செவ்வாய்க்கிழமை காலைச் செபம்

தேவ ஆராதனை

நம்மைப் படைத்துக் காத்து இரட்சித்துப் பரிபாலனம் செய்துவரும் பிதா சுதன் இஸ்பிரித்து சாந்து என்னும் பரம் திரித்துவத்திற்கு எல்லாப் படைப்புகளாலும் அனவரதகாலம் ஸ்துதியும் தோத்திரமும் உண்டாகக்கடவது. திரி.

தளங்களுக்குக் கர்த்தரான தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தராயிருக்கிறார். அவரது மகிமைப் பிரதாபத்தால் பூமி நிரம்பியிருக்கின்றது. பிதாவுக்கும் ஸ்தோத்திரம் சுதனுக்கும் ஸ்தோத்திரம், இஸ் பிரித்து சாந்துவுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

இதோ இராக்காலம் தனது திரையை மடக்கிக்கொண்டு மறைய, விடியற்காலம் வர, காலைக் கிரகம் கம்பீரமாய்த் தோன்றப் போகின்றது. இதோ உமது கைப் படைப்பாகிய நான் படுக்கையை விட்டெழுந்து பயபக்தி வணக்கமுற்று இருகரங் குவித்து ஆத்தும் சரீர ஒடுக்கத்தோடு உமது தெய்வச் சந்நிதியில் வருகிறேன்.

சுயம்பு அநாதி அசரீரியே மட்டற்ற நன்மைக் கடலே , சர்வ வியாபியே, சர்வ லோக சிருஷ்டிகராய் இருக்கின்ற என் தேவனே, வானத்தில் சந்திரன், சூரியன், நட்சத்திரங்களும், பூமியில் மலைகள், சமுத்திரம் முதலிய காரியங்களும் தேவரீருடைய மகிமையைக் காட்டிக் கொண்டிருப்பதை நான் பார்த்தும், நான் ஆத்துமத்திலும், சரீரத்திலும் கொண்ட நன்மைகளை யோசித்தும் உள் நடுக்கங் கொண்டு உமது பாதத்தில் விழுந்து உடம்மைப் போற்றிப் புகழ்ந்து நமஸ்கரித்து நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன்.

பரலோகத்தில் சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் உம்மை வாழ்த்தி ஸ்துதிக்கிறாப்போல நானும் செய்ய ஆசிக்கிறேன். இந்நாளிலும் என்னை உலகில் வைக்கச் சித்தமான கடவுளே! சகல பரிசுத்தத் தனத்திற்கும் ஊருணியே, உலகில் உமக்குச் செய்யப்படும் பலிகளையும் செபங்களையும் கண்டு களிகூறுகிறேன்.

இரவையும் பகலையும் உண்டுபண்ணி, இருளை விட்டு ஒளியைப் பிரிக்கிற சர்வேசுரா, நான் இன்று பாவங்களினின்று விலகி பாச மாயைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு எனக்கு நீர் தந்த ஆத்தும சரீரப் பலன்களால் கூடுமானமட்டும் நான் உம்மோடு ஐக்கியமாகி எனது நினைப்பு சித்தம் கிரியைகள் யாவற்றையும் உமக்கு ஒப்புக் கொடுத்து உமது கற்பனைகளை பூரணமாய் அனுசரித்து உமக்கு இன்று நல்ல ஊழியம் செய்ய வெகு ஆசையாயிருக்கிறேன்.

அநித்தியமான காலத்தில் என் பொறிகளாலும் பசாசின் தந்திரங்களாலும் உலக மாயைகளாலும் நான் மோசம் போகாமல் உமது பிரகாசக் கதிரைத் தாராளமாய் எனக்குத் தந்தருளும். இரவு போய்ப் பகல் வந்தது போல் நான் உமது இஷ்டப் பிரசாதத்தைக் கொண்டு பாவத்தை முழுதும் விட்டுப் புண்ணிய பாதையில் நடக்க உமது ஒத்தாசையைக் கட்டளை செய்தருளும் சுவாமி. நீர் எனக்குக் கொடுத்த தத்துவங்களை நான் காலத்தில் நன்றாய்ப் பயிற்சி செய்து உம்மால் வரும் சாமர்த்தியத்தால் பரலோகம் வந்துசேர அனுக்கிரகம் செய்தருளும்.

