""ஆண்டவரே, விசுவசிக்கிறேன். என் விசுவாசக் குறையில் எனக்கு உதவியாயிரும்'' (மத்.9:22).
விசுவாசத்தின் அவசியம்
ஞான அப்போஸ்தலிக்க வாழ்வுக்கெல்லாம் அஸ்திவாரமாயிருப்பது விசுவாசம். உண்மையிலும், நாமே ஒரு காரியத்தைப் பற்றி உறுதியான எண்ணம் கொண்டிருந்தால் ஒழிய, பிறர் அதை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்துவது அசாத்தியம். இந்த உறுதியான எண்ணம் உயிருள்ள விசுவாசத்தாலன்றி வேறெங்கிருந்து வரும்? அத்தகைய ஆழ்ந்த உறுதியை ஆத்துமங்களுக்கு அளிக்கக் கூடியவர் யார்?
அறிந்து நேசிக்க வேண்டுமென்ற ஆவலுடன் சேசுநாதரை அண்டிப் போகிறவனே இதைச் செய்யக் கூடியவன்; சேசுநாதரை அந்நியோந்நியமாய்க் கபடின்றி நெருங்கிப் போய், அவரை மேலெழுந்தவாரியாய் அல்ல, முழுவதும் ஆழ்ந்து அறிந்திருப்பவன் மாத்திரமே இதற்குத் தகுதியானவன். இந்தப் பாக்கியமான ஒன்றிப் பைத் தேடி நாடிப் போய், அதில் சேசுவின் திரு இருதயத்தினின்று அதன் சிநேகத்தையும், இரகசியங்களையும் அறிந்து கொண்டவனே இதைச் செய்யத் தகுதியுள்ளவன் ஆவான். எஜமானரே ஒளியாயிருக் கிறார், அந்த ஒளியால் அவன் வாழ வேண்டும். ""நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்; என்னைப் பின்செல்கிறவன் இருளிலே நடவாமல், ஜீவியத்தின் ஒளியைக் கொண்டிருப்பான்'' என்று அவரே சொல்லியிருக்கிறார்.
அவர் மனித அவதாரமான ஒளி, ஏனெனில் அவர் ஒருவரே தேவ ஞானம். சிருஷ்டிகளான நாம் ஞானம் என்று அழைப்பதெல் லாம் - அர்ச்சியசிஷ்டவர்களிடம் இருந்ததுபோல் - அது சேசுக் கிறீஸ்துநாதரான தேவ சூரியனிடமாய்ப் பிரகாசம் அடைந்திருந்தா லொழிய, மடமையும், அறியாமையுமேயாகும். நமது ஞானமெல் லாம் உலக சார்பானது, ஆதலால் நாம் பரிசோதிக்கத் தகாத காரியங்களில் அளவுக்கு மீறி ஆராய்ந்து பார்க்கிறோம். உன்னதமான ஏக ஞானம் நமது விசுவாசத்தின் ஞானம் என்பதை நாம் ஒருக்காலும் மறக்கலாகாது. பரிசுத்தவானைவிட அதிக அறிவுத் தெளிவு உள்ளவன் எவனுமில்லை. அவன் குறைவுபடக்கூடாத ஒளியான சர்வேசுரனிடத்தில் சகலத்தையும் பார்க்கிறான், அறிகிறான்.
