்களனைவரும் கேளுங்கள்; மண்ணுலகமே, அதிலுள்ளவையே, நீங்களும் செவிசாயுங்கள்; இறைவனாகிய ஆண்டவர் உங்களுக்கு எதிராய்ச் சாட்சிகூறப் போகிறார்; ஆண்டவர் தமது பரிசுத்த கோயிலிலிருந்து பேசுகிறார்.
3 இதோ, ஆண்டவர் தம் இருப்பிடத்திலிருந்து புறப்படுகிறார், இறங்கி வந்து உயர்ந்த இடங்களை மிதித்து நடப்பார்;
4 நெருப்பின் முன்னால் வைக்கப்பட்ட மெழுகு போலவும், பாதாளத்தில் பாய்ந்தோடும் வெள்ளம் போலவும் அவர் காலடியில் மலைகள் கரைந்து போகும், பள்ளத்தாக்குகள் பிளந்து போகும்.
5 இவையெல்லாம் யாக்கோபின் மீறுதலை முன்னிட்டும், இஸ்ராயேல் வீட்டாரின் பாவங்களை முன்னிட்டும் நேரிடும். யாக்கோபின் குற்றம் யாது? சமாரியா அல்லவோ? யூதா வீட்டாரின் பாவம் யாது? யெருசலேம் அல்லவோ?
6 ஆகையால் சமாரியாவைப் பாழடைந்த மண்மேடாகவும், திராட்சைத் தோட்டங்கள் வைக்கும் இடமாகவும் செய்வோம்; அதன் கற்களைப் பள்ளத்தாக்குகளில் உருட்டி விடுவோம், அதன் அடிப்படைகளை வெளியில் வாரி எறிவோம்.
7 அதன் படிமங்கள் யாவும் துகள் துகளாக்கப்படும், வருமானங்கள் எல்லாம் நெருப்பினால் எரிக்கப்படும்; அதன் சிலைகளை எல்லாம் நாம் நொறுக்கிப் போடுவோம். ஏனெனில் விலைமகளுக்குரிய பணயமாய் அவை சேர்க்கப்பட்டவை, விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும்.
8 ஆதலால் நான் ஓலமிட்டழுவேன், வெறுங்காலோடும் ஆடையின்றியும் திரிவேன்; குள்ளநரிகள் போல் ஊளையிடுவேன், நெருப்புக்கோழிகள் போலப் புலம்புவேன்.
9 அதன் புண் ஆறாதது, யூதா வரையில் புரையோடியுள்ளது, என் மக்களின் வாயிலாகிய யெருசலேம் வரை வந்து விட்டது.
10 காத் நகரத்தில் இதை அறிவித்தல் வேண்டா, கண்ணீர் சிந்திப் புலம்ப வேண்டா; பேத்- லெயாபிராவில் புழுதியில் விழுந்து புரளுங்கள்.
11 ஷாப்பீரின் குடிகளே, ஆடையின்றி நாணத்துடன் அகலுங்கள், ஸானானில் வாழ்பவர்கள் வெளியில் புறப்படவில்லை; பேத்- எசெல் தனது அடித்தளத்தினின்று, உறுதியான அடைப்படையிலிருந்து தகர்க்கப்பட்டது.
12 மாரோத் நகர மக்கள் நன்மை வருமென ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர், ஏனெனில் தீங்கு ஆண்டவரிடமிருந்து இறங்கி யெருசலேமின் வாயில் மேல் விழுந்தது.
13 லாக்கீஷ் நகரமே, விரைந்தோடும் குதிரைகளைத் தேர்களோடு சேர்த்துப் பூட்டு; சீயோன் மகளின் பாவத்திற்கு நீயே ஊற்று, இஸ்ராயேலின் குற்றங்களை முதலில் பின்பற்றியது நீயே.
14 ஆதலால், மோரெஷூத் - காத்துக்கு நீ சீதனம் கொடுப்பாய், ஆக்ஸிப் வீடுகள் இஸ்ராயேல் அரசர்களுக்குக் கானல் நீராய்ப் போகும்.
