டாக்டர் C. ட்ரூமென் டேவிஸ்
(ஒரு மருத்துவர் இயேசுவின் சிலுவை மரணத்தைப் பற்றி ஆராய்கிறார். இந்த ஆராய்ச்சி முடிவுகள் "நியூ ஒயின் மேகஸீன்' என்ற பத்திரிகையின் 1982 ஏப்ரல் இதழில் வெளியிடப்பட்டன. அமெரிக்காவின் அரிஸோனா மருத்துவக் கழகத்தால் 1965 மார்ச்சில் இந்த ஆய்வு முடிவுகள் முதன்முதலாக வெளியிடப்பட்டன.)
கி.மு. 300-ஆம் ஆண்டில் சிலுவை மரணத் தண்டனை பெர்சியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, கி.மு. 100-ஆம் ஆண்டில் உரோமையர்களால் முறைப்படுத்தப்பட்டது.
1. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவற்றிலேயே அதிக வேதனை தரும் மரணம் இதுதான். இதிலிருந்துதான் "சிலுவையில் அறையப்படுவது போன்ற வேதனை'' என்ற பொருள் தரும் " excruciating pain" என்ற வார்த்தை உருவானது.
2. மிகக் கொடூரமான ஆண் குற்றவாளிகளுக்கென்றே இந்தத் தண்டனை தனிப்பட்ட முறையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
"இதுமுதல், இனி என் பிதாவின் இராச்சியத்தில் உங்களோடு நவமான (புதிய) திராட்சப்பழ இரசத்தை நான் பருகும் நாள் வரைக்கும், இதை நான் பானம் பருகுவதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்'' (மத்.26:29) என்ற தமது வாக்குறுதி நிறைவேறும்படியாக, உரோமைச் சேவகர்களால் தமக்குத் தரப்பட்ட வேதனையைக் குறைக்கும் திராட்சை இரசத்தை இயேசு சுவைபார்க்க மறுத்து விட்டார்.
3. இயேசுவின் ஆடைகள் உரியப்பட்டு, அவர் நிர்வாணமாக்கப்பட்டார். அவருடைய உடைகள் உரோமைக் காவலர்களால் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. "என் ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டு, என் அங்கியின்மீது சீட்டுப் போட்டார்கள்'' (சங்.21:18) என்ற சங்கீத தீர்க்கதரிசனம் இவ்வாறு நிறைவேறியது.
4. இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஒரு பயங்கரமான, மெதுவான, மிகுந்த வேதனையுள்ள மரணத்தை உறுதிப்படுத்தியது.
சிலுவையில் அறையப்பட்ட நிலையில், இப்போது இயேசு சாத்தியமேயில்லாத ஓர் உடலமைப்பு நிலையில் மூன்று மணி நேரம் இருக்க வேண்டியதாயிற்று.
5. இயேசுவின் முழங்கால்கள் ஏறத்தாழ 45 டிகிரி கோணத்தில் மடக்கப்பட்டிருந்தன. இதனால் தம் எடை முழுவதையும், தம் தொடைத் தசைகளைக் கொண்டே தாங்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் உள்ளானார். இது தொடை மற்றும் பின்னங்கால் தசைகளில் கடுமையான தசைநார்ச் சுளுக்கு ஏற்படாமல் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்கவே முடியாத ஓர் உடலமைப்பு நிலையாகும்.
6. இயேசுவின் பாதங்களை ஆணிகள் ஊடுருவியிருந்த நிலையில் அவை அவருடைய பாரத்தைத் தாங்க வேண்டியிருந்தது.
இயேசுவின் கீழ்நிலை அவயவங்களின் தசைகளின் பலம் சோர்வடைந்து விட்டதால், அவருடைய திருவுடலின் பாரம் முழுவதும் அவருடைய மணிக்கட்டுகள், மேற்கைகள், அவருடைய தோள்கள் ஆகியவற்றிற்கு மாற்றப்பட்டது.