அநேகர் தங்கள் கல்வி அறிவைப் பற்றி அகந்தை கொள் கிறார்கள். ஆனால் அவர்களுடைய விசுவாசக் குறைவினால், இக்காலத்தில் மக்கள் சமூகத்திற்கு அவசியமான பரிகார சமாதானங் களைக் கண்டடைய சக்தியற்றவர்களாயிருக்கிறார்கள். இக்காலத்து மக்கள் சமூகம் பாக்கியமாய் வாழ்வதற்காக வழியைக் கண்டடை வதற்கு நமக்கு அவசியமானவர்கள் கல்வியறிஞர்கள் அல்ல, உறுதி யான விசுவாசம் உள்ள ஆத்துமங்களே நமக்கு வேண்டும். உலகப் பிரசித்தி பெற்ற கல்விக் களஞ்சியங்களால் மனிதர்களுக்கு விளைந்த நன்மையை விட அதிக நன்மையைக் கூரேதார்ஸ் (ளீற்re d'புrவி) எனப்படும் அர்ச். மரிய வியான்னி அருளப்பர், சிறிய புஷ்பம் எனப் படும் அர்ச். குழந்தை தெரேசம்மாள் போன்றவர்கள் மனுக்குலத் திற்குச் செய்திருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் சேசுக்கிறீஸ்து நாதர் என்ற தேவ ஒளியை நெருங்கி அடைந்து, அதை ஆச்சரியத் துக்குரிய விதமாய் நாலாபக்கத்திலும் பரப்பினார்கள். சேசுக்கிறீஸ்து நாதராக இல்லாததெல்லாம், தப்பறையும், அறிவீனமும் அபத்தமும், அவற்றால் விளையும் கெடுதிகளுமேயாகும். இது என் மனதில் ஆழமாய் வேரூன்றியிருக்கிறது. ஆதலால் நான் தர்க்கிப்பதில்லை. மூலைக் கல்லும் உன்னத சத்தியமுமான சேசுநாதரை நம்பித் துணிவுடன் அழுத்திச் சொல்கிறேன்: நற்செயல்கள் செய்து, வாழும் முறையில் விசுவாசத்தைக் காட்டுகிற உண்மையான விசுவாசம் நம்மிடம் இல்லாததே பெருங்குறை என்று அழுத்தமாய்ச் சொல்கிறேன். அப்போஸ்தலன் தனது விசுவாசத்தை அதிகரித்துக் கொள்வது போதாது, விசுவாச உயிர்கொண்டு வாழ வேண்டும். அதன் வழியாய் நாம் சர்வேசுரனைக் கண்டு அறியக் கூடும். சேசுக்கிறீஸ்துநாதர்தாமே அவரை நமக்கு வெளிப்படுத்துகிறார்: ""சுதனும், சுதன் யாருக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ, அவனும் தவிர, பிதாவை ஒருவனும் அறியான்'' (மத்.11:27).
சேசுநாதருடைய திரு இருதயத்தோடு நெருங்கின உறவை அடைய வேண்டுமானால், இத்தகைய விசுவாசம் நமக்கு இன்றி யமையாதது. இந்தத் தெய்வீக இருதயத்தின் வாசற்படி வரை மட்டும் வந்து நின்று கொண்டு, சுவிசேஷ சேசுநாதரையும், அவரது அன்பின் பெருமையையும் அறியாமல் இருப்பவர்கள் அநேகர்; பரிசுத்தத்திலும் பரிசுத்தமான அந்தப் பரம சந்நிதானத்தைத் திறந்து வைக்கிற உயிருள்ள விசுவாசம் இல்லாத குறைதான் இதற்கு ஏக காரணம். நமது பாவங்கள் லோஞ்ஜினுஸின் ஈட்டியைப் போல், ஆராதனைக் குரிய திருவிலாவைக் குத்தித் திறந்துவிட்டிருக்கும் என்றால், இப்போது அந்தத் திருக்காயத்தின் ஆழத்தை விசுவாசத்தால் கண்டுணர்ந்து பரிகாரம் செய்வோமாக! அன்பின் அரசரது அப்போஸ் தலர்களே, நாம் உலகத்தை ஜெயித்து மனந்திருப்பி, அவரது திருப் பாதத்தில் கொண்டுவந்து சேர்த்து, அதற்குப் பெருமையும் பாக்கிய மும் உண்டாகப் பிரயாசைப்படுவோமாக! ""அவருக்கு ஊழியம் செய்வது, அரசாள்வதாகும்'' என்று அர்ச். சின்னப்பர் சொல்லியிருக் கிறார். நானோ, அரசாள்வது என்று மாத்திரமல்ல, ""சந்தோஷமாய் அரசாள்வது'' என்று சேர்த்துச் சொல்கிறேன்.
ஆனால் உலகத்தை ஜெயிப்பதற்குமுன், நாம் நமது எஜமானரின் இருதயத்தையும், அதன் பொக்கிஷங்களையும் கைக் கொள்ள வேண்டும். நாம் எந்த அளவுக்கு விசுவசித்து, விசுவாசத்தால் வாழ்கிறோமோ, அந்த அளவுக்குத்தான் இது சாத்தியப்படுமேயன்றி வேறல்ல. அந்தப் பாதையில் நாம் முன்னேறிச் செல்கிற அளவுக்கு விசுவாசம் நமது வாழ்வைப் புதுப்பித்துக் கொண்டு போகும். நமது துன்பங்களையும், அநுதின வாழ்வின் அல்லல்களையும், தேவ ஒளியில் பார்ப்போமானால், அவை எவ்வளவோ வித்தியாசமாய்த் தோன்றும். அப்போது வாழ்வு ஒரு விடுகதையைப் போல் இராது. சகலமும் அவசியமென்றும், தேவ நியமனத்தின்படி நடைபெறுகிற தென்றும் வெட்டவெளிச்சமாய்த் தெரியும். இப்பரதேசம் எவ்வளவு கசப்பாயிருந்தாலும், மாறாத சமாதானம் அனுபவிப்போம்.