15 மரேஷா குடிகளே, கொள்ளைக் காரன் உங்கள் மேல் திரும்பவும் வருவான், இஸ்ராயேலின் மகிமை அதுல்லாம் வரை செல்லும்.
16 உங்கள் செல்லப் பிள்ளைகளைக் குறித்து, உங்கள் தலை மயிரை வெட்டி மழித்துக் கொள்ளுங்கள்; கழுகைப் போல முற்றிலும் மழித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அவர்கள் உன்னிடமிருந்து நாடு கடத்தப்படுவார்.
அதிகாரம் 02
1 தங்கள் படுக்கைகளில் தீமையைத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் அதைச் செய்து முடிக்கிறார்கள், அவர்கள் கைகளும் அந்தத் திறமையைக் கொண்டுள்ளன!
2 நிலங்கள் மேல் ஆசை கொண்டு வலுவந்தமாய்ப் பிடுங்குகிறார்கள், வீடுகளை விரும்பி வஞ்சகமாய்க் கவர்கிறார்கள்; ஆளையும் வீட்டையும் பறிமுதல் செய்து, ஒடுக்கிச் சொந்தக்காரனையும் சொத்தையும் கவர்ந்து கொள்ளுகிறார்கள்.
3 ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ, இந்த இனத்தார்க்கும் எதிராய் நாமே தீமை செய்யத் திட்டமிடுகிறோம்; அதினின்று உங்கள் தலையை உங்களால் விடுவிக்க இயலாது; நீங்கள் இறுமாந்து நடக்கமாட்டீர்கள், ஏனெனில் காலம் பொல்லாததாய் இருக்கும்.
4 அந்நாளில் மக்கள் உங்கள்மேல் வசைப்பாடல் புனைந்து, "நாங்கள் முற்றிலும் பாழாய்ப்போனோம், என் மக்களின் உரிமைச் சொத்து பறிபோயிற்று. ஐயோ, என்னிடமிருந்து அது பறிக்கப்படுகிறதே! கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறதே!" என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.
5 ஆகையால், நூல் பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் ஆண்டவரின் சபையில் ஒருவனும் இரான்.
6 பிதற்றாதீர்கள்" என்று அவர்கள் பிதற்றுகிறார்கள்; "இப்படியெல்லாம் பிதற்றல் வேண்டா, எந்த வகையான அவமானமும் நேரிடாது;
7 யாக்கோபின் வீடு சாபத்திற்குள்ளாகுமோ? ஆண்டவர் பொறுமையை இழந்துவிட்டாரோ? அவரது செயல்முறை இதுதானோ? தம் மக்களாகிய இஸ்ராயேலுக்கு அவர் பேசுவதெல்லாம் பரிவுள்ள சொற்களல்லவோ?" என்கிறார்கள்.
8 ஆனால் நீங்கள் தான் நம் மக்களுக்கு விரோதமாய்ப் பகைவனைப் போல் எழும்புகிறீர்கள்; மாசற்றவனிடமிருந்து மேலாடையைப் பறிக்கிறீர்கள், அமைதியாய் இருப்பவன் மேல் போர் தொடுக்கிறீர்கள்.
9 எம் மக்களின் பெண்களை நீங்கள் அவர்களுடைய இனிமையான வீடுகளிலிருந்து விரட்டுகிறீர்கள்; அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடமிருந்து என்றென்றைக்கும் நம் மகிமையை எடுத்து விடுகிறீர்கள்.
10 எழுந்து போய்விடுங்கள், இது இளைப்பாறும் இடமன்று; நாடு தீட்டுப்பட்டுவிட்டது, பேரழிவுக்கு உள்ளாகப் போகிறது.
11 திராட்சை இரசத்தையும் மதுவையும் உங்களுக்கு நான் பொழிவேன்" என்று வீண் சொற்களையும் பொய்களையும் ஒருவன் பிதற்றினால், அவனே இந்த மக்களுக்குகந்த தீர்க்கதரிசி.
12 யாக்கோபே, உங்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்ப்போம், இஸ்ராயேலில் எஞ்சினோரை ஒன்று கூட்டுவோம்; ஆடுகளைக் கிடையில் மடக்குவதுபோலும், மந்தையை மேய்ச்சல் நிலத்தில் வளைப்பது போலும் ஒன்றாக உங்களைக் கூட்டிச் சேர்ப்போம்; வருகின்ற கூட்டத்தின் ஆரவாரம் மிகுதியாய் இருக்கும்.
