நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே இரையாவாய் என்பதை சற்றே நினைத்துப் பார். ஒரு நாள் வரும், அன்று நீ இறப்பாய்? உன் உடல் கல்லறையில் புதைக்கப்படும். அங்கே புழுத்து நாறி, புழுக்களே உன்னை உடல் முழுக்க மூடிக் கொள்ள செல்வந்தன், ஏழை, அரசன், அடிமை என எல்லோருக்குமே வரும் முடிவு இப்படி ஒரே மாதிரிதான் இருக்கும். உன் உடலை விட்டுப் பிரிந்த ஆத்துமம் உடனே தனக்கு விதிக்கப்படும் முடிவில்லாத இடத்துக்குப் போய்ச் சேரும். உடல் சாம்பலும் தூசுமாகிவிடும். இந்தக் காட்சி உன் இருதயத்தில் நன்றாய் பதியட்டும்.
இரண்டு நிமிடத்துக்கு முன்னே செத்துக் கிடத்தியிருக்கிற ஒரு மனிதனை உன் கண்முன்னே கிடத்தியிருப்பதாக கற்பனை செய்து கொள். உற்றுப் பார். செத்த உடல் இன்னமும் கட்டிலில் கிடக்கி றது. பார்? தலை கவிழ்ந்து நெஞ்சின் மேல் விழுந்து கிடக்கிறது. தலை மயிரெல்லாம் தாறுமாறாய் சிதறி விரிந்து சாவின் வியர்வை இன்னும் உலர்ந்து போகாமல் நனைந்து இருக்கின்றது. கண்ணிரண்டும் உள்ளிறங்கி விட்டன. இரு கன்னங்களும் குழி விழுந்து போயிற்று. முகம் வாடி வதங்கி சாம்பல் நிறமாய் மாறிவிட் டது. உதடுகளும் நாவும் திமிர்த்து மரத்து ஆடாமலும் அசையாமலும் இரும்பைப் போலாகிவிட்டன.
பார்த்கிறவர்களுக்கெல்லாம் அச்சமும், பயமும் உண்டா கின்றது. எத்தனையோ பேர் இறந்த தம் குடும்பத்தார் அல்லது நண்பர்களின் உயிரற்ற சடலத்தைக் கண்ட காட்சியினாலே தங்கள் வாழ்வையே மாற்றிக் கொண்டு உலகத்தையே வெறுத்து விட்டனர். இதுவே இறந்த உடலின் உண்மையான நிலையை படம் பிடித்துக் காட்டும் காட்சி. ஆனால், புழுத்து நாறத் துவங்கி விட்டால் அதைக் காண்பது இன்னும் அதிகப் பயங்கரமாயிருக்கும். இதோ இளமைத் துடிப்புள்ள வாலிபன் இறந்து இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை . இதற்குள் அந்த சடலத்திலிருந்து வீசும் துர்நாற்றம் சகிக்கக் கூடியதாக இல்லை . கதவுகள், சன்னல்கள் எல்லாம் திறந்து விடுகிறார்கள். அதுவும் போதாது. சுகந்த வாசனை ஏற்படுத்தக்கூடிய தூபம், சாம்பிராணியை ஏராளமாய் எரிய விட்டுப் புகைய வைக்கிறார்கள்.
மேலும் வீட்டிலுள்ளவர்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படாதபடி கூடிய சீக்கிரம் அதை வீட்டிலிருந்து தூக்கிக் கொண்டு போய் மந்திரித்து கோயில் கல்லறையில் குழி வெட்டிப் புதைத்து விட ஏற்பாடு செய்கிறார்கள். இறந்தவன் பணக்காரனாகவோ அல்லது உலகில் புகழ் பெற்ற பெரும் செல்வந்தனாகவோ இருந்தாலும் கூட அவன் சடலத்தினின்று புறப்படும் துர்நாற்றம் எவராலும் சகிக்க முடியாத அளவுக்கு மிக அதிகமாய் வீசும். செல்வந்தனின் சடலம் அதிகம் துர்நாற்றம் வீசும் என்று ஓர் உன்னத அறிஞர் உறுதியாக எழுதியிருக்கின்றார்.