நாம் ஜெபத்தால் சேசுக்கிறீஸ்துநாதரின் சாயலை எவ்வளவுக்கு அடைந்துகொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவர் தேவ வாக்கியத் தையும், வாழ்வின் பரம இரகசியத்தையும் நமக்கு வெளிப்படுத்து வார். சரியாய் ஜெபம் செய்யத் தெரிந்தவன், - அவன் குழந்தையா யிருந்தாலும், பாமரனாயிருந்தாலும் - கல்விமான்களை விட தேவ பராமரிப்பின் விஷயங்களை அதிக நன்றாய் அறிந்து கொள்வான் என்பது நிச்சயம். மின்சாரம் என்பது என்னவென்று அவனுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் சர்வேசுரனைப் பற்றியும் ஆத்துமங் களைப் பற்றியும் அவனுக்கு ஆழ்ந்த அறிவு இருக்கும். இது எவ்வளவு மகத்தான அறிவென்று யார் சொல்ல முடியும்? லூர்து நகரில் ஓர் ஏழைக் குடியானவன், அன்பின் அரசரைப் பற்றியும், பெத்தானியா நண்பரைப் பற்றியும் நான் செய்த ஒரு பிரசங்கத்தைக் குறித்து ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தான். அது என் காதில் விழுந்தது. ஒரு பெரிய வேதசாஸ்திர ஞானியும் கூட அத்தகைய உறுதியும், ஆழ்ந்த அறிவும் காட்டியதை நான் ஒருக்காலும் பார்த்ததில்லை. ஆயினும் அவன் ஓர் ஏழைக் குடியானவன். கரடுமுரடான சப்பாத்தும், மட்டித் துணிச் சட்டையும் அணிந்துகொண்டு நின்றான். நம் ஆண்டவரைப் பற்றி வெகுநேரம் பிரசங்கம் செய்தான். அவனிடம் விளங்கின வேத சத்திய அறிவும், விஷயத்தைக் கண்டுணர்ந்த விதமும், புகழ்பெற்ற போதகன் என்று அவனைச் சொல்லக் கூடியதாயிருந்தன. எனக்குண்டான பிரமிப்பு கொஞ்சநஞ்சமல்ல. அவனது நேர்த்தியான சிந்தனைகளை எழுதிக் கொடுக்கும்படியாகக் கேட்டேன். அவன் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆயினும், அவனோடு எனக்குப் பழக்க மானதினிமித்தம் இருவரும் ஒருவருக்கொருவர் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு நாள் சொன்னேன். அடிக்கடி நீண்ட கடிதங்கள் எனக்கு எழுத வேண்டுமென்றும், அன்பின் அரசரைப் பற்றியும், குடும்பத்து நண்பரைப் பற்றியும் அல்லாமல் வேறெதைப் பற்றியும் எழுத வேண்டாமென்றும் அவனை வெகுவாய் மன்றாடினேன். அவன் அவ்வாறே செய்வான் என்று எனக்கு உறுதிமொழி கூறும்படி அவனை வற்புறுத்தினபோது, அவன் சிரித்துக் கொண்டு, ""என்ன சுவாமி, நான் உங்களுக்கு எழுதவா? எனக்கு எழுத வாசிக்கத் தெரியாதே'' என்று சொன்னான். இதை நான் நம்பவில்லையென்று கண்டு அவன் சொன்னதாவது: ""சுவாமி, நான் இந்த ஞானமெல்லாம் எங்கிருந்து கற்றுக் கொண் டேன் என்பதுதான் உங்கள் பிரமிப்புக்குக் காரணம். இதோ இக்கணமே சொல்கிறேன்: நீங்கள் அநுதினம் பூசை செய்கிறீர்கள். நான் அநுதினம் திவ்விய நற்கருணை உட்கொள்கிறேன். ஆதலால் சுவாமி, நம் இருவருக்கும் ஒரே சூரியன், ஒரே எஜமானர் சேசுநாதர்!''