7. சிலுவையின்மீது அறையப்பட்ட ஒரு சில நிமிடங்களில், இயேசுவின் தோள்களின் மூட்டுகள் பிசகி விட்டன. சில நிமிடங்களுக்குப் பிறகு இயேசுவின் முழங்கை மூட்டுகளும், மணிக்கட்டுகளும் பிசகி விட்டன.
8. இந்த மேல் அவயவங்களின் மூட்டுகள் பிசகியதன் விளைவாக அவருடைய மேற்கரங்கள் வழக்கத்தை விட ஒன்பது அங்குலங்கள் அதிக நீளமாகி விட்டன. அவருடைய புனித அடக்கத் துகிலில் (ட்யூரின்) இது தெளிவாகக் காணப்படுகிறது.
9. இத்துடன் தி.பா. 22:14-ல் உள்ள இறைவாக்கு நிறைவேறியது: "நான் தண்ணீரைப் போல சிந்தப்பட்டேன். என் எலும்புகள் எல்லாம் நெக்குவிட்டுப் போயின.''
10. இயேசுவின் மணிக்கட்டுகளும், முழங்கைகளும், தோள்களும் மூட்டுப் பிசகிப் போன பிறகு, அவருடைய மேற்புற அவயவங்களின்மீது சுமத்தப்பட்ட அவருடைய திருவுடலின் பாரம் அவருடைய உதர விதானம் என்னும் தசைச்சுவரின் பெரிய மார்புத் தசையின்மீது (Pectoralis Major) தசை இழுப்புகளை உண்டாக்கியது.
11. இந்தத் தசை இழுப்புகள் அவருடைய மார்புக்கூடு மிகவும் வழக்கத்துக்கு மாறான ஒரு நிலையில் மேலும் கீழுமாக இழுபடும்படி செய்தன. அவருடைய உதர விதானம் நிரந்தரமாக உச்சபட்ச சுவாச இழுப்பு நிலையில் இருந்தது. மூச்சை வெளியேற்றுவதற்கு, இயேசு தம் திருவுடலைக் கஷ்டப்படுத்த வேண்டியிருந்தது.
12. சுவாசத்தை வெளியேற்றுவதற்கு, இயேசு ஆணிகளின்மீது தன் பாதங்களை அழுத்தி, தம் உடலை மேல் நோக்கி எழுப்பி, அதன் மூலம் தம்முடைய மார்புக்கூட்டைக் கீழ்நோக்கியும், உள்நோக்கியும் நகர்த்த வேண்டியிருந்தது. இதன் மூலம் அவருடைய நுரையீரல்களில் இருந்து அவர் காற்றை வெளியேற்ற வேண்டியிருந்தது.
13. அவருடைய நுரையீரல்கள் இடைவிடாத உச்சபட்ச சுவாச இழுப்பின் ஓய்வு நிலையில் இருந்தன. சிலுவையில் அறையப்பட்டிருத்தல் என்பது ஒரு பயங்கரமான மருத்துவ ரீதியான பேரழிவு ஆகும்.
14. இதில் இருந்த பிரச்சினை என்னவெனில் இயேசுவால் ஆணிகளின்மீது தம் பாதங்களை எளிதாக அழுத்த முடியவில்லை, ஏனெனில், 45 டிகிரிகள் மடங்கிய நிலையில் இருந்த அவருடைய கால்களின் தசைகள், ஒரு கடுமையான தசைச் சுளுக்கினாலும், முற்றிலும் சாத்தியமேயில்லாத ஓர் உடலமைப்பு நிலையாலும் அளவுக்கு அதிகமாக சோர்ந்து போயிருந்தன.
15. இயேசு சிலுவையில் அறையப்படுதலைப் பற்றிய அனைத்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் காட்டப்பட்டதற்கு மாறாக, சிலுவையில் அறையுண்டவர் அளவுக்கு மீறி செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலையில் இருந்தார். சுவாசிப்பதற்காக அவர் உடல் ரீதியாக சிலுவையில் சுமார் 12 அங்குல தூரத்திற்கு தம் திருவுடலை மேலும் கீழுமாக நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது.
