கத்தோலிக்கத் திருச்சபையினருக்கும் பிரிந்து போன சபையினருக்குமிடையே உள்ள மிகப்பெரிய விவாதப் பொருட்களில் ஒன்று அன்னை மரியாள் வணக்கத்துக்குரியவரா இல்லையா என்பது. கத்தோலிக்கர்கள் இயேசுவின் தாயை வணக்கத்துக்குரியவராகவும், கடவுளிடமிருந்து வரங்களைப் பெற்றுத் தரும் இரு இடை நிலைவாதியாகவும் பார்க்கிறார்கள். பிரிந்து போன சபையினர் அதை தீவிரமாக எதிர்க்கிறார்கள். இருவருமே தங்கள் பக்க நியாயங்களை வரிசையாய் அடுக்கி தத்தம் குழு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
புரட்டஸ்டண்ட் பிரிவினர் இயேசுவின் தாய் வணக்கத்துக்குரியவர் அல்ல என்பதற்கு கீழ்வரும் காரணங்களைச் சொல்கிறார்கள்.
இயேசு என்னும் கடவுளை மனித வடிவில் வந்தபோது சுமந்தவர் தான் மரியாள். அவருக்கு வேறு சிறப்புத் தகுதி ஏதும் இல்லை. அவர் கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு கருவி மட்டுமே. எனவே அன்னை மரியாள் வணக்கத்துக்குரியவர் என்பதும் அவருக்கு சிறப்பு வணக்கம் செலுத்துவதும் முறையற்றது.
இயேசுவைச் சுமந்ததனால் தான் மரியாள் அருள் மிகப் பெற்றவர் எனப் போற்றப்படுகிறார். மற்றபடி இயேசுவே தன்னுடைய போதனையில், என்னுடைய வார்த்தைகளின் படி நடப்போரே எனக்கு தாயும் சகோதரரும் என்கிறார். எனவே இயேசுவே தன்னுடைய தாய் மீது அதிக பற்றுதல் கொண்டிருக்கவில்லை. எனவே மரியாளை நாம் சிறப்பு வணக்கத்துக்குரியவர் என்பதை விட, இயேசுவின் போதனைகளின் படி வாழும் கிறிஸ்தவர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என்பதே சிறந்தது. எனவே மரியாளுக்கு எந்த சிறப்பு வணக்கமும் தேவையில்லை
இயேசுவின் தாயாரை விவிலியம் சிறப்பு மிக்கவராகவோ, உன்னதமானவராகவோ காட்டவில்லை. சராசரியான ஒரு தாயாகவே காட்டுகிறது. எந்த இடத்திலும் மரியாள் எந்த விதமான புதுமைகள் செய்ததாகவோ, போதனைகள் செய்ததாகவோ விவிலியம் நமக்குச் சொல்லவில்லை. விவிலியம் சொல்லாத் ஒன்றை நாம் கற்பனை செய்து கொள்ளத் தேவையில்லை. எனவே அன்னை மரியாளை வணங்குதல் தேவையற்றது.
இயேசு உயிர்த்த பின்பும் தன்னுடைய தாயாருக்கு எந்த விசேஷ தகுதியும் தரவில்லை. எங்கும் அவரை கிறிஸ்தவ மதத்தின் பாதுகாவலராக குறிப்பிடவும் இல்லை. முதன் முதலில் மரிய மதலேனாளுக்கும், பின் சீடர்களுக்கும் தான் காட்சியளிக்கிறார். அவர் தன் அன்னையே முக்கியமானவர் என்று நினைத்திருந்தால் அவருக்கே முதல் காட்சி அளித்திருப்பார். எனவே மரியாள் சிறப்பு வணக்கத்துக்கு உரியவர் அல்ல.
உயிர் விடும் தருவாயில் சிலுவையில் இருந்து கொண்டே ‘இதோ உன் தாய்’ என்று அருகிலிருந்த சீடரிடம் அன்னையை ஒப்படைத்துவிட்டு அன்னை மரியாளை ஒரு மானிடத் தாயாக வெளிப்படுத்துகிறார். அதுவரை இயேசுவின் தாயாக இருந்த மரியாள் அது முதல் மனிதனின் தாயாக மாறி விடுவதால், அன்னை மரியாள் வணக்கத்துக்கு உரியவர் அல்ல.
