இன்றைக்கும் நின்று நிலைக்கும் நான்கு பெரும் அடையாளங்களைக் கடவுள் தன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அளித்துள்ளார்.
1. நற்கருணைப் புதுமைகள் :
அப்பமும், ரசமும் கிறிஸ்துவின் சரீரமாகவும், இரத்தமாகவும் மாறி 1300 ஆண்டுகளாக எவ்வித ரசாயனப் பாதுகாப்பும் இன்றி இயற்கையாகவே நின்று நிலைக்கும் புதுமை லான்சியானோ புதுமை இதுபோன்ற பல புதுமைகள் நற்கருணையில் நடந்துள்ளன.
யோவான் (அரு.) 6:50, 51 மற்றும் 48 - ன் படி அப்ப வடிவில் மட்டும் நற்கருணை உட்கொண் டாலும் நித்திய வாழ்வு உண்டு. மேலும் அது ஆண்டவருடைய சரீரமாக மட்டுமல்ல, அவராகவே இருப்பதால் (அரு. 6:51), நற்கருணை ஆராதிக்கப்பட வேண்டும். நற்கருணை ஆராதனை அவசியமானது.
2. புனிதர்களின் அழியா உடல் :
புனித சவேரியார், ஜான் மேரி வியான்னி, பெர்னதெத் உட்பட ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட கத்தோலிக்கப் புனிதர்களின் உடல்கள் இறந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் ரசாயனப் பாதுகாப்பு ஏதுமின்றி அழியாது இருக்கும் புதுமை கத்தோலிக்கத்துக்கு மட்டுமே உரியது.
3. ஐந்து காய வரம் :
கத்தோலிக்கப் புனிதர்கள் மட்டுமே ஏசுவின் ஐந்து காயங்களை நவீன விஞ்ஞானமே ஆச்சரியப்படும் வகையில் தங்கள் உடலில் தாங்கியுள்ளனர். (உ-ம்) புனித அசிசியார், புனித சியன்னா கத்தரீன், புனித ஜெம்மா, புனித பியோ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர்.
லூர்து அற்புதங்கள் :
நாத்திக மற்றும் பிறமத மருத்துவர்கள் கண் முன்னாலேயே விஞ்ஞான அறிவுக்கு எட்டாத புதுமைகள் நடைபெறும் இடம் பிரான்சின் லூர்து திருத்தலம் ஆகும். ஜெபக் கூட்டங்களில் நாம் கேள்விப்படும் புதுமைகள் போல் அல்லாது உலகின் மிகப்பெரிய மருத்துவர்களும் கண்டு வியக்கும் புதுமைகள் இங்கு நடக்கின்றன. (உ-ம்) மண்டை ஓட்டில் ஓட்டை விழுந்து மூளை வெளியே தெரிந்த ஒரு மனிதன் மாதா தீர்த்தத்தில் குளித்து நற்கருணை நாதரால் முழுதும் குணமாகி வந்தான்! காண்க : சென்னை தி.நகர் நர்மதா பதிப் பகத்தின் உலகப் புகழ்பெற்ற புத்தக வரிசை வெளியீடான ''லூர்து அற்புதங்கள்" என்ற புத்தகம், பக். 244 - 262.
கிறீஸ்து ஏற்படுத்திய திருச்சபைக்கு எதிராகத் தீய சக்திகள் செயல்படும் என்று கிறீஸ்து ஏற்கெனவே எச்சரித்துள்ளார் (மாற்கு 13:22 - 23). பைபிளுக்குத் தவறான விளக்கங்கள் தரப்படும் என்று புனித இராயப்பரும் (2 பேதுரு 1:20; 2 பேதுரு 3:16), புனித பவுலும் 2 திமோ. 4:3-4) எச்சரித்துள்ளார்கள்.
பசாசுக்கும் பைபிள் தெரியும் (மத். 4:6). ஏரோதுக்கும் பைபிள் தெரியும் (மத். 2:1-6). ஆனால் இருவருமே ஏசுவைத் துன்புறுத்தினார்கள். ஏசுவைத் துன்புறுத்துவதும், திருச்சபையைத் துன்புறுத்துவதும் ஒன்றேதான் (அப். பணி. 9:5). எனவே திருச்சபையின் அதிகாரபூர்வப் போதனைகளுக்கு நாம் செவி சாய்க்க வேண்டும் (மத்.18:17). திருச்சபையிலிருந்து ஆடுகளைத் திருடிச் செல்வோர் முதலில் சில கேள்விகளை எழுப்பியே மக்களைக் குழப்ப முயலுவார்கள். அந்த விஷயங்கள் இவைதான்!
நாங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டோம். நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்களா?
இப்படி ஒருவர் கேட்பாரென்றால், நிச்சயமாகச் சொல்லலாம், அவர் இரட்சிக்கப்படவுமில்லை, இரட்சிப்பைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது என்று ஏனெனில் பைபிள் கூறுகிறது, மனிதன் எந்நேரமும் தவற வாய்ப்புள்ளது என்று (1 கொரி. 10:12; 1 பேதுரு. 5:8).
இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்று சொல்பவன் ஏமாற்றப்பட்டவன் என்றும், இயேசுவைப் பழிப்பவன் என்றும் கூறுகிறது (1 யோவான் 1:8, 10).
எனவே நாங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டோம் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்; வேதம் தெரியாதவர்கள்! இரட்சிப்பு என்பது கடைசி மூச்சு வரை போராடிப் பெற வேண்டிய ஒன்று (பிலி. 3:12).