அதிகாரம் 01
1 நீதிபதிகளுடைய காலத்தில், ஒரு நீதிபதியினுடைய நாட்களிலே நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. அதைக்கண்டு யூதா நாட்டுப் பெத்லகேம் நகர மனிதன் ஒருவன் தன் மனைவியோடும் இரண்டு புதல்வர்களோடும் மோவாப் நாட்டுக்குப் பிழைக்கச் சென்றான்.
2 அவன் பெயர் எலிமெலேக். அவன் மனைவியின் பெயர் நோயேமி. அவர்களுடைய இரு புதல்வர்களில் ஒருவன் பெயர் மகலோன், மற்றொருவன் பெயர் கேளியோன். அவர்கள் யூதா நாட்டுப் பெத்லகேம் என்னும் எப்ராத்தா ஊரிலிருந்து மோவாப் நாட்டிற்குப் போய் அங்கே குடியிருந்தனர்.
3 நோயேமியுடைய கணவன் எலிமெலேக் இறந்தான். அவளோ தன் புதல்வர்களோடு வாழ்ந்து வந்தாள்.
4 அவர்கள் ஒர்பா, ரூத் என்ற இரு மோவாபிய பெண்களை மணந்து பத்து ஆண்டுகள் அங்கே வாழ்ந்தனர்.
5 பின்னர் மகலேன், கேளியோன் இருவரும் இறக்க, அவள் கணவனையும் இரு மக்களையும் இழந்தவளாய் விடப்பட்டாள்.
6 ஆண்டவர் தம் மக்களைக் கடைக்கண் நோக்கி உயிர் வாழ அவர்களுக்கு உணவு அளித்தார் என்று கேள்விப்பட்டு, அவள் மோவாப் நாட்டிலிருந்து தன் இரு மருமக்களோடு புறப்பட்டுத் தன் சொந்த ஊர் போக விழைந்தாள்.
7 ஆகையால் தன் இரு மருமக்களோடும் தான் பிழைக்க வந்த இடத்தை விட்டு வெளியேறி, யூதா நாட்டிற்குத் திரும்பினாள்.
8 அப்போது அவள் தன் மருமக்களை நோக்கி, "நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டிற்குப் போங்கள். இறந்து போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் இரக்கம் காட்டி வந்தது போல் ஆண்டவரும் உங்களுக்கு இரக்கம் காட்டுவாராக.
9 நீங்கள் மணக்கவிருக்கும் கணவர்களுடைய வீட்டில் ஆண்டவர் உங்கள் இருவருக்கும் அமைதி அளிப்பாராக" என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள். அவர்களோ உரத்த குரலில் அழ ஆரம்பித்தனர்.
10 உம்முடைய இனத்தாரிடம் நாங்களும் உம்மோடு வருவோம்" என்று சொன்னார்கள்.
11 அதற்கு நோயேமி, "என் மக்களே, நீங்கள் திரும்பிப் போங்கள். என்னோடு ஏன் வருகிறீர்கள்? இனியும் எனக்குப் பிள்ளைப் பேறு உண்டாகும் என்றும், நான் உங்களுக்குக் கணவர்களைக் கொடுப்பேன் என்றும் நீங்கள் நம்புகிறீர்களா?
12 திரும்பிப் போங்கள், என் மக்களே, போய்விடுங்கள். நானோ வயது சென்றவள். இனித் திருமணம் முடிக்கவும் என்னால் முடியாது. நான் இன்று கருவுற்றுப் பிள்ளைகளைப் பெறக்கூடுமாயினும்,
13 அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டுமே! அதற்குள் நீங்களும் கிழவிகளாகி விடுவீர்களே! வேண்டாம், என் மக்களே, உங்களை கெஞ்சுகிறேன்; என்னோடு வராதீர்கள். உங்களைப்பற்றி நான் துயரப்படுகிறேன். கடவுளின் கை எனக்கு எதிராயிருக்கிறது" என்று சொன்னாள்.
