சலேத் இரகசியத்திற்குப் பின் மெலானி எழுதியுள்ள சில முக்கியமான செய்திகளும் நமக்குக் கிடைத்துள்ளன: அவைகளும் பயன்படும் என்பதால் இங்கே குறிப்பிடுகிறோம்:
"அதன் பின் பரிசுத்த கன்னிகை ஒரு புதிய துறவற மடத்திற்குரிய சட்ட ஒழுங்குகளை பிரஞ்சு மொழியில் எனக்குக் கூறினார்கள். அதைக் கூறிய பின் மேலும் பின்வருவனவற்றைச் சொன்னார்கள் :
அவர்கள் மனந்திரும்பினால் கற்களும் பாறைகளும் கோதுமையாக மாறும். உருளைக் கிழங்குகளும் பூமியில் விதைத்திருக்க காணப்படும். "என் பிள்ளைகளே, நீங்கள் உங்கள் ஜெபங்களைச் சரியான முறையில் சொல் கிறீர்களா?" என்று மாதா கேட்டார்கள்.
'ஓ! இல்லை அம்மணி , அவ்வளவாகச் சொல்வ தில்லை' என்று நாங்கள் இருவரும் கூறினோம்.
"பிள்ளைகளே, நீங்கள் காலையிலும் மாலை யிலும் அவற்றைச் சொல்ல வேண்டும். நீங்கள் கூடுதல் செய்யக் கூடாவிட்டால் ஒரு பரலோக மந்திரமும் ஒரு அருள்நிறை மந்திரமும் சொல்லுங்கள். அதிகமாய்ச் செய்ய நேரம் கிடைக்கும் போது அதிகமாய்ச் செய்யுங்கள்.
ஒரு சில மூதாட்டிகள் தான் பூசைக்குப் போகி றார்கள். கோடையில் மற்றவர்கள் ஞாயிறு முழுவதும் வேலை செய்கிறார்கள். குளிர் காலத்தில் அவர்களுக்கு என்ன செய்ய வென்று தெரியாத போது வேதத்தைக் கேலி செய்வதற்குத்தான் பூசைக்குப் போகிறார்கள். தபசு காலத்தில் நாய்களைப் போல் இறைச்சிக் கடைக்குப் போகிறார்கள்.
"குழந்தைகளே, கெட்டுப்போன கோதுமையைப் பார்த்திருக்கிறீர்களா?' என்று அவர்கள் கேட்க, நாங்கள் "இல்லை அம்மணி'' என்றோம்.
அப்போது அவர்கள் மாக்ஸிமினிடம் திரும்பி : "நீ பிள்ளாய், லெ கோயின் என்ற இடத்தில் உன் தந்தையுடன் அதைப் பார்த்திருக்க வேண்டுமே! அந்த விவசாயி உன் தந்தையிடம் : ''என் கோதுமை எப்படி கெட்டுப் போயிற்று என்று வந்து பாரும்" என்று சொல்ல, நீங்கள் போய்ப் பார்த்தீர்களே. உன் தந்தை இரண்டு மூன்று கதிர் களைத் தன் கையில் எடுத்துக் கசக்கிய போது அவை தூசியாகி விட்டன. பின் நீங்கள் திரும்பி வரும்போது, கார்ப்ஸ் ஊருக்கு வந்து சேர அரை மணி நேரமே இருந்த போது உன் தந்தை ஒரு உரொட்டித் துண்டை உனக்குக் கொடுத்து : இதை வாங்கு. கிடைக்கும் போது நீ சாப்பிட்டுக் கொள். ஏனென்றால் அடுத்த வருடம், இப்படியே கோதுமை கெட்டு விட்டால் யார் எதை சாப்பிடுவார்கள்? என்று சொன்னாரே என்றார்கள். அதற்கு மாக்ஸிமின்: 'அது உண்மைதான் அம்மணி. அது எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை' என்று சொன்னான்.* மிகப் பரிசுத்த கன்னிகை தன் உரையாடலை பிரஞ்ச் மொழியில் முடித்தார்கள். ''ஆகவே என் குழந்தைகளே! நீங்கள் இதை என் எல்லாப் பிள்ளைகளுக்கும் அறிவிப்பீர்கள்.