மரியா ஜென்மபாவமில்லாமல் பிறந்தவர் என்றும், அமல உற்பவி என்றும் கத்தோலிக்கர் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மரியா ஜென்ம பாவங்களோடு பிறந்த சாதாரண தாய் தான். அவரே இதோ ஆண்டவரின் அடிமை என்று சொல்கிறார். அவரையே மீட்பதற்கு ஆண்டவர் தேவைப்படும் போது எப்படி அவர் அமல உற்பவியாய் இருக்க முடியும்.
கத்தோலிக்கர்கள் இயேசுவின் தாயை கன்னி மரி என்கிறார்கள். ஆனால் விவிலியத்திலேயே இயேசுவின் தாயும், அவருடைய சகோதரர்களும் என்று குறிப்பிடப்படுகிறது. எனவே அவருக்கு வேறு பிள்ளைகளும் இருந்தார்கள். எனவே அவர் இயேசுவை ஈன்ற உடன் தன்னுடைய இறைப் பணியை முடித்துக் கொண்டார். அதன் பின் அவர் ஒரு சாதாரணத் தாயாகவே வாழ்ந்திருக்கிறார்.
விவிலியத்தில் ‘மரியா தன் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை…’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனவே மரியா இயேசுவைப் பெற்றெடுத்த பின் ஒரு சாதாரணத் தாயாகவே இருந்திருக்கிறாள் என்பது விவிலியம் வாயிலாகவே விளங்குகிறது. எனவே அவருக்கு சிறப்பு வணக்கங்கள் தேவையில்லை.
செபமாலையை இன்று கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் மரியே வாழ்க என்று மரியாளை ஐம்பது முறை வாழ்த்தும் கத்தோலிக்கர்கள், இறைவனை பதினோரு முறை தான் வாழ்த்துகிறார்கள் இதிலிருந்தே அவர்கள் இறைவனை விட மேலாக மரியாளை வணங்குவது தெளிவாகிறது அல்லவா ?
என்றெல்லாம் புரட்டஸ்டண்ட் பிரிவினர் தங்கள் தரப்பு நியாயங்களையும், விவாதங்களையும் முன் வைக்கிறார்கள்.
கத்தோலிக்க பிரிவினர் இவர்களுடைய வாதங்களை அவர்கள் தரப்பு நியாயங்களுடன் எதிர்கொள்கிறார்கள். இயேசுவின் தாய் வணக்கத்துக்குரியவரே என்பதற்கு அவர்கள் தரும் காரணங்கள் இவை..
அன்னை மரியாளை கடவுளாக கத்தோலிக்கர்கள் வழிபடுவதாக சொல்வதே தவறு. அன்னை மரியாள் கடவுளல்ல, அவர் சிறப்பு வணக்கத்துக்குரியவர். ‘ஒரு மனிதனின் உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் நாவாக மாறினாலும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது’ என்கிறார் புனித அகுஸ்தீனார். ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்று கபிரியேல் தூதர் மரியாளை வாழ்த்துகிறார், தூதர்கள் தாமாக எதையும் செய்வதில்லை. அவர்கள் கடவுளின் கட்டளைப்படியே இயங்குகிறார்கள். எனவே இந்த வாழ்த்தும் கடவுளிடமிருந்தே வந்திருக்கிறது. எனவே அன்னை மரியாள் வாழ்த்துதலுக்கு உரியவரே.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் (LG 66/67 ) “ஆராதனை கடவுளுக்கு மட்டும் தான். மற்ற வணக்கங்களே புனிதர்களுக்கு. அன்னை மரியாள் கடவுளின் தாயாக இருப்பதால் அவருக்கு சிறப்பு வணக்கம் செலுத்தப்படுகிறது’ என்கிறது.
‘தூய ஆவி நிரம்பியவராய் பெண்களுக்குள் நீர் ஆசீர்வதிக்கப் பட்டவர். என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் ?’ என்று எலிசபெத் மரியாவை வாழ்த்துவதாய் விவிலியம் சொல்கிறது. எலிசபெத் வாயிலாக கடவுள் இயேசுவை ‘ஆண்டவரின் தாய்’ என்கிறார். எனவே இயேசுவின் தாய் மனிதரின் தாயல்ல கடவுளின் தாய். கடவுளின் தாயை வணங்குதல் முறையே.
