“ இயேசு கிறிஸ்து உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றார். அவர் உங்களை குணப்படுத்துவார், அதன் வாயிலாக நீங்கள் கடவுளுடன் சமாதானத்தில் நிலைத்திருக்கலாம்.”
பாப்பரசர் புனித இரண்டாம் ஜான் பால்.
ஒப்புரவு அருட்சாதனத்திற்காக நம்மையே தயாரிப்பது எப்படி?
தொடக்க செபம் :
பரிசுத்த ஆவியே! தேவரீர் என்னுடைய இருதயத்தில் எழுந்தருளி வாரும். உமது திவ்ய பிரகாசத்தின் கதிர்களை என் ஆன்மாவில் வரவிட்டு அதில் உள்ள பாவக்கறைகளையும்அந்த பாவங்கள் உமக்கு தருகின்ற அருவருப்பையும் நான் கண்டு கொள்ள அருள் புரியும். அவற்றை நான் உமது சாயலான குருவானவரிடம் மறைக்காமல் அறிக்கையிட எனக்கு அருள் தாரும்.
புனித கன்னி மாமரியே, புனித சூசையப்பரே, என் பெயர் கொண்ட புனிதரே, என் ஆன்மாவில் உள்ள பாவக்கறைகளை எல்லாம் உணர்ந்து, அவற்றிற்காக மனம் வருந்தி, இனிமேல் இப்படிப்பட்ட பாவங்களை செய்யமாட்டேன் என உறுதி எடுக்க எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
ஆன்ம பரிசோதனை (பத்து கட்டளைகள், தலையாய பாவங்கள், திருச்சபையின் கட்டளைகள்)
1. நானே உனது கடவுளாகிய ஆண்டவர். நமக்கு முன்பாக வேறு கடவுளை நீ கொண்டிராதிருப்பாயாக (யாத் 2௦: 2,3)
கடவுள் இருப்பதை நான் மனம் பொருந்தி சந்தேகப்பட்டேனா? அல்லது மறுத்து இருக்கின்றேனா?
கடவுளை நான் அன்பு செய்ய மறுத்திருக்கின்றேனா?
என் வாழ்வின் அனைத்திற்கும் மேலாக அவரை வைத்திருக்கின்றேனா?
அவர் மேல் நான் கொண்ட அன்பினை தினமும் செபங்களின் வாயிலாக அவருக்கு தெரியப்படுத்த தவறினேனா?
என் வாழ்விற்கான கடவுளின் திட்டத்தினை ஏற்றுக்கொள்ள தவறினேனா?
சாவான பாவத்துடன் திவ்ய நற்கருணையை உட்கொண்டேனா?
மூடநம்பிக்கை, குறிகேட்டல், ஜாதகம் பார்ப்பது, நல்ல அதிர்ஷ்டம் பார்த்தல், கைரேகை பார்ப்பது போன்றவற்றில் ஈடுபட்டேனா?
நான் கத்தோலிக்கனாக இருப்பதை மறுத்திருக்கிறேனா? கத்தோலிக்க விசுவாசத்தை மறுத்திருக்கிறேனா?
2. உன் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயரை வீணாய்ச் சொல்ல வேண்டாம் (யாத் 20: 7)
பொய்யான அல்லது சந்தேகமான செயல்களுக்கு கடவுளை சாட்சிக்கு அழைத்தேனா?
யாரையும் சபித்தேனா? பொய்யான வாக்குறுதி கொடுத்தேனா?
கடவுளுக்கு நான் கொடுத்த உறுதிமொழிகளை/ வேண்டுதல்களை நிறைவேற்றினேனா?
கடவுளை அவதூறாக பேசினேனா?
பரிசுத்த தேவமாதா, திருச்சபை, புனிதர்களுக்கு எதிராக/அவதூறாக/கிண்டலாக பேசினேனா?
பொய்யாக சாட்சி/உறுதிமொழி எடுத்தேனா?
குருக்கள், கன்னியர்கள், துறவறத்தாருக்கு எதிராக பேசினேனா?
