நித்திய பிதாவே என் பாவங்களின் மன்னிப்புக்காகவும் திருச்சபையின் அவசரங்களுக்காகவும் சேசுகிறீஸ்துநாதருடைய திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
இதோ இருளின் திரை நீங்கப் பிரகாசக் கிரகம் தோன்றுகின்றது. பரலோக பூலோக பாதாளம் எனப்பட்ட மூன்று உலகங்களிலும் அடங்காத தேவாதி தேவனே! நான் இருகரங் குவித்து மொத்தத் தாழ்ச்சியோடு உம்மை நமஸ்கரிக்கிறேன்.
சர்வ இன்பத்தின் ஊருணியே நித்திய சந்தோஷத்தின் வெள்ளமே! நான் உம்மை ஆவலாய்த் தாவி வணங்குகிறேன். தேவரீர் பழைய ஏற்பாட்டிலும் புது ஏற்பாட்டிலும் சொல்லியதெல்லாம் உயிர் மூச்சாய் விசுவசிக்கிறேன்.
என் ஏக நித்திய ஆஸ்தியே! என்னை உண்டுபண்ணின கர்த்தரே உமது பேரில் நான் கொண்டிருக்கிற அன்பினால் உமது பாதத்தில் உயிரைவிட ஆசிக்கிறேன். என் ஏக நம்பிக்கையே! என் நல்ல இராசாவே! தேவரீருடைய தோத்திரத்திற்காக என் இரத்தமெல்லாம் சிந்த ஆசிக்கிறேன்.
நீர் எனக்குச் செய்த எண்ண முடியாத நன்மைகளுக்காக நான் தூசியோடு தூசியாய்த் தாழ்ந்து, பய பக்தி பட்சத்துடனே உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். சம்மனசுகளோடும், அர்ச்சியசிஷ்டவர்களோடும் தேவரீரைத் துதிக்க ஆசிக்கிறேன்.
உலகத்திலுள்ள சகலத்தையும் விட்டு உம்மை உறுதுணையாய்க் கைக்கொள்ள விருப்பங் கொள்ளுகிறேன். என் ஐம்புலன்களின் பலமெல்லாம் கொண்டு, புத்தி மனது நினைவை முழுதும் உபயோகஞ் செய்து தேவரீரை என் கண்ணால் கண்டாற்போல் உமது பாதத்தில் விழுந்து உமது சமுகத்திலே மகிழ்ந்திருக்க தேடுகிறேன்.
படைக்கப்பட்ட வஸ்துகள்பேரிலே நாடுகிற நாட்டத்தை விட்டு, சீவிய ஊருணியாகிய உம்மையே நோக்கி நாடுகிறேன். பூலோகத்திலுள்ள வஸ்துக்களைக் கொண்டு உம்மைத் துதிக்கிறேன்.
சகல யுகங்களின் கர்த்தரே! பூலோக ஆரம்பம் தொடங்கி இதுவரையில் செய்யப்பட்டதும், இனி செய்யப்படப் போகிறதுமான பலிகளையும் துதிகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். ஊர்வன, நடப்பன, பறப்பனவற்றோடு உம்மை வாழ்த்தி உம்மில் உறைய ஆசைப்படுகிறேன்.
இன்று நான் யாதோர் பாவத்தில் விழாமல் இருக்கச் செய்தருளும் சுவாமி. தந்திர மயக்கங்களில் நின்று என்னை மீட்டருளும். எனது கிரியைகள் நினைப்புகள் யாவும் உமது ஊழியத்தில் செலுத்தப்பட அனுக்கிரகம் செய்தருளும்.
நான் உம்மில் மூழ்கிப்போகவும், உமது வரப்பிரசாதங்கள் என் இருதயத்தில் ஏராளமாய்ப் பாயவும் செய்தருளும். உபவாச ஒறுத்தலால் நான் உமது திருக் கற்பனைகளை அனுசரிக்கச் செய்தருளும்.
என் சந்தோஷ வெள்ளமே! எனக்குத் திருப்தியான ஆஸ்தியே! என் ஆனந்த மோட்சமே! வேதம் என்னிடம் வந்து உறையவும், உமது இஸ்பிரீத்து சாந்து சம்பூரணமாய் எனக்கு அகப்படவும், உலக காரியங்கள் எனக்குக் கசப்பாகத் தோன்றவும் செய்தருளும் சுவாமி.
நான் இந்நாளிற் செய்யும் தருமங்களையும், உயிர் மூச்சையும் நடக்கும் நடக்கைகளையும், நினைக்கும் நினைவுகளையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
ஆகாசத்தில் அண்ட கோளங்களும், பூமண்டலத்தில் சமுத்திரங்களும், பாதாளத்தில் அரும் பொருள்களும் உம்மால் அசைவு பெற்று உமது சித்தப்பிரகாரம் ஆகிறது போல் என் சித்தம், புத்தி, ஞாபகம், ஐம்புலன்கள் யாவும் உம்மில் ஆடச் செய்தருளும்.
மோட்சத்தில் தேவமாதா, சம்மனசுகள், அர்ச்சியசிஷ்டவர்களால் உமக்கு எம்மாத்திரம் புகழ் உண்டாகின்றதோ, பூலோகத்தில் நடக்கும் தேவ பலிகளாலும், அருந்தவத்தோருடைய செங்களாலும் உமக்கு எவ்வளவ தோத்திரம் உண்டாகின்றதோ அம்மாத்திரம் வணக்கம், துதி, நீச வஸ்துவாகிய என்னால் இன்று உமக்கு உண்டாக ஆசிக்கிறேன்.
என் புத்தி நினைவு கொண்ட மட்டும் உம்மை எனக்குள் அடக்கி அனுபவிக்க அணை கடந்த விருப்பங்கொள்ளுகிறேன். பளுவுள்ள மாமிசத்தோடும், விகாரங்கொண்ட தத்துவங்களோடும் இப்பாக்கியம் எனக்குக் கிடைக்காதென்கிறதினால் என் உயிரை விட்டாகிலும் உம்மில் மூழ்கி ஆனந்த வெள்ள வாரியாகிய உம்மில் அமிழ ஆசிக்கிறேன்.
கருணாகரக் கடவுளே! எண் கடந்த இலட்சணமுள்ள சர்வேசுரனே! என் ஏக நம்பிக்கையே! கடந்த காலத்தில் நான் செய்த தப்பறைகளை மன்னியும். நான் உமது அருளைக் கொண்டு செய்த அற்பப் புண்ணியங்களை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். நீர் செய்த சகல உபகாரங்களுக்கும் கைம்மாறாக உமது நேச திருக்குமாரனின் பேறுபலன்களை எல்லாம் எனது சொந்த ஆஸ்திபோல் எடுத்து உமக்களிக்கிறேன்.
நிகழ்காலத்தில் விசேஷமாய் இன்று நான் செய்யும் நற்காரியங்களை எல்லாம் உமது திருப்பாதத்தில் காணிக்கையாக வைக்கிறேன். இன்று எனக்கு யாதோர் ஆபத்தும் வராமல் காத்தருளும் சுவாமி. எதிர்காலத்தில் என்ன வருமோ அறியேன். என் துர்ப்பலத்தால் வருங்காலத்தில் நான் மோசம் போகாமல் என் ஆயுள் முழுதும் நான் உமது ஊழியத்தில் காலங் கழித்து வரும்படி அனுக்கிரகித் தருளும்..
(33 மணிச் செபம், மற்றதும்)
சர்வேசுரன் பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும். மற்றதும்
எல்லா வஸ்துக்களுக்கும் காரணருமாய், எல்லா வஸ்துக்களுக்குள்ளும் இருக்கிறவருமாய், எல்லா வஸ்துக்களுக்கும் சொந்தக்காரருமான சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
நாங்கள் பிழைத்து நடிமாடிக்கொண்டிருக்கக் காரணமா மிருக்கிற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
அட்சயத்தை அணிந்து கொண்டு நீங்கக்கூடாத பிரகாசத்தில் இருக்கிற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
பூமி முழுமையும் உமது சர்வ வியாபகத்தினால் நிரப்புகின்ற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
மூன்று உலகங்களையும் விஞ்சிய சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
உமக்காகவே சகலத்தையும் படைத்துக்கொண்ட சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
உமது மனது பிரகாரம் எல்லா வஸ்துக்களையும் உண்டு பண்ணின சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
உயிருள்ள ஆத்துமங்களையும், மாமிச ஜீவ ராசிகளையும் கையில் ஏந்திக் கொண்டிருக்கிற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
உமது திருக்கையைத் திறந்து உயிருள்ள சகல சிருஷ்டிப்புக் களையும் ஆசீர்வாதத்தினாலே நிரப்புகிற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
ஆத்துமத்தையும் சரீரத்தையும் நரகத்தில் தள்ள வல்லமை யுள்ள சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
கணக்கில்லாத அற்புதங்களையும் கண்டுபிடிக்கக்கூடாத காரியங்களையும் ஏராளமாய்ச் செய்தருளிய சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
சூரியனை விட அதிகப் பிரகாசங்கொண்டு மனிதர் போகும் வழிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
உபாயங் கற்ற பொய் விவேகம் உள்ளவர்களுடைய கருத்தைச் சிதறடித்து, பொல்லாதவர்களுடைய ஆலோசனைகளைத் தகர்க்கிற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
இருதயத்தின் அந்தரங்கத்தில் நடக்கின்றவைகளைக் கண்டு சோதிக்கிற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
புத்திக்கெட்டாத நிர்ணயங்களையும் கண்டுபிடிக்கக்கூடாத வழிகளையும் கொண்டிருக்கிற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
தாய் தகப்பன் அற்றவர்களுக்குத் தகப்பனுமாய், விதவைகளுக்கு நீதியஸ்தருமாயிருக்கிற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
தயையுள்ளவருமாய், பொறுமை உள்ளவருமாய், இரக்கமும் உண்மையும் உள்ளவருமாயிருக்கிற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
எங்களை ஆதரிக்கிறவருமாய், எங்களுக்கு உசிதமான சம்பாவனைகளைக் கொடுக்கிறவருமாயிருக்கிற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
இராசாதி இராசருமாய் பிரபுக்களுடைய ஆண்டவரு மாயிருக்கிற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
காணப்படாத அட்சயம் உள்ளவருமாய் சகலமான யுகங்களுக்கும் இராசாவுமாயிருக்கிற சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணிரஷியும் சுவாமி.
தயாபரராயிருந்து, எங்கள் பாவங்களைப் பொருத்தருளும் சுவாமி.
தயாபரராயிருந்து, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
சகல பாவங்களிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
ஆங்காரத்திலும் வீண் சிலாக்கியத்திலுமிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
உலோபத்தனத்திலும் உலகக் கவனத்திலுமிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
கோபம் பகை காய்மகாரத்திலுமிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
கோள் ஆவலாதி தகாத தீர்மானத்திலுமிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
போசனப்பிரியம் குடி மோகம் இவைகளிலுமிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
சோம்பலிலும் எங்கள் இரட்சணியத்தை மறப்பதிலுமிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
அனுக்கிரக துர்ப்பிரயோகத்திலும் புறணி பேசுவதிலுமிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
உம்மைக் காணாமலும் உம்முடைய சந்தோஷத்தை அனுபவியாமலும் வேகுவதிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய வல்லபம் பொருந்திய பலத்தையும் மட்டில்லாத ஞானத்தையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய புத்திக்கெட்டாத பரப்பிரம்மத்தையும் இலக்கமிடக்கூடாத தயையையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
உம்முடைய ஏக குமாரன் அனுபவித்த சிறுமைகளையும் பாடுகளையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகிறோம் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் தேவனும் ஆண்டவருமாகிய உம்மை எங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமத்தோடும், முழுப் புத்தியோடும் சிநேகிக்கத் தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாகின் றோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
உம்மை மாத்திரமே வணங்கி பரிசுத்தத்தனத்திலும் தரும் குணத்திலும் எங்கள் வாழ்நாள் முழுமையும் உமக்கு ஊழியம் செய்ய எங்களுக்குத் தயை புரியவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
நாங்கள் உம்முடைய திருநாமத்தை வீணாக உச்சரியாதிருக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
திருச்சபையினுடைய திருநாட்களையும் பண்டிகைகளையும் நாங்கள் அர்ச்சிக்கத் தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் தாய் தகப்பன்மார்களுக்கும் பெரியோர்களுக்கும் நாங்கள் கீழ்ப்படிந்து அவர்களை நமஸ்கரிக்கத் தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் அயலார்களுக்குச் சரீரத்திலும் ஆத்துமத்திலும் ஒருவித தீமையும் நாங்கள் செய்யாமல் இருக்கத் தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் மாமிச இச்சையை அடக்கி, அதன் துர்க்குணங் களையும் குற்றங்களையும் ஒடுக்கி இருதயப் பரிசுத்தராய் நாங்கள் இருக்கத் தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
மற்றவர்கள் எங்களுக்குச் செய்ய மனமிராத காரியங்களை நாங்களும் அவர்களுக்குச் செய்யாதிருக்கத் தயை புரிய வேண்டும் மென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
பிறர் பொருளின் பேரில் நாங்கள் ஆசை வைக்காமல் இருக்கத் தயை புரியவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் பேரிலே ஏராளமான தயையைக் கொண்டிருக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் சரீரங்கள் உமக்குரிய வகையாய்ப் பரிசுத்தப்பட்டு நாங்கள் அவைகளை உமக்குப்பலியாக ஒப்புக் கொடுக்கத் தயை புரியவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
பூலோகத்திற்கு அஸ்திவாரம் போடும்போதே நீர் எங்களுக்கு தயார் பண்ணின் மோட்ச இராச்சியத்தை எங்களுக்குக் கொடுக்கத் தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற... மற்றதும்.
சர்வேசுரா எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்,
சர்வேசுரா எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும்,
ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப்படக்கடவது.
பிரார்த்திக்கக்கடவோம்
திரித்துவ ஏக தேவனாகிய ஆராதனைக்குரிய ஆண்டவரே, எங்கள் புத்திக்கெட்டாத பரம இரகசியங்களை நாங்கள் விசுவசித்து எங்களுடைய நியாயப் பிரமாணத்தை உமக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கவும், எங்கள் சுபாவ நாட்டத்திற்கு விரோதமான கட்டளையை அனுசரித்து எங்கள் மனதை ஒறுக்கவுஞ் செய்தருள உம்மை வணங்கி மன்றாடுகிறோம். ஆமென்.
கிருபை தயாபத்து மந்திரம்...
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
திங்கட்கிழமை காலைச் செபம்
Posted by
Christopher