எண்ணாகமம்

அதிகாரம் 01

1 மீண்டும் இஸ்ராயேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட மறு ஆண்டில் இரண்டாம் மாதம் முதல் நாள், ஆண்டவர் சீனாய்ப் பாலைவனத்தில் இருந்த உடன்படிக்கைக் கூடாரத்திலே மோயீசனை நோக்கி:

2 நீங்கள் இஸ்ராயேல் மக்களுடைய முழுச்சபையையும் அவரவர் வீடு, வம்சம்படி எண்ணுவீர்களாக. ஆடவர் எல்லாரையும் பெயர் குறித்து எழுதுவீர்களாக.

3 நீயும் ஆரோனும் இஸ்ராயேலரிலே இருபது வயது முதற்கொண்டு வலிமை மிக்கவர் எல்லாரையும் அணி அணியாய் எண்ணுவீர்களாக.

4 ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், தங்கள் வம்சத்திலும் குடும்பத்திலும் தலைவர்களாய் இருப்பவர்கள் உங்களோடு இருப்பார்களாக.

5 இவர்களுடைய பெயர்களாவன: ரூபனின் கோத்திரத்திலே செதெயூருடைய புதல்வனான எலிசூர்,

6 சிமையோனின் கோத்திரத்தில் சுரிஸதையுடைய புதல்வனான சலமியேல்;

7 யூதாவின் கோத்திரத்தில்அமினதாபுடைய புதல்வனான நகஸோன்;

8 இசாக்காரின் கோத்திரத்தில் சுயாருடைய புதல்வனான நத்தானியேல்;

9 சாபுலோன் கோத்திரத்தில் ஏலோனுடைய புதல்வனான எலியாப்.

10 சூசையின் புதல்வருக்குள் எபிராயீம் கோத்திரத்தில் அமியூனின் புதல்வனான எலிஸமா; மனாசே கோத்திரத்தில் பதசூருடைய புதல்வனான கமலீயேல்.

11 பெஞ்சமின் கோத்திரத்தில் செதேயோனின் புதல்வனான அபிதான்;

12 தான் கோத்திரத்தில் அமிசதாயின் புதல்வனான ஐயேசர்.

13 ஆசேர் கோத்திரத்தில் ஒக்கிரானுடைய புதல்வனான பெகியேல்;

14 காத் கோத்திரத்தில் துயேலுடைய புதல்வனான எலியஸாப்;

15 நெப்தலி கோத்திரத்தில் ஏனானுடைய புதல்வனான ஐரா.

16 இவர்களே தம்தம் கோத்திரங்களிலும் வம்சங்களிலும் மிகப் புகழ் பெற்ற சபைப் பிரபுக்களும், இஸ்ராயேலரில் படைத் தலைவர்களுமாய் இருப்பார்கள் என்றருளினார்.

17 அப்படியே மோயீசனும் ஆரோனும் மேற்கூறப்பட்ட பிரபுக்களையும் இஸ்ராயேலின் முழுச் சபையையும் வரச்சொல்லி,

18 இரண்டாம் மாதம் முதல் நாள் (பொதுக்) கூட்டங் கூட்டி, ஆடவரெல்லாரையும் அவரவருடைய வம்சம் வீடு, குடும்பம், ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி எழுதி, இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்களையும் எண்ணிப் பார்த்தனர்.

19 அப்படிச் செய்யும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்தார். அவர்கள் சீனாய்ப் பாலைவனத்திலே எண்ணப்பட்டனர்.

20 இஸ்ராயேலுடைய மூத்த புதல்வனான ரூபனின் கோத்திரத்தில், அவரவருடைய வம்சம், குடும்பம், வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க ஆடவரின் எண்ணிக்கை,

21 நாற்பத்தாறயிரத்து ஐந்நூறு.

22 சிமையோனின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க ஆடவரின் எண்ணிக்கை,

23 ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறு.

24 காத்தின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,

25 நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது.

26 யூதாவின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,

27 எழுபத்து நாலாயிரத்து அறுநூறு.

28 இசாக்காரின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,

29 ஐம்பத்து நாலாயிரத்து நானூறு.

30 சாபுலோனின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,

31 ஐம்பத்தேழாயிரத்து நானூறு.

32 சூசையுடைய புதல்வருக்குள் எபிராயீமின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,

33 நாற்பதினாயிரத்து ஐந்நூறு.

34 மனாசேயுடைய புதல்வரின், அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்கப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,

35 முப்பத்திரண்டாயிரத்து இருநூறு.

36 பெஞ்சமினுடைய புதல்வரிலே, அவரவரருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,

37 முப்பத்தையாயிரத்து நானூறு.

38 தானுடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,

39 அறுபத்திரண்டாயிரத்து எழுநூறு.

40 ஆசேருடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,

41 நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு.

42 நெப்தலியுடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,

43 ஐம்பத்து மூன்றாயிரத்து நானூறு

44 மோயீசனலேயும், ஆரோனாலேயும், பன்னிரண்டு பிரபுக்களாலேயும் எண்ணப்பட்டவர்கள் இவர்களேயாம். ஒவ்வொருவரும் அவரவர் வம்சத்து வீட்டின் ஒழுங்குப்படி (எண்ணப்பட்டனர்.).

45 ஆகையால், இருபது வயதுமுதல் தத்தம் வம்சப்படியும் குடும்பப்படியும் எண்ணப்பட்ட இஸ்ராயேல் மக்களுக்குள்ளே போருக்குப் போகத்தக்க வீரர்களின் மொத்தத் தொகை,

46 ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது.

47 லேவியரோ தங்கள் குடும்பக் கோத்திரத்திலே எண்ணப்படவில்லை.

48 ஏனென்றால், ஆண்டவர் மோயீசனை நோக்கி:

49 நீ லேவியரின் கோத்திரத்தை எண்ணவும் வேண்டாம்; அவர்களின் தொகையை இஸ்ராயேல் மக்களின் கணக்கிலே சேர்க்கவும் வேண்டாம்.

50 அவர்களைச் சாட்சியக் கூடாரத்தையும், அதனில் பயன்படும் எல்லாத் தட்டுமுட்டுகளையும், சடங்கு முறைகளுக்கு அடுத்தவைகளையும் கவனிக்கும்படி ஏற்படுத்து. அவர்களே கூடாரத்தையும் அதன் எல்லாப் பொருட்களையும் சுமந்து போகவும், ஊழியம் புரியவும் கடவார்கள். அவர்கள் கூடாரத்தைச் சுற்றிலும் பாளையம் இறங்குவார்கள்.

51 புறப்பட வேண்டிய போது லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பார்கள். பாளையம் இறங்க வேண்டியிருக்குங்கால், அதை அவர்களே நிறுவி வைப்பார்கள். அந்நியன் எவனேனும் அதன் அருகே வந்தால் அவன் கொல்லப்படுவான்.

52 இஸ்ராயேல் மக்களோ தங்கள் தங்கள் அணிவகுப்பு, கொடி, படை ஆகியவற்றின்படி பாளையம் இறங்குவார்கள்.

53 லேவியரோ இஸ்ராயேல் மக்கட்சபை (கடவுளின்) கோபத்திற்கு உள்ளாகாதபடிக்குத் (திருக்) கூடாரத் தண்டையில் தங்கள் கூடாரங்களை விரித்துக் கட்டி, சாட்சியக் கூடாரத்தைக் காக்கும் அலுவலை மேற்கொள்வார்கள் என்றருளினார்.

54 ஆகையால், இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் செய்து வந்தார்கள்.

அதிகாரம் 02

1 மீண்டும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கிச் சொன்னதாவது:

2 இஸ்ராயேல் மக்கள் அவரவருடைய அணி வகுப்பு, விருது, கொடி, இனத்தாருடைய வீடு (முதலிய) ஒழுங்குப்படி தங்கள் தங்கள் கூடாரங்களை அடித்து சாட்சியக் கூடாரத்துக்குச் சுற்றிலும் பாளைய மிறங்குவார்கள்.

3 (எப்படியென்றால்) யூதா தன் படையின் அணிவகுப்புக் கீழ்ப்புறத்திலே கூடாரம் அடிக்கக் கடவான். அமினதாபுடைய புதல்வன் நகஸோன் யூதா கோத்திரத்தாருக்குத் தலைவனாய் இருப்பான்.

4 அவனுடைய கோத்திரத்திலுள்ள வீரர்களின் மொத்த எண்ணிக்கை, எழுபத்து நாலாயிரத்து அறுநூறு.

5 இவனருகில் சூவார் புதல்வனான நத்தானியேலைத் தலைவனாகக் கொண்டிருக்கும் இசாக்கார் கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள்.

6 இவனுடைய வீரர்களின் மொத்த எண்ணிக்கை, ஐம்பத்து நாலாயிரத்து நானூறு.

7 சாபுலோன் கோத்திரத்தின் தலைவன் எலோன் புதல்வன் எலியாப்.

8 இக்கோத்திரத்தைச் சேர்ந்த படைவீரர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர்.

9 யூதாவின் பாளையத்தில் எண்ணப்பட்டவர்கள் ஒரிலட்சத்து எண்பத்தாறாயிரத்து நானூறு பேர். புறப்படும்போது இவர்களே தங்கள் அணிகளின் ஒழுங்குப்படி முதலில் போகக்கடவார்கள்.

10 ரூபன் கோத்திரத்தார் தென்புறத்திலே பாளையமிறங்குவார்கள். செதெயூர் புதல்வனாகிய எலிசூர் அவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்.

11 அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.

12 இவனருகில் சுரிஸதையின் புதல்வன் சலமியேலைத் தலைவனாய்க் கொண்டிருக்கும் சிமையோனின் கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள்.

13 அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறு பேர்.

14 காத் என்பவனின் கோத்திரத்தின் தலைவன், துயேலினுடைய புதல்வன் எலியஸாப்.

15 அவனுடைய படையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது பேர்.

16 ரூபனின் பளையத்தில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஒரிலட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது பேர். பயணத்தின் போது இவர்களே தங்கள் தங்கள் அணிவகுப்பின் ஒழுங்குப்படி இரண்டாவதாய்ச் செல்லக்கடவார்கள்.

17 பின்பு சாட்சியக் கூடாரம் லேவியராலும் அவர்களைச் சேர்ந்தவர்களாலும் எடுத்துச் செல்லப்படும். அது எப்படிக் கட்டி நிறுவப்பட்டதோ அப்படியே பிரிக்கப்படும். அவர்கள் தத்தம் இடத்தில் வரிசைப்படி நடந்து செல்லக்கடவார்கள்.

18 எபிராயீம் புதல்வருடைய பாளையம் மேற்புறத்தில் இருக்கும். அமியூதின் புதல்வன் எலிஸமா அவர்களுக்குத் தலைவன்.

19 அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறு பேர்.

20 அவனருகே பதசூரின் புதல்வனாகிய கமலியேலைத் தலைவனாகக் கொண்ட மனாசேயின் புதல்வராகிய கோத்திரத்தார் (பாளையம் இறங்குவார்கள்).

21 அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் முப்பத்திரண்டாயிரத்து இருநூறு பேர்.

22 பெஞ்சமின் கோத்திரத்திற்குச் செதேயோனின் புதல்வனாகிய அபிதான் தலைவன்.

23 இவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் முப்பத்தையாயிரத்து நானூறு பேர்.

24 எபிராயீம் பாளையத்திலே தங்கள் அணிவகுப்புப்படி எண்ணப்பட்ட வீரர்கள் ஒரிலட்சத்து எண்ணாயிரத்து நூறுபேர். இவர்கள் மூன்றாவதாய்ச் செல்வார்கள்.

25 தானின் புதல்வர்கள் வடக்கே பாளையம் இறங்குவார்கள். அவர்களுக்கு அமிசதாயின் புதல்வனான ஐயேசர் தலைவன்.

26 இவனுடைய படையில் எண்ணப்பட்டவர்கள் தொகை அறுபத்திரண்டாயிரத்து எழுநூறு.

27 அவனருகே ஆசேருடைய கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள். அவர்களுக்கு ஒக்கிரான் புதல்வன் பெகியேல் தலைவன்.

28 இவனுடைய சேனையில் எண்ணப்பட்ட வீரர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு பேர்.

29 நெப்தலி கோத்திரத்தாருக்கு ஏனானின் புதல்வனான ஐரா தலைவன்.

30 இவனுடைய படையில் உட்பட்ட வீரர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.

31 தானின் பாளையத்திலே எண்ணப்பட்ட வீரர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரிலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறு. இவர்கள் கடைசியாய்ச் செல்வார்கள் என்றார்.

32 தங்கள் தங்கள் இனத்தாரின் வீடுகளின் படியும், படைப்பிரிவுகளின் அணிவகுப்பின் படியும் எண்ணப்பட்ட இஸ்ராயேல் மக்களின் தொகை ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது.

33 லேவியரோ ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ராயேல் மக்களுக்குள் எண்ணப்படவில்லை.

34 ஆண்டவர் கட்டளையிட்டபடி இஸ்ராயேல் மக்கள் எல்லாவற்றையும் செய்து வந்தார்கள். அவர்கள் தங்கள் தங்கள் அணிவகுப்பின்படி பாளையம் இறங்கி, தங்கள் வம்ச, குடும்பங்களின் ஒழுங்குப்படி புறப்பட்டனர்.

அதிகாரம் 03

1 ஆண்டவர் சீனாய் மலையில் மோயீசனுக்குத் திருவாக்கருளின் காலத்திலே, ஆரோன், மோயீசன் என்பவர்களுடைய வம்சவரலாறாவது:

2 ஆரோனுடைய புதல்வர்கள்: முதலில் பிறந்தவன் நாதாப், பின்பு அபியூ, எலேயசார், இத்தமார் என்பவர்கள்.

3 குருத்துவப் பணி செய்யும் பொருட்டு அபிசேகம் செய்யப்பட்டு கைகள் நிறைக்கப்பெற்று அர்ச்சிக்கப்பட்ட ஆரோனின் புதல்வராகிய குருக்களின் பெயர்கள் இவைகளே.

4 ஆனால், நாதாப் அபியூ என்பவர்கள் சீனாய்ப் பாலைவனத்திலே ஆண்டவர் திருமுன் அந்நிய நெருப்பைச் சமர்ப்பித்தமையால் மகப்பேறின்றி மாண்டனர். எலேயசாரும் இத்தமாரும் தங்கள் தந்தையாகிய ஆரோனின் முன்னிலையில் குருத்துவ ஊழியம் செய்து வந்தார்கள்.

5 ஆண்டவரோவென்றால் மோயீசனை நோக்கி:

6 நீ லேவியின் கோத்திரத்தாரை வரச்சொல்லி, அவர்கள் தலைமைக் குருவாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படிக்கும், சாட்சியாகக் கூடாரத்தைக் காக்கும்படிக்கும், கடவுளின் உறைவிடத்துக்கு முன்பாகச் சபையார் செய்யும்.

7 சடங்குமுறை முதலியவற்றைக் கவனித்து வரும்படிக்கும்,

8 கூடாரத்தின் தட்டுமுட்டுக்களைக் காத்துக்கொண்டு ஆரோனுக்கு உதவியாயிருக்கும்படிக்கும் அவன் முன்னிலையில் நிறுத்தக்கடவாய்.

9 லேவி கோத்திரத்தாரை நன்கொடையாக, ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கொடுப்பாய்.

10 இஸ்ராயேல் மக்கள் இவர்களுக்கு அவர்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஆரோனையும் அவன் புதல்வர்களையும் குருத்துவ அலுவலில் நியமனம் செய்வாய். யாரேனும் ஓர் அந்நியன் அந்த அலுவலைச் செய்யத் துணிவானாயின், அவன் கொலை செய்யப்படுவான் என்றார்.

11 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

12 இஸ்ராயேல் மக்களில் தாயின் வயிற்றைத் திறந்து பிறக்கிற தலைப்பேறான எல்லாப் பிள்ளைகளுக்கும் பதிலாய் நாம் லேவிய வம்சத்தாரை இஸ்ராயேல் மக்களிலிருந்து எடுத்துக் கொண்டோமாகையால், இந்த வம்சத்தார் நம்முடையவர்களாம்.

13 ஏனென்றால், முதற்பேறானவையெல்லாம் நம் முடையவை. நாம் எகிப்து நாட்டிலே முதற்பேறானவையெல்லாம் அழித்தது முதற் கொண்டு இஸ்ராயேலில் மனிதன் முதல் மிருகவுயிர் வரையிலும் தலைப்பேறானவையெல்லாம் நம்முடையவை. நாம் ஆண்டவர் என்றார்.

14 மறுபடியும் ஆண்டவர் சீனாய்ப் பாலைவனத்திலே மோயீசனை நோக்கி:

15 நீ லேவியின் புதல்வர்களை அவர்களுடைய முன்னோரின் வம்சங்களின்படியும், குடும்பத்தின்படியும் எண்ணக்கடவாய். ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களை எல்லாம் எண்ணிப்பார் என்றார்.

16 ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி மோயீசன் அவர்களை எண்ணினார்.

17 லேவியின் புதல்வர்களாய்க் காணப்பட்டவர்களின் பெயர்கள் ஜேற்சோன், காத், மேறாரி.

18 ஜேற்சோனின் மக்கள்: லெப்னியும் சேமையும்.

19 காத்தின் மக்கள்: அம்ராம், ஜெஸார், எபிரோன், ஓசியேல் என்பவர்கள்.

20 மேறாரியின் மக்கள்: மொகோலியும் மூசியும் ஆவர்.

21 ஜேற்சோனினின்று லெப்னியாலும் சேமையாலும் இரண்டு வம்சங்கள் உண்டாயின.

22 இவைகளின் குடிக்கணக்காவது: ஒரு மாதம் முதற்கொண்டுள்ள ஆண்கள் ஏழாயிரத்து ஐந்நூறு பேர்.

23 இவர்கள் கூடாரத்திற்குப் பின் மேற்புறத்தில் பாளையம் இறங்குவார்கள்.

24 அவர்களுக்கு லேலின் புதல்வனாகிய எலியஸாபே தலைவன்.

25 அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தினுள்ளே காவல் காத்து, உறைவிடத்தையும்,

26 அதன் மூடியையும், உடன்படிக்கைக் கூடாரவாயிலின் முன்தொங்கும் திரையையும், மண்டபத்தின் சுற்றிலுமுள்ள திரைகளையும், கூடார மண்டபத்தின் நுழைவிடத்திலே தொங்கும் திரையையும், பலிபீடத்தைச் சார்ந்த வேலைகளுக்குரிய கயிறுகளையும், தட்டு முட்டுப் பொருட்களையும் கவனித்து வருவார்கள்.

27 காத்தினின்று அம்ராம், ஜெஸார், எப்ரோன், ஓசியேல் என்னும் பெயர்களைக் கொண்டே வம்சங்கள் உண்டாயின. இவைகளே தத்தம் பெயர்களின்படி எண்ணப்பட்ட காத்தின் வம்சங்கள்.

28 ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட ஆண்டுகளெல்லாம் எண்ணாயிரத்து அறுநூறு பேர் அவற்றில் காணப்பட்டனர்.

29 இவர்கள் புனித இடத்தைக் காவல் காத்துக்கொண்டு, தென்புறத்திலே பாளையம் இறங்குவார்கள்.

30 அவர்களுக்குள்ளே ஓசியேலின் மகனான எலிஸபானே தலைவன்.

31 அவர்கள் பெட்டகத்தையும் மேசையையும், கிளை விளக்கையும் பீடங்களோடு இறைபணிக்குரிய புனித இடத்துப் பாத்திரங்களையும், திரையையும், இவைபோன்ற தட்டு முட்டுக்கள் அனைத்தையும் காத்துக் கொள்வார்கள்.

32 லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவரும் தலைமைக் குருவாகிய ஆரோனின் புதல்வனுமாகிய எலேயஸாரோ புனித இடத்தைக் காவல் காப்பவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்.

33 மேறாரியினின்று மெகோலி, மூசி என்னும் பெயர்களைக் கொண்ட வம்சங்களும் தத்தம் பெயர்களின்படி எண்ணப்பட,

34 ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்கள் ஆறாயிரத்து இருநூறு பேர்.

35 இவர்களுக்கு அபிகயேலின் புதல்வனாகிய சுரியேல் தலைவன். இவர்கள் வடபுறத்தில் பாளையம் இறங்குவார்கள்.

36 கூடாரப் பலகைகளும். அவற்றின் தண்டுகளும், பாதங்கள் தூண்கள் இவைபோன்ற வழிபாட்டுப் பொருட்களும் அவர்களுடைய காவலிலே வைக்கப்பட்டன.

37 அவர்கள் மண்டபத்தைச் சுற்றிலுமுள்ள தூண்களையும், அவற்றின் பாதங்களையும், முளைகளையும் கயிறுகளையும் கவனித்து வருவார்கள்.

38 கீழ்ப்புறத்தில் - அதாவது உடன்படிக்கைக் கூடார முன்னிலையில் - மோயீசனும், ஆரோனும் இவர் புதல்வர்களும் பாளையம் இறங்குவார்கள். இவர்கள் இஸ்ராயேல் மக்கள் நடுவிலே புனித இடத்தைக் காத்து வருவார்கள். யாரேனும் ஓர் அந்நியன் நெருங்கி வந்தால், அவன் கொல்லப்படுவான்.

39 மோயீசனும், ஆரோனும் ஆண்டவருடைய கட்டளைப்படி லேவி வம்சத்தில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களையெல்லாம் தங்கள் குடும்பங்களின்படி எண்ணினார்கள். அவர்கள் இருபத்தீராயிரம் பேர்.

40 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: இஸ்ராயேல் மக்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள தலைப்பேறான ஆண்களையெல்லாம் எண்ணித் தொகைப்படுத்துவாயாக.

41 இஸ்ராயேல் மக்களின் தலைப்பேறான எல்லாப் பிள்ளைகளுக்கும் பதிலாய் லேவிய வம்சத்தாரையும், இஸ்ராயேல் மக்களின் மந்தைகளிலுள்ள தலையீற்றான மிருகவுயிர்களுக்குப் பதிலாய் லேவியரின் மந்தைகளையும் நம் பெயராலே நீ பிரித்தெடுப்பாய்.

42 நாம் ஆண்டவர் என்றார். மோயீசன் ஆண்டவருடைய கட்டளைப்படி இஸ்ராயேலருடைய தலைப்பேறான புதல்வர்களை எண்ணிப் பார்க்கையில்,

43 ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களையெல்லாம் பெயர் பெயராக எழுதினார். அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று பேர்.

44 அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி:

45 இஸ்ராயேல் மக்களின் முதல் பேறான எல்லாப் புதல்வர்களுக்கும் பதிலாய் லேவியர்களையும், அவர்களுடைய மந்தையின் தலையீற்றுக்களுக்குப் பதிலாய் லேவியருடைய மந்தைகளையும் பிரித்தெடு. லேவியர் நம்முடையவர்கள். நாம் ஆண்டவர்.

46 அன்றியும், இஸ்ராயேல் மக்களின் முதல் பேறான புதல்வர்களில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து மீட்கப்பட வேண்டிய இருநூற்றெழுபத்து மூன்று பேர் இருக்கிறார்கள்.

47 அவர்களுக்கென்று புனித இடத்து அளவின்படி தலைக்கு ஐந்து சீக்கல்களை வாங்கிக் கொள்வாய். (ஒரு சீக்கலுக்கு இருபது ஒபோல்).

48 அதிகப்பட்டவர்களின் மீட்பு விலையாகிய அந்தப் பணத்தை நீ சேர்த்து, ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கொடுப்பாய் என்றார்.

49 அவ்வாறு அதிகமாயிருந்து லேவியர்களால் மீட்கப்பட்டவர்களின் மீட்புப் பணத்தை மோயீசன் சேர்த்து,

50 அந்தத் தொகையால் இஸ்ராயேல் மக்களிரடயேயுள்ள முதல் பேறான பிள்ளைகளுக்காகப் புனித இடத்துச் சீக்கலால் ஆயிரத்து முந்நூற்றறுபத்தைந்து சீக்கல்களை எடுத்து,

51 ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்தபடி, அதை ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கொடுத்தார்.

அதிகாரம் 04

1 மீண்டும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:

2 லேவியர்களுக்குள்ளே ககாத் புதல்வரைக் கணக்கெடுத்து, அவரவருடைய குடும்பங்களின் வரிசைப்படியும் வீடுகளின் வரிசைப்படியும் எண்ணக்கடவீர்கள்.

3 (அந்தக் கணக்கிலே) உடன்படிக்கைக் கூடாரத்தில் இருக்கவும் வேலை செய்யவும் புகத்தக்கவர்களாய், முப்பது முதல் ஐம்பது வயது வரையிலுமுள்ள எல்லாரையும் எண்ண வேண்டும்.

4 காத்தின் புதல்வருக்குரிய அலுவல் என்னவென்றால்: பாளையம் பெயர்தலின்போது உடன்படிக்கைக் கூடாரத்தினுள்ளேயும் பரிசுத்தத்திலும் பரிசுத்தமான இடத்தினுள்ளேயும்,

5 ஆரோனும் அவன் புதல்வர்களும் புகுந்து வாயிலின் முன் தொங்கும் திரையை இற்க்கி, அதைக்கொண்டு சாட்சியப் பெட்டகத்தை மூடி,

6 அதன்மேல் ஊதாத் தோல்களால் செய்யப்பட்ட மூடுதிரையையும் போர்த்தி, அதன்மீது முழுவதும் நீலத்துப்பட்டியை விரித்து, பின்பு தண்டுகளைப் பாய்ச்சி,

7 காணிக்கை (அப்பங்களின்) மேசையை நீலத் துப்பட்டியால் பொதிந்து, தூபக்கலசங்களையும் சிமிழ்களையும் பான போசனப் பலிகளைச் சிந்துவதற்குரிய பாத்திரங்களையும் கலசங்களையும் கிண்ணங்களையும் கூடவே வைப்பார்கள். காணிக்கை அப்பங்கள் அதன்மேல் எப்பொழுதும் இருக்கும்.

8 அதன் மீது சிவப்பு நிறத் துப்பட்டியை விரித்து, மறுபடியும் அதை ஊதா நிறத் தோல் துப்பட்டியால் மூடி, பின்பு தண்டுகளைப் பாய்ச்சி வேறொரு இளநீலத் துப்பட்டியை எடுத்துக் குத்து விளக்குத் தண்டையும்,

9 அதன் அகல்களையும், திரிகளையும், முள், துறடு, சாம்பல் தட்டுக்களையும், அகல்களுக்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,

10 இவை அனைத்தையும் ஊதா நிறத்தோல்துப்பட்டிக்குள்ளே வைத்து, பிறகு தண்டுகளைப் பாய்ச்சி,

11 பொற் பீடத்தையும் இளநீலத்துப்பட்டியால் மூடி, அதன்மேல் ஊதாநிறத்தோலைப் போர்த்தி, அதன் தண்டுகளைப் பாய்ச்சி மூலதனத்தில் நடத்தப்படும்

12 வழிபாட்டுக்கு வேண்டிய எல்லாவற்றையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே வைத்து ஊதாநிறத் தோலால் மூடித் தண்டின் மேல் வைத்துக் கட்டி,

13 பலிபீடத்திலிருந்து சாம்பலை நீக்கி அதன்மேல் சிவப்பு நிறத்துப்பட்டியை விரித்து,

14 அதனோடு கூட வழிபாட்டுக்கு வேண்டிய தீச்சட்டிகள் முள்ளுகள், திரிசூலங்கள், கொளுவி, துடுப்பு முதலிய பாத்திரங்களை வைத்து, ஊதா நிறத் தோலால் மூடித் தண்டுகளையும் பாய்ச்சுவார்கள்.

15 பாளையம் பெயர்தலின்போது ஆரோனும் அவன் மக்களும் மூலத்தானத்தையும் அதைச் சார்ந்த யாவற்றையும் மூடி முடித்தவுடனே ககாத் புதல்வர்கள் அவைகளைத் தூக்கிக் கொண்டு போவதற்கு வரக்கடவார்கள். அவர்கள் புனித இடத்திலுள்ள பொருட்களை மூடிய வண்ணமாய் எடுப்பார்களேயல்லாது, அவற்றைத் தொடக்கூடாது. தொட்டால் சாவார்கள். உடன்படிக்கைப் பெட்டகத்தைப் பொறுத்த மட்டில் அதுவே அவர்களுடைய கடமை.

16 தலைமைக் குருவாகிய ஆரோனின் மகன் எலெயஸார் ககாத் புதல்வர்களுக்குத் தலைவன். அவன் அகல்களுக்கு வேண்டிய எண்ணெயையும், நறுமணத் தூப வகைகளையும், நாள்தோறும் இடவேண்டிய பலியையும், அபிசேகத் தைலத்தையும், உறைவிடத்து வழிபாட்டுக்கு வேண்டிய யாவையும், மூலத்தானத்திலுள்ள எல்லாப் பொருட்களையும் கவனிக்கக் கடவான் என்றருளினார்.

17 பின்னும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:

18 நீங்கள் லேவியருக்குள்ளே ககாத் வம்சத்தார் அழிந்துபோக விடாதீர்கள்.

19 அவர்கள் பரிசுத்தத்திலும் பரிசுத்த மானத்தைத் தொட்டால் சாவார்கள். அவர்கள் சாகாமல் பிழைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியதாவது: ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே போய், அவனவன் செய்ய வேண்டிய வேலைகளையும் சுமக்க வேண்டிய சுமையையும் தனித்தனியாய் நியமித்துப் பங்கிடக் கடவார்கள்.

20 மற்றவர்களோ புனித இடத்தில் உள்ளவைகள் மூடப்படுவதற்கு முன்பே எட்டிப்பார்க்கவும் வேண்டாம். பார்த்தால் சாவார்கள் என்றார்.

21 மறுபடியும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

22 ஜேற்சோனின் புதல்வர்களையும் எண்ணக்கடவாய். அவரவரைத் தத்தம் வீடு, குடும்பம், இனம் ஆகிய இவற்றின் ஒழுங்குத் திட்டப்படி எண்ணிக்கை செய்யக்கடவாய்.

23 முப்பது முதல் ஐம்பது வயது வரையிலுமுள்ள எல்லாரையும் எண்ணி, உடன்படிக்கைக் கூடாரத்திற் புகுந்து ஊழியம் செய்யக் கூடியவர்கள் இத்தனை பேரென்று கணக்கெடுப்பாய்.

24 ஜேற்சோன் வம்சத்தாருடைய அலுவல் ஏதென்றால்;

25 அவர்கள் கூடாரத்திற்குரிய தொங்கு திரையையும், உடன்படிக்கையை மூடும் துப்பட்டியையும், இன்னொரு துப்பட்டியையும், இவற்றின் மூதுள்ள ஊதாநிறத்தோல் போர்வையையும், உடன்படிக்கைக் கூடார வாயிலிலே தொங்கும் மற்றவைகளையும், மண்டபத்திலுள்ள திரைகளையும்,

26 நுழைவாயிலிலுள்ள திரையையும் பலிபீடத்தைச் சேர்ந்த எல்லாவற்றையும், (கடவுள்) ஊழியத்திற்கு உதவியாயிருக்கிற கயிறுகளையும், பணிமுட்டுகளையும் சுமந்து செல்வார்களாக.

27 உடன்படிக்கைக் கூடாரத்தில் இவற்றையெல்லாம் ஜேற்சோன் புதல்வர் அவனவன் தான் எந்தச் சுமையை எடுக்க வேண்டும் என்பதை ஆரோன், அவன் புதல்வர்களின் கட்டளையால் அறியக்கடவார்கள்.

28 ஜேற்சோன் வம்சத்தார் செய்ய வேண்டிய வேலை இதுவே. அவர்கள் தலைமைக் குருவாகிய ஆரோனின் புதல்வன் ஈட்டமாரின் அதிகாரத்திற்குப் பணிவார்கள்.

29 மேறாரியின் புதல்வரையும் அவரவர்களுடைய முன்னோர்களின் வீட்டு வம்சங்களின் படி எண்ணக்கடவாய்.

30 முப்பது முதற்கொண்டு ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் (கூடாரத்துக்கடுத்த) ஊழியத்திற்காகவும் வழிபாட்டுக்காகவும் செல்வோர் அனைவரையும் எண்ணிப் பார்க்கக்கடவாய்.

31 இவர்கள் சுமக்க வேண்டிய சுமை என்னவென்றால்: கூடாரத்தினுடைய பலகைகள், தண்டுகள், தூண்கள், அவற்றின் பாதங்கள்,

32 மண்டபத்தைச் சுற்றிலுமுள்ள தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், அவற்றின் கயிறுகள். இவற்றோடு தத்தம் முறைப்படி எல்லாத் தட்டுமுட்டுக்களையும் சுமந்து கொண்டு போவார்கள்.

33 மேறாரி வம்சத்தாரைச் சார்ந்த பணியும், அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தில் செய்யவேண்டிய வேலையும் அதுவே. அவர்கள் தலைமைக் குருவாகிய ஆரோனுடைய புதல்வன் ஈட்டமாரின் அதிகாரத்திற்குப் பணிவார்க்ள் என்றருளினார்.

34 அப்படியே மோயீசனும், ஆரோனும் அவன் புதல்வர்களும், சபைத் தலைவர்களும் ககாத்தின் புதல்வர்களை அவரவர்களுடைய முன்னோரின் வீட்டு வம்சங்களின்படி எண்ணி,

35 முப்பது முதல் ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் கூடாரத்தில் ஊழியஞ் செய்யச் செல்வோர் அனைவரையும் கணக்கெடுத்தபோது,

36 ஈராயிரத்து எழுநூற்றைம்பது பேர் இருந்தார்கள்.

37 உடன்படிக்கைக் கூடாரத்தில் புகக்கூடிய ககாத் வம்சத்தாருடைய எண்ணிக்கை அதுவே. ஆண்டவர் மோயீசன் வழியாகக் கட்டளையிட்டிருந்தபடி மோயீசனும் ஆரோனும் எண்ணிக்கை செய்தார்கள்.

38 ஜேற்சோனின் புதல்வர்களும் தத்தம் முன்னோர்களுடைய வீட்டு வம்சங்களின்படி எண்ணிக்கையிடப்பட்டு,

39 முப்பது முதல் ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் கூடாரத்தில் ஊழியம் செய்யச் செல்வோர் எல்லாரையும் கூட்டியபோது,

40 ஈராயிரத்து அறுநூற்று முப்பது பேர் இருந்தார்கள்.

41 மோயீசனும் ஆரோனும் ஆண்டவருடைய கட்டளைப்படி எண்ணிய ஜேற்சோனின் வம்சத்தாருடைய தொகை இதுவே.

42 மேறாரியின் புதல்வர்களும் தத்தம் முன்னோர்களின் வீட்ட வம்சங்களின்படி எண்ணப்பட்டார்கள்.

43 முப்பது முதற்கொண்டு ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் கூடாரத்தில் சமயச் சடங்குகளை நிறைவேற்றும்படி செல்வோர் அனைவரையும் கணக்கிட்டுப் பார்த்தபோது,

44 மூவாயிரத்து இருநூறு பேர் இருந்தார்கள்.

45 மேறாரியின் புதல்வருடைய தொகை இதுவே. ஆண்டவர் மோயீசன் மூலமாய்க் கட்டளையிட்டபடி மோயீசனும் ஆரோனும் அவர்களை எண்ணினார்கள்.

46 லேவியர்களிலே அவரவர் தத்தம் முன்னோர்களின் வீட்டு வம்சங்களின்படி மோயீசனாலும் ஆரோனாலும் இஸ்ராயேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டு, மோயீசனாலே பெயர் பெயராக எழுதப்பட்டார்கள்.

47 முப்பது முதல் ஐம்பது வயது வரையிலும், கூடாரத்து ஊழியம் செய்யவும், சுமைகளைச் சுமக்கவும் கூடியவர்களின் எண்ணிக்கை:

48 எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பது.

49 ஆண்டவருடைய கட்டளையின்படியே அவர்கள் தத்தம் பணிகளுக்கென்றும், சமைகளுக்கென்றும் எண்ணப்பட்டார்கள். அவ்வாறு செய்ய ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.

அதிகாரம் 05

1 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

2 தொழு நோய் கொண்டவர்கள் யாவரையும், மேகவெட்டையுள்ளவனையும், பிணத்தினாலே தீட்டுப்பட்டவனையும் பாளையத்தினின்று நீக்கிவிட இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிடு.

3 நாம் உங்களோடு வாழ்கின்றமையால், அப்படிப்பட்டவர்கள் ஆணானாலும் பெண்ணானாலும் - பாளையத்தைத் தீட்டுப்படுத்தாத படிக்கு அதிலிருந்து புறம்பாக்கப்படுவார்கள் என்றார்.

4 இஸ்ராயேல் மக்கள் அவ்விதமே செய்து, ஆண்டவர் மோயீசனுக்குச் சொன்னபடியே, அப்படிப்பட்டவர்களைப் பாளையத்தினின்று புறம்பாக்கி விட்டனர்.

5 மறுபடியும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

6 நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஓர் ஆடவனாவது ஒரு பெண்ணாவது கவனக்குறைவால் ஆண்டவருடைய கட்டளையைமீறி மனிதர் வழக்கமாய்ச் செய்யும் பாவங்களில் எதையாவது செய்து குற்றவாளியானால்,

7 அவர்கள் தங்கள் பாவத்தை அறிக்கையிட வேண்டியது மன்றி, எவனுக்கு அநீதி செய்தார்களோ அவனுக்கு முதலோடு ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுத்து ஈடுசெய்யக் கடவார்கள்.

8 அதை வாங்குவோர் ஒருவரும் இல்லையென்றால், அது ஆண்டவருக்குச் செலுத்தப்படும். அது ஆண்டவரைச் சமாதானப் படத்தப் பாவ நிவர்த்திக்கென்று கொடுக்கப் படும் ஆட்டுக்கிடாய் நீங்கலாக மற்றவை குருவைச் சேரவேண்டும்.

9 இஸ்ராயேல் மக்கள் எவ்விதப் புதுப்பலன்களை ஒப்புக்கொடுத்தாலும், அவை குருவுக்குச் சொந்தமாகும்.

