திவ்விய இரட்சகராயிருக்கிற சேசுவே! உம்முடைய வலது பக்கத்திலேயிருந்த பச்சாத்தாபக் கள்ளனைப் பார்த்து "இன்றே நம்மோடு கூட பரகதியிலிருப்பாய் என்று சத்தியமாய் உனக்குச் சொல்லுகிறேன்" என்று வசனித்து அப்படி அருளிச் செய்தீரே!
என் ஆண்டவரே மிகவும் மதுரமான என் நல்ல சேசுவே, அடியேனுக்கும் அப்படிப்பட்ட தயவு செய்தருளும். நான் அதற்கு அபாத்திரவான் என்பது மெய்தான். ஆயினும் என்னை இரட்சிக்க தேவரீர் பாடுபட்டதெல்லாம் நினைத்தருளும்.
சூரியனிடத்திலே இருள் உண்டாயிருந்தாலும் உம்மிடத்தில் அற்பக் குற்ற நிழல் முதலாய்க் கிடையாதே, நானல்லவோ பாவி? நானல்லவோ துரோகி? நானல்லவோ சிலுவையிலே அறையுண்டிருக்கப் பாத்திரமாயிருக்கிறேன்? நானல்லவோ தேவரீர் கடின மரணம் அடைகிறதற்குக் காரணமாயிருந்தேன்?
என் ஆராதனைக் குரிய சர்வேசுரா, தேவரீர் சகல நன்மைச் சுபாவமாயிருக்கிறதினாலேயும், தேவரீர் எனக்காக எண்ணிக்கைக்குள் அடங்காத வாதைகளை அனுபவித்துக் கொடூர மரணம் அடைந்ததினாலேயும், நான் உமக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்ததற்கு மிகவும் மன நொந்து மனஸ்தாபப்படுகிறேன்.
சகல பொல்லாப்புகளையும் விட என் பாவங்களை எல்லாம் வெறுத்து உத்தம மனஸ்தாபமாயிருக்கிறேன். இனிமேல் ஒருகாலும் எந்தப் பாவங்களையும் செய்வதில்லை என்று கெட்டியான மனதோடு பிரதிக்கினை செய்கிறேன்.
தேவரீர் உம்முடைய மட்டில்லாத கிருபையையும் உமது திருக்காயங்களையும் பார்த்து என்னுடைய பாவங்களைப் பொறுத்து, நல்ல கள்ளனுக்குத் தந்தருளின மோட்சத்திலே அடியேனையும் அழைப்பீர் என்று உறுதியான நம்பிக்கையாயிருக்கிறேன். தேவரீர் சகலமான வஸ்துக்களுக்கும் ஆஸ்தியும் கதியுமாயிருக்கிறதினாலே தேவரீருக்கு உத்தம ஆராதனை செய்கிறேன்.
சர்வத்துக்கும் ஆண்டவராகிய சேசுவே! நல்ல கள்ளன் உமது பேரில் விசுவாச நம்பிக்கை பக்தியாயிருந்தது போல், நானும் என் முழுமனதோடே உமது பேரில் விசுவாசமும் நம்பிக்கையும் பக்தியுமாயிருக்கிறேன். இந்த மனப் பற்றுதலை என்னிடத்தில் அதிகமதிகமாய் எழுப்ப உம்மை ஆசையோடே மன்றாடுகிறேன்.
இன்று தானே நம்மோடு கூடப் பரகதியில் இருப்பாயென்று அந்த நல்லக் கள்ளனைப் பார்த்து அருளிச் செய்தாற்போலே, என்னையும் கிருபை கடாட்சத்தோடே நோக்கி இன்று தானே நம்மோடு கூட மோட்ச இராச்சியத்திலே இருப்பாய் என்கிற அமிர்தமான வாக்கியத்தைத் திருவுளம் பற்றியருளும் சுவாமி.
ஆமென்.