14 அப்பொழுது அவர்கள் மறுமுறையும் ஓலமிட்டு அழத் தொடங்கினர். ஒர்பா மாமியை முத்தமிட்டுத் தன் வீடு திரும்பினாள். ஆனால் ரூத் தன் மாமியை விட்டுப் பிரியவில்லை.
15 நோயேமி அவளைப் பார்த்து, "இதோ! உன் உறவினள் தன் இனத்தாரிடமும் தேவர்களிடமும் திரும்பிப் போய் விட்டாளே; நீயும் அவளோடு போ" என்றாள்.
16 அதற்கு ரூத், "நான் உம்மை விட்டுப் போகும் படி இன்னும் என்னைத் தூண்ட வேண்டாம். நீர் எங்குப் போனாலும் நானும் வருவேன். நீர் எங்குத் தங்குவீரோ அங்கே நானும் தங்குவேன். உங்கள் இனமே என் இனம்; உங்கள் கடவுளே எனக்கும் கடவுள்.
17 நீர் எந்தப் பூமியில் இறந்து புதைக்கப்படுவீரோ அதே பூமியில் இறந்து புதைக்கப்படுவேன். சாவு ஒன்றே உம்மையும் என்னையும் பிரிக்கும். இல்லாவிடில் ஆண்டவர் எனக்குத் தக்க தண்டனை அளிப்பாராக" என்றாள்.
18 தன்னோடு வர ரூத் ஒரே மனதாய் தீர்மானித்திருக்கக் கண்ட நோயேமி, அதன்பின் அவளைத் தடை பண்ணவுமில்லை, திரும்பிப் போகும்படி சொல்லவுமில்லை.
19 இப்படியே இருவரும் நடந்து போய்ப் பெத்லகேமை அடைந்தனர். அவர்கள் நகருக்கு வந்த செய்தி விரைவில் எங்கும் பரவிற்று. "இவள் அந்த நோயேமிதானோ?" என்று பெண்கள் பேசிக் கொண்டனர்.
20 அவளோ, "நீங்கள் என்னை நோயேமி, அதாவது அழகி என்று அழைக்காது, மாரா, அதாவது கசப்பி என்று கூப்பிடுங்கள்; ஏனெனில் எல்லாம் வல்லவர் மிகுந்த கசப்புத் தன்மையால் என்னை நிறைந்திருக்கிறார்.
21 நிறைவுற்றவளாய்ப் போனேன்; ஆண்டவர் என்னை வெறுமையாகத் திரும்பி வரச் செய்தார். ஆண்டவர் சிறுமைப் படுத்திய, எல்லாம் வல்லவர் துன்பப்படுத்திய என்னை நோயேமி என்று ஏன் அழைக்கிறீர்கள்?" என்றாள்.
22 இப்படி நோயேமி தன் மோவாபிய மருமகளோடு தான் பிழைக்கப் போயிருந்த நாட்டை விட்டுப் புறப்பட்டுப் பெத்லகேமுக்குத் திரும்பி வந்தாள். அது வாற்கோதுமை அறுவடைக் காலம்.
அதிகாரம் 02
1 நோயேமியுடைய கணவனான எலிமெலேக்கின் உறவினனும் செல்வாக்கு உள்ளவனும் பெருத்த செல்வந்தனுமான போசு என்ற ஒருவன் இருந்தான்.
2 மோவாபிய பெண் ரூத் தன் மாமியை நோக்கி, "நீர் அனுமதி கொடுத்தால் நான் வயல்வெளிக்குப் போய் எந்தக் குடியானவனுடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமோ, அவன் பிறகே சென்று, அறுவடை செய்கிறவர்களுடைய கைக்குத் தப்பின கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருவேன்" என்றாள். அதற்கு நோயேமி, "என் மகளே, போய் வா" என்றாள்.
3 ரூத் அவ்வாறே சென்று அறுவடை செய்கிறவர்கள் பிறகே கதிர்களைப் பொறுக்கி வந்தாள். அந்த வயலோ எலிமெலேக்கின் உறவினனான போசுக்குச் சொந்தமானது.
