கல்லறையில் கிடக்கும் சடலம்!

பக்தியுள்ள ஆத்துமமே, உன்னை விட்டுப் பிரிந்து கிடக்கும் உன் ச லத்தின் நிலைமையை இன்னும் தெளிவாகக் கண்டறிய புனித ஜான் கிறிசோஸ்தம் சொல்லுகிறபடி கல்லறைக்குப் போ. அங்கே குழிக்குள்ளே கிடக்கும் புழுக்களையும் கடைசியாய் மண்ணாய் மக்கிக் குவிந்து கிடப்பதையும் சற்றே உற்றுப் பார்த்து, தியானித்து பெரு மூச்சு விட்டு அழக்கடவாய். கொஞ்சம் கொஞ்சமாய்க் கவனித்துப் பார்.

ஆரம்பத்தில் அந்த செத்த பிணம் மஞ்சள் நிறமாகி அதன் பின் கறுத்துப்போவதை உற்றுப் பார். அதன்பின் முழு உடலும் ஒருவித வெண்ணிறமுடையதும், சகிக்கக்கூடாத துர்நாற்றமுடையதுமான வழவழப்பான திரவத்தால் முற்றும் மூடப்படுகின்றது. இதிலிருந்து துர்நாற்றம் வீசும் பசை போன்ற சீழ் வடிந்து பூமிமேல் ஓடும். இதிலிருந்து கணக்கில்லாத புழுக்கள் உற்பத்தியாகி அவை அந்த நாற்ற சடலத்தை முற்றிலும் அரித்து புசித்து வாழும். அவ்வாறே எலிகளும் அதை உண்ணும்.

சில வெளியுடம்பையும், சில உள்ளேயிறங்கி, வயிறு குடல் முதலியவற்றையும் ருசித்து, வாய் மூக்குத் துவாரங்களில் உள்ளே ஏறி நாசமாக்கும். ஆகவே, கன்னம், உதடு, ரோமம், தலை மயிர் சகலமும் பிய்ந்து பிளந்து துண்டு துண்டாய் விழும். நெஞ்சு விலா எலும்புகள் எல்லாம் முற்றும் வெறுமையாகி விடும். அதன்பின் கை கால்களிலுள்ள சதையெல்லாம் பிய்ந்து தொங்கி ஒழிந்து போகும்.

புழுக்கள் அந்த நாற்ற சடலத்தையெல்லாம் ருசித்துத் தின்று முடித்தவுடனே ஒன்று மற்றதைக் கடித்து ருசி பார்க்க, கடைசியாய் மிஞ்சியிருப்பது துர்வாடையுள்ள அந்த வெறும் மண்ணும், எலும்பும் மாத்திரமே. இதுவும் கொஞ்ச நேரத்துக்குள் நெக்குவிட்டுப் பிரிந்து தகர்ந்து விழுந்து அழியும்.

தலை ஒரு பக்கமாய் விழ , மற்றும் உறுப்புக்கள் எல்லாம் கழன்று பிரிந்து வேறாகி ஒன்றுமில்லாமல் போகும். இவ்வாறாக மனிதனின் கடைசி முடிவு என்ன என்பதை ஆராய்ந்து பார். தரையில் கிடக்கும் ஒரு பிடி மண்! அதையும் கிடந்த இடத்தில் கிடைக்க விடாமல், காற்றடித்துக் கொண்டு போய் எங்கேயோ சிதறிவிடும்.

சற்று முன்னே இந்த உலகத்தில் பேரரசன் என்றும், புகழ் பெற்றவனென்றும், எல்லா மனிதர்களுக்கும் உயிரும், உதவியும், உற்சாகமுமானவன் என்று வாழ்த்தப்பட்ட அந்த மாமனிதன் இப்போது எங்கே? எங்கே இருக்கிறான்? அவன் அரண்மனையில் நுழைந்து தேடிப் பார். ஐயோ, காணோம்! அவனுடைய பஞ்சு மெத்தையையும் படுத்துறங்கிய கட்டிலையும் தேடிப் பார்த்தால் அவற்றையும் காணோம். அவன் உறவினர்களும் மற்றவர்களும் பங்கு போட்டுக் கொண்டு போய் விட்டார்கள்.

அவனுடைய பகட்டான ஆடைகள், ஆபரணங்கள், விலையுயர்ந்த பொருட்கள் எங்கே? எல்லாம் எவரெவரோ பங்கு போட்டுக் கொண்டார்கள். கடைசியாய் இன்னமும் கல்லறைவரை அவனைத் தேடி நாம் போனால் அவனுமே புழுத்து நாறி அழுகி புழுக்களுக்கு இரையாகி விட்டான். ஒருவேளை சில எலும்புத் துண்டுகளை மாத்திரம் காணலாம். பேணிப் போற்றி சீராட்டிப் பாராட்டி செல்லமாய் வளர்த்த உடல் மண்ணாய்ப் போய்விட்டது. ஆ! அவனுக்கு அடிபணிந்து ஊழியம் செய்த ஒரு வேலைக்காரரும் அவன் அருகாமையில் இல்லை. அவனே இல்லை, எல்லாமே வெறுமையாய் ஆகி விட்டது.

புண்ணியவான்களே! புனிதர்களே! நீங்கள் இந்த பூமியில் இருக்கும்போது உங்களைப் படைத்து உங்களுக்காக உயிர் விட்ட ஒரே கடவுளை நீங்கள் நேசித்து, நேசத்தின் பொருட்டு உங்கள் உடலை மிதமிஞ்சி நேசியாமல் ஒறுத்து, அடக்கி, நடத்தி வந்தீர்கள். இப்போது உங்கள் உடல் அல்லது எலும்புகள் புனிதப் பண்டங்களாக உன்னதமாகப் போற்றப்பட்டு பொன் பட்டுத் துணிகளின் மீது பொதிந்து பீடங்களில் வைக்கப்பட்டு மரியாதைக்குரியனவாக உள்ளன.