மாதா வணக்கம் 

எப்போதும் கன்னிகையே, தேவ மாதாவே, பரலோக பூலோக இராக்கினியே, இந்தக் காலை நேரத்தில் மெத்த பக்தி வணக்கத்துடனே இருகரங் குவித்து எனக்குள் ஒடுங்கி உமக்கு விசேஷ ஆராதனை செய்கிறேன். வேத பொக்கிஷங்களைக் கொண்ட நாயகியே, அக்கினியொத்த தேவசிநேகத்தாலும் அத்தியந்த தாழ்ச்சியாலும் தேவ வரப்பிரசாதங்களாலும் நிரம்பிய தாயே , மாசின்றிப் பிறந்து மனுக்குலத் தவிப்பை நீக்க உலக இரட்சகரைப் பெறப் பாக்கியம் பெற்ற ஆண்டவளே, இன்று நான் உலகில் சஞ்சாரம் செய்த என் கிரியைகளை நடத்தும்போது நான் காமக்குரோதம், வெகுளி, மயக்கம் எனப்பட்ட தோஷ மாயைகளில் மாட்டிக்கொண்டு என்னை உண்டுபண்ணின் சுவாமிக்குத் துரோகியாய்ப் போகாமல் இன்று நான் தாழ்ச்சி, பொறுமை, தேவசிநேகம், பிறர் சிநேகம் கொண்டு, உலகம் பசாசு இதே முதலிய சத்துருக்களைச் செயித்து, அறநெறியில் உயர எனக்காக உமது திருக் குமாரனை வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சியசிஷ்டவர்களின் வணக்கம் 

கண்களின் பாச விகாரங்களையும், சரீர பாச விகாரங்களையும், சீவிய பாச விகாரங்களையும் விரத்தத்துவத்தோடு வென்ற மோட்சவாசிகளான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, நீங்கள் சர்வேசுரனுக்கு உகந்தவர்களாயிருப்பதனாலே நான் இன்று என் கடமைகளைச் செய்கையில் ஐம்புலன்களின் தந்திரங்களாலும், பசாசின் சோதனைகளாலும் வரும் பொல்லாப்புகளினின்று விலகி, நான் வழக்கமாய் விழும் பாவங்களில் விழாமல் அனல் கொண்ட தேவ நேசங்கொண்டு, நேரிடும் வருத்தங்களைத் தைரியத்தோடும் விசுவாசத்தோடும் செயித்து நித்திய காலத்திற்குப் பெறவேண்டிய பேறுகளைப் பெற எனக்காக ஆண்டவரை வேண்டிக் கொள்ளுங்கள். என் காவலான சம்மனசானவரே, என்னை உண்டுபண்ணிக் காப்பாற்றி எண்ணிறந்த உபகாரங்களைச் செய்துவரும் சர்வேசுரனுக்கு என் துர்ப்பழக்கத்தாலும், பாச விரைவாலும், நான் மோசஞ் செய்யாமல் ஒறுத்தல், உபவாசம், செபதவம், நற்கிரிகை, தயை, பொறை இவை முதலிய புண்ணியங்களால் நான் அவருக்குப் பிரியப்பட எனக்காக அவரை வேண்டிக்கொள்ளும்.

பின் கர்த்தர் கற்பித்த செபம், அருள் நிறைந்த மந்திரம், விசுவாச மந்திரம், பத்துக் கற்பனை, உத்தம மனஸ்தாப மந்திரம் சொல்லவும்.

சேசுவின் திவ்விய இருதயமே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்.

முப்பத்து மூன்று மணிச் செபம் செய்கிறது.

அர்ச். சம்மனசுகளின் பிரார்த்தனை 

சுவாமி கிருபையாயிரும். மற்றதும், 

சம்மனசுகளுடைய இராக்கினியாயிருக்கிற அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். பத்திச் சுவாலர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். ஞானாதிக்கர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். பத்திராசனர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். நாதகிருத்தியர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். சத்துவகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். பலவத்தர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். பிராதமிகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். அதிதூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். தூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய மக்களுக்கு எப்போதும் பரிபாலகராயிருந்த அர்ச். மிக்கேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