10 மேலும் சாதாரணமாய்ப் புனித இடத்தில் எவ்வித காணிக்கை ஒப்புக்கொடுக்கப்பட்டாலும், அதுவும் அவருடையதாய் இருக்கும் என்றருளினார்.

11 பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

12 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி அறிவு கெட்டுக் கணவனுக்குத் துரோகம் செய்து,

13 மற்றொருவனோடு சயனித்து விபசாரம் செய்தது உண்மையாயினும், கணவன் அதைக் கண்டதில்லை என்பதானும், அவள் கையுங்களவுமாய்ப் பிடிப்பட்டதில்லை என்பதானும் அவளுடைய விபசாரம் வெளிப்பட்டுச் சாட்சிகள் மூலமாய்த் தெளிவு படுத்தக் கூடாத வேளையில்,

14 அவள் உண்மையாகவே தீட்டுப்பட்டவளோ அல்லது பொய்யாகக் குற்றவாளியென்னும் எண்ணப்பட்டவளோ என்னும் எரிச்சலாகிய பேய் கணவனைத் தன்மனைவிக்கு விரோதமாய்த் தூண்டி விடுமாயின்,

15 அவன் தன் மனைவியைக் குருவினிடம் அழைத்து வந்து, அவளுக்காக ஒருபடி வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கு படைக்கக்கடவான். ஆனால் அது எரிச்சலின் காணிக்கையும், அவள் விபசாரம் செய்தாளோ இல்லையோ என்பதைக் காண்பிக்கக் கூடிய காணிக்கையும் ஆனபடியினாலே, அந்த மாவின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவகைகள் இடாமலும் இருப்பான்.

16 குரு இதனை ஆண்டவருடைய முன்னிலையில் ஒப்புக்கொடுப்பார்.

17 ஒரு மட்பாண்டத்திலே தண்ணீர் வார்த்து, சாட்சியக் கூடாரத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து மேற்படித் தண்ணீரில் போட்டு,

18 ஆண்டவர் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிற அந்தப் பெண்ணின் முக்காட்டை நீக்கி, நினைவூட்டும் பலியையும் எரிச்சலின் காணிக்கையையும் அவள் கையின் மேல் வைப்பார். பிறகு குரு தம்மால் வெறுப்புடன் சபிக்கப்பட்ட மிகக் கசப்பான தண்ணீரைக் கையில் ஏந்தி,

19 அந்தப் பெண்ணை ஆணையிட்டு, நீ கேள்: யாரேனும் ஒரு கள்ளக் கணவன் உன்னோடு படுக்காமலும், உன் கணவனுககு நீ துரோகம் செய்யாமலும், தீட்டுப்படாமலும் இருந்தாயானால், நான் வெறுத்தச் சபித்த இந்தத் தண்ணீரால் உனக்குத் தீமைவராது.

20 ஆனால், நீ உன் கணவனோடேயன்றி வேறு ஆடவனோடு படுத்து தீட்டுப்பட்டியிருந்தாயாயின், இந்தச் சாபமெல்லாம் உன்மேல் வரும்.

21 சபையிலுள்ள அனைவரும் கண்டு அஞ்சும்படி ஆண்டவர் உன்னை எல்லாருடைய சாபங்களுக்கும் உள்ளாகாச் செய்வாராக. (மேலும்) அவர் உன் கால்கள் அழுகிப் போகவும் உன் வயிறு வீங்கி வெடித்துப் போகவும் செய்வாராக.

22 சபிக்கப்பட்ட இந்தத் தண்ணீர் உன் வயிற்றில் விழவே உன் கருப்பை வீங்கவும், உன் தொடைகள் அழுகவும் கடவன என்று குரு சொல்லும்போது, அந்தப் பெண்: ஆமென், ஆமென் என்று சொல்லக் கடவாள்.

23 பின்பு குரு இந்தச் சாப வார்த்தைகளை ஒரு புத்தகத்தில் எழுதி, தம்மாலே சபிக்கப்பட்ட மிகக் கசப்பான தண்ணீரால் அவ்வெழுத்தைக் கழுவிக் கலைத்து,

24 அதை அவளுக்குக் குடிக்கக் கொடுப்பார். அவள் அதைக் குடித்த பின்பு,

25 குரு எரிச்சலின் காணிக்கையை அந்தப் பெண்ணின் கையிலிருந்து வாங்கி, அதை ஆண்டவருடைய முன்னிலையில் உயர்த்திக் காட்டிப் பீடத்தின் மேல் வைக்கப் போகும் போது,

26 முதலில் பலிபீடத்தின் மேல் தகனிப்பதற்காக அதனின்று ஒரு கைப்பிடி மாவை எடுத்து வைக்கக் கடவார். அதன்பிறகு மிகக் கசப்பான தண்ணீரை அந்தப் பெண் குடிக்கும்படி கொடுப்பார்.

27 அதை அவள் குடித்த பின்பு, தான் உண்மையாகவே தீட்டுப்பட்டுக் கணவனுக்குத் துரோகம் செய்து விபசாரியானவளென்றால், சபிக்கப்பட்ட தண்ணீர் உள்ளே புகுந்தவுடனே அவளுடைய வயிறு வீங்கி, தொடைகள் அழுகி விடும். அந்தப் பெண்மக்களுக்குள்ளே சபிக்கப்பட்டவளாகி, எல்லாருக்கும் மாதிரியாக இருப்பாள்.

28 அவள் குற்றமில்லாவளாய் இருந்தால் அவளுக்கு ஒரு கேடும் வராது. கருத்தரிக்கத் தக்கவளாகவும் இருப்பாள்.

29 எரிச்சலைப் பற்றிய சட்டம் பின்வருமாறு: பெண் தன் கணவனை விட்டு அவனக்குத் துரோகம் செய்தவிடத்து,

30 கணவன் சந்தகேத்தால் ஏவப்பட்டு, அவளை ஆண்டவர் முன்னிலையில் அழைத்துக்கொண்டு வருவான். குருவும் மேலே குறிப்பிட்டபடி எல்லாம் அவளுக்குச் செய்யக்கடவார்.

31 கணவன் குற்றத்திற்கு நீங்கலாகியிருப்பான். பெண்ணோதன் அக்கிரமத்தின் சுமையைச் சுமப்பாள் என்று ஆண்டவர் திருவுளம்பற்றினார்.

அதிகாரம் 06

1 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

2 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஆணாயினும் பெண்ணாயினும் தங்கள் ஆன்மீக நன்மையை முன்னிட்டுத் தங்களை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கும்படி விரதம் பூண விரும்பினால்,

3 அவர்கள் கொடிமுந்திரிப் பழச் சாற்றையும், மற்ற மதுபானத்தையும் விலக்கக்கடவார்கள். அன்றியும் கொடிமுந்திரிப் பழச்சாற்றினால் செய்யப்பட்ட காடியையும், மற்றும் போதைப் பொருட்களையும், கொடிமுந்திரிப் பழங்களைப் பிழிந்து செய்த எவ்விதப் பானத்தையும் பருகாமலும், கொடிமுந்திரிப் பழங்களையும் கொடிமுந்திரிப் பழ வற்றல்களையும் உண்ணாமலும்,

4 தாங்கள் தங்களை நேர்ந்து, கொண்டு ஆண்டவருக்குக் காணிக்கையாய் இருக்கும் நாளெல்லாம் கொடிமுந்திரிப்பழ முதல் பழத்திலுள்ள விதைவரையிலும், செடியினின்று உண்டாகிய யாதொன்றையும் அவர்கள் உண்ணலாகாது.

5 நசரேயன் ஆண்டவருக்குத் தன்னை நேர்ந்து கொண்டுள்ள விரத நாளெல்லாம் நிறைவெய்து முன்னே நாவிதன் கத்தி அவன் தலையின் மேல் படலாகாது. அவன் புனிதனாய் இருந்து, தன் தலைமயிரை வளர விடக்கடவான்.

6 தன் நேர்ச்சையின் எல்லா நாட்களிலும் பிணம் இருக்கும் இடத்திற்கு அவன் போகலாகாது.

7 இறந்தவர் தன் தந்தையானாலும் சகோதர சகோதரியானாலும், அவர்களுடைய இழவைப்பற்றி முதலாய் அவன் தன்னைத் தீட்டுப் படுத்தலாகாது. ஏனென்றால், அவன் கடவுளுக்குத் தன்னை நேர்ந்து கொண்ட அந்த விரதம் அவன் தலைமேல் இருக்கின்றது.

8 அவன்தன் விரத நாளெல்லாம் ஆண்டவருக்குப் புனிதனாக இருப்பான்.

9 ஆனால், யாரேனும் திடீரென அவன் முன்னிலையில் இறந்து விட்டால், நசரேய விரதத்தைக் கொண்டுள்ள அவனது தலை தீட்டுப்பட்டதனால், அவன் தன் சுத்திகர நாளிலும் ஏழாம் நாளிலும் தன் தலைமயிரை (இரு முறை) சிரைத்துக் கொண்டு,

10 எட்டாம் நாளில் சாட்சிய உடன்படிக்கைக் கூடாரவாயிலேயே இரண்டு காட்டுப் புறாக்களை அல்லது புறாக் குஞ்சுகளைக் குருவினிடம் கொண்டு வருவான்.

11 குரு ஒன்றைப் பாவ நிவாரணப் பலியாகவும், மற்றொன்றை முழுத்தகனப் பலியாகவும் படைத்த பிறகு, பிணத்தினால் அவனுக்குண்டான தீட்டைப்பற்றி மன்றாடி அன்றுதானே அவன் தலையைப் பரிசுத்தப் படுத்துவார்.

12 அதுவுமின்றி, அவன் திரும்பவும் தன் விரத நாட்களை ஆண்டவருக்கு நேர்ச்சை செய்து, ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டியைப் பாவ நிவாரணப் பலியாக ஒப்புக் கொடுப்பான். அவ்வாறு செய்தும் அவனுடைய விரதம் தீட்டுப்பட்டுப் போனதனால் முந்திய நாட்கள் வீணாய்ப் போயின.

13 நேர்ச்சை பற்றிய சட்டம் இதுவே: அவனது இந்த விரத நாட்கள் நிறைவெய்திய பின்பு, (குரு) அவனை உடன்படிக்கைக் கூடார வாயிலண்டை கூட்டிக்கொண்டு வந்து,

14 அவனுடைய காணிக்கையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பார். அதாவது: முழுத் தகனப் பலிக்காகப் பழுதில்லாத ஒரு வயதுள்ள ஓர் ஆட்டுக் குட்டியையும், பாவநிவாரணப் பலிக்காக ஒரு வயதுள்ள பழுதற்ற ஓர் ஆட்டையும், சமாதானப் பலிக்காகப் பழுதற்ற ஓர் ஆட்டுக் கிடாயையும்,

15 ஒரு கூடையிலே எண்ணெய் தெளிக்கப்பட்ட புளியாத அப்பங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளியாத அடைகளையும் அவைகளுக்கடுத்த பான போசனப் பலிகளையும் கொண்டுவரக் கடவான்.

16 இவற்றை யெல்லாம் குரு எடுத்து ஆண்டவருடைய முன்னிலையில் வைத்து, பாவநிவாரணப் பலியையும் முழுத் தகனப்பலியையும் செலுத்துவார்.

17 ஆனால், ஆட்டுக்கிடாயைச் சமாதானப் பலியாகக் கொன்று போடுவதோடு, புளியாதவற்றைக் கொண்டுள்ள கூடையையும், வழக்கமாய்ச் செலுத்த வேண்டிய பானப் பொருட்களையும் படைக்கக்கடவார்.

18 அப்பொழுது உடன்படிக்கைக் கூடார வாயிலில் நசரேயனது நேர்ச்சைத் தலைமயிர் சிறைக்கப்படும். குரு இந்தத் தலைமயிரை எடுத்து, சமாதானப் பலியின் கீழேயுள்ள நெருப்பிலே போடுவார்.

19 பிறகு வேக வைக்கப்பட்ட கிடாயின் முன் தொடைகளில் ஒன்றையும், கூடையிலுள்ள புளியாத ஓர் அப்பத்தையும், புளியாத ஓர் அடையையும் எடுத்து மொத்தமாய் நசரேயனுடைய உள்ளங்கையிலே வைத்து,

20 அவற்றை மறுபடியும் அவன் கையிலிருந்து வாங்கி ஆண்டவர் முன்னிலையில் உயர்த்திக் காட்டுவார். காணிக்கையாய் கொடுக்கப்பட்ட மேற்கண்ட பொருட்களும், முன்பே கட்டளைப்படி பிரிக்கப்பட்ட மார்புப்பாகமும், முன் தொடையும் குருவைச் சேரும். இவையெல்லாம் நிறைவேறிய பின் நசரேயன் கொடி முந்திரிப் பழச் சாற்றைக் குடிக்கலாம்.

21 தன்னை ஆண்டவருக்குக் காணிக்கையாய் நேர்ந்து கொண்ட நாளில், தன்னால் இயன்றதைத் தவிர நசரேயன் ஒப்புக் கொடுக்க வேண்டிய காணிக்கை பற்றிய சட்டம் இதுவே. அவன் தன் ஆன்மீக நன்மைக்கும் புண்ணியத் தேர்ச்சிக்கும் என்னென்ன நேர்ந்து கொண்டிருப்பானோ அவ்விதமே செய்வான் என்று ஆண்டவர் அருளினார்.

22 பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

23 நீ ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் சொல்ல வேண்டியது என்னவென்றால்: இஸ்ராயேல் மக்களுக்கு ஆசிர் அளிக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்துச் சொல்ல வேண்டியதாவது:

24 ஆண்டவர் உனக்கு ஆசீர் அளித்துக் காப்பாற்றுவாராக.

25 ஆண்டவர் உனக்குத் தம்முடைய திருமுகத்தைக் காண்பித்து, உன்மேல் இரக்கமாய் இருப்பாராக.

26 ஆண்டவர் உன் பக்கம் தம் திருமுகத்தைத் திருப்பி, உனக்குச் சமாதானம் அருள்வாராக என்பதாம்.

27 இப்படி அவர்கள் இஸ்ராயேல் மக்கள் மீது நம்முடைய பெயரைக் கூறி வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசீர் அளிப்போம் என்றருளினார்.

அதிகாரம் 07

1 வேலையெல்லாம் முடிந்து மோயீசன் திருஉறைவிடத்தை நிறுவியபோது, அதையும், அதன் எல்லாப் பொருட்களையும், பலி பீடத்தையும், அதைச் சார்ந்த எல்லாவற்றையும் எண்ணெய் பூசி அபிசேகம் செய்து புனிதப்படுத்தினார்.

2 இஸ்ராயேலின் தலைவர்களும், அந்ததந்தக் கோத்திரத்திலிருந்த வம்சத் தலைவர்களும், எண்ணப்பட்டவர்களை மேற்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்டவர்களும்,

3 ஆறு கூண்டு வண்டிகளையும் பன்னிரண்டு மாடுகளையும் ஆண்டவர் முன்னிலையில் காணிக்கையாய் வைத்தார்கள். இரு பிரபுக்களுக்கு ஒரு வண்டியும், ஒரு பிரபுவுக்கு ஒரு மாடுமாகக் கொடுத்தார்கள். அவர்கள் அவற்றை உறைவிடத்துக்கு முன்பாகக் கொண்டு வந்தபோது,

4 ஆண்டவர் மோயீசனை நோக்கி:

5 உறைவிடத்தின் உபயோகத்திற்காக நீ அவற்றை அவர்களிடமிருந்து வாங்கி, லேவியருக்கு அவரவருடைய வேலைக்குத் தக்கபடி பங்கிட்டுக் கொடு என்றார்.

6 ஆகையால் மோயீசன் வண்டிகளையும் மாடுகளையும் வாங்கி லேவியரிடம் ஒப்புவித்தார்.

7 இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் ஜேற்சோன் புதல்வருக்கு அவர்கள் தேவைக்குத் தக்கபடி கொடுத்தார்.

8 குருவாகிய ஆரோனின் புதல்வன் இத்தமாருக்குக் கீழ்ப்பட்டிரந்த மேறாரியின் புதல்வருக்கு அவர்கள் தொழிலுக்கும் சேவைக்கும் தக்கபடி நான்கு வண்டிகளையும் எட்டு மாடுகளையும் கொடுத்தார்.

9 ககாத்தின் புதல்வர்களுக்கு வண்டியோ மாடோ ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் கூடாரத்துக்குள்ளேயே வேலை செய்து, சுமக்க வேண்டிய சுமையைத் தோள் மேலே சுமப்பார்கள்.

10 பலிபீடம் அபிசேகம் செய்யப்பட்ட நாளிலே பிரபுக்கள் அதன் முன்பாகத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

11 அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: பலிபீடத்தின் நேர்ச்சைக்காக ஒவ்வொரு பிரபுவும் தனக்குக் குறிக்கப்பட்ட நாளில் காணிக்கை செலுத்தக்கடவான் என்றார்.

12 (அவர்கள் அவ்வாறே செய்தார்கள்). முதல் நாளில் யூதா கோத்திரத்தானாகிய அமினதாபின் புதல்வன் நகஸோன் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.

13 அவன் காணிக்கையாவது: புனித இடத்துக்குச் சீக்கல் கணக்குப் படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், மேற்படி சீக்கல் கணக்கில் எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தான்).

14 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அதில் தூபவகைகள் நிறைந்திருந்தன).

15 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய்,

16 ஒரு வயதுள்ள ஓர் ஆட்டுக்குட்டி, பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,

17 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதுள்ள ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை அமினதாபின் புதல்வனாகிய நகஸோனுடைய காணிக்கையாம்.

18 இரண்டாம் நாள் இசக்கார் கோத்திரத்தின் தலைவனும் சூவாரின் புதல்வனுமான நத்தானியேல் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.

19 அதாவது, புனித இடத்துச் சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).

20 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதுமான ஒரு தூபக்கலசம் - (அது தூப வகைகளினாலே நிறைந்திருந்தது).

21 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,

22 பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய், சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக் கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள்,

23 ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை சூவாரின் புதல்வனாகிய நத்தானியேலுடைய காணிக்கையாம்.

24 மூன்றாம் நாளிலே சாபுலோன் கோத்திரத்தின் தலைவனும் ஏலோனின் புதல்வனுமான எலியாப் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.

25 அதாவது புனித இடத்துச் சீக்கல் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).

26 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).

27 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,

28 பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,

29 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக் கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை ஏலோனின் புதல்வனாகிய எலியாபுடைய காணிக்கையாம்.

30 நான்காம் நாளிலே ரூபன் கோத்திரத்தின் தலைவனும் செதெயூரின் புதல்வனுமான எலிசூர் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.

31 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).

32 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).

33 முழுத் தகனப்பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய்,

34 ஒரு வயதான ஓர் ஆட்டுக்குட்டி, பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,

35 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக் கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை செதெயூரின் புதல்வனாகிய எலிசூருடைய காணிக்கையாம்.

36 ஐந்தாம் நாளிலே சிமையோன் கோத்திரத்தின் தலைவனும் சுரிஸதையின் புதல்வனுமான சலமியேல் என்பவன தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.

37 அதாவது, புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு- (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).

38 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக்கலசம்- (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).

39 முழத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,

40 பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,

41 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை சூரிஸதையின் புதல்வனாகிய சலமியேலுடைய காணிக்கை.

42 ஆறாம் நாளிலே காத் கோத்திரத்தின் தலைவனும் துயேலின் புதல்வனுமான எலியஸாப் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.

43 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).

44 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக்கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).

45 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய்,

46 ஒரு வயதான ஆட்டுக்குட்டி, பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,

47 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக் கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை துயேலின் புதல்வனாகிய எலியஸாபுடைய காணிக்கையாம்.

48 ஏழாம் நாளிலே எபிராயீம் கோத்திரத்தின் தலைவனும் அமியூதின் புதல்வனுமான எலிஸ்மா தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.

49 அதாவது புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கிண்ணம், ஏழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).

50 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).

51 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக்குட்டி,

52 பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக்கிடாய்,

53 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை அமியூதின் புதல்வனாகிய எலிஸ்மாவுடைய காணிக்கையாம்.

54 எட்டாம் நாளிலே மனஸே கோத்திரத்தின் தலைவனும் பதசூரின் புதல்வனுமான கமலியேல், தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.

55 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).

56 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).

57 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,

58 பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,

59 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை பதசூரின் புதல்வனாகிய கமலியேலுடைய காணிக்கையாம்.

60 ஒன்பதாம் நாளிலே பெஞ்சமின் கோத்திரத்தின் தலைவனும் செதேயோனின் புதல்வனுமான அபிதான் தலைவன் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.

61 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).

62 பத்துச் சீக்கல் நிறையுள்ளதம் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது ).

63 முழுத்தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய், ஒரு வயதாள ஓர் ஆட்டுக்குட்டி,

64 பாவ நிவாரணப்பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,

65 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள். ஐந்து வெள்ளாட்டுக்கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகள். இவை செதெயோனின் புதல்வனாகிய அபிதானுடைய காணிக்கையாம்.

66 பத்தாம் நாளிலே தான் கோத்திரத்தின் தலைவனும், அமிசதாயின் புதல்வனுமான ஐயேசர் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.

67 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).

68 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).

69 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக்குட்டி,

70 பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,

71 சமாதானப்பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகள் - இவை அமிசதாயின் புதல்வனாகிய ஐயேசருடைய காணிக்கையாம்.

72 பதினோராம் நாளிலே ஆசேர் கோத்திரத்தின் தலைவனும் ஒக்கிரானின் புதல்வனுமாகிய பெகியேல் தலைவன் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.

73 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).

74 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).

75 முழுத்தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,

76 பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,

77 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக்கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை ஒக்கிரானின் புதல்வனாகிய பெகியேலுடைய காணிக்கையாம்.

78 பன்னிரண்டாம் நாளிலே நெப்தலி கோத்திரத்தின் தலைவனும் ஏனானின் புதல்வனுமான ஐரா தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.

79 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).

80 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).

81 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய்,

82 ஒரு வயதான ஓர் ஆட்டுக்குட்டி, பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக்கிடாய்,

83 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகள். இவை ஏனானின் புதல்வனாகிய ஐராவுடைய காணிக்கையாம்.

84 பலிபீடத்தின் நேர்ச்சைக்காக அபிசேகம் செய்யப்பட்டபோது, இஸ்ராயேல் தலைவர்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டவையாவன: வெள்ளிக் கிண்ணங்கள் பன்னிரண்டு, வெள்ளித் தட்டுகள் பன்னிரண்டு, பொன்னால் செய்யப்பட்ட தூபக் கலசங்கள் பன்னிரண்டு.

85 ஒவ்வொரு வெள்ளிக் கிண்ணமும் நூற்றுமுப்பது சீக்கல் நிறையும், ஒவ்வொரு தட்டும் எழுபது சீக்கல் நிறையுமாக இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் புனித இடத்து நிறைக் கணக்குப்படி இரண்டாயிரத்து நானூறு சீக்கல்.

86 தூபவகைகளால் நிறைந்த, பொன்னால் செய்யப்பட்ட பன்னிரண்டு தூபக்கலசங்கள். ஒவ்வொரு பொற்கலசமும் புனித இடத்தின் நிறைக்கணக்குப் படி பத்துச் சீக்கலும், கலசங்களின் பொன்னெல்லாம் நூற்றிருபது சீக்கலும் இருக்கும்.

87 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட மாடுகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கான உணவு தானியங்கள், பாவ நிவாரணப்பலிக்காகப் பன்னிரண்டு, வெள்ளாட்டுக்கிடாய்கள்,

88 சமாதானப் பலிக்காக மாடுகள் இருபத்து நான்கு, ஆட்டுக்கிடாய்கள் அறுபது, வெள்ளாட்டுக் கிடாய்கள் அறுபது, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் அறுபது. இவைகளெல்லாம் பலிபீடத்தின் நேர்ச்சைக்காக அபிசேக நாளின்போது ஒப்புக்கொடுக்கப்பட்டன.

89 மோயீசன் கடவுளின் ஆலோசனை கேட்கும் பொருட்டு எப்பொழுது உடன்படிக்கையின் கூடாரத்திற்குள் புகுவாரோ அப்பொழுது இரக்கத்தின் இருப்பிடத்தினின்று தனக்கு விடை கொடுக்கிறவருடைய குரலைக் கேட்டுக் கொண்டிருப்பார். இரக்கத்தின் இருப்பிடம் சாட்சியப் பெட்டியின்மேல் இரண்டு கெருபீம்கள் நடுவே இருந்தது. அதனின்றே குரல்வரும்.

அதிகாரம் 08

1 மறுபடியும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ ஆரோனுக்குச் சொல்ல வேண்டியது:

2 நீ ஏழு விளக்குகளை ஏற்றும்போது, விளக்குத் தண்டைத் தென்புறத்திலே நிறுத்தக்கடவாய். ஆதலால், விளக்குகள் காணிக்கை அப்பங்களின் மேசைக்கு நேரே வடபுறத்தை நோக்கியிருக்கும்படி கட்டளையிடுவாய். அவை விளக்குத் தண்டுக்கு எதிராகவே எரிய வேண்டும் என்று கட்டளையிடுவாய். அவை விளக்குத் தண்டுக்கு எதிராகவே எரிய வேண்டும் என்று சொல்வாய் என்றருளினார்.

3 ஆரோன் இதைச் செய்து, ஆண்டவர் மோயீசனைக் கட்டளையிட்டிருந்தபடியே விளக்குகளை விளக்குத் தண்டின்மேலே ஏற்றினார்.

4 இந்த விளக்குத் தண்டு செய்யப்பட்ட விதமாவது: நடுத்தண்டு முதல் கிளைகளின் இரு பக்கத்திலுமுள்ள பூக்கள் வரையிலும் பொன்னாலான தண்டு சுத்தியால் அடித்துச் செய்யப்பட்டிருந்தது. ஆண்டவர் தமக்குக் காண்பித்திருந்த மாதிரியின்படியே மோயீசன் அதனைச் செய்தார்.

5 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

6 நீ இஸ்ராயேல் மக்களினின்று லேவியர்களைப் பிரித்தெடுத்து, அவர்களைப் புனிதப்படுத்தக் கடவாய்.

7 எவ்விதமென்றால்: நீ அவர்கள் மேல் சுத்திகரிப்பு நீரைத் தெளித்த பின்பு, அவர்கள் உடல் முழுவதையும் சவரம் செய்து, தங்கள் உடைகளையும் தங்களையும் கழுவிக் கொண்டபின்,

8 மந்தையினின்று ஒரு காளையையும், போசனப் பலிக்கு வேண்டிய எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவையும் கொண்டுவாருங்கள். நீயோ பாவப்பரிகாரத்திற்காக மந்தையினின்று வேறோரு காளையைத் தெரிந்தெடுத்து,

9 இஸ்ராயேல் மக்களின் சபையார் எல்லாரையும் வரச் சொல்லி, லேவியர்களை உடன்படிக்கைக் கூடாரத்தின் முன் வரச் செய்வாய்.

10 லேவியர்கள் ஆண்டவர் முன்னிலையில் நிற்கும்பொழுது இஸ்ராயேல் மக்கள் அவர்கள்மீது தங்கள் கைகளை வைக்கக்கடவார்கள்.

11 அப்பொழுது ஆரோன் இஸ்ராயேல் மக்களின் காணிக்கையாக ஆண்டவருடைய பணிகளைச் செய்யும் பொருட்டு லேவியர்களை ஆண்டவருக்குச் சமர்ப்பிப்பான்.

12 அதன் பிறகு லேவியர்கள் காளைகளின் தலைமீது தங்கள் கைகளை வைப்பார்கள். நீயோ பாவ நிவாரணப் பலியாக இரண்டில் ஒரு காளையையும், அவர்களுக்காக நீ வேண்டிக்கொள்ளும்படி ஆண்டவருக்கு முழுத் தகனப் பலியாக மற்றொரு காளையையும் பலியிடுவாய்.

13 பிறகு ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் முன்பாக லேவியர்களை நிறுத்தி, அவர்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து அபிசேகம் செய்வாய்.

14 லேவியர்கள் நம்முடையவர்களாய் இருக்கும்படி நீ அவர்களை இஸ்ராயேல் மக்களினின்று பிரித்தெடுக்கக் கடவாய்.

15 இவையெல்லாம் நிறைவேறின பிறகு அவர்கள் நமக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு உடன்படிக்கைக் கூடாரத்தினுள் புகுவார்கள். இதுவே நீ அவர்களைப் புனிதப்படுத்தி, ஆண்டவராகிய நமக்கு இஸ்ராயேல் மக்களால் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களென்று அபிசேகம் செய்யவேண்டிய சடங்கு முறை.

16 இஸ்ராயேலில் தாயின் கருப்பையைத் திறந்து பிறக்கிற எல்லாத் தலைபேறுக்கும் பதிலாக நாம் அவர்களை எடுத்துக் கொண்டோம்.

17 இஸ்ராயேல் மக்களிடையே மனிதரிலும் மிருகங்களிலும் முதற் பேறானவையெல்லாம் நம்முடையனவல்லவா? நாம் எகிப்து நாட்டில் முதற் பேறானவற்றையெல்லாம் அழித்த நாள் முதற் கொண்டு அவற்றை நமக்கே புனிதப்படுத்திக் கொண்டோம்.

18 எனவே இஸ்ராயேல் மக்களின் எல்லாத் தலைச்சன் புதல்வர்களுக்கும் பதிலாக லேவியர்களை நமக்கென்று புனிதப்படுத்தி,

19 அவர்கள் இஸ்ராயேல் மக்கள் சார்பாக உடன்படிக்கைக் கூடாரத்தில் பணிவிடை செய்யும்படியாகவும், இஸ்ராயேல் மக்களில் மற்ற எவனாயினும் மூலத்தானத்தின் உள்ளே புகத் துணிந்தால் இஸ்ராயேல் மக்களுக்குத் துன்பம் உண்டாகாதபடி அவர்களுக்காக வேண்டிக் கொள்ளும்படியாகவும், நாம் லேவியரை இஸ்ராயேல் மக்களினின்று பிரித்தெடுத்து, ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் நன்கொடையாகக் கொடுத்தோம் என்றார்.

20 அப்பொழுது மோயீசனும், ஆரோனும், இஸ்ராயேல் மக்களின் சபையார் எல்லாரும், ஆண்டவர் லேவியர்களைக் குறித்து மோயீசனுக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்.

21 லேவியர்கள் புனிதப்படுத்தப்பட்டுத் தங்கள் உடைகளைக் கழுவின பின்பு ஆரோன் அவர்களை ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து,

22 அவர்கள் புனிதர்களாய் ஆரோனுக்கும் அவர் புதல்வர்களுக்கும் முன்பாக உடன்படிக்கைக் கூடாரத்தினுள் தங்கள் பணிவிடைகளைச் செய்யப் புகும் வண்ணம் அவர்களுக்காக மன்றாடினார். ஆண்டவர் லேவியரைக் குறித்துக் கட்டளையிட்டிருந்தபடியே அவர்கள் செய்தார்கள்.

23 மறுபடியும் ஆண்டவர் மோயீசனை நோக்கி,

24 லேவியரைப் பற்றிய சட்டம் யாதென்றால்: இருபத்தைந்து முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் உடன்படிக்கைக் கூடாரத்தில் பணிவிடை செய்யப் புகுவார்கள்.

25 ஐம்பது வயது நிறைவெய்திய பின்போ அவர்கள் திருப்பணியை விட்டுவிடுவார்கள்.

26 அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தில் தங்களுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளைக் காவல் காக்கத் தங்கள் சகோகரருக்கு உதவியாக இருப்பார்கள். ஆனால், குருக்களைச் சார்ந்த திருப்பணிச் சடங்குகளை அவர்கள் கண்டிப்பாய்ச் செய்யலாகாது. இப்படி, லேவியர் செய்ய வேண்டிய வேலையைக் குறித்து நீ திட்டம் செய்யக் கடவாய் என்றார்.

அதிகாரம் 09

1 மீண்டும் இஸ்ராயேர் எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த இரண்டாம் ஆண்டின் முதல் மாதத்திலே, சீனாய்ப் பாலைவனத்தில் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

2 இஸ்ராயேல் மக்கள் பாஸ்காத் திருவிழாவைக் குறித்த காலத்தில்,

3 அதாவது இம்மாதத்தின் பதினான்காம் நாள் மாலை வேளையிலே - அதற்கடுத்த எல்லாச் சடங்கு முறைகளின்படி கொண்டாடக்கடவார்கள் என்றார்.

4 ஆகையால், மோயீசன் இஸ்ராயேல் மக்கள் பாஸ்காவைக் கொண்டாடும்படி கட்டளையிட்டார்.

5 அவர்கள் அதைச் சீனாய் மலையில் குறித்த காலமாகிய அம்மாதம் பதினான்காம் நாள் மாலை வேளையில் கொண்டாடினார்கள். இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே எல்லாவற்றையும் செய்தார்கள்.

6 ஆனால், ஒருவன் இறந்து போனதை முன்னிட்டுச் சிலர் தீட்டுப்பட்டாவர்களாயிருந்து, பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடக் கூடாதவர்களாய் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து,

7 அவர்களை நோக்கி: நாங்கள் ஒரு மனிதன் இறந்ததனாலே தீட்டுப்பட்டவர்கள். குறித்த காலத்தில் இஸ்ராயேல் மக்களோடுகூட ஆண்டவருக்குக் காணிக்கை செலுத்தாதபடிக்கு நாங்கள் விலக்கப்பட வேண்டியதென்ன? என்று முறையிட்டார்கள்.

8 மோயீசனோ, பொறுங்கள், உங்களைப் பொறுத்தமட்டில் ஆண்டவர் என்ன கட்டளை கொடுப்பாரென்று கேட்கப் போகிறேன் என்று பதில் கூறினார்.

9 அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி:

10 நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: உங்கள் சந்ததியாரிலே எவனும் சாவை முன்னிட்டுத் தீட்டுப்பட்டிருந்தாலும், அல்லது பிரயாணத்தை முன்னிட்டு உங்களை விட்டுத் தூர இருந்தாலும் அவன் ஆண்டவருடைய பாஸ்காத் திருவிழாவை

11 இரண்டாம் மாதம் பதினான்காம் நாள் மாலை நேரத்திலே கொண்டாடக்கடவான். புளியாத அப்பத்தோடும் காட்டுக் கீரைகளோடும் அதை உண்பான்.

12 விடியற்காலை வரையிலும் அதில் எதையும் மீதியாக வைக்காமலும், எலும்புகளிலொன்றையும் முறிக்காமலும், பாஸ்காவைக் குறித்துக் கட்டளையிடப்பட்ட எல்லாச் சடங்கு முறைகளின்படியும் அதை அனுசரிக்கக்கடவான்.

13 ஆனால், தூய்மையாயிருக்கிறவர்களிலும், அல்லது தூரப் பிரயாணம் போகாதவர்களிலும், எவன் பாஸ்காவை அனுசரியாதிருப்பானோ அவன் தன் மக்களிடையே இராதபடிக்குக் கொலை செய்யப்படுவான்.

14 அகதி அல்லது அந்நியன் ஒருவன் உங்களிடத்தில் தங்கியிருந்தால், அவனும் சட்ட முறைப்படி பாஸ்காவை அனுசரிப்பான். இது அகதியைக் குறித்தும் அந்நியனைக் குறித்தும் உங்களுக்கு ஒரு கட்டளை என்றருளினார்.

15 தவிர, கூடாரம் நிறுவப்பட்ட நாளில் மேகம் அதை மூடிற்று. மாலையான போது உறைவிடத்தின் மேல் நெருப்பு மயமான ஒரு தோற்றம் உண்டாகி விடியற்காலை வரையிலும் அது காணப்பட்டது.

16 இவ்வாறு நாள்தோறும் நிகழும். (எவ்வாவென்றால்:) பகலில் ஒரு மேகமும், இரவில் நெருப்புத் தோற்றமும் உறைவிடத்தை மூடிக் கொண்டிருக்கும்.

17 கூடாரத்தை மூடும் நெருப்பு எப்போது மறையுமோ அப்போது இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப் போவார்கள். மேகம் எவ்விடத்தில் தங்கக் காண்பார்களோ அவ்விடத்தில் பாளையமிறங்குவார்கள்.

18 இப்படி ஆண்டவருடைய கட்டளைப்படி பயணம் செய்வார்கள்; அவருடைய கட்டளைப்படி கூடாரத்தைத நிறுவுவார்கள். உறைவிடத்தின் மேல் மேகம் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் அவ்விடத்திலேயே தங்கியிருப்பார்கள்.

19 மேகம் நெடுநாள் உறைவிடத்தின் மேல் தங்கியிருக்கும்போது இஸ்ராயேல் மக்கள் புறப்படாமல், ஆண்டவருடைய திருவுளத்துக்குக் காத்திருப்பார்கள்.

20 எத்தனை நாள் மேகம் கூடாரத்தை மூடுமோ அத்தனை நாளும்அவர்கள் அந்த இடத்திலே இருப்பார்கள். ஆண்டவருடைய கட்டளைப்படி பாளையமிறங்குவார்கள்; ஆண்டவருடைய கட்டளைப்படி பாளையம் பெயர்வார்கள்.

21 மேகம் மாலை முதல் விடியற்காலை வரையில் நின்று கொண்டு, விடியற்காலத்தில் உயர எழும்பும் போது அவர்கள் புறப்படுவார்கள். ஒரு பகலும் ஓர் இரவும் தங்கின பின்பு அது நீங்குமாயின், அவர்களை பாளையம் பெயர்வார்கள்.

22 ஆனால், மேகம் இரண்டு நாளேனும், ஒரு மாதமேனும், அதற்கு மேலேனும் கூடாரத்தின் மேலே தங்கினால், இஸ்ராயேல் மக்கள் புறப்படாமல், அங்கேயே தங்கிவிடுவார்கள். அது உயர எழும்பியவுடனே புறப்படுவார்கள்.

23 ஆதலால், ஆண்டவருடைய வாக்குப்படி கூடாரம் அடிப்பார்கள்; அவருடைய வாக்குப்படியே வழி நடப்பார்கள். ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் அவருடைய திருவுளத்திற்குக் காத்திருப்பார்கள்.

