(இது விக்கிபீடியா மற்றும் இணையத்தள தகவல்களின் துணையோடு எழுதப்பட்டது)
அன்னையாம் திரு அவையின் புனிதர்கள் வரிசையில் கி.பி. 256ம் ஆண்டு பிறந்த புனித செபஸ்தியார் புனிதரும், மறைசாட்சியுமாவார். விசுவாசத்தைக் கட்டிக்காக்க வீர மரணமடைந்து, விண்ணுலகப் பேரின்ப வாழ்வை தனதாக்கிக் கொண்ட வீரப் பெருமகன் புனித செபஸ்தியார் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த நர்போன் நகரில் பிறந்து, இத்தாலியிலுள்ள மிலான் நகரில் வளர்ந்தார். உரோமப் பேரரசன் எனப்படும் தியோக்கிளேசியன் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகளில் மறைசாட்சியாக இறந்தார்.
புனித செபஸ்தியாரின் மறைசாட்சியம் முதன் முதலில் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அம்புரோசு என்னும் மிலன் நகர ஆயரின் மறை உரைகளில் காணக்கிடைக்கிறது. இதன்படி செபஸ்தியாரின் பக்தி மிலன் நகரின் 4ம் நூற்றாண்டிலேயே இருந்துள்மை தெரிகிறது.
புனித செபஸ்தியார் அன்னை மரியாளைத் தாயாகவும் இயேசு கிறிஸ்துவைத் தன் அரசராகவும் கொண்டு திருத்தந்தைக்கு அன்பு மகனாக விளங்கினார். தன் பட்டங்களையும் பதவிகளையும் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட ஏழைகளுக்கும், சிறையில் அடைக்கப்பட்டவர் களுக்கும் அடிமைகளுக்கும் ஆதரவளித்து வந்தார் என அவரது வரலாறு தெரிவிக்கிறது.
கிறிஸ்துவுக்குப் பின் சுமார் 283 ஆண்டில் உரோமைப் பேரரசன் கறினுசின் படையில் செபஸ்தியார் சேர்ந்து, சிறந்த ஒரு படைவீரன் ஆனார். கத்தோலிக்க மதத்திற்காக சிறைக் கூடங்களிலே அடைபட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்த விசுவாசிகளை சந்தித்தார். அன்பொழுக அவர்களுக்கு ஆறுதல் கூறி, கிறிஸ்துவின் அன்பைக் காட்டி, விசுவாசத்தில் அவர்கள் நிலைத்து நிற்கச் செய்தார்.
கிறிஸ்தவர்களுக்குத் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல் பரிந்த புனித செபஸ்தியார் தனது உயர் பதவியையும், உடைமை களையும் பெரிதென எண்ணவில்லை.
சிறையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மாற்குஸ், மார்செல்லியானுஸ் என்ற இரு சகோதரர்கள் விசுவாசத்தில் தத்தளித்துக் கொண்டிருந்ததை அறிந்த செபஸ்தியார், அவர்கள் இருந்த சிறைக்கு சென்று விசுவாசத்தில் அவர்கள் நிலைத்து நிற்கும்படி செய்தார்.
சோயே என்னும் பெயர்கொண்ட ஒரு ஊமைப் பெண், புனித செபஸ்தியாரின் பாதங்களைப்பற்றி ஆறு ஆண்டுகளாக பேசாமடந்தையாக இருக்கும் தனக்கு பேசும் வரத்தைப் பெற்றுத் தருமாறு வேண்டினாள். புனிதரும் மனமிரங்கி அவளது வாயின்மேல் சிலுவை அடையாளம் வரையவே, அவளது வாயும் திறக்கப்பட்டு முன்ப போல் அவள் பேசத் தொடங்கினாள்.
புனிதர் தனக்கு வழங்கிய நன்மைக்கு நன்றிக் கடனாக சோயேயும் அவளது கணவரான நிக்கோஸ் கிராத்துஸ் என்பவரும் மனம்மாறி கத்தோலிக்கத் திருமறையைத் தழுவினார். மற்றும் மாற்குஸ், மார்செல்லியானுஸ் எனப்படுபவர்களின் மனைவி மக்களும், பெற்றோரும், சிறைக் காவலனான குளோத்தியுஸ் என்பவனும் இன்னமும் பதினாறு பேர்களும், மதம்மாற விரும்பி சிறை அதிகாரியான நிக்கோஸ் கிராத்துஸின் உதவியுடன் போலிகார்ப் என்னும் பரிசுத்த குருவை அணுகி ஞானஸ்நானம் பெற்றனர்.
உரோமைப் பேரரசன் கிரோமாசியுஸ் தன் சிறை அதிகாரியான நிக்கோஸ் கிராத்துஸ் ஞானஸ் நானம் பெற்றதன் காரணமாக அவனுக்கு இருந்த நோய் குணமடைந்ததைக் கேள்வியுற்று, அவனைப் போல் தானும் குணமடைய கத்தோலிக்க மறையைத் தழுவ எண்ணங் கொண்டதை அறிந்த செபஸ்தியார் அவனுக்கு திருமறை விளக்கமளித்து அவனது பிணியை அகற்றி அவனுக்கும் அவனது மைந்தனுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார்.
