பாத்திமா காட்சிகள் - பாத்திமா என்ற பெயர்க்காரணம்

பாத்திமா

போர்த்துக்கலின் ஏறக்குறைய நடுப்பாகத்தில் அமைந் துள்ளது பாத்திமா என்னும் ஊர். தலைநகரான லிஸ்பனில் இருந்து வடக்கே 90 கல் (144 கி.மீ.) தொலைவில் அது உள்ளது. காட்சிகள் நடைபெற்ற இடம் கோவா தா ஈரியா. இது பாத்திமாவிலிருந்து 2 கி.மீ. மேற்காக அமைந்துள்ளது. 

அது ஒரு மலைப்பாங்கான சமவெளி. குட்டையான ஒரு வகை ஓக் மரங்கள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக வளரும். பச்சைப் பசும்புல் கூட இல்லை. வறண்ட புல்லும், பெரிய பரல் கற்களும் அதிகமாகக் காணப்படும். பார்ப்பதற்குக் கவர்ச்சியே இராது. கோவா தா ஈரியா என்று அந்த இடம் அழைக்கப்படுவதன் காரணம், வேதசாட்சியாக மரித்த இள வயதுடைய புனிதை ஈரியா அந்த இடத்தில் சில காலம் ஓர் ஆசிரமத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. 

கோவா தா ஈரியாவுக்கு அருகாமையில் பாத்திமா என்ற ஊர் இருப்பதால், பாத்திமா என்ற பெயரிலேயே மாதாவின் காட்சிகள் குறிப்பிடப் படுகின்றன.

பாத்திமாவில் பங்குக்குரு உண்டு. லெயிரியா மேற்றிராசனத்தில் பாத்திமா ஒரு பங்கு. பாத்திமா பங்கைச் சேர்ந்த குக்கிராமம்தான் அல்ஹஸ்திரல் காட்சி பெற்ற மூவரும் பிறந்து வளர்ந்தது இச்சிற்றூரில் தான்.

பாத்திமா என்பது ஓர் இஸ்லாமியப் பெயர். கத்தோலிக்கப் போர்த்துக்கலின் நடுவே அமைந்துள்ள ஒரு ஊருக்கு எவ்வாறு இப்பெயர் வழங்கப்பட்டது?

ஏறக்குறைய 12 - ம் நூற்றாண்டின் மத்தியில் தான் போர்த் துக்கல் நாடு உருவாகியது. அதுவரையிலும் அது ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. ஸ்பெயின் தேசத்து மன்னர், அல்போன்ஸ் ஹென்றி என்ற தம் தளபதி ஒருவருக்குப் பரிசு ஒன்று வழங்கினார். சிறந்த துணிவுடன் பணியாற்றியதற்காக போர்த்துக்கல் என்று அழைக்கப்படும் பகுதி முழுவதையும் அவருக்கு அளித்துக் கெளரவித் தார். இந்த அல்போன்ஸ் ஹென்றி என்பவர்தான் போர்த்துக்கலின் முதல் மன்னர்.

போர்த்துக்கலின் மீது ஏற்கெனவே ஒரு நூற்றாண்டுக்கு முன் இஸ்லாமியர் படையெடுத்து, அதன் ஒரு பாகத்தில் குடியேறி இருந் தனர். அவர்களை வெளியேற்றி விடத் தீர்மானித்தார் அல்போன்ஸ். போரில் ஈடு இணையற்ற வீரனாய் விளங்கிய கொன்சாலோ என்ற தளபதியின் பொறுப்பில் இவ்வலுவல் ஒப்படைக்கப்பட்டது.

இஸ்லாமியரைத் திடீர்த் தாக்குதல் செய்து வெளியேற்றுவது ஒன்றே சிறந்த வழி என்று தீர்மானித்தார் கொன்சாலோ. 1158ம் ஆண்டில் ஓர் இரவில் இத்தாக்குதல் நடைபெற்றது. அன்று ஒரு திரு விழா. ஆடல், பாடல், வேடிக்கை விளையாட்டுகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தன. இஸ்லாமிய இளைஞர்கள் மற்றவர்களுடன் உற்சாகமாகக் கலந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில், திடீரென கொன்சாலோவின் சிப்பாய்கள் இஸ்லாமியரைச் சூழ்ந்து அவர்களைச் சிறைப்பிடித்தனர். 

இஸ்லாமிய கவர்னரின் மகள் பாத்திமாவும் அதில் கொண்டு செல்லப்பட்டாள். செய்தியறிந்த இஸ்லாமிய கவர்னர் தன் சிறந்த படைகளை அனுப்பிக் கடுமையாகப் போரிட்டு, பாத்திமாவை மீட்டுக் கொண்டு வந்தார். ஆனால் கொன்சாலோ தம் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் முயன்று, மறுபடியும் பாத்திமாவைச் சிறைபிடித்து, சான்றாரம் என்ற பாதுகாப்பான பட்டணத்துக்குக்குள் கொண்டு சென்று விட்டார்.

பாத்திமா அங்கு தங்கியிருந்த காலத்தில் கொன்சாலோவின் வீரத்தையும் நற்குணங்களையும் கண்டு அவருக்கு வாழ்க்கைத் துணைவி ஆவதென முடிவு செய்து விட்டாள். இஸ்லாம் மதத்தைத் துறந்து, சத்தியத் திருச்சபையில் அவ்ரானா பாத்திமா என்ற பெயருடன் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டாள். கொன்சாலோவுக்கும், பாத்திமாவுக்கும் திருச்சபை முறைப்படி திருமணம் நடை பெற்றது.

சில வருடங்களில் பாத்திமா இறந்தாள். இதனால் கொன்சாலோ மிகவும் துயரமடைந்தார். கொஞ்சக் காலத்தில் அவர் சிஸ்டெர்ஷியன் சந்நியாச மடத்தில் சேர்ந்து பயின்று, குருப்பட்டம் பெற்று, கடவுளுக்குத் தம்மை முழுவதும் கையளித்து விட்டார்.

அவ்ரானா பாத்திமாவின் ஞாபகமாக அவ்ரம் என்று ஒரு சிற்றூர் பெயரிடப்பட்டது. இவ்வூருக்குச் சில மைல்களுக்கு வடக்கே ஒரு சந்நியாச மடம் கட்டப்பட்டு, அதன் முதல் மடாதிபதியாக கொன்சாலோ நியமிக்கப்பட்டார். தன் முந்திய பத்தினியான பாத்திமாவின் சடலத்தில் எஞ்சியதை அந்த மடத்திற்கு எடுத்துக் கொண்டு வந்து, புதுக் கல்லறை அமைத்தார் கொன்சாலோ. சில ஆண்டுகளுக்குப் பின் கொன்சாலோவும் இறந்தார். அவரை பாத்திமா வின் அருகிலேயே அடக்கம் பண்ணினார்கள். இதிலிருந்து அந்த இடம் பாத்திமா என அழைக்கப்படலாயிற்று.

காட்சி பெற்ற சிறுவர் மூவர்

பாத்திமா ஊருக்குத் தெற்கே முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்ஹஸ்திரம் என்ற சிற்றூர்தான் அன்னையின் காட்சி பெற்ற சிறுவர் மூவரும் பிறந்த கிராமம் என்று முன்பே கூறப் பட்ட து.

லூஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா என்பவர்களே அன்னையின் காட்சி பெற்றவர்கள். பிரான்சிஸம், ஜஸிந்தாவும் அண்ணன் தங்கை. இவர்களின் மாமன் மகள்தான் லூஸியா.