அதிகாரம் 10

1 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

2 பாளையம் பெயரும்படி சபையை வரவழைப்பதற்கு உபயோகிக்க இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்து கொள்வாய். அவை சுத்தியால் அடித்துச் செய்யப்பட்டதாய் இருக்க வேண்டும்.

3 நீ எக்காளம் ஊதும்போது சபையார் எல்லாரும் உடன்படிக்கைக் கூடாரவாயிலின் முன் உன்னிடம் வந்து கூட வேண்டும்.

4 நீ ஒரே தடவை ஊதினால் தலைவர்களும் இஸ்ராயேல் கோத்திரங்களின் தலைவர்களும் உன்னிடம் வந்து கூடக்கடவார்கள்.

5 எக்காளம் பெருந்தொனியாய் முழங்க நிறுத்தி நிறுத்தி ஊதினால், கிழக்கில் இருக்கிற பாளையங்கள் முதலில் புறப்படக்கடவன.

6 எக்காளத்தின் இரண்டாவது தொனி, முதல் தொனியைப்போல் இருந்தால், தெற்கே இறங்கியிருக்கிறவர்கள் தங்கள் கூடாரங்களைப் பெயர்ப்பார்கள். இப்படி எக்காளங்கள் முழங்க முழங்க மற்றுமுள்ள பாளையங்களும் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்படக்கடவன.

7 மக்களைக் கூட்டுவதற்கு நீங்கள் சாதாரணமாய் ஊத வேண்டுமேயல்லாது முழங்க வேண்டாம்.

8 ஆரோனின் புதல்வராகிய குருக்களே எக்காளம் ஊதக்கடவார்கள். இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய முறைமையாக இருக்கும்.

9 உங்களை விரோதிக்கிற பகைவர்களோடு போராட உங்கள் நாட்டினின்று புறப்படுகையில், நீங்கள் எக்காளத்தைப் பெருந்தொனியாய் ஊதுவீர்கள். அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைப் பகைவரிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பார்.

10 உங்கள் விருந்துகளிலும், திருநாட்களிலும், மாதத்தின் முதல் நாள் என்றும் நீங்கள் சமாதானப் பலி, முழுத் தகனப் பலிகள் முதலியன செலுத்தும்போது கடவுள் உங்களை நினைவுகூரும்படியாய் எக்காளங்களை முழக்கக்கடவீர்கள். நாமே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்று திருவுளம்பற்றினார்.

11 அப்படியிருக்க, இரண்டாம் ஆண்டிலே இரண்டாம் மாதம் இருபதாம் நாளன்று உடன்படிக்கைக் கூடாரத்தினின்று மேகம் எழுந்துவிடவே,

12 இஸ்ராயேல் மக்கள் தத்தம் அணி வரிசையின்படி சீனாய்ப் பாலைவனத்திலிருந்து புறப்பட்டார்கள். மேகம் பாரான் என்னும் பாலையில் தங்கிற்று.

13 மோயீசன் மூலமாய் ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, அப்போது முதன் முதல் பிரயாணமானவர்கள்,

14 அமினதாபின் புதல்வனாகிய நகஸோனைத் தலைவனாய்க் கொண்டிருந்த யூதா புதல்வர்களின் சேனையாம். அவர்கள் தங்கள் அணி வரிசையின்படி புறப்பட்டார்கள்.

15 சுவாரின் புதல்வனாகிய நத்தானியேலைத் தலைவனாகக் கொண்டிருந்த இசாக்கார் கோத்திரத்தார் பிறகு பயணமானார்கள்.

16 ஏலோனின் புதல்வனாகிய எலியாபைத் தலைவனாகக் கொண்டிருந்த சபுலோன் கோத்திரத்தார் பிறகு புறப்பட்டார்கள்.

17 அப்போது கடவுளின் உறைவிடத்தை இறக்கி வைத்து ஜேற்சோனின் புதல்வர்களும் மேறாரின் புதல்வர்களும் அதைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டார்கள்.

18 அப்பொழுது ரூபனின் புதல்வர் தங்கள் தங்கள் அணி வரிசைகளின்படி புறப்பட்டார்கள். அவர்களுக்குச் செதேயூரின் புதல்வனாகிய எலிசூர் தலைவனாய் இருந்தான்.

19 பின்பு சுரிஸதையின் புதல்வனாகிய சலமியேலைத் தலைவனாகக் கொண்டிருந்த சிமையோனின் கோத்திரத்தார் (பின் தொடர்ந்தார்கள்).

20 அதன் பிறகு துயேலின் புதல்வனாகிய எலியசாப் தலைவனாயிருந்த காத் கோத்திரத்தார் (புறப்பட்டனர்).

21 அப்போது ககாத்தியர் புனித மூலத்தானத்தைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள். புனித கூடாரம் எவ்விடத்தில் நிறுவப்படுமோ அவ்விடம் சேருமட்டும் அவர்கள் அதைச் சுமந்து போவார்கள்.

22 பின்னர் எபிராயிம் கோத்திரத்தார் தங்கள் தங்கள் அணி வரிசையின்படி புறப்பட்டார்கள். அவர்களுக்கு அமியூதின் புதல்வனாகிய எலிஸமா தலைவனாய் இருந்தான்.

23 மனாசே கோத்திரத்தாருக்குப் பதசூரின் புதல்வனாகிய கமாலியேல் தலைவனாய் இருந்தான்.

24 (இவர்கள் பிறகு வழி நடந்தார்கள்). பெஞ்சமின் கோத்திரத்தாருக்குச் செதெயோன் புதல்வனாகிய அபிதான் தலைவனாய் இருந்தான். (இவர்கள் பின் தொடர்ந்து போனார்கள்).

25 எல்லாப் படைகளுக்கும் கடைசிப் படையாகிய தான் கோத்திரத்தார் மற்றவர்களுக்குப் பின் தத்தம்அணி வரிசைப்படி பயணமானார்கள். அவர்களுக்கு அமிசதாய் புதல்வன் ஐயேசர் தலைவனாய் இருந்தான்.

26 ஆசேர் கோத்திரத்தாருக்கு ஒக்கிரானின் புதல்வனாகிய பெகியேல் தலைவனாய் இருந்தான்.

27 நெப்தலி கோத்திரத்தாருக்கு ஏனானின் புதல்வன் ஐரா தலைவனாய் இருந்தான்.

28 இஸ்ராயேல் மக்களை பாளையத்திலிருந்து புறப்படும்போது இவ்விதமாய் தத்தம் அணி வரிசையின்படி செல்வார்கள்.

29 அப்பொழுது மோயீசன் தம் மாமனாகிய இராகுவேல் என்னும் மதியானியனுடைய புதல்வனான ஓபாப் என்பவனை நோக்கி: கடவுள் எங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குப் போகிறோம். நீயும் எங்களோடு கூட வந்தால் உனக்கு நன்மை செய்வோம். ஆண்டவர் இஸ்ராயேலருக்கு நல்ல வாக்குறுதி தந்திருக்கிறார் என்று சொன்னார்.

30 அதற்கு அவன்: உம்மோடு நான் வர மாட்டேன். நான் பிறந்த நாட்டிற்குத் திரும்பிப் போவேன் என்று பதில் கூற,

31 மோயீசன், நீ எங்களை விட்டுப் போக வேண்டாம். பாலைவனத்தில் நாங்கள் பாளையம் இறங்கத் தக்க இடங்களை நீ அறிந்திருப்பதினால் எங்களுக்கு வழிகாட்டியாய் இருப்பாய்.

32 அப்படி எங்களோடு அந்நாட்டில் போய்ச் சேரும்போது ஆண்டவர் எங்களுக்குத் தந்தருளும் நன்மைகளிலே எது சிறந்ததோ அதை உனக்குக் கொடுப்போம் என்றார்.

33 ஆகையால், அவர்கள் ஆண்டவருடைய மலையை விட்டு மூன்று நாளும் நடந்து போகையில் ஆண்டவருடைய பெட்டகம் முன்னே சென்று, அவர்கள் அம் மூன்று நாளிலும் பாளையம் இறங்கவேண்டிய இடங்களைக் காண்பித்து வந்தது.

34 போகும் போது, ஆண்டவருடைய மேகம் பகலிலே அவர்களுக்கு மேலே தங்கிக் கொண்டிருந்தது.

35 பெட்டகம் தூக்கப்படும்போது, மோயீசன்: ஆண்டவரே! எழுந்தருளும். உமது பகைவர் சிதறுண்டு போகவும், உம்மைப் பழிக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போகவும் கடவார்களாக என்பார்.

36 அது இறக்கப்படும் போதோ: நீர் இஸ்ராயேல் என்னும் பெரும் படையிடம் திரும்பிவீராக என்பார்.

அதிகாரம் 11

1 அப்பொழுது ஒரு நாள் வழியில் தங்களுக்கு உண்டான களைப்பைப் பற்றி மக்கள் ஆண்டவருக்கு விரோதமாய் முறையிடத் தொடங்கினர். அதைக் கேட்டு ஆண்டவர் கோபம் கொண்டார். அவரால் உண்டாக்கப்பட்ட ஒரு நெருப்பு பாளையத்தின் கடைசி முனையை எரித்து அழித்து விட்டது.

2 அப்போது மக்கள் மோயீசனை நோக்கிக் கூக்குரலிட்டனர். மோயீசன் ஆண்டவரை மன்றாட நெருப்பு அவிந்து போயிற்று.

3 ஆண்டவருடைய நெருப்பு அவர்களிடையே பற்றி எரிந்ததனால், அவ்விடத்திற்கு நெருப்புக்காடு என்று அவர் பெயரிட்டார்.

4 பின்பு, இஸ்ராயேலரோடு கூட வந்திருந்த பல இன மக்கள் இறைச்சி உண்ண வேண்டுமென்று பேராசை கொண்டனர். அவர்கள் தங்களுடைய கட்சியில் பல இஸ்ராயலரையும் சேர்த்துக் கொண்டு, ஒரு மிக்க உட்கார்ந்து, அழுது: ஆ! நமக்கு இறைச்சியை உண்ணக் கொடுப்பவர் யார்?

5 நாம் எகிப்திலே செலவில்லாமல் உண்ட மீன்களையும், வெள்ளரிக் காய்களையும், கொம்மட்டிக் காய்களையும், பெரு முள்ளிக் கீரைகளையும் வெங்காய வெள்ளுள்ளிகளையும், நினைத்துக் கொள்ளுகிறோம்.

6 இப்பொழுதோ நமது உயிர் வாடுகிறது. மன்னாவைத் தவிர நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறோன்றும் இல்லையே என்றார்கள்.

7 மன்னாவோவென்றால் கொத்தமல்லி போலவும் உலூக முத்து நிறமாகவும் இருந்தது.

8 மக்கள் சுற்றித் திரிந்து அதைப் பொறுக்கிக் கொண்டு வந்து, எந்திரக் கல்லில் அரைத்து அல்லது உரலில் குத்தி யிடித்துச் சட்டியில் சமைப்பார்கள். பிறகு அதை அப்பங்களாக்குவார்கள். அதன் சுவை ஒலிவ எண்ணெயில் செய்த பணியாரத்தின் சுவை போல் இருக்கும்.

9 இரவு தோறும் பாளையத்தின்மீது பனி பெய்யும்போது மன்னாவும் பெய்யும்.

10 மக்கள் தங்கள் குடும்பத்தோடு தத்தம் கூடார வாயிலிலே அழுவதை மோயீசன் கேட்டார். ஆண்டவருக்கும் கோபம் மூண்டது; மோயீசனால் அதைப் பொறுக்க முடியவில்லை.

11 அவர் ஆண்டவரை நோக்கி: ஆண்டவரே அடியேனை வதைத்ததேன்? உமக்கு முன்பாக எனக்குக் கருணை கிடையாததென்ன? நீர் இந்த எல்லா மக்கள் பாரத்தையும் என்மேல் சுமத்தியதென்ன?

12 இந்த மக்களையெல்லாம் கருத்தாங்கியவன் நானோ? நானோ அவர்களைப் பெற்றெடுத்தேன்? அப்படியிருக்க நீர் அடியேனை நோக்கி: தாய்ப்பாலை உண்ணும் குழந்தையைச் சுமப்பதுபோல் நீ அவர்களை உண் மடியிலே சுமந்து கொண்டுபோ, நாம் ஆணையிட்டு அவர்களது முன்னோருக்கு வாக்குறுதி செய்துள்ள நாட்டிற்கு அவர்களை அழைத்துக்கொண்டு போ என்று எனக்குச் சொல்வானேன்?

13 இத்தனை மக்களுக்குக் கொடுக்க இறைச்சி எனக்கு எங்கிருந்து கிடைக்கும்? உண்ண எங்களுக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுது முறையிடுகிறார்களே!

14 இவர்கள் எல்லாரையும் நான் ஒருவனாகத் தாங்கக் கூடுமா? இது என்னாலே இயலாது.

15 ஆண்டவருடைய திருவுளம் என் விருப்பத்திற்கு இணங்குவது இயலாதாயின், இப்படிப்பட்ட சகிக்கக் கூடாத தொல்லையை நான் காணாதிருக்க, இறைவா இப்பொழுதே என்னைக் கொன்று விட்டு, உம்முடைய கண்களில் எனக்குக் கருணை கிடைக்கும்படி செய்தலே நலம் என்று சொன்னார்.

16 ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ இஸ்ராயேலிலுள்ள முதியோரில் மக்களை ஆளத்தக்கவர்களும் வயதில் முதியோர் எனவும், உனக்குத் தெரிந்த எழுபது பேரைத் தெரிந்து கொண்டு, உடன்படிக்கைக் கூடார வாயிலில், உன்னோடு கூட வந்து நிற்கும்படி செய்.

17 நாம் இறங்கிவந்து உன்னோடு பேசி, நீ ஒருவனாய் மக்களின் பாரத்தைச் சுமக்காமல், அவர்கள் அதைச் சுமக்க உனக்கு உதவிசெய்ய உன்மேல் இருக்கிற ஆவியில் வேண்டியமட்டும் நாம் எடுத்து அவர்கள்மேல் வைப்போம்.

18 இதுவும் தவிர, நீ மக்களை நோக்கி: உங்களைப் புனிதப் படுத்திக் கொள்ளுங்கள். நாளைக்கு இறைச்சி உண்பீர்கள். எங்களுக்கு இறைச்சியை உண்ணக் கொடுப்பவர் யார்? என்றும், எகிப்திலே எங்களுக்கு வசதியாய் இருந்தது என்றும் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். ஆதலால், நீங்கள் உண்ணும் பொருட்டு ஆண்டவர் உங்களுக்கு இறைச்சியைக் கொடுப்பார்.

19 நீங்கள் ஒரு நாள், இரண்டு நாள், ஐந்து, பத்து இருபது நாட்கள் மட்டுமல்ல, ஒரு மாதம் வரையிலும் உண்பீர்கள்.

20 உங்கள் மூக்கு வழியே வெளிப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப் போகு மட்டும் உண்பீர்கள். ஏனென்றால், நீங்கள் ஆண்டவரை நிந்தித்து: நாங்கள் எகிப்தை விட்டு ஏன் புறப்பட்டோம்? என்று அவருடைய முன்னிலையில் அழுதீர்களே என்று சொல் என்றார்.

21 அதற்கு மோயீசன் ஆண்டவரை நோக்கி: அவர்கள் ஆறிலட்சம் பேர் காலாட்படையினராயிருக்க, ஒரு மாதம் முழுவதும் அவர்களுக்கு இறைச்சியை உண்ணத் தருவோம் என்று நீர் சொல்கிறீரே;

22 அவர்களுக்குப் போதுமாயிருக்கும்படி ஆடுமாடுகளை யெல்லாம் அடிக்க வேண்டுமோ? அல்லது, கடல் மீன்களையெல்லாம் சேர்த்துப் பிடித்தாலும் அவர்களுக்குத் திருப்தி கொடுக்கப் போதுமாயிருக்குமோ? என்று கேட்டார்.

23 ஆண்டவர்: ஆண்டவருடைய கை பலவீனமாய்ப் போயிற்றோ? இதோ நம்முடைய வாக்குப்படி நடக்குமோ நடவாதோவென்று நீ இப்பொழுதே காண்பாய் என்றார்.

24 ஆகையால் மோயீசன் போய், ஆண்டவருடைய வார்த்தைகளை மக்களுக்குச் சொல்லி, இஸ்ராயேல் முதியோரில் எழுபது பேரைக் கூட்டி வந்து, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினார்.

25 ஆண்டவரோ மேகத்தினின்று இறங்கி வந்து மோயீசனோடு உரையாடிய பின்பு மோயீசனிடத்திலிருந்த ஆவியை அவ்வெழுபது பேருக்கும் பிரித்துக் கொடுத்தார். ஆவி தங்கள் மேல் வந்த தங்கினவுடனே அவர்கள் இறைவாக்குரைக்கத் தொடங்கினார்கள். அந்நாள் முதல் அவர்கள் இடைவிடாது இறைவாக்குரைத்தார்கள்.

26 அப்பொழுது எல்தாத், மேதாத் என்று அழைக்கப்படும் இரண்டு ஆடவர்மேல் ஆவி இறங்கியிருந்தும், அவர்கள் (எழுபது முதியோருடைய) பெயர்ப்பட்டியலில் எழுதப்பட்டிருந்தும், சாட்சியக் கூடாரத்திற்கு எழுந்து வராமல் பாளையத்திலே இருந்து கொண்டார்கள்.

27 அவர்கள் பாளையத்திலே இறைவாக்குரைக்கும் போது சிறுவன் ஒருவன் மோயீசனிடம் ஓடி வந்து: இதோ எல்தாத், மேதாத் என்பவர்கள் பாளையத்திலே இறைவாக்குரைக்கிறார்கள் என அறிவித்தான்.

28 உடனே, நூனின் புதல்வனும் மோயீசனுடைய ஊழியர்களில் சிறந்தவனுமாகிய ஜோசுவா மோயீசனை நோக்கி: தலைவா! அதைத் தடை செய்யும் என்றான்.

29 அதற்கு மோயீசன்: என் காரியத்தில் நீ எரிச்சலாய் இருப்பானேன்? (மக்கள்) எல்லாருமே இறைவாக்கினர் ஆக ஆண்டவர் அவர்கள் மேல் தம்முடைய ஆவியைத் தந்தால் நலமாயிருக்குமே என்றார்.

30 பின்னும் மோயீசன் இஸ்ராயேல் முதியவரோடு கூடப் பாளையத்திற்குத் திரும்பி வந்தார்.

31 நிற்க, ஆண்டவர் வீசச் செய்த ஒரு காற்று கடலுக்கு அப்பாலுள்ள நாட்டிலிருந்து காடைகளைத் (திரளாக) அடித்துக் கொண்டு வர, பாளையத்தில் மட்டு மல்ல - பாளையத்தைச் சுற்றிலும், ஒரு நாள் பயணம் எவ்வளவோ அவ்வளவு தொலை வரையிலும், காடைக் கூட்டம் பறந்து, தரையின் மேலே இரண்டு முழ உயரத்திலே பறந்து கொண்டிருந்தது.

32 அதைக் கண்டு மக்கள் எழுந்து, அன்று பகல் முழுவதும் இரவு முழுவதும் மறு நாளிலும் காடைகளைப் பிடித்துச் சேர்த்தார்கள். கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்திருந்தான். அவர்கள் அவற்றைப் பாளையத்தைச் சுற்றிலும் காயவிட்டார்கள்.

33 பற்களிடையே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்று கொண்டிருக்கையில் இதோ அவர்கள் மேல் ஆண்டவருடைய கோபம் மூண்டு, மாபெரும் வாதையாக அவர்களை வதைத்தது.

34 அதனை முன்னிட்டு அந்த இடத்திற்கு இச்சைக் கோரி என்று பெயரிடப்பட்டது. ஏனென்றால், எவரெவர் இறைச்சி மீது இச்சை கொண்டிருந்தார்களோ அவர்களை அவ்விடத்தில் அடக்கம் செய்தார்கள். பிறகு அவர்கள் அவ்விடம் விட்டு, ஆசெரோத்திலே வந்து தங்கினார்கள்.

அதிகாரம் 12

1 எத்தியோப்பியப் பெண்ணை மோயீசன் மணந்தபடியால் மரியாளும் ஆரோனும் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:

2 ஆண்டவர் மோயீசனைக் கொண்டு மட்டுமா பேசினார்? எங்களைக் கொண்டும் அவர் பேசவில்லையா? என்றார்கள். ஆண்டவர் அதைக் கேட்டார்.

3 மோயீசனோ பூமியிலுள்ள எல்லா மனிதர்களைக் காட்டிலும் மிக்க சாந்தமுள்ளவராய் இருந்தார்.

4 திடீரென (ஆண்டவர்) அவரையும், ஆரோன், மரியாள் என்பவர்களையும் நோக்கி: நீங்கள் மூவருமே உடன்படிக்கைக் கூடாரத்திற்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார். அவர்கள் புறப்பட்டு வந்த பிறகு

5 ஆண்டவர் மேகத்தூணில் இறங்கி ஆலயப் புகுமுகத்தில் நின்றவராய், ஆரோனையும் மரியாளையும் அழைத்தார். இவர்கள் இருவரும் போனார்கள்.

6 அப்பொழுது அவர்: நம்முடைய வார்த்தைகளை உற்றுக் கேளுங்கள். உங்களுக்குள்ளே ஒருவன் ஆண்டவருடைய இறைவாக்கினனாய் இருந்தால், அவனுக்குத் தரிசனத்தில் நம்மைக் காண்பிப்போம்: அல்லது கனவிலே அவனோடு பேசுவோம்.

7 நம்முடைய ஊழியனாகிய மோயீசனோ அப்படிப்பட்டவனல்லவே. அவன் நம்முடைய வீட்டிலெங்கும் மிக்க விசுவாச முள்ளவனாய் இருக்கிறான்.

8 நாம் அவனோடு நேரிலே பேசுகிறோம். நம்மை அவன் மறைவிலேனும் போலியாயேனும் காணாமல், கண்கூடாகவே நம்மைக் காண்கிறான். ஆதலால், நீங்கள் நம் ஊழியனாகிய மோயீசனை விரோதித்துப் பேச அஞ்சாதிருப்பதேன்? என்று சொல்லி,

9 கோபத்துடன் அவர்களை விட்டு மறைந்தார்.

10 அவர் மறைந்தபோது கூடாரத்தின் மீதிருந்த மேகம் நீங்கிப் போயிற்று. நீங்கவே, மரியாள் உறைந்த பனிபோல் வெண் தொழுநோள் பிடித்த உடலுள்ளவளாய்க் காணப்பட்டாள். ஆரோன் அவளைப் பார்த்து, தொழுநோய் அவளை மூடினதென்று கண்டவுடனே,

11 மோயீசனை நோக்கி: தலைவா, நாங்கள் அறிவில்லாமல் செய்த இந்தப் பாவத்தை எங்கள் மேல் சுமத்த வேண்டாமென்று வேண்டுகிறேன்.

12 இவள் செத்தவளைப் போலவும், தாயின் கருவிலிருந்து செத்து விழுந்த பிள்ளைப் போலவும் ஆகாதிருப்பாளாக. இதோ ஏற்ககெனவே அவள் உடலில் பாதித்தசை தொழுநோயால் தின்னப்பட்டிருக்கிறதே! என்றான்.

13 அப்பொழுது மோயீசன் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டு: என் கடவுளே, உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். அவளைக் குணப்படுத்தியருளும் என்றார்.

14 அதற்கு ஆண்டவர்: அவள் தந்தை அவள் முகத்திலே காறி உமிழ்ந்திருந்தால், அவள் வெட்கப்பட்டு ஏழு நாளேனும் வெளிவராமல் இருக்க வேண்டுமன்றோ? அதுபோல், அவள் ஏழுநாள் பாளையத்திற்குப்புறம்பே விலக்கப்பட்டிருக்கட்டும். பிறகு திரும்ப அவளைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்.

15 அப்படியே மரியாள் ஏழு நாளும் பாளையத்திற்குப் புறம்பே விலக்கமாயினாள். அவள் சேர்த்துக் கொள்ளப்படும் வரையிலும் மக்கள் பயணப்படாமல் அங்கேயே இருந்தார்கள்.

அதிகாரம் 13

1 அப்பால் மக்கள் ஆசெரோத்தினின்று புறப்பட்டுப் போய், பாரான் என்னும் பாலைவனத்திலே கூடாரங்களை அடித்தார்கள்.

2 அங்கே ஆண்டவர் மோயீசனை நோக்கி:

3 நாம் இஸ்ராயேல் மக்களுக்கு கொடுக்கவிருக்கும்படி நீ ஆட்களை அனுப்பு. ஒவ்வொரு கோத்திரத்தினின்றும் ஒரு தலைவரை அனுப்பக்கடவாய் என்றார்.

4 மோயீசன் ஆண்டவர் கட்டளையிட்ட படியே செய்து, பாரான் பாலைவனத்தினின்று பெரிய மனிதர்களை அனுப்பினார். அவர்களுடைய பெயர்களாவன:

5 ரூபன் கோத்திரத்தில் ஸெச்கூரின் புதல்வனான சம்மூவா;

6 சிமியோன் கோத்திரத்தில் ஊரியின் புதல்வனான சப்பத்;

7 யூதா கோத்திரத்தில் ஜெப்போனேயின் புதல்வனான காலேப்;

8 இசாக்கார் கோத்திரத்தில் சூசையின் புதல்வனான இகால்;

9 எபிராயீம் கோத்திரத்தில் நூனின் புதல்வனான ஓசி;

10 பெஞ்சமின் கோத்திரத்தில் ரப்புவின் புதல்வனான பால்தி;

11 சபுலோன் கோத்திரத்தில் சோதியின் புதல்வனான கெதியேல்;

12 சூசையின் கோத்திரத்தில் மனாஸே வம்சத்தானாகிய சுசியின் புதல்வன் கக்தி;

13 தான் கோத்திரத்தில் ஜெமல்லியின் புதல்வனான அமியேல்;

14 ஆஸேர் கோத்திரத்தில் மிக்கேலின் புதல்வனான ஸ்தூர்;

15 நெப்தலி கோத்திரத்தில் வாப்ஸியின் புதல்வனான நாகாபி;

16 காத் கோத்திரத்தில் மாக்கியின் புதல்வனான குயேல்.

17 இவர்களையே மோயீசன் நாட்டைச் சுற்றிப் பார்க்க அனுப்பினார்; அப்போது நூனின் புதல்வனான ஓசி என்பவனை ஜோசுவா என்று அழைத்தார்.

18 மோயீசன் அவர்களைக் கானான் நாட்டைப் பார்த்து வருமாறு அனுப்புகையில் அவர்களை நோக்கி: நீங்கள் தெற்கே போய் மலைகளை அடைந்ததும்,

19 அந்த நாடு எப்படிப்படட் தென்று நன்றாய்ப் பாருங்கள். அதில் குடியிருக்கிறவர்கள் எவ்வித மக்கள், வலிமைமிக்கவரோ, வலிமை குன்றியவரோ குடிகள் சிலரோ பலரோ என்றும்

20 நல்லதோ கெட்டதோ என்றும், நகரங்கள் எவை, கோட்டை மதில் சுற்றியவைகளோ அல்லவோ என்றும்,

21 நிலத்தின் தன்மை வளப்பமோ இளப்பமோ, மரங்கள் பல உண்டோ இல்லையோ என்றும் நுணுக்கமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். துணிவு கொள்ளுங்கள். நாட்டின் காய்கனிகளிலும் சிலவற்றைக் கொண்டு வாருங்கள் என்றார். அக்காலமோ கொடி முந்திரி முதற்பழங்கள் பழுக்கும்காலமாய் இருந்தது.

22 அவர்கள் புறப்பட்டுப் பாலைவனத்திலிருந்து ஏமாத்துக்குப் போகும் வழியாகிய ரொகோப் வரையிலும் நாட்டைச் சுற்றிக்கொண்டு, பிற்பாடு

23 தெற்கே திரும்பிச் சென்று எபிரோன் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே எனாத்தின் புதல்வராகிய அக்கிமான், சீஸா, தால்மயி என்பவர்கள் இருந்தார்கள். ஏனென்றால், எபிரோன் எகிப்திலுள்ள தனிம் என்னும் நகருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டிருந்தது.

24 பின்பு அவர்கள் கொடிமுந்திரிக்குலை என்னும் ஆறு வரையிலும் போய், ஒரு கொடிமுந்திரிச் செடியில் ஒரு கிளையும் அக்கிளையோடு ஒரு குலையையும் அறுத்து, அதை இருவர் ஒரு தண்டில் கட்டி எடுத்து வந்தார்கள். அவ்விடத்திலுள்ள மாதுளம்பழங்களிலும் சீமை அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தார்கள்.

25 அவ்விடத்திலிருந்து இஸ்ராயேல் மக்கள் கொடிமுந்திரிக் குலை கொண்டு வந்தமையால், அந்த இடம் நேகலஸ்கோல் - அதாவது கொடிமுந்திரிக்குலையாறு எனப்பட்டது.

26 அவர்கள் நாட்டை முற்றிலும் சுற்றிப்பார்த்து நாற்பது நாளுக்குப் பின்பு திரும்பி,

27 காரேஸில் இருக்கும் பாரான் பாலைவனத்திற்கு வந்து மோயீசன், ஆரோன் மற்றுமுள்ள இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் பார்த்து, அவர்களோடும் மக்களோடும் பேசிக்கொண்டே நாட்டின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

28 அவர்கள் மோயீசனை நோக்கி: நீர் எங்களை அனுப்பிய நாட்டிற்கு நாங்கள் போய் வந்தோம். அது பாலும் தேனும் பொழியும் நாடு. இதற்குச் சான்று இந்தக் கனிகளே.

29 ஆயினும், அந்த நாட்டிலே குடியிருக்கிற மக்கள் மிக வலியவர். அரண்கள் உள்ள பெரிய நகர்கள் பல இருக்கின்றன. அவ்விடத்தில் எனாக்கின் குலத்தாரையும் கண்டோம்.

30 அமலேக்கியர் தென்புறத்திலும், எட்டையர், ஜெபுசேயர், அமோறையர் மலைநாட்டிலும் குடியிருக்கிறார்கள். கானானையரோ கடல் அருகிலும் யோர்தான் நதி பாயும்நாடுகளிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள்.

31 அப்பொழுது மோயீசனுக்கு எதிராக மக்கள் முறுமுறுத்துப் பேசுவதைக் காலேப் கேட்டு, அவர்களை அமைதிப்படுத்தத் தக்கதாக: நாம் உடனே போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்வோம். எளிதாக அதைப் பிடித்துக் கொள்ளலாம் என்றான்.

32 ஆனால், அவனோடு போய் வந்த மற்ற மனிதரோ ஏது! நாம் போய் அம்மக்களோடு போராட முடியாது. நம்மைக் காட்டிலும் அவர்கள் வலியவர்கள் என்றார்கள்.

33 மேலும், நாங்கள் சுற்றிப் பார்த்து வந்தோமே அந்த நாடுதன் குடிகளை விழுங்குகிற நாடாம். நாங்கள் அதிலே கண்ட மக்கள் மிகவும் நெட்டையானவர்கள்.

34 அங்கே நாங்கள் கண்ட எனாக்கின் குலத்தாரில் சிலர் எங்குமில்லாத அரக்கராய் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பாக நாங்கள் வெட்டுக் கிளிகளைப்போல் இருந்தோம் என்றார்கள்.

அதிகாரம் 14

1 அதைக் கேட்டு மக்கள் எல்லாரும் அன்றிரவு கூக்குரலிட்டுப் புலம்பினர்.

2 இஸ்ராயேல் மக்கள் யாவரும் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் முறுமுறுத்துப் பேசினார்கள்.

3 அவர்களை நோக்கி: நாங்கள் எகிப்திலேயே செத்துப்போயிருந்தால் நலமாயிருந்திருக்கும். நாங்கள் வாளால் வெட்டுண்டு மடியும்படியாகவும், எங்களை மனைவி மக்கள் பிடியுண்டு கொண்டுபோகப் படும்படியாகவும் ஆண்டவர் எங்களை அந்த நாட்டிற்குக் கொண்டு போவதைவிட, நாங்கள் இப்பொழுதே இப்பெரிய பாலைவனத்தில் செத்து மடிவது நலமே. எகிப்துக்குத் திரும்பிப் போவதும் சிறந்ததே என்றார்கள்.

4 பின்னும் அவர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி: நமக்கு ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்கே திரும்பிப் போகலாம் என்றார்கள்.

5 மோயீசனும் ஆரோனும் இதைக் கேட்டு இஸ்ராயேல் முழுச் சபைக்கும் முன்பாக முகங்குப்புற விழுந்தார்கள்.

6 அப்பொழுது, நாட்டைச் சுற்றிப் பார்த்து வந்தவர்களில் நூனின் புதல்வனாகிய ஜோசுவாவும் ஜெப்புனேயின் புதல்வனாகிய காலேபும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,

7 இஸ்ராயேல் மக்களாகிய சபையார் எல்லாரையும் நோக்கி: நாங்கள் சுற்றிப்பார்த்து வந்தோமே அந்த நாடு மிகவும் நல்ல நாடு.

8 ஆண்டவர் நம்மீது கருணை கொண்டிருப்பாராயின், அந்த நாட்டிற்கு நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் பொழியும் அந்தப் பூமியை அவர் நமக்குக் கொடுப்பார்.

9 நீங்கள் ஆண்டவருக்கு விரோதமாய்க் கலகம் செய்ய வேண்டாம். அந்த நாட்டின் குடிகளுக்கு நீங்கள் அஞ்சவும் வேண்டாம். ஏனென்றால், அப்பத்தைப் போல் நாம் அவர்களை விழுங்கி விடலாம். அவர்களுக்குக் கடவுளின் உதவி கிடையாது. ஆண்டவர் நம்மோடிருக்கிறார். அவர்களுக்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை என்று சொன்னார்கள்.

10 அப்போது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டு அவர்கள் மேல் கல்லெறிய இருக்கையில், இதோ ஆண்டவருடைய மாட்சி உடன்படிக்கைக் கூடாரத்தின்மீது இஸ்ராயேல் மக்கள் அனைவரும் தென்பட்டது.

11 ஆண்டவர் மோயீசனை நோக்கி: இந்த மக்கள் எது வரையிலும் என்னை நிந்திப்பார்கள்? அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நாம் காட்டியுள்ள அருங்குறிகளை யெல்லாம்

12 அவர்கள் கண்டிருந்தும் எது வரையிலும் நம்மை விசுவசியாதிருப்பார்கள். ஆகையால் நாம் அவர்களைக் கொள்ளை நோயினால்தண்டித்து அழித்து விடுவோம். உன்னையோ அவர்களைக் காட்டிலும் பெரிதும் வலியதுமான ஓர் இனத்திற்குத் தலைவனாக ஏற்படுத்துவோம் என்றருளினார்.

13 மோயீசனோ ஆண்டவரை நோக்கி: எவர் நடுவிலிருந்து இந்த மக்களைக் கொண்டு வந்தீரோ அந்த எகிப்தியரும்,

14 இந்த நாட்டுக் குடிகளும்இதைக் கேட்டு என்ன சொல்வார்கள்? ஆண்டவரே நீர் உமது மக்களின் நடுவே வாழ்ந்துவருகிறதையும், இவர்கள் கண்கொண்டு உம்மை நேரில் காண்கிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத் தூணிலும் இரவில் நெருப்பு மயமான தூணிலும் நீர் இருந்து இவர்களுக்கு முன் செல்லுகிறதையும்அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள் அல்லவோ?

15 நீர் ஒரு மனிதனின் கொலைக்கும் கணக்கற்ற மனிதர்களின் கொலைக்கும் வேறுபாடு ஒன்றும் பாராமல் (இஸ்ராயேலர்) எல்லாரையும் சாகடிப்பீராயின், அவர்கள் சொல்லப்போவது என்னவென்றால்,

16 ஆண்டவர் ஆணையிட்டு வாக்குறுதி வழங்கியிருந்த நாட்டிலே அவர்களைக் கொண்டுபோய்ச் சேர்க்க ஆற்றல் அற்றவராய் இருந்ததனால் அல்லவா அவர்களைப் பாலைவனத்திலேயே கொண்று தீர்த்தார்? என்பார்களே!

17 ஆகையால், உம்முடைய வலிமை தழைத்தோங்கக் கடவதாக.

18 ஆண்டவர் பொறுமையும் மிகுந்த இரக்கமும் உள்ளவர்; அவர் அக்கிரமத்தையும் பாவங்களையும் மன்னிக்கிறார்; அவர், தந்தையர்செய்த அக்கிரமத்தை அவர்களுடைய பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நாலாம் தலைமுறை வரையிலும் விசாரிக்கிறார்; ஆனால், குற்றமில்லாதவர்களை ஆதரித்து வருகிறார் என்று நீரே ஆணையிட்டுக் கூறியதில்லையா?

19 ஆண்டவரே உம்மை மன்றாடுகிறேன். உம்முடைய வல்லபமுள்ள இரக்கத்தினாலே எகிப்தை விட்ட நாள் முதல் இந்நாள் வரையிலும் நீர் இம் மக்களை மன்னித்து வந்நது போல இப்பொழுதும் இவர்களுடைய அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றார்.

20 அதற்கு ஆண்டவர்: உன் வேண்டுகோளின்படியே மன்னித்தோம்.

21 நாம் வாழ்கிறவர். பூமியெல்லாம் ஆண்டவருடைய மகிமையினால் நிறைந்திருக்கும்.

22 ஆயினும் (கேள்) நமது மாட்சியையும், நாம் எகிப்திலும் பாலைவனத்திலும் செய்த அருங்குறிகளையும் கண்டிருந்தும், எவரெவர் நம்மை ஏற்கனவே பத்துமுறையும் சோதித்து நம் கட்டளைகளை மீறியிருக்கிறார்களோ, அவர்களில் ஒருவனும்,

23 நாம் அவர்களுடைய முன்னோருக்கு ஆணையிட்டு வாக்குறுதி வழங்கிய நாட்டைக் காணமாட்டார்கள். அவர்களில் எவர் நம்மை அவமதித்துப் பேசினார்களோஅவர்கள் யாராயிருந்தாலும்அதைக் காணப்பபோவதில்லை.