மெலானி தன் விவரிப்பைத் தொடருகிறாள் : ''மிக அழகிய அம்மாது நீரோடையைக் கடந்து இரண்டு எட்டு வைத்த பின் அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற எங்கள் பக்கம் திரும்பாமலே (காரணம் அவர்களுடைய பிரகாசத்தாலும் அதை விட அதிகமாக என்னை மகிழ்ச்சியுறச் செய்த அவர்களின் அன்பாலும் கவரப்பட் டோம். அந்த அன்பு என் இருதயத்தை உருக்குவது போலிருந்தது) அவர்கள் மீண்டும் எங்களிடம் ; "ஆகவே என் குழந்தைகளே, நீங்கள் இதை என் எல்லா மக்களுக்கும் அறிவிப்பீர்கள்' என்றார்கள்.
பின், அவர்கள் நான் எங்கள் பசுக்களைப் பார்க்கச் சென்ற இடத்திற்கு ஏறிச் சென்றார்கள். அவர்களின் பாதங்கள் புற்களின் நுனியை மட்டுமே தொட்டன. அவற்றை அவை வளைக்கவுமில்லை. அந்த மேட்டில் சேர்ந்தவுடன் அவர்கள் நின்றார்கள். நான் உடனே அவர்களின் முன்பாகச் சென்றேன். அவர்கள் எந்த வழியாய்ப் போவார்களென்று பார்ப்பதற்காக - அவர்களை கிட்டத்தில் வைத்துப் பார்ப்பதற்காக. ஏனென்றால் எனக்கு எல்லாம் முடிந்து விட்டது. நான் என் பசுக்களையும் நான் வேலை செய்த எஜமான்களையும் மறந்தேன். நான் என் மாதாவுடன், நிபந்தனையின்றி எக்காலத்திற்கும் என்னை இணைத்துக் கொண்டேன். ஆம். அவர்களை விட்டு ஒருபோதும் பிரிய நான் விரும்பவில்லை. அவர்களுக்கே ஊழியஞ் செய்யும் நோக்கம் தவிர வேறு நோக்கமின்றி அதற்கு முழுவதும் தயாராக அவர்களைப் பின் தொடர்ந்தேன்.
என் மாதாவின் முன்னிலையில், என் "மோட் சத்தை" நான் மறந்து விட்டதாக உணர்ந்தேன், அவர்களுக்கு எல்லா வகையிலும் ஊழியம் செய்வதைப் போல் வேறு எதைப் பற்றியும் நான் நினைக்கவில்லை. அவர்கள் எதைக் கேட்டிருந்தாலும் அதை நான் செய்திருப்பேன் என உணர்ந்தேன். ஏனென்றால் அவர் களிடம் பெரும் சக்தி இருப்பதாக எனக்குத் தெரிந்தது. அவர்கள் என்னை ஒரு கனிவுள்ள அன்பால் நோக்கி னார்கள். அது என்னை அவர்களிடம் இழுத்தது நான் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் கரங்களில் விழுந் திருப்பேன். அப்படிச் செய்ய அவர்கள் எனக்கு நேரம் கொடுக்கவில்லை. அவர்கள் புலப்படாத வகையில் நான்கு அல்லது கூடுதலான அடி உயரத்திற்கு பூமியிலிருந்து மேலே எழும்பினார்கள். அப்படி ஆகாயத்தில் ஒரு கணப்பொழுது நின்று விட்டு என் அழகிய மாதா மேலே மோட்சத்தை நோக்கிப் பார்த்தார்கள். பின் பூமியை வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பார்த்தார்கள். பின் என்னை எவ்வளவோ மென்மையுள்ள, எவ்வளவோ கருணை யுள்ள, எவ்வளவோ நல்ல பார்வையால் பார்த் தார்கள். அதனால் நான் அவர்கள் என்னைத் தன் உள்ளுக்குள் இழுப்பதாக உணர்ந்தேன். என் இருத யமும் அவர்களின் இருதயத்திற்குத் திறப்பது போலிருந்தது.