3. ஒய்வு நாளை பரிசுத்தமாக நினைவு கூர்வாயாக (யாத் 20:8)
ஞாயிற்றுக்கிழமைகளில், கடன் திருநாட்களில் திருப்பலி வேண்டுமென்றே காண தவறினேனா?
வேண்டுமென்றே அந்நாட்களில் திருப்பலிக்கு தாமதமாக வந்தேனா? அல்லது திருப்பலி முடியும் முன்னரே சென்றேனா?
வேண்டுமென்றே ஞாயிற்றுக்கிழமைகளில் கடவுளுக்கு அர்ப்பணிக்காமல், செபிக்காமல் அன்று பொழுதுபோக்கு செயல்களுக்கு இடம் கொடுத்தேனா?
4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நடப்பாயாக (யாத் 20:12)
என்னுடைய பெற்றோருக்கு கீழ்படியாமல் அல்லது அவர்களிடம் மரியாதையை குறைவாக நடத்தினேனா?
என்னுடைய குடும்பத்தின் தேவைகளில்/நலத்தில் கவனக்குறைவாக இருந்தேனா?
என்னுடைய குடும்பத்தின் பிரச்சனைகளுக்கு/ வேதனைகளுக்கு நான் காரணமாக இருந்தேனா?
பெரியவர்களுக்கு (குருக்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், பயிற்சியாளர்கள் போன்றோர்) கீழ்படியாமல்/ மரியாதையை செலுத்தாமல்/வருத்தம் வருவித்தேனா?
அவர்கள் இல்லாத வேளையில் அவர்களைக் குறித்து கிண்டலாக பேசினேனா?
5. கொலை செய்யாதிருப்பாயாக (யாத் 2௦:13)
யார் மேலாவது கோபம்/வெறுப்பு கொண்டிருந்தேனா?
யாரையாவது வேண்டுமென்றே வேதனைப்படுத்தினேனா/கொலை செய்தேனா?
கருக்கலைப்பு செய்தேனா அல்லது யாரையாவது செய்ய அறிவுரை கூறினேனா?
தற்கொலைக்கு முயன்றேனா அல்லது செய்ய வேண்டுமென்று எண்ணினேனா?
புகை, மது, போதைப்பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கின்றேனா?
கவனக்குறைவாக/அதிவேகமாக வாகனங்களை ஓட்டினேனா?
பெற்றோர் அறியாமல் வாகனங்களை பயன்படுத்தினேனா?
என் உடலை தேவையில்லாமல் வேதனைப்படுத்தினேனா? (பச்சை குத்துதல், கத்தியால் கீறுதல் போன்றவை)
பயனற்ற வதந்திகள் வாயிலாக யாருடைய பெயருக்காவது களங்கம் வருவித்தேனா?
என்னுடைய செயல்களால் பிறருக்கு தவறான எடுத்துக்காட்டாக குறிப்பாக என்னில் இளையோருக்கு இருந்தேனா?
6. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக (யாத் 2௦:14) மேலும் 9. பிறர் மனைவியை விரும்பாதிருப்பாயாக (யாத் 2௦:17)
என் மனம் விரும்பி தூய்மையற்ற எண்ணங்களுக்கோ/ விருப்பங்களுக்கோ இடம் கொடுத்தேனா?
தூய்மையற்ற/ கெட்ட பார்வைகளுக்கோ அல்லது தவறான பேச்சுகளினாளோ ஈடுபட்டு இன்பம் அடைந்தேனா?
பொது இடங்களில் கெட்ட பேச்சு பேசினேனா?
தவறான எண்ணங்களுடன் கெட்ட புத்தகங்களோ/கெட்ட படங்களோ படித்தேனா/பார்த்தேனா?
மனம் பொருந்தி சுய இன்பம் கண்டேனா?
மனம் பொருந்தி யாருடனாவது சேர்ந்து தவறான உறவில் ஈடுபட்டேனா?
கெட்ட எண்ணங்களுடன் ஆடைகள் அணிந்தேனா? அதன் வாயிலாக பிறர் தவறுவதற்கு காரணமாக இருந்தேனா?