24 நம்முடைய ஊழியனாகிய காலேபோ அந்தக் கெடுமதியில்லாமல் நன்மதியுள்ளவனாய் நம்மைப் பின்பற்றி வந்தான். (ஆதலால்) தான் போய்ச் சுற்றிப் பார்த்த நாட்டிலே அவனைச் சேர்ப்பிப்போம். அவன் சந்ததியார் அதனை உரிமையாக்கிக் கொள்வார்கள்.

25 அமலேக்கியரும் கானானையரும்இப்பள்ளத்தாக்குகளில் குடியிருக்கிறபடியால், நாளை நீங்கள் பாளையம் பெயர்ந்து, செங்கடலுக்குப் போகும் வழியாய் பாலைவனத்திற்குத் திரும்பிப் பயணம் செய்யுங்கள் என்றருளினார்.

26 பின் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:

27 பெரும் கயவராகிய இந்த மக்கள் எது வரையிலும் நமக்கு விரோதமாய் முறுமுறுப்பார்கள்? இஸ்ராயேல் மக்களுடைய குறைப்பாடுகளைக் கேட்டுக் கொண்டோம்.

28 ஆகையால், நீ அவர்களுக்கு ஆண்டவர் சொல்கிறதாகச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: நாம் வாழ்கிறவர். நீங்கள் நம் செவிகள் கேட்கச் சொல்லிய வண்ணமே உங்களுக்குச் செய்வோம்.

29 இந்தப் பாலைவனத்திலேயே உங்கள் பிணங்கள் கிடக்கும். உங்களில் இருபது வயது உள்ளவர்களும் அதற்கு மேற்பட்டவர்களுமாக எண்ணப்பட்டவர்களில் எவரெவர் நமக்கு விரோதமாய் முறுமுறுத்துப் பேசினார்களோ அவர்களுள்

30 ஜெப்பனேயின் புதல்வன் காலேப், நூனின் புதல்வன் ஜோசுவா என்பவர்களைத் தவிர மற்றெவனும், நாம் உங்களைக் குடியேறச் செய்வோமென்று ஆணையிட்டு வாக்குறுதி வழங்கிய அந்த நாட்டில் புகுவதில்லை.

31 பகைவர் கையில் அகப்படுவார்களென்று உங்கள் பிள்ளைகளைக் குறித்துச் சொன்னீர்களே; நாம் அவர்களையே அதில் குடிபுகச் செய்வோம். நீங்கள் அசட்டை செய்த நாட்டை அவர்கள் காண்பார்கள்.

32 உங்கள் பிணங்களோ இந்தப் பாலைவனத்தில் கிடக்கும்.

33 அவைகள் பாலைவனத்திலே விழுந்து அழிந்து தீருமட்டும் உங்கள் பிள்ளைகள் நாற்பதாண்டு பாலைவனத்திலே திரிந்து, உங்கள் விசுவாசத்துரோகத்தைச் சுமந்து கொண்டிருப்பார்கள்.

34 நீங்கள் அந்நாட்டை சுற்றிப்பார்த்த நாற்பது நாள் கணக்கின்படியே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டாகக் கணிக்கப்படும். அப்படியே நீங்கள் நாற்பது ஆண்டுகளாய் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து கொள்வதன் மூலம் நமது பழியைக் கண்டுணர்வீர்கள்.

35 நமக்கு விரோதமாய் எழும்பின மிகவும் பொல்லாத இந்த மக்களுக்கு நாம் பேசினபடியே செய்வோம். அவர்கள் இப்பாலைவனத்தில் வாடி வதங்கிச் சாவார்கள் என்பாய் என்றார்.

36 ஆகையால், அந்த நாட்டைச் சோதித்துப் பார்க்கும்படி மோயீசனால் அனுப்பப்பட்டு, அதைக் குறித்துத் தீய செய்தியைக் கொண்டு வந்து, மக்களெல்லாம் மோயீசனுக்கு விரோதமாய்ச் பேசக் காரணமாய் இருந்தவர்களாகிய,

37 அவர்கள் எல்லாரும் வாதையினால் ஆண்டவர் சமூகத்தில் செத்தார்கள்.

38 நாட்டைச் சோதித்துப் பார்க்கப் போயிருந்தவர்களில் நூனின் புதல்வனாகிய ஜோசுவா, ஜெப்பனேயின் புதல்வனாகிய காலேப் என்பவர்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தார்கள்.

39 மோயீசன் இவ்வார்த்தையெல்லாம் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும் சொல்லியபொழுது, அவர்கள் மிகவும் புலம்பி அழுதார்கள்.

40 அதிகாலையில் அவர்கள் எழுந்து: நாங்கள் பாவம் செய்தோம். ஆண்டவர் சொல்லிய இடத்திற்குப் போகத் தயாராய் இருக்கிறோம் என்று சொல்லி, மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்.

41 மோயீசன் அவர்களை நோக்கி: நீங்கள் ஆண்டவருடைய வார்த்தையை மீறுகிறதென்ன? இது உங்களுக்கு வாய்ப்பதாயில்லை.

42 நீங்கள் பகைவர் முன்னிலையில் முறியடிக்கப்படா வண்ணம், ஏறிப்போகாதீர்கள். ஆண்டவர் உங்களோடு இல்லை.

43 உங்களுக்கு முன்னே அமலேக்கியரும் கானானையரும் அங்கு இருக்கிறார்கள். நீங்கள் ஆண்டவருக்குப் பணியாததால், ஆண்டவர் உங்களோடு இருக்கவே மாட்டார். ஆகையால், நீங்கள் அவர்களுடைய வாளுக்கு இரையாவீர்கள் என்றார்.

44 ஆனால், அவர்கள் குருட்டாட்டமாய் மலையுச்சியில் ஏறினார்கள். ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டகமும் மோயீசனும் பாளையத்தை விட்டுப் போகவில்லை.

45 அப்பொழுது மலையில் வாழ்ந்திருந்த அமலேக்கியரும் கானானையரும் இறங்கி வந்து, அவர்களைத் தோற்கடித்து வெட்டி, ஓர்மா வரையிலும் துரத்தியடித்தனர்.

அதிகாரம் 15

1 ஆண்டவர் மோயீசனை நோக்கி,

2 நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நாம் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் புகுந்த பின்பு,

3 ஆண்டவருக்குச் சிறப்பு நேர்ச்சையாவது உற்சாகத்தானமாவது நேர்ந்து முழுத் தகனப் பலியையேனும் மற்ற யாதொரு பலியையேனும், அல்லது உங்கள் பண்டிகைகளில் மாட்டையும் ஆட்டையும் கொண்டு ஆண்டவருக்கு நறுமணமுள்ள முழுத் தகனப் பலியையேனும் நீங்கள் செலுத்த வரும்போது,

4 மிருகப் பலியை எவன் கொண்டு வந்தானோ அவன் கின் என்னும் படியிலே காற்படி எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவைக் கூடவே ஒப்புக் கொடுப்பான். மெல்லிய மாவு எவ்வளவென்றால், ஏப்பி என்னும் மரக்காலில் பத்திலொரு பங்கேயாம்.

5 அன்றியும், முழுத்தகனம் முதலிய பலிகளுக்காக பானப்பலிக்கென்று கின் என்னும் அளவிலே நான்கில் ஒரு பங்கு கொடிமுந்திரி பழச் சாற்றையும் ஆட்டுக் குட்டியையும் அவன் கொண்டு வருவான்.

6 ஆட்டுக்கிடாய்ப் பலியானால், பத்தில் இரண்டு பங்கானதும் ஒரு கின்னில் மூன்றிலொரு பங்கான எண்ணெயில் பிசைந்தததுமான மெல்லிய மாவைப் போசனப் பலியாகவும்,

7 ஆண்டவருக்கு நறுமணமாகக் கின்னில் மூன்றில் ஒரு பங்கு கொடிமுந்திரி பழச்சாற்றைப் பானப் பலியாகவும் ஒப்புக்கொடுக்கக் கடவான்,

8 ஆனால், நீ யாதொரு நேர்ச்சை செலுத்துவதற்கு ஒரு மாட்டை முழுத்தகனப் பலிக்கேனும் சாதாரணப் பலிக்கேனும் கொண்டுவந்தால்,

9 ஒவ்வொரு மாட்டோடும் பத்தில் மூன்று பங்கு மாவையும், அதன்மேல் தெளிக்க ஒரு கின் அளவிலே சரிபாதி எண்ணெயையும், (போசனப் பலிக்காகக் கொண்டு வந்து),

10 கின்னில் பாதிக் கொடிமுந்திரிப் பழச்சாற்றையும் பானப் பலிக்கென்று ஒப்புக் கொடுக்கக் கடவாய்.

11 இவ்விதமாகவே, ஒவ்வொரு மாட்டுக்கும்,

12 ஆட்டுக்கிடாய்க்கும், ஆட்டுக்குட்டி, வெள்ளாட்டுக் குட்டிகளுக்கும் செய்யக் கடவாய்.

13 உள்நாட்டாரேனும் வெளிநாட்டாரேனும்

14 அந்த விதிப்படியே பலியிடுவார்கள்.

15 உங்களுக்கும் (உங்களோடு குடியிருக்கிற) அந்நியருக்கும் ஒரே கட்டளையும்சட்டமும் இருக்கும் என்றருளினார்.

16 பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

17 நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது:

18 நாம் உங்களுக்குக் கொடுக்கவிருக்கிற நாட்டில் நீங்கள் சேர்த்து,

19 அந்நாட்டின் உணவை உண்ணும்போது அதன் புதுப் பலனாகிய காணிக்கையை ஆண்டவருக்குச் செலுத்தும்படி பாதுகாத்து வைக்கக்கடவீர்கள்.

20 அது போலவே போரடிக்கிற களத்தின் புதுப் பலனாகிய காணிக்கையையும் ஆண்டவருக்குக் கொடுக்கப் பத்திரப்படுத்தி வைக்கக் கடவீர்கள்.

21 பிசைந்த மாவிலேயும் முதற்பலனை ஆண்டவருக்குச் சமர்ப்பிக்கக் கடவீர்கள்.

22 ஆனால்,

23 ஒரு வேளை ஆண்டவர் மோயீசனுக்குச் சொல்லியவற்றிலும், அவர் மோயீசன் மூலமாய் உங்களுக்குக் கட்டளையிடத் தொடங்கின துவக்கத்திலும் பிற்காலத்திலும் அறிவித்தவற்றிலும் நீங்கள் அறியாமையினாலே எதையாவது மீறி நடந்திருப்பீர்களாயின்,

24 அல்லது மறதியினாலே கவனியாமல் விட்டிருப்பீர்களாயின், அப்படிப்பட்டவர்கள் ஆண்டவருக்கு நறுமணமுள்ள தகனப் பலிக்கென்று ஒரு கன்றுக் குட்டியையும், அதற்கேற்ற போசனப் பலியையும் பானப் பலியையும் முறைமைப்படி கொண்டு வருவதுடன், பாவநிவாரணப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் ஒப்புக் கொடுப்பார்கள்.

25 குரு இஸ்ராயேல் மக்களின் முழுச் சபைக்காகப் பிரார்த்திப்பார். அப்பொழுது அவர்களுடைய குற்றம் மன்னிக்கப்படும். ஏனென்றால், அது அறியாமையினால் செய்யப்பட்டதாகும். ஆயினும், அவர்கள் தங்களுக்காகவும், அறியாமல் செய்த தங்கள் குற்றத்திற்காகவும் ஆண்டவருக்கு முழுத்தகனப் பலியைஒப்புக் கொடுக்ககடவார்கள்.

26 (அந்த குற்றம்) அறியாமையினால் எல்லா மக்களுக்கும் வந்ததாகையால், அது இஸ்ராயேல் மக்கள் அனைவர்க்கும் அவர்கள் நடுவில் குடியிருக்க வந்த அந்நியருக்கும் மன்னிக்கப்படும்.

27 ஒருவன் தெரியாமல் பாவம் செய்தானாயின், அவன் தன் பாவ நிவர்த்திக்காக ஒரு வயதான வெள்ளாட்டை ஒப்புக்கொடுக்கக் கடவான்.

28 அப்பொழுது, அறியாமையினால் பாவம் செய்தவனுக்காகக் குரு ஆண்டவருக்கு முன்பாக மன்றாடி மன்னிப்பு வேண்டிய பின்பு அந்தக் குற்றம் அவனுக்கு மன்னிக்கப்படும்.

29 நாட்டவர்க்கும் அந்நியர்க்கும் அறியாமையினால் செய்த பாவத்தைப் பொறுத்த மட்டில் ஒரே சட்டம் இருக்கும்.

30 ஆனால், எவனேனும் அகந்தையினாலே யாதொரு பாவத்தைத் துணிந்து செய்தால், அவன் - உள் நாட்டவனாயினும்வெளி நாட்டவனாயினும் - (ஆண்டவருக்குத் துரோகியானதினாலே) தன் மக்களிடையே இராதபடிக்குக் கொலை செய்யப்படுவான்.

31 அவன் ஆண்டவருடைய வார்த்தையை நிந்தித்து அவருடைய கட்டளையை வீணாக்கினமையால் கொலை செய்யப்படுவான். அவன் அக்கிரமம் அவன் தலைமேல் இருக்கும் என்றருளினார்.

32 இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் இருக்கையிலே ஓய்வு நாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டு பிடித்தார்கள்.

33 (கண்டு பிடித்தவர்கள்) அவனை மோயீசன் ஆரோன் என்பவர்களுக்கும் சபையாருக்கும் முன்பாகக் கொண்டு வந்து ஒப்புவித்தார்கள்.

34 அவனுக்குச் செய்ய வேண்டியது இன்னதென்று தெரியாமல் அவர்கள் அவனைக் காவலில் வைத்தார்கள்.

35 அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: அம்மனிதன் நிச்சயமாய்ச் சாகக்கடவான். மக்கள் எல்லாரும் அவனைப் பாளையத்தின் புறம்பே கொண்டு போய்க் கல்லாலெறியக் கடவார்கள் என்றார்.

36 அவர்கள் ஆண்டவருடைய கட்டளைப்படி அவனை வெளியே கூட்டிக் கொண்டு போய்க் கல்லாலெறிய, அவன் செத்தான்.

37 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

38 நீ இஸ்ராயேல் மக்களோடு பேசி, அவர்கள் ஆடைகளின் முனைகளிலே இளநீல நாடாவைத் தைத்துக் குஞ்சம் கட்டித் தொங்க விட வேண்டுமென்று சொல்.

39 (இதன் நோக்கம் என்னவென்றால்) அவர்கள் அதைப் பார்க்கும் போதெல்லாம், பலவற்றை இச்சிக்கும் விபசாரரைப் போன்ற தங்கள் மன நாட்டங்களையும் கண்களை மருட்டும் தோற்றங்களையும்பின்பற்றிப் போகாமல், தாங்கள் ஆண்டவருடைய கட்டளைகளையும்,

40 சட்டங்களையும் நினைந்தவர்களாய் அவற்றை நிறைவேற்றவும் பரிசுத்தராகவும் வேண்டுமென்று நினைவுகூரக்கடவார்கள்.

41 நாமே உங்கள் கடவுளாகிய ஆண்டவர், உங்களுக்குக் கடவுளாய் இருக்கும்படி உங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்த ஆண்டவர் நாமே என்றார்.

அதிகாரம் 16

1 இதன்பின், லேவியனுக்குப் பிறந்த காத்தின் புதல்வனான இஸாரின் மகன் கொறே என்பவனும், எலியாபின் புதல்வர்களான தாத்தான், அபிரோன் என்பவர்களும், ரூபனின் குலத்திலுள்ள பெலேத்தின் புதல்வனான ஓன் என்பவனும்,

2 இஸ்ராயேல் மக்களுக்குள் சபைக்குத் தலைவர்களும் சபை கூடியிருக்கும்போது பெயர் பெயராய் அழைக்கப்பட வேண்டிய பெரியவர்களுமான வேறு இருநூற்றைம்பது பேர்களைச் சேர்த்துக் கொண்டு மோயீசனுக்கு விரோதமாய்க் கலகம் செய்து,

3 மோயீசனுக்கும் ஆரோனுக்கும் எதிரே வந்து: சபையார் எல்லாரும் பரிசுத்தர்களாய் இருப்பதும் ஆண்டவர்அவர்களோடு வீற்றிருப்பதும் உங்களுக்குப் போதாதோ? நீங்கள் ஆண்டவருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்திக் கொள்கிறீர்கள்? என்றார்கள்.

4 மோயீசன் இதைக் கேட்டவுடன் முகம் குப்புற விழுந்து,

5 கொறே என்பவனையும் அவனுடைய தோழர்களையும் நோக்கி: நாளைக் காலையில் ஆண்டவர் தம்மைச் சேர்ந்தவர்கள் இன்னாரென்று காண்பித்து, புனிதமானவர்களைத் தம்மிடம் சேர்ப்பார். அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அவரை அணுகுவார்கள்.

6 ஆகையால் நீங்கள் ஒன்று செய்யுங்கள். கொறேயாகிய நீயும் உன் தோழர்கள் எல்லாரும் ஒவ்வொருவராய் உங்கள் துபக் கலசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

7 நாளை அவைகளில் நெருப்புப் போட்டு, அதன்மேல் ஆண்டவர் முன்னிலையில் தூபம் இடுங்கள். அப்போது அவர் தெரிந்து கொண்டிருப்பவன் எவனோ அவன் புனிதனாவான். லேவியின் புதல்வர்களே! உங்கள் அகந்தை அதிகமானதே என்று சொன்னார்.

8 மீண்டும் கொறே என்பவனை நோக்கி:

9 லேவியின் புதல்வனே, உற்றுக்கேள். இஸ்ராயேலின் கடவுள் உங்களை முழுச் சபையாரிலிருந்து பிரித்தெடுத்து, தம்முடைய உறைவிடத்தில் பணிவிடை செய்யவும், சபையாருக்கு முன் நிற்கவும், அவர்கள் ஆண்டவருக்குச் செய்ய வேண்டிய பணிகளை நீங்களே செய்யவும் உங்களைத் தமது அண்டையில் சேர்த்துக் கொண்டது சொற்பமாயிற்றோ?

10 அவர் உன்னையும் லேவியின் புதல்வராகிய உன் சகோதரர்களையும் தமது அண்டையில் சேர்த்துக் கொண்டது எதற்கு? நீங்கள் குருப்பட்டத்தையும் அபகரிக்கும்படிதானோ?

11 உனது குழாமெல்லாம் ஆண்டவருக்கு விரோதமாய்க் கலகஞ் செய்யும்படிதானோ? நீங்கள் ஆரோனுக்கு விரோதமாய் முறுமுறுப்பதென்ன? அவர் எம்மாத்திரம்? என்றார்.

12 பின்னும் மோயீசன் எலியாவின் புதல்வராகிய தாத்தான், அபிரோன் என்பவர்களை அழைக்க ஆளனுப்ப, அவர்கள்: நாங்கள் வர மாட்டோம்.

13 நீ எங்களைப் பாலைவனத்தில் கொல்லும்படி பாலும் தேனும் பொழியும் நாட்டினின்று எங்களைக் கொண்டு வந்ததும் போதாமல், இன்னும் எங்கள் மேல் அதிகாரம் செலுத்தப் பார்க்கிறாயோ?

14 ஆ! எங்களை நல்ல நாட்டிற்குக் கொண்டு வந்தாய்! பாலும் தேனும் பொழிகிற நாடாம், நல்ல வயல்களையும் கொடிமுந்திரித் தோட்டங்களையும் எங்களுக்கு உரிமையாகத் தந்தது உண்மையாம். இன்னும் எங்கள் கண்களைப் பிடுங்கப் பார்க்கிறாயோ? நாங்கள் வரமாட்டோம் என்றார்கள்.

15 அப்போது மோயீசனுக்குக் கடுங் கோபம் மூன்டது. அவர் ஆண்டவரை நோக்கி: இவர்களுடைய காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளாதீர். அடியேன் அவர்களிடம் ஒரு கழுதைக் குட்டியையும் ஒரு போதும் வாங்கினதில்லை என்றும்: அவர்களில் ஒருவனையும் நான் துன்புறுத்தினதில்லை என்றும் நீர் அறிவீரே என்று சொன்னார்.

16 பிறகு மோயீசன் கொறேயை நோக்கி: நீயும் உன் தோழர்களும் நாளைக்கு ஆண்டவர் முன்னிலையிலே ஒரு பக்கமாகவும், ஆரோன் மற்றொரு பக்கமாகவும் நின்று கொள்ள வாருங்கள்.

17 உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் துபக் கலசங்களைக் கையில் பிடித்துக் கொண்டு, அவற்றில் தூபத்தைப் போட்டு, தத்தம் தூபக் கலசங்கள் இருநூற்றைம்பதையும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பீர்கள். ஆரோனும் தன் துபக் கலசத்தைப் பிடித்துக் கொள்வான் என்றார்.

18 அவர்கள் அப்படியே செய்து, மோயீசனும் ஆரோனும் நின்று கொண்டிருக்கையில்,

19 சாட்சியக் கூடார வாயிலுக்கு முன்பாக மக்கட்திரளையெல்லாம் அவர்களுக்கு விரோதமாகக் கூட்டினார்கள். அப்பொழுது ஆண்டவருடைய மாட்சி சபைக்கெல்லாம் காணப்பட்டது.

20 ஆண்டவர் மோயீசனோடும் ஆரோனோடும் பேசின பிறகு மறுபடியும் அவர்களை நோக்கி:

21 நாம் இவர்களை இப்பொழுதே அழிக்கும் பொருட்டு நீங்கள் (இருவரும்) இந்தச் சபையை விட்டுப்பிரியுங்கள் என்று கட்டளையிட,

22 அவர்கள் முகம் குப்புற விழுந்து: உடலுள்ள எல்லா ஆவிகள் மீதும் முழு வல்லமையும் கொண்டுள்ள கடவுளே, ஒருவன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லாரும் உம்முடைய கோபத்துக்கு ஆளாவார்களோ? என்று வேண்ட,

23 ஆண்டவர் மோயீசனை நோக்கி:

24 மக்களெல்லாரும் கொறே, தாத்தான், அபிரோன் என்பவர்களுடைய கூடாரத்தை விட்டு அகன்று போகச் சொல் என்றார்.

25 அப்போது மோயீசன் எழுந்து, தாத்தான், அபிரோன் என்பவர்களிடம் போனார். இஸ்ராயேலின் முதியேர் அவரைப் பின்தொடர்ந்தனர்.

26 மோயீசன் மக்களை நோக்கி: மிகவும் கொடியவர்களான இந்த மனிதர்களுடைய பாவப் பழியில் நீங்கள் அகப்பட்டுக் கொள்ளாதபடி அவர்களை கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உரியவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றார்.

27 அப்படியே மக்கள் அவர்களுடைய கூடாரங்களின் சுற்றுப்புறத்தைத விட்டு நீங்கின பின்னர், தாத்தானும் அபிரோனும் வெளியே வந்து, தங்கள் கூடாரங்களின் நுழைவாயிலில் தங்கள் மனைவிகளோடும் மக்களோடும் தங்களைச் சேர்ந்தவர்களோடும் நின்று கொண்டிருந்தார்கள்.

28 அப்பொழுது மோயீசன்: நான் செய்து வருகிற செயல்களெல்லாம் செய்தவற்கு ஆண்டவர் என்னை அனுப்பினாரேயன்றி, நான் என் மனத்தின்படியே செய்யவில்லை என்று நீங்கள் அறிவீர்கள்.

29 மனிதர்கள் சரதாரணமாய்ச் சாகிற விதத்தில் இவர்களும் செத்தால், அல்லது மற்றவர்களுக்கு நேரிடுகிற நோய் முதலியவை இவர்களுக்கு நேரிட்டால் நான் ஆண்டவரால் அனுப்பப்படவில்லை.

30 ஆனால் ஆண்டவர் நூதனம் செய்து நிலம் தன்வாயைத் திறந்து, இவர்கள் பாதாளத்தில் இறங்கும்படி இவர்களையும் இவர்களுக்குரியயாவையும் விழுங்கி விடுகிறதாயிருந்தால், அவ்வடையாளத்தினாலே இவர்கள் ஆண்டவரை நிந்தித்தார்களென்று உறுதி கொள்வீர்கள் என்றார்.

31 அவர் பேசி முடித்தவுடனே அவர்கள் நின்றுகொண்டிருந்த நிலம் பிளந்தது.

32 நிலம்தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுக்குரிய யாவைற்றையும் விழுங்கிவிட்டது.

33 அவர்கள் உயிரோடு பாதாளத்தில் விழுந்தார்கள். நிலம் அவர்களை மூடிக்கொண்டது. இவ்வாறு அவர்கள் சபையின் நடுவிலிருந்து அழிந்து போனார்கள்.

34 அவர்களைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்த இஸ்ராயேலர் யாவரும், அழிந்து போனவர்களுடைய கூக்குரலைக் கேட்டு: நிலம் ஒருவேளை எங்களையும் விழுங்கிவிடுமோ? என்று ஓடிப்போனார்கள்.

35 அன்றியும், ஆண்டவருடைய முன்னிலையிலிருந்து புறப்பட்ட ஒரு நெருப்பு, தூபம் காட்டின இருநூற்றைம்பது பேர்களையும் விழுங்கிவிட்டது.

36 இதன்பின் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

37 நெருப்புக்குள் அகப்பட்டிருக்கும் தூபக் கலசங்களை எடுத்து, அவற்றிலுள்ள நெருப்பை அங்கங்கே கொட்டிவிடும்படி குருவாகிய ஆரோனின் புதல்வன் எலெயஸாருக்குக் கட்டளை கொடு. ஏனென்றால், அந்தத் தூபக் கலசங்கள்,

38 பாவிகளின் மரணத்தால் புனிதமாயின. பிறகு, அவைகளில் ஆண்டவருக்குத் தூபம் சமர்ப்பிக்கப்பட்டதனாலும், அவை புனிதமானவை என்பதனாலும் அவன் அவற்றை தட்டையான தகடுகளாக்கிப் பலிப்பீடத்தில் பதிக்கக்கடவான். அவை இஸ்ராயேல் மக்களுக்கு அடையாளமும் நினைவுச் சின்னமுமாய்க் காணப்படும் என்றார்.

39 அவ்விதமே குருவாகிய எலெயஸார் நெருப்புக்கு இரையானவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கலத் தூபக் கலசங்களை எடுத்துத் தகடாக்கிப் பீடத்தில் பதிய வைத்தான்.

40 அதனாலே, அந்நியனும் ஆரோனின் வம்சத்தானல்லாதவனும் ஆண்டவருக்குத் தூபம் காட்டலாகாதென்றும், காட்டத் துணிந்தால் ஆண்டவர் மோயீசனோடு பேசின நாளில் கொறே என்பவனுக்கும் அவன் தோழர்களுக்கும் நேர்ந்தபடியே அவனுக்கும் நேர்ந்தாலும் நேருமென்றும்மேலும் இஸ்ராயேல் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

41 மறுநாள் இஸ்ராயேல் மக்களாகிய சபையார் எல்லாரும் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் முறுமுறுத்துப் பேசி: நீங்கள் ஆண்டவருடைய மக்களை அழித்துவிட்டீர்கள் என்றார்கள்.

42 கலகம் பரவி எழும்ப, ஆரவாரமும் மும்முரமாவதைக் கண்டு,

43 மோயீசனும் ஆரோனும் உடன்படிக்கைக் கூடாரத்திற்குள் ஓடிஒதுங்கினர். அவர்கள் அதற்குள் புகுந்தவுடனே மேகம் அதை மூடிக்கொள்ள, ஆண்டவருடைய மாட்சி காணப்பட்டது.

44 ஆண்டவர் மோயீசனை நோக்கி

45 நீங்கள் இந்தச் சபையாரை விட்டு விலகிப் போங்கள். ஒரு நிமிடத்தில் நாம் இவர்களை அழித்தொழிப்போம் என்றார். அவர்கள் தரையில் விழுந்துகிடக்கையில், மோயீசன் ஆரோனை நோக்கி:

46 நீ தூபக் கலசத்தை எடுத்து, பலிப்பீடத்தில் இருக்கிற நெருப்பைப் போட்டு அதன் மேல் தூபம் இட்டு, விரைவாய்ச் சபையினிடம் போய் அவர்களுக்காக வேண்டிக்கொள். ஏனென்றால், ஆண்டவருடைய முன்னிலையிலிருந்து கோபத் தீ இதோ புறப்பட்டுவிட்டது; வதைக்கத் தொடங்கிவிட்டது என்றார்.

47 ஆரோன் அவ்வாறு செய்து, சபையின் நடுவில் ஓடி, மக்கள் தீப்பிரளயத்தில் அழிந்திருக்கக் கண்டு தூபம் காட்டினார்.

48 இறந்தோருக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவேநின்று கொண்டு மக்களுக்காக மன்றாடத் தொடங்கனார். இவ்வாறு வேண்டிக்கொள்ளவே வாதை நின்று போயிற்று.

49 கொறேவின் கலகத்தில் இறந்தவர்கள் தவிர, இதில் மாண்டவர்கள் மட்டும் பதினாலாயிரத்து எழுநூறு பேர்.

50 வாதை நிறுத்தப்பட்ட பிறகு ஆரோன் உடன்படிக்கைக் கூடார வாயிலில் இருந்த மோயீசனிடம் திரும்பி வந்தார்.

அதிகாரம் 17

1 பின் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ இஸ்ராயேல் மக்களோடு பேசி,

2 அவர்களின் ஒவ்வொரு கோத்திரத் தலைவனுக்கும் ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பெயர் எழுதுவாய்.

3 லேவியினுடைய கோத்திரத்திற்கு ஆரோனுடைய பெயரை எழுதக் கடவாய்.

4 அன்றியும், வேறொரு கோலிலே எல்லாக் கோத்திரங்களின் பெயரும் வேறு வேறாக எழுதப்படவேண்டும். அவைகளை உடன்படிக்கைக் கூடாரத்திலே வாக்குத்தத்தத்தின் கூடாரத்துக்கு முன் வைப்பாய்.

5 அங்கு நாம் உன்னோடு பேசுவோம். அவர்களில் நாம் எவனைத் தெரிந்து கொண்டோமோ அவனுடைய கோல் துளிர்க்குமாகையால், இஸ்ராயேல் மக்கள் உங்களை விரோதித்து முறுமுறுக்கிற முறைப்பாடுகளை இவ்வாறு நிறுத்துவோம் (என்றருளினார்).

6 அவ்வாறே மோயீசன் இஸ்ராயேல் மக்களோடு பேசினவுடனே, ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவனும் ஒவ்வொரு கோலைக் கொடுத்தான். ஆரோனுடைய கோலைத் தவிர பன்னிரண்டு கோல்கள் இருந்தன.

7 மோயீசன் அவைகளைச் சாட்சியக் கூடாரத்தில் ஆண்டவர் முன்னிலையில் வைத்தார்.

8 மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது ஆரோனுடைய கோல் துளிர்விட்டிருக்கவும், துளிர்கள் வளர்ந்து பூத்திருக்கவும், பூக்கள் மலர்ந்து வாதுமைப் பிஞ்சுகள் தோன்றியிருக்கவும் கண்டார்.

9 அப்பொழுது மோயீசன் ஆண்டவருடைய முன்னிலையிலிருந்து எல்லாக் கோல்களையும் இஸ்ராயேல் மக்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதைப் பார்த்தபிறகு, தத்தம் கோலை வாங்கிக் கொண்டனர்.

10 அந்நேரத்தில் ஆண்டவர் மோயீசனை நோக்கி: ஆரோனின் கோலை நீ கொண்டு போய், கலகக்காரராகிய இஸ்ராயேல் மக்களுக்கு எச்சரிக்கைக் குறிப்பாக அதை உடன்படிக்கைக் கூடாரத்திலே வைக்கவேண்டும். இப்படி நமக்கு முன்பாக அவர்களுடைய முறுமுறுப்பு ஒழியாவிட்டால், அவர்கள் செத்துப்போவார்களென்று அஞ்சக்கடவார்கள் என்றார்.

11 மோயீசன் ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்.

12 இஸ்ராயேல் மக்களோ மோயீசனை நோக்கி இதோ பாரும்: நாங்கள் எல்லாரும் மடிந்து அழிந்து போகிறோமே!

13 ஆண்டவருடைய ஆலயத்தை அணுகுகிற எவனும் சாகிறானே! நாங்கள் எல்லாரும் செத்துத்தான் தீருவோமோ? என்றார்கள்.

அதிகாரம் 18

1 பின்னர் ஆண்டவர் ஆரோனை நோக்கி: நீயும், உன்னோடுகூட உன் புதல்வர்களும், உன் தந்தையின் வீட்டாரும் மூலத்தானத்தைப் பற்றிய அக்கிரமத்தைச் சுமந்து கொள்வீர்கள்.

2 குருத்துவத்தைப் பற்றிய அக்கிரமத்தையோ நீயும் உன் புதல்வர்களும் சுமந்து கொள்வீர்கள். உன் தந்தையாகிய லேவியின் செங்கோலை ஏந்தி, அவனுடைய கோத்திரத்தாராகிய உன் சகோதரரைச் சேர்த்துக் கொள். அவர்கள் உனக்கு உதவி செய்யவும், உன் ஏவலைச் செய்யவும் தயாராயிருக்கும்படி பார்த்துக் கொள். ஆனால், நீயும் உன் புதல்வரும் சாட்சியக் கூடாரத்துக்குள்ளே ஊழியம் செய்வீர்கள்.

3 லேவியர்கள் உன் சொற்படி கேட்டு, ஆலயத்தைச் சேர்ந்த எல்லா வேலைகளுக்கும் காத்துக்கொண்டேயிருப்பார்கள். ஆனால், அவர்களும் நீங்களும் ஒருங்கு சாகாதபடிக்கு அவர்கள் புனித இடத்தின் பாத்திரங்களையும் தொடாமல் பீடத்தையும் அணுகாமல் எச்சரிக்கையாய் இருக்கக்கடவார்கள்.

4 அவர்கள் உன்னுடன் இருந்து, சாட்சியக் கூடாரத்தைக் காக்கவும் கூடாரத்துக்கடுத்த பணிவிடையெல்லாம் செய்யவும் கடவார்கள். அந்நியன் ஒருவனும் உங்களோடு வந்து சேரலாகாது.

5 இஸ்ராயேல் மக்கள்மேல் நமக்குக் கடும் கோபம் உண்டாகாதபடிக்கு நீங்கள் புனித இடத்தைக் காவல் காத்து, பலிப்பீடத்தின் ஊழியத்தைச் செய்வதில் கவனமாயிருங்கள்.

6 ஆசாரக் கூடாரத்திலே பணிவிடை செய்ய உங்கள் சகோதரராகிய லேவியரை நாம் இஸ்ராயேல் மக்களின் நடுவிலிருந்து பிரித்து ஆண்டவருக்கு நேர்ச்சை செய்து உங்களுக்குத் தத்தம் செய்தோம்.

7 நீயும் உன் புதல்வர்களும் உங்கள் குருத்துவத்தைக் கவனமாய்க் காப்பாற்றுங்கள். பலிபீடத்துக்கடுத்த ஊழியத்தையும் திரைக்கு உட்புறத்தில் செய்யவேண்டிய பணிவிடைகளையும் நீங்களே செய்து முடிக்க வேண்டும். யாரேனும் ஓர் அந்நியன் அவற்றின் கிட்ட வந்தால் கொலை செய்யப்படுவான் என்றார்.

8 மீண்டும் ஆண்டவர் ஆரோனை நோக்கி: இதோ நம்முடையவையான முதற் பலன்களை உன் காவலிலே ஒப்புவித்து விட்டோம். இஸ்ராயேல் மக்களால் படைக்கப்படும் எல்லாவற்றையும் உங்கள் குருத்துவ ஊழியத்திற்குப் பரிசிலாக உனக்கும் உன் புதல்வர்களுக்கும் தந்தோம். அது நித்திய சட்டமாம்.

9 ஆகையால், ஆண்டவருக்குக் காணிக்கை செய்து படைக்கப்பட்டவைகளில் உன்னுடையனவாய் இருப்பவை எவையென்றால்: அவர்கள் படைக்கும் எல்லாக் காணிக்கையும், பானபோசனப் பலிகளும், பாவநிவாரணப் பலிகளும், குற்ற நிவாரணப் பலிகளும் ஆகிய இவைகள் மிகவும் புனிதமானபடியால் உனக்கும் உன் புதல்வர்களுக்கும் சொந்தப் பாகமாகும்.

10 அவற்றைப் புனித இடத்திலே உண்பாய். அவை உனக்காக ஒதுக்கப்பட்டனவாதலால் ஆண்கள் மட்டும் அவற்றை உண்பார்கள்.

11 இஸ்ராயேல் மக்கள் நேர்ந்தும் மனமொத்து ஒப்புக்கொடுக்கிறவைகளான முதற்பலன்களை உனக்கும் உன் புதல்வர் புதவியர்க்கும் நித்திய உரிமையாக அளித்திருக்கிறோம். உன் வீட்டாரில் பரிசுத்தன் எவனோ அவன் அவற்றை உண்பான்.

12 எண்ணெய், முந்திரிபழச்சாறு, கோதுமை முதலிய சிறந்த பொருட்களையும், அவர்கள் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கிற எல்லாப் புதுப் பலன்களையும் உனக்குத் தந்தோம்.

13 மண்ணில் தோன்றி முதலில் பழுத்த பலன்களில் அவர்கள் ஆண்டவருக்குக் கொண்டு வந்து ஒப்புக்கொடுப்பனவெல்லாம் உன்னுடையவனவாகும். உன் வீட்டில் சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவற்றை உண்ணலாம்.

14 இஸ்ராயேல் மக்கள் நேர்ந்து செலுத்துவதெல்லாம் உனக்கு உரியதாகும்.

15 மனிதர்களிலும் சரி, மிருகங்களிலும் சரி - கருப்பையைத் திறந்து பிறக்கும் தலையீற்றில் ஆண்டவருக்குச் செலுத்தப்படுவன எல்லாம் உனக்கு உரியன. ஆயினும், மனிதனின் முதற்பேற்றுக்குப் பதில் பணம் வாங்குவாய், சுத்தமில்லாத உயிர்ப்பிராணியின் தலையீற்றையும் மீட்கப்படச் செய்வாய்.

