சுத்திகரிக்கும் தண்டனை பற்றிய எச்சரிப்பு ஆன்மாக்களுக்கு நன்மை புரியும்போது பொதுவாக முன்னறிவிப்பின்றியே கடவுள் அந்நன்மைகளைச் செய்து விடுகிறார்.
ஆனால் அவர்களை இரட்சிக்கும்படி தண்டனை அனுப்பும்போது, முன்னறிவித்த பிறகே அதை அனுப்புகிறார்.
பெருவெள்ளத்தைப் பற்றி முன் எச்சரிப்புக் கொடுத்தார்.
சோதோம் கொமோறா அழிவைப் பற்றியும் அறிவித்தார்.
நினிவே பட்டணத்தின் தண்டனையையும் முன்கூட்டியே யோனாஸ் தீர்க்கதரிசி வழியாகத் தெரிவித்தார்.
யோனாஸ் தீர்க்கதரிசியின் எச்சரிப்பைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பி தபசு செய்தார்கள். அதனால் தாம் முன்னறிவித்த தண்டனையை ரத்து செய்து விட்டார் கடவுள்.
நாமும் அப்படி மனந்திரும்பித் தம்மிடம் வர வேண்டும் என்பதற்காகவே இப்பொழுதும் நமக்கு எச்சரிக்கும் அறிவிப்பைச் செய்கிறார்.
இந்தத் தடவை ஆண்டவர் தம் தீர்க்கதரிசிகளை அனுப்பி நம்மை எச்சரிக்கவில்லை. தம் திருத்தாயாரையே அனுப்பியிருக்கிறார்.
மாதா சலேத் காட்சியில் உலகத்தினுடைய (நம்முடைய) பாவங்களைப் பட்டியல் போட்டுக் காட்டுவதுபோல் தெளிவாகக் கூறினார்கள்.
லூர்து காட்சியில் ஜெபத்தையும் விசேஷமாய் ஜெபமாலையையும் தவத்தையும், பரித்தியாகங்களையும் செய்து கடவுளிடம் மனந்திரும்பி வரும்படி கூறினார்கள்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பாத்திமாவில் எல்லோரும் நம்பும்படி சூரியனின் மாபெரும் அதிசயத்தைச் செய்து நம்மை எச்சரித்திருக்கிறார்கள்.