16. நினைத்தே பார்க்க முடியாத பயங்கரமாகிய மூச்சுத் திணறலோடு கலந்திருந்த இந்த அவருடைய சுவாச முறை மிக மிகக் கொடூரமான வேதனையை அவருக்குத் தந்தது.
17. இயேசு சிலுவையில் அறையப்பட்டதற்கும், அவர் மரணமடைவதற்கும் இடையே இருந்த மூன்று மணி நேரம் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தபோது, அவருடைய தொடைத் தசைகளும், பின்னங்கால் தசைகளும் மேலும் மேலும் அதிகமாக சோர்ந்து போய் விட்டதால், தம்முடைய கால்களின்மீது தம் பாரம் முழுவதையும் சுமப்பது மிக மிகக் கடினமாகிக் கொண்டே வந்தது.
அவருடைய மணிக்கட்டுகள், முழங்கைகள், மற்றும் தோள்களின் பிசகிய மூட்டுகள் மேலும் மேலும் விலகிக்கொண்டே வந்தன. இதனால் அவருடைய உதர விதானம் இன்னும் அதிகமாக மேலே உயர்த்தப்பட்டது. இது அவருடைய சுவாசத்தை மேலும் மேலும் அதிகக் கடினமாக்கியது. சிலுவையில் அறையப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே, இயேசு கடுமையான சுவாசக் குறைபாட்டு நிலைக்கு உள்ளாகி விட்டார்.
18. சுவாசிப்பதற்காக சிலுவையின் மீது மேலும் கீழுமாக அவர் தம் உடலை நகர்த்திக் கொண்டே இருந்தது, அவருடைய மணிக்கட்டுகளிலும், பாதங்களிலும், நெக்குவிட்ட முழங்கைகளிலும், தோள்களிலும் தாங்க முடியாத கடும் வேதனையை ஏற்படுத்தியது.
19. இயேசு மேலும் மேலும் மிக அதிகமாக சோர்வடைந்து விட்டதால், அவர் மேலும் கீழும் நகருவது குறைந்து விட்டது, ஆனால் மூச்சடைப்பின் காரணமாக மரணம் உடனே நிகழக்கூடிய பயங்கர நிலை, சுவாசிப்பதற்காக அவர் தம் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டேயிருக்க அவரை வற்புறுத்தியது.
20. சுவாசத்தை வெளியேற்றுவதற்காக இப்படி அவர் மிக அசாதாரணமான ஒரு கோணல் நிலையில் இருந்த தம் கால்களைக் கீழ்நோக்கி அழுத்தும் முயற்சியின் காரணமாக தாங்க முடியாத வேதனை தரும் தசைச்சுரிப்பு நிலை மேலும் அதிகரித்தது.
21. அவருடைய மணிக்கட்டுகளில் அறுந்து போயிருந்த மைய நரம்புகளின் வேதனையைத் தமது ஒவ்வொரு அசைவின்போதும் அவர் மிகக் கடுமையாக உணர்ந்தார்.
22. இயேசு இரத்தத்தாலும், வியர்வையாலும் மூடப்பட்டிருந்தார்.
23. இரத்தம், கிட்டத்தட்ட அவரைக் கொன்று விட்ட கசையடியின் விளைவாக இருந்தது. வியர்வை, அவருடைய நுரையீரல்களிலிருந்து காற்றை வெளியேற்ற அவர் செய்த வன்மையான, தன்னிச்சையான முயற்சிகளின் விளைவாக இருந்தது.