16 இப்படி மீட்கப்பட வேண்டியவை ஒரு மாதத்திற்கு மேற்பட்டவையானால், புனித இடத்தின் சீக்கல் கணக்குப்படி, ஐந்து சீக்கலால் மீட்கப்படும். ஒரு சீக்கலில் இருபது ஒபோல் உண்டு.

17 மாட்டின் தலையீற்றும் வெள்ளாட்டின் தலையீற்றும் மீட்கப்பட வேண்டாம். அவை ஆண்டவருக்கு முன்பாகப் புனிதமானவை. அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சிந்திவிட்டு, கொழுப்பை ஆண்டவருக்கு மிக்க நறுமணமாக எரிக்கக்கடவாய்.

18 நேர்ச்சை செய்யப்பட்ட அவற்றின் மார்க்கண்டமும் முன் தொடையும் போல், அவற்றின் இறைச்சியும் உன்னுடையனவாய் இருக்கும்.

19 இஸ்ராயேல் மக்களால் புனித இடத்திற்கென்று ஆண்டவருக்குச் செலுத்தப்படும் புதுப் பலன்கள்யாவும் உனக்கும் உன் புதல்வர் புதல்வியர்க்கும் நித்திய முறைமையாகத் தந்திருக்கின்றோம். ஆண்டவருடைய முன்னிலையில் இது உனக்கும் உன் புதல்வர்களுக்கும் என்றைக்கும் செல்லும் உப்பு உடன்படிக்கையாம் என்றார்.

20 மீண்டும் ஆண்டவர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய நாட்டில் நீங்கள் ஒன்றையும் உரிமையாக்கிக் கொள்ளவேண்டாம். அவர்கள் நடுவே உங்களுக்குப் பங்கு கிடையாது. இஸ்ராயேல் மக்கள் நடுவில் நாமே உன் பங்கும் உன் சொத்துமாய் இருக்கிறோம்.

21 இஸ்ராயேலர் பத்திலொரு பங்காகக் கொடுப்பவையெல்லாம் உடன்படிக்கைக் கூடாரத்தில் நமக்குப் பணிவிடை செய்து வருகிற லெவியின் புதல்வர்களுக்கு பரிசிலாக அளித்திருக்கிறோம்.

22 இஸ்ராயேல் மக்கள் இனிமேல் ஆசாரக் கூடாரத்தைக் கிட்டாதிருக்கும்படியாகவும், சாவுக்குரிய பாவத்தைச் செய்யாதிருக்குதம்படியாகவும் அவ்விதமாய்ச் செய்தோம்.

23 ஆலயத்தில் நமக்குப் பணிவிடை செய்து மக்களின் பாவங்களைச் சுமந்து கொள்ளும் லேவியின் புதல்வர்களுக்கு மட்டுமே அவை சொந்தம். இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய சட்டமாய் இருக்கும். அவர்களுக்கு வேறு சொத்து இராது.

24 தங்கள் வாழ்க்கைக்கும் தேவைகளுக்கும் நாம் கொடுத்திருக்கிற பத்திலொரு பங்கை அவர்கள் வாங்கி, தங்களுக்குப் போதுமென்று மகிழ்ச்சியாய் இருக்கக்கடவார்கள் என்பார்.

25 ஆண்டவர் பின்பு மோயீசனை நோக்கி,

26 நீ லேவியருக்குக் கட்டளையாகச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ராயேல் மக்கள் கையில் வாங்கிக் கொள்ளும்படி உங்களுக்கு நாம் உரிமையாகக் கொடுத்த பத்திலொரு பங்கை நீங்கள் வாங்கும்போது அதில் பத்திலொரு பங்கை ஆண்டவருக்குச் செலுத்தக்கடவீர்கள்.

27 அது களத்தின் புதுப்பலனைப் போலும் ஆலையின் புதுப் பலனைப் போலும் உங்களுக்கு எண்ணப்படும்.

28 இப்படியே நீங்கள் யார் யாரிடமிருந்து (பத்திலொரு பங்கை) வாங்கியிருப்பினும், அதில் கொஞ்சம்ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்த பின்பு, குருவாகிய ஆரோனுக்குக் கொடுக்க வேண்டும்.

29 உங்களுடைய பத்திலொரு பங்கிலேனும் மற்றுமுள்ள காணிக்கையிலேனும் எதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்களோ அது சிறந்ததும் முதல் தரமுமாய் இருக்க வேண்டும்.

30 மீண்டும் நீ அவர்களுக்குச் சொல்வாய். உங்கள் பத்திலொரு பங்கில் சிறந்தவைகளையும் முதல் தரமானவைகளையும் நீங்கள் செலுத்துகையில் அது களத்தின் தகனப் பலியைப் போலும் கொடிமுந்திரிப்பழ ஆலையின் புதுப்பலனைப் போலும் உங்களுக்கு எண்ணப்படும்.

31 அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்கள் வீடுகளில் எவ்விடத்திலேனும் உண்ணலாம். ஏனென்றால், நீங்கள் சாட்சியக் கூடாரத்தில் செய்யும் பணிவிடைக்குச் சம்பளம் அதுவே.

32 மேலும், இஸ்ராயேல் மக்கள் படைத்தவைகளை நீங்கள் தீட்டுப்படுத்தாதபடிக்கும், உயிர்ச் சேதம் உங்களுக்கு வராதபடிக்கும், நீங்கள் சிறந்தவைகளையும் அதிகம் கொழுத்தவைகளையும் உங்களுக்காகப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டாம். இப்படிப்பட்ட பாவத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கக்கடவீர்கள் என்பாய் (என்றார்).

அதிகாரம் 19

1 பின்னும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:

2 ஆண்டவர் நியமித்திருக்கிற பலியின் சடங்குமுறை என்னவென்றால்: இஸ்ராயேல் மக்கள் பழுதற்றதும் மாசில்லாததும் நுகத்தடி சுமக்காததுமாகிய நல்ல வளர்ச்சியடைந்த செந்நிறமுள்ள ஒரு கிடாரியை உங்களிடம் கொண்டுவர வேண்டுமென்று சொல்லுங்கள்.

3 அதை குருவாகிய எலெயஸாரிடம் ஒப்படையுங்கள். அவன் அதைப் பாளையத்திற்குப் புறம்பே கொண்டு போய் எல்லாருக்கும் முன்பாகச் சாகடிக்கக்கடவான்.

4 பிறகு அவன் அதன் இரத்தத்தில் விரலைத் தோய்த்துத் திரு உரைவிடத்துக்கு எதிராக ஏழுமுறை தெளித்த பின்பு,

5 எல்லாரும் பார்க்க அதைச் சுட்டெரிப்பான். அதன் தோலையும் இறைச்சியையும் இரத்தத்தையும் சாணியையும் கூடவே சுட்டெரிக்கக்கடவான்.

6 அன்றியும், கிடாரியைச் சுட்டெரிக்கிற நெருப்பிலே அவன் கேதுருக் கட்டையையும் ஈரோப்பையும், இருமுறை சாயந்தோய்த்த சிவப்பு நூலையும் போடக்கடவான்.

7 கடைசியில் தலைமைக்குரு தனதுஆடைகளைத் தண்ணீரில் தோய்த்துக் குளித்துப் பாளையத்தில் புகுந்துமாலைவரையிலும் தீட்டுப்பட்டிருப்பார்.

8 அந்தக் கிடாரியைச் சுட்டெரித்தவனும் தன் ஆடைகளைத் தோய்த்துக் குளித்து மாலைவரையிலும் தீட்டுப்பட்டிருப்பான்.

9 சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு போய்ப் பாளையத்திற்குப் புறம்பே மிகச் சுத்தமான ஓர் இடத்திலே கொட்டி வைப்பான். அது இஸ்ராயேல் மக்களாகிய சபையாரின் காவலிலே இருக்கும். அவர்கள் அதைத் தண்ணீரிலே கலந்து தெளிக்கும் தீர்த்தமாக உபயோகித்துக் கொள்வார்கள். (உள்ளபடி) பாவ நிவாரணமாக அந்தக் கிடாரி சுட்டெரிக்கப்பட்டது.

10 கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் ஆடைகளைத் தோய்த்து மாலைவரையிலும் தீட்டுப்பட்டிருப்பான். இந்தச் சட்டம் புனித சட்டமென்று இஸ்ராயேல் மக்களும் அவர்களிடம் தங்குகிற அந்நியர்களும் நித்திய கட்டளையாக அனுசரிக்கக் கடவார்கள்.

11 இறந்தவனின் பிணத்தைத் தொட்டவன் ஏழுநாள் வரையிலும் தீட்டுப்பட்டிருப்பான்.

12 அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அந்தத் தீர்த்தத்தினாலே தெளிக்கப்பட்டால் அவனுடைய தீட்டு கழிக்கப்படும். அவன் மூன்றாம் நாளிலே தெளிக்கப்படாமலிருந்தால், ஏழாம் நாளிலே தெளிக்கப்பட்டாலும் அவன் தீட்டுக் கழியாது.

13 இறந்தவனின் பிணத்தைத் தொட்டபின்பு எவன் மேற்படிச் சாம்பலைக் கலந்த தீர்த்தத்தினாலே தெளிக்கப்படாமலிருந்து திருக்கூடாரத்தைத் தொடத் துணிவானோ அவன் இஸ்ராயேலரிடையே இராதபடிக்குச் சாவான். தீட்டுக்கழிக்கும் தீர்த்தத்தினாலே தெளிக்கப்படாமல் இருந்தமையால் அவன் தீட்டுப்பட்டிருப்பான். அந்தத் தீட்டும் அவன்மேல் இருக்கும்.

14 கூடாரத்தில் ஒரு மனிதன் இறந்தால் அதற்கடுத்த சட்டமாவது: அவனுடைய கூடாரத்திலே புகுகிற யாவரும், அங்கே இருக்கிற எல்லாத் தட்டுமுட்டுகளும்ஏழு நாள் வரையிலும் தீட்டுப்பட்டிருக்கும்.

15 மூடி இல்லாமல் அல்லது மூடிக் கட்டப்படாமல் இருக்கும் பாத்திரங்கள் தீட்டுப்பட்டிருக்கும்.

16 வயல் வெளியிலே கொலையுண்டவனையாவது, தானாக இறந்தவனையாவது, அவன் எலும்பையாவது, அவனுடைய சமாதியையாவதுஎவன் தொட்டானோ அவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.

17 பாவ நிவாரணமாகச் சுட்டெரிக்கப்பட்ட கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு, அதன்மேல் ஊற்றுநீர் வார்க்க வேண்டும்.

18 பிறகு தீட்டுப்படாமலிருக்கும் ஒரு மனிதன் அந்தத் தீர்த்தத்தில் ஈசோப்பைத் தோய்த்துக் கூடாரத்தின் மேலும், பனி முட்டுகளின் மேலும் தொட்டதினால் தீட்டுக்கொண்ட எல்லா மனிதர் மேலும் தெளிப்பான்.

19 இவ்விதமே, தீட்டுப்படாதவன் மூன்றாம் ஏழாம் நாட்களில் தீட்டுப்பட்டவனைத் தெளித்துச் சுத்திகரிப்பான். இப்படி ஏழாம் நாளில் சுத்திகரத்தை அடைந்தவனோ தண்ணீரிலே குளித்துத் தன் ஆடைகளைத் தோய்த்து, மாலை வரையிலும் தீட்டுப்பட்டிருப்பான்.

20 தீட்டுப்பட்டிருக்கிறவன் இப்படிப்பட்ட சடங்குப்படி சுத்திகரிக்கப்படாவிடில், அவன் ஆண்டவருடைய திரு உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினானென்றும், சுத்திகரிக்கிற தீர்த்தத்தால் தெளிக்கப்படவில்லையென்றும் சபையில் இராதபடிக்குக் கொலை செய்யப்படுவான்.

21 இக் கட்டளை நித்திய சட்டமாக இருக்கும். மேற்படி தீர்த்தத்தைத் தெளித்தவனும் தன் ஆடைகளைத் தோய்க்கக்கடவான். சுத்திகரித்த தீர்த்தத்தைத் தொடுபவனும் மாலைவரையிலும் தீட்டுப்பட்டவனாக இருப்பான்.

22 தீட்டுப்பட்டிருக்கிறவன் எதைத் தொடுவானோ அதுவும் தீட்டுப்படும். இப்படித் தீட்டுப்பட்டவைகளைத் தொட்டவனும் மாலைவரையிலும் தீட்டுப்பட்டவனாக இருப்பான் என்றருளினார்.

அதிகாரம் 20

1 பின்னர் இஸ்ராயேல் மக்களாகிய சபையாரெல்லாம் முதல் மாதத்திலே சின் என்னும் பாலைனத்தை அடைந்தபோது, அவர்கள் காதேஸில் தங்கிக்கொண்டு இருக்கையிலே மரியாள் இறந்து அவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டாள்.

2 அப்போது மக்களுக்குத் தண்ணீர் இல்லாததைப்பற்றி மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் மக்கள் கூட்டம் கூடி,

3 குழப்பஞ்செய்து கொண்டு: எங்கள் சகோதரர்கள் ஆண்டவருடைய முன்னிலையில் மாண்ட போது நாங்களும் மாண்டு போயிருந்தால் நலமாயிருந்திருக்குமே.

4 நீங்கள் ஆண்டவருடைய சபையைப் பாலைவனத்திற்கு அழைத்துக்கொண்டு வருவானேன்? நாங்களும் எங்கள் மிருகங்களும் சாகும்படிதானோ?

5 இங்கே விதைப்புமில்லை; அத்திமரமும் இல்லை; கொடிமுந்திரியும் இல்லை; மாதுளஞ் செடியும் இல்லை; குடிக்கத் தண்ணீர் முதலாய் இல்லை. நீங்கள் எங்களை எகிப்து நாட்டினின்று இந்த வறண்ட இடத்திற்குக் கொண்டு வந்ததென்ன? என்றார்கள்.

6 அப்பொழுது மோயீசனும் ஆரோனும் மக்களை அனுப்பிவிட்டு, உடன்படிக்கைக் கூடாரத்தினுள் போய்த் தரையில் குப்புற விழுந்து, ஆண்டவரை நோக்கி ஆண்டவராகிய கடவுளே! இந்த மக்களின் கூக்குரலைக் கேட்டருள்வீர். அவர்கள் திருப்தியடைந்து முறுமுறுக்காதபடி உமது செல்வமாகிய நல்ல நீரூற்றைத் தந்தருள்வீர் என்றார்கள். அந்நேரமே ஆண்டவருடைய மாட்சி அவர்களுக்குக் காணப்பட்டது.

7 ஆண்டவர் மோயீசனை நோக்கி:

8 நீ உன் கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரன் ஆரோனும் மக்களை கூடி வரச் செய்யுங்கள். அவர்கள் கண்களுக்கு முன்னே நீங்கள் கற்பாறையைப் பார்த்துப்பேசினால் அதிலிருந்து தண்ணீர் புறப்படும். அவ்விதமாய் நீ கற்பாறையிலிருந்து அவர்களுக்குத் தண்ணீர் சுரக்கச் செய்த பிற்பாடு அவர்கள் எல்லாரும் குடிப்பார்கள்; அவர்களுடைய மிருகங்களும் குடிக்கும் என்றார்.

9 ஆகையால், மோயீசன் ஆண்டவருடைய கட்டளைப்படி ஆண்டவருடைய முன்னிலையிலிருந்த கோலை எடுத்துக்கொண்டார்.

10 சபையெல்லாம் கற்பாறைக்கு முன்பாகக் கூடியபோது, மோயீசன் அவர்களை நோக்கி: விசுவாசமில்லாத குழப்பக்காரர்களே, கேளுங்கள்! இப்பாறையினின்று உங்களுக்குத் தண்ணீர் சுரக்கச் செய்வது எங்களால் கூடுமானதோ? என்று சொல்லி,

11 தன் கையை ஓங்கிக் கற்பாறையைக் கோலினால் இருமுறை அடித்தார். அதிலிருந்து தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது. மக்களெல்லாம் குடித்தார்கள்; மிருகங்களும் குடிக்கத் தொடங்கின.

12 பின்பு ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் நம்மை நம்பாமலும் இஸ்ராயேல் மக்கள் கண்களுக்கு முன்பாக நம் புனிதத் தன்மையைப் பேணாமலும் நடந்தீர்களாதலால், நாம் அவர்களுக்குக் கொடுக்கவிருக்கிற நாட்டிற்கு நீங்கள் அவர்களைக் கொண்டு போவதில்லை என்றார்.

13 இவ்விடத்தில் இஸ்ராயேல் மக்கள் ஆண்டவருக்கு விரோதமாய் வாக்குவாதம் செய்தும் அவருடைய புனிதத்தன்மை அவர்களிடையே விளங்கினதனாலே அந்தத் தண்ணீர் வாக்குவாதத் தண்ணீர் எனப்பட்டது.

14 பின்பு மோயீசன் காதேஸிலிருந்து ஏதோமின் அரசனிடம் தூதர்களை அனுப்பி: உம்முடைய சகோதரராகிய இஸ்ராயேல் உமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால்: நாங்கள் பட்ட தொல்லையெல்லாம் உமக்குத் தெரியும்.

15 எங்கள் முன்னோர் எகிப்துக்குப் போனது, நாங்கள் எகிப்திலே நெடுநாள் வாழ்ந்திருந்தது, எகிப்தியர் எங்களையும் எங்கள் முன்னோர்களையும் துன்புறுத்தியது,

16 நாங்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடவே, அவர் எங்களைக் கேட்டருளி, எங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கும்படி ஒரு தூதரை அனுப்பியது ஆகிய இவையெல்லாம் நீர் அறிவீர். இப்பொழுது நாங்கள் உமது கடையெல்லைக்கு அண்மையிலுள்ள காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம்.

17 நாங்கள் உமது நாட்டின் வழியாய்க் கடந்து போகும்படி உத்தரவு கொடுக்க மன்றாடுகிறோம். வயல்வெளிகள் வழியாகவும் கொடிமுந்திரித் தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், உமது கிணற்றுத் தண்ணீரைக் குடியாமலும், நெடுஞ்சாலை வழி நடந்து, உமது எல்லைகளைத் தாண்டிப் போகுமட்டும் வலப்புறம் இடப்புறம் சாயாமல் நேராய்ச் செல்வோம் என்று சொல்லச் சொன்னார்.

18 அதற்கு ஏதோம்: நீ என் நாட்டின் வழியாய்க் கடந்து போகக் கூடாது; போனால், நான் படைகளோடு உன்னை எதிர்க்க வருவேன் என்று பதி சொல்ல,

19 இஸ்ராயேல் மக்கள்: நடப்பிலுள்ள பாதையில் செல்வோமேயன்றி, நாங்களும் எங்கள் மிருகங்களும் சிலவேளை உம்முடைய தண்ணீரைக் குடித்தால் அதற்குத் தகுந்த விலை கொடுப்போம். இதைப் பொறுத்தமட்டில் தடையொன்றும் இல்லை. நாங்கள் விரைவாய்க் கடந்து போவதே எங்களுக்குப் போதும் என்றனர்.

20 அதற்கு அவன்: இல்லை, போகக்கூடாது என்று கூறி, உடனே கணக்கற்ற மக்களோடும் பலத்தத படையோடும் எதிர் நிற்கப் புறப்பட்டான்.

21 இப்படி ஏதோம் தன் எல்லை வழியாகக் கடந்து போகும்படி கேட்டுக் கொண்ட இஸ்ராயேலுக்கு உத்தரவு கொடுக்கவில்லை. ஆதலால் இஸ்ராயேலர் சுற்று வழியாகப் போனார்கள்.

22 அவர்கள் காதேஸிலிருந்து புறப்பட்டு, ஓர் என்னும் மலையை அடைந்தார்கள். அந்த மலை ஏதோமின் எல்லைக்கு அண்மையில் உள்ளது.

23 அவ்விடத்திலே ஆண்டவர் மோயீசனை நோக்கி:

24 ஆரோன் தன் மக்களோடு சேர்க்கப்படக் கடவான். அவன் வாக்குவாதத் தண்ணீர் என்னப்பட்ட இடத்திலே நமது வார்த்தையை நம்பாததைப்பற்றி, நாம் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுக்கும் நாட்டில் அவன் புகுவதில்லை.

25 ஆரோனையும், அவனோடு அவன் புதல்வனையும் நீ அழைத்துக் கொண்டு ஓர் என்னும் மலையின்மேல் ஏறி,

26 ஆரோன் அணிந்திருக்கிற ஆடைகளைக் கழற்றி, அவற்றை அவன் புதல்வனாகிய எலெயஸாருக்கு அணிவிக்கக்கடவாய். ஆரோன் அங்கே இறந்து, (தன் முன்னோரோடு) சேர்க்கப்படுவான் என்றார்.

27 மோயீசன் ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி செய்தார். மக்கள் எல்லாரும் பார்க்க அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள்.

28 அங்கே மோயீசன் ஆரோனுடைய ஆடைகளைக் கழற்றியெடுத்து, அவற்றை அவன் புதல்வனாகிய எலெயஸாருக்கு அணிவித்தான்.

29 ஆரோன் மலையின் உச்சியில் இறந்து போனான். அப்போது மோயீசனும் எலெயஸாரும் இறங்கி வந்தார்கள்:

30 ஆரோன் இறந்து போனான் என்று அறிந்து, எல்லா மக்களும் தத்தம் குடும்பத்தில் ஏழுநாள் துக்கம் கொண்டாடினார்கள்.

அதிகாரம் 21

1 தெற்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த கானானைய அரசனாகிய ஆரோத் என்பவன் இஸ்ராயேலிய ஒற்றர்கள் வழியில் வந்திருப்பதைக் கேள்விப்பட்டபோது, அவன் அவர்களோடு போராடிச் சூறையாடி வெற்றி பெற்றான்.

2 இஸ்ராயேலரோ ஆண்டவரை நோக்கி: ஆண்டவரே இந்த மக்களை எங்கள் கையில் ஒப்புவித்தால், அவர்களுடைய நகரங்களைப் பாழாக்கி விடுவோம் என்று நேர்ந்துகொள்ள,ள

3 ஆண்டவர் இஸ்ராயேலரின் மன்றாட்டைக் கேட்டருளி, கானானையரை அவர்களுடைய கையிலே ஒப்புவித்தார். அப்பொழுது இஸ்ராயேலர் அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து, அவ்விடத்திற்கு ஓர்மா, அதாவது: சபிக்கப்பட்ட ஊர் என்று பெயரிட்டார்கள்.

4 பின்னர் இஸ்ராயேலர் ஓர் என்ற மலையிலிருந்து புறப்பட்டு, ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகத்தக்கதாகச் செங்கடல் வழியாகப் பயணம் செய்தார்கள். வழியின் வருத்தத்தினாலே மக்கள் மனம் சலிக்கத் தொடங்கி,

5 அவர்கள் கடவுளுக்கும் மோயீசனுக்கும் விரோதமாய்ப் பேசி: நீ எங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்ததென்ன? நாங்கள் பாலைவனத்தில் சாகும்படிதானோ? இவ்விடத்தில் அப்பமுமில்லை, தண்ணீருமில்லை. இந்த அற்ப உணவு எங்கள் மனத்துக்கு வெறுப்பைத் தருகிறது என்றார்கள்.

6 அப்பொழுது ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை அவர்களிடையே அனுப்பினார்.

7 பலர் கடியுண்டு சாவதைக்கண்டு, மக்கள் மோயீசனிடம் போய்: நாங்கள் கடவுளுக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதனால் பாவிகளானோம். பாம்புகள் எங்களை விட்டு நீங்கும்படி மன்றாட வேண்டும் என்றார்கள். மோயீசன் அவர்களுக்காக வேண்டிக்கொள்ள,

8 ஆண்டவர் அவரை நோக்கி: வெண்கலத்தால் ஒரு பாம்பின் உருவம் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கி வை. கடியுண்டவன் அதை உற்று நோக்கினால் உயிர் பிழைப்பான் என்று திருவுளம்பற்றினார்.

9 அவ்வாறே மோயீசன் வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் கட்டித் தூக்க, கடியுண்டவர்கள் அதைப் பார்த்து நலமடைந்தார்கள்.

10 பின்பு இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப் போய் ஒபோத்தில் பாளையம் இறங்கினார்கள்.

11 அங்கிருந்து பயணம் செய்து, கீழ்த்திசைக்கு நேராய் மோவாபுக்கு எதிரிலுள்ள பாலைவனத்தில் இருக்கும் ஜெயபாரிம் என்னும் இடத்திலே பாளையம் இறங்கினார்கள்.

12 அங்கிருந்து போய் ஜாரத் என்னும் ஓடையை அடைந்தார்கள்.

13 ஜாரத்தை விட்டு, அர்னோன் என்னும் ஆற்றுக்கு இப்புறம் பாளையம் இறங்கினார்கள். அது பாலைவனத்திலே அமோறையர் எல்லையை நெருங்கியதாய், மோவாப் நாட்டுக்கு எல்லையாகவும் இருக்கிறது. அது மோவாபியருக்கும் அமோறையருக்கும் மத்தியில் இருக்கிற மோவாபின் எல்லை.

14 ஆதலால், 'ஆண்டவருடைய போர்கள்' என்னும் நூலில் எழுதியிருக்கிறதாவது: ஆண்டவர் செங்கடலில் செய்தபடியே அர்னோன் ஆற்றிலும் செய்வார்.

15 ஆர் என்னும் இடத்திலே இளைப்பாறத் தக்கனவாகவும், மோவாபியருடைய எல்லைகளில் விழுத்தக்கனவாகவும் வெள்ளங்களில் கற்பாறைகள் சாய்ந்து போயினவாம்.

16 இஸ்ராயேலர் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போகையில், ஒரு கிணற்றைக் கண்டார்கள். அதைக் குறித்து ஆண்டவர் மோயீசனை நோக்கி: மக்களைக் கூடிவரச் செய். நாம் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்போம் என்று சொல்லியிருந்தார்.

17 அப்பொழுது இஸ்ராயேலர் எல்லாரும் கூடி ஒரே குரலாய்ப் பாடல் இசைத்து:

18 கிணற்று நீரே, பொங்கிவா. ஓ கிணறே, சட்டம் வகுப்பவரான (ஆண்டவர்) ஏவலால் தலைவர்களை உன்னைத் தோண்டினர். மேன் மக்கள் தண்டாயுதங்களைக் கொண்டு உன்னைத் தோண்டினர் என்று பாடினார்கள். இஸ்ராயேலர் பாலைவனத்தை விட்டு மத்தனா என்ற இடத்திற்கும்,

19 மத்தனாவிலிருந்து நகலியேலுக்கும், நகலியேலிலிருந்து பாமோட்டுக்கும் (வந்தார்கள்).

20 பாமோட்டுக்கு அப்பக்கம் மோவாப் நாட்டினுள்ளே ஒரு பள்ளத்தாக்கும், அதன் அருகே பாலைவனத்திற்கு எதிரே பஸ்கா என்ற ஒரு மலையும் உள்ளன.

21 அங்கிருந்து இஸ்ராயேலர் அமோறையரின் அரசனாகிய செனோனிடம் தூதரை அனுப்பி:

22 உமது நாட்டின் வழியாயக் கடந்துபோக எங்களுக்கு உத்தரவு கொடுக்க வேண்டும். நாங்கள் வயல் வெளிகளிலும்கொடிமுந்திரித் தோட்டங்களிலும் போகாமல், கிணற்றுத் தண்ணீரைக் குடியாமல் உமது எல்லையைக் கடந்து போகுமட்டும் நெடுஞ்சாலை வழி செல்வோம் என்று சொல்லச் சொன்னார்கள்.

23 செகோன் தன் எல்லை வழியாகக் கடந்து போக இஸ்ராயேலருக்கு உத்தரவு கொடாமல், படையெடுத்துப் பாலைவனத்தில் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு யாசாவுக்கு வந்து போர் தொடுத்தான்.

24 ஆனால், இஸ்ராயேலர் அவனைக் கருக்கு வாளால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புதல்வரின் நாட்டுக்கடுத்த செபோக் நாடு வரையிலும் அவன் நாட்டைப் பிடித்துக்கொண்டார்கள். அம்மோனியரின் எல்லைகள் அரண்களைக் கொண்டிருந்தமையால் (அவர்கள் செபோக் என்னும் ஊருக்கு அப்பால் போகவில்லை).

25 இவ்வாறு இஸ்ராயேலர் செகோனின் நகர்களையெல்லாம் பிடித்துக்கொண்டு, அமோறையருடைய நகர்களாகிய எசெபோனிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேறினர். எசேபோன் செகோனின் நகர்.

26 இவன் மோவாபின் அரசனோடு போர்புரிந்து, அர்னோன் வரையிலுமிருந்த அவன் நாட்டையெல்லாம் பிடித்து ஆண்டுகொண்டிருந்தான்.

27 எனவேதான், எசெபோனுக்கு வாருங்கள். செகோனின் நகர் கட்டி நிறுவப்படுவதாக.

28 எசெபோனிலிருந்து நெருப்பும், செகோனிலிருந்து சுவாலையும் புறப்பட்டு மோவாபியருடைய அர்னோன் என்னும் நகரத்தையும் அர்னோனின் மலைகளில் வாழ்ந்தோரையும் எரித்தது.

29 மோவாபே, உனக்குக் கேடாம்! காமோஸ் மக்களே, நீவிர் மடிந்தீர். காமோஸ் தன் புதல்வரைப் புறமுதுகு காட்டி ஓடச்சொல்லி, தன் புதல்வியரைப் அமாறையரின் அரசனான செகோனுக்கு ஒப்புக்கொடுத்தான்.

30 எசெபோன் தொடங்கித் திபோன் வரையிலும் அவர்களுடைய கொடுங்கோன்மை அழிந்தொழிந்தது. அவர்கள் ஓட்டம் பிடித்துக்களைத்ததனாலே, நொப்பே நகரத்திலும் மெதபா நகரத்திலும் போய்ச் சேர்ந்தார்கள் என்று பழமொழியாகச் சொல்லப்படும்.

31 நிற்க, இஸ்ராயேல் அமோறையரின் நாட்டில் குடியிருந்தார்கள்.

32 மோயீசன் யாசேரைப் பார்த்துவர ஒற்றரை அனுப்பினார். பிறகு அவர்கள் அதன் ஊர்களையும் பிடித்து, அங்கு வாழ்ந்தோரையும் முறியடித்தார்கள்.

33 அதற்குப் பிறகு அவர்கள் பாசானுக்குப் போகும் வழியாய்த் திரும்புகையில், பாசான் அரசனான ஓக் என்பவன் அவர்களை எதிர்த்துப் போர் செய்ய எத்ராய்க்குப் புறப்பட்டு வந்தான்.

34 அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் அவனையும், அவன் குடிகள் எல்லாரையும், அவன் நாட்டையும் உன் கையில் ஒப்புவித்தோம். நீ அவனுக்கு அஞ்சாதே; உசெபோனில் குடியிருந்த அமோறையரின் அரசனான செகோனுக்கு நீ செய்ததுபோல இவனுக்கும் செய்வாய் என்றருளினார்.

35 அவ்வாறே அவர்கள் அவனையும், அதன் புதல்வரையும், அவனுடைய மக்களனைவரையும், ஒருவரும் உயிருடன் இராதபடிக்கு வெட்டிப் போட்டு, அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

அதிகாரம் 22

1 அதன் பிறகு இஸ்ராயேலர் பயணம் செய்து, யோர்தான் நதிக்கு அக்கரையிலுள்ள எரிக்கோ நகர் கட்டப்பட்டுள்ள மோவாப் சமவெளிகளில் பாளையம் இறங்கினார்கள்.

2 சேப்போரிக் புதல்வனான பாலாக் இஸ்ராயேலர் அமோறையருக்குச் செய்த யாவையும் கேள்விப்பட்டு,

3 அச்சத்தால் மனம் கலங்கிய மோவாபியர்அவர்களுக்கு ஆற்றமாட்டாமல் பின்னடைவார்களென்று கண்டு,

4 மதியானியரின் முதியோரை நோக்கி: மாடு புல்லை வேரற மேய்வதுபோல, இஸ்ராயேலர் நமது எல்லைகளுக்குள் வாழ்கிற யாவரையும் அழித்துவிடுவார்கள் என்றான். இந்தப் பாலாக்கே அக்காலத்தில் மோவாபிலே அரசனாய் இருந்தவன்.

5 அவன் என்ன செய்தானென்றால், அம்மோனியர்நாட்டில் ஓடும் ஆற்றின் அருகே பேயோரின் புதல்வன் பாலாம் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு குறிசொல்பவன். அவனை அழைத்து வரும்படி பாலாக் தன் பிரதிநிதிகளை அனுப்பி: எகிப்திலிருந்து ஒரு மக்கட்கூட்டம் வந்திருக்கிறது. அவர்கள் நாடெங்கும் பரவி, என் எதிரே பாளையம் இறங்கினார்கள்.

6 அவர்கள் என்னிலும் வலியர். எப்டியேனும் நான் அவர்களை முறியடித்து நாட்டினின்று துரத்தும்படியாய், நீர் இங்கு வந்து அவர்களைச் சபிக்க வேண்டும். ஏனெனெறால், நீர் யார் யாருக்கு ஆசீர்அளிப்பீரோ அவர்கள் ஆசீர் அடைவார்களென்றும், யார்யாரைச் சபிப்பீரோ அவர்கள் சபிக்கப்பட்டவராவரென்றும் எனக்குத்தெரியும் என்று சொல்லச் சொன்னான்.

7 அவ்வாறே மோவாபின் பெரியோர்களும் மதியானிய முதியோர்களும் குறி சொல்வதற்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு பயணமானார்கள். அவர்கள் பாலாமிடம் போய்ச் சேர்ந்து பாலாக்கின் வார்த்தைகளைச் சொல்லிய பின்பு, அவன் அவர்களை நோக்கி:

8 நீங்கள் இன்று இரவு இங்கே தங்குங்கள். ஆண்டவர் எனக்குச் சொல்வதெல்லாம் உங்களுக்கு அறிவிப்பேன் என்றான். அவர்கள் பாலாமிடம் தங்கியிருக்கையில், ஆண்டவர் வந்து அவனை நோக்கி:

9 உன்னிடம் இருக்கிற அந்த மனிதர்கள் எதற்காக வந்தார்கள் என்று வினவ, அவன்:

10 சேப்போரின் புதல்வனான பாலாக் என்னும் மோவாபியருடைய அரசன் அவர்களை என்னிடம் அனுப்பி:

11 நாடெங்கும் பரவிய ஒரு மக்கட்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது. ஆகையால், நீ வந்து அவர்களைச் சபிக்க வேண்டும். சபித்தால், நான் எப்படியாவது அவர்களோடு போர்புரிந்து, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச் சொன்னான் என்றான்.

12 கடவுள் பாலாமை நோக்கி: நீ அவர்களோடு போகாதே. அந்த மக்கட் கூட்டத்தையும் நீ சபிக்கவேண்டாம். அது ஆசிர்பெற்ற குலமே என்றருளினார்.

13 பாலாம் காலையில் எழுந்து: ஆண்டவர் உங்களோடு போக வேண்டாமென்று விலக்கியுள்ளார். ஆதலால், நீங்கள் உங்கள் நாட்டுக்குப் போகலாம் என்று சொன்னான்.

14 பிரதிநிதிகள் திரும்பிப் பாலாக்கிடம் போய்: பாலாம் எங்களோடு வரமாட்டேனென்று சொன்னான் என்றார்கள்.

15 பாலாக் அவர்களைக்காட்டிலும் அதிக மதிப்பிற்குரிய உயர்குலப் பிரபுக்களை மறுபடியும் (அனுப்பினான்).

16 இவர்கள் பாலாமிடம் போய்: சேப்போரின் புதல்வனான பாலாக் எங்களை அனுப்பி: நீ என்னிடம் வருவதற்குத் தடை எதுவும் வேண்டாம்.

17 உம்மை மதித்துப் போற்றவும், நீர் கேட்கிறதெல்லாம் கொடுக்கவும் தயாராயிருக்கிறேன். வாரும், வந்து அவர்களைச் சபியும் என்று உம்மிடம் சொல்லக் கட்டளையிட்டான் என்றார்கள்.

18 பாலாம் அவர்களை நோக்கி: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியையும் பொன்னையும் தந்தாலும், நான் கடவுளாகிய ஆண்டவர் சொல்லியதற்கு அதிகமாகவும் அல்லது குறைவாகவும் சொல்லி, அவருடைய வார்த்தையைப் புரட்டுதல் என்னாலே இயலாது.

19 ஆயினும், ஆண்டவர் மறுபடியும் எனக்கு என்ன சொல்வார் என்பதை நான் அறியும் பொருட்டு, இந்த இரவிலும் இங்கே தங்க வேண்டுமென்று உங்களை மிகவும் மன்றாடுகிறேன் என்றான்.

20 இரவிலே கடவுள் பாலாமிடம் வந்து: இந்த மனிதர்கள் உன்னை அழைக்க வந்துள்ளார்களாதலால், நீ எழுந்து அவர்களோடு போனாலும் போலாம். ஆனால், நாம் உனக்குக் கட்டளையிட்டிருக்கிறபடி மட்டுமே செய்வாய் என்றுரைத்தார்.

21 பாலாம் காலையில் எழுந்து தன் கோவேறு கழுதைக்குச் சேணங்கட்டி அவர்களோடு புறப்பட்டுப் போனான்.

22 அவன் போனதினால் கடவுளுக்குக் கோபம் மூண்டது. ஆண்டவருடைய தூதரான ஒருவர் பாலாமுக்கு எதிரே வந்து வழியில் நின்றுகொண்டிருந்தார். பாலாமோ தன் கழுதைமேல் உட்கார்ந்திருந்தான். அவன் வேலைக்காரர் இருவரும்பக்கத்தில் நடந்து வந்தார்கள்.

23 வாளை உருவிப் பாதையில் நின்று கொண்டிருந்த வானவரைக் கண்டு, கழுதை வழியைவிட்டு வயலிலே விலகிப் போயிற்று. பாலாம் அதை அடித்துப் பாதையிலே திருப்ப முயன்றான்.

24 (அங்கே) மதில்களால் சூழப்பட்ட கொடிமுந்திரித் தோட்டங்கள் இருந்தன. வானவர் அந்த இரு சுவர்களுக்கிடையே நின்று கொண்டார்.

