"தாகமாயிருக்கிறேன்" என்று திருவுளம் பற்றீனீர்!
ஆ என் நல்ல சேசுவே! என் ஆராதனைக்குரிய ஆண்டவரே, தேவரீர் என் பாவங்களைப்பற்றி இரத்த வேர்வை வேர்த்து, அன்றிரவும் பகலும் முடியாத கஸ்தி நிர்ப்பந்த வேதனையெல்லாம் பட்டு, சர்வாங்கத்திலும் பட்ட காயங்களால் மிகுதியான இரத்தம் சிந்தி, சொல்லிலடங்காத இளைப்பு தவிப்பு வருத்தத்துடனே கபால மலைக்குப் பாரமான சிலுவை சுமந்து, அத்திருச்சிலுவையிலே அறையுண்டு, மூன்றாணிகளில் தொங்கி நின்றபோது, மட்டில்லாத வாதைகளை மிகுந்த களைப்புடனே அனுபவித்ததினாலேயும், உம்முடைய இரத்தத்தை ஓயாமல் உமது திருக் காயங்கள் வழியாகச் சிந்தினதினாலேயும், உமக்குக் கொடூரமான தாகம் உண்டாயிற்று என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இந்த நெடிய தாகத்தைவிட உமக்கு நன்றிக் கெட்டப் பிள்ளையும் நீசப் புழுவுமாயிருக்கிற நான் நரகத்திலே விழாமல் மோட்ச இராச்சியத்திலே சேர்ந்து உம்மைப் பிரத்தியட்சமாய்த் தரிசிக்கத் தக்கதாக அளவில்லாத ஆசையாகிய தாகமாயிருந்தீரே.
என் நேசத்துக்குரிய இரட்சகரே! என் திவ்விய சேசுவே, உமது மட்டில்லாத தயாளத்தைப் பற்றி உமக்கு பாட்டில்லாத தோத்திர முண்டாகக்கடவது. இந்தக் கடினமான வியாதியினிமித்தமாக நான் எத்தனை கனமான கஸ்தி நோவுகளை அனுபவித்தாலும் சகல நன்மைச் சொருபியாயிருக்கிற தேவரீருக்கு ஏற்காத பாவங்களைச் செய்ததினாலே அதிக மனஸ்தாபமும் கஸ்தியுமாயிருக்கிறேன்.
இதுவரைக்கும் நான் அழிந்து போகிற உலகத்தின் பேரிலே வைத்திருந்த ஆசையை விட்டுவிடுகிறேன். இந்தப் பிரபஞ்சத்தின் பொய் நன்மைகளின் பேரில் நான் முன்னே வைத்திருந்த சகல ஆசைகளையும் விட அளவில்லாத சகல நன்மை சுபாவ மாயிருக்கிற தேவரீரை மோக்ஷ இராச்சியத்திலே தரிசிக்கத்தக்கதாக அதிகமான ஆசையாகிய "தாகமாயிருக்கிறேன்".
ஆ சுவாமீ! ஆ . என் அன்புக்குரிய சேசுவே! என்னை அத்தியந்த நேசத்தோடே சிநேகித்து, எனக்காகச் சொல்லிலடங்காத பாடுபட்டீர். நான் உமக்காகக் கஸ்தி நோய் வேதனைப்படவும், உம்மைப்பற்றி மரிக்கவும் ஆசைப்படுகிறேன்.
என்னாலியன்ற மட்டும் உம்மை இவ்வுலகத்தில் சேவித்துத் தோத்திரப்படுத்தவும், பரலோகத்திலும் நித்தியமாய் சிநேகித்து, தரிசித்து ஸ்துதிக்கவும் அதிகமாய் ஆசைப்படுகிறேன். என் ஆசையை மென்மேலும் பெரிதாக்கி நிறைவேற்றியருளும் சுவாமீ.
பரிசுத்த கன்னியுமாய் உத்தம மாதாவுமாயிருக்கிற அர்ச். மரியாயே, உமது திருக்குமாரனாகிய சேசுநாதரை அடியேன் மோட்ச இராச்சியத்திலே தரிசித்து எப்போதும் பேரின்ப பாக்கியத்தை அனுபவிக்கத்தக்கதாக எனக்கு வேண்டிய அனுக்கிரத்தையும், அதற்குத் தக்க புண்ணியங்களையும் உம்முடைய மன்றாட்டினாலே பெறுவித்து, ஆபத்தும் பயமுமில்லாத வழியிலே என்னைக் கூட்டிக் கொண்டு பரகதியில் சேர்த்தருளும்.
இந்தக் கண்ணீர் கணவாயிலே பிரலாபித்தழுது கிடக்கிறேன். இந்தப் பரதேசத்தைக் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் ஆசிர்வதிக்கப்பட்ட கனியாகிய சேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தைத் தயாபரியாய் எனக்குத் தந்தருளும்.
ஆமென்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
தாகமாயிருக்கிறேன்
Posted by
Christopher