13 வழியைத் திறப்பவர் அவர்கள் முன்னால் நடப்பார், அவர் முன்னால் நடக்க, அவர்கள் உள்ளே போய் வெளியே வருவார்கள்; அவர்களுடைய அரசர் அவர்களுக்கு முன்னால் செல்வார், ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்.
அதிகாரம் 03
1 அப்பொழுது நான் சொன்னேன்: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ராயேல் வீட்டாரை ஆள்பவர்களே, கேளுங்கள்! நீதியை அறிந்து கொள்வது உங்கள் கடமையன்றோ?
2 நீங்களோ நன்மையைப் பகைத்துத் தீமையை இச்சிக்கிறீர்கள், என் மக்களின் தோலையுரிக்கிறீர்கள், அவர்களின் எலும்புகளிலிருந்து சதையைக் கிழிக்கிறீர்கள்.
3 அந்தத் தலைவர்கள் என் மக்களின் சதையைத் தின்கிறார்கள், அவர்களுடைய தோலையுரிக்கிறார்கள்; அவர்கள் எலும்புகளை முறித்துச் சட்டியில் வேகும் சதை போலவும், கொப்பரையில் போடும் இறைச்சி போலவும் துண்டிக்கிறார்கள்.
4 பின்னர் அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுவர், ஆனால் அவர்களுக்கு அவர் செவிசாய்க்க மாட்டார்; அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்வார்; ஏனெனில் அவர்கள் கொடிய செயல்கள் புரிந்தார்கள்.
5 என் மக்களைத் தவறான நெறியில் நடத்துகிற தீர்க்கதரிசிகளைக் குறித்து ஆண்டவர் சொல்லுகிறார்: வயிற்றுக்குத் தீனி கிடைக்கும் வரையில் "சமாதானம்!" என்று முழங்குகிறார்கள்; எவனாவது அவர்களுக்கு உண்ணக் கொடுக்கவில்லையெனில், அவனுக்கு எதிராய்ப் போர் தொடுக்கிறார்கள்.
6 ஆதலால் உங்களை இருள் சூழும், இனிக்காட்சி கிடைக்காது, காரிருள் கவ்விக்கொள்ளும், முன்னுரைத்தல் இராது; தீர்க்கதரிசிகளுக்கு அந்திக்காலம் வந்துவிட்டது; பகலும் அவர்களுக்கு இருளாக இருக்கும்.
7 காட்சி காண்பவர்கள் வெட்கிப்போவார்கள், முன்னுரைப்பவர்களும் நாணிப் போவார்கள்; அவர்கள் அனைவரும் வாயைப் பொத்திக் கொள்வார்கள்; ஏனெனில் கடவுளிடமிருந்து வாக்கு ஏதும் வாராது.
8 ஆனால் யாக்கோபுக்கு அதன் அக்கிரமத்தையும், இஸ்ராயேலுக்கு அதன் பாவத்தையும் எடுத்துக்காட்ட நான் வல்லமையாலும் ஆண்டவரின் ஆவியாலும், நீதியாலும் ஆற்றலாலும் நிரப்பப்பட்டுள்ளேன்.
9 யாக்கோபு வீட்டாரின் தலைவர்களே, இஸ்ராயேல் வீட்டாரை ஆள்பவர்களே, நீதியானதை அருவருத்து நேர்மையானதையெல்லாம் கோணலாக்குகிறவர்களே,
10 இரத்தப்பழியால் சீயோனையும், அக்கிரமத்தால் யெருசலேமையும் கட்டியெழுப்புகிறவர்களே, இதைக் கேளுங்கள்:
11 அதன் தலைவர்கள் கையூட்டு வாங்கிக் கொண்டு வழக்குத் தீர்க்கிறார்கள்; அதன் அர்ச்சகர்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர், அதன் தீர்க்கதரிசிகள் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர். இவ்வளவும் செய்து கொண்டே "ஆண்டவர் நம் நடுவில் இருக்கிறாரல்லரோ? தீங்கெதுவும் நமக்கு நேராது" என்று சொல்லி, ஆண்டவரை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
12 ஆதலால், உங்களை முன்னிட்டு சீயோன் வயல் வெளியைப் போல் உழப்படும், யெருசலேம் பாழடைந்த மண் மேடாகும், திருக்கோயிலுள்ள மலையானது காடாகும்.