4 அந்நேரத்தில் அவனே பெத்லகேமிலிருந்து வந்து அறுவடை செய்தவர்களை நோக்கி, "ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்றான். அதற்கு வேலைக்காரர், "ஆண்டவர் உம்மை ஆசீர்வதிப்பாராக" என்றனர்.
5 மேலும், போசு அறுவடை செய்தவர்களை மேற்பார்த்து வந்த ஓர் இளைஞனை நோக்கி, "யாருடைய பெண் இவள்?" என்று வினவினான்.
6 அதற்கு அவன், "இவள், மோவாப் நாட்டிலிருந்து நோயேமியோடு வந்த மோவாபிய பெண்.
7 அறுவடை செய்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தும் கதிர்களைப் பொறுக்கிக் கொள்ள அனுமதி கேட்டாள். காலை முதல் இதுவரை வயலிலேயே நிற்கிறாள். சிறிது நேரத்திற்குக் கூட அவள் வீட்டுக்குப் போகவில்லை" என்று சொன்னான்.
8 இப்பொழுது போசு ரூத்தைப் பார்த்து, "மகளே, கேள். கதிர் பொறுக்குவதற்காக நீ வேறு வயலுக்குப் போகாமலும், இவ்விடத்தை விட்டு வேறு எங்கும் செல்லாமலும் இங்கேயே என் ஊழியக்காரிகளோடு தங்கியிரு.
9 அவர்கள் அறுவடை செய்யும்போது நீ அவர்கள் பிறகே போ; ஒருவரும் உனக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று என் ஆட்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல, உனக்குத் தாகம் எடுத்தால் தண்ணீர்க் குடங்கள் அருகே சென்று வேலைக்காரர் குடிக்கிற தண்ணீரையே நீயும் குடிக்கலாம்" என்றான்.
10 அப்பொழுது அவள் தரையில் முகம் குப்புற விழுந்து வாழ்த்தி, அவனை நோக்கி, "தங்கள் கண்களில் எனக்குத் தயை கிடைத்ததும், அன்னிய பெண்ணாகிய என்னைத் தாங்கள் கவனித்துக் கொள்ளும்படி மனம் வைத்ததும் ஏனோ?" என்றாள்.
11 அதற்குப் போசு, "உன் கணவன் இறந்த பிறகு நீ உன் மாமிக்குச் செய்தவை அனைத்தும், நீ உன் பெற்றொரையும் பிறந்த நாட்டையும் விட்டு விட்டு, முன்பின் அறியாத மக்களிடம் வந்ததும் எனக்குத் தெரிவிக்கப்பட்டன.
12 உன் செயலுக்கு ஏற்ற வெகுமதியைக் கடவுள் உனக்கு அளிப்பாராக! நீ இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை நாடி அவரது திருவடியே தஞ்சம் எனத் தேடி வந்தாயே; அவரால் முழுக் கைம்மாறு பெறுவாயாக!" என்றான்.
13 அதற்கு அவள், "ஐயா, உம் வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் நான் சமமற்றவளாயினும், நீர் அடியாளைத் தேற்றி என் இதயத்தோடு பேசியதால் உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததே" என்றாள்.
14 மறுமுறையும் போசு அவளைப்பார்த்து, "சாப்பிட நேரமாகும் போது நீ இங்கே வந்து அப்பம் சாப்பிடு. காடியில் உன் அப்பத் துண்டுகளைத் தோய்த்துக் கொள்" என்றான். அவள் அப்படியே அறுவடை செய்கிறவர்களின் அருகே அமர்ந்து, வறுத்த கோதுமையை வயிறார உண்டு, எஞ்சியதை வைத்துக் கொண்டாள்.
15 மேலும், வழக்கப்படி அவள் கதிர்களைப் பொறுக்கச் சென்றபோது, போசு தன் வேலைக்காரர்களை நோக்கி, "அவள் உங்களோடு அறுக்க வந்தாலும் நீங்கள் அவளைத் தடுக்க வேண்டாம்.