7. களவு செய்யாதிருப்பாயாக (யாத் 20:15) மேலும் 10. பிறர் உடமைகளை விரும்பாதிருப்பாயாக (யாத் 20:16)
எதையாவது திருடினேனா? திருடப்பட்ட பொருட்களை வாங்கினேனா? அல்லது யாரையாவது திருடுவதற்கு ஊக்குவித்தேனா?
யாரயாவது ஏமாற்றினேனா?
வேண்டுமென்றே யாருடைய பொருட்களையாவது சேதப்படுத்தினேனா/அழித்தேனா?
என்னுடைய பள்ளி நேரங்களில் அல்லது வீட்டில் வீணாக நேரத்தினை செலவளித்தேனா?
என்னுடைய தகுதிக்கு உட்பட்டு ஏழைகளுக்கு உதவவோ, திருச்சபைக்கு உதவவோ மறுத்தேனா?
பிறரைக் குறித்து பொறாமைப்பட்டேனா? (பிறரது குடும்பம், அழகு, பொருட்கள், திறமை போன்ற)
என்னுடைய கடமைகளில் தவறினேனா?
8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக (யாத் 20:16)
பொய் சொன்னேனா? பொய்சாட்சி சொன்னேனா?
யாரையாவது ஏமாற்றினேனா?
யாரைப் பற்றியாவது புறணி பேசினேனா?
சரியான காரணமின்றி யாருடைய இரகசியங்களையாவது பிறருக்குச் சொன்னேனா?
காரணமின்றி ஒருவருடைய தவறுகளையோ அல்லது பாவங்களையோ அடுத்தவருக்கு வெளிப்படுத்தினேனா?
ஒருவரை இழிவுபடுத்துவதற்காக பொய் சொன்னேனா? அடுத்தவரை காப்பி அடித்தேனா?
ஒப்புரவு அருட்சாதனத்தின் பொழுது, பொய் சொன்னேனா அல்லது வேண்டுமென்றே சாவான பாவங்களை மறைத்தேனா?
அடுத்தவரை எனக்கு குறைவாக நினைத்தேனா அல்லது குறைவாக நடத்தினேனா?
9. தலையான பாவங்கள்
தற்பெருமை: என்னைக் குறித்து பெருமையாக நினைத்தேனா?
மற்றவரை குறைவாக நடத்தினேனா?
என்னால் எல்லாம் முடியும் என்று நினைத்தேனா?
கோபம்: யாருடனாவது கோபப்பட்டேனா?
கஞ்சத்தனம்: என்னிடம் அளவுக்கு அதிகமாக இருந்து அடுத்தவரின் தேவையில் அவருக்கு உதவ மறுத்தேனா? பணம் பொருட்கள் மேல் அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டேனா?
போசனப்பிரியம்: அளவுக்கு அதிகமாக சாப்பிட்டேனா?
பொறாமை: அடுத்தவர் மேல் பொறாமைப்பட்டேனா?
சோம்பல்: எனது நேரத்தை வீணாக செலவழித்தேனா? எனது கடமைகளில் தவறினேனா?
மோகம்: அடுத்தவர் மேலோ, பொருட்கள் மீதோ தவறாக ஆசைப்பட்டேனா?
திருச்சபையின் கட்டளைகள்
ஒரு வருடத்திற்கு மேல் ஒப்புரவு அருட்சாதனம் செய்யாமல் இருந்தேனா?
கடைசியாக எப்பொழுது ஒப்புரவு அருட்சாதனம செய்தேன்?
பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருட்சாதனம் செய்து, திவ்ய நற்கருணை எடுக்காமல் இருந்தேனா?
விலக்கப்பட்ட நாட்களில் இறைச்சி சாப்பிட்டேனா?
என்னுடைய ஞான மேய்ப்பர்களுக்கு (குருக்கள், கன்னியர்கள், துறவியர்கள்) என்னால் இயன்ற உதவியை செய்ய மறுத்திருக்கின்றேனா?