"நம் எல்லோருக்கும் ஒரே சூரியன், ஒரே எஜமானர்'' என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். எழுத்து வாசனை இல்லாத அந்த ஏழைக் குடியானவன் தேவ அன்பின் மகத்தான பரம இரகசியங் களைக் கண்டுணர்ந்திருக்க, படித்துத் தேர்ந்த நாம் சேசுவின் திரு இருதயத்தை ஊடுருவிப் பார்ப்பதில்லை என்றால், அது சூரியனின் தவறல்ல. எஜமானரோடு நெருங்கிப் பழகாத நமது குறைதான். அவரை உத்தம விதமாய் அறிபவர்கள் ஆழ்ந்த யோசனையும், கல்விப் பயிற்சியும் உள்ளவர்களல்ல. அவரை உத்தமமாய் அறிபவர்கள் அவரது உண்மையான சிநேகிதர்கள், அந்தரங்கத்தில் சேசுநாதர் தாமே அவர்களிடம் பேசி, புத்தகங்களில் காணக் கிடைக்காத அரிய விஷயங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்.
நற்கருணைப் பேழையின் அரசர் தமது இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தும்படி அவரைத் தூண்டுவதற்கு, நாம் எவ்விதம் ஜெபிக்க வேண்டும்? நாம் சிநேகிப்பதுபோல் ஜெபிக்க வேண்டும்; பிள்ளை தன் தாயிடம் பேசுவது போல் களங்கமின்றி பாசத்தோடு பேச வேண்டும். சேசுநாதர் தாயினும் மிக்க அன்பும், தயாளமும், உருக்கமும், பாசமும் நிறைந்தவர். ஓர் அப்போஸ்தலனின் இருதயத்தை நிரப்புகிற பிரகாசத்தின் இரகசியம் ஜெபம் என்பதை மறக்க வேண்டாம். ஆத்துமமானது உண்மையையும், அன்பையும் தேடி உன்னதத்தில் தானாக உயர்வதே உத்தம ஜெபம். சிநேகத்தைப் போலவே ஜெபமும் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு, எல்லோரும் எளிதில் செய்யக்கூடியது. இதனாலேயே நாம் சிநேகிப்பதுபோல் ஜெபிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
ஜெபத்தாலும், உயிருள்ள விசுவாசத்தாலும் நாம் சர்வேசுரனை அண்டிப் போகும்போது, நமது அர்ச்சிப்புக்கு அவசியமான வேறொரு வெளிச்சம் நமக்கு உண்டாகிறது. அதுதான் தன்னை அறிதல் எனப் படுகிறது. ஆனால் நமது புண்ணியங்களை அறிவதால் ஆங்காரம் கொள்ளாமலும், நமது குற்றங்களை அறிவதால், அதைரியத்துக்கு இடங்கொடாமலும் இருப்பதற்கு, நாம் அவற்றை நமது எஜமான ரின் கண்களைக் கொண்டு பார்க்க வேண்டும். அந்தக் கண்கள் தவறாத சத்தியத்தையும் ஒளியையும் எடுத்துக் காட்டுகின்றன. சர்வேசுரனிட மிருந்து பெற்ற நன்கொடைகளை, அவரது அதிமிக தோத்திரத்திற் காக உபயோகித்து, நற்பயனளிக்கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சேசுநாதர் ஒருவரே நமக்கு இந்த உத்தம பாடத்தைக் கற்றுக் கொடுக்கக் கூடியவர். பலவீனர்களாகவும், திடனற்றுத் தப்பித்து ஓடத் தயாராகவும் இருக்கிற நமக்கு அதைரியம் உண்டாகாமல், நமது குற்றங்குறைகளைச் சுட்டிக் காட்டக் கூடியவர் அவர் ஒருவரே.
அப்போஸ்தலரின் அலுவலைச் செய்வதற்கு, விசுவாச வாழ்வு அதிமுக்கியமானது. ஏனெனில் அது இன்றி கிண்கிணீரென்கிற கைத் தாளம் போலவும், அல்லது வனாந்தரத்தின் குரலொலி போலவும் தான் இருப்போம். நமது மேலான அழைத்தலைச் சரியாய்க் கண்டுணர்ந்து, அதை நன்கு மதித்து, ஆயிரக்கணக்கான தடைகளைப் பொருட்படுத்தாது, அதைப் பின்சென்று நடப்பதற்கு அவசியமான தளராத ஊக்கமும், முயற்சியும், உயிருள்ள தத்தளிப்பற்ற விசுவாசத் தால் மாத்திரமே நாம் அடைய முடியும்.