என் இருதயம் இனிமையான மகிழ்ச்சியில் இளகிப் போக, என் நல்ல அன்னையின் அழகிய முகம் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்தது. அசைந்த அந்த ஒளி, பிரகாசம் அதிகரித்தது போல் காணப்பட்டது. அதாவது மிகப் பரிசுத்த கன்னிகையைச் சுற்றி, நான் அவர்களைப் பார்க்க முடியாதபடி செய்வதற்கு, அது உறைந்தது போலிருந்தது.
அவ்வாறு ஒளி அவர்களின் திருச் சரீரத்தின் இடத்தை எடுத்துக் கொண்டது. அவை மறைந்து கொண்டிருந்தன. என் கண் முன்பாக. அதைவிட, என் மாதாவின் சரீரம் ஒளியில் உருகிப் போனது போல் தோன்றியது அப்படியே அந்த ஒளியுருண்டை வலப்புறமாய் மெல்ல எழும்பியது. அவர்கள் மேலே எழுந்த போது ஒளியின் அளவு குறைந்ததா என்று என்னால் கூற முடியவில்லை. அல்லது ஏற்பட்ட இடைவெளியின் தூரம் ஒளி குறைந்ததாகக் காட்டியதா என்று தெரியவில்லை . எனக்குத் தெரிந்தது இதுதான் : நீண்ட நேரமாக நான் என் தலையை உயர்த்தி அந்த ஒளியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த ஒளி போன பிறகும் - அது தூரமாய்ப் போகப்போக , உருவத்தில் சிறிதாகி கடைசியாக கண்ணுக்கு மறைந்த பிறகும் பின் நான் என் கண்களை விண்வெளியிலிருந்து அகற்றி என்னைச் சுற்றிலும் பார்க்கிறேன்.
மாக்ஸிமின் என்னைப் பார்த்துக் கொண்டே நிற்கிறான். நான் அவனிடம் : "மாக்ஸி, அது என் அப்பாவின் நல்ல ஆண்டவராக அல்லது பரிசுத்த கன்னிகையாக அல்லது யாரும் பெரிய அர்ச்சிஷ்டவளாக இருக்க வேண்டும்' என்கிறேன்.
மாக்ஸிமின் கைகளை விரித்து உதறி : "ஓ! எனக்கு மட்டும் தெரிந்திருந்தால்!'' என்கிறான்.
செப்டம்பர் 19-ம் தேதி மாலையில் நாங்கள் வழக்கத்திற்கு சற்று முன்னதாக திரும்பிச் சென்றோம். என் எஜமானருடைய பண்ணையை அடைந்ததும் நான் பசுக்களைக் கட்டுவதிலும், தொழுவத்தைச் சுத்தம் செய்வதிலும் ஈடுபட்டேன். அந்த வேலை முடியுமுன் என் எஜமானி கண்ணீர் விட்டபடியே என்னிடம் வந்து :
"ஏன் பிள்ளாய் நீ என்னிடம் வந்து மலையில் நடந்ததைச் சொல்லவில்லை''? என்றாள்.
மாக்ஸிமினுடைய எஜமானர் வேலை முடித்து இன்னமும் திரும்பாததால், அவன் என் எஜமானர் வீட்டிற்கு வந்து அவர்களிடம் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எல்லாம் கூறியிருக்கிறான்.
என் எஜமானியிடம் நான் சொன்னேன்: " என் வேலையை முடித்து விட்டு வந்து சொல்லலாம் என்றிருந்தேன்" என்று. சற்றுப் பின் நான் என் எஜமானியின் வீட்டிற்குப் போனேன்.