அன்னை மரியே ‘இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னை பேறுபெற்றவர் என்பர்’ என்கிறார். விவிலியம் சொல்வதெல்லாம் இறை ஏவுதல் என்றும், தூய ஆவியின் ஏவுதல் என்றும் கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள். அப்படியெனில் அவரை வணக்கத்துக்குரியவராகவும் பேறுபெற்றவராகவும் கொண்டாடுவது முறைதானே.
இயேசு சிலுவையில் உயிர் பிரியும் தருணத்தில் சீடரிடம் ‘இதோ உன் தாய்’ என்றது மனுக்குலத்துக்கே அவரைத் தாயாக்குவது போல தான். சீடர்களுக்கு இயேசுவழங்கும் அறிவுரைகளை நமக்கே வழங்கப்படும் அறிவுரைகளாக நாம் ஏற்றுக் கொள்ளும் போது, சீடரிடம் ஒப்படைத்த அன்னையை நம்முடைய அன்னையாய் பாவிப்பதே பொருத்தமாகும். நம்முடைய அன்னையை நாம் வணங்காமலிருப்பது விவிலியத்தின் கட்டளைகளுக்கு எதிரானது.
இயேசுவே அன்னை மரியாவையும் மீட்டார் என்னும் கூற்று உண்மையே. ஆனால் இயேசு இருக்கிறவராய் இருக்கிறார். எனவே அன்னை மரியாள் பிறக்கும் முன்பே அவர் அன்னையை புனிதப்படுத்தினார். ஆபிராமுக்கு முன்பே நான் இருந்தேன் என்று இயேசு கூறுவதிலிருந்து கடவுளுக்கு எல்லாமே நிகழ் காலம் தான் என்றும் அன்னையின் மீட்பு பாவத்துக்கு உட்படாமல் மீட்ட மீட்பு என்றும் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் குறிப்பிடுகிறார். கன்னி கருத்தாங்கி மகனைப் பெறுவார் என்று இயேசுவின் பிறப்புக்கும் 600 ஆண்டுகளுக்கு முன்பே எசாயா இறைவாக்கினர் தீர்க்கத் தரிசனம் உரைத்துள்ளார். எனவே இது கடவுளால் ஏற்கனவே திட்டமிடப்பட்டதே. எனவே அன்னை மரியாள் சாதாரணப் பெண் அல்ல, ஆதியிலேயே கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்.
விவிலியத்தில் ‘மரியா தன் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை…’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ‘இதோ உலகம் முடியும் வரை..’ , ‘பகைவரைக் கால்மனையாக்கும் வரை..’ போன்ற சொற்றொடர்களில் வரும் ‘வரை’ என்பது நிகழ்காலத்தைக் குறிப்பது. அதன் பொருள் எப்போதுமே என்பதாகும். எனவே மரியா கன்னியாகவே வாழ்ந்தார். மேலும் யோசேப்பு ஒரு நீதிமான் என்கிறது விவிலியம். நீதிமானாய் இருக்கும் ஒருவர் கடவுளின் சொத்தான மரியாவை அபகரிக்க வாய்ப்பே இல்லை.
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பல புனிதர்கள் ஒரிஜின், யுசேபியுஸ், அகுஸ்தினார், ஜெரோம் போன்றவர்கள் அன்னை மரியாளை பாவமற்றவர், கறையற்றவர், அமலி, முழுமையானவர் என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து ஆதியில் இருந்த கிறிஸ்தவர்கள் அன்னை மரியை அமல உற்பவி என்று கொண்டாடியது நிரூபணமாகிறது.