16 உங்கள் அரிகளிலே வேண்டுமென்றே சிலவற்றைச் சிந்தி நிலத்தில் போட்டுவிடுங்கள். அவள் கூச்சமின்றிப் பொறுக்கிக் கொள்ளட்டும். அவள் பொறுக்கும் போது அவளை அதட்டாதீர்கள்" என்று பணித்தான்.
17 அப்படியே அவள் மாலை வரை கதிர்களைப் பொறுக்கி, பொறுக்கினதைத் தடிகொண்டு அடித்துத் தூற்றி ஏறக்குறைய மூன்று மரக்கால் கொண்ட ஒரு ஏப்பி அளவு வாற்கோதுமை இருக்கக் கண்டாள்.
18 அவள் அதைச் சுமந்து கொண்டு நகருக்குத் திரும்பி வந்து தன் மாமிக்குக் காண்பித்தாள்; அத்தோடு, தான் வயிறார உண்டபின் மீதியாக வைத்திருந்ததையும் அவளுக்குக் கொடுத்தாள்.
19 அப்பொழுது அவளுடைய மாமி, "இன்று நீ எங்கே கதிர் பொறுக்கினாய்? எங்கு வேலை செய்தாய்? உன்மேல் தயவு காட்டினவன் ஆசிர்வதிக்கப்பட்டவனே" என்று சொன்னாள். அவளோ, தான் யாரிடத்தில் வேலை செய்தாள் என்றும், அம்மனிதனுடைய பெயர் போசு என்றும் அவளுக்கு சொன்னாள்.
20 அதற்கு நோயேமி, "ஆண்டவரால் அவன் ஆசீர்வதிக்கப்படக்கடவான்! ஏனெனில் அவன் உயிரோடிருக்கிறவர்களுக்குச் செய்து வந்த உதவியை இறந்தோர்க்கும் செய்து வருகிறான்" எனப் பதில் கூறினாள். மீண்டும் மருமகளைப் பார்த்து, "அம்மனிதன் நம் உறவினன்தான்" என்றாள். அப்பொழுது ரூத், "வெள்ளாண்மை முழுவதையும் அறுத்து முடியும் வரை
21 அவர் தம் வேலைக்காரிகளோடு என்னை இருக்கச் சொல்லியிருக்கிறார்" என்றாள்.
22 அதற்கு மாமி, "மகளே, வேறொரு வயலுக்குப் போனால் மனிதர் உன்னைத் தடுக்கலாம். ஆகையால் நீ இவனுடைய வேலைக்காரிகளோடு அறுக்கப் போவது மேலானது" என்றாள்.
23 அப்படியே அவள் போசுடைய வேலைக்காரிகளுடன் தங்கி வாற்கோதுமையும் தானியங்களும் களஞ்சியத்தில் சேரும் வரை அவர்களோடு அறுவடை செய்து வந்தாள்.
அதிகாரம் 03
1 ரூத் தன் மாமியிடம் திரும்பி வந்தபின் அவளை நோக்கி, "என் மகளே, நீ நலமாய் இருக்கும்படி நான் பார்த்துக் கொள்வேன்; உனக்கு நன்மை உண்டாகும்படி முயல்வேன்.
2 நீ யாருடைய வேலைக்காரிகளோடு வயலில் இருந்தாயோ, அந்தப் போசு நம் உறவினன் தான். இன்றிரவு அவன் களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
3 ஆகையால் நீ குளித்து எண்ணெய் பூசி நல்ல துணிகளை உடுத்திக்கொண்டு அக்களத்திற்குப் போ. அவன் உண்டு குடித்து முடிக்கும் வரை நீ அவன் கண்ணில் படாதபடி இருக்க வேண்டும்.
4 அவன் படுக்க ச்செல்லும்போது அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்துக்கொள். பின்னர் நீ அங்குச் சென்று அவன் கால்களை மூடியிருக்கும் போர்வையை ஒதுக்கி, நீயும் அங்கேயே படுத்துக்கொள். பிறகு நீ செய்ய வேண்டியது என்ன என்று அவனே உனக்குச் சொல்வான்" என்றாள்.