"நீ என்ன கண்டாயென்று எனக்குச் சொல் : தே புரூயி இடையர் (அதுதான் பியெர் செல்மே என்ற மாக்ஸிமின் எஜமானுடைய பட்டப் பெயர்) என்னிடம் எல்லாவற்றையும் சொன்னார்.
நான் சம்பவத்தை சொல்லத் தொடங்கினேன். பாதி சொல்லிக் கொண்டிருந்த போது என் எஜமானர் வயலிலிருந்து திரும்பி வந்தார். நான் சொன்ன நம் இனிய மாதாவின் முறைப்பாடுகளையும் எச்சரிப்புகளையும் கேட்டு கண்ணீர் வடித்த என் எஜமானி தன் கணவனைப் பார்த்து : "ஆ! நீங்கள் நாளை (ஞாயிறு) கோதுமையை அறுவடை செய்யப் போகிறீர்களா? கவனமாயிருக்க வேண்டும். இந்தக் குழந்தைக்கும் பியெர் செல்மேவின் இடைச் சிறுவனுக்கும் இன்று நடந்தது என்ன என்பதைக் கேளுங்கள்'' என்று கூறி பின் என்னைப் பார்த்து : "நீ சொன்னதையெல்லாம் திரும்பவும் சொல்" என்றாள்.
நான் மறுபடியும் தொடக்கத்திலிருந்து சொன்னேன். சொல்லி முடிந்ததும் என் எஜமானர் : "இது பரிசுத்த கன்னிகை அல்லது வேறு ஒரு பெரிய அர்ச்சிஷ்டவர்தான். நல்ல ஆண்டவரின் சார்பாக வந்திருக்கிறார்கள். ஆனால் இது நம் ஆண்டவரே நேரில் வந்த மாதிரிதான். இந்தப் புனிதர் சொன்னதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும், இதை நீ அவர்களின் எல்லா மக்களுக்கும் எப்படிச் சொல்லப் போகிறாய்?" என்றார்.
நான் சொன்னேன்: " நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள். அதன்படி நான் செய் கிறேன்.” என்றேன்.
அவர் தன் தாய், மனைவி, சகோதரர் ஆகியோ ரிடம் : "இதைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும்" என்றார், பின் எல்லாரும் அவரவர் காரியத்தைக் கவனிக்கச் சென்றார்கள்.
இரவு சாப்பிட்டபின் மாக்ஸிமினும் அவனுடைய எஜமானர்களும் என் எஜமானரிடம் வந்து மாக்ஸிமின் அவர்களிடம் கூறியதை மீண்டும் கூறி என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
அவர்கள் இப்படிச் சொன்னார்கள் : எங்களுக்கு அது ஆண்டவரால் அனுப்பப்பட்ட பரிசுத்த கன்னிகை தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் பேசிய வார்த்தைகள் அதை நிச்சயிக்கின்றன. இதை அவர்களின் எல்லா மக்களுக்கும் அறிவிக்க அவர்கள் கூறியுள்ளார்கள். அப்படிச் செய்ய இக்குழந்தைகள் உலகமெங்கும் பயணம் செய்து நல்ல கடவுளின் கட்டளைகளை எல்லாரும் அனுசரிக்க வேண்டும். அல்லாவிடில் பெரிய ஆபத்துக்கள் நமக்கு நேரிடக்கூடும் என்று சொல்ல வேண்டுமோ?"
பின்னும் சற்று மவுனத்திற்குப் பிறகு என் எஜமானர் மாக்ஸிமினிடமும் என்னிடமும்,
"நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நாளைக் காலையில் நேரத்தோடு எழுந்து நீங்கள் இருவரும் பங்குக் குருவைச் சந்தித்து நீங்கள் கண்டதையும் கேட்டதையும் எல்லாம் அவரிடம் சொல்ல வேண்டும். இதெல்லாம் நடந்த முறையை கவனமாக எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதென்ன என்று அவர் சொல்லுவார்'' என்று கூறினார்.