இதோ! அந்த பாக்கியமற்றவனுக்கு நேரிட்ட முடிவை சற்றே நினைத்துப் பார். முழுக்க ஆணவத்தோடும், சிற்றின்ப நாட்டங்களிலும் அவன் உழன்று திரிந்தான். அவனுடைய நண்பர்கள் அவனை அரைநிமிடம் கூட விட்டுப் பிரியாமல் இரவும் பகலும் தேடிக் கூடி உல்லாசமாகத் திரிந்தார்கள். இப்போது அவனை சற்றே ஏறிட்டுப் பார்க்கிறவர்கள் எல்லோருக்கும், மகா அருவருப்பும், அச்சமும் உண்டாகின்றது. அவனுடைய சொந்த உறவினர்களே அவனை வீட்டை விட்டு வெளியேற்ற மிக வேகமாய் அவசரப்படுத்துகிறார்கள். தாங்களே அதைச் செய்ய முடியாததால் ஆட்களுக்கு கூலி கொடுத்தாவது சவப்பெட்டியில் வைத்து தூக்கி கோயிலுக்குக் கொண்டுபோய் கூடிய சீக்கிரம் குழியில் உயிரோடிருக்கும்போது அவனுடைய கல்வித்திறமை, பெருமை, புகழ், செல்வம், செல்வாக்கு எல்லாம் எல்லாப் பக்கங்களிலும் பிரகாசித்து ஜொலித்தது. ஆனால், அவன் இறந்தபின் அவனை எல்லோரும் சீக்கிரம் மறந்து விடுவார்கள். தாவீது அரசர் திருப்பாடல்கள் நூலில் பாடியிருக்கிறபடி "ஓர் சத்தம் தொனித்து பின் ஓய்ந்து ஒழிந்து போகிறது போலவே, இவர்கள் நினைவும் ஒழிந்து போகும்" (திருப்பாடல்கள் 9:7).
அவன் இறந்த செய்தியை முதலில் கேட்டவுடனே சிலர் ஆ! அவன் தன் குடும்பத்துக்கு தங்க ஆபரணம் போல விளங்கினானே என்பர். வேறு சிலர் அவன் பிள்ளைகளுக்கு குறையொன்றும் வைக்கவில்லை, தேவையானதெல்லாம் தேடி வைத்து விட்டுத்தான் போயிருக்கிறான் என்பார்கள். ஐயோ! இந்தப் புண்ணியவான் எனக்கு எவ்வளவோ நன்மைகளை எனக்குத் தேவையான நேரங்களில் செய்தானே என்று சொல்லி சிலர் புலம்புவார்கள். நல்லது, அவன் காலம் முடிந்தது, அவன் சொத்தில் எங்களுக்கும் பங்கு கிடைக்கும் என்று சிலர் மகிழ்ச்சி கொள்வார்கள். சிறிது காலத்துக்குள் அவனைப் பற்றிப் பேசுபவர்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
ஆரம்பத்தில் அவனுடைய நெருங்கிய உறவினர்கள் அவனுடைய பெயரை யாரும் சொல்லி நினைவுபடுத்தாதபடி ''ஆண்டவரைக் குறித்து அவன் பெயரை யாரும் நினைவுபடுத்தாதீர்கள். எங்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிப் போட்டது போலிருக்கிறது. எங்கள் மனம் பொங்கி எரிகிறதே" என்பார்கள். ஆதலால் அங்கே துக்கம் கேட்க வருபவர்களும், அவனுடைய பெயரைச் சொல்லாமல் எச்சரிக்கையாய் இருப்பார்கள்.
நீ உனது உறவினர்கள், பிரியமானவர்களின் மரண காலங்களில் நடந்து கொள்வதைப் போலவே, உன் மரணத்துக்குப்பின்னும் மற்றவர்கள் நடப்பார்கள் என்பதை சற்றே நினைத்துப் பார். இறந்தவர் போன பின் வாழ்பவர்கள் தங்கள் காரியங்களைக் கவனிக்கத் துவங்குவார்கள். இறந்தவரின் சொத்தையும், அதிகாரத்தையும் மற்றவர்கள் அனுபவிப்பார்கள். அவரை நினைப்பவர்கள் யாருமில்லை. அவருடைய பெயரை உச்சரிப்பவர்களும் கிடையாது. ஆரம்பத்தில் சில காலம் அவருடைய சுற்றத்தார் துக்கப்பட்டு புலம்புவார்கள். அதன்பின் அவருடைய சொத்தில் தங்களுக்கு வரும் பங்கை அனுபவித்துக் கொண்டு ஆறுதல் அடைவார்கள்.
இவ்வாறு உன் மரணம் அவர்களுக்கு மகிழ்ச்சியாய் முடியும். உன் உயிர் விட்டுப் பிரிந்த அதே அறையிலேயே, உன் ஆத்துமம் எல்லாம் வல்ல நீதியுள்ள கடவுளாகிய இயேசுகிறிஸ்துவினால் தீர்ப்பிடப்பட்ட அதே இடத்திலேயே மற்றவர்கள் எல்லோரும் கூடி உண்டு குடித்து ஆடிப்பாடி கொஞ்சிக் குலாவி நகைத்து முன்போலவே உல்லாசமாக விளையாடுவார்கள். அப்போது உன் ஆத்துமம் எங்கேயிருக்கும்?
செபம்: நேசப் பற்றுதல்
ஓ என் இயேசுவே என் இரட்சகரே! பாவத்தால் நான் உமக்குத் துரோகம் செய்த வேளையில் என்னை நீர் இந்த உலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளாமல் இன்னமும் காப்பாற்றி வைக்க கருணை கூர்ந்ததற்காக அடியேன் நன்றியறிந்த தோத்திரம் புரிகின்றேன். அதுமுதல் இதுவரையும் எத்தனையோ ஆண்டுகள் நான் (முடிவில்லாத நரக நெருப்பில் கிடந்து எரிவதற்கு ஆளாகி விட்டேனே. இந்த நாளில் இன்ன நேரத்தில் நான் இறந்திருந்தால் ஐயோ ஆண்டவரே எக்காலத்துக்கும் என் கதி என்னவாகி - யிருக்கும்? ஆண்டவரே, ஆயிரம் முறையும் உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கின்றேன்.
