(13-ம் நாள் முதல் 19-ம் நாள் முடிய)
நோக்கம்: தன்னை அறிதல்.
நாம் இருக்கிற ஒன்றுமற்ற, வெறுமையான, இரங்கத்தக்க நிலையை நாம் நன்றாக அறிந்திராவிட்டால், மாதா நமக்கு எவ்வளவு தேவைப்படுகிறார்கள் என்று உணருவதெப்படி? நம் தேவ அன்னை இல்லாமல் நாம் சேசுகிறிஸ்துவை அடைய முடியாது என்று நாம் உணர்ந்தாலன்றி, அத்தாயிடம் நம்மை முற்றும் முழுவதுமாக நம்மை அர்ப்பணிக்க முடியாது. ஆகவே நம்முடைய பரிதாபமான நிலையை நாம் அறிந்து உணர்ந்திருப்பது முழு அர்ப்பணத்திற்கு அத்தியாவசியமாகிறது.
தன்னை அறிதல் என்பது நம்முடைய ஜென்மப் பாவத்தாலும் கர்மப் பாவங்களாலும் நாம் அடைந்துள்ள மகா பெரிய கேட்டையும் நாம் சென்றுள்ள பாதாள நிலையையும் உண்மையுடன் உணர்ந்து கொள்வதாகும்.
இவ்வேழு நாட்களிலும் இதற்காக நாம் இடைவிடாமல் நம் தாயிடம் பெருமூச்சுகளுடன் அழுது மன்றாடி வரவேண்டும் கல்லைப் போல் இளகாமல் கடினமாயிருக்கிற நம் இருதயம் கரையும்படி வேண்டிக்கொள்ள வேண்டும்.
பரிசுத்த ஆவியிடமும் தேவ அன்னையிடமும் திரும்பத் திரும்ப வேண்டுதல்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆயினும் முழு நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்.