இதெல்லாம் நடந்துகொண்டிருந்த நேரம் முழுவதும், அவர் முழு நிர்வாணமாக இருந்தார். யூதர்களின் தலைவர்களும், மக்கள் கூட்டமும், இடப் பக்கக் கள்ளனும் அவரை ஏளனம் செய்து கொண்டும், ஆணையிட்டுக்கொண்டும், அவரைக் கண்டு பரிகாசமாக நகைத்துக்கொண்டும் இருந்தனர்.
இது தவிர, அவருடைய திருத்தாயாரும் கூட அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
24. உடலியக்க முறைப்படி, இயேசுவின் திருவுடல் வரிசையான பேரழிவு உண்டாக்குவதும், மரணத்தை விளைவிப்பதுமான நிகழ்வுகளுக்கு உள்ளாகிக்கொண்டேயிருந்தது.
25. தமது நுரையீரல்களுக்குப் போதுமான காற்றைத் தரவும் வெளியேற்றவும் இயேசுவால் இயலாததால், அவர் இப்போது இரத்தத்திற்கு ஆக்ஸிஜன் போதுமான அளவுக்குக் கிடைக்க முடியாத ஒரு நிலையில் இருந்தார்.
26. அவருடைய இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு வேகமாக இறங்கத் தொடங்கி விட்டது. இதனால் ஹைப்போக்ஸியா (இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவு நிலை) என்னும் நிலைக்கு உள்ளானார்.
இத்தோடு சேர்த்து, அவருடைய கட்டுப்படுத்தப்பட்டு விட்ட சுவாச அசைவுகளின் காரணமாக, அவருடைய இரத்தத்திலுள்ள கரியமில வாயுவின் (கார்பன் டையாக்ஸைடு – CO2) அளவு அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலை ஹைப்பர்காப்னியா எனப்படுகிறது.
27. இப்படி அதிகரிக்கும் கரியமில வாயுவின் அளவு, உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனைப் போதுமான அளவுக்குத் தருவதற்காகவும், கரியமில வாயுவை நீக்குவதற்காகவும் அவருடைய இருதயத்தை இன்னும் அதிக வேகமாகத் துடிக்கும்படிச் செய்தது.
28. இயேசுவின் மூளையிலுள்ள சுவாச மையமானது, அதிக வேகமாக சுவாசிக்கும்படி அவருடைய நுரையீரல்களுக்கு அவசரச் செய்திகளை அனுப்பியது. இயேசு மூச்சிரைக்கத் தொடங்கினார்.
29. இயேசுவின் உடலியக்க ரீதியான, தன்னிச்சையான அசைவுகள் அவர் ஆழமாக சுவாசிக்க வேண்டியதைக் கட்டாயமாக்கியது. அவர் தம் விருப்பமின்றியே, தமது மகா கொடூரமான வேதனைகளையும் மீறி, சிலுவையில் தொடர்ந்து அதிக வேகமாக மேலும் கீழும் ஏறியிறங்கிக் கொண்டிருந்தார்.
கடும் வேதனையால் இயேசுவைத் துடிதுடிக்க வைத்த இந்த தன்னிச்சையான அசைவுகள் ஒரு நிமிடத்திற்குப் பல தடவைகள் நடக்கத் தொடங்கின. இதைக் கண்ட மக்கள் கூட்டம் அக்களித்தது. அவர்கள் உரோமை வீரர்களோடும், யூத ஆலோசனைச் சங்க உறுப்பினர்களோடும் சேர்ந்து அவரைக் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
30. ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டிருந்ததாலும், வெகுவாய் அதிகரித்து விட்ட அவருடைய கடும் சோர்வாலும், ஆக்ஸிஜனைப் பெருமளவுக்கு இழந்து விட்ட தமது உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜனைத் தர முடியாதவராக அவர் இருந்தார்.
31. ஹைப்போக்ஸியா (மிகக் குறைவான ஆக்ஸிஜன்) மற்றும் ஹைப்பர்காப்னியா (மிக அதிகமான கரியமில வாயு) என்னும் இந்த இரட்டை விசைகள் அவருடைய இருதயத்தை மேலும் மேலும் அதிக வேகமாகத் துடிக்கச் செய்தன. இதனால் இருதயத் துடிப்பு பாதிக்கப்படும் நிலை அவரில் அதிகரித்தது.
