வியாகுலங்கள் நிறைந்த மாதா மீது பக்தி.

திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட பக்தி.

வியாகுலங்கள் நிறைந்த மாதாவின் மீதுள்ள பக்தியானது எப்பொழுதுமே கத்தோலிக்கக் கிறீஸ்தவர்களின் மத்தியில் காணப்படுகிற அவர்களுக்கு மிகப் பிரியமான ஒரு பக்தி முயற்சியாகும். இந்த பக்தி முயற்சி திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டு, பூசைப் புத்தகத்திலும், குருக்கள் மற்றும் துறவியரின் கட்டளை ஜெபப் புத்தகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சர்வேசுரனுடைய திருத்தாயார், தனது திவ்விய குமாரனோடு உலகத்தில் வாழ்ந்தபோது, நம் நிமித்தமாக அவர்கள் அனுபவித்த விவரிக்க முடியாத வியாகுலங்களை நாம் எப்போதும் நம் மனக்கண்முன் கொண்டிருக்கும் பொருட்டு, மாமரியின் ஏழு வியாகுலங்களுக்குத் தோத்திரமாக திருச்சபை இரண்டு திருநாட்களைக் கொண்டாடுகிறது. அவற்றில் ஒன்று பெரிய வெள்ளிக்கு முந்தின வெள்ளியன்றும், இன்னொன்று செப்டம்பர் 15 அன்றும் கொண்டாடப்படுகிறது. ஏழு வியாகுலங்களின் ஜெபமாலையையும், வியாகுல மாதாவின் இன்னும் பல பக்தி முயற்சிகளையும் திருச்சபை எண்ணற்ற ஞானப் பலன்களால் வளப்படுத்தியுள்ளது. "ஸ்தாபாத் மாத்தெர் தோலோரோஸா (மைந்த னார்சிலுவைமீது) என்ற அருமையான பாடல் எவ்வளவாக நம் நெஞ்சைத் தொடுவதாக உள்ளது! இது பொதுச் சிலுவைப் பாதையின் போது இடையிடையே பாடப்படும் பாடலாக திருச்சபையால் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏழு வியாகுலங்கள்.

திருச்சபையானது முழு முயற்சியோடு தன்னுடைய பிள்ளைகள் மோட்ச அன்னையின் வியாகுலங்களின் மீது பக்திகொள்ள வேண்டும் என ஆசிக்கிறது. நமது விசேஷ வணக்கத்திற்காக மாதாவின் ஏழு வியாகுலங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இவையே வியாகுல மாதா ஜெபமாலையின் போது தியானிக்கப்படும் தேவ இரகசியங்கள் ஆகும். (இது பின்வரும் அத்தியாயம் ஒன்றில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது.)
அவை:

1. சிமியோனின் தீர்க்கதரிசனம்.
2. எகிப்து நாட்டுக்கு குழந்தை சேசுவுடன் தப்பிச்செல்லுதல்
3. குழந்தை சேசு தேவாலயத்தில் காணாமல் போனது.
4. மாதாகல்வாரிப் பாதையில் சேசுவை சந்தித்தது.
5. சேசு சிலுவையில் மரித்தது.
6. மரித்த சேசுவின் திருச்சரீரத்தை மாதாவின் மடியில் வளர்த்தியது.
7. சேசுவைக்கல்லறையில் அடக்கம் செய்தது.

தனது தாய்மையுள்ள இருதயத்தை ஊடுருவிய இந்த ஏழு வியாகுலங்களின் காரணமாக, சர்வேசுரனுடைய தாயார் சிலுவையின் அடியில் நிற்பது போல், அல்லது தனது மடியில் உயிரற்ற சேசுவின் திருச்சரீரத்தைத் தாங்கியிருக்கிற நிலையில், அவர்களுடைய மாசற்ற இருதயத்தை ஏழு வாள்கள் ஊடுருவியிருப்பது போல, அடிக்கடி சித்தரிக்கப்படுகிறார்கள்.

அவர்களுடைய இருதயம் வாளால் ஊடுருவப்படுவது பரிசுத்த சிமியோனால் தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்டது: "உம்முடைய ஆத்துமத்தையும் ஒரு வாள் ஊடுருவும்" (லூக். 2:35).

