பரிசுத்த கன்னிமாமரியின் மீது பக்தி கொண்டிருப்பது, சந்தேகமற இரட்சணியத்தின் உன்னதமான வழிகளில் ஒன்றும், ஒருவன் தெரிந்து கொள்ளப்பட்டவனாயிருப் பதன் மிக நிச்சயமான அடையாளங்களில் ஒன்றுமாக இருக்கிறது. மரியாயின் பக்தியுள்ள ஊழியன் ஒரு நாளும் அழிந்து போகமாட்டான் என்று அர்ச். அல்போன்ஸ் லிகோரியாரோடு சேர்ந்து திருச்சபையின் பரிசுத்த வேதபாரகர்கள் அனைவருமே ஒருவாய்ப்பட கூறுகிறார்கள்.
மரணம் வரையிலும் இந்த பக்தியில் பிரமாணிக் கத்தோடு நிலைத்திருப்பது மிக முக்கியமானதாகும்.
ஆராதனைக்குரிய தமத்திரித்துவத்தால் திவ்ய கன்னிகையின்மீது பொழியப்பட்ட சலுகைகளுக்கு மகிமையாக அனுதினமும் மூன்று அருள்நிறை மந்திரங்கள் சொல்வதை விட அதிக எளிதானதும், எல்லோ ராலும் ஏற்கப்படக் கூடியதுமான ஒரு வழக்கம் இருக்க முடியுமா?
முதன்முதலில் மூன்று அருள்நிறை மந்திரங்களை ஜெபித்தவர்களில் ஒருவரும், மற்றவர்களும் அதைக் கடைப்பிடிக்கத் தூண்டியவருமாக இருந்தவர் அர்ச். பதுவை அந்தோணியார் ஆவார். மரியாயின் மாசற்ற கன்னிமையை மகிமைப்படுத்துவதும், இவ்வுலகின் ஆபத்துக்களுக்கு மத்தியில் மனதிலும், இருதயத்திலும் சரீரத்திலும் உத்தமமான பரிசுத்ததனத்தைக் காத்துக் கொள்வதும்தான் அவரது இந்த பக்தியின் விசே நோக்கமாக இருந்தது.
பிற்பாடு போர்ட் மோரீஸின் அர்ச். லெனார்ட் என்ற புகழ்பெற்ற வேதபோதகர், இரவிலும் பகலிலும் சகல சாவான பாவங்களையும் தவிர்க்கும் வரத்தைப் பெறும்படி அமலோற்பவ மாமரிக்குத் தோத்திரமாக காலையிலும் மாலையிலும் மூன்று அருள் நிறை மந்திரங்களை ஜெபித்து வந்தார். மேலும் இந்த வழக்கத்தைப் பிரமாணிக்கத்தோடு அனுசரிப்பவர்கள் ஒரு விசேஷமான முறையில் நித்திய ஜீவியத்தையும் பெற்றுக் கொள்வார்கள் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த இரண்டு பிரான்சிஸ்கன் புனிதர்களையும் பின் பற்றி, அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் இந்தப் பக்தியுள்ள வழக்கத்தைக் கைக்கொண்டு, அதற்குத் தமது மிக ஆர்வமுள்ள, வல்லமை மிக்க ஆதரவைத் தந்தார். இதைப் பயன்படுத்த அவர் பரிந்துரைத்ததோடு, இந்த நல்ல வழக்கத்தைக் கைக்கொள்ளாதவர்களுக்கு அதை ஓர் அபராதமாகவும் விதித்தார்.
குறிப்பாகப் பெற்றோரும், ஆன்ம குருக்களும் தங்கள் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலை யிலும் மூன்று அருள் நிறை மந்திரங்களைச் சொல்வதில் கண்ணுங் கருத்துமாக இருக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதில் வெகு கவனமாக இருக்கும்படி இந்தப் பரிசுத்த வேதபாரகர் வலியுறுத்தினார். போர்ட் மோரீ ஸின் அர்ச். லெனார்டைப் போல பக்தியுள்ளவர் களுக்கும், பாவிகளுக்கும், இளையவர்களுக்கும், முதியவர்களுக்குமாக அனைவருக்கும் இந்த வழக்கத்தை ஆர்வத்தோடு பரிந்துரைத்து வந்தார்.