லூசிப்பேரையும் அவனைச் சேர்ந்த கெட்ட சம்மனசு களையும் நரகத்தில் தள்ளின அர்ச். மிக்கேலே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரம காட்சியைத் தனியேல் என்பவருக்கு வியாக்கியானம் செய்த அர்ச். கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஸ்நாபக அருளப்பருடைய பிறப்பையும் தொழிலையும் சக்கரியாஸ் என்பவருக்கு முன்னறிவித்த அர்ச். கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய சுதன் அவதாரத்தைக் கன்னிமரியம்மாளுக்கு அறிவித்த அர்ச். கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புண்ணிய ஆத்துமாவான தோபியாாசைத் திரு யாத்திரையாய்க் கூட்டிக்கொண்டுபோய் மறுபடி கூட்டிவந்த அர்ச். இரஃபாயலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சாராள் என்பவளைப் பசாசின் சோதனையில் நீக்கி இரட்சித்த அர்ச். இரண்டாயலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பெரிய தோபியாசுக்குப் பார்வையை மறுபடி தந்தருளின் அர்ச். இரஃபாயலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உன்னத சர்வேசுரனுடைய மகிமைச் சிங்காசனத்தைப் புடை சூழ்ந்திருக்கிற அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

"பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று என்றென்றைக்கும் சர்வேசுரனை ஸ்துதிக்கிற அர்ச். சம்மனசுகளே, எங்க

விண்ணகத்திலே இருக்கிற சர்வேசுரனுடைய சுன்னி தானத்தை இடை நி...ITIல் தரிசித்துக்கொண்டிருக்கிற அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மனுமக்களை விசாரித்துக் காப்பதற்கும் செவ்வழியில் நடத்துவதற்கும் சர்வேசுரனால் கட்டளைப் பெற்றிருக்கிற அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சொதோம் நகரத்தாரைக் குருட்டாட்டத்தினால் தண்டித்த அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துஷ்ட அவிசுவாசிகளினின்று லோத்தென்பவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மீட்டுக் காப்பாற்றின் அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

யாக்கோபென்பவரைச் சகல பொல்லாப்புகளிலிருந்து தப்புவித்தருளின அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

யாக்கோபென்பவர் காட்சியிற் கண்ட ஏணியிலே ஏறியும் இறங்கியும் இருந்த அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மோயீசனுக்குத் தேவ கற்பனைகளைக் கொடுத்தருளிய அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலக இரட்சகர் பிறந்த சமயத்தில் சர்வேசுரனுக்கு ஸ்துதியும் மனிதர்களுக்குச் சமாதானமும் உண்டாகக்கடவதென்று வாழ்த்திப் பாடிய அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தந்திரஞ் செய்கிற பசாசு நீங்கினவுடனே ஆரணியத்தில் சேசு நாதருக்குப் பணிவிடை புரிந்த அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பூங்காவனத்தில் மரண அவஸ்தைப்பட்ட சேசுநாதருக்கு ஆறுதல் சொல்லிய அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவருடைய கல்லறையிடத்தில் தூய வெள்ளாடையை அணிந்தவர்களாய்க் காணப்பட்ட அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவர் மோட்சத்திற்கு ஆரோகணமாகிறபோது அவருடைய சீடர்களுக்குத் தரிசனையான அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதர் மிகுந்த மகிமை பிரதாபமாய் நடுத்தீர்க்க எழுந்தருளி வரும்போது அவரைப் புடைசூழ்ந்துவரும் அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அந்தச் சமயத்தில் அவருக்கு முன் சிலுவைக் கொடியை ஏந்தி வரப்போகிற அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போது நல்லோர்களையும் தீயோர்களையும் பிரிக்கப் போகிற அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேண்டிக்கொள்ளுகிறவர்களுடைய மன்றாட்டுகளைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிற அர்ச், சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பச்சாத்தாபப்படுகிற பாவியின் பேரில் ஆனந்த சந்தோஷம் கொள்ளுகிற அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மரண சமயத்தில் எங்களுக்கு உதவியாயிருக்கிற அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அபிரகாமின் மடியில் இலாசரைக் கூட்டிக்கொண்டுபோய் வைத்த அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல பாவ தோஷங்களை நிவர்த்தித்த புண்ணியாத்து மாக்களை மோட்சத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிற அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ வல்லப வரத்தால் பற்பல அற்புதங்களையும் அதிசயங் களையும் தங்கள் இரட்சண்ணிய சுதந்தரத்தைப் பற்றிக்கொள்ளு கிறவர்களுக்கு உதவிக்காரராய் அனுப்பப்படுகிற பராமரிப்புள்ள அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிற தேவ ஊழியர் களாகிய அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இராச்சியங்களுக்கும் நாடுகளுக்கும் பரிபாலகர்களாக ஏற்படுத்தப்பட்டிருக்கிற அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அநேக முறை சத்துருக்களுடைய சேனைகளைத் தோற்கடித்த அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிறைச்சாலைகளிலும் மற்றப் பற்பல ஆபத்துகளிலும் சர்வே சுரனுடைய அடியார்களை மீட்டுக்கொண்ட அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேதனைகளில் வேதசாட்சிகளுக்கு அடிக்கடி ஆறுதலா யிருந்த அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருச்சபையை ஆளுகிற குருப்பிரசாதிகளை மிகுந்த பட்சத் தோடு பராமரிக்கிற அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நவவிலாச சபைகளாய்ப் பகுக்கப்பட்டிருக்கிற சகல அர்ச். சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல பொல்லாப்புகளிலிருந்து உம்முடைய பரிசுத்த சம்மனசுகளால் எங்களை இரட்சித்துக்கொள்ளுஞ் சுவாமி.