25 கோவேறு கழுதை அவரைக் கண்டு, சுவரோரமாய் ஒதுங்கி, பாலாமுடைய காலைச் சுவரோடு நெருக்கி நசுக்கி விட்டது. அவனோ அதைத் திரும்ப அடித்தான்.

26 அப்பொழுது வானவர் வலப்புறமும் இடப்புறமும் விலக இடமில்லாத ஒடுக்கமான இடத்தில் ஒதுங்கி நின்றார்.

27 நின்று கொண்டிருந்த வானவரைக் கண்டதும், கழுதை தன்மேல் உட்கார்ந்திருந்தவனுடைய கால்களின் கீழே படுத்துக் கொண்டது. பாலாம் சினம் கொண்டு கழுதையை மேன்மேலும் அடிக்க,

28 ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார். அது பாலாமை நோக்கி: நீர் என்னை ஏன் அடிக்கிறீர்? மூன்று தடவையும் என்னை அடித்தீரே; நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.

29 என்னைக் கேலி செய்ததனால் நீ அடிக்குத்தகுதியாயிருக்கிறாய். என் கையில் ஒரு வாள் இருந்தாலோ உன்னைக் கொன்று போட்டிருப்பேன் என்றான்.

30 கோவேறு கழுதை: என் மீது ஏறின நாள்முதல் இந்நாள் வரையிலும் நீர் சவாரி செய்த கழுதை நான்தான் அல்லவா? இப்படி எப்போதேனும் நான் உம்மிடம் துடுக்குச் செய்ததுண்டோ என்று கேட்க, பாலாம்:

31 இல்லை என்றான். அந்நேரத்திலே ஆண்டவர் பாலாமுடைய கண்களைத் திறந்தார். அவன் வாள் உருவிப் பாதையில் நின்றுகொண்டிருந்த வானவரைக் கண்டு, குப்புறவிழுந்து அவரை வணங்கினான்.

32 வானவர் அவனை நோக்கி: உன் கோவேறு கழுதை நீ மும்முறை அடிப்பானேன்? உன் நடத்தை கெட்டது. அது எனக்கு மாறுபடாய் இருப்பதினால், நான் உனக்கு எதிரியாக வந்துநிற்கிறேன்.

33 உன் கேவேறு கழுதை விலகி எனக்கு இடம் கொடாதிருந்திருக்குமாயின், உன்னைக் கொன்றுவிட்டு அதை உயிரோடு விட்டு வைத்திருந்திருப்பேன் என்றார்.

34 பாலாம்: நான் பாவம் செய்தேன். வழியிலே நீர் எனக்கு எதிராக நின்று கொண்டிருந்தீரென்று அறியாதிருந்தேன். இப்பொழுது நான் வழிபோகிறது உமக்கு ஒவ்வாதிருக்குமாயின், இதோ திரும்பிப்போகிறேன் என்றான்.

35 வானவர் அவனை நோக்கி: நீ இவர்களோடு போ. ஆனால், நான் உனக்குக் கட்டளையிடும் வார்த்தையேயன்றி வேறு வார்த்தை சொல்லாதபடி நீ எச்சரிக்கையாய் இரு என்றார். அப்படியே (பாலாம்) பிரபுக்களோடு போனான்.

36 பாலாம் வருவதைக் கேள்வியுற்றவுடனே பாலாக் அரசன் அர்னோன் ஆற்றின் கடைசி எல்லையிலுள்ள மோவாபியரின் ஒரு நகரம்வரையிலும் அவனுக்கு எதிர்கொண்டு போய், பாலாமை நோக்கி:

37 நான் உம்மை அழைக்கும்படி பிரதிநிதிகளை அனுப்பியிருந்தேனே; நீர் விரைவாய் என்னிடம் ஏன் வரவில்லை? தகுந்த பரிசில் உமக்குக் கொடுக்க என்னால் இயலாதென்று நினைத்துத்தானோ அப்படிச் செய்தீர் என்று வினவினான்.

38 அதற்குப் பாலாம்: இதோ வந்தேன். கடவுள் என் வாயிலே வைக்கும் வார்த்தையையன்றி வேறு வார்த்தை சொல்ல என்னால் ஆகுமோ என்று பதில் கூறினான்.

39 அதன்பின் அவர்கள் இருவரும் கூடிப்போய், (பாலாக்கின்) நாட்டைச் சேர்ந்த கடைசி எல்லையிலுள்ள ஒரு நகரத்தை அடைந்தார்கள்.

40 அங்கே பாலாக் ஆடுமாடுகளைப் பலியிட்டு பாலாமுக்கும் அவனோடிருந்த பிரவுக்களுக்கும் பரிசில்கள் அனுப்பினான்.

41 மறுநாள் காலையில் பாலாக் (அரசன்) பாலாமை அழைத்து, பாவால் மேடுகளின்மேல் அவனைக் கூட்டிக் கொண்டுபோனான். பாலாம் அங்கிருந்து இஸ்ராயேலருடைய கடைசிப் பாளையத்தை பார்த்தான்.

அதிகாரம் 23

1 அப்போது பாலாம் பாலாக்கை நோக்கி: நீர் இங்கே ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு இளங்காளைகளையும் ஏழு ஆட்டுக் கிடாய்களையும் எனக்கு ஆயத்தப்படுத்தி வைப்பீர் என்றான்.

2 பாலாம் சொன்னபடியே அவன் செய்தான். ஒவ்வொரு பீடத்தின் மேலும் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கிடாயையும் வைத்தார்கள்.

3 அப்பொழுது பாலாம் பாலாக்கை நோக்கி: ஒருவேளை ஆண்டவர் என்னைச் சந்திக்க வருவாரோவென்று நான் போய் அறிந்து, அவர் கட்டளையிட்டிருப்பதெல்லாம் உமக்குச் சொல்வேன். அதுவரை நீர் சற்றுநேரம் உமது தகனப் பலியண்டையில் நிற்கக்கடவீர் என்றான்.

4 சீக்கிரமாய் விலகிப் போனவுடனே கடவுள் அவனுக்கு எதிரில் வந்து நின்றார். பாலாம் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் செய்து, ஒவ்வொரு பலிபீடத்திலும் ஓர் இளங்காளையும், ஆட்டுக்கிடாயும் வைத்துள்ளேன் என்றுசொல்ல,

5 ஆண்டவர் அவனுடைய வாயிலே ஒரு வார்த்தையை வைத்து: நீ பாலாக்கிடம் திரும்பிப்போய் இதனைச் சொல்லக்கடவாய் என்று அனுப்பினார்.

6 பாலாம் திரும்பிப்போய்ப் பர்ர்த்தபோது, பாலாக் மோவாபியரின் எல்லாப் பிரவுக்களோடு தன் தகனப் பலியண்டை நின்று கொண்டிருக்கக் கண்டான்.

7 பின் தன் மறைபொருளை உரைக்கத்தொடங்கி: மோவாபியரின் அரசனாகிய பாலாக் என்னை அராமினின்றும் கீழ்த்திசை மலைகளிலிருந்தும் வரவழைத்து: நீ வந்து யாக்கோபைச் சபிக்கவும் இஸ்ராயேலரை வெறுத்துப் பேசவும் வேண்டும் என்றான்.

8 கடவுள் எவனைச் சபிக்காதிருக்கிறாரோ அவனை நான் எப்படி சபிக்கக்கூடும்? ஆண்டவர் எவனை வெறுக்காதிருக்கிறாரோ அவனை நான் எப்படி வெறுத்துப் பேசக்கூடும்?

9 பாறை உச்சிகளிலிருந்து நான் அவனைக் காண்பேன். குன்றுகளிலிருந்து நான் அவனைப்பார்ப்பேன். அந்த மக்கள் தனிப்பட வாழ்ந்திருந்து, மற்ற இனங்களோடு கலவாமல் இருக்கும்.

10 தூசிப் பெருக்கம் போன்ற யாக்கோபின் மக்களை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ராயேலரின் வம்சங்களைக் கணக்கிடத்தக்கவன் யார்? ஆ! நீதிமானின் மரணத்துக்கு என் மரணம் சரியொத்ததாகக்கடவது. என் முடிவு அவர்களுடைய முடிவுபோல் ஆகக்கடவது என்று சொன்னான்.

11 அதைக் கேட்ட பாலாக் (அரசன்) பாலாமை நோக்கி: நீர் என்ன செய்கிறீர்? என் பகைவர்களைச் சபிக்கும்படி உம்மை வரவழைத்தேன். நீரோ ஆவர்களை ஆசீர்வதிக்கிறீரே என,

12 அவன்: ஆண்டவர் கட்டளையிட்டதையன்றி நான் வேறாக உரைப்பதாகுமோ என்று பதில் கூறினான்.

13 பாலாக்: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னுடன் வாரும். அங்கே இஸ்ராயேலர் எல்லாரையும் பாராமல், அவர்களின் ஒரு பாகத்தை மட்டும் காண்பீர். அவ்விடத்திலிருந்து நீர் அவர்களைச் சபிக்க வேண்டும் என்று சொல்லி,

14 பாலாக் அவனை உயர்ந்த இடமாகிய பஸ்கா மலைச்சிகரத்திற்குக் கூட்டிக்கொண்டுபோக, பாலாம் அங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்திலும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக்கிடாயையும் வைத்தான்.

15 பிறகு பாலாக்கை நோக்கி: நீர் இங்கே உம்முடைய தகனப்பலியண்டை நில்லும். நான் போய் ஆண்டவரைச் சந்தித்து வருவேன் என்றான்.

16 ஆண்டவர் பாலாமைச் சந்தித்து, அவன் வாயில் ஒரு வார்த்தையை வைத்து: நீ பாலாக்கிடம் திரும்பிப்போய் இந்த வார்த்தையைச் சொல்வாய் என்று அனுப்பினார்.

17 அவன் திரும்பி வந்து பார்த்தான். பாலாக்கும் அவனோடிருந்த மோவாபியரின் பிரபுக்களும் தகனப்பலியண்டை நின்றுகொண்டிருந்தார்கள். பாலாக் அவனை நோக்கி: ஆண்டவர் என்ன சொன்னார் என்று வினவ,

18 பாலாம் மறைபொருளை உரைத்து: பாலாக்கே, எழுந்திரும். சேப்போரின் மைந்தரே, நன்றாய்க் கேளும்.

19 கடவுள் மனிதனைப்போல் பொய் சொல்பவரும் அல்லர். மனிதனுக்குப் பிறந்தவனைப் போல் மாறுபடுகிறவரும் அல்லர். தாம் சொல்லியதைச் செய்யமால் இருப்பாரோ? பேசியதை நிறைவேற்றாமல் இருப்பாரோ?

20 நான் ஆசீர் அளிக்கக் கொண்டுவரப்பட்டேன். அந்த ஆசீரை மாற்ற என்னால் இயலாது.

21 யாகோபிலே பொய்த் தேவர்களும் இல்லை. இஸ்ராயேலரிடையே விக்கிரகங்களும் இல்லை. அவனுடைய கடவுளாகிய ஆண்டவர் அவனோடு இருக்கிறார். அரசனின் வெற்றி ஆர்ப்பரிப்பு அவனுக்குளே இருக்கிறது.

22 கடவுள் அவனை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவனது வலிமையோ காண்டாமிருகத்தின் வலிமை போன்றது.

23 யாக்கோபில் மந்திரவாதிகளும் இல்லை. இஸ்ராயேலில் குறி சொல்பவரும் இல்லை. யாக்கோபிடமும் இஸ்ராயேலரிடமும் கடவுள் இன்னின்ன காரியங்களைச் செய்தார் என்று பிறகு சொல்லப்படும்.

24 இதோ மக்கள் பெண் சிங்கமென எழும்புவர். தாடி சிங்கமென நிமிர்ந்து நிற்பர். தான் பிடித்த இரையை உண்டு, வெட்டுண்டவர்களின் செந்நீரைப் பருகுமட்டும், அது படுத்துக்கொள்ள மாட்டாது என்று சொன்னான்.

25 பாலாக் (அரசன்) பாலாமை நோக்கி: அவர்களை நீர் சபிக்கவும் வேண்டாம்; ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என,

26 அவன்: கடவுள் எனக்குக் கட்டளையிட்டிருப்பதெல்லாம் நான் செய்வேன் என்று உனக்குச் சொன்னேனன்றோ என்றான்.

27 பாலாக் அவனை நோக்கி: வேறொரு இடத்திற்கு உம்மைக் கூட்டிக்கொண்டு போகிறேன், வாரும். ஒருவேளை அங்கேயாவது நீர்அவர்களைச் சபிக்கிறது கடவுளுக்கு விருப்பமாய் இருக்கலாம் என்று சொல்லி,

28 பாலைவனத்திற்கு எதிரேயுள்ள போகோர் மலையின் சிகரத்திற்கு அவனைக் கூட்டிக்கொண்டு போனான்.

29 பாலாம்: இங்கே ஏழு பலிபீடங்களைக்கட்டி, எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கிடாய்களையும் ஆயத்தம் செய்வீர் என்று சொன்னான்.

30 பாலாம் சொன்னபடியே பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்திலும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக்கிடாயையும் வைத்தான்.

அதிகாரம் 24

1 இஸ்ராயேலருக்கு ஆசீர் அளிப்பது ஆண்டவருக்கு விருப்பமென்று பாலாம் கண்டு, முன் செய்ததுபோல் சகுனம் பார்க்கப் போகாமல், பாலைவனத்திற்கு நேராகத் தன் முகத்தைக் திருப்பி,

2 கண்களை ஏறெடுக்கவே, இஸ்ராயேலர் தங்கள் கோத்திரங்களின்படியே பாளையம் இறங்கியிருக்கக் கண்டான். அந்நேரம் கடவுளால் ஏவப்பட்டவனாய் அவன் இறைவாக்குரைக்கலானான்.

3 எப்படியென்றால்: பேயோரின் புதல்வனாகிய பாலாம் உரைத்த வார்த்தை; இருண்ட கண்ணையுடையவன் பகர்ந்த வாக்கியம்;

4 கடவுள் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, எல்லாம் வல்லவரின் தரிசனத்தைக் கண்டு மயங்கிக் கீழே விழுந்தபின் கண்பார்வை பெற்றவன் சொல்வதாவது:

5 யாக்கோபே, உன் திரைக் கூடாரங்கள் எவ்வளவோ அழகானவை! இஸ்ராயேலே, உன் கூடாரங்கள் எவ்வளவு அலங்காரமாய் இருக்கின்றன! 6 அவைகள் செடிகொடி மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்குகளைப் போலும், நதியோரத்திலுள்ள சிங்காரவனங்களைப் போலும், ஆண்டவர் வைத்த வாசனை மரங்களைப் போலும், நீரருகே வளர்கின்ற கேதுரு மரங்களைப் போலும் இருக்கின்றன.

7 அவனுடைய நீர்ச்சாலினின்று தண்ணீர் பாய்ந்தோடும். அவன் குலம் பெருவெள்ளம் போலப் பரவும். அவனுடைய அரசன் ஆகாகைக் காட்டிலும் உயர்ந்தவனாய் இருப்பான். ஆகாகின் ஆட்சியை அவனிடமிருந்து பறித்துக்கொள்வான்.

8 அவன் காண்டாமிருகத்துக்கு நிகரான வலிமையுடையவனாய், அவனை ஆண்டவர் எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவர்கள் தங்கள் பகைவர் இனத்தை அழித்து, அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளால் எய்வார்கள்.

9 அவன் பதுங்கும் சிங்கம் போலும், யாரும் எழுப்பத் துணியாத பெண்சிங்கம் போலும் படுத்துறங்குவான். உனக்கு ஆசீர் அளிப்பவன் ஆசீர் பெறுவான்; உன்னை சபிப்பவன் சாபத்துக்கு உள்ளாவான் என்று எண்ணப்படுவான் என்றான்.

10 அப்பொழுது பாலாக் பாலாமின் மீது மனம் குமுறிக் கைதட்டி: உன் பகைவர்களைச் சபிக்க வேண்டுமென்று நான் உம்மை அழைத்திருக்க, நீர் மூன்று முறையும் அவர்களுக்கு ஆசீர் அளித்தீரே! 11 உம் இடத்திற்குத் திரும்பிப்போம்! உம்மை மிகுதியாய் மகிமைப்படுத்தத் தீர்மானித்திருந்தேன்; ஆனால் நீர் அந்தப் பெரும் பேறுபெறாதபடிக்கு ஆண்டவரே தடுத்துள்ளார் என்றான்.

12 அதற்கு பாலாம்: நீர் என்னிடம் அனுப்பின பிரதிநிதிகளுக்கு நான் என்ன சொன்னேன்?

13 பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், என் விருப்பப்படி நன்மையேனும் தீமையேனும் வருவிக்க என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையை மீற என்னாலே கூடாது என்றும், ஆண்டவர் சொல்லிய எல்லாவற்றையும் சொல்வேன் என்றும் நான் சொன்னேனன்றோ? ஆயினும்,

14 நான் இதோ என் மக்களிடம் போய், பிற்காலத்திலே உமது மக்கள் அந்த மக்களுக்கு இன்னின்னது செய்யலாம் என்பதைக்குறித்து உமக்குத் தெரிவிப்பேன் என்றான்.

15 பாலாம் மறுபடியும் இறைவாக்குரைக்கத் தொடங்கினான். எப்படியென்றால்: பேயோரின் புதல்வன் பாலாம் பேசினான்; எவனுடைய கண் மூடியிருந்ததோ அவன் உரைத்தான்;

16 கடவுளின் வார்த்தைகளையும் கேட்டு, உன் உத்தம (கடவுளின்) உண்மையையும் அறிந்து, எல்லாம் வல்லவரின் தரிசனத்தையும் கண்டு, மயங்கிக் கீழே விழுந்து கண் பார்வை பெற்ற நான் அவரைக் காண்பேன்;

17 ஆனால், இப்போதல்ல. அவரைத் தரிசிப்பேன்; ஆனால், அண்மையில் அல்ல. யாக்கோபிலிருந்து ஒரு விண்மீன் உதிக்கும். இஸ்ராயேலரிடமிருந்து ஒரு செங்கோல் எழும்பும். அது மோவாபின் பிரபுக்களை நைய நொறுக்கும். சேத் புதல்வர்கள் எல்லாரையும் அழித்தொழிக்கும்.

18 ஏதோம் நாடு அதன் வசமாகும். செயீரின் உடமை பகைவர்களின் உரிமையாகும். இஸ்ராயேல் பேராற்றல் பெற்று விளங்கும்.

19 எவர் ஆட்சி செய்து, நகரத்தில் எஞ்சியிருப்பதைத் தோன்றுவார் என்றான்.

20 மேலும் அவன் அமலேக்கைக் கண்டு: அமலேக் மக்களினத்தில் முதலோன்; அவன் முடிவிலே முற்றும் அழிவான் என்று இறைவாக்குரைத்தான்.

21 அப்பால் சீனையனையும் கண்டு அவன் இறைவாக்காய்: உன் உறைவிடம் அரண் சூழ்ந்த உறைவிடம். ஆயினும், நீ உன் கூட்டைப் பாறையின் மேல் கட்டியிருந்தாலும்,

22 சீன் சந்ததியில் நீ தலைவனாயிருந்தாலும் எத்தனை நாள் வரையிலும் நிலை நிற்பாய்? ஆசூர் உன்னைச் சிறைப்படுத்தப் போகிறான் என்றான்.

23 மறுபடியும் அவன் வாயைத் திறந்து: ஐயோ, கடவுள் இதைச்செய்யும் போது எவன்தான் பிழைப்பான்?

24 இத்தாலி நாட்டிலிருந்த மூன்று அணிவகுப்புப் படை வீரர்கள் கப்பல்களில் ஏறி வருவார்கள். அவர்கள் அசீரியரைத் தோற்கடிப்பார்கள்; எபிரேயரைப் பாழாக்குவார்கள்; இறுதியில் தாங்களும் அழித்தொழிக்கப்படுவார்கள் என்றான்.

25 பாலாம் இதைச்சொல்லி முடித்து, எழுந்து தன் இடத்திற்குத் திரும்பினான். பாலாக்கும் தான் வந்த வழியே திரும்பிப் போனான்.

அதிகாரம் 25

1 அக்காலத்தில் செத்தீமிலே தங்கியிருந்த இஸ்ராயேலர் மோவாபியரின் புதல்வியரோடு விபசாரம் செய்யத் தொடங்கினர்.

2 இந்தப் பெண்கள் தங்கள் (தேவர்களுக்குப்) படைத்த பலிகளுக்கு அவர்களை வரவழைத்தார்கள். அவர்களும் அவ்வாறே போய், படைக்கப்பட்டவைகளை உண்டு விக்கிரக ஆராதனை செய்தார்கள்.

3 இப்படி இஸ்ராயேலர் பீல் பேகோரை ஆராதிப்பதில் ஈடுபடத் தொடங்கினார்கள். அதுபற்றி ஆண்டவருக்குக் கோபம் மூண்டது.

4 அவர் மோயீசனை நோக்கி: நமது கோபம் இஸ்ராயேல் மக்களை விட்டு நீங்கும் பொருட்டு நீ மக்களின் தலைவர்கள் எல்லாரையும் பிடித்து, வெளிப்படையாய் அவர்களைத் தூக்குமரத்திலே தூக்கிடு என்றார்.

5 அப்படியே மோயீசன் இஸ்ராயேலரின் நடுவர்களை நோக்கி: நீங்கள் பீல் பேகோர் ஆராதனையில் ஈடுபட்ட உங்கள் உறவின் முறையாரைக் கொன்றுவிடுங்கள் என்றார்.

6 அப்பொழுது மோயீசனும் இஸ்ராயேல் மக்கள் அனைவரும்ஆசாரக் கூடாரவாயிலுக்கு முன்பாக அழுது கொண்டிருக்கையில், இதோ எல்லாரும் பார்க்க ஓர் இஸ்ராயேலன் மதியானியப் பெண்ணான ஒரு வேசியின் வீட்டிலே நுழைந்தான்.

7 குருவாகிய ஆரோன் புதல்வன் எலெயஸாருடைய மகனான பினேயஸ் அதைக் கண்டு, நடுச் சபையிலிருந்து எழுந்து, ஒரு கட்டாரியைக் கையில் ஏந்தி,

8 விபசாரம் நடக்கும் வீட்டில் அவனைப் பின்தொடர்ந்து போய், அவனையும் அந்தப் பெண்ணையும் மறைவிடத்திலே குத்திக் கொன்றுவிட்டான். அதனாலே இஸ்ராயேலயர் மீது விழுந்திருந்த வாதை நீங்கிப் போயிற்று.

9 எனினும் அவ்வாதையால் இருபத்து நாலாயிரம் பேர் கொலை செய்யப்பட்டார்கள்.

10 அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி:

11 நாமே நமதுகடுங்கோபத்தில் இஸ்ராயேல் மக்களை வேரறுக்க இருக்கையிலே, குருவாகிய ஆரோனின் புதல்வனான எலெயஸாரின் மகன் பினேயஸ் நம்மை அப்படிச் செய்யவிடாமல், தானே அவர்கள் மேல் கோபங்கொண்டவனாய் அவர்களைக் கண்டித்ததே நல்லது. அவன் தன் பக்தி வைராக்கியத்தினால் இஸ்ராயேலர் மேல் நமக்கு உண்டான கோபத்தைத் தணித்தான்.

12 ஆதலால், இதோ நமது உடன்படிக்கையின் சமாதானத்தை நாம் அவனுக்கு அளித்துள்ளோம் என்றும்,

13 அவன் தன் கடவுளுக்காகப் பக்தி வைராக்கியம் காண்பித்து இஸ்ராயேல் மக்களுடைய துரோகத்திற்குப் பரிகாரம் செய்தமையால் அவனுக்கும் அவனுக்குப்பின் அவன் சந்ததிக்கும் நித்திய குருப்பட்டத்துக்குரிய உடன்படிக்கையை நிறுவுகின்றோம் என்றும் அவனுக்குச் சொல்வாய் என்றருளினார்.

14 மதியானியப் பெண்ணோடு குத்துண்டு செத்த இஸ்ராயேல் ஆடவனின் பெயர் சம்பிரி. அவன் சலுவின் புதல்வன்; சிமியோன் வம்சத்திலும் கோத்திரத்திலும் பிரபுவாய் இருந்தவன்.

15 குத்துண்டு செத்த மதியானியப் பெண்ணின் பெயரோ கொஸ்பி. அவள் சூரின் புதல்வி; அவளுடைய தந்தை மதியானியருக்குள் மிகப் புகழ்பெற்ற தலைவன்.

16 பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

17 மதியானியர் உங்களைத் தங்கள் பகைவரென்று கண்டுணரத்தக்கதாக நீங்கள் அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்.

18 ஏனென்றால் அவர்கள் (முதலிலே) உங்களுக்கு விரோதம் செய்ததுமன்றி, பீல் பேகோரின் காரியத்திலும், மதியானியப் பிரபுவின் புதல்வியும் அவர்களின் சகோதரியுமான கொஸ்பியின் காரியத்திலும், அவர்கள் உங்களுக்கு வலைவிரித்து மோசம் செய்தார்கள் என்றார்.

அதிகாரம் 26

1 குற்றவாளிகள் கொல்லப்பட்ட பின்பு ஆண்டவர் மோயீசனையும், ஆரோனின் புதல்வனும் குருவுமாகிய எலெயஸாரையும் நோக்கி:

2 நீங்கள் இஸ்ராயேல்மக்களின் சபையார் எல்லாரையும் எண்ணக்கடவீர்கள். அவர்களைத் தத்தம் வீடுகளின்படியும் குடும்பத்தின்படியும், இருபதுவயதும் அதற்கு மேற்பட்டும் உள்ளவர்களில் எவரெவர் போருக்குப் புறப்பட்டுப் போகலாமென்று கணக்கிட்டுப் பாருங்கள் என்றார்.

3 அவ்வாறு மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் எரிக்கோ நகரத்திற்கு எதிரெயுள்ள யோர்தான் நதிக்கு அருகிலிருக்கும் மோவாபின் வெளிகளிலே,

4 ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமாய் இருந்தவர்களோடு பேசிக்கொண்டார்கள். எண்ணிக்கையின் தொகையாவது:

5 இஸ்ராயேலின் மூத்த புதல்வன் ரூபன். அவனுடைய புதல்வர்களோ ஏனோக்கிய வம்சத் தலைவனான ஏனோக்கும், பலுய வம்சத்தலைவனான பலுவும்,

6 ஏஸ்ரோனிய வம்சத்தலைவானான ஏஸ்ரோனும், கார்மிய வம்சத்தலைவனான கார்மியுமாவர்.

7 இவைகளே ரூபன் கோத்திரத்தின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர்.

8 பலுவின் புதல்வன் எலியாப்.

9 இவன் புதல்வர்களோ நமுயேல், தாத்தான், அபிரோன் என்பவர்கள். அந்தத் தாத்தான், அபிரோன் என்பவர்களே சபையின் தலைவர்களாய் இருந்து, கொறேயுடைய குழப்பத்தின்போது மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் நின்று, ஆண்டவருக்குத் துரோகம் செய்தார்கள்.

10 அப்பொழுது நிலம் தன் வாயைத் திறந்து கொறே என்பவனை விழுங்கிற்று. அவனோடு கூட நெருப்பு இருநூற்றைம்பது பேர்களை விழுங்கிய வேளையில், வேறு பலரும் இறந்தார்கள். அவ்வேளை நிகழ்ந்த ஒரு பெரிய புதுமை என்னவென்றால்,

11 கொறே இறந்தும், அவன் புதல்வர்கள் இறக்கவில்லை.

12 தங்கள் வம்சப்படி சிமியோனின் புதல்வர்கள்: நமுயேலிய வம்சத்தலைவனான நமுயேலும், ஜமினிய வம்சத்தலைவனான ஜமினும், ஜக்கினிய வம்சத்தலைவனான ஜக்கினும்,

13 சரேய வம்சத்தலைவனான சரேயும், சவூல் வம்சத்தலைவனான சவூலுமாவர்.

14 இவ்வம்சங்களே சிமியோனின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.

15 தங்கள் வம்சப்படி காத்தின் புதல்வர்கள்: செப்போனிய வம்சத்தலைவனான செப்போனும், அக்கிய வம்சத்தலைவனான அக்கியும்,

16 சூனிய வம்சத்தலைவனான சூனியும், ஓஸ்னிய வம்சத்தலைவனான ஓஸ்னியும், ஏர் வம்சத்தலைவனான ஏரும்,

17 அரோத்திய வம்சத்தலைவனான அரோத்தும், அரியேலிய வம்சத்தலைவனான அரியேலுமாவர்.

18 இவைகளே காத்தின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐநூறுபேர்.

19 யூதாவின் புதல்வர்கள்: ஏரும், ஓனானுமாவர். இவ்விருவரும் கானான் நாட்டில் இறந்தனர்.

20 தங்கள் வம்சங்களின்படி யூதாவின் புதல்வர்கள்: சேலாய வம்சத்தலைவனான சேலாவும், பரேசிய வம்சத்தலைவனான பரேசும், சாரேய வம்சத்தலைவனான சாரேயுமாவர்.

21 பரேசின் புதல்வர்கள்: ஏஸ்றோனிய வம்சத்தலைவனான ஏஸ்றோனும், ஆமூலிய வம்சத்தலைவனான ஆமூலுமாவர்.

22 இவைகளே யூதாவின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐநூறு பேர்.

23 தங்கள் வம்சத்தின்படி இஸக்காருடைய புதல்வர்கள்: தோலாய வம்சத்தலைவனான தோலாவும், புவாய வம்சத்தலைவனான புவாவும்,

24 ஜாசுபிய வம்சத்தலைவனான ஜாசுபும், செம்ரானிய வம்சத்தலைவனான செம்ரானுமாவர்.

25 இவைகளே இஸக்காரின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறு பேர்.

26 தங்கள் வம்சங்களின்படி சபுலோனுடைய புதல்வர்கள்: ஸரேதிய வம்சத்தலைவனான ஸரேதும், எலோனிய வம்சத்தலைவனான எலோனும், ஜலேலிய வம்சத்தலைவனான ஜலேலுமாவர்.

27 இவைகளே சபுலோனின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் அறுபதாயிரத்து ஐநூறு பேர்.

28 சூசையுடைய புதல்வர்கள்: மனாஸேயும் எபிராயீமும் ஆவர்.

29 மனாஸேயுக்கு மக்கீரிய வம்சத்தலைவனான மக்கீர் பிறந்தான். மக்கீருக்குக் கலாத்திய வம்சத்தலைவனான கலாத் பிறந்தான்.

30 கலாத்துக்குப் பிறந்த புதல்வர்கள்: ஜெஸேரிய வம்சத்தலைவனான ஜெஸேரும், ஏலேக்கிய வம்சத்தலைவனான ஏலெக்கும்,

31 அஸரியேலிய வம்சத்தலைவனான அஸரியேலும், செக்கேமிய வம்சத்தலைவனான செக்கேமும்,

32 செமிதாய வம்சத்தலைவனான செமிதாவும், ஏப்பேரிய வம்சத்தலைவனான ஏப்பேருமாவர்.

33 ஏப்பேர் ஸல்பாதைப் பெற்றான். இவனுக்குப் புதல்வர் இல்லை; புதல்வியர் மட்டும் இருந்தனர். இவர்கள்: மாலா, நோவா, ஏகிலா, மேற்கா, தேற்சா என்பவர்கள்.

34 இவைகளே மனாஸேயின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறு பேர்.

35 தங்கள் வம்சங்களின்படி எபிராயீமுடைய புதல்வர்கள்: சுத்தலாய வம்சத்தலைவனான சுத்தலாவும், பெக்கேரிய வம்சத்தலைவனான பெக்கேரும், தேயெனிய வம்சத்தலைவனான தேயெனுமாவர்.

36 சுத்தலாவின் புதல்வனோ ஏரானிய வம்சத்தலைவனான ஏரான்.

37 இவைகளே எபிராயீம் புதல்வர்களின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர் முப்பத்தீராயிரத்து ஐநூறு பேர்.

38 அவரவர்களுடைய குடும்பங்களின்படி சூசையுடைய புதல்வர்கள் இவர்களேயாவர். தங்கள் வம்சங்களின்படி பெஞ்சமின் புதல்வர்கள்: பெலாய வம்சத்தலைவனான பெலாவும், அஸ்பேலிய வம்சத்தலைவனான அஸ்பேலும், அகிராமிய வம்சத்தலைவனான அகிராமும்,

39 சுப்பாமிய வம்சத்தலைவனான சுப்பாமும், உப்பாம் வம்சத்தலைவனான உப்பாமுமாவர்.

40 பெலாவின் புதல்வர்கள்: ஏரேதும், நொயெமானும்; ஏரேதிய வம்சத் தலைவனான ஏரேதும், நொயெமானிய வம்சத்தலைவனான நொயெமானுமாவர்.

41 தங்கள் குடும்பங்களின்படி பெஞ்சமினுடைய சந்ததியார்கள் இவர்களேயாம். அவர்களில் எண்ணப்பட்டவர்கள்: நாற்பத்தையாயிரத்து அறுநூறு பேர்.

42 தங்கள் குடும்பங்களின்படி தானுடைய புதல்வர்கள்: சுகாமிய வம்சத்தலைவன் சுகாம்; அவன் குடும்பங்களின்படி தானுடைய சுற்றம் அதுவேயாம்.

43 அவர்கள் எல்லாரும் சுகாமியர். அவர்களில் எண்ணப்பட்டவர்கள்: அறுபத்து நாலாயிரத்து நானூறு பேர்.

44 தங்கள் குடும்பங்களின்படி ஆஸேருடைய புதல்வர்கள்: ஜெம்னாய வம்சத்தலைவனான ஜெம்னாவும், ஜெசுவிய வம்சத்தலைவனான பிரியேயுமாவர்.

45 பிரியேயின் புதல்வர்கள்: ஏபேரிய வம்சத்தலைவனான ஏபேரும், மெற்கியேலிய வம்சத்தலைவனான மெற்கியேலுமாவர்.

46 ஆஸேருடைய புதல்வியின் பெயர் சாரா.

47 இவைகளே ஆஸேர் புதல்வர்களுடைய வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள்: ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.

48 தங்கள் குடும்பங்களின்படி நெப்தலியுடைய புதல்வர்கள்: ஜெஸியேலிய வம்சத்தலைவனான ஜெஸியேலும், குனிய வம்சத்தலைவனான குனியும்,

49 ஜெஸேரிய வம்சத்தலைவனான ஜெஸேரும், செல்லெமிய வம்சத்தலைவனான செல்லேமுமாவர்.

50 தத்தம் குடும்பங்களின்படி நெப்தலியின் வம்சங்கள் இவைகளேயாம். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறு பேர்.

51 இஸ்ராயேல் மக்களில் எண்ணப்பட்டவர்களுடைய மொத்தத் தொகை ஆறுலட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது.

52 பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

53 ஆட்களின் கணக்குக்குத் தக்கதாகவே நாடு அவர்களுக்கு உரிமையாகப் பங்கிடப்படும்.

54 அதிகம் பேருக்கு அதிகமாகவும், கொஞ்சம் பேருக்குக் கொஞ்சமாகவும், அவர்கள் இப்பொழுது எண்ணிக்கையிடப்பட்ட எண்ணிக்கைக்குத் தக்கபடியே அவரவருக்கு உரிமை கொடுக்கப்படும்.

55 ஆனாலும், திருவுளச் சீட்டுப் போட்டு, சீட்டு விழுந்தபடியே கோத்திரங்களுக்கும் குடும்பங்களுக்கும் நாடு பங்கிடப்படும்.

56 அதிகம் பேராயினும் கொஞ்சம் பேராயினும் திருவுளச் சீட்டினால் எவ்வளவு வந்ததோ அவ்வளவே அவரவர்கள் பொறுவார்கள் என்றருளினார்.

57 அவரவர்களுடைய குடும்பங்களின்படி எண்ணப்பட்ட லேவியரின் புதல்வர்களுடைய எண்ணிக்கை: ஜெற்சோனிய வம்சத்தலைவனான ஜெற்சோனும், ககாதிய வம்சத்தலைவனான ககாதும், மெறாரிய வம்சத்தலைவனான மெறாரியுமாவர்.

58 லேவியருடைய குடும்பங்கள்: லோப்னி குடும்பம், ஏபிரோன் குடும்பம், மொகோனி குடும்பம், மூஸி குடும்பம், கோறே குடும்பம் ஆகிய இவைகளாம். ககாது அபிராமைப் பெற்றான்.

59 இவனுடைய மனைவியின் பெயர் ஜோக்கப்பேத். இவள் லேவிக்கு எகிப்திலே பிறந்த புதல்வி. அவள் தன் கணவனாகிய அம்ராமுக்கு ஆரோனையும், மோயீசனையும், இவர்களின் சகோதரியாகிய மரியாளையும், பெற்றாள்.

60 ஆரோனுக்கு நதாப், அபியூ, எலெயஸார், ஈத்தமார் என்பவர்கள் பிறந்தனர்.

61 இவர்களில் நதாப், அபியூ, எலெயஸார், ஈத்தமார் என்பவர்கள் ஆண்டவர் முன்னிலையில் அந்நிய நெருப்பைச் சமர்ப்பித்தமையால் இறந்தனர்.

62 ஆண் குழந்தைகளில் ஒரு மாதத்துப்பிள்ளை முதல் எண்ணப்பட்டவர்களின் தொகை: இருபத்து மூவாயிரம். இவர்கள் இஸ்ராயேல் மக்களின் கணக்கிலே சேர்க்கப்பட்டதுமில்லை; அவர்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டதுமில்லை.

63 மோயீசனாலும் குருவாகிய எலெயஸாராலும் யோர்தான் கரையில் எரிக்கோ நகரத்துக்கு எதிரேயுள்ள மோவாப் வெளிகளிலே எண்ணி எழுதப்பட்ட இஸ்ராயேல் மக்களின் தொகை அதுவே.

64 முன்பே மோயீசனும் ஆரோனும் சீனாய்ப் பாலைவனத்திலே எண்ணி எழுதியவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.

65 ஏனென்றால், அவர்கள் எல்லாரும் பாலைவனத்தில் சாவார்களென்று ஆண்டவர் திருவுளம்பற்றியிருந்தார். அப்படியே, ஜெப்போனேயின் புதல்வன் காலேவையும், நூனின் புதல்வன் ஜோசுவாவையும் தவிர, அவர்களில் வேறொருவரும் மீதி இருக்கவில்லை.