கடவுளுக்கு அர்ப்பணிக்கப் பட்டவர்களும் கூட இந்த வழக்கத்தினால் மிக விலையேறப் பெற்றதும், புகழ்ச்சிக்குரியதுமான கனியைப் பெற்றுக் கொள் வார்கள். தேவமாதாவுக்கு இந்த வழக்கம் எவ்வளவு ஏற்புடையதாக இருக்கிறது என்பதற்கும், ஒரு நாள் கூட விடாமல் மூன்று அருள் நிறை மந்திரங்களைச் சொல்லி வருபவர்களுக்கு அவர்கள் வாழும்போதும், மரண சமயத்திலும் எத்தகைய விசேமான வரங்களை அவை கொண்டு வருகின்றன என்பதற்கும் சாட்சியாக எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
இந்த வழக்கம் (13-ம் நூற்றாண்டின்) அர்ச். மெட்டில்டாவுக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் அவள் பிரமாணிக்கத்தோடு இதைச் சொல்லி வந்தால் நன்மரணமும் அவளுக்கு வாக்களிக்கப்பட்டது.
மேலும் அர்ச். ஜெர்த்ருத்தின் வெளிப்பாடுகளில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: இந்தப் புனிதை மங்கள வார்த்தை திருநாளின் சாமப்புகழின் போது அருள்நிறை மந்திரத்தைப் பாடிக் கொண் டிருந்த போது, திடீரென பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்து ஆகிய மூவரிடமிருந்தும் மூன்று பிரகாசமான தீப் பிழம்புகள் புறப்பட்டு பரிசுத்த கன்னிகையின் இருத யத்தை ஊடுருவியதை அவள் கண்டாள். அதன் பின், “பிதாவின் வல்லமைக்கும், சுதனின் ஞானத்திற்கும், இஸ்பிரீத்துசாந்துவின் தயவுமிக்க கனிவுக்கும் பிறகு, மரியாயின் வல்லமையையும், ஞானத்தையும், தயவுமிக்க கனிவையும் வேறு எதனாலும் நெருங்கவும் முடியாது” என்ற வார்த்தைகளை அவள் கேட்டாள்.
பாப்பரசர் 15-ஆம் ஆசீர்வாதப்பர் மூன்று அருள் நிறை மந்திரங்களின் பக்த சபையை ஒரு முதன்மை பக்த சபையின் அந்தஸ்துக்கு உயர்த்தி, மிக மேலான பேறுபலன்களைத் தந்ததோடு, அதற்கு ஒப்பான மற்ற சபைகளைத் தன்னோடு இணைத்துக் கொள்ளவும், தனது சொந்தப் பேறுபலன்களை அவற்றிற்கு வழங்கவும் அதற்கு அதிகாரம் தந்தார்.
பயிற்சி: மரியாயின் மூன்று விசே வரப்பிரசாத சலுகைகளுக்குத் தோத்திரமாகக் காலையிலும், மாலை யிலும் மூன்று அருள்நிறை மந்திரங்களைச் சொல்வது டன், அவற்றின் முடிவில் காலையில், “ஓ என் மாதாவே, இந்த நாளின்போது என்னைச் சாவான பாவத்திலிருந்து காத்தருளும்” என்றும் மாலையில் “ஓ என் மாதாவே, இந்த இரவின் போது என்னைச் சாவான பாவத்திலிருந்து காத்தருளும்” என்றும் ஜெபிக்க வேண்டும்.
(இதைச் செபிக்கும் ஒவ்வொரு முறைக்கும் 13-ஆம் சிங்கராயர் 200 நாட்பலன் வழங்கியுள்ளார். மூன்று அருள்நிறை மந்திர முதன்மை பக்த சபைக்கு 15-ஆம் ஆசீர்வாதப்பர் 300 நாட்பலனும், அர்ச். பத்தாம் பத்திநாதர் அப்போஸ்தலிக்க ஆசீர்வாதமும் வழங்கியுள்ளார்.)