பிலிப்பி நகரமானது மக்கேதோனியா நாட்டில் உரோமையர் குடியேறியிருந்த பாகத்துக்குப் பிரதான பட்டணமாம்.
அர்ச். சின்னப்பர் அந்தப் பட்டணத்தாருக்குச் சுவிசேஷத்தை முதலாவது பிரசங்கித்ததைப்பற்றி அப்போஸ்தலர் நடபடி 16-ம் அதிகாரத்தில் சொல்லியிருக்கிறது.
அந்தப் புதுச் சபையார் எப்போதும் மிகவும் பக்தியுள்ளவர்களுமாய் அர்ச். சின்னப்பர் பேரில் மிகுந்த பற்றுதலுள்ளவர்களுமாய் இருந்ததுந்தவிர, அவர் எங்கே போயிருந்தாலும் அவருடைய செலவுக்கு வேண்டியதை அனுப்புவார்கள்.
அப். நடபடி 27-ம், 28-ம் அதிகாரங்களில் சொல்லியிருக்கிறது போல், அவர் முதல்விசை உரோமாபுரிக்குச் சேவகர்களால் கொண்டு போகப்பட்டபோது அவருக்குச் சம்பவித்ததை அறியவும், அவருடைய செலவுக்குச் சில பணங்களைக் கொண்டுபோய்க் கொடுக்கவும், தங்கள் மேற்றிராணியாராகிய எப்பாப்புரோதீத்து என்பவரை அனுப்பினார்கள்.
அவர் அங்கே சேர்ந்து சிலநாள் அர்ச். சின்னப்பரோடேகூட இருக்கும்போது, கர்த்தர் அவதாரம் 62-ம் வருஷத்தில் அர்ச். சின்னப்பர் தமது சிறையிலிருந்தே இந்த நிருபத்தை எழுதி, அவர் கையில் கொடுத்து அவரைத் திரும்பி அனுப்புவித்தார்.
இந்த நிருபத்தில் அர்ச். சின்னப்பர் மிகுந்த சந்தோஷத்தோடு பிலிப்பியரை வாழ்த்தி, விசுவாசத்திலும் தர்மக் கிரியைகளிலும் அவர்கள் நிலைக் கொண்டவர்களென்று அவர்களைப் புகழ்ந்து, அவர்கள் கிறீஸ்துநாதரைப் பற்றிப் படுகிற துன்பங்களில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, எப்போதும் சுவிசேஷத்துக்குத் தகுதியான நடத்தையும், துன்பங்களில் தைரியமுங் கொண்டிருக்கவேண்டுமென்றும், அந்நியோந்நிய சிநேகத்திலும், சமாதானத்திலும் நிலைபெற்று, தங்களிடத்தில் வருகிற கள்ளப் போதகங்களுக்குக் காது கொடாமல், அஞ்ஞானத்தின் நடுவில் மெய்யான சுடராக நின்று விளங்க வேண்டுமென்றும் புத்திசொல்லுகிறார்.