அதிகாரம் 04
1 இறுதி நாட்களில் ஆண்டவரின் கோயில் அமைந்துள்ள மலை மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நாட்டப் படும், குன்றுகளுக்கெல்லாம் மேலாக உயர்த்தப்படும், பலநாட்டு மக்கள் அதை நோக்கி ஓடிவருவர்.
2 மக்களினங்கள் கூடிவந்து, "வாருங்கள், ஆண்டவரின் மலைக்கு ஏறிச்செல்வோம், யாக்கோபின் கடவுளது கோயிலுக்குப் போவோம்; தம்முடைய வழிகளை அவர் நமக்குக் கற்பிப்பார், நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள். ஏனெனில் சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளியாகும், யெருசலேமிலிருந்தே ஆண்டவர் வாக்கு புறப்படும்.
3 பலநாட்டு மக்களுக்கிடையில் அவரே தீர்ப்பிடுவார், தொலைநாடுகளிலும் வலிமை மிக்க மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்; அவர்களோ, தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; நாட்டுக்கு எதிராய் நாடு வாள் எடுக்காது, அவர்களுக்கு இனிப் போர்ப்பயிற்சியும் அளிக்கப்படாது;
4 அவர்களுள் ஒவ்வொருவனும் தன் தன் திராட்சைக் கொடியின் கீழும், அத்தி மரத்தினடியிலும் அமர்ந்திருப்பான்; அவர்களை அச்சுறுத்துகிறவன் எவனுமில்லை, ஏனெனில் சேனைகளின் ஆண்டவரே இதைத் திருவாய் மலர்ந்தார்.
5 மக்களினங்கள் யாவும் தத்தம் கடவுளின் பேரால் நடப்பர், நாமோ நம் கடவுளாகிய ஆண்டவர் பேரால் என்றென்றும் நடப்போம்.
6 ஆண்டவர் கூறுகிறார்: அந்நாளில் நொண்டிகளை நாம் ஒன்றாய்ச் சேர்ப்போம், விரட்டப் பட்டோரையும் நாம் துன்புறுத்தியவர்களையும் கூட்டுவோம்.
7 நொண்டிகளை எஞ்சியிருக்கும் மக்களாய் ஆக்குவோம், விரட்டப்பட்டவர்களை வலிமையான இனமாக்குவோம்; அன்று முதல் என்றென்றைக்கும் ஆண்டவரே சீயோன் மலையிலிருந்து அவர்கள் மேல் அரசு செலுத்துவார்.
8 கிடையின் காவற் கோபுரமே, சீயோன் மகளெனும் மலையே, முதல் ஆளுகை, யெருசலேம் மகளின் அரசு உன்னிடம் வரும்.
9 இப்பொழுது நீ ஓலமிட்டுக் கதறுவானேன்? உன்னிடத்தில் அரசன் இல்லாமற் போயினானோ? பிரசவிக்கும் பெண்ணைப் போல நீ இவ்வாறு வேதனைப்பட உன் ஆலோசனைக்காரன் அழிந்து விட்டானோ?
10 சீயோன் மகளே, பிரசவ வேதனையிலிருப்பவளைப் போல நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு; ஏனெனில் இப்பொழுது நீ நகரத்தை விட்டு வெளியேறி நாட்டுப்புறத்தில் வாழ்வாய்; பபிலோனுக்குப் போவாய்; ஆங்கே நீ விடுதலை பெறுவாய், உன் பகைவர் கையிலிருந்து உன்னை ஆண்டவர் மீட்பார்.
11 பலநாட்டு மக்கள் உனக்கெதிராய் இப்பொழுது கூடுகின்றனர், "அந்நகரம் தீட்டுப்படக் கடவது, நம் கண் சீயோனின் அழிவைப் பார்த்துப் பூரிக்கக்கடவது" என்கிறார்கள்.