பேரரசர் தான் பெற்ற உடல்நலத்தின் நன்றிக் கடனாக சிறையில் அடைபட்டுக்கிடந்த கிறிஸ்தவர்களை உடனடியாக விடுவித்ததுமன்றி, தனக்கு அடிமை களாயிருந்த 1400 கிறிஸ்தவர் களையும் விடுவித்து தானும் அரசுக் கட்டிலை விட்டு இறங்கினான். கி.பி. 283 இல் தியோக்கிளேசி யன் உரோமைப் பேரரசனானான் புனித செபஸ்தியாரின் நற்பண்புகளையும், நெஞ்சுறுதியையும் கண்டு அவரைத் தனது மெய்காப்பாளராக்கினான்.
உரோமையெங்கும் வேதகலாபனை பயங்கர விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில், கிறிஸ்தவர்களைப் பேரரசரிடமிருந்து மீட்கவல்லவர் புனித செபஸ்தியாரே என்றனர். கிறிஸ்தவர்கள் திருச்சபையின் தலைவராயிருந்த காய்யுஸ் என்னும் திருத்தந்தையிடம் செபஸ்தியார் நேரில் சென்று அந்த புனிதப் பணிக்கு தன்னையே அர்ப்பணித்து நின்றார். ஆனால் திருத்தந்தை போலிகாாப் என்ற குருவை அனுப்பி, புனிதரை பேரரசரின் மெய்காப்பாளராக இருந்து கொண்டே கிறிஸ்தவர்களுக்காகப் பேராடுமாறு கேட்டுக்கொண்டார்.
286 இல் வேதகலாபனை உச்சக்கட்டத்தை அடைந்தது. பாப்பவும், சில கிறிஸ்தவர்களும் அரண்மனைக் காவலன் ஒருவனின் வீட்டில் மறைவாயிருந்தனர். பேசாமடந்தையாயிருந்து பின் செபஸ்தியாரால் பேசும் வரம் பெற்ற சோயே என்பவளை கிறிஸ்தவ எதிரிகள் நெருப்பில் போட்டு சுட்டெரித்தனர். அதைத் தொடர்ந்து மாற்குஸின் தந்தை திறங்குலினுசும் கல்லால் எறியப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார்.
நிக்கோஸ்கிராத்துஸ், குளோதியுஸ், கஸ்தோரியுஸ், விக்தோரினுஸ் போன்றோரை சித்திரவதைக்குள்ளாக்கி ஆழ்கடலில் தள்ளப் பட்டனர். மாற்குஸ், மார்செல்லியானுஸ் ஆகியோரைப் பிடித்து ஈட்டியால் குத்திக் கொன்றார்கள்.
பேரரசன், புனித செபஸ்தியாரும் ஒரு கிறிஸ்தவர் என்று இறுதியாக அறிந்து அவரைத் தன்முன் அழைத்து, நன்றி மறந்தவன் என்ற பழியை அவர் மீது சுமத்தி, அவரைக் கண்டித்தான். அதற்கு அவர், இறைவனை வாழ்த்தி, வணங்கி, அவரது திருவுளத் திற்கேற்பவே தான் நடப்பதாயும், அரசர்களின் சேம நலத்திற்காகவே தாம் பாடுபடுவதாயும் செபஸ்தியார் அமைதியாகக் கூறினார்.
இதைக் கேட்ட அரசன் கோபாவேசம் கொண்டு புனித செபஸ்தியாரை தூணில் கட்டி வைத்து அம்பால் எய்து கொல்ல ஆணை பிறப்பித்தான். அவ்வாறே காவலர் அவரை கம்பத்தில் கட்டி இரக்கமின்றி அவர்மீது அம்பால் எய்து அவர் இறந்தார் என்று தவறாக நினைத்துவிட்டார்கள்.
இரேனாள் என்னும் பெண் புனிதரை அடக்கம் செய்ய இரவில் வந்து பார்த்தபொழுது அவர் உயிரோடு இருப்பதனைக் கண்டு, வியப்பற்று செபஸ்தியாரைத் தன்வீட்டிற்கு இரகசியமாய் அழைத்துப் போய் சிகிச்சை செய்த தனால், அவர் மீண்டும் குணமடைந்தார்.
செபஸ்தியாரை மறைவாயிருக்கச் சொன்ன தையும் கேளாமல், அரசன் தியோக்கிளேசியான் கோவிலுக்குப் போகும் வழியில் நின்று, “பேரரசரே கிறிஸ்தவர்கள் மீது கோள் சொல்லும் புரட்டர் களின் வார்த்தைகளைக் கேட்டு நீர் மதியை இழக்கலாமா? கிறிஸ்தவர்களைவிட உமக்கு பிரமாணிக்கமுள்ள ஊழியர்கள் இல்லை யென்றும் அவர்களுடைய வேண்டுதலால் உமக்கு நன்மையே அதிகம் கிடைத்திருக்கிறதென்றும் அறிவீர்“ என்று சொன்னார்.
மமதை கொண்ட மாமன்னன் தியோக்கிளே சியான் தன்னால் அம்புகளுக்கு இரையாக்கிய மனிதன் தன்முன் நிற்பதைக் கண்டு வெகுண் டெழுந்து, செபஸ்தியாரை தடிகளால் அடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான். அப்படியே புனித செபஸ்தியார் கி.பி.288 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாளில் அடிக்கப்பட்டு இறந்து மோட்ச முடி பெற்றார். லூசினாள் என்பவள் புனிதரின் திருவுடலை இரகசியமாக எடுத்து, புனித இராயப்பர் சின்னப்பர் கல்லறை வாசற்படியின் அருகில் அடக்கம் செய்ததாக இப்புனிதரின் வரலாறு தெரிவிக்கிறது.