5 அதற்கு அவள், "நீர் எனக்குச் சொன்னபடி எல்லாம் செய்வேன்" என்று சொன்னாள்.
6 பின் களத்திற்குப் போய் மாமி தனக்குக் கட்டளையிட்டபடி எல்லாம் செய்தாள்.
7 போசு உண்டு குடித்து மகிழ்ந்த பின் ஒரு கதிர்க் கட்டருகில் படுக்கச் சென்றான். இவளோ மறைவில் வந்து அவன் கால்மாட்டுப் போர்வையை ஒதுக்கிப் படுத்துக் கொண்டாள்.
8 நள்ளிரவில் அவன் திடுக்குற்று எழுந்து தன் கால்மாட்டில் ஒரு பெண் படுத்திருக்கக் கண்டு அஞ்சினான்.
9 நீ யார்? என்று அவன் அவளைக் கேட்டான். அதற்கு அவள், "நான் உம் அடியாளாகிய ரூத். நீர் என் உறவினராய் இருப்பதால் அடியாள் மேல் உமது போர்வையைப் போர்த்தும்" எனப் பதில் கூறினாள்.
10 அவனோ, "மகளே, நீ ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவளே. ஏனெனில், ஏழை அல்லது பணக்கார இளைஞனை நீ தேடிப்போகவில்லை. எனவே, உன் முந்தின இரக்கச் செயலை விட இப்போது நீ செய்ததே மேலானது.
11 ஆகையால் நீ அஞ்சவேண்டாம். மேலும், நீ என்னிடம் கேட்பதெல்லாம் நான் உனக்குச் செய்வேன். ஏனெனில் என் நகரில் வாழ்கிற மக்கள் எல்லாரும் நீ புண்ணியவதி என்று அறிந்திருக்கிறார்கள்.
12 நான் உனக்கு உறவினன் என்பது மெய்தான். எனினும், என்னிலும் நெருங்கின உறவினன் வேறு ஒருவன் இருக்கிறான்.
13 இன்றிரவு அமைதியாய் இரு. நாளை அவன் உறவின் முறையைப் பற்றி உன்னை மணந்து கொள்ளச் சம்மதிப்பானானால் நல்லது. அவன் உன்னை மணந்து கொள்ள மனம் இசையாவிடில் யாதொரு சந்தேகமுமின்றி நான் உன்னை மணந்து கௌ;வதாக ஆண்டவர்மேல் ஆணையிடுகிறேன். ஆகவே, விடியும் வரை தூங்கு" என்று சொன்னான்.
14 எனவே, விடியும் வரை அவள் அவன் கால்மாட்டில் படுத்திருந்தாள். பின் ஒருவரை ஒருவர் அவர்கள் அடையாளம் அறிந்து கொள்ளும் முன்பே அவள் படுக்கையினின்று எழுந்தாள். போசு அவளை நோக்கி, "நீ இங்கே வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்க வேண்டாம்" என்றான்.
15 மீண்டும் அவளை நோக்கி, "நீ போர்த்தியிருக்கிற போர்வையை விரித்து இரு கைகளிலும் பிடித்துக்கொள்" என்றான். அவள் விரித்துப் பிடிக்க அவன் அதில் ஆறு மரக்கால் வாற் கோதுமையை அளந்து போட்டு அவள் தலையில் தூக்கி வைத்தான். அவள் அதை எடுத்துக்கொண்டு நகரில் நுழைந்து, தன் மாமியிடம் வந்தாள்.
16 அவள், "மகளே, என்ன நடந்தது?" என்று கேட்டாள். அதற்கு மருமகள் அம்மனிதன் தனக்குச் செய்ததை எல்லாம் அவளுக்கு விரிவாய் எடுத்துரைத்தாள்.
17 ரூத் மறுமுறையும், "அவர் என்னைப் பார்த்து; 'உன் மாமியிடம் நீ வெறுங்கையுடன் போகவேண்டாம்' என்று சொல்லி, ஆறு மரக்கால் வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார்" என்று சொன்னாள்.