பசாசினுடைய தந்திரங்களிருந்து உம்முடைய பரிசுத்த சம்மனசுகளால், எங்களை இரட்சித்துக்கொள்ளுஞ் சுவாமி.

சகல பாவங்களிலிருந்து உம்முடைய பரிசுத்த சம்மனசுகளால், எங்களை இரட்சித்துக்கொள்ளுஞ் சுவாமி.

பிரிவினையிலும் பதிதத்தனத்திலிருந்து உம்முடைய பரிசுத்த சம்மனசுகளால், எங்களை இரட்சித்துக்கொள்ளுஞ் சுவாமி.

கொள்ளை நோய் பஞ்சம் படையிலிருந்து உம்முடைய பரிசுத்த சம்மனசுகளால், எங்களை இரட்சித்துக்கொள்ளுஞ் சுவாமி.

ஆயத்தம் இல்லாமல் திடீரென வருகிற துர்மரணத்திலிருந்து உம்முடைய பரிசுத்த சம்மனசுகளால், எங்களை இரட்சித்துக்கொள்ளுஞ் சுவாமி.

நித்திய மரணத்திலிருந்து உம்முடைய பரிசுத்த சம்மனசுகளால், எங்களை இரட்சித்துக்கொள்ளுஞ் சுவாமி.

பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உம்முடைய அர்ச். சம்மனசுகள் மூலமாகத் தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் பாவங்களைப் போக்கியருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்களுக்குத் தயை செய்து எங்களை இரட்சித்தருள் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உமது திருச்சபையை ஆளவும் பாதுகாத்தருளவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அர்ச். பாப்பு முதலான அதிசிரேஷ்ட ஆயர்களையும் ஆகம சபையில் உட்பட்ட, மற்றச் சகல குருக்களையும் சந்நியாசிகளையும் தற்காத்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சத்தியவேத இராசாக்களுக்கும் பிரபுக்களுக்கும் சனங் களுக்கும் சமாதானத்தையும் சரியான ஒற்றுமையையும் தந்தருள் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பூமியில் நல்ல பயிர் விளைவின் பலன் தந்து காப்பாற்ற வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மரணம் அடைந்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் மரண சமயத்தில் உம்முடைய சம்மனசுக்களை எங்களிடத்தில் அனுப்பியருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மரணத்துக்குப்பின் எங்கள் ஆத்துமங்களைப் பரிசுத்த சம்மனசுக்கள் மூலமாக ஏற்றுக்கொள்ளவும் அவைகளுக்கு நித்திய பேரின்ப பாக்கியத்தைத் தந்தருளவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சர்வேசுரனுடைய சுதனே தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற - மற்றதும்.

சேசுகிறீஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத்தக்கதாக, முத்தரான பரிசுத்த சம்மனசுகளுடைய சகலவித சபைகளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

பிரார்த்திக்கக்கடவோம்

தயாபரரான சர்வேசுரா, மனோ வாக்குக் கெட்டாத தேவாதீன் பராமரிப்பினால் எங்களைக் காத்து நடத்த உம்முடைய பரிசுத்த சம்மனசுகளை அனுப்பியருளுகிறீரே, உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது. தேவரீரை மன்றாடுகிற அடியோர்கள் இவ்வுலகத்தில் அவர்களுடைய ஆதரவினால் காப்பாற்றப்பட்டு உமக்கும் அவர்களுக்கும் பிரியப்படச் அடக்கத்துடன் பக்தியாய் நடக்கவும் மோட்சத்தில் அவர்களோடு உம்மை அநவரத காலம் ஸ்துதித்து வாழ்த்தவும் கிருபை செய்தருளும் சுவாமி.

ஆமென்சேசு.