இதுவும் மெலானி எழுதியதே :
"மிகப் பரிசுத்த கன்னிகை உயரமாக வளர்ந்து உயரம் பருமன் அளவுப் பொருத்தமாயிருந்தார்கள். அவர்கள் எவ்வளவு பளுவற்றவர்களாய்க் காணப்பட்டார்களென்றால் நம் சுவாசக் காற்று முதலாய் அவர்களை அசைத்து விடும். ஆயினும் அவர்கள் அசையாமல் சரிசம நிலையில் இருந்தார்கள். அவர்கள் திருவதனம் மகத்வமாயும் ஆதிக்கமுடையதாயுமிருந்தது; ஆனால் உலக ஆதிக்கம் செலுத்துகிறவர்களின் முகம் போல் இல்லை. மரியாதையுள்ள அச்சம் தருவதாயிருந்தது. அதே சமயம் அவர்களின் மகத்துவம், அன்பு கலந்த மரியாதையுடன் என்னை அவர்களிடம் ஈர்த்தது. அவர்கள் பார்வை மென்மையும் ஊடுருவுவதுமாக இருந்தது. அவர்களின் கண்கள் என் கண்களுடன் பேசின. ஆனால் அந்த உரையாடல் ஒரு ஆழமான உயிருள்ள அன்பிலிருந்து வந்ததாகத் தெரிந்தது. ஏனென்றால் அந்த ஆட் கொள்ளும் அழகு என்னை திரவமாக உருக்கியது. அவர்களின் மென் பார்வை, கண்டுணர முடியாத நன்மைத்தனத்தின் பாவனை, அவர்கள் என்னைத் தன்னிடம் இருப்பதாகவும் தன்னையே எனக்குத் தருவதாகவும் நான் கண்டுபிடிக்கவும் உணரவும் செய்தன. அது மனித நாவாலும் எழுத்தைக் கொண்டும் விவரிக்க முடியாத அன்பின் வெளிப்பாடாயிருந்தது.
மாதாவின் ஆடை பிரகாசிக்கும் வெள்ளியின் வெண்மை நிறமாயிருந்தது. அது தொடப்படக் கூடாதது. அது ஒளியாலும் மகிமையாலும் நெய்யப் பட்டு மின்னிப் பளபளத்தது. அதற்கு ஒப்புமையோ விவரிப்போ உலகில் சாத்தியமில்லை.
பரிசுத்த கன்னிகை முற்றிலும் அழகும் முழுவதும் அன்பாகவுமிருந்தார்கள். அவர்களின் தோற்றமே என்னை மேற்கொள்வதாயிருந்தது. அவர்களினிடத்திலும் அவர்களின் அணியலங்காரத்திலும் அனைத்துமே ஒப்பற்ற ஒரு அரசியின் மகத்துவத்தையும் பொங் கொளியையும் பெருஞ்சிறப்பையும் கதிர் வீசுவதா யிருந்தது. அவர்களுடைய வெண்மையும், மாசின்மையும், படிகத் தன்மையும், ஒளியின் மின்னுதலும் மோட்சத் தன்மையும் புதுமையும் அவர்களை ஒரு புத்தம் புதிய கன்னிகையாக்கின. அவர்களின் தூய வெள்ளியன்ன அதரங்களிலிருந்து அன்பு என்னும் சொல் சிந்துவது போலிருந்தது. அவர்கள் ஒரு நல்ல தாய் போல், கருணை நிரம்பியவர்களாய், நேசிக்கத் தகுந்தவர்களாய், நம் மேல் அன்புள்ளவர்களாய், இரக்கமும் தயையும் கொண்ட அன்னையாய் எனக்குக் காணப்பட்டார்கள்.
அவர்களின் தலையில் சூடியிருந்த ரோஜாப்பூ மகுடம் எவ்வளவு அழகும் பிரகாசமுமாயிருந்த தென்றால் அதை யாராலும் ரூபிகரிக்க முடியாது. பல நிறங்களுள்ள அந்த ரோஜாப்பூக்கள் இந்த உலகில் உள்ளவையல்ல. அம்மகுடம் மிகப் பரிசுத்த கன்னிகையின் சிரசில் பல மலர்களின் ஐக்கியமாயிருந்தது. அந்த ரோஜா மலர்கள் மாறிக் கொண்டேயிருந்தன. ஒன்றின் இடத்தை மற்றொன்று எடுத்துக் கொண்டே யிருந்தன. ஒவ்வொரு ரோஜாவின் இதழிலிருந்தும் ஒரு வசீகரிக்கும் ஒளிவீசியது. அது அம்மலர்களுக்கு மினுமினுக்கமான வனப்பைக் கொடுத்தது. ரோஜா மகுடத்திலிருந்து பொற்கிளைகள் எழும்பின. பலவேறு சில பூக்களும் ஒளிவீசிய மலர்களுடன் இணைந்து காணப்பட்டன. எல்லாம் சேர்ந்து ஒரு மிக மிக அழகிய கிரீடமாயிருந்தது. அது மட்டுமே நம் பூமியின் சூரியனைவிடப் பிரகாசமாக ஒளிவீசியது.''