மேலும் விவிலியத்தில் இயேசுவின் தாயும் அவருடைய சகோதரர்களும் என்று தான் குறிப்பிடப்படுகிறதே தவிர, அன்னை மரியாளின் பிள்ளைகள் என்று குறிப்பிடப்படவில்லை. Adolphos (சகோதரர் ) என்னும் வார்த்தை பொதுவானது எனவே அது இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் பிறந்த பிள்ளைகள் அல்ல. தமிழ் மொழியிலும் அராமிக் மொழியிலும் சகோதரர் என்பது பொதுச் சொல்லே. பெரியப்பா மகனும், சித்தப்பா மகனும் சகோதரர்கள் என்று தான் அழைகப்படுகிறார்கள். achim என்று குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர் வார்த்தை மூன்று நான்கு தலைமுறை உறவுகளுக்குள் வரும் சகோதரர்கள் என்பதைக் குறிக்கிறது. இயேசு தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் எருசலேம் ஆலயத்துக்குச் சென்றபோது மரியாவுடன் வேறு பிள்ளைகள் செல்லவில்லை. வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் அன்னை மரியாள் அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றிருப்பார். அல்லது அவர்களைப் பற்றிய குறிப்பாவது இருந்திருக்கும். அது மட்டுமல்ல, மரியாவுக்கு வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் ‘இதோ உன் தாய்’ என்று அன்னையை இயேசு ஒரு சீடரிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை இல்லை. வேறு பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்று அமைதியாய் இருந்திருக்கலாம் அல்லவா.
கி.பி 649ல் கூடிய லூத்தரன் பொதுச்சங்கமும் மரியாவின் கன்னிமை பற்றிக் குறிப்பிடுகையில், மரியா இயேசுவின் பிறப்புக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் கன்னியாகவே இருந்தார் என்று அழுத்தம் திருத்தமாய் உரைத்தது !
“கத்தோலிக்கர்கள் புனிதர்களை ஆராதிப்பதில்லை. மரியாவுக்கு தேவதாய்க்கு உரிய வணக்கத்தை அளிக்கிறோம். தந்தை மகன் தூய ஆவியாகிய மூவொரு கடவுளுக்கே ஆராதனையும் மகிமையையும் செலுத்துகிறோம்’ என்கிறார் புனித எபானியுஸ்.
இயேசு என்னும் மனிதனின் தாய் அல்ல மரியாள். அவர் இயேசு கிறிஸ்து என்னும் கடவுளின் தாயே. கி.பி 431ல் எபேசு நகரில் கூடிய திருச்சங்கம் “கிறிஸ்து மெய்யான இறைவன், மெய்யான மனிதன். எனவே அன்னை மரியா இறைவனின் தாயே, இயேசுவின் தாய் என்றும். கடவுளின் படைப்பாகிய மரியாவை கடவுளின் தாய் என்று கூறுவது தவறாகாது’ என்று திட்டவட்டமாய் அறிவித்தது.
விவிலியத்திலுள்ள தொடக்க நூலில் ‘தன் தந்தையையோ தாயையோ சபிப்பவன் சாகவே சாவான்’ என்றும், பத்து கட்டளைகளில் ‘தாய் தந்தையரைப் போற்று’ என்றும் இறைவன் கூறுகின்றார். நமது பெற்றோரைப் போற்றும்படி கூறும் கடவுள், தமது அன்னையை சபிப்பவர்களையும், வெறுப்பவர்களையும் வாழ்த்துவாரா ?
‘அவள் உன் தலையை நசுக்குவாள்..’ என்று பாவமாகிய பாம்பின் தலையை நசுக்கும் அன்னையைப் பற்றி கடவுள் தொடக்க நூலிலேயே குறிப்பிடுகிறார். எனவே துவக்கத்திலேயே தேர்ந்து கொள்ளப்பட்ட அன்னையை நாம் வணங்குவதே சரி.
இயேசு தன் தாயை நேசித்தார். தன் நேரம் இன்னும் வரவில்லை என்று அறிந்திருந்தும் அன்னையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவர் கானாவூரில் திருமண வீட்டில் தண்ணீரை திராட்சை ரசம் ஆக்கினார். இயேசுவை பூமிக்கு அறிமுகப்படுத்தி, பணி வாழ்வுக்கும் அறிமுகப்படுத்துபவராக கடவுள் அன்னை மரியாளை நமக்குக் காட்டுகிறார்.