12 ஆனால் ஆண்டவரின் எண்ணங்கள் அவர்களுக்குத் தெரியாதவை, அவருடைய திட்டத்தை அவர்கள் கண்டு உணர்கிறதில்லை. புணையடிக்கும் களத்தில் அரிக்கட்டுகளைச் சேர்ப்பது போல் அவரும் அவர்களைச் சேர்த்து வைத்திருக்கிறார்.
13 சீயோன் மகளே, நீ எழுந்து புணையடி; ஏனெனில் நாம் உனக்கு இருப்புக் கொம்பும் வெண்கலக் குளம்புகளும் தருவோம்; மக்களினங்கள் பலவற்றை நீ நொறுக்குவாய், அவர்களிடம் கொள்ளை அடித்ததையும், அவர்களின் கருவூலங்களையும் அனைத்துலக இறைவனாகிய ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்.
அதிகாரம் 05
1 அரண் சூழ் நகரமே, நீ உன் அரண்களைப் பார்த்துக் கொள், எங்களுக்கு எதிராய்க் கொத்தளங்கள் போடப்பட்டுள்ளன; இஸ்ராயேல் மேல் ஆட்சி செலுத்துபவன், அவர்கள் கோலால் கன்னத்தில் அடிபடுகிறான்.
2 நீயோ, எப்பிராத்தா எனப்படும் பெத்லெகேமே, யூதாவின் கோத்திரங்களுள் நீ மிகச் சிறியதாயினும், இஸ்ராயேலில் ஆட்சி செலுத்தப் போகிறவர் உன்னிடமிருந்தே எனக்கென்று தோன்றுவார்; பண்டை நாட்களிலிருந்தே, பழங்காலத்திலிருந்தே வருகிற கால்வழியில் தோன்றுவார்.
3 ஆதலால், பேறுகால வேதனையிலிருப்பவள் பிள்ளை பெறும் வரை, அவர்களை அவர் கைவிட்டு விடுவார்; அப்பொழுது அவருடைய சகோதரர்களுள் எஞ்சியிருப்போர் இஸ்ராயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.
4 அவர் தோன்றி, ஆண்டவருடைய வல்லமையோடும், தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் தமது மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள், ஏனெனில் இப்பொழுது உலகத்தின் இறுதி எல்லைகள் வரை அவர் பெரியவராய் விளங்கப் போகிறார்.
5 அவரே நமக்குச் சமாதானம் தருபவர். அசீரியன் நம் நாட்டின் மேல் படையெடுத்து வரும் போதும், நம் அரண்மனைகளுக்குள் புகும் போதும் அவனுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரும், மக்கட் தலைவர் எண்மரும் நாம் எழுப்பிவிடுவோம்.
6 அவர்கள் அசீரியா நாட்டை வாள் கொண்டும், நிம்ரோத் நாட்டை வாள் முனையாலும் ஆளுவார்கள். அசீரியன் நம் நாட்டுக்குள் எல்லைகளைக் கடந்து வரும் போது அவர்கள் தான் நம்மை அவனிடமிருந்து காப்பார்கள்.
7 அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர் ஆண்டவரிடமிருந்து இறங்குகிற பனியைப் போலும், மனிதருக்காகக் காத்திராமலும், மனுமக்களை எதிர்பாராமலும் புல் மேல் பெய்கிற மழைத் துளிகள் போலும் மக்களினங்கள் பலவற்றின் நடுவில் இருப்பார்கள்.
8 இன்னும், யாக்கோபில் எஞ்சினோர், காட்டு மிருகங்கள் நடுவில் இருக்கும் சிங்கம் போலும், ஆட்டு மந்தைகளுக்குள் நுழைந்து, யாராலும் அவற்றைக் காப்பாற்ற முடியாதபடி அவற்றை மிதித்தும், துண்டு துண்டாய்க் கிழித்தும் போடுகிற சிங்கக் குட்டி போலும் புறவினத்தார் நடுவிலும், பற்பல மக்களினங்கள் நடுவிலும் இருப்பார்கள்.