விசுவாச வாழ்வு வாழ்வோமாக. அப்போது உடல்நலம், பணம், செல்வாக்கு இருந்தால்தான் நான் வேலை செய்ய முடியும் என்று ஒருக்காலும் சொல்ல மாட்டோம். இத்தகைய மனிதத் தன்மையான சாக்குப்போக்குகள் தேவ நோக்கங்களைப் பெரிதும் கறைப்படுத்துகின்றன. சேசுநாதர் உலகத்தை ஜெயிக்க சித்தம் கொண்டபோது, இப்படி நினைக்கவில்லை. அவர் எப்போதும் தாழ்மையான ஏழை அறிவீனரைக் கொண்டே தமது அலுவலைச் செய்தார்; பலமற்ற கருவிகளைக் கொண்டே அவர் உலகத்தை ஜெயித்தார். அர்ச். சின்னப்பர் இதைக் குறித்துச் சொல்கிறதாவது: ""சர்வேசுரன் உலகத்தில் இழிவானவைகளையும், நீசமானவைகளை யும், இல்லாதவைகளையும் தெரிந்து கொண்டார்... சிலுவையில் அறையுண்ட கிறீஸ்துநாதரைப் பிரசங்கிப்பதால்... உள்ளவைகளை அழித்து, இவ்வுலகத்தின் ஞானத்தைப் பைத்தியமாக்க... இவ்விதம் செய்யலானார்'' (1கொரி. 1:18-28). விசுவாச வெளிச்சத்தில் இதை ஆராய்ந்து பார்த்தால், இதுவே ஒவ்வொரு அப்போஸ்தலனின் வேலைக்கும் அடிப்படையாயிருக்க வேண்டிய தெளிவான சத்தியம் என்பது புரியும். சக்தியற்ற தாழ்மையான கருவிகள் கடவுளை மகிமைப் படுத்தும்போது, அவர்கள் தங்களால் ஆனது என்று சொல்லிக்கொள்ள ஒன்றும் இருக்காது. நடந்த வேலையும் மனிதரால் ஆனதல்ல, அது மெய்யாகவே சர்வேசுரனுடைய வேலை என்று தெளிவாய் வெளிப் படையாகும். அப்படியே உதாரணமாக, ஆத்துமங்களை மனந் திருப்புவது, இரக்கமும், சர்வ வல்லபமும் பொருந்திய சர்வேசுரனால் மாத்திரம் ஆகக் கூடிய அற்புதச் செயல். ஆயினும் சுபாவத்துக்கு மேலான காரியங்களைப் பற்றி நாம் அறியாததால் தேவ வரப் பிரசாதத்தால் உண்டாகிய அரிய மனமாற்றங்கள், பெயர்பெற்ற ஒரு போதகரின் திறமையால் ஆனதென்று பல சமயங்களில் எண்ணிக் கொள்கிறோம். வெளிச் சாதனங்களில் அதிமுக்கியமாய் ஊன்றி நிற்பது பெரும் தவறாகும். ஏனெனில், இந்த வேலையில் அவற் றிற்கும் ஒரு பங்கு சந்தேகமற உண்டு என்றாலும், சர்வேசுரன் நமக் கென்று வைத்திருக்கிற வல்லமை, அதாவது இருதயத்தை இளக்குகிற வல்லபம், அந்த வெளிச் சாதனங்களுக்கு உண்டென்று ஒருக்காலும் எண்ணவும், சொல்லவும் தகாது.
மகத்தான மனந்திரும்புதலின் செயல்கள் பெரும்பாலும், நமக்குத் தெரியாமல் மறைவாயிருக்கிற ஒரு புண்ணிய ஆத்துமத்தின் ஜெபங்களாலும், தாராளமுள்ள பரித்தியாகத்தாலும், பாசமுள்ள பலிகளாலும் ஆனவை. இப்போது சொல்லப் போகிற சம்பவம் இதைத் தெளிவாய் எடுத்துக் காட்டும்.