இனிமேல் எனக்கு நீர் கட்டளையிடும் மரணத்தை என் பாவங்களுக்குப் பரிகாரமாக ஏற்றுக் கொள்கிறேன். எந்த விதத்தில் எந்த இடத்தில் நான் இறக்க தேவரீர் சித்தமாய் இருக்கின்றீரோ, அதற்கெல்லாம் மனமுவந்து உடன்படுகிறேன். ஆண்டவரே! நீர் இதுவரையிலும் என்னிடத்தில் பொறுமையாய் இருந்தபடியால், இன்னமும் சிறிது காலமும் பொறுமையாயிருந்து என் பாவங்களுக்காக நான் அழுது புலம்பி மனஸ்தாபப்பட அவகாசம் கொடுப்பீராக. தேவரீர் எனக்குத் தீர்ப்பிடும் முன்னே நான் செய்த தீமைகள் அக்கிரமங்களுக்கு மனஸ்தாபப்படுவதற்காக கொஞ்சம் கால அவகாசத்தை கட்டளையிட்டருள்வீராக.
ஆண்டவரே! உமது குரலுக்கு நான் இனியும் செவிகொடாதிருக்க மாட்டேன். நான் இப்போது வாசித்த இந்த வார்த்தைகளே தேவரீர் எனக்குச் செய்யும் கடைசி எச்சரிக்கையாகவும் இருக்கக் கூடுமே. இன்னமும் நீர் என் மீது இரக்கமாயிருக்க நான் தகுதியற்றவனென்று உண்மையாகவே ஒப்புக் கொள்கிறேன். எத்தனையோ முறை என் பாவங்களுக்கு மன்னிப்பை அளித்தீர். அப்படியிருந்தும் திரும்பத் திரும்ப நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்தேனே. ஆயினும் ஆண்டவரே, மனஸ்தாபப்பட்டு தாழ்ச்சியோடு உம்மிடம் திரும்பி வரும் ஒரு பாவியை நீர் தள்ளிவிட மாட்டீர் என்பது உண்மை என்பதால் மனஸ்தாபத்தோடு உமது பாதத்தில் விழுந்து கிடக்கும் உமது துரோகியான என்மேல் சற்றே மனமிரங்குவீராக.
அணை கடந்த பேரிரக்கமுள்ள ஆண்டவரே, பாவியான அடியேனை புறக்கணித்து விடாதேயும். "என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளி விட மாட்டேன்'' (யோவான் 6:37) என்று திருவுளம் பற்றியிருக்கின்றீரே. மற்றவர்களைக் காட்டிலும் நான் உமக்கு அதிகமாகத் துரோகம் செய்தேன் என்பது உண்மைதான். ஏனெனில் நீர் எனக்கு அதிக அருட்கொடைகளையும், ஞான ஒளிகளையும் ஏராளமாக அளித்திருக்கின்றீர். என் நன்றிகெட்டதனம் மிகக் கொடியதாக இருந்தபோதிலும், தேவரீர் எனக்காக சிலுவையில் சிந்திய திரு இரத்தமானது, நான் மனஸ்தாபப்பட்டால் எப்படியும் மன்னிப்பை அடைய முடியும் என்ற நம்பிக்கையையும், தைரியத்தையும் உண்டாக்குகிறது.
எல்லாம் வல்ல என் இறைவா! உமக்கு நான் துரோகம் செய்ததற்காக என் முழு இருதயத்தோடு மனஸ்தாபப்பட்டு பொறுத்தலைக் கெஞ்சிக் கேட்கிறேன். பொறுத்தருளும் ஆண்டவரே, பொறுத்தருளும். இனிமேல் எப்போதும் நான் உம்மை நேசிக்கும் பாக்கியத்தை எனக்கு அருள்வீராக. இதுவரை நான் உமக்கு துரோகியாய் இருந்தது போதும். இன்னும் எனக்கு மீதமிருக்கிற காலத்தினை உமக்குத் துரோகம் செய்வதில் அல்ல, அவற்றிற்காக அல்லும் பகலும் அழுது மனஸ்தாபப்படவும், அளவில்லாத அன்புக்குப் பாத்திரமான கடவுளை மாறாத முழு இருதயத்தோடு நேசிப்பதில் செலவழிக்கவும் விரும்புகிறேன்
மரியாயே! என் மாதாவே, என் நம்பிக்கையே! எனக்காக உம் நேச இயேசுவிடத்தில் வேண்டிக் கொள்வீராக.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
மரணப்படுக்கையில் கிடக்கும் உடல்!
Posted by
Christopher