9 உனது கை உன் எதிரிகள் மேல் ஓங்கியே இருக்கும், உன் பகைவர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்படுவர்.
10 ஆண்டவர் கூறுவது இதுவே: அந்நாளில் உன்னிடமிருந்து உன் குதிரைகளை ஒழித்து விடுவோம்; உன் தேர்ப் படையை அழித்துப் போடுவோம்.
11 உன் நாட்டிலுள்ள நகரங்களைத் தகர்த்தெறிவோம், உன்னுடைய அரண்களையெல்லாம் தரை மட்டமாக்குவோம். உன் கையினின்று மாய வித்தைகளைப் பிடுங்கியெறிவோம், குறிசொல்பவர் உன்னிடம் இல்லாதொழிவர்.
12 படிமங்களையும் பீடங்களையும் உன் நடுவிலிருந்து அகற்றுவோம், உன் கைவேலைப்பாடுகள் முன்னால் இனி நீ தலை வணங்க மாட்டாய்.
13 உன் நடுவிலிருக்கும் உன் கம்பங்களைப் பிடுங்கியெறிவோம், உன் நகரங்களைப் பாழாக்குவோம்.
14 நமக்குக் கீழ்ப்படியாத மக்களினங்களின் மேல் கடுஞ்சினத்தோடும் ஆத்திரத்தோடும் நாம் பழி தீர்த்துக் கொள்வோம்.
அதிகாரம் 06
1 ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து மலைகளின் முன்னிலையில் உன் வழக்கைச் சொல், குன்றுகள் உன் சொற்களைக் கேட்கட்டும்.
2 மலைகளே, பூமியின் நிலையான அடிப்படைகளே, ஆண்டவருடைய வழக்கைக் கேளுங்கள்; ஏனெனில் தம் மக்கள் மேல் ஆண்டவர் வழக்குத் தொடுக்கிறார், இஸ்ராயேல் மீது குற்றம் சாட்டுகிறார்:
3 எம் மக்களே, உங்களுக்கு நாம் என்ன செய்தோம்? எதில் நாம் உங்களுக்குத் துயர் தந்தோம்? சொல்லுங்கள்!
4 எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டிவந்தோம், அடிமைத்தன வீட்டிலிருந்து உங்களை மீட்டுவந்தோம்; உங்களுக்கு முன்பாக மோயீசனையும் ஆரோனையும் மீரியாளையும் அனுப்பினோமே.
5 எம் மக்களே, மோவாப் அரசன் பாலாக் செய்த திட்டத்தையும், பேயோரின் மகன் பாலாம் அவனுக்குச் சொன்ன பதிலையும், சேத்தீமுக்கும் கல்கலாவுக்கும் இடையில் நடந்ததையும் எண்ணிப்பார்; அப்போது ஆண்டவருடைய மீட்புச் செயல்களை உணர்வாய்."
6 எதைக் கொணர்ந்து நான் ஆண்டவரின் முன் வந்து, உன்னதரான கடவுள் முன் பணிந்து நிற்பேன்? தகனப் பலிகளோடும், ஒரு வயது கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வந்து நிற்பேனோ?
7 ஆயிரக்கணக்கான ஆட்டுக்கடாக்கள் மேலும், எண்ணெய் பெருக்கெடுத்தோடும் பத்தாயிரம் ஆறுகள் மேலும் ஆண்டவர் விருப்பங் கொள்வாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் தலைப் பேறான பிள்ளையையும், என் ஆன்மாவின் பாவத்துக்காக என் வயிற்றுக்கனியான குழந்தையையும் கொடுப்பேனோ?"
8 மனிதா, நல்லது எது என உனக்கு அவர் காட்டியிருக்கிறாரே! நீதியோடு நடத்தல், அன்பு கூர்தல், உன் கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடிருத்தல், இவையன்றி வேறெதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்?
9 ஆண்டவரின் குரல் நகரத்தை நோக்கிக் கூவுகிறது: (உமது திருப்பெயருக்கு அஞ்சி நடத்தலே உண்மையான ஞானம்) "இஸ்ராயேல் இனமே, நகரத்தின் சபையே நாம் சொல்வதைக் கேள்:
10 கொடியவர்களின் வீட்டில் குவிந்திருக்கும் அக்கிரமங்களையும், சபிக்கப்பட்ட அந்தக் கள்ள மரக்காலையும் நாம் மறப்போமோ?