32. இயேசுவின் இருதயம் மேலும் மேலும் மிக அதிகமாகத் துடித்தது. அவருடைய நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 220 என்ற அளவில் இருந்தது. இதுவே சாதாரணமாக மனிதன் தாங்கக் கூடிய உச்சபட்ச நாடித் துடிப்பு அளவாகும்.
33. இயேசு முந்தின மாலை 6 மணியிலிருந்து இது வரை 15 மணி நேரமாக எதுவும் பருகியிருக்கவில்லை. மேலும் கிட்டத்தட்ட அவரைக் கொன்று விட்ட ஒரு கொடுமையான கசையடியையும் அவர் தாங்கியிருந்தார்.
34. கசையடிகள், முள்முடி சூட்டப்பட்டது, தம் மணிக்கட்டுகளிலும் பாதங்களிலும் ஆணிகளால் அறையப்பட்டிருந்தது, அடிகள், வீழ்ச்சிகளால் ஏற்பட்ட காயங்கள் ஆகியவை காரணமாக அவருடைய உடல் முழுவதிலுமிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
35. இயேசுவின் உடலில் ஏற்கெனவே நீர்ச்சத்து குறைந்திருந்தது. அவருடைய இரத்த அழுத்தம் ஆபத்தான முறையில் குறைந்து விட்டது.
36. அவருடைய இரத்த அழுத்தம் அநேகமாக சுமார் 80/50 ஆக இருந்தது.
37. அவர் முதல் அதிர்வு அளவில் இருந்தார். அத்துடன் அவருக்கு ஹைப்போவோலேமியா (உடலில் மிகக் குறைவான இரத்த அளவு), அளவுக்கு மீறிய இருதயத் துடிப்பு வேகம், அளவுக்கு மீறிய வியர்வை ஆகியவற்றாலும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
38. ஏறக்குறைய நண்பகல் வேளையில் இயேசுவின் இருதயம் அநேகமாக செயலிழக்கத் தொடங்கியது.
39. இயேசுவின் நுரையீரல் திசுக்களில் இழைம அழற்சியின் காரணமாக நுரையீரல்கள் அதிகமான நீரால் நிரம்பத் தொடங்கின.
40. இது ஏற்கனவே கடுமையான சாத்தியமற்ற நிலைக்கு உள்ளாகியிருந்த அவருடைய சுவாசத்தின் வேதனையை மேலும் அதிகரிக்க மட்டுமே பயன்பட்டது.
41. இயேசு இருதயமும், சுவாசமும் முற்றிலுமாக செயலற்றுப் போகும் நிலையில் இருந்தார்.
42. இயேசு "நான் தாகமாயிருக்கிறேன்'' என்றார், ஏனெனில் அவருடைய உடலின் ஒவ்வொரு அணுவும் தனக்குத் தேவையான திரவங்களுக்காகக் கதறிக் கொண்டிருந்தது.
43. இயேசுவின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவருடைய இரத்த நாளங்களுக்குள் இரத்தமும், ப்ளாஸ்மா என்னும் நிணநீரும் ஒன்றாகக் கலக்க வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டது.
44. இயேசுவால் முறைப்படி சுவாசிக்க முடியவில்லை. அவர் மெதுவாக மூச்சுத் திணறலின் மூலம் மரணம் ஏற்படும் நிலைக்குச் சென்று கொண்டிருந்தார்.
45. இந்த நிலையில் இயேசுவுக்கு அநேகமாக விலாக்கூட்டை மூடியிருக்கும் சவ்வில் இரத்தம் கசியும் நிலை (Haemopercardium - ஹீமோபெரிகார்டியம்) ஏற்பட்டது.