செப்டம்பர் 20-ம் தேதி, காட்சி நடந்த மறுநாள் நான் அதிகாலையில் மாக்ஸிமினுடன் புறப்பட்டேன். சுவாமி வீட்டை அடைந்ததும் நான் கதவைத் தட்டி னேன். வீட்டின் வேலைக்காரி கதவைத் திறந்து எங்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்டாள். நான் அவளிடம் பிரெஞ்சு மொழியில் (நான் ஒருபோதும் பிரெஞ்சு மொழி பேசியதில்லை ) :
"பெரென் சுவாமியிடம் நாங்கள் பேச வேண்டும்" என்றேன்.
''அவரிடம் என்ன பேசவேண்டும்?' என்றாள்.
"நாங்கள் அவரிடம், நேற்று நாங்கள் பெய்சே மலையில் பசுக்களை மேய்க்கச் சென்றோம். மதியம் சாப்பிட்ட பின் ... என்று இப்படி அங்கே நடந்த காரியங்களையும் மாதாவின் பல வார்த்தைகளையும் கூறினேன். அப்போது கோவில் மணி அடித்தது. சலேத் நகர் பங்குக் குரு சங். பெரென் நாங்கள் அவளிடம் கூறியதைக் கேட்டு தன் அறைக் கதவைத் திறந்தார். கண்ணீருடன் காணப்பட்டார். தன் மார்பில் அறைந்து கொண்டு சொன்னார்.''
"பிள்ளைகளே நாம் தொலைந்தோம். கடவுள் நம்மைத் தண்டிப்பார். ஓ! நல்லவரான சர்வேசுரா!! பிள்ளை களே, உங்களுக்கு காட்சி தந்தது பரிசுத்த கன்னிகைதான்' என்று கூறிவிட்டு அவர் பூசை வைக்கச் சென்று விட்டார். மாக்ஸிமினும் அந்த வேலைக்காரியும் நானும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டு நின்றோம், பின் மாக்ஸிமின் என்னிடம் "நான் கார்ப்ஸ் ஊருக்கு என் அப்பாவிடம் போகிறேன்'' என்று கூற நாங்கள் பிரிந்தோம்.
சங். பெரென் சுவாமியைப் பார்த்த பின் உடனே திரும்பிவிடும்படி என் எஜமானர் சொல்லாததால் நான் பூசைக்கு இருந்துவிட்டுப் போவதில் தவறில்லை என்று எண்ணி பூசைக்குப் போனேன். ஆகவே நான் கோவிலில் போய் இருந்தேன். பூசை தொடங்கியது. சுவிசேஷம் வாசித்த பின் சங். பெரென் சுவாமி சபை பக்கமாகத் திரும்பி நேற்று மாலையில் நடந்த காட்சியைப் பற்றி தன் பங்கு மக்களுக்கு விவரிக்க முயலுகிறார். ஞாயிற்றுக் கிழமைகளில் வேலையை நிறுத்தும்படி கூறுகிறார். அழுதபடி பேசிய அவருடைய குரல் உடைந்து காணப் பட்டது. சபை முழுவதும் மிக உணர்வடைந்தனர். பூசை முடிந்த பின் என் எஜமானரிடம் திரும்பிச் சென்றேன். திரு. பெய்ட்டார்டு - இன்று வரை சலேத் நகரின் அதிபர் - காட்சியைப் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்க வந்தார். நான் உண்மையைப் பேசுகிறேன் என்று நிச்சயித்தபின் அவர் காட்சி உண்மைதான் என்ற உறுதி யுடன் சென்றார்.
சகல அர்ச்சிஷ்டவர்களின் திருநாள் வரையிலும் என் எஜமானரின் ஊழியத்தில் இருந்தேன். அதன் பின் எங்கள் கார்ப்ஸ் பட்டணத்திலுள்ள "தேவ பராமரிப்பு கன்னியர் சபையினருடன் தங்கியிருந்தேன்.''