11 கள்ளத் தராசையும், கள்ள எடைக்கற்களுள்ள பையையும் வைத்திருப்பவனை நேர்மையானவன் என விட்டு விடுவோமோ?
12 நகரத்தின் பணக்காரர்கள் கொடுமை நிறைந்தவர்கள், அங்கே வாழ்கிறவர்கள் பொய் பேசுகிறார்கள், அவர்கள் வாயிலுள்ள நாக்கு வஞ்சகம் நிறைந்தது.
13 ஆதலால் உன் பாவங்களுக்காக உன்னை அடித்து நொறுக்கத் தொடங்கினோம்.
14 நீ சாப்பிட்டாலும் உனக்குப் பசியடங்காது, பசி உன் வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கும்; நீ எதைப் பத்திரப்படுத்தினாலும், இழந்து விடுவாய்; இழக்காமல் இருப்பதையும் நாம் வாளுக்கு இரையாக்குவோம்.
15 நீ விதைப்பாய், ஆனால் அறுவடை செய்யமாட்டாய்; ஒலீவ கொட்டைகளை ஆட்டுவாய், ஆனால் எண்ணெய் தடவிப் பார்க்க மாட்டாய்; திராட்சைப் பழம் பிழிவாய், ஆனால் இரசம் குடித்துப் பார்க்க மாட்டாய்.
16 அம்ரியின் கட்டளைகளைக் கடைப்பிடித்தாய், ஆக்காபு வீட்டார் செயல்களனைத்தையும் பின்பற்றினாய்; அவர்களுடைய போக்கின்படி நீயும் நடந்தாய்; ஆதலின் உன்னை அழிவுக்குக் கையளிப்போம், உன்னில் வாழ்கிறவர்கள் ஏளனத்துக்கு ஆளாவார்கள், மக்களினங்களின் நிந்தையைத் தாங்குவீர்கள்.
அதிகாரம் 07
1 ஐயோ! நான் கோடைக்காலத்தில் அறுவடை செய்பவன் போலானேன், திராட்சையறுப்புக்குப் பின் பழம் பறிக்கப் போகிறவன் போலானேன். தின்பதற்குத் திராட்சைக் குலை ஒன்று கூட இல்லை, என் உள்ளம் விரும்பும் முதலில் பழுத்த அத்திப் பழமும் இல்லை.
2 நாட்டில் இறைப்பற்றுள்ளவன் அற்றுப் போனான், மனிதர்களில் நேர்மையுள்ளவன் எவனுமில்லை; அவர்கள் அனைவரும் இரத்தப் பழிக்குக் காத்திருக்கின்றனர், ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு வலை கட்டி வேட்டையாடுகிறான்.
3 அவர்கள் கைகள் தீமை செய்வதில் திறமை வாய்ந்தவை; தலைவனும் நீதிபதியும் கையூட்டுக் கேட்கின்றனர், பெரிய மனிதன் தன் உள்ளத்தின் தீய எண்ணத்தைச் சொல்லுகிறான்; அவ்வாறு அவர்கள் நாட்டைக் கெடுத்து விட்டார்கள்.
4 அவர்களுள் தலைசிறந்தவன் முட்செடி போன்றவன், அவர்களுக்குள் மிக்க நேர்மையானவன் முள் வேலி போன்றவன்; சாமக்காவலன் அறிவித்த அவர்களுடைய தண்டனையின் நாள் வந்து விட்டது, இப்பொழுதும் அவர்களுக்குரிய நிந்தை அருகில் உள்ளது.
5 உன்னோடு இருப்பவர்களை நம்ப வேண்டா, நண்பனிடத்தில் நம்பிக்கை வைக்காதே; உன் மார்பில் சாய்ந்திருக்கிற மனைவியிடத்தில் கூட உன் வாய்க்குக் காவல் வை.
6 ஏனெனில் மகன் தந்தையை அவமதிக்கிறான், மகள் தன் தாய்க்கெதிராக எழும்புகிறாள், மருமகள் தன் மாமியாரை எதிர்க்கிறாள், தன் சொந்த வீட்டாரே தனக்குப் பகைவர்.