செபமாலை வழக்கம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. அது கத்தோலிக்கர்கள் மட்டும் பயன்படுத்தியதும் அல்ல. 1220ல் புனித சுவாமிநாதரால் ஆரம்பிக்கப்பட்டது இந்த செபமாலை முறை. பல புனிதர்களால் பின்பற்றப்பட்ட செபம். தாவீதின் சங்கீதங்களிலும், உன்னத சங்கீதத்திலும் உள்ள எழில் செபமாலை செபத்தில் உள்ளதாக புனித சிப்ரியான் குறிப்பிடுகிறார். செபமாலை இட்டுக் கட்டி எழுதப்பட்டதல்லை. கடவுளால் தரப்பட்ட செபமே. இதில் ஏழு விவிலிய வசனங்கள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. இறுதிப் பகுதியாகிய ‘அர்ச்சிஷ்ட மரியாயே, சரவேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்போழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்’ என்னும் பகுதியை கி.பி 430 ல் எபேசு நகரில் கூடிய திருச்சபை தந்தது.
‘மரியா இடை நிலையாளர் என்பது அவர் நம்மீது கொண்ட அக்கறையையே குறிக்கிறது; என்று 1திமோ2:5 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே அன்னை மரியாள் நம்மீது அக்கறை கொண்டிருக்கிறார் என்பதும். அப்போஸ்தலர்களே அவரை ஒரு இடைநிலையாளராய்ப் பார்த்தார்கள் என்பதும், நாம் கொண்டிருப்பது ஆதியில் அப்போஸ்தலர்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தின் நீட்சியே என்பது புலப்படும்.
அன்னை மரியாள் குறித்து திருச்சபையில் விவாதங்கள் எழுவது ஆதியிலேயே நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும், 16ம் நூற்றாண்டில் மார்ட்டின் லூத்தர் கிங் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து பிரிந்து சபை ஆரம்பித்த பின்பு தான் இந்த விவாதங்கள் எழுச்சி பெற்றன. கிறிஸ்தவ மதம் வெளிப்பார்வைக்கு ஒரே இயக்கமாய் தெரிந்தாலும் அதில் பல்லாயிரக்கணக்கான பிரிவுகள் உள்ளன. ஏராளமான கருத்து வேறுபாடுகளுடன் ஒருவருக்கொருவர் விவாதங்களை முன்வைத்தும், தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்தும் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கிறிஸ்தவத்துக்கு வெளியே இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் அன்னை மரியாள் மிகவும் புனிதமாகப் போற்றப்படுகிறார். மரியம் என்று அழைக்கப்படும் அவர் தான் குரானில் பெயர் குறிப்பிடப்படும் ஒரே பெண்மணி ! அவருக்கென ஒரு தனி அதிகாரமே இருக்கிறது. அவர் கன்னியாகவே வாழ்ந்தார் எனவும், விண்ணேற்பு அடைந்தார் எனவும் குரான் கூறுகிறது.
அன்னை மரியாளுக்கு உலகெங்கும் ஏராளமான ஆலயங்கள் கட்டி எழுப்பப்பட்டு அவரை ஒரு சிறப்பு வணக்கத்துக்கும், வழிபாட்டுக்கும் உரியவராக கத்தோலிக்கத் திருச்சபை முன்னிலைப்படுத்துகிறது. ஆனாலும் அந்த ஆலயங்களிலும் திருப்பலியும், மற்ற அனைத்து நிகழ்வுகளிலும் இயேசுவுக்கே ஆராதனை செலுத்தப்படுகிறது. . அன்னை மரியாளை வணங்கலாமா, புனிதர்கள் வணக்கம் தேவையா என்றெல்லாம் விவாதங்கள் எழுகையிலும், இயேசுவுக்கே முதல் ஆராதானை.
அன்னை மாமரிக்கு உயரிய வணக்கம்
அன்னைமாமரி மீட்புத் திட்டத்தில் தன்னை மனமுவந்து முழுமையும் ஈடுபடுத்திக் கொண்டார்
கிறிஸ்துநாதரின் பிறப்பு முதல் இறப்பு வரை உடனிருந்து பணியாற்றுகிறார்
அன்னை மாமரி தலைமையில் அப்போஸ்தலர்கள் அறையை தாழிட்டு ஜெபித்த போது பரிசுத்த ஆவி அக்கினி நாவு வடிவில் அவர்கள் மீது வந்து தங்குகிறார்
எனவே அன்னை மாமரியை இணை மீட்பர் என அறுதியிட்டுக் கூறமுடியும்