பரிசுத்த திருச்சபை தேவதாயின் ஏழு வியாகுலங்களை மட்டுமே நம் நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஆனால் அவற்றின் நிஜமான எண்ணிக்கையை யாரால் அளவிட முடியும்! சர்வேசுரனுடைய திருமாதாவின் துயரங்களை யாரும் புரிந்து கொள்ளமுடியாது! அவைகள் நம் புத்திக்கு எட்டாதவை! ஆனாலும், தன் திவ்விய குமாரனின் வாழ்வைப் போலவே அவர்களுடைய முழு வாழ்வும் துன்பங்கள், இன்னல்களின் ஒரு தொடராக இருந்தாலும், சேசுவின் கசப்பான பாடுகள் மற்றும் மரணத்தின் புனித வாரத்தின் போதுதான் அனைத்திலும் அதிகப் பெரிதான வேதனைகளும், துன்பங்களும் அவர்களுக்கு வந்தன. அப்போதுதான் வெறுப்பு மற்றும் கடுங்கோபத்தின் புயல் முழு வன்மையோடு சேசுவுக்கு எதிராக வெடித்தது.

நம் திவ்விய இரட்சகரின் பாடுகளின்போது, மாதா தன் குமாரனுடைய வேதனைகளைப் பார்த்த ஒவ்வொரு முறையும், அவர்களுடைய ஆத்துமத்தை ஒரு வாள் மேலும் ஆழமாக ஊடுருவியது. அவருடைய குரலின் ஒவ்வொரு சத்தமும் விசேஷமான கசப்பை அவர்களுடைய இருதயத்திற்குக் கொண்டு வந்தது. அவர் மீது அவர்கள் கொண்டிருந்த நேசம் அவருடைய திருப்பாடுகளின் போது ஒவ்வொரு கணமும் அதிகரித்தது.

அவர்களுடைய நேசத்தின் இந்த ஒவ்வொரு அதிகரிப்பும், அவர்களது வியாகுலங்களை அதிகரித்தன. நம் ஆண்டவர் அவர்களுக்கு எவ்வளவுக்கு அதிகப் பிரியமுள்ளவரும், அதிக மதிப்புள்ளவருமாய் ஆனாரோ, அவ்வளவு அதிகக் கூர்மையாக அவருடைய கொடுமையான, அவமானமுள்ள திருப்பாடுகளின் இருதயத்தைப் பிளக்கும் தேவ சாபத்தை அவர்கள் உணர்ந்தார்கள்! தன் தெய்வீகக் குமாரனின் மீது விழுந்த ஒவ்வொரு அடியையும், அவருடைய பரிசுத்த ஆள்தன்மையின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒவ்வொரு அவமானத்தையும் மாதா தன் ஆத்துமத்திலும், தன் புலன்களிலும் உணர்ந்தார்கள். என்றாலும் அவர்களுடைய வெளிறிப்போன திரு அதரங்களிலிருந்து எந்த முறைப்பாடும், கதறலும் வெளிப்படவில்லை. வீரத்துவமிக்க திடத்துடன் அவர்கள் தன் மிக வன்மையான துயரத்தை அடக்கினார்கள். தேவ சித்தத்தோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, உலகத்தின் பாவங்களுக்காகத் தன் திருக்குமாரனின் பலியை தாராள உள்ளத்தோடு ஒப்புக் கொடுத்தார்கள்.

மாதாவின் வியாகுலங்கள் நம் நன்றியறிதலுடன் கூடிய வணக்கத்திற்குத் தகுதியுள்ளவை.

தன் திருச்சுதனின் மரணத்தின்போது மாதா அனுபவித்த துன்பங்கள் அவர்களுடைய இருதயத்தைக் கிழித்து விட்டன. இதனாலேயே நமதாண்டவர் அர்ச். மெற்றில்டா அம்மாளிடம் இவ்வாறு கூறினார்: "இருதயங்களில் எல்லாம் மகா பொறுமையுள்ள என் திருமாதாவின் இருதயத்தைத் துதித்து வணங்கு. ஏனெனில் அந்த இருதயம் என் பாடுகள் மற்றும் மரணத்தின் போதும், அதன்பின் இந்த பயங்கரமுள்ள வாதைகளைப் பற்றி அவர்கள் நினைவுகூர்ந்த ஒவ்வொரு வேளையிலும் ஆயிரக்கணக்கான வாள்களால் ஊடுருவப் பட்டது."