46. நிணநீரும், இரத்தமும் அவருடைய இருதயத்தைச் சுற்றியுள்ள பெரிகார்டியம் என்னும் வெற்றிடத்தில் சேரத் தொடங்கின.
47. அவருடைய இரத்தத்தைச் சுற்றிலும் சேர்ந்த இந்தத் திரவம் கார்டியாக் டாம்போனேட் (அவருடைய இருதயத்தைச் சுற்றிப் பெருகும் திரவம்) என்ற நிலையை உருவாக்கியது. (இது அவருடைய இருதயம் ஒழுங்காகத் துடிக்க முடியாதபடி செய்தது.)
48. இயேசுவின் இருதயத்தில் அதிகரித்த உடலியக்க ரீதியான இந்தத் தேவைகளின் காரணமாகவும், ஹீமோபெரிகார்டியம் முற்றி விட்ட நிலையின் காரணமாகவும் இயேசு அநேகமாக, இறுதியாக இருதய முறிவு நிலையை அனுபவித்தார். அவருடைய இருதயம் உள்ளபடியே வெடித்தது. அநேகமாக அதுவே அவருடைய மரணத்திற்குக் காரணமாக இருந்தது.
49. மரணத்தைத் தாமதப்படுத்துவதற்கு போர்வீரர்கள் ஒரு சிறிய மர இருக்கையை சிலுவையின் மீது வைத்தனர். இது இடுப்பிலுள்ள முக்கோண வடிவிலான மூட்டெலும்பின்மீது தம் பாரத்தைச் சுமத்தும் "சலுகையை'' இயேசுவுக்குத் தரும்.
50. இதன் விளைவு என்னவெனில் சிலுவை மரணத்தை ஒன்பது நாட்கள் வரைக்கும் தாமதிக்கச் செய்வதுதான்.
51. உரோமையர் சிலுவையில் அறையப்பட்ட ஒருவரின் மரணத்தைத் துரிதப்படுத்த விரும்பியபோது, அவர்கள் அவருடைய கால்களை முறித்து விடுவார்கள். இதனால் அவர் மேல்நோக்கி தம் உடலை உயர்த்த முடியாது, அதனால் மூச்சு விட முடியாமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒரு சில நிமிடங்களில் அவர் இறக்க நேரிடும். இது க்ரூச்சிஃப்ராக்ரம் (Crucifragrum) என்று அழைக்கப்பட்டது.
52. பிற்பகல் மூன்று மணிக்கு, இயேசு, "தேத்தேலாஸ்தாயி'', அதாவது "எல்லாம் முடிந்தது'' என்றார். அந்தக் கணத்தில், அவர் தம் ஆவியை வெளியிட்டு, உயிர் துறந்தார்.
53. இயேசுவின் கால்களை முறிக்கும்படி வீரர்கள் வந்தபோது, அவர் ஏற்கனவே இறந்திருந்தார். அதனால் அவருடைய உடலின் ஒரு எலும்பு கூட முறிக்கப்படவில்லை. "அவருடைய எலும்பை முறிக்க மாட்டீர்கள்'' என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவை நிகழ்ந்தன.
54. இதுவரை மனிதன் கண்டுபிடித்தவற்றிலேயே மிகக் கொடூரமான வேதனைகள் நிறைந்ததும், பயங்கரமுள்ளதுமான வாதையை மூன்று மணி நேரம் அனுபவித்த பிறகு இயேசு மரித்தார்.
55. உன்னையும், என்னையும் போன்ற சாதாரண மக்கள் மோட்சத்திற்குப் போவதற்காக இயேசு மரித்தார்.
பதிலுக்கு அவர் உன்னிடம் கேட்பதெல்லாம் உன் ஆண்டவரும், உன் தேவனுமாகிய அவரை உன் முழு இருதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு வலிமையோடும், முழு மனதோடும் நேசிக்க வேண்டும் என்பதே!!
அவருக்காக இதைக் கூடவா உன்னால் செய்ய முடியாது?