பரலோக வல்லமையுடன் அக்டோபர் 13, 1917-ல் “எல்லோரும் நம்பும்படியாக” நிகழ்த்தப்பட்ட மாபெரும் சூரிய அதிசயமே பாத்திமாவின் மறுக்கப்பட முடியாத ஆதாரம்.
குறைந்தது எழுபதினாயிரம் மக்களின் நேரடிப் பார்வையில் மூன்று மாதங்களுக்கு முன்பே 3 குழந்தைகளால் முன்னறிவிக்கப்பட்ட நாளிலும், நேரத்திலும் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எதையும் நம்ப மறுக்கும் நாஸ்திகர் கூட அதை மறுக்காமல் ஏற்றனர். ஆயினும் மனித பலவீனம், பகை, சுயநலம் இவை எந்த ஆதாரத்தையும் மறுக்கத் துணிந்து விடுகின்றன.
பாத்திமா நிகழ்ச்சிகளின் சாட்சியாக உயிருடன் இன்னும் இருப்பவளும் காட்சி கண்டவர்களில் முதன்மையானவளும், மூத்தவளுமான சகோதரி லூஸியா மட்டும்தான்.
வந். ஜோஸ் ஆல்வெஸ் ஆண்டகையின் விருப்பத்திற்கும், கட்டளைக்கும் இணங்க, சகோதரி லூஸியா நான்கு பாத்திமா “ஞாபகக் குறிப்புகளை” எழுதியுள்ளாள்.
முதல் குறிப்பு 1936ல் எழுதப்பட்டது. இதை வந். ஆயர் வெளியிடுவதாயிருந்தால், தன்னைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்றும், அதை வெளியிடாமலே எரித்து விட்டால் கூட தான் கீழ்ப்படிதலை நிறைவேற்றியதாக மகிழ்ச்சி அடைவதாயும் சகோதரி லூஸியா தெரிவித்திருந்தாள்.
1937-ல் இரண்டாம் ஞாபகக் குறிப்பு எழுதப்பட்டது.
8.8.1941-ல் எழுதப்பட்டது மூன்றாம் ஞாபகக் குறிப்பு.
இதன்பின், மீணடும் ஒரு முழுமையான விவரம் எழுதப்பட வேண்டும் என்று ஆயர் பணித்ததால் 1941 டிசம்பரில் நான்காம் ஞாபகக் குறிப்பையும் எழுதி ஆயரிடம் ஒப்படைத்துள்ளாள் சகோதரி லூஸியா. பரலோகம் உத்தரவளித்தபடியும் திருச்சபை அதிகாரிகளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தும் இவை எழுதப்பட்டுள்ளன.
லூஸியா அல்யுஸ்திரலை விட்டுச்சென்று 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆன பிறகுதான், அவள் முதல் தடவை கோவா தா ஈரியாவைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.
1946, மே 20-ம் நாள், தான் இளமையில் விட்டுப் பிரிந்த அந்தப் புனித நினைவு பதிந்த இடங்களைப் பார்த்தாள். அப்போது அவள் வயது 39.
கோவா தா ஈரியா அடைந்துள்ள மாற்றம் மிகப் பெரிது. அற்புத நீரூற்று ஒரு பெரிய புதிய அம்சமாயிருந்தது. நல்ல கோவிலும், தங்கும் இல்லங்களும் கட்டப் பெற்றிருந்தன. பெரிய குருமட வேலை நடந்து கொண்டிருந்தது. பெல்ஜியம் கார்மெல் மடம் ஒன்றும் அங்கு நிறுவப்பட்டிருந்தது.
மேற்றிராணியாரின் பிரதிநிதியான ஒரு குருவானவர் லூஸியாவுடன் சென்று, காட்சி நடைபெற்ற இடங்களையயல்லாம் அவள் சுட்டிக் காட்டி விளக்குவதைக் கேட்டார்.
ஒவ்வொரு இடமாகப் பார்த்து விட்டு அல்யுஸ்திரலுக்கும் சென்றாள் லூஸியா. அங்கு மார்ட்டோ குடும்பத்தாருடன் பேசினாள். தன் தாய் (1942) இறந்த பின், குடும்பத்தில் அவள் சகோதரிகள் முதன்மையாக இருந்தனர். அவர்களோடு உரையாடிய பின் பிரான்சிஸும், ஜஸிந்தாவும் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்குச் சென்றாள். தன் இளமையின் உயிர்த் தோழர்கள் இன்று பரலோகத்தில் உள்ளதை எண்ணி, தன்னை மறவாது வேண்டும்படி கேட்டுக் கொண்டபின் தன் மடம் திரும்பிச் சென்றாள்.
மொத்தத்தில் சகோதரி லூஸியாவின் இந்த வருகை எண்ணற்ற மக்களை ஊக்கப்படுத்தி மகிழ்வித்தது. லூஸியாவோ பரலோகத்தில் உயிரும், உலகத்தில் உடலும் கொண்டு வாழும் பற்றற்றவளாக, தேவ அன்பிலும், தேவ அன்னையின் இதயத்திலும் வாழும் நிறைவு பெற்றவளாகக் காணப்பட்டாள்.
லூஸியா கார்மெல் மடம் சேரல்
1948-ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் நாள் சகோதரி லூஸியா அர்ச். டோரதி கன்னியர் மடத்தை விட்டு கொயிம்பிரா நகரிலுள்ள கார்மெல் மடத்தில் சேர்ந்தாள். அங்கு அவ்வருடம் மே மாதம் 31-ம் நாள் வார்த்தைப்பாடு கொடுத்தாள். அங்கு அவள் பெயர் மரியாயின் மாசற்ற இருதயத்தின் லூஸியா என்பது.
பரலோகத்தினுடைய வாசலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.