பரிசுத்த கன்னிகை தனது திவ்விய குமாரனின் மரணத்திற்குப் பின், தானும் மோட்சத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த பாக்கியமான நாள் வரையிலும், நமது ஆண்டவரின் திருப்பாடுகள் திரும்பத் திரும்ப அவர்களுடைய மாசற்ற இருதயத்தில் புதுப்பிக்கப்பட்டன. ஆகிர்தா மேரிக்கு
வெளிப்படுத்தப்பட்டபடி, தன் திருமகனின் பரலோக ஆரோகணத்திற்குப் பிறகு, பாக்கியமான ஆன்மாக்கள் ஐந்து காய வரம் பெற்றுள்ளது போல, மாதாவும் ஒவ்வொரு வெள்ளியன்றும் விவரிக்க முடியாத வியாகுலத்தை அனுபவித்தார்கள். இத்தகைய எல்லா வியாகுலங்களையும், நம்மீது கொண்ட நேசத்திற்காக மாதா தாங்கிக் கொண்டார்கள்.

வியாகுல அன்னையின் விசேஷ நேசர்கள் பல அர்ச்சியசிஷ்டவர்கள் வியாகுல அன்னையின்மீது விசேஷ நேசம் கொண்டிருந்தனர். அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் வியாகுல அன்னையின் சுரூபம் ஒன்றை எப்போதும் தன் நெஞ்சின்மீது அணிந்திருந்தார். கனிந்த பக்தியோடு அவர்களை அவர் வணங்கி வந்தார்.

முத்.ஹென்ரி சூசோ வியாகுல அன்னையின் மீது மிகுந்த இரக்கம் கொண்டவராய்த் திகழ்ந்தார். அடிக்கடி மாதாவின் வியாகுலங்களைத் தியானித்தவாறு இருந்ததால், மற்ற பாக்கியங்களோடு சேர்த்து, மாதாவின் நேரடியான வெளிப்படுத்தல்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.

மாதா அவரிடம்: "சிலுவையின் அடியில் என் தாய்க்குரிய இருதயம் அனுபவித்த ஆழங்காண முடியாத துயர வேதனைகளோடு ஒப்பிடும்போது, ஒரு மனித இருதயம் தாங்கியிருக்கக் கூடிய சகல துக்க துயர வேதனைகளும், ஒரு மிக விஸ்தாரமான பெருங்கடலுக்கு முன் ஒரு நீர்த்துளியைப் போலிருக்கும்" என்று கூறினார்கள்.

அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் மரியாயின் வியாகுலங்களைத் தமது அனுதின தியானங்களுக்குரிய தியானப் பொருளாகவும், தமது மிக ஆழ்ந்த மனதுருக்கமுள்ள அன்பிற்குரிய பொருளாகவும் ஆக்கிக் கொண்டார். ஒருமுறை அவர் வருடாந்தர தியானப் பிரசங்கங்கள் தந்து கொண்டிருந்தபோது, தியான நாட்கள் முழுவதிலும் போதக மேடைக்கு அருகில் வியாகுல மாதாவின் படம் ஒன்றை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைப் பார்ப்பதன் மூலம் விசுவாசிகள் மரியாயின் துன்பங்களை பக்தி யோடு சிந்தித்து, அவர்களுடைய இரக்கமுள்ள மன்றாட்டிற்குத் தங்களை ஒப்புக்கொடுக்கும்படி தூண்டப்பட வேண்டும் என்று அவர் விரும்பியதால், இப்படிச் செய்தார். தமது பிரசங்கங்களின் போது, அவர் அடிக்கடி வியாகுல மாதாவிடம் மன்றாடினார். உத்தம மனஸ்தாபத்தையும் மனந் திரும்புதலையும் பெற்றுக்கொள்ளும்படி, வியாகுல அன்னையிடம் திரும்புமாறு அவர் பாவிகளை எச்சரித்து, அறிவுறுத்தி வந்தார். அவரது புத்தகங்களில் மாதாவின் வியாகுலங்களின் மீதான பல ஆய்வுக்கட்டுரைகளும் அடங்கும்.

