மரண வேளையில் நமக்காக கடவுளிடம் பரிந்து பேச நமது காவல் தூதரை உதவிக்கு அழைக்கும் செபம்!

-புனித சார்லஸ் போரோமியோ

எனதன்பான நல்ல காவல் தூதரே! எனது மரண வேளை எப்பொழுது, எப்படி வருமென நான் அறியேன். திடீரென ஒருநாள், நான் எடுத்துக்கொள்ளப்படலாம். அவ்வாறு எடுத்துக்கொள்ளப்படும் வேளையில், எனது கடைசி மூச்சினை சுவாசிக்கும் நேரம், கடவுளை நோக்கி சிந்தித்து செபிக்கும் திறனை நான் முழுவதும் இழந்தது விடலாம். ஆனாலும் நித்திய வாழ்வினை நோக்கிய எனது பயணத்தின் அக்கடைசி வேளையில், கடவுளிடம் சொல்ல வேண்டுமென விழையும் எத்தனையோ ஆசைகள்  உள்ளன. இன்று எனது முழு மன சுதந்திரத்துடன், உம்மை எனது சார்பாக அந்த பயங்கரமான வேளையில் கடவுளிடம் பேச வேண்டுமென ஏற்படுத்துகின்றேன். ஓ! என் அன்பான காவல் தூதரே! அவ்வேளையில் நீர் அவரிடம் சொல்ல வேண்டியதாவது,

இயேசு நாதரால் ஆரம்பிக்கப்பட்டு, அவரில் வாழ்ந்து இறந்த அனைத்து புனிதர்களும் இருந்த, இதனை விட்டு வெளியே மீட்பு இல்லாத, உரோமை, கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபையின் உறுப்பினனாக நான் இறக்க விரும்பினேன் என்றும்,

எனது மீட்பரின் எண்ணிலடங்கா நன்மைகளில் நான் பங்காளியாகும் அருள் வரத்தினை வேண்டினேன் என்றும், அவரது திரு இரத்தத்தில் தோய்ந்த சிலுவையினை எனது உதடுகள் முத்தமிட்டுக்கொண்டே நான் இறக்க விரும்பினேன் என்றும்,

எனது பாவங்கள் அவரை மனம் நோகச் செய்வதானால் நான் அவற்றை வெறுத்து ஒதுக்கினேன் என்றும், நான் மன்னிப்படைய விரும்பியதால், அவர் மேல் கொண்ட அன்பினால், அவருக்காக எனது எதிரிகள் அனைவரையும் நான் மன்னித்தேன் என்றும்,

அவர் எனக்காக கட்டளையிட்டதால், இறப்பினை நான் விருப்பத்தோடு ஏற்றுக்கொள்கிறேன் என்றும், அவரது இரக்கத்தினை எதிர்நோக்கி, ஆராதனைக்குரிய அவரது திரு இருதயத்தினுள் மிக உறுதியுடன் என்னையே நான் ஒப்படைக்கிறேன் என்றும்,

மோட்சத்திற்கு செல்லவேண்டும் என்ற அளவுகடந்த ஆசையினால், அவரது பரிசுத்த நீதியினை நிறைவேற்ற வேண்டி எவ்விதமான துன்பங்களையும் நான் ஏற்றுக்கொள்ள என்னையே நான் கையளித்தேன்  என்றும்,

அனைத்திற்கும் முன்பாக, அனைத்திற்கும் மேலாக, அவருக்காக அவரை நான் அன்பு செய்தேன் என்றும், புனிதர்கள், வானதூதர்கள் மற்றும் பரிசுத்த தேவதாயாருடன் இணைந்து அவரை நித்தியத்திற்கும் நான் அன்பு செய்ய வேண்டுமென ஆசைப்பட்டேன் என்றும் அவ்வாறே நடக்கும் என நம்பினேன் என்றும், அவரிடம் எனக்காக பரிந்து பேசும்.

ஓ! அன்பான எனது காவல் தூதரே! எனது உள்ளக்கிடக்கையினை கடவுளுக்கு வெளிப்படுத்துபவராகவும், இவையே எனது விருப்பமாகவும், வாழ்வாகவும் இருந்ததென அவரிடம் அறிவிக்க எனக்கு மறுத்துவிடாதேயும்.

ஆமென்.

நன்றி : சகோ. ஜெரால்ட்