ஆன்ம சோதனைக்குப் பிறகு செபம்
சர்வேசுரா சுவாமி! தேவரீர் என்னை உண்டாக்கி காப்பாற்றி வருவதோடு அல்லாமல் நான் செய்த பாவ அக்கிரமங்களை நீக்க வேண்டி உம்முடைய ஒரே திருக்குமாரனை சிலுவையில் மரணமடையும் படிக்கு சித்தமானீர். நான் பாவ அக்கிரமங்களை முழுவதும் அருவருத்து அவைகளை என்றென்றைக்கும் விலக்கும்படிதயை செய்யும். ஆமென்.
சர்வேசுரா சுவாமி! தேவரீர் அளவில்லாத சகல நன்மைகள் நிறைந்தவராக இருக்கின்றபடியினாலே அனைத்திற்கும் மேலாக உம்மை நான் முழு மனதாக நேசிக்கிறேன். உமக்கு பொருந்தாத பாவங்களைச் செய்தேன் என்பதனால் மிகவும் மனம் வருந்தி மனஸ்தாபப்படுகிறேன். இனிமேலும் தேவரீருடைய உதவியைக் கொண்டு ஒருபொழுதும் ஒருபாவமும் செய்வதில்லை என்றும், இதுவரையிலும் நான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வேனேன்றும் உறுதியான பிரதிக்கினை செய்கிறேன். ஆமென்.
குருவானவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் செய்யும் முறை
1. குருவானவரிடத்தில் போய் முழங்காலில் இருந்து சிலுவை அடையாளம் வரைந்து சொல்ல வேண்டியது:
“சுவாமி நான் பாவியாயிருக்கிறேன், என்னை ஆசிர்வதித்தருளும். நான் பாவசங்கீர்த்தனம் செய்து -------(வாரம்/மாதம்/வருடம்) ஆகின்றது”
2. உங்களுடைய பாவங்களை தெளிவாகவும், உண்மையுடனும், சுருக்கமாகவும், மன வருத்ததுடனும் அறிக்கையிடவும்.
3. நீங்கள் செய்துள்ள சாவான பாவங்களை ஒவ்வொன்றும் எத்தனை முறை செய்துள்ளீர்கள் என்றும் குருவானவரிடம் அறிக்கையிடவும்
4. கடைசியாக குருவானவரிடம், “சுவாமி நான் இப்பொழுது சொன்ன பாவங்களுக்காகவும், என் ஆயுள் காலத்தில் நான் செய்த அனைத்து பாவங்களுக்க்காகவும் மனம் வருந்துகிறேன்” என்று கூறவும்.
5. குருவானவர் கூறுவதை கவனத்துடன் கேட்டு, அவர் அளிக்கும் அறிவுரையை ஏற்றுக்கொண்டு, அவர் தரும் பரிகார செபங்களை கவனமுடன் கேட்டுக் கொள்ளவும்.
6. கடைசியாக உத்தம மனஸ்தாப மந்திரம் சொல்லி, குருவானவரின் ஆசிர்வாதத்தினை பெற்றுக்கொண்ட பின்னர், தனியே சென்று கடவுள் நமக்களித்த பாவப் பொறுத்தலுக்காக நன்றி சொல்லிவிட்டு, குருவானவர் அளித்த பரிகார செபங்களை சொல்லி முடிக்கவும்.
உத்தம மனஸ்தாப செபம்: (உங்களுக்கு தெரிந்த அல்லது கீழே உள்ள செபத்தினை சொல்லவும்)
சர்வேசுரா சுவாமி ! தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீருக்கு பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறறேன். எனக்கிதுவே மனஸ்தாபமில்லாமல் வேறு மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபோதும் இப்படிப்பட்ட பாவங்களை செய்வதில்லையென்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன்.
மேலும் எனக்கு பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திரு இரத்த பலன்களை பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன்
திருச்சபை விசுவசித்து கற்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்தபடியினாலே நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். -ஆமென்.
நன்றி : சகோ. ஜெரால்ட்
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!