7 நானோ ஆண்டவரையே நோக்கியிருப்பேன், எனக்கு மீட்பளிக்கும் கடவுளுக்குக் காத்திருப்பேன், என் கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார்.
8 மாற்றானே, என்னைக் குறித்து அக்களிக்காதே, நான் வீழ்ச்சியுற்றாலும் எழுச்சி பெறுவேன்; நான் இருளில் உட்கார்ந்திருக்கும் போது, ஆண்டவர் எனக்கு ஒளியாயிருப்பார்.
9 நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவஞ்செய்ததால், அவர் எனக்காக வழக்காடி, எனக்கு நீதி வழங்கும் வரை ஆண்டவருடைய கோபத்தை நான் தாங்கிக் கொள்வேன். அவர் என்னை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார், அவர் அளிக்கும் மீட்பை நான் காண்பேன்.
10 அப்போது என் மேல் பகைமை கொண்டவள் அதைக் காண்பாள், "உன் கடவுளாகிய ஆண்டவர் எங்கே?" என்று என்னிடம் சொன்ன அவள் வெட்கிப் போவாள், என் கண்கள் அவளைக் கண்டு மகிழும்; இனி, தெருக்களில் இருக்கும் சேற்றைப் போல மிதிபடுவாள்.
11 உன் மதில்களைத் திரும்பக் கட்டும் நாள் வருகிறது, அந்நாளில் உன் நாட்டில் எல்லை இன்னும் பரவியிருக்கும்.
12 அந்நாளில், அசீரியாவிலிருந்து எகிப்து வரையில், தீர் நாடு முதல் பேராறு வரையில், ஒரு கடல் முதல் மறு கடல் வரை, ஒரு மலை முதல் எதிர் மலை வரை உள்ள மக்கள் யாவரும் உன்னிடம் வருவார்கள்.
13 ஆனால், மண்ணுலகம் அதன் குடிகளின் செயல்களை முன்னிட்டுப் பாழாகும்.
14 உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம் மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்; அவர்கள் தோட்டம் நிறைந்த நாட்டின் நடுவில் காட்டில் தனித்து வாழ்கிறார்களே; முற்காலத்தில் செய்தது போலவே அவர்கள் பாசானிலும் கலகாத்திலும் மேயட்டும்.
15 எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாட்களில் காட்டியவாறு வியத்தகு செயல்களை எங்களுக்குக் காட்டியருளும்.
16 புறவினத்தார் பார்த்துத் தங்களின் ஆற்றல் அனைத்தையும் குறித்து நாணுவார்கள்; அவர்கள் தங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வர், அவர்களுடைய காதுகள் செவிடாய்ப் போகும்.
17 பாம்பைப் போலவும், நிலத்தில் ஊர்வனவற்றைப் போலவும் அவர்கள் மண்ணை நக்குவார்கள்; தங்கள் அரண்களை விட்டு நடுங்கிக் கொண்டு வெளிப்படுவர், நம் கடவுளாகிய ஆண்டவர் முன் திகிலுறுவர், உமக்கு அஞ்சுவார்கள்.
18 உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் பாவத்தைப் பொறுத்து, அக்கிரமத்தை மன்னிக்கிற உமக்கு நிகரான கடவுள் உண்டோ? அவர் தம் கோபத்தை என்றென்றுமாய்ப் பாராட்டமாட்டார்; ஏனெனில் நிலையான அன்பில் அவர் விருப்பமுள்ளவர்.
19 திரும்பவும் அவர் நம்மீது இரக்கம் கொள்வார், நம் அக்கிரமங்களைத் தம் காலடியில் மிதித்துப் போடுவார்; நம் பாவங்களையெல்லாம் ஆழ்கடலில் எறிந்து விடுவார்.
20 பண்டை நாளில் நீர் எங்கள் தந்தையர்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருப்பது போல, யாக்கோபுக்குப் பிரமாணிக்கத்தையும் ஆபிரகாமுக்கு நிலையான அன்பையும் காட்டியருளும்!