பிலாத்துவின் போர்ச் சேவகர்களுக்கு ஒரு பயங்கர யோசனை தோன்றுகிறது. மூன்று வருடங் களாக இஸ்ராயேல் மக்களின் மத்தியில் அளவற்ற மகிமையும், மதிப்பும் அடைந்திருந்த சேசு நாதர் தங்கள் கையில் சிக்கியிருப்பதையும், அவரும் தம் அற்புதப் புதுமைகளில் ஒன்றையும் செய்யாது, சாந்தத்தோடு சகலத்திற்கும் உட்படுவதையும் கண்டு, உலகம் கண்டறியாத புதிதான ஒரு வாதையை அவருக்குத் தரக் கலந்தாலோசிக்கிறார்கள். அதன்படி, நமது அன்புள்ள ஆண்ட வரை இழுத்துச் சென்று அவரது வஸ்திரங்களை உரிகிறார்கள். நிற்கவும் முடியாத அளவுக்கு பலவீனமடைந்திருந்த சேசுவை ஓர் ஓட்டை நாற்காலியில் இருத்துகிறார்கள். அதுவே இந்த யூத மன்னரின் சிம்மாசனம் என்று நகைக்கிறார்கள். கட்டப்பட்ட கைகளில் ஒரு மூங்கிற்கோலைக் கொடுத்து, இதுவே அவரது செங்கோல் என்று சிரிக்கிறார்கள். இவருக்கு இராஜ இரத்தாம்பர ஆடை வேண்டுமே எனச் சொல்லி, ஒரு பழைய கிழிந்த சிவப்புச் சால்வையை அவர்மீது போர்த்துகிறார்கள். அரசருக்கு ஒரு முடி வேண்டுமே எனப் பரிகசித்து, முட்களால் ஒரு முடியைப் பின்னி, அவரது சிரசின் மீது வைத்து அழுத்துகிறார்கள். அவர் முன் முழங்காலிட்டு, யூதர்களின் இராஜாவே வாழ்க என்று கூவி, அவர் கையில் வைக்கப்பட்ட மூங்கில் தடியைப் பிடுங்கித் தலையில் ஓங்கி அடிக்கிறார்கள்.
சிரசின் மீது அடித்த அடிகளால் முட்கள் தலையிலும் கண்களிலும் இறங்கி, அவரது திரு இரத்தம் மார்பிலும், கைகளிலும் வழிந்தோடுகிறது. அகங்காரத்தால் தலை நிமிர்ந்து பிறரை நாம் அலட்சியமாய் எண்ணியதற்காக, நம் இரட்சகர் தலைகுனிந்து பரிகாரம் செய்கிறார். பிறரைக் கெடுக்க நாம் செய்யும் சூழ்ச்சிகளுக்கும், நினைக்கும் வஞ்சக எண்ணங்களுக்கும் பரிகாரமாக அவரது திருச்சிரசு முட்களால் ஊடுருவப்படுகிறது. பாவ இருள் நம் கண்களை மூடுகின்றது; பரம தயாளரின் திருவிழிகள் அதற்குப் பரிகாரம் செய்கின்றன. கர்வத்தால் நம் தலை வெடிக்கின்றது; கர்த்தரின் திருச்சிரசு அதற்குப் பரிகாரம் செய்கிறது.
இவ்வளவு கொடுமைப்படுத்தி வாதிக்கும் இந்த மூர்க்கர்களுக்கும் கூட இவரே இரட்சகர்; இவரே அரசர்; இவரே ஆண்டவர்! இவரே சர்வேசுரன்! இவ்வுண்மையை யூதர்களும் சேவகர் களும் அறியாதிருந்தது போல், இப்பொழுதும் எத்தனையோ வீணர்கள் அறியாதிருக்கிறார்கள். இன்றும் இந்த இராஜாதிராஜனைப் பரிகசிப்பவர்களும், கேலி செய்பவர்களும், முள்முடி சூட்டி, இவரது திருச்சிரசில் மூங்கில் தடியால் அடிப்பவர்களும் இல்லாமல் இல்லை . இவரது ஞானசரீர மாகிய திருச்சபை அவமானப்படுத்தப்படுகிறது; தூஷிக்கப்படுகிறது; துன்புறுத்தப்படுகிறது. மக்களின் இருதயத்தில் இருந்து இந்த மனுமகனின் ஞாபகமே இல்லாது எடுத்து விட கங்கணம் கட்டி நிற்கும் நாஸ்திகரும் தேவ துரோகிகளும் அதிகரித்து வருகிறார்கள். மிருகத் தனமுள்ள இவர்களை நாம் மனந்திருப்ப வேண்டுமானால், நம் அன்பரும் ஆண்டவருமான சேசு இரட்சகர் காட்டும் உத்தம வழியைப் பின்பற்றுவோம். இருதயத்தின் தாழ்ச்சி, சாந்தம், பொறுமை, சுயநலமற்ற பரித்தியாகம், பிறர்நலம் கருதும் அன்பு இவைகளே முள்முடி தாங்கிய பரலோக அரசரான சேசுநாதர் நமக்குப் போதிக்கும் போதனை என்று அறிந்து கொள்வோம்.