18 அப்போது நோயேமி, "காரியம் எப்படி முடியுமோ என்று தெரியும் வரை பொறுத்திரு, மகளே; ஏனெனில் அவன் சொன்னதை நிறைவேற்றாமல் விடமாட்டான்" என்றாள்.
அதிகாரம் 04
1 இதற்கிடையில் போசு நகர வாயிலை அடைந்து அங்கே அமர்ந்திருந்தான். அப்பொழுது அவன் முன்பு சொல்லியிருந்த அந்த உறவினன் அவ்வழியே வரக் கண்டு, அவன் பெயரைச் சொல்லி அழைத்து, "இங்கு வந்து சற்று அமரும்" என்று கூறினான். அவனும் வந்து அமர்ந்தான்.
2 பின்னர் போசு நகரின் மூப்பருள் பத்துப்பேரை அழைத்து வந்து, "இங்கே அமருங்கள்" என்று அவர்களுக்குச் சொன்னான்.
3 அவர்களும் உட்கார்ந்த பின் போசு அந்த உறவினனை நோக்கி, "மோவாப் நாட்டினின்று திரும்பி வந்த நோயேமி, நம் சகோதரனான எலிமெலேக்குடைய வயலை விற்கப் போகிறாள்.
4 இங்கு அமர்ந்திருப்போர் அனைவர் முன்னிலையிலும், மக்களுள் முதியோர் முன்னிலையிலும் நீ இதை அறியும்படி சொல்ல விரும்பினேன். உறவின் முறைப்படி நீ அதை மீட்டுக்கொள்ள விரும்பின், மீட்டுக்கொள்; உனக்கு விருப்பம் இல்லை என்றால் நான் என்ன செய்ய வெண்டும் என்று கூறிவிடு. முதலாவது நீ, இரண்டாவது நான். ஆக உன்னையும் என்னையும் தவிர வேறு எந்த உறவினனும் இல்லை" என்று சொன்னான். "நான் நிலத்தை மீட்டுக்கொள்வேன்" என்று அவன் பதில் கூறினான்.
5 போசு அவனை நோக்கி. "நீ அப்பெண்ணிடமிருந்து அந்நிலத்தை வாங்குகிற போது இறந்து போன அவனுடைய மனைவியான மோவாபிய பெண் ரூத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு இறந்த உன் உறவினனுக்கு நீ வாரிசு அளித்து அவன் பெயர் நிலைநிற்கச் செய்ய வேண்டும்" என்றான்.
6 அப்போது அவன், "என் குடும்பத்தில் நான் எனக்கு ஒரு வாரிசை எழுப்ப வேண்டும். எனவே எனக்குரிய உரிமையை நான் விட்டுக் கொடுக்கிறேன். அதை மனமார விட்டுக் கொடுப்பதாக இதோ வாக்களிக்கிறேன். எனவே, எனக்குள்ள உரிமையை நீரே பயன்படுத்திக்கொள்ளும்" என்று மறுமொழி கூறினான்.
7 இஸ்ராயேலில் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கப்படி உறவினர்களில் ஒருவன் மற்றொருவன் கையில் தன் உரிமை முழுவதையும் கொடுக்கும் பொழுது, அதை உறுதிப்படுத்துவதற்கு அடையாளமாக அவன் தன் மிதியடியைக் கழற்றி மற்றவனுக்குக் கொடுப்பான். இதுவே இஸ்ராயேலில் உரிமை மாற்றத்தின் அடையாளமாய் இருந்து வந்தது.
8 எனவே, போசு தன் உறவினனைப் பார்த்து, "உன் மிதியடியைச் கழற்று" என உரைத்தான். அவனும் உடனே தன் காலில் கிடந்த மிதியடியைக் கழற்றிப் போட்டான்.