அதிகாரம் 27

1 ஒரு நாள் சல்பாத் என்பவனுடைய புதல்விகளாகிய மாலா, நோவா, ஏகிலா, மேற்கா, தேற்சா என்று அழைக்கப்பட்ட பெண்கள் வந்தார்கள், (அவர்களுடைய தந்தை) ஏப்பேருடைய புதல்வன். ஏப்பேரோ கலாதின் மகன். கலாது மக்கீருக்குப் பிறந்தவன். மக்கீரோ மனாசே புதல்வன். மனாசேயோ சூசையின் புதல்வன்.

2 மேற்சொல்லப்பட்ட பெண்கள் கூடார வாயிலிலே வந்து, மோயீசனுக்கும், குருவான எலெயஸாருக்கும், சபைத் தலைவர்களுக்கும் முன்பாக நின்று:

3 எங்கள் தந்தையார் பாலைவனத்தில் இறந்து போனார். கொறே என்பவனால் ஆண்டவருக்கு விரோதமாய்ச் செய்யப்பட்ட கலகத்தில் அவர் சேர்ந்தவரல்லர். ஆனால் தமது சொந்தப் பாவத்தோடு இறந்தார். அவருக்குப் புதல்வர் இல்லை. அவருக்கு ஆண்மக்கள் இல்லாததினாலே அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப் போகலாமா? எங்கள் குடும்பத்தாருக்குள்ளே எங்களுக்கு மரபுரிமை கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்கள்.

4 மோயீசன் அவர்களுடைய வழக்கை ஆண்டவரிடம் கொண்டு போனார்.

5 ஆண்டவர் மோயீசனை நோககி:

6 சல்பாதுடைய புதல்விகள் கேட்கிறது நியாயமானதே. அவர்களுக்கு அவர்கள் தந்தையின் குடும்பத்தாருக்குள்ளே உரிமை கொடுக்க வேண்டியதுமன்றி, அவன் இறந்து, விட்டுச்சென்ற சொத்துக்கு அவர்களே உரிமையாளராகும்படி செய்வாயாக.

7 அன்றியும், நீ இஸ்ராயேல் மக்களை நோக்கிச் சொல்ல வேண்டியது என்னவென்றால்:

8 ஒரு மனிதன் மகனில்லாமல் இறந்தால், அவனுக்குரிய உரிமை அவன் புதல்விக்குக் கிடைக்கும்.

9 அவனுக்குப் புதல்வியும் இல்லையாயின், அவனுக்குரிய உரிமை அவனுடைய சகோதரர்களுக்குக் கிடைக்கும்.

10 அவனுக்குச் சகோதரர்களும் இல்லையாயின், அவனுக்குரிய உரிமை அவன் தந்தையினுடைய சகோதரருக்குக் கிடைக்கும்.

11 அவன் தந்தைக்குச் சகோதரர் இல்லையாயின், அவன் சுற்றத்தாரில் அவனுக்கு எவன் மிக நெருங்கிய உறவுமுறையானாய் இருப்பானோ அவனுக்கே கிடைக்கும். இது ஆண்டவர் மோயீசனுக்குக் கொடுத்தபடி இஸ்ராயேல் மக்களுக்குப் புனிதமும் நித்தியமுமான நீதிச் சட்டமாய் இருக்கும் என்றார்.

12 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ இந்த அபரீம் என்னும் மலையில் ஏறி, நாம் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உற்றுப்பார்.

13 அதைப்பார்த்த பின்பு உன் சகோதரன் ஆரோனைப் போல நீயும் உன் முன்னோரோடு சேர்க்கப்படுவாய்.

14 ஏனென்றால், சீன் பாலைவனத்திலே சபையார் வாக்குவாதம் செய்தபோது, தண்ணீருக்கடுத்த காரியத்திலே நீங்கள் இருவரும் அவர்கள் முன்பாக நம் புனிதத்தைப் பேணாமல் இருந்தீர்கள். இது சீன் பாலைவனத்திலே காதேஸ் ஊருக்கு அருகிலுள்ள வாக்குவாதத் தண்ணீர் என்றார்.

15 அதற்கு மோயீசன்:

16 ஆண்டவருடைய சபை மேய்ப்பனில்லாத மந்தைபோல் இராதபடிக்குச் சபைக்கு முன்பாகப் போக இருக்கவும், அவர்களை:

17 புறப்படுங்கள். திரும்பி வாருங்கள் என்று கட்டளையிடவும், உடலுள்ள யாவருடைய ஆவிகளுக்கும் கடவுளாகிய ஆண்டவர் ஓர் ஆடவனைத் தெரிந்தெடுத்து, அவர்களுக்குத் தலைவனாக நியமிக்கக்கடவீர் என்று மறுமொழி சொன்னார்.

18 ஆண்டவர் அவனை நோக்கி: நூனின் புதல்வனாகிய யோசுவாவிடம் பரிசுத்த ஆவி வீற்றிருக்கின்றார். நீ அவனை அழைத்து, அவன்மேல் உன் கையை வைப்பாய்.

19 அந்நேரத்தில் அவன் குருவாகிய எலெயஸாருக்கும் சபை அனைத்திற்கும் முன்பாக நின்று கொண்டிருப்பான்.

20 இஸ்ராயேல் மக்களாகிய சபையார் எல்லாரும் அவன் சொற்படி கேட்டு நடக்கும் பொருட்டு நீ எல்லாருடைய கண்களுக்கும் முன்பாக அவனுக்கு (வேண்டிய) கட்டளைகளைக் கொடுத்து, உன் மகிமையின் ஒரு பாகத்தையும் அவனுக்குத் தருவாய்.

21 அவன் எதையேனும் செய்யவேண்டி இருக்கும்போது, குருவாகிய எலேயஸார் அக்காரியத்தைக் குறித்து ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளக்கடவான். அவனுடைய கட்டளையின்படியே யோசுவாவும், அவனோடு இஸ்ராயேல் மக்களும், சபையார் அனைவரும் போகவும் வரவும்கடவார்கள் என்றார்.

22 ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே மோயீசன் செய்து, யோசுவாவை அழைத்து, அவனைத் தலைமைக் குருவாகிய எலெயஸாருக்கும் சபை அனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,

23 அவன் தலையின்மேல் கைகளை வைத்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும்அவனுக்கு உரைத்தார்.

அதிகாரம் 28

1 பின்னும் ஆண்டவர் மோயீசனிடம்: நீ இஸ்ராயேல் மக்களை நோக்கிக் கட்டளையாக அறிவிக்க வேண்டியதாவது:

2 நீங்கள் நமக்குரிய காணிக்கையையும், அப்பங்களையும், மிக்க நறுமணமுள்ள தகனப்பலிகளையும் குறித்த காலத்தில் நமக்குச் செலுத்துவீர்கள்.

3 நீங்கள் செலுத்த வேண்டிய பலிகள் என்னவென்றால்: நித்திய தகனப்பலியாக நாள்தோறும் ஒருவயதான மாசற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைக் (கொண்டு வந்து),

4 காலையில் ஓர் ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஓர் ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,

5 ஏப்பி என்னும் (மரக்காலிலே) பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவில் கின் என்னும் படியியே நாலில் ஒரு பங்கு மிகத் தெளிந்த எண்ணெயை வார்த்துப் (போசனக் காணிக்கையாக) ஒப்புக்கொடுப்பீர்கள்.

6 இது நீங்கள் சீனாய் மலையில் ஆண்டவருக்கு மிக்க நறுமணமாக ஒப்புக்கொடுத்து வந்த நித்திய தகனப்பலியாம்.

7 அன்றியும், ஆண்டவருடைய புனித இடத்திலே ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் கின் என்னும் படியில் ஒருகாற்படி கொடிமுந்திரிப் பழச்சாற்றையும் பானப்பலியாக ஒப்புக்கொடுப்பீர்கள்.

8 காலையில் படைத்த தகனப்பலிக்கும் போசன பானப் பலிகளுக்கும் ஒப்பாகவே மாலையிலும் மேற்சொல்லிய சடங்கு முறைகளுடன் மற்ற ஆட்டுக்குட்டியையும் பலியிடக்கடவீர்கள்.

9 ஓய்வு நாளிலோவென்றால் ஒரு வயதான மாசற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், எண்ணெய் வார்த்த பத்தில் இரண்டு பங்கு மெல்லிய மாவைப் போசனப் பலியாகவும் கொண்டுவருவீர்கள்.

10 இந்த போசனப் பலியைச் சடங்கு முறைப்படியே ஒவ்வோர் ஓய்வு நாளிலும்நித்தியமாய்ச் செலுத்த வேண்டும்.

11 மாதத்தின் முதல் நாளிலோ ஆண்டவருக்குத் தகனப்பலியாக மந்தையிலிருந்து இரண்டு கன்றுக்குட்டிகளையும், ஓர்ஆட்டுக்கிடாயையும், ஒருவயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

12 போசனப் பலியாக ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கும் பத்தில் மூன்று பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும், ஒவ்வோர் ஆட்டுக் கிடாய்க்கும் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும்,

13 ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தல் வேண்டும். அது ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத் தகனப் பலியாய் இருக்கும்.

14 அன்றியும், ஒவ்வொரு பலி மிருகத்துக்கும் செய்ய வேண்டிய பானப்பலி என்னவென்றால்: ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கு கின் (படியில்) அரைப்படியும், ஒவ்வோர்ஆட்டுக்கிடாய்க்கு மூன்றிலொரு பங்கும், ஒவ்வோர் ஆட்டுக் குட்டிக்கு நாலில் ஒரு பங்கும், கொடி முந்திரிப் பழச்சாறு சிந்தக் கடவீர்கள். இது ஆண்டு முழுவதும் மாத மாதமாய்ச் செலுத்த வேண்டிய முழுத்தகனப் பலியாம்.

15 மேலும், பாவ நிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக்கிடாயையும், அதற்கடுத்த பானச் சிந்து தலையும் ஆண்டவருக்குச் செலுத்தவும் வேண்டும்.

16 முதல் மாதத்தின் பதினாலாம் நாள் ஆண்டவருடைய பாஸ்கா.

17 பதினைந்தாம் நாள் திருவிழா. ஏழு நாள் வரையிலும் புளிப்பில்லாத அப்பங்களை உண்ண வேண்டும்.

18 அவற்றில் முதல் நாள் புனிதமானதும் வணக்கத்துக்குறியதுமாகையால், அன்று விலக்கப்பட்ட வேலையும் செய்யலாகாது.

19 அப்பொழுது நீங்கள் ஆண்டவருக்கு முழுத்தகனப் பலிக்காக மந்தையிலிருந்து இரண்டு கன்றுக்குட்டிகளையும், ஓர் ஆட்டுக்கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,

20 அவைகளுக்கேற்ற காணிக்கையாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கும் பத்தில் மூன்று பங்கையும் வெள்ளாட்டுக்கிடாய்க்குப் பத்தில் இரண்டு பங்கையும்,

21 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும்,

22 உங்கள் பாவ நிவர்த்திக்குப் பாவ நிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக் கடவீர்கள்.

23 காலையிலே அன்றாடம் செலுத்தும் முழுத் தகனப் பலியையும் அன்று சேர்த்துச் செலுத்தக்கடவீர்கள்.

24 இவ்விதமாகவே அந்த ஏழு நாளும் நாள்தோறும் நெருப்பை வளர்த்து, ஆண்டவருக்கு மிக்க நறுமணமாகத் தகனப் பலியைச் செலுத்துவீர்கள். அந்த மணம் தகனப் பலியிலிருந்தும், ஒவ்வொரு பலிக்கும் அடுத்த பானப் பலியிலிருந்தும் எழும்பும்.

25 ஏழாம் நாளும் உங்களுக்கு மிக ஆடம்பரமுள்ளதும் புனிதமுள்ளதுமாய் இருக்கும். அதில் யாதொரு சாதரணமான வேலையும் செய்யலாகாது.

26 வாரம் கடந்த பின்பு நீங்கள் ஆண்டவருக்குப் புதிய போசனப் பலியாக முதற் கனிகளைச் செலுத்தும் நாளும் அவ்விதமே புனிதமும் வணக்கத்துக்குரியதுமாய் இருக்கும். அதில் யாதொரு சாதாரண வேலையும் செய்யலாகாது.

27 மேலும், ஆண்டவருக்கு நறுமணமுள்ள முழுத் தகனப்பலியாக ஒரு மந்தையில் எடுக்கப்பட்ட இரண்டு இளங்காளைகளையும் ஓர் ஆட்டுக் கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள்.

28 அந்தப் பலிகளுக்கடுத்த போசனப்பலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒவ்வொரு காளைக்கும் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஆட்டுக் கிடாய்க்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,

29 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும் ஒப்புக்கொடுப்பதோடு,

30 பாவம் நிவாரணமாகும்படிக்குப் பலியிடப்படும் ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் கொண்டு வரவேண்டும். அன்றியும், (வழக்கப்படி) நித்திய முழுத்தகனப் பலியையும் அதைச் சேர்ந்த பானப்பலியையும் படைக்கக்கடவீர்கள்.

31 இந்த பலிமிருகங்களும் அவைகளுக்கடுத்த பானப்பலிகளும் மாசற்றவைகளாய் இருக்கவேண்டும்.

அதிகாரம் 29

1 அப்படியே ஏழாம் மாதம் முதல் நாள் உங்களுக்குப் புனிதமும் வணக்கத்துக்குரியதுமான நாளாய் இருக்கும். அது எக்காளம் முழங்கும் நாளாகையால், அன்று எந்தச் சாதாரண வேலையையும் செய்யாதிருப்பீர்கள்.

2 அப்பொழுது நீங்கள் ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஓர் இளங் காளையையும், ஓர் ஆட்டுக்கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக் கடவீர்கள்.

3 அந்தந்தப் பலிகளுடன் எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கிடாய்க்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,

4 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்காகவும் பத்தில் ஒரு பங்கையும்,

5 மக்களின் பாவத்துக்குப் பரிகாரப்பலியாக ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் ஒப்புக் கொடுப்பீர்கள்.

6 அன்றியும், மாதப் பிறப்புக்குச் செலுத்தவேண்டிய முழுத்தகனப் பலியையும், அதற்கடுத்த போசனப்பலியையும், அன்றாட முழுத்தகனப் பலியையும், அதற்கடுத்த வழக்கமான பானப்பலியையும் ஒப்புக்கொடுப்பதுமன்றி, சாதாரண முறைக்கு ஏற்றபடி நறுமணமுள்ள ஒரு முழுத்தகனப்பலியையும் ஆண்டவருக்குச் செலுத்தக்கடவீர்கள்.

7 இந்த ஏழாம் மாதத்தின் பத்தாம்நாளும் உங்களுக்குப் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாளாய் இருக்கும். அதிலே நீங்கள் உங்களை வருத்துவது மட்டுமன்றி, அன்று யாதொரு சாதாரண வேலையும் செய்யாதிருத்தலும் வேண்டும்.

8 அன்று ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத்தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஓர் இளங்காளையும், ஓர் ஆட்டுக் கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்துவீர்கள்.

9 அந்தந்தப் பலிகளுடன் எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவில் ஒவ்வொரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஒவ்வோர் ஆட்டுக் கிடாய்க்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,

10 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்குமாகப் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும், பாவத்துக்குப் பரிகாரமாக ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்துவதுமன்றி,

11 பாவ நிவர்த்தியைப்பற்றியும் அன்றாட முழுத் தகனப்பலியைப்பற்றியும் வழக்கமாய்க் கொடுக்கப்படுகிற காணிக்கைகளையும், அந்தந்தப் பலிக்கடுத்த போசன பானப்பலிகளையும் (படைக்கவேண்டும்).

12 ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள் உங்களுக்குப் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாளாய் இருக்கும். அதில் நீங்கள் சாதாரண வேலை ஒன்றும் செய்யலாகாது. அன்று தொடங்கி ஏழுநாள் ஆண்டவருடைய பண்டிகையைக் கொண்டாடக்கடவீர்.

13 முதல் நாளாகிய அந்நாளிலே ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத் தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட பதின்மூன்று இளங்களைகளையும் இரண்டு ஆட்டுக்கிடாய்களையும், ஒருவயதான மாசற்ற பதினாலு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக் கடவீர்கள்.

14 அவைகளுக்கடுத்த பான போசனக் காணிக்கையாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுக்காகவும், பத்தில் மூன்று பங்கையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களில் ஒவ்வொன்றுக்காகவும் பத்தில் இரண்டு பங்கையும்,

15 பதினாலு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்காகவும் பத்துப்பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும்,

16 அன்றாடத் தகனப்பலியையும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையையுமன்றிப் பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

17 இரண்டாம் நாளிலே மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் ஒரு வயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.

18 சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனப் பலிகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,

19 அன்றாட முழுத் தகனப்பலியும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையுமன்றி, பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.

20 மூன்றாம் நாளிலே பதினொரு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் ஒருவயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.

21 சடங்கு முறைப்படி காளை, ஆட்டுக்கிடாய், ஆட்டுக்குட்டி இவை ஒவ்வொன்றுக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,

22 அன்றாட முழுத் தகனப்பலியையும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையுமன்றி, பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.

23 நான்காம் நாளிலே பத்து இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.

24 சடங்கு முறைப்படி ஒவ்வொரு ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,

25 அன்றாட முழுத் தகனப்பலியையும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையையுமன்றி, பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.

26 ஐந்தாம் நாளிலே ஒன்பது இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வர வேண்டும்.

27 சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,

28 அன்றாட முழுத் தகனப்பலியையும், அதற்கடுத்த பான போசனக் காணிக்கையையுமன்றி, பாவ நிவாரணப் பலிக்கு ஒரு வெள்ளாட்டு கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.

29 ஆறாம் நாளிலே எட்டு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும், ஒரு வயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், கொண்டு வரரேண்டும்.

30 சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக் கொடுப்பதோடு,

31 அன்றாட முழுத் தகனப் பலியையும் அதற்கடுத்த பான போசனக் காணிக்கையையுமன்றி, பாவப்பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக் கடவீர்கள்.

32 ஏழாம் நாளிலே ஏழு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும், ஒரு வயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.

33 சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக் கொடுப்பதோடு,

34 அன்றாட முழுத் தகனப்பலியையும் அதற்கடுத்த பான போசனப் பலியையும் அதற்கடுத்த பான போசனப் பலிகளையுமன்றி, பாவ பரிகாரப்பலிக்கு ஒரு வெள்ளாட்டு கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.

35 மிகுந்த சிறப்புள்ள எட்டாம் நாளிலே எந்தக் கூலி வேலையையும் செய்யாமல்,

36 ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத் தகனப்பலிக்கு ஓர் இளங்காளையையும், ஓர் ஆட்டுக்கிடாயையும், ஒருவயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,

37 சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கையையும் ஒப்புக்கொடுத்து,

38 அன்றாட முழுத் தகனப் பலியையும் அதற்கடுத்த பான போசனப் பலிகளையுமன்றிப் பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.

39 நீங்கள் உங்கள் திருவிழாக்களில் செலுத்த வேண்டிய பலிகள் இவையேயாம். அன்றியும் நீங்கள் நேர்ச்சைகளையும், தகனப்பலிக்காகக் கொண்டு வரும் மனமொத்த காணிக்கைகளையும், மற்றுமுள்ள பான போசனப் பலிகளையும் (வழக்கப்படி) செலுத்துவீர்கள் என்று திருவுளம்பற்றினார்.

அதிகாரம் 30

1 மோயீசன் ஆண்டவர் கட்டளையிட்டயாவையும் இஸ்ராயேல் மக்களுக்கு அறிவிக்கலானார்.

2 பின்னும் அவர் இஸ்ராயேல் மக்களிடையே கோத்திரத் தலைவர்களாய் இருந்தவர்களை நோக்கி: ஆண்டவர் கொடுத்துள்ள கட்டளை என்னவென்றால்:

3 ஒரு மனிதன் ஆண்டவருக்கு ஏதாவது ஒரு நேர்ச்சை செய்து அல்லது ஏதாவது ஒரு செயல் செய்வதாக ஆணையிட்டுத் தன்னை நிபந்தனைக்கு உட்படுத்தியிருப்பானாயின், அவன் தன்சொல் தவறாமல், வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படி எல்லாம் செய்து முடிக்கக்கடவான்.

4 தன் தந்தையின் வீட்டிலிருக்கிற ஒரு இளம் பெண் ஆண்டவருக்கு ஏதாவது ஒரு நேர்ச்சை செய்து அல்லது ஏதாவது ஒரு செயல் செய்வதாக ஆணையிட்டுத் தன்னை நிபந்தனைக்கு உட்படுத்தியிருப்பாளாயின், அவள் செய்த நேர்ச்சையையும் அவள் தன்னைக் கட்டுப்படுத்திய நிபந்தனையையும் அவள் தந்தை கேட்டும் ஒன்றும் சொல்லாதிருந்தால், அவள் தன் நேர்ச்சையை நிறைவேற்றக்கடவாள்.

5 தான் கொடுத்த வாக்கின்படியும், தான் இட்ட ஆணையின்படியும் எல்லாம் அவள் செய்து முடிகக்கக்கடவாள்.

6 ஆனால், தந்தை கேள்விப்பட்டவுடன்: வேண்டாம் என்று தடுப்பானாயின், அவள் செய்த நேர்ச்சையும், ஆணைகளும் தள்ளுபடி ஆகிவிடும். தன் தந்தை வேண்டாமென்று தடுத்ததினாலே, அவள் தன்னைக்கட்டுப்படுத்திக் கொண்ட நிபந்தனைப்படி நிறைவேற்ற வேண்டியதில்லை.

7 அவள் மணமானவளாய் இருந்து நேர்ச்சை செய்தால் அல்லது வாயைத்திறந்து ஆணையிட்டுத் தன் ஆன்மாவை நிபந்தனைக்கு உட்படுத்தினால்,

8 அவள் கணவன் அதைக் கேட்டறிந்த நாளிலே ஒன்றும் சொல்லாமல் இருப்பானாயின், அவள் தன் நேர்ச்சையைச் செலுத்தவும், தான் கொடுத்த வாக்கின்படியெல்லாம் செய்து முடிக்கவுங்கடவாள்.

9 ஆனால், கேள்விப்பட்டவுடனே கணவன்: வேண்டாம் என்று அவளைத்தடுத்து, அவளுடைய ஆணையையும் அவள் தன் ஆன்மாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்ட சொற்களையும் தள்ளி விடுவானாயின், ஆண்டவர் அவளுக்கு அருள்செய்வார்.

10 விதவையும் கணவனால் தள்ளப்பட்ட பெண்ணும் தாங்கள் என்னென்ன நேர்ச்சை நேர்ந்திருப்பார்களோ அவையெல்லாம் நிறைவேற்றக்கடவார்கள்.

11 கணவன் வீட்டிலிருக்கிற மணமான பெண் யாதொரு செயலைச் செய்வதாக ஆணையிட்டு வாக்குறுதி கொடுத்தபோது,

12 கணவன் அதைக் கேள்வியுற்று: வேண்டாம் என்று தடுக்காமல் மௌனமாய் இருப்பானாயின், அவள் தான் செய்த வாக்குறுதிப்படி எல்லாம் செய்து முடிக்கக்கடவாள்.

13 மாறாக, கணவன் உடனே மறுத்திருந்தாலோ அவள் தன் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதில்லை. கணவன், வேண்டாமென்று சொன்னமையால் ஆண்டவர் அவள்மேல் தயவாய் இருப்பார்.

14 அவள் நோன்பாலாவது சுத்த போசனம் முதலியவைகளாலாவது தன் ஆண்மாவை வருத்தும்படி நேர்ந்துகொண்டு ஆணையிட்டுத் தன்னை நிபந்தனைக்கு உட்படுத்தியிருப்பாளாயின், கணவன் அதை உறுதிப்படுத்தவும் கூடும். அது செல்லாதபடி செய்யவும் கூடும்.

15 எப்படியென்றால், கணவன் அதைக் கேட்டறிந்தபொழுது ஒன்றும் சொல்லாமல்: பிறகு பார்க்கலாம் என்று இருந்தால், அவள் செய்த நேர்ச்சையையும் கொடுத்தவாக்குறுதியையும் நிறைவேற்றக் கடவாள். ஏனென்றால், கணவன் அதைக் கேட்டறிந்தவுடனே ஒன்றும் சொல்லாமல் போனான்.

16 அவள் அதைப் பின்பு: வேண்டாம் என்று தடுத்தால், தன் மனைவியின் பாவத்தைத்தானே சுமப்பான் என்றருளினார்.

17 கணவன் மனைவி ஆகியவர்களைக் குறித்தும், தந்தையையும் அவன் வீட்டிலிருக்கிற சிறு வயதுப்பெண்ணையும் குறித்தும் ஆண்டவர் மோயீசன் வழியாக் கட்டளையிட்ட சட்டங்கள் இவைகளேயாம்.

அதிகாரம் 31

1 பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

2 இஸ்ராயேல் மக்கள்நிமித்தம் மதியானியரிடம் பழி வாங்குவாய். அதன் பின்னரே நீ உன் மக்களோடு சேர்க்கப்படுவாய் என்றார்.

3 மோயீசன் தாமதம் செய்யாமல் மக்களை நோக்கி: ஆண்டவர் பெயராலே மதியானியரிடம் பழிவாங்கத்தக்க போர்வீரர்களைப் பிரித்தெடுத்துப் போருக்கு ஆயத்தம் செய்யுங்கள்.

4 இஸ்ராயேலின் எல்லாப் புதல்வரிடையேயும் ஒவ்வொரு கோத்திரத்திலும் ஆயிரம்பேர் போருக்குப் போகும்பொருட்டுத் தயார் செய்யுங்கள் என்றார்.

5 அவர்கள் (அவ்வாறே செய்து) ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஆயிரம் பேராகப் பன்னீராயிரம் வீரர்களைப் போருக்கு ஆயத்தமாக்கினார்கள்.

6 மோயீசன் அவர்களைத் தலைமைக் குருவான எலெயஸாரின் புதல்வன் பினேயஸ் என்பவனோடு அனுப்புகையில், அவன் கையிலே புனித தட்டுமுட்டுகளையும் எக்காளங்களையும் கொடுத்தனுப்பிவிட்டான்.

7 அவர்கள் போய் மதியானியரோடு போராடி வெற்றிபெற்று, ஆண் மக்களனைவரையும்,

8 அவர்களுடைய அரசர்களாகிய ஏவி, ரேஸேம், சூர், ஊர், ரேபே என்னும் அந்நாட்டுத் தலைவர்கள் ஐவரையும், பேயோரின் புதல்வனான பாலாம் என்பவனையும் வாளால் வெட்டினார்கள்.

9 அன்றியும், இஸ்ராயேலர் அவர்களுடைய பெண்களையும் சிறுவர்களையும் சிறைப்பிடித்து, எல்லா மந்தைகளையும் தட்டுமுட்டுகளையும் மற்றுமுள்ள சொத்துக்கள் யாவையும் கொள்ளையிட்டு,

10 அவர்களுடைய நகரங்களையும் ஊர்களையும் அரண்மனைகளையும் நெருப்பிட்டுப் பாழாக்கினார்கள்.

11 தாங்கள் கொள்ளையிட்ட பொருட்களையும், தாங்கள் பிடித்திருந்த மனிதவுயிர், மிருகவுயிர் அனைத்தையும் சேர்த்துக்கொண்டு,

12 இவைகளை யெல்லாம் மோயீசனுக்கும், தலைமைக் குருவாகிய எலெயஸாருக்கும், இஸ்ராயேல் மக்களாகிய சபையார் அனைவருக்கும் முன்பாகக் கொண்டு வந்தார்கள். ஆனால், தங்களுக்கு உபயோகமாயிருக்கக்கூடிய மற்றப் பொருட்களையெல்லாம் எரிக்கோவுக்கு எதிரேயுள்ள யோர்தானுக்கு அண்மையிலே மோவாபிய வெளிகளில் இருந்த பாளையத்திற்குக் கொண்டு போனார்கள்.

13 மோயீசனும் தலைமைக் குருவாகிய எலெயஸாரும் சபையின் எல்லாத் தலைவர்களும் பாளையத்திற்கு வெளியே அவர்களை எதிர்கொண்டு போனார்கள்.

14 அப்பொழுது மோயீசன் போர்களத்திலிருந்து திரும்பி வந்த ஆயிரவர்க்குத் தலைவரும் நூற்றுவர்க்குத் தலைவருமாகிய படைத்தலைவர் மீது கோபம்கொண்டு,

15 அவர்களை நோக்கி: பெண்களை ஏன் காப்பாற்றினீர்கள்?

16 பொகோர் வழிபாட்டுப் பாவச் செயலிலே பாலாமின் அறிவுரையைக் கேட்டு இஸ்ராயேல் மக்களை வஞ்சித்து, ஆண்டவருக்கு விரோதமாய் நீங்கள் துரோகம் செய்ய, ஏதுவாய் இருந்தவர்கள் அவர்கள் அல்லவா? அந்த அக்கிரமத்தைப்பற்றித்தானே சபையார் ஆண்டவரால் வதைக்கப்பட்டார்கள்?

17 ஆதலால், நீங்கள் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், பெண்களில் ஆண் தொடர்பு கண்டுள்ள எல்லாப் பெண்களையும் கொன்றுவிடுங்கள்.

18 பெண் குழந்தைகளையும் கன்னிப்பெண்களையும் மட்டும் உங்களுக்காகக் காப்பாற்றுங்கள்.

19 பின்பு நீங்கள் பாளையத்திற்கு வெளியே ஏழுநாள் தங்கவேண்டும். உங்களில் எவன் மனிதனைக் கொன்றானோ அல்லது கொல்லப்பட்டவனைத் தொட்டானோ அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் துய்மைப்படுத்தப்படுவான்.

20 அவ்வாறே கொள்ளையிடப்பட்டவைகளில் எல்லா ஆடைகளையும் தட்டுமுட்டுகளையும், வெள்ளாட்டுத் தோலாலேனும் மயிராலேனும் மரத்தாலேனும் செய்யப்பட்ட கருவி முதலிய பொருட்களையும் தூய்மைப்படுத்தக் கடவீர்கள் என்றார்.

21 தலைமைக் குருவாகிய எலெயஸாரும் போர்புரிந்த படைவீரரை நோக்கி: ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்ட சட்டத்தைக் கேளுங்கள்:

22 பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, ஈயம், தகரம் ஆகிய இவைகளையும்,

23 நெருப்பிலே அழியாத (கருவி முதலிய) எவ்விதப் பொருட்களையும் நெருப்பிலே போட்டுத் தூய்மைப்படுத்தவும், நெருப்பிலே அழியும் எல்லாவற்றையுமோ தீட்டுக்கழிக்கும் தீர்த்தத்தினாலே தூய்மைப்படுத்தவும் கடவீர்கள்.

24 நீங்கள் ஏழாம் நாளிலே உங்கள் ஆடைகளைக் கழுவித் தூய்மைப்படுத்துவீர்கள். பின்பு நீங்கள் பளையத்திற்குள் வரலாம் என்றார்.

25 பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

26 பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதர்களையும் மிருகங்களையும் நீயும் தலைமைக் குருவாகிய எலெயஸாரும் மக்கள் தலைவர்களும் கணக்கிட்டு,

27 கொள்ளையிடப்பட்டதை இரண்டு சரி பங்காகப் பங்கிட்டு, போருக்குப் போனவர்களுக்கு ஒருபங்கும், சாதாரண மக்களுக்கு ஒருபங்கும் கொடுப்பாய்.

28 அன்றியும், போருக்குச் சென்ற படைவீரர்களின் பங்கிலே ஆண்டவருடைய பங்கை எடுக்கக்கடவாய். அது மனிதரிலும் மாடுகளிலும் ஆடுகளிலும் கழுதைகளிலும் ஐநூற்றுக்கு ஒன்றாம்.

29 அதைத் தலைமைக் குருவாகிய எலெயஸாருக்குக் கொடுப்பாய். ஏனென்றால், அது ஆண்டவருக்குச் செய்யவேண்டிய காணிக்கை.

30 இஸ்ராயேல் மக்களைச் சேர்ந்த பங்கிலோ மனிதரிலும் மாடுகளிலும் ஆடுகளிலும் கழுதைகளிலும் ஐம்பதுக்கு ஒன்று வீதமாக வாங்கி, அவைகளை ஆண்டவரின் உறைவிடத்தில் காவல் காக்கும் லேவியருக்குக் கொடுப்பாய் என்றருளினார்.

31 மோயீசனும் எலெயஸாரும் ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தார்கள்.

32 படைவீரர் கொள்ளையிட்ட பொருட்களில் ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும்,

33 எழுபத்தீராயிரம்மாடுகளும்,

34 அறுபத்தோராயிரம் கழுதைகளும்,

35 முப்பத்தீராயிரம் ஆண் தொடர்பு அறியாத பெண்களும் இருந்தார்கள்.

36 போருக்குப் போன வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாதிப் பங்கின் தொகை: மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு ஆடுகள்.

37 இவைகளில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவை அறுநூற்றெழுபத்தைந்து.

38 முப்பத்தாறாயிரம் மாடுகளில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவை எழுபத்திரண்டு.

39 முப்பதினாயிரத்து ஐந்நூறு கழுதைகளில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவை அறுபத்தொன்று.

40 பதினாறாயிரம் பெண்களில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டு பேர்.

41 பின்பு மோயீசன் தமக்குக் கட்டளையிடப்பட்டிருந்தபடி, ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட பகுதியைக் குருவாகிய எலெயஸாரிடம் கொடுத்தார்.

42 இஸ்ராயேல் மக்கள் கொள்ளையிட்ட எல்லாப் பொருட்களையும் மோயீசன் இரண்டு பங்காகப் பங்கிட்டார். எலெயஸாருக்கு அவர் கொடுத்த பகுதி போர் வீரர்களைச் சேர்ந்த சரிபாதியில்தான் எடுக்கப்பட்டது.

43 சாதாரண மக்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கின் தொகையாவது: மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு ஆடுகளும்,

44 முப்பத்தாறாயிரம் மாடுகளும்,

45 முப்பதினாயிரத்து ஐந்நூறு கழுதைகளும்,

46 பதினாறாயிரம் பெண்களுமாவர்.

47 மோயீசன் அவற்றில் ஐம்பதுக்கு ஒன்று வீதம் எடுத்து, ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, ஆண்டவருடைய உறைவிடத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த லேவியர்களுக்குக் கொடுத்தான்.

48 அப்பொழுது ஆயிரவர்க்குத் தலைவரும் நூற்றுவர்க்குத் தலைவருமாகிய படைத்

49 தலைவர்கள் மோயீசனிடம் வந்து: அடியார்கள் எங்கள் அதிகாரத்திற்குட்பட்ட படைவீரரின் தொகையை எண்ணிப் பார்த்தோம்.

50 அவர்களில் ஒருவனும் குறைவில்லை. எனவே, நீர் எங்களுக்காக ஆண்டவரை வேண்டி கொள்ளும் பொருட்டு, எங்களில் அவரவருக்குக் கொள்ளையில் அகப்பட்ட காலணிகளும் கையணிகளும் கணையாழிகளும் காதணிகளும் முத்துமாலைகளும் போன்ற பொன்னணிகளையெல்லாம் ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தோம் என்றார்கள்.

51 மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் இந்தப் பலவிதப் பொன்னணிகளையும் அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டார்கள்.

52 இவ்வாறு ஆயிரவர்க்கும் நூற்றுவர்க்கும் தலைவர்களாய் இருந்தவர்களால் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பொன் பதினாறாயிரத்து எழுநூற்றைம்பது சீக்கல் நிறை இருந்தது.

53 போருக்குப் போன வீரர்களில் அவனவன் கைப்பற்றியது எதுவோ அது அவனவனுக்குச் சொந்தமாய் இருந்தது.

54 மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் அந்தப் பொன்னைச் சாட்சியக் கூடாரத்திலே ஆண்டவருடைய முன்னிலையில் இஸ்ராயேல் மக்களின் நினைவுச் சின்னமாகக் கொண்டு வந்து வைத்தார்கள்.

அதிகாரம் 32

1 ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் திரளான மந்தைகளை வைத்துக் கொண்டு பெரும் செல்வம் படைத்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் யாஜேர் நாடும் காலாத் நாடும் ஆடுமாடுகளை மேய்ப்பதற்குத் தகுந்த புல்வெளியாய் இருக்கக் கண்டு,

2 மோயீசனிடமும் குருவாகிய எலெயஸாரிடமும் சபையின் தலைவர்களிடமும் வந்து,

3 அவர்களை நோக்கி: அத்தரோட் திபோன், யாஜோ, நெமிரா, ஏசெபோன், சபான், நேபோ, பெயோன் என்னும் ஊர்கள்,

4 இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாக ஆண்டவர் தண்டித்துக் கண்டித்த நாட்டில் உள்ளன. அந்நாடு ஆடுமாடுகளை மேய்ப்பதற்கு மிச் செழிப்பானதாகையாலும், அடியார்களுக்குத் திரளான மந்தைகள் இருப்பதனாலும்,

5 உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்ததாயின், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கொண்டு போகாமல், இந்த நாட்டையே உம் அடியார்களுக்கு உடைமையாகக் தரவேண்டும் என்றார்கள்.

6 மோயீசன் அவர்களுக்கு மறுமொழியாக: உங்கள் சகோதரர் போருக்குப் போக வேண்டியதாய் இருக்கும்போது நீங்கள் இங்கேயா இருக்கப்போகின்றீர்கள்?

7 ஆண்டவர் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்கு அவர்கள் போகத் துணியாவண்ணம் நீங்கள் அவர்களுடைய மனம் கலங்கச்செய்வதன்ன?

8 அந்த நாட்டைப் பார்த்துவர நான் உங்கள் தந்தையரைக் காதேஸ் பார்னேயிலிருந்து அனுப்பினபோது, அவர்களும் இப்படியன்றோ செய்தார்கள்?