உன் தாயின் வியாகுலங்களை நினைவில் கொள்!

பழைய ஏற்பாட்டு முதியவரான தோபியாஸ் தம் வாழ்வின் முடிவு நெருங்கி வருவதை உணர்ந்த போது, அவர் தம் மகனை அழைத்து, அவனுக்கு ஞானமுள்ள அறிவுரைகளைத் தந்தார். அவனுடைய தாயாரைப் பற்றி, நெகிழ்ச்சி யூட்டும் விதத்தில் அவர் அவனுக்குப் பின்வருமாறு அறிவுரை தந்தார்: ''...உன் தாய் உயிரோடிருக்கும் நாட்களிலெல்லாம் அவளைச் சங்கித்து வரக்கடவாய். அவள் உதரத்தில் நீ இருந்த போது, உன்னைப்பற்றி அவள் பட்ட அவதிகளையும், ஆபத்துகளையும் நீ உன் ஞாபகத்தில் கொண்டிருக்க வேண்டும்"
(தோபி 4:3-4).

உண்மையாகவே நம் உலகத் தாயைப் பொறுத்த வரை இது நம் எல்லோருக்கும் ஓர் அழகிய பாடமாக இருக்கிறது. ஆயினும் நம் பரலோகத் தாயும், நம் ஆத்துமத்தின் தாயுமாகிய மாமரிக்கு இது இன்னும் அதிக சிறப்பாகப் பொருந்துகிறது.

சிலுவையிலிருந்தபடி, "இதோ உன் தாய்" (அரு.19:27) என்று நம் நேச இரட்சகர் தம் அன்புச் சீடரிடம் கூறிய போது, தம்முடைய தாயை அவர் நம் ஒவ்வொருவருக்கும் தாயாகத் தந்தார்.

''உன் வாழ்நாளெல்லாம் உன் தாயை சங்கித்து வா. அவள் உனக்காக எவ்வளவு துன்பப்பட்டாள் என்பதை ஒருபோதும் மறவாதே" என்றும் நம் ஆண்டவர் சொல்கிறார். நம் இரட்சணியத்திற்காக மாமரி அனுபவித்த அளவுகடந்த பெரும் வியாகுலங்கள் மற்றும் துன்பங்களின் காரணமாக, அவர்கள் நம் தயவிரக்கத்திற்கும், மிக உயர்ந்த மரியாதைக்கும் தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

நம் சொந்தத் தாய் நீண்ட காலமாக கடுமையான துன்பம் அனுபவித்து வருகிறாள் என்றால், அவள் மீது கொள்ளும் தயவிரக்கத்தின் மூலம் நாம் நம் அன்பையும், மரியாதையையும் அவளுக்குக் காட்டுகிறோம். பதிலுக்கு நம் தாய் முன்பை விட அதிகக் கனிவோடு நம்மை நேசிக்கிறாள். நம் பரலோக மாதாவாகிய மாமரியும் இப்படியேதான் செய்கிறார்கள். தன் பிள்ளைகள் அடிக்கடி தன் வியாகுலங்களை நினைப்பதன் மூலம் அவர்கள் மீது தயவிரக்கம் கொள்ளும்போது, அவர்கள் வெகுவாக மகிழ்ச்சியடைகிறார்கள்.

ஒரு முறை தேவமாதா அர்ச். பிரிட்ஜித் அம்மாளிடம், ''நான் மனிதர்களின் மக்களின் மீது என் பார்வையைத் திருப்பி, அவர்களில் யாராவது என்மீது இரக்கம் காட்டுகிறானா என்று தேடினேன். அப்படிப்பட்டவர்கள் ஒரு சிலரை மட்டுமே நான் கண்டேன்! பலர் என்னை மறந்து விட்டார்கள் என்றாலும், என் மகளே, நீயாவது என்னை மறவாதிரு. நான் எவ்வளவு அதிகமாகத் துன்புற்றேன் என்பதை நினைத்துக் கொள்" என்று சொன்னார்கள்!

