வெறுப்பு, அவதூறு, பிறரது நற்பெயரைக் கெடுத்தல், பிறர் துன்புறுவதைக் கண்டு மகிழ்தல், பிறர் செல்வச் செழிப்போடு இருப்பதைக் கண்டு மனம் புழுங்குதல் ஆகியவை, காய்மகாரம் என்ற வேரிலிருந்துதான் முளைத்தெழுகின்றன.
வெறுப்பு, சண்டை, சச்சரவுகள், வாக்குவாதம், கலாபனை, புறணிப் பேச்சு, பொறாமை, இழிவுபடுத்துதல், பிறர்சிநேகமற்ற நிலை, கெடுமதி, கெடுமனம் ஆகியவையும் இந்த காய்மகாரத்திலிருந்தே ஊற்றெடுக்கின்றன. அவை நம்மிடமுள்ள நல்ல அம்சங்களையும், மதிக்கப்பட நமக்குள்ள உரிமையையும் குறைப்பதாகத் தோன்றுவதால், நம் பிறனுடைய உலகப் பொருட்கள், உடைமைகளை, அல்லது அவனுடைய ஞானக் கொடைகள், நற்குணங்களைக் கண்டு அவன் மேல் காய்மகாரம் கொள்கிறோம்.
நாம் இந்தத் தீமையைப் பெரிதாக நினையாவிட்டாலும், அதுவே சர்வேசுரனால் அதிகமாக வெறுக்கப்படுவதும், அவருடைய வரப்பிரசாதத்திற்கு மிகவும் எதிரானதுமாக இருக்கிறது. அடிப்படையில் அது சர்வேசுரனுக்கு நாம் காட்டுகிற நன்றியற்றதனமாக உள்ளது.
காய்மகாரம், ஆங்காரத்திலிருந்து பிறக்கிறது. யாரைப் பார்த்து காய்மகாரப் படுகிறோமோ, அவரை விட மேலானவர்களாக இருக்க நாம் ஆசிக்கிறோம். எனவே அவரிடம் ஏதாவது நல்ல பண்புகள் இருந்தால் அவற்றைக் கண்டு நாம் வேதனைப்படுகிறோம்; அவற்றை இழிவுபடுத்துகிறோம். அவருக்கு ஏதாவது தீங்கு விளையும்போது மகிழ்கிறோம். அவர் பேசுவதையும், செய்வதையும் தவறாக மிகைப்படுத்துகிறோம். அவரிடம் ஏதாவது ஒரு குறையைக் கண்டால், அதை மற்றவர்கள் முன் பெரிதாக்கிக் காட்டுகிறோம்.
காய்மகாரம் நம் இருதயத்தில் பிறர் சிநேகத்தை அழித்து, உத்தமதனத்தில் முன்னேற முடியாதபடி நம்மைத் தடுக்கிறது. அது நம்மை சர்வேசுரனால் வெறுக்கப் படுகிறவர்களாக ஆக்கி விடுகிறது. நம்மை நன்றியற்றவர்களாகவும் ஆக்குகிறது. இதனால் நமக்குச் செய்யப் படுகிற நன்மைகளுக்கு நாம் நன்றி செலுத்துவதில்லை, அதை விட மோசமாக, அந்த நன்மைகளில் கூட நாம் குறை காண்கிறோம்.