9 அவர்கள் கொடி முந்திரிப்பழப் பள்ளத்தாக்கு வரையிலும் போய் நாட்டைப் பார்த்து வந்தபோது, ஆண்டவர் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுத்த நாட்டிற்கு அவர்கள் போகாதபடிக்கு அவர்களுடைய இதயத்தைக் கலங்கடித்து விட்டார்கள்.

10 அதனால் ஆண்டவர் சினந்து:

11 நமது திருவுளத்திற்கு அடங்கி நடந்த செனேசையனான ஜெப்போனே புதல்வன் காலேபும், நூனின் புதல்வனாகிய யோசுவாவும் ஆகிய இவ்விருவரையும் தவிர, எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபதுவயதும் அதற்கு மேற்பட்டவர்களில் ஒருவனும், நாம் ஆபிரகாமுக்கும் யாக்கோபுக்கும் கொடுப்போம் என்று ஆணையிட்டுச் சொல்லிய அந்த நாட்டைக் காணமாட்டான்;

12 ஏனென்றால், அவர்கள் நம்மைப் பின்பற்ற மனம் ஒப்பவில்லை என்று ஆணையிட்டுத் திருவுளம்பற்றினார்.

13 அப்படியே இஸ்ராயேலின்மேல் ஆண்டவர் கோபம் கொண்டு, தம் முன்னிலையில் அக்கிரமம் செய்த அந்த மக்கள் எல்லாம் அழியுமட்டும் அவர்களைப் பாலைவனத்தில் நாற்பதாண்டு அலையச் செய்தார்.

14 இப்பொழுதும், இதோ இஸ்ராயேலின்மேல் ஆண்டவருடைய கோபத்தின் கடுமையை இன்னும் அதிகரிக்கச் செய்யும்படிக்கு நீங்கள் கெட்ட மனிதர்களின் பிறப்பும் சந்ததியுமாய் இருந்து, உங்கள் தந்தையருக்குப் பதிலாய் எழும்பியிருக்கிறீர்களே!

15 நீங்கள் அவரைப் பின்பற்றி, நடக்க மனமில்லாமல் இருந்தால், அவர் பாலைவனத்தில் மக்களை நிறுத்திவைப்பார். இவ்வாறு நீங்கள் இந்த மக்களெல்லாம் அழிவதற்குக் காரணமாய் இருப்பீர்கள் என்று மோயீசன் சொன்னார்.

16 அப்பொழுது அவர்கள் அவரருகே வந்து: நாங்கள் ஆடுகளுக்குப் பட்டிகளையும் மாடு முதலியவைகளுக்குத் தொழுவங்களையும் அமைத்து, நம்முடைய பிள்ளைகளுக்காக அரண் செய்யப்பட்ட நகரங்களையும் கட்டுவோம்.

17 அன்றியும், நாங்கள் இஸ்ராயேல் மக்களை அவரவர்களுடைய இடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கும்வரையிலும் போருக்கு ஆயத்தமாய் அவர்களுக்கு முன்பாகச் போர்க்களத்துக்குப் போவோம். ஊராருடைய வஞ்சகத்தை முன்னிட்டு, எங்களையும் எங்களுக்குண்டான எல்லாவற்றையும் அரணுள்ள நகரங்களில் வைத்துவிட்டு நாங்கள் போவோம்.

18 இஸ்ராயேல் மக்கள் யாவரும் தங்கள் தங்கள் காணியாட்சியை உரிமையாக்கிக் கொண்ட பிற்பாடு மட்டுமே நாங்கள் திரும்பி வீட்டுக்கு வருவோம்.

19 மேலும், யோர்தானுக்குக் கிழக்கே எங்களுக்கு உரிமை கிடைதித்திருக்க, நாங்கள் நதிக்கு அக்கரையிலும் அதற்கப்பாலும் வேறே உரிமை ஒன்றும் கேட்கமாட்டோம் என்று சொன்னார்கள்.

20 அதற்கு மோயீசன் அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்வதாயிருந்தால் ஆண்டவர் முன்னிலையில் போருக்கு ஆயத்தமாப் புறப்படுங்கள்.

21 ஆண்டவர் தம்பகைவரை அழித்தொழிக்கு மட்டும், நீங்கள் யாவரும் ஆயுதம் தாங்கியவராய் யோர்தானைக் கடந்து போங்கள்.

22 அந்த நாடு முழுவதும் ஆண்டவருக்கு வயப்படுத்தப்பட்ட பிற்பாடே, நீங்கள் ஆண்டவருக்கும் இஸ்ராயேலுக்கும் முன்பாகக் குற்றமற்றவர்களாய் இருப்பீர்கள். அதன்பிறகு, நீங்கள் விரும்பிய இந்த நாடு ஆண்டவர் முன்னிலையில் எங்களுக்கு உரிமையாகும்.

23 நீங்கள் சொல்லியபடி செய்யாமல் போனாலோ, ஆண்டவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவர்களாய் இருப்பீர்கள் என்பதற்கு ஐயமில்லை. அந்த பாவம் உங்களைத் தொடர்ந்து பீடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.

24 ஆகையால், உங்கள் சிறுவர்களுக்காக நகரங்களையும், உங்கள் ஆடுமாடு முதலியவைகளுக்காகப் பட்டி தொழுவங்களையும் கட்டுங்கள். பிறகு உங்கள் சொற்படி செய்யுங்கள் என்றார்.

25 அப்பொழுது காத் கோத்திரத்தாரும் ரூபன் கோத்திரத்தாரும் மோயீசனிடம்: நாங்கள் உம் அடியார்கள். ஆண்டவர் கட்டளையிட்டபடியே செய்வோம்.

26 எங்கள் சிறுவர்களையும் பெண்களையும் ஆடுமாடு முதலியவைகளையும் நாங்கள் கலாத்தின் நகரங்களிலே விட்டுவிட்டு,

27 அடியார் அனைவரும், கடவுள் சொன்னது போல், ஆயுதம் தாங்கிப் போருக்குப் போவோம் என்றார்கள்.

28 அப்பொழுது மோயீசன் குருவாகிய எலெயஸாரையும், கானின் புதல்வனாகிய யோசுவாவையும், இஸ்ராயேல் கோத்திரங்களின் தலைவர்களையும் நோக்கி:

29 காத்தின் கோத்திரத்தாரும் ரூபன் கோத்திரத்தாருமாகிய இவர்கள் ஆண்டவர் முன்னிலையில் போருக்கு ஆயத்தமாய் உங்களோடுகூட யோர்தானைக் கடந்து போவார்களாயின், அந்த நாடு உங்களுக்குக் கிடைத்தபின்பு, அவர்களுக்குக் கலாத் நாட்டை உரிமையாகக் கொடுப்பீர்கள்.

30 ஆனால், அவர்கள் ஆயுதம் தாங்கியவர்களாய் உங்களோடுகூடக் கானான் நாட்டைக் கடந்து போக விருப்பமில்லாதிருப்பின், அவர்கள் உங்கள் நடுவே குடியேறக்கடவார்கள் என்றார்.

31 இதற்குக் காத்தின் கோத்திரத்தாரும் ரூபன் கோத்திரத்தாரும் மறுமொழியாக: ஆண்டவர் அடியார்களுக்குச் சொன்னது போல் நாங்கள் செய்வோம்.

32 நாங்கள் ஆண்டவர் முன்னிலையிலே போருக்கு ஆயத்தமாய்க் கானான் நாட்டிற்கு மகிழ்ச்சியோடு போவோம். மேலும், நாங்கள் யோர்தானுக்கு இக்கரையில் எங்கள் சொந்த உடைமையை ஏற்கெனவே பெற்றுள்ளோமென்று வெளிப்படையாய் ஒத்துக்கொள்கிறோம்என்றார்கள்.

33 அப்பொழுது மோயீசன் காத் கோத்திரத்தாருக்கும், ரூபன் கோத்திரத்தாருக்கும், சூசையின் புதல்வனாகிய மனாஸேயின் பாதிக் கோத்திரத்துக்கும் அமோறையருடைய அரசனாகிய செகோனின் நாட்டையும், பாசான் அரசனான ஓகின் நாட்டையும், அவர்களைச் சேர்ந்த நாடுகளையும் நகரங்களையும் கொடுத்தார்.

34 பின்பு காத்தின் கோத்திரத்தார் காத், திபோன், அத்தரோட்,

35 அரொவர், எத்திரோட், சொப்பான், யாஜேர், ஜெக்பா,

36 பெத்னேம்ரா, பெட்டரான் என்னும் அரணுள்ள நகரங்களையும், தங்கள் மந்தைகளுக்குப் பட்டிதொழுவங்களையும் கட்டினார்கள்.

37 ரூபன் கோத்திரத்தாரோ ஏஸெபோன், ஏலையாலை, கரியத்தயீம் என்னும் நகரங்களையும்,

38 நாபோ, பாவால், மையோன், சபமா என்னும் நகரங்களையும் புதிப்பித்து அவற்றிற்குப் பெயரிட்டார்கள்,

39 ஒருநாள் மனாசேயின் புதல்வனான மக்கீரின் புதல்வர்கள் கலாத்துக்குப் போய், அதில் வாழ்ந்து வந்த அமோறையரை வெட்டி வீழ்த்தி, நாட்டைப் பாழாக்கிப் பிடித்துக் கொண்டார்கள்,

40 ஆதலால், மோயீசன் மனாஸே புதல்வனாகிய மக்கீருக்குக் கலாத் நாட்டைக் கொடுத்தார். மனாஸே அங்கே குடியேறினான்.

41 அவன் புதல்வனாகிய ஜயீர் கலாத்துக்கடுத்த ஊர்களைக் கைப்பற்றி, அவைகளுக்கு ஆவாட்ஜயீர் - அதாவது: ஜயீரூர் - என்று பெயரிட்டான்.

42 நொபே என்பவனும் கான் நாட்டையும் அதைச் சேர்ந்த ஊர்களையும் கைப்பற்றி அவற்றிற்கு நொபே என்று தன் பெயரையிட்டான்.

அதிகாரம் 33

1 இஸ்ராயேல் மக்கள் மோயீசன் ஆரோன் என்பவர்களுடைய தலைமையின்கீழ் எகிப்தினின்று அணியணியாய்ப் புறப்பட்ட பின்னர், அவர்கள் வழியிலே தங்கிய இடங்களின் விவராமவது:

2 ஆண்டவர் கட்டளைபடியே இஸ்ராயேலர் ஓரிடத்தைவிட்டு வேறிடத்திற்குப் போய்ப் பாளையம் இறங்குவார்கள். அந்த இடங்களின் வரிசைப்படியே மோயீசன் அவற்றை எழுதிவைத்தார்.

3 எவ்வாறென்றால்: முதல் மாதத்தின் பதினைந்தாம்நாள் பாஸ்காவுக்கு மறுநாள் (ஆண்டவருடைய) வலுத்த கையாலே அவர்கள் இராமசேஸை விட்டுப் புறப்பட்டார்கள். எகிப்தியர் எல்லாரும் அதைப்பார்த்துக்கொண்டு,

4 ஆண்டவர் அழித்திருந்த தங்கள் தலைப்பிள்ளைகளை அடக்கம் செய்து கொண்டு இருந்தனர். (உள்ளபடி அவர்களுடைய தேவர்கள் மீதும் ஆண்டவர் தம்முடைய நீதியைச் செலுத்திப் பழிவாங்கியிருந்தார்).

5 இஸ்ராயேலர் சொக்கோட்டிலே பாளையம் இறங்கினர்.

6 சொக்கோட்டிலிருந்து பாலைவனக் கடை யெல்லைகளிலுள்ள எத்தாமைச் சேர்ந்தனர்.

7 அங்கிருந்து புறப்பட்டுப் பேர்செபோனை நோக்கிய பியயிரோட் பக்கத்தில் வந்து, மக்தலோமுக்கு முன்பாகப் பாளையம் இறங்கினர்.

8 பியயிரோட்டிலேயிருந்து புறப்பட்டுக் கடல்வழியாய்ப் பாலைவனத்திற்குப் போய், எத்தாம் என்னும் பாலைவனத்திலே மூன்று நாள் நடந்து, மாராவிலே பாளையம் இறங்கினர்.

9 மாராவிலே புறப்பட்டுப் பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பனைமரங்களும் இருந்த எலீமில் பாளையம் இறங்கினர்.

10 அங்கேயிருந்து புறப்பட்டுச் செங்கடல் அருகே கூடாரம் அடித்தனர். செங்கடற் கரையிலிருந்து புறப்பட்டுப் போய்,

11 சின் பாலைவனத்திலே பாளையம் இறங்கினர்.

12 அங்கேயிருந்து புறப்பட்டுத் தப்கா சேர்ந்தனர்.

13 தப்காவிலிருந்து புறப்பட்டு அலூஸிலே பாளையம் இறங்கினர்.

14 அலூஸிலிருந்து புறப்பட்டு இரப்பீதிமிலே தங்கள் கூடாரங்களை அடித்தனர். அங்கே மக்களுக்குக் குடிதண்ணீர் இல்லாது போயிற்று.

15 இரப்பீதிமிலேயிருந்து புறப்பட்டு அவர்கள் சீனாய் பாலைவனத்திலே பாளையம் இறங்கினர்.

16 சீனாய்ப் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு இச்சைகோரி போய்ச்சேர்ந்தனர்.

17 இச்சை கோரியை விட்டுப்புறப்பட்டு ஆசெரோட்டிலே பாளையம் இறங்கினர்.

18 ஆசெரோட்டிலேயிருந்து ரெத்மா போய்ச் சேர்ந்தனர்.

19 ரெத்மாவிலெயிருந்து புறப்பட்டு ரெம்மோம் பாரேஸிலே பாளையம் இறங்கினர்.

20 அங்கேயிருந்து புறப்பட்டு லெப்னாவிலே போய்ச் சேர்ந்தனர்.

21 லெப்னாவிலேயிருந்தோ ரேஸாவிலே பாளையம் இறங்கினர்.

22 ரேஸாவிலேயிருந்து புறப்பட்டுக் கேலத்தா போய்ச் சேர்ந்தனர்.

23 அங்கேயிருந்து செப்பேர் மலையின் அண்மையில் பாளையம் இறங்கினர்.

24 செப்பேர் மலையை விட்டுப் புறப்பட்டு அரதா போய்ச் சேர்ந்தனர்.

25 அங்கேயிருந்து புறப்பட்டு மக்கெலோத்திலே பாளையம் இறங்கினர்.

26 மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுத் தாகாத் போய்ச்சேர்ந்தனர்.

27 தாகாத்திலேயிருந்து தாரேயிலே பாளையம் இறங்கினர்.

28 அங்கேயிருந்து புறப்பட்டு மெத்காவிலே கூடாரங்களை அடித்தனர்.

29 மெத்காவிலேயிருந்தோ எஸ்மொனாவிலே பாளையம் இறங்கினர்.

30 எஸ்மொனாவிலிருந்து புறப்பட்டு மொசெரோத் போய்ச் சேர்ந்தனர்.

31 மொசெரோத்திலேயிருந்து பெனஜாக்கனிலே பாளையம் இறங்கினர்.

32 பெனஜாகனிலேயிருந்து புறப்பட்டுக் காத்காத் மலை போய்ச் சேர்ந்தனர்.

33 அங்கேயிருந்து புறப்பட்டு ஜெத்தேபத்தாவிலே பாளையம் இறங்கினர்.

34 ஜெத்தேபத்தாவிலிருந்து எபிரோனா போய்ச் சேர்ந்தனர்.

35 எபிரோனாவிலிருந்து புறப்பட்டு அஸியோங்கபேரிலே பாளையம் இறங்கினர்.

36 அங்யேயிருந்து புறப்பட்டு காதேஸ் என்னப்பட்ட சின் பாலைவனம் போய்ச்சேர்ந்தனர்.

37 காதேஸிலிருந்து புறப்பட்டு ஏதோமின் கடையெல்லைகளிலுள்ள ஓர் என்னும் மலையடியிலே பாளையம் இறங்கினர்.

38 தலைமைக் குருவாகிய ஆரோன் ஆண்டவருடைய கட்டளையின் படி ஓர் என்னும் மலையில் ஏறி அங்கேயே இறந்தார். இஸ்ராயேல் மக்கள் எகிப்தினின்று புறப்பட்ட நாற்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் முதல் நாளிலே அவர் இறந்தார்.

39 அப்பொழுது அவருக்கு வயது நூற்றிருபத்துமூன்று.

40 அப்பொழுது தென்னாட்டிலே குடியிருந்த கானானையனான அராத் என்னும் அரசன் இஸ்ராயேல் மக்கள் கானான் நாட்டில் புகுந்துள்ளதைக் கேள்விப்பட்டான்.

41 நிற்க, இஸ்ராயேலர் ஓர் என்னும் மலையிலிருந்து புறப்பட்டுச் சல்மோனாவிலே பாளையம் இறங்கினர்.

42 அங்கேயிருந்து புறப்பட்டுப் புனோன் போய்ச் சேர்ந்தனர்.

43 புனோனை விட்டுப் புறப்பட்டு ஒதோத்திலே பாளையம் இறங்கினர்.

44 ஒதோத்திலேயிருந்து மோவாபியரின் எல்லையாகிய இயபாரிம் போய்ச் சேர்ந்தனர்.

45 இயபாரிமிலேயிருந்து புறப்பட்டுத் திபொங்காதிலே தங்கள் கூடாரங்களை அடித்தனர்.

46 அங்கேயிருந்து புறப்பட்டு எல்மொண்டெப்லத்தாயீமிலே பாளையம் இறங்கினர்.

47 எல்மொண்டெப்லத்தாயீமிலிருந்து புறப்பட்டு நபோவுக்கு எதிரேயுள்ள அபரீம் மலைகளுக்குப் போனார்கள்.

48 அபரீம் மலைகளிலிருந்து புறப்பட்டு அவர்கள் எரிக்கோ நகரத்ருக்கு எதிரே யோர்தானுக்கு அண்மையிலுள்ள மோவாபிய வெளிகளில் போய்ச் சேர்ந்தனர்.

49 அங்கு மோவாபியருடைய சமவெளிகளிலே பெத்ஸிமோத்திலிருந்து ஆபேற்சத்தீம் வரையிலும் பாளையம் இறங்களினர்.

50 அவ்விடத்திலே ஆண்டவர் மோயீசனை நோக்கி:

51 நீ இஸ்ராயேல் மக்களிடம் கட்டளையாய்ச் சொல்லவேண்டியது ஏதென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் நாடு சேரும் போது,

52 அந்நாட்டுக் குடிகளையெல்லாம் அழித்து, அவர்களுடைய ஆலயங்களை அழித்து, அவர்களுடைய விக்கிரகங்களை உடைத்து, மேட்டுக் கோவில்களையெல்லாம் பாழாக்கி விடுங்கள்.

53 இப்படி அந்நாட்டைப் புனிதப்படுத்தி அதில் குடியேறக்கடவீர்கள். அந்த நாட்டை உங்களுக்கு நாமே உடைமையாகக் கொடுத்தோம்.

54 திருவுளச்சீட்டுப் போட்டு நாட்டைப் பங்கிட்டு, அதிகமான மக்களுக்கு அதிக உரிமையும், கொஞ்சமான மக்களுக்கு கொஞ்சம் உரிமையும் கொடுப்பீர்கள். அவரவர்க்குச் சீட்டு எப்படி விழுமோ அப்படி அவரவர்க்கு அவ்விடம் உரியதாகும். உங்கள் கோத்திரங்களின்படியும் குடும்பங்களின்படியும் உரிமை பெற்றுக்கொள்வீர்கள்.

55 நீங்கள் நாட்டின் குடிகளைக் கொலைசெய்யாது விடுவீர்களாயின், மீதியாய் இருப்பவர்கள் உங்கள் கண்களில் ஆணிகளைப் போலவும் விலாக்களில் வேல்களைப் போலவும் இருப்பார்கள்; நீங்கள் குடியிருக்கும் நாட்டிலே உங்களைத் துண்புறுத்திவருவார்கள்.

56 அப்படி விட்டால் நாம் எவ்விதப் பீடை அவர்களுக்குச் செய்ய இருந்தோமோ அவையெல்லாம் உங்களுக்கே செய்வோம் என்றருளினார்.

அதிகாரம் 34

1 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

2 நீ இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: நீங்கள் கானான் நாட்டில் புகப்போகிறீர்கள். அது உங்களுக்குத் திருவுளச் சீட்டுப்படி உரிமையாய்க் கொடுக்கப்பட்ட பின்பு அதன் எல்லைகள் பின் வருமாறு:

3 உங்கள் தென்புறம் ஏதோமுக்கு அண்மையில் இருக்கிற சின் என்னும் பாலைவனம் தொடங்கிக் கிழக்கில் இருக்கிற உவர்க்கடல் வரையிலுமாம்.

4 அந்த எல்லைகள் தெற்கிலுள்ள தேள் என்னும் மேட்டைச்சுற்றிச் சென்னாவழியே போய்க் காதேஸ்பர்னே வரையிலும் பரந்து சென்ற பிற்பாடு, அங்கிருந்து எல்லையூர்களின் வழியாய் ஆதாருக்குப்போய், அங்கிருந்து அசேமொனா வரையிலும் சென்று, தென்புறத்தை முழுவதும் சூழும்.

5 அசேமொனாவிலிருந்து எகிப்தின் நதிவரையிலும் சுற்றிப்போய்ப் பெருங்கடலின் கரையைச் சேரும்.

6 மேற்றிசையில் பெருங்கடலே உங்களுக்கு எல்லையாம். அது பெருங்கடலோடு தொடங்கி, பெருங்கடலோடு முடியும்.

7 வட திசையிலோ எல்லைகள் பெருங்கடல் தொடங்கி மிக உயரமான மலைகள் வரையிலும் போய்,

8 அங்கிருந்து ஏமாத்தைத் தொட்டுச் சேதாதாவில் போய்ச்சேரும்.

9 அவ்விடத்திலிருந்து எல்லைவழியாக ஜெப்பிறோனாவுக்கும் ஏனானுக்கும் போய்ச்சேரும்.

10 கீழ்த்திசையில் எல்லை, ஏனான் தொடங்கிச் சேப்பமா வரைக்கும் பரவும்.

11 சேப்பமாவிலிருந்து எல்லை தப்னீம் ஊருணிக்கு எதிரிலிருக்கும் ரெபிலாவுக்குப் போய்க் கீழ்ப்புறத்திற்கு எதிர்முகமாயுள்ள கெனெரேத் கடலை அணுகி,

12 யோர்தான் வரையில் பரவி உவர்க்கடலில் முடியும். இந்தச் சுற்றெல்லைகளுக்கு உள்ளடங்கிய நாடே உங்களுக்கு உரியது என்றருளினார்.

13 ஆகையால் மோயீசன் இஸ்ராயேல் மக்களை நோக்கி: நீங்கள் திருவுளச் சீட்டுப்போட்டு தத்தமக்கு விழுந்தபடி உரிமையாக்கிக் கொள்ள வேண்டிய நாடும், ஆண்டவருடைய கட்டளையின்படியே ஒன்பது கோத்திரத்தாருக்கும் பாதிக் கோத்திரத்தாருக்கும் பங்கிட வேண்டிய நாடும் அதுவே.

14 ஏனென்றால் தங்கள் தங்கள் தந்தையருடைய கோத்திரங்களின்படி ரூபன் கோத்திரத்தாரும் காத்தின் கோத்திரத்தாரும் மனாசேயின் கோத்திரத்தாரில் பாதிப்பேரும் ஆக,

15 இரண்டரைக் கோத்திரத்தார் எரிக்கோவின் அருகே கீழ்த்திசையிலுள்ள யோர்தான் நதிக்கு இப்புறத்திலே தங்கள் தங்கள் உரிமையைப் பெற்றுக் கொண்டார்கள் என்றார்.

16 பின்னும் ஆண்டவர் மோயிசனை நோக்கி:

17 உங்களுக்கு நாட்டைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டியவர்களின் பெயர்களாவன: குருவாகிய எலெயஸாரும், நூனின் புதல்வனாகிய யோசுவாவும் இவ்விருவரோடு

18 ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவனும், அதாவது:

19 யூதா கோத்திரத்திலே ஜெப்போனேயின் புதல்வனாகிய காலேப்,

20 சிமியோன் கோத்திரத்திலே அமியூதின் புதல்வனாகிய சாமுவெல்,

21 பெஞ்சமின் கோத்திரத்திலே காஸெலோனின் புதல்வனாகிய எலிதாத்,

22 தான் கோத்திரத்திலே ஜொகிலியின் புதல்வனாகிய பொக்சி,

23 சூசையின் புதல்வருக்குள்ளே மனாஸேயின் கோத்திரத்திலே எப்போதுடைய புதல்வன் ஆனியேல்,

24 எபிராயிம் கோத்திரத்திலே செப்தானுடைய புதல்வனாகிய கமுவேல்,

25 ஜபுலோன் கோத்திரத்திலே பர்னாக்குடைய புதல்வனாகிய எலிஸப்பான்,

26 இஸக்கர் கோத்திரத்திலே ஓஸானுடைய புதல்வனாகிய பால்தியேல்,

27 ஆஸேர் கோத்திரத்திலே ஸலோமியுடைய புதல்வனாகிய அகியூத்,

28 நேப்தலி கோத்திரத்திலே அமியூதுடைய புதல்வனாகிய பேதெல் என்பவர்களாம் என்றருளினார்.

29 கானான் நாட்டை இஸ்ராயேல் மக்களுக்குப் பங்கிட்டுக்கொடுக்க ஆண்டவரால் நியமிக்கப்பட்டவர்கள் இவர்களே.

அதிகாரம் 35

1 மீண்டும் மோவாப் சமவெளிகளில் எரிக்கோவுக்கு எதிர்ப்புறத்தில் யோர்தானின் இக்கரையிலே ஆண்டவர் மோயீசனுக்குத் திருவாக்கருளினதாவது:

2 நீ இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிட வேண்டியது என்னவென்றால்: அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் லேவியருக்கு இடம் தரவேண்டும்.

3 குடியிருக்கத்தக்க நகரங்களையும், அவற்றின் சுற்றிலுமுள்ள வெளிகளையும் அவர்களுக்குக் கொடுக்கக்கடவார்கள். மேற்படி நகரங்களில் லேவியர் வாழ்ந்திருந்து, அந்த நகரங்களை அடுத்த சுற்றுவெளிகளில் தங்கள் ஆடுமாடு முதலியவற்றை வைத்துக் கொள்வார்கள்.

4 இந்தச் சுற்றுவெளிகள் மதில்களுக்கு வெளியே இருக்கும். மதில் தொடங்கி வெளியே சுற்றிலும் ஆயிரம் கெஜ தூரத்துக்கு எட்ட வேண்டும்.

5 நகரங்கள் நடுவில் இருக்க, நகரங்களைச் சேர்ந்த வெளிகள் அவற்றைச் சுற்றி இருக்கும். இவைகளுக்கும் அவைகளுக்கும் கீழ்ப்புறத்தில் இரண்டாயிரம் முழமும், தென்புறத்தில் இரண்டாயிரம் முழமும், மேற்புறத்தில் இரண்டாயிரம் முழமும், வடபுறத்தில் இரண்டாயிரம் முழமும் (இடைவெளி இருக்கும்படி அளந்துவிடுவீர்கள்).

6 நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் நகரங்களில், கொலைசெய்தவன் ஓடி ஒழியத்தக்க ஆறு நகரங்களை அடைக்கல நகரங்கள் என்று குறிக்கக்கடவீர்கள். இந்த ஆறும் தவிர வேறு நாற்பத்திரண்டு நகரங்கள் லேவியருக்கு உரியவைகளாய் இருக்கவேண்டும்.

7 எல்லாம் சேர்ந்து லேவியருக்குக் கொடுக்க வேண்டியவை நாற்பத்தெட்டு நகரங்களும் அவைகளுக்கடுத்த வெளிகளுமேயாம்.

8 நீங்கள் இஸ்ராயேல் மக்களுடைய உரிமையிலிருந்து அந்த நகரங்களைக் குறிக்கும்போது, அதிகமுள்ளவர்களிடமிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடமிருந்து கொஞ்சமும் பிரித்தெடுக்க வேண்டும். அவரவருடைய உரிமையின் தரப்படியே அவரவர் லேவியருக்குக் கொடுக்கக் கடவார்கள் என்று திருவுளம்பற்றினார்.

9 பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:

10 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் நாடு சேர்ந்த பின்பு,

11 இந்நகரங்களில் தன்னறிவின்றிக் கொலை செய்தவன் ஓடி ஒழியத்தக்க அடைக்கல நகரங்கள் எவையென்று நீங்கள் தீர்மானித்துக் குறிக்கக் கடவீர்கள்.

12 கொலை செய்து அவைகளில் அடைக்கலம் புகுந்தவன் சபையிலே நியாயம் விசாரிக்கப்படுவதற்குமுன் கொலை செய்யப்பட்டவனுடைய உறவினர் கையாலே அவன் சாகாமல் தப்பித்துக்கொள்வான்.

13 ஆதலால், அடைக்கலம் என்று குறிக்கப்படும் நகரங்களில்,

14 யோர்தானுக்கு இப்பால் மூன்றும் கானான் இருக்க வேண்டும்

15 தன்னறிவின்றி கொலை செய்தவன் இஸ்ராயேல் மகனானாலும், உங்கள் நடுவே இருக்கும் அகதியானாலும், அந்நியனானாலும் அங்கே அடைக்கலம் புகலாம்.

16 ஒருவன் இருப்பாயுதத்தால் மற்றொருவனை அடித்திருக்க அடியுண்டவன் இறந்தால், அடித்தவன் கொலைபாதகன் என்று கொலை செய்யப்படவேண்டும்.

17 ஒருவன் மற்றொருவன் மேலே கல்லெறிந்திருக்க எறிபட்டவன் இறந்தால், கல்லெறிந்தவன் அவ்விதமே கொலை செய்யப்பட்டவேண்டும்.

18 ஒருவன் மர ஆயுதத்தாலே அடிபட்டு இறந்தால், அடித்தவன் கொலை செய்யப்படுவதாலே அந்தப் பழி தீரும்.

19 கொலை செய்யப்பட்டவனுடைய உறவினர் கொலைபாதகனைக் கொல்ல வேண்டும். அவனைக் கண்டவுடனே அவர்கள் அவனைக் கொண்று விடுவார்கள்.

20 ஒருவன் பகையால் மற்றொருவனை விழத் தள்ளினான்; அல்லது பதுங்கியிருந்து அவன் மேல் ஏதேனும் எறிந்தான்; அல்லது அவனை விரோதித்துக் கையால் அடித்தான்:

21 அவ்வாறு செய்யப்பட்டவன் இறந்தானாயின் அதைச் செய்தவன் கொலை பாதகனாகையால் கொலை செய்யப்படுவான். இறந்தவனுடைய உறவினர் அவனைக் கண்டவுடனே கொன்றுவிடுவார்கள்.

22 ஆனால், அவன் எதிர்பாராத விதமாய்ப் பகையொன்றுமில்லாமலும்,

23 கடுப்பில்லாமலும் அவ்விதச் செயலைச் செய்திருப்பானாயின்,

24 அப்பொழுது, கொலை செய்தவனும் பழி வாங்க வேண்டிய உறவினனும் சபையார் முன்பாக நியாயம் பேசி, (அது எதிர்பாராதவிதமாய் நிகழ்ந்ததேயன்றி வேறொன்றினால் அல்லவென்று) தெளிவானால்,

25 குற்றமற்றவனென்று அவனைப் பழிவாங்குபவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் அடைக்கலம் புகத்தக்க நகரத்திற்கு நீதித் தீர்ப்பின்படி கொண்டு வரப்படுவான். பிறகு அவன், புனித தைலத்தைப் பூசி அபிஷுகம் செய்யப்பட்ட தலைமைக் குருவின் மரணம் வரையிலும் அவ்விடத்திலேயே இருக்கக்கடவான்.

26 ஆனால், கொலை செய்தவன் தான் ஓடிப்போய்த் தங்கிய அடைக்கல நகரத்தின் எல்லைகளை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது,

27 அவனைக் கண்டுபிடித்துக் கொன்று பழிவாங்குவோனுக்குக் குற்றம் இல்லை.

28 ஏனென்றால், ஓடிப்போனவன் தலைமைக் குருவின் மரணம் வரையிலும் அடைக்கல நகரத்தில் இருந்திருக்கவேண்டும். தலைமைக்குரு இறந்த பின்னரோ, கொலை செய்தவன் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகத் தடையில்லை.

29 இவை உங்கள் உறைவிடங்களெங்கும் நித்திய சட்டமாய் வழங்கி வரக்கடவன.

30 கொலை செய்தவன் சாட்சிகளுடைய வாக்கு மூலத்தின்படியே தண்டிக்கப்படுவான். மேலும், ஒரே சாட்சியைக் கொண்டு ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச் செய்யலாகாது.

31 இரத்தம் சிந்திய மனிதன் தன் உயிருக்காக பணத்தைக் கொடுத்தாலும் நீங்கள் வாங்கலாகாது. அவன் செத்தே தீர வேண்டும்.

32 அடைக்கலம் புகுந்தவர்கள் அடைக்கல நகரத்திலிருந்து குருவின் மரணத்திற்கு முன் தங்கள் ஊருக்குக் கண்டிப்பாய்த் திரும்பிப் போகலாகாது.

33 நீங்கள் குடியேறின நாடு குற்றமில்லாதவருடைய இரத்தத்தினால் தீட்டுள்ளதாகி விட்டதே! அந்த தீட்டு இரத்தம் சிந்திய பாதகனுடைய இரத்தத்தாலன்றி மற்ற எதனாலும் கழுவப்படாதென்று (நீங்கள் மறவாதபடிக்கு அதைச் சொன்னோம்).

34 அவ்வாறு உங்கள் நாடு தூய்மை பெறும். நாமும் அப்பொழுது உங்களோடு வாழ்ந்திருப்போம். ஏனென்றால், ஆண்டவராகிய நாம் இஸ்ராயேல் மக்கள் நடுவே வாழ்ந்திருக்கிறோம் என்று திருவுளம்பற்றினார்.

அதிகாரம் 36

1 இவ்வாறிருக்க, சூசையின் வம்ச வழியைச் சேர்ந்த மனாஸேயின் மகனான மக்கீரின் புதல்வர்களும், கலாத் வம்சங்களின் அதிபதிகளும் வந்து, இஸ்ராயேல் தலைவர்களின் முன்னிலையில் மோயீசனிடம் சொன்னதாவது:

2 சீட்டுப் போட்டு இஸ்ராயேல் மக்களுக்கு நாட்டைச் சீட்டு விழுந்தபடி பிரித்துக் கொடுக்குமாறு எங்கள் தலைவராகிய உமக்குத் தானே ஆண்டவர் கட்டளை கொடுத்து, எங்கள் சகோதரனாகிய சல்பாதுக்கு வர வேண்டிய உரிமைப் பாகத்தை அவன் புதல்வியருக்குத் தரக் கட்டளையிட்டார்?

3 ஆனால், வேறொரு கோத்திரத்து ஆடவர்கள் அவர்களை மணந்து கொள்வார்களாயின், அந்தப் புதல்வியருடைய உரிமைப் பாகம் அவர்களோடு போகும். அப்பொழுது அவர்களுடைய உரிமை நீங்கி அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் உரிமையோடு சேர்ந்து போகும்.

4 அப்படியிருக்க, ஐம்பதாம் ஆண்டாகிய ஜுபிலி ஆண்டு வந்தாலும், முந்திச் சீட்டுப் போட்டுப் பங்கிட்டுக் கொடுத்த உடைமைகள் ஒன்றோடொன்று சிக்குண்டு போகும். ஓருவனுடைய உரிமை நீங்கிப் போய் மற்றொருவனுடைய உரிமையோடு சேர்ந்துபோகும். (அதற்கு நியாயம் என்ன) என்று கேட்டார்கள்.

5 அதற்கு மோயீசன் ஆண்டவருடைய கட்டளையின்படி இஸ்ராயேல் மக்களை நோக்கி: சூசையின் கேத்திரத்தார் சொன்னது முறையே.

6 ஆதலால் ஆண்டவர் சல்பாதின் புதல்வியாரைக் குறித்து விதிக்கிற கட்டளை என்னவென்றால்: அவர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடவரை மணந்து கொள்ளலாம். ஆனால், தஙகள் கோத்திரத்தாரோடு மட்டுமே அவர்கள் மணம் செய்து கொள்ள வேண்டும்.

7 இல்லாவிட்டால், இஸ்ராயேல் மக்களுடைய உரிமைப் பாகம் ஒரு கோத்திரத்தைவிட்டு மற்றொரு கோத்திரத்துக்குப் போய்விடும்.

8 ஆதலால், ஆடவர் யாவரும் தங்கள் தங்கள் கோத்திரத்திலும் தங்கள் தங்கள் வம்சத்திலும் மட்டுமே மணம் செய்து கொள்ளவும், அவரவருடைய உரிமைப்பாகம் அவருடைய கோத்திரத்திலே நிலைகொண்டிருக்கும்படியாய்ப் பெண்கள் யாவரும் தங்கள் தங்கள் கோத்திரத்திலே மட்டும் வாழ்க்கைப்படவும் கடவார்கள்.

9 இவ்வாறு கோத்திரங்கள் ஒன்றோடொன்று கலவாமல் இப்போதிருக்கிற முறையிலே நிலைபெறும்.

10 அந்தக் கோத்திரங்கள் ஆண்டவராலேயே வேறுவேறாகப் பிரிக்கப்பட்டன அல்லவா என்று சொன்னார். சல்பாதின் புதல்வியர் மோயீசன் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

11 மாலா, தேற்சா, ஏகிலா, மெல்கா நோவா ஆகியவர்கள் தங்கள் தந்தையின் சகோதரருடைய புதல்வர்களை மணந்து கொண்டார்கள்.

12 இவர்கள் சூசையின் புதல்வனான மனாஸேயின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகையால், அவர்களுக்குக் கிடைத்த உரிமைப் பாகம் அவர்களுடைய தந்தையின் கோத்திரத்திலும் உறவின் முறையிலும் நிலை கொண்டது.

13 எரிக்கோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமவெளிகளிலே ஆண்டவர் மோயீசன் வழியாய் இஸ்ராயேல் மக்களுக்கு விதித்த கட்டளைகளும் சட்டங்களும் இவைகளேயாம்.