9 அப்பொழுது போசு மக்களுள் மூப்பரையும் எல்லா மக்களையும் பார்த்து, "எலிமெலேக், கேளியோன், மகலோன் என்பவர்களுக்குச் சொந்தமாயிருந்த எல்லாவற்றையும் நோயேமியின் கையிலிருந்து நான் பெற்றுக் கொண்டேன் என்பதற்கு நீங்களே சாட்சி.
10 மேலும், இறந்தவனுடைய பெயர் அவன் குடும்பத்தினின்றும், சகோதரர் மக்களிடமிருந்தும் அற்றுப் போகாமல் தன் கோத்திரத்திலேயே அவன் பெயர் நிலை நிற்கச் செய்யும் பொருட்டு மகலோன் மனைவியாகிய மோவாபிய ரூத்தை நான் மணந்து கொள்வதற்கும் நீங்களே சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றான்.
11 வாயிலில் இருந்த எல்லா மக்களும் மக்களுள் மூப்பரும் அவனை நோக்கி, "நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம்; உன் வீட்டிற்கு வரப்போகிற இப்பெண்ணை ஆண்டவர் இஸ்ராயேல் வீட்டைக் கட்டி எழுப்பிய ராக்கேலைப் போலவும் லீயாளைப் போலவும் ஆசீர்வதிப்பாராக. இவள் எப்ராத்தா ஊரிலே புண்ணியத்தின் மாதிரியாய் இருந்து பெத்லகேமில் புகழ் பெற்றிருப்பாளாக!
12 இவ்விளம் பெண் மூலம் ஆண்டவர் உனக்கு அருளவிருக்கிற மகப்பேற்றினால் உன் வீடு, தாமார் யூதாவுக்குப் பெற்றெடுத்த பாரேசுடைய வீட்டைப்போல் ஆகக்கடவது" என்றனர்.
13 ஆகையால், போசு ரூத்தை மணந்து தன் மனைவியாக அவளை ஏற்றுக்கொண்டான். அவர்கள் கூடி வாழ்ந்த போது அவள் கருவுற்று ஒரு மகளைப் பெறும்படி ஆண்டவர் அவள் மேல் அருள் கூர்ந்தார்.
14 அப்பொழுது பெண்கள் நோயேமியை நோக்கி, "ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! ஏனெனில் அவர் உன் குடும்பத்தில் வாரிசு அற்றுப் போகவிடாமல், அவன் பெயர் இஸ்ராயேலில் புகழடையச் செய்துள்ளார்.
15 அத்தோடு உன் மனத்தைத் தேற்றி முதிர்ந்த வயதில் உன்னைக் காப்பாற்ற ஒருவனை உனக்குத் தந்தருளினார். உனக்கு அன்பு செய்யும் மருமகளுக்குப் பிள்ளை பிறந்திருப்பது உனக்கு ஏழு புதல்வர்கள் இருப்பதிலும் சிறந்தது அன்றோ?" என்றனர்.
16 நோயேமி அப்பிள்ளையை எடுத்துத் தன்மடியிலே வைத்துக்கொண்டு அதன் செவிலித் தாயாகக் குழந்தையை இடுப்பிலே தூக்கி வளர்த்து வந்தாள்.
17 அண்டை வீட்டுப் பெண்களோ, 'நோயேமிக்கு ஒரு மகன் பிறந்தான்' என்று அவளை வாழ்த்தி, அவனுக்கு ஒபேது என்று பெயர் இட்டனர். அவன்தான் தாவீதின் தந்தையாகிய ஈசாயியுடைய தந்தை.
18 பாரேசுடைய தலைமுறை அட்டவணையாவது:
19 பாரேசு எசுரோனைப் பெற்றார்; எசுரோன் ஆராமைப் பெற்றார்; ஆராம் அமினதாபைப் பெற்றார்;
20 அமினதாப் நகசோனைப் பெற்றார்;
21 நகசோன் சால்மேனைப் பெற்றார்;
22 சால்மேன் போசைப் பெற்றார்; போசு ஒபேதைப் பெற்றார்; ஒபேது ஈசாயியைப் பெற்றார்; ஈசாயி தாவீதைப் பெற்றார்.