அழகு மிகுந்த உங்கள் ஆத்துமம் முடிவில்லாத தரிசனத்தையும் நற்பலன்களையும் அடைந்து வருவதுமன்றி இவ்வுலகில் உங்களோடு எல்லாவித துன்ப துயரங்களுக்கும் பங்காளியாயிருந்த உங்கள் உடலும் உங்கள் ஆத்துமத்தோடு கூடி ஒன்றித்து நித்திய பேரின்பத்துக்கு பங்காளர்களாகும் கடைசி பொதுத்தீர்வை நாளை ஆவலோடு எதிர்பார்க்கின்றீர்கள்.

ஆகவே, இவ்வுலகத்தில் உயிர் வாழும் கொஞ்ச காலத்தில் அவரவர் தங்கள் உடலை அடக்கி ஒறுத்து பற்பல வேதனைகளுக்கு உட்படுத்தி வருத்துவதும், எக்காலத்துக்கும் தன்னை பாக்கியமில்லாமலும், நித்திய நரக தண்டனைக்கு உள்ளாக்கக் கூடியதுமான ஆசாபாச் சிற்றின்ப ஆசைகளை விலக்கி நீக்கி விடுவதுமே தங்கள் உடலை உண்மையாக நேசிப்பதன் சாட்சியாகும்.

செபம்: நேசப் பற்றுதல்

என் ஆண்டவரே! உமக்கு எவ்வளவோ துரோகம் செய்த இந்த என் பாக்கியமில்லாத உடலுக்கு நேரிடும் கதி இதுவே. என் கடவுளே! இந்த மிகவும் மோசமான இக்காட்சியானது என் மனதிற்கு வேதனை உண்டாக்கவில்லை. இல்லை! இல்லை! அனைத்து நன்மைகளின் மொத்த உருவமான உம்மை எப்போதும் நான் இழந்து போகுமாறு செய்த இந்தக் கீழ்த்தரமான பகையாகிய இவ்வுடலுக்கு இப்படி நேரிடுவது எனக்கு ஆயிரம் முறை மகிழ்ச்சியே.

ஆண்டவரே, என் மனம் எரிந்து புண்ணானதெல்லாம் இப்படிப்பட்ட இழிந்துபோன உடலை மகிழ்ச்சிப்படுத்தும் நிலையற்ற கேடுகெட்ட காரியங்களுக்காக உம்மை இவ்வளவு தூரம் மன வேதனைப்படுத்தி விட்டேனே என்ற நினைவுதான். இவ்வளவு காலம் நீர் பொறுமையாகக் காத்திருந்தது எனக்கு மன்னிப்பு அளிப்பதற்காகவே.

ஆகவே, ஆண்டவரே நான் உத்தம மனஸ்தாபப்பட்டு மன்னிப்புக் கேட்டால் மன்னிப்பை அளிப்பீர். ஆண்டவரே, என் முழு இருதயத்தோடும் மனஸ்தாபப்பட்டு மன்னிப்பை வேண்டுகிறேன். முடிவில்லாத நன்மையின் திருவுருவாகிய உமக்கு துரோகம் செய்ததற்காக மனஸ்தாபப்படுகிறேன்.

புனித ஜெனோவா கத்தரீன் அழுது புலம்பியது போல "இனிமேல் ஒருக்காலம் பாவம் செய்ய மாட்டேன். செய்ய மாட்டேன்". இனி உமது அளவில்லாத பொறுமைக்குத் துரோகம் செய்ய மாட்டேன். எனக்காக சிலுவையில் உயிர்விட்ட என் நேச இயேசுவே, என்னுடைய கடைசி மரணப்படுக்கையில் குருவானவர் வந்து என் கரத்தில் உமது பாடுபட்ட சிலுவையை வைக்கும் நேரம் வரையும் நான் தாமதிக்காமல் இப்போதே என்னிரு கரத்தால் உமது நேச சிலுவையை ஆவலோடு எட்டிப் பிடித்து முத்தமிட்டு என் ஆத்துமத்தை எனக்காக சிலுவையில் விரித்திருக்கும் உம்மிரு கரங்களிலும் ஒப்புக் கொடுக்கிறேன்.

என் வாழ்நாளில் உம்மை நேசியாமல் வீணாகக் காலம் போக்கி விட்டேன். இன்னமும் மீதியிருக்கும் காலத்திலாவது நான் உம்மை உண்மையாய் நேசிக்கும் வரத்தையும், பலத்தையும் எனக்குக் கட்டளையிட்டருள்வீராக. சாகப் போகிற நேரத்தில் உம்மை நேசிக்கலாம் என இனிமேல் காத்திருக்கமாட்டேன். இதோ இந்த நிமிடம் முதல் ஆவலாய் நான் உம்மை நேசிக்கிறேன். என் இரு கரம் கொண்டு உமது பாதத்தை நான் எட்டிப் பிடித்துக் கொள்கிறேன். எப்போதும் உம்மோடு நிலைத்திருப்பேன். ஒருபோதும் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்.

தேவமாதாவே! பரிசுத்தமான கன்னிகையே! உமது திருமகனோடு என்னையும் ஒன்றாய்ச் சேர்த்து நான் ஒருபோதும் அவரை விட்டுப் பிரியாதிருக்கும் திருவருளை எனக்குப் பெற்றுத் தருவீராக.

ஆமென்.