பழைய புதிய ஏற்பாடுகளடங்கிய கடவுளின் வார்த்தையாகிய வேதாகமத்தின் ஒரு பாகம் கடவுளின் எச்சரிப்புகளாக இருக்கின்றது.
வேதாகமம் எக்காலத்துக்கும் பொருந்துவதாலும், அது நேரடியாகக் கடவுளிடமிருந்தே வருவதாலும் அதன் எச்சரிப்புகளுக்குக் காது கொடுக்க நமக்குக் கூடுதல் கடமை உண்டு.
உதாரணமாக: இசையாஸ் ஆகமம் 34-ம் அதிகாரம்.
"ஜனங்களே வாருங்கள். காது கொடுத்துக் கேளுங்கள்... ஆண்டவருடைய சினம் சகல ஜனங்களின் மீதும் விழப்போகின்றது..... வானத்தின் கிரகங்கள் சோர்வடையும்-- அவை அத்திமர இலை உதிர்வது போல் உதிரும். விண் தலங்கள் ஏட்டைப் போல் சுருட்டப்படும். இதோ அது .... நீதி விளங்க நாம் கொல்ல வேண்டிய பிரஜை மீது இறங்கப் போகிறது” (இசை.34:2,4).
இங்கே "கிரகங்கள் உதிரும்" என்பது, எரியும் வால் நட்சத்திரங்கள் தங்கள் பாதை தவறி பூகோள மண்டலத்திற்குட் புகுந்து உலகத்திற்குச் சேதம் விளைவிக்கும் என்பதைக் காட்டுகிறது.
இதைப் பல அறிவிப்புகள் கூறுகின்றன.
புதிய ஏற்பாட்டில் அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் இது பற்றிக் கூறப்படுகிறது:
"அன்றியும் நீங்கள் யுத்தங்களையும் கலகங்களையும் குறித்துக் கேள்விப்படும் போது திகிலடை யாதிருங்கள். இவைகள் முந்த முந்த நடக்க வேண்டும்; ஆகிலும் முடிவு உடனே வராது. பற்பல இடங்களில் பலத்த பூமியதிர்ச்சிகளும், கொள்ளை நோய்களும், பஞ்சங்களும் உண்டாகும். வானத்தினின்று பயங்கரத் தோற்றங்களும், பெரிய அடையாளங்களும் உண்டாகும். அப்பொழுது சூரியன் சந்திரன் நட்சத்திரங்களிலே பல அதிசயங்கள் தோன்றும். சமுத்திரமும் அலைகளும் இரைந்து கொந்தளிப்பதினால், பூமியில் ஜனங்களுக்கு உபத்திரவமுண்டாகும். உலகத்துக்கெல்லாம் இனி என்ன வரப்போகிறதோவென்று மனிதர்கள் பயந்து, எதிர்பார்ப்பதினால் விடவிடத்துப் போவார்கள்.... சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பித்துக் கொள்ளவும், மனுமகன் முன்பாக நிற்கவும் பாத்திரவான்களென்று எண்ணப்படும் பொருட்டு எந்நேரமும் ஜெபம் பண்ணி, விழிப்பாயிருங்கள்" (லூக். 21).
காட்சியாகமமும் இவ்விறுதிக் கால நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறுகிறது:
"நட்சத்திரங்களும் பெருங் காற்றினால் அசைக்கப்பட்ட அத்திமரம் தன் காய்களை உதிர்க்கிறது போல் வானத்திலிருந்து பூமியின் மேல் விழுந்தன. அப்பொழுது வானமானது சுருட்டப்பட்ட புஸ்தகம் போல் சுருங்கிப் போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடம்விட்டுப் பெயர்ந்து போயின. பூமியின் இராஜாக்களும், பிரபுக்களும், சேனாதிபதிகளும், ஐசுவரியவான்களும், பராக்கிரமசாலிகளும், அடிமைகள் யாவரும், சுயாதீனர்கள் யாவரும் மலைகளின் குகைகளிலும் கற்பாறைகளுக்குள்ளும் ஒளிந்து கொண்டு, பருவதங்களையும், கற்பாறைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள் மேல் விழுந்து, சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும் செம்மறிப் புருவையானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள். இதோ, அவர்களுடைய கோபாக்கினியின் மகா நாள் வந்தது; யார் நிற்கக்கூடும்? என்றார்கள்” (காட்சி.6:13-17).