கடின பாவியான ஒருவன் மரணப்படுக்கையில் மனந்திரும்பி புதுநன்மை வாங்கினான். அவனது மனைவியும், மூன்று மகன்களும் அச்சமயம்தான் முதல் தடவையாக நற்கருணை உட்கொண்டார்கள். அந்த இல்லம் முழுவதும் புத்துயிர் கொண்டது. தங்கள் மீது இரக்கம் புரிந்த சேசுவின் திரு இருதயத்துக்கு அவர்கள் எல்லோரும் கண்களில் நீர் ததும்ப ஒன்றுசேர்ந்து நன்றி செலுத்தினார்கள். வயதில் முதிர்ந் திருந்த வேலைக்காரி இதையெல்லாம் கண்டு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி, வியாதிக்காரனின் படுக்கையின் கிட்ட நெருங்கி, ""எஜமானே, பரலோக ஆனந்தம் பரவியிருக்கிற இவ்வேளையில், உமது சமையற் காரக் கிழவி உம்மை வாழ்த்தும்படி அனுமதி கொடும்'' என்று சொன் னாள். அவளது எஜமான், உள்ளம் உருகி அவளது கரங்களைப் பிடித்துக் குலுக்கினபின், அவள் தொடர்ந்து சொன்னதாவது: ""இருபத்தைந்து வருடங்களுக்கு அதிகமாய் நான் உமக்கு ஊழியம் செய்திருக்கிறேன். இந்தக் காலமெல்லாம் நான் பணிவுடன் என் கடமைகளைச் செய்து வந்ததுமன்றி, திரு இருதய அப்போஸ்தலி என்ற முறையில் ஜெப தபம் செய்து, அநுதினம் நற்கருணை அருந்தி, ஒரேயொரு வரம் ஆண்டவரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நமது திவ்ய ஆண்டவர் இப்போது இந்த வீட்டில் வெற்றிவீரராயிருப்பது போல, வெற்றி பெறுமுன், நான் மரித்துப் பரலோகத்துக்குப் போகக் கூடாதென்ற வரம்தான். திரு இருதயம் நான் கேட்ட வரத்தை அளித் திருக்கிறது. அந்த அற்புத வரம் எனக்குக் கிடைத்து விட்டது. இப்போது நான் சமாதானமாய் மரிக்கலாம். என் அலுவல் முடிந்து போயிற்று.'' அப்போஸ்தல அக்கினியால் எரிந்த வேலைக்காரி சொன்ன பிரியாவிடை எவ்வளவு உருக்கம் நிறைந்தது என்போம்!
நமக்குத் தப்பாமல் நேரிடும் தடைகளுக்கெல்லாம் நிச்சயத் தீர்வு நம் விசுவாசம் என்று இப்போது கண்டுணர்கிறோம் அல்லவா? கணக்கற்ற தடைகள் குறுக்கிடும் என்பது நிச்சயம். அவைகளை விலக்குவது எவ்வாறு? விசுவாசத்தால்தான். ""உலகத்தை ஜெயித் தேன்'' என்று சொல்லியிருப்பவரை நம்புங்கள். அப்போஸ்தலராகிய நீங்கள், உங்களை அனுப்பினவர்மீது எவ்வளவு விசுவாசமாயிருக் கிறீர்களோ, அவ்வளவுக்கு அவர் வழியாகவும், அவரோடும் உலகத்தை ஜெயிப்பீர்கள்.
பல அப்போஸ்தலர்கள் தங்கள் முயற்சி வெற்றி பெற்றதென்று காணும்போது மட்டும் விசுவசிப்பார்கள். இது மதிப்புள்ள விசுவாச மல்ல. நாம் தோல்வி அடைந்தோம் என்று எண்ணுகிற சமயத்தில் தான் நமது விசுவாசம் தளர்ச்சி கொள்ளாமல் உறுதியாயிருக்க வேண்டும். எண்ணுகிற சமயம் என்றேன்; ஏனெனில் நமக்குத் தோல்வியாகத் தோன்றுவது, உண்மையில் நன்மையாயிருக்குமென்று அநேகமாய்ச் சொல்லலாம். நமக்கு நன்மையாயிராவிடினும், சேசுநாதருக்குப் பலனுள்ளதா யிருக்கும். உங்கள் கண்களை மறைத்துக்கொண்டிருக்கிற திரை விலகி, அவரது திரு இருதயத்தின் சர்வ வல்லமையை நீங்கள் அறிந்து, அதை உங்கள் அந்தரங்க வாழ்வில் உணரும்படி இந்நாட்களில் அவரை நோக்கி மன்றாடுங்கள். அவரையே, அவரை மட்டும் குறிப்பாய் உற்றுநோக்கி நடந்து செல்லுங்கள். அவருடைய இராச்சியம் வருக!