பரிசுத்த திருச்சபை தீர்க்கதரிசியான எரேமியாஸின் பின் வரும் வார்த்தைகளை வியாகுல மாதாவுக்குப் பொருத்திக் கூறுகிறது: ''வீதி கடக்கும் நீங்கள் எல்லோரும் உற்றுப் பாருங்கள்; என் உபாதைக்குச் சமமான உபாதையுண்டா?"
(புலம்பல்.1:12);

"ஜெருசலேம் குமாரத்தியே, உன்னை யாருக்கு ஒப்பிடுவேன்? உன்னை யாருக்குச் சமமென்பேன்? உன் நெருக்கிடை கடலைப் போல் அபாரமாயிருக்கின்றதே; உனக்கு சிகிச்சை செய்கிறவன் யார்?"
(புலம்பல். 2:13).

மரியாயின் நேசமானது பெரும் நீர்த்திரள்களாலும் அணைக்க முடியாதபடி பற்றியெரிகிற நேசமாக இருக்கிறது.
(உந். சங். 8:7).

வியாகுல அருள் நிறை மந்திரம்.

அர்ச்சியசிஷ்டதனமுள்ள பாப்பரசராகிய ஒன்பதாம் பத்திநாதர் நம் இரட்சகருடையவும், அவருடைய வியாகுல மாதாவுடையவும் மிகக் கசப்பான துன்பங்களின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். நமது ஆண்டவரின் பாடுகளையும், அவரது திருமாதாவின் வியாகுலங்களையும் அடிக்கடி தியானிப்பது, பாவிகளை மனந்திருப்பவும், மனஸ்தாபம், தவம், பரிகாரம் ஆகியவற்றிற்கான ஒரு நிலையான தூண்டுதலை அவர்களுக்குத் தரவும் மிகப் பயனுள்ள ஒரு வழியாக அவருக்குத் தோன்றியது. எனவே 1847-ல் அவர் வியாகுல மாதாவுக்குத் தோத்திரமாக இயற்றப்பட்ட ஒரு புதிய அருள்நிறை மந்திரத்தை அங்கீகரித்தார்.  அந்த ஜெபம் பின்வருமாறு:

வியாகுலங்கள் நிறைந்த மரியாயே வாழ்க, சிலுவையில் அறையப்பட்டவர் உம்முடனே. பெண்களுக்குள் மிகுந்த இரக்கத்திற்குத் தகுதியுள்ளவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் மிகுந்த இரக்கத்திற்குத் தகுதியானவரே. அர்ச். மரியாயே, சிலுவையில் அறையப்பட்டவரின் மாதாவே, உம்முடைய திருக்குமாரனை சிலுவையில் அறைந்த நாங்கள், மனஸ்தாபக் கண்ணீரை இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் பெற்றுக் கொள்ளும்படியாக, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆமென்.

வியாகுல அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்நியாச சபை.

தனது வியாகுலத்திற்கு வணக்கம் செலுத்துவதை விசேஷ நோக்கமாகக் கொண்ட ஒரு சந்நியாச சபை திருச்சபையில் இருக்க வேண்டும் என்று தேவதாய் விரும்பினார்கள் என்பதிலிருந்து, நாம் அவர்களுடைய வியாகுலங்களின்மீது பக்தி கொள்வதை எந்த அளவுக்கு மாதா விரும்புகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இத்தகைய பக்தி எல்லாக் காலங்களிலும் திருச்சபையில் இருந்து வந்துள்ளது. பரிசுத்த திருச்சபைத் தந்தையரின் எழுத்துக்களாலும், பல ஜெபங்கள், படங்கள், மனதைத் தொடும் பாடல்கள் ஆகியவற்றாலும் இது எண்பிக்கப்படுகிறது. ஆனால் தமது திருக்குமாரனின் தாயாரின் வியாகுலத்தின் மீது திருச்சபையின் உறுப்பினர்கள் கொண்டுள்ள இந்த பக்தியானது, ஒரு நிலையான பக்தியாக இருக்க வேண்டும் என்று கடவுளே சித்தங்கொண்டார். இது நிறைவேற ஒரு சந்நியாச சபை மரியாயின் வியாகுலத்தின்மீது பக்தி கொண்டு, அதை எல்லா இடங்களிலும் பரவச் செய்யவும் அவர் விருப்பம் கொண்டார்.

இத்தாலியில் உள்ளப்ளோரென்ஸ் நகரில் இந்த சந்நியாச சபையை நிறுவும் அலுவல் ஏழு பிரபுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கி.பி. 1223-ல் புனித வெள்ளியன்று இந்த பக்திமிகு இளைஞர்கள் ஆண்டவருடைய பாடுகளையும், அவருடைய திருத்தாயார் அனுபவித்த வியாகுலங்களையும் பற்றித் தியானம் செய்யும்போது, மாதாவே மோட்ச அழகுடன் சம்மனசுக்கள் புடைசூழ அவர்களுக்குத் தோன்றினார்கள். சில சம்மனசுக்கள் ஆண்டவருடைய பாடுகளின் போது பயன்படுத்தப்பட்ட கருவிகளுடனும், மற்றவர்கள் கறுப்பு ஆடையைத் தங்கள் கையில் ஏந்தியும் காணப்பட்டார்கள். அவர்களில் ஒரு சம்மனசானவர் தம் கையில் அர்ச். அகுஸ்தீனாரின் சட்டங்கள் அடங்கிய நூலையும், இன்னொருவர் தம் வலது கையில், "மரியாயின் ஊழியர்கள்'' என்ற பொன்னிற எழுத்துக்கள் கொண்ட ஒரு சுருளையும், தமது இடது கையில் ஓர் ஓலையையும் தாங்கி நின்றார்கள். அர்ச். கன்னிமரியம்மாள் தனது ஊழியர்களைக் கறுப்பு உடையால் உடுத்தினார்கள். அந்த உடைதான் கறுப்பு நிற மேலங்கியாகும்.

இந்தக் காட்சியால் பரவசம் அடைந்த இந்த இளைஞர்கள் மாதாவின் திருவாயிலிருந்து பின்வரும் வார்த்தைகள் ஒலிப்பதைக் கேட்டார்கள்: "என் தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களே, நான் உங்கள் மன்றாட்டுகளுக்குப் பதில் சொல்லி உங்களைத் தேற்ற வந்துள்ளேன். இந்த உடையை வாங்கி அணிந்து கொள்ளுங்கள். நான் என் திருக்குமாரன் மரித்த இந்நாளில் அனுபவித்த வியாகுலங்களை இந்தக் கறுப்பு உடை எப்பொழுதும் உங்களுக்கு ஞாபகப்படுத்தட்டும். நீங்கள் இந்த உலகில் எனக்கு விசுவாசமாக ஊழியம் செய்தால் உங்களுக்காக மோட்சத்தில் காத்துக் கொண் டிருக்கும் மகிமையை நீங்கள் தாங்கும் இந்த ஓலை உங்களுக்குப் பறைசாற்றுகிறது,''

மாதா கட்டளையிட்டவாறு இந்தப் புனித ஸ்தாபகர்கள் செய்தார்கள். அவர்களது ஞானப் பிள்ளைகள் அவர்களைப் போலவே மிகுந்த ஆர்வமுடன் மரியாயின் வியாகுல பக்தியைப் பரப்பினார்கள். அவர்கள் மரியாயின் ஊழியர்கள் அல்லது செர்வைட்ஸ் (தற்போது ஏழு வியாகுலங்கள் சபையினர்) என்று அறியப்பட்டார்கள். கறுப்பு உத்தரியத்தைத் தரித்து ஊழியம் செய்து வரும் இந்த ஊழியர்களின் நல்ல ஊழியத்திலும், பேறுபலன்களிலும் இதில் உறுப்பினர்கள் அல்லாதவரும் பங்கு பெறலாம். இந்த உத்தரியம் ஐந்து மடிப்புள்ள உத்தரியம் என்றும் அழைக்கப் படுகிறது. பக்தியோடு இந்த உத்தரியத்தை அணிபவர்கள் பல வரப்பிரசாதங்களையும், நன்மைகளையும் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் மரியாயின் வியாகுலங்களின்மீது கட்டாயம் பக்தி கொண்டிருக்க வேண்டும்.

ஆமென் சேசு.