பாடுகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்துக் கேடுகெட்ட அவப்பெயரைத் தாங்கி நிற்பவன்!
எப்படி எம்பெருமான் இயேசுவின் திருப்பெயர் காலம் காலமாய் நின்று நிலைத்து விட்டதோ அதைப் போலவே இவனுடைய அவப் பெயரையும் நிலைநிறுத்திவிட்டது திருச்சபை!
கத்தோலிக்க மக்கள் தம் விசுவாசத்தை அறிக்கை இடும் ஒவ்வொரு முறையும், ‘…(இயேசு) கன்னிமரியிடம் உடல் எடுத்து மனு உருவானார்… ‘ என்று சொல்லி முடித்து உடனேயே, ‘போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்” என முழங்குகிறார்கள்!
சிலுவைப் பாதையின் முதல் தலத்திலேயே, இறைமகனுக்கு முறையற்ற தீர்ப்பு வழங்கிக் கறைபட்ட கையனாக வரலாற்றில் இடம் பெற்றுவிடுகிறான் பிலாத்து.
இவன் யார்? கொடிய வழி சென்று நெடிய பழி கொண்ட இவன் யார்?
இவன் குணம் என்ன?
இவனைப் பற்றி வரலாறு என்ன சொல்கிறது?
”உலக மயக்கத்திலே உழன்று கிடப்பவன்! எது சரி என்று நன்கு அறிந்த பின்பும் தனிப்பட்ட தியாகம் தேவைப்படாத அளவுக்கே அதைச் செய்யும் சுயநலவாதி! ஆனால் நெருக்கடி கொடுத்தால் போதும், விழுந்தடித்துக்கொண்டு விழுந்துவிடுபவன்! இறைமகனை மிக எளிதாக அவன் விடுவித்திருக்கலாம்! மகிழ்ச்சியோடு விடுவித்திருக்கக் கூடும். ஆனால் அவனுடைய அரியணைக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சியே அவன் அவரை விடுவிக்கவில்லை!” என அவனை வருணிக்கிறது தி நியு அட்வென்ட் என்ற கத்தோலிக்க ஆங்கிலக் கலைக் களஞ்சியம் (http://www.newadvent.org/cathen/12083c.htm).
ஆக, ‘அவன் சரியான கோழை, உள்ளீடற்ற மரம் போல் உள்ளத்து உரம் இல்லாதவன்’ என்பது வரலாறு வரைந்து காட்டும் பிலாத்தின் ஓவியம். இவனுடைய இந்த இயல்பை முதுபெருங் கவிஞர் கண. கபிலனார், தம் கர்த்தர் காவியத்தில் ‘கோழைமனம் படைத்ததொரு காட்டுப் பன்றி ‘ (பக்கம் 89) என்றும் ‘பண்படாக் கோழை பிலாத்து’ (பக்கம் 91) என்றும் பொருத்தமாகக் குறிப்பிடுவார்.(இந்த நூலை யாத்தவர் 84 வயதான முதுபெருங் கவிஞர்; பிரான்சு நாட்டில் வாழ்பவர்).
உரோமைப் பேரரசின் பிரதிநிதியான பிலாத்து தன்முன் நிற்கும் எம்பெருமான் இயேசுவைப் பார்த்து,
“… நீ அரசன்தானோ?” என்று கேட்டான். (யோவான் 18 : 37). அதற்கு இயேசு,
“…உண்மையை எடுத்துரைப்பதே என் பணி… உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்.” என்றார். பிலாத்து அவரிடம்,
“உண்மையா? அது என்ன?” என்று கேட்டான். (யோவான் அதி 18 : 37 – 38).
பிலாத்தின் கேள்வியை இலத்தின் மொழியில்,’Quid est veritas?” என்று எழுதுவர்!
இவன் கேள்விக்கு மறு மொழி ஏதும் இயேசு கூறமாட்டார். ஆனால் இலத்தின் மொழிக் கேள்வியில் இடம் பெறும் எழுத்துகளை மாற்றிப் போட்டுப் பார்த்தால், ‘Est vir qui adest ‘ என வரும். இதனை ஆங்கிலத்தில் ‘anagram’ என்பர்.
பிலாத்தின் கேள்விக்கு இதுவே பதில்!
இதன் பொருள் : ”உனக்கு முன் நிற்கும் மனிதன்”.
‘வாழ்வும் வழியும்’ ஆன இறைமகன் இயேசுதானே, ‘உண்மையாகவும்’ விளங்குகிறார்.
இயேசு தீர்ப்பிடப்படுகிறார் என்று சிலுவைப் பாதையின் முதல் தலத்தில் குறிப்பிடுகிறோம்;. உண்மையை உரைக்கப் போனால் பிலாத்துவை இயேசுதான் தீர்ப்பிடுகிறார். நீதியரசனாக நிற்க வேண்டிய பிலாத்து அங்கே பீதியரசனாக நிற்கிறான்! நாமும் அவனைப் போலவே செயல்படுகிறோம். இயேசுவின் முன்னால் நின்று அவரைத் தீர்ப்பிட முயலும்போது தீர்ப்பிடப்படுவர் இயேசு அல்லர், நாமே தீர்ப்பிடப்படுகிறோம்! அங்கே பீதி அடைபவன் பிலாத்துவே தவிர இயேசு அல்லர்! அவர் அமைதி காத்தவர்! அவன் அலமரும் போது இறைமகன் திடமாகவே நிற்கிறார்.
‘பண்படாக் கோழையாகப் பிலாத்து’ இருக்கிறான். திண்பட்ட தீரத்தோடு விளங்குபவர் இயேசுவே!
பதவி ஆசை பிடித்த சுயநலவாதியாகப் பிலாத்து! அறத்தின் நாயகனாக அன்பர் இயேசு!
சத்தியத்தின் மொத்த உருவமாக அவர், அவனோ? உண்மையை, சத்தியத்தை, மாண்பினை, நீதியை அந்த மாளிகை முற்றத்திலே வீசி எறிந்து விட்டு வெறுங்கையனாக நிற்பவன்!
இந்தக் கோணத்திலே பார்க்கும் போது தீர்ப்பிடப்படுபவன் யார் என்பது தெளிவாகும். பிலாத்துவின் இடத்திலேதான் நாமும் நிற்கிறோம். அவரை நாம் விரும்புவதாக இருந்தாலும் சரி வெறுப்பதாக இருந்தாலும் சரி, அவர் நம்மைத் தீர்ப்பிடுவது இல்லை! ஏனெனில் நம்மைத் தீர்ப்பிட அவர் வரவில்லை! நம்மை நாமே நாம்தான் தீர்ப்பிட்டுக்கொள்கிறோம்! அவருடைய உண்மை ஒளியில் நம் பொய்மை விளங்கும். நம்மீது அவர் காட்டும் அன்பு வெள்ளம் நம் உள்ளத்தின் கள்ளத் தன்மையை ஓட்டும்!
‘பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான் ‘ என யோவான் எழுதுகிறார்.
(யோவான் அதி 19 : 19). அது எபிரேயம், இலத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. (யோவான் 19 : 20 ). இக்காலச் சிலுவைகளிலும் இதனை I N R I என்று எழுதி இருக்கக் காணலாம். எத்தனை பேருக்கு இதன் விளக்கம் தெரியும்? « Iesus Nazarenus Rex Iudæorum » என்பதன் முதல் எழுத்துச் சுருக்கமே இது.
‘நசரேயனாகிய இயேசு யூதர்களின் அரசர்’ என்பதே இதன் பொருள்.
இந்த பிலாத்து பற்றி வரலாறு என்ன சொல்கிறது?
‘Pontius Pilatus’ என இலத்தின் மொழி இவனை அழைக்கும். உரோமை அரசாட்சிக்கு உட்பட்ட யூதேய நாட்டுக்கு ஆளுநன் இவன்! அந்தக் காலத்துக்கு முன்னும் பின்னும் இவனைப் பற்றிய வரலாற்றுத் தகவல் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், 1961 -இல் யூதேயப் பகுதியைச் சேர்ந்த ‘Caesarea Palaestina’ என்ற இடத்தில் கல்வெட்டு ஒன்று கிடைத்தது. இது திபேரியூஸ் செசார் ஒகுஸ்துஸ்(Tiberius Caesar Augustus) என்பவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதில்தான் பிலாத்துவின் பெயரைக் காண்கிறோம். ஆகவே பிலாத்து வரலாற்று மனிதன்தான் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். யூத வரலாற்று ஆசிரியர் ஜோசெபூஸ் (Josephus) தம் இரண்டு நூல்களில் பிலாத்துவைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஆனால் செவி வழிச்செய்திகள் சில உண்டு. எருசலேம் நகரின் ஏரோது-பேராலயத்தின் பெருஞ் செல்வத்தை இவன் கைப்பற்றி அதனைப் பயன்படுத்தி எருசலேமுக்கு நீர்வழிப்பாதை அமைத்ததாக ஒரு செய்தி புழங்கி வந்தது. இதனை எதிர்த்த யூத மக்களை பிலாத்துவின் ஆட்கள் அடித்து நொறுக்கியதாகவும் தகவல் உள்ளது. அவ்வப்போது எழும் உள் நாட்டுப் பூசல்களை இரும்புக் கரம் கொண்டு இவன் அடக்கியதாகவும் கூறுவர். இவனுடைய கொடுங்கோல் ஆட்சி பற்றிய முறையீடுகள், சிரியாவில் இருந்த உரோமை பிரதிநிதிக்கு எட்டின. அதனால் இவன் உரோமைக்குத் திருப்பி அழைக்கப்பட்டான். அதன் பின் இவனைப் பற்றி வரலாறு பேசவில்லை, வாய் மூடிக்கொண்டது!
திருச்சபையின் முதல் வரலாற்று ஆசிரியரான யூசெபியூஸ்(Eusebius) சில தகவலகளைத் தருகிறார். அவற்றுக்குச் சரித்திர ஆதாரம் ஏதும் இல்லை. அவர் தரும் தகவல்படி, கி.பி 37 – 41 -இல் கலிகூலாவின் ஆட்சிக் காலத்தில் பிலாத்துவின் அதிகாரம் சரிந்தது, சிதைந்தது! கோல்(Gaul = la France) நாட்டுக்கு அவன் நாடு கடத்தப்பட்டானாம். அங்கே, வியன் என்ற ஊரில் தற்கொலை செய்துகொண்டதாக அவர் குறிப்பிடுகிறார்.
வேறு சில செவி வழிச்செய்திகள் : அவன் உடல் (இத்தாலி நாட்டு) தைபர் நதியில் எறியப்பட்டதாகவும், தீய ஆவிகளின் பேயாட்டத்தால் அந்த நதியின் நீர் பாதிக்கப்பட்டதால், அவனுடைய உடலை மீட்டெடுத்து வியன் நகரில் ரோன் நதியில் ஆழ்த்தினார்களாம்! அங்கே உள்ள பிலாத்துவின் கல்லறையை இன்றைக்கும் காணலாமாம். அந்த நதியின் நீரும் அவன் சடலத்தை ஏற்றுக்கொள்ளவில்லையாம்! அதனால் மீண்டும் அதனை மீட்டுச் சுவிசில் உள்ள லொசான் நகர் ஏரியில் அமிழ்த்தினார்களாம்!
மறுபடி அங்கிருந்தும் மீட்டு எடுத்த அவன் சடலத்தை லுசெர்ன் மலைப் பகுதியில் உள்ள ஆற்றில் இறுதியாக அடக்கம் செய்தார்களாம். ஒவ்வொரு புனித வெள்ளியின் போதும், அவன் சடலம் நீரிலிருந்து எழுந்து தன் கைகளைக் கழுவிக் கொள்வதாக ஓர் ஐதிகம் நிலவுகிறது. (மாசற்ற இயேசுவின் ரத்தப் பழிக்கும் தனக்கும் தொடர்பில்லை என எண்பிக்கத் தன் கைகளைக் கழுவி அவரைக் கைகழுவிவிடுகிறான் பிலாத்து! இதனை மத் 27 : 24 இல் காண்க).
இவனுடைய மனைவி பற்றிய குறிப்பு ஒன்றைப் புனித மத்தேயு தம் நற்செய்தியில் அதிகாரம் 27 திருவசனம 19 -இல் தருகிறார் ; ”பிலாத்து நடுவர் இருக்கையின் மீது அமர்ந்திருந்தபோது, அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, ”அந்த நேர்மையாளான் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர் பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்” என்று கூறினார்.’
ஆனால் புனித மத்தேயு அவன் மனைவி பெயரைக் குறிப்பிடவில்லை. அந்த அம்மாள் பெயர் குளோதியா புரோகுயுலா(Claudia Procula) எனச் செவிவழிச் செய்திகளால் அறிகிறோம். எம்பெருமான் இயேசுவுக்குச் சார்பாகப் பேசிய காரணத்தால், கீழ்த்திசைத் திருச்சபையில் குளோதியா புரோகுயுலா புனிதவதியாகக் கொண்டாடப்படுகிறார். மாசற்ற இயேசுவுக்குத் தான் விதித்த மரண தண்டனையை நினைத்து நினைத்து மனம் மறுகிய பிலாத்து தற்கொலை செய்துகொண்டதாகக் கீழ்த்திசைத் திருச்சபை குறிப்பிடுகிறது.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
பாடுகளின் பாதையிலே போஞ்